Thursday, May 29, 2014

உன்னருகே நானிருந்தால் - அத்தியாயம் 2



அதுகபுரம் தினமும் நானும் அவளும் அந்த தெருவுல இருந்த மத்த பசங்களோட சேந்து iceboy, busciness,chess, carrom board, video gamesnu எல்லாம் விளையாடுவோம் .. தீபாவளி பொங்கல்னு எல்லா பண்டிகையும் சேர்ந்தே கொண்டாடுவோம் .. அது வரைக்கும் அவ மேல எனக்கு எந்த ஈர்ப்பும் இல்ல .. நாட்கள் நகர்ந்தன நா 9 தகு வந்தேன் இப்ப நறைய தமிழ் படங்கள் பார்த்து என்னோட general knowledge ரொம்பவே வளந்துடுச்சு .. என்கூட ஸ்சூல படிக்கிற பசங்கல்லாம் லவ் பண்ண ஆரம்பிச்சாங்க .. சினிமா tv schoolnu எங்க பாத்தாலும் காதல் .. Classla எவன்லாம் லவ் பண்றானோ அவன எல்லாரும் கெத்தா பாத்தாங்க . என்னோட friendunga நீ யார லவ் பண்றனு என்ன கேட்பானுங்க .. லவ் பண்ணலேன்னு சொன்னா மதிக்க மாட்டாங்கனு நானும் லவ் பண்றேன்னு சொன்னேன் .. யார பண்றனு கேட்டானுங்க ? வீடு பக்கதுல ஒரு பொண்ணுன்னு சொன்னேன் ... எனக்கும் mathskum ரொம்ப தூரம் . எந்த maths examlayum 10 மார்க்குக்கு மேல வாங்க மாட்டேன் .அப்படி தப்பி தவறி 10 மார்க்கு மேல வாங்குனான அதுக்கு காரணம் நிச்சயமா எனக்கு முன்னாடி உட்காந்து exam எழுதுற என்னோட friendaaladhan.ஒரு முறை maths சொல்லி குடுக்க என்னோட friendu ஏன் வீட்டுக்கு வந்திருந்தான் .அப்ப ப்ரியா என்னோட வீட்டுக்கு எங்க அம்மாகிட டம்ளர்ல தயிர் வாங்க வந்தா .நானும் என்னோட friendum படிச்சிட்டு இருந்தத பாத்துட்டு . கலகுற சந்துரு இந்த வாட்டி mathsla சென்டம்தான் போலன்னு நக்கலா சிரிசிகிடே சொன்னா .நீ மூடிட்டு போடின்னு சொல்லிடு ரூம் கதவ சாதிடேன் .. என்னோட friendu உன்னோட ஆளு செம அழகா இருக்காடா பேரேன்னணு கேட்டான் ?.. அவன் சொன்னதுக்கு இல்லன்னு சொன்னா யார லவ் பண்ற காட்டுன்னு சொல்லுவான் அதுக்கு இவளையே லவ் பண்றேன்னு நம்ப வச்சிடலாம்னு நெனச்சு ப்ரியான்னு சொன்னேன் .. அடுத்தநாள் ஸ்கூலுக்கு போனா எல்லாரும் என்ன ப்ரியான்னு கூப்டு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுடானுங்க .. முதல கடுப்பா இருந்தாலும் அப்பறம் அது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு .. பொதுவா இந்த லவ் பண்றவங்கள கலாய்ச்சா கோபம் வர மாதிரி நடிபானுங்க ஆனா உண்மையா உள்ள அவனுங்களுக்கு செம சந்தோஷமா இருக்கும் .. அதுகபுரம் எனக்கு பிரியா மேல ஒரு ஈர்ப்பு வந்துச்சு ..



 
எங்க வீட்டு bed room ஜன்னல்ல இருந்து பாத்தா ப்ரியா வீடோட ஹால் தெரியும் .. அடிகடி அவங்க வீடு ஹால்ல அவ இருகாலானு பாப்பேன் .. நாளுக்கு நாள் அவ எனக்கு ரொம்ப அழகா தெரிஞ்சா .. முன்னாடி மாதிரி அவ கூட என்னால சகஜமா பேச முடியல .. அவல தூரத்துல இருந்து அவளுக்கு தெரியாமையே அவல பாத்து கிட்டே இருப்பேன் .. சாயந்திரம் எப்பவும் எங்க ரோட்ல shuttle cork விளையாடுவோம் .. அவதான் எப்பவும் எங்க வீட்டுக்கு வந்து விளையாட கூபிடுவா .. நானும் வேண்டா வெறுப்பா போவேன் .. ஆனா இப்பலாம் மதியத்துல இருந்தே விளையாடுறதுக்கு ரெடி ஆகி அவ எப்ப வந்து கூப்டுவானு wait பண்ணிகிட்டே இருப்பேன் .. மழை காலம் வந்தாலே எனக்கு செம கடுப்பா இருக்கும் காரணம் ரோடு fulla தண்ணி தேங்கிகும் அவ கூட என்னால shuttle cork விளையாட முடியாது .. அவ என்ன சந்த்ருனு கூப்டும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் .. அவ கூட நறையநேரம் பேசுனம்னு தோணும் ஆனா பேச பயமா இருந்துச்சு .. அந்த timela வந்த படங்கள பாத்துட்டு நானும் அவளோட photova மறைச்சு வச்சு அப்ப அப்ப எடுத்து பாப்பேன் .. எப்பவும் ஒரு மாதிரி கனவுலேயே சுத்திக்கிட்டு இருந்தேன் அவ கூட பேசும்போது மட்டும்தான் இந்த உலகத்துக்கே வருவேன் .. அந்த ஒரு வருஷத்துல அவ மேல எனக்கிருந்த attraction எப்படி காதலா மாறுச்சுன்னு எனக்கே தெரியல ..



 
இந்த உலகத்துல யாராலையும் தனக்கு எந்த நொடில காதல் வந்துச்சுன்னு மட்டும் கரெக்டா சொல்லவே முடியாது .. இப்ப நா 10th ஏற்கனவே நா படிப்புல புலி இதுல காதல் வேற முதல் டெஸ்ட்ல எந்த சப்ஜெக்ட்ளையும் 10 மார்க்கு மேல வாங்க முடியல .. என்னோட அப்பாவையும் அம்மாவையும் ஸ்கூல கூப்டு இப்படியே விட்டா உங்க பையன் நிச்சயமா 10th பப்ளிக் exaamla பாஸ் பண்ண மாட்டான் .. பேசாம tc வாங்கிட்டு போயடுங்கனு மிரட்ட ஆரம்பிச்சாங்க .. பிரின்சிபால் ரூம்ல என்ன நிக்க வச்சு எல்லா டீசெரும், பிரின்சிபாலும் என் அப்பா அம்மா முன்னாலேயே திட்ட ஆரம்பிச்சாங்க, என்னோட அப்பாவும் அம்மாவும் அவமானத்துல தலைய குனுன்ஜாங்க .. அவங்கள அப்படி பாத்ததும் அங்கேயே அழ தொடங்கினேன் .. கடைசியாக அடுத்த டெஸ்டில் பாப்போம் எதுவும் improvement தெரியலேனா அபாரம் என்னால ஒன்னும் ஹெல்ப் பண்ண முடியாதுனு பிரின்சிபால் என்னோட parentskitta சொன்னார் ..


