Thursday, November 20, 2014

ரேவதி பாகம் 9


வினிதா தொடர்ந்து, "சோ, ஒரு நல்ல ஆப்ஷன் அவ உங்க அடையார் ஃப்ளாட்ல தங்கறது. கூட முனியம்மாவும் இருக்கட்டும். அங்க தங்கினா உங்களுக்கும் அவ படிப்பில உதவறதுக்கு வசதியா இருக்கும். இதுல உங்களுக்கு ஏதாவுது ஆட்சேபணை இருக்கா?" 'ஆட்சேபணையா? எனக்கா? இதை தான் நானே செய்யணும்னு இருந்தேன் ..

நீங்க எல்லாம் ஒத்துக்காட்டி அவ கழுத்துல ஒரு தாலிய கட்டிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்னு இருந்தேன்' என்று மனதில் எண்ணி "நன் அட் ஆல் .. நானே அதைத் தான் யோசிச்சு வச்சிருந்தேன் .. " என்றவாறு தண்டபாணியைப் பார்த்தான். அவர், "எங்க கூட இதைப் பத்தி வினி ஏற்கனவே பேசி எடுத்த முடிவு தான் ... " என்று அவனுக்கு தங்களின் முழு ஆதரவை தெரிவித்தார்.

 "ரேவதிகிட்ட இதப் பத்தி பேசுனயா?" "ம்ம்ம் ... அவளே நீங்க அவகிட்ட ஹாஸ்டல்ல சேத்து விடறதப் பத்தி சொன்னா. எங்க வீட்டுல தங்க ஏற்பாடு பண்ணறதா சொன்னதுக்கு முதல்ல எதுக்கு உங்களுக்கு சிரமம்ன்னா. இன்னும் ஒரு ரெண்டு மாசத்துக்காவுது நான் அவளை அடிக்கடி பாக்கற மாதிரி இருக்கணும்னு சொன்னப்பறம் ஒத்துகிட்டா.

" என்ற வினிதாவை குறுக்கிட்டு
"வினி, இதை நான் உங்கிட்ட மொதல்லயே கேட்டு இருக்கணும். அவளுக்கு மன கோளாறு இருக்குன்னு அவகிட்ட சொல்லி இருக்கீங்களா?" என்ற அருண் 'சே, யார்தான் தனக்கு மனோ வியாதின்னு ஒத்துக்குவாங்க? நான் உன்னை எந்த மாதிரி கஷ்டத்துல விட்டுட்டேன்' என்று எண்ணினான்.

 "நீங்க எந்த அர்த்தத்துல கேக்கறீங்கன்னு புரியுது. ஓரளவு சுய நினைவோட இருக்கற எந்த பேஷன்டும் தனக்கு மனோவியாதின்னு ஒத்துக்க மாட்டாங்க .. நாங்களும் அப்படி அவங்களுக்கு சொல்ல மாட்டோம். ஏன்னா ட்ரீட்மென்ட் முடிஞ்சப்பறம் அவங்க தன்னம்பிக்கையை ரொம்ப பாதிக்கும். அவ சூசைட் அட்டெம்ப்ட் பண்ணினது அவளுக்கே தெரியும். அவ மனசுல தேவையில்லாத பயம், அழுத்தம் இருந்ததுன்னுதான் அவளுக்கு புரிய வெச்சு இருக்கோம்" என்று வினிதா அவனுக்கு ஆறுதலளித்தாள்

 "சரி, எப்ப அவளை கூட்டிட்டு போறது? " "நாளைக்கேன்னா கூட ஓ.கே தான் .. கிளினிக்குல தொடர்ந்து இருக்கறதுல ரேவதி இப்ப கொஞ்சம் அன்-ஈஸியா ஃபீல் பண்ணறா. எனக்கென்னமோ அவ உங்க கூட தங்கறத ப்ரிஃபர் பண்ணுவா மாதிரி இருந்துது. எதுக்கும் உங்ககிட்ட கன்ஃபர்ம் பண்ணிக்கலாம்னுதான் அவகிட்ட சொல்லல" 'என் ரேவதி என் கூட தங்கறதைத் தான் விரும்புவா' என்ற அவன் மனக்குதிரையின் தறி கெட்ட ஓட்டத்தை நிறுத்தும் படி வினிதா,

 "ஆனா ஒண்ணு அருண் .." "என்ன ?" "தயவு செஞ்சு தப்பா எடுத்துக்காதீங்க ... உங்க மேல இருந்த நம்பிக்கைலதான் அம்மா அப்பாவும் இந்த ஆப்ஷனுக்கு ஒத்து கிட்டாங்க" என்று சற்று நிறுத்தி, "ஆனா அப்ப எங்களுக்கு நீங்க அவளைக் காதலிக்கறது தெரியாது ..." என இழுத்தாள் "ஓ, இப்ப திடீர்னு என் மேல இருக்கற நம்பிக்கை போயிடுச்சா? வினி உங்க எல்லாரையும் விட அவமேல எனக்கு ரொம்ப அக்கறை இருக்கு.

அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கறதா மட்டும் தான் அவளொட அம்மா கிட்ட நான் வாக்கு கொடுத்தேன். அவளைக் கல்யாணம் பண்ணிகிட்டுன்னு மனசுக்குள்ள தான் நினைச்சுகிட்டேன். சோ, நீ கவலையே படாதே, மாமா சொன்ன மாதிரி அவளுக்கு நான் ஒரு ஃப்ரெண்ட் மட்டும்தான்னு விளங்கற மாதிரி நடந்துக்குவேன். சரியா?" என்றவன் திரும்பி சமயலறையிருந்து வெளியில் வந்த விசாலாக்ஷியையும் தண்டபாணியையும் ஒருசேரப் பார்த்து, "மாமா, அத்தை, அவ ஒரு நல்ல நிலமைக்கு வந்து அவளுக்கு அவ மேல தன்னம்பிக்கை வர்றவரைக்கும் நான் என்னோட காதல அவ கிட்ட சொல்லப் போறதில்லை. மாமா, நீங்க என்னை கேட்ட அத்தனை கேள்வியையும் இன்னும் வேற எந்த பிரச்சனை வந்தாலும் அதை ஃபேஸ் பண்ண என்னால முடியும்.

