Monday, June 29, 2015

ஐ ஹேட் யூ, பட்.. - அத்தியாயம் - 17

இரவு தூங்க தாமதம் ஆனாலும், காலையில் சீக்கிரமே ப்ரியா எழுந்துவிட்டாள். எப்போதும் பெங்களூர் குளிருக்கு அவசர அவசரமாய் தலையில் தண்ணீர் மொண்டு ஊற்றுபவள், அன்று ஆற அமர அரை மணி நேரமாக குளித்தாள். குளிர்ந்த நீர் உடலில் ஏற்படுத்துகிற ஜில்லென்ற சிலிர்ப்பை இமைகள் மூடி ரசித்தாள். நீரில் நனைந்த தன் அங்கங்களை ஒவ்வொன்றாக கூர்ந்து கவனித்தாள். அவளது அங்கங்கள் அனைத்தும் திடீரென அழகாய் மாறிவிட்டதாக அவளுக்கு தோன்றியது. அனைத்துக்கும் சொந்தக்காரனை மனதில் நிறுத்தி.. கண்கள் மூடி.. கைகள் விரித்து.. ஷவரில் இருந்து சிதறுகிற நீரில்.. சுகமாய் நனைந்தாள்..!!

வெளியே வந்து உடை அணிந்து கொண்டாள்.

அவள் புடவை அணிந்து கொள்வது மிகவும் அரிது. பெரும்பாலும் சுடிதார்தான்.. அதையும் அக்கறை இல்லாமலே உடுத்திக் கொள்வாள்..!! அன்று ஏனோ அவளுக்கு புடவை அணிந்து செல்லவேண்டும் போலிருந்தது. ஆரஞ்சு நிறத்தில் ஒரு புடவையை எடுத்து அணிந்து கொண்டாள். அதே நிறத்தில் ப்ளவுசும்..!! கோதுமை நிறத்தில் மின்னும் அவளது தேகத்திற்கு அந்த நிறப்புடவை இன்னும் வண்ணம் கூட்டியது.


கண்ணாடி முன் நின்று நீண்ட நேரமாய் அலங்காரம் செய்து கொண்டாள். தலையை பின்னாமல் காற்றில் அலைபாய விட்டாள். மெலிதாக மேக்கப் போட்டுக் கொண்டாள். கொஞ்சமாய் உதட்டுச்சாயம் பூசிக்கொண்டாள். புருவத்திற்கு மையிட்டாள். இமைகளை கூர் தீட்டினாள். எப்போதும்போல குட்டியாய் ஒரு ஸ்டிக்கர் பொட்டை நடுநெற்றியில் ஒட்டிக்கொண்டாள். எல்லாம் முடிந்ததும் திருப்தி அடைந்தவளாய், உடலை முன்னும் பின்னும் திருப்பி திருப்பி கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். அவளுடைய கற்பனையில் இருந்து கிளம்பி கண்ணாடியில் தோன்றிய அசோக்கிடம், மனதாலேயே பேசினாள்.

'ஒய்.. திருடா.. ஈகோ புடிச்ச இடியட் மடையா..!! புடிச்சிருக்கா என்னை.. ப்ரியாவை பிடிச்சிருக்கா உனக்கு..?? பாரு.. எவ்ளோ அழகா இருக்கேன் பாரு.. எல்லாம் யாருக்குன்னு சொல்லு பார்ப்போம்.. உனக்குத்தாண்டா லூசு..!! ஹ்ம்ம்ம்... என்னடா சொல்லப்போற இன்னைக்கு.. லவ் பண்றேன்னு சொன்னா என்ன சொல்வ.. ம்ம்..?? மவனே.. முடியாதுன்னு மட்டும் சொல்லு.. அப்டியே அந்தக்கண்ணை நோண்டி எடுத்துடுறேன்..!! ஹாஹாஹாஹா... உன்னை லூசுன்னு சொல்லிட்டு நான் லூசு மாதிரி உளறிட்டு இருக்கேன் பாரு.. உன்னால என்னென்னலாம் பண்றேன்..??'

"என்னம்மா பண்ற..??" வரதராஜனின் குரல் ப்ரியாவை நனவுலகுக்கு மீட்டு வந்தது.

"ஒண்ணுல்ல டாடி.. இதோ வந்துட்டேன்..!!"

"சீக்கிரம் வாம்மா.. டைமாச்சு..!!"

"இதோ.. ஒரு நிமிஷம் டாடி..!!"