 அதுகபுரம் எங்க வீட்ல என்ன வீட்ட விட்டு வெளியபோகவே விடல .. சாயந்திரம் shuttle corkum விளையாட விடல .. புக் கூடவே படுத்து புக் கூடவே எந்திரிப்பேன் .. ஆனா என்னால படிப்புல கவனம் செலுத்தவே முடியல .. எங்க வீடு Bed room ஜன்னல் வழியா அவ அவங்க வீட்டு ஹாலுக்கு வருவாளான்னு அங்கேயே பாத்துகிட்டு இருப்பேன் ..எப்பயாச்சு அவ என்னோட வீட்டுக்கு வருவா .. அந்த சில நிமிடங்கள் மட்டும் சந்தோஷமா இருக்கும் அப்பறம் மறுபடியும் புக் குள்ள தலைய விடனும் .. ஒரு வழியா அடுத்த டெஸ்ட்ல எல்லா subjectlayum 50 மார்க் கிட்ட வாங்குனேன்


ஆனா அந்த mathsla மட்டும் fail aagiten .. இப்ப எங்க வீட்ல என்ன maths tutionla சேர்த்து விட்டாங்க .. ஸ்கூல் விட்டு வந்த உடனே tutionku போய்டுவேன் .. அவ கிட்ட பேச கூட எனக்கு சந்தர்பம் கிடைகள .. அடிகடி ஜன்னல் வழியா மட்டும் அவல பாப்பேன் .. அவ மேல இருந்த காதல் மட்டும் எனக்கு குறையவே இல்ல .. 10th result வரதுக்கு முன்னாடி நாள் எனக்கு செம பயம் .. நா fail ஆகிட்டா என் life wastaagidumdradha விட என்னோட parents என்ன சொல்லுவாங்க ?, அதோட ப்ரியாகுலாம் தெரிஞ்சா ரொம்ப கேவலமைடுமேனு பயம் மனசுக்குள்ள வந்து வந்து போயிடு இருந்துச்சு ..அடுத்த நாள் காலைல இருந்து bedlaye படுத்துகிட்டு எப்படியும் mathsla fail ஆகிடுவோம் நமக்கு இந்த படிபுலாம் ஒத்து வராது , பேசாம வேற ஊருக்கு போய் வேளைக்கு போலாம்னு முடிவு பண்ணி bedlaye படுத்திருந்தேன் ..





உன்னருகே நானிருந்தால் - அத்தியாயம் 1


“உன்னருகே நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் ...............................” அன்னகி மதியானம் 12 மணிக்கு banglore பஸ் ஸ்டாப்ல செம climate, சாயந்திரம் 6 மணி மாதிரி இருட்டா இருந்துச்சு .. நா சென்னைக்கு போற பஸ்ல என்னோட சீட்ல bag வச்சுட்டு கீழ வந்து இந்த climateku ஒரு டி குடுச்சா சூப்பரா இருக்கும்னு கீழ இறங்குனேன் , ஆனா அது மழைக்கு பொறுக்காம கீழ இறங்கி ரெண்டு steps நடக்குங்காட்டி மழை வேகமா பெய்ய ஆரம்பித்தது ..

ஒரு டீக்கு ஆசைப்பட்டு fulla நனையனுமானு யோசிச்சு மறுபடியும் பஸ்லயே ஏறி உட்காந்தேன் .. மழை பெய்தாலே நம்ம எல்லார் மனசுக்குள்ளயும் ஒரு சின்ன சந்தோஷம் வந்திருதுல .. அதுவும் பஸ்ஸோட ஜன்னல் சீட்ல உட்காந்து வெளிய அந்த மழைய பாத்து ரசிச்சிகிட்டே நம்ம இளையராஜாவோட பாட்டுங்கள போன்ல போட்டு விட்டு கேட்க ஆரம்பிச்சோம்னா சும்மா அபிடியே சொர்க்கம் மாதிரி இருக்கும் ..
அந்த சந்தோஷமான தருனத்த கெடுகின்ற விதமா யாரோ போன் பண்ணாங்க போன எடுத்து பார்த்தா என்னோட மாமா attend பண்ண உடனே hellonu கூட சொல்லாம பஸ் ஸ்டோப்கு போய்டியா இல்லையான்னு ? கேட்டாரு ..

இது அவர் இன்னிக்கி இதோட 5vadhu வாட்டி எனக்கு போன் பண்ணி கேட்குறாரு .. இப்ப பஸ்லதான் உட்காந்துட்டு இருக்கேனு சொன்னேன் .. அவர் இப்படி என்கிட்ட கேக்குறதுக்கு காரணம் நா சென்னைய விட்டு bangloreku வந்து 2 வருஷமாச்சு ஆனா இது வரைக்கும் ஒரு வாட்டி கூட சென்னைக்கு போகல அதான் .. சரி மாமாவையும் அக்காவையும் கேட்டதா சொல்லு அப்றம் போன உடனே வந்துறாத ஒரு 10 நாள் இருந்துட்டு வா ஆபீஸ்ல நா சொல்லிகிறேனு சொன்னார் .. சரி மாமா நா சென்னைல இறங்குனப்புரம் போன் பண்றேன் என்று சொல்லிவிட்டு கட் செய்தேன் .. பஸ் புறப்பட்டது .. என்னதான் சொர்கமாவே இருந்தாலும் ஒரு அரை மணி நேரம் கழித்து அதுவும் போர் அடிக்க தொடங்கிவிடும் ..


அதேபோல் அந்த மழையும் போர் அடிக்க தொடங்கியது .. பக்கத்தில் உட்காந்திருன்தவன் ஏதோ ஹிந்தி பாட்டை கேட்டு கொண்டே வந்த வேலையே அவசரமாக தொடங்கினான் அதான் கொறட்டை விட்டு தூங்க தொடங்கினான் .. அவன பாக்கும்போதுதான் இந்தியா ஒரு சுதந்திர நாடுனே தோணுது .. ஒரு தமிழன் பேச்சு துணை இல்லாமல் பயணம் செய்வது என்பது கௌதம் மேனன் இங்கிலீஷ் கலக்காமல் தமிழ் படம் எடுப்பது போல ரொம்ப கஷ்டமான விஷயம் .. கண்ணை மூடி தூங்கலாம்னு நெனச்சா என்னோட சக சிட்டிசன் கொறட்டைய இப்ப 4 வது கியர்ல ஓட்டிக்கிட்டு இருந்தார் .. போன்ல full sound வச்சேன் .. பேச்சு துணைக்கும் ஆளில்ல, தூங்கவும் முடியல வேற வலி என்னோட வாழ்க்கைல நா பாத்த, அனுபவித்த விஷயங்கள மறுபடியும் மனசுல ஓட விட வேண்டியதுதான் ..


என்னோட பேரு பாலச்சந்தர் , ஆனா யார் என்கிட்ட பேர கேட்டாலும் சந்த்ருனுதான் சொல்லுவேன் .. மத்தவங்களும் என்ன அப்டிதான் கூப்பிடனும்னு ஆசை படுவேன் ..
அதுக்கு காரணம் நா பாலச்சந்தர்னு என்னோட பேர சொன்னவுடனே k.பாலச்சந்தராநு? கேட்டுட்டு மொக்கையா சிரிப்பாங்க .. என்னோட வாழ்க்கைல எதையாவது மாத்தணும்னு நெனச்சா நா முதல்ல என்னோட பேர்தான் மாத்துவேன் .. என்னோட friendungalaam என்ன பாலானு கூப்பிடுவாங்க இல்ல சந்த்ருனு கூப்பிடுவாங்க ஒரே ஒரு நாதாரிய தவிர அவன் என்னோட ஸ்கூல் friendu அந்த நாய் மட்டும் என்ன வெருப்பெதுரதுகாகவே பாலச்சந்தர்நுதன் இன்னிக்கு வரைக்கும் கூபிடுறான் .. அதுவும் வெளிய திற்றேகு , ஹோடேல்குலாம் செமைய டிரஸ் பண்ணி கூலிங் glasslaam போட்டு கிட்டு பொண்ணுங்க முன்னாடி போகும்போது என்ன பாலச்சந்தர்னு சத்தம் போட்டு கூப்டு கேவல படுத்துவான் .. இதனாலேயே இந்த பேரு மேல எனக்கு செம கடுப்பு ..


