Wednesday, June 24, 2015

ஐ ஹேட் யூ, பட்.. - அத்தியாயம் - 9

அடுத்து வந்த நாற்பது நாட்கள் ப்ரியா சான்பிரான்சிஸ்கோவில் கழித்தாள். அவர்கள் கம்பெனியை சார்ந்த இன்னும் சிலர் தங்கியிருந்த ஹோட்டலிலேயே இவளும் தனி அறை எடுத்து தங்கிக் கொண்டாள். சான்பிரான்சிஸ்கோவில் மிகவும் பிசியான சாலையாகிய பிராட்வே சாலையில், பல அடுக்கு மேனியுடன் மிக பிரம்மாண்டமாக நின்றிருக்கும் ஹோட்டல் அது. ப்ரியா தங்கியிருந்தது அந்த ஹோட்டலின் பனிரெண்டாவது மாடியில். அவளுடைய அறையின் பால்கனியில் நின்று பார்த்தால், கோல்டன் கேட் பாலமும், துறைமுகமும் தெளிவாக தெரியும். அதிகாலையில் கொஞ்ச நேரம் காபி அருந்திக்கொண்டே, பால்கனியில் நின்று சான்பிரான்சிஸ்கோ நகரத்து அழகை ரசிப்பது ப்ரியாவுக்கு மிகவும் பிடித்த காரியம்.



பெங்களூரில் இருக்கையில் வீட்டு வேலை என்று ஒரு துரும்பை தூக்கி தூரமாய் போடக்கூட யோசிப்பாள். அந்த அளவுக்கு சோம்பேறித்தனம். ஆனால் இங்கு வந்ததும் பொறுப்பாக எல்லா வேலைகளும் அவளே செய்து கொண்டாள். அறையை சுத்தமாக வைத்துக் கொள்வது.. அப்பாவிடம் கற்றுக்கொண்டு வந்த சாம்பார், ரசத்தை எல்லாம் செய்து உண்பது.. சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைப்பது.. துணியை வாஷிங் மெஷினில் போட்டு எடுப்பது.. விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் வீழ்வது..!! காலை எட்டு மணிக்கெல்லாம் ப்ரடோ, நூடுல்சோ போட்டு சாப்பிட்டு விட்டு ஹோட்டலில் இருந்து ஆபீசுக்கு கிளம்பினால், மறுபடியும் அவள் ஹோட்டலுக்கு திரும்ப இரவு எட்டு மணி ஆகி விடும்..!!

ஆபீசில் வேலை அவளுக்கு சற்று கடினமாகவே இருந்தது. ஆனபோதிலும் சமாளிக்க முடியாமல் திணறவில்லை அவள். தினமும் மூன்று மீட்டிங்காவது அட்டன்ட் செய்வாள். க்ளையன்ட் கம்பனியில் இவர்கள் ப்ராஜக்டுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு பிசினஸ் டீம் இருக்கும். அவர்களுடன் நிறைய பேச வேண்டும். உருவாகப்போகிற மென்பொருளில் அவர்கள் விரும்புகிற, தேவையான அம்சங்களை விசாரித்து அறிந்து.. அந்த தேவைகளை டீடெயிலாக டாகுமன்ட் செய்து கொள்வதுதான் ப்ரியாவின் முக்கியமான வேலை..!! அவளுடைய ஆங்கிலப் புலமை இந்த வேலைக்கு மிகவும் கைகொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும்..!!

அவளுடைய பிற வேலைகள் என்றால்.. ரெகயர்மன்ட் டாகுமன்ட்களை பெங்களூர் டீமுக்கு ஈமெயில் அனுப்ப வேண்டும். அந்த டாகுமன்ட்களை வைத்து பெங்களூரில் உள்ளவர்கள் டிசைன் டாகுமன்ட்கள் தயார் செய்து திரும்ப ப்ரியாவுக்கு அனுப்புவார்கள். அந்த டிசைன் டாகுமன்ட்களை, க்ளையன்ட் கம்பனியின் டெக்னிகல் டீமிடம் காட்டி, அப்ரூவல் வாங்கவேண்டும். அப்ரூவலுக்கு முன்பாக அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை தீர்த்து வைக்கவேண்டும். அவ்வளவுதான்..!!

டெக்னிக்கல் விஷயங்களில்தான் ப்ரியா அவ்வப்போது தடுமாறுவாள்..!! இருந்தாலும் அவளுடைய ஆங்கில புலமை கொண்டு அந்த தடுமாற்றத்தை அழகாக சமாளித்தாள். தனக்கு தெரியாத விஷயம் பற்றி மீட்டிங்கில் யாராவது கேள்வி எழுப்பும்போது, 'இது இப்போதைக்கு ஒரு தெளிவில்லாத விஷயமாக இருக்கிறது.. நான் இன்று இரவு பெங்களூர் டீமுடன் விவாதித்தேன் என்றால்.. நாளை காலை உங்களுக்கு தெளிவான பதிலை என்னால் கூற இயலும்..!!' என்று ஸ்டைலான ஆங்கிலத்தில், வசீகரமான புன்னகையுடன் அவள் சொல்லுகையில், யாருக்கும் அதற்கு மேல் அவளை துருவி துருவி கேட்க விருப்பம் இருக்காது..!! சில நேரங்களில் கான்பரன்ஸ் லைனில் இருக்கும் ரவிப்ரசாத்தும் அவளது தடுமாற்றத்துக்கு துணை வருவான்..!!

இரவு ஹோட்டல் திரும்பியதும்தான் அவளை ஒரு வெறுமை வந்து சூழ்ந்து கொள்ளும். அருகில் தங்கியிருந்தவர்களும் அவளுடன் அதிகமாக ஒட்டுவது இல்லை.. எப்போதாவது சேர்ந்து வெளியில் செல்வதோடு சரி..!! அவளே சமைத்து சாப்பிட்டுக் கொள்வாள். கொஞ்ச நேரம் டிவி பார்த்து நேரத்தை ஓட்டுவாள். இரவு பத்து மணி ஆனதுமே அவளுக்கு அசோக்கிடம் பேச ஆசை வந்துவிடும். கம்பெனி காசில்.. ஆபீசில் அசோக்கின் எக்ஸ்டன்ஷனுக்கு கால் செய்வாள். அவன் தாமதமாக ஆபீசுக்கு வந்திருந்தால், செல்லமாக கோபித்துக் கொள்வாள்.

"என்னடா இவ்ளோ லேட்டா வர்ற..?? கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு..??"

"ஏன்டி.. என்னாச்சு..??" அசோக்கும் உற்சாகமாத்தான் பேச ஆரம்பிப்பான்.

"எத்தனை தடவை ரிஷப்ஷனுக்கு கால் பண்ணி.. உன் எக்ஸ்டன்ஷன் கனெக்ட் பண்ண சொல்றது..?? அவங்களே கடுப்பாயிட்டாங்க..!! ஏன் இவ்ளோ லேட்டு..?? நல்ல தூங்கிட்டியா..??"



"ஹேய்.. இல்ல லூசு.. பொம்மனஹல்லில இன்னைக்கு பயங்கர ட்ராஃபிக்.. அதான் லேட்டு..!!"

"போடா.. ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. எப்போடா இவன் ஆபீஸ் வருவான்னு..!!"

"ஓஹோ..??"

"ஹ்ம்ம்.. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் அசோக்..!!" என்று அவள் ஏக்கமாக சொல்லுகையில் அசோக்கும் அவள் மீதிருக்கும் எரிச்சல் மறந்து குளிர்ந்து போவான்.

"ஹ்ம்ம்.. நானுந்தான் ப்ரியா.. நீ இல்லாம இங்க ரொம்ப போரடிக்குது..!! சீக்கிரம் வந்துடு..!!"

