Friday, June 19, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 34

இக்கதையின் முதற்பகுதியை தொடர்ச்சிக்காக மறுபடி பதித்து இருக்கிறேன்

4:30க்குப் பற்றிய தீப் பிழம்புகள் 6:30 மணியளவில் முற்றிலும் அணைந்து எஞ்சி இருந்த கரும்புகையும் குறைந்து கொண்டு இருந்தது. கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரையும் வெளிக் கொண்டு வரும் பணியின் இறுதிக் கட்டத்தில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு இருந்தனர். உள்ளே இருக்கும் தஸ்தாவேஜுகளை வெளியே எடுத்து வர தீயணைப்புப் படையினரின் அனுமதிக்காக அக்கட்டிடத்தில் இருந்த நிறுவனங்களின் மேனேஜர்களும் உரிமையாளர்களும் கட்டிடத்தின் எதிரே ஒரு புறம் காத்து நின்றனர்.



இன்னொரு புறம் தீயிலிருந்து தப்பிப் பிழைத்துக் கட்டிடத்துக்கு வேளியே வந்தவர்களில் சிலர் மட்டும் நின்று இருந்தனர்.

அக்கூட்டத்தில் ஒரு மூலையில் செல்வி நின்று கொண்டு இருந்தாள். ஐந்தடி இரண்டு அங்குல உயரம். காப்பிக் கொட்டைக்கும் கார் மேகத்துக்கும் இடைப்பட்ட ஒரு நிறம். பேசும் கண்கள். சிரித்தால் சற்றே தடித்த உதடுகளுகக்கு இடையே பளீரிடும் முத்துப் பற்கள். குடுமியாகப் போட்டாலும் கொண்டை போல் தெரியும் அளவுக்கு இடைவரை வழியும் கூந்தல். கோவில் சிற்பம் போன்ற அங்க அளவுகள். அவள் அணிந்து இருந்த மயில் கழுத்து நிறமும் மஞ்சள் நிறமும் கலந்த சுடிதார் அங்கும் இங்கும் ஈரமாகவும் சில இடங்களில் தெப்பலாகவும் தீயணைப்புப் படையினரின் நீர் தெளிப்பால் நனைந்து பிரம்மன் செதுக்கி வைத்த அவள் உருவமைப்பை தம்பட்டம் போட்டபடி இருந்தது. தீயுக்கு மிகவும் பிடித்த அவளது ஜார்ஜெட் துப்பட்டாவையும் அது தீப்பிடிக்காமல் இருக்க அவளது வருங்காலக் கணவன் எப்போதோ உருவி எறிந்து இருந்தான். அந்த இக்கட்டான சூழலிலும் அவளது மேனி வனப்பை வெட்கமின்றி வெறித்துக் கொண்டு இருந்த சிலரை பொருட்படுத்தாமல் அவள் நின்று கொண்டு இருந்தாள். புகையினால் சிவந்து தீப்பிழம்பாக ஜொலித்த அவளது வரைந்து வைத்த விழிகளில் இருந்து தாரை தாரையாக பொங்கி வழிந்த கண்ணீர் அவளது கன்னங்களை நனைத்த படி இருந்தது. அழுகை சற்றே தடித்த அவளது உதடுகளைப் பிதுக்கி அவள் உடலைக் குலுக்கியபடி இருந்தது.