ஒரு சராசரி சென்னை மிடில் கிளாஸ் பையனோட வாழ்க்கைல இருக்கும் அதே ஆசை , கனவு , சந்தோஷம் , ஏமாற்றம்னு எல்லாம் என்னோட சின்ன வயசுலயும் நா அனுபவுசேன் .. இந்த உலகத்துல இருக்க எல்லாருக்கும் காதல் வந்திருக்கும்னு சொல்ல முடியாது ஆனா ஸ்கூல் படிக்கிற நாட்கள்ல எல்லாருக்குமே ஸ்கூல்லையோ இல்ல வீடு கிட்டயோ யார்மேலயாவது ஒரு விதமான ஈர்ப்பு வரும் , அவங்க நம்மள விட்டு பிரிஞ்சிட்டா அது ஈர்பாகவே போய்டும் , ஆனா ஒரு வேல நம்ம கூடவே இருந்தா அந்த ஈர்ப்பு காதலா மாறிடும் எனக்கு நடந்ததும் அதுதான் ..... ………………


…………………………….. என்னோட அப்பா போலீஸ் ஆபீசர் என்னோட அம்மா ஸ்கூல் டீச்சர் .. நா 6 வது படிக்கும்போது போலீஸ் கோர்டேர்ஸ்ல இருந்து மாறி பகதுலையே வீடு கட்டி எங்க சொந்த வீட்டுக்கு வந்தோம் .. அன்னகி எங்க வீடோட க்ரஹா பிரவேஷம் அன்னக்கிதான் நா முதல் முறையா ப்ரியாவ பாத்தேன் .. அவ அப்போ 5 வது படிச்சிட்டு இருந்தா .. மாடியில சாப்பாடு போட்டோம் .. அவளும் அவளோட அப்பா அம்மா தங்கச்சி எல்லோரும் உட்காந்து சாப்டு கிட்டு இருந்தாங்க ..
நா யாருக்கும் தெரியாம 6 வது ஐஸ் கிரிம சாப்டு கிட்டு இருந்தேன் ..


நா சாபிட்ரத பாத்துட்டு எனக்கும் ஐஸ் கிரீம் வேணும்னு அவளோட அம்மாகிட ப்ரியா கேட்டா .. வழக்கம்போல ஐஸ் கிரீம் சாப்டா சளி பிடிக்கும்னு சொல்லி அவல அவங்க அம்மா off பண்ணிடாங்க .. இதை பார்த்து கொண்டிருந்த என்னோட அம்மா ஒரு ஐஸ் கிரீம்தான சாபிடட்டும்னு சொல்லிடு ,நா ஏற்கனவே சேகரிச்சு வச்சிருந்த ஐஸ் சரியாமல இருந்து ஒன்ன புடுங்கி அவ கிட்ட குடுத்தாங்க .. அவளும் சந்தோஷமாக சாப்பிட தொடங்கினால் .. நான் அந்த ஒரு ஐஸ் கிரிமின் இழப்பை ஈடு கட்ட ஐஸ் கிரீம் டப்பாவிலிருந்து 2 ஐஸ் கிரீமை எடுத்து கொண்டேன் ..




ரெட்டைக்குண்டி சின்னைய்யன்


மரத்தைப் பார்த்ததும் அவனது உள்ளங்காலிலிருந்து மேலெழுந்து ஓடியது ஒரு சிலிர்ப்பு. அந்த நுனா மரத்தில்தான் 'ரெட்டக்குண்டி' சின்னைய்யனை அடித்து மாட்டி வைத்திருந்தனர். ரெட்டைக்குண்டி சின்னைய்யனின் சாவு இன்று வரையும் புதிராகவே தான் இருக்கிறது. அதைப்பற்றி ஊருக்கு ஊர் கதை கதையாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.



சின்னையன் சூராதி சூரனான மாட்டு வியாபாரி. வட தேசம் போய் சோப்புப்போட்டு வெளுத்ததைப்போல் வெள்ளை வெளேரென்று மேற்கத்திய காளைகளை வாங்கி வருவான். ஒத்தை ஆளாகவே இரண்டு, மூன்று ஜோடிகளை ஓட்டி வந்து இங்கே நல்ல விலைக்கு விற்பான். வடக்கே போகாத நாட்களில் அக்கம் பக்கத்து ஊர்களில் மாடுகளைத் தேடி அலைவான். அவன் கணக்குகளுக்குச் சரியாக வரும் மாடுகளைக் கோழிக்குஞ்சைக் கொத்திக் கொண்டு பறக்கும் குருவியைப்போல கொத்திக்கொண்டு போவான். பீமசேனனைப்போல நல்ல பாரியான உடம்பு அவனுக்கு. பாறாங்கல்லாய் விரிந்த மார்புகள். கருங்கல்போன்று மினுங்கும் முதுகு. தின்ன உட்கார்ந்தால், மூன்று உருண்டை களியை திரும்பிப் பார்ப்பதற்குள் நான்கே திருகாய்த் திருகி விழுங்கிவிட்டு, தட்டை வழித்து நக்குவான்.


ஆட்டுத்தலையை தீய்த்துக் காய்ச்சி வைத்தால் ஒரு தலையை ஒருத்தனே மென்று துப்பி விடுவான். சேவல் கறியை புரட்டி வைத்தால், ஐந்தாறு கிளாஸ் சாராயத்தை உறிஞ்சிவிட்டு இரண்டு முழு சேவல்களை சட்டியில் மிச்சமில்லாமல் துடைத்தெடுப்பான். மாடுகளை ஓட்டிக்கொண்டு இரவு பகல் பாராமல், கல்லும் முள்ளும், நரியும் குரத்தியும் மலிந்து கிடக்கும் காட்டில் ஒத்தை ஆளாய் சுற்றவான். ரெட்டை நாடி சரீரத்திற்கேற்ப இரண்டு பொண்டாட்டிகளைக் கட்டிக்கொண்டும், பெண் சுகத்துக்கு அலைவான். அவனது நடையும், மதர்த்த உடலும், உச்சத்தில் ஒலிக்கும் குரலும், வியாபாரத்தில அவனுக்கிருந்த லாவகமும் அவனை அதிசய மனிதனாகத்தான் காட்டியது.

அவனுக்குள் இரட்டை குண்டிக்காய்கள் இருக்கும் என பலர் பேசிக்கொண்டனர். "ரெட்ட குண்டிகா இருந்தாதான் இப்டி ராவு பகுலுனும், காத்து கருப்புனும் பாக்காமச் சுத்தும் தெய்ரியம் வரும்" என்றார்கள். அவன் ஊருக்குள் வந்தால், ஊர்ப்பெண்கள்கூட அதிசயததைப் போலவும், பார்க்காததைப் போலவும் பார்ப்பார்கள். குசுகுசுவென பேசிக்கொள்வார்கள். பல பெண்களுக்கு அவனது தினவெடுத்த உடம்பு மீதும், அவனது வீரதீரச் செயல்கள் மீதும் மையல்கூட இருந்தது. அந்த சின்னைய்யனைத்தான் அடித்துக்கொன்று சின்ன்னாங் குளக்கரையில் இந்த ஒற்றைப்பனைக்கு துணையாய் இருந்த நுனா மரத்தில் மாட்டித் தொங்கவிட்டனர்.