ப்ரியா மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் தன் உடலை பார்த்து கொண்டாள். அவசரமாய் பேக் எடுத்து தோளில் மாட்டிக்கொண்டாள். செல்போன் எடுத்துக்கொண்டாள். அறையை விட்டு வெளிப்பட்டாள். அலங்காரம் செய்த அழகு சிலையாக வெளிவந்த மகளை பார்த்து, வரதராஜன் ஒருகணம் பிரம்மித்துப் போனார். மறுகணமே முகம் மலர்ந்து புன்னகைத்தார்.

"என்னம்மா.. இன்னைக்கு புதுசா புடவைலாம்..??"



"ஏன் டாடி.. நல்லா இல்லையா..??"

"ஐயோ.. பிரம்மாதமா இருக்கும்மா.. மகாலக்ஷ்மி மாதிரி இருக்குற..!!"

"நெஜமாவா..?? புடவைல நான் நல்லாருக்கனா..??"

"என் பொண்ணுக்கு என்னம்மா கொறைச்சல்.. அவ என்ன ட்ரஸ் போட்டாலும்.. தேவதை மாதிரி இருப்பா..!!" வரதராஜன் மகளை மனதார புகழ,

"ஹையோ.. போங்க டாடி..!!" பிரியா நாணத்தில் முகம் சிவந்தாள்.

"ஹாஹா..!! ஹ்ம்ம்.. இப்போ எனக்கு எல்லாம் புரியுது..!!"

"என்ன புரியுது..??"

"இன்னைக்கு ஏன் இந்த ஸ்பெஷல் அலங்காரம்னு..!!"

"ஏ..ஏன்..??"

"ஆபீஸ்ல இன்னைக்கு மாப்ளையை சந்திச்சு பேசுற மாதிரி ப்ளான்.. கரெக்டா..??"

"ஐயோ.. அ..அதெல்லாம் ஒன்னும் இல்ல டாடி.. நா..நான் சும்மா... சாதாரணமாத்தான் இதெல்லாம்..!!" பிடுங்கித் தின்னுகிற வெட்கத்துடன் ப்ரியா தடுமாற்றமாக சொன்னாள்.

"ஹாஹா.. சரிம்மா விடு..!! ம்ம்ம்ம்.. அப்புறம் இன்னொரு விஷயம்..!!"

"என்ன டாடி..??"

"ஃபோன்ல பேசுறதை விட.. இன்னைக்கு நேர்லயே அவங்க வீட்டுக்கு ஒரு எட்டு போயிட்டு வரலாம்னு இருக்கேன்மா.. போயிட்டு வரவா..??"

"சரி டாடி.. போயிட்டு வாங்க..!!"

சிறிது நேரத்தில் வரதராஜனும், ப்ரியாவும் வீட்டில் இருந்து கிளம்பினார்கள். அவளுடைய ஸ்கூட்டி முதல்நாள் கொடுத்த ஸ்டார்ட்டிங் ட்ரபுளை சரி செய்ய, மதியத்திற்கு மேல் ஏதாவது சர்வீஸ் ஸ்டேஷன் எடுத்து செல்லுமாறு நேற்றே அப்பாவிடம் சொல்லியிருந்தாள். அதனால் வரதராஜனின் ஸ்கூட்டரிலேயே இருவரும் கிளம்பினார்கள். வழக்கம்போல சில்க்போர்டில் மகளை இறக்கிவிட்டு மடிவாலா திரும்பினார் வரதராஜன். கம்பனி பஸ்சுக்காக காத்திருந்தாள் ப்ரியா.

காத்திருந்த நேரத்தில் அசோக்கின் நினைவுகள் அலை அலையாய் மனதில் பொங்க ஆரம்பித்தன. ஆபீஸ் செல்லும் வரைக்கும் கூட அவளுக்கு இப்போது பொறுமை இல்லை. அவனுடன் உடனே பேசவேண்டும் போலிருந்தது. செல்போன் எடுத்து அசோக்கின் நம்பருக்கு கால் செய்தாள். காதில் வைத்துக் கொண்டாள். கால் பிக்கப் செய்யப்பட்டது. குரலில் ஒரு மென்மையை கூட்டிக்கொண்டு இவள் 'ஹலோ..' சொல்ல, அடுத்த முனையில் அசோக் ஹலோ சொல்வதற்கு பதிலாக வீட்டில் இருந்த யாருடனோ பேசினான்.

"ஏய்.. ஒரு நிமிஷம் உன் டோரை லாக் பண்ணு.. எனக்கு ஒரு இம்பார்ட்டன்ட் கால் வருது.. பேசிட்டு வர்றேன்..!!" என்று கோவமாக சொன்னவன் அப்புறம் ஃபோனில்,

"ஹேய் ப்ரியா.. என்ன இது.. காலங்காத்தால கால் பண்ணிருக்குற..??" என்று உற்சாகமாக கேட்டான்.

