Wednesday, June 24, 2015

ஐ ஹேட் யூ, பட்.. - அத்தியாயம் - 7

புகழ்ச்சியை 'போதை' என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. கண்ணை மறைக்க கூடியது அது. புத்தியை மழுங்கடிக்க செய்வது அது. ப்ரியாவுக்கு தன்னை யாராவது புகழ்ந்தால் மிகவும் பிடிக்கும். அடுத்தவர்கள் தன்னை பற்றி பெருமையாக பேசும்போது அவளுடய மனதிலும், உடலிலும் பரவுகிற அந்த பரவசம் பிடிக்கும். சிறியதொரு பாராட்டுக்கே சிட்டென விண்ணில் பறக்க ஆரம்பித்து விடுவாள். ஆயிரம் பேர் கூடியுள்ள அரங்கில், அத்தனை பெரும் அவளுக்காக கைகள் தட்டினால் என்ன ஆவாள்..?? அருகில் இருக்கும் அசோக்கை மறந்து போவாள்..!!

'தான்' என்ற எண்ணம் தகாத கிருமிக்கு ஒப்பானது. அன்பென்ற தூய்மையான பாலை திரித்து விட கூடியது அது. வலுவான உறவில் கூட விரிசலை ஏற்படுத்தி விடும் வல்லமை கொண்டது அது. அந்த கைதட்டல்கள் எல்லாம் 'தனக்கு கிடைக்க வேண்டியவை' என்ற எண்ணம் அசோக்கின் மனதுக்குள் கிருமியென கிளம்பி, அவன் ப்ரியா மீது வைத்திருந்த அன்பென்ற பாலில் சென்று விழுந்தது. தன்னுடன் இருப்பவர்கள் மத்தியில் தன் கையே ஓங்கியிருக்க வேண்டும் என்று நினைப்பவன் அவன். தன்னை சுற்றி நடக்கிற சம்பவங்கள் பிடிக்காத பாதையில் பயணிக்கையில், தான் விரும்புகிற பாதைக்கு திருப்பிவிட துடிப்பவன். தனது உழைப்புக்கு மற்றொருவருக்கு பெரும்பாராட்டு என்ற அதிர்வு.. அத்தனை நாளாய் தனது கைக்குள் இருந்த ப்ரியா, தன்னை மீறி செல்வது போன்றதொரு உணர்வு.. இவைகளுடன் அவள் இவனை கண்டுகொள்ளவில்லை என்கிற நினைவும் சேர்ந்து கொண்டால் என்ன செய்வான்..?? அவளை விட்டு விலகி நடப்பான்..!!

விலகி நடந்த அசோக், மீட்டிங் ஹாலில் இருந்து வெளிப்பட்டதுமே விடுவிடுவென சென்று தனது க்யூபிக்கலில் அமர்ந்து கொண்டான். இன்னும் மீட்டிங் முடிந்து யாரும் திரும்பியிருக்காத நிலையில், அந்த தளத்தில் அவன் மட்டுமே இப்போது தனித்திருந்தான். சிஸ்டம் முன் அமர்ந்து கீ போர்டில் எதையோ நோக்கமில்லாமல் தட்டினான். அவனுடைய மனதை ஒரு இனம்புரியாத அழுத்தம் நிரப்பியிருந்தது. ஐந்தரை வருடங்களாக ப்ரியாவுடனான நட்பில், இப்படி ஒரு அசாதாரண சூழ்நிலையை அவன் இப்போதுதான் சந்திக்கிறான். இந்த மாதிரியான சூழ்நிலைக்கு அவன் தயாராயிருக்கவில்லை. எப்படி இதை கடந்து செல்வது என்றும் அவன் புத்திக்கு பிடிபடவில்லை.




அவன் வந்து அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே, மீட்டிங் சென்றவர்கள் ஒவ்வொருவராய் வேலைக்கு திரும்ப ஆரம்பித்தார்கள். அமைதியாயிருந்த தளம் கொஞ்சம் கொஞ்சமாய் சலசலவென பேச்சு சப்தத்தால் நிரம்ப ஆரம்பித்தது. ப்ரியாவும் சிறிது நேரத்திலேயே வந்து சேர்ந்தாள். அசோக்குடைய இடத்திற்கு சென்றவள், அவளுடைய குரலில் கொஞ்சம் கோவம் தொனிக்கவே கேட்டாள்.

"என்னடா.. இங்க வந்து உக்காந்துட்டு இருக்குற..?? உன்னை எங்கல்லாம் தேடுறது..??"

"ஏன்.. எங்க தேடுன..??" அசோக் மானிட்டரை வெறித்தவாறே அமைதியாக கேட்டான்.

"அ..அங்க.. மீட்டிங் ஹால்ல..!!"

இப்போது அசோக் தன் தலையை திருப்பி, ப்ரியாவை ஏறிட்டு சலனமில்லாமல் ஒரு பார்வை பார்த்தான். 'தேட வேண்டிய வேளையில் தேட மறந்துவிட்டு.. நான் தொலைந்து போனபின் தேடிப்பார்த்தாயோ பேதைப்பெண்ணே..??' என்பது போல இருந்தது அவனது பார்வை. அப்புறம் அந்தப்பார்வை சற்றே தாழ்ந்து, ப்ரியாவின் கையிலிருந்த அந்த நினைவுப்பரிசின் மேல் படிந்தது. முழுக்க முழுக்க பளிங்கினால் உருவாக்கப்பட்டிருந்தது அது.. அறுங்கோணப் பட்டகத்தின் மேலே அமைந்த பூகோள உருண்டை..!! பளீரிட்டது..!! அதைப் பார்க்கையில் அவன் மனதில் இருந்த அழுத்தம் சற்று அதிகரித்ததை அவனால் உணர முடிந்தது. தனது உழைப்பு அவளது கைப்பிடிக்குள் அகப்பட்டிருக்கிறது என்று தோன்றியது. ஆனால் அதை குரலில் காட்டாமல் இயல்பாகவே அசோக் சொன்னான்.



"இல்ல ப்ரியா.. எனக்கு கொஞ்சம் வேலை இருந்தது.. அதான் உடனே வந்துட்டேன்..!!"