என்று இவனும் ஏக்கமாக சொல்வான். பாசமாகத்தான் இருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே ப்ரியா

"ஹேய் அசோக்.. நேத்து சண்டேல..? நாங்க எல்லாம் அல்காட்ராஸ் ஐலேண்ட் போயிருந்தோம்.. இட் வாஸ் அமேசிங் எக்ஸ்பீரியன்ஸ் யு நோ..??"

என்று ஆரம்பித்துவிடுவாள். அவ்வளாவுதான்..!! ப்ரியா அந்தமாதிரி பெருமை பேசிக்கொள்ள ஆரம்பித்தாலே, அசோக்கின் உற்சாகம் உடனே வடிந்து போகும். அவள் சொல்வதற்கெல்லாம் வெறுமனே உம் கொட்டிக்கொண்டு இருப்பான்.

"ம்ம்..!!"

"அங்க பாப்புலர் ப்ரிஸன் இருக்கு.. உனக்கு தெரியும்ல..?? அதைத்தான் சுத்தி பாத்தோம்.. அங்க இருந்து இதுவரை யாருமே எஸ்கேப் ஆனதே கெடயாதாம் அசோக்.. அவ்ளோ ஸ்ட்ராங் செக்யூரிட்டி உள்ள ஹிஸ்டாரிகல் ஜெயில் அது..!! நெறைய ஹாலிவுட் மூவிஸ் இங்க எடுத்திருக்காங்க.. உனக்கு கிளின்ட் ஈஸ்ட்வுட் புடிக்குந்தான.. அவர் நடிச்ச 'எஸ்கேப் ஃப்ரம் அல்காட்ராஸ்..!!' கூட ஃபுல்லா இங்க எடுத்ததுதான்..!!"

"ம்ம்..!!"

அசோக் எரிச்சலை அடக்கிக்கொண்டுதான் அதன்பிறகு அவளுடன் பேச வேண்டி இருக்கும். தான் பார்த்த இடங்கள்.. தான் சந்தித்த நபர்கள்.. அவர்கள் தன்னை புகழ்ந்தது.. தான் அன்று வைத்த ரசம் முதற்கொண்டு.. எல்லாவற்றையும் சற்றே மிகைப்படுத்தித்தான் அசோக்கிடம் ப்ரியா அள்ளி விடுவாள். இப்படி எல்லாம் சொல்லி அவனுக்கு எரிச்சலை கிளப்பிவிட்டுவிட்டு, அப்புறம் வேலை சம்பந்தமாக பேச ஆரம்பிப்பாள் பாருங்கள்.. அதுதான் ப்ரியாவின் அல்டிமேட் அசமஞ்சத்தனம்..!!

"ஹேய்.. உன்னோட மாட்யூல்ல.. HLD (High Level Design), LLD (Low Level Design) டாகுமண்ட்ஸ்லாம் ரெடியாப்பா..?? இன்னைக்கு அனுப்பிடுவல..?? நாளைக்கு காலைல எனக்கு மீட்டிங் இருக்கு.. உன் டிசைன் டிஸ்கஷன்க்கு வரும்..!!"

ப்ரியா கேஷுவலாகத்தான் கேட்பாள். ஆனால் அவள் அவ்வாறு கேட்டதுமே அசோக்கிற்கு அவனது ஈகோ மிருகம் படக்கென கண்விழித்துக் கொள்ளும். பட்டென டென்ஷன் ஆகிவிடுவான். 'எனது உழைப்பில் அங்கே சென்றுவிட்டு, என்னையே வேலை ஏவுகிறாளா..??' என்பது மாதிரியான ஒரு வெறுப்புணர்வு..!!

"இன்னைக்குலாம் அனுப்ப முடியாது.. அது இன்னும் ரெடி ஆகலை..!!" என்பான் இறுக்கமான குரலில்.

"ரெடி ஆகலையா..?? என்ன இவ்ளோ கூலா சொல்லிட்டு இருக்குற..?? நாளைக்கு அவங்க கேக்குறப்போ நான் என்ன பதில் சொல்றது..??"

"ஆங்.. முடியலைன்னு சொல்லு..!!"

"ப்ச்.. என்ன வெளையாடுறியா..?? க்ளையன்ட் கேக்குறதுக்கு முடியலைன்னு சொல்றதுக்குத்தான் நான் இங்க வந்திருக்கனா..??" ப்ரியாவும் எகிறுவாள்.

"அப்போ.. முடியாததெல்லாம் முடியும்னு சொல்றதுக்குத்தான் அங்க போயிருக்கியா..?? பேங்கிங் அப்ளிகேஷன் வச்சுக்கிட்டு.. ராக்கெட் லாஞ்ச் பண்ண முடியுமான்னு கூடத்தான் அவனுக கேனத்தனமா கேட்பானுக..!! அதுக்காக முடியும்னு சொல்லிடுவியா..??" அசோக் பதிலடி கொடுப்பான்.

"ஹையோ.. என்ன பேசுற நீ..?? இன்னைக்கு முடிஞ்சிடும்னு ரவி க்ளயன்ட்கிட்ட கம்மிட் பண்ணிருக்கான்.. நான் எப்படி முடியாதுன்னு சொல்றது..??"

"ரவிதான கம்மிட் பண்ணிக்கிட்டான்.. அதுக்கு நீ எதுக்கு கெடந்து துள்ளுற..??"

"நானுந்தாண்டா நாளைக்கு மீட்டிங்ல இருப்பேன்..!! க்ளையன்ட் கேள்வி கேட்பாங்களேன்னு நான் கவலைப்பட கூடாதா..??"

"நீ ஒன்னும் கவலைப்பட தேவை இல்ல.. நான் ரவிகிட்ட பேசிக்கிறேன்..அவன் க்ளையன்ட்டை சமாளிச்சுப்பான்..!! நீ மூடிட்டு உன் வேலையை மட்டும் பாரு..!!"

"இப்போ எதுக்கு தேவை இல்லாம.. இவ்ளோ டென்ஷன் ஆகுற..?? ரவிட்ட பேசிக்கிறேன்னு சொன்னா நான் புரிஞ்சுக்க போறேன்..?? இடியட்..!!"

"நானா டென்ஷன் ஆனேன்..?? நீதான்டி தேவை இல்லாம கெடந்து குதிக்கிற.. ஸ்டுபிட்..!!"


"நானா ஸ்டுபிட்..?? நீதான்டா..!!

"ச்சை..!! லூசு..!! பேசுனது போதும்.. ஃபோனை வை மொதல்ல..!! எனக்கு வேலை இருக்கு..!!"

"ஆமாம்.. அப்படியே வேலை பாத்து கிழிச்சுடுறவன் மாதிரிதான்.. சொன்ன டேட்டுக்கு டாகுமன்ட்டை முடிக்க முடியலை.. பெருசா பேசுறான்..!!"

"இங்க பாரு.. உன்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கலாம் எனக்கு நேரம் இல்ல..!! ஃபோனை வை..!!"

"ஆமாம்.. உனக்காக கண்ணு முழிச்சு பேசிட்டு இருக்கேன் பாரு.. என்னை பாத்தா உனக்கு இளக்காரமாத்தான் இருக்கும்..!! வச்சுத் தொலைக்கிறேன்.. பை..!!"

இருவரும் 'படார்.. படார்..' என்று சப்தம் கிளம்புமாறு ரிசீவரை அறைந்து அதனிடத்தில் வைப்பார்கள்..!! ப்ரியா எரிச்சலுடன் மெத்தையில் சென்று பொத்தென்று விழுவாள்..!! அசோக் ஆத்திரத்துடன் கீபோர்டை தட்ட ஆரம்பிப்பான்..!!

ஆனால்.. அடுத்த நாள் இரவு.. அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல்.. ப்ரியா மீண்டும் அசோக்கிற்கு கால் செய்து பேசுவாள்..!! அசோக்கும் 'ஹாய் ப்ரியா.. ' என்று உற்சாகமாக ஆரம்பிப்பான்..!! அவர்களைப் பொறுத்தவரை.. இப்படித்தான் அந்த நாற்பது நாட்களும் கழிந்தன.. பிரிவின் ஏக்கத்துடன் பேச ஆரம்பிப்பதும்.. பிறகு ஈகோ உணர்வுடன் முட்டிக்கொள்வதுமாய்..!!

