Monday, May 4, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 21

செல்வி - சிவா

Sunday, 14 February 2010 - ஞாயிறு ஃபெப்ரவரி 14, 2010
அதே ஞாயிறன்று ...

காலை சிவா விடியலுக்கு முன் எழுந்து மார்கெட் சென்று உணவகத்துக்குத் தேவையானவற்றை வாங்கி அவைகளை உணவகத்தில் வைத்து விட்டு எட்டு மணியளவில் வீடு திரும்பினான். ஞாயிற்றுக் கிழமைகளில் உணவகத்தின் அவனது சமையல் வேலை பதினோறு மணியளவிலும் செல்வியின் பணி பனிரெண்டு மணியளவிலும் தொடங்கும். சிவா முதலில் சென்றபின் இருவருக்கும் மதிய உணவை சமைத்து எடுத்துக் கொண்டு செல்வதை செல்வி வழக்கமாக்கிக் கொண்டு இருந்தாள். ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் மூன்றில் இருந்து ஆறு மணிவரை இருவரும் வெளியில் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டு இருந்தனர்.

சிவா புறப்படுவதற்கு முன் செல்வியும் தயாராகி அவனது வீட்டுக்குள் நுழைந்தாள்.



சிவா, "இன்னா செல்வி? நீ எதுக்கு இவ்வளவு சீக்கரம் வர்றே?"

செல்வி, "காசிராம் சார் கொஞ்சம் அக்கௌண்ட்ஸ் ஃபைனலைஸ் பண்ண ஹெல்ப் பண்ணச் சொன்னார். அதுக்கு தனியா பேமெண்ட் கொடுக்கறேன்னு சொன்னார். அதனால சண்டேஸ்ல காலைல கொஞ்ச நேரமும் மத்தியானம் மூணுல இருந்து ஏழு மணி வரைக்கும் பண்ணித்தர ஒத்துட்டேன். அதான்"

தன்னுடன் கழிக்க வேண்டிய நேரத்தை காசாக்க எண்ணியதாக நினைத்த சிவாவின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

சிவா, "ஓ! எவ்வளவு கொடுக்கறார்?"

செல்வி, "எக்ஸ்ட்ரா மூணாயிரம்"

சிவா, "சரி, நான் உனக்கு அதைக் கொடுக்கறேன். காசிராம் சார்கிட்டே முடியாதுன்னு சொல்லிடு"

செல்வி, "என்ன சொல்றே?"

சிவா, "சண்டேஸ் மத்தியானம் என் கூடத்தானே இருப்பே. அதைவிட இப்போ உனக்கு பணம் முக்கியமாயிடுச்சா?"

அவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டு இருந்த மரகதம், "டேய் மவனே! கட்டிக்கப் போறவகிட்டே பேசற பேச்சாடா இது?"

கண் கலங்கி விசும்பியபடி செல்வி, "நான் ஒண்ணும் காசுக்காகச் செய்யலை. நம்ம நல்லதுக்காகத்தான் செஞ்சேன்" என்றபடி தன் வீட்டுக்குச் சென்றாள்.

மரகதம், "டேய்! எதையும் புரிஞ்சு செய்யற போண்ணுடா அது. போய் மன்னிப்புக் கேட்டு சமாதானம் பண்ணி கூட்டிட்டு வா"

தன் வீட்டில் படுக்கையில் தலை கவிழ்த்து விசும்பிக் கொண்டு இருந்தவளின் அருகே அமர்ந்த சிவா, "சாரி செல்வி! நான் கோவத்தில் எதோ சொல்லிட்டேன். என்னை மன்னிச்சுக்கோ"

செல்வி, "உன் சாரி பூரி எல்லாம் வேண்டாம் போ. என்னமோ எனக்கு பணம்தான் முக்கியம்ன்னு நினைச்சுட்டே இல்லை?"

சிவா, "அதான் சாரி கேட்டேன் இல்லை? சரி, அது இன்னா நம்ம நல்லதுக்குன்னு சொன்னே?"