"ஓ..!! இன்னைக்கு முடிக்கனுமா..??" ப்ரியாவின் பார்வை இப்போது மானிட்டரில் விழுந்தது.

"அப்படி இல்ல.. பட்.. கொஞ்சம் க்ரிட்டிக்கல் வொர்க்.. சொல்லு..!!"

"ம்ம்.. ஒண்ணுல்ல.. நான் அவார்ட் ரிஸீவ் பண்ண போறப்போ நீ இருந்த.. திரும்ப வந்தப்போ உன்னை காணோம்..!! அதான்.. நான் அவார்ட் வாங்குனதை நீ பாத்தியா இல்லையான்னே எனக்கு தெரியலை..!!"

"ஹ்ம்ம்.. பார்த்தேன் ப்ரியா.. நல்லா கண்ணு குளிர பாத்தேன்..!! அதுக்கப்புறம் நீ கொஞ்சம் பிஸியா இருந்த.. அதான் நான் கெளம்பி வந்துட்டேன்..!!"

அசோக் சற்று எரிச்சலாகத்தான் சொன்னான். ஆனால்.. அவள் அவார்ட் வாங்கியதை அவன் பார்த்திருக்கிறான் என்று அறிந்து கொண்டதுமே, ப்ரியாவின் முகம் விளக்கு போட்டது மாதிரி மீண்டும் பிரகாசமானது. அவளுடைய குரலிலும் இப்போது ஒரு தனி உற்சாகம்..!! திடீரென குழந்தையாக மாறிப் போனவளாய் குஷியாக பேச ஆரம்பித்தாள்.

"ஹை.. பாத்தியா நீ..??? ஹ்ம்ம்ம்... இன்னைக்கு நான் எவ்வளவு ஹேப்பியா இருக்கேன் தெரியுமா அசோக்..?? சான்ஸே இல்ல.. அப்படியே ஜிவ்வுன்னு பறக்குற மாதிரி இருக்குடா..!! இந்த மாதிரி ஒரு ரெகக்னைஸேஷன்.. என் லைஃப்ல இதுதான் எனக்கு ஃபர்ஸ்ட் டைம்..!! சுத்தி ஆயிரம் பேர் கை தட்ட.. நான் ஸ்டேஜ்க்கு நடந்து போனது.. ஹப்பா.. இட் வாஸ் அமேஸிங் யு நோ..?? அப்படியே மிதக்குற மாதிரி இருந்தது அசோக்...."

ப்ரியா பேசிக்கொண்டே போனாள். அந்த சம்பவம் அசோக்கிடம் ஏற்படுத்தியிருந்த மாற்றத்தை அவள் அறிந்து கொண்டிருக்கவில்லை. அவனுடைய அப்போதைய மன நிலையையும் அவள் உணர்ந்து கொண்டதாய் தெரியவில்லை. அவளைப் பொறுத்தவரை நடந்து முடிந்தது ஒரு இயல்பான, சந்தோஷமான விஷயம். அதனால்தான் கண்களில் ஒரு பிரகாசமும், முகத்தில் மலர்சியுமாய் அப்படி அவளால் பேசமுடிந்தது.

ஆனால் அவளுடைய பேச்சு அசோக்கிடம் வேறுவிதமான விளைவை ஏற்படுத்தியது. அவனுடைய உள்ளத்து நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பது போலிருந்தது. ப்ரியா பேச பேச அவனுக்கு மூளை நரம்புகள் வலி எடுப்பது மாதிரி ஒரு உணர்வு. கண்களை சுருக்கி, தலையை பிடித்துக் கொண்டான். அதை கவனித்துவிட்ட ப்ரியா, தனது பேச்சை பட்டென நிறுத்தி, இப்போது கனிவான குரலில் கேட்டாள்.

"ஹேய்.. எ..என்னடா ஆச்சு..??"

"ஒ..ஒண்ணுல்ல ப்ரியா..!!"

"இ..இல்ல.. உன் முகமே சரி இல்ல.. என்னாச்சு..??"

"ப்ச்.. ஒண்ணுல்லன்றன்ல.. லைட்டா தலை வலிக்குது.. வேற ஒன்னும் இல்ல..!!"

"ஓ..!! என்கிட்டே டேப்லட் இருக்குது.. எடுத்து தரவா.. போட்டுக்குறியா..??" ப்ரியாவின் அன்பான குரல்.

"வேணாம் வேணாம்.. நான் அல்ரெடி போட்டுட்டேன்.. இப்போ பரவால..!!"

"ஓகே ஓகே..!! ம்ம்ம்ம்ம்...!!" ஒரு சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே கனிவாக பார்த்தவள், அவன் சற்று இயல்புக்கு திரும்பவும்,

"சரி.. இந்தா..!!"

என்று இயல்பான குரலில் சொல்லிக்கொண்டே, தன் கையிலிருந்த பளிங்குப் பொருளை அசோக்கிடம் நீட்டினாள். அசோக் இப்போது புரியாமல் ப்ரியாவை ஏறிட்டான். நெற்றியை சுருக்கியவாறு கேட்டான்.

"எ..என்ன இது..??"

"ஹ்ஹ.. எனக்கு தந்த அவார்ட்-டா.. அம்மாவோட டேலன்ட்டை பாத்து அசந்து போய் அவங்க தந்தது..!! ஹாஹா.. ஆக்சுவலா உனக்குத்தான இது கெடைச்சிருக்கணும்..? நீதான அந்த காம்பனன்ட் ஃபுல்லா ரீ-டிசைன் பண்ணின..? அது தெரியாம அவங்க எனக்கு தூக்கி குடுத்துட்டாங்க..!! ஹாஹாஹாஹா..!! ஹ்ம்ம்.. எனிவே.. நீதான் இதை வச்சிருக்க டிசர்வ்டான ஆளு.. இந்தா.. வச்சுக்கோ..!!"

