Wednesday, May 6, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 30

இடம்: ஆனந்தின் கேபின், ஷா ஸிஸ்டம்ஸ்
நேரம்: காலை 9:45


ப்ரீதி சென்ற பிறகு தன் இருக்கையில் அமர்ந்து தன் லாப்டாப்பை இயக்கினான் ...

அடுத்த நிமிஷம் ஆனந்தின் கைபேசி மறுபடி ஒலித்தது முன்பின் தெரியாத ஒரு எண்ணில் இருந்து அந்த அழைப்பு வந்து இருந்தது ...

ஆனந்த், "ஹெல்லோ ஆனந்த் ஹியர்"

எதிர்முனையில் வந்தனா, "மிஸ்டர் ஆனந்த். This is Vandhana Rathod-Shakithivel from R&AW"

ஆனந்த், "ஹெல்லோ மிஸஸ் ராத்தோட்-சக்திவேல். You have an interesting surname. Please tell me what can I do for you"

எதிர்முனையில் ... அவர்கள் அமர்ந்து இருந்த கார் தேசிய நெடுஞ்சாலை NH-47இல் கோவையை நோக்கிப் பறந்து கொண்டு இருக்க, அவன் குறும்புப் பேச்சை ரஸித்துப் புன்னகைத்த வந்தனாவை சக்தி குறு குறுப்புடன் பார்த்தபடி தன் கைபேசியில் வந்தனாவின் எண்ணை அழைத்துக் கொண்டு இருந்தான் ...

வந்தனா, "அங்கே இருக்கும் சிச்சுவேஷனைப் பத்தி தெரிஞ்சுக்கணும். இருங்க என் ஹப்பியையும் கான்ஃபெரென்ஸ் மோடில் இணைக்கறேன்"

ஆனந்த், "இங்கே இருக்கும் சிச்சுவேஷனுக்கும் உங்க ஹப்பிக்கும் என்ன சம்மந்தம்"



வந்தனா, "ஓ! ஐ ஆம் சாரி. என் ஹப்பி மிஸ்டர் ஷக்திவேல் முத்துசாமி R&AW ஸைபர் க்ரீம் ப்ரிவில் ஸீனியர் அனலிஸ்ட். அந்த அரெஸ்டுக்கு அவரும் என்னுடன் வருவார். அவர்தான் நீங்க கொடுக்கும் ஆதாரங்களை வெரிஃபை பண்ணப் போறார்"

சக்தி, "ஹெல்லோ மிஸ்டர் ஆனந்த்"

ஆனந்த் (தமிழில்), "சொல்லுங்க மிஸ்டர் சக்திவேல். உங்களை சக்தின்னு கூப்பிடலாமா?"

சக்தி, "ஓ! நீங்களும் தமிழ்தானா"

ஆனந்த், "ஆமாம். ஆனா உங்க வைஃப் தமிழ் இல்லைன்னு நினைக்கறேன். சரியா?"

வந்தனாவும் தமிழில், "எப்படி சொல்லறீங்க மிஸ்டர் ஆனந்த்"

ஆனந்த், "சாரி, You floored me"

சக்தி, "நீங்க சொன்னது ஒரு அளவுக்கு சரிதான். என்னை கல்யாணம் செஞ்சதுக்கு அப்பறம் தமிழ் கத்துட்டா"

வந்தனா, "ஹல்லோ! அதுக்கு முன்னாடியே"

ஆனந்த், "மிஸ்டர் சக்திவேல். உங்க பேருடன் தனக்கு ஒரு ஃப்ரெண்ட் இருப்பதா என் ஃப்ரெண்ட் சொல்லி இருக்கார்"

சக்தி, "சே! அவ்வளவு காமனான பேர்ன்னு தெரிஞ்சு இருந்தா எங்க அப்பாகிட்டே வேற பேர் வெக்கச் சொல்லி இருப்பேன்"

வந்தனா, "ஒண்ணும் வேண்டாம். எனக்கு ஷக்திதான் பிடிச்சு இருக்கு"

சக்தி, "சோ ஆனந்த், ஆயுசுக்கும் எனக்கு இந்தப் பேர்தான் விடுங்க"

மூவரும் சிரித்த பிறகு சக்தி, "ஆனந்த், நேரா விஷயத்துக்கு வர்றேன். நமக்கு கிடைச்ச ஆதாரங்களுக்கு எல்லாம் முக்கியமான லிங்க் அந்த லாப்டாப் ஹார்ட் டிஸ்க்தான். அது இன்னும் உபயோகத்தில் இருக்கா? நமக்குத் தேவையான விவரங்களை அவன் இன்னமும் அழிக்காம விட்டு வெச்சு இருக்கானா?"

ஆனந்த், "நான் இப்போதான் ஆஃபீஸுக்கு வந்தேன். பதினஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடிதான் விக்ரம் ஷா ஆஃபீஸுக்கு வந்து இருக்கார். லாப்டாப் உபயோகத்தில் இருக்கான்னு உடனே என்னால் சொல்ல முடியும். ஒரு நிமிஷம்"

சக்தி, "பிங்க் பண்ணிப் பாக்கப் போறீங்களா? "

ஆனந்த், "எஸ் ... இன்னும் உபயோகத்தில் தான் இருக்கு. ஆஃபீஸ் LANஇல் கனெக்ட் பண்ணி இருக்கார். இன்னமும் அதே ஐ.பி அட்ரெஸ்தான். மாறலை. ஆனா தகவல்களை அழிக்காம விட்டு வெச்சு இருக்காரான்னு என்னால் சொல்ல முடியாது. ரிமோட் ஆக்ஸஸ் பர்மிஷன் அந்த லாப்டாப்பில் செட் பண்ணலை"

சக்தி, "தகவலை அழிச்சு இருந்தாலும் பரவால்லை. லாப்டாப் ஹார்ட் டிஸ்க் உபயோகிக்கும் படி இருந்தா போதும். இல்லையா"

ஆன்ந்த, "எஸ். மேக் அட்ரெஸ்ஸை வெச்சு நாம் நிரூபிச்சுடலாம்"

சக்தி, "அவருக்கு ரெய்ட் நடக்கப் போறது தெரிஞ்சா லாப்டாப்பையே உபயோகப் படுத்த முடியாதபடி பண்ண வாய்ப்பு இருக்கு. இல்லையா?"

