Friday, June 19, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 33

இடம்: கார்லட் டவரின் மேல் தளம்/நான்காம் தளம்/மூன்றாம் தளம்
நேரம்: மாலை 4:00 மணி



மேல் தளத்தை அடைந்து முன் பக்கத்து விங்கில் இருக்கும் தளங்களுக்குப் போகும் லிஃப்டை இயக்க முயன்றனர். மின்சாரத் தடையால் அது நின்று இருந்தது. அங்கு இருந்து படிகள் மூலம் போகும் பாதையின் கதவைத் திறந்தனர். அந்த இடத்தை புகை நிறப்பத் தொடங்கியது ...

எல்லோரும் இருமியபடி மறுபடி மொட்டை மாடிக்கு வர ...



ஆனந்த், "மை காட்! எதோ ஃபையர் ஆக்ஸிடெண்ட்!! நீங்க செல்வியை கூப்பிடுங்க. நான் ப்ரீதியை கூப்பிடறேன்"

சிவா உடனே செல்வியை கைபேசியில் அழைக்க. ஆனந்த் ப்ரீதியை அழைத்தான்.

ஆனந்த், "ப்ரீதி" அவளை அனாவிசியமாக பயமுறுத்த விரும்பாமல், "உள்ளே எல்லாம் ஓ,கே தானே?"

ப்ரீதி, "ம்ம்ம் .. ஓ.கே. யாரும் கதை திறக்க ட்ரை பண்ணலை"

சிவா, "செல்வி, அங்கே எங்கயாவுது நெருப்பு பிடிச்சு இருக்கா?"

செல்வி, "நெருப்பா? இங்கே எங்க ஆஃபீஸில் ஒண்ணும் இல்லையே. நான் ஒரு மூலையில் உக்காந்து வொர்க் பண்ணிட்டு இருந்தேன். இரு வெளியே போய் பார்க்கறேன்" என்ற சில கணங்களில் எதிர்முனையில் இருந்து ஆரவாரம் கேட்டது தொடர்ந்து செல்வி, "ஐயயையோ! சிவா, வெளியே ஃபையராம். காரிடோர் எல்லாம் புகையா இருக்காம். ஆஃபீஸ் கதவை சாத்திட்டு உள்ளே இருக்கச் சொல்லி ஃபயர் சர்வீஸ் காரங்க சொன்னாங்களாம். ஆனா, இப்போ எங்க ஆஃபீஸிலும் ஒரு மூலையில் நெருப்பு பிடிச்சு இருக்கு"

சிவா, "நீ நெருப்பு இல்லாத இடத்தில் இரு நான் வரேன்"

செல்வி, "வேண்டாம். காரிடோர் முழுக்க புகை. உன்னால வர முடியாது" என்று அவள் சொல்லச் சொல்ல சிவா இணைப்பை அணைத்து இருந்தான். ஆன்ந்துக்கு நிலைமையை விளக்கிய மறுகணம் சிவாவின் கைபேசி ஒலித்தது. எதிர்முனையில் எத்திராஜ், "மச்சான். நம்ம பில்டிங்கில் நெருப்பு பிடிச்சு இருக்குடா"

சிவா, "தெரியும். கீழே எந்த அளவுக்கு பரவி இருக்கு?"

எத்திராஜ், "நம்ம ரெஸ்டாரண்டுக்கு பின்னாடி மெஸனைன் ஃப்ளோர்ல இருந்த இண்டிகோ ஜோ ரெஸ்டாரண்டிலதான் மொதல்ல பிடிச்சு இருக்கு. அந்த ப்ளேஸ் அவுட்டு. இப்போ ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் எதோ எலக்ட்ரானிக்ஸ் கம்பெனிலயும் பிடிச்சு இருக்காம். லிஃப்ட் எதுவும் வேலை செய்யலை. எல்லாம் பின்னாடி படி வழியாத்தான் வந்தாகணும். ஆனா காரிடோர் ஃபுல்லா புகை. உள்ளே அடைஞ்சு இருக்காங்க. ஃபயர் சர்வீஸ் இன்னும் வரலை"

சிவா, "செல்வி அவ ஆஃபீஸில் இருக்கா. நான் இப்போ டாப் ஃப்ளோர் டெரேஸ்ல இருக்கேன். கீழே வெயிட் பண்ணு அந்த நந்தகுமார் பையன் இப்போ அவன் ஆஃபீஸில் தான் இருக்கான். கீழே வெளியே வந்தான்னா கூட ரெண்டு ஆளுங்களை கூட்டிட்டு நீ அவனை கவனிச்சுக்கோ. நான் அப்பறம் கூப்பிடறேன்"

அதற்குள் ஒரு சிறு காகிதத்தை கிழித்து காற்றில் பறக்க விட்டு இருந்தான்.