"ஒ..ஒண்ணுல்ல அசோக்.. சும்மாதான்.." ப்ரியா சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"டேய்.. நான் கேக்குறதுக்கு மொதல்ல பதில் சொல்லுடா.. ஃபோன்ல அப்புறம் பேசலாம்..!!" என்று அந்தப்பக்கம் அசோக் அண்ணனின் குரல் காட்டமாக ஒலித்தது.

"ஏய்.. முக்கியமான கால்னு சொல்றேன்ல.. கொஞ்சம் பொறுக்க முடியாதா உனக்கு..??"

அசோக் அண்ணனிடம் சீறினான். தவறான நேரத்தில் கால் செய்துவோட்டோமோ என்று ப்ரியாவிற்கு இப்போது ஒரு புரியாத உணர்வு.

"யா..யார் அது அசோக்..??" என்று தயக்கமாக கேட்டாள்.

"என் அண்ணன்.. ஒரு மாதிரியான ஆளுன்னு உன்கிட்ட சொல்லிருக்கன்ல.. அவன்தான்..!!" அசோக் கேலியாக சொல்ல,

"டேய்.. யாருடா ஒரு மாதிரி.. யாரு ஒரு மாதிரி..??" ராஜேஷ் கத்தினான்.

"உன்னைத்தாண்டா சொல்றேன்..!!" அசோக்கும் பதிலுக்கு கத்தினான்.

"ஏ..ஏன் கத்துறாரு..??" ப்ரியா புரியாமல் கேட்டாள்.

"அவன் கத்தலம்மா.. காலைலயே ஆப்பத்தை தின்னுட்டு ஏப்பத்தை விட்டுட்டு இருக்கான்..!!" அசோக்கின் குரலில் ஒரு நையாண்டி.

"ஏண்டா.. நான் கரடியா கத்துறது உனக்கு ஏப்பம் விடுற மாதிரி இருக்கா..?? எவ்வளவு கொழுப்பு இருக்கணும் உனக்கு..?? மொதல்ல அந்த ஃபோனை கட் பண்ணுடா.. கட் பண்ணு..!! இங்க பாரு.. என்கிட்ட பேசு..!!" ராஜேஷ் டென்ஷனாக சொன்னான். அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"டேய்.. அவர்தான் சொல்றார்லடா.. இப்போ அந்த ஃபோனை கட் பண்ணப் போறியா.. இல்லை நான் உடைச்சு அடுப்புல போடட்டுமா..??"

என்று ஒரு பெண்ணின் ஆத்திரமான குரல் கேட்டது. அவனுடைய அண்ணியாக இருக்கும் என்று ப்ரியா எண்ணிக்கொண்டாள். இவர்கள் கத்துவது பத்தாமல் 'சித்தி ஃபோட்டோ.. சித்தி ஃபோட்டோ..!!' என்று 'டம்.. டம்..' என்று எதையோ தட்டிக்கொண்டு ஒரு குழந்தை வேறு வீறிட்டது. ப்ரியா இப்போது பொறுமை இழந்தாள்.

"ஓகே அசோக்.. நான் வேணா கால் கட் பண்ணிடுறேன்..!!" என்றாள் அவசரமாக.

"ஹேய் ப்ரியா.. இரு இரு.. பரவால.. என்ன விஷயம்னு சொல்லு..??"

"இட்ஸ் ஓகே அசோக்.. நீ ஆபீஸ் வா.. பேசிக்கலாம்..!!" ப்ரியா சலிப்பாக சொல்லவும், அசோக் ஓரிரு வினாடிகள் தயங்கிவிட்டு..

"ஹ்ம்ம்.. சரிப்பா..!!" என ஒத்துக்கொண்டான்.

ப்ரியா காலை கட் செய்தாள். கொஞ்ச நேரம் அடுத்த முனையில் நடந்த அமளிதுமளியில் அவளுக்கு காதெல்லாம் 'டொய்ங்ங்ங்..!!!' என்று சவுண்டு கேட்பது போல இருந்தது. வலது காதுக்குள் சுண்டு விரலை நுழைத்து நன்றாக குடைந்து விட்டுக்கொண்டாள். 'உஃஃப்ப்ப்... உஃஃப்ப்ப்...' என்று வாய்வழியாக உஷ்ணமூச்சு விட்டாள். 'ஹப்பா... என்னா ஃபேமிலிடா இது.. கல்யாணம் பண்ணிக்கிட்டு இதுக கூட எப்படி நான் காலம் தள்ளப்போறேன்..??' என்று கவலையாய் யோசித்தாள். அடுத்த சில வினாடிகளிலேயே அவர்களுடைய கம்பனி பஸ் வந்து நிற்க, ஓடிச்சென்று ஏறிக்கொண்டாள்.

