Saturday, June 27, 2015

ஐ ஹேட் யூ, பட்.. - அத்தியாயம் - 10

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்று சொல்வார்கள் இல்லையா..?? அடைகிற அவமானம் கூட சில நேரங்களில் அத்தகைய உதவியை செய்யக்கூடும்..!! யாருக்குமே தன்மானம் என்பது மிகவும் உன்னதமான விஷயம்..!! அந்த தன்மானத்தை சீண்டுகிற மாதிரியான சம்பவம் நடக்கிறபோது.. அழுகை வரலாம்.. ஆத்திரம் வரலாம்.. ஆனால் அதையெல்லாம் விட தனது நிலையை உயர்த்திக் காட்டவேண்டும் என்ற ஒரு வேகம் வர வேண்டும்..!! ஆன்சைட் சென்று அவமானப்பட்டு திரும்பியபோது கோவிந்திற்கு ஒரு வேகம் வந்ததே.. தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று.. அது மாதிரி..!! அத்தகைய ஒரு வேகத்தையே அசோக் அள்ளி வீசிய வார்த்தைகள் ப்ரியாவுக்குள்ளும் ஏற்படுத்தின..!!

அதன் பிறகு வந்த நாட்களில் அந்த வேகமே ப்ரியாவை உந்தித் தள்ளியது. தனது திறமையால் டெக் லீட் பதவி தன்னை தேடி வரவில்லை என்பதை அவள் நன்றாகவே உணர்ந்து வைத்திருந்தாள். ஆனால் இப்போது அந்த பதவி தானாக வந்த பிறகாவது, அதற்கேற்ற திறமையை வளர்த்துக் கொள்வதன் மூலம், எல்லாவற்றையும் சரிக்கட்டிவிட முடியும் என்றே நம்பினாள். கம்யூனிகேஷன் ஸ்கில், பிரசன்டேஷன் ஸ்கில் போன்ற சாஃப்ட் ஸ்கில்ஸ்களில் அவள் எப்போதுமே கில்லாடிதான். டெக்னிகல் ஸ்கில்ஸ்தான் அவளது பலவீனம். அந்த திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதுதான் அவளது முதல் குறிக்கோளாக இருந்தது.


ப்ரியா நினைத்தை முடிக்க நிறைய முயற்சிகள் எடுத்துக்கொண்டாள் என்றுதான் சொல்லவேண்டும். தான் எந்தெந்த டெக்னாலஜிகளில் வீக் என்பதை முதலில் பட்டியல் இட்டுக் கொண்டாள். அவர்கள் கம்பனியில் அந்த டெக்னாலஜிகளில் எங்காவது ட்ரெயினிங் நடந்தால், தேடிப்பிடித்து தன்னை நாமினேட் செய்து கொண்டாள். மிகவும் சின்சியராக அந்த ட்ரெயினிங் எல்லாம் அட்டன்ட் செய்தாள். சில ஆன்லைன் டெக்னாலஜி ஃபோரம்களில் உறுப்பினர் ஆகிக்கொண்டாள். அங்கு நடக்கிற விவாதங்களை ஒதுங்கி நின்று கவனித்தாள். நிறைய கற்றுக்கொண்டாள்.. சில புரியாத விஷயங்களை மனப்பாடம் செய்தாவது மனதில் நிறுத்திக் கொண்டாள்..!!

வீட்டிலும் எந்த நேரமும் புத்தகமும் கையுமாகவே அலைந்தாள். டிவி, ஆவி, ஜூவி எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு டிஸ்டன்ஸில் வைத்தாள். 'நாலு விஷயங்களை பத்தி தெரிஞ்சுக்குறது தப்பே இல்ல..!!' எனும் தனது கோட்பாட்டை சற்றே மாற்றி அமைத்துக் கொண்டாள். இப்போதைய தனது குறிக்கோள், தேவையான விஷயங்களில் தெளிவான அறிவு பெறுவதுதான் என்பதை நன்கே உணர்ந்திருந்தாள். மகளுடைய இந்த மாற்றத்தை வரதராஜன் வியப்பாக பார்த்தார். கண்விழித்து படிக்கிற மகளுக்கு காபி ஆற்றியவாறே வந்தவர், அவள் அமர்ந்திருந்த டேபிள் மீது விரிந்து கிடந்த மூன்று தடி தடி புத்தகங்களை பார்த்து மலைத்துப் போனார். மூன்று புத்தகங்களிலும் மாறி மாறி பார்வையை வீசுகிற மகளை பிரமிப்பாகவும், சற்றே கவலையாகவும் பார்த்தார்.

"என்னம்மா இது.. ஒரே நேரத்துல மூணு புத்தகத்தை வச்சு படிச்சுட்டு இருக்குற..??"

"ஆமாம் டாடி.. இதுல இருக்குறது அதுல இருக்காது.. அதுல இருக்குறது இதுல இருக்காது..!! ஆனா நம்ம மண்டைக்குள்ள மட்டும்.. எல்லாம் இருக்கணும்..!!" ப்ரியா சலிப்பாக சொன்னாள்.

"ஹ்ம்ம்.. இப்போலாம் டெயிலி இப்படி விழுந்து விழுந்து படிக்க ஆரம்பிச்சுட்ட..??"

"ஏன் டாடி.. படிக்க கூடாதா..??"

"இல்லம்மா.. காலேஜ் எக்ஸாம்க்கு கூட நீ இப்படி கண்ணு முழிச்சுலாம் படிச்சது இல்லையேன்னு கேட்டேன்..??"

மகள் மீது இருக்கும் அன்பில் வரதராஜன் சீரியசாக கேட்க, ப்ரியாவோ அந்த வாய்ப்பை கூட ஸீன் போட உபயோகித்துக் கொண்டாள்.

"ஹையோ.. காலேஜ் எக்ஸாமும் இதுவும் ஒன்னா டாடி ..?? டெக் லீட் பொசிஷன் எவ்வளவு கஷ்டம் தெரியுமா.. எத்தனை மீட்டிங் அட்டன்ட் பண்ணனும் தெரியுமா.. எத்தனை பேரை சமாளிக்கணும் தெரியுமா..?? எக்யுப்டா இருக்கணும் டாடி.. இல்லனா ஏமாத்திருவாங்க..!!"

"எகுப்னா..??" வரதாராஜன் தலையை சொறிந்தார்.

"ஷ்ஷ்ஷ்ஷ்..!! ஆயத்தமா இருக்கணும்னு அர்த்தம்..!! போருக்கு போறதுக்கு முன்னாடி.. இந்த கத்தியை நல்லா தீட்டிட்டு போறாங்கல்ல.. அந்த மாதிரி..!!"

"ஓ..!!!!"

"ப்ச்.. உங்களுக்கு இதுலாம் புரியாது.. காபியை குடுத்துட்டு நீங்க போய் தூங்குங்க.. நான் கொஞ்ச நேரம் படிச்சுட்டு படுத்துக்குறேன்..!!"