ஆனந்த், "சிவா, எல்லா ஃப்ளோரிலும் காரிடோரில் இருக்கும் விண்டோஸ் எல்லாம் க்ளாஸ் போட்டு சீல் பண்ணி இருக்காங்க. வெளியே போக வழி இல்லாம புகை இங்கே வந்து இருக்கு. காத்து இப்போ ஈஸ்ட்-வெஸ்டா அடிக்குது. ஒவ்வொரு ஃப்ளோரிலும் பின்னாடி இருக்கும் காரிடோரின் தொடக்கத்திலும் கடைசிலயும் இருக்கும் விண்டோஸை மட்டும் உடைச்சா புகை ஈசியா வெளியே போயிடும். அதுக்கு அப்பறம் சைட் காரிடோர் வழியா போய் முன்னாடி இருக்கும் கார்டோரில் இருக்கும் விண்டோவையும் உடைக்கணும். அப்பத்தான் உள்ளே இருக்கறவங்க வெளியில் வர முடியும்"

சிவா, "ஆனந்த், இவ்வளவு இக்கட்டான சமயத்திலும் இவ்வளவு கூலா யோசிக்றீங்க? சரி ரெண்டு பேரைக் கூட்டிட்டு தர்ட் ஃப்ளோருக்குப் போறேன். நீங்க ஃபோர்த் ஃப்ளோரில் இருக்கும் விண்டோஸை உடைச்சுட்டு உங்க ஆஃபீஸுக்குப் போங்க" என்ற பிறகு கோபாலிடம், "மாமா அந்த பேமானிப் பசங்களை நீங்க கவனிச்சுக்கணும்"

கோபால், "தேவையே இல்லை. உங்க ஆளுங்களை முதல்ல வெளியே கூட்டிட்டு வரணும். அனேகமா செல்வி ஆஃபீஸில் பிடிச்ச மாதிரி இவர் ஆஃபீஸிலும் எலக்ட்ரிகல் வயர் மூலம் தீ பரவும். அவனுக ரெண்டு பேரையும் உள்ளே இருந்த வெளிய வர முடியாம செஞ்சா மட்டும் போதும். அப்படி தீ பரவலைன்னாலும் பரவால்லை" என்றபடி மொட்டை மாடியில் மற்ற ஒரு மூலையைக் காட்டி "அங்கே பாருங்க" என்றார். அங்கு கீழே இருந்த இரு அலுகலகங்களின் ஜெனரேட்டர்கள் இருந்தன. அருகில் ஒரு காலி கேன் இருந்தது. தொடர்ந்து, "அதைத் திறந்து அதில் இருக்கும் டீஸலை அந்தக் கேனில் உத்தி எடுத்துட்டுப் போய் ஆஃபீஸ் முழுக்க தெளிச்சு விட்டா போதும்"

முகத்தில் சிறிதாகப் பீதி பரவ ஆனந்த், "சிவா, என் மேல எதாவுது தப்பு இருந்தா இவர்கிட்டெ மட்டும் கம்ப்ளெயின் பண்ணிடாதீங்க"

சிவா இருவரைக் கூட்டிக் கொண்டு முகத்தில் கைக் குட்டையால் முகமூடி போல போட்ட பிறகு படிகள் இருக்கும் பாதைக்கு விரைந்தான். மூன்றாம் தளத்தின் பின் புறம் இருந்த காரிடோரின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த பிறகு அவனுடன் இருந்தவர் முன் புறத்தில் இருந்த காரிடோருக்கு விரைய சிவா செல்வியின் அலுவலகத்துக்குள் நுழைந்து அங்கு இருந்தவரை மேல் நோக்கிச் செல்லும் படி அழைத்தான்.

செல்வியை அழைத்துக் கொண்டு நான்காம் தளத்தை அடைந்த பிறகு சிவா, "செல்வி, நீ மேல மொட்டை மாடிக்குப் போய் பின்னாடி விங்க் வழியா கீழே போ. பின்னாடி விங்கில் நெருப்பு இல்லை. ஆனா பீதியில் அங்கே இருக்கறவங்களும் கீழே போகப் பாப்பாங்க. சீக்கிரமா உங்க அஃபீஸில் இருக்கறவங்களை கூட்டிட்டு போ"

செல்வி, "நீ என்ன செய்யப் போறே?"

சிவா, "எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீ போ"

செல்வி, "சிவா, என் கிட்டே என்ன மறைக்கறே?"