ப்ரியா உதட்டில் வழியும் புன்னகையுடனே சொல்ல, அசோக் இப்போது மீண்டும் ஒருமுறை அந்த நினைவுப் பரிசின் மீது பார்வையை வீசினான். 'ஒரு ஐநூறு ரூபாய் பெருமானம் இருக்குமா இது..?? இதை கொண்டு சென்று, என் வீட்டு கண்ணாடி அலமாரியில் பூட்டி வைப்பதால், இப்போது என்ன ஆகி விடப் போகிறது..?? ஆண்டுக்கு இரண்டு ஜோடி புதுக்கண்களில் இது படுவதே அபூர்வம்..!! ஆயிரம் பேர் கை தட்ட நடந்து சென்று இதை வாங்கிக் கொள்வதற்கு நிகராகுமா..??'

"என்னடா..??" ப்ரியா அசோக்கின் மனநிலை புரியாமல் கேட்டாள்.

"இல்ல ப்ரியா.. வேணாம்..!!"

"ஏன்..??"

"உனக்குத்தான குடுத்தாங்க.. நீயே வச்சுக்கோ..!!" அசோக் இறுக்கமான குரலில் சொல்ல, ப்ரியாவின் முகம் இப்போது மீண்டும் பிரகாசமானது.

"நெஜமாத்தான் சொல்றியா அசோக்.. நானே வச்சுக்கவா..??"

"வச்சுக்கோ ப்ரியா..!!"

"உனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே..??"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல..!!"

"வாவ்.. தேங்க்ஸ்டா.. தேங்க்ஸ் எ லாட்..!! எங்க இதை நீ புடுங்கிக்குவியோன்னு நெனச்சேன்.. ஹாஹாஹாஹா..!! ஹ்ம்ம்ம்... இதை என் டாடிட்ட போய் காட்டனும்.. இதை பாத்தா அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார் தெரியுமா..??"

ப்ரியா குழந்தை போல குதுகலமாக சொல்ல, அசோக் சற்றே விரக்தியாக புன்னகைத்தான். கையிலிருந்த அந்த பொருளையே சில வினாடிகள் ஆசையாக பார்த்த ப்ரியா, அப்புறம் அசோக்கை ஏறிட்டாள். 'என் மீது இவனுக்கு எவ்வளவு அன்பு..' என்று அவளுடைய மனதுக்குள் ஒரு பெருமிதம்..!! ஸ்னேஹமாக புன்னகைத்தாள். அப்புறம் முகத்தில் திடீரென மெலிதாக நாணம் மிளிர, தயக்கமாய் கேட்டாள்.

"வீ..வீட்டுக்கு கெளம்பலாமா அசோக்.. நீ பைக்ல ட்ராப் பண்றியா..??"

"இ..இல்ல ப்ரியா.. நீ கம்பனி பஸ்ல கெளம்பு.. இதை இன்னைக்கு முடிக்கணும்..!!" அசோக் பொய் சொன்னான்.

"இப்போதான் இன்னைக்கு முடிக்கனுமான்னு கேட்டதுக்கு இல்லன்னு சொன்ன..??"

"அ..அது.. அது வந்து.. இன்னைக்கு ஃபிக்ஸ் பண்ணி முடிக்கணும்.. நாளைக்கு டெஸ்ட் பண்ணி முடிக்கணும்..!!"

அசோக் தடுமாற்றமாக சொல்ல, ப்ரியா முகத்தில் ஒருவித ஏமாற்றத்துடன் சில வினாடிகள் அவனையே பார்த்தாள். அப்புறம் சகஜமான குரலில் சொன்னாள்.

"சரிடா.. அப்போ நான் கெளம்புறேன்..!!!"

"ம்ம்.. ஓகே..!!"

ப்ரியா அவளுடைய இடத்துக்கு சென்றாள். கையிலிருந்த பரிசுப்பொருளை பேகுக்குள் திணித்தாள். சிஸ்டத்தை ஷட்டவுன் செய்துவிட்டு, பேக் எடுத்து தோளில் மாட்டிக்கொண்டாள். வீட்டுக்கு கிளம்பினாள். அசோக்கை கடக்கையில் 'பை டா..' என்றாள். அசோக்கும் பை சொல்லிவிட்டு, அவளுடைய முதுகையே வெறித்துக் கொண்டிருந்தான். ப்ரியா ஒரு நான்கைந்து எட்டுகள் கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள். சட்டென ப்ரேக் போட்டது போல நின்றாள். ஏதோ யோசனையுடன் திரும்பவும் அசோக்கிடம் வந்தாள். சுட்டுவிரலால் நெற்றியை கீறியவாறு சற்றே குழப்பமான குரலில் கேட்டாள்.

"ஹேய்.. நீ அப்போ ஏதோ சொல்ல வந்தேல..??"

"எ..எப்போ..??" அசோக் தடுமாற்றமாய் கேட்டான்.

"அ..அப்போ.. காபி ப்ரேக் அப்போ.."

"ஓ.. ஆமால..??"

"ஹம்.. என்ன சொல்ல வந்த..??"

"ஆமாம்.. என்ன சொல்ல வந்தேன்..??" அசோக்கும் இப்போது நெற்றியை பிடித்துக் கொண்டு மறந்து போன மாதிரி நடித்தான்.

"ஹாஹா.. மறந்துட்டியா..??" ப்ரியா சிரித்தாள்.

"ம்ம்.. மறந்துட்டேன்..!!"

"ஓகே.. பரவால..!! நைட்டு வீட்டுக்கு போனதும் படுத்து தூங்காம.. என்ன சொல்ல வந்தேன்னு நல்லா யோசிச்சு பாரு.. ஞாபகம் வந்ததும் நாளைக்கு வந்து சொல்லு.. சரியா..??"

"ம்ம்.. சரி ப்ரியா..!!"

"ஓகேடா.. கெளம்புறேன்.. பை..!!"

ப்ரியா கிளம்பினாள். அவள் சென்ற பிறகு கொஞ்ச நேரத்திற்கு கம்ப்யூட்டர் திரையையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்த அசோக், பிறகு தானும் வீட்டுக்கு கிளம்பினான்.

