Monday, June 22, 2015

ஐ ஹேட் யூ, பட்.. - அத்தியாயம் - 2

அசோக்கின் வீடு இருப்பது பி.டி.எம் லேயவுட்டில்.. சொந்த வீடல்ல.. வாடகை வீடுதான்..!! ஜாகர்ஸ் பார்க்குக்கு எதிரிலேயே அமைந்த தனி வீடு. ஒரே மாதிரியான உட்கட்டமைப்புடன் மூன்று அடுக்குகளாக கட்டப்பட்ட வீடு. ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு போர்ஷன் என வேறு வேறு குடும்பத்திற்கு வாடகை விடப்பட்டிருந்தது. அசோக் வசிப்பது கீழ் தளத்தில். கார் பார்க்கிங், இரட்டை படுக்கை அறை, வரவேற்பறை, பெரிய ஹால், கிச்சன், பூஜை அறை, படுக்கையறைகளுடன் ஒட்டிய பால்கனி என மிக விஸ்தாரமானதாகவே இருக்கும்.

வீட்டுக்கு எதிரிலேயே பச்சை பசேலென பூங்கா.. பல கோடிகளை விழுங்கி விட்டு, பளபளப்புடன் அணிவகுத்து நிற்கிற பணக்கார வீடுகள்.. எல்லா வீட்டு கேட்டுக்கருகிலும் ஏதோ ஒரு காஸ்ட்லி கார்.. கருகருவென்ற தார்ச்சாலைகளால் சீராக பிரிக்கப்பட்டிருக்கும் தெருக்கள்.. சாலையின் இருபுறமும் அடர்த்தியாய் வளர்ந்திருந்த, எதிரெதிராய் குனிந்து தலை முட்டிக்கொள்கிற பச்சை மரங்கள்.. அந்த மரங்கள் சாலைகளில் வீசியிருக்கும் நிழல்களில்.. அதே மரங்களில் இருந்து கீழே உதிர்த்திருக்கும் பழுப்புநிற இலைகள்..!! அழகாகவும், அமைதியாகவும், ரம்யமாகவும் இருக்கும் அந்த வீட்டின் சுற்றுப்புறம்..!!

ப்ரியா வீட்டு வரவேற்பறையில் ஆங்கிலத்தில்ஆரோக்ய ஜீவனா ஓடிக்கொண்டிருந்த அதே வேளையில், அந்த வீட்டு சமையலறையில் தெள்ளு தமிழிலில் ஒரு கானம் ஒலித்துக் கொண்டிருந்தது..!!

"ஆலயமாகும் மங்கை மனது.. - அதை அன்றாடம் கொண்டாடும் காலைப்பொழுது.. நல் காலைப் பொழுது..!!"

பாடுவதில் ஒருபக்கம் கருத்தாக இருந்தாலும், கல்லில் கிடந்த சப்பாத்தி கருகி விடாமல் புரட்டிப் போடுவதிலும் இன்னொரு பக்கம் கவனமாக இருந்தாள் தாமரைச்செல்வி.. சுருக்கமாக செல்வி.. அசோக்கின் அண்ணி.. அண்ணன் ராஜேஷின் மனைவி..!! சுட்டு முடித்த சப்பாத்தியை எடுத்து ஹாட்பாக்ஸில் போட்டு மூடியவள், வாசலில் நிழலாடுவதை உணர்ந்ததும் தலையை சுழற்றினாள்.

சமையலறை வாசலில் அசோக் நின்றிருந்தான். குளித்து முடித்து ஆபீசுக்கு கிளம்பி ரெடியாக வந்திருந்தான். வெளிர் நீல நிற சட்டையும், அடர் நீல பேண்ட்டும் அணிந்து, டக் இன் செய்து, இடுப்பில் பெல்ட் சுற்றிக் கொண்டு, படு ஃபார்மலாக காட்சியளித்தான். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியிருந்தவன், கண்களை இடுக்கி அண்ணியை பார்த்து, ஒருமாதிரி முறைத்துக் கொண்டிருந்தான்.

"என்னடா..??" செல்வி அவனுடைய பார்வையின் அர்த்தம் புரியாதவளாய் கேட்டாள்.

"தயவு செஞ்சு சுசீலா சாங்ஸ்லாம் பாடாதீங்க அண்ணி..!!" அசோக் சலிப்பாக சொன்னான்.

"ஏண்டா.. அவங்களை உனக்கு புடிக்காதா..??"

"ஹையோ.. ரொம்ப ரொம்ப புடிக்கும்.. அதான் பாடாதீங்கன்னு சொன்னேன்..!! தயவு செஞ்சு அவங்க பாடுன பாட்டை.. இப்படி உங்க குரலால பாடி கேக்குற கொடுமையை மட்டும் எனக்கு கொடுக்காதீங்க..!!" அசோக் கிண்டலாக சொல்ல, செல்வி சில வினாடிகள் அவனையே உஷ்ணமாக முறைத்தாள். அப்புறம்,

"போடா பொறாமை புடிச்சவனே..!!" என்று சீறினாள்.

செல்வி அசோக்கிற்கு அண்ணியாவதன் முன்பே அறிமுகம் ஆனவள்தான். சிறு வயதில் எல்லாம் ஒன்றாக சேர்ந்து, ஓடி விளையாடி திரிந்தவர்கள்தான். தூரத்து சொந்தக்காரி வேறு. இப்போது அவளே தன் அண்ணனின் மனைவி என்று ஆன பிறகு, 'வா.. போ..'வுடன் 'ங்க..' சேர்த்துக் கொண்டானே ஒழிய, அவனுடைய வழக்கமான சீண்டலையும், கிண்டலையும் கைவிடுபவனாய் இல்லை. செல்வியோ ராஜேஷோ அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதும் இல்லை.

"என்னது..?? பொறாமையா.. எனக்கா..??" அசோக் நகைத்தான்.

"ஆமாம்.. நான் நல்லா பாடுறேன்னு பொறமை..!!"

"ஹாஹா.. இங்க பாருங்க.. பொறமை புடிச்சவன்னு வேணா சொல்லிக்கங்க.. ஆனா நல்லா பாடுறீங்கன்லாம் சொல்லாதீங்க.. எனக்கு அப்படியே நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு..!!"