சிவா, "ஐய்யோ செல்வி, அந்த நந்தகுமாரோட ஸெல்ஃபோனைப் புடுங்கிட்டு வரப் போறேன். பேசிட்டு இருக்க இது நேரம் இல்லை. போ"

செல்வி, "வேணாம் சிவா. சுத்தியும் தீ பரவிட்டு இருக்கு. அவன் என்ன வேணும்னாலும் செஞ்சுகட்டும். நீ வா"

சிவா, "ப்ளீஸ் சொன்ன கேளு செல்வி. ஆனந்த் சார் ப்ரீதி மேடத்தை கூட்டிட்டு வர உள்ளே போயிருக்கார். அவங்களும் உள்ளே மாட்டிக்காம கூட்டிட்டு வரணும் இல்லையா. ப்ளீஸ் போம்மா"

அவனைத் திரும்பி பார்த்த படி செல்வி மேல் தளத்துக்கு விரைந்தாள். அவளை வழியனுப்பிய பிறகு ஷா ஸிஸ்டம் அலுவலகத்துக்கு விரைந்தான்.

அதுவரை ...

சிவா சென்ற பிறகு ஆனந்தும் மற்ற மூவருடன் அவ்வாறே நான்காம் தளத்தில் பின் பக்கத்துக் காரிடோரில் இரு மூலைகளிலும் இருந்த ஜன்னல் கண்ணாடிகளை உடைக்க விரைந்தான். காரிடோரில் இரு அணிகளாகப் பிரிந்து புகையினால் மூச்சடைத்தாலும் அதைப் பொருட் படுத்தாமல் இரு முனைகளிலும் இருக்கும் காரிடோரின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். நான்காம் தளத்தில் புகை சற்று குறைந்தது.

கோபால், "ஆனந்த், அவனுக கைல கன் இருக்கு. உள்ளே நிலைமை எப்படின்னு மொதல்ல தெரிஞ்சுக்கணும். அதனால நீங்க மட்டும் மொதல்ல உள்ளே போங்க. அதுக்கு முன்னாடி உங்க ஸெல்லுல என் நம்பரை டயல் செஞ்சு காலை கட் பண்ணாம பாக்கட்ல வெச்சுக்குங்க. உள்ளே பேசறதை வெச்சு சரியான சமயத்தில் நான் வர்றேன். ஓ.கே?"

ஆனந்த், "சரி. உங்க நம்பர் சொல்லுங்க"

கோபாலின் கைபேசியை அழைத்த பிறகு இணைப்பை துண்டிக்காமல் சட்டைப் பையில் வைத்த பிறகு உள்ளே நுழைந்தான். ப்ரீதி இருந்த கான்ஃபரென்ஸ் ரூம் மூடியபடி இருந்தது. விக்ரம் ஷாவின் கேபினுக்குள் நுழைந்தான். அங்கு விக்ரம் ஷாவும் நந்தகுமாரும் இருந்தனர்.

விக்ரம் ஷா, "You took your time. சரி, மொதல்ல ப்ரீதியை ஃபோனில் கூப்பிட்டு கதவை திறக்கச் சொல்லு"

ஆனந்த், "எதுக்கு?"

மேசையில் மேல் இருந்த துப்பாக்கியை கையில் எடுத்தபடி விக்ரம் ஷா, "ஏன் எதுக்குன்னு கேட்கும் நிலையில் நீ இல்லை. உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்ற பிறகு "அவன் கிட்டேயும் ஒண்ணு இருக்கு"

ஆனந்த், "என்ன? நீங்க கைல வெச்சு இருக்கறமாதிரி கன்னா? இப்போ எதுக்கு என்னை மிறட்டறீங்க?"

விக்ரம் ஷா, "ஆனந்த், போதும் உன் நாடகம். ப்ரீதி பேரில் நான் தொடங்கி இருக்கும் பினாமிக் கம்பெனியைப் பத்தி இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டில் நீ புகார் கொடுத்து இருக்கே. அதனாலதான் இந்த ரெய்டுன்னு எனக்கு தெரிஞ்சுருச்சு. ஸோ! அவங்க ரெய்ட் வரும் போது நீங்க ரெண்டு பேரும் இங்கே இருக்கக் கூடாது. நான் இன்னும் ரெண்டு நாளில் நாட்டை விட்டு போகப் போறேன். அதுவரைக்கும் அவங்க கண்ணில் படாம இருக்க ஒரு ஏற்பாடு செஞ்சு இருக்கேன். மரியாதையா சொன்னபடி கேளு. இல்லைன்னா உன் காதலியை உயிரோட பார்க்க முடியாது"

ஆனந்த், "சரி, எக்ஸ்டென்ஷன் நம்பர் என்ன?" என்றபடி மேசையில் இருந்த இன்டர்காம் தொலைபேசியை எடுத்தான்.