இன்னொரு மூலையில் தோற்றத்தில் முற்றிலும் மாறுபட்ட ப்ரீதி நின்று கொண்டு இருந்தாள். ஐந்தடி ஆறு அங்குல உயரம். கோதுமைக்கும் அறுத்த நெல்லுக்கும் இடைப்பட்ட நிறம். சற்றே ஒடிசலான தேகம். அந்தத் தேகத்துக்கு மெறுகு கூட்டும் முன் பின் அழகுகள். தோளுக்கு சற்றே கீழ்வரை படர்ந்த கூந்தல். ரோஜா வண்ணமும் கடல் நீல வண்ணமும் கலந்த அவள் அணிந்து இருந்த சுடிதாரும் நனைந்து இருந்தது. புகையினால் சிவந்து இருந்தாலும் கண்ணீர் பொங்கி வழிந்தாலும் அவள் கண்கள் தீர்க்கமாக மேல் நோக்கிப் பார்த்தபடி இருந்தன. மெலிந்த உதடுகள் ஏதோ ஸ்லோகத்தை முணுமுணுத்தபடி இருந்தன. அவ்வப்போது வந்த மெல்லிய விசும்பல் மட்டும் அவள் அழுவதை காடிக் கொடுத்தது.

இரு கன்னியரின் கண்களும் எதிரில் இருந்த கட்டிடத்தின் மேல் தளங்களைக் கண்டவாறு தவம் கிடந்தன.

கட்டிடத்தின் உள்ளே இருந்தவர் அனைவரும் அகற்றப் பட, தீயணைப்புப் படையினர் வெளி வரத் தொடங்கினர். அப்போது மேல் தளத்தில் இருந்து எளிதாக கீழிறங்குவதற்காக தீயணைப்புப் படையினர் கட்டி இருந்த கயிறுகளில் இரு இளைஞர்கள் சறுக்கிக் கொண்டு தரையிறங்கினர்.

5 அடி 9 அங்குல உயரமும் ஈட்டிக் மர நிறமும் அதைவிட உறுதியான தேகமும் கொண்ட சிவா முதலில் தரையிறங்கினான். அடுத்த கணம் செல்வியை நோக்கி நடந்தான்.

ஆறடி உயரமும் மூங்கில் நிறமும் அதைப் போன்றே முறுக்கேறிய உடலும் கொண்ட ஆனந்த் அடுத்த கணம் தரையிறங்கினான். அவன் அடியெடுத்து வைக்குமுன் ப்ரீத்தி அவனருகே வந்து இருந்தாள்.

புஜங்களைப் பற்றி இழுத்தவனின் நெஞ்சில் தஞ்சம் புகுந்த செல்வி, "பொறுக்கி. இன்னேரம் எனக்கு உயிரே போயிருச்சு" என்றாள். தன்னவனின் மார்பில் முகம் புதைத்து விசும்பினாள்.

எதிரே நின்றவனின் தலைமுடியைப் பற்றி உலுக்கிய ப்ரீத்தி, "எருமை மாடு. மனசுல உனக்கு ரஜனின்னு நினைப்பா?" என்றாள். அவனைக் கட்டிப் பிடித்த அடுத்த கணம் அவ்வளவு நேரமும் அடக்கி வாசித்த அழுகை மடை திறந்த வெள்ளமாகி கேவலுடன் வெளிப்பட்டது.

சிவா, "இன்னாம்மா இது? இங்கே பாரு எனக்கு ஒண்ணியும் ஆவலை"

ஆனந்த், "ஏய், என்னாச்சு உனக்கு? உன் கிட்ட சொல்லிட்டுத்தானே போனேன்? ஃவொய் ஆர் யூ கெட்டின் இமோஷனல்? பாரு எனக்கு ஒண்ணு ஆகல"

மங்கையர் இருவரும் தத்தம் ஆற்றாமை அடங்கும் அவரை கட்டியணைத்தபடி நின்று இருந்தனர். ஆடவருக்கு அவர்களை சமாதானப் படுத்த வெகு நேரம் ஆனது.