நிச்சயம் அதுக்கு தேவையான மன பக்குவத்தை வர வெச்சுக்குவேன்" என்றான். அவன் பிடிவாதத்தைப் பற்றி நன்கு அறிந்த விசாலாக்ஷிக்கு அருண் ரேவதியை கைபிடிப்பது உறுதி என்று தோன்ற அவர் மனதில் அவன் தந்தையிடம் அருணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதாக கொடுத்த வாக்கு நினைவில் வந்து அவரை துன்புறுத்தியது .. "சரி, வினி அப்ப காலைல முனியம்மாவ கூட்டிட்டு வர்றேன்" என்றபின் "ரேவதியோட வீட்டை காலி பண்ணறதைப் பத்தி அவ கிட்ட பேசுனயா? அவளொட திங்க்ஸ் எல்லாம் அங்கதான இருக்கு" "வீட்டை காலி பண்ணி திங்க்ஸ் எல்லாம் எங்கயாவுது ஸ்டோர் பண்ண அரேஞ்ச் பண்ணறதா சொல்லி இருக்கேன் ."

 "அத நான் பாத்துக்க்றேன். என் அப்பார்மென்ட்ஸ்ல எனக்கு இருக்கற ரெண்டு கராஜும் பூட்டித்தான் வெச்சு இருக்கு. அதுல ஒண்ணுல ஸ்டோர் பண்ணிக்க நான் ஏற்பாடு பண்ணறேன். சீ யூ டுமாரோ ..::" என்று விடைபெற்றான். காலையில் வினிதா அவளிடம் சொன்னதும் ரேவதியின் மனதில் ஒரு இனம் புரியாத இன்பமயமான எதிர்பார்ப்புடன் புறப்பட்டாள் ..

 தன் பிள்ளைப் பருவத்திலிருந்து அவளுக்கும் அவளைச் சுற்றியும் நடந்தவைகளை கடந்த பத்து நாட்களில் வினிதாவின் உதவியுடன் நினைவு கூர்ந்து, நடந்தவற்றின் பின்னணியை ஆராய்ந்து, கடந்தவை கடந்தவையே என்று உணர்ந்து, தவிர்த்து இருக்கலாம் என்ற எண்ணத்தைக் களைந்து, அதே சமயம் தன்னால் நடந்தவைகளுக்கு பொறுப்பேற்று தன் கைக்கு மீறியவற்றிற்கு தான் பொறுப்பில்லை, இறைவன் செயல் என்பது உணர்ந்து, அறிந்தும் அறியாமலும் அவளுக்கு இழிவை அளித்தவர்களை மன்னித்து, தன் அன்னை அகிலா மேலும் துன்பப் படாமல் இறைவன் தன்னிடம் அழைத்து கொண்டதாக நன்கு உணர்ந்து அவள் மனம் ஓரளவு தெளிவு அடைந்து இருந்தது.

 எதற்காக வாழ்வது என்ற கேள்வியுடன் தன் உயிரை மாய்த்துக் கொள்ள இருந்த ரேவதிக்கு வினிதா அவள் தாய்க்கு கொடுத்த வாக்கை நினைவாக்குவதே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று உணரவைத்து இருந்தாள் ... அதன்படி ரேவதியும் தன் படிப்பை முடித்து ஒரு நல்ல நிலைக்கு வருவதை முதற்குறிக்கோளாக ஏற்று இருந்தாள் .. அதன் பிறகு என்று கேட்ட மனத்திடம் அவள் பகுத்தறிவு படித்த துறையில் சாதனைகள் பல செய்ய வேண்டும், படிப்பிற்கும் நல்ல வாழ்க்கை அமைவதற்கும் பலருக்கு உதவ வேண்டும் என்று பல குறிக்கோள்களை அடுக்கியது.

 இருப்பினும் எதிர்காலத்தை நினைத்து அவ்வப்போது அவள் மனதில் எழுந்த இனம் புரியாத பயம் அவள் சிந்தனைகளை சிதைத்தது பல மாதங்களாக அதிகம் கவனம் செலுத்தாத படிப்பில் மறுபடி நுழைந்து இனி வரும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெறுவதை நினைத்தும் பயந்து இருந்தாள் .. கற்பனை காதலனாக இருந்த அருண் நிஜ வாழ்க்கையில் நுழைந்தது ஒரு தற்செயல் நிகழ்ச்சி என்ற வினிதாவின் கூற்றை அவள் பகுத்தறிவு ஆமோதித்தது. அதன் பிறகு அருண் அவளுக்கு உதவியதற்கும் உதவப்போவதற்கும் அவனது நல்ல மனமே காரணம் என்ற வினிதாவின் கூற்றையும் நம்பினாள்.

 ஆனால், ரேவதி வினிதாவிடம் பகிர்ந்து கொள்ளாத ஒன்று அவளுக்கு அருணின் மேல் இருந்த மனமார்ந்த ஆழ்ந்த காதல். அவ்வளவு நாள் உடல் ரீதியான கற்பனை காதலை அவனைப் பார்த்து அவனுடன் கலந்தபின் உளமார்ந்த காதலாக்கி மனதின் ஆழத்தில் கொண்டு விதைத்து இருந்தாள். அது அவள் தாயின் பிரிவின்போது வேரூன்றி மரமாகி இருந்தது. முன்புபோல் இன்னும் அக்காதல் அவளது மனத்தளவே இருந்தது. அருண் தன்னை பதிலுக்கு காதலிக்க வேண்டும் என்றோ மணமுடிக்க வேண்டும் என்றோ அவள் எதிர்பார்க்கவில்லை.

 பல மாதங்களாக தனக்கு மண வாழ்க்கை என ஒன்று அமைய வேண்டும் என்ற கனவிற்கு அவள் மனத்தில் இடமளித்து இருக்கவில்லை. தனக்கு மணவாழ்வு என ஒன்று கிடையாது என்று திண்ணமாக கருதினாள். அதற்கு அவளின் தர்க்க ரீதியான காரணங்கள் சில. உலகமறிய வாழ்வதே மணவாழ்வு என்று கருதிய ரேவதி அத்தகைய மணவாழ்வை அளிக்க அவளை மணமுடிப்பவன் பல்வேறு விதமான எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவள் நன்கு அறிந்து இருந்தாள். அவ்வெதிர்ப்புக்களை அறியாமல் தன்னை மணமுடிக்க வருபவன் அறிவீனன் என்று கருதினாள். அவ்வெதிர்ப்புக்களை நன்கு அறிந்து தன்னை மணமுடிப்பவன் தன்னை தியாகியாகக் கருதுவான். அத்தகையவனை மணமுடிப்பது பிச்சை எடுப்பதற்கு சமம் என்றும் கருதினாள்.