ஆனந்த், "இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் ரெய்டுக்காக அவர் லாப்டாப்பை அழிப்பார்ன்னு தோணலை. அவர் செஞ்ச கருப்புப் பண கொடுக்கல் வாங்கலுக்கு நிச்சயம் அதில் எந்த ரெக்கார்டும் இருக்காது. மற்ற சில டாக்யுமென்ட்ஸ் இருக்கலாம். அதைத்தான் அழிக்கப் பார்ப்பார்"

சக்தி, "ஐ.டி டிபார்ட்மெண்டில்லும் போலீஸிலும் அவருக்கு தெரிஞ்ச ஆளுங்க இருப்பாங்க இல்லையா?"

ஆனந்த், "நிச்சயமா இருப்பாங்க. ஆனா, எனக்கு வந்த தகவல் படி போலீஸில் டாப் லெவலில் இருக்கும் ஒரு ஐ.ஜி கிட்டேதான் கம்ப்ளெயிண்ட் கொடுத்து இருக்கு. அவருக்கு கீழே அந்த கம்ப்ளெயிண்ட் விஷயம் போறதுக்கு உள்ளே உங்க சீஃப் அவங்களை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டாராம். இருந்தாலும், அவர் போலீஸைப் பத்தி கவலைப் படமாட்டார்ன்னு தோணுது. ஏன்னா, அவர் மேல கொடுக்கப் பட்ட புகார் ஸைபர் க்ரைம் சம்மந்தப் பட்டது இல்லை. காசு கொடுத்து ஜாமீனில் வந்துடுலாம்ன்னு இருப்பார்"

சக்தி, "இன்னைக்கு போலீஸுக்கு பதிலா எஃப்.பி.ஐயின் சார்பில் R&AW கூட CRPFஐ கூட்டிட்டு வரப் போகுதுன்னு தெரிய வந்தா?"

வந்தனா, "உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சு இருக்கும். முதலில் லோகல் போலீஸும் வருவதாத்தான் இருந்தது. லோகல் போலீஸ் அரெஸ்ட் பண்ணினா சுலபமா ஜாமீன் கொடுக்க வாய்ப்பு இருக்குன்னு எங்க சீஃப் அவங்களை வர வேண்டாம்ன்னு சொல்லி இருக்கார். நாங்க மட்டும்தான் ஐ.டி டிபார்ட்மெண்ட் கூட வரப் போறோம். இந்த விஷயம் அவருக்கு தெரியவந்தா உடனே அவருக்கு சந்தேகம் வரும். லாப்டாப்பை எங்கேயாவுது ஒளிச்சு வெக்க பார்க்கலாம். அட்லீஸ்ட் லாப்டாப்பை உபயோகப் படுத்த முடியாத படி செய்யலாம் இல்லையா?"

ஆனந்த், "ஓ மை காட்! நாங்க யாரும் அந்தக் கோணத்தில் யோசிக்கலை. இப்போ என்ன செய்யலாம்?"

சக்தி, "ரெய்ட் வரும் விஷயம் அவருக்கு எப்ப தெரிய வரும்? Any idea?"

ஆனந்த், "போலீஸைப் பத்தி எனக்கு தெரியலை. ஐ.டி டிபார்ட்மெண்டில் அவருக்கு தெரிஞ்ச ஆள் எந்த பிரிவில் இருக்காங்கறதைப் பொருத்து இப்போ இருந்து மத்தியானத்துக்குள்ளே எப்போ வேணும்ன்னாலும் அவருக்கு தெரிய வரலாம்"

சக்தி, "அப்படின்னா நாம் உடனே செயலில் இறங்கணும். நான் ஒரு ஐ.பி அட்ரெஸ் சொல்றேன் நோட் பண்ணிக்குங்க" என்றபடி ஒரு இணைய விலாசத்தை சொன்னான்.

ஆனந்த், "ம்ம்ம் ... என்ன செய்யணும்?"

சக்தி, "ப்ரௌஸர்ல அந்த ஐ.பி அட்ரெஸ்ஸை ஓபன் பண்ணினா ஒரு வெப் பேஜில் Download அப்படின்னு ஒரு ஹைபர் லிங்க் மட்டும் இருக்கும். அந்த ஹைப்பர்லிங்க்கை க்ளிக் பண்ணினா ஒரு ஃஜிப் ஃபைல் டவுன் லோட் ஆகும். அதை அன்-ஃஜிப் பண்ணுங்க. ஒரு sn1874.exe அப்படின்னு ஒரு ஃபைல் ஸேவ் ஆகும். அதை ரன் பண்ணுங்க. அதற்குப் பிறகு விக்ரம் ஷா லாப்டாப் ஐ.பி அட்ரெஸ், உங்க ஐ.பி அட்ரெஸ், கூட உங்க கேட்வே ஐபி அட்ரெஸ் இது மூணையும் எனக்கு எஸ்.எம்.எஸ் பண்ணுங்க. Don't waste time. Do these immediately. நான் உங்களை ஒரு மணி நேரத்தில் கூப்பிடறேன்" என துரிதப் படுத்தியபடி விடைபெற்றான்

அடுத்த சில நிமிடங்களில் ஆனந்த் சக்தி சொன்னவற்றை செய்து முடித்து இருந்தான் ... 