அழுகை நின்று மூக்கை உறிஞ்சிய படி செல்வி, "ஃபோர்த் ஃப்ளோர்ல இருந்து குதிச்சப்ப தலையில் அடிபட்டு நந்தகுமார் செத்துட்டான். வெள்ளைத் துணி போத்தி எடுத்துட்டுப் போனாங்க"

அதே சமயம் ப்ரீதி, "விக்ரம் ஷா ஃபோர்த் ஃப்ளோர்ல இருந்து குதிச்சு இருக்கார். ஹீ டிண்ட் மேக் இட். உடம்பைப் போத்தி ஸ்ட்ரெச்சர்ல எடுத்துட்டுப் போனாங்க"

ஆடவர் இருவரும் அதற்கு தத்தம் காதலியிடம் சொன்னது, "தெரியும்"

அதற்கு மங்கையர் இருவரும் கண்களில் பயத்துடன் தத்தம் காதலனிடம் "ஆனா ... " என்று முறையிட,

இருவருக்கும் "பயப் படாதே" என்று பதில் வந்தது.

சிவா தன் பாக்கெட்டில் இருந்து செவ்வக வடிவமைந்த ஒரு கருப்பு நிற சிறு தகட்டைக் காட்டினான். பிறகு செல்வியிடம், "மெமரி கார்ட். உருவீட்டேன்" என்றபடி சிரித்தான்.

ஆனந்த் தன் சட்டைக்கு உள்ளே இருந்து அதே வடிவமைந்த கருப்பு நிற பெட்டி போன்ற ஒரு பொருளைக் காட்டி, "லாப்டாப் ஹார்ட் டிஸ்க். உருவீட்டேன்" என்றபடி சிரித்தான்.

அளவு கடந்த மகிழ்ச்சி கண்கள் கொப்பளித்த மங்கையர் இருவரும் காதலரைக் கட்டியணைக்க,

அவர்கள் இருவரும் தத்தம் வருங்கால மனைவியிடம், "இப்போ கல்யாணத்துக்கு ஓ.கேதானே?" என்று கேட்டதற்கு இருவருக்கும் நெஞ்சில் புதைத்த முகத்தின் ஆமேன்ற அசைவு மட்டுமே பதிலாக கிடைத்தது.


சிவாவை நெருங்கிய ஆனந்த், "கடைசில ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் பண்ணி இருக்காங்க மாதிரி இருக்கு"

சிவா, "சாவப் போறப்ப ஹெல்ப பண்ணி இன்னா பிரயோஜனம் ஆனந்த்?"

சற்று தொலைவில் நின்று இருந்த CRPF ஜீப்பில் இருந்து வந்தனாவும் சக்திவேலும் அவர்கள் அருகே வந்தனர். சக்திவேலை ஒட்டி எத்திராஜ் வந்து கொண்டு இருந்தான்.

வந்தனா, "மிஸ்டர் ஆனந்த்?"

ஆனந்த், "எஸ்! Mrs Rathod-Shakthivel I suppose?"

வந்தனா இறுகிய முகத்துடன், "அங்கே என்ன நடந்தது. நாங்க அரெஸ்ட் பண்ண வேண்டிய ஆள் கீழே குதிச்சு செத்து இருக்கார். Can you please explain this?"

ஆனந்த், "எனக்கு மத்தியானம் கொஞ்சம் வேலை இருந்தது. ஆஃபீஸில் இருந்தவங்க எல்லாரையும் விக்ரம் ஷா வெளியில் அனுப்பி இருந்தார். அவருக்கு ரெய்ட் வரும் விஷயம் முன் கூட்டியே தெரிஞ்சு இருக்கும்ன்னு நினைக்கறேன். ப்ரீதி எனக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தா. நான் பின்னாடி விங்கில் எங்க கூட வொர்க் பண்ணின சுகுமாரைப் போய் பார்த்துட்டு பின்னாடி வழியா ஆஃபீஸுக்குள் நுழைந்தேன். காரிடோரில் இருந்த புகையைப் பார்த்ததும் பில்டிங்கில் கீழ் ஃப்ளோரில் நெருப்பு பிடிச்சு இருக்குன்னு தெரிஞ்சுது. ஐ.டி டிபார்ட்மெண்ட் காரங்க ஃபையர் ஆக்ஸிடண்ட்டைப் பார்த்துட்டு திரும்பி போயிருப்பாங்கன்னு நினைச்சேன். கீழே நெருப்பு பிடிச்சது உள்ளே இருந்தவங்களுக்கு ரொம்ப நேரம் தெரியலைன்னு நினைக்கறேன். ஆஃபீஸிலும் ஒரு மூலையில் நெருப்பு பிடுச்சு இருந்தது. விக்ரம் ஷாவும் நந்தகுமாரும் அதை அணைக்க முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க. கான்ஃபரென்ஸ் ரூமில் இருந்த ப்ரீதியை அவங்களுக்கு தெரியாம வெளியே அனுப்பிட்டு நான் விக்ரம் ஷா கேபினுக்குப் போய் அவர் லேப் டாப் ஹார்ட் டிஸ்கை எடுத்தேன். டேபிளில் அவரோட ஸெல் ஃபோன் இருந்தது. இதிலும் எதாவுது தடயம் இருக்கும்ன்னு நினைச்சு அதையும் எடுத்து பாக்கெட்டில் போட்டுட்டு முன் பக்க காரிடோர் வழியா வெளியே வந்துட்டேன். அவங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சுன்னு எனக்குத் தெரியாது. "