 அருண் அவ்வெதிர்ப்புக்களை அறிந்து இருக்க வேண்டும் என்றோ, அவைகளை எதிர்க்கும் மனப் பக்குவம் அவனிடம் இருக்க வேண்டும் என்றோ எதிர்பார்க்கவில்லை. எதிர்ப்புகள் அனைத்தையும் அறிந்து இருந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் அவனிடம் இருந்தாலும் அவை தரும் மன வேதனைகளை அருண் படக்கூடாது என்று எண்ணினாள். தனக்கு இந்த அளவுக்கு உதவும் அருணின் நல்ல மனதிற்கு ஏற்றதோர் நல்வாழ்வு அமைய வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டினாள்.

 அன்று காலை வினிதாவிடம் பேசிய பிறகு தான் காதலிக்கும் அருண் ஒரு நல்ல நண்பனாக அவளுக்கு படிப்பில் உதவப் போவதையும் இன்னும் சில மாதங்கள் அவனிருக்கும் வீட்டில் தங்கி தினமும் அவனுடன் கழிக்கப் போகும் சில மணி நேரங்களையும் பேராவலுடன் எதிர் நோக்கி அவன் வருகைக்காக காத்திருந்தாள். அருண் முனியம்மாவிடம் அவள் ரேவதியுடன் பேசும்போது சாதாரணமாகப் பேசும்படியும் அகிலாவின் மறைவைப் பற்றி எதுவும் கூறவேண்டாமென்றும் சொல்லி அழைத்துச் சென்றான்.

அவர்கள் அம் மருத்துவ மனையை அடைந்த போது ரேவதி அவர்களுக்காக வினிதாவின் அறையில் காத்து இருந்தாள். அவளைப் பார்த்த அருணுக்கு அவள் இன்னும் சிறிது இளைத்தாற்போல் இருந்தது. எதைக் குறிப்பிடுகிறான் என்று சொல்லாமல் அருண் "ஹாய், ரேவதி .. இப்ப எப்படி இருக்கு" என்றதற்கு "ம்ம்ம் .. இப்ப ஓகே ..." என்ற பிறகு அவனைப் பார்த்து சிறு புன்முறுவலுடன் "இப்ப ரொம்ப தெளிவா இருக்கேன் .." எனறாள்.

அவளை வாரியெடுத்து நெஞ்சோடு அணைக்கச் சொன்ன மனதைக் கடிவாளம் போட்டு இழுத்தபடி "இன்னும் கொஞ்ச நாளைக்கு என் ஃப்ளாட்டுல முனியம்மாவோட தங்கி இரு .. ஒண்ணு ரெண்டு மாசத்துக்கு அப்பறம் ஹாஸ்டலுக்கு போலாம். சரியா?" "ம்ம்ம் ... வினிதா அக்கா சொன்னாங்க" "ஹேய், அவ எப்ப உனக்கு அக்கா ஆனா?" என்று சிலாகித்தவன் "அப்படியே போற வழில உன் வீட்டுக்குப் போய் உனக்கு வேண்டிய துணி மணி எல்லாம் எடுத்துட்டு போயிடலாம். ஓ.கே?" என்றபின் வினிதாவிடம், "நீங்க மறுபடி எப்ப ரேவதியைப் பாக்கணும்?" என்று அவர்கள் தொடரப் போகும் ட்ரீட்மென்டைப் பற்றி மறைமுகமாக கேட்டான்.

 "சன்டேஸ்ல அவளை நான் வந்து பாக்கறேன் ... " என்று சுருக்கமாக பதிலளித்த வினிதாவிடமிருந்து இருவரும் விடைபெற்று வெளியில் வர அருணின் எச்சரிக்கையை சிறிதும் மனதில் கொள்ளாத முனியம்மா கேவியபடி, "ஐய்யோ என் கண்ணூ .. எப்படிம்மா கீது .. " ஒப்பாரி வைக்கத் தொடங்கியவளிடம் ரேவதி, "முனியம்மா, இங்கல்லாம் சத்தம் போடக் கூடாது .. நான் நல்லா இருக்கேன் .. வா வீட்டுக்கு போய் பேசலாம்" சொன்னதும் அருண் அவளைப் பார்த்து பெரிதும் ஆறுதலடைந்தான் ..

 "ஒரு நிமிஷம் .. " என்றவாறு திரும்பி வினிதாவின் அறைக்குள் சென்றவன் வினிதாவிடம் "நான் அவ கிட்ட இப்ப நடந்து கிட்ட மாதிரி சகஜமா நடந்துக்கலாமா? should I take any specific care while interacting with her?" என்றதும் .. "இப்ப அவகிட்ட நடந்துகிட்ட மாதிரியே நடந்துகிட்டா போதும் .. ஒரு காதலனா பாக்கலைன்னாலும் அவளுக்கு ஒரே மாரல் சப்போர்ட் நீங்கதான் .. நீங்க அவ படிப்பிலயும் உதவப் போறீங்கன்னு சொன்னதும் ரொம்பவே சந்தோஷப் பட்டா. ம்ம்ம் அப்பறம் எதுக்கும் அவ கிட்ட கோவப்படாதீங்க .handle her with care . அவ பழைய வாழ்க்கையை பத்தி நீங்களா அவகிட்ட எதுவும் பேசாதீங்க ... ஆறுதல் சொல்ற மாதிரி கூட வேண்டாம்.

எதாவுது பேச்சு வந்து அவளே என்ன சொன்னாலும் பேசாம கேட்டுக்குங்க . அவ ரொம்ப புத்திசாலி .. இந்த அளவுக்கு முன் எச்சரிக்கை தேவையில்ல... இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையா நடந்துக்கறது நல்லது" என்று விடையளித்தாள். "அதுக்குள்ள காரை மாத்திட்டீங்களா?" என்று தன் சகஜ நிலையை பிரகடனப் படுத்திய படி காரில் ஏறி முன் சீட்டில் அவனருகே அமர்ந்தவளிடம் "ம்ம்ம்ம் ..அப்ப வெச்சு இருந்தது ஃப்ரெண்டோட கார்" என்று பாஸ்கரின் பெயரைத் தவிர்த்து,

"இது ஊர்ல இருந்து கொண்டு வந்தது" என்றதும் ரேவதி "நான் பாஸ்கர் சாரை ரெண்டு நாளைக்கு முன்னால க்ளினிக்குல பாத்தேன்" என்று ரேவதி பாஸ்கரைப் பற்றி சகஜமாக சொன்னதும் அடுத்த நொடி 'அவன் எங்க வந்தான்' என்று எண்ணி தன் கணிப்பை சரி பார்க்க வேண்டுமென்றே தவறாக, "உன்ன பாக்க வந்தானா?" என்று கேட்டதும் ரேவதி தன் அழகான புன்சிரிப்பைக் காட்டியபடி, "ம்ஹூம்... எப்பவும் நான்தான் ப்ரோக்கர் ஷண்முகம் கூட அவர பாக்க போயிருக்கேன் ... வினிதா அக்காவை பாக்க வந்திருந்தாரு .. " என்று அருணுக்கு விடை கூறியதுடன் கடந்த கால வாழ்க்கையை பற்றி சாதாரணமாக பேசும் அளவுக்கு தனக்கு இருக்கும் மனத்தெளிவை அறிவித்தாள்.