விக்ரம் ஷா, "407" என்றபிறகு தொடர்ந்து, "ஏன் உன் ஸெல் ஃபோனுக்கு என்ன ஆச்சு?"

ஆனந்த், "சார்ஜ் தீந்து போச்சு"

எதிர்முனையில் ப்ரீதி, "ஹல்லோ"

ஆனந்த், "ப்ரீதி, கதவை திற நான் வரேன்"

ப்ரீதி மேலும் எதுவும் சொல்வதற்குமுன் விக்ரம் ஷா அந்த இணைப்பை துண்டித்த பிறகு, "நந்தகுமார். நீ அந்த ரூமுக்குப் போய் அங்கே வெய்ட் பண்ணு"

ஆனந்த், "நோ! இவன் மேல எனக்கு நம்பிக்கை இல்லை. நானும் போறேன்"

விக்ரம் ஷா, "நீ போ நந்தகுமார்" என்று அவனை அனுப்பிய பிறகு தொடர்ந்து, "எனக்கு அவன் சபலப் புத்தியைப் பத்தி நல்லா தெரியும். டோண்ட் வொர்ரி ஆனந்த். இந்த சமயத்தில் அவன் ஒண்ணும் செய்ய மாட்டான். நான் கியாரண்டி. நான் உன் கிட்டே கொஞ்சம் பேசணும்"

ஆனந்த், "என்ன பேசணும்?"

விக்ரம் ஷா, "என்னன்னு புகார் கொடுத்து இருக்கே? அந்தக் கம்பெனியைப் பத்தி உனக்கு எப்படி தெரிஞ்சுது?"

ஆனந்த், "அவகூட பேசிட்டு இருந்தப்ப அவ சாலரி வேற கம்பெனியில் இருந்து வருதுன்னு சொன்னா. நான் அவளை கல்யாணம் செஞ்சுக்கப் போறேன். விஸா வாங்கணும்ன்னா அவளோட ஃபினான்ஷியல் பேக்ரவுண்ட்டைப் பத்தி விவரம் கொடுக்கணும். எங்க மாமா இங்கே ஸ்டாக் ப்ரோக்கரா இருக்கார். அவர் ஒரு ஆடிட்டரும் கூட. உங்க கிட்டே கேட்டா நீங்க கொடுப்பீங்களான்னு தெரியலை. அதனால அவர்கிட்டே விவரம் கலெக்ட் பண்ணி கொடுக்கச் சொன்னேன். அப்போ அவர் அந்த கம்பெனியில் சில சந்தேகப் படற மாதிரி ட்ரான்ஸாக்ஷன்ஸ் இருக்குன்னு சொன்னார். அதனால் ப்ரீதிக்கும் அந்த கம்பெனியில் நடப்பதுக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லைன்னு புகார் கொடுத்து இருக்கோம்"

விக்ரம் ஷா, "அதை அவங்க நம்புவாங்களா? Any how. அந்தக் கம்பெனி சம்மந்தப் பட்ட டாக்யுமெண்ட்ஸ் எல்லாத்தையும் எரிச்சாச்சு. அவங்கனால எதையும் ப்ரூவ் பண்ண முடியாது. ப்ரீதிக்கு எந்த விதமாத தொந்தரவும் வராது"

ஆனந்த், "எரிச்சாச்சா? எப்போ எரிச்சீங்க?"

விக்ரம் ஷா, "நந்தகுமார் மத்தியானம் எல்லாத்தையும் கீழே பேஸ்மெண்டுக்கு எடுத்துட்டுப் போய் அங்கே இருக்கும் இன்ஸினரேட்டருக்குப் பக்கத்தில் இருந்த ட்ரம்மில் போட்டு எரிச்சுட்டான்"

ஆனந்த், "உங்க அஸிஸ்டண்டை நீங்கதான் மெச்சிக்கணும். அவன் டாக்யுமெண்ட்ஸை எரிக்கறதுக்கு பதிலா கட்டிடத்துக்கே தீ வெச்சு இருக்கான். வெளியில் முழுக்க புகை. இங்கே இருந்து எப்படி போறதா உத்தேசம்"

விக்ரம் ஷா, "என்ன சொல்லறே?"

ஆனந்த், "எஸ்! கீழே there is a raging fire காரிடோர் எல்லாம் புகை மண்டலம்"

விக்ரம் ஷா, "அப்படின்னா நீ எப்படி வந்தே?"