வந்தனா, "ஆனந்த். நீங்க நிறைய விஷயங்களை மறைக்கற மாதிரி இருக்கு. அவர் கை ரெண்டும் கட்டப் பட்ட மாதிரி தழும்பு இருந்தது"

ஆனந்த், "தழும்பா? கை கட்டப் பட்ட மாதிரியா? தெரியலையே?" என்றவன் சற்று நிதானித்த பிறகு, "நீங்க என்னை அக்யூஸ் பண்ணறீங்களா?"

வந்தனா, "இல்லை. ஆனா, இப்போ நான் என் பாஸுக்கு நான் என்ன பதில் சொல்லறது?"

அவ்வளவு நேரமும் மௌனம் காத்த சக்திவேல், "கான்விக்ட் இஸ் டெட். அவன் சாவை லோகல் போலீஸ் இன்வெஸ்டிகேட் பண்ணப் போறாங்க. இதில் நீ என்ன செய்ய முடியும்?"

வந்தனா, "என் கண் முன்னாடி ஒரு கொலை நடந்து இருக்கு. பாத்துட்டு சும்மா இருக்கச் சொல்றியா?"

சக்திவேல் அதைப் பொருட் படுத்தாமல், "நீங்கதான் சிவாவா?"

சிவா, "ஆமா"

சக்திவேல், "உங்க ஃப்ரெண்ட் எத்திராஜ் உங்க மேல உயிரையே வெச்சு இருக்கார். ஆனா கொஞ்சம் ஓட்டை வாய். இனிமேல் கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்க. பாருங்க போலீஸ் பரம்பரையில் வந்த என் சம்சாரம் இப்போ மேலையும் கீழையும் குதிக்கராங்க"

மற்றவர் எல்லோரும் கடினப் பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு இருக்க முகம் இளகிய வந்தனா, "விளையாடாதே ஷக்தி. Its a crime"

சக்தி, "நோ! ரெண்டு பேரும் அவங்களாவே கீழே குதிச்சதை நிறைய பேர் பாத்து இருக்காங்க. அவங்களை யாரோ அப்படி குதிக்க தூண்டினாங்கன்னு நிரூபிக்கற வரைக்கும் இது கொலை இல்லை. தற்கொலைதான். பிஸைட்ஸ், இது உன் ஜூரிஸ்டிக்ஷனில் இல்லை. ஸோ, அதை நிரூபிக்கறது உன் வேலையும் இல்லை. நமக்குத் தேவையான முக்கிய ஆதாரம் கிடைச்சாச்சு. அதுக்கும் மேல் அந்த ஆளோட ஸெல் ஃபோனும் கிடைச்சு இருக்கு. மொத்தத்தில் உனக்கு இது ஒரு ஸக்ஸஸ்ஃபுல் ஆபரேஷன். அந்த ஆதாரத்தை கலெக்ட் பண்ணறதுக்கான பேப்பர் வொர்க்கை முடிச்சுட்டு கிளம்பலாம்"

சக்திவேலின் வாக்கில் இருந்த உண்மையை உணர்ந்தாலும் அதை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத வந்தனா, "சீரியஸ்ஸா சொல்லுங்க ஆனந்த். அவரை நீங்க எதுவும் செய்யலை?"