 
'சரி.. நான் நெனைச்சது சரிதான் ? என் அத்தை பொண்ணையே சைட்டு அடிச்சுட்டு நீ எனக்கே செட்-அப் பண்ணி குடுக்கறயா? நிச்சயம் நீ செட்-அப் பண்ணி குடுத்தது வினிக்கு தெரிஞ்சு இருக்காது . மவனே உனக்கு இருக்குடா' என்று மனதுக்குள் பாஸ்கரை எப்படி எல்லாம் ப்ளாக்-மெயில் செய்யலாம் என்று எண்ணி சிரித்தபடி "ஓ, அப்படியா" என்றவனை அவன் முகத்தில் இருந்த குறும்பைப் பார்த்து 'என்னுடன் பகிர்ந்து கொள்ள மாட்டாயா' என்றும் கேட்கும் முகபாவத்துடன் "என்ன?" என்று கேட்டவளை ஒரு கணம் வாஞ்சையுடன் பார்த்தான் .. "உனக்கு நான் அப்பறம் சொல்றேன் .. " என்றபடி சாலையில் கவனம் செலுத்தினான்,

 அவளது வீட்டை நெருங்க நெருங்க அருணின் மனதில் ரேவதி என்ன செய்யப் போகிறாள் என்று ஒரு நடுக்கம் ஏற்பட்டது. காலை வந்த போது தரையில் அணைந்த விளக்கருகே இருந்த அகிலாவின் படத்தை சுவற்றில் மாட்டியபின் முனியம்மவை அவ்விளக்கை அகற்றி அறையை சுத்தம் செய்ய வைத்திருந்தான் .. வீட்டில் நுழையு முன்னே ரேவதியின் முகத்தில் சோகம் படர்ந்த்தை கவனித்தான் .. அதே சமயம் அவள் முகத்தில் நடந்ததை விதி என்று ஏற்றுக் கொண்ட அமைதியும் குடியிருந்ததைப் பார்த்து பெருமூச்சு விட்டான். "கொஞ்ச நேரம் இருந்து வீட்டை இப்பவே காலி பண்ணி ஹவுஸ் ஓனர் கிட்ட சாவிய கொடுத்துட்டே போயிடலாமா .. " என்று தன் எதிர்காலத்தைப் பற்றி நன்கு உணர்ந்து அவள் கேட்டதும்

 "காலி பண்ணனும் தான் ... இப்பவே முடியுமான்னு தெரியல. ஓண்ணு பண்ணுவோம். உனக்கு தேவையானதை இப்ப நீ எடுத்துட்டு வா .. பாக்கி எல்லாம் நான் ஆளை விட்டு காலி பண்ணி என்னோட அப்பார்ட்மென்ட் பில்டிங்குல இருக்கற கராஜ்ல ஸ்டோர் பண்ண ஏற்பாடு பண்ணறேன்" முனியம்மாவின் உதவியுடன் இருவரும் ரேவதிக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு அருணின் இல்லத்தை அடைந்தனர். அடுத்த நாள் காலை உணவருந்த அருண் சாப்பாட்டு மேசையை அடைய அங்கே ரேவதி கல்லூரிக்கு செல்ல ஆயத்தமாகி சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.

அவள் உடலின் அழகான வளைவுகளை சிறிதும் வெளிக்காட்டாதவாறு அமைந்த மரூன் வண்ண சுடிதார் உடுத்தி இருந்தாள். அதற்கு மேல் இரு தோள்களிலும் பொருத்திய துப்பட்டா. நீண்டு அடர்ந்த கூந்தலை படிய வாரி பின்னலாக போட்டு நுனியில் ஒரு ரப்பர் பாண்ட். கூந்தல் காதுகளை மறைக்காவண்ணம் இரு காதோரங்களிலும் ஹேர் கிளிப் பொருத்தி இருந்தாள். நெற்றியில் அழகான சிறு வட்டப் பொட்டுக்கு மேல் ஒரு சன்னமான விபூதி கீற்று. ஒரு கணம் அருண் அவளை முதல் முதலாக பார்த்த போது இருந்த தோற்றத்தை தன் மனக் கண் முன் கொண்டு வந்தான்.

அப்போதும் இப்போதைப் போலவே தேவைக்கு கடுகளவும் மீறாத ஆடை அலங்காரம். அப்போது பார்த்தவுடன் படுக்கைக்கு அழைத்து செல்ல தூண்டும் தோற்றம் இருந்த்து. இப்போதோ பார்ப்பவர் கையெடுத்து கும்பிடடத் தோன்றும் தோற்றம். “குட் மார்னிங், இது தான் உன் யூனிபார்மா?” என்று கிண்டலாக கேட்டபடி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். எதற்கு அப்படி கேட்கிறான் என்று கணத்தில் அறிந்த ரேவதி பதிலுக்கு சிரித்து “ம்ம்ம்.. எப்பவும் காலேஜுக்கு சுடிதார்லதான் போவேன்”

 “இதா? சுடிதாரா? நான் ஏதோ நன்ஸ் எல்லாம் போடற புதுமாதிரி அங்கின்னு இல்ல நினைச்சேன்” என்று மேலும் கிண்டலடித்தான். சாப்பிட்டு முடித்து அருண் காபி அருந்தியவாறு அவளிடம் “சோ, ஆல் செட் டு கோ? லீவுக்கு அப்ளை பண்ண தேவையான சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் எடுத்துகிட்டயா?” என்றதும் “ம்ம்ம் .. அம்மாவுக்கு கொடுத்த டிஸ்சார்ஜ் சம்மரி அப்பறம் வினிதாக்கா கொடுத்த மெடிக்கல் சர்டிஃபிகேட் ரெண்டும் எடுத்துகிட்டேன். அந்த டிஸ்சார்ஜ் சம்மரிலயே டிஸீஸ்ட்ன்னு போட்டு இருக்கு ... கூட டெத் சர்டிஃபிகேட்டும் வேணுமா?” என்று கேட்க கேட்க அவள் கண்கள் குளமாகின.

