Wednesday, December 10, 2014

கண்ணாமூச்சி ரே ரே - தமிழில் ஒரு திரில் தொடர் - பாகம் - 9


அன்று மதிய உணவு அருந்திய பிறகு.. 'ஒரு குட்டித்தூக்கம் போடப்போறேன்' என்றுவிட்டு படுக்கையில் விழுந்த சிபி.. மாலை நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை.. ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்து போயிருந்தான்..!! புத்தகம் புரட்டிக்கொண்டிருந்த ஆதிராவுக்கு போரடிக்கவே.. வெளியில் சற்று உலாவி வரலாம் என்ற எண்ணத்துடன்.. படியிறங்கி ஹாலுக்குள் பிரவேசித்தாள்.. வாசல் திறந்து வீட்டினின்று வெளிப்பட்டாள்..!!

 ஐந்துமணிதான் ஆகியிருக்கும்.. அதற்குள்ளாகவே வெளியே இருள்கவிழ்ந்து வெளிச்சம் குறைந்திருந்தது.. வளிமண்டலத்தில் பரவியிருந்த பனிப்படலம் தெளிவாகவே பார்வைக்கு புலப்பட்டது..!! சுற்றிலும் பச்சைப்பசேலென புல்வெளியும், குற்றுச்செடிகளும்.. சிலுசிலுவென வீசிய காற்றில் ஜில்லென்று ஒரு குளிர்ச்சி..!! சூழலில் ஒரு அடர் நிசப்தம்.. அந்த நிசப்தத்தை கிழிக்கிற மாதிரி.. அவ்வப்போது சீரான இடைவெளியில் ஒலித்த தூரத்து இரும்புப்பட்டறையின் சம்மட்டி சப்தம்..!!

 "டங்ங்ங்.. டங்ங்ங்.. டங்ங்ங்..!!" புல் வளர்ந்திருந்த மண்சரிவில் இறங்கி.. வீட்டுக்கு முன்பாக ஓடிய குழலாற்றை அடைந்தாள் ஆதிரா..!! உறுமீன் வருவதற்காய் காத்திருந்த இரண்டு கொக்குகள்.. ஆதிராவின் உருவம் கண்டதும் சிறகடித்து பறந்தோடின..!! ஆற்றங்கரையின் ஒரு ஓரத்தில் போடப்பட்டிருந்த.. மரத்தாலான சாய்விருக்கையில் வசதியாக அமர்ந்து கொண்டாள்..!! அமைதியாக ஓடிக்கொண்டிருந்த குழலாற்றை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்..!!

 "வா வா வா.. குறிஞ்சி ஆத்துக்குள்ளதான் படுத்திருக்கா.. கூப்பிடுறா உன்னை.. ஓடி வா..!! ஹாஹாஹா..!!" ஆதிராவின் காதுகளுக்குள் தாமிராவின் குரலும்,சிரிப்பும் க்றீச்சிட்டன.. நெற்றியில் ஒரு சுருக்கமெழ, இமைகளை இறுக்கி மூடிக்கொண்டாள்..!! ஒருசில வினாடிகளுக்கு பிறகு விழிகளை திறந்தவள்.. தூரமாக ஆற்றின் அடுத்தகரையில் தெரிந்த அந்த உயரமான மரத்தை பார்த்தாள்..!! மூளைக்குள் மீண்டும் தாமிராவின் நினைவுகள் முளைவிட்டன..!!

 ஆதிராவும் தாமிராவும் செல்ஃபோனுக்காக சண்டையிட்டுக்கொண்ட அன்று.. சிறிது நேரத்தில் இந்த ஆற்றங்கரையில்தான் இருவரும் வந்து நின்றிருந்தனர்..!!
"இங்க எதுக்குடி கூட்டிட்டு வந்திருக்குற..??" ஆதிரா தங்கையிடம் கேட்டாள். "கேம் ஆடுறதுக்குத்தான்..!!" தாமிரா கேஷுவலாக சொன்னாள். "இங்கயா.. இங்க என்ன கேம்..??" "ஹ்ம்ம்.. அதோ.. அந்த மரம் தெரியுதுல..??" "ஆமாம்..!!" "அதைப்போய் மொதல்ல யார் தொடுறாங்களோ.. அவங்களுக்குத்தான் அந்த செல்ஃபோன்..!!" "அ..அதையா.. அதை எப்படி..??" "ம்ம்ம்ம்..?? ஆத்துல நீந்தி அந்தக்கரைக்கு போய் தொடணும்..!!" தாமிரா கூலாக சொல்ல, ஆதிராவிடம் பட்டென ஒரு பதட்டம்..!!