இடம்: தேசிய நெடுஞ்சாலை NH-47 அவினாசியை நெருங்கிக் கொண்டு இருந்த கார்
நேரம்: காலை 10:00 மணி


தொலைபேசிப் பேச்சை முடிந்தவுடன் வந்தனா, "What is that all about? என்ன செய்யப் போறே?"

சக்தி, "அதான் சொன்னேனே அந்த விக்ரம் ஷாவின் லாப்டாப்பை திருடப் போறோம்"

வந்தனா, "எப்படி? Besides that is not legal"

சக்தி, "ரெய்ட் வரும் விஷயம் தெரிஞ்சதும் அவன் என்ன செய்யக் கூடும்?"

வந்தனா, "எவ்வளவு தடவை தான் அதைப் பத்தி பேசறது?" என்று அலுத்துக் கொண்டு "முதலில் அதில் இருக்கும் விவரங்களை அழிப்பான். நாம் மாக் அட்ரெஸ்ஸை வெச்சு அடையாளம் கண்டு பிடிப்போம்ன்னு யோசிச்சான்னா லாப்டாப்பையே உபயோகப் படுத்த முடியாமல் செய்யப் பார்ப்பான். போட்டு உடைச்சாலும் உடைக்கலாம்"

சக்தி, "நாமே அதை உபயோகப் படுத்த முடியாத படி செஞ்சுட்டா?"

வந்தனா, "அது நமக்கு டேஞ்சர்தானே?"

சக்தி, "பார்க்கறவங்க கண்ணுக்கு உபயோகப் படுத்த முடியாதபடி செஞ்சுட்டா?"

வியப்பு கலந்த சிரிப்புடன், "யூ மீன்? .... You scoundrel!"

குறும்புச் சிரிப்புடன் சக்தி, "எஸ் ஹனி! மாங்க்ஸ் பாட் நெட்டுக்கு இப்படியும் ஒரு உபயோகம் இருக்கும்ன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை."

வந்தனா, "But that is tampering with the evidence"

சக்தி, "உன் கைக்கு உன் எவிடன்ஸ் வந்ததும் அது முன்னாடி இருந்த மாதிரி இருக்கும். கவலைப் படாதே"

வந்தனா, "பட் .. "

சக்தி, "நோ பட்ஸ். முரளி சார் இதுக்கு ஒண்ணும் சொல்ல மாட்டார். Neither will Shawn Henry. ஸோ டோண்ட் வொர்ரி. நீ வொர்ரி பண்ணினா அது உன் வயித்தில் இருக்கும் குட்டிப் பாப்பாவுக்கு நல்லது இல்லை. ஆனந்த் லாப்டாப்பில் இருந்து இன்னும் அரை மணி நேரத்தில் அந்த ஆஃபீஸில் இருக்கும் எல்லா ஸிஸ்டத்திலும் பரவிடும். இவர் ஓட்டற வேகத்தைப் பார்த்தா கோவைக்கு பத்தரை மணிக்கு போய் சேர்ந்துடுவோம்ன்னு நினைக்கறேன். நீ லக்கேஜஸை போர்ட்டர் வெச்சு செக்-இன் பண்ணி போர்டிங்க் பாஸ் எடுத்துட்டு வா. ஏர்போர்டில் எங்கேயாவுது உக்காந்து நான் என் கைவரிசையை காட்டறேன்"


இடம்: கோவை விமான நிலையம்
நேரம்: காலை 10:30 மணி


அங்கு இருந்த காஃபி ஷாப்பில் ஒரு மேசையில் சக்தி சென்று அமர, வந்தனா அவனுக்கு காஃபியும் தனக்கு ஒரு ஜூஸும் வாங்கிக் கொண்டு வந்தாள். சக்தி லாப்டாப்பை இயக்கி தனது வயர்லஸ் ப்ராட்பாண்ட் மூலம் இணையத்தில் இணைத்தான். பிறகு கைபேசியில் ஆனந்தை அழைத்தான்,

சக்தி, "ஆனந்த், நான் சொன்னதை செஞ்சுட்டீங்களா?"

ஆனந்த், "எஸ்! ஆமா? நீங்க என்ன அனுப்பினீங்க? I find some changes in my laptop. எதோ புது ப்ராஸஸ் ரன் ஆகத் தொடங்கிட்டு இருக்கு?"

சக்தி, "அதை நான் அப்பறம் விளக்கறேன். இன்னும் ஒரு முறை விக்ரம் ஷாவின் லாப் டாப் வேலை செஞ்சுட்டு இருக்கான்னு பார்த்துச் சொல்லறீங்களா"

சில நிமிடங்களுக்குப் பிறகு ..

ஆனந்த், "எஸ்! இன்னும் LANனில் கனெக்ட் ஆகித்தான் இருக்கு. ஒரு மாற்றமும் இல்லை"

சக்தி, "சரி, கிவ் மீ டென் மினிட்ஸ்" என்று விடைபெற்றான்.

அருகில் அமர்ந்த வந்தனா, "எனக்கு சொல்லித் தரியா?" எனக் கொஞ்ச ..

