Thursday, December 18, 2014

கண்ணாமூச்சி ரே ரே - தமிழில் ஒரு திரில் தொடர் - பாகம் - 15


அகல்விழியின் வீட்டில் இருந்து திரும்பிய ஆதிரா ஒருவித அயர்ச்சியுடனே காணப்பட்டாள்.. கதிரை அனுப்பிவைத்துவிட்டு வீடு புகுந்தவளுக்கு கால்கள் தளர்ந்து போனாற்போல் ஒரு உணர்வு..!!

வலது முழங்காலுக்கு கீழிருந்த வெட்டுக்காயத்தில் இப்போது சுருக்கென்று ஒரு வலி.. உதட்டை கடித்து முகத்தை அவஸ்தையாக சுளித்தவள், ஊஞ்சல் சங்கிலியை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்..!! தடுமாற்றத்துடன் உடலை நகர்த்தி.. ஜோடியாக தொங்கிய இரண்டு ஊஞ்சல்களில் ஒன்றில்.. வசதியாக அமர்ந்து கொண்டாள்..!!

 அவ்வாறே சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்..!! நெஞ்சில் ஏறியிருந்த படபடப்பு கொஞ்சம் கொஞ்சமாய் நீங்கியது.. ஆனால் புத்தியை ஆக்கிரமித்திருந்த சிந்தனைகள் அப்படியேதான் இருந்தன..!!

ஏதோ ஒரு சூனியத்தை வெறித்துக்கொண்டு, என்னவோ ஒரு யோசனையில் இருந்த ஆதிரா.. அவளுடைய சுய கட்டுப்பாடு இல்லாத அனிச்சை செயலாக.. தனது கால்களின் கட்டைவிரல்களால் தரையை உந்தித் தள்ளினாள்.. ஊஞ்சல் இப்போது மெல்ல அசைய ஆரம்பித்தது..!! "க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!" - ஊஞ்சலின் இரும்புச்சங்கிலி உத்தரத்து ஆதார வளையத்தோடு உராய்ந்து எழுப்புகின்ற ஓசை.

 
அந்த ஊஞ்சலின் நிலையில்தான் ஆதிராவின் உள்ளமும் அப்போது இருந்தது.. ஒரு நிலையில் நில்லாமல் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.. அகழி வந்ததிலிருந்து நடந்த சம்பவங்களை ஒரு ஒழுங்கின்றி அசைபோட்டுக் கொண்டிருந்தது..!! தாமிராவின் மறைவுக்கு குறிஞ்சிதான் காரணம் என்பதில் ஆரம்பத்திலிருந்தே ஆதிராவுக்கு சந்தேகம்.. தாமிராவுடைய ஆராய்ச்சி பற்றி நேற்று நினைவு வந்ததும், அவளுக்கு அந்த சந்தேகம் மேலும் வலுத்தது.. இப்போது அகல்விழி தொலைந்த செய்தியை அறிந்தபிறகு, தாமிராவின் மறைவில் மிகப்பெரிய மர்மம் அடங்கியிருக்கிறது என்று உறுதியாக நம்பினாள்..!!


 உள்ளத்தில் குழப்பமான உணர்வுகளுடன் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த ஆதிராவுக்கு.. அகல்விழியின் அம்மா சற்று முன்பு அழுது புலம்பியது நினைவுக்கு வந்தது..!! "என்னன்னு சொல்லுவேன் எதை நெனச்சு அழுவேன்..?? அதுவேணும் இதுவேணும்னு.. ஆசைப்பட்டதை வாய்விட்டு கேக்கக்கூட தெரியாத ஊமைப்புள்ளமா எம்புள்ள.. குடுத்ததை தின்னுக்குவா, எடுத்ததை உடுத்திக்குவா..!! குடிகாரப்பயலுக்கு மகளா பொறந்து ஒரு சொகமும் காண்கலயே.. போறஎடத்துல சொகப்படுவான்னு பொழுதுக்கும் கனாகண்டேன்.. இப்படி போனஎடம் தெரியாமப் போவான்னு ஒருநாளும் நெனைக்கலியே..!!"

 ".............................."