குழலாற்றின் அடிப்பரப்பில்தான் குறிஞ்சி துயில் கொண்டிருக்கிறாள் என்பது அகழிமக்களின் அமானுஷ்ய நம்பிக்கை.. அதனால் ஏற்பட்டதுதான் ஆதிராவின் அந்த பதட்ட மும்..!! "ஐயையோ.. ஆத்துல எறங்கனுமா.. நா..நான் மாட்டேன்பா..!!" "ஏன்.. ஆத்துல எறங்கினா என்னவாம்..??" "எறங்க மாட்டேன்னா எறங்க மாட்டேன்.. அவ்வளவுதான்..!! நீ வே..வேற ஏதாவது கேம் இருந்தா சொல்லு..!!"

 "ஹாஹா.. பயந்தாங்கொள்ளி பயந்தாங்கொள்ளி.. தொடைநடுங்கி.. புள்ளப்பூச்சி..!!" "ப்ச்.. பயம்லாம் ஒன்னும் இல்லடி..!!" "அப்புறம் என்ன..?? வா..!! அந்த குறிஞ்சியா நாமளான்னு இன்னைக்கு ஒரு கை பாத்துடலாம்..!!" கண்சிமிட்டிய தாமிரா இப்போது ஸ்கர்ட்டை கழட்டி வீசி, ஷார்ட்சுடன் நின்றாள். "வேணான்டி..!!" ஆதிரா கெஞ்சினாள். "செல்ஃபோன் வேணும்னா வா.. ஷேம் ஷேம்னு நான் கேலி பண்ணனும்னா இங்கயே நில்லு..!!" சொன்ன தாமிரா, அக்காவின் பதிலுக்கு காத்திராமல் ஆற்றை நோக்கி ஓடினாள். "ஹேய்.. நில்லுடிஈஈ..!!" ஆதிரா கையுயர்த்தி கத்தினாள். "வா வா வா.. குறிஞ்சி ஆத்துக்குள்ளதான் படுத்திருக்கா.. கூப்பிடுறா உன்னை.. ஓடி வா..!! ஹாஹாஹா..!!"

 சிரித்துக்கொண்டே ஓடிப்போய் ஆற்றுக்குள் தொப்பென்று விழுந்தாள் தாமிரா..!! செல்ஃபோன் கவர்ச்சியால் துணிச்சல் பெற்ற ஆதிராவும்.. இப்போது செருப்பை உதறி வீசிவிட்டு ஓடினாள்.. அவசரமாய் ஓடி ஆற்றுநீரை கிழித்துக்கொண்டு விழுந்தாள்..!! அழகு உருக்கொண்ட ஆறறிவு மீன்களாக.. அக்காவும் தங்கையும் ஆற்றில் நீச்சலடித்தனர்..!! தூரத்தில் தெரிந்த மரத்தை கூர்மையாக பார்த்தவாறே தீவிரமாக கால்களை உதைத்தாள் ஆதிரா.. பக்கவாட்டில் தெரிந்த அக்காவை அன்பொழுக பார்த்தவாறே சோர்வாக கைகளை வீசினாள் தாமிரா..!!

ஆதிராவுக்கு சந்தேகம் வராதமாதிரி, தாமிரா மெல்ல மெல்ல தனது வேகத்தை குறைத்துக்கொள்ள.. ஆதிராவே முதலில் அடுத்தகரை ஏறினாள்.. ஏறியவேகத்தில் ஓடிச்சென்று அந்த மரத்தை தொட்டாள்..!! "ஹைய்ய்ய்..!! நான் ஜெயிச்சுட்டேன்ன்ன்.. எனக்குத்தான் அந்த செல்ஃபோன்ன்ன்..!!" குழந்தையாய் குதுகளித்தாள் அக்கா. "ச்ச.. இந்தவாட்டியும் நீயே ஜெயிச்சுட்ட.. போடீ..!!" போலியாக சலித்துக்கொண்டாள் தங்கை. வீட்டுக்கு திரும்பிய ஆதிரா.. மிக உரிமையாக சென்று அந்த செல்ஃபோனை கைப்பற்றிக்கொண்டாள்..!!