 அருண் அவள் தோளில் கை போட்டு லேசாக அணைத்தவாறு “டிஸ்சார்ஜ் சம்மரி மட்டும் போதும் ... கம் ஆன் சியர் அப்“ என்று அவளை தேற்றியபடி “காலைல நான் ஆஃபீஸ் போற வழில உன்னை டிராப்’ பண்ணிடறேன் வரும்போது நீ ஆட்டோ பிடுச்சு வந்துடு. ஒ.கே?” என்று பேச்சை திசை திருப்பினான். இருவரும் புறப்பட்டு லிஃப்டில் நுழைந்ததும் ரேவதி “திரும்பி வரும் போது நான் பஸ்லயே வந்துடறேன்” என்றாள்.

 “பஸ் சீக்கரம் கெடைக்குமா? கூட்டமா இருக்காது?” “காலேஜுக்கு எதிர்ல இருக்கற பஸ் ஸ்டாப்ல இருந்து இந்த பக்கம் வர்ற பஸ்ல முக்காவாசி அடையார் வரும். ரொம்ப கூட்டம் இருக்காது. இருந்தாலும் அங்க இருந்து ரெண்டே ஸ்டாப்தான்” என்று விளக்கமளித்தாள். காரில் ஏறியபின் அருண் “ஹேய், நான் ஆஃபீஸ் போறேன்னு சொன்னப்ப நீ ஆச்சர்யப்படவே இல்லையே?

நான் இங்க ஆஃபீஸ் போற விஷயம் உனக்கு ஏற்கனவே தெரியுமா?” “தெரியும். வினிதாக்கா நீங்க கொஞ்ச நாள் உங்க ஃபாமிலி பிஸினெஸ்ல ஹெல்ப் பண்ணறதா சொன்னாங்க” என்றவள் முகத்தில் குறும்பு கொப்பளிக்க “அப்பறம் கொஞ்சம் background detailsம் சொன்னாங்க ...” என்றாள் “என்ன background details ?“ “உங்க பெரியப்பாகூட சண்டை போட்டது அப்பறம் ஆண்டி கிட்ட பேசுனதுக்கு அப்பறம் பிஸினெஸ்ல ஹெல்ப் பண்ண ஒத்துகிட்டது எல்லாம் சொன்னாங்க”

 “சே, அப்ப நல்ல விஷயம் ஒண்ணும் சொல்லல, இருக்கட்டும் அவளுக்கு வெச்சுக்கறேன் .. சரி இதெல்லாம் எப்ப உக்காந்து பேசுனீங்க?” “அப்பப்ப நடுவுல to make me feel comfortable எதாவுது டாபிக் பேசுவாங்க எனக்கு அவங்கள விட உங்க கிட்டதானே பழக்கம்? அதனால உங்களை பத்தி அடிக்கடி பேச்சு வரும். ஆக்சுவலா, உங்களை பத்தி நல்ல விஷயம்தான் சொல்லுவாங்க ரொம்ப போரடிச்சுது அதனால இந்த விஷயம் சொன்னாங்க” என்று அவள் கிண்டலாக கூற .. அருண் “இரு இரு உனக்கும் இருக்கு ... வெச்சுக்கறேன்” என்றதும் அவன் சொன்ன கடைசி வார்த்தையை மட்டும் மனதில் நினைத்து ‘அது கூட எனக்கு ஒ.கே தான்’ என நினைத்தவள் தொடர்ந்து ‘சே, அவரை பாத்து ஊரே காறி துப்பும்னு நினைக்காம நான் ஏன் இப்படி கேவலமா யோசிக்கறேன்’ என்று தன்னையே கடிந்து கொண்டாள்.

 “என்ன பேச்சையே காணோம்?” என்றவனைப் பார்த்து கன்னத்தில் குழி விழ சிரித்து “ஒண்ணுமில்ல” என்றவளை சில கணங்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்து “இந்த மாதிரி எப்பவும் சிரிச்சுட்டே இருக்கணும் ஒ.கே?” “ம்ம்ம் .. படிப்பை நெனைச்சாத்தான் ரொம்ப பயமா இருக்கு” “ஏன்?” “இந்த செமஸ்டர்ல மிஸ்ஸான போர்ஷன்ஸ், அசைன்மென்ட்ஸ், டெஸ்ட்ஸ்ன்னு எக்க்ச்சக்கமா இருக்கும். போதாக்குறைக்கு கைல மூணு அரியர்ஸ்.” சற்று நிறுத்தியபின் “அந்த மூணு பேப்பர்ஸும் நான் ஒழுங்கா க்லாஸ் அட்டெண்ட் பண்ணல. எனக்கு கொஞ்சம் சொல்லி குடுப்பீங்களா?” “நான் நிச்சயம் சொல்லி குடுப்பேன். அதுக்கு முன்னால உக்காந்து ப்ளான் பணணலாம்.

எதுக்கு எவ்வளவு நேரம் தேவைப் படும் எவ்வளவு நேரம் இருக்குன்னு. அப்பறம் அந்த மூணு அரியர்ஸுல எத்தனை இந்த செமஸ்டர்ல அட்டெம்ப்ட் பண்ணறதுன்னு டிசைட் பண்ணலாம்” “அடுத்த செமெஸ்டர் நடுவுலயே கேம்பஸ் இன்டர்வ்யூக்கு வருவாங்க. கைல அரியர்ஸ் வெச்சு இருந்தா செலெக்ட் ஆகறதுக்கு சான்ஸே இல்ல” “அதைப் பத்தி யோசிச்சேன். எப்படியும் ஃபர்ஸ்ட் க்லாஸ் இல்லாத்தால நல்ல கம்பெனில கெடைக்கறது கஷ்டம். சோ, பி.ஈ முடிச்சதும் வேலைக்கு ட்ரை பண்ண வேண்டாம். எம்.டெக் அல்லது எம்.ஈ ஜாயின் பண்ணு.