அந்த நாற்பது நாட்களும் முடிந்தன. ப்ரியா இந்தியாவிற்கு கிளம்பும் நாளும் வந்தது. ப்ரியாவின் ஆன்சைட் பயணம் வெற்றிகரமானது என்றுதான் சொல்ல வேண்டும். 'அவுட் ஆஃப் தி பாக்ஸ்..' என்று சொல்லிக் கொள்கிற மாதிரி அவள் புதிதாக எதையும் சாதித்து விடவில்லை. ஆனால் அவள் மீது கம்பெனி வைத்திருந்த நம்பிக்கைக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்டாள். அனுப்பி வைத்த வேலையை சரியாக செய்து முடித்தாள்..!!

ஆனால் அதற்கே க்ளையன்ட் கம்பனியை சார்ந்தவர்கள் மனம் குளிர்ந்து போனார்கள். நாற்பது நாட்களாக அவள் செய்த பணியை பாராட்டி, இவர்கள் கம்பெனியில் இருக்கும் முக்கிய புள்ளிகளுக்கு ஒரு மெயில் அனுப்பி வைத்தார்கள். அனைவரும் அந்த மெயிலுக்கு ரிப்ளை செய்து, ப்ரியாவை வாழ்த்தினார்கள். அவள் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து கிளம்புகிற அன்று, அவளுக்காக சின்னதாய் ஒரு பார்ட்டி கொடுத்து, வாழ்த்து மடலும் நினைவுப்பரிசும் அளித்து, இந்தியா அனுப்பி வைத்தனர்.

இந்தியா திரும்பிய ப்ரியா, இரண்டு நாட்கள் காம்பன்சேஷன் லீவ் எடுத்துக்கொண்டு, வீட்டில் தூங்கி ஓய்வெடுத்துக் கொண்டே ஆபீசுக்கு திரும்பினாள். அவள் ஆபீஸ் திரும்பிய அன்று ஆபீசையே அதகளப் படுத்தினாள். வாங்கி வந்திருந்த சாக்லேட்டை அனைவருக்கும் அள்ளி இறைத்தாள். தனக்கு அளிக்கப்பட்ட வாழ்த்து மடலை அனைவரிடமும் காட்டி பெருமை பீற்றிக் கொண்டாள். தான் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எல்லாம் மெயில் அனுப்பி, அதை பார்ப்பவர்களின் வயிற்றில் புகை கிளப்பினாள். அமெரிக்காவில் வாங்கிய ஐபாட், ஹேண்டிகேம் எல்லாம் எடுத்து வந்து எல்லோரிடமும் காட்டி எரிச்சலை கிளப்பினாள். 'ஹப்பா... ஏனு கேரக்டரப்பா இவளு.. இஷ்டு ஸீன் தொர்ஸ்தாளே..?' என்று நேத்ரா அசோக்கிடம் தனியாக கன்னடத்தில் தலையில் அடித்துக் கொண்டாள்.

ப்ரியாவின் ஆர்ப்பாட்டத்தில் அசோக்கும் எரிச்சலில் இருந்தான். அதில் எண்ணெய் ஊற்றும் விதமாக, ஆன்சைட் சென்றதில் கிடைத்த எக்ஸ்ட்ரா வருமானத்தில், தான் ஒரு ஸ்கூட்டி ஸ்ட்ரீக் புக் செய்திருப்பதாக ப்ரியா அவனிடம் கூற, அவனுக்குள் இப்போது வேறுவிதமான கோவம்..!! 'இனி தன்னுடன் இவள் பைக்கில் பயணிக்க மாட்டாள்.. தனக்கென தனியாக வாகனம் வாங்கிவிட்டாள்.. பெரிய ஆள் ஆகிவிட்டாள்..!!' என்பது மாதிரியான ஏக்கம் கலந்த கோவம்..!!

அந்த கோவத்தில் அசோக் இருக்கையிலேயே.. அவனுடைய மனநிலையை புரியாத ப்ரியா..

"இந்த வாட்ச் உனக்காக வாங்கிட்டு வந்தேன் அசோக்.. உனக்கு புடிச்சிருக்கா..?"

என்று அவனுக்காக அவள் ஆசையாக தேடித்தேடி வாங்கி வந்திருந்த கைக்கடிகாரத்தை, உற்சாகம் கொப்பளிக்கும் முகத்துடன் அவனிடம் நீட்டினாள். அவன் சந்தோஷத்தில் குதிப்பான் என்று எதிர்பார்த்தாள். அவனோ முகத்தை முறைப்பாக வைத்துக்கொண்டு,

"ப்ச்.. இந்த எனக்கு டிசைன் புடிக்கல ப்ரியா..!!" என்றான் இறுக்கமாக. ப்ரியாவின் முகம் உடனே தொங்கிப் போனது.

"என்னடா.. இப்படி சொல்ற.. நல்லாத்தான இருக்குது..?? எவ்ளோ அலைஞ்சு திரிஞ்சு வாங்குனேன் தெரியுமா..??"

"அதுக்காக பிடிக்காததை பிடிச்சிருக்குன்னு பொய் சொல்ல சொல்றியா..??"

"சேச்சே.. நான் அப்படி சொல்லல..!! உனக்கு கண்டிப்பா பிடிக்கும்னு ரொம்ப நம்பிக்கையா வாங்கிட்டு வந்துட்டேன்.. இப்போ என்ன பண்றது..??"

"எனக்கு வேணாம்.. உன் தம்பிட்ட குடு..!!"

"ப்ளீஸ் அசோக்.. நான் உனக்காக ரொம்ப ஆசையா வாங்கிட்டு வந்தேண்டா..!!" ப்ரியா கெஞ்சலாக சொன்னாள்.

"ப்ச்.. வேணான்னு சொல்றேன்ல.. அத்தோட விடு..!!" அசோக் சீற, ப்ரியாவுக்கும் இப்போது கோவம்.

"ச்சே.. ஏண்டா இப்படிலாம் பண்ற..?? உனக்கு என்னவோ ஆயிடுச்சு.. நீ முன்ன மாதிரி இல்ல.. ரொம்ப மாறிட்ட..!!"

என்று அந்த வாட்சை தூக்கி ஆத்திரமாக பேக்கில் போட்டுக்கொண்டு, வெறுப்புடன் திரும்பி விறுவிறுவென நடந்தாள்.

அந்த மாதிரி.. ஒரு நேரம் உருகிக் கொள்வதும், மறுநேரம் முறைத்துக் கொள்வதுமாகவே அதற்கு அடுத்து வந்த இரண்டு வாரங்கள் கழிந்தன. அவர்களுக்கு இடையில் ஒரு இடைவெளி விழுந்திருப்பதை இருவராலும் இப்போது தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் அந்த இடைவெளிக்கான காரணத்தை அசோக் மட்டுமே புரிந்து வைத்திருந்தான். ப்ரியாவுக்கு அசோக் ஏன் இப்படி எல்லாம் செய்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான்.. அந்த சம்பவம் நடந்தது..!! இடைவெளி விழுந்து சற்று விலகி நின்றவர்களை.. எதிரும் புதிருமாக திருப்பிவிட்ட சம்பவம்..!!

ஐ.டி கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள்.. ஆன்சைட்டுக்கு அப்புறம் ஆர்வமாகவும், பரபரப்பாகவும் பேசிக்கொள்கிற இன்னொரு விஷயம்.. அப்ரைசல்..!! நாட்டுக்கு வருஷத்திற்கு ஒருமுறை வருகிற தீபாவளி மாதிரியான விஷயம்..!! வேலை பார்ப்பவர்கள் அனைவரும்.. ஒருவருடமாக என்ன செய்து கிழித்தார்கள் என்று.. அவரவர் மேனேஜர்களால் மதிப்பீடு செய்யப்படுவர்..!! அந்த மதிப்பீடு கம்பனியின் டாப் மேனேஜ்மன்ட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அந்த மதிப்பீடை வைத்து எம்ப்ளாயிக்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற விஷயங்களை முடிவு செய்வார்கள்.

