Wednesday, December 10, 2014

கண்ணாமூச்சி ரே ரே - தமிழில் ஒரு திரில் தொடர் - பாகம் - 10


கோயிலின் வாயிலில் இருந்து நீண்டிருந்த வீதியில்.. ஆண்களும் பெண்களும், பெரியவர்களும் சிறியவர்களுமாக திரள்திரளாய் கூட்டம்.. ஆதிராவும் அந்தக் கூட்டத்துக்குள் ஒருஆளாய் நின்றிருந்தாள்.!! இரவு நேரம் அது.. குழல் விளக்குகளும் சீரியல் விளக்குகளும்தான் அந்த இடத்தை வெளிச்சமாக வைத்திருந்தன..!!

திடும்திடுமென முழங்கிய மேளச்சத்தம் காதைக் கிழித்தது.. கிறுகிறுவென சுற்றிய ராட்டினங்கள் கண்ணைக் கவர்ந்தன..!! காவி வேஷ்டியும், காலில் சலங்கையும், கையில் பறையுமாக இருந்த சில இளைஞர்கள்.. நான்குக்கு நான்கு என்று வரிசையமைத்து கூடிக்கொண்டு.. கையிலிருந்த பறையை குச்சியால் 'டமார் டமார்' என்று ஒத்திசைவுடன் தட்டியவாறே.. காற்சலங்கைகள் 'ஜல் ஜல்' என்று ஒலியெழுப்புமாறு.. வீதியில் நளினமாக ஆடிவந்தனர்..!!

 அவர்களுக்கு பின்னே.. காலையில் முயல் வேட்டைக்காக காட்டுக்குள் சென்றிருந்த வாலிபர்களும் சிறுவர்களும்.. இப்போது வெற்றிப் பூரிப்புடன் கம்பீரமாக நடந்துவந்தனர்..!! நடந்து வந்தவர்களின் ஒருகையில் அவர்கள் வேட்டையாட எடுத்துச் சென்ற ஆயுதம்.. வேல்க்கம்பு, குத்தீட்டி, இரும்புக்கழி..!! அவர்களது இன்னொருபக்க தோளில் நீளமான ஒரு கொம்பு.. அந்த கொம்பில் அவர்கள் வேட்டையாடிய முயல்கள் உயிரற்று தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தன..!!

 ஆட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆதிராவுக்கு.. திடீரென தங்கையின் ஞாபகம் வந்தது.. தலையை திருப்பி பக்கவாட்டில் பார்த்தாள்.. அருகில் தாமிரா இல்லாமல் போனதும் ஆதிராவிடம் ஒரு சிறுபதற்றம்..!! தலையை அப்படியும் இப்படியுமாய் சுழற்றி.. பார்வையாலேயே தாமிராவை தேடினாள்..!! சற்று தொலைவில்.. கூட்டத்தை விலக்கியவாறு சென்றுகொண்டிருந்த தாமிரா.. இப்போது ஆதிராவின் பார்வையில் பட்டாள்..!! "தாமிராஆஆ..!!"




ஆதிரா இங்கிருந்து கத்தியது தாமிராவின் காதில் விழவில்லை.. மேலும் மேலும் முன்னேறி, கூட்டத்தில் இருந்து விடுபட்டாள்..!! ஏதோ ஒரு வசியத்துக்கு கட்டுப்பட்டவள் மாதிரி.. எந்திரம் போல கோயிலின் பின்புற இருட்டுக்குள் நடந்தாள்..!! இப்போது ஆதிரா அவளுடைய இடத்திலிருந்து கிளம்பினாள்.. நெருக்கியடித்து நின்ற கூட்டத்துக்குள் முண்டியடித்து, தங்கை சென்ற திசையிலேயே நகர்ந்தாள்..!!

 'ஊஊஊஊஊ' என்று பெண்கள் குழவையிடும் சப்தம் ஒருபுறம் கேட்டுக்கொண்டிருக்க.. ஆதிரா கஷ்டப்பட்டு கும்பலை விலக்கி வெளியே வந்தாள்..!! "தாமிராஆஆ..!!" என்று கத்திக்கொண்டே தங்கை சென்ற பக்கமாக நடந்தாள்..!! கோயிலின் பின்பக்க பிரதேசம் இருண்டு போயிருந்தது.. நிலவின் மசமசப்பான வெளிச்சம் மட்டுமே மிச்சமிருந்தது..!! நெருக்க நெருக்கமாய் வளர்ந்திருந்த மரங்கள் எல்லாம்.. கருப்பு பிம்பங்களாகவே காட்சியளித்தன..!! ஆதிரா இருட்டுக்குள் தடுமாற்றமாய் நடந்தவாறே.. தங்கையை பெயர்சொல்லி அழைத்தவாறே சுற்றும் முற்றும் தேடினாள்..!!

