Wednesday, November 19, 2014

ரேவதி பாகம் 6


'இவ கிட்ட நான் பெரிய கம்ப்யூடர் கம்பெனில இருக்கறதா சொல்லவே இல்லயே! சரி, சரி, கம்ப்யூடர் படிக்கற பொண்ணுக்கு கம்ப்யூடர் கம்பெனில இருக்கறவன் வேலைக்கு ஏற்பாடு பண்ணறதா சொன்னாத்தான நம்பும்படியா இருக்கும்னு சொல்லி இருக்கா' என்று அவள் சமயோசிதத்தை பாராட்டியவாறு அகிலாவைப் பார்த்து புன்முறுவலளித்தான்.

கைகூப்ப கைகளை மேலெடுக்கப் போவதை உணர்ந்த அருண் அவளது ஒரு கையை தன் இரு கைகளாலும் பற்றி "நீங்க சிரமப் படுத்திக்க கூடாது .." என்றதும் அகிலாவின் முகத்தில் ஒர் ஆனந்தம் பரவியது ... தொடர்ந்து ரேவதி அகிலாவுக்கு ஒன்றுமே நடக்காதது போல் பேசுவதைத் தொடர்ந்தாள், "அப்பறம் இன்னோரு ஃப்ரெண்டுகிட்ட கேட்டேன், ஃபெயில்னு வந்திருக்கற அந்த மூணு பேப்பருக்கும் மறுபடி திருத்தறதுக்கு காலேஜுக்கு எழுதிப் போட்டா எல்லாத்துலயும் பாசானாலும் ஆகுமாம்.

அவளுக்கும் அப்படி ஒரு தடவை ஆச்சாம்" "டாக்டர் சொன்னாரும்மா, நீ மனச போட்டு ரொம்ப குழப்பிட்டு இருந்தா மறுபடி மறுபடி வாந்தி வந்து ஆபரேஷன் தள்ளிட்டே போகும்ன்னார் ..."
"எங்கடி, நான் ராத்திரி தூங்கிட்டுத் தானெ இருந்தேன் .. அப்படியும் வாந்தி வந்துதே" "இல்லம்மா அவங்க தூக்க மருந்து குடுத்தாதான் உனக்கு தூக்கம் வருது .. அந்த தூக்க மருந்துனால கூட வாந்தி வரலாமாம் அப்படீனனார். நீ எதப் பத்தியும் நினைக்காம இருந்தேன்னா தன்னால் தூக்கம் வரும் .. அப்படி ஒண்ணு ரெண்ண்டு நாள் தூங்கினா ..

அடுத்த நாள் ஆபரேஷன்" என்று மனதுக்குள் அழுதவாறு அவள் கதையளக்கும் போது உள் நுழைந்த டாக்டர் ரேவதியின் பேச்சை சற்று ரசித்து அருணிடம் வெளியில் வருமாறு சைகை செய்தார் வெளியில் அருணிடம், "நானே அந்தப் பொண்ணுகிட்ட சொல்லணும்னு நெனச்சேன் .. நல்ல சந்தோஷமாப் பேசச்சொல்லி .. ஐ திங்க் நீங்க சொல்லியிருக்கீங்க இல்லன்னா அந்த பொண்ணு இருந்த மனநிலைல இப்படி பேசத் தோணியிருக்காது .. " என்று அவனை பாராட்டினார்

 "Its the least I could do doctor .." என்றபிறகு "டாக்டர், அவங்களுக்கு குடிக்க ஏதாவுது குடுக்கலாமா" என்று சாவிற்கு முன் கடைசியாக் வாயில் ரேவதியின் கையால் அகிலாவுக்கு ஏதாவது புகட்டமுடியுமா என்பதை மறைமுகமாகக் கேட்டான் .. "வை நாட் .. " என்று அவனைப் பார்த்து ஒரு சோகப் புன்னகைவிடுத்து, "இப்ப அவங்க வயிறு குடல் எல்லாம் கைமீறிப் போன விஷயம் .. கொஞ்சம் தண்ணி குடுக்க சொல்லுங்க .. வாந்தியெல்லாம் வராது .. " என்றவாறு அறைக்குள் நுழைய தண்ணீர் எடுத்து வர அருண் வெளியில் சென்றான் ..

 டாக்டரும் ரேவதியுடன் சேர்ந்து அகிலாவிடம் பேசிக் கொண்டிருக்கையில் அருண் ஒரு பாட்டில் மற்றும் ஒர் ப்ளாஸ்டிக் டம்ப்ளர் சகிதம் வந்தான் .. டாக்டர் ரேவதியிடம் "அம்மவுக்கு தொண்டை வரண்டிருக்கும் .. தண்ணி கொஞ்சம் குடும்மா .." அவர் சொன்னதை சொன்னதின் உள் அர்த்தத்தைப் புரிந்து அருண் கொடுத்த தண்ணீர் டம்ப்ளரிலிருந்து அகிலாவுக்கு கடைசித் தண்ணீர் புகட்டினாள். துக்கத்தை அடக்க முடியாமல் எங்கே அழுதுவிடுவோமோ என்று "ஒரு நிமிஷம் " என்று வெளியில் ஓடினாள். வெளியில் நின்று கதறி அழுதாள்.