அன்றிரவு படுக்கையில் விழுந்து நெடுநேரமாகியும்.. அந்த செல்ஃபோன் பட்டன்களையே திரும்ப திரும்ப அழுத்திக் கொண்டிருந்தாள்..!! ஆதிராவின் முகத்தில் காணப்பட்ட அந்த சந்தோஷமும், பூரிப்பும்.. அதைவிட பலமடங்காக அவளுக்கு அருகே படுத்திருந்த தாமிராவின் மனதுக்குள்..!! ஆதிராவுக்கு அந்த செல்ஃபோனை மிகவும் பிடித்துப் போனது.. எந்த நேரமும் அதை கையில் தூக்கிக்கொண்டே அலைவாள்.. பத்திரமாக பார்த்துக்கொள்வாள்..!! ஆறு வருடங்களாகி அந்த செல்ஃபோன் அரதப்பழசாகிப் போனபிறகும்கூட.. அதையேதான் தொடர்ந்து உபயோகித்துக் கொண்டிருந்தாள்..!!

தாமிராவின் தந்திரத்தால் ஆதிராவிடம் அந்த செல்ஃபோன் மீது ஏற்பட்ட பற்றுதலும், உரிமையுணர்வும்தான் அதற்கு காரணம்..!! ஆற்றங்கரையில் அமர்ந்து தங்கையின் நினைவுகளில் ஆதிரா மூழ்கியிருந்த சமயத்தில்தான்.. எங்கிருந்து வந்ததென்றே தெரியாமல் திடீரென அவளுக்கெதிரே வந்துநின்றது அந்த முயல்..!! கையில் ஏதோ ஒரு சிவப்புநிற பழத்தை வைத்துக்கொண்டு.. எதிரேயிருந்த ஆதிராவையே குறுகுறுவென பார்த்தது..!! வெள்ளை வெளேரென்ற மேனி வண்ணத்துடன்.. புஸுபுஸுவென்று மிருதுவான தேக ரோமத்துடன்.. மிக அழகாக நின்றிருந்தது அந்த முயல்..!!

அதைப் பார்த்ததுமே ஆதிராவின் மனதுக்குள் ஒரு ஐந்துவயது குழந்தை பிறப்பெடுத்தாள்..!! "ஹாய்ய்ய்ய்..!!!" என்று மலர்ந்த முகத்துடன் அழைத்துக்கொண்டே, எட்டி அந்த முயலை பிடிக்க முயன்றாள்.. அவளுடைய பிடியில் சிக்காமல் அந்த முயல் வெடுக்கென்று ஓடியது.. சிறிது தூரம் ஓடிச்சென்று திரும்பி நின்று இவளை பார்த்தது.. கையில் இருந்த பழத்தை கொறித்தது..!!

இப்போது ஆதிராவுக்குள் ஒரு குழந்தைத்தனமான குறுகுறுப்பு.. அந்த முயலை பிடித்து கொஞ்சவேண்டும் என்று ஒருவித உந்துதல்..!! இருக்கையில் இருந்து எழுந்து அந்த முயலை நோக்கி சென்றாள்.. இவள் நெருங்கவும் அந்த முயல் ஓட்டமெடுக்க ஆரம்பித்தது.. புல்வெளி சரிவில் ஏறி தாவித்தாவி ஓடியது.. ஆதிராவும் அவசரமாக மேலேறினாள்..!! சமவெளியை அடைந்த முயல் வீட்டை நோக்கி குதித்தோடியது.. சற்றும் சளைக்காத ஆதிரா அதன்பின்னே தொடர்ந்து ஓடினாள்..!!

பச்சை பசலேன்ற புல்நிலம்.. அதில் தாவித்தாவி ஓடுகிற வெண்முயல்.. அம்முயலை விரட்டி பின்செல்கிற ஆதிரா..!! முயலின் ஓட்டத்துக்கு ஆதிராவால் ஈடுகொடுக்க முடியவில்லை.. முந்திச்சென்ற முயல் படியேறி வீட்டுக்குள் நுழைந்துவிட்டது..!! அதைப்பார்த்த ஆதிராவிடம் ஒரு சிறிய ஆச்சரியம்.. ஒருகணம் தயங்கிநின்றவள் பிறகு மீண்டும் ஓடினாள்.. படியில் ஏறி வாசற்கதவை அகலமாக திறந்தாள்.. உள்ளே பார்வையை வீசினாள்..!! அவ்வளவு பெரிய வீட்டில்.. ஆங்காங்கே மரத்தூண்கள் நிற்கிற விஸ்தாரமான அந்த ஹாலின் மையத்தில்.. தனியாக, தூரமாக காட்சியளித்தது அந்த முயல்..!!