ஆனந்த், "பின்னாடி விங்கில் உங்க ஃப்ளாட்டுக்குப் போயிட்டு அங்கே இருந்து வந்தேன்"

தன் திட்டம் தவிடு பொடியாவதை அவர் உணந்ததை அவர் முகம் காட்டியது. இருப்பினும் தன் கையில் துப்பாக்கி இருக்கும் கர்வத்தில் விக்ரம் ஷா, "சோ? என்ன செய்யப் போறே?"

ஆனந்த மேற்கொண்டு பேசுவதற்குள் கோபால் தன் அடியாட்கள் இருவருடன் அந்த அறைக்குள் நுழைந்தான்.

விக்ரம் ஷா, "யார் நீங்க? இங்கே எதுக்கு வந்தீங்க?"

விக்ரம் ஷாவின் கையில் இருந்த துப்பாக்கியை சில கணங்கள் உற்று நோக்கிய கோபால் விரைவாக அவர் அருகே சென்றான்

விக்ரம் ஷா, "ஏய் மேன். என் கையில் இருக்கறது என்னன்னு தெரியும் இல்லை?"

கோபால், "தெரியுண்டா பேமானி" என்றபடி விக்ரம் ஷாவை ஓங்கி அறைந்தான். தடுமாறி விழாமல் சமாளித்து துப்பாக்கியை உயர்த்திய விக்ரம் ஷா கோபாலை சுட முயல துப்பாக்கி இயங்க மறுத்தது.

கோபால் விக்ரம் ஷாவின் கையைப் பற்றி முறுக்கி துப்பாக்கியை பிடுங்கிய பிறகு, "துப்பாக்கி சுடணும்ன்னா மொதல்ல ஸேஃப்டி லாக்கை ஓபன் பண்ணனுண்டா பொறுக்கி"

உடன் இருந்தவர்கள் விக்ரம் ஷாவைப் பற்றி ஒரு மூலைக்கு இழுத்துச் சென்றனர்.

கோபால், "அந்த நந்தகுமார் எங்கே சார்?"

ஆனந்த், "வாங்க அவனைக் கூட்டிட்டு வரலாம்"

அடியாட்கள் இருவரும் விக்ரம் ஷாவுக்கு காவல் இருக்க கோபால் ஆனந்துடன் விரைந்தான்.



அந்தக் கான்ஃபரென்ஸ் ரூமுக்குள் நுழைந்ததும் உள்ளே முதுகு காட்டியபடி நின்று கொண்டு ப்ரீதி விசும்பிக் கொண்டு இருக்க அவள் அருகே நின்று இருந்த நந்தகுமார் ஒரு கையில் துப்பாக்கியை ஏந்தியபடி மறுகையால் அவள் முதுகை தடவ முயன்று கொண்டு இருந்தான். உள்ளே வந்தவர்களைக் கண்டதும் விலகி துப்பாக்கியை உயர்த்தியபடி, "ஆனந்த், கிட்டே வந்தே உன் ஆள் க்ளோஸ். ஞாபகம் வெச்சுக்கோ"

ஆனந்த் கோபாலை நோக்க கோபால், "நீங்க உங்க ஆளைக் கூட்டிட்டு வெளில போங்க ஆனந்த்"

நந்தகுமார், "டேய், கிட்டே வராதே"

ஆனந்த் ஒரு புறம் ப்ரீதியை அணுக கோபால் நந்தகுமாரிடம் சென்றான். நந்தகுமார் துப்பாக்கியை உயர்த்தி சுட முயல. அது இயங்க மறுத்ததை உணர்ந்து முகத்தில் பீதி படற விழித்தான்.

கோபால், "பாஸுக்கு ஏத்த அடியாள்" என்றபடி சரமாறியாக அவனை அறைந்தான். பிறகு அவனிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கினான்.

ஆனந்த் அருகில் வந்ததும் அவனை இறுக்கி அணைத்து அவன் மார்பில் முகம் புதைத்து விசும்பிய ப்ரீதியிடம், "சாரி ஹனி. ரெண்டு நிமிஷம். நான் வரதுக்குள்ளே இந்த ராஸ்கல் .. "

ப்ரீதி, "He tried to grop me. நான் பின்னாடி திரும்பிண்டேன். முதுகை தடவினான்"

ஆனந்த், "சரி வா போலாம்" என்றபடி அவளை அழைத்துக் கொண்டு அந்த அறைக்கு வெளியே வர எதிரில் சிவா வந்து கொண்டு இருந்தான்.

சிவா, "இந்த ஆஃபீஸிலும் மூலையில் நெருப்பு பிடிச்சு இருக்கு"

ப்ரீதி, "ஐய்யையோ. ஆனந்த்? என்ன ஆச்சு?"