அவனோடு இருந்தவர்களே வியாபாரத்தில் முளைத்த விரோதத்தினாலோ, பொம்பளை விவகாரத்தாலோ அடித்து மாட்டிவிட்டதாகப் பேசிக்கொண்டார்கள். சாதாரணமாக அவனை அடிக்க முடியாது என்பதால் நைசாகப் பேசி குளக்கரைக்குக் கூட்டிப்போய் நெஞ்சிக்கும், குஞ்சிக்கும் சாராயத்தைக் குடிக்க வைத்து, முட்டையிடாத வெடக்கோழியைக் காய்ச்சித் திகட்டத் தின்னவைத்து, முன்னிரவு நிலா வெளிச்சத்தில் ஒரு பெண்ணையும் அவனோடு படுக்க வைத்து, இரட்டை போதையில் இருக்கும்போது தீர்த்துக் கட்டினார்களாம். ஒற்றை போதையே ஆளை கவிழ்த்துவிடும்போது, இரட்டை போதையில் எந்தக் கொம்பனானாலும் என்ன செய்யமுடியும். அப்படியும் அவனைக் கொல்ல படாதபாடு பட்டார்களாம்.


உச்ச போதையிலிருக்கும்போது, அவனது மார்பின்மீது ஏறி உட்கார்ந்து தலையை ஒருவன் பிடித்துக்கொள்ள, கால்களின் மீதேறி ஒருவன அழுத்திக்கொள்ள, அவள் அவனின் உயிர்நிலையைப் பிசைந்து, கசக்கி துடிக்கத் துடிக்கக் கொன்றாளாம். அவள் விலைமாது என்றும், அவனது வைப்பாட்டிகளில் ஒருத்தியே என்றும் பேசிக்கொண்டார்கள். துடித்துத் துடித்து அடங்கிய உடலை மூவரும் தூக்க முடியாமல் தூக்கி, அந்த நுனா மரத்தில் அவனது வேட்டியாலேயே சுருக்கிட்டுத் தொங்க விட்டனராம். மறுநாள், உச்சி வெய்யிலிலில் செம்மறி ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டப்போன சுப்புதான் காற்றில் ஆடிக்கொண்டிருந்த பிணத்தைப் பார்த்து அலறியடித்து, ஆடுகளைக்கூட மறந்து ஓடிவந்தவன் படுக்கையில் விழுந்தான்.


காய்ச்சலும், பிதற்றலும் ஓய தேசிகாமணி தேசிகரின் வேப்பிலை மந்திரமும், திருநீறும் ஒருவாரம் தேவைப்பட்டது. அதற்குப்பிறகு ஆடு மாடு மேய்ப்பவர்கள்கூட அந்தப்பக்கம் போவதில்லை. சின்னப் பிள்ளைகள் அந்தத் திசையைக்கூட திகிலாய்ப் பார்த்தனர். அந்த ஒற்றைப் பனையில் சின்னைய்யனின் ஆவியிருப்பதாகவும், அது தண்ணீர் குடிக்கப்போகும் ஆடுகளை அவ்வப்போது அடித்துவிடுவதாகவும் பேசிக்கொண்டார்கள். பொதுவாக சின்னனாங்குளத்துக்கு கிழக்கில் இருக்கும் கரி மலையில் கள்ளிச் செடிகளும், முட்புதர்களும், நெடும்பாறைகளும் குறுக்கும்மறுக்குமாக கிடக்கும். அதில் ஆடுகளை மேயவிட்டால் மொத்தத்தையும் திரும்ப மீட்கமுடியாது. வழி தவறிப்போகும் அல்லது குறத்திகள் அடித்துவிடும். அதனால் ஆட்டுக்காரர்கள்கூட அந்த மலைப்பக்கம் அதிகம் போவதில்லை. சுப்பா ரெட்டியாரும், மாரிமுத்து ரெட்டியாரும் மட்டும்தான் போட்டி போட்டுக்கொண்டு இந்தக் குளத்தில் வலை வீசுவார்கள். ஆனால் இந்தச் சாவுக்குப்பின் அவர்களும் குளத்தை நெருங்குவதில்லை.




நாளுக்கு நாள் சின்னையனின் ஆவி ஊரில் பலபேருக்கு காய்ச்சலையும், திகிலையும் ஏற்றிக்கொண்டு இருந்தது. வலைகளை விடாததால் குளத்தில் முட்டைக்குரவைகளும், விரால்களும் பெருகிக் கிடப்பதாக சுப்பா ரெட்டியாருக்கு தெரிந்ததில் இருந்து தூக்கம் இல்லாமல் தவித்தார். கனவில் வந்து வந்து போன மீன்கள் அவரை வெற்றிலை பாக்கு வைத்துக் கூப்பிட்டன. விரால் ஆசையும், ஆவி பயமும் அவரை மாறி மாறி அலைக்கழித்தன. பகலில் வலை விடுவது அத்தனை பயமானது இல்லை. ஆனால் இவர் வலை விட்டது தெரிந்தால் மாரிமுத்துவுக்கும் தைரியம் வந்து விடும். அவரும் போட்டிக்கு வரலாம். யோசித்து யோசித்துதான் யாருக்கும் தெரியாமல் இரவில் வலை விடப் போனார்கள்.


எத்தனையோ இரவுகளில் தனியாளாக சுப்பா ரெட்டியார் வலைவீசிய குளம்தான். குழந்தைகளைப்போல பெருத்த விரால்கள் வலையில் மாட்டிக்கொண்டு துள்ளுவதைப் பார்த்தவர்தான். ஆனால் அவருக்கே முருகேசன் உடனிருந்தும்கூட அந்த இரவில் ஒரு மெல்லிய அச்சம் நரம்பெங்கும் ஓடிக்கொண்டிருந்தது. ஊர் ஊராகப் பேசிக்கொள்வதைப்போல பனை மரத்தில் சின்னைய்யனின் ஆவி இருக்குமோ? மனதின் ஒரு மூலையின் அந்த எண்ணம் முளைத்ததும், பின் கழுத்தில் 'தக்'கென்று ஒரு சூடு படர்ந்தது. தண்ணீரில் நிற்கும்போதே நெற்றியிலும், கழுத்திலும் வியர்த்தது. தோளில் கிடந்த வலையை பிரித்து நீளமாய் விட்டுக்கொண்டே குளத்தின் மையத்தை நோக்கி நகர்ந்தவர், கடல்பால் மண்டைகளில் மாட்டித் தடுமாறினார். பின்னேலேயே ஒட்டியபடி வந்துகொண்டிருந்தான் முருகேசன்.


மார்பளவு தண்ணீரில் நின்று வானத்தைப் பார்த்தார். மேகங்கள் கரும் புகைகளைப்போல திட்டுத்திட்டாகக் கிடந்தன. நிலா பனைமரத்தின் தலைக்குமேல் வந்தபோது மேகங்கள் அதை மறைக்க, திடீரென இருள் சூழ்ந்தது. நெஞ்சுக்கூடு திக் திக் என அடித்துக்கொண்டது இருவருக்கும். இன்னும் சற்று தூரம்தான். ஒரு இருபது அடி வலையை விட்டால் குளத்தின் அந்தக் கரை வந்து விடும். அங்குதான் நிற்கிறது பனை. அதை நிமிர்ந்து பார்க்காமல் வலையை இறக்கிக்கொண்டே அவர் முன்னே நடக்க முருகேசன் தொடர்ந்தான். மரத்தை நெருங்க, நெருங்க தண்டவாளத்தில் ஓடும் ரயிலைப்போல துடிக்கத் தொடங்கியது நெஞ்சுக்கூடு.