அப்ரைசல் விஷயத்தில் ஊழியர்களின் குரலுக்கு மதிப்பு கொடுக்கப்படும் என்று மேனேஜ்மன்ட் உறுதி சொல்லும். ஆனால் அவர்கள் சொன்னதை அவர்களே மதிக்க மாட்டார்கள். மேனேஜர்கள் எடுப்பதுதான் இறுதி முடிவாக இருக்கும். அதேமாதிரி சம்பள உயர்வை பற்றிய விஷயத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று மேனேஜ்மன்ட் வேண்டுகோள் விடுக்கும். அதை எம்ப்ளாயிக்கள் மதிக்கமாட்டார்கள். யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு என்று, அன்று காபி பிரேக்கின் போதே பேசிக்கொள்வார்கள். சிலர் சந்தோஷமாக தோன்றுவார்கள்.. சிலர் வருத்தமாக காட்சியளிப்பார்கள்.. ஆனால் பலர் உள்ளே சந்தோஷத்தை வைத்துக்கொண்டு, வெளியே சோகமாக நடிப்பார்கள்..!!

ப்ரியா ஆன்சைட்டில் இருந்து திரும்பிய இரண்டாவது நாள், ரவிப்ரசாத் கம்பனியில் இருந்து ரிலீவ் ஆனான். டீமை லீட் செய்ய லீடர் இல்லாத சூழ்நிலையில், அசோக்கே அந்த வேலையை செய்து வந்தான். ப்ரியா இந்தியா வந்த இரண்டாவது வாரம், அப்ரைசல் ரிசல்ட் வெளியானது. ரிசல்ட் என்றால்.. எம்ப்ளாயிக்கள் அனைவருடைய மெயில் ஐடிக்கும், அவர்களுடைய சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற விஷயங்களை தாங்கிய லெட்டர் ஒன்றை அனுப்புவார்கள்.. 'கான்பிடன்ஷியல்..!!' என்று காமடி வேறு செய்துகொண்டு..!!

அசோக் இந்தமுறை அந்த லெட்டருக்காக ஆவலுடன் காத்திருந்தான். தனக்கு டெக் லீட்-ஆக ப்ரமோஷன் வரப்போகிறது என்று கனவில் இருந்தான். லெட்டர் வருவதற்கு முந்தய நாள் இரவே தன் மொபைல் மூலம் வெப்மெயில் செக் செய்து லெட்டர் அனுப்பியிருக்கிறார்களா என்று பார்த்தான். ஆனால் லெட்டர் அடுத்த நாள் காலைதான் மெயிலில் வந்து விழுந்தது. அவசரமும் ஆர்வமுமாய் மெயில் ஓப்பன் செய்து பார்த்தவன் நொந்து போனான்.

அந்த வருடத்தில் அவனுடைய பெர்ஃபார்மன்ஸ் 'எக்சலன்ட்' என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இன்க்ரீமன்ட்டும் கிட்டத்தட்ட அவன் எதிர்பார்த்த அளவே வந்திருந்தது. அதிலெல்லாம் அவனுக்கு திருப்திதான். ஆனால் பதவி உயர்வு கிடைக்கவில்லை. இன்னும் ஒரு வருடத்திற்கு அவன் சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர் மட்டுமே..!! அசோக்கிற்கு கொஞ்ச நேரம் எதுவும் புரியவில்லை. மூன்று மாதங்கள் முன்பு, அப்ரைசல் மீட்டிங்கின் போது பாலகணேஷ் மிக நம்பிக்கையாக சொன்னாரே.. 'டெக் லீட் ஆக எல்லா குவாலிபிகேஷனும் உனக்கு இருக்கு அசோக்..' என்று.!! அப்புறம் ஏன் கிடைக்கவில்லை..??

அன்று ஆபீசுக்குள் அவன் வெறுப்பான மனநிலையுடன் நுழைந்தபோது, ப்ரியா உற்சாகமே உருவாக எதிரே ஓடி வந்தாள்..!!

"ஹேய்.. அசோக்.. யு நோ வாட்.. ஐ காட் ப்ரோமோஷன்..!! இன்னைல இருந்து அம்மா டெக் லீட்.. தெரியுமா..??" ப்ரியாவின் சந்தோசம் அசோக்கின் எரிச்சலை மேலும் அதிகரிக்கவே செய்தது..!!

"வழியை விடு ப்ரியா..!!"

என்று எதிரில் நின்ற ப்ரியாவின் புஜத்தை பற்றி தள்ளி, கோபமாக அவளை விலக்கினான். விடுவிடுவென தனது இருக்கைக்கு நடந்து சென்றான். அவனுடைய ஆத்திரத்தின் அர்த்தம் புரியாமல் ப்ரியா திருதிருவென விழித்துக்கொண்டு நின்றிருந்தாள்.

அசோக் சிஸ்டத்தை ஆன் செய்ததுமே, கம்யூனிக்கேட்டர் திறந்து பாலகணேஷிற்கு பிங் செய்தான். அவரை சந்திக்க விரும்புவதாகவும், தகுந்த நேரத்தை கூறுமாறும் கேட்டுக் கொண்டான். அவரும் 'இப்போதே ஃப்ரீதான்.. வா..' என்றார். அசோக் சேரில் இருந்து எழுந்தான். 'என்னடா ஆச்சு.. உன் லெட்டர் பாத்தியா.. உனக்கும் ப்ரோமோஷன் கொடுத்திருக்காங்கள்ல..??' என்று கேட்டவாறு எதிரே வந்த ப்ரியாவுக்கு பதில் சொல்லாமல், மீண்டும் அவளை விலக்கி தள்ளினான்.

பாலகணேஷின் அறைக்குள் நுழைந்தான். அப்ரைசல் லெட்டரில் அசோக்கிற்கு திருப்தி இல்லை என்பதை அவர் எளிதாக கணித்து வைத்திருந்தார். ஆனால் அப்பாவியாக கேட்டார்.

"சொல்லு அசோக்.. என்ன விஷயம்..??"

"அப்ரைசல்ல எனக்கு சாடிஸ்பாக்ஷன் இல்ல பாலா..!!"

"ஏன்.. என்னாச்சு.. இந்த தடவை எல்லாருக்குமே நல்ல ரேட்டிங், இன்க்ரீமன்ட்லாம் கொடுத்திருக்கோமே..??"

"அதுலாம் ஓகேதான்..!! ஆனா நீங்க சொன்ன மாதிரி எனக்கு ப்ரோமோஷன் வரலையே..!!"

"வெயிட் வெயிட்..!! நான் எப்போ உனக்கு ப்ரோமோஷன் தர போறதா சொன்னேன்..??"

"என்ன பாலா இப்படி சொல்றீங்க..?? அப்ரைசல் மீட்டிங் அப்போ சொன்னீங்களே..??" 
"என்ன சொன்னேன்..??"

"டெக் லீட் ஆக எல்லா குவாலிபிகேஷனும் உனக்கு இருக்கு'ன்னு..!!"

"டெக் லீட் ஆக தகுதி இருக்குன்னுதான சொன்னேன்.. தரப்போறேன்னா சொன்னேன்..??"

பால கணேஷின் பதிலில் அசோக் ஆடிப்போனான். பேச்சிழந்து போனவனாய் அவருடைய முகத்தையே திகைப்பாக பார்த்தான். இப்போது பால கணேஷ் அவனை கூல் செய்யும் விதமாக ஆரம்பித்தார்.