 "தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!" தாமிரா எங்கே சென்றாள் என்றே தெரியவில்லை.. அதற்குள் மாயமாக மறைந்து போயிருந்தாள்..!! தங்கையை காணாத ஆதிராவுக்கு நெஞ்சு பதறியது.. அவசரம் தொற்றிக்கொண்டவளாய் அங்குமிங்கும் ஓடினாள்.. மரங்களுக்கு இடையில் புகுந்து பதைபதைப்புடன் தங்கையை தேடினாள்..!!

 சிறிதுநேர தேடுதலுக்கு பிறகு.. ஒரு மரத்துக்கு அடியில் நின்றிருந்த தாமிரா பார்வையில் தென்பட்டாள்.. கருப்புஉடை அணிந்திருந்த அவளது முகம் மட்டும் அப்படியே வெளிறிப் போயிருந்தது..!! தங்கையை கண்டுவிட்ட மகிழ்ச்சியில்.. "தாமிராஆஆ..!!" என்று உற்சாகமாக கத்திக்கொண்டே ஆதிரா அவளை நோக்கி ஓடினாள்..!! ஆனால்.. தாமிராவோ ஒருவித திகைப்புடன் சிலைபோல் உறைந்திருந்தாள்.. அவளுடைய கண்கள் பயத்தில் அகலமாய் விரிந்திருந்தன..!!

 "அக்காஆஆ..!!" என்று ஈனஸ்வரத்தில் முனுமுனுத்தாள்.
தாமிராவை நோக்கி ஓடிய ஆதிரா இப்போது அப்படியே பட்டென நின்றாள்.. அவளுடைய முகத்தில் கொப்பளித்த மகிழ்ச்சி சுத்தமாக வடிந்து போய்.. குப்பென ஒரு திகில் சாயத்தை அப்பிக்கொண்டது..!! ஆதிராவின் திகிலுக்கு காரணம்.. மரத்துக்கு பின்புறம் இருந்து வெளிப்பட்ட அந்த இன்னொரு உருவம்.. தாமிராவின் முதுகுப்பக்கம் தோன்றி அவளுக்கு மிகநெருக்கமாக நின்றிருந்தது..!! "அக்காஆஆ..!!" தாமிரா தொடர்ந்து பரிதாபமாக அழைத்துக் கொண்டிருந்தாள்..!!

ஆதிராவோ அந்த உருவத்தைக் கண்ட மிரட்சியில் இருந்தாள்.. ஒருகையை உயர்த்தி, விரல்களை விரித்து அசைத்தவாறே, அவர்களை நோக்கி மெல்ல நகர்ந்தாள்..!! அந்த உருவத்தின் முகம் தெளிவாக தெரியவில்லை.. ஆதிரா மிகவும் பிரயத்தனப்பட்டு அந்த உருவத்தின் முகத்தை காண எத்தனித்தாள்.. இமைகளை கசக்கி கசக்கி விழித்து விழித்து பார்த்தாள்.. பிரயோஜனம் இல்லை.. முகமெல்லாம் கரியப்பிக்கொண்ட மாதிரி மசமசப்பாக காட்சியளித்ததே ஒழிய, தெளிவு பிறக்கவில்லை..!!

 அவஸ்தையுடன் தலையை இப்படியும் அப்படியுமாய் அசைத்த ஆதிரா.. படக்கென பதறியடித்துக் கொண்டு எழுந்தாள்..!! அவளது இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது.. அவளுடைய மார்புகள் குபுக் குபுக்கென மேலும் கீழும் ஏறி இறங்கின.. தஸ்புஸ்சென்று மூச்சிரைத்தது..!! ஒருகணம் அவளுக்கு எதுவும் புரியவில்லை.. படுக்கையில் அமர்ந்து மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள்..!! அப்புறம்.. எல்லாமே கனவு என்று உணர்ந்ததும்தான் அவளிடம் ஒரு நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது..!!

 பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள்.. சிபி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.. அவனுடைய ஒருகை இவளுடைய இடுப்பில் தவழ்ந்திருந்தது..!! தலையை திருப்பி கடிகாரத்தை பார்த்தாள்.. நள்ளிரவு தாண்டி இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது..!! தொண்டை வறண்டுபோனது மாதிரி ஒரு உணர்வு அவளுக்கு.. தாகமெடுத்தது..!! தனது இடுப்பை வளைத்திருந்த சிபியின் கரத்தை மெல்ல விலக்கினாள்.. மெத்தையில் இருந்து இறங்கினாள்..!!