 "கடனை உடனை வாங்கித்தான் காலேசுல படிக்க வச்சேன்.. காட்டை மேட்டை வித்துத்தான் கண்ணாலத்துக்கு தேதி பாத்தேன்..!! தங்கத்துக்கும் தங்கமா மாப்புள்ள.. தண்ணி சீரட்டு பழக்கமில்ல.. அத்தனை பொருத்தமும் அம்சமா சேர்ந்துச்சு.. அகலு விழிக்கும் அம்புட்டு புடிச்சுச்சு..!!" 

".............................."

 "காலேசுல படிச்ச புள்ளைகள கல்யாணத்துக்கு அழைக்க போறேன்னு.. பத்திரிக்கையை அள்ளிக்கிட்டு பாவிமக கெளம்பிப்போனா..!! போனவ போனவதான்.. பொழுது சாஞ்சும் வீடு வரல..!! கண்ணுங்கருத்துமா வளத்த கிளிய கள்ளாப்ராந்து தூக்கிட்டுப்போன கதையா.. ஆசைஆசையா வளத்த எம்புள்ளய அந்த குறிஞ்சிமுண்ட கொண்டுபோயிட்டாம்மா..!!"

 ".............................."

 "பத்து மாசமாச்சு.. நல்லது நடக்க இருந்த வீட்டுல எழவு விழுந்து பத்து மாசமாச்சு.. ஊரை ஆட்டிப்படைக்கிற காட்டுப்பேயி, எங்க உசுரை புடுங்கிட்டு போய் பத்து மாசமாச்சு..!! அழுது அழுது கண்ணுலயும் தண்ணி வத்தி போச்சு.. நெனைக்க நெனைக்க நெஞ்சுக்கொலைதான் கெடந்து துடிக்குது..!!" பெற்ற மகளை பறிகொடுத்த அந்த தாயின் கதறல் ஆதிராவின் காதுக்குள் ஒலிக்க.. அவளையும் அறியாமல் அவளது மனதுக்குள் ஒருவித வலி பரவுவதை உணர முடிந்தது..!!

 அகல்விழியை குறிஞ்சிதான் அபகரித்து சென்றுவிட்டாள் என்பதற்கு.. அந்த தாயால் உறுதியான ஆதாரம் எதையும் தரமுடியவில்லை..!! அகழி மக்களின் குறிஞ்சி பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில்.. அனுமானமாக எடுக்கப்பட்ட ஒரு முடிவாகவே ஆதிராவுக்கு அது தோன்றியது..!! அகல்விழி மாயமாய் மறைந்து போவதற்கு வேறேதும் காரணங்களை அவர்களால் யோசிக்க முடியாததாலேயே.. குறிஞ்சியை நோக்கி எளிதாக கைகாட்டுகிறார்கள் என்பது புரிந்தது..!!





அகல்விழியின் அம்மாவுக்காக ஆதிராவின் இதயத்தில் இரக்கம் கசிந்தாலும்.. அவர்களது நம்பிக்கையின் மீதுதான் இவளுக்கு ஏனோ நம்பிக்கையே பிறக்கவில்லை..!! குறிஞ்சியை பற்றிய ஆராய்ச்சியில் அகல்விழியும் பங்கெடுத்திருக்கிறாள் என்கிற குறுகுறுப்பான நினைப்புதான் அதற்கு காரணம்..!!

 அகல்விழி பற்றிய சிந்தனையில் இருந்த ஆதிராவின் மனவோட்டம் திடீரென தடம்புரண்டது..!! அந்த ஆராய்ச்சியைப் பற்றி தனக்கு நினைவு வந்த செய்தியை சொல்லி.. நேற்றிரவு கணவனிடம் விவாதித்தது, இப்போது ஆதிராவின் மனதுக்குள் ஓடியது..!! அவளுடைய கேள்விக்கு, மிக இயல்பாக மறுமொழி கூறிக்கொண்டிருந்தான் சிபி..

 "ஹ்ம்ம்.. ஆமாம்.. நல்லா ஞாபகம் இருக்கே.. குறிஞ்சி பத்தி ஏதோ ஆராய்ச்சி பண்ணப்போறேன்னு சொல்லிட்டு இருந்தா.. எங்கிட்ட கூட அதை பப்ளிஷ் பண்றதுக்கு ஹெல்ப் கேட்டாளே.. நானும் கண்டிப்பா பண்றேன்னு சொல்லி வச்சிருந்தேன்..!! அதுவிஷயமா ஒருதடவை.. மைசூர்க்கு கூட தாமிரா வந்துட்டு போனா..!!"