ஆனந்த், "There is fire down stairs and it is spreading. வா சீக்கரம்" பிறகு தொடர்ந்து, "சிவா, நந்தகுமாரை கோபால் கவனிச்சுட்டு இருக்கார். அவன் ஸெல் ஃபோனை பிடுங்கி அதில் இருக்கும் மெமரி கார்டை எடுங்க. நான் ப்ரீதியை வெளியில் விட்டுட்டு வரேன்"

ப்ரீதியை அழைத்துக் கொண்டு பின் புறத்தில் இருந்த காரிடோருக்கு வர அங்கு முன்பு இருந்த அளவுக்கு அடர்ந்த புகை இல்லையேனும் இன்னமும் அந்தக் காரிடோர் புகை மண்டலமாக இருந்தது.

ஆனந்த், "ப்ரீதி, ஹாங்கியை வெச்சு மூக்கையும் வாயையும் மூடிண்டு படி வழியா டெரேஸுக்குப் போய் பின்னாடி விங்கில் கீழே வந்து இந்த பில்டிங்கின் முன் கேட்டுக்கு வா. ஒரு CRPF ஜீப்பில் வந்தனா ராத்தோட்-சக்திவேல் அப்படின்னு ஒரு R&AW ஆஃபீஸர் வருவாங்க. அனேகமா உன்னை அவங்க இங்கே என்ன நடக்குதுன்னு விசாரிக்கலாம். அந்த ஹார்ட் டிஸ்கை எப்படியாவுது எடுத்துட்டு வரதுக்காக நான் போயிருக்கறதா மட்டும் சொல்லு"

ப்ரீதி, "நீ எடுத்துண்டு வர வரைக்கும் நான் வெய்ட் பண்றேனே?"

ஆனந்த், "சொன்னா கேளு. நீ மொதல்ல போ. Besides, கீழ் ஃப்ளோரில் மாட்டிண்டு இருக்கவாளுக்கு ஹெல்ப் பண்ணப் போறேன்"

ப்ரீதி, "பத்தரம் ஆனந்த். நேக்கு பயமா இருக்கு"

ஆனந்த், "டோண்ட் வொர்ரி. நான் வந்துடுவேன். நீ போ சீக்கிரம்" என்று அவளுக்கு விடை கொடுத்து மறுபடி அலுவலகத்துள் நுழைந்தான். உள்ளே பற்றி இருந்த தீயால் அலுவலகத்தில் புகை பரவத் தொடங்கி இருந்தது. கோபாலின் அடியாட்களில் ஒருவன் கொண்டு வந்து இருந்த கேனில் இருந்த டீஸலை பரவலாகத் தெளித்துக் கொண்டு இருந்தான். விக்ரம் ஷாவின் கேபினுக்குச் சென்ற ஆனந்த் அங்கு விக்ரம் ஷாவும் நந்தகுமாரும் ஒரு மூலையில் நின்று கொண்டு இருக்க எதிரில் கோபாலும் அவனது அடியாள் ஒருவனும் துப்பாக்கி ஏந்தி நின்று இருந்தனர்.

ஆனந்த், "சிவா, என்ன ஆச்சு அந்த மெமரி கார்ட்?"

சிவா, "கொடுத்துட்டான். நீங்க உங்களுக்கு தேவையானதை எடுத்துட்டீங்களா?"

கோபால், "சீக்கரம் சார். இன்னும் கொஞ்ச நேரத்தில் தீ பரவிடும்"

ஆனந்த், "ரெண்டு நிமிஷம்" என்ற படி மேசையின் ஒரு மூலையில் இருந்த விக்ரம் ஷாவின் லாப் டாப்பை எடுத்தான்

விக்ரம் ஷா, "ஹூம் ... அது க்ரேஷ் ஆகி இருக்கு. அதில் இருந்து உனக்கு ஒண்ணும் கிடைக்காது"

ஆனந்த், "பரவால்லை மிஸ்டர் ஷா. கிடைக்கறதை எடுத்துக்கறேன்" என்ற படி தன்னிடம் இருந்த பல அமைப்புகள் கொண்ட ஸ்விஸ் ஆர்மி நைஃபில் (Swiss Army Knife) இருந்த ஸ்க்ரூ ட்ரைவர் அமைப்பை அந்த லாப் டாப்பின் அடியில் இருந்த ஸ்க்ரூக்களை அகற்றிய பிறகு உள்ளே இருந்த ஹார்ட் டிஸ்க்கை கழட்டி எடுத்தான்.