அவள் பஸ்ஸில் ஏறிக்கொண்டதற்கு சிறிது நேரம் முன்பாக.. அசோக்கின் வீடு..!!

அசோக் தனது அறையில் இருந்து வெளிப்பட்டு ஹாலுக்குள் நுழைந்தான். செல்வி கிச்சனில் கரண்டியுடன் பிஸியாக இருந்தாள். டைனிங் டேபிளில் செண்பகம் அமர்ந்திருந்தாள். அவளுடைய கையில் குமுதம் விரித்து வைக்கப்பட்டிருந்தது. அவளது வாயில் தேங்காய்ப்பாலில் குளித்த ஆப்பம் அரைபட்டுக் கொண்டிருந்தது. அசோக் ஒரு சேரை இழுத்து போட்டுக்கொண்டு ஓரமாக கிடந்த அந்த டேபிள் முன்பு அமர்ந்தான். டேபிள் மீதிருந்த லேப்டாப்பை திறந்தான். செண்பகம் இப்போது தலையை திருப்பி அசோக்கை பார்த்து கேட்டாள்.

"என்ன மாமா.. ஆபீசுக்கு இன்னைக்கு வரலையா..??"

"வர்றனே.. ஏன் கேக்குற..??"

"இல்ல.. கேஷுவல் ட்ரஸ்ல இருக்கீங்களே.. அதான் கேட்டேன்..!!"

"ட்ரஸ் சேன்ஜ் பண்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகப் போகுது..?? மொதல்ல நீ தின்னு முடி.. நீ தின்னு முடிக்கிறதுக்குள்ள.. திருவண்ணாமலை கிரிவலமே சுத்தி வந்துறலாம்..!!" என்று அசோக் கிண்டலாக சொல்ல,

"ம்க்கும்..!!" கடுப்பான செண்பகம், குமுதத்திலும் ஆப்பத்திலும் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள்.

லேப்டாப் திறந்த அசோக் முதல் வேலையாக அந்த ஃபோல்டரை ஓப்பன் செய்தான். அதிலிருந்த நூற்றுக்கணக்கான ப்ரியாவின் ஃபோட்டோக்களில், அவனுடைய ஃபேவரிட் ஃபோட்டோவை ஓப்பன் செய்தான். காதலியின் அழகை கண்கொட்டாமல் ரசிக்க ஆரம்பித்தான். அவன் காலை நேரங்களில் இந்த மாதிரி ப்ரியா தரிசனம் செய்வது இயல்பான ஒன்றுதான்.

தம்பு ஸ்கூலுக்கு கிளம்பி ரெடியாக இருந்தான். சாப்பிட்டுவிட்டு வெறுமனே அமர்ந்திருந்தவன், அசோக் லேப்டாப்பை திறந்ததும் எழுந்து அவனருகே வந்து நின்றுகொண்டான். சிறுவன்தானே என்று எண்ணி ப்ரியாவை ரசிப்பதை கண்டின்யூ செய்தான் அசோக். 'சித்தி.. உன் சித்தி..' என்று அவனிடம் கிசுகிசுப்பான குரலில் சொன்னான். இருவரும் ரகசியமாக ப்ரியாவை ரசிக்க ஆரம்பித்தார்கள்.

அப்போதுதான் ராஜேஷ் அந்த அறைக்குள் பிரவேசித்தான். அவன் முகத்தில் ஒரு சீரியஸ்னஸ்..!! நேராக அசோக்கை நோக்கி வந்தவன்,

"டேய்.. கொஞ்சம் கையை எடு..!!" என்றான்.

"எதுக்குடா..??"

எதுவும் புரியாமலே அசோக் லேப்டாப்பில் இருந்து கைகளை விலக்கிக் கொண்டான். ராஜேஷ் டேபிள் மீது கிடந்த மேகசின்ஸ், சிடிக்கள், பொம்மைகள், இன்னும் பிற குப்பைகளை கிளறி எதையோ தேடினான். அப்புறம்..

"கொஞ்சம் இந்தப்பக்கம் வா..!!" என்றான் அசோக்கிடம்.

"என்னடா தேடுற..??"

அசோக் கேட்டுக்கொண்டே டேபிளை விட்டு சற்று நகர்ந்து கொண்டான். அவனுடைய லேப்டாப் இன்னும் மூடாமல் திறந்தேதான் இருந்தது. அதைக் கவனிக்கவெல்லாம் பொறுமை இல்லாத ராஜேஷ், டேபிளின் ட்ராவை திறந்தான். உள்ளே கைவிட்டு கிளறினான். 'ப்ச்... ச்சே.. எங்க போச்சு..??' என்று சலிப்பை உதிர்த்தான்.