 "ஓ..!!"

 "நாவரசு ஸாரை உனக்கு ஞாபகம் இருக்கா.. என்னோட பாஸ்..!! நீ ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ உன்னை பாக்க வந்தாரே..??" "ம்ம்.. ஞாபகம் இருக்குத்தான்..!!" "ஹ்ம்.. தாமிரா மைசூர் வந்து அவரைத்தான் மீட் பண்ணினா.. அவளோட ஆராய்ச்சியை மக்கள்ட்ட கொண்டுபோய் சேக்குறது பத்தி பேசினா.. அவரும் ஹெல்ப் பண்றேன்னு ப்ராமிஸ் பண்ணினாரு..!!"

 "அ..அப்படினா.. அந்த ஆராய்ச்சி கட்டுரையோட காப்பி ஏதாவது.. தாமிரா அவர்ட்ட குடுத்திருக்க சான்ஸ் இருக்குல..??" "இல்ல ஆதிரா.. அவ அப்படி எதும் அவர்ட்ட குடுக்கல.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. நானும் கூடவேதான் இருந்தேன்..!!" சிபி அவ்வாறு உறுதியாக சொல்லவும், "

ப்ச்..!!" ஆதிராவிடம் சட்டென ஒரு சலிப்பு.. அவளுடைய முகத்தில் அப்பட்டமாய் ஒரு ஏமாற்றம்..!! வாடிப்போன மனைவியின் முகத்தை பார்க்க பார்க்க.. சிபியின் மனதுக்குள் ஒரு கவலையூற்று சுரக்க ஆரம்பித்தது..!! சற்றே நகர்ந்து அவளை நெருங்கியவன்.. அவளது கன்னங்கள் இரண்டையும் கைகளால் தாங்கிப்பிடித்து.. கனிவு பொங்கும் குரலில் சொன்னான்..!!

 "தேவை இல்லாம ஸ்ட்ரெயின் பண்ணிக்காத ஆதிரா.. ப்ளீஸ்..!! தாமிரா காணாமப் போனதுக்கும் அந்த ஆராய்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது..!!" "இல்லத்தான்.. எனக்கு அப்படி தோணல.. ஏதோ சம்பந்தம் இருக்குன்னு என் உள்மனசு சொல்லுது..!! கண்டிப்பா நாளைக்கு வேக்ஸின் ஃபேக்டரிக்கு போகத்தான் போறேன்..!!"

 "இங்க பாரு ஆதிரா.. எனக்கு முகிலனை பிடிக்காதுதான்.. அவர் ரொம்ப ரஃப் அண்ட் டஃப் ஆளுதான்..!! அந்த ஆராய்ச்சி என்னவோ அவருக்கு பிடிக்காம போயிருக்கலாம்.. அதுக்காக.. தாமிராவுக்கு அவரால ஆபத்து வந்திருக்கும்னு என்னால கொஞ்சம் கூட நெனைச்சு பாக்க முடியல..!!" "ப்ளீஸ்த்தான்.. என்னை நம்புங்க..!! என் முன்னாடியே அவளை கொலை பண்ணிடுவேன்னு மெரட்னார்.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு..!! கோவம் வந்தா என்ன பண்றோம்னே தெரியாத அப்படி ஒரு மூர்க்ககுணம் முகிலனுக்கு.. நான் சந்தேகப்படுறதுல எந்த தப்பும் இருக்குறதா எனக்கு தோணல..!! நேர்லயே போய் கேட்டுட வேண்டியதுதான்.. என்ன சொல்றார்னு பாக்கலாம்..!!"

 "ப்ச்.. இப்போ நீ போய் இதைப்பத்தி அவர்ட்ட பேசுறதால, தேவையில்லாத புதுப்பிரச்சினைதான் கெளம்பும் ஆதிரா..!!" "என்ன பிரச்சினை வேணா வரட்டும்.. எனக்கு கவலை இல்ல..!!"

 "ப்ச்.. சொல்றதையே புரிஞ்சுக்க மாட்டேன்ற நீ..!!" "உங்களுக்குத்தான் நான் சொல்றது புரியல..!!" விவாதத்தில் ஆரம்பித்து வாக்குவாதத்தில் சென்று முடிந்தது கணவன் மனைவியின் உரையாடல்..!! ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு.. உடல் ஸ்பரிசம் இல்லாமலே உறங்கிப்போனார்கள் இருவரும்..!!