ஆனந்த், "நீங்களே சொல்லுங்க வந்தனா அவரை கொலை செய்யறதை விட உயிரோட பிடிச்சாத்தானே எனக்கு நல்லது? அப்படி இருக்கும் போது நான் எதுக்கு அவரை கொலை செய்யணும்"

வந்தனா, "ஐ திங்க். அவரை கட்டிப் போட்டு அந்த ரூமில் யாரோ அடைச்சு வெச்சுட்டு ரூமை பூட்டி இருக்காங்க"

ஆனந்த், "நான் அந்த ரூமில் இருந்து புறப்படற வரைக்கும் அவர் ரூம் திறந்துதான் இருந்தது"

வந்தனா, "Then how?"

சக்தி, "எப்படியோ செத்தார். விடேன்?"

எத்திராஜ் ஆர்வத்தில் ஏதோ உளறி இருக்கிறான் என்று உணர்ந்த சிவா, "மேடம் நான் சொல்லறேன். விக்ரம் ஷாவுக்கும் நந்தகுமாருக்கும் நிறைய லோகல் ரவுடிங்க எல்லாம் பழக்கம் போல இருக்கு. ரெண்டு பேர் அவர் ஆஃபீஸுக்குள் போறதை நான் பார்த்தேன். நந்தகுமார் இன்னும் ரெண்டு நாளில் வெளி நாடு போறதா சொல்லி இருந்தான். இப்போ நீங்க எல்லாம் சொல்லறதை வெச்சுப் பார்த்தா. ஏதோ கணக்குத் தீர்க்க அவங்க செஞ்ச வேலையா இருக்கும்"

வந்தனா சக்தியை நோக்கி, "பார்த்தியா? இவர் சொல்லற மாதிரி இருக்கலாம். அப்படி இருந்தாலும் அதை விசாரிக்க வேண்டாமா?"

சக்தி, "அம்மா தாயே ஐ.பி.எஸ். இவங்களை வறுத்து எடுக்கறதுக்கு பதிலா முரளி சாரை கூப்பிட்டு என்ன செய்யறதுன்னு கேக்கறையா?" என்று அவர்களது குழுத் தலைவரான ஜே.ஸி.பி முரளீதரன் IPSயிடம் கலந்தாலோசிக்கச் சொன்னான்.

வந்தனா, "சரி" என்றபடி கைபேசியில் முரளீதரனை அழைத்து சற்று ஒதுங்கி நின்றவாறு பேசினாள். அந்த நேரத்தில் சக்திவேலுக்கு ஆனந்த் ப்ரீதியை அறிமுகப் படுத்தினான்.



சக்தி, "டோண்ட் வொர்ரி. ஒரு ப்ராப்ளமும் வராது. உங்க கல்யாண ஏற்பாடை செய்யுங்க" என்றதும் ப்ரீதி முகம் சிவந்தாள்

உரையாடலை முடித்து வந்த வந்தனா, "Murali sir is worse than you. இவரெல்லாம் எதுக்கு போலீஸ் ஆஃபீஸரா ஆனார்ன்னு எனக்கு தெரியலை"

சக்திவேல், "ஏன்? கண்டுக்காதேன்னு சொன்னாரா?"