சலிப்பாக சொல்லியவாறே அவர் கையிலிருக்கும் காபியை ப்ரியா பிடுங்கிக்கொண்டு அவரை விரட்டினாள். எத்தனையோ பேரை சமாளிக்கவேண்டும் என்று ப்ரியா அப்பாவிடம் சொன்னாலும், அவளுடைய எய்ம் எல்லாம் ஒருவனை சமாளிப்பதில்தான் இருந்தது. அசோக்..!!!!

அவன் அன்று ப்ரியாவிடம் விட்ட சவாலின் பிறகு, இருவரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மோதிக் கொண்டார்கள். அவர்கள் கைகோர்த்து ஒன்றாக சுற்றித்திரிந்தபோது, அவர்களுடைய மனதுக்குள் தூங்கிய குழந்தைத்தனமான குணங்கள், இப்போது வெளியே குதித்து எதிரும் புதிருமாக சண்டையிட்டன. அற்பத்தனமாய்.. முதிர்வில்லா பிள்ளைகளாய் முட்டிக் கொள்வார்கள்..!!

கேஃப்டீரியாவில் மதிய உணவு அருந்துகையில் ஒரு நாள்..

டீமில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஒரு மீட்டிங் முடித்துவிட்டு ப்ரியா சற்று தாமதமாகத்தான் வந்தாள். அவள் அவசரமாக வருவதையே அசோக் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான். கையில் ஆவி பறக்கிற நூடுல்ஸ் தட்டுடன் வந்த ப்ரியா, அந்த டேபிளில் காலியாக இருந்த அந்த ஒற்றை இருக்கை நோக்கி சென்றாள். பின்புறத்தை தடவிக் கொண்டிருந்த துப்பட்டாவை விலக்கிவிட்டு அவள் உட்கார முனைய, அசோக் அந்த தருணத்துக்காகத்தான் காத்திருந்தவன் போல, தனது வலது காலை நீட்டி அந்த சேரில் வைத்து, ப்ரியாவை அமரவிடாமல் செய்தான். அவள் இப்போது வெடுக்கென திரும்பி கடுப்புடன் இவனை முறைத்தாள். இவனோ கூலாக..

"ஒய்.. என்ன முறைக்கிற..??" என்று போலிக்கோபம் காட்டினான்.

"காலை எடுடா..!!" ப்ரியாவின் குரலில் உடனடியாகவே ஒரு உஷ்ணம்.

"முடியாது..!! இதெல்லாம் டெவலப்பர்ஸ் க்ரூப்.. டெக்லீட்க்குலாம் இங்க சீட் இல்ல.. வேற எங்கயாவது ஓடிப்போ..!!"

"நான் எதுக்கு வேற எங்கயும் போகணும்..?? டெக்லீட் ஆனா என்ன.. டெலிவரி மேனேஜர் ஆனா என்ன..?? நான் எப்போவும் இந்த க்ரூப்ல ஒருத்திதான்..!!"

"ஹாஹா.. நீயா அப்படி சொல்லிக்கிறதா..?? நீ இந்த க்ரூப்ல இருக்கியா இல்லையான்னு நாங்க சொல்லணும்..!! உன் க்ரூப் எது தெரியுமா..? ஆங்.. அங்க பாரு.. தனியா உக்காந்து சாப்புட்டு இருக்காரு.. பாலா..!! அவர்தான் உன் க்ரூப்.. போ.. அவர்கூட போய் ஜாயின் பண்ணிக்கோ.. அப்படியே கம்பனி குடுக்குறேன்ற சாக்குல அவரை நல்லா காக்கா புடி.. அடுத்த ப்ரோமோஷனுக்கு ரொம்ப யூஸ் ஆகும்..!!"

அசோக் கேலியாக சொல்ல, ப்ரியா கண்களை இடுக்கி அவனை முறைத்தாள். அசோக் அந்த மாதிரி ப்ரியாவை சீண்டுவது அடுத்தவர்களுக்கும் எரிச்சலை உண்டாக்கியது. அனைவரும் ப்ரியாவுக்கு சப்போர்ட் செய்தார்கள். 'ஏய்.. ஏண்டா இப்படி பண்ணுற.. அவளை உக்கார விடுடா..' என்று ஆளாளுக்கு அசோக்கிடம் சலிப்பாக சொன்னார்கள். கோவிந்த் கூட 'பாஸ்.. பா..பாவம் பாஸ்.. காலை எடுங்க ப்ளீஸ்..' என்று கெஞ்சினான். அசோக்கோ 'ப்ச்.. சும்மா இருங்க எல்லாம்.. அவ ஏதோ பாசக்காரி மாதிரி நடிக்கிறா.. நீங்களும் அதை நம்பிக்கிட்டு..' என்று காலை எடுக்க மறுத்தான்.

"இப்போ காலை எடுக்கப் போறியா.. இல்லையா..??" ப்ரியா பற்களை கடித்தவாறு இப்போது பொறுமை இல்லாமல் கேட்க,

"முடியாது.. என்ன பண்ணுவ..??" அசோக் எகத்தாளமாக கேட்டான்.

ப்ரியா ஒரு சில வினாடிகள் அசோக்கை எரித்துவிடுவது போல முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் கையிலிருந்த நூடுல்சில் செருகியிருந்த ஃபோர்க்கை பிடுங்கி, அசோக்கின் தொடையில் ஓங்கி ஒரு குத்து குத்தினாள். அசோக் உடனே 'ஆஆஆஆஆ...!!' என அலறிக்கொண்டு சேர் மீதிருந்த காலை அவசரமாக எடுத்தான். அந்த கேப்பில் ப்ரியா அந்த சேரில் அமர்ந்து கொண்டாள். அசோக் தொடையை தடவியவாறு 'ஷ்ஷ்ஷ்ஷ்...' என்று வலியில் துடிக்க, அனைவரும் அவனை பார்த்து வாயில் உணவுடன் சிரித்தனர். ப்ரியா அவசர அவசரமாக நூடுல்ஸ் அள்ளி வாய்க்குள் போட்டு குதப்பிக்கொண்டே அசோக்கை பார்த்து சொன்னாள்.

"நா இங்க்தா உக்காந் சாப்புவேன்.. நீ வேணா எங்கா போ..!!"

"ஆஆஆஆ.. ரத்தம் வருதுடி.. ராட்சசி..!!"

"வதத்தும் வதத்தும்.. நல்லா வதத்தும்..!!" நூடுல்சை அசை போட்டவாறே ப்ரியா சொன்னாள்.

"பேய்.. பிசாசு.. காட்டேரி..!!"

அப்புறம் அன்று சாப்பிட்டு முடிக்கும் வரை அசோக் அவளை திட்டிக்கொண்டே இருந்தான். அவன் இந்த மாதிரியெல்லாம் ப்ரியாவை சீண்ட சீண்ட, அவள் உள்ளுக்குள் பொறுமிக்கொண்டே இருந்தாள். அந்த பொறுமலை அடக்க முடியாமல் ஒருநாள்..