குறிப்பறிந்து அருண் அகிலாவின் அருகில் நின்றிருந்தான். சிறிது நேரத்தில் அழுத கண்களை அழுந்தத் துடைத்தபின் அறைக்குள் நுழைநத ரேவதி "தும்மல் வந்துச்சும்மா .. அதனால தான் வெளில போயிட்டேன்" என்று மறுபடி தன் தாயருகே இருந்த ஒற்றை நாற்காலியில் அமர்ந்து அவள் கைகளைப் பற்றியவாறு அமர்ந்தாள். அனிச்சையாக ரேவதியின் தோள்மீது அருணின் கை படர்ந்து இருப்பதையும் அவன் அவ்வப்போது ரேவதியை பார்க்கும் விதத்தையும் கண்ட அகிலா, "என்னால அவ படிப்பையும் வாழ்வையும் பாழடிச்சுட்டு இருக்கா தம்பி.

எப்படியாவுது அவளுக்கு ஒரு நல்ல வேல வாங்கிக் கொடுத்து " அவன் கண்களை கூர்ந்து நோக்கி "ஒரு வாழ்க்கையை அமைச்சு கொடுத்துருங்க தம்பி" என்றதை புரிந்த அருண் மனதுக்குள் 'அவளை மணந்து' என்று பிறகு தொடர்ந்து, "அவளை ஒரு நல்ல நெலமைக்கு கொண்டு வர்றது என் பொறுப்பு" என்று வாக்குறுதியளித்தான். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நல்ல சுய நினைவோடு இருந்த அகிலா கண்ணயர்ந்து மயக்கமுற்றாள் .. அருகே இருந்த டாக்டர் அவள் நாடித் துடிப்பை பார்த்து சைகையால் இருவரையும் வெளியிலிருக்கப் பணித்தார். வெளியில் வர வர ரேவதியின் கண்கள் குளங்களாகின ஐ.ஸீ.யூவுக்கு வெளியே வந்து சுவற்றில் சாய்ந்து நின்ற அருணை ஏறெடுத்துப் பார்த்தவள் அவன் கண்களிலிருந்தும் வழிந்த நீரைப் பார்த்து அவன் மார்பில் முகம் புதைத்து தேம்பினாள்.

 வெளியில் வந்த டாக்டர் அவர்களருகே வரவும் ரேவதியை சற்றே விலக்கி தோளில் சாய்த்தபடி "சொல்லுங்க டாக்டர் .." என்றவனிடம் தமிழைத் தவிர்த்து "I think she has started sinking finally .. its a matter of hours .. " என்று கூறி ரேவதியிடம் "ஐ அம் சொ சாரிம்மா .." என்றார். இருவரும் ஒரு சேர "தேங்க் யூ டாக்டர் .." என்றதும் நர்ஸிடம் ஏதோ கூறியபடி விடை பெற்றார். நர்ஸ் அவர்களிடம் வந்து "இங்கயே வெயிட் பண்ணுங்க " என்ற பிறகு எதைச் சொல்லப் போகிறாள் என்பதை சொல்லாமல் "சொல்றேன்" என்றாள்

 நெருங்கிய உறவினரின் சாவு நிச்சயம் என்று அறிந்தபின் ஐ.ஸீ.யுவுக்கு முன்னால் காத்திருப்பதை விடக் கொடுமை இந்த உலகத்தில் வேறேதுமில்லை .. அப்போது வரும் உணர்ச்சிகள் விவரிக்க வொண்ணாதவை .. எவர் மனமும் மேலிருக்கும் பரம்பொருளின் செயலை எண்ணாமல் தனது இயலாமையையே எண்ணிக் குமுறும் .. ரேவதியின் மனம் அதற்கு விதிவிலக்கல்ல .. ஆனால், சில மணி நேரக் குமுறலுக்குப் பின் அவள் கண்களில் நீர் வற்றியது, சோகம் பரிதவிப்பு இவ்விரண்டையும் விடுத்து அவள் கண்கள் வெறுமையை வெறிக்கத் தொடங்கின ...கல்லாய்ச் சமைந்திருந்தாள் ... காலை ஏழு மணியளவில் நர்ஸ் வெளியில் வந்து "கீழ போய் வெய்ட் பண்ணுங்க " என்று அகிலாவின் மறைவை அறிவித்தாள் ..

ஆம் .. இத்தகைய நோயாளிகளின் மரணம் இப்படித்தான் அறிவிக்கப் படும் .. ஐ.ஸீ.யுவுக்கு முன்னால் உயிர் பிழைப்புக்காக பலர் காத்திருக்கும் இடத்தில் சாவை அறிவிப்பதை தவிர்பதற்காக இத்தகைய அறிவிப்பு .. அவர்கள் கீழே என்று குறிப்பிடுவது இறந்த பிறகு இறப்புச் சான்றிதழுடன் சடலத்தை ஒப்படைக்கும் மார்ச்சுவரி .. ரேவதிக்கு இது பற்றித் தெரியாதோ என்று எண்ணி அவளை கைத்தாங்கலாக அழைத்து வெளியில் சென்று அவளிடம் சொல்லலாம் என்று அவளை அழைத்தவனைப் பார்த்து இறுக்கமான் முகத்துடன் "எல்லாம் முடிஞ்சுதா .. ?" என்றவாறு எழுந்து அவனுடன் நடந்தாள். அருண் மறுபடியும் அவனது அத்தையின் உதவியை நாடி மின்சாரச் சுடுகாட்டில் அகிலாவின் சடலத்தின் தகனத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து, அன்வர் பாய் மூலம் அவன காரை எடுத்துவர ஏற்பாடு செய்து ரேவதியுடன் அகிலாவின் சடலத்தையேந்திய கருப்பு நிற ஊர்தியில் இடுகாட்டை அடைந்து, விவரமறிந்து அங்கேயே நேராக வந்திருந்த அகிலாவிற்கு அறிந்தவர் சிலருடன் இறுதிச் சடங்குகள் செய்து அகிலாவின் சடலத்தை மின்சாரத்தீக்கு இரையக்கினான்.