 நடந்து சென்று டேபிள் மீதிருந்த ஜாடியை எடுக்க.. அதன் எடை குறைவாக இருந்தது.. அதனுள் தண்ணீர் இல்லை என்பது அந்த ஜாடியை எடுத்ததுமே அவளுக்கு புரிந்து போனது..!! "ப்ச்..!!" என்று சலிப்பை வெளிப்படுத்தினாள். கதவு திறந்து அறையைவிட்டு வெளியே வந்தாள்.. மாடிப்படி இறங்கி ஹாலுக்குள் பிரவேசித்தாள்..!!

எதற்காக இப்படி ஒரு கனவு என்று யோசித்தவாறே நடந்தாள்.. சிங்கமலையில் வனக்கொடி சொன்னது, திரவியம் திருவிழா பற்றி குறிப்பிட்டது, அப்புறம் அந்த முயல்.. எல்லாமுமாக சேர்ந்துதான் இப்படி ஒரு கனவு உருவாகி இருக்கவேண்டும் என்று தோன்றியது..!! கிச்சனுக்குள் நுழைந்த தாமிரா.. ஒரு சொம்பு நிறைய நீர் அள்ளி தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டாள்.. தாகம் தீர்ந்து தொண்டையின் வறட்சி நின்றது..!!

 கிச்சன் விளைக்கை அணைத்துவிட்டு வெளியே வந்தபோதுதான்.. "தட்.. தட்.. தட்.. தட்..!!!" என்று இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்த அந்த சப்தத்தை கவனித்தாள்.. எங்கிருந்து சப்தம் வருகிறதென திரும்பி பார்த்தாள்..!! "தட்.. தட்.. தட்.. தட்..!!!" வெளியில் வீசிய காற்றின் வேகத்தில்.. ஜன்னல் கதவுதான் அந்த மாதிரி அடித்துக் கொண்டு கிடந்தது.. அதனுடன் வெண்ணிற ஜன்னல் திரைச்சீலை வேறு உயரே எழும்பி பறந்து கொண்டிருந்தது.. 'ஷ்ஷ்ஷ்ஷ்' என்று காற்றின் சீற்றமான சப்தம்..!! ஒருகணம் யோசித்த ஆதிரா.. பிறகு அந்த ஜன்னலை நோக்கி நடந்தாள்..!!

ஜன்னல் கதவைப்பற்றி, மூடுவதற்காக நகர்த்தியபோதுதான்.. தூரத்தில் அந்தக்காட்சி எதேச்சையாக அவளுடைய பார்வையில் விழுந்தது..!! இருள் சூழ்ந்திருந்த காட்டுப்பகுதி.. மெல்லிய வெளிச்சத்துடன் புகைமாதிரி பனிமூட்டம்.. அகலமான மரத்தின் அடிப்பரப்பில் பாறை.. அந்த பாறையில் சிவப்பு அங்கி போர்த்திக்கொண்டு அமர்ந்திருந்த அந்த உருவம்.. அந்த உருவத்தை சுற்றி அமர்ந்திருந்த பறவைகள், காட்டு விலங்குகள்.. அந்த உருவம் ஏதோ உரையாற்றுவது போலவும், பறவைகளும் விலங்குகளும் அதை கவனமாக கேட்டுக் கொள்வது போலவும்.. பார்த்தாலே சில்லிட்டுப் போகிற மாதிரியான ஒரு காட்சி..!!

 அதைக்கண்டதுமே ஆதிரா பக்கென அதிர்ந்து போனாள்.. அவளுடய நாடி நரம்பெல்லாம் குப்பென்று ஒரு பய சிலிர்ப்பு..!! "ஆஆஆஆஆஆ..!!" அவளுடைய கட்டுப்பாடின்றி, அந்த வீடே அதிரும் அளவிற்கு கத்திவிட்டாள்.. பதறுகிற இருதயத்துடன் படிக்கட்டை நோக்கி திடுதிடுவென ஓடினாள்..!! ஆதிராவின் சப்தத்தில், மேலே சிபி பதறிப்போய் எழுந்தான்.. எழுந்த வேகத்தில் கதவு திறந்து வெளியே ஓடினான்..!! "ஆதிராஆஆ..!!" என்று கத்திக்கொண்டே படிக்கட்டில் தடதடவென இறங்கினான். "அத்தான்..!!" அலறியடித்து ஓடிவந்த ஆதிரா சிபியை இறுக்கி கட்டிக்கொண்டாள்.