ப்ரியா எந்த நேரத்தில் சொன்னாளோ..?? அன்று இரவு அசோக்கிற்கு தூக்கம் செத்துப் போனது. கண்களை மூடினால்.. காதுக்குள் கைதட்டல்கள் கேட்டன..!! கையில் கோப்பையுடன் ப்ரியா வக்கணம் காட்டினாள்..!! அசோக்கின் கைகளுக்குள் சிக்காமல் நழுவிப்போய், தூரமாய் சென்று கைகொட்டி சிரித்தாள்..!! அடிக்கடி அவன் விழித்துக்கொள்ள வேண்டி இருந்தது..!! பால்கனிக்கு சென்று இருட்டுக்குள் புகைக்க வேண்டி இருந்தது..!! அவனுடைய காதல் மனமும், அவனது இயல்பான குணமும் கட்டி உருண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தன..!!

அசோக் இங்கே கண்ணுறக்கம் இன்றி தவித்துக் கொண்டிருந்த வேளையில், ப்ரியா அவள் வீட்டில் பெரிய களேபரமே செய்து கொண்டிருந்தாள். தான் அவார்ட் வாங்கிய அனுபவத்தை, அப்பாவிடம் சொல்லி அவரை ப்ளேடு போட்டுக் கொண்டிருந்தாள்.

"இந்த அவார்ட் கெடைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா டாடி..??"

"ஆமாம்.. ஆயிரம் பேரு இருக்குறப்போ.. உனக்கு குடுத்துருக்காங்கன்னா.. சும்மாவா..??"

"ஐயோ.. டாடீஈஈ.. தவுசன் அண்ட் எய்ட்டீன்.. ஆயிரத்தி பதினெட்டு..!!!!!"

"ஆமாமாம்.. ஆயிரத்தி பதினெட்டு பேரு..!!"

வரதராஜனும் மகளின் ஆட்டத்துக்கு மத்தளம் கொட்டினார். அந்த விஷயத்தை அப்பாவோடு விடவில்லை ப்ரியா. லோக்கலில் உள்ள நண்பிகளுக்கெல்லாம் கால் செய்து டார்ச்சர் செய்தவள், எஸ் டி டி வேறு போட்டு எக்சாமுக்கு படித்துக்கொண்டிருந்த தம்பியையும் சித்திரவதை செய்தாள்.

"காம்பனன்ட் டிசைன் ரொம்ப கஷ்டம்னு சொல்லிருக்கனே.. ஞாபகம் இருக்கா கோகுல்..??"

"ஷ்ஷ்.. காலைல எனக்கு எக்சாம் இருக்குன்னு சொன்னனே.. அது உனக்கு ஞாபகம் இருக்காக்கா..??" கோகுல் அடுத்த முனையில் அழுகுரலில் கேட்டான்.

"ஞாபகம் இருக்கே.. ஏன் கேக்குற..??"

"பேசுனது போதும்க்கா.. ப்ளீஸ்.. கட் பண்ணு..!!"

"ஐயோ.. இருடா.. நான் சொல்லி முடிச்சுக்குறேன்..!!"

"ப்ளீஸ்க்கா.. படிக்கனும்க்கா.. சொன்னவரை போதும்.. ஏற்கனவே அரை மணி நேரம் காலி..!!"



கோகுல் ரொம்பவே கெஞ்சவும், ப்ரியா சற்றே மனம் இளகினாள். நீண்டதாய் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு, இப்போது மிகவும் சீரியஸான குரலில் சொன்னாள்.

"ம்ம்ம்ம்.. அக்கா இதுலாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்குறதுக்கு காரணம் இருக்குடா தம்பி..!!"

"ஓ..!!"

"அதுவும் எக்ஸாம் டயத்துல இதெல்லாம் சொல்றதால உனக்கு ரொம்ப யூஸா இருக்கும்..!!"

"யூஸா..?? இதால என்ன யூஸ்..??" கோகுல் தலையை சொறிந்தான்.

"ம்ம்ஹ்ஹ்ம்ம்.. அக்கா மாதிரி நீயும் பெரிய சாப்ட்வேர் இஞ்சினியரா வரணும்டா தம்பி.. அக்காவோட கதையை சொன்னா உனக்கு இன்ஸ்பயரிங்கா இருக்கும்.. நாமளும் அக்கா மாதிரி வரணும், நல்லா படிக்கணும்னு ஒரு வெறி வரும்.. அதான் சொன்னேன்..!! போ.. அந்த வெறியோட போய்.. இப்போ எக்ஸாமுக்கு படி..!! பை..!!"

ஒருவழியாய் மனமுவந்து ப்ரியா காலை கட் செய்தாள். பேசி முடித்த கோகுலுக்கு படிப்பு மீதெல்லாம் வெறி வரவில்லை. மொக்கை போட்ட அக்காவின் மீதுதான் கொலவெறி வந்தது..!! 'இவளுக்குலாம் அவார்ட் குடுத்து.. ஏண்டா என் தாலியை அறுக்குறீங்க..??' என்று அவளுடைய கம்பெனியை கன்னாபின்னாவென்று திட்டினான்.

தம்பியிடமும் தற்பெருமை அடித்து தீர்ந்தபின்தான் ப்ரியாவுக்கு நிம்மதியாக இருந்தது. எந்தக்கவலையும் இல்லாமல் உறங்க முடிந்தது. ப்ரியா ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில், சுகமாக கம்பளிக்குள் முடங்கிப் போயிருந்தபோது, அசோக் உறக்கம் மறந்த கண்களால், சுவற்றில் நகர்ந்த பல்லியை முறைத்துக் கொண்டிருந்தான்.

காலையில் எழுந்தபோது அசோக்கின் மனம் ஓரளவு தெளிவாயிருந்தது. நடந்ததை இனியும் மனதுக்குள் போட்டு குழப்பிக்கொள்வது நல்லதில்லை என்று தோன்றியது. ப்ரியாவின் மீது தேவையற்ற வெறுப்புதான் இதனால் உண்டாகும் என்று புரிந்தது. எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டான். ஆபீஸில் ப்ரியாவை பார்க்கையில் சகஜமாக புன்னகைக்க முயற்சி செய்தான். நடுவில் ஒருமுறை அவள் வந்து வேலை விஷயமாக ஒரு உதவி கேட்கையில், சற்று தயங்கினாலும், பிறகு உதவினான். மாலையில் அவனாகவே ப்ரியாவின் இடத்துக்கு சென்று, 'ஸ்குவாஷ் ஆட போலாமா ப்ரியா..??' என்று கேட்டான்.