 இன்னும் ரேவதி கல்லாய்ச் சமைந்திருந்தாள். காரில் ரேவதியையும் முனியம்மாவையும் அழைத்துக் கொண்டு ரேவதியின் வீட்டிற்குச் சென்று இருவரும் குளித்தனர். முனியம்மா அகிலாவின் புகைப்படம் ஒன்றை முன் அறையில் தரையில் கிழக்கு நோக்கி சுவற்றில் சாய்த்து வைத்து அதற்கெதிரே ஒரு விளக்கையும் ஏற்றி வைத்தாள். அதன் முன் அமர்ந்த ரேவதி இன்னும் கல்லாய்ச் சமைந்திருந்தாள். பிறகு அருண் ரேவதியிடம் .. "உங்கள்ல என்னல்லாம் சடங்கு பண்ணுவீங்க .. "என்று கேட்ட அருணுக்கு "அதான் எல்லாம் முடிஞ்சுருச்சே ".. என்று விட்டேர்த்தியாக பதிலளித்த ரேவதியிடம் முனியம்மா "அப்படி இல்லம்மா செத்தவங்க ஆவி சாந்தியடையணூன்னா மூணாம் நாள் அவங்க அஸ்தியை கொண்டுபோய் கடல்ல கரைச்சுட்டு பூஜை பண்ணனும்" என்றாள். அருண் ரேவதியிடம் "சரி, கிரிமெட்டோரியத்துல இருந்து சாயங்காலமா அஸ்தியை வாங்கிட்டு வர்றேன். அப்பறம் நாளன்னைக்கு காலைல போய் கடல்ல கரைச்சுட்டு பண்ண வேண்டிய காரியத்துக்கு ஒரு ப்ரோகிதரையும் பிக்ஸ் பண்ணிடறேன்” என்றான்.

அவன் சொன்னது எதுவும் அவள் காதில் விழுந்ததா என்று அருணுக்கு பெரும் சந்தேகம். இன்னும் கல்லாய்ச் சமைந்திருந்தாள். தன் வீட்டில் சமைத்து அன்வர் பாய் ரேவதிக்கும் அருணுக்கும் சாப்பாடு கொண்டு வந்தார்.. சாப்பிட மறுத்த ரேவதியை வற்புறுத்தி சிறிது சாப்பிட வைத்தான். அவள் முகம் இன்னும் உணர்ச்சியற்று இறுகி இருந்தது. மாலை வரை அங்கு இருந்துவிட்டு தன அறைக்கு வந்தான். யாரிடமும் பேசப் பிடிக்காமல் அவனது செல் போனை சைலெண்டில் வைத்து கண்மூடி தூங்காமல் படுத்து இருந்தான்.

 அடுத்த நாள் காலை மறுபடியும் ரேவதியின் வீட்டை அடைந்த போது முருகேசு அங்கு இருந்தான். அவனை தனியே அழைத்துப் போய் “அந்த பொண்ணு இனிமேல் தொழிலுக்கு வராது” என்று அறிவிக்கவும் முருகேசு சற்று அதிர்ச்சியுடன் “அத அந்த பொண்ணுகிட்ட பேசி முடுவு பண்ணிக்கறேன் சார் நீங்க உங்க வேலையை பாத்துட்டு போங்க சார்” என்றதும் “அவங்க அம்மா சாகறதுக்கு முன்னால இவள நல்லா படிக்க வெச்சு ஒரு நல்ல நெலமைக்கு கொண்டு வருவேன்னு வாக்கு குடுத்திருக்கேன் இதப் பத்தி அவங்க அம்மா கிட்டையே பேசியாச்சு .. சும்மா ஒரு வார்த்தை உன்கிட்ட சொன்னேன்.