சக்தி, "Sorry ... this is not for police officers. besides we don't have time. என்ன பண்ணறேன்னு பாரு"

சக்தி தன் லாப்டாப்பில் ஒரு மென்பொருளை இயக்கத் தொடங்கினான். பல நிமிடங்களுக்குப் பிறகு கைபேசியில் ஆனந்தை அழைத்தான்,

சக்தி, "ஆனந்த், இப்போ விக்ரம் ஷாவின் லாப்டாப்பை பிங்க் பண்ணிப் பாருங்க"

அனந்த், "கிவ் மி அ மினிட்" சில நிமிடங்களுக்குப் பிறகு தொடர்ந்து, "Its not there! லாப்டாப்பை நெட்டில் இருந்து டிஸ்கனெக்ட் செஞ்சுட்ட மாதிரி இருக்கு"

சக்தி, "இல்லை. க்ரேஷ் ஆயிடுச்சு"

ஆனந்த், "ஓ மை காட்! என்ன செஞ்சீங்க?"

சக்தி, "டோண்ட் வொர்ரி, அந்த லாப்டாப்பின் ஹார்ட் டிஸ்கை எடுத்து வேற லாப்டாப்பில் பொருத்தினா சரியா வேலை செய்யும். இப்போதைக்கு அந்த லாப்டாப் அந்த ஹார்ட் டிஸ்கை ஏத்துக்காத மாதிரி செஞ்சு இருக்கேன். விக்ரம் ஷாவால் அதை உபயோகப் படுத்த முடியாது. "

ஆனந்த், "யாராவுது ஹார்ட்வேர் எஞ்சினியர் வந்து செக் பண்ணினா?"

சக்தி, "டிஸ்க் க்ரேஷ் ஆகி இருக்குன்னு சொல்லுவாங்க. ஃபார்மேட் பண்ணி மறுபடி விண்டோஸ் லோட் பண்ணனும்ன்னு சொல்லுவாங்க. அதெல்லாம் செய்ய அரை நாளுக்கு மேல் ஆகும். இப்போதைக்கு அவர் அதை செய்ய மாட்டார். யாராவுது லாப்டாப்பை வெளியில் எடுத்துட்டுப் போறாங்களான்னு மட்டும் பாத்துக்குங்க. நாங்க ரெய்ட் பண்ணும் போது மறுபடி அதை வேலை செய்ய வெச்சுடறோம்"

ஆனந்த், "அமேஸிங்க் ... நீங்க ஒரு ஜீனியஸ் சக்தி. என்னதான் செஞ்சீங்க?"

சக்தி, "சாரி, அது எங்க ட்ரேட் சீக்ரட் I can't share it with you. இன்னொரு விஷயம். அந்த மடையன், நமக்கு தேவையான் டாக்யுமெண்ட்ஸ் எல்லாம் இன்னும் அப்படியே டிலீட் பண்ணாம விட்டு வெச்சு இருக்கான். அதையும் வெரிஃபை பண்ணிட்டேன்" என்றவன் ஃப்ளைட்டுக்கு இன்னும் நேரம் இருப்பதைப் உணர்ந்து, "இந்த இன்கம்டாக்ஸ் ரெய்டைப் பத்தி கொஞ்சம் விளக்கம் கொடுங்க"

ஆனந்த், "அது என் ஃபியான்ஸே சம்மந்தப் பட்டது" எனத் தொடங்கி ப்ரீதியைப் பற்றியும் தன் காதலைப் பற்றியும் ஆதியோடு அந்தம் சொல்லி முடித்தான்.

சக்தி, "சோ! இந்த ரெய்டு முக்கியமா உங்க ஃபியான்ஸே எந்த தில்லு முல்லிலும் ஈடுபடலைன்னு நிரூபிக்கறதுக்காக இல்லையா?"

ஆனந்த், "ஆமா சக்தி. அங்கே எங்க அம்மா எப்படா கல்யாணம்ன்னு குதிச்சுட்டு இருக்காங்க. இங்கே இவ என்னடான்னா தன் பேரில் எந்த விதமான கம்ப்ளெயிண்டும் இருக்கக் கூடாதுன்னு ப்ரூவ் ஆனாத்தான் கல்யாணம்ன்னு இருக்கா. ரெண்டு பேருக்கும் நடுவில் மாட்டிட்டு முழிச்சுட்டு இருக்கேன்"

வாய்விட்டு சிரித்த சக்தி, "Let us hope all goes well. சோ! இந்த ரெய்ட் முடிஞ்சு விக்ரம் ஷா அரெஸ்ட் ஆன உடனே உங்க கல்யாணம்ன்னு சொல்லுங்க"

ஆனந்த், "எங்க அப்பாவும் அம்மாவும் ஆல்ரெடி யூ.எஸ்ல இருந்து புறப்பட்டாச்சு. ஒரு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்ன்னு இன்னும் அவகிட்டே சொல்லாம இருக்கேன். இன்னும் ரென்டு மூணு நாளில் கல்யாணம். அடுத்த ரெண்டு மூணு நாளில் நான் அவளை கூட்டிட்டு ஹனிமூனுக்கு கிளம்பறதா இருக்கேன்"

சக்தி, "ஹனி மூனுக்கு எங்கே போறதா ப்ளான் பண்ணி இருக்கீங்க?"

ஆனந்த், "எங்க பிரச்சனைகளுக்கு நடுவில் நான் எதுவும் ப்ளான் பண்ணலை. எனக்கும் குன்னூரில் பிறந்து வளர்ந்த என் ஃபியான்ஸே ப்ரீதிக்கும் பீச்சுன்னா ரொம்ப பிடிக்கும். அநேகமா எதாவுது ஒரு பீச் ரிஸார்ட். தங்கறதுக்கு இடம் கிடைக்கற, கடற்கரை இருக்கும் எதோ ஒரு ஊர்"

சக்தி, "பஹாமாஸ்ல இருக்கும் நம்ம ஃப்ரெண்டை கேட்டுப் பாருங்களேன்"

ஆனந்த், "ஓ! உங்களுக்கு ஜாஷ்வாவை தெரியுமா?"