'வேலை எப்படிடி போகுது ப்ரியா..?' என்று நண்பி ஒருத்தி அவளுடைய ஃபேஸ்புக் முகப்பு சுவற்றில் கிறுக்கி வைக்க.. 'ஒரு ஈகோ புடிச்ச பய இம்சை பண்ணிட்டே இருக்காண்டி.. அவனுக்கு வைக்கிறேன் பாரு ஆப்பு..!!' என்று இவளும் பதிலுக்கு கிறுக்கி வைத்துவிட்டாள்..!! ப்ரியாவுடைய நடவடிக்களை நோட்டமிட்டுக்கொண்டே இருக்கும் அசோக்கிற்கு, அடுத்த நாளே அந்த கிறுக்கல் கண்களில் பட்டுவிட்டது. டென்ஷன் ஆகிப் போனான்.

"என்னைத்தான ஈகோ புடிச்ச பயன்னு சொல்லிருக்குற..??" என்று ப்ரியாவிடம் சென்று எகிறினான்.

"உ..உன்னலாம் ஒன்னும் சொல்லல.. உ..உலகத்துல நீ ஒருத்தன்தான் ஈகோ புடிச்ச பயலா..?? நான் நம்ம QA மேனேஜரை சொன்னேன்..!! போ.. போ.. போய் வேலையை பாரு போ.." என்று திருதிருவென விழித்தவாறு ப்ரியா சமாளித்தாள்.

அன்று இரவு அசோக்கின் வீட்டில்.. டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்த செல்வி.. ஹீரோயினின் கணவனை 'சாப்பாட்டுல போய் கோவத்தை காட்டுறானே.. சரியான ஈகோ புடிச்ச பய..!!' என்று திட்டிவிட.. 'இப்போ என்னைத்தான சொன்னீங்க.. என்னைத்தான சொன்னீங்க..?' என்று ஆக்ரோஷமாக கத்தியவாறே, சாப்பிட்டுக்கொண்டிருந்த அசோக் அண்ணியிடம் சண்டைக்கு பாய்ந்தான்..!! புருஷனிடம் அறை வாங்கிவிட்டு கேமராவை பார்க்கும் அந்த ஹீரோயின் போலவே, செல்வி மிரண்டு போய் இவனை பார்த்தாள்..!!

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை.. ப்ரியா தனது கல்லூரித்தோழி ஒருத்தியுடன் ஃபோரம் மால் சென்றிருந்தாள். PVR சினிமாஸில் டிக்கெட் வாங்குவதற்கு அந்த தோழி வரிசையில் நின்றிருக்க.. இவள் வெறுமனே கையைக்கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் தூரத்தில் ஐஸ்க்ரீம் சுவைத்துக் கொண்ருந்த அசோக் இவளுடைய கண்ணில் பட்டான். அவனை பார்த்ததும் பரவசமாகிப் போன ப்ரியா, அவசரமாக நடந்து சென்று அவனை நெருங்கினாள்.

"ஹாய் அசோக்.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?"

என்று பற்களை காட்டி இளித்தவாறே அவனது பக்கத்தில் சென்றதும்தான்.. அவனுடைய பனியனில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம்.. பளிச்சென அவளுடைய கண்களை தாக்கியது..!!

"MY BOSS IS A STUPID..!!"

அதை வாசித்ததுமே ப்ரியா வாயை 'ஓ'வென திறந்து திகைத்தாள். சுர்ரென கோவம் வந்தது அவளுக்கு. அவளுடைய குளிர் நிலா முகம், இப்போது அனல் நெருப்பை அள்ளி வீசியது. அகோரமாய் மாறிப்போயிருந்தது. 'இந்த மாதிரி ஒரு டி-ஷர்ட்டை போட்டுக்கொண்டு ஊர் சுற்றி, மறைமுகமாக என்னை கேவலப் படுத்துகிறானா இவன்..??'. ஆசையுடன் அவனை நெருங்கியவள், இப்போது ஆத்திரமாக சீறினாள்.

"ஏண்டா.. நான் ஸ்டுபிடா..?? நான் ஸ்டுபிடா..??"

அவனுடைய டி-ஷர்ட்டை கொத்தாகப் பற்றி கத்தினாள். அசோக் ப்ரியா மாதிரி சமாளிக்கவெல்லாம் முயற்சி செய்யவில்லை. அலட்சியமான குரலில் நேரடியாகவே பதில் சொன்னான்.

"தெளிவாத்தான எழுதிருக்கு.. என் பாஸ் ஒரு ஸ்டுபிட்னு..!! நீ என் பாஸ்தான..??"

"யூ.. யூ..." என்று ப்ரியா அவனை திட்ட வார்த்தை இல்லாமல் திணறிக் கொண்டிருக்கையிலேயே..

"ஹேய்.. காட் த டிக்கெட்ஸ்யா.. சலோ..!!" என்றவாறு அந்த தோழி இவர்களை நெருங்கினாள். நெருங்கியவள் அசோக்கை பார்த்து குழப்பமாகி..

"இ..இது யாரு..??" என்று ப்ரியாவை கேட்டாள்.

"எ..என் கூட வொ..வொர்க் பண்றவரு..!!" வெறுப்பாகவும், தடுமாற்றமாகவும் சொன்னாள் ப்ரியா. உடனே அசோக் பல்லிளித்துக் கொண்டே ஆரம்பித்தான்.

"இப்படி மொட்டையா சொன்னா எப்படி..?? இவங்க லீடா இருக்குற டீம்ல நான் ஒரு ப்ரோக்ராமர்.. ஆபீஸ்ல இவங்கதான் என் பாஸ்..!!"

என்று குறும்புடன் சொன்னவாறே, தனது நெஞ்சை விரித்து காட்டி.. அதில் எழுதியிருந்த வாசகத்தை ப்ரியாவின் தோழிக்கு தெளிவாக காட்டினான்..!! அவனுடைய குறும்பு புரியாமல் ஓரிரு வினாடிகள் குழம்பிய அவள், அப்புறம் அந்த வாசகத்தை வாசித்ததும் குபுக்கென எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டாள். தோழியின் சிரிப்பு ப்ரியாவுக்கு மேலும் எரிச்சலை கிளப்பியது. கண்களை இடுக்கி.. காதுகளில் புகை வர.. அசோக்கை ஏறிட்டு முறைத்தாள்..!!

அன்று படம் பார்த்துவிட்டு ஸ்கூட்டியில் வீடு திரும்புகையில்.. சென்ட் ஜான்ஸ் சிக்னலில் காத்திருக்கையில்.. யாரோ யாரையோ ஸ்டுபிட் என்று அழைக்க.. இவள் ஹெல்மட் கண்ணாடியை மேலே ஏற்றிவிட்டுவிட்டு.. அப்படியும் இப்படியுமாய் அரக்க பரக்க திரும்பி பார்த்தாள்..!! 'ஹேய்.. சிக்னல் விழுந்துடுச்சுடி..' என்று பின்னால் இருந்தவள் முதுகில் குத்தியதுந்தான், சிந்தனை திரும்பியவளாய் ஆக்சிலரேட்டரை முறுக்கினாள்..!!

அஃபிஷியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இந்த மாதிரி மாறி மாறி சீண்டிக் கொண்டார்கள் என்றால்.. அஃபிஷியலான விஷயங்களில் நேரடியாகவே மோதிக் கொண்டார்கள்..!! தன்னுடைய பலவீனத்தை அசோக் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறான் என்பதை, ப்ரியா நன்றாக புரிந்து வைத்திருந்தாள். அசோக்கை சமாளிக்க அவனிடம் என்ன பலவீனம் இருக்கிறது என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை. தனது பலம்தான் அவனது பலவீனம் என்பதை உணர்ந்து கொண்டாள். அவனுக்கு அவள் பாஸ் என்பதுதான் அவளுடைய பலம். அவனை சமாளிக்க அந்த பலத்தையே உபயோகிக்கலாம் என்று முடிவு செய்தாள்.

இருக்கிற வேலைகளை டீமில் எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பது.. அந்த வேலையில் உள்ள டெக்னிக்கல் சிக்கல்களை டீமில் இருப்பவர்கள் எடுத்து வந்தால் அதை தீர்த்து வைப்பது.. மதிப்பிட்ட நேரத்தில் அந்த வேலைகளை அவர்களிடமிருந்து முடித்து வாங்குவது.. இவைதான் ப்ரியாவின் மூன்றுவிதமான பிரதான வேலைகள்..!! இந்த மூன்றுவிதமான வேலைகளிலுமே அசோக்கிற்கும் ப்ரியாவுக்கும் பிரச்னை வரும்.. மூன்று விதமாக முட்டிக் கொள்வார்கள்..!!

தனக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட வேலையில் அசோக்கிற்கு திருப்தி இருக்காது. தனது திறமைக்கு சவாலான வேலையாக இல்லை என்ற உணர்வு எழும். எரிச்சலாகிப் போவான். எழுந்து ப்ரியாவின் அறைக்குள் சென்று அவளுடன் சண்டை பிடிப்பான்.

"என்ன வொர்க் அலாட் பண்ணிருக்குற நீ..??" என்று உள்ளே நுழைந்ததுமே எரிந்து விழுந்தான்.

"ஏன்.. என்னாச்சு..??" ப்ரியாவும் முறைப்பாக கேட்டாள்.

"கவிதாவுக்கு போய் காப்ளிகேட்டடான இஷ்யூ அசைன் பண்ணிருக்குற.. எனக்கு ஒரு சப்பை இஷ்யூ..!! இதை பண்றதுக்கு நான் வேணுமா.. புதுசா ஜாயின் பண்ணிருக்குற ஃப்ரஷருக்கு குடுக்க வேண்டிய வேலைலாம் எனக்கு குடுத்திருக்குற..?? யாருக்கு எந்த வேலையை குடுக்கனும்னு கூட உனக்கு தெரியல.. இதான் நீ டீமை லீட் பண்ற லட்சணமா..??" அசோக் அவ்வாறு அவளது திறமையை கேலி செய்யவும், ப்ரியாவுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. சீற்றமாக சொன்னாள்.



"இங்க பாரு.. யாருக்கு எதை குடுக்குறதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. நீ ஒன்னும் எனக்கு சொல்லத் தேவை இல்ல..!!"

"என் பிரச்னையை நான் சொல்லாம வேற யார் சொல்வா..??"

"என்ன உன் பிரச்னை..??"

"எனக்கு இந்த வேலையை செய்யப் புடிக்கல..!!"

"ஏன்..??"

"ஏன்னா..?? என்னை மோட்டிவேட் பண்ற மாதிரி இல்ல.. ஒரே மொக்கையா இருக்குது..!!"

"அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது.. உனக்கு சேலஞ்சிங்கா இருக்கணுன்றதுக்காக, நானா புதுசா புதுசா வேலைலாம் கிரியேட் பண்ணி தர முடியாது.. இருக்குற வேலைல ஒன்னைத்தான் தர முடியும்..!! குடுத்த வேலையை பாரு.. போ..!!"

"ஓஹோ..?? அப்போ நீ என்ன செய்ய சொன்னாலும்.. நாங்க அதை அப்படியே செய்யணும்..!! எதுவும் கேள்வியே கேட்கக் கூடாது.. அப்படியா..?? நாங்க என்ன உனக்கு அடிமையா..??"

"இப்போ என்ன உன்னை அடிமையா ட்ரீட் பண்ணிட்டாங்க.. குடுக்குற சம்பளத்துக்கு வேலை பாக்க சொல்றாங்க.. அவ்வளவுதான்.. போய் வேலையை பாரு போ..!! தேவை இல்லாம வந்து பிரச்னை பண்ணிட்டு இருக்காத..!!" ப்ரியா சலிப்பாக சொல்ல,

"ப்ச்.. நான் என்ன இப்போ தேவை இல்லாம பிரச்னை பண்றேன்..??" அசோக் பிரச்னையை அத்துடன் விட மறுத்தான்.

"ஆமாம்..!! உனக்கு நான் லீட் ஆனது புடிக்கல.. அதான் தேவை இல்லாம இப்படிலாம் பிரச்னை பண்ணிட்டு இருக்குற..!! ரவி இருக்குறப்போ என்னைக்காவது இந்த மாதிரிலாம் பிரச்னை பண்ணிருக்கியா நீ..??"

"ஆமாம்.. பண்ணினது இல்லதான்.. அவனுக்கு கொஞ்சமாவது அறிவு இருந்தது.. யாராருக்கு எந்த வேலையை குடுக்கனும்னு..!! அதான் அவன்கிட்ட எதுவும் பிரச்னை பண்ணினது இல்ல..!!" அசோக்கின் வார்த்தைகள் ப்ரியாவை இப்போது உச்சபட்ச கோவத்திற்கு இட்டு சென்றன.



"மைன்ட் யுவர் டங் அசோக்.. யு ஆர் க்ராஸிங் யுவர் லிமிட்..!!" என்றாள் கோவத்தை அடக்கிக்கொண்டு.

"நான் எதையும் க்ராஸ் பண்ணல.. உள்ளததைத்தான் சொன்னேன்..!!"

"உள்ளதை சொல்றேன்னு நீ உளர்றதலாம் கேட்டுட்டு இருக்க எனக்கு நேரம் இல்ல.. உனக்கு ஏதாவது சொல்லனும்னா.. நேரா போய் பாலாட்ட சொல்லு..!!"