"ஸீ அசோக்.. உன் வருத்தம் எனக்கு புரியுது..!! உனக்கு எல்லா தகுதியும் இருக்கு.. நான் இல்லைன்னு சொல்லல..!! ப்ரோமோஷன் கெடைக்கலைன்னு நீ கோவப்படுறது நியாயந்தான்.. ஆனா ப்ரோமோஷன் கொடுக்குறதுல மேனேஜ்மன்ட்டுக்கு இருக்குற சில லிமிட்டேஷனையும் நீ புரிஞ்சுக்கணும்..!!"
"என்ன லிமிட்டேஷன்..??"

"ஆறு பேர் இருக்குற டீம்ல ரெண்டு பேருக்கு மேல எப்படி ப்ரோமோஷன் கொடுக்குறது.. நீயே கொஞ்சம் யோசிச்சு பாரு..!! கவிதாவை சாப்ட்வேர் இஞ்சினியர்ல இருந்து சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியரா ப்ரொமோட் பண்ணிருக்கோம்.. ஒரு கோட்டா காலி..!! இன்னொன்னு டெக் லீட் பொசிஷன்.. ஆக்சுவலா உன்னைத்தான் ப்ரொமோட் பண்ணிருக்கணும்.. ஆனா என்ன பண்றது.. கடைசி நேரத்துல ப்ரியாவோட பெர்ஃபார்மன்ஸ் வாஸ் மார்வெலஸ்..!! அவ டிசைன் பண்ணின அந்த காம்பனன்ட்.. க்ளயன்ட்கிட்ட இருந்து அவளுக்கு கெடைச்ச பாராட்டு.. இதெல்லாம் பாத்து மேனேஜ்மன்ட் ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டாங்க.. ஸோ.. ப்ரோமோஷன் அவளுக்கு போய்டுச்சு..!!"



"அப்போ.. இத்தனை நாளா நான் டீம்க்காக உழைச்சதுக்குலாம் எந்த யூஸுமே இல்லையா..??"

"ஹே.. கமான்..!! எதுவும் இங்க வேஸ்டா போகப் போறது இல்ல.. எம்ப்ளாயிஸோட உழைப்பை மேனேஜ்மன்ட் வாட்ச் பண்ணிட்டுத்தான் இருக்குது.. ஆனா சில நேரங்கள்ல இந்த மாதிரி ஆயிடும்.. உடனே அந்த உழைப்புக்கு ரெகக்னைஸேஷன் கொடுக்க முடியாத மாதிரி ஆயிடும்..!! உன்னோட திறமையை நிரூபிக்க கம்பெனி உனக்கு டைம் கொடுத்தது இல்லையா.. அது மாதிரி உனக்கு ரெகக்னைஸேஷன் கொடுக்குறதுக்கும் நீ சில நேரங்கள்ல கம்பெனிக்கு டைம் கொடுக்கணும்..!! என்ன நான் சொல்றது புரியுதா..?? இந்த வருஷம் இல்லன்னா அடுத்த வருஷம்..!!"

அசோக் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் தலையை குனிந்தவாறு அமைதியாக இருந்தான். அவனுடைய மூளைக்குள் பலவித குழப்பமான, விவகாரமான எண்ணங்கள். தான் அதிகம் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு அவனுக்கு கிடைக்கவில்லை. அந்த உயர்வு ப்ரியாவை தேடி சென்றிருந்தது. அப்படி செல்வதற்கு காரணமாய் இவர்கள் சொல்கிற அவளுடைய பெர்ஃபார்மன்ஸ்.. இவனுடைய உழைப்பால் வந்தது..!! என்ன கொடுமை இது என்று அவனுக்கு தோன்றியது..!! மூளையில் ஒருவித வலி..!! அவனுக்கு ப்ரியா மீதிருந்த ஒரு இனம்புரியாத கோபம், இப்போது உச்சக்கட்டத்தை எட்டியது..!! தன்னுடைய உள்ளக்கொதிப்பை அடக்க முடியாமல் பாலகனேஷிடம் சொன்னான்.

"அந்த காம்பனன்ட் டிசைன் பண்ணினது.. ப்ரியா இல்ல பாலா.. நான்..!!" அவன் அவ்வாறு சொன்னதும் பாலகணேஷ் இப்போது நெற்றியை சுருக்கினார்.

"வாட்..??? நெஜமாவா சொல்ற..??"

"ஆமாம் பாலா..!!"

"ஹ்ம்ம்.. இங்க பாரு அசோக்.. டீமுக்குள்ள இப்படி ஒருத்தர் வேலைக்கு இன்னொருத்தர் ஹெல்ப் பண்றது சகஜந்தான்.. ஆனா.." அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அசோக் இடையில் புகுந்து பேசினான்.

"ஹெல்ப்லாம் இல்ல பாலா.. டோட்டலா நான்தான் ரீ டிசைன் பண்ணினேன்..!! இட்ஸ் என்டைர்லி மை வொர்க்..!!"

"ஓஹோ..??"

அப்புறம் பாலா சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார். இப்படி ஒரு பிரச்னையை அசோக் கொண்டு வருவான் என்று அவர் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. இப்போது இந்த நிலைமையை எப்படி சமாளிப்பது என்று யோசித்தார். ஒரு கால் நிமிடந்தான்..!! அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவராய், ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தியவாறே ஆரம்பித்தார்.

"ஸீ அசோக்.. நீ சொல்றது உண்மையாவே இருக்கட்டும்..!! ஆனா.. மேனேஜ்மன்ட்டோட வ்யூல அது ப்ரியாவோட வொர்க்காத்தான் தெரியும்.. ஏன்னா.. 'த ஓனர்ஷிப் ஆஃப் தேட் காம்பனன்ட் வாஸ் கிவ்வன் டூ ப்ரியா ஒன்லி.. ஷீ இஸ் த ஒன் அக்கவுண்டபில் ஃபார் தேட் வொர்க்..!!' இப்போ அந்த காம்பனன்ட்டை எல்லாரும் பாராட்டுனதும் அதுக்கான ரெகக்னைஸேஷன்லாம் அவளுக்கு போறதால உனக்கு அது பெருசா தெரியுது.. ஒருவேளை எல்லாரும் அந்த காம்பனன்ட்டை பேட் டிசைன்னு சொல்லி திட்டிருந்தா..?? கொஞ்சம் யோசிச்சு பாரு.. அந்த திட்டும் அவளுக்குத்தான் போய் சேர்ந்திருக்கும்.. உனக்கு வந்திருக்காது..!! புரியுதா..??" பாலா அழகாக அந்த நிலைமையை சமாளித்துவிட,

"பு..புரியுது பாலா.. ஆனா.." அசோக்கிடம் இப்போது ஒரு தடுமாற்றம்.

"இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சுதான நீ அவளுக்கு ஹெல்ப் பண்ணின..??"

"அ..அது.."

"ஸே.. யெஸ் ஆர் நோ..!!"

"யெஸ்..!!"

"அப்புறம் என்ன..?? இப்போ வந்து நீதான் அதை டிசைன் பண்ணினேன்னு சொல்றதுல எந்த அர்த்தமும் இல்ல அசோக்..!! மேனேஜ்மன்ட்டை பொறுத்தவரை அக்கவுண்டபிலிட்டிதான் முக்கியம்.. அந்த வேலைக்கு யார் அக்கவுண்டபிலோ அவங்களுக்குதான் பாராட்டோ பனிஷ்மன்ட்டோ போய் சேரும்..!! ஸோ.. இந்த விஷயத்துல நான் உனக்கு ஹெல்ப் பண்ண முடியாது அசோக்.. ஐ ஆ'ம் ஸாரி..!!"