சக்தி, "ரொம்ப நல்லா தெரியும் சஞ்சனா எனக்கு உடன் பிறவா தங்கை. நாலு மாசத்துக்கு முன்னாடி நாங்க எல்லாம் போய் அவளுக்கு வளைகாப்பு சீமந்தம் பண்ணிட்டு வந்தோம். குழந்தை பிறந்தப்ப என் அம்மாவும் தங்கையும் அங்கே போய் அவளுக்கு உதவியா இருந்துட்டு வந்தாங்க"

சற்று நேர மௌனத்துக்குப் பிறகு, ஆனந்த், "ஓ! மை காட்!! Don't tell me that you just installed and used Monks Bot Net!!!"

சக்தி, "சீ யூ லேட்டர். இப்போ நான் ஃப்ளைட்டை காட்ச் பண்ணனும்" என விடைபெற்றான்

எதிர்முனையில் வியப்பில் மூழ்கி இருந்த ஆனந்துக்கு அதிலிருந்து விடுபட சில நிமிடங்கள் ஆனது ... 



இடம்: ஷா ஸிஸ்டம்ஸ் அலுவலகம்
நேரம்: காலை 11:30 மணி


காலையில் இருந்து ஷா ஸிஸ்டத்தின் அக்கௌண்ட்ஸ் விவரங்களிலும் கம்பெனியின் நிதி நிலைமையை பறைசாற்றி விக்ரம் ஷா தயாரித்துக் கொடுத்து இருந்த அறிக்கைகளிலும், கம்பெனிக் கணக்குகளிலும் மூழ்கி அவைகளை ஆடிட்டர்களுடன் விவாதித்துக் கொண்டு இருந்த விக்ரம் ஷா, அவர்கள் கேட்ட ஒரு விளக்கத்துக்கு ஷா ஸிஸ்டத்தின் அக்கௌண்டண்ட் பதிலளித்துக் கொண்டு இருக்கும் போது ...

விக்ரம் ஷா, "அந்த ட்ரான்ஸாக்ஷனைப் பத்தின விவரம் என் லாப் டாப்பில் இருக்கு. கொஞ்சம் இருங்க" என்று தன் லாப்டாப்பை இயக்க அது ஸ்தம்பித்து நின்று இருந்தது. அவர் கொடுத்த ஆணைகள் எதற்கும் அது இணங்க மறுத்து பல எர்ரர் மெஸ்ஸேஜ்களை காட்டியவாறு இருந்தது. பொறுமை இழந்து லாப்டாப்பை பவர் ஆஃப் செய்து மறுபடி ஆன் செய்தார். ஸோனி வையோவின் லோகோவைக் காட்டிய பிறகு அப்படியே உறைந்து நின்றது

விக்ரம் ஷா, "என்ன நந்தகுமார் லாப்டாப் ஹாங்க் ஆகி இருக்கு? நீ எதாவுது செஞ்சியா"

நந்தகுமார், "நான் எதுவும் செய்யலை சார் ... "

விக்ரம் ஷா, "சரி, நம் இன்டர்னல் ஐ.டி எஞ்சினியர் கார்திக்கைக் கூப்பிடு"

சில நிமிடங்களில் அங்கு வந்த அந்த ஹார்ட்வேர் எஞ்சினியர் லாப்டாப்பை இயக்க முயற்சித்தான். ஹார்ட் வேர் பூட்-ஸ்ட்ராப் பகுதிக்குச் சென்று அந்த லாப்டாப்பின் வன்பொருள்களின் இயக்கத்தை சரி பார்க்க, அந்த லாப்டாப் தன்னிடம் ஒரு ஹார்ட் டிஸ்க் இருப்பதையே அறியாமல் திணறிக் கொண்டு இருந்தது ... அதில் இணைக்கப் பட்டு இருந்த ஹார்ட் டிஸ்கில் இருந்த விண்டோஸ் லோட் ஆகாமல் இருந்தது ... "

கார்திக், "ஹார்ட் டிஸ்க் க்ரேஷ் ஆகி இருக்கு சார். இதில் இருக்கும் இன்ஃபர்மேஷன் எல்லாம் அவுட்."

விக்ரம் ஷா, "அதனால் பரவால்லை. நேத்து நைட்டுதான் ஒரு டிஸ்க் இமேஜ் எடுத்து நெட்டில் இருந்த ஒரு ஸ்டோரேஜ் சர்வரில் காப்பி பண்ணினேன். இப்போதைக்கு இந்த லாப்டாப் உபயோகப் படுத்தும் நிலையில் இல்லைன்னா பரவால்லை. நீ எடுத்துட்டுப் போய் ஃபார்மேட் பண்ணி விண்டோஸ் லோட் பண்ணி எடுத்துட்டு வா"

கார்திக், "நீங்களும் இருக்கணும் சார். அப்போதான் ஃபிங்கர் ப்ரிண்ட் செக்யூரிட்டி செட்-அப் பண்ண முடியும்"

விக்ரம் ஷா, "அப்ப விடு. அப்பறம் பார்க்கலாம்"

கார்திக் விடைபெற்று தன் இருக்கைக்குச் செல்லும் போது ஆனந்த் எதிரில் வந்தான் ...