"ஹாஹா.. அந்த ஆள்ட்ட போய் என்னத்த சொல்றது.. அவரைத்தான் நீ நல்லா கைக்குள்ள போட்டு வச்சிருக்கியே.. அதனாலத்தான இந்த ஆட்டம் ஆடுற..??" அசோக்கின் கேலி, ப்ரியாவின் கோபத்தை மேலும் அதிகரிக்கவே செய்தது.

"ஆமாண்டா.. அப்படித்தான் வச்சுக்கோயேன்.. அவரை நான் கைக்குள்ள போட்டு வச்சிருக்கேன்.. நான் நெனச்சா என்ன வேணா பண்ணுவேன்.. நாளைக்கே உன்னை டீம்ல இருந்து கூட தூக்குவேன்.. போதுமா..?? மூடிட்டு போய் வேலையை பாரு.. போ..!!" என்று ஆத்திரமாக கத்தினாள். அவள் நினைத்ததை விட அதிகமாகவே அந்த வார்த்தைகள் அசோக்கை காயப்படுத்தின.

"கொழுப்புடி உனக்கு..!! நீ என்னை டீம்ல இருந்து தூக்குறியா..?? உன்னை இந்த கம்பனியை விட்டே நான் தூக்குறனா இல்லையான்னு பாரு..!!"

அசோக் அந்த மாதிரி சூடாக சவால் விட்டுக் கொண்டிருக்கையில்தான் அவன் கண்களில் எதேச்சையாக அது தென்பட்டது..!! ப்ரியாவுடைய டேபிளின் ஒரு ஓரத்தில்.. மரத்தாலான சிறு மேடை மீது.. மலர்களால் சூழப்பட்ட ஒருவித அலங்காரத்துடன்.. கற்கள் பதித்த உட்புறம் ஜொலிஜொலிக்க.. கம்பீரமாய் வீற்றிருந்தது அந்த வாட்ச்..!! ஆன்சைட்டில் இருந்து திரும்பிய ப்ரியா அசோக்கிற்கு ஆசையாக வாங்கி வந்த வாட்ச்..!! அவள் மீதிருந்த எரிச்சலில் அசோக் அலட்சியப்படுத்திய அதே வாட்ச்..!!

அதை அவளுடைய டேபிளில் அலங்காரத்துடன் பார்த்த அசோக் ஒருகணம் தடுமாறிப் போனான். அத்தனை நேரம் அவனிடம் இருந்த கோவம் எல்லாம், இப்போது உடனே வற்றிப் போனது. ஒரு சில வினாடிகள் அந்த வாட்சையே திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தான். 'இதை ஏன் இங்கு கொண்டுவந்து வைத்திருக்கிறாள்..?? அதுவும் இத்தனை அலங்காரம் எல்லாம் செய்து..??'. அவனுடைய பார்வை சென்ற இடத்தை கவனித்த ப்ரியாவும், அந்த வாட்சை பார்த்தாள். அதை பார்த்ததும் இப்போது அவளும் அப்படியே ஆத்திரம் தீர்ந்து அடங்கிப் போனாள்.

அசோக் திரும்பி ப்ரியாவின் முகத்தை பார்க்க, அவனது பார்வையில் அவள் சற்றே தடுமாறிப்போய் தனது தலையை மெல்ல கவிழ்த்துக் கொண்டாள். இருவரும் எதுவும் பேசாமல் சிறிது நேரம் அமைதியாக நின்றிருந்தார்கள். அசோக்தான் அங்கு நிலவிய மௌனத்தை கலைத்தவாறே, மெல்லிய குரலில் ப்ரியாவிடம் கேட்டான்.

"இ..இதை எதுக்கு இங்க கொண்டுவந்து வச்சிருக்குற..??"

"ஏன்.. வ..வச்சிருந்தா என்ன..??"

"நான்தான் அன்னைக்கே இதை உன் தம்பிட்ட குடுக்க சொன்னேன்ல..??"

அசோக் ஒருமாதிரி இதமான குரலில் கேட்க, ப்ரியா சற்றுமுன் சீற்றமாய் சொன்ன அதே வார்த்தைகளை, இப்போது வேறொரு தொனியில், குரல் லேசாக தழதழக்க சொன்னாள்.

"யாருக்கு எதை குடுக்குறதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. நீ ஒன்னும் எனக்கு சொல்லத் தேவை இல்ல..!!"

"எ..எனக்குத்தான் பிடிக்கலைன்னு.." அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ப்ரியா அவனை இடைமறித்து,

"தெரியும்..!! ஆனா.. அது உனக்காக வாங்கினது.. உனக்கு சொந்தமானது.. வேற யாருக்கும் குடுக்க எனக்கு இஷ்டம் இல்ல..!! அது இங்கதான் இருக்கும்.. உனக்கு எப்போ அதை புடிக்குதோ.. அப்போ வந்து எடுத்துக்கோ..!!"

என்று பார்வையை எங்கோ திருப்பிக்கொண்டு சொன்னாள். அசோக் சில வினாடிகள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான். அப்புறம் மெல்ல திரும்பி நடந்து அந்த அறையை விட்டு வெளியேறினான். கண்களில் பொங்கும் நீருடனும், நெஞ்சில் பொங்கும் காதலுடனும் அவன் போவதையே ப்ரியா பார்த்துக் கொண்டிருந்தாள்.

வானத்து நிலவை மேகமூட்டம் சூழ்ந்தது மாதிரிதான் அவர்களது காதல் மனதை ஈகோமூட்டம் சூழ்ந்திருந்தது..!! கார்மேகத்தின் பிடியில் இருந்து தப்பி, அந்த பால்நிலா அவ்வப்போது தலைக்காட்ட தவறவில்லை..!! அவர்களுக்குள் நிறைந்திருந்த காதல் அவ்வப்போது இந்தமாதிரி வெளியே கிளம்புவதால்தான் எத்தனை சண்டையிட்டுக் கொண்டாலும், அவர்களால் ஓரிரு நாட்களில் சகஜமாக முடிந்தது..!! ஆனால் சகஜமான சிறிது நேரத்திலேயே அடுத்த சண்டை ஆரம்பித்துவிடும்..!!

டெக்னிக்கல் சிக்கல்களை தீர்த்து வைப்பது ப்ரியாவின் இன்னொரு விதமான பணி என்றேன் இல்லையா..?? அதில்தான் அசோக் ப்ரியாவை அதிகமாக காய விடுவான்..!! அவனுக்கு போரடித்தாலோ.. கொஞ்ச நேரம் ஓய்வு வேண்டும் என்று தோன்றினாலோ.. இல்லை வெறுமனே ப்ரியாவை சீண்ட வேண்டும் என்று நினைத்தாலோ.. என்ன செய்வான் தெரியுமா..?? அவனே வேண்டுமென்றே டெக்னிக்கல் சிக்கல்களை உருவாக்குவான்.. ப்ரோக்ராமில் ஏதாவது சில்மிஷம் செய்து வைப்பான்.. சர்வரில் உள்ள ஏதாவது முக்கியமான ஃபைலை டெலீட் செய்வான்..!! ஒருநாள் இந்தமாதிரிதான் ஏடாகூடமாக ஒருவேலையை செய்துவைத்துவிட்டு..