பனையின் உச்சியில் உட்கார்ந்து ஒருவேளை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பானோ சினைய்யன்? இதுவரை ஆடுகளைத் தவிர வேறெதையும் அடித்ததில்லை. ஆனால் யாரையேனும் ரத்தம் கக்க வைக்கிறவரை அவன் ஆத்திரம் தீராது என்கிறார்கள். அவனது உடம்புக்கு ரெட்டை குண்டி என்றால் அவன் ஆவிக்கு எத்தனை குண்டி இருக்கும்? பத்தடி தூரத்தில் நிற்கிறது பனை. வலையும் முடியப்போகிறது. குளத்தின் குறுக்கும் மறுக்குமாக தண்ணீரை அடித்துக்கொண்டு நான்குமுறை போனால் போதும். மீன்கள் சிதறி ஓடி வளையில் மாட்டிக்கொள்ளும். பிறகு அவற்றை கழற்றி பையில் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.



லேசாக சிலுசிலுவென வீசிக்கொண்டிருந்த காற்று அப்போது திடும்மென வேகம் எடுத்தது. கடுமையான இருட்டில் குளத்தைச் சுற்றி நிழல் உருவங்களாக கள்ளிச் செடிகளும், முட்செடிகளும் அசைய, பனையின் உச்சியில் திடீரென எழுந்தது ஒரு பேரிரைச்சல். சலசலத்த அந்த ஓசையால் அதிர்ந்து, இருவரும் நிமிர்ந்து பனையைப் பார்க்க, அதன் உச்சியில் இருந்து ஒரு கருத்த உருவம் அவர்களை நோக்கி வேகமாய் கீழிறங்கியது. ஒரே ஒரு வினாடிதான். 'தொபீர்' என பெரும் சத்தத்தோடு சுப்பா ரெட்டியாரின் எதிரில் தண்ணீரில் குதித்தது அது. "எம்மாடியோவ்" என்று அலறியபடி கீழே சாய்ந்தார் அவர்.


பின்னால் இருந்த முருகேசனுக்கு லுங்கியிலேயே மூத்திரம் போனது. உடல் முழுவதும் ஒரு வெட்டு வெட்டியது. "அண்ணா..." என்று அலறியவன், தண்ணீரில் சாய்ந்தவரை பிடித்துத் தூக்கினான். தூக்கத் தூக்க சரிந்தார். கால்கள் துணியைப்போல துவண்டன. கைகளைப்பிடித்து தண்ணீருக்கு மேலாக இழுத்துவந்து கரையில் சாத்தினான். அவனது கைகளும் கால்களும உதறத் தொடங்கின. "அணா... ணோவ்... அணா" என்று உலுக்கினான். அதேநேரம் வலையில் மாட்டிய எதுவோ சலக் சலக் என எகிறத் தொடங்கியது. அதைப் பார்த்ததும் மேலும் உதறல் எடுத்தது அவனுக்கு. சின்னைய்யனின் ஆவி வலையை அறுக்கிறதோ? இரண்டு கை நிறைய நீரை மொண்டு சுப்பா ரெட்டியார் முகத்தில பளீரென அடித்தான். அசைவே இல்லை. உசுப்பிப் பார்த்தான். மரக்கட்டையைப் போல கிடந்தார்.



அவரை அலேக்காகத் தூக்கி தோளில் சாயத்துக்கொண்டு குளத்தின் ஓரத்திலேயே நடந்து வெளியே வந்தான். முட்செடிகளும், கப்பு மண்டைகளும் உடலெங்கும் கீறின. அதன்பின் ஒற்றையடிப்பாதையில் கால் வைத்ததும், வீடு வந்து சேர்ந்ததும் எதுவும் அவனுக்குத் தெரியவில்லை. மறுநாள் விடிந்தபோது ஊரே அவர்களை சூழ்ந்துகொண்டிருந்தது. ராத்திரி நடந்தவை அவனுக்குள் ஒட சட்டென்று எழுந்தான். மந்தையிலிருந்து தவறிவிட்ட செம்மறி ஆட்டைப்போல சுப்பா ரெட்டியார் எல்லோரையும் மலங்க மலங்கப் பார்த்தார். வாயடைத்துவிட்டது. அடிக்கடி லுங்கி நனைந்தது. தேசிகாமணி தேசிகரின் திருநீறும், வேப்பிலை மந்திரமும் கூட அவரை எழுப்பவில்லை. ஒருவாரம் வரை சுற்றி நிற்பவர்களையெல்லாம் பார்த்துப் பார்த்து பயந்தார். ஏழாவது நாள் சின்னைய்யன் அவரை துணைக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டான். ஊர் அப்படித்தான் சொன்னது.


அவருக்கு காரியமும், மறுநாள் நடப்பும் முடிந்தபின் இரண்டு நாட்கள் வீட்டுக்குள்ளேயே குந்திக்கிடந்தான் முருகேசன். அவனால் எதையுமே நம்ப முடியவில்லை. பெற்றவர்கள் போனபிறகு அவர்தான் இவனுக்கு எல்லாமாக இருந்தார். இருந்த கால்காணி நிலத்தை உழுது, கூலிக்கு ஏர் ஓட்டி இவனை வளர்த்தார். கல்யாணமே செய்துகொள்ளாமல் இவனுக்காகவே இருந்தார். ஒரே இரவில் எதுவுமே இல்லாமல் போனதை இவனால் நம்பவே முடியவில்லை. அந்த விடியற்காலையில் கால்காணி நிலத்தையும், குடியிருந்த சுற்றுக்குடிசையையும் மறந்துவிட்டு பேருந்து ஏறியவன்தான். இருபத்தைந்து ஆண்டுகளை முழுமையாய் தொலைத்துவிட்டு, இதோ... இப்போதுதான் திரும்ப வந்திருக்கிறான். போன இடத்தில் வேலை, கல்யாணம், குடும்பம், வசதிகள் என ஆனபோதும் ஊர்ப்பக்கம் திரும்பவே இல்லை.


யாருக்காக வருவது? அந்த இரவின் இருட்டும், குளத்தில் குதித்த கருத்த உருவமும் அவனை பல இரவுகளில் தூங்க விடாமல் செய்திருக்கின்றன. இப்போது யோசிக்கையில் விழுந்தது பனை மட்டையாக இருக்குமோ என்றுகூட அவனுக்குத் தோன்றுகிறது. ஆனால் அவனைவிட மகா தைரியப் பேர்வழியான அண்ணனே அலறி விழுந்தாரே. அதை நினைததால்தான் உடல கூசுகிறது. அது சின்னைய்யனின் ஆவியேதான். இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் எப்படி இருக்கும் சின்னைய்யன் குளம்? ஒற்றைப் பனையில் இப்போதும் அதே மூர்க்கத்தோடு இருக்குமா அந்த ஆவி? ஊரைவிட்டுப்போன சில ஆண்டுகள் வரை ஊரார் யாரையேனும் பார்த்தால் விசாரிப்பான். ஆள் அரவமற்றே கிடப்பதாகத்தான் சொன்னார்கள்.


அந்த சம்பவத்தைச் சொல்கிறபோதெல்லாம் இவன் மனைவிகூட திகிலோடுதான் பார்ப்பாள். இப்போது மகளின் திருமண பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்தவனுக்குள் எழுந்த அரிப்பு இரவெல்லாம் தூங்க விடவில்லை. இருபத்தைந்து ஆண்டுகளாய் அவனுக்குள் விடாமல் எழுகிற அரிப்பு. சொரிந்து சொரிந்து அடக்க முடியாத அரிப்பு. நேற்று மாலை வந்தவுடன் உறவுகளையெல்லாம் தேடித்தேடி பத்திரிகை வைத்தான். ஊரே தலைகீழாக மாறியிருந்தது. பாதி விளைநிலங்களில் கான்கிரீட் வீடுகள் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தன.