அதுல அசத்து ... இப்ப எடுக்காத அதே கம்பெனி எல்லாம் உன்னை எடுக்க க்யூல நிப்பாங்க. அதுவும் ஐ.ஐ.டி மாதிரி இடத்துல பண்ணுனா நிச்சயம் அருமையான ப்லேஸ்மென்ட் கிடைக்கும். அப்படி இல்லேன்னா, ஒரு ஆறு மாசம் கழிச்சு நல்லா ப்ரிபேர் பண்ணி ஜி.ஆர்.ஈ எக்ஸாம் எழுதிட்டு அங்க வந்து எதாவுது ஒரு நல்ல காலேஜ்ல சேந்து எம்.எஸ் பண்ணு. என்ன?” “நான் எம்.டெக்கே வேண்டாம்ன்னு இருக்கேன் நீங்க என்னடான்னா அப்ராட்ல எம்.எஸ் பண்ண சொல்றீங்க” “எப்படியும் பி.ஈ மட்டும் முடிச்சுட்டு வேலைக்கு ட்ரை பண்ணறது ரூல்ட் அவுட். அதை ஒத்துக்கறயா?” “ஏன், ஏதாவுது கிடைக்கற வேலைல சேந்துக்கறேனே?”

 “ஓண்ணும் வேண்டாம். You should join something you deserve ஜஸ்ட் ஒரு மூணு பேப்பர் அரியர்ஸ் வாங்கினதுக்காக எதுக்கு நீ உன் தகுதிக்கு கீழ ஒரு வேலைக்கு போகணும்? மடத்தனம். நீ ஐ.ஐ.டீல எம்.டெக் படிக்கற. No more discussions about this. O.K?” என்று சற்று அழுத்தமாக அருண் கூறியபின் ரேவதி தன் மௌனத்தினால் சம்மதம் அளித்தாள். அருண் தொடர்ந்து “எனக்கு செலவுன்னு பாக்காதே. எம்.டெக் படிக்கும் போது ஸ்டைபென்ட் கிடைக்கும் அதுவே உனக்கு மெஸ் பில்லுக்கு சரியா இருக்கும். சோ, காலேஜ் ஃபீஸ் மட்டும் தான்” என்று அவ்விவாத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தான்.

 மௌனம் காத்த ரேவதியிடம், “நீயே பாரு, இன்னும் ஒரு மூணு வருஷத்துக்குள்ள இந்தியாவை விட்டு எங்கயாவுது ஆன்சைட்ல இருப்பே. அப்பறம் நான் உன்னை பாக்கணும்னா அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டுதான் பாக்க முடியும்” என்று கிண்டலடித்தான். “ஏன், என் செக்ரடரி கிட்டேன்னு சொல்லறது தானே?“ என்று பதிலுக்கு கிண்டலடித்தவாறு கல்லூரி வாசலையடைந்த காரிலிருந்து இறங்க எத்தனித்தாள்.

 “ஹேய், ரேவதி! “ “ம்ம்ம்?” மனதில் உறுதி வேண்டும் என்ற கூற்றை ஆங்கிலத்தில் “As the going gets tough, the tough gets going - only the tough gets going” என்றான். அவனை கூர்ந்து சிறு புன்னகையுடன் பார்த்த ரேவதி “ம்ம்ம்” என்றவாறு தலையசைத்தாள். அருண் தொடர்ந்து “சியர் அப். ஓ.கே?” என்றதும் பதிலுக்கு தன் ட்ரேட் மார்க் புன்னகையை உதிர்த்து அருணின் இருதயத்தை ஒரு கணம் நிறுத்தியபின் விடை பெற்றாள். மாலை அருண் வீடு வந்து சேரும்போது மணி ஏழை நெருங்கி இருந்தது. கையில் ஒரு பிளாஸ்டிக் கேரி பாகுடன் ரேவதியின் அறைக்குள் நுழைந்தான்.

ரேவதி மேசை மேல் பரப்பியிருந்த புத்தகம் மற்றும் நோட்டு புத்தக குவியலை வெறித்து பார்த்த படி அமர்ந்திருந்தாள். அவள் கண்கள் மனத்தில் இருந்த பயத்தை அப்பட்டமாக பிரதிபலித்தன. “How was your day? என்றவாறு அருகில் இருந்த நாற்காலியில் அவளை பக்கவாட்டில் பார்த்தவாறு அமர்ந்தவனிடம் “ம்ம்ம் ...ஓ.கே” என்று சோர்வுடன் பதிலளித்தாள் “என்னடா? ரொம்ப டல்லா இருக்க? நீ இல்லாதப்போ நிறைய போர்ஷன்ஸ் கவர் பண்ணி இருக்காங்களா?” என்றதும்

அவன் ‘என்னடா’ என்று நெருங்கிய நட்புடன் அழைத்ததும் ரேவதியின் கண்களில் இருந்த பயம் ஓரளவு விலகியது. ஒரு சோகப் புன்னகையுடன் “ஹெச்.ஒ.டீ கிட்ட அப்பறம் மத்த லெச்சரர் கிட்ட எல்லாம் பேசுனேன் .. மிஸ் பண்ணின அசைன்மென்ட் எல்லாம் சப்மிட் பண்ண சொன்னாங்க .. ஒவ்வொரு சப்ஜெக்ட்லையும் ஒரு ஒரு டெஸ்ட்தான் மிஸ் ஆயிருக்கு ... பரவால்ல இனி வர்ற டெஸ்ட் மார்க்கை மட்டும் எடுத்துக்கறதா சொன்னாங்க ...

ஏற்கனவே இந்த செமெஸ்டர் தொடக்கத்துல இருந்து நான் ஒண்ணும் படிக்கல ... சப்மிட் பண்ண வேண்டிய அசைன்மென்ட், இப்ப நடத்தற போர்ஷன்ஸ், இருக்கற அரியர்ஸ் எல்லாம் எப்படி படிப்பேன்னு ரொம்ப பயமா இருக்கு. மிஸ் பண்ணுன போர்ஷன்ஸ் அப்பறம் அரியர்ஸ்ல புரியாதது எல்லாம் எனக்கு சொல்லி கொடுக்கறீங்களா?” என்று நீளமாக அவள் பயத்தையும் தேவையையும் ஒரு சேர அடுக்கினாள்.