செல்வி, "எனக்கு அக்கௌண்டிங்க் தெரிஞ்சாலும் ஒரு ரெஸ்டாரண்ட் அக்கௌண்ட்ஸ் எப்படி மெண்டெயின் பண்ணனும்ன்னு தெரியாது. ரெஸ்டாரண்டில் எதுக்கு எப்படி கணக்கு எழுதறாங்கன்னு தெரிஞ்சுட்டா நம்ம ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கும் போது யூஸ் ஆகும்தானே?"

சிவா, "சே! என் சமையக்காரன் புத்தியை ஜோட்டால அடிக்கணும். சாரிம்மா. ப்ளீஸ்"

விசும்பலை நிறுத்தி அவனைக் அன்பு கலந்த கோபத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த செல்வி, "ஒண்ணும் பேசாதே போ! பொறுக்கி"

சிவா, "அதுக்காக இந்த மாதிரி எல்லாம் திட்டுனா அது கொஞ்சம் ஓவரு" என்றுபடி அவளை இழுத்து அணைத்தான்.

அவன் நெஞ்சில் முகம் புதைந்து குழைந்த செல்வி, "ம்ம்ம் .. அந்த மாதிரி எல்லாம் பேசினா அப்படித்தான் திட்டுவேன்"

சற்று நேரம் கழித்து இருவரும் சிவாவின் வீட்டை அடைய ...

மரகதம், "இன்னாடா மன்னிப்புக் கேட்டியா? சமாதானம் ஆனாளா?"

சிவா, "ம்ம்ம் ... கேட்டேன். கெட்ட வார்த்தையில திட்டுனதுக்கு அப்பறம்தான் சமாதானம் ஆனா"

செல்வி வெட்கத்தில் முகம் சிவந்து அவனைக் கிள்ளியபடி, "எதை எல்லாம் பெரியவங்ககிட்டே சொல்றதுன்னு இல்லையா?" என்று அவேசமாக கிசு கிசுத்தாள்.

சிவா, "பாரும்மா உன் முன்னாடியே கிள்ளறா. இன்னா ஏதுன்னு கேக்க மாட்டியா?"

வாய் விட்டுச் சிரித்த மரகதம், "சீ போடா! வேலைக்கு நேரமாச்சு ரெண்டு பேறும் பத்தரமா போயிட்டு வாங்க"

வெளியில் வந்து ஸ்கூட்டரை எடுக்கும் சமயம் மரகதம், "டேய் சிவா, செல்வி, இன்னைக்கு நைட்டு உக்காந்து உங்க கல்யாணத்தைப் பத்தி பேசி முடிவு பண்ணனும். கொஞ்சம் சீக்கரமா மேனேஜர்கிட்டே சொல்லிட்டு வா"

சிவா, "அது வந்தும்மா ... "

செல்வி, "நாளைக்கு எங்க ரெண்டு பேருக்கும் வீக்லி ஆஃப் அத்தை. நாளைக்கு நிச்சயமா பேசலாம்"

மரகதம் "சரி. ஆனா காலைல இருந்து எங்கேயாவுது அவளைக் கூட்டிட்டு ஊர் சுத்தப் போவக்கூடாது. இப்பவே சொல்லிட்டேன்"

சிவா, "சரிம்மா. காலைல விஜயா ஆண்டி வேலைக்குப் போயிடுட்டு பத்து மணிவாக்கிலதானே வருவாங்க? அவங்க வந்ததும் மொதல் வேலையா அவங்களையும் வெச்சுட்டு அதைப் பத்தி பேசலாம்" என்றபடி விடைபெற்றான்.


Monday, 15 February 2010 -திங்கள், ஃபெப்ரவரி 15, 2010

காலை பத்து மணியளவில் ...

செல்வியும் விஜயாவும் சிவாவின் வீட்டுக்குள் நுழைய ...