பெரியப்பாவின் பேரன் வீட்டில் இரவைக் கழித்து, காலையில் அரைகுறையாய் சாப்பிட்டு, இதோ இந்தக் காட்டுப்பாதையில் திகிலோடு காலடி வைத்தது முதலே பெரும் கல் விழுந்த நீர்ப் பரப்பாய் அலையடிக்கத் தொடங்கிவிட்டன எண்ணங்கள். எத்தனைமுறை ஓடிய மண் இது. எத்தனை முறை காட்டெலிகளைத்தேடி அலைந்த காடு இது. அடர்ந்த மரங்களைத் தொலைத்துவிட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்த சாராய மரங்களால் வெக்கை வீசியது இப்போது. அங்கங்கே அவலட்சணமாய் குந்தியிருந்த ஆவாரஞ்செடிகளையும், காரை முட்செடிகளையும் கடந்து, தூரத்தில் நிற்கும் ஒற்றைப் பனையை கண்களுக்குள் வாங்கியதுமே மின்சாரம் பாய்ந்தது உடலுக்குள். சின்னைய்யனின் ஆவிக்கும் இப்போது இருபத்தைந்து வயதிருக்கும். என்றால் வாலிப வயது.



மனிதன் வாலிப வயதில் துள்ளி விளையாடுகிறான். ஆவிகள் எப்படி இருக்கும்? அவைகளின் அதிகபட்ச ஆயுள் எவ்வளவு? கேள்விகளோடும், திகில்களோடும் பனையை நெருங்க நெருங்க அவனது இதய ஓட்டம் அதிகரித்தது. ஆனால் நடையின் வேகம் தளர்ந்தது. வியர்க்க, மூச்சடைப்பது போன்ற திணறலுடன் ஒருவழியாய் குளத்தை எட்டிப் பார்த்தவன் அதிர்ந்தான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை உறைய வைத்தது. "அய்யோ... அடப்பாவிப் பசங்களே... ஓடுங்க... ஓடுங்க..." என்று அலறினான்.


வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை. கண்கள் பிதுங்கிக்கொண்டு நின்றன. சின்னனாங்குளத்தில் ஒற்றைப் பனையின் கீழே கம்புகளை ஊன்றி வைத்து, ஏழெட்டுப் பிள்ளைகள் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். முருகேசன் வாயடைத்துப் போய் நிற்க, அந்த நேரத்தில் மேலெழும்பிய பந்து சரியாக ஒற்றைப் பனையின் நெற்றிப் பொட்டில் அடித்துவிட்டு, சலசலவென மட்டைகளை உரசிக்கொண்டு கீழே இறங்கியது.




மனதின் நினைவுகள்


சென்னை விமான நிலையத்தில் மணி விடியற்காலை மூன்று. இன்னும் ஒரு மணி நேரத்தில் புறப்படவிருந்த எமிரேட்ஸ் விமானத்திற்காக காத்திருந்தார் சண்முகம். அவரது மகன் அருணிடமிருந்து அழைப்பு வந்தது. "நான் பாத்துக்கறேன் டா... நீ ஒன்னும் கவலைப்படாத. . ஓகே... எனக்குத் தெரியாத ஊரா என்ன அது? எழுப்ப வேண்டாம் தூங்கட்டும்... அம்மாவக் கொஞ்சம் கவனமாப் பார்த்துக்கப்பா... சரி. . நான் அங்க போய் இறங்கினதும் கூப்பிடுறேன்." தன்னுடைய ஐம்பதுகளில் இருக்கும் சண்முகம் ஒரு பன்னாட்டு பொறியியல் நிறுவனத்தின் பொது மேலாளர். பல ஆண்டுகளுக்குப் பிறகு அலுவலகப் பயணமாக வெளிநாடு கிளம்பியிருந்தார்.


விமானம் பறக்க ஏதுவாக ஓடுதளத்தில் காத்துக் கொண்டிருந்தது. அது மெதுவாக ஊர்ந்து செல்லத் துவங்கிய வேளை சண்முகத்தின் மனதில் நினைவுகள் இழையாக கசியத் துவங்கி கண்களில் காட்சிகளாக விரியத் தொடங்கின. நம்முடைய ஒவ்வொரு பயணத்தின் போதும் ஏற்படும் அவ்விடம் மற்றும் மனிதர்கள் சார்ந்த கடந்த கால நினைவுகளின் சுவடாகவும் வருங்காலத்தின் எதிர்பார்ப்புமாக இருப்பது போல நடுவானில் சண்முகத்தின் சிந்தையில் வந்து மறைந்து போயின.


அது ஜெர்மனியின் பான் நகரம். பான்-கொலன் நகர விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவர் டாக்சியில் சாய்ந்தவாறு புகைப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு ஆப்கானியரிடம் தான் முன்பதிவு செய்த விடுதியின் முகவரியைக் காட்டினார். பான் நகரம் கடந்த இருபது ஆண்டுகளில் அந்த காலத்திற்குரிய மாற்றங்களைப் பெற்றிருந்தது. விடுதியை அடைந்ததும் வீட்டிற்கு அழைத்துப் பேசினார் சண்முகம்.


 பயணக் களைப்பில் இரவு நன்கு உறங்கிய சண்முகம் காலை எழுவதற்கு முன்னே நகரம் எழுந்திருந்தது. தெருவில் சென்று கொண்டிருந்த குழந்தைகளின் கூச்சல் சண்முகத்திற்கு அவரது இருப்பிடத்தை உணர்த்தியது. ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்தார். அந்த இளங் காலையில் கோடையைக் கொண்டாட காலில் சக்கரம் கட்டிய சிறுவர்களும் சிறுமிகளும் உற்சாகமாக சென்று கொண்டிருந்தனர். சிலர் ஆளுயர பட்டங்களை கைகளில் ஏந்தியவாறு சென்று கொண்டிருந்தனர். வயதான ஒரு பெரியவர் நடக்க முடியாத தன் மனைவியை வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.


மீண்டும் கட்டிலில் விழுந்தவர் தனக்குள் பேசத் துவங்கினார். "இருபது வருடங்களுக்கு முன்பு பான் நகரின் இதைப் போன்ற மற்றொரு வீதியின் ஒரு வீட்டில் தான் தினமும் துயில் கொண்டு எழுந்தேன். உயர்கல்வி மற்றும் வேலைக்காக என்னுடைய இருபது வயதில் இந்தியாவை விட்டுப் புறப்பட்டு வந்த நான் கிட்டத்தட்ட எட்டு வருடங்களை இந்த பான் நகரில் தான் கழித்தேன். பீத்தோவன் தன்னுடைய இருபதுகளில் ஓடித் திரிந்து விளையாடிய அதே வீதிகளில் அப்பொழுது நானும் நடந்து திரிந்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு வீதியில் தான் அன்று சகானாவைச் சந்தித்தேன்.


அது புறநகரில் ரைன் பாஹிற்கு முன்னால் அமைந்த ஒரு சிறிய கிராமம். விடுமுறை நாளான அன்று மைதானத்தில் நண்பர்களுடன் கால் பந்தாடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அந்த கிராமத்தின் ஆள் இல்லாத ஒரு தெருவில் சைக்கிளில் மணி அடித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தாள் சகானா. அடர் கரு நிற சுருள் முடி,கரு நிற ஸ்வெட்டர்,கரு மைப் பூசிய கரு விழியென வசீகரமான ஒரு தமிழச்சியின் தோற்றத்துடன் அந்த வெள்ளை வீதியில் சகானா என்னைக் கடந்து சென்றாள். இல்லை நான் தான் அவளைக் கடந்து நடந்து கொண்டிருந்தேன். சற்று நேரம் அவள் எனக்கு எதிர் திசையில் என்னுடனேயே பயணித்துக் கொண்டிருந்தாள். அந்த முகம் என் மனதிலிருந்து அகல ஒரு சில நாட்கள் ஆயின. நாட்கள் நகர்ந்தன. சைக்கிளில் பயணிப்போர் எல்லாம் என் கவனத்தில் வந்தனர்.