"எதுவுமே வொர்க் ஆகல ப்ரியா.. வந்து என்னன்னு பாரு..!!"

என்று ப்ரியாவிடம் சென்று அப்பாவியாக சொன்னான். அவன் இந்த மாதிரி பிரச்னைகளை எடுத்துவந்தாலே பத்து பேதி மாத்திரைகளை மொத்தமாக முழுங்கியவள் போல கதிகலங்கிப் போய் விடுவாள் ப்ரியா.

"என்னடா ஆச்சு..?? நேத்துலாம் ஒழுங்காத்தான வொர்க் ஆகிட்டு இருந்தது..??" என்றாள் அடி வயிறு கலங்க.

"எங்கிட்ட கேட்டா.. எனக்கு என்ன தெரியும்..?? நீதான டெக் லீட்..?? வந்து என்ன பிரச்னைன்னு பாரு..!!" என்று அழகாக கொக்கி போட்டான் அசோக்.

"ஹ்ம்ம்.. சரி வா.. பாக்குறேன்..!!" என்று வேறு வழியில்லாமல் அவன் தூண்டிலுக்கு வாயைக் கொடுத்தாள் ப்ரியா.

அசோக்கின் சிஸ்டத்தில் அமர்ந்து என்ன பிரச்னை என்று ப்ரியா ஆராய ஆரம்பித்தாள். அவளுக்கருகே சேரை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டு அசோக் தன் மொபைலில் ஆங்ரி பேர்ட்ஸ் ஆட ஆரம்பித்தான். கொஞ்ச நேரம் ஆனது..!!

"என்ன ப்ராப்ளம்னே புரியலைடா..!!" ப்ரியா பரிதாபமாக சொன்னாள்.

"ப்ச்.. ஒரு டெக் லீட் இப்படிலாம் சொல்லப்படாது ப்ரியா.. பாரு பாரு.. சீக்கிரம் சால்வ் பண்ணு..!! இல்லனா இன்னைக்கு பூரா நான் ஐடிலாத்தான் உக்காந்திருக்கணும்..!!"

அசோக் கோவக்கார பறவையை குறி பார்த்து வீசிக்கொண்டே சொன்னான். பிரச்சினையின் மூலகாரணம் தெரியாமல் ப்ரியாவுக்கு தலை விண்விண்ணென்று வலித்தது. இங்கே ஆங்ரி பேர்ட்ஸில் அசோக்கின் ஸ்கோர் விறுவிறுவென பறந்தது. கொஞ்ச நேரம் அப்படி மொபைலில் விளையாடியவாறே ப்ரியா படும் அவஸ்தைகளை ஓரக்கண்ணால் ரசித்து சிரித்தான். அப்புறம் சேரை விட்டு எழுந்துகொண்டு,

"சரி ப்ரியா.. நான் போய் ஒரு தம் அடிச்சுட்டு வர்றேன்.. அதுக்குள்ளே சால்வ் பண்ணி வை..!!" என்றான் கூலாக.

"ம்ம்.. சரிடா..!!" என்றாள் ப்ரியாவும் சீரியசாக.

வெளியே சென்று சுற்றிவிட்டு அரை மணி நேரம் கழித்து சீட்டுக்கு திரும்பினான். ப்ரியா இங்கே என்ன பிரச்னை என்றே கண்டுபிடிக்க முடியாமல் முட்டி மோதிக் கொண்டிருந்தாள். அரை மணி நேரத்தில் மிகவும் சோர்ந்து போயிருந்தாள். அசோக் திரும்பியதும்,

"இன்னும் சால்வ் பண்ணலடா.. என்ன ரூட் காஸ்னே கண்டு பிடிக்க முடியலை..!!"

என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு சொன்னாள். அசோக்கிற்கு இப்போது அவளை பார்க்க பாவமாக இருந்தது. 'அச்சோ.. பாவம் புள்ளை..!!' என்று தோன்றியது. உடனே உதட்டில் மெலிதான புன்னகையுடன் சொன்னான்.

"சரி.. எந்திரி..!! நீ உன் கேபினுக்கு போ.. நான் பாத்துக்குறேன்..!!"

"நீ எப்படி பாத்துப்ப..??"

"ப்ச்.. பாத்துக்குறேன்றன்ல.. விடு..!! நீ போய் உன் வேலையை பாரு..!!"

அசோக் அந்தமாதிரி கேஷுவலாக சொல்கிற தோரணையிலேயே ப்ரியாவுக்கு புரிந்து போனது. எல்லாம் அவனுடைய சில்மிஷம் என்பதை உடனே உணர்ந்து கொண்டாள். சுட்டுவிரலை அவனை நோக்கி நீட்டி ஆத்திரமாக சீறினாள்.

"வேணுன்னே நீதான இதெல்லாம் பண்ணின..??"

"ஹேய்.. அ..அதுலாம் ஒண்ணுல்ல..!!"

"ப்ச்.. நடிக்காத.. எனக்கு புரிஞ்சு போச்சு..!!"

கண்களை உருட்டி முறைக்கிற ப்ரியாவையே அசோக் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு சொன்னான்.

"சரி.. வேணுன்னேதான் பண்ணுனேன்.. அதுக்கு என்ன இப்போ..??" அசோக் எகத்தாளமாக சொல்ல, ப்ரியா மலைத்து போய் அவனை பார்த்தாள்.

"எப்படி கூலா சொல்றான் பாரு..?? எவ்வளவு திமிர் இருக்கணும் உனக்கு..?? என்னை பாத்தா உனக்கென்ன வெளையாட்டா இருக்கா..?? உனக்கு டைம் பாஸ் பண்ண நான்தான் கெடைச்சனா..?? வேலை தர்றியா எனக்கு.. நான் என்ன வெட்டியாவா உக்காந்திருக்கேன்..??" ப்ரியா உஷ்ணமாக வார்த்தைகளை வீசிக்கொண்டிருக்கும்போதே.

"ஹேய்.. நான் உள்ள வந்தப்போ ஃபேஸ்புக்தான நோண்டிட்டு இருந்த..??" அசோக் அசராமல் பதிலடி கொடுத்தான். ப்ரியா திணறிப் போனாள்.

"அ..அது.. அது.." என்று பரிதாபமாக தடுமாறினாள்.

"வெட்டி வேலை பாத்துட்டு இருந்த..!! சரி.. உனக்கு டெக்னிக்கலா ஏதாவது கத்துக்கொடுக்கலாம்னு கூட்டிட்டு வந்தேன்..!! தப்பா..??"

"நா..நான் ஒன்னும் ஃபேஸ்புக்லாம் நோண்டல..!!" ப்ரியாவுடைய குரலில் இருந்த வேகம் இப்போது சுத்தமாக அடங்கிப் போயிருந்தது.