"உண்மைய சொன்னா நெஞ்சு வலிக்குதா உனக்கு..?? மொதல்ல அடுத்தவங்ககிட்ட இருக்குற திறமையை மதிக்க கத்துக்கோ.. யாரை பாத்தாலும் ஒரு நக்கலு.. ஒரு நையாண்டி..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. உன்னை பத்தி தெரிஞ்சும் இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன் பாரு.. என்ன சொல்லணும்..!!"

சலிப்பாக தலையை அசைத்த செல்வி, அந்தப்பக்கமாய் திரும்பி அடுத்த சப்பாத்தியை எடுத்து கல்லில் போட்டாள். அசோக் இப்போது கிச்சனுக்குள் நுழைந்தான். குரலில் இன்னும் குறும்பு குறையாதவனாகவே, அண்ணியை மேலும் வம்பிழுக்கும் எண்ணத்துடன் கேட்டான்.



"ஓஹோ..?? அப்படி என்ன என்னைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்களாம்..?? ம்ம்..??"

"சொன்னா கோவிச்சுக்கமாட்டியே..??"

"இல்ல.. சொல்லுங்க..!!"

அசோக் கேஷுவலாக சொல்லிக்கொண்டே, கப்போர்டில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த டப்பாக்களில் ஒன்றை கையில் எடுத்தான். மூடி திறந்து உள்ளே கிடந்த ஒரு இஞ்சியை எடுத்து, நகத்தால் கீறிப் பார்த்தான். செல்வி கல்லில் போட்ட சப்பாத்திக்கு ஸ்பூனில் எண்ணெய் வார்த்தவாறே சொன்னாள்.

"சொல்றேன் கேட்டுக்கோ.. உலகத்துலேயே நீதான் பெரிய இவன்ன்ன்னு உனக்கு மனசுக்குள்ள ஒரு நெனைப்பு.. சரியான ஈகோ புடிச்ச பய..!!"

"ஹாஹா..!! ம்ம்.. சரி அண்ணி.. நீங்க ஈகோன்னு சொல்றீங்க.. அதையே நான் ஏன் செல்ஃப் ரெஸ்பெக்ட்னு சொல்லிக்க கூடாது..??"

"என்னது..?? செல்ப்புபுபு.." செல்வி முகத்தை ஒருமாதிரி சுளித்தவாறே வார்த்தையை இழுத்தாள்.

"செல்ஃப் ரெஸ்பெக்ட் அண்ணி.. சுய மரியாதை..!!"

"ம்ம்ம்.. சொல்லிக்கோ சொல்லிக்கோ.. என்ன வேணா சொல்லிக்கோ..!! அடுத்தவங்க பேச்சை மதிக்கிறவனா இருந்தா சொல்லி புரிய வைக்கலாம்.. நீதான் யார் பேச்சையும் மதிக்கிறது இல்லையே..?? உன் வசதிக்கு ஏத்தமாதிரி என்ன வேணா சொல்லிக்கோ..!!"

"ஹஹா.. என்னாச்சு இப்போ உங்களுக்கு..?? நான் என்ன யார் பேச்சையும் மதிக்கிறது இல்ல..??"

"யாரை மதிக்கிற நீ..?? சரி அடுத்தவங்களை விடு.. என் பேச்சை கொஞ்சமாவது மதிக்கிறியா..??"

"என்ன மதிக்கலை..??"

"நான் ஒரு வாரமா உன்கிட்ட ஒன்னு சொல்லிட்டு இருக்கேனே.. அதுக்கு கொஞ்சமாவது மதிப்பு கொடுத்தியா..??"

"என்ன..??"

"ப்ச்.. புரியாத மாதிரி நடிக்காத..!! உங்க கம்பெனில வேலைக்கு ஆள் எடுக்குறாங்களான்னு கேட்டுட்டு வர சொன்னனே.. கேட்டுட்டு வந்தியா..??"

"என்னமோ சித்தாளு வேலைக்கு ஆள் எடுக்குற மாதிரி சொல்றீங்க.. இட்ஸ் சி எம் எம் லெவல் ஃபைவ் கம்பெனி அண்ணி..!!"

"ஏதோ ஒன்னு.. கேட்டுட்டு வந்தியா இல்லையா..??"

செல்வி சற்றே கடுமையாக கேட்க, அசோக் இப்போது அமைதியானான். அண்ணியின் முகத்தையே சில வினாடிகள் சலனமில்லாமல் பார்த்தான். செல்விக்கு உடன்பிறந்த தங்கை ஒருத்தி இருக்கிறாள். பெயர் செண்பக லக்ஷ்மி.. சுருக்கமாக லக்ஷ்மி..!! எம்.ஸி.ஏ முடித்துவிட்டு சென்னையில் ஒரு சின்ன சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறாள். அவளுக்கு பெங்களூரில் ஒரு வேலை வாங்கி கொடுத்து, தன்னுடன் வைத்துக் கொள்ளவேண்டும் என்று செல்விக்கு ஆசை. அவளுக்காகத்தான் இந்த வேலை விசாரிப்பு எல்லாம்.