பாலகணேஷ் எதுவும் செய்யமுடியாதென்று கையை விரித்து விட்டார். அசோக் எதுவும் சொல்லத் தோன்றாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். கொஞ்ச நேரம் அவனுடைய அமைதியை பார்த்திருந்த பாலா, அப்புறம் அவனை சமாதானம் செய்யும் விதமாக சொன்னார்

"ப்ளீஸ் அசோக்.. ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் த ஃபாக்ட்.. கிவ் அஸ் ஸம் டைம்..!! இந்த வருஷம் விட்டுடு.. அடுத்த வருஷம் கண்டிப்பா உன்னோட ப்ரோமொஷனுக்கு நான் கேரண்டி..!!"

அவர் அவ்வாறு நம்பிக்கையாக சொல்ல, அசோக் இப்போது ஒருமாதிரி விரக்தியாக புன்னகைத்தான். 'அடுத்த வருஷமா..?? அதுக்கு இன்னும் முன்னூத்து அருவத்தஞ்சு நாள் இருக்கு..!! அதுக்குள்ளே நீ எந்த கம்பனில இருக்கியோ.. நான் எந்த கம்பனில இருக்கேனோ..?? இதுல நீ கேரண்டி வேற தர்றியா.. கேனப்பயலே..??' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான். ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்,

"இட்ஸ் ஓகே பாலா..!! ஒரு வருஷந்தான..? நான் வெயிட் பண்ணுறேன்.. எனக்கு ஒன்னும் பிரச்னை இல்ல..!! ஆனா.. இனிமே பிரச்னை எல்லாம் உங்களுக்குத்தான்..!!" என்றான்.

அசோக் அவ்வாறு பொடி வைத்து பேச, பாலகணேஷ் சற்றே துணுக்குற்றார். நெற்றியை சுருக்கியவாறு கேட்டார்.

"எ..என்ன சொல்ற நீ..??"

"ஆமாம் பாலா..!! இந்த பொசிஷனுக்கு தகுதியான ஆள் நான்.. ஆனா நீங்க என்னை விட்டுட்டு.. தகுதியே இல்லாத ஒருத்தியை லீட் ஆக்கிருக்கீங்க..!! அவ இனிமே உங்களுக்கு தரப்போற தலைவலியை தாங்கிக்கவும்.. ரெடியா இருங்க..!!"

இறுக்கமான குரலில் சொன்ன அசோக், சேரை விட்டு எழுந்து கொண்டான். 'ஹேய்.. அசோக்..' என்று பாலகணேஷ் அழைத்தது காதிலே விழாதமாதிரி நடந்து சென்று, அவருடைய அறையை விட்டு வெளியேறினான்.

வெளியே வந்த அசோக், நொந்து போன மனதுடன் தன்னுடைய இருக்கையை நோக்கி நடை போட.. தன்னுடைய ட்ராவில் இருந்த நோட், புக்ஸ் எல்லாம் அள்ளிக்கொண்டு ப்ரியா எதிரே வந்தாள்..!! அசோக்கை பார்த்ததும் அவளுடைய உற்சாகம் இன்னும் குறையாதவளாகவே சொன்னாள்..!!

"அசோக்.. எனக்கு செபரேட் கேபின் அல்லாட் பண்ணிருக்காங்க.. ரவியோட ரூமை எடுத்துக்க சொல்லிருக்காங்க..!!" முகமெல்லாம் மலர்ச்சியாய் அவள் சொல்ல, அசோக் விரக்தியாக ஒரு புன்னகையை வீசினான்.

"குட்.. வெரி குட்..!!" என்றான்.

"அதுசரி.. உன் ப்ரோமோஷன் என்ன ஆச்சு..??"

"ஹ்ம்ம்.. ப்ரோமோஷனா..?? ப்ரோமோஷன்லாம் புட்டுக்கிச்சு..!!" அசோக் கேலியான குரலில் சொல்லவும், ப்ரியாவின் முகத்தில் ஒரு உண்மையான கவலை தெரிந்தது.

"ஓ..!! பாலாட்ட பேசுனியா.. அவர் என்ன சொன்னாரு..??"

"அவர் என்ன சொல்வாரு..?? 'அல்வா கிண்டி ரெடியா இருக்கு தம்பி.. நீயே சாப்பிட்டுக்குறியா.. இல்ல.. நானே ஊட்டிவிடவா'ன்னு கேட்டாரு..!! நானே சாப்பிட்டுக்குறேன் பாஸ்னு சொல்லிட்டு வந்துட்டேன்..!!"

"ஹேய்.. என்னடா.. ஒருமாதிரி பேசுற..??"

"வேற எப்படி பேச சொல்ற..??"

"சரி விடு.. உன் கஷ்டம் எனக்கு புரியுது..!! பட்.. எனக்கு இப்போ கொஞ்சம் வேலை இருக்கு.. நாம அப்புறம் இதைப்பத்தி டீட்டெயிலா பேசலாம்..!! சரியா..??"

சொல்லிவிட்டு ப்ரியா அவளுக்காக ஒதுக்கப்பட்ட கேபின் நோக்கி நகர்ந்தாள். அசோக் அவனுடைய இருக்கையில் வந்து வெறுப்பாய் அமர்ந்து கொண்டான்.

நிஜமாகவே ப்ரியாவுக்கு அன்று நிறைய வேலைகள் இருந்தன. புது அறையை ஒழுங்குபடுத்துவது.. வந்து சேர்ந்திருந்த வாழ்த்து ஈமெயிலுகளுக்கு பதில் அனுப்புவது.. புதிதாக சேர்ந்திருந்த ரெஸ்பான்ஸிபிலிட்டீஸ் பற்றி அறிந்து கொள்வது.. அவர்களுடைய கம்பனிக்கு சொந்தமான ஊர்ப்பட்ட இன்ட்ராநெட் அப்ளிகேஷன்களில்.. டீம் லீட்க்கான பெர்மிஷன் ரெக்வஸ்ட் செய்வது..!! மதியம் டீமோடு சேர்ந்து சாப்பிடுவதற்கு கூட அவள் செல்லவில்லை. மூன்று மணிக்கு மேலே தனியாக கேஃப்டீரியா சென்று மதிய உணவு சாப்பிட்டாள்.

மாலை நான்கு மணி வாக்கில்.. அவளுக்கு பாலகணேஷுடன் மீட்டிங் இருந்தது..!! ரவிப்ரசாத் செய்து கொண்டிருந்த வேலைகளை ப்ரியாவுக்கு கைமாற்றிவிடும் நோக்கத்துடன் அரேஞ்ச் செய்யப்பட்ட மீட்டிங்..!! மீட்டிங் முடிகிற தறுவாயில்தான்.. பாலகணேஷ் அசோக் பற்றிய விஷயத்தை ப்ரியாவின் காதில் போட்டு வைத்தார். 'உனக்கு ப்ரோமோஷன் கிடைத்ததில் அசோக் அதிருப்தியில் இருக்கிறான்.. அவனையும் அனுசரித்து நடந்துகொண்டு.. டீமை வழிநடத்தி செல்வது உனது கடமை..!!' என்பது மாதிரி..!!

அவர் இயல்பாகத்தான் சொன்னார். ஆனால் அவர் சொன்ன சில விஷயங்கள், ப்ரியாவின் மனதை சுருக்கென்று தைத்து வலியை கொடுத்தன. அசோக் மீது பரபரவென ஒரு எரிச்சல். அவருடைய அறையில் இருந்து வெளிப்பட்டதுமே, நேராக நடந்து அசோக்கின் இடத்துக்கு சென்றாள். மானிட்டரை முறைத்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை, 'டொக்.. டொக்..' என்று டேபிளை தட்டி திசை திருப்பினாள். அசோக் திரும்பி பார்த்து,

"என்ன..??" என்று கேட்கவும்,

"உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.. வெளில வா..!!" என்றாள் ப்ரியா இறுக்கமான குரலில்.

"என்ன விஷயம்..??"

"வெளில வான்னு சொல்றேன்ல.. வா..!!"