அசோக்கின் மனதுக்குள் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தாலும், அதை ப்ரியாவிடம் காட்டிக்கொள்ளவில்லை. முன்பை போல அவளிடம் இயல்பாக பேச முடியவில்லை என்பதையும் அவனால் உணர முடிந்தது. விரைவில் எல்லாம் மாறிவிடும் என்று நினைத்தான். ஆனால்.. விதியோ வேறு விதமாக நினைத்தது..!! அடுத்த வாரமே அது தன் வேலையை காட்டியது..!!

அன்று சற்று தாமதமாகத்தான் அசோக் ஆபீஸுக்கு கிளம்பி இருந்தான். பைக்கில் எலக்ட்ரானிக் சிட்டி நோக்கி சென்று கொண்டிருந்தவன், பொம்மனஹல்லியை தாண்டியபோது மணி பத்தரை. அப்போதுதான் அவனுடைய பேன்ட் பாக்கெட்டுக்குள் கிடந்த செல்போன் பதறி துடித்தது. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, பதறிய போனை கையில் எடுத்து பார்த்தான். ஹரி கால் செய்திருந்தான். ஹெல்மட் கழற்றியவன், கால் பிக்கப் செய்து காதில் வைத்துக் கொண்டான்.

"சொல்லுடா..!!" என்றான்.

"மச்சி.. எங்கடா இருக்குற..??"

"வந்துட்டு இருக்கேண்டா.. சொல்லு..!!"

"ஹேய்.. சீக்கிரம் வாடா.. இங்க கம்பெனில பெரிய கலவரமே நடந்துட்டு இருக்கு..!!"



"கலவரமா..?? என்ன கலவரம்..??"

"ம்ம்ம்..?? பேசி பேசியே காது ஜவ்வை கிழிக்கிற கலவரம்..??"

"ஹாஹா.. யார் அது.. அவ்வளவு பேசுறது..??"

"எல்லாம் உன் ஆளுதான்..!!"

"என் ஆள்னா.. ப்ரியாவா..??"

"ஆமாம்.. அவதான்..!! ஹப்பா.... அவ பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியலைடா..!!"

"என்ன பண்றா..??"

"என்ன பண்றாளா..?? அந்தக்கொடுமையை நீயே இங்க வந்து பாரு..!!"

ஹரி அதன்பிறகும் என்ன விஷயம் என்று தெளிவாக சொல்லாமல் இழுத்துக்கொண்டே போக, அசோக் இப்போது பொறுமை இழந்து போய் டென்ஷனாக கத்தினான்.

"த்தா.. அப்புறம் என்ன மசுத்துக்குடா நீ கால் பண்ணின.. மாங்காக்.."

"ஏய் ஏய்.. இருடா.. சொல்றேன்..!!"

"சொல்லித்தொலை..!!"

"ப்ரியாவை ஆன்சைட் அனுப்ப சூஸ் பண்ணிருக்காங்கடா..!!"

ஹரி சிரிப்புடன் சொன்ன வார்த்தைகள், அசோக்கின் மனதை வந்து சுருக்கென தைத்தன. காதில் வந்து விழுந்த வார்த்தைகளை சில வினாடிகளுக்கு அவனால் நம்பவே முடியவில்லை. 'ப்ரியாவா..?? அவளா..?? ஆன்சைட்டா..?? எப்படி..??'. மூளையில் ஒரு குழப்பமான எண்ணம் சட்டென ஊற்றெடுக்க, வார்த்தைகள் தடுமாற்றமாய் அவனிடம் இருந்து வெளிப்பட்டன.

"எ..என்னடா சொல்ற.. நெஜமாவா..??"

"ஆமாண்டா.. இன்னும் ரெண்டு நாள்ல கெளம்புறா..!!"

"எ..எப்டிடா.. எப்போ.. சொன்னாங்க..??"

"இன்னைக்கு காலைலதான் மச்சி.. காலைல ப்ரியா வந்ததுமே பாலா அவர் ரூமுக்கு வர சொன்னாரு.. போயிட்டு வந்தவ போயிங் ப்ளைட் மாதிரி பறந்துட்டேதான் வந்தா.. இன்னும் ஏர்லயேதான் சுத்திட்டு இருக்குறா மச்சி.. கீழ லேண்ட் ஆகல..!!"

"ஓ..!!"

"அமெரிக்கா'ன்றா.. ஆயிரத்து தொள்ளயிரத்து நாப்பதொண்ணுல'ன்றா.. பியர்ல் ஹார்பர்'ன்றா.. பின்லேடன் இஸ் வெரி பேட் ஃபெல்லோ'ன்றா..!! ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆ... முடியலடா சாமி..!! கொலம்பஸோட கொள்ளுப்பேத்தி மாதிரியே பேசி கொலவெறி கெளப்புறா மச்சி..!! அவ இம்சை தாங்காம.. இட்லி தின்னுட்டு வரேன்னு எஸ்கேப் ஆகி.. இப்போ கேஃப்டீரியால வந்து பம்மிட்டு உக்காந்திருக்கண்டா..!! கவிதாவும், நேத்ராவும் அங்க அவகிட்ட வசமா சிக்கிட்டாங்க.. நீ சீக்கிரம் வாடா.. நீ வந்தாத்தான் அவ ஓப்பன் பண்ணுன டோரை கொஞ்சமாச்சும் க்ளோஸ் பண்ணுவா..!! ஹாஹா..!!" ஹரி சொல்லிவிட்டு சிரிக்க,

"ம்ம்.. வந்துடறேன்டா.. இன்னும் டென் மினிட்ஸ்..!!" என சுரத்தே இல்லாமல் சொன்னான் அசோக்.

"ஏய்.. என்னடா ஆச்சு.. ஒரு மாதிரி பேசுற..??"

"அ..அப்டிலாம் ஒன்னும் இல்லையே..??"