அது மட்டும் அல்ல. லக்ஷ்மியை அசோக்கிற்கு மணம் முடித்து விட வேண்டும் என்றும் அவளுக்கு இன்னொரு நப்பாசை வேறு. உடன் பிறந்த தங்கையே ஓரகத்தி ஆகிவிட்டால் சச்சரவு இல்லாமல் இருக்கும் அல்லவா..?? ஆனால் அந்த ஆசையை கணவனிடம் அவளால் தைரியமாக சொல்ல முடியவில்லை. ராஜேஷுக்கு மனைவியின் வீட்டார்களை கண்டாலே ஒவ்வாது. எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறந்தான் அவ்வாறு ஆகிப் போயிற்று. இருவரது குடும்பத்துக்கும் இடையில் ஏற்பட்ட சின்ன சின்ன உரசல்களும், மனக்கசப்புமே காரணம். அதே வீட்டில் இன்னொரு சம்பந்தம் என்றால் அவ்வளவுதான். தையா தக்கா என்று குதிப்பான் என்பது செல்விக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் அசோக்காக 'லக்ஷ்மிதான் தன் மனைவி' என்று முடிவு எடுத்து விட்டால், அவர்கள் வீட்டில் யார் சொல்வதையும் கேட்க மாட்டான்.. எல்லோரையும் சமாளித்து தன் தங்கையையே மணம் புரிந்து கொள்வான்.. அதனால் அசோக்கின் சம்மதத்தை பெற்றுவிட்டால் தனது ஆசை நிறைவேறி விடும் என்று எண்ணினாள். ஒருநாள் அசோக்கிடமே தயங்கி தயங்கி 'லக்ஷ்மியை உனக்கு புடிச்சிருக்கா.. அவளை கட்டிக்கிறியா..??' என்பது மாதிரி கேட்டுவிட்டாள். ஆனால் அவ்வாறு அவனிடம் கேட்டதை எண்ணி இப்போது அடிக்கடி தனக்குத்தானே நொந்து கொள்வாள்.

'ஸாரி அண்ணி.. எனக்கு அந்த மாதிரி எதுவும் அபிப்ராயம் இல்ல..!!' என்று அசோக் நாகரிகமாகத்தான் அவளது ஆசையை மறுதலித்தான். 'ஹையோ.. பரவால அசோக்.. நானும் உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம..' என்று செல்வியும் உளறலாக அசடு வழிந்தாள். அதற்காகவெல்லாம் அவள் நொந்து போகவில்லை. 'பிறகு என்ன..' என்று கேட்கிறீர்களா..?? இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்து கொள்வீர்கள்.

அசோக்கின் அமைதி நீண்டு கொண்டே போக, இப்போது செல்வியே பொறுமை இல்லாமல் கேலியான குரலில் கேட்டாள்.

"என்னடா.. இஞ்சியை முழுங்கிட்டியா..??"

"இல்லையே.. ஏன்..??" அசோக் அவசரமாக மறுத்தான்.

"அப்போ பேசு..!! கம்முனு இருக்குற..?? கேட்டியா இல்லையா..??"

செல்வியின் கிண்டல் இப்போது அசோக்கையும் சூடேற்றி விட்டிருந்தது. அவனும் அவளை கலாய்க்கும் எண்ணத்துடன் ஆரம்பித்தான்.

"ஹ்ம்ம்.. கேட்டேன் கேட்டேன்.. வேலைலாம் இருக்காம்.. ஆனா தரமாட்டாங்களாம்..!!"

"தரமாட்டாங்களா..?? ஏன்..??" செல்வி நெற்றியை சுருக்கினாள்.

"ஆங்.. வெண்கலக்குறிச்சில பொறந்தவங்களுக்குலாம் எங்க கம்பெனில வேலை தர மாட்டாங்க..!!"

"ஏன்..?? வெளக்கெண்ணை சத்திரத்துல பொறந்தவங்களுக்குலாம் வேலை தந்திருக்காங்க..?

"வாட்..?? வெ..வெளக்கு.. எண்ணை.. வாட்ஸ் தேட்..??"

"நீ பொறந்த ஊர் பேரு ராசா.. மறந்து போச்சா..??"

"நோ நோ.. ஐம் நாட் தேட் வில்லேஜர் எனி மோர்.. ஐம் பேங்ளூரியன் நவ்..!!" அசோக் பெருமையாக சொல்ல,

"ஆமாம்.. இவரு பெங்ளூளூளூரியன்.. பெரிய்ய்ய பெங்ளூளூளூரியன்..!!!" செல்வி வாயைக் கோணலாக்கி வக்கணம் காட்டினாள். தொடர்ந்து,

"அப்போ நாங்க மட்டும் பெங்களூர்ல இல்லாம.. வண்டலூர்லயா இருக்கோம்..??" என எள்ளலாக கேட்டாள்.

"ஹ்ஹ.. நீங்க வந்து ஆறு மாசம்தான ஆகுது.. நான் ஆறு வருஷமா இங்க இருக்குறேன்..!!"

"ம்க்கும்..!! சரி பேச்சை மாத்தாத.. கேட்டதுக்கு பதில் சொல்லு.. அவளுக்கு ஏன் வேலை கெடைக்காதுன்னு சொல்ற..??" செல்வி விடாப்பிடியாக விஷயத்துக்கு வர, அசோக் இப்போது குரலில் கேலியை குறைத்துக்கொண்டு, சீரியசாக சொன்னான்.

"ப்ச்.. சொன்னா கேளுங்க அண்ணி.. அவ இங்கல்லாம் வர வேணாம்.. சென்னைலயே இருக்கட்டும்..!!"

"ஏன்..??"

"அவ பெங்களூர் வர்றது எனக்கு நல்லதா படலை..!!"

"அதான் ஏன்னு கேக்குறேன்..??"

"இங்க பாருங்க.. நீங்க என்ன ஐடியாவுல அவளை இங்க அழைச்சுட்டு வர நெனைக்கிறீங்கன்னு எனக்கு நல்லா புரியுது..!!"

"என்ன ஐடியாவுல..??"

"பஞ்சை கொண்டு வந்து நெருப்பு பக்கத்துல வைக்கலாம்.. பத்திக்குதான்னு பாக்கலாம்னு நெனைக்கிறீங்க.. அதான..??"

"நெருப்பு பக்கத்துல வச்சாத்தான பத்திக்கும்.. களிமண்ணு பக்கத்துல வச்சா எப்படி பத்திக்கும்..??"

"என்னது..?? களிமண்ணா..??" அசோக் முகத்தை சுளித்தவாறு கேட்க, செல்வி அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்தாள்.