என்றுவிட்டு அவனுடைய பதிலை எதிர்பாராமல் திரும்பி நடந்தாள். அவளுடைய பின்புறத்தையே சிறிது நேரம் முறைத்துக் கொண்டிருந்த அசோக், அப்புறம் அவனுடைய சிஸ்டத்தை லாக் செய்துவிட்டு, எழுந்து அவளை பின்தொடர்ந்தான்.

அதன்பிறகு ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து..

அசோக்கும் ப்ரியாவும், அவர்கள் ஆபீஸ் பில்டிங்கின் அடிவாரத்தில் இருக்கும் அந்த பார்க்கில், ஒரு ஸ்டோன் பென்ச்சில் அருகருகே அமர்ந்திருந்தார்கள். இருவருமே எதுவும் பேசத் தோன்றாதவர்களாய் ஏங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். அசோக்தான் அங்கு நிலவிய அமைதியை குலைக்கும் வண்ணம் முதலில் ஆரம்பித்தான்.

"ம்ம்.. சொல்லு.. என்ன மேட்டர்..??"

"இங்க பாரு அசோக்.. உனக்கு ப்ரோமோஷன் கெடைக்கலைன்னு நீ வருத்ததுல இருக்கேன்னு எனக்கு தெரியும்.. ஆனா அதே விஷயத்துக்காக உன்னை விட ரெண்டு மடங்கு வருத்ததுல நான் இருக்கேன்..!! அது உனக்கு தெரியுமா..??"

"ஓஹோ..!!"

"அதேமாதிரி.. எனக்கு ப்ரோமோஷன் கெடைச்சதுக்காக நீ என்னை விட அதிகமா சந்தோஷப்படுவேன்னு நான் நெனச்சேன்..!! ஆனா.. நீ அப்படி இல்லைன்னு காட்டிட்ட..!!" ப்ரியா குமுறலாக சொல்ல,

"இப்போ என்னாச்சுன்னு இந்த டயலாக்லாம்..??" அசோக் கூலாக கேட்டான்.

"பாலா சொன்னாரு.. காலைல நீ அவர்கிட்ட பேசுனதுலாம்..!!"

"என்ன சொன்னாரு..??"

"இந்த ப்ரோமொஷனுக்கு கொஞ்சம் கூட நான் தகுதியானவளே இல்லைன்னு அவர்கிட்ட சொல்லிருக்குற.. அது உண்மையா..??"

"ஆமாம்.. உண்மைதான்..!! அதுக்கு என்ன இப்போ..??"

"நீ எப்படி அப்படி சொல்லலாம்..?? அசோக் இப்படி சொன்னான்னு அவர் சொல்றப்போ.. என் மனசுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா..??"

"ஏன்.. நான் சொன்னதுல என்ன தப்பு..?? உனக்கு TL ஆக தகுதி இருக்குன்னு நீ நெனைக்கிறியா..??"

"தகுதி இருக்கா இல்லையான்றது இப்போ பிரச்னை இல்ல.. இந்த கம்பெனில வேலை பாக்குற எல்லாம் தகுதியோடதான் அந்த பொசிஷன்ல இருக்காங்களா..??"

"அப்புறம் என்ன..??"

"உனக்கு என் மேல ஏன் அவ்வளவு வெறுப்புன்னுதான் கேக்குறேன்..??"

"வெறுப்புலாம் ஒன்னும் இல்ல.. கொஞ்சம் கடுப்பு.. அவ்ளோதான்..!!"

"அதான் ஏன்..??"

"என்ன ஏன்..?? என்னோட ஆப்பர்ச்சூனிட்டிலாம் நீ தட்டிப் பறிச்சா.. எனக்கு கடுப்பா இருக்காதா..??"

"ச்ச.. என்ன பேசுற நீ..?? நான் எங்க உன்னோட ஆப்பர்ச்சூனிட்டியை தட்டிப்பறிச்சேன்..?? கம்பெனில இருந்து எனக்கு ஒரு வேலை கொடுத்தாங்க.. அதை முடிக்க முடியலைன்னு உன்கிட்ட ஹெல்ப் கேட்டேன்.. அதுவரைதான் நான் பண்ணினது..!! அப்புறம் வந்த அந்த அவார்ட்.. ஆன்சைட்.. இந்த ப்ரோமோஷன்.. இதெல்லாம் நானா கேட்டேன்..?? அதெல்லாம் தானா வந்தது.. அதுக்கு நான் என்ன செய்வேன்..??"

"இங்க பாரு ப்ரியா.. அந்த அவார்ட் மேட்டரை விட்டுடு.. மத்த ரெண்டும்.. எனக்கு கெடைக்க வேண்டியது.. நான் எதிர்பார்த்திருந்தது..!! நீ திட்டம் போட்டு எல்லாம் செஞ்சுட்டேன்னு நான் சொல்லல..!! எல்லாம் தானா நடந்ததுதான்னு எனக்கும் புரியுது.. உன்னை அறியாமலே எனக்கு வர வேண்டியதை நீ பறிச்சுட்டேன்னுதான் சொல்றேன்..!!"

"தெரியாம நடந்ததுன்னு புரியுதுல.. அப்புறம் என்ன என் மேல கடுப்பு..??"

"ம்ம்ம்..?? ஒவ்வொரு விஷயத்துக்காகவும் நீ செஞ்ச ஆர்ப்பாட்டந்தான் அதுக்கு காரணம்..!! இதுக்கு நாம தகுதியானவ இல்லன்ற நெனைப்பு கொஞ்சமாவது உனக்கு இருந்துச்சா..?? ஒவ்வொன்னுக்கும் என்ன ஆட்டம் போட்ட நீ..?? அதெல்லாம் பாக்குறப்போ என் மனசுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு கொஞ்சமாவது நீ நெனச்சு பாத்தியா..?? அதான் உன் மேல கொஞ்சம் கடுப்பு..!!"

அசோக்கின் மனம் ஒருவித ஏமாற்றத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது. தான் காத்திருந்த விஷயங்கள் எல்லாம் கானல் நீராகி போய்விட்டதே என்று விரக்தியான மனநிலையின் இருந்தான். அதனால்தான் கவலை இல்லாமல் அந்த மாதிரி வார்த்தைகளை ப்ரியாவின் மீது அவனால் வீச முடிந்தது. ஆனால் அந்த வார்த்தைகளை கேட்ட ப்ரியா துடித்துப் போனாள். இப்படி எல்லாம் இவன் பேசுவானா என்பது மாதிரி அசோக்கின் முகத்தையே அதிர்ச்சியாக பார்த்தாள். அப்புறம் அவள் பேச ஆரம்பித்தபோது அவளுடைய குரலிலும் ஒருவித வெறுப்பு கலந்திருந்தது.

"ச்சே..!! நீ இந்த அளவுக்கு என்னை பத்தி கேவலமா நெனைப்பேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல அசோக்..!! அதெல்லாம் தகுதியே இல்லாம.. தானா என்னை தேடி வந்ததா இருக்கலாம்.. ஆனா அதெல்லாம் எனக்கு கெடைச்சப்போ.. எனக்கு ஒரு சந்தோஷம் கெடைச்சது நெஜம்..!! அந்த சந்தோஷத்தை மறைச்சு வைக்காம வெளிப்படுத்தினது நான் செஞ்ச தப்பா..?? என்னோட சந்தோஷம் உனக்கும் சந்தோஷமா இருக்கும்னு நெனச்சுத்தான அதெல்லாம் செஞ்சேன்..?? உனக்கு அது கஷ்டமா இருக்குன்னு ஃப்ராங்கா எங்கிட்ட சொல்லிருந்தா.. நான் அதெல்லாம் செஞ்சிருக்கவே மாட்டேனே..??"

"ஓ.. பண்றதெல்லாம் நீ பண்ணிட்டு பழியை என் மேல தூக்கி போடுறியா..??"

"நான் என்ன பண்ணிட்டேன்.. நீ இவ்வளவு கேவலமா பேசுற அளவுக்கு.. நான் என்ன தப்பு பண்ணிட்டேன்..??"