மரகதம், "வா விஜயா. வா செல்வி. இப்போத்தான் நாஷ்டா சாப்டோம். நீங்க சாப்டாச்சா?"

செல்வி, "ஆச்சு அத்தை"

விஜயா மரகதத்துடன் அமர செல்வி சுவற்றோரம் நின்று கொண்டு இருந்தாள்.

மரகதம், "டேய் சிவா! வாடா"

செல்வி, "உள்ளே இன்னா செஞ்சுட்டு இருக்கு?"

மரகதம், "காதுல எதையோ மாட்டிகினு பாட்டுக் கேட்டுட்டு இருப்பான் போய் கூட்டியா"

உள்ளே கட்டிலில் அமர்ந்தபடி காதுகளில் இயர் ஃபோனுடன் தலையசைத்துக் கொண்டு இருந்த வருங்காலக் கணவனை சில கணங்கள் ரஸித்த செல்வி அவன் தோளைப் பிடித்து உலுக்க ...

சிவா, "இன்னா? உங்க அம்மா வந்துட்டாங்களா?"

செல்வி, "ம்ம்ம் ... "

குரலைத் தாழ்த்திய சிவா, "நாம் நேத்து பேசிட்ட மாதிரி உண்மையை சொல்லிடலாமா? ஓ.கேதானே? உனக்கு சொல்ல வேண்டாம்ன்னா பரவால்லை. நான் வேற எதாவுது சாக்கு சொல்றேன்"

செல்வி, "இல்லை. உண்மையை சொல்லிடலாம்"

இருவரும் அறைக்கு வெளியில் வந்தனர் ..

மரகதம், "சொல்லுடா எப்போ கல்யாணத்தை வெச்சுக்கலாம்?"

சிவா, "அம்மா. ஒரு சின்ன பிரச்சனை. அது சரியாறவரைக்கும் கல்யாணத்தை தள்ளிப் போடலாம்ன்னு இருக்கோம்"

விஜயா, "இன்னா பிரச்சனை சிவா?"

சிவா, "அன்னைக்கு அந்த நந்தகுமார் பய இவளை மானபங்கப் படுத்தப் பாத்தான் இல்லையா? அன்னைக்கு இவளை அலங்கோலமா ஃபோட்டோ புடிச்சு வெச்சு இருக்கான். ஃபோட்டோ எடுத்தானா இல்லை வீடியோ எடுத்தானான்னு தெரியலை. ஒரு வாரத்துக்கு முன்னாடி அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தான். வந்த அன்னைக்கே இவகிட்டே மறுபடி வம்பு பண்ணி இருக்கான். செல்வி பதிலுக்கு கறாரா பேசியிருக்கா. அவன் அப்படியா உன் மானத்தை வாங்கிடுவேன்னு சொல்லி மிறட்டி இருக்கான். நான் இன்னா ஏதுன்னு கேக்கறதுக்கு முன்னாடி எங்கிட்டே இருந்து தப்பிச்சுக்கறதுக்கு வேகமா போய் அவனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு. இப்போ அவன் ஆஸ்பத்திரியில் இருக்கான். இன்னும் ரெண்டு வாரத்தில் வெளியில் வரப்போறான். அவன் வந்ததும் அவங்கிட்டே இன்னா இருக்குன்னு பாத்துட்டு அதை எப்படியாவுது வாங்கிடணும்ன்னு இருக்கோம்"

மரகதம், "ஃபோட்டோ எடுத்து இருந்தான்னா அத்தை வெச்சுட்டு இன்னாடா பண்ணுவான்? பேப்பர்லயா போடப் போறான்? மறுபடி வந்து வம்பு பண்ணினா நாலு சாத்து சாத்திட்டு போவாமே அவன் ஃபோட்டோ வெச்சுட்டு இருக்கான்னு எதுக்கு பயந்துகிட்டு இருக்கீங்க?"