ஆனந்த், "ஓ.கே கோபால். ஆல் டன்"

அப்போது விக்ரம் ஷாவின் கைபேசி ஒலித்தது. கோபால் அதை எடுத்து ஸ்பீகர் ஃபோனை இயக்கியவாறு விக்ரம் ஷாவிடம், "ம்ம்ம் ... அன்ஸர் பண்ணு"

விக்ரம் ஷா, "என்ன அமரீஷ்?"

எதிர்முனையில் அவர்கள் பிரபாகரை கொல்ல நியமித்த அமரீஷ் என்ற பிரபலமான ரவுடி பேசுவதைக் கேட்டு நந்தகுமாரின் முகம் வெளுத்தது. காலையில்தான் விக்ரம் ஷா அன்று செய்ய வேண்டிய வேலைகளுக்கு அமரீஷை பயன் படுத்த வேண்டாம் என்று அவனிடம் சொல்லி இருந்தது அவன் மனதில் எதிரொலித்தது.

அமரீஷ், "இன்னா சார்? அந்த நந்தகுமாரை கூட்டிட்டு போய் காரியத்தை முடிக்க உங்க ஃப்ளாட்டு முன்னாடி வெய்ட் பண்ண சொன்னீங்க. இப்போ உங்களை காணோம்? உங்க ஆஃபீஸ் பில்டிகில் நெருப்பு பிடிச்சு இருக்குன்னு எல்லாரும் பேசிக்கறாங்க?"

விக்ரம் ஷா நந்தகுமாரை ஓரக் கண்ணால் பார்த்த படி, "ஆமாம் அப்படித்தான் தெரியுது. ஆஃபீஸுக்கு உள்ளே இருந்ததால இவ்வளவு நேரமா எங்களுக்கு தெரியலை"

அமரீஷ், "இன்னா உங்களுக்கு வெய்ட் பண்ணட்டுமா? இல்லே நான் சொன்ன மாதிரி அவனை நைட்டு பாரில் வெச்சு காரியத்தை முடிக்கட்டுமா?"

விக்ரம் ஷா, "நீ என் ஆஃபீஸுக்கு .. " என்று சொல்ல முயலுவதற்குள் கோபால் அந்த இணைப்பை துண்டித்தான்.

கோபால், "அமரீஷை எங்களுக்கும் தெரியும். என் மச்சானைப் போட்டுத் தள்ளறதுக்கு அவனைத்தான் யூஸ் பண்ணினையா?"

விக்ரம் ஷா மௌனம் காக்க முகத்தில் பீதி பரவ நந்தகுமார், "சார், சிவா, ப்ளீஸ்! என்னை ஒண்ணும் செஞ்சுடாதீங்க!! இவரு பண்ணின வண்டவாளம் எல்லாம் எனக்குத் தெரியும். போலீஸில் இவரை பிடிச்சுக் கொடுத்துடலாம். நான் அப்ரூவரா மாறிக்கறேன். இவரோட பணத்தை எல்லாம் என்னால ஆக்ஸஸ் பண்ண முடியும் நிறைய பணம் உங்களுக்கு எடுத்துக் கொடுக்கறேன்"

விக்ரம் ஷா, "அமரீஷும் இவனும் சேந்துதான் பிரபாகரை போட்டுத் தள்ளினாங்க. ப்ளீஸ் இவனால ஒண்ணும் பண்ண முடியாது. இன்னைக்கு காலைல நான் எல்லா பாஸ்வர்டையும் மாத்திட்டேன். இவனால எதையும் ஆக்ஸஸ் பண்ண முடியாது. அந்த பிரபாகரைப் போட்டுத் தள்ளனும்ன்னு ஐடியா கொடுத்தவனே இவன்தான். ப்ளீஸ் என் மனைவி குழந்தைங்க எல்லாம் எனக்காக ஹாங்க் காங்கில் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க"

நந்தகுமார், "இல்லை சார். இவரு காசு சம்பாதிக்கறதுக்காக கட்டின பொண்டாட்டியை ஃபாரினர்ஸுக்கு கூட்டிக் கொடுத்தாரு. அந்தப் பொம்பளை இவரு கூடப் படுத்ததை விட என் கூடவும் இவரே கூட்டிக் கொடுத்த ஃபாரினர்ஸ்கூடத்தான் ரொம்ப படுத்து இருக்கு. நாங்க ஹாங்க் காங்க் போனதும் இவரை டைவர்ஸ் பண்ணிட்டு என் கூட பர்மனெண்டா செட்டில் ஆகறேன்னு சொல்லி இருக்கு"

பேயறைந்த முகத்துடன் சற்று நேரம் வெறித்துப் பார்த்த விக்ரம் ஷா வாய் விட்டு அழத் தொடங்கினார்.