ஆனந்த், "ஹெல்லோ கார்திக். என்ன ஷா சார் ரூம்ல எதாவுது ஹார்ட்வேர் ப்ராப்ளமா?"

கார்திக், "ஆமாம் மிஸ்டர் ஆனந்த். அவரோட லாப்-டாப் ஹார்ட் டிஸ்க் க்ரேஷ் ஆயிட்டு இருக்கு. ரீ-ஃபார்மேட் பண்ணனும்"

ஆனந்த், "ஓ மை காட்! ரீ-ஃபார்மேட் செஞ்சுட்டீங்களா?"

கார்திக், "இல்லை ஆனந்த். ரி-ஃபார்மேட் பண்ணி விண்டோஸ் லோட் பண்ணும் போது ஃபிங்கர் ப்ரிண்ட் செட்-அப் பண்ண அவரும் இருக்கணும். இப்போ அவர் எதோ அவசர வேலையா இருக்காராம். அப்பறமா செஞ்சுக்கலாம்ன்னு சொல்லிட்டார்"

ஆனந்த், "அப்ப ஹார்ட் டிஸ்கில் இருந்ததெல்லாம் அவுட்டா?"

கார்திக், "இல்லை. நல்ல வேளையா நேத்து நைட்டுதான் ஒரு டிஸ்க் இமேஜ் எடுத்து எதோ ஸ்டோரேஜ் சர்வரில் பேக்-அப் பண்ணினேன்னு சொன்னார். ஆனா. எனக்கு தெரிஞ்சு இங்கே இருக்கும் சர்வர் எதிலும் அவர் பேக்-அப் பண்ணினதா ஞாபகம் இல்லை"

ஆனந்த், "வெளியில் இருக்கும் சர்வர் எதிலாவுது பேக்-அப் பண்ணி இருப்பார்"

கார்திக், "மே பி" என விடைபெற்றுச் சென்ற மறுகணம் ஆனந்த் தன் அறைக்கு விரைந்து தன் லாப்-டாப்பில் பிரபாகர் கொடுத்த இருந்த மென் பொருளை உபயோகித்து இணையத்தில் அமைந்து இருந்த அந்த சர்வரை அணுகினான். முன்பு அவன் அதில் இருந்து எடுத்து இருந்த வீடியோக்களை தவிற VS-LT-Back என்ற பெயரில் ஒரு புது ஃபோல்டர் உருவாகி இருந்தது. அந்த ஃபோல்டரை அப்படியே தன் லாப்-டாப்பில் நகல் எடுக்க ஆணை பிறப்பித்தான்.

நேரம்: பகல் 1:00
இணையத்தில் இருந்த சர்வரில் இருந்தவை அனைத்தும் ஆனந்த்தின் லாப்-டாப்பில் நகல் எடுக்கப் பட்டு இருந்தன. ப்ரீதியை இன்டர்காமில் அழைத்தான் ...

ஆனந்த், "ப்ரீதி, லஞ்சுக்குப் போலாமா?"

ப்ரீதி, "அஞ்சு நிமிஷம் ஆனந்த். சுகுமார்கூட பேசிட்டி இருக்கேன். வந்துடறேன்"

ஆனந்த், "சரி. லஞ்சுக்கு எங்கே போலாம்?"

ப்ரீதி, "எதுன்னாலும் எனக்கு ஓ.கே. நீ டிஸைட் பண்ணு"

ஆனந்த், "கீழே சிவா வொர்க் பண்ணற ரெஸ்டாரண்டுக்குப் போலாமா?"

ப்ரீதி, "ஓ.கே. ஆனா 
சிவா வந்து இருக்க மாட்டார் இல்லையா?"

ஆனந்த், "அதுக்காக இல்லை. அங்கே போனா ஆஃபீஸ் கட்டிடத்துக்கு முன்னாடி எதாவுது நடமாட்டம் இருந்தா கவனிக்க வசதியா இருக்கும். சீக்கரமா இங்கே வர முடியும். அதான் சொன்னேன். சரி, நீ என்ன சாப்படறே?"

ப்ரீதி, "ஸம் பாஸ்டா டிஷ்?"

ஆனந்த், "சரி, நான் முன்னாடி போய் ஆர்டர் பண்ணறேன். நீ பேசிட்டு வா"

ப்ரீதி, "ஓ.கே" என விடை கொடுத்தாள்.




இடம்: அதே கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்த சிவா பணியாற்றும் உணவகம்
நேரம்: பகல் 1:15 மணி


ப்ரீதி வந்து ஆனந்துக்கு அருகே அமர,

ஆனந்த், "அஞ்சு நிமிஷம்ன்னு சொன்னே?"

ப்ரீதி, "ஒரு மாட்யூலை அவனுக்கு எக்ஸ்ப்ளெயின் பண்ணிண்டு இருந்தேன். கொஞ்சம் நாழியாயிடுத்து. அப்பறம் அவன் தன் சொந்தக் கதையை சொல்ல ஆரம்பிச்சுட்டான். ஒரு இன்டரெஸ்டிங்க் நியூஸ்"

ஆனந்த், "என்ன?"

ப்ரீதி, "விக்ரம் ஷா எங்கே தங்கிட்டு இருக்கார் தெரியுமா?"