"இல்லடா.. ப்ரியா ஆன்சைட் போறா.. உன் வாய்ஸ்ல நான் எக்ஸ்பெக்ட் பண்ணின எந்துவையே காணோமே..??"

"அ..அது.. நான்.. எனக்கு சர்ப்ரைசிங்கா இருந்தது.. நா..நான் இதை எதிர்பார்க்கல.. அதான் என்ன சொல்றதுன்னு தெரியலை..!!"

"ம்ம்ஹ்ஹ்ம்ம்..!! க்ளயண்ட்டே 'ப்ரியாவை அனுப்பி வைங்க'ன்னு ஸ்பெஷலா கேட்டிருக்காங்க மச்சி..!! இவனுக சும்மாவே 'க்ளையன்ட்டு.. க்ளையன்ட்டு..'ன்னு கிறுக்கு புடிச்ச கிளிப்புள்ளை மாதிரி.. சொன்னதையே சொல்லிட்டு இருப்பானுக..!! இதுல அவனுகளே வாய்விட்டு கேட்டுட்டா சும்மா இருப்பானுகளா..?? எல்லாம் அவ டிசைன் பண்ணின காம்பனன்ட்டோட வெயிட்டு மச்சி.. அதுலதான் அம்புட்டு பயலும் கவுந்துட்டாணுக..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. இந்த ப்ரியா பயபுள்ளைக்குள்ள.. இப்படி ஒரு பில்கேட்ஸ் தூங்கிட்டு இருக்கான்னு.. இத்தனை நாளா நமக்கு தெரியாம போச்சு பாத்தியா..??" ஹரி அந்தமாதிரி பெருமூச்சுடன் கேட்கவும், அசோக் இப்போது எரிச்சலானான்.

"போடா.. கூமுட்டைக்கூ.." என்று திட்டினான்.

"என்னது..?? கூமுட்டையா..??"

"பின்ன என்ன.. அவளாவது அதெல்லாம் டிசைன் பண்றதாவது.. எல்லாம் நான் பண்ணினது...!!"

"நெ..நெஜமாவா..??"

"அட ஆமாண்டா.. கோழி கிண்டி வச்ச மாதிரி ஏதோ பண்ணிட்டு மைசூர் ஓடிப்போயிட்டா.. நான்தான் நாலு நாளா மண்டை காஞ்சு உக்காந்து எல்லாத்தையும் டிசைன் பண்ணினேன்..!!"

"ஓஹோ.. அப்படியா விஷயம்..?? நான் கூட அவளுக்கு திடீர்னு எல்லாம் பங்க்ஷன் ஆக ஆரம்பிச்சுடுச்சோன்னு தப்பா நெனச்சுட்டேன் மச்சி..!!"

"ஹ்ம்ம்.. எனக்கு கெடைக்கவேண்டிய அவார்ட்.. எனக்கு கெடைக்கவேண்டிய ஆன்சைட்..!!"

"அட விடுடா.. யாருக்கு கெடைச்சா என்ன..?? நம்ம செட்ல இருந்து ஒருத்தி ஆன்சைட் போறா.. ஐ ஆம் ஸோ ஹேப்பி..!! எனக்கு அந்த தர்பூஸ் தலையனை அனுப்பலைலன்னு இப்போத்தான் மனசு நிம்மதியா இருக்கு..!!"

"ம்ம்ம்.." 
"சரிடா.. நான் கட் பண்றேன்.. நீ சீக்கிரம் வா..!! நீ இல்லைன்னா ப்ரியா விடுற ரவுசை எங்களால சமாளிக்க முடியாது..!!"

"ஓகேடா.. வர்றேன்.. பை..!!"

காலை கட் செய்துவிட்டு, அசோக் பைக்கின் கிக்கரை உதைத்தான். வண்டியை ஆபீஸுக்கு விரட்டினான். அவனுடைய மனதில் இப்போது மீண்டும் அந்த அழுத்தம். ஒரு வாரத்திற்கு முன்பாக ஏற்பட்ட அதே அழுத்தம். இப்போது இன்னும் அதிக வலுவோடு அவனுடைய மனதை பிசைந்து பார்த்தது. தன்னை அனுப்ப போகிறார்கள், இல்லையென்றால் கோவிந்த் தட்டிப்பறிக்கப் போகிறான் என்று எண்ணியிருந்த வேளையில், இப்படி ப்ரியா இடையில் புகுந்து அவனது ஆன்சைட் வாய்ப்பை அபகரிப்பாள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ப்ரியாவின் மீது ஏனோ ஒரு இனம்புரியாத எரிச்சல் அவன் மனதில் பரவியது.

ப்ரியாவின் கையில் எதுவும் இல்லை என்று அவனுடைய புத்திக்கு புரிந்ததுதான். அவள் திட்டமிட்டு எதுவும் செய்துவிடவில்லை என்பதிலும் அவன் தெளிவாகவே இருந்தான். 'கிளையன்ட்டே விரும்பி கேட்டிருக்கிறார்கள். இவர்கள் அனுப்புகிறார்கள். செல்ல முடியாது என்று அவளால் சொல்ல முடியாதுதான்..!! ஆனால் இப்படி ஆர்ப்பாட்டம் செய்தால் என்ன அர்த்தம்..?? அன்று அவார்ட் தருகையிலும் அப்படித்தான் என்னை மறந்து போனாள்..!! எனது வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டாள் என்ற நினைவு கொஞ்சம் கூடவா அவளுக்கு இல்லை..?? அதுவும் என்னுடைய உழைப்பால் வந்த வாய்ப்பு..!!'

ப்ரியாவின் இயல்பான குணத்தால்தான் இப்படி எல்லாம் செய்கிறாள் என்பதும் அசோக்கிற்கு புரிந்தது. 'சும்மாவே சதிராட்டம் ஆடுவாள்.. இவர்கள் சலங்கை வேறு கட்டி விடுகிறார்கள்..' என்று தோன்றியது. ஆனால் அவள் மீது ஒரு எரிச்சலான எண்ணம் தோன்றுவதையும் அவனால் தவிர்க்க முடியவில்லை. 'ச்சே.. ஏன் இப்படி எல்லாம் தப்பாவே நடக்குது..??' என்று மனதுக்குள் அலுத்துக் கொண்டான்.