கோபால், "திருடனுக்கு திருடன் தோணை போனா இப்படித்தான்" என்ற பிறகு தன் அடியாளிடம், "அவனுக கையை மட்டும் அந்த பேக்கிங்க் டேப் போட்டு முதுகுக்குக் பின்னால கட்டு. ஒருத்தனுக்கு ஒருத்தன் உதவி பண்ணினா தப்பிச்சுக்கட்டும்"

அந்த அடியாட்கள் அவர்கள் இருவரின் கைகளை பின்னால் பாக்கிங்க் டேப்பால் கட்டினர்.

கோபால், "வாங்க போலாம்"

அடியாட்களில் ஒருவன், "கோபால், அவனுக ஸெல்ஃபோன்"

கோபால், "இதெல்லாம் தனியா சொல்லணுமா. ஒரு மூலையில் அது ரெண்டையும் போட்டு அதுக்கு நெருப்பு வெச்சுட்டு வா"

விக்ரம் ஷா, "வேண்டாம். ஆனந்த். நீ அதை எடுத்துட்டுப் போ. நான் தகவல் திருடி வித்த சைனீஸ் கம்பெனியின் கான்டாக்ட் டீடெயில்ஸ் அதில் இருக்கு. உனக்கு உதவும்"

சில கணங்கள் அவரது மன மாற்றத்தில் மலைத்த ஆனந்த், "ஆர் யூ ஷ்யூர்?"

விக்ரம் ஷா, "Yes. I have learned my lesson. At least you can save your skin. I am so sorry"

அந்த கைபேசியை எடுத்துக் கொண்டு மற்றவருடன் ஆனந்த் வெளியில் விரைந்தான். வெளியில் வந்தபிறகு கோபாலின் அடியாட்கள் விக்ரம் ஷாவின் அறையை பூட்டி அதன் சாவியை ஒரு மூலையில் வீசினர்.

ஆனந்த், "கோபால், அந்த ஆளைப் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு"

கோபால், "இத்தனை நாளா கூட வேலை செஞ்சவனையே போட்டுத் தள்ள ஆள் செட் அப் செஞ்சவன் சார் அவன். அவன் நிலைமையில் நீங்க இருந்தா ஒரு நிமிஷம் கூட யோசிக்காம உங்களை ஏறி மிதிச்சுட்டுப் போயிருப்பான். பேசாம வாங்க"

பின் புறத்துக் காரிடோருக்கு வந்த பிறகு

சிவா, "மாமா, நீங்க எல்லாம் போங்க. பில்டிங்கில ரெண்டாவுது மாடியிலும் எல்லாம் இன்னும் ஆளுங்க அடைஞ்சு இருக்காங்க. நான் போயி அங்கே இருக்கும் விண்டோஸையும் உடைச்சுட்டு எல்லாரையும் வெளியில் கொண்டு வரப் போறேன்"

ஆனந்த், "வெய்ட் சிவா நானும் வரேன்"



இருவரையும் சில கணங்கள் உற்று நோக்கிய கோபால், "சிவா, சீக்கரம் வீட்டுக்குப் போ. நாளைக்கு காலையில் பிரபாகர் பாடி எடுக்கும் போது நீதான் தீச்சட்டி எடுக்கணும்ன்னு அக்காவும் மாமாவும் முடிவு செஞ்சு இருக்காங்க. யாராவுது விக்ரம் ஷா நந்தகுமாரைப் பத்தி உங்களை விசாரிச்சா. உங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லிடுங்க. யாரோ அடியாளுங்க அவரை மிறட்டிட்டு இருந்தப்ப உங்களுக்கு தேவையான பொருளை நீங்க எடுத்துட்டு வந்துட்டீங்கன்னு சொல்லுங்க"

சிவா, "மாமா, அப்போ நீ மாட்டிக்கப் போறியா?"

கோபால், "இல்லை. இந்த சமயத்தில் நான் இங்கே இருக்கக் கூடாதுன்னுதான் ஃபியூனரலுக்குக் கூட இருக்காம ஊருக்குப் புறப்படறேன். மாமாகிட்டே ஃபோனில் சொல்லிக்கறேன். இன்னும் ஆறு மணி நேரத்தில் நான் நெல்லூரில் இருப்பேன். நான் நெல்லூரை விட்டு எங்கேயும் போகலைன்னு சாட்சி சொல்ல ஆளுங்க இருக்காங்க. சீ யூ ஆனந்த். இந்தியாவை விட்டு போறதுக்கு முன்னாடி ஒரு தடவை நெல்லூருக்கு வாங்க" என்ற படி விடை பெற்றான்.

ஆனந்தும் சிவாவும் கீழ் தளங்களுக்கு விரைந்தனர் ...

No comments:

Post a Comment