செல்வி, "அத்தை. இது எல்லாம் டிஜிடல் போட்டோ. கம்பியூட்டர்ல இன்டர்நெட் அப்படின்னு இருக்கு. அது பேப்பர் மாதிரித்தான். அதுல போட்டான்னா நிறையப் பேர் அதைப் பாப்பாங்க. நாளைக்கு இவரு ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கும் போது என்னைப் பத்தி நாலு பேர் நாலு விதமா பேசினா இவருக்குத்தானே அவமானம்?"

விஜயா வாயடைத்துப் போய் அமர்ந்து இருக்க ..

மரகதம் விஜயாவைப் பார்த்து, "விஜயா நான் சொல்லப் போறதை நீ தப்பா எடுத்துக்கக் கூடாது. என்ன?"

விஜயா, "சரி மரகதம்"

மரகதம், "செல்வி, சிவா, என்னையும் விஜயாவையும் விடவா உங்களுக்கு பெரிய அவமானம்? எங்களைப் பத்தி உங்க ரெண்டு பேர் காது படவே எத்தனையோ பேர் பேசி இருக்காங்க. அதை எல்லாம் தாங்கிட்டு இன்னைக்கு ஆம்பளையா நீ நிக்கறே. உன்னை விட நல்லா படிச்சும் உனக்கு ஏத்த பொண்டாட்டியா உனக்கு எந்த விதத்தில உதவியா இருக்கலாம்ன்னு இவ நிக்கறா. இவளோட ஃபோட்டோவை எந்த பேமானியாவுது எதுல போட்டான்னா அதைப் பத்தி எதுக்குடா நீ கவலைப் படணும்?"

செல்வி, "அத்தை. நாளைக்கு ரெஸ்டாரண்டுக்கு வர்ற கஸ்டமருங்களில் ஒருத்தன் அதைப் பாத்துட்டு மத்த கஸ்டமருங்க முன்னால கமெண்ட் அடிச்சான்னா அதுக்கு அப்பறம் கஸ்டமருங்க நம்ம ரெஸ்டாரண்டுக்கு வர்றதுக்கு யோசிப்பாங்க. வியாபாரம் பாதிக்கும். என்னால அப்படி நடக்கக் கூடாது"

மரகதம், "செல்வி! நாக்கு ருஸியை யாராலையும் அடக்க முடியாது. ருசி கண்ட பூனை அப்படிம்பாங்க தெரியுமா?அங்கே வரப் போறவங்க எல்லாம் இவன் சமையலோட ருசிக்காக வருவாங்க. எத்தையும் கண்டுக்க மாட்டாங்க"

செல்வி, "இல்லை அத்தை. என்னைப் பத்தி அந்த மாதிரி எதாவுது தகவல் வந்தா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்று உறுதியாகச் சொன்னாள்.



மரகதம் சற்று நேரம் வாயடைத்துப் போய் அமர்ந்து இருந்தாள். பிறகு ..

மரகதம், "சரி, இதைச் சொல்லு. அவன் அன்னைக்கு உன்னை போட்டோ எடுத்துட்டே மானபங்கப் படுத்தப் பாத்தானா?"

சிவா, "இல்லைம்மா. அவன்கூட இன்னொருத்தன் இருந்தான். அந்த ரூமுல செவுத்துல கேமரா வெச்சு இருக்குமாம். அதுல ஃபோட்டோ பதிவாயிருக்கும். பதிவான ஃபோட்டோவை நந்தகுமார் செல்ஃபோனில் வெச்சு இருக்கான். இது எங்க அனுமானம். இன்னா மேட்டருன்னு அவன் வெளியில் வந்ததும் தெரியும்."

மரகதம், "கூட இருந்தவன் யாரு?"

செல்வி, "அவன் யாருன்னு தெரியாது. ஆனா அவனை அதுக்கு அப்பறம் ரெண்டு மூணு தடவை பாத்து இருக்கேன். ஒரு தடவை நீங்க முன்னாடி வேலை செஞ்சுட்டு இருந்த ரோடில் அவன் நடந்து போயிட்டு இருந்தான். பாக்க கருப்பா இருப்பான். சுருள் சுருளா முடி. கொஞ்சம் விந்தி விந்தி நடப்பான். கொஞ்சம் குண்டா இருப்பான். பாத்தா பணக்காரன் மாதிரி இருந்துச்சு"

மரகதம், "நெத்தில புருவத்துக்கு மேல ஒரு பெரிய தழும்பு இருக்குமா?"