அவன் ஆபீசை அடைந்ததுமே, அவன் முகத்தை ப்ரியா பார்த்ததுமே, அவளுடைய இடத்தில் இருந்து எழுந்து இவனை நோக்கி ஓடி வந்தாள். முகம் முழுதும் மலர்ச்சியும், மகிழ்ச்சியுமாய் இவனுடைய கையை பிடித்துக் கொண்டாள். அசோக் போலியாக புன்னகைக்க முயல, அவனது விரல்களுக்குள் தனது விரல்களை கோர்த்தவாறே ப்ரியா உற்சாகமாக கேட்டாள்.

"அ..அசோக்.. மே..மேட்டர் தெரியுமா உனக்கு..??"

"ம்ம்.. ஹரி கால் பண்ணிருந்தான்..!!"

"சான்பிரான்சிஸ்கோ போறேன்டா.. கமிங் ஃப்ரைடே..!!"

"ம்ம்ம்.. சொன்னான்..!!"

"ஹ்ஹ.. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..?? நான் நெனச்சே பாக்கலை அசோக்.. என்னை அனுப்புவாங்கன்னு..!! அதுவும் க்ளயண்ட்டே ஸ்பெஷலா என் பேரை மென்ஷன் பண்ணி அனுப்புங்கன்னு சொல்லிருக்கீங்க.. தெரியுமா..??" ப்ரியாவின் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம்.

"ம்ம்ம்.."

"எல்லாம் உன்னாலதான்டா.. உன்னாலதான் எனக்கு இந்த ஆப்பர்ச்சூனிட்டி.. உனக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே எனக்கு தெரியலை..!!"

"இட்ஸ் ஓகே ப்ரியா..!! கங்க்ராட்ஸ்..!!" அசோக் இறுக்கமான குரலில் அப்படி சொல்லவும், ப்ரியா சட்டென முகம் சுருங்கினாள்.

"ப்ச்.. என்னடா நீ.. எல்லார் மாதிரியும் ஃபார்மலா கங்க்ராட்ஸ்லாம் சொல்லிக்கிட்டு..?? இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு.. எனக்கு கையும் ஓடல.. காலும் ஓடல..!! இன்னும் பாஸ்போர்ட், பர்சேஸ், ஃபாரக்ஸ்னு பல வேலைகள் இருக்கு.. நீதாண்டா எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும்..!! ப்ளீஸ்..!!"

ப்ரியா அந்த மாதிரி கெஞ்ச, அசோக் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்தான். அவள் மீதிருந்த காதலும், புதிதாய் முளைத்திருந்த ஈகோவும் மாறி மாறி மனதில் கிளம்ப, எந்தப்பக்கம் சாய்வதென்று தடுமாறினான். பிறகு ஒருவழியாய் சமாளித்துக்கொண்டு,

"ஓகே ப்ரியா.. பண்றேன்..!!" என்றான்.

"தேங்க்ஸ்டா..!!" என்று குதூகலித்தாள் ப்ரியா.

காதலிப்பவர்களுக்கு முத்தம் மாதிரிதான் ஐ.டி யில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆன்சைட்..!! அது ஒரு வசீகரமான வார்த்தை.. அதில் ஏனோ அனைவருக்கும் ஒரு கவர்ச்சி.. அடைந்து விடவேண்டும் என்று ஒரு மோகம்..!! வருமானம் அதிகம், இங்கு ஐந்து மாதங்களில் சம்பாதிப்பதை அங்கு ஒரே மாதத்தில் சம்பாதித்து விடலாம் என்பது மட்டுமே அந்த கவர்ச்சிக்கு காரணம் அல்ல..!! அதையும் மீறி.. க்ளயன்ட்டுகளை நேரடியாக எதிர்கொள்ளும் அனுபவம்.. வேலைவாய்ப்பு சந்தையிலும், திருமண சந்தையிலும் கிடைக்கிற ஒரு தனி அங்கீகாரம்.. அடுத்தவன் காசில் அயல்நாட்டை ரசித்திடும் வாய்ப்பு.. வெட்டி பந்தா.. என்று எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன..!!

அடுத்த இரண்டு நாட்களில் எந்த நேரமும் ப்ரியா பரபரப்பாகவே காணப்பட்டாள். கையில் ஏதோ பேப்பர்களுடன் இங்கும் அங்கும் ஓடித்திரிந்தவாறே இருந்தாள். ஐட்னரி ரெக்வஸ்ட் செய்து பயணிக்கப்போகும் ஃப்ளைட்டை செலக்ட் செய்தாள். ஃப்ளைட் டிக்கெட், ஃபாரீன் கரன்ஸி, ட்ராவலர்ஸ் செக், மனி கார்ட் எல்லாம் முதல் நாளே கலெக்ட் செய்து கொண்டாள். ஆன்சைட்டில் செய்ய வேண்டிய வேலைகள் பற்றி ரவிப்ரசாத்திடம் இருந்து நாலெட்ஜ் ட்ரான்ஸ்ஃபர் பெற்றுக் கொண்டாள். சான்பிரான்சிஸ்கோவில் தங்குமிடத்துக்கு இங்கிருந்தே புக் செய்தாள். அங்கே வேலை செய்யப்போகும் இடம், சந்திக்கப்போகும் நபர்கள் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொண்டாள். இமிக்ரேஷன் க்ளியரன்சுக்கு தேவையான டாகுமன்ட்டுகளை கம்பெனியில் இருந்து வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டாள்.

அசோக் அவளுக்கு சிறு சிறு உதவிகள் செய்தான். அதுவும் மனதில் ஒரு பொறுமலுடனே செய்தான். 'பர்சேஸ் நீயும் வாடா..' என்று அசோக்கை அழைத்தபோது, 'இல்ல ப்ரியா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..' என்று மறுத்தான். ப்ரியாவுக்கும் அது பெரிய விஷயமாக தோன்றவில்லை. அவள் கோகுலுக்கு ஃபோன் செய்திருந்தாள். அவன் உடனே கிளம்பி பெங்களூர் வந்து சேர்ந்திருந்தான். அமெரிக்கா பயணமாக தேவையான பொருட்களை வாங்க, அவன் மிக உதவியாக இருந்தான். அதனால் அசோக்கின் உதவி அவளுக்கு தேவையாய் இருக்கவில்லை.