"அப்போ.. நான் மட்டும் என்ன தப்பு பண்ணிட்டேன்..??"

"நீ அவர்கிட்ட போய் அப்படி சொன்னது தப்பு..!!"

"இல்ல.. நான் அப்படி சொன்னதுல எந்த தப்பும் இல்ல..!! உனக்கு டெக்லீடா இருக்க எந்த தகுதியும் இல்ல.. இதனால நீயும் கஷ்டப்பட்டு, கம்பனியையும் கஷ்டப் படுத்தப்போற..!! பேசாம அவங்ககிட்டயே போய்.. தெரியாத்தனமா இந்த ப்ரோமோஷன் எனக்கு கொடுத்துட்டீங்க.. நீங்களே வச்சுக்கோங்கன்னு சொல்லிடு..!! டெக்கு லீடாம் டெக்கு லீட்..!! ஏதாவது மக்கு லீட்னு போஸ்ட் இருந்தா.. அதை வாங்கி வச்சுக்கோ.. பொருத்தமா இருக்கும்..!!"

அசோக் உதிர்த்த வார்த்தைகள் ப்ரியாவுக்கு ஆத்திரத்தை கிளப்பி விட்டன. கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அசோக்கையே முறைத்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அப்புறம் இறுக்கமான குரலில் ஆரம்பித்தாள்.

"ஓகே அசோக்..!! என்னை பத்தி நீ எவ்வளவு மட்டமான அபிப்ராயம் வச்சிருக்கேன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.. எதுக்குமே உதவாத ஸ்டுபிட்னு என்னை நெனச்சுட்டல..?? நானும் ஒரு இஞ்சினியர்.. ஆறு வருஷமா ஒரு கம்பனில கோட் அடிச்சிருக்கேன்..!! ப்ரூவ் பண்றேன்.. நான் ஸ்டுபிட் இல்லன்னு உனக்கு ப்ரூவ் பண்றேன்.. இந்த டெக்லீட் போஸ்டுக்கு நான் டிசர்வ்ட்னு எல்லாருக்கும் ப்ரூவ் பண்றேன்..!!" ப்ரியா சீரியஸாக சொல்லிக்கொண்டிருக்க,

"ஹ்ம்ம்.. பாக்கலாம்.. பாக்கலாம்..!!" அசோக் எங்கேயோ பார்த்தவாறு விட்டேத்தியாக சொன்னான்.

அப்புறம் ஓரிரு நிமிடங்களுக்கு அவர்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அவர்களுக்குள் நிலவிய அந்த இறுக்கத்தின் பிடியில் சிக்குண்டு இருந்தார்கள். எங்கேயோ வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் அசோக் பெஞ்சில் இருந்து மெல்ல எழுந்தான்.



"ஓகே ப்ரியா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் கெளம்புறேன்..!!"

என்றவாறு ப்ரியாவின் பதிலை எதிர்பாராமல் நடக்க ஆரம்பித்தான். அவனுடைய முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த ப்ரியா, திடீரென மனதில் ஏதோ தோன்றியவளாய் அவனை அழைத்தாள்.

"அசோக்.. ஒரு நிமிஷம்..!!"

"என்ன..??" அசோக் திரும்பிப் பார்த்து கேட்டான்.

"அந்த லாகின் பேஜ் இஷ்யூ.. நீதான பாத்துட்டு இருக்குற..??"

"ஆமாம்..!!" அசோக் குழப்பமாகவே சொன்னான்.

"உன் சீட்டுக்கு போனதும்.. அந்த இஷ்யூவை நீ எப்போ முடிப்பேன்னு.. எனக்கு ஒரு எஸ்டிமேட் அனுப்பு..!! சரியா..??"

ப்ரியா ஒருமாதிரி கண்களை இடுக்கி அவனை பார்த்தவாறு, ஒருவித அதிகாரத் தொனியுடன் அவ்வாறு சொன்னாள். அவள் டெக்லீட் ஆனதும் முதன் முறையாக போடுகிற உத்தரவு..!! அதுவும் அவள் கொள்ளை கொள்ளையாய் அன்பு வைத்திருக்கிறவனை பார்த்து ஆணவத்துடன் தொடுத்த உத்தரவு..!!

அவள் அவ்வாறு சொன்னதும் அசோக் அப்படியே அதிசயித்துப் போனான். ப்ரியாவை ஒருமாதிரி நம்பமுடியாத பார்வை பார்த்தான். என்ன சொல்வதென்று தெரியாமல் ஒருகணம் தடுமாறினான். அவனுடைய தடுமாற்றம் ப்ரியாவுக்கு புன்னகையை வரவழைத்தது. அவளையும் மீறி அந்த புன்னகை அவளது உதட்டின் வழியே வெளிக்கசிந்தது. 'நான் இப்போது உனக்கு பாஸாக்கும்..' என்பது மாதிரி திமிராக புன்னகைத்தாள்..!!

அசோக்கின் தடுமாற்றம் ஒரு சில வினாடிகளுக்குத்தான்..!! அவனும் உடனே அவனது நிலைமையை சமாளித்துக்கொண்டு, ப்ரியாவை நோக்கி பதிலுக்கு ஒரு புன்னகையை வீசினான். அப்புறம் மெல்ல நடந்து சென்று அவளை நெருங்கினான். சற்றே குனிந்து, தனது முகத்தை அவளுடைய முகத்துக்கு அருகே எடுத்து சென்று புன்னகை மாறாத முகத்துடனே சொன்னான்.



"எஸ்டிமேட்தான..?? அதுக்கெதுக்கு சீட்டுக்கு போகணும்..?? இங்கயே சொல்றேன்..!!"

"இ..இங்கயா..??" அசோக்கின் புன்னகை ப்ரியாவை சற்றே மிரள செய்திருந்தது.

"ஹ்ம்ம்..!! சொல்றேன்.. நோட் பண்ணிக்கோங்க.. இன்னும் பத்து நாள் ஆகும்..!!"

"பத்து நாளா..?? அவ்ளோ நாள் எதுக்கு..??" ப்ரியா நெற்றியை சுருக்கினாள்.

"அது கொஞ்சம் காம்ப்ளிகேட்டடான இஷ்யூ.. ஸோ.. பத்து நாள் ஆகும்..!! இல்ல.. உங்களுக்கு ஏதாவது ஈசியான வழி தெரியும்னா.. கொஞ்சம் அனலைஸ் பண்ணி சொல்லுங்க.. எஸ்டிமேஷனை மாத்திக்கலாம்..!! என்ன சொல்றீங்க..??"

அசோக் அந்த மாதிரி கிடுக்கிப்பிடி போடவும் இப்போது ப்ரியா தடுமாறினாள். அவனையே சில வினாடிகள் மிரட்சியாக பார்த்தவள், அப்புறம் தனது தடுமாற்றத்தை சமாளித்துக் கொண்டு சொன்னாள்.

"ஓகே.. இட்ஸ் ஓகே..!! எனக்கு இப்போ அதுக்குலாம் டைம் இல்ல.. உன்னால எப்போ முடிக்க முடியுதோ.. அப்போவே முடி..!!"

என்று அசோக்கின் வழிக்கு வந்தாள். இப்போது அசோக்கின் புன்னகை மேலும் பெரிதானது. 'அது.. அந்த பயம் இருக்கணும்..!!' என்று வாய்விட்டு சொல்லவில்லை அவன். ஆனால் மனதுக்குள் நினைத்துக்கொண்டே, அந்த இடத்தை விட்டு கிளம்பினான். அவன் ஸ்டைலாக போவதையே ப்ரியா திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். 'எல்லாருக்கும் ஒரு வீக்னஸ் இருக்கு ப்ரியா..!!' என்று அசோக் எப்போதோ சொன்னது ப்ரியாவுக்கு இப்போது ஞாபகம் வந்தது..!!




No comments:

Post a Comment