பிறிதொரு நாளில் எதிர்பாராமல் அது நடந்தது. தெருவின் ஒரு முனையில் நான் நடந்து கொண்டிருக்கையில் சகானா தொலைவே மறுமுனையில் சென்று திரும்பினாள். அவளது சைக்கிளின் பின் புறக் கரியரில் ஒரு நாய்க் குட்டி மிக நேர்த்தியாக சம்மணமிட்டு அமர்ந்திருந்தது. என் கால்கள் என்னை அறியாமல் பரபரத்தன. எல்லோரும் பார்க்க தெருவில் அப்படி நான் ஓடியதில்லை. அவள் சென்று திரும்பிய தெருவான சீகர் ஸ்ட்ராசே எனக்காக எதையோ ஒளித்து வைத்திருப்பதைப் போன்ற உள்ளுணர்வுடன் சென்று திரும்பினேன். ஆம்... சகானா... சைக்கிளை நிறுத்திவிட்டு பின் பக்க சக்கரத்தில் எதோ செய்து கொண்டிருந்தாள். என்னுடைய நடையின் வேகம் முற்றிலுமாக குறைந்தது. சகானாவின் ஒரு பக்கத்தைப் படித்துவிட்டுக் கடந்தேன். அவள் தலையை நிமிர்த்தவில்லை. மறுபக்கத்தை படிக்கத் திரும்பினேன். தொலைவிலும் அருகிலும் ஒரே பொலிவுடன் காட்சி அளிக்கும் அற்புத ஓவியமாகத் தெரிந்தாள் சகானா. 'Darf Ich Ihnen helfen?' நானறியாமல் திடீரென ஜெர்மன் வந்தது எனக்கு. நிமிர்ந்து பார்த்தவள் எனது தோற்றத்திற்கும் பேசிய மொழிக்கும் இருந்த முரண்பாட்டால் சற்று அதிசயித்தாள் .


 சற்று சுதாரித்தவள் 'Keine Problem'. . Danke! என சுருக்கமாக முடித்துக் கொண்டாள். எனக்கு அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை. நல்ல வேளையாக அவளது சைக்கிள் எனக்கு உதவியது. செயின் நன்றாக சிக்கிக் கொண்டிருந்தது. என்னை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தாள். நான் அவ்விடத்தை விட்டு கொஞ்சம் கூட நகரவில்லை. என்னருகில் வந்து மோப்பம் பிடித்த அவளது நாய்க் குட்டி என்னைக் கிளம்பு என்பதைப் போல பார்த்தது. 'ஆலிஸ் இங்க வா... ' என செல்லமாக கடிந்து கொண்டாள் அந்த நாய்க் குட்டியை. "ஹலோ நீங்க தமிழ் ஆ?" ஆம். . என்று லேசாக சிரித்தாள். அதற்குப் பிறகு நானும் பேசினேன் அவளும் பேசினாள்.


ஆனால் நான் கேட்ட கேள்விகள் எதற்கும் அவள் பதில் கூறவில்லை. அவள் பெயரைத் தவிர. ஆனால் அவள் பேசினாள். அவளது சாமார்த்தியத்தை நான் ரசித்தேனே தவிர வெறுக்கவில்லை. வேண்டுமென்றே ஒரு அவசரத்தை விதைத்துக் கொண்டு சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நடந்தாள் சகானா. விளையாட்டில் ஆர்வம் கூடிப் போனது எனக்கு. வாரக் கடைசியில் மட்டும் விளையாடிக் கொண்டிருந்த நான் பின்பு வார நாட்களிலும் விளையாடத் துவங்கினேன். ஒரு நம்பிக்கையில்! முதல் வாரம் எனக்கு சாதகமாக அமையவில்லை. மற்றொரு நாளில் அது நடந்தது. சகானா சாலையில் எதிர்பட்டாள். "ஹாய். . " என்று என்னைப் பார்த்து லேசாக நகைத்தவள் சைக்கிளை நிறுத்தினாள். அவள் அன்று அப்படிப் பேசுவாள் என்று நான் சிறிதும் எதிர் பார்க்கவே இல்லை. இருவரும் அந்த அறிமுக உரையாடலில் எங்களது பூர்வீகத்தை பின்புலங்களை கல்வியைப் பேசிக் கொண்டே நடந்தோம்.


 சகானா அப்பொழுது பள்ளிக் கல்வியை முடித்து பியானோவும் பரதமும் கற்று வந்தாள். அவளது அண்ணன்கள் இருவரும் கொலன் நகரில் வேலை பார்க்க சகானா தனக்காக அவளது பெற்றோர்கள் கட்டிய வீட்டில் அவர்களுடன் வசித்து வந்தாள். சகானாவின் அப்பா ஒரு கை வினைக் கலைஞர். கண்ணாடியாலான அழகுப் பொருட்களைச் செய்வது அவரது தொழில் எனத் தெரிவித்தாள். முப்பதாம் எண் பொறிக்கப்பட்ட கதவுக்கு முன்னே சைக்கிளை நிறுத்தியவள் என்னை உள்ளே வருமாறு அழைத்தாள். அடுத்த மூன்று மாதங்களில் சகானா என்னை அவளது இயல்பான நண்பனாக ஏற்றுக் கொண்டிருந்தாள். இப்படியாக எங்கள் நட்பு இனிதாக தொடர்ந்தது. ஒரு நாள் தைப் பூசத்தன்று என்னை வீட்டிற்கு அழைத்திருந்தாள் சகானா. தன்னுடைய பெற்றோரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தாள்.


அவளுக்கென பிரமாண்டமாக அமைந்த தனியறையில் இருந்த பியானோவை எனக்கு வாசித்துக் காட்டினாள். வீட்டிற்குப் பின்னே அவள் வளர்த்து வரும் ஆப்பிள் தோட்டத்திற்கு என்னை அழைத்துச் சென்றாள். இருவரும் ஆப்பிள் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டே நெடு நேரம் இளைய ராஜாவையும் ரகுமானையும் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அன்று சகானா என்னுடன் இருக்கும் பொழுதுகளே அவளுடைய இனிய பொழுதுகள் என என்னிடம் தெரிவித்தாள். நானும் அதை அவள் கண்களைப் பார்த்து அறிந்து கொண்டேன். அந்த நொடியில் எங்களுக்குள் ஏற்பட்ட ஒரு பதட்டம் எனக்கு ஆயிரம் கதைகள் சொல்லின. அன்றிரவு அங்கிருந்து திரும்பிய நான் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.