 “புரியாததை பத்தி கவலையை விடு. நான் சொல்லி கொடுக்கறேன். மொதல்ல நம்ம இப்ப எப்படி படிக்கறதுன்னு பாக்கலாம்.” என்றவன் தொடர்ந்து “நீ அஞ்சாவுது செமெஸ்டெர் வரையிலும் நல்ல மார்க்தானெ வாங்கி இருந்தே?” “ம்ம்ம் ..எல்லா சப்ஜெக்ட்லயும் க்லாஸ்ல டாப் த்ரீ ராங்க்குக்கு உள்ளதான் இருப்பேன்” என்று பெருமையுடன் பதிலளித்தாள். “That’s good! சரி, அப்பெல்லாம் காலேஜ் போற நேரத்தை தவிற நார்மலா ஒரு வாரத்துல எத்தனை மணி நேரம் படிப்புக்குன்னு செலவு செய்வே?” “வாரத்துலயா?” “ஆமா .. மொத்தமா எவ்வளவு மணி நேரம்னு கூட்டி சொல்லு..

. “வீக் டேஸ்ல தினம் ஒரு மணி நேரம் சனில அஞ்சு மணி நெரம் அப்பறம் ஞாயிறுலயும் அஞ்சு மணி நெரம் செலவு செய்வேன். சோ, மொத்தம் ஒரு பதின்ஞ்சு மணி நேரம்” “And you managed to score high! That’s commendable! Still, ஏன் அவ்வளவு கம்மி நேரம்? பாக்கி நேரம் டீ.வி பாப்பயா?” “கிண்டலா? காலேஜ்ல இருந்து வரதுக்கே ஏழு மணிக்கு மேல ஆயிடும் .. நெறைய நாள் நான் தான் சமைப்பேன். அப்பறம் ட்ரெஸ் எல்லாம் அயர்ன் பண்ணறது, மத்த பாங்குக்கு போறது, எலெக்ட்ரிஸிடி பில், ரேஷன் கடைக்கு மத்த கடைக்கு போறது எல்லாம் நான்தான்”
“ஏன் உங்க அம்மா ...” என்று இழுத்தவனை தடுத்து

“நான் காலேஜ்ல சேந்த்ததுல இருந்து அம்மா கொஞ்சம் அதிக நேரம் வெளில போவாங்க ... அதனால தான் தர்ட் இயர் தொடக்கத்துல இருந்து பாதி வரைக்கும் இருந்த சேவிங்க்ஸ்லயே வீட்டு செலவும் கூட அம்மா ட்ரீட்மென்ட் செலவு எல்லாம் செய்ய முடிஞ்சுது” என்று மறைமுகமாக அகிலா ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்று தன் இளமையின் கடைசி நாட்களில் தினமும் அதிக நேரம் தொழிலில் செலவிட்ட்தை குறிப்பிட்டாள். அவள் முகத்தில் ஓரளவு காணாமல் போயிருந்த சோகம் மறுபடி குடி புகுந்த்து. கண்களில் நீர் கோர்க்க தொடங்கியது.

 “ஓ ஐம் சோ சாரிடா .. “ என்றவாறு அவள் தோளில் கை போட்டு முதுகைத் தடவி அவளை தேற்றினான் ‘நானே அவளுக்கு ஞாபகப் படுத்தி தொலச்சுட்டனே’’ என்று தன்னை நொந்து கொண்டான். சில நிமிடங்களில் சுதாரித்த ரேவதி புறங்கையால் கண்களைத் துடைத்த படி “சாரி, நீங்க என்னவோ சொல்ல வந்தீங்க .. “ என்று இழுத்தாள். “இட்ஸ் ஓ.கே ... நீ சமைப்பயா? என்னெல்லாம் சமைப்பே?” என்று அருண் பேச்சை திசை திருப்பினான். “வெஜ் நான்-வெஜ் எல்லாம் சமைப்பேன்..கொஞ்சம் சைனீஸ் கூட சமைப்பேன்” என்று அவளும் சிறிது லேசான மனத்துடன் தொடர்ந்தாள். “ஒரு நாள் ப்ரீயா இருக்கறப்ப உன்னோட ஸ்பெஷல் ஐடம் எதாவுது குக் பண்ணனும் ... சரி, இங்க நீ மத்த வேலை எதுவும் செய்ய வேண்டாம்.

பஸ்ஸுக்கு டைம் ஆச்சுன்னா ஆட்டோ புடிச்சு வந்துரு .. அப்ப வாரத்துக்கு எவ்வளவு நேரம் படிப்பில செலவு பண்ண முடியும்?” “ம்ம்ம்...எப்படியும் அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுவேன், சோ, டெய்லி ஃபோர் ஹவர்ஸ் அண்ட் சனி ஞாயிறுல எட்டு ஒன்பது மணி நேரம் .. சோ, ஈசிலி, பர் வீக் தர்டி சிக்ஸ் டு தர்டி எய்ட் ஹவர்ஸ்” “முப்பத்து ஆறு மணி நேரம் கொஞ்சம் அதிகம் எப்பப் பாத்தாலும் படிச்சுட்டு இருந்தா பைத்தியம் புடிச்சுடும்” என்று சொல்லி நாக்கைக் கடித்துக் கொண்டான்.

ரேவதி அவன் சொன்னதை சட்டை செய்யாமல் இருப்பதை பார்த்த்தும் ‘நல்ல வேளை அவ தப்பா எடுத்துக்கல’ என்று நினைத்தான். தொடர்ந்து “You need to relax also .. All work and no play makes you dull .. ஒரு முப்பது மணி நேரம்னு வெச்சுக்கலாம். அதுல பதனஞ்சு மணி நேரத்துல இனி நடத்த போற போர்ஷனஸை நீ முன்ன மாதிரி படி, பாக்கி பதனஞ்சு மணி நேரம் இது வரை நடத்துனதை catch-up பண்ணறதுக்கு அப்பறம் அரியர்ஸுக்குன்னு வெச்சுக்கலாம். ஓ.கே?”. முகத்தில் ஒரு உற்சாகத்துடன் அருணின் அணுகுமுறையை ரசித்தவாறு

அதனை உடனே புரிந்து கொண்டு “ம்ம்ம் ... நீங்க சொல்றத கேட்டு இப்ப கொஞ்சம் நம்பிக்கை வந்து இருக்கு. சரி, ஆரமிக்கறேன் ...” “வெய்ட், வெய்ட், உக்காறதுக்கு முன்னால கால் நீட்ட கூடாது” “வெய்ட், வெய்ட், ஒக்காறதுக்கு முன்னால கால் நீட்ட கூடாது” ஒரு கணம் அவன் சொன்னதையும் சொன்ன விததையும் ரசித்து தன் முத்துப் பற்கள் தெரிய கன்னத்தில் குழிவிழ சிறு குலுங்கலுடன் சிரித்தாள். அருண், ‘ஏய், பிசாசே, இப்படி எல்லாம் சிரிச்சு என்னை கொல்லாதே' என்று மனதுக்குள் அவளைக் கடிந்து கொண்டான் “சரி, என்ன பண்ணனும் சொல்லுங்க ...” அருண் அவன் கொண்டு வந்திருந்த கேரி பாகில் இருந்து ஒரு ஸ்பைரல் பைண்ட் புத்தகத்தை கொடுத்து