அவ மேல உண்மையா அக்கறை இருக்கறவன்னா இரு இல்லாட்டி நடையக்கட்டு” “அப்ப நான் போட்ட பணத்துக்கு பதில் சொல்லுங்க சார் ...” “யோவ, இதென்ன வியாபாரமா மொதல் போடறதுக்கு?” “ஆமா சார் இன்னித் தேதிக்கு என் பணம் இருவது ஆயிரத்துக்கு மேல அதுக்கு குடுத்திருக்கேன் ... அதுக்கு வட்டி எல்லா ... “ என்று இழுத்தான்
“கடன் குடுத்திருக்கேன்னு சொல்லு .. “ என்ற பிறகு ரேவதியை அழைத்து “இவரு கிட்ட எவ்வளவு பணம் வாங்கியிருக்கே ...” என்றதற்கு அவள் வெறித்த கண்களுடன் “தெரியல ...” என்றவாறு முருகேசனையே பார்த்து “எவ்வளவு வாங்கி இருக்கேன்?” என்றதும் அவள் அப்படிக் முருகேசனிடமே கேட்டதில் கோபமடைந்து

அவளை முறைத்தபடி “சரி, நீ உள்ள போ ... “ என்று அனுப்பியப்பின் முருகேசனிடம் “நீயே சொல்லுப்பா .. அவ இப்ப இருக்க நெலமைல அவளுக்கு ஒண்ணும் தெரியாது .. “ என்றான் முருகேசன் தன் குரலை உயர்த்தி, “இன்ன சார் நேத்து வந்துட்டு என்னவோ கட்டுன புருசன் மாதிரி பேசறீங்க. நான் இல்லேன்னா இந்நேரம் அம்மாவும் பொண்ணும் நடுத்தெருவுக்கு வந்திருப்பாங்க. உங்குளுக்கு எதுக்கு சார் இந்த வேலையெல்லாம் இப்ப இப்படி இருக்குது நாளைக்கு சரியாயிட்டு தொழிலுக்கு போவும் .. “ என்க அடுத்த வீட்டிலிருந்த அன்வர் பாய் அருணின் உதவிக்கு வந்து “முருகேசு, அந்த பொண்ண தொழில்ல விட்டு பாழடிச்சது போதும் ... எதோ அதோட அதிர்ஷ்டம் இவரு அவளை படிக்க வெச்சு நல்ல நெலமைக்கு கொண்டுவரனும்னு இருக்காரு .. ஏம்பா அதை கெடுக்க பாக்கறே?” என்றார் முருகேசு

“பாய் இந்த காலத்துல யாரையும் நம்ப முடியாது படிக்க வெக்கறேன்னு பம்பாய் டெல்லின்னு எங்கயாவுது அவளை அஞ்சு பத்து லட்சத்துக்கு வித்துட்டு போவ மாட்டாருன்னு இன்னா கியாரெண்டி?” கடும் கோவத்தில் அருண் “யோவ், வார்த்தைய அளந்து பேசு. இல்லேன்னா நான் சும்மா பேசிட்டு இருக்க மாட்டேன் ..." என்று மிரட்டவும் ஒரு சிறு கைகலப்பு ஏற்பட இருந்த சூழலில் முனியம்மா அருகிலிருந்த சில மகளிர் சகிதம் “டேய் கம்மனாட்டி உன்னைப் பத்தியும் இங்க எல்லாருக்கும் தெரியும் ..” என்றவாறு அருணிடம் “நீ இன்னா சார் அவன்கிட்ட எவ்வளவு காசு வேணும்னு கேட்டுகினு கீரே .. கஸ்டமர் கொடுக்கற காசுல கமிஷனுக்கு மேல அடிச்சுட்டுத்தான் இவன் குடுப்பான் அந்த பொண்ணு ஏன்னு கேட்டா ரவுடிங்களுக்கு கொடுக்கணும் போலிஸுக்கு கொடுக்கணும் பொய் சொல்லி அந்த பொண்ணு வயித்தில அடிச்ச கபோதிசார் இவன் .. “ என்று முருகேசனை வழியனுப்பி வைத்தனர்.

 “இனிமே இவ இங்க தனியா இருக்கறது பாதுகாப்பு இல்ல" என்ற அருணிடம் “ஆமா சார், இவனையெல்லாம் நம்ப முடியாது .. சீக்கரம் அதை எதாவுது ஹாஸ்டல்ல சேத்து உட்டுடு சார் ...” என்றாள் “நாளைக்கு காரியத்துக்கு அப்பறம் நான் ஹாஸ்டல பத்தி விசாரிச்சுட்டு வர்றேன்” என்று வாக்களித்தான். முதலில் அவளை கூடிய விரைவில் மணமுடித்து தன்னுடன் அழைத்துச் செல்லவிருந்த அருண் அகிலாவின் கடைசி மூச்சிருக்கும்போது ரேவதி அவளுக்கு அளித்த வாக்கை உண்மையாக்க விரும்பினான்.

மேற்கொண்டு செய்ய வேண்டியதை சில நாட்களுக்குப் ரேவதியுடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவு செய்ய விரும்பினான். ஆனால் ரேவதி இருக்கும் நிலை அவனுக்கு பயமளித்த்து. அடுத்த நாள் அதிகாலையில் ரேவதியை அழைத்துக் கொண்டு கடலில் அவன் அத்தை ஏற்பாடு செய்திருந்த ப்ரோகித்ர் மூலம் அகிலாவின் அஸ்தியை கரைத்து மற்ற சடங்குகளை முடித்துவிட்டு மதியம் அவளுடன் ஒரு ரெஸ்டாரண்டில் உணவருந்தி அவளை வீட்டில் விட்டு அவளது கல்லுரியின் ஹாஸ்டலில சேர்வதற்கான வழிமுறைகளை விசாரிக்க சென்றான்.