அவார்ட் கிடைத்த விஷயத்தை போலவே, இந்த விஷயத்தையும் இயல்பாக எடுத்துக் கொண்டாள் ப்ரியா. ஆனால் அசோக்கிற்கோ ஏற்கனவே அவன் மனதில் விழுந்திருந்த விரிசலை, இந்த விஷயம் மேலும் பெரிதாக்கியிருந்தது. ப்ரியாவுடன் இயல்பாக பேச முடியாமல் தடுமாறினான். ப்ரியாவுக்கோ கால்கள் தரையில் நில்லாமல் மிதந்து கொண்டிருந்ததில், அசோக்கின் தடுமாற்றத்தை கவனிக்க நேரம் இருக்கவில்லை. டீமில் அசோக், கோவிந்த் தவிர வேறு யாருக்கும், ப்ரியா ஆன்சைட் செல்லுவது மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார்கள்.

அவள் ஆன்சைட் கிளம்புகிற வெள்ளிக்கிழமை மதியம்... அவர்களுடைய ஆபீஸ்.. எல்லோரிடமும் பிரியாவிடை பெற்ற ப்ரியா.. ஆபீசில் இருந்து கிளம்புகையில், அசோக்கிடம் மட்டும் ஏக்கமும், ரகசியமுமாக சொன்னாள்..!!

"நைட்டு என்னை சென்ட் ஆஃப் பண்ண வரணும்.. சரியா..??"

"ம்ம்.. ட்ரை பண்றேன் ப்ரியா..!!" அசோக் விட்டேத்தியாக சொன்னான்.

"ட்ரைலாம் இல்ல.. கண்டிப்பா வரணும்..!!"

"சரி வர்றேன்.. உனக்கு டைமாச்சு.. நீ கிளம்பு..!!"

"ம்ம்ம்.."

ப்ரியா அசோக்கை ஏக்கமாக பார்த்துக்கொண்டே, கம்பெனி அரேன்ச் செய்திருந்த காருக்குள் ஏறி அமர்ந்தாள். கார் கிளம்பியது. 'நைட் வரணும்.. மறந்துடாத..' என்று நகர்கிற காருக்குள் இருந்து சைகை செய்தாள் ப்ரியா. அசோக்கும் மெல்ல தலையசைத்தான்.

அன்று இரவு ஏழு மணி..

பெங்களூர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்..!!

வழியனுப்ப வந்திருந்த அப்பாவுக்கும், தம்பிக்கும் கையைசைத்து விட்டு ப்ரியா ஏர்போர்ட் உள்வளாகத்துக்குள் நுழைந்தாள். ஏர்லைன் கவுன்ட்டர் சென்று, டிக்கட்டை கொடுத்து போர்டிங் பாஸ் பெற்றுக்கொண்டாள். ஹேன்ட் பேகை கையில் எடுத்துக்கொண்டு, ட்ராவல் சூட்கேசை செக்கின் செய்தாள். எமிக்ரேஷன் கிளியரன்ஸ், செக்யூரிட்டி செக் முடித்துவிட்டு, தனக்கு குறிப்பிடப்பட்ட லவுன்ச்சுக்குள் பிரவேசித்தாள். சேரில் அமர்ந்து கொண்டு ப்ளைட் ஏறுவதற்கான அறிவிப்புக்காக காத்திருந்தாள்.

அவளுடைய மனதில் இப்போது ஒரு வெறுமை பரவியிருந்ததை அவளால் தெளிவாக உணர முடிந்தது. 'இன்னும் சிறிது நேரத்தில் நான் பிறந்த மண்ணை விட்டு பிரியப் போகிறேன்.. முதன் முறையாக..!! இனி சிறிது காலத்திற்கு என் தாய்நாட்டு காற்றை என்னால் சுவாசிக்க முடியாது..!! என் மக்களின் மொழி என் காதில் விழாது..!! அப்பாவின் அன்பு கூட ஐ எஸ் டி மூலம்தான் வந்து சேர போகிறது..!! இவர்கள் தூங்கையில் நான் அங்கு விழித்திருக்கப் போகிறேன்..!! புது இடம்.. புது மனிதர்கள்.. புது உணவுமுறைகள்.. புது பழக்க வழக்கங்கள்.. என இருக்கப் போகிறேன்..!!

'


என்னவென்று விளக்கமுடியாத ஒரு உணர்வுக்குள் ப்ரியா சிக்கித் தவித்தாள். அந்த புரியாத உணர்வுடன் அசோக்கின் நினைவும் சேர்ந்து கொண்டு, மேலும் அவளை வாட்டியது. 'வழியனுப்ப வருகிறேன் என்றானே..? ஏன் வரவில்லை..? வேலை முடியவில்லையோ.. இல்லை பாதி வழியில் ட்ராபிக்கில் சிக்கிக் கொண்டானோ..? அவனுடைய முகத்தை ஒருதடவை பார்த்திருந்தால் மனம் இவ்வளவு படபடக்கதோ..? பார்க்கத்தான் முடியவில்லை.. அவனுடைய குரலை ஒருமுறை கேட்டுவிட்டு விமானம் ஏறினால் கூட.. ஓரளவு நிம்மதி கிட்டுமே..!!'

அந்த மாதிரி ஒரு எண்ணம் தோன்றியதுமே, ப்ரியா கையிலிருந்த பேக் திறந்து தனது செல்போனை வெளியே எடுத்தாள். அசோக்கின் நம்பருக்கு கால் செய்தாள். காதில் வைத்துக்கொண்டு அவனுடைய குரல் வந்து தன் செவிப்பறையில் மோதும் தருணத்திற்காக தவிப்புடன் காத்திருந்தாள். அந்த தவிப்பை அதிகரிக்கும் வகையாக.. ரிங் சென்று கொண்டே இருந்தது..!!




No comments:

Post a Comment