“முதல்ல நீ பண்ண வேண்டிய வேலைகள் எல்லாத்தையும் இதுல லிஸ்ட் பண்ணு ” "எல்லாத்தையும்னா .. " "படிக்க வேண்டிய பாடங்கள், எழுத வேண்டிய அசைன்மென்ட், பிரிப்பேர் பண்ண வேண்டிய டெஸ்ட் .. பாடங்களுக்கு, அசைன்மென்ட்ஸுக்கு, டெஸ்டுக்குன்னு ஒவ்வொண்ணுக்கும் தனியா கொஞ்சம் பக்கங்களை ஒதுக்கி எழுது.. ஒவ்வொரு வேலையும் முடிஞ்ச உடனே அதுக்கு நேரா ஒரு டிக் மார்க் போட்டா அது முடிஞ்ச வேலைன்னு அர்த்தம்"

 "எக்ஸாமுக்கு ஒவ்வொரு பாடத்தையும் மூணு தடவையாவுது படிக்கணுமே ..." "வேணும்னா மூணு தடவை எழுது .. இல்லை ஒவ்வொரு பாடத்துக்கு நேர வரிசையா மூணு டிக் மார்க் போட்டுக்கலாம்" "சோ, டெய்லி இந்த லிஸ்டை பாத்து என்ன படிக்கணும்னு ... " "வெய்ட் வெய்ட் .. நான் இன்னும் முடிக்கல .. அதுக்குள்ள மேடம் முந்திரிக் கொட்டை மாதிரி ஆரமிக்க வேண்டாம்" மறுபடி சிரித்து "ம்ம்ம் சொல்லுங்க" டைரி போன்ற மற்றொரு புத்தகத்தைக் காட்டி, “இது உன்னோட வீக்லி ஆர்கனைஸர். ஒவ்வொரு வார தொடக்கத்துலயும் அந்த வாரத்தில எப்படி உன்னோட முப்பது மணி நேரத்தை செலவு பண்ணப் போறேன்னு எழுதணும்...

மொதல்ல எது எதுக்கெல்லாம் சாலிடா ஒண்ணு ரெண்டு மணி நேரம் தேவையோ அதை லிஸ்ட் பண்ணணும் அப்பறம் பொடிப் பொடி வேலைங்களை லிஸ்ட் பண்ணிக்கணும். அந்த சாலிடான வொர்க் எல்லாம் வாரத்துல எந்த நாள்ல செய்யறதுன்னு அந்த காலண்டர் மாதிரி இருக்கற பேஜஸ்ல மார்க் பண்ணிக்கோ. " "அப்பறம் டெய்லி அதைப்பாத்து . ..." "அவசரக் குடுக்க ஒன்னு எங்கிட்ட இப்ப ஒரு அறை வாங்கப் போகுது ... " "சாரி ... சொல்லுங்க .." "ஒவ்வொரு நாளும் காலைல வீக்லி லிஸ்டையும் காலண்டரையும் பாத்து அன்னைக்கு பண்ண வேண்டியதை லிஸ்ட் பண்ணிக்கோ. என்ன புரிஞ்சுதா?”

 “ம்ம்ம் ...” “பண்ண வேண்டியதெல்லாம் மலை போல இருந்தாலும் .. நீ எப்பவும் அன்னைக்கு பண்ண வேண்டியதை மட்டும் தான் யோசிக்கணும்” என்று ‘மட்டும் என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்துச் சொன்னான் தொடர்ந்து, “அதே மாதிரி ஞாயித்து கிழமை சாயங்காலமா ஒரு மணி நேரம் ஒக்காந்து யோசிச்சு வர்ற வாரத்துல பண்ண வேண்டியதை “ மறுபடி அழுத்தம் கொடுத்து “மட்டும் லிஸ்ட் பண்ணப் போறோம். Got it?” இவ்வாறாக நேரத்தை எப்படி செலவிட வேண்டும் என்பதை முன் கூட்டி குறித்து வைக்கும் முறையை விளக்க விரிந்த கண்களுடன்,

“இந்த மாதிரி ப்ளான் பண்ணறதுக்கு பேர் என்ன” “டைம் மானேஜ்மென்ட் அல்லது பர்ஸனல் மேனேஜ்மென்ட்னு சொல்லு வாங்க. நான் இப்ப உனக்கு சொல்லிக் குடுத்த்தை கத்துக்க எதாவுது ட்ரெயினிங்க் செமினாருக்கு போய் நீ ஒரு ரெண்டு மூணு ஆயிரம் அழுது இருக்கணும்” “தாங்க்ஸ் .. நீங்க எப்படி கத்து கிட்டீங்க “ “எங்க கம்பெனில என்னை அந்த மாதிரி ஒரு செமினாருக்கு அனுப்பினாங்க ..

அதுக்கப்பறம் அங்க சொல்லி குடுத்ததை நான் கொஞ்சம் இம்ப்ரோவைஸ் பண்ணிகிட்டேன்”
இவ்வாறு ரேவதிக்கு நடைமுறையில் எப்படி அடி மேல் அடி வைத்து அவள் பாடங்களான அம்மியை நகர வைப்பது என்பதை விளக்கி இனிவரும் அவள் படிப்பை தொடக்கி வைத்தான்.

 “என்ன, எல்லா அரியர்ஸும் இந்த செமெஸ்டர்லயே அட்டெம்ப்ட் பண்ணப் போறயா .. இல்ல அடுத்த செமெஸ்டருக்கு கொஞ்சம் மிச்சம் வெக்கலாமா?” “இந்த செமெஸ்டர்லயே முடிக்கப் போறேன்” என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்ன ரேவதியைப் பார்த்து “That’s the spirit!” என்றான்.

 அன்றிலிருந்த் தினமும் மாலை ஏழிலிருந்து ஒன்பது மணிவரை அருண் ரேவதியின் படிப்பில் தேவையான விளக்கங்கள் கொடுத்து, அவளை அடுத்து வரும் தேர்வுகளுக்கு தயார் படுத்தினான்.



No comments:

Post a Comment