 அவளை விட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் அன்வர் பாய் அவனை அவன் மொபைலில் அழைத்து, “சார், இந்த பொண்ணு ரேவதி எதோ வெஷம் குடிச்சுட்டு பேச்சு மூச்சில்லாம கெடக்குது ... வாயெல்லாம் நுரையா தள்ளி இருக்கு சார் ..” என்று அலறினார். அன்வர் பாய் அவன் மொபைலில் அழைத்து “சார், இந்த பொண்ணு ரேவதி எதோ வெஷம் குடிச்சுட்டு பேச்சு மூச்சில்லாம கெடக்குது ... வாயெல்லாம் நுரையா தள்ளி இருக்கு சார் ..” என்று அலறினார். அருண் ஒரு கணம் தன் உயிர் தன்னை விட்டுப் போனது போல் உணர்ந்தான்.

 "என்ன சொல்றீங்க .. இப்ப ஒரு மணி நேரத்துக்கு முன்னால தான அவளை வீட்டுல விட்டுட்டு வ்ந்தேன்?" என்று பதறினான் "ஆமா சார், கதவத் தாப்பா போட்டுகிட்டு ரூமுக்குள்ள இருக்குன்னு முனிம்மா கூப்புட்டுச்சு. கதவத்தட்டுனா திறக்கல . அப்பறம் நான் கதவை ஒடச்சிட்டு வந்து பாத்தா இப்படி கெடக்குது சார் .. " என்று அவர் நீளமாக சொல்லி முடிக்குமுன் ஒரு கணம் க்ல்லாய் உறைந்தவன் சுதாரித்து "அவளுக்கு நாடித் துடிப்பு இருக்குதான்னு கழுத்துக் கீழ தொட்டுப் பாத்து சொல்லுங்க" என்றவனிடம் உடனே அன்வர் பாய் "உயிர் இருக்கு சார் .. பாத்தேன் .." என்றதும் அவன் மனம் பெரிதும் ஆருதலடைந்தது .. 'வேதனைப் படுவதற்கு இது நேரமில்லை உன் ரேவதி இன்னும் உயிருடன் தான் இருக்கிறாள்.

அவளை காப்பாற்றும் வழியைப் பார் ..' என்று அவன் மனம் தூண்டியதும் தலையை உதறிக் கொண்டு, "பாய், அவளை நீங்க உங்க வண்டிக்கு எடுத்துட்டு போங்க, ஒரு ரெண்டு நிமிஷம் விட்டு நான் மறுபடி கூப்படறேன் .. இருங்க ..எப்படி விஷம் குடிச்சிருக்கான்னு உங்களுக்கு தெரிஞ்சுது?" என்றதும் பாய் "பெட்டுக்கு கீழ ஒரு பாட்டில் உருண்டு கெடக்கு சார் ... அதப் பாத்தா ஏதோ பூச்சி மருந்து மாதிரி இருக்கு" என்றார். "அப்படியா, அந்த மருந்து பாட்டிலையும் கையோட எடுத்துக்குங்க .. சரி, நான் கூப்படறேன் .." என்று அவ்விணைப்பினை துண்டித்தான். மறுகணம் தன் அத்தையை ஃபோனில் அழைத்தான்,

 "அத்தே, ஒரு எமர்ஜன்ஸி .. அன்னைக்கு உங்ககிட்ட ஒரு பொண்ணோட அம்மாவைப் பத்தி கேட்டேன் இல்ல? அந்த பொண்ணு ஏதோ பாய்ஸன் சாப்பிட்டுருச்சு இப்ப மூச்சு பேச்சு இல்லாம இருக்கு .. நான் அவளைக் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்கேன் I need emergency care on her arrival எங்க கொண்டு வரச்சொல்றது" ..."சரி .." .... "நான் அவகூட இப்ப இல்ல பட் நானும் இப்ப கிளம்பி நேரா அங்க வந்துடுவேன்" .... "அந்த பொண்ணு பேரு ரேவதி .. அன்வர் பாய்ன்னு ஒருத்தர் கூட்டிட்டு வருவார்.. " ... "சரி .." என்று பேசி முடித்த அடுத்த கணத்தில் பாயை அழைக்க "சொல்லுங்க சார் .. " என்றவரிடம் ஒரு பிரபலமான பெரிய மருத்துவ மனையின் பேயரைச் சொல்லி அங்கு போகச் சொன்னான். தொடர்ந்து அவரிடம் "முனியம்மாட கிட்ட அவளை ஒருக்களிச்ச மாதிரி படுக்க வைக்க சொல்லுங்க .. வாந்தி எதாவுது வந்தா மூச்சு அடைக்க கூடாது .. " என்றதும் அவர்
"தண்ணி கொஞ்சம் குடுக்கச் சொல்லுட்டுமா சார் .." என்றதற்கு,