"ப்ச்.. அதான் பாத்துட்டேன்னு சொல்றேன்.. அப்புறம் ஏன் நடிக்கிற..?? போ போ.. போய் குடுக்குற சம்பளத்துக்கு கொஞ்ச நேரமாவது வேலையை பாரு..!! உனக்குலாம் எப்படித்தான் திங்கிற சோறு செரிக்குதோ தெரியல..??"

"ஆமாமாம் இவர் ரொம்ப யோக்கியம்.. நமக்கு புத்தி சொல்றாரு..!!" கம்மலான குரலில் சொல்லிக்கொண்டே அந்த இடத்திலிருந்து நழுவினாள் ப்ரியா.

"ஒய்.. என்ன மொனங்கிட்டே போற..?? உன்னை விடலாம் இங்க யாரும் கொறைஞ்சு போயிடல..!! போ போ..!!"அவளுடைய முதுகை பார்த்து கத்தினான் அசோக்.

அவர்கள் இருவரும் மூன்றாவது விதமாக முட்டிக்கொள்வது... டெலிவரி டெட்லைனில்.. அதாவது கொடுத்த வேலையை முடித்துக் கொடுக்கிற காலக்கெடுவில்..!! இந்த விஷயத்தில் யாருடைய கை ஓங்கி இருக்கும் தெரியுமா..?? மேலே படியுங்கள்..!!

கவிதா அன்று ஊரில் இல்லை.. ஹரி காலையிலே இருந்தே 'தண்ணி.. தண்ணி..' என்று தார்ப்பாலைவனத்தில் விடப்பட்டவன் மாதிரி தவித்துக் கொண்டிருந்தான்.. அசோக்குடனும், கோவிந்துடனும் ஆபீஸ் கம்யுனிகேடரிலேயே கான்ஃபரன்ஸ் போட்டான்.. குடித்து கும்மாளமிட மூவரும் கூட்டுத்திட்டம் வகுத்தார்கள்..!! எந்த பாருக்கு செல்வது.. என்னென்ன மதுவகைகளை என்னென்ன மிக்ஸிங்குடன் ருசி பார்ப்பது.. சில்லி சிக்கனில் எந்த அளவுக்கு காரம் போட சொல்வது.. சர்வருக்கு எவ்வளவு டிப்ஸ் கொடுப்பது.. ட்ராஃபிக் போலீசிடம் சிக்காமல் எந்த ரூட்டில் வண்டியை வீட்டுக்கு விரட்டுவது.. என மொத்த திட்டமும் ரெடி..!!

ப்ரியா அன்றைய வேலைகளை முடித்து ஆபீஸில் இருந்து வீட்டுக்கு கிளம்பினாள். தோளில் பேக் மாட்டிக்கொண்டு, தனது அறையை விட்டு வெளியே வந்து கதவை சாத்தினாள். கதவை லாக் செய்ய அவள் சாவி திருகிக்கொண்டிருக்கும்போதே, இவர்கள் மூவரும் டிரிங்ஸ் ப்ளான் பற்றி உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தது அவள் காதில் விழுந்தது.

உடனே அசோக் மீது அவளுக்கு ஒரு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. 'மவனே.. குடிக்கிறதுக்கா ப்ளான் போட்டுட்டு இருக்குற.. இரு.. இதோ வர்றேன்..' என்று மனதில் கருவிக் கொண்டாள். நேராக நடந்து அசோக்கின் இடத்தை அடைந்தாள். இவளை பார்த்ததும் மூவரும் அமைதியாயினர். அவரவர் இடத்தில் அமர்ந்தவாறே இவளை ஏறிட, இவள் நடுவில் நின்றவாறு மூவர் முகத்தையும் மாறி மாறி பார்த்தாள். அப்புறம் அசோக்கிடம் திரும்பி..

"அந்த பேஜினேஷன் இஷ்யூ ஃபிக்ஸ் பண்ணியாச்சா..??" என கூலாக கேட்டாள்.

"இ..இன்னும் இல்ல.. நாளைக்குத்தான் முடியும்..!!" அசோக் எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான்.

"ப்ச்.. இன்னைக்கு முடிக்கணும்னு சொல்லிருந்தேன்ல..??"

"நீ சொல்லிட்டா.. உடனே முடிஞ்சிடுமா..?? என்னை கேட்டா எஸ்டிமேஷன் போட்ட..??"

"எஸ்டிமேஷன் நான் போடலைப்பா... பாலா..!! எதா இருந்தாலும் அவர்ட்ட போய் கேளு..!!"

"என்ன நீ..?? சும்மா சும்மா.. எதுக்கெடுத்தாலும் அவர்ட்ட போய் கேளு அவர்ட்ட போய் கேளுன்னு சொல்ற..??" அசோக் எகிறினான்.



"பின்ன.. நீ எடக்கு மடக்கா பேசினா.. வேற என்ன சொல்றது..??" ப்ரியாவும் பதிலுக்கு எகிறினாள்.

"நான் என்ன எடக்கு மடக்கா பேசுனேன்..??"

"ஆமாம்.. ரெண்டு நாள்ல முடிக்க வேண்டியதை பத்து நாள் ஆகும்னு சொல்வ.. கேட்டுட்டு உக்காந்திருக்குறது நான் என்ன கேனைச்சியா..?? இனி எஸ்டிமேஷன்லாம் உன்கிட்ட கொடுக்குற மாதிரி இல்ல..!!"

"ஓஹோ..?? அப்போ நானும் நீங்க சொன்ன டேட்ல எதையும் முடிக்கிற மாதிரி இல்ல..!!"

"வெல்..!! முடிக்க வேணாம்.. 'என்னால முடிக்க முடியாது'ன்னு எனக்கு ஒரு மெயில் மட்டும் அனுப்பிச்சுட்டு கெளம்பு.. நான் பாத்துக்குறேன்..!!"

ப்ரியா கூலாக சொன்ன தோரணையிலேயே அசோக் சற்று மிரண்டு போனான். 'என்னிடம் இருந்தே வார்த்தைகளை பிடுங்கி.. எனக்கே ஆப்பு வைக்க முயற்சிக்கிறாள்..' என்று உஷாரானான். கொஞ்சம் உதறலான குரலிலேயே சொன்னான்.

"எ..என்ன வெளயாடுறியா..?? அ..அதுலாம் என்னால முடியாது..!!"

"அப்போ முடிச்சுட்டு கெளம்பு..!!" ப்ரியா கிடுக்கிப்பிடி போடவும், அசோக் வேறு வழி இல்லாமல் இறங்கி வர வேண்டி இருந்தது.

"ப்ச்.. அது அல்மோஸ்ட் முடிஞ்சிடுச்சு ப்ரியா.. ஒரு சின்ன டவுட் இருக்கு.. கிரிஸ்டோஃபர்க்கு கால் பண்ணி கன்பார்ம் பண்ணிட்டா.. வேலை முடிஞ்சது..!!" கிரிஸ்டோஃபர் என்பது அமெரிக்காவில் இருக்கும் பிசினஸ் டீமில் ஒரு ஆள்.