"இங்க பாரு அசோக்.. என் தங்கச்சிக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்ற ஆசையை.. நான் என்னைக்கோ ஸ்டவ்ல போட்டு கருக்கிட்டேன்.. அதுக்காகலாம் அவளை இங்க அழைச்சுட்டு வர நான் நெனைக்கலை..!! உங்க அண்ணனை கட்டிக்கிட்ட நாள்ல இருந்து டெல்லி, பம்பாய்னு கண்காணாத தூரத்துலயே என் பொழைப்பு போய்டுச்சு.. குடும்பத்துக்குள்ள வேற பிரச்னை வந்து அப்பா, அம்மாவை பாக்குறதே அதிசயம்னு ஆயிடுச்சு.. அட்லீஸ்ட் என் தங்கச்சியவாவது கொஞ்சநாள் பக்கத்துல வச்சு பாத்துக்கலாம்னு நெனைக்கிறேன்.. அவ்வளவுதான்..!! ப்ளீஸ்டா.. உங்க கம்பெனில கேட்டுப்பாரு..!!"

அண்ணியின் குரல் சற்றே சோகமாய் ஒலிக்கவும், அசோக் இப்போது கொஞ்சம் இளகினான். ஆனால் அவள் சொன்னதை அவனால் முழுமையாக நம்பவும் முடியவில்லை. அவளுடைய மனதில் உண்மையிலேயே என்ன திட்டம் வைத்திருக்கிறாள் என்று யாருக்கு தெரியும். ஒரு சில வினாடிகள் யோசித்தவன், பிறகு லேசாக ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியவாறே சொன்னான். 
"ம்ம்ஹ்ஹ்ம்ம்..!! ஓகே அண்ணி.. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க..!!"

"டைமா..?? எதுக்கு..??"

"இதுல இருக்குற அட்வான்டேஜ், டிஸ்-அட்வான்டேஜ்லாம்.. நான் அலசி ஆராயணும்.. அப்புறந்தான் என்னால ஒரு முடிவுக்கு வர முடியும்..!!"

"ம்ம்ம்.. ரொம்பத்தாண்டா லொள்ளு உனக்கு..!! என்னமோ உன் கம்பெனியை விட்டா பெங்களூர்ல வேற கம்பெனியே இல்லாத மாதிரி பேசுற..??"

"ஓ.. அப்போ அவளை வேற கம்பெனில ட்ரை பண்ண சொல்ல போறீங்களா..??"

"நீ இப்படி செஞ்சா வேற என்ன பண்றது..??"

"அப்போ போங்க.. உங்க இஷ்டம்.. என்னவேணா பண்ணிக்கோங்க..!!"

"பண்ணத்தான் போறேன்.. பாத்துட்டே இரு..!! ஹ்ம்ம்.. அந்த வேலையை ரிசைன் பண்ணிட்டு அவளை உடனே கிளம்பி பெங்களூர் வர சொல்லப் போறேன்.. இங்க இருந்தே இன்டர்வ்யூ ட்ரை பண்ணினா ஒரு மாசத்துல வேலை வாங்கிடமாட்டா..??"

"ம்ம்.. வாங்கிடுவா வாங்கிடுவா..!! அதுசரி.. உங்க தங்கச்சியை பெங்களூர்ல எங்க தங்க வைக்கிறதா ப்ளான்..??"

"ஏன்.. ந..நம்ம வீட்டுலதான்..??" செல்வி குழப்பமாக கேட்க,

"ஹஹா.. என்னது.. நம்ம வீடா..?? இது என் வீடு..!!" அசோக் முறைப்பாக சொன்னான்

"டேய்..!!!!"

"அக்ரீமன்ட் என் பேர்ல இருக்கு.. அட்வான்ஸ் சொளையா எம்பதாயிரம் கொடுத்திருக்கேன்.. அண்ணனுக்கு பெங்களூர் ட்ரான்ஸ்ஃபர் கெடைச்சிடுச்சுன்னு.. என்னோட ஆருயிர் நண்பர்களை எல்லாம் அடிச்சு தொரத்திட்டு உங்களுக்கு வீட்டை விட்டிருக்கேன்.. ஞாபகம் இருக்கட்டும்..!

"ஹ்ம்ம்.. நல்லா ஞாபகம் இருக்கு சாமி.. அதுக்கு என்ன இப்போ..??"

"என் பர்மிஷன் இல்லாம இங்க யாரும் தங்க முடியாது.. உங்க தங்கச்சி இங்க தங்குறதுக்கு நான் அல்லோ பண்ண மாட்டேன்.. வேணும்னா வெளில ஏதாவது பி.ஜி ல தங்க வச்சுக்கோங்க..!!" அசோக் கடுமையாக சொல்ல,

"ஏண்டா இப்படி அநியாயம் பண்ற..??" செல்வி பரிதாபமாக கேட்டாள்.

"என்னோட நியாயம் உங்களுக்கு அநியாயமா பட்டுச்சுன்னா அதுக்கு நான் என்ன பண்றது..??

அசோக் விட்டேத்தியாக சொல்லிவிட்டு பார்வையை வேறெங்கோ திருப்பிக் கொண்டான். செல்வி இடுப்பில் கையை ஊன்றியவாறு அவனையே எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு சில வினாடிகள். அப்புறம் திடீரென என்ன நினைத்தாளோ.. சற்றே அலட்சியமான குரலில் சொன்னாள்.

"போடா.. நான் அவளை கூட்டிட்டு வந்து இந்த வீட்டுல வச்சுக்கத்தான் போறேன்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ..!!"

"வேணாம் அண்ணி.. அவ இங்க வர்றது எனக்கு புடிக்கலை..!!" அசோக் செல்வியை எச்சரிப்பது போல தனது ஆட்காட்டி விரலை தனித்து காட்டியவாறு சொன்னான்.

"உனக்கு புடிக்கலைன்னா வீட்டை காலி பண்ணிட்டு ஓடிப்போ..!!"

"ஹஹா.. நல்லா இருக்கே.. நான் எதுக்கு வீட்டை காலி பண்ணனும்.. இது என் வீடு..!! வேணுன்னா நீங்க வீட்டை காலி பண்ணிட்டு எங்கயாவது போங்க..!!"

"நாங்கல்லாம் எங்கயும் போக முடியாது.. எங்களுக்கு இந்த வீடு ரொம்ப புடிச்சிருக்கு.. இதை விட்டு எங்கயும் போக மாட்டோம்..!! உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ..!!"

"ஓஹோ..?? சவாலா..??"

"சவால்னே வச்சுக்கோ.. என்ன இப்போ..??"