முதலில் சரியென்று சொல்ல நினைத்தவன் சில விஷங்களுக்கு தண்ணீரை முதலுதவியாக கொடுத்தால் அது மேலும் பாதிக்கும் என்று எங்கோ படித்ததை நினைவு கூர்ந்து "வேண்டாம் .. எதுவும் குடுக்காதீங்க .. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் நீங்க அங்க போய் சேரதுக்கு?" "இன்னும் அரை மணிக்குள்ள போயிடலாம் சார் .. " "சரி அங்க நேரா எமர்ஜன்ஸின்னு போட்டுருக்கற எடத்துக்கு போங்க ... போன உடனே விசாலாக்ஷி டாக்டர் அனுப்பி இருக்கற பேஷ்ண்டுன்னு சொல்லுங்க .. யாராவுது உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க ரேவதி பேரையும் உங்க பேரையும் அவங்களுக்கு சொல்லியிருக்கேன் .." "சார் நீங்க .. " "நான் வந்துட்டே இருக்கேன் .. ஆனா நான் அங்க வந்து சேர இன்னும் ஒரு மணி நேரத்துக்கும் மேல ஆகும் போல இருக்கு ..." என்று தன் பரிதவிப்பை அறிவித்தான்.

 கண்களில் வழிந்ததை புறங்கையால் துடைத்தபடி காரை ஓட்டிக் கொண்டே மனதுக்குள் குமுறினான். 'இந்த ரெண்டு நாளா அவ நடந்துகிட்ட விதத்தைப் பாத்து எனக்கு தோணியிருக்கணும்' என்று தன் தலையில் அடித்துக் கொண்டான். பிறகு தான் இதுவரை தன் காதலைக் கூறவில்லை என்பதை நினைவு கூர்ந்து தன்னை நொந்து கொண்டான். 'அனாதையா தனக்கு யாரும் இல்லைன்னு இந்த முடிவ எடுத்து இருக்கா .. ' என்று நினைத்தான். அவளது மன உளைச்சல்களும் அவளுக்கு முன்பே இருந்த மனநிலையுடன் அவள் தாயின் பிரிவும் சேர்ந்து ஏற்படுத்திய பாதிப்புகளும் அருணுக்கு புரிந்திருக்கவில்லை அருண் ஹாஸ்பிடலை அடைந்து ரேவதி அனுமதிக்கப் பட்ட ட்ராமா கேர் (trauma care) பிரிவுக்கு செல்ல அங்கு ஓர் அறையின் வாசலில் அன்வர் பாயும் முனியம்மாவும் காத்து இருந்தனர்.

அறைக்குள் ரேவதிக்கு ஒரு இளம் பெண் டாக்டரும் இரு நர்ஸ்களும் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கதவின் சிறு கண்ணாடி வழியே பார்த்த அருணுக்கு மயக்க நிலையில் ரேவதிக்கு மருத்துவம் நடப்பது தெரிந்தது. அவள் கையில் ஒரு ட்ரிப் ஏற்றப் பட்டிருந்தது அவள் இடுப்புக்கு அடியிலிருந்து ஒரு சன்னமான ரப்பர் குழாய் தலை உயரத்தில் மாட்டி வைக்கப்பட்டிருந்த பால்காரர்கள் பால் அளந்து கொடுக்கும் அளவை வடிவிலிருந்த ஒரு கேனுக்கு பொருத்தப் பட்டிருந்தது. உற்று நோக்கியதில் ரேவதிக்கு மூச்சு இருப்பது தெரிந்தது ..

அவளருகே ஒரு இளம் பெண் டாக்டர் கண்ணும் கருத்துமாக அவளது நாடித் துடிப்பை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது மூடியிருந்த அவளது கண்களின் இமைகளை விரலால் அகற்றி அவளது கண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தார். பெருமூச்செறிந்த அருண் முனியம்மாவிடம்,
"என்னங்க ஆச்சு?" என்றதும் அவள் மடை திறந்த வெள்ளம் போல்

 "நீங்க கூட்டியாந்து உட்டுட்டு போனீங்கல்ல சார், கொஞ்ச நேரம் முன்னால கீர ரூம்புல குந்திகினு அம்மா போட்டோவையே வெறிச்சு பாத்துகுனு இருந்துச்சி .. அப்பறம் இன்னா தோணுச்சோ உள் ரூம்புக்குள்ள போய் தாப்பா போட்டுக்கிச்சி .. படிக்கறப்பல்லாம் அந்த மாரி தாப்பா போட்டுக்கும் .. நானும் உட்டுட்டேன் .. அப்பறமா எனக்கு இன்னமோ தோணிச்சி .. கதவத் தட்டுனா பத்லேல்லே...பாயெ கூட்டியாந்தேன். பாய் கதவ ஒடச்சுகுனு உள்ள போனாரு .. பெட்டுல பேச்சு மூச்சிலாம கெடந்துச்சி .. அப்பறமா உங்குளுக்கு போன் போட்டு பேசுனாரு .. " என்ற முடித்த முனியம்மா "பொயச்சிக்கும் இல்ல சார் .. " என்று தழு தழுத்த குரலில் கேட்டாள்.