செல்வி, "ம்ம்ம் .. ஆமா"

மரகதம் எதுவும் பேசாமல் சிவாவிடம், "சிவா! நீ முன்னால ரோட்டுக்குப் போய் ஒரு ஆட்டோ புடிச்சுட்டு நில்லு. நாங்க பின்னாலயே வர்றோம்"

சிவா, "எங்கேம்மா?"

மரகதம், "எதுவும் கேக்காதே. போய் ஒரு ஆட்டோ புடி" என்றபடி "விஜயா, செல்வி வாங்க" என்று வீட்டுக்கு வெளியில் வந்து வீட்டைப் பூட்டினாள்.

சற்று நேரத்தில் மகளிர் மூவரும் சேரியின் வாசலை நெறுங்கிய போது சிவா ஒரு ஆட்டோவுடன் நின்று கொண்டு இருந்தான். ஆட்டோவில் விஜயாவுடன் அமர்ந்த மரகதம், "நீ செல்வியை கூட்டிட்டு ரெட்டி சார் வீட்டுக்குப் போ. பின்னாலயே நாங்க வர்றோம்"

சிவா, "இப்போ அவரு இருப்பாரா?"

மரகதம், "மத்தியானத்துக்கு மேலதான் வெளில போவார்" என்ற பிறகு ஆட்டோ டிரைவருக்கு எங்கு செல்ல வேண்டிய விலாசத்தைக் கூறினாள்.

சற்று நேரத்தில் இந்திரா நகரில் அந்த அழகான பங்களா முன் சிவா ஸ்கூட்டரை நிறுத்த, உடன் இறங்கிய செல்வி, "அத்தை எதுக்கு இங்கே வரச் சொன்னாங்க?"

சிவா முகம் இறுக, "தெரியலை செல்வி. எதாவுது உதவி கேக்கப் போறாங்கன்னா வேண்டாம்ன்னு சொல்லப் போறேன்"

சற்று நேரத்தில் அங்கு வந்த ஆட்டோவில் மரகதமும் விஜயாவும் இறங்கினர்.

சிவா, "அம்மா! அவர்கிட்டே உதவி கேக்கப் போறீங்களா? அந்த ஆள் உதவி எனக்குத் தேவையில்லை"

மரகதம், "உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதாடா? உதவி கேக்கப் போறது இல்லை. நியாயம் கேக்கப் போறேன். பேசாம வா" என்றபடி கேட்டைத் திறந்து உள்ளே சென்றாள்.

அந்த பெரிய வீட்டை அடைந்து உள்ளே சென்றதும் வரவேற்பு அறையில் சிவாவின் சாயல் அமைந்த ரெட்டி சார் என அழைக்கப் படும் P.K.ரெட்டி செய்தித்தாள் படித்துக் கொண்டு இருந்தார். அவர்கள் வந்த அரவம் கேட்டு அவரது மனைவி உள்ளே இருந்து வந்தார். மரகத்தைப் பார்த்ததும் ரெட்டியின் துணைவியின் முகம் இறுகியது ...

ரெட்டி அவர் மனைவியிடம் தெலுங்கில் உள்ளே செல்லச் சொன்ன பிறகு, "வா மரகதா. வா சிவா"

சிவா முகம் இறுக மௌனம் காக்க மரகதம், "என்னை வெளில தொரத்துன் நாளில் இருந்து இதுவரைக்கு ஒரு தடவைகூட எந்த உதவியும் கேட்டது இல்லை"

ரெட்டி, "தெரியும் மரகதா. என் தப்பு. ஆனா உன்னையும் சிவாவையும் தூரத்தில இருந்து கவனிச்சுட்டுத்தான் வர்றேன். அன்னைக்கு ரெஸ்டாரண்டில் நாலஞ்சு வெள்ளைக்காரங்ககூட அவன் இங்கிலீஷ்ல பேசிட்டு இருந்ததைப் பாத்தப்ப ரொம்ப பெருமையா இருந்துச்சு"

என்று அவர் தன் மகனை மறைமுகமாக புகழ்ந்தார் ...