"ஓ.. கால் பண்ணி கேக்குறதுல என்ன ப்ராப்ளம்..??"

"அவன் இன்னும் ஆபீஸ் வரலை.. பத்து மணி மேலதான் வருவான்..!!"

"ஓகே..!! வெயிட் பண்ணி பேசு..!!"

"ஹேய்.. நாங்க வெளில போக ப்ளான் பண்ணிருக்கோம்..!!"

"ப்ச்.. சொல்றேன்ல..?? அந்த இஷ்யூ முடிச்சுட்டு கெளம்பு..!! எல்லாம் நாளைக்கு குடிச்சுக்கலாம்..!!" ப்ரியா கடுமையான குரலில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ஹரி இடையில் புகுந்து..

"நாளைக்கு கவிதா வந்துடுவா ப்ரியா..!!" என்று பரிதாபமாக சொன்னான். இப்போது ப்ரியா திரும்பி ஹரியை முறைத்தாள்.

"உன் இஷ்யூ என்னாச்சு..?? நீ எப்போ முடிப்ப..??" என்று அவன் மீது பாய்ந்தாள்.

"ஹேய்.. நா..நாளைக்குத்தான முடிக்கிறதா கமிட் பண்ணிருந்தேன்..??" அவன் பதறிப்போய் சொன்னான்.

"ஹ்ம்ம்... ஓகே.. ஓகே..!!" என்று சாந்தமான ப்ரியா இப்போது கோவிந்திடம் திரும்பி,

"நீ கோட் செக்கின் பண்ணிட்டியா கோவிந்த்..??" என்று கேட்டாள் புன்னகையுடன்.

"ம்ம்.. ப..பண்ணிட்டேன்..!!" என்றான் அவனும் சற்றே மிரட்சியாய்.

"குட்..!! வேலை முடிஞ்சதுல.. வீட்டுக்கு கெளம்பு.. கெட்ட பசங்களோடலாம் சேராத..!! நாளைக்கு பாக்கலாம்.. பை கோவிந்த்..!!"

ப்ரியா கூலாக சொல்லிவிட்டு தனது பின்புறத்தை அசைத்து அசைத்து திமிராக நடந்து சென்றாள். அவள் செல்வதையே அசோக் வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடய மனநிலை புரியாத ஹரி..

"என்ன மாப்ள.. உன் ஆளு உன்னையே இந்த ஏறு ஏறிட்டு போகுது..??" என்று கேலியாக கேட்டுவிட,

"த்தா.. அவளை இனிமே என் ஆளுன்னு சொன்ன.. செருப்பு பிஞ்சுடும் உனக்கு..!!" என்று அசோக் கோவத்தை அவனிடம் காட்டினான்.

"ம்க்கும்.. எங்கிட்ட மட்டும் நல்லா எகிறு.. அவகிட்ட அப்படியே பம்மு..!!" ஹரியின் கேலியில் இருந்த உண்மை அசோக்கை அடங்கி போக செய்தது.

"வேற என்ன பண்ண சொல்ற..?? பவரும் கண்ட்ரோலும் அவகிட்டல இருக்கு..??" என்றான் வெறுப்பாக.

"ஹ்ம்ம்.. எல்லாம் அந்த பக்கு மண்டையன் செஞ்ச வேலை மாப்ள.. இந்த மக்கு பீஸைலாம் பாஸ் ஆக்கி.. நம்மளலாம் லூஸாக்குறான்..!!" இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கோவிந்த் இடையில் புகுந்து,

"அ..அப்போ இன்னைக்கு தண்ணி இல்லையா பாஸ்..??"

என்று பாவமாக கேட்டான். உடனே ஹரியும் அசோக்கும் மெல்ல தங்கள் தலையை திரும்பி, அவனை பார்த்து முறைத்தார்கள். ஹரிதான் அவனை பார்த்து காட்டமாக சொன்னான்.

"ஏண்டா.. உனக்கு கொஞ்சம் கூட சென்ஸே இல்லையா..?? என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறியா..?? மனசாட்சியே இல்லாம எப்படி உன்னால இப்படி பேச முடியுது..?? உன்னல்லாம்..."

ஹரி ஏன் அவ்வளவு டென்ஷனானான் என்று புரியாமல் அசோக்கும் கோவிந்தும் விழிக்க, ஹரி இப்போது அசோக்கின் பக்கமாய் திரும்பி, வருத்தமான குரலில் சொன்னான்.

"பாரு மாப்ள இவனை.. என்ன பேசுறான்னு..!! காலைல இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டு ப்ளான் போட்ருக்கோம்.. கடைசி நேரத்துல நீ வர முடியலைன்றதுக்காக எல்லாத்தையும் கேன்ஸல் பண்றதா..?? எப்படி இவனால இப்படிலாம் நெனைக்க முடியுது..?? சனியன் புடிச்சவன்.. 'இன்னைக்கு தண்ணி இல்லையா'ன்னு அபசகுனம் புடிச்ச மாதிரி கேட்டுக்கிட்டு இருக்குறான்..??"

ஹரி பேச பேசவே அசோக்கிற்கு அவன் மீது ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. அவனை அப்படியே எரித்துவிடுவது போல உஷ்ணமாக பார்த்தான். ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, பற்களை கடித்தவாறே சொன்னான்.

"த்தா.. ரெண்டு பெரும் என் கண்ணு முன்னாடியே நிக்காதீங்கடா.. நான் கொலைகாரன் ஆகுறதுக்குள்ள இங்க இருந்து ஓடிப் போயிடுங்க..!!"

சொல்லிவிட்டு தன் சிஸ்டம் பக்கமாய் திரும்பி, கீ போர்டை படபடவென தட்டினான். அசோக்கின் பார்வையில் ஹரி சற்றே மிரண்டு போனான். ஆனால் அவன் மனதில் இருக்கும் கோபத்தின் அளவை இன்னும் அறிந்து கொள்ளாதவனாய்..

"என்ன மாப்ள.. இதுக்குபோய் இவ்ளோ டென்ஷன் ஆகுற..?? இப்போ என்ன.. உன்னால குடிக்க முடியலை.. அவ்ளோதான..?? கவலையை விடு.. உனக்கும் சேர்த்து நான் இன்னைக்கு குடிச்சுடுறேன்.. ஓகேவா..??"

கேட்டுவிட்டு ஹரி இளிக்க, அசோக் அதற்கு மேலும் தன் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பட்டென திரும்பி ஹரியை சேரோடு எட்டி உதைத்தான். அவன் நிலை தடுமாறிப்போய் தனது டேபிள் மீது சரிந்து, மானிட்டரை கட்டிப் பிடித்துக் கொண்டான்.




No comments:

Post a Comment