"ஆ..ஆதிரா.. ஆதிரா.. எ..என்னாச்சுமா..??" "அ..அத்தான்.. அத்தான்..!!" ஆதிரா வார்த்தை வராமல் திணறினாள். "சொல்லுடா.. என்னாச்சு..??" "அ..அங்க.. அங்க.." "எ..என்ன அங்க..??" "அ..அங்க.. அந்த உருவம்.. கு..குறிஞ்சி..!!" "குறிஞ்சியா..?? எங்க..??" "அ..அங்க.. ஜ..ஜன்னல்.. ஜன்னல்ல..!!" இப்போது சிபியின் முகத்தில் ஒருவித இறுக்கமும், தீவிரமும்..!!

ஆதிராவை அணைத்தவாறே அழைத்துக்கொண்டு அந்த ஜன்னலை நெருங்கினான்..!! ஆதிரா பயந்து நடுநடுங்கிப்போய் இன்னும் அவனது மார்புக்குள்ளேயே முகம் புதைத்திருந்தாள்.. சிபி மட்டும் ஜன்னல் கதவை தள்ளி வெளியே பார்வையை வீசினான்..!!

 இப்போது பாறையில் அந்த உருவத்தை காணவில்லை.. சுற்றிநின்ற பறவை, விலங்குகளையும் காணவில்லை.. அமைதியாக, இருட்டாக வெறிச்சோடிப்போய் இருந்தது அந்த இடம்..!! "எ..எங்க ஆதிரா..??" "அ..அங்க.. அந்தப் பாறைல..!!" "பாறைல எதுவும் இல்லயேடா..!!" சிபி அந்தமாதிரி சாந்தமாக சொன்னதும்தான்.. ஆதிரா அவனுடைய மார்பிலிருந்து எழுந்தாள்..!! அவளுடைய முகம் வியர்த்துப்போய் பயம் அப்பிக்கொண்டு காட்சியளித்தது..!!

இன்னும் மிரட்சி குறையாத கண்களுடனே ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள்.. அங்கே இப்போது அந்த உருவத்தை காணவில்லை என்றதும்.. அவளிடம் ஒரு திகைப்பு.. மூளைக்குள் ஒரு குழப்பம்..!! "அ..அங்க.. அந்த பாறைலதான் அத்தான் குறிஞ்சி உக்காந்திருந்தா.. நா..நான் பார்த்தேன்..!!" "அங்க யாரும் இல்லடா..!! நீயா ஏதோ கற்பனை பண்ணிக்கிட்டன்னு நெனைக்கிறேன்..!!"

 "ஐயோ.. இல்லத்தான்.. நான் பார்த்தேன்.. என் ரெண்டு கண்ணால பார்த்தேன்..!!" "ப்ச்.. பாருடா.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு..!!" "பார்த்தேன் அத்தான்.. செவப்பு அங்கி போத்திருந்தா.. பாறைல உக்காந்திருந்தா.. சுத்தி ஒரே புகையா இருந்துச்சு..!!" "ஆதிரா ப்ளீஸ்..!!" சிபி எரிச்சலடைவதை உணராமல்,

 "நாய் நரி காக்கா கரடின்னு என்னன்னவோ மிருகம்லாம் சுத்தி உக்காந்திட்டு இருந்துச்சு.. அவ பேசுறதை கேட்டுட்டு இருந்துச்சு..!! எனக்கு ஒருநிமிஷம் அபப்டியே ஹார்ட்டே நின்னு.." ஆதிரா தொடர்ந்து புலம்பிக்கொண்டிருக்க, "ப்ளீஸ் ஆதிரா.. ஸ்டாப் இட்.. ப்ளீஸ்..!!!!" அவன் பொறுமையிழந்து கத்தினான். ஆதிரா இப்போது பட்டென்று அமைதியானாள்.. கணவனின் முகத்தையே பரிதாபமாக ஏறிட்டாள்.. அவனும் இவளுடைய முகத்தையே கவலையும், தவிப்புமாய் பார்த்தான்..!!

அப்புறம் ஆதிராவின் கூந்தலை இதமாக கோதிவிட்டவாறே.. குரலில் சற்று கடுமையை குறைத்துக் கொண்டு சொன்னான்..!!
"இதுதான்.. இதுக்குத்தான் இங்க வரவேணாம்னு நான் சொன்னேன்.. கேட்டியா நீ..?? அடம்புடிச்சு கூட்டிட்டு வந்த.. இப்பப்பாரு..!! தேவையா இதெல்லாம்..??" "........................" "பேசாம காலைலயே மைசூர் கெளம்பிடலாம்..!!" சிபி அந்தமாதிரி சொன்னதும் ஆதிராவுக்கு சுருக்கென்று இருந்தது..