 வேகமாக இமைத்துக் கண்களில் வழிந்த கண்ணீரை விலக்கியவாறு ஆமென்று தலையசைத்தான் .. அன்வர் பாய், "நீங்க இல்லேன்னா இன்னேரம் அந்தப் போண்ணும் அவ அம்மாகூட சேந்து அல்லாகிட்ட போயிருக்கும் சார் .. இந்த மாதிரி ஆஸ்பத்திரில எல்லாம் உடனே எங்க சார் வைத்தியம் பாக்கறாங்க .. அங்க போ அந்த பாரம் ஃபில்லப் பண்ணு அது இதுன்னு தொரத்து வாங்க ... " பிறகு அருகில் வந்து மெல்லிய குரலில் "சூசைட் கேசுன்னா மொதல்ல போலீசுக்கு சொல்ல சொல்லுவாங்க சார் .. நீங்க சொன்ன விசாலாக்ஷி டாக்டர் எதோ ரொம்ப பெரிய டாக்டர் மாதிரி இருக்கு சார் .. ஒரு கேள்வியும் கேக்கல .. கார்ல இருந்து எறக்க எறக்க ஸ்டெச்சர் ரெடியா கொண்டாந்து இங்க கொண்டு வந்துட்டாங்க சார் .."
அருணின் அரை மணி நேரத் தவிப்பிற்குப் பிறகு வெளியில் வந்த டாக்டர் சுற்றும் முற்றும் பார்த்து

பிறகு அருணிடம் வந்து சிறு புன்சிரிப்புடன் "நீங்கதானெ மிஸ்டர் அருணா?" ... அவன் ஆமென்ற தலையசைப்புக்குப் பிறகு, "ஐ அம் டாக்டர் வந்தனா .. இன்னிக்கு எமெர்ஜஸி கேர் ட்யூட்டி எனக்கு .. டைமுக்கு கொண்டாந்ததுல எந்த பாதிப்பும் இல்லாம் காப்பாத்த முடிஞ்சுது .. இல்லன்னா டைஜஸ்டிவ் சிஸ்டமோ (வயிறு மற்றும் குடலொ), நெர்வஸ் சிஸ்டமோ (மூளை மற்றும் நரம்புகளோ) நிச்சயம் அஃபெக்ட் ஆயிருக்கும் .. இப்ப ஸ்டேபிளா இருக்காங்க .. லிவர் ஃபங்க்ஷன் அப்பறம் மத்த வைட்டல்ஸ் எல்லாம் டெஸ்ட் பண்ண ப்ளட் ஸாம்பிள் அனுப்பியிருக்கேன் .. பட் ஐ அம் கான்ஃபிடென்ட் நத்திங்க் இஸ் அஃபெக்டட் (வேறு எந்த உறுப்புக்கும் எவ்வித பாதகமும் இல்லை என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது)" என்று தொடர்ந்து

"டாக்டர் விசாலாக்ஷி ஓ.பீல இருக்காங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வர்றேன்னாங்க ..." என்றவாறு விடை பெற்று தன் அறைக்குச் சென்றார். சிறிது நேரத்தில் காரிடோரிலிருந்து சில ஜூனியர் டாக்டர்கள் புடைசூழ் டாக்டர் விசாலாக்ஷி வந்தார். ஒரு நர்ஸ் அவரது வருகையை அறிவிக்க தன் அறையிலிருந்து வெளி வந்த டாக்டர் வந்தனா அவரை அணுகி ரெவதியின் நிலைமையை விவரிக்க ரேவதி இருந்த அறையை நோக்கி சென்று கொண்டே வந்தனாவிடம் ஏதோ கேட்க அவர் அருணை நோக்கி கை காட்டினார்.

எதிரே ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி துடைக்கத் துடைக்க கண்கள் மறுபடி குளமாவதை மறைக்க முதுகைக் காட்டி நின்றிருந்த அருணைப் பார்த்த வண்ணம் டாக்டர் விசாலாக்ஷி அறைக்குள் நுழைந்தார். அன்வர் பாய் அவன் தோளைத் தட்டிக் கூப்பிட திரும்பிய அருண் என்னவென்று கணணசைவில் வினவ அன்வர் பாய் "பெரிய டாக்டர் .. உள்ள போயிருக்காங்க " என்றார் சில நிமிடங்கள் காத்திருந்த பின் அருணின் தந்தை, பெரியப்பா, சித்தப்பா இவர்களின் ஒரே செல்லத் தங்கையும் அருணின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் உலகிற்கே பறைசாற்றும், அருணின் பெரியப்பா மற்றும் சித்தப்பா சொல்வது போல் அருணை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும், இல்லாத அம்மாவைப் போல் அவன் பாவிக்கும் டாக்டர் விசாலாக்ஷி தண்டபாணி வெளியே வந்தார்.

 வந்தவர் முதலில் அவனைப் பார்த்து முகத்தில் கடு கடுப்பை காட்ட முற்பட்டாலும் ஒரு கணம் அவன் முகத்தில் வழிந்த சோகத்தைக் கண்டு தடுமாறி "டோன்ட் வொர்ரி ... ஷீ வில் சர்வைவ் (கவலைப் படாதே அவள் பிழைத்துவிடுவாள்).." என்றவாறு அவன் தோளில் தட்டினார். பிறகு,"வீ நீட் டு டாக் அ லாட் (உன்னிடம் நிறைய பேச வேண்டும்).. வீட்டுப் பக்கம் வர்றதா இருக்கயா .. அய்யாகிட்ட அப்பாயின்மென்ட் எதாவுது மொதல்லயே வாங்கணுமா?" என்று அவனை சகஜ நிலைக்கு கொண்டு வர முயற்ச்சித்தார் ... "இல்லத்தெ நான் நாளைக்கு வர்றேன் .. " மறுபடி அவனை செல்லமாக முறைத்து,