வந்தனா, "ம்ம்ம்"

சக்திவேல், "சரி நம்ம வேலையை முடிச்சுட்டு கிளம்பலாமா. நித்தினும் தீபாவும் ஆல்ரெடி ஹோட்டலில் செக்கின் பண்ணிட்டாங்க. எப்படா வர்றேன்னு ரெண்டு தடவை கூப்பிட்டுட்டான்"

வந்தனா, "ம்ம்ம் ... தீபாவும் கூப்பிட்டா"

வந்தனா ஆனந்திடம் இருந்த ஹார்ட் டிஸ்க்கையும் விக்ரம் ஷாவின் ஸெல் ஃபோனையும் பெற்றுக் கொண்டு அதற்கான தடய பத்திரங்களையும் எழுதி முடித்தாள்.

ஆனந்த், "வந்தனா, இந்த ஹார்ட் டிஸ்கில் ப்ரீதிக்கும் உதவும் விஷயங்கள், அதாவுது பேங்க் ஸ்டேட்மென்ட்ஸ், மனி ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கான விண்ணப்பங்கள் இப்படி பல டாக்யூமெண்ட்ஸ் இருக்கு. இந்த ஹார்ட் டிஸ்கில் ஃபிங்கர் ப்ரிண்ட் செக்யூரிட்டி இருப்பதால் அந்த டாக்யூமெண்ட்ஸ் எல்லாம் விக்ரம் ஷாதான் தயாரிச்சார்ன்னு ப்ரூவ் பண்ண முடியும். நீங்க ஹார்ட் டிஸ்க்கை எடுத்துட்டுப் போயிட்டா இந்த விவரங்களை இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்டுக்கு நாங்க எப்படி கொடுப்பது?"

வந்தனா, "இந்த ஹார்ட் டிஸ்கில் ஸ்டோர் செஞ்சு இருக்கும் விவரங்கள் உங்களுக்குத் தேவையா?"

ஆனந்த், "ம்ம்ஹூம் ... நேத்து நைட்டு விக்ரம் ஷா இந்த ஹார்ட் டிஸ்கில் இருந்ததை எல்லாம் நெட்டில் ஒரு சர்வரில் பேக் அப் எடுத்து இருந்தார். அதை நான் ஹாக் பண்ணி ஒரு காப்பி எடுத்துட்டேன். ஆனா அந்த பேக் அப்பில் ஃபிங்கர் ப்ரிண்ட் இமேஜ் இருக்காது"

வந்தனா, "டோண்ட் வொர்ரி. இதையும் என் பாஸ்கிட்டே நான் விசாரிச்சேன். இந்த ஹார்ட் டிஸ்க்கும் ஸெல் ஃபோனும் நாங்க எஃப்.பி.ஐக்கு அனுப்பணும். அதுக்கு முன்னாடி விக்ரம் ஷாவின் கைரேகையின் இமேஜ் உட்பட அதில் இருக்கும் எல்லா விவரங்களைப் பத்தியும் நாங்க ஒரு ரிப்போர்ட் தயாரிப்போம். அந்த ரிப்போர்ட்டின் அட்டெஸ்டட் காப்பி இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டுக்கும் உங்க லாயருக்கும் கொடுப்போம். பேர் அளவில் அந்த கம்பெனியின் எம்.டி ஆக இருந்ததைத் தவிற ப்ரீதிக்கும் அந்த கம்பெனியில் நடந்தவைகளுக்கு எந்த சம்மந்தமும் இல்லைன்னு அவர் ஏற்கனவே மனு தாக்கல் செஞ்சு இருக்கார். எங்க ரிப்போர்ட் கிடைச்சதும் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் ப்ரீதி விசா வாங்குவதற்குத் தேவையான நோ அப்ஜெக்ஷன் ஸர்டிஃபிகேட் கொடுப்பாங்க. உங்க லாயர் மூலம் அதே மாதிரி போலீஸிலும் நீங்க வாங்க முடியும். ஒரு வாரத்துக்குள்ளே இதெல்லாம் முடிஞ்சுடும்"

சக்திவேல் தொடர்ந்து,"சோ, நீங்க ப்ளான் பண்ணின மாதிரி உங்க அப்பா அம்மா வந்ததும் உங்க கல்யாணத்துக்கான ஏற்பாடுகளை செய்யலாம்"

ப்ரீதி, "உங்க அப்பா அம்மா?"