ஒரு புள்ளியாக எங்கேயோ என்னுள் தொடக்கி தென்பட்டுக் கொண்டிருந்த சகானா என்னுள் முழுமையாக் நிறையத் துவங்கினாள். என்னுள் திடீர் காளான் என பல கேள்விகள் முளைத்தன திடீரென மனதளவில் ஒரு பாதுகாப்பின்மையை நான் உணரத் தொடங்கினேன். "சகானா வேறு நகரத்திற்குச் சென்றுவிட்டால்?" "அல்லது நான் இந்தியாவிற்குச் சென்று விட்டால்?" "சென்றால் என்ன?... . " இல்லை... இது அபத்தம். அவளை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பிடித்தால் என்ன செய்யப் போகிறாய்? டேய்... . இது தேவையா இப்போ? நான் சகானாவைக் காதலிக்கிறேனா? ஏன் கூடாது. . ? நானே எனக்குள் கேள்விகளையும் எதிர் கேள்விகளையும் கேட்கத் துவங்கினேன். இந்த திடீர் மனநிலை சகானவிடம் இது பற்றி பேச வேண்டும் என்ற ஆசையையும் ஆர்வத்தையும் தூண்டியதோடு என் தூக்கத்தையும் கெடுத்தது.


இருத்தும் அதற்கான சூழல் அவ்வளவு எளிதில் எனக்கு வாய்க்கவில்லை. காலச் சக்கரம் சுழற்றி வீசிய வீச்சில் நானும் சகானாவும் வெவ்வேறு நிலப் பரப்பில் சென்று விழுந்தோம். சகானா உயர் கல்விக்காக பிரிட்டனுக்குச் சென்றுவிட்டாள். அவள் இல்லாத ரைன்பாஹின் வீதிகள் எனக்கு வெகு விகாரமாக காட்சி அளித்தன. அவள் சென்ற ஓராண்டில் நானும் இந்தியா திரும்பும் சூழலுக்கு தள்ளப்பட்டேன். வாழ்வில் என் மீது நானே அதிருப்தி கொண்டிருந்த வேளை விமலா வந்து எனக்கு புத்துயிர் கொடுத்தாள். வாழ்க்கையை எனக்கு விரல் பிடித்துச் சொல்லிக் கொடுத்தாள். அருணை என் கையில் கொடுத்து என் உலகத்தையே மாற்றிப் போட்டாள் விமலா.


சர்ச்சில் மணி ஒலித்தது. காட்சி களைந்து கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தார் சண்முகம். காலைக் கடன்களை முடித்து கீழே வந்தார். சூடான காப்பியுடன் மஷின் காத்துக் கொண்டிருந்தது. சண்முகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க விடுதியின் ஊழியர் ஒரு சைக்கிளை ஏற்படுத்திக் கொடுத்தார். நகர வரைபடம் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு தன் சைக்கிள் பயணத்தை துவங்கினார் சண்முகம். கட்டிடங்கள் உயர்ந்திருந்தன. சாலைகள் விரிந்திருந்தன. நகரமே கண்ணாடியால் மூடப் பட்டதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது சண்முகத்திற்கு. ஒவ்வொரு வீதிக்குள்ளும் தன்னுள் பற்றிக் கொண்ட பரவசத்துடன் நுழைந்தார்.



முதல் நாளில் சிட்டி சென்டர் முதல் அவர் புழங்கிய தெருக்களின் வழியே நகரத்தைச் சுற்றினார் சண்முகம். மறுநாள் சண்முகத்தின் மனதில் முழுவதுமாக சகானா வந்து நிழலாக நின்றாள். சண்முகத்திடம் அப்பொழுது முதல் ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது. அன்று முழு நாளையும் பீதோவன் ஹாஸ் மியூசியத்தில் செலவிட எண்ணி இருந்தார். மியூசியத்தைச் சுற்றி வந்தவர் அன்றைய தினம் பீதோவன் ஹாஸ் சேம்பர் ஹாலில் நடைபெற்ற சிறப்புக் கச்சேரியில் சென்று அமர்ந்தார். இருந்தும் முழுமையாக தன்னைச் செலுத்த முடியாமல் தவித்தார். பீதோவனையும் மீறி சகானா சண்முகத்தின் உள்ளே மெல்லிதாக பியானோவை வாசித்துக் கொண்டிருந்தார்.


 ஒரு தீர்க்கமான முடிவுடன் கச்சேரியின் பாதியிலே கிளம்பினார் சண்முகம். அந்த மாலையில் ரைன்பாஹில் சகானாவின் வீடு அமைந்த சீகர் ஸ்ட்ராசெயில் சென்று திரும்பும் போது சண்முகத்தின் இதயத் துடிப்பு மேளமாக கொட்டியது. படபடப்புடன் நடந்தவரின் கண்கள் முப்பதாம் எண் பொறிக்கப்பட்ட வீட்டைத் தேடின. சகானா ரஜீவன் என்ற பெயர் அஞ்சல் பெட்டியில் பெரிதாகத் தென்பட்டது. நொடியில் என்ன செய்வதென்று குழம்பிய சண்முகம் சகானா வீட்டுக்கு எதிரே புதிதாக முளைத்திருந்த நூலகத்திற்குள் நுழைந்தார். அனுமதி மறுக்கப்பட எதோ சில காரணங்களைச் சொல்லி கடவுச் சீட்டையும் காட்டி கருணை அடிப்படையில் உள்ளே நுழைந்தார் சண்முகம். அவசரமாக எதோ ஒரு நூலை எடுத்துக் கொண்டு ஜன்னலின் அருகே சென்று அமர்ந்தார்.


ஜெர்மன் மொழியில் இருந்த அந்த நூலின் அட்டைப் படத்தில் ஒருவன் ஜன்னலின் வழியே ஒரு குருவிக் கூட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் ஒரு மணி நேரத்தில் நூலகம் மூடப் படுவதாக ஒரு பெண்மணி வந்து அறிவித்து விட்டுச் சென்றாள். சண்முகத்திற்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது. சற்று நேரத்தில் சாலையில் வெளியே காரை விட்டு மூவர் இறங்கினர்.


அது சகானாவும் அவளது குடும்பமும் தான். "என் சகானாவா அது. . இருபது வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே தோற்றத்தில் இருந்தாள். அது எப்படி சாத்தியம்... அது சகானாவின் மகளாக இருக்க வேண்டும். அம்மாவிடம் அந்த மூக்கை அப்படியே கேட்டு வாங்கியிருக்கிறாள். அவள் பின்னே அதே புன்னகை மாறாமல் லேசான கருப்பு வெள்ளை முடியுடன் சகானா. . கூடச் செல்பவர் அவளது கணவராகவே இருக்க வேண்டும். என்னைவிட அவருக்கு வழுக்கை சற்று குறைவாகவே உள்ளது" என சகானாவின் குடும்பத்தை தொலைவிருந்தே கண்டு மகிழ்ந்தார் சண்முகம்.



 மூவரும் உள்ளே சென்றனர். சிறிது நேரம் கழித்து லேசாக இருட்டத் தொடங்கிய வேளை பெண் ஒருத்தி சைக்கிளில் மணியடித்துக் கொண்டே மெதுவாக வந்தாள். சட்டென ஓரிடத்தில் தானாகவே நிறுத்தியவள் கீழே குனிந்து அமர்ந்தாள். பின்பு சாலையின் இருபுறமும் யாரையோ ஆவலுடன் தேடினாள். யாருக்காகவோ அவள் காத்திருப்பதைப் போலத் தெரிந்தது. ஆலிசைப் போல ஒரு நாய் அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது.


சண்முகத்தின் கால்கள் துடித்தன. கைகள் பரபரத்தன. கண்களை மூடி நாற்காலியை இறுகப் பற்றிக் கொண்டார் சண்முகம். பின்பு சற்று நேரத்தில் இருளில் அந்த உருவம் சைக்கிளை மெதுவாக தள்ளிக் கொண்டு எதிரே உள்ள முப்பதாம் எண் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு நுழைந்தது. சண்முகம் தன் கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்தபடி தன் மனைவி விமலாவிடமிருந்து வந்த அழைப்பை ஏற்று பேசத் துவங்கினார்.