"ஹேய்.. என்ன தேடுறன்னு கேக்குறன்ல..??" அசோக்கின் குரலில் இப்போது ஒரு எரிச்சல் ஏறியிருந்தது.



"கொஞ்சம் காலை எடுடா..!!"

ராஜேஷ் அவனுக்கு பதில் சொல்லாமல், அப்படியே பட்டென்று தரையில் அமர்ந்தான். டேபிளின் கீழ்ப்பாகத்தில் இருந்த கப்போர்டுகளை எல்லாம் வரிசையாக ஒவ்வொன்றாக திறந்து பார்த்தான். உள்ளே அடுக்கியிருந்த புத்தகங்களுக்குள் கைவிட்டு தேடுதல் வேட்டையை தொடர்ந்தான். 'எங்க வச்சிருப்பேன்..??' என்று அவ்வப்போது தலையை சொறிந்து கொண்டான்.

"டேய்.. சொல்லுடா.. என்னடா தேடுற..??"

அசோக் உச்சபட்ச கடுப்புடன் கேட்டான். அப்புறமும் ராஜேஷ் அவனுக்கு பதில் சொல்லாமல் கப்போர்டுக்குள் கைவிட்டு துழாவிக்கொண்டிருக்க, அசோக் இப்போது பொறுமை இழந்தான். காலடியில் மண்டியிட்டு அமர்ந்திருந்த அண்ணனையே முறைப்பாக பார்த்தான். அப்புறம் அவனது பார்வை, தரையில் ஊன்றப்பட்டு விரிந்திருந்த அண்ணனின் ஐந்து கைவிரல்கள் மீது படிந்தது. அசோக் இப்போது தனது வலது காலை மெல்ல நகர்த்தினான். ராஜேஷின் கைவிரல்கள் மீது காலை வைத்து, 'நறுக்க்..' என்று அழுத்தி ஒரு மிதி மிதித்தான். உடனே..

"ஆஆஆஆ...!!" என்று அலறிக்கொண்டும் கையை உதறிக்கொண்டு ராஜேஷ் எழுந்தான்.



"என்ன தேடுறன்னு கேட்டுட்டே இருக்குறேன்.. சொல்லவே மாட்டன்ற..??" அசோக் எரிச்சலாக கேட்டான்.

"அதுக்காக மிதிப்பியா..??" ராஜேஷ் கைவிரல்களுக்கு காற்று ஊதிக்கொண்டே கேட்டான்.

"வேணுன்னுலாம் ஒன்னும் மிதிக்கல.. தெரியாம பட்டுருச்சு..!! சரி சொல்லு.. என்ன தேடுற..??"

"ஃபோட்டோடா..!!"

"என்ன ஃபோட்டோ..??"

"அந்த பொண்ணோட ஃபோட்டோ..!!"

"எந்த பொண்ணோட ஃபோட்டோ..??"

"அதாண்டா.. நாலு மாசம் முன்னாடி உனக்கு பாத்த பொண்ணு.. நீ கூட பாக்காமலே தூக்கி போட்டுட்டு போனியே..??"

"அதை எதுக்கு இப்போ தேடுற..??"

"அந்தப் பொண்ணைத்தான் உனக்கு கட்டி வைக்கிறதா நான் முடிவு பண்ணிருக்குறேன்.. ஜாதகம் கொண்டு போய் ஒன்னுக்கு ரெண்டு ஜோசியரா கேட்டாச்சு.. பொருத்தம்லாம் பிரம்மாதமா இருக்கு.. அந்தப்பொண்ணோட அப்பாகிட்ட நானும் உன் அண்ணியும் எல்லாம் பேசி முடிச்சுட்டோம்.. உன்கிட்டயும் அந்த பொண்ணோட ஃபோட்டோவ காட்டிட்டா எனக்கு ஒரு வேலை முடிஞ்சுடும்.. கல்யாண வேலையை ஆரம்பிச்சுடலாம்.. அதான் தேடிட்டு இருக்குறேன்..!!" புன்னகையும் பெருமிதமாகவும் சொன்ன ராஜேஷை, அசோக் ஒருமுறை ஏற இறங்க பார்த்தான். அப்புறம் முகத்தை சுளித்தவாறே கேலியாக கேட்டான்.

"ஏண்டா.. லூசா நீ..??"

"என்னது..?? லூசா..????" ராஜேஷ் ஷாக்காகி போனான்.

"பின்ன என்ன..?? யாரை கேட்டு நீங்களா முடிவு பண்ணுனீங்க..??"

"நீதானடா அன்னைக்கு சொன்ன..??"

"என்ன சொன்னேன்..??"

"உடனே எனக்கு ஒரு பொண்ணு பாரு.. எந்தப்பொண்ணா இருந்தாலும் நான் தாலி கட்டுறேன்னு..!!"