இரண்டு கால்களை தரையில் ஊன்றி.. இரண்டு கால்களை மேலே தூக்கி வைத்துக்கொண்டு.. வீட்டு வாசலை உர்ரென பார்த்தவாறே நின்றிருந்தது..!! ஆதிரா வாசலில் வந்து நின்றதுமே.. என்னவோ இவளுடைய வருகைக்காகத்தான் காத்திருந்தமாதிரி.. மீண்டும் வீட்டுக்குள் விருட்டென ஓட ஆரம்பித்தது..!! ஆதிராவும் இப்போது மார்புகுலுங்க அதன் பின்னால் ஓடினாள்..!! "ஹேய்ய்ய்...!!! நில்லு..!!!!!" வாய்விட்டே கத்தினாள்..!! உள்ளே ஓடிய முயல்.. வீட்டின் இன்னொரு மூலையில் இருந்த அந்த அறையை அடைந்தது.. குறுகலாக தெரிந்த கதவிடுக்கின் வழியாக அறைக்குள் புகுந்துகொண்டது..!!

 ஆதிரா மூச்சிரைக்க அந்த அறைமுன் வந்து நின்றாள்.. இரண்டு கைகளாலும் கதவினை உட்புறமாக தள்ளினாள்..!! "க்க்கிர்ர்ர்ர்ர்ர்ர்..!!!" என்ற சப்தத்துடன் கதவு திறந்துகொண்டது. அது ஏதோ பழைய பொருட்களை அடைத்துவைக்கிற அறை.. உள்ளே ஒரே இருட்டாக இருந்தது.. காற்றில் ஒரு புழுங்கல் நெடி..!! 'இதுக்குள்ள ஓடிப்போயிடுச்சே இந்த முயலு.. ச்ச..' என்று சலிப்பை உதிர்த்தாள் ஆதிரா..!! அறைக்குள் நுழைந்தவள் சுவற்றில் கைவைத்து தேய்த்து மின் ஸ்விட்ச்சை அழுத்தினாள்.. இருட்டு அகலவில்லை.. விளக்கு எரியவில்லை.. ஃப்யூஸ் ஆகியிருக்கவேண்டும்..!!

'என்ன செய்வது' என்று அவள் ஒருகணம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே.. வாசலுக்கருகே நின்றிருந்த பெட்டகத்தின் மேலிருந்த அந்த தீப்பெட்டி அவளுடைய பார்வையில் பட்டது..!! "ச்சரக்க்க்...!!" தீப்பெட்டி திறந்து ஒரு தீக்குச்சி கிழித்து பற்றவைக்க.. அறைக்குள் இப்போது சிறிய அளவில் ஒரு வெளிச்சம்..!! அந்த வெளிச்சத்துடனே மெல்ல அறைக்குள் அடியெடுத்து வைத்தாள் ஆதிரா..!!

மசமசப்பான வெளிச்சத்திலேயே அந்த முயலை அப்படியும் இப்படியுமாய் தேடினாள்.. அது ஏதாவது இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொள்ளக்கூடாதே என்கிற கவலை வேறு..!! இருட்டுக்குள் தட்டுத்தடுமாறி அவள் நடந்துகொண்டிருக்க.. படக்கென அவளது முகத்துக்கு முன்னே அந்த மரச்சிலையை தோன்றவும்.. பக்கென ஒருகணம் அதிர்ந்துபோனாள்.. அதே நேரம் தீக்குச்சி வேறு தீர்ந்து அவளுடைய விரலைச்சுட.. "ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..!!" கையை வெடுக்கென உதறினாள்.. எரிகிற விரலை வாயில் வைத்து எச்சில் பூசிக்கொண்டாள்..!!




"ச்சரக்க்க்...!!" மீண்டும் ஒரு தீக்குச்சி பற்றவைத்துக்கொண்டு அறைக்குள் மேலும் முன்னேறினாள்.. உள்ளேயிருந்த பொருட்கள் எல்லாம் இப்போது மங்கலாக புலப்பட்டன.. உடைந்த கட்டில் நாற்காலிகள், துருப்பிடித்த இரும்பு உபகரணங்கள், சிதைந்துபோன ரப்பர் குழாய்கள், காலியான அட்டைப் பெட்டிகள்..!! கையில் தீக்குச்சி வெளிச்சத்துடன் அப்படியே உடம்பை மெல்ல சுழற்றினாள் ஆதிரா.. சுற்றிலும் அடர் இருட்டு.. அவள் நின்றிருந்த இடத்தில் மட்டும் சொற்ப வெளிச்சம்..!!