ஆனந்த், "அதான் இந்த பில்டிங்க்கின் பின்னாடி விங்கில் இருக்கும் அப்பார்ட்மெண்ட் ஒண்ணில் இருப்பார்ன்னு நேத்து கெஸ் பண்ணினோமே? Are we right about it"

ப்ரீதி, "Quite right. அது சுகுமாரோட த்ரீ பெட் ரூம் ஃப்ளாட். அவன் வொய்ஃப் பிரசவத்துக்கு ஊருக்குப் போயிருக்கா. ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் சுகுமார் அங்கே குடி போயிருக்கான். விக்ரம் ஷாதான் அவனுக்கு அந்த ஃப்ளாட்டை அரேஞ்ச் பண்ணிக் கொடுத்து இருக்கார். கம்பெனி வாடகை கொடுக்குது. விக்ரம் ஷாவும் நந்தகுமாரும் அடிக்கடி தனியா பேசிக்கறாங்களாம். இவன் வந்த உடனே பேசறதை நிறுத்திடறாங்களாம். அவனும் விக்ரம் ஷா மேல ரொம்ப சந்தேகப் படறான்"

ஆனந்த், "அவனும் உன்னை மாதிரியே இன்னொரு கம்பெனிக்கு எம்.டி. இல்லையா?"

ப்ரீதி, "ஆமா. எதாவுது தெரிஞ்சுக்கலாம்ன்னு அந்தப் பேச்சை எடுத்தேன். அவன் எதுவும் சொல்லலை. அவனுக்கும் ஏதோ தெரிஞ்சு இருக்கும் போல இருக்கு"

ஆனந்த், "அவனையும் இங்கே கூட்டிட்டு வந்து இருக்கலாமே. நானும் கொஞ்சம் அவன் வாயைக் கிளறி இருப்பேன்"

ப்ரீதி, "இன்-ஃபாக்ட் இன்வைட் பண்ணினேன். விக்ரம் ஷா அவனை ஃப்ளாட்டுக்குப் போய் எதோ டாக்யுமென்ட்ஸ் எடுத்துட்டு வரச் சொன்னாராம். அவன் ஃப்ளாட்டுக்குப் போய் இருக்கான்"

ஆனந்த், "ஸம் திங்க் ஃபிஷ்ஷி. கூட நந்தகுமார் இருக்கும் போது சுகுமாரை எதுக்கு டாக்யுமென்ட்ஸ் எடுத்துட்டு வரச் சொல்லணும்?"

ப்ரீதி, "ஒன் மோர் திங்க்! அந்த ஆடிட்டர்ஸ் ரெண்டு பேரும் நான் வெளியில் வரச்சே என் பின்னாடி வந்து அவாளும் லிஃப்டில் ஏறினா. கீழே வந்துண்டு இருக்கச்சே அதில் ஒருத்தர் டைம் வேஸ்ட், இன்னும் டிலே ஆகப் போறது அப்படின்னு அலுத்துண்டர். அடுத்தவர் கண் ஜாடை காண்பிச்சதும் பேசறதை நிறுத்திட்டார்"

ஆனந்த், "ஸோ, விக்ரம் ஷாவுக்கு ரெய்ட் வரப் போற விஷயம் தெரிஞ்சாச்சு"

ப்ரீதி, "என்ன செய்யலாம்?"

ஆனந்த் ஆர்டர் செய்து இருந்தவை வந்தது ...

ஆனந்த், "நாம் செய்யறதுக்கு இப்போ ஒண்ணும் இல்லை. Let's eat and enjoy our lunch"

ப்ரீதி, "எப்படித்தான் நீ இப்படி கூலா இருக்கியோ. எனக்கு பக் பக்குன்னு அடிச்சுண்டு இருக்கு"

ஆனந்த், "என்ன அடிச்சுண்டு இருக்கு"

ப்ரீதி, "நெஞ்சு"

ஆனந்த், "நெஞ்சுன்னா .. அது ரெண்டுமா"

அவனை முறைத்த ப்ரீதி, "You pervert! நோக்கு எப்பவும் அந்த நினைப்புதான் ... "

ஆனந்த் சிரித்த படி சாப்பிடத் தொடங்கினான்.


இடம்: விக்ரம் ஷாவின் கேபின், ஷா ஸிஸ்டம்ஸ் அலுவலகம்
நேரம்: பகல் 1:30 மணி


நந்தகுமார், "என்ன பாஸ்? நாம் என்னென்னவோ ப்ளான் பண்ணிட்டு இருந்தோம். இப்போ ரெய்ட் வந்தா பிரச்சனை இல்லையா? தப்பிச்சுப் போயிடலாம் பாஸ்"

விக்ரம் ஷா, "மடையா! இப்போ அப்படியே விட்டுட்டுப் போனா. இந்தக் கம்பெனியை விக்கற வேலை என்ன ஆகறது? இதை இந்த அளவுக்குக் கொண்டு வர எவ்வளவு உழைச்சு இருப்பேன் தெரியுமா?"

நந்தகுமார், "அதான் அதே அளவுக்கு வேற மேட்டர்ல சம்பாதிச்சுட்டீங்களே பாஸ்"

விக்ரம் ஷா, "டேய், வெளியில் போகும் போது நம்ம மேல எந்த சந்தேகமும் வரக் கூடாது"

நந்தகுமார், "அப்படின்னா இப்போ இன்னா செய்யறது?"