அலட்சியமாக சொன்ன செல்வி, அந்தப்பக்கமாய் திரும்பி சப்பாத்தியை புரட்டி புரட்டி போட ஆரம்பித்தாள். இப்போது அசோக் அவளையே இறுக்கமான முகத்துடன் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் அவ்வாறு அமைதியாக முறைத்தவன், அப்புறம் குரலில் ஒருவித கேலியை கலந்து கொண்டு சொன்னான்.

"ஓகே.. சவால்னு ஆயிடுச்சு.. இனிமே எதுக்கு பாவ புண்ணியம்லாம் பாத்துக்கிட்டு..!!"

"என்ன சொல்ற நீ..??" செல்வி குழப்பமாய் திரும்பினாள்.

"அண்ணன்கிட்ட சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்..!!"

"எ..என்ன சொல்லப் போற..??" கேட்கும்போதே செல்விக்கு லேசாக உதறல்.

"அதான்.. லக்ஷ்மியை கட்டிக்கிறியான்னு எங்கிட்ட கேட்டீங்கள்ல.. அதை..!!"

"டேய்..!! அ..அது நான் எப்போவோ சொன்னது..!!" செல்வி அவசரமாகவும், பதற்றமாகவும் சொன்னாள்.

"எப்போவா இருந்தா என்ன.. சொன்னீங்கள்ல..??" அசோக் கூலாக கேட்டான்.

"ஏ.. வேணாண்டா.. ப்ளீஸ்டா.. அது தெரிஞ்சா அந்த மனுஷன் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாரு..!!" செல்வி இப்போது கெஞ்சினாள்.

"இல்ல அண்ணி.. சொல்லத்தான் போறேன்..!! அவளை கட்டிக்கிறியான்னு நீங்க கொழைஞ்சுக்கிட்டே கேட்டது.. நான் முடியாதுன்னு சொன்னதும்.. இப்போ அவளை இங்க அழைச்சுட்டு வந்து எப்படியாவது என் தலைல கட்டிடனும்னு ப்ளான் போடுறது.. எல்லாம் சொல்லத்தான் போறேன்..!!"

"டேய்.. அதான் இப்போ எனக்கு அப்படிலாம் எதுவும் ஆசை இல்லைன்னு சொல்றேன்ல..??

"ஆனா நான் அவன்ட்ட சொல்றப்போ அப்படித்தான் சொல்வேன்..!! அதுக்கப்புறம் அவன் பர்மிஷன் கொடுத்தான்னா.. தாராளமா உங்க தொங்கச்சியை கூட்டிட்டு வந்து வீட்டுல வச்சுக்கோங்க.. எனக்கு ஒன்னும் அப்ஜக்ஷன் இல்லை..!!"

அசோக் எகத்தாளமாக சொல்ல, செல்வி நொந்து போனவளாய் தலையில் கையை வைத்துக் கொண்டாள். இதற்காகத்தான் அவள் அடிக்கடி தனக்குள் நொந்து கொள்வது. 'ஏண்டி.. இந்தப்பயகிட்ட போய் அப்படி கேட்டுத் தொலைச்ச..?? இப்பப்பாரு.. சும்மா சும்மா அதையே சொல்லி மெரட்டுறான்..!!' தனது குடும்ப உறுப்பினர்களிலேயே ராஜேஷ் வெறுப்பை காட்டாமல் இருப்பது தன்னிடமும், தன் தங்கையிடமும்தான். இப்போது இவன் சென்று இப்படி சொன்னால்.. அவ்வளவுதான்.. தாங்களும் அந்த வெறுப்பினர் லிஸ்டில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான்..!!

செல்வி கடுப்புடன் அசோக்கின் முகத்தை ஏறிட்டாள். அவனுடைய சட்டையை கொத்தாகப் பற்றி கன்னத்தில் நாலு அறை விடலாமா என்பது மாதிரி வந்த எரிச்சலை கட்டுப்படுத்திக் கொண்டாள். நீளமாய் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியவள், சோர்வான குரலில் சொன்னாள்

"சரிப்பா.. அவளை இங்க கூட்டிட்டு வரலை.. போதுமா..??"

"அது.. அந்த பயம் இருக்கணும்..!!" அசோக் வெற்றிப் புன்னகையுடன் சொன்னான்.

"ம்ம்ஹ்ஹ்ம்ம்.. ரொம்ப ஓவரா போயிட்டு இருக்குறடா நீ.. இதுக்கெல்லாம் நல்லா அனுபவிக்கத்தான் போற..!!"

"ஹ்ஹ.. என்ன சாபம் விடுறீங்களா..??"

"ஆமாம்.. என் தங்கச்சி மாதிரி ஒரு தங்கமான பொண்ணை வேணாம்னு ஒதுக்கிட்ட.. உனக்கு எந்தக்காட்டு மகாராணி வர்றான்னு நானும் பாக்குறேன்..!!"

"அதெல்லாம் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அண்ணி.. உங்க தங்கச்சியை விட சூப்பரான பொண்ணா நான் புடிச்சு காட்டுறேன்..!!"

"ம்ம்ம்.. பாக்கலாம் பாக்கலாம்..!! அகம்பாவத்துல இப்படிலாம் ஆட்டம் போடுறல.. உன் ஆட்டத்துக்கு ஏத்த மாதிரி எதாவது அடங்கப்பிடாரிதான் உனக்கு வந்து வாய்க்கப்போறா..!! நீங்க ரெண்டு பேரும் கட்டி உருண்டு சண்டை போடணும்டா.. அதை நான் கண்ணு குளிர பாக்கணும்..!!"

"ஹாஹா..!! ஐயோ பாவம்.. உங்க ஆசை என்னைக்கும் நிறைவேற போறது இல்லைன்னு நெனச்சா.. எனக்கு ஒரே அழுகாச்சி அழுகாச்சியா வருது அண்ணி..!!"

"ஏன் நிறைவேறாது..??"