அந்த வெளிச்சம் மெல்ல மெல்ல அந்த அறைக்குள் நகர.. இருள் அப்பியிருந்த ஒரு மூலையில்.. இப்போது இரண்டு சிவப்பு விளக்குகள் பளிச்சென்று மின்னின..!! "ஆஆஆவ்வ்வ்..!!" முதுகுத்தண்டு சட்டென சில்லிட்டுப்போக.. ஆதிரா வாய்விட்டே கத்திவிட்டாள்..!! ஆதிரா அவ்வாறு கத்தியதும்.. அறைக்குள் இருந்த பொருட்களை எல்லாம் தடதடவென உருட்டிக்கொண்டு ஓடியது அந்த முயல்..!!

இருட்டுக்குள் செந்நிறத்தில் மின்னியது அந்த முயலின் கண்கள்தான் என்பதை.. ஓரிரு வினாடிகள் கழித்துதான் ஆதிரா உணர்ந்துகொண்டாள்..!! அதை உணர்ந்து அவள் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கையிலேயே.. அந்த முயல் சுவற்றோடு ஒட்டி நின்ற மரஅலமாரியின் இடுக்கில் சென்று மறைந்தது..!!

உள்ளே சென்ற வேகத்தில்.. "க்க்கீச்ச்..!!" என்று ஈனஸ்வரத்தில் சப்தம் எழுப்பியது. ஆதிராவிடம் இப்போது ஒரு பதைபதைப்பு.. அலமாரியின் நெருக்குதலில் இருந்து அந்தமுயலை விடுவிக்கவேண்டும் என்று அவளுக்குள் ஒரு உந்துதல்.. வெளிச்சம் தீர்ந்த தீக்குச்சியை வீசியெறிந்துவிட்டு ஓடினாள்..!! இருளுக்குள் தெரிந்த அலமாரியின் பிம்பத்தை நெருங்கினாள்.. அதை நகற்ற முயன்றாள்.. முடியவில்லை.. கடினமாக இருந்தது..!!

அப்படியே கால்களை மடக்கி தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள்.. ஒருகையை மட்டும் அலமாரியின் பக்கவாட்டில் நீட்டி.. அப்படியே இருட்டுக்குள் தடவி தடவி.. அலமாரிக்கும் சுவற்றுக்கும் இருந்த குறுகலான இடைவெளியில் கையை நுழைத்தாள்.. இப்படியும் அப்படியுமாய் மெல்ல துழாவினாள்.. அந்த முயல் அகப்படுகிறதா என்று பார்த்தாள்..!!

 அவளுடைய விரல்களில் ஏதோ வழுவழுப்பாய் தட்டுப்பட்டது.. கையை சுருக்கி அதை கப்பென பற்றிக்கொண்டாள்..!! 'இது முயல் இல்லையே' என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே.. 'க்க்கீச்ச்.. க்க்கீச்ச்..!!' என்று வாசலில் ஒரு சப்தம்..!! அத்தனை நேரம் அவளை அலையவிட்ட அந்த முயல்.. இப்போது அறையை விட்டு வெளியேறி, வராண்டாவில் துள்ளிக்குதித்து ஓடிக்கொண்டிருந்தது..!!

 அந்தமுயலுக்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிந்ததும் ஆதிராவிடம் ஒரு நிம்மதி.. கையை அலமாரிக்கு பின்புறமாக செருகியிருந்தவளிடம், மெலிதான ஒரு புன்னகை..!! ஓரிரு வினாடிகள் அப்படியே அமர்ந்திருந்தவள்.. அப்புறம் கையை மெல்ல வெளியே இழுத்தாள்.. அந்தக்கை பற்றியிருந்த பொருளும் அதனுடன் வெளியே வந்தது.. அது என்ன பொருள் என்பது இருட்டுக்குள் தெளிவாக புலப்படவில்லை..!!

 "ச்சரக்க்க்...!!" ஆதிரா மீண்டும் ஒரு தீக்குச்சி உரசினாள்.. அதன் வெளிச்சத்தில் கையோடு வந்த பொருள் மீது ஆர்வமாக பார்வையை வீசினாள்..!! அது.. ஒரு மர பொம்மை.. சிறுவயதில் ஆதிராவும் தாமிராவும் பந்தயப் பொருளாக வைத்து விளையாண்ட அதே மாத்ரியோஷ்கா மர பொம்மை..!!! கையில் அந்த பொம்மையுடனேதான் ஆதிரா அறையில் இருந்து வெளிப்பட்டாள்..!! அவளும் தாமிராவும் பெரியவர்களான பிறகும்கூட.. அந்த பொம்மையை அவர்கள் அறையிலேயே ஒரு அலங்காரப் பொருளைப்போல வைத்திருந்தது அவளுக்கு நன்றாக நினைவிருந்தது..!!