"ஏன் அய்யாவுக்கு இப்ப ஏதாவுது எங்கேஜ்மென்ட் இருக்கா? அந்தப் பொண்ணுகூட யாரும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை .. அவளை இன்னும் கொஞ்ச நேரத்துல வேற தனி ரூமுக்கு ஷிஃப்ட் பண்ண சொல்லியிருக்கேன் .. இன்னும் 72 மணி நேரம் அவ அப்ஸ்ர்வேஷன்ல தான் இருப்பா .. நீ இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்ல" என்றதும் அவர் வீட்டிற்கு சென்றால் கோவையில் நடந்தவைகளைப் பற்றி நடக்கப் போகும் வாக்கு வாதங்களுக்கும் அவன் கொடுக்க வேண்டிய விளக்கங்களூக்கும் அருண் தன்னை தயார் படுத்திக் கொள்ள அவகாசம் தேவையாயிருந்தது. மேலும் அவன் அத்தையிடம் ரேவதியைப் பற்றியும் பேசி மேலும் சில உதவிகளை கேட்க விரும்பினான்.

இப்போதைய மனநிலையில் அவன் எவரிடமும் பேசத் தயாராக இல்லை. அவன் செல்ல அத்தை உட்பட. "இல்லத்தே .. நான் நாளைக்கு காலைல வர்றேன் " என்றதும் சற்று இறுகிய முகத்துடன் அவனை சிறிது நேரம் கூர்ந்து நோக்கி பெருமூச்செறிந்து "சரி, வீட்டுக்கு ப்ரேக் ஃபஸ்டுக்கு வந்துரு .. நான் மார்னிங்க் கன்ஸல்டெஷன் எதுக்கும் போகல .. " என்று தனது வேலைகள் அனைத்தையும் அவனுக்காக ஒதுக்கி வைப்பதைக் கூறியவாறு திரும்பவும் தள்ளி நின்று கொண்டிருந்த ஜூனியர் டாக்டர்கள் புடை சூழ அங்கிருந்து சென்றார். அவனுடன் உணவருந்தி சிறிது நேரம் உரையாட வரும் பல ஆயிர வருமானத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் தன் காலை ஆலோசனை நேரத்தை அவனுக்காக ஒதுக்கும் அன்பு அத்தையையும் அவரது ஆசை மருமகனையும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் வந்தனா அவனைப் பார்த்து புன்முறுவலளித்தபின் தனது அறைக்குச் சென்றார்.

 தாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்ற அன்வர் பாய் மற்றும் முனியம்மாவிடம் விடை பெற்ற அருண் நேராக தன் ஹோட்டல் பார் லௌஞ்சை நாடிச் சென்றான்.. அடுத்த நாள் அதிகாலை தன் அத்தை வீட்டிற்கு செல்லுமுன் அருண் ஹாஸ்பிடலுக்கு சென்றான் ... அன்வர் பாய், முனியம்மா இருவரும் அங்கு இன்னும் வரவில்லை ..

டாக்டர் வந்தனாவும் அங்கு இல்லை ரேவதியை ஜெனரல் வார்டில் ஒரு அறைக்கு மாற்றியிருந்தார்கள் அவன் முன் தினம் டாக்டர் விசாலாக்ஷியுடன் பேசிக் கொண்டிருந்ததை பார்த்திருந்த ஒரு நர்ஸ் அவனை ரேவதி இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார் .. கையில் ட்ரிப்ஸ் ஊசியேற்றப்பட்டு சலனமற்று படுத்து இருந்தாள் ரேவதி.
கடந்த மூன்று நாட்களில் அவள் உடல் இளைத்து இருந்தது ..

ஏற்கனவே அவள் கண்களை சுற்றி ஃபேஸ் பௌடரால் மறைக்கக்கூடியவாறு இருந்த கருவளையங்கள் மஸ்காராவுக்கும் மறையுமா என்று சந்தேகப் படும்படி ஆகியிருந்தன. ஒடுங்கிப் போயிருந்த அவள் வயிறு மூச்சு விடுகையில் இன்னும் உள்ளே போய் வந்தது ... அருகில் சென்று அவள் நெற்றியைத் தொட்டு தடவி அவளது சலனமற்ற முகத்தைப் பார்த்தவாறு சிறிது நேரம் அவளருகே அமர்ந்திருந்தான்

 மனதுக்குள் அவள் தன்னை காதலிக்கிறாள் என்று தோன்றினாலும் தான் இதுவரை தான் தன் காதலை சொல்லாததால் அவளெடுத்த முடிவு இது என்று நினைத்து மிகவும் வருந்தினான். அவள் கண்விழித்ததும் தன் காதலைச் சொல்லி அவளை சந்தித்த போதிலிருந்து அவள் தாய் உயிர் பிரியும் வரை அவளுக்கு தன்னிடம் இருந்த அந்த அன்னியோனியம் அவளுக்குள் திரும்ப வரவைக்க வேண்டும் என்று மனதுக்குள் உறுதிமொழி எடுத்தான்.


No comments:

Post a Comment