"பிகாஸ் ஐ'ஆம் அசோக்..!! எப்பேர்ப்பட்ட அடங்காத குதிரையா இருந்தாலும்.. அதை எப்படி அடக்கனும்ன்ற வித்தை எனக்கு தெரியும்..!! எப்படி அந்த குதிரைக்கு தண்ணி காட்டி, தவுடு திங்க வைக்கனும்ன்ற தந்திரம் எனக்கு தெரியும்..!! எவளும் இங்க துள்ள முடியாது அண்ணி.. அடங்கிபோய்த்தான் இருக்கணும்..!!"

"ம்ம்ம்.. கல்யாணத்துக்கு முன்னாடி இந்த மாதிரி வாய் சவடால் விட்டவங்க எத்தனையோ பேரு.. கல்யாணத்துக்கு அப்புறம் என்ன நெலமைக்கு ஆனாங்கன்னு நானும் பாத்திருக்கேன்பா..!!"



"எனக்கு அந்த நெலமை வராது அண்ணி..!!"

"வரப்போறவளைப் பத்தி எதுவுமே தெரியாம.. நீயா அப்படி சொல்லிக்கிறதா..??"

"அதெல்லாம் அவளைப்பத்தி எனக்கு நல்லா.."

அதுவரை அண்ணியின் பேச்சுக்கு படபடவென பதில் சொல்லிக்கொண்டிருந்த அசோக், இப்போது பட்டென பாதியிலேயே நிறுத்தினான். அமைதியானான். அவன் அவ்வாறு திடீரென அமைதியானதன் அர்த்தம் செல்விக்கு புரியவில்லை. நெற்றியை சுருக்கியவள், குழப்பமான குரலிலேயே கேட்டாள்.

"என்னடா.. என்னாச்சு..??"

"எ..என்னாச்சு..?? ஒ..ஒண்ணுல்ல..!!"

"இல்ல.. ஏதோ சொல்ல வந்த.. பாதிலேயே நிறுத்திட்ட..??"

"ஒ..ஒண்ணுல்ல.. அ..அதெல்லாம் நான் பாத்துக்குறேன்னு சொல்ல வந்தேன்..!!"

அசோக் ஒரு மாதிரி தடுமாற்றமாய் சொல்ல, செல்வி அவனுக்கு பதில் சொல்லாமல் அவனுடைய கண்களையே சில வினாடிகள் கூர்மையாக பார்த்தாள். அவனுடைய கண்களில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாமல் போகவே, அப்புறம் மெலிதாக ஒரு பெருமூச்சை வெளிப்படுத்துவிட்டு, அந்தப்பக்கமாக திரும்பிக்கொண்டாள். கல்லில் கிடந்த கடைசி சப்பாத்தியையும் எடுத்து ஹாட்பாக்ஸில் போட்டு மூடினாள். ரெகுலேட்டர் திருகி ஸ்டவ்வை அணைத்தவாறே, பேச்சை மாற்றும் விதமாக கேட்டாள்.

"ம்ம்ஹ்ஹ்ம்ம்.. அப்புறம்.. இன்னைக்கு என்ன உனக்கு லீவு இல்லையா..??"

"இல்லையே.. ஏன் கேக்குறீங்க..??"

"அவருக்கும் தம்புக்கும் இன்னைக்கு லீவு.. அதான் கேட்டேன்..!!"

தம்பு என்றால்.. தம்புச்சாமி..!! ராஜேஷுக்கும் செல்விக்கும் பிறந்தவன். ஐந்தரை வயது ஆகிறது. வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கும் ஒரு ஸ்கூலில் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான். சின்னப் பையனுக்கு இப்படி ஒரு பேரா என்று கேட்காதீகள். எல்லாம் இதோ இந்த செல்விதான்.. தன் தாத்தாவின் பெயரைத்தான் வைப்பேன் என்று அடம்பிடித்து வைத்திருக்கிறாள்..!!

"எதுக்கு லீவாம்..??"

"ஏதோ ஜெயந்தின்னு சொன்னாங்கப்பா.. உங்களுக்கு லீவ் இல்லையா..??"

"ஏதோ ஜெயந்தி ஜெயமாலினிக்காகலாம் எங்க கம்பெனில லீவ் விட மாட்டாங்க..!!" அசோக் குறும்பாக சொல்ல, செல்வி அவனை முறைத்தாள்.

"ம்ம்ம்ம்.. இந்த நக்கலுக்குலாம் ஒன்னும் கொறைச்சல் இல்ல..!!"

"ஹாஹா.. ம்ம்ம்ம்..!! சரி அண்ணி.. எனக்கு டைம் ஆச்சு.. நான் கெளம்புறேன்..!!" அசோக் கிச்சன் வாசலை நோக்கி நடந்தான். செல்வி அவனை அவசரமாய் அழைத்து நிறுத்தினாள்.

"ஏய்.. நில்லுடா..!!"

"என்ன..??" அதற்குள்ளாகவே வாசலை அடைந்திருந்த அசோக், திரும்பிப்பார்த்து கேட்டான்

"சப்பாத்தி சுட்டு முடிச்சுட்டேன்.. சாப்பிட்டு போ..!!"

"ப்ச்.. எனக்கு வேணாம் அண்ணி.. நான் ஆபீஸ்ல போய் சாப்பிட்டுக்குறேன்..!!" அசோக் ஒருமாதிரி சலிப்பாக சொல்ல,

"ஏண்டா..??" செல்வி வியப்பாக கேட்டாள்.

"பின்ன என்ன..?? எப்பப்பாரு.. சும்மா சும்மா இட்லி, தோசை, சப்பாத்தின்னு.. சுட்டதையே திரும்ப திரும்ப சுட்டு இருக்கீங்க..!! பிஸ்ஸா, பர்கர், சான்ட்விச்னு புதுசா ஏதாவது சுடலாம்ல..??"

"ம்க்கும்.. பெரிய வெள்ளைக்கார தொரைன்னு நெனைப்பு.. பிஸ்ஸா, பர்கர் கேக்குறாரு..!!

"வெள்ளைக்காரங்களோட பழகிப்பழகி.. அவங்க மாதிரிதான் இருக்க தோணுது அண்ணி.. என்ன பண்ண சொல்றீங்க..??"

"சரி.. நீயும் சாப்பிடுவேன்னு நெனச்சு இப்போ இத்தனை சப்பாத்தி சுட்டு வச்சுட்டனே.. என்ன பண்றது..??"