வேண்டாத பொருட்களை அடைத்து வைக்கிற அந்த அறைக்கு இந்த பொம்மை எப்படி சென்றிருக்கக்கூடும் என்ற யோசனையுடனேதான் மாடிப்படியேறினாள்..!! அவர்களுடைய குடும்பம் மைசூருக்கு சென்றபிறகு.. அவர்களுடைய அறையை சுத்தம் செய்த வனக்கொடி.. அந்த அறையில் இந்த பொம்மையை போட்டிருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்..!! மாடியில் இருக்கிற அவர்களது அறைக்கு ஆதிரா திரும்பியபோது.. சிபி அங்கே இல்லை.. உறங்கி எழுந்திருந்தவன் வேறெங்கோ சென்றிருந்தான்..!! ஆதிரா படுக்கையில் சென்று அமர்ந்தாள்..

சில வினாடிகள் அந்த பொம்மையையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.. சிறுவயது நினைவுகள் எல்லாம் அவளுடைய மனதில் எழுந்தன..!! பிறகு அவளுக்குள் ஏதோ ஒரு உந்துதல் ஏற்பட.. அந்த பொம்மையை திருகி திறந்தாள்.. உள்ளே இருந்த பொம்மைகளை ஒவ்வொன்றாக திறந்து அதற்குள்ளிருந்த பொம்மையை வெளியே எடுத்தாள்..!!

 ஏழாவது பொம்மையை திறந்தபோதுதான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள்.. அதற்குள்ளே இருக்கவேண்டிய, எல்லாவாற்றிலும் மிகச்சிறிய எட்டாவது பொம்மையை காணவில்லை.. அதற்கு பதிலாக உள்ளே வேறொன்று இருந்தது.. ஒரு கம்ப்யூட்டர் மெமரி சிப்..!!
ஆதிரா ஆச்சர்யப்பட்டுப் போனாள்.. சிறிது நேரம் அந்த சிப்பையே வித்தியாசமாக பார்த்தாள்..!! 'இதை யார் இதற்குள் வைத்திருப்பார்கள்..?' என்று யோசித்துப் பார்த்தால்.. தாமிராவை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று தோன்றியது..!!

அதே நேரம்.. அந்த சிப்புக்குள் என்ன ஒளிந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்கிற ஆர்வமும்.. அவளுக்குள் உடனே தோன்றியது..!! பட்டென படுக்கையில் இருந்து எழுந்தாள்.. டேபிளில் இருந்த சிபியின் லேப்டாப்பை கையில் எடுத்தாள்..!!

மீண்டும் மெத்தையில் வந்து அமர்ந்தவள், லேப்டாப்பை திறந்து ஆன் செய்தாள்.. அதன் பக்கவாட்டில் மெமரி சிப்பை செருகி, அதில் சேகரிக்கப்பட்டிருந்த டேட்டாவை லேப்டாப் திரையில் பார்த்தாள்..!! 'PRIVATE' என்கிற பெயருடன் ஒரே ஒரு zip file மட்டுமே அந்த மெமரி சிப்பில் இருந்தது..!! அதை திறந்து பார்க்க முயன்றபோது.. "Please enter the password" என்று கேட்டது. ஆதிராவின் முகத்தில் சட்டென்று ஒரு ஏமாற்றம்..!! '

என்ன பாஸ்வேர்ட் வைத்திருப்பாள்' என்று மோவாயைக் கீறி யோசித்தாள்.. 'அதுவாக இருக்கும், இதுவாக இருக்கும்' என்று அவளுக்கு தோன்றிய நான்கைந்து வார்த்தைகளை முயன்று பார்த்தாள்..!! அவளுடைய முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.. அந்த file-ஐ திறக்க முடியவில்லை..!!

 என்ன செய்யலாம் என்று சிறிது நேரம் யோசித்தாள்.. அப்புறம் யோசனை எதுவும் தோன்றாமல் போகவே, சலிப்புடன் லேப்டாப்பை மூடி வைத்தாள்..!! அந்த மெமரி சிப்பை மட்டும்.. டேபிள் ட்ராவில் பத்திரப்படுத்திக் கொண்டாள்..!!



No comments:

Post a Comment