சக்திவேல், "ஸாரி, ஸஸ்பென்ஸைப் போட்டு உடைச்சுட்டேனா?"

வந்தனாவும் சக்தியும் விடைபெற்றுச் சென்றனர்.


ஆனந்த், "சிவா, ரொம்ப தேங்க்ஸ். உங்க உதவி இல்லைன்னா இந்நேரம் நாங்க ரெண்டு பேரும் பரலோகத்தில் இருந்து இருப்போம்"

ப்ரீதி, "என்ன சொல்றே?" என அலற ...

ஆனந்த், "சுகுமார் ஃப்ளாட்டுக்குக் கூட்டிட்டு போய் உன்னையும் என்னையும் ஷூட் பண்ணிட்டு அந்த பழி சுகுமார் மேல வர மாதிரி செஞ்சுட்டு அவனையும் தூக்கில் தொங்க விட விக்ரம் ஷா ப்ளான் செஞ்சு இருந்தார். இவரோட மாமா கோபாலும் அவரோட ஆளுங்களும் ஹெல்ப் பண்ணினாங்க"

சிவா, "எனக்கு தேங்க்ஸ் எதுக்கு சொல்லறீங்க ஆனந்த். அவங்க எப்படியாவுது பழி வாங்கணும்ன்னு இருந்தாங்க. அதுக்கு நீங்க ஹெல்ப் பண்ணினீங்க. நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும். ஓ.கே ஆனந்த் நாங்க ரெண்டு பேரும் அப்பா வீட்டுக்குப் போறோம். எங்களுக்கு என்ன ஆச்சுன்னு எல்லாம் பயந்துட்டு இருப்பாங்க"

ஆனந்த், "ஓ.கே. சிவா. நாளைக்கு காலையில் வரோம்"

சிவாவும் செல்வியும் விடைபெற்றுச் சென்றபின்

ப்ரீதி, "உங்க அப்பா அம்மா வரப் போறாளா?"

ஆனந்த், "ம்ம்ம் ... கூட தாத்தாவும் வரார். நாளன்னைக்கு காலையில் இங்கே இருப்பாங்க. மத்தியானம் எல்லோருமா குன்னூர் போறோம். அடுத்த முகூர்த்தத்தில் உங்க குன்னூரில் இருக்கும் ஒரு கோவிலில் கல்யாணம் பண்ணிக்கறோம். இது எல்லாம் ஒரு வாரத்தில் முடிஞ்சுடும். அதுக்குள்ளே உனக்கு தேவையான் என்.ஓ.ஸி எல்லாம் வந்துடும். விசா இன்டர்வியூக்கு அப்பாவே ஏற்பாடு செய்யறதா சொல்லி இருக்கார். விசா வாங்கினதும் அடுத்த ஃப்ளைட்டில் ஹனிமூனுக்கு பஹாமாஸ் போறோம். இப்போ எங்கே போலாம் சொல்லு"

ப்ரீதி, "என் பி.ஜிக்குப் போய் என் ட்ரெஸ்ஸஸ் எடுத்துண்டு உன் ஃப்ளாட்டுக்கு .. "

ஆனந்த், "யாரோ கல்யாணம் வரைக்கும் அது இதுன்னு சொன்னாங்க?"

ப்ரீதி, "வெளியில் வந்து எரிஞ்சுண்டு இருக்கும் பில்டிங்கைப் பாத்தப்போ நேக்கு உயிரே போயிடுத்து தெரியுமா? இனி உன்னை விட்டு ஒரு நிமிஷம் கூட என்னால் தனியா இருக்க முடியாது"

ஆனந்த், "இந்த நெருப்பு எப்படி பிடிச்சுது தெரியுமா?"

ப்ரீதி, "எப்படி?"