"அவன்ட்ட குடுங்க.. அவன்தான் என்னத்த குடுத்தாலும் தின்னுவான்.. எத்தனை குடுத்தாலும் தின்னுவான்..!!"

அண்ணனைப் பற்றி கேலியாக கூறிவிட்டு திரும்பிய அசோக், அண்ணனுடைய நெற்றியிலே முட்டிக்கொண்டான். ஸ்லோமோஷனில் நிமிர்ந்து பார்க்க ராஜேஷின் கடுப்பேறிய முகம் காணக்கிடைத்தது. கண்களை இடுக்கி இவனையே முறைத்தவாறு அவன் நின்றிருக்க, அவனுடைய காலை பிடித்தவாறு தம்பு நின்றுகொண்டிருந்தான். அசோக்கும், செல்வியும் கடைசியாக பேசிக்கொண்ட ஒன்றிரண்டு உரையாடல்களை, அசோக்குக்கு பின்னால் நின்றவாறு ராஜேஷ் கேட்டுக் கொண்டுதான் இருந்தான். அசோக் கடைசியாக கொடுத்த கமென்ட்தான், அவனுடைய முகம் குரங்கு போல மாறிப்போக காரணம்.

அண்ணனை பார்த்ததும் அசோக் லேசாக அதிர்ந்தாலும் உடனே சமாளித்துக் கொண்டான். அப்பாவியாய் முகத்தை மாற்றிக்கொண்டு, 'என்ன..??' என்பது போல தலையை மெலிதாக அசைத்து கேட்டான்.

"யாரைடா என்னத்த குடுத்தாலும் தின்னுவான்னு சொன்ன..??" ராஜேஷ் இறுக்கமான குரலில் கேட்க,

"அ..அது.. நா..நான்.. த..தம்புவை சொன்னேன்..!!" என்று சமாளித்த அசோக், உடனே

"தம்ப்பூ..!!!"

குழைந்தவாறு அழைத்துக்கொண்டே மண்டியிட்டான். நின்றிருந்த தம்புவை இழுத்து தன்னோடு அணைத்துக்கொண்டான். அவனுடைய கன்னத்தில் முத்தமிட்டவன், பிறகு லேசாக முகத்தை சுளித்தவாறே கேட்டான்.

"என்னடா தம்பு.. இன்னும் குளிக்கலையா நீ..??"

"இல்ல சித்தப்பா..!!"

"ச்ச.. ஸ்மெல் பாய்.. காலைல எழுந்ததும் குளிக்கனும்னு தெரியாது..?? சித்தப்பாவை பாத்தியா.. அதுக்குள்ள குளிச்சுட்டு எப்படி ஃப்ரெஷா இருக்கேன் பாரு..!! இனிமே குளிக்காம வந்தேன்னா உனக்கு சாப்பாடு கெடயாது.. புரியுதா..??"

அசோக் தம்புவை சொல்வது மாதிரி சொன்னாலும், மறைமுகமாக தன் அண்ணனைத்தான் குறிப்பிட்டான். ராஜேஷுக்கும் அது புரியாமல் இல்லை. தலையை ஒருபக்கமாக சாய்த்து தம்பியையே ஓரக்கண்ணால் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பாவை கிண்டலடிக்க அசோக் தன்னை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறான் என்று புரியாமல்,

"ம்ம்.. சரி சித்தப்பா.. இனி டெயிலி மார்னிங் குளிச்சுர்றேன்.!!" என்றான் தம்பு அப்பாவியாக சொன்னான்.

"ம்ம்.. குட்..!! இன்னைக்கு உனக்கு லீவா..??"

"யெஸ் சித்தப்பா..!!"

"ம்ம்ஹ்ஹ்ம்ம்..!! நீ கிழிக்கிற கிழிக்கு உனக்கு சும்மா சும்மா லீவ் விட்ராணுகடா..!!" அசோக் சலிப்பாக சொல்ல, ராஜேஷால் அதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

"டேய்.. யாரைடா சொல்ற..??" என்று தம்பியை பார்த்து சீறினான்.

"ஏன்.. தம்புவைத்தான் சொன்னேன்..!!" அசோக் இன்னும் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டே சொன்னான்.

"இல்ல.. நீ என்னைத்தான் சொன்ன..!!"

"குத்தம் உள்ள நெஞ்சு குறுகுறுன்னு சொன்னா.. அதுக்கு நான் என்ன பண்றது..??"

"ஏண்டா.. நீ கிழிக்கிற கிழிக்கே உனக்கு வாரத்துக்கு ரெண்டு நாளு லீவு விடுறானுக.. எனக்கு விட கூடாதா..??"

"ஹ்ஹ.. நான் என்ன கிழிக்கிறேன்னு உனக்கு தெரியுமாக்கும்..??"

"ஏன் தெரியாது..?? சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பாக்குறவணுக எல்லாம் என்ன பண்றீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்டா..!!"

"ஓ.. எங்க கொஞ்சம் சொல்லு.. பார்ப்போம்..!!"