 முதல்நாள் இரவின் நினைவில் இருந்து மீண்டாள் ஆதிரா..!! 'சிபி சொல்வதை வைத்துப் பார்த்தால்.. தாமிரா அந்த ஆராய்ச்சியில் மிக உறுதியாகத்தான் இருந்திருக்கிறாள்.. அதற்கென மைசூர் வரை பயணித்து உதவி தேடியிருக்கிறாளே..?? அவளுடைய அந்த உறுதிதான் உயிருக்கு எமனாக முடிந்திருக்குமோ..??' என்கிற ரீதியில் இப்போது அவளது மூளை யோசித்துக் கொண்டிருந்தது..!! ஆழ்ந்த சிந்தனையுடன் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த ஆதிராவின் கவனத்தை.. அருகில் கேட்ட சிபியின் குரல் கலைத்தது..!!

 "ஹேய்.. வந்துட்டியா.. வந்ததும் வராததுமா ஊஞ்சல்ல உக்காந்து ஆடிட்டு இருக்குற..?? போன வேலை என்னாச்சு..??" ஆதிரா ஊஞ்சலின் வேகத்தை சற்றே குறைத்து, தலையை திருப்பி பார்த்தாள்.. கையில் இருந்த செல்ஃபோனை காதோடு வைத்து பிடித்தவாறு, சிபி இவளை நோக்கி வந்துகொண்டிருந்தான்..!!

அவனுடைய கேள்விக்கு ஆதிரா பதில் சொல்ல வாயெடுக்கும் போதே.. "ஒன் மினிட்..!!" என்று அவளை தடுத்தான்..!! காதுக்கு கொடுத்திருந்த செல்ஃபோனில் இப்போது காலர் ட்யூன் ஒலித்திருக்க வேண்டும்..!! இரண்டு மூன்று வினாடிகளில், மறுமுனையில் கால் பிக்கப் செய்யப்படவும்.. "ஹலோ..!!" என்றான். பிறகு, "ஹலோஓஓஓ..!!" என்று பெரிதாக கத்தினான். "நான் பேசுறது கேக்குதா..??" என்று இரைந்தான். மேலும் நான்கைந்து முறை அந்த மாதிரி இரைந்துவிட்டு, அப்புறம் கடுப்புடன் காலை கட் செய்தான்.

 "ச்சே.. என்ன எழவு நெட்வொர்க்கோ..?? ரூம்லயும் சிக்னல் இல்ல.. ஹால்லயும் சிக்னல் கெடைக்க மாட்டேன்னுது..!!" என்று சலித்துக்கொண்டான். பிறகு அந்த சலிப்புடனே மனைவியின் பக்கமாய் திரும்பி, "ம்ம்.. சொல்லு.. என்னாச்சு..??" என்று கேட்டான். ஆதிரா ஒருசில வினாடிகள் நிதானித்துவிட்டே பேச ஆரம்பித்தாள்..!!

முகிலனிடம் சென்று நேரிடையாகவே விஷயத்தை தெரிவித்தது.. உடனடியாய் அவனுக்கு கிளம்பிய கோபம்.. கதிரிடம் அவன் காட்டிய வெறுப்பும், முறைப்பும்.. பிறகு அந்த மாந்திரீகவாதியின் சொற்பொழிவு.. இறுதியாக முகிலனின் எகத்தாளப் பேச்சு.. எல்லாவற்றையும் கணவனிடம் பொறுமையாக ஒப்பித்தாள்..!! ஆதிரா சொன்னதையெல்லாம் ஒரு கூர்மையான பார்வையுடன் கேட்டுக்கொண்டிருந்த சிபி.. அவள் பேசி முடித்ததும் சற்றே எள்ளலான குரலில் சொன்னான்..!!

 "ஹ்ம்ம்.. நான்தான் சொன்னேன்ல.. இதெல்லாம் தேவையில்லாத வேலைன்னு..!! இப்போ என்னாச்சு பாரு.. சும்மா இருந்தவரை சீண்டி விட்ட மாதிரி ஆய்டுச்சு..!! இனிமேலாவது உன் ஆர்வத்தை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு.. கொஞ்சம் அமைதியா இரு ஆதிரா..!!" "இல்லத்தான்.. இப்போத்தான் என் ஆர்