அகழியில் ஐந்தாறு நாட்கள் தங்கியிருக்கலாம் என்ற அவளது ஆசைக்கு பங்கம் வந்துவிடுமோ என்றொரு பயம் பிறந்தது..!! ஓரிரு நாட்களாக நடந்த சம்பவங்கள் அவளுக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தன.. அந்த குழப்பத்திற்கு விடை தெரிந்துகொள்கிற ஆர்வம் அவளுடைய மனதைப்போட்டு அரித்துக் கொண்டிருந்தது..!! இந்த நிலையில் அகழியில் இருந்து கிளம்ப அவளுக்கு விருப்பமில்லை.. கணவனை சமாளிப்பதுதான் சரியான வழி என்று தோன்றியது..!!

 "ச..சரித்தான்.. விடுங்க.. நான்தான் எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டேனா இருக்கும்..!! இதை இத்தோட விட்றலாம்..!!" என்று சமாதானமாக சொன்னாள். "எப்படி விடுறது..?? நடுராத்திரில எந்திரிச்சு 'ஆ'ன்னு கத்துற.. குறிஞ்சியை பார்த்தேன்னு ஹிஸ்டீரியா பேஷன்ட் மாதிரி பொலம்புற..!! எப்படி ஈஸியா விடமுடியும்..??" "ப்ச்.. நான்தான் சொல்றேன்ல..!! கெட்டகனவு வந்து முழிப்பு வந்துடுச்சு அத்தான்.. அதோட தண்ணி குடிக்கலாம்னு கீழ வந்தேன்.. ஜன்னல் கதவை மூடலாம்னு இங்க வந்தேன்.. ஏதோ கன்ஃப்யூஷன்ல நானா எதையோ கற்பனை பண்ணிக்கிட்டேன்னு நெனைக்கிறேன்.. அவ்வளவுதான்.. பயப்படுறதுக்குலாம் ஒன்னும் இல்ல.. விடுங்க..!!"

 ஆதிரா அவ்வாறு அமர்த்தலாக சொல்லவும்.. சிபி அவளையே இமைகொட்டாமல் பார்த்தான்..!! இப்போது அவனுடைய இதழ்களில் மெலிதான ஒரு புன்னகை அரும்பியது.. குனிந்து மனைவியின் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான்..!! அவளுடைய கன்னத்தை இதமாக வருடியவாறே.. "நீ எதுக்குடா கீழ தனியா வந்த.. என்னை எழுப்பிருக்கலாம்ல..??" என்று கனிவாக கேட்டான். "நல்லா தூங்கிட்டு இருந்திங்க.. டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நெனச்சேன்..!!"

 "ம்ம்.. இனிமே இப்படிலாம் பண்ணாத.. புரியுதா..??" "ச..சரித்தான்..!!" "உனக்கு ரொம்ப வீக்கான ஹார்ட் ஆதிரா.. இந்த மாதிரி அட்வென்சர்லாம் உனக்கு வேண்டாம்.. ஹாஹா.. ஓகேவா..??" சிபி அந்தமாதிரி கேலிச்சிரிப்புடன் சொல்ல, "ஹாஹா.. சரி..!!" ஆதிராவும் இயல்புக்கு திரும்பி புன்னகைத்தாள்.

 "பெட்க்கு போலாமா..??" "ம்ம்..!!" "வா.. நானே உன்னை தூக்கிட்டு போறேன்..!!"
"ஐயோ.. வேணாம்த்தான்..!!" ஆதிரா பதறிக்கொண்டிருக்கும்போதே சிபி அவளை அலாக்காக கைகளில் அள்ளிக்கொண்டான்..!! அவள் நாணத்துடன் சிணுங்க, அவன் குறும்புடன் சிரித்தவாறே.. குழந்தையைப்போல அவளை தூக்கிக்கொண்டு படியேறினான்..!!

 அதே நேரம்.. பாறையில் அமர்ந்திருந்த அந்த உருவம் இப்போது படக்கென ஜன்னலுக்கருகே தோன்றியது.. கண்ணாடி ஜன்னலில் கைகளை விரித்து வைத்தவாறு கருப்பு பிம்பமாக காட்சியளித்தது..

படிக்கட்டில் செல்கிற ஆதிராவையும், சிபியையுமே உர்ரென்று முறைத்து பார்த்தது..!! வினோதமான ஒரு சப்தம் அந்த உருவத்திடம் இருந்து வெளிப்பட்டது..!!

 "க்கர்ர்க்க்க்கர்.. க்கர்ர்க்க்க்கர்.. க்கர்ர்க்க்க்கர்..!!!"





No comments:

Post a Comment