விக்ரம் ஷா, "மொதல்ல இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் கண்ணில் படக்கூடாத பேப்பர்ஸ் எல்லாத்தையும் டிஸ்போஸ் பண்ணனும். அதுக்கு அப்பறம் நாம் காலையில் போட்ட ப்ளானில் கொஞ்ச மாற்றம். இப்போ எல்லா ஸ்டாஃபையும் எதாவுது காரணத்தைச் சொல்லி வீட்டுக்குப் போகச் சொல்லப் போறோம். ப்ரீதியும் ஆனந்தும் லஞ்ச் முடிச்சுட்டு வரும் போது அவங்க ரெண்டு பேரையும் கொண்டு போய் அந்த ஃப்ளாட்டில் கட்டிப் போட்டுட்டு திரும்ப இங்கே ஆஃபீஸுக்கு வரப் போறோம். ரெய்ட் வரும்போது அவங்களுக்கு தேவையான தகவல் எல்லாத்தையும் கொடுக்கப் போறோம். ஷா ஸிஸ்டம்ஸ் அக்கௌன்ட்ஸில் ப்ளாக்கில் நாம் எதுவும் செய்யலை. எல்லாம் PSV Systems அப்பறம் SVS Systems கணக்கில் தான். அந்தக் கம்பெனிங்க கணக்கைக் கேட்டா அது நம்ம கிட்டே இல்லை. ப்ரீதியையும் சுகுமாரையும் கேட்கணும்ன்னு சொல்லப் போறோம். அந்த ரெண்டு கம்பெனிகளும் ஷா ஸிஸ்டம்ஸுக்கு ஆர்டர் வாங்கறதுக்காக தொடங்கினது. அதுக்குப் பிறகு அவங்க ரெண்டு பேர் சாலரியையும் அந்த கம்பெனிக் கணக்கில் கொடுத்தோம்ன்னு சொல்லப் போறோம். அதைத் தவிற அந்த ரெண்டு கம்பெனிகளுக்கும் எனக்கும் எந்த வித மான சம்மந்தமும் இல்லைன்னு சொல்லப் போறோம். அவங்க எங்கேன்னு கேட்டா எல்லோரோட அவங்களும் வீட்டுக்குப் போயிட்டாங்கன்னு சொல்லப் போறோம்"

நந்தகுமார், "சுகுமார் ஃப்ளாட்டுக்கு அவங்க போனா?"

விக்ரம் ஷா, "உடனே போக மாட்டாங்க. ஏன்னா இந்த ஆஃபீஸ் அட்ரெஸ்ஸைத்தான் அந்த ரெண்டு கம்பெனிகளுக்கும் ரிஜிஸ்டர்ட் ஆஃபீஸ்ஸா உபயோகிச்சு இருக்கேன். அந்த ஃப்ளாட் சுகுமார் பேரில் இல்லை. ரெக்கார்ட் படி அது ஷா ஸிஸ்டம்ஸ்ஸின் கெஸ்ட் ஹவுஸ். நம்ம ஹெச்.ஆர்ல அவங்களோட பர்மனெண்ட் அட்ரெஸ்தான் இருக்கு. லோகல் அட்ரெஸ் அப்டேட் செய்யலை. தெரியாதுன்னு சொல்லப் போறோம். . சுகுமாரின் பர்மனெண்ட் அட்ரெஸ் சேலத்தில் இருக்கு. ப்ரீதியின் பர்மனெண்ட் அட்ரெஸ் குன்னூரில். அவங்க விசாரிச்சுக் கண்டு பிடிக்கறதுக்குள்ளே நாம் ஹாங்க் காங்க்கில் இருப்போம்"

நந்தகுமார், "ஒண்ணும் ப்ராப்ளம் வராது இல்லை பாஸ்?"



நந்தகுமார் விக்ரம் ஷாவின் லாப்டாப் பழுதுபட்ட பிறகு காலையில் விக்ரம் ஷா செய்யச் சொன்ன இரு பணப் பரிமாற்றங்களை வேறு கணிணியை உபயோகித்து செய்ய மறந்து இருந்தான்!

விக்ரம் ஷா, "ஒரு ப்ராப்ளமும் வராது. முதல்ல இந்த ஃபைலிங்க் கேபினெட்டில் PSV Systems அப்பறம் SVS Systems சம்மந்தப் பட்ட பேப்பர்ஸ் எல்லாத்தையும் எடுத்து ஒரு டஸ்ட் பின்னில் போடு"

நந்தகுமார், "கிழிச்சுட்டு போட வேண்டாமா பாஸ்?"

விக்ரம் ஷா, "எந்த விதமான தடயமும் இந்த ஆஃபீஸில் இருக்கக் கூடாது. எல்லா பேப்பர்ஸையும் கீழே பேஸ்மெண்டுக்குக் கொண்டு போய் அங்கே இருக்கும் இன்ஸினரேட்டருக்குப் பக்கத்தில் இருக்கும் ட்ரம்மில் வெச்சு பெட்ரோல் ஊத்திக் கொளுத்தணும். சுத்தமா சாம்பல் ஆகற வரைக்கும் பாத்துட்டு வரணும்"

நந்தகுமார், "ஓ.கே பாஸ். அதுக்கு அப்பறம்?"

விக்ரம் ஷா, "ப்ரீதியும் ஆனந்தும் லஞ்சுக்குப் போயிருக்காங்க. அவங்க திரும்பி வரும் போது எல்லோரும் வெளியே போயிட்டு இருப்பாங்க. அவங்க ரெண்டு பேரையும் ஃப்ளாட்டுக்குப் கூட்டிட்டு போய் காரியத்தை முடிச்சுட்டு இங்கே வந்துடப் போறோம்"

நந்தகுமார், "இந்நேரம் சுகுமாரை கட்டிப் போட்டு இருப்பாங்க. அவங்களையும் துணைக்குக் கூப்பிடலாமா சார்?"

விக்ரம் ஷா, "வேண்டாம் ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கக் கூடாது"

அடுத்த சில நிமிடங்களில் நந்தகுமார் ஒரு பெரிய குப்பைக் கூடையுடன் பேஸ்மெண்டுக்குச் சென்றான்.


No comments:

Post a Comment