"சொல்றேன்..!! கிழிஞ்ச ஜீன்சும், சாயம்போன டி-ஷர்ட்டும் போட்டுக்கிட்டு.. காலேஜ் டூர் போறவனுகளாட்டம் கம்பெனிக்கு போக வேண்டியது..!! காலைல போனதுமே மொத வேலையா.. ஜிமெயில், யாஹூலாம் செக் பண்ண வேண்டியது.. ஃப்ரண்ட்சுக்கு மெயில் அனுப்புறது.. சேட் பண்ணுறது.. அப்புறம் ஃபேஸ்புக், ஆர்க்குட்னு எதையாவது தொறந்து வச்சுட்டு உக்காந்துக்க வேண்டியது.. ஹெட்ஃபோன் போட்டு பாட்டு கேட்டுக்கிட்டே, கிரிக்கெட் ஸ்கோர் ரெஃப்ரஷ் பண்ண வேண்டியது.. யூட்யூப் பாக்கவேண்டியது.. சாயந்திரம் ஆனதும் டேபிள் டென்னிஸ், பேட்மிட்டன்னு எதையாவது வெளையாட கெளம்பிட வேண்டியது..!! இதுக்கு நடுவுல ஒரு மணிநேரத்துக்கு ஒருதடவை ப்ரேக் வேற.. அப்படியே வேலை செஞ்சு களைச்சு போயிட்டாங்களாமாம்.!! மதியம் லஞ்ச்சுக்கு.. கோக் இல்ல பெப்சியை சப்பிக்கிட்டே.. பிஸ்ஸா இல்ல பர்கரை கடிக்க வேண்டியது.. 'ஹேய்.. ஐ ஹேட் ரைஸ்'யா..!!' அப்டின்னு இங்க்லீஷ்ல ஒருமணி நேரம் வெட்டி அரட்டை அடிக்க வேண்டியது..!! எப்போவாவது ரொம்ப போரடிச்சா.. ஒரு சேஞ்சுக்கு வேலை செய்ய வேண்டியது.. அதுவும் சுயமா கோட் அடிக்கிறது இல்ல.. கூகுள் சர்ச் பண்ணி.. என்ன வருதோ அதை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ண வேண்டியது..!! கூகுளும், காப்பி பேஸ்ட்டும் மட்டும் இல்லைன்னா.. உங்க நெலமைலாம் டப்பா டான்ஸாடும்டா..!! ஹ்ஹ.. எனக்கா தெரியாது.. நீங்க என்ன கிழிக்கிறீங்கன்னு..??"

ராஜேஷ் எகத்தாளமாக சொன்னது அசோக்கிற்கு கொஞ்சம் எரிச்சலை மூட்டி விட்டது. ஆனால் அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், கூலான குரலிலேயே அண்ணனிடம் கேட்டான்.

"எங்களை இவ்வளவு கொறை சொல்றியே.. நீ மட்டும் என்ன கிழிக்கிறியாம்..??"

"ஹ்ஹ.. உங்களை மாதிரி அமெரிக்காகாரனுகளுக்கு நாங்க அடிமையா கெடக்கலடா.. ஐம் வொர்கிங் ஃபார் இன்டியன் கவர்ன்மன்ட்.. ஐம் வொர்கிங் ஃபார் ISRO ..!!" ராஜேஷ் பெருமையாக சொல்ல, அசோக் கேலியாக ஆரம்பித்தான்.

"ம்க்கும்.. எதுக்கெடுத்தாலும் இது ஒன்னை சொல்லிடு.. 'நான் ISROல வொர்க் பண்றேன்.. நான் ISROல வொர்க் பண்றேன்..'ன்னு.. என்னவோ டெயிலி ரெண்டு ராக்கெட்டும், நாலு சேட்டலைட்டும் செஞ்சு வானத்துல ஏவுறவன் மாதிரித்தான்..!! அங்க போய் ரெண்டும், நாலும் ஏழுன்னு தப்பு தப்பா அக்கவுண்ட்ஸ் எழுதப்போற.. அதுக்கு இப்படி ஒரு பில்டப்பு வேற..!! கணக்குப்புள்ளையா வேலை பாக்குறேன்னு டீசண்டா உண்மையை சொல்லி பழகு..!!"

"என்னது..?? கணக்குப்புள்ளையா..??" ராஜேஷின் முகம் அஷ்ட கோணலானது.

"ஆமாம்.. கணக்கு எழுதுறவன் பேரு கணக்குப்புள்ளை இல்லாம.. கீரிப்புள்ளையா..??" என்று சீரியசான குரலில் சொன்ன அசோக் தம்புவிடம் குனிந்து,

"தம்பு.. இனி உங்க மிஸ் 'வாட்ஸ் யுவர் ஃபாதர்..'னு கேட்டா.. 'மை பாதர் இஸ் எ கணக்குப்புள்ளை'ன்னு சொல்லணும்.. சரியா..??" என்றான்.

"ம்ம்.. சரி சித்தப்பா..!!" என்று தம்புவும் அப்பாவியாக தலையாட்டினான்.

"ஏய்.. உங்க சண்டைல ஏண்டா சின்னப்பையனை போட்டு இழுக்குற..??" அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த செல்வி இப்போது வாயை திறந்தாள்.

"ஏன்.. அப்பா என்ன பண்றார்னு அவனும் தெரிஞ்சுக்கட்டும்..!!" அசோக்கின் பதிலில் களைத்துப்போன செல்வி இப்போது கணவனிடம் திரும்பி சலிப்பாக சொன்னாள்.

"ஏங்க காலங்காத்தால இவன்கிட்ட போய் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கிறீங்க..??"

"நான் என்ன வாயை கொடுத்தேன்.. அவன்தான் தேவையில்லாம வந்து வம்பு இழுக்குறான்..!!" ராஜேஷ் சின்னப்பிள்ளை மாதிரி சொன்னான்.



"நான் என்ன வம்பு இழுத்தேன்..??" அசோக் சீற்றமாக கேட்க, செல்வி இடையில் புகுந்து தடுத்தாள்.

"ஐயா.. சாமீ.. உங்களை யாரும் ஒன்னும் கொறை சொல்லல..!! ஆபீசுக்கு நேரம் ஆச்சுன்னு சொன்னீங்கள்ல.. கெளம்புங்க மொதல்ல..!!"

என்று அசோக்கை கையெடுத்து கும்பிட்டாள். அசோக் இப்போது நிதானித்தான். அண்ணனையும் அண்ணியும் ஒருமுறை மாறி மாறிப் பார்த்தான். இருவருமே நொந்து போனவர்கள் மாதிரி நின்று கொண்டிருந்தார்கள். அதைப்பார்க்க அவன் மனதுக்கு கொஞ்சம் திருப்தியாக இருந்தது

"ம்ம்.. அந்த பயம் இருக்கணும்..!!" என்று கெத்தாக சொன்னவன், தம்புவின் கன்னத்தை பிடித்து கிள்ளியவாறே,

"ஸீ யு டா தம்பு.. சித்தப்பா ஆபீஸ் கெளம்புறேன்..!!" என்றுவிட்டு, உதடு குவித்து விசிலடித்தவாறே வீட்டை விட்டு வெளியேறினான்.


No comments:

Post a Comment