மரகதம், "இது செல்வி. என் பையனைக் கட்டிக்கப் போறவ. சிவா அவளை உயிருக்கு உயிரா லவ் பண்ணறான். இன்னும் கொஞ்சம் மாசத்தில் சொந்தமா ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கறதா இருக்கான்"

ரெட்டி, "செல்வியைப் பத்தி தெரியாது. ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா சிவா சைட் வாங்கினது. சொந்தமா ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கப் போறது எல்லாம் எனக்குத் தெரியும் மரகதா. அவனுக்கு என் மூஞ்சில முழிக்கவே பிடிக்கலைன்னு எனக்குத் தெரியும். நான் செஞ்ச துரோகத்துக்கு எனக்கு நல்லா வேணும். ஆனா தூரத்தில இருந்து அவனைப் பாத்து சந்தோஷப் பட்டுட்டு இருக்கேன்"

மரகதம், "ஆனா இன்னைக்கு உங்க மகனால இவங்க கல்யாணம் நின்னு போயிருக்கு"

ரெட்டி, "இன்னா சொல்றே மரகதா?"

மரகதம், "உங்க இன்னோரு மகனால ... "

ரெட்டி, "பிரபாகரா. அவன் கெட்டுக் குட்டிச் சுவரா சுத்திட்டு இருக்கான்னு தெரியும். ஆனா அவனால மத்தவங்களுக்கு தொந்தரவு இல்லைன்னு நினைச்சுட்டு இருந்தேன். இன்னா பண்ணான் சொல்லு"

மரகதாவும் சிவாவும் செல்விக்கு நடந்ததையும், அங்கு பிரபாகர் இருந்ததையும், விடியோ எடுத்து இருக்கலாம் என்ற அவர்கள் ஐய்யத்தையும் விளக்கினார்கள்.



ரெட்டி, "அந்தக் கம்பெனி ஓனர்கூட எனக்கு ரியல் எஸ்டேட் டீலிங்க் இருக்கு. சும்மா சுத்திட்டு இருந்தவனுக்கு அவர்கிட்டே நான்தான் எதாவுது வேலை போட்டுக் கொடுக்கச் சொன்னேன். இந்த மாதிரி கேடு கெட்ட வேலைல இறங்குவான்னு தெரியலை" என்ற பிறகு தன் மனைவியை அழைத்து பிரபாகர் எங்கே என்று வினவ அவன் சில நண்பர்களுடன் வெளியூர் சென்று இருப்பதாகவும் அடுத்த மூன்று நாட்களுக்குப் பிறகு வரப் போவதாகவும் அறிந்து கொண்டார் பிறகு, "சிவா, வெள்ளிக் கிழமை காலைல இங்கே வா நான் உனக்கு எல்லா விஷயத்தையும் பைஸல் பண்ணறேன்"

மரகதம், "அந்த ஃபோட்டோ வெளில வந்தா சிவாவுக்கு அவமானம்ன்னு இவ கல்யாணமே செஞ்சுக்க மாட்டேன்னு இருக்கா. என் வாழ்க்கைதான் எப்படியோ போயிருச்சு. இவனாவுது தலை நிமிந்து வாழணும்"

ரெட்டி, "எனக்கும் அந்த ஆசை இருக்கு மரகதா. இனி நிச்சயம் ஒரு தொந்தரவும் வராது. நான் பாத்துக்கறேன்" என்று அவர்களுக்கு விடை கொடுத்தார்.





No comments:

Post a Comment