அண்ணனின் கேள்விக்கு அசோக் பதில் சொல்ல தடுமாறிக் கொண்டிருக்கும்போதே, ஆப்பம் தின்றுகொண்டிருந்த செண்பகம் எழுந்து ஓடிவந்தாள். வாயெல்லாம் பல்லாக கேட்டாள்.

"ஹை.. அசோக் மாமா..!! உங்களுக்கு கல்யாணமா..?? அக்கா என்ன பண்றாங்க..??"

"ஆங்.. அடுப்பங்கரைல ஆப்பம் சுடுறாங்க..!!" அசோக் டென்ஷனாகி கத்தினான். அவன் கத்திக்கொண்டு இருக்கும்போதே அந்தப்பக்கம் செல்வி,

"டேய்.. உங்க சண்டைல தேவை இல்லாம என்னை இழுத்த.. ஆப்பக்கரண்டியாலே ரெண்டு பூசை போடப்போறேன் பாரு இப்போ..!!" என்று கிச்சனில் இருந்து அலறினாள். அசோக் அதை கண்டுகொள்ளாமல், செண்பகத்திடம் சீறினான்.

"ஏய்.. போடீ.. போய் திங்கிற வேலையை பாரு.. போ..!!" செண்பகம் மிரண்டு போய் டைனிங் டேபிள் நோக்கி நகர,

"அவளை ஏண்டா திட்டுற.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..!!" ராஜேஷ் மறுபடியும் ஆரம்பித்தான்.

"என்ன கேட்ட..??"

"அன்னைக்கு நீதான கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க சொன்ன..??"

"அ..அது.. அது நான் அன்னைக்கு ஏதோ ஒரு கோவத்துல சொல்லிட்டேன்..!!" அசோக் சமாளிக்க முயன்றான்.

"என்னது.. கோவத்துல சொல்லிட்டியா..?? ஏண்டா.. கோவத்துல கன்னாபின்னான்னு திட்டுவாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன்.. கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க சொல்றது என்னடா புதுப்பழக்கமா இருக்கு..??"

"ஐயோ.. உன் மேல கோவம் இல்லடா..!!"

"அப்புறம் யார் மேல..??"

"அது உனக்கு சொன்னா புரியாது.. நீ பாத்த பொண்ணெல்லாம் என்னால கட்டிக்க முடியாது.. போதுமா..?? ஆளை விடு..!!"

"என்னடா இவ்வளவு கூலா சொல்லிட்டு இருக்குற.. உன்னை நம்பி நான் அந்த மனுஷன்ட்ட என்னன்னவோ சொல்லிட்டேன்..!!"

"என்ன சொன்ன..??"

"பெரியவங்க வார்த்தையை நீ தட்டமாட்ட.. அண்ணன் அண்ணி மேல ரொம்ப மதிப்பு.. அவங்களா பாத்து எந்தப்பொண்ணை சொல்றாங்களோ.. அந்தப்பொண்ணு கழுத்துல தாலி கட்டுவன்னு..!!"

"உன்னை யார் அப்படி இல்லாததும் பொல்லாததுமா.. மனசாட்சியே இல்லாம பொய் சொல்ல சொன்னது..??"

அசோக் கேட்டதில் ராஜேஷ் அப்படியே வாயடைத்துப் போனான். இப்போது செல்வி கிச்சனில் இருந்து தோசைக்கரண்டியுடன் ஓடிவந்தாள்.

"ஏண்டா.. நீயே பொண்ணு பாக்க சொல்லிட்டு.. இப்ப மாத்தி மாத்தி பேசுனா என்ன அர்த்தம்..??"

"ஆங்.. நான் சொன்னது உங்களுக்கு புரியலைன்னு அர்த்தம்..??"

"என்ன புரியலை..??"

"ஆமாம்.. நான் சும்மா ஜாலியா சொன்னதை சீரியஸா எடுத்துக்கிட்டு.. நீங்களா பொண்ணு பாத்தா அதுக்கு நானா பொறுப்பு..??" அசோக் கூலாக சொல்ல இப்போது ராஜேஷ் டென்ஷன் ஆனான்.

"ஏண்டா.. நீ ஜாலி பண்ணி வெளயாட இங்க என்ன கிரிக்கெட் மேட்சா நடக்குது.. கல்யாண விஷயம்டா..!!"

ராஜேஷ் கத்திக்கொண்டு இருந்தபோதுதான் டேபிள் மீது கிடந்த அசோக்கின் செல்போன் சிணுங்கியது. உடனே தலையை திருப்பியவன், அப்போதுதான் தனது லேப்டாப் இன்னும் திறந்தே இருப்பதையும், ப்ரியா அதில் சிரித்துக் கொண்டிருப்பதையும் கவனித்தான். அதே நேரம் ராஜேஷும் அந்தப்பக்கமாய் பார்வையை திருப்ப, அதற்குள் அசோக் அவசரமாக ஓடிச்சென்று லேப்டாப்பை அறைந்து மூடினான். செல்போனை எடுத்து டிஸ்ப்ளே பார்த்தவன் ப்ரியா என்று தெரிந்ததும், உற்சாகமாக கால் பிக்கப் செய்ய, அதற்குள்

"கேக்குறதுக்கு பதில் சொல்லுடா..!!" ராஜேஷ் கத்தினான்.

"ஏய்.. ஒரு நிமிஷம் உன் டோரை லாக் பண்ணு.. எனக்கு ஒரு இம்பார்ட்டன்ட் கால் வருது.. பேசிட்டு வர்றேன்..!!" என்றான் அசோக். அப்புறம் ஃபோனை காதுக்கு கொடுத்து,

"ஹேய் ப்ரியா.. என்ன இது.. காலங்காத்தால கால் பண்ணிருக்குற..??" என்று புன்னகையுடன் கேட்டான்.

"டேய்.. நான் கேக்குறதுக்கு மொதல்ல பதில் சொல்லுடா.. ஃபோன்ல அப்புறம் பேசலாம்..!!" ராஜேஷ் இப்போது பொறுமை இழக்கலானான்.

"ஏய்.. முக்கியமான கால்னு சொல்றேன்ல.. கொஞ்சம் பொறுக்க முடியாதா உனக்கு..??" அண்ணனிடம் திரும்பி கத்திய அசோக், அதற்குள் ஃபோனில் ஏதோ கேள்வி கேட்கப்பட,

"என் அண்ணன்.. ஒரு மாதிரியான ஆளுன்னு உன்கிட்ட சொல்லிருக்கன்ல.. அவன்தான்..!!" என்றான் கேலியாக.

"டேய்.. யாருடா ஒரு மாதிரி.. யாரு ஒரு மாதிரி..??" ராஜேஷ் டென்ஷனாகி கத்தினான்.

"உன்னைத்தாண்டா சொல்றேன்..!!" அசோக்கும் செல்ஃபோனை பொத்திக்கொண்டு சீறினான். அப்புறம் கையை எடுத்துக்கொண்டு ஃபோனில்,

"அவன் கத்தலம்மா.. காலைலயே ஆப்பத்தை தின்னுட்டு ஏப்பத்தை விட்டுட்டு இருக்கான்..!!" என்று கிண்டலாக சொன்னான்.

"ஏண்டா.. நான் கரடியா கத்துறது உனக்கு ஏப்பம் விடுற மாதிரி இருக்கா..?? எவ்வளவு கொழுப்பு இருக்கணும் உனக்கு..?? மொதல்ல அந்த ஃபோனை கட் பண்ணுடா.. கட் பண்ணு..!! இங்க பாரு.. என்கிட்ட பேசு..!!" ராஜேஷ் அவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"டேய்.. அவர்தான் சொல்றார்லடா.. இப்போ அந்த ஃபோனை கட் பண்ணப் போறியா.. இல்லை நான் உடைச்சு அடுப்புல போடட்டுமா..??"

செல்வியும் பொறுமை இழந்து சூடாக கேட்டாள். ஆளாளுக்கு கத்திக்கொண்டிருக்க, அது போதாதென்று.. அவ்வளவு நேரம் சித்தியின் படத்தை ரசித்துக்கொண்டிருந்த தம்புவும், திடீரென லேப்டாப் மூடப்பட்டதில் கடுப்பாகி, 'சித்தி ஃபோட்டோ.. சித்தி ஃபோட்டோ..!!' என 'டம்.. டம்..' என்று லேப்டாப்பை தட்டியவாறே அவனும் அலறினான். ஆனால் அதை எல்லாம் யாரும் கவனித்ததாக தெரியவில்லை. இந்த அமளிதுமளி எல்லாம் கேட்டு அடுத்த முனையில் என்ன சொல்லப்பட்டதோ..

"ஹேய் ப்ரியா.. இரு இரு.. பரவால.. என்ன விஷயம்னு சொல்லு..??" அசோக் அவசரமாக சொன்னான். அப்புறம் ஓரிரு வினாடிகள் தயங்கிவிட்டு..

"ஹ்ம்ம்.. சரிப்பா..!!" என்றவாறே காலை கட் செய்தான். கட் செய்த வேகத்தில் அண்ணனையும் அண்ணியையும் பார்த்து சீற்றமாக கேட்டான்.

"உங்களுக்குலாம் என்னாச்சு இன்னைக்கு.. நிம்மதியா ஒரு ஃபோன் கூட பேச விட மாட்டேன்றிங்க..?? கால் பண்றவங்க நம்ம ஃபேமிலியை பத்தி என்ன நெனைப்பாங்க..??"

"பார்டா.. ஃபேமிலியை பத்தி பெருசா அக்கறையாலாம் பேசுது புள்ள..?? இவருக்கே எந்த அக்கறையும் கெடையாதாம்.. இவுக அடுத்தவுகளை சொல்ல வந்துட்டாக..!!" செல்வி கிண்டலாக சொன்னாள்.

"ஏன்..?? எனக்கு என்ன அக்கறை இல்ல..??"

"அக்கறை இருக்குறவனா இருந்தா.. இப்படி நாங்க பாத்த பொண்ணை வேணாம்னு சொல்லிருப்பியா..??" செல்வி கேட்க, இப்போது செண்பகம் அசோக்கின் சப்போர்ட்டுக்கு வந்தாள்.

"அக்கா.. என்னக்கா இது..?? மாமாவை ஏன் தேவை இல்லாம திட்டுற..?? கல்யாணம்ன்றது அவங்கவங்க இஷ்டப்படி நடக்கணும்.. எதுக்கு எல்லாருமா சேந்து அவரை கம்பல் பண்றீங்க..??"

"அடிப்போடி அறிவு கெட்ட சிறுக்கி.. இவன் அடிக்கிற கூத்துலாம் உனக்கு ஒரு மண்ணும் தெரியாது.. நீ கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு கம்முனு இரு..!!" என்று தங்கையிடம் எகிறினாள் செல்வி. அசோக் இப்போது செண்பகத்திடம் திரும்பி சொன்னான்.

"விடு செம்பு.. இதுகளுக்குலாம் ஒன்னும் புரியாது..!! சாப்பிட்டல நீ.. கெளம்பு.. ஆபீசுக்கு லேட்டாயிடுச்சு.. நான் ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வந்துடுறேன்..!!" சொல்லிவிட்டு அசோக் தனது அறையை நோக்கி நடக்க, ராஜேஷ் இப்போது கடுப்பாகி கத்தினான்.

"டேய்.. இப்படி எந்த முடிவும் சொல்லாம போனா.. என்னடா அர்த்தம்..??"

"என் முடிவை அப்போவே சொல்லிட்டேன்.. நீங்க பாத்த பொண்ணை என்னால கட்டிக்க முடியாது.. முடியாது.. முடியவே முடியாது..!! எனக்கு வரப்போறவளை நானே சூஸ் பண்ணிக்கிறேன்..!!"

என்று அசோக்கும் பதிலுக்கு கத்தினான். தனது அறைக்குள் நுழைந்து, கதவை ஆத்திரமாக அறைந்து சாத்தினான்.



அப்புறம் ஒரு ஐந்து நிமிடத்திலேயே.. ராஜேஷும் செல்வியும் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்க.. அசோக்கும் செண்பகமும் வீட்டில் இருந்து கிளம்பினார்கள். செண்பகம் பின்னால் ஏறிக்கொள்ள, அசோக் மனதில் இருந்த கோபத்தை கிக்கரிடம் காட்டினான். உதைக்கப்பட்ட வேகத்திலேயே பைக் சீறிப்பாய ஆரம்பித்தது. செண்பகம் மிரண்டு போய் அசோக்கின் தோளை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.

வீட்டில் நடந்த ரகளை பற்றியே எண்ணிக்கொண்டு கொஞ்ச நேரம் பைக்கை விரட்டிய அசோக்கிற்கு, அப்புறம் மெல்ல ப்ரியாவின் ஞாபகம் வந்தது. உடனே மனதில் ஒரு இதமான உணர்வு பரவியது. 'எதற்காக கால் செய்தாள்..?? என்றும் இல்லாத அதிசயமாய் இன்று காலையிலேயே..?? அதுவும் ஹஸ்கியான அந்த ஹலோவிலேயே என்ன ஒரு ரொமாண்டிக் ஃபீல்..?? ச்சே.. வீட்ல இருக்குற ரெண்டு சனியன்களும் சேந்து எல்லாத்தையும் கெடுத்துடுச்சுங்க..!!'

அசோக் அந்த மாதிரி குழம்பிக்கொண்டே பைக்கை விரட்டிய அதே நேரம்.. கம்பனி பஸ்ஸின் ஜன்னலோரமாய் அமர்ந்திருந்த ப்ரியா.. ஆபீசுக்கு சென்றதும் அசோக்கிடம் அவள் பேசப்போகிற காதல் மொழிகளை.. இப்போதே மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டாள்.. வெட்கப்பட்டு தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள்..!!


No comments:

Post a Comment