ஆனந்த், "PSV Systems சம்மந்தப் பட்ட பேப்பர்களை எரிச்சதனாலே!" என்று விக்ரம் ஷா சொன்னதையும் அதில் இருந்து அவன் யூகித்தவற்றையும் சொன்னான்.

ப்ரீதி, "யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கும்ன்னு சொல்லு வா. அது மாதிரி இருக்கு"

ஆனந்த், "யானை ஒரு உபயோகமான விஷயத்துக்காக மண்ணை வாரிப் போட்டுக்கும். But Vikram Shah literally set his own arse on fire!"

அவன் சொன்னதையும் சொன்ன விதத்தையும் நினைத்து வழி நெடுக ப்ரீதி சிரித்துக் கொண்டு இருந்தாள்....


அடுத்த நாள் காலை ...

பிரபாகரின் உடலை மின்சாரத் தீக்கு இரையாக்கிய பிறகு அழுது வீங்கிய கண்களோடு ரெட்டியின் மூத்த மகள் வந்து கொண்டு இருக்க அவளை ரெட்டியும் சிவாவும் இருபுறமும் அணைத்து பிடித்து நடந்து வர அவர்களைச் சுற்றி அவரது உறவினர்களோடு சிவா, செல்வி, மரகதம் மற்றும் விஜயாவும் வந்து கொண்டு இருந்தனர்.

ஆனந்தும் ப்ரீதியும் சற்று முன்னரே அவ்விடத்தை விட்டு அகன்று நின்று கொண்டு இருந்தனர்.

அருகே வந்ததும் ரெட்டி, "ரொம்ப தேங்க்ஸ் தம்பி. இப்போ என் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு"

ஆனந்த், "பரவால்லை மிஸ்டர் ரெட்டி"

ரெட்டி, "உன் பிரச்சனை எல்லாம் ஸால்வ் ஆயிடுச்சா?"

ஆனந்த், "ஆச்சு சார். எங்க ரெண்டு பேருக்கும் தேவையான எல்லா ஆதாரங்களும் அதிகாரிகளுக்குக் கொடுத்துட்டோம். எங்க பேரில் எந்த குற்றமும் இல்லைன்னு இன்னும் ஒரு வாரத்தில் அவங்க ரிப்போர்ட் கொடுத்துடுவாங்க"

ரெட்டி, "சரி, நல்லா இருங்க"



பின் தொடர்ந்து வந்த சிவா, "சோ, ஆனந்த் எப்போ கல்யாணம்?"

ஆனந்த், "அனேகமா இன்னும் ஒரு வாரத்தில். உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணறேன்." என்றவன் தொடர்ந்து "உங்க கல்யாணம் எப்போ?" என்று கேட்க

சிவா பதிலளிக்குமுன் மரகதம், "வீட்டில் யாராவுது செத்துட்டா ஒரு வருஷத்துக்கு எந்த விசேஷமும் இருக்காது தம்பி"

அதைக் கேட்ட ரெட்டி, "இவ்வளவு நாள் ஒதுக்கி வெச்சு இருந்தேன் தம்பி. அவன் கல்யாணம் தடை பட்டுப் போயிருக்குன்னு ஞாயம் கேட்டு திரும்பி வந்தாங்க. என்னென்னவோ நடந்துருச்சு. இப்போ ஒண்ணு சேரறதுனால கல்யாணம் மறுபடி தடைபடக் கூடாது. பிரபாகருக்கு நேரம் வந்துடுச்சு. போய் சேர்ந்துட்டான். என் மகள் திரும்பி அமெரிக்கா போறதுக்கு முன்னாடி இவங்க கல்யாணம் நடக்கும். சொல்லி அனுப்பறோம் நிச்சயம் வாங்க" என்று விடை கொடுத்தார்.

சுபம்

1 comment:

  1. கொஞ்சம் அந்த செக்ஸ் சமாசாரங்களை ஒதுக்கி விட்டால் அருமையான் த்ரில்லர் கதை. வாழ்த்துக்கள்

    ReplyDelete