Friday, November 21, 2014

ரேவதி பாகம் 11


அருண் தன் வேலையில் சேர்ந்த அன்று தனக்கு கொடுக்கப் படும் அடுத்த ப்ராஜெக்டைப் பற்றி அறிந்து கொள்ள அவனது மேனேஜரும் நெருங்கிய நண்பருமான கேரி எட்வர்ட்ஸை சந்தித்தான். அவர்கள் ஆங்கில உரையாடலின் தமிழாக்கம்: “ஹாய், அருண் எப்படி இருந்தது ஆறு மாசம் ப்ரேக்?” “ம்ம்ம் .. நல்லா இருந்தது கேரி .. இங்க எப்படி போயிட்டு இருக்கு ..

““ப்ளான் படி தான் ... அதான் வாரா வாரம் பேசிட்டு இருந்தமே .. “அவனது ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக அவ்வாராய்ச்சியின் கண்டுபிடுப்புகளை உபயோகித்து ஒரு மென் பொருளை தயாரிக்க முடிவெடுக்கப் பட்டிருந்தது. அம்மென்பொருளில் எப்பகுதியை தான் எழுத வேண்டும் என்று அறிந்து கொள்ள அருண “சோ, நான் இப்ப எந்த மாட்யூல் எடுத்துக்கணும்” என்று கேட்டான். “அருண், இவ்வளவு நாளா நீ ஒரு தனி ஆளாதான் உனக்கு கொடுத்த வேலை எல்லாம் செஞ்சுட்டு இருந்தே .. இனிமேலும் நீ இஷ்டப் பட்டா அப்படியே தொடரலாம். ஆனா அது உன் வளர்ச்சிக்கு உதவாது .. அடுத்த கட்டமா நீ மத்தவங்க செய்யறதை மேற்பார்வையிடற பொஸிஷனுக்கு போகணும் .. “என்று கேரி இழுக்க




“தெரியும் ... உண்மையில நான் லீவுல போறதுக்கு முன்னாலயே இத பத்தி நான் உங்க கிட்ட பேசினேன் .. நீங்க தான் நான் இன்னும் அதுக்கு தயாரில்லைன்னு சொன்னீங்க .. " ““ம்ம்ம் ... கோபம் வந்து ப்ரேக் வேணும்னு லீவ் லெட்டரை நீட்டுனே. நான் உன்னை பெரிய ப்ரேக்கா எடுத்துக்கோன்னு சொல்லி அனுப்பினேன். நான் அப்ப நீ அந்த பொஸிஷனுக்கு ரெடி இல்லைன்னு சொன்னதுக்கு முதல் காரணம் உன்னோட முன்கோபம்”என்று அவன் முன்கோபத்தை ஆங்கிலத்தில்“SHORT FUSE”என்று குறிப்பிட்டார். தொடர்ந்து “மத்தவங்ககூட பேசும்போது அவங்க உனக்கு பிடிக்காத அல்லது தப்பானதை சொன்னாலும் கோபப்படாம விவாதித்து முடிவுக்கு வரும் நிதானம் உனக்கு இல்லைன்னு சொன்னேன். அந்த நிதானத்தை உனக்கு இந்த ஆறு மாத ப்ரேக் எந்த அளவுக்கு கொடுத்திருக்குன்னு தெரியலே. இருந்தாலும் நீ இதுவரைக்கும் செஞ்ச வேலையை பாத்துட்டு உனக்கு அந்த வாய்ப்பை கொடுக்கணும்னு என்னோட மேனேஜரே முடிவு செஞ்சு இருக்கார்.

உனக்கு தேவையான மன கட்டுப்பாட்டு முறைகளை கத்துக்க அதற்கான பயிற்சி முகாம்களுக்கு (Executive EQ Development & Coaching Programs) உன்னை அனுப்பறதுக்கும்முடிவு எடுத்து இருக்கார். கேட்டா டைரக்டரே எடுத்த முடிவுன்னார்” என்றார். “பட், உங்களுக்கு அதில உடன்பாடு இல்லேன்னா எனக்கு அந்த வாய்ப்பு வேண்டாம்” “சே, நான் அந்த அர்த்தத்தில் சொல்லல ... இந்த கம்பெனியே உனக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குதுன்னு சுட்டிக் காட்டறதுக்காக சொன்னேன்.” அதற்கு அருண் “கேரி, வேலையைவிட ஒரு பெரிய சாலஞ்ச் என் வாழ்க்கைல ஒண்ணு இப்ப இருக்கு. அந்த சாலஞ்ச்னால முன்னை விட எனக்கு இப்ப முன் கோபம் ரொம்பவே குறைஞ்சு இருக்கு.

 என்னால இந்த வேலையை எளிதா பண்ண முடியும அப்படீங்கற நம்பிக்கை இருக்கு”என்றதும் “என்ன அருண், என்னன்னு எங்கிட்ட சொல்ல மாட்டயா?” “நிச்சயம் சொல்லணும்னுதான் இருந்தேன் ...சொல்றேன் .. ஆனா இப்படி முதல் நாளே சொல்ல வேண்டியிருக்கும்னு நான் நினைக்கல ..“ என்றவாறு அவன் ரேவதியை சந்தித்ததிலிருந்து நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறினான். “நீ சொன்னது சரிதான் ... இந்த வேலைக்கு தேவையான மன பக்குவம் எல்லாம் ஒண்ணுமே இல்ல ..

இந்த கலாசாரத்திலயே இன்னும் முழுசா ஏற்றுக் கொள்ளப் படாத விஷயம் .. நான் உன்னை பாத்து ரொம்ப பெருமைப் படறேன் ... ஆனா ஓண்ணு நிச்சயம் உன் வாழ்க்கைக்காக நீ வரவழைச்சுக்கப்போற மனப்பக்குவம் உன்னை ஒரு தலை சிறந்த மேனேஜராக்க போகுது ...ஆல் த பெஸ்ட்". அருண் யூ.எஸ் சென்ற பின் ஒவ்வொரு சனிக் கிழமை இரவும் ரேவதியுடன் (அவளுக்கு இந்தியாவில் காலை) தொலை பேசியில் பேசுவது வழக்கமாகியது. அருண் எதிர்பார்த்தபடி தனது ஏழாம் செமஸ்டரில் எழுதிய ஒவ்வொரு பேப்பரிலும் தொண்ணறுக்கு குறையாமல் ரேவதி மதிப்பெண் பெற்று இருந்தாள்.

அந்த செமெஸ்டரில் வகுப்பில் முதல் இடத்தை பெற்று இருந்தாள். அருணுக்கு அதை கேட்டதும் அவளை தூக்கி தட்டாமாலை சுற்ற வேண்டும் போல இருந்தது. அவளிடமும் அதை சொன்னான். வெறுமனே சிரித்தாலும் அவர்களுக்கு இடையே இருக்கும் தூரத்தை வெறுத்தாள். அடுத்த செமெஸ்டர் தொடக்கத்தில் ரேவதி ஹாஸ்டலில் சேர்ந்தாள். வினிதாவும், பாஸ்கரும் அடிக்கடி சென்று அவளை ஹாஸ்டலில் பார்த்து வந்தனர். சில முறை வாரக் கடைசிகளில் அவளை வினிதா தன் இல்லத்திற்கு அழைத்து சென்றாள். விசாலாக்ஷியும் தண்டபாணியும் அவளை இன்னொரு மகளைப் போல் பார்க்கத் தொடங்கினர். அச்சமயங்களில் சனிக் கிழமை காலை தவறாமல் அருண் அவளை தொலைபேசியில் அழைத்துப் பேசுவதையும் கவனித்தனர்.

அடுத்த நாள் ரேவதி ஏதாவுது நான்-வெஜ் நன்றாக சமைத்து விசாலாக்ஷி மற்றும் தண்டபாணியின் பாராட்டுகளுக்கும் வினிதாவின் எரிச்சலுக்கும் ஆளானாள். அந்த செமெஸ்டரில் வரும் ப்ராஜெக்ட் வொர்க் செய்வதற்கு அருண் தன் நண்பன் ஒருவன் மூலம் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஏற்பாடு செய்தான். கேம்பஸ் இன்டர்வ்யூ ஒன்றிலும் அவள் கலந்து கொள்ளவில்லை. "மூணு பேப்பர் அரியர்ஸ் அதுவும் அடுத்த செமெஸ்டர்லயே நிறைய மார்க் வாங்கி பாஸ் பண்ணி இருக்கே.

 நான் வேணும்னா சிபாரிசு செய்யறேன் ... நீ கேம்பஸ் இன்டெர்வ்யூ அப்பியர் ஆகலாம்" என்று அவள் பேராசிரியர் சொன்னதை அருணிடம் கலந்து ஆலோசித்தாள். அருண் அவள் எம்.டெக் செய்வதையே விரும்புவதை உணர்ந்து பேராசிரியரிடம் தனக்கு மேல் படிப்பில் ஆர்வமுள்ளதாகக் கூறினாள். ரேவதியின் செமெஸ்டர் தொடங்கி சில மாதங்களில் ஒரு நாள் பாஸ்கருடன் அருண் தொலைபேசியில் உரையாடியவை: அருண், “என்னடா? How is life treating you?” “ம்ம்ம் Going Greatடா .. I have some news for you” என்று பாஸ்கர் உற்சாகத்துடன் தொடங்க “என்ன? Good News Bad News Formatல கொடுக்கப் போறயா?" என்று அருண் நக்கலடித்தான்.

 "இல்ல வெறும் குட் ந்யூஸ்தான். .. நான் எங்க அப்பாகிட்ட எங்க மேட்டரை சொல்லிட்டேன் .. அவரும் ஓ.கே சொல்லியாச்சு. அவர் தண்டபாணி அங்கிள் கிட்ட பேசிட்டாரு." "வாவ், எப்படிடா மேனேஜ் பண்ணினே?" "ஆக்சுவலா, எங்க அப்பாவுக்கு தண்டபாணி அங்கிள் ஏற்கனவே சொல்லி இருக்காரு ... ஆனா அவருக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு தான் தெரியல" "ஆமா, உங்க மேட்டர் ரொம்ப சீக்ரடிவா வெச்சு இருக்கறதா நினைச்சுட்டு இருந்தீங்களே ஒழிய .. அப்படி நடந்துக்கல ... வினி க்ளப்புக்கு வந்து உன்னை மீட் பண்றதை யாராவது பாத்து மாமாகிட்ட சொல்லி இருப்பாங்க .. நீ அவ க்ளினிக்குக்கே போய் மீட் பண்ணறதெ அங்க அவ சீனியரே கூட பாத்து அத்தைகிட்ட சொல்லி இருப்பாங்க..."

 "எப்படியோ, நாங்க ஃபேமிலியோட அவங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டு போயிட்டு வந்தோம். வினியோட அம்மாவும் ஓ.கே சொல்லிட்டாங்க” “Wow! நிஜமாவே க்ரேட் நியூஸ்டா மச்சி .. எப்ப கல்யாணம்” “இரு இரு, க்ரேட் நியூஸ் அது மட்டும் இல்லை .. நான் எங்க அப்பா கிட்ட வினியை பத்தி சொல்றதுக்கு முன்னால ஒண்ணு நடந்துது...” “டேய், என்ன சினிமா படம் காமிச்சுட்டு இருக்கயா? மொதல்ல ஒண்ணை சொல்லி அப்பறம் அதுக்கு ஃப்ளாஷ் பேக் போட்டுட்டு இருக்கே” “இல்லடா எங்க மேட்டரை பத்தி தெரிஞ்சுக்க நீ ஆர்வமா இருப்பயேன்னு அதை மொதல்ல சொன்னேன்”

 “சரி, சொல்லு ..” “நீ இருக்கும் போது அடிக்கடி உங்கிட்ட பேசிட்டு இருந்தேன் இல்ல .. எங்க பிஸினஸ்ஸை டெவலப் பண்ணறதைப் பத்தி?" "ஆமா, ந்யூ மார்கெட்ஸ் டெவலப் பண்ணறதைப் பத்தியும் ப்ரொடக்ஷன் கபாஸிடி இன்க்ரீஸ் பண்ணறதைப் பத்தியும்தானே?" "ஆமா, யூரோப்பியன் மார்க்கெட் டெவலப் பண்ணறதைப் பத்தி அப்பறம் புது யூனிட் ஒண்ணு பெங்களூர்ல போடறதைப் பத்தியும் நீ சொன்ன மாதிரி ஒரு ப்ரசென்டேஷன் பிரிபேர் பண்ணி எங்க அப்பாகிட்டயும் அண்ணன் கிட்டயும் காமிச்சேன். ரெண்டு பேருக்கும் ரொம்ப புடுச்சுப் போச்சு.

அப்பா என்னை அதுக்கு முழு பொறுப்பு ஏத்துக்க சொல்லி இருக்கார். இப்ப பண்ணிட்டு இருக்கறதெல்லாம் வேற ஒருத்தர்கிட்ட ஹாண்ட் ஓவர் பண்ணிட்டு இருக்கேன்” "பிச்சுட்டடா, ஆனா ஒண்ணு கல்யாணம் பண்ணப் போற சமயத்துல இப்படி எக்கச்சக்கமா வேலையை இழுத்துப் போட்டுட்டா உன் மேரீட் லைஃப் கொஞ்சம் அஃபெக்ட் ஆகுமே?.... வினிகிட்ட முதல்லயே சொல்லிடு .. எதாவுது மொடங்கு பண்ணினான்னா இதுவரைக்கும் மாமா வேலை பண்ணுனதைப் பத்தியும் அதை இனிமேல் பண்ண வேண்டியதில்லைன்னும் சொல்லு .. நிச்சயம் ஒத்துக்குவா. ஒரே பயம் என்னன்னா உன் சகவாசமே வேண்டாம்னு சொல்லறதுக்கும் சான்ஸ் இருக்கு!"

 "மவனே .. நீயே என்னை போட்டுக் கொடுத்துடுவடா! இப்ப இந்த வேலையெல்லாம் இருக்கறதால கல்யாணத்தை ஒரு வருஷம் தள்ளி வெச்சு இருக்கோம் .." "அத்தை மாமா வினி எல்லாம் இதுக்கு ஒத்து கிட்டாங்களா? "அது மட்டும் இல்ல நான் எம்.பி.ஏ முடிக்காம கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேன் .. ஒத்துகிட்டாங்க" "பின்ன அவங்க மான பிரச்சனையில்ல .. சரி, நிஜமாவே முடிச்சுடுவையா?" "படிக்க ஆரமிச்சுட்டேன் தெரியுமில்ல? கல்யாணப் பத்திரிகைல பாஸ்கர் எம்.பி.ஏன்னு வரப் போகுது" "I am thrilled டா .. பட்டைய கெளப்பு ..." ரேவதி பி.ஈ. கடைசி செமஸ்டர் பாடங்களுடன் GATE தேர்வுக்கும் சேர்த்து படித்தாள். இரண்டு தேர்வுகளையும் நன்கு எழுதினாள். தொண்ணூறை நெருங்கிய சராசரி மதிப்பெண்கள் பெற்று எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினாள்.

அரியர்ஸ் வாங்கினால் ஃபர்ஸ்ட் க்ளாஸ் கொடுப்பதை மறுக்கும் பல்கலைக் கழகத்தையே அவ்விதிமுறையை மறு பரிசீலனை செய்ய வைத்தாள். ஐ.ஐ.டி மும்பையில் எம்.டெக் சேர விண்ணப்பித்து இருந்த அனைவரையும் விட GATE தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று இருந்தாள். அருணின் நண்பரான ஐ,ஐ.டி மும்பை ஹெச்.ஓ.டி ... அவளுக்கு சிபாரிசே தேவையில்லை என்று அவள் விண்ணப்பித்து இருந்த Software Engineering Specialization பிரிவில் இடமளித்தார்.

 கடைசி செமெஸ்டர் முடிந்து வந்த விடுமுறை நாட்களில் அவளை அடையார் ஃப்ளாட்டில் தங்கவிடாமல் விசாலாக்ஷியும் தண்டபாணியும் அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து மும்பை புறப்பட்டாள். மும்பையில் அடுத்த ஒரு வருடம் மூன்று மாதங்கள் அவளுக்கு கண்மூடித் திறக்குமுன் கழிந்தன .. அருணும் அந்த பதினைந்து மாதங்களில் Product Architect பதவி ஏற்று பலருடைய பாராட்டையும் பெற்றிருந்தான். அவனுக்கு வெகு சீக்கிரம் Product Manager பதவி கிட்டும் என்றும் அந்த நிறுவனத்தின் Rising Star என்றும் பரவலாக பேசப் பட்டது. வேலை பளுவால் இடையில் இந்தியா வர இயலவில்லை. ரேவதியின் எம்.டெக் மூன்றாம் செமெஸ்டரின் நடுவில் வினிதா-பாஸ்கர் திருமணம் நிச்சயிக்கப் பட்டு இருந்தது.

 ரேவதிக்கு வினிதாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ... "என்ன ரேவதி எப்படி இருக்கே?" "ம்ம்ம் நல்லா இருக்கேன்கா .." "ஃபர்ஸ்ட் இயர் ஹாலிடேல எதோ ப்ராஜக்ட் பண்ணறேன்னு சொன்னியே நல்லா பண்ணினயா?" "நல்லா பண்ணி முடிச்சேன்... இப்ப அந்த கம்பெனிலயே ஃபோர்த் செமெஸ்டர்ல இன்டர்ன்ஷிப்புக்கு கூப்பிட்டு இருக்காங்க .. அனேகமா நான் அதை அவங்க சென்னை சென்டர்லயே பண்ணலாம்" "ஓ, கடைசி ஆறு மாசம் முழுக்க இன்டர்ஷிப்தானா? It will be nice if you can spend that time here in Chennai. சரி, பத்திரிகை வந்துது இல்ல?" "ம்ம்ம் ..வந்துது, நான் நிச்சயம் கல்யாணத்துக்கு வந்துடுவேன்" "ஏய், நீ அதுக்கு ஒரு வாரம் முன்னாலயே வரணும்.

என்னோட நிறைய பர்ச்சேஸஸ் எல்லாம் நீ வந்தப்பறம் வாங்கலாம்னு இன்னும் பெண்டிங்க்ல வெச்சு இருக்கேன் ... இதோ அம்மா பேசறாங்களாம்" விசாலாக்ஷி, "ரேவதி, எப்படீ வரப்போறே? அவனக்கேட்டா என்னவோ ரிலீஸ் இருக்கு கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னால் வந்துட்டு கல்யாணம் முடிஞ்சு ஒரு நாளைக்கப்பறம் திரும்பி போறதா சொல்றான் ... நீயும் அந்த மாதிரி பண்ணினே அப்பறம் என் கூட பேசவே கூடாது சொல்லிட்டேன்" "இல்ல ஆண்டி, எனக்கு இது வரைக்கும் சென்ட் பர்ஸென்ட் அட்டெண்டன்ஸ் இருக்கு ... நிறைய நாள் லீவ் எடுக்கலாம் ..

வினிக்கா சொன்ன மாதிரி வர்றேன்... இன்னைக்கே ட்ரெயின் டிக்கட் புக் பண்ணிடறேன்...." "ட்ரெயின்ல வரவேண்டாம் .. அங்கிள் உனக்கு ஃப்ளைட்ல புக் பண்ணறதா இருக்காரு என்ன டேட்டுன்னு அவருக்கு ஈமெயில் பண்ணிடு .. அவர் உனக்கு ஏர் டிக்கட் ஏற்பாடு பண்ணிடுவாரு.." "எதுக்கு ஆண்டி, வீண் செலவு?"
"வீண் செலவெல்லாம் ஒண்ணும் இல்ல .. சும்மா இரு .. கல்யாணத்துக்கு அப்பறம் ஒரு மூணு நாலு நாளாவுது எங்க கூட இருக்கற மாதிரி வா .. " என்று மகள் பிரியப் போகும் சமயத்தில் துணைக்கு இருக்குமாறு ரேவதியை அழைத்தாள். மனம் நெகிழ்ந்த ரேவதிக்கு தொண்டை அடைக்க "சரி ஆண்டி .. " என்ற உடனே இணைப்பை துண்டித்தாள்.

 திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னமே ரேவதி வந்தாள். ரேவதியின் ட்ரெஸ் சென்ஸ்ஸை மிகவும் ரசித்த வினிதாவும் விசாலாக்ஷியும் வினிதாவுக்கான நகை, புடவை மற்ற துணிகள் இவையெல்லாவற்றையும் ரேவதியின் ஆலோசனைப் படி தெர்ந்தெடுத்தார்கள். திருமணத்திற்கு இரண்டு நாளுக்கு முன் வந்த அருண் தனது அடையார் ஃப்ளாட்டிற்கு சென்று பிறகு பாஸ்கரின் அழைப்பினால் கடைசி நிமிஷ ஷாப்பிங்கிற்கு அவனுடன் செல்ல வேண்டியதாயிற்று. திருமணத்திற்கு முந்தைய நாள்தான் வினிதா வீட்டிற்கு வந்தான். ரேவதி அவனிடம் சில வார்தைகள் பேசிவிட்டு அங்கு பம்பரமாக சுழன்று கொண்டிருந்ததைப் பார்த்து வாய்பிளந்து அமர்ந்திருந்தான். மாலை அனைவரும் மாப்பிள்ளை அழைப்பிற்கும் அதை தொடர்ந்த நலங்கிற்கும் தயாராக அருண் தன் ஃப்ளாட்டிற்கு சென்று அங்கிருந்து வருவதாக்க் கூறி விடை பெற்றான்.

 மாப்பிள்ளை அழைப்பின் போது வெளியில் மற்ற ஆடவருடன் நடந்து வந்த அருண் அங்கு தாம்பூலத்தட்டு ஏந்தி வந்த பெண்களுடன் ரேவதியை காணாது சிறிது துணுக்குற்றான். மாப்பிள்ளை அழைப்பு முடிந்து உள்ளே நடந்து கொண்டிருந்த நலங்கிலும் ரேவதியை மணப்பேண் வினிதாவின் அருகே காணவில்லை. அருண் சுற்று முற்றும் பார்க்க, வந்திருந்த விருந்தினருக்கு போட்டிருந்த நாற்காலிகளில் ஒரு ஓரத்தில் முனியம்மா சகிதம் ரேவதி அமர்ந்திருப்பதை கண்டான். கணத்தில் அதன் காரணத்தை யூகித்த அருண் விசாலாக்ஷியை தனியே அழைத்து இறுகிய முகத்துடன் “என்னத்தை, வீட்டுல கல்யாண வேலை செய்யறதுக்கும் துணி மணியெல்லாம் செலெக்ட் பண்ணறதுக்கும் ரேவதி வேணும் ..

இப்ப அவ வேண்டாதவளா போயிட்டாளா?” என்றவனை பரிதாபமாக பார்த்த விசாலாக்ஷி “இது நாங்க எடுத்த முடிவு இல்ல. ரேவதி எடுத்தது ... நாங்க எல்லாம் நேத்து நைட்டு ரொம்ப நேரம் பேசியாச்சு. கடைசில அவ சொன்னது சரின்னு பட்டுது .. நான் இங்க நலங்கில நிக்கணும் .. நீ என்னை தப்பா எடுத்துக்கறதுக்கு முன்னாடி மாமா கிட்ட பேசு ..” நேராக அவரிடம் சென்றவனை அவன் வருவதை முன் கூட்டியே கண்ட தண்டபாணி அவனை தனியே அழைத்து சென்றார். “என்ன ரேவதி ஏன் எதுலயும் கலந்துக்கலன்னுதானெ கேக்கப் போறே?”

 “ம்ம்ம்" “நீ விசாலத்துகிட்ட பேசிட்டு இருந்தப்பவே நோட் பண்ணினேன் .. சொல்றேன் .. அவ மேடைல இருக்கறப்ப அவளை பத்தி தெரிஞ்சவங்க யாராவுது பாத்தா எனக்கும் பாஸ்கரோட அப்பாவுக்கும் அவமானம்னு ரேவதியேதான் இந்த முடிவை எடுத்தா. முதல்ல நாங்க மூணு பேருமே இதுக்கு ஒத்துக்கல .. நம்ம வீட்டுல எல்லாருக்கும் அவளை தெரியும் ஆனா பாஸ்கர் வீட்டுல அப்படி சொல்ல முடியாதுன்னு ரேவதி சொன்னதும் சரின்னு பட்டுது .. நானும் உங்கத்தையும் பொண்ணைப் பெத்தவங்க அருண் .. கல்யாணத்துல எந்த விதமான தடங்கலும் வரக் கூடாதுன்னு இந்த முடிவுக்கு வினியையும் ஒத்துக்க வெச்சோம்.

பட், ஐ அம் ரியலி சாரி” அருணின் கண்களில் இருந்த சோகத்தையும் அதை மீறிய உக்கிரத்தையும் தவிர்த்த தண்டபாணி வராத விருந்தினரை வரவேற்பது போல் அவனிடமிருந்து விடை பெற்றுச் சென்றார். தனியே ஒரு மூலையில் நின்றவாறு ரேவதியை பார்த்துக் கொண்டிருந்தவன் சம்பிரதாயத்திற்கு சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு வெளியேறினான். அடுத்த நாள் காலை ஒன்பது மணி முகூர்த்ததிற்கு ஏதாவுது வேலை இருக்கும் என்று ஏழு மணிக்கே மண்டபத்தை அடைந்த அருண் மணப்பெண்ணை அலங்கரிப்பதில் ரேவதி ஈடுபட்டிருப்பதைக் கண்டான். முகூர்த்த நேரம் நெருங்கும் சமயம ரேவதி தானும் விசாலாக்ஷி வாங்கி கொடுத்த புதுப் புடவையும் அவர் கொடுத்து இருந்த நகைகளையும் அணிந்து பின் வழியே வெளியில் சென்று அன்வர் பாய் சகிதம் வரும் முனியம்மாவின் வரவிற்காக மண்டபத்தின் வாசலில் காத்திருந்தாள். அவர்கள் வந்த்தும் அவர்க்ளுடன் மற்ற விருந்தினர்களுடன் ஒரு பார்வையாளர் நாற்காலியில் அமர்ந்து திருமணத்தைப் பார்த்தாள்.

 அதுவரை அவளது நடவடிக்கை அனைத்தையும் பார்த்த அருண் மணமேடையின் ஒரு மூலையில் நின்று அவளை பார்த்த படி நின்றிருந்தான். ரேவதி சால்மன் பிங்க் எனப்படும் வெளிர் சிவப்பு நிறத்தில் மைசூர் க்ரேப் சில்க் புடவையுடுத்தி அளவான ஆபரணங்கள் அணிந்து ஒரு தேவதை போல் மிக்க மரியாதைக்குரிய தோற்ற மளித்தாள். இனிமேலும் அங்கு இருந்தால் அழுதுவிடுவோமென்று தாலி கட்டுமுன்பே சாப்பாட்டு பந்தியை மேற்பார்வையிடச் சென்றான். அடுத்த நாள் வினிதா-பாஸ்கர் தம்பதியினரின் தேனிலவுப் பயணத்துக்கு வழியனுப்ப அருணும் ரேவதியும் விமான நிலையம் சென்று இருந்தனர். பாஸ்கரிடம் வினிதா ரேவதி அடுத்த செமெஸ்டரில் இன்டர்ன்ஷிப்புக்கு சென்னை வருவதைப் பற்றி சொல்லி அவள் இன்டர்ன்ஷிப் செய்யப் போகும் நிறுவனத்தின் பெயரைச் சொன்னதும் பாஸ்கர் அருணைப் பார்த்து ஏதோ கூற முற்பட அருண் கண்களால் அவனைத் ஏதும் கூறாமல் இருக்கும்படி தடுத்தான்.

 அவர்களிடம் இருந்து விடைபெற்று உள்ளே சென்றதும் வினிதா பாஸ்கரிடம். “என்ன ரகசியம் உங்க ரெண்டு பேருக்குள்ள? நீங்க ஏதோ சொல்ல வந்த்தை அருண் தடுத்தாரு?” பாஸ்கர், ‘அப்பாடா, இந்த ரகசியத்தை சொல்லி வேற எதுவும் இல்லைன்னு சொல்லிடலாம்’ என்று நினைத்து, “அருண் இங்க இருந்தப்ப ஒரு பையனைப் பத்தி விசாரிக்க சொன்னான். அவனும் ரேவதி இப்ப இன்டர்ன்ஷிப் செய்யப் போற கம்பெனிலதான் வொர்க் பண்ணிட்டு இருக்கான். அதைச் சொல்ல வந்தேன். எதுக்கோ தெரியல. சொல்ல வேண்டாம்னு ஜாடை காமிச்சான்” “அந்த பையன் பேர் என்ன?” “வசந்த் .. ரேவதி படிச்ச அதே காலேஜ்ல தான் படிச்சான்” “அவன் யாருன்னு உங்களுக்கு தெரியாதா?” “அதான் அவன் யாரு என்னங்கற விவரம் எல்லாம் கலெக்ட் பண்ணி கொடுத்தேனே .. தெரியாம இருக்குமா?” என்று “உங்க பெருமைய நீங்கதான் மெச்சிக்கணும்”

 “ஏய் என்ன நீ கல்யாணம் ஆன அடுத்த நாளே காலை வாரரே. அவனைப் பத்தி வேற என்ன தெரியணும்?” “ம்ம்ம் ரேவதிக்கு அவன் ரெண்டு வருஷம் சீனியர் .. “ “ம்ம்ம் .. ரேவதி ஃபைனல் இயர் படிக்கும்போது அவன் ரெண்டு வருஷத்துக்கு முன்னால முடிச்சு இருந்தான் .. அப்ப அவன் ரேவதிக்கு ரெண்டு வருஷம் சீனியராத்தான் இருக்கணும் .. அதுக்கு என்ன?” “ரேவதி கொஞ்ச நாள் அவனை காதலிச்சு இருக்கா ...” பேயறைந்த முகத்துடன் “அடப்பாவமே, இப்ப மறுபடி அவனை ரேவதி சந்திக்க வாய்ப்பு இருக்கில்ல? இந்தப் பய வேற அவனோட காதலை இன்னும் சொல்லாம இருக்கான்?” “அதை தான் நானும் யோசிச்சேன் ... சோ வாட்? எப்படியோ, ரேவதிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும் .. அது வசந்த் மூலமா இருந்தா என்ன?” “ஏ, என்ன சொல்றே நீ? அருண் அவளை எந்த அளவுக்கு காதலிக்கறான்னு தெரியுமா உனக்கு .. வேண்டாம் அவன் மனசொடைஞ்சு போயிடுவான் .. அவனை அந்த மாதிரி இன்னோரு தடவை என்னால பாக்க முடியாது” என்று அருணின் தாய் தந்தையரின் பிரிவிற்குப் பிறகு அவனுடன் ஹாஸ்டலில் கழித்த நாட்களை நினைவு கூர்ந்தான்.

 “இப்படி யோசிச்சு பாருங்க அருணை கட்டிக்க பொண்ணுங்க க்யூல நிப்பாங்க .. உங்களுக்கு தெரிஞ்சு அந்த தொழில்ல இருந்த ஒரு பொண்ணுக்கு அவ மொதல்ல காதலிச்சவனோட ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சுதுன்னா, I think Arun also will approve of it” “ம்ம்ம் .. தெரியலேம்மா ..“ என்ற பிறகு அவள் சொற்களின் உள் அர்தத்தை புரிந்தவனாக, “எனக்கு அவ அந்த மாதிரி இருந்தான்னு நீ சொல்லித்தான் தெரியும்” என்று சப்பைக் கட்டு கட்ட முயன்றான். ஏளனத்துடன் சிரித்த வினிதா, “ஐய்யே? அருண் சரியாத்தான் சொன்னாரு .. உங்களுக்கு பொய் சொல்ல வராதுன்னு. நீங்க உங்க பையர்ஸ்க்கு அவளை ப்ரோக்கர் மூலம் ஃபிக்ஸ் பண்ணி அனுப்புனது எல்லாம் எனக்கு தெரியும். ரேவதி சொல்லி இருக்கா. எனக்கு தெரியும்னு அருணுக்கும் தெரியும்” “உனக்கு தெரியுமா?

அப்பாடி, இப்ப எனக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா?” என்ற அடுத்த கணம் இவ்வளவு நாளும் அருண் அவனை முட்டாளாக்கி மிரட்டிக் கொண்டிருந்த்தை நினைத்து பல்லைக் கடித்து, “ஆனா ஒண்ணு சொல்றேன் பாரு, இந்த அருண் பயலுக்கு எத்தனை வருஷம் ஆனாலும் இந்த குறும்பு புத்தி போகாது” “எனக்கு சொல்லிடுவேன்னு உங்களை மிரட்டிட்டு இருந்ததை சொல்றீங்களா ..” என்றபடி வாய்விட்டு சிரித்த வினிதாவையும் பார்த்து பல்லைக் கடித்தவனிடம் “ஐய்யோ .. இப்படி எல்லாம் கோவப் படாதடா கண்ணா .. உனக்கு சரியா கோவப் படவும் தெரியாது” என்றவாறு பொது இடமென்று பாராது அவன் கழுத்தை வளைத்து அவன் இதழோடு இதழ் பதித்தாள். வழியனுப்பியபின வீடு திரும்புகையில் அருணின் மௌனத்தை கலைக்குமாறு ரேவதி, “ஏன் முந்தா நாள் சாயங்காலத்துல இருந்து இப்படி உம்முன்னே இருக்கீங்க?”

 “ம்ம்ம் ... உனக்கு தெரியாதாக்கும்?” “ஓ, நான் கல்யாணத்துல கலந்துக்கலேன்னு உங்களுக்கு என் மேல கோவம் இல்ல?” “உன்மேலயும் அப்பறம் மத்தவங்க மேலயும் தான் ...” “அப்பா! நீங்க ரொம்ப மாறிட்ட மாதிரி இருக்கு ... உங்க மூஞ்சில இருக்கற கோவத்துக்கு இவ்வளவு நேரம் ரொம்ப திட்டி தீத்து இருப்பீங்க .. என்னாச்சு?“ “சும்மா காய் மூய்னு கத்தறதுல ப்ரயோஜனம் இல்லேன்னு கத்துகிட்டேன்” “வந்ததுல இருந்து கொஞ்ச நேரம் கூட எங்கிட்ட பேசல .. நீங்க எங்கிட்ட பேசி ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சு ... இப்ப ஃபோனல பேசறதா நெனைச்சுட்டு பேசுங்க” என்ற அவள் கிண்டலாக தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த வாய் விட்டு சிரித்த அருண்,

 “சாரிடா, .. விடு, ... “ என்றவாறு அவளுடன் எப்பொழுதும் போல் பேசத் தொடங்கி அவள் தோள்மேல் கை போட்டு மற்ற கையால் காரோட்டிய படி, “சரி, மேடம் ரெண்டு வாரத்துக்கும் சேத்து அப்டேட் குடுங்க .. “ என்று கேட்க அதுவரை அவனை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டு இருந்த ரேவதி எங்கே தன் கண்களில் வழிந்த காதலை அருண் பார்த்து விடுவானோ என்று பார்வையை அகற்றினாள். “அப்டேட் இருக்கட்டும், உங்களுக்கு எப்ப கல்யாணம்?” “எனக்கா? ம்ம்ம் ஒரு பத்து மாசத்துக்கு அப்பறம்தான் அதைப் பத்தி யோசிக்கறதா இருக்கேன்” என்று அருண் தன் காதலை சொல்ல தகுந்த நேரத்தை கணக்கிட்டவாறு சொல்ல ரேவதியின் மனதில் ஒரு ஓரத்தில் வலித்ததும் ‘நான்தானே இவரை காதலிக்கறேன்?.

இவர் என்னை ஒரு நல்ல ஃப்ரெண்டாத்தானே பாக்கறாரு? அப்பறம் ஏன் எனக்கு என் தகுதிய மீறின இந்த பொறாமை?’ என்று தன்னையே நொந்து கொண்டாள். நேரில், “அது என்ன பத்து மாசக் கணக்கு?” “இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள எங்க கம்பெனி இண்டியால ஒரு டெவலப்மென்ட் சென்டர் ஆரம்பிக்கறாங்க. எனக்கு அதுல ஒரு managerial position கிடைக்க வாய்ப்பு இருக்கு .. அது தெரிஞ்சதுக்கப்பறம்தான் முடிவு செய்யப் போறேன்” என்று மழுப்பினான். பிறகு வழி நெடுக இருவரும் எப்போதும்போல பேசிக்கொண்டு வந்தனர். அடுத்த நாள் அருண் அமெரிக்கா திரும்பினான். விசாலாக்ஷி-தண்டபாணி தம்பதியினருடன் அடுத்த ஐந்து நாட்களை கழித்த ரேவதியை தம்பதியினர் இருவரும் விமான நிலையத்திற்கு வந்து கண்கலங்கி ஆரத்தழுவியபின் மும்பைக்கு வழியனுப்பினர்.

 அடுத்த மூன்று மாதங்களும் கண் மூடித் திறக்குமுன் காணாமல் போயின. அடுத்த ஆறு மாதங்களை மறுபடி சென்னையில் கழிக்கப் புறப்பட்டு வந்தாள். அவள் இன்டர்ன்ஷிப் செய்யப் போகும் அலுவலகம் விசாலாக்ஷி-தண்டபாணி தம்பதியினர் வீடு மற்றும் அடையார் ஃப்ளாட் இவ்விரண்டிலிருந்தும் வெகு தூரமானதால் ரேவதிக்கு ஒரு பேயிங்க் கெஸ்ட் (PG) விடுதியில் தங்க ஏற்பாடு செய்தனர். இன்டர்ன்ஷிப் என்பது முழுநேர பணியை போன்றதே. அவளது அறிவாற்றலையும் கொடுத்த வேலையை செவ்வனே செய்து முடிக்கும் திறமையையும் கண்டு ஒரு நல்ல ப்ராஜெக்டில் அவளுக்கு பணியிட வாய்ப்பளித்து இருந்தனர்.

 
இவ்வளவு நாளும் வீடு அல்லது ஹாஸ்டல் மற்றும் கல்லூரியிலுமாக இருந்தவளுக்கு அந்த ஆறு மாதங்கள் ஒரு பலப் பரீட்சையாக இருந்தது. காலையில் தன் விடுதியிலிருந்து அலுவலகம் செல்லும் போதும் மாலை திரும்பும் போதும் சில முறை அவளது பழைய வாடிக்கையாளர்களையும் ப்ரோகர்களையும் வழியில் பார்க்க நேர்ந்தது. அதில் பெரும்பாலோர் அவள் தொழிலில் இருந்து விலகியதை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டாலும் ஒரு சிலரிடம் சொல்லடி படத்தான் செய்தாள். அலுவலகத்தில் யாருக்கும் தெரியக்கூடாது என்று மிகவும் கவனமாக இருந்தாள்.

இப்படி ஓடி ஒளிவதில் துளியும் விருப்பம் இல்லாவிட்டாலும் தன் கடந்த காலத்தால் அவளுக்கு அலுவலகத்தில் அவப் பெயர் வேண்டாம் என்று நினைத்தாள். இன்டர்ன்ஷிப் முடிந்ததும் (எம்.டெக் முடிந்ததும்) அவளுக்கு நாற்பதாயிரத்துக்கு மேல் சம்பளத்தில் முழுநேர வேலைக்கு அந்த கம்பெனியிலேயே ஆஃபர் லெட்டர் (முழுநேர வேலைக்கு அழைப்பு கடிதம்) கொடுத்தார்கள். அவள் தனக்கு சென்னையில் இருக்க விருப்பமில்லை என்றும் முடிந்த வரை ஆன்-சைட் அசைன்மென்டில் ஏதாவது அயல் நாட்டில் பணியிட விரும்புவதாகவும் கூறினாள்.

அப்படி இருந்தால் மட்டுமே அவர்களது அழைப்பை ஒப்புக் கொள்வதாக கூறினாள். முதல் ஒரு மாதம் மட்டும் சென்னையில் இருந்த பிறகு ஆன்-சைட் அசைன்மென்டில் அவளை அமெரிக்காவிற்கு அனுப்புவதாகவும் அது முடிந்த பின் பெங்களூர் கிளையில் வேலை அளிப்பதாகவும் அவளுக்கு உத்திரவாதம் கிடைத்தது. அருணுடன் கலந்தாலோசித்த பிறகு அவர்கள் ஆஃபருக்கு ஒப்புதல் அளித்தாள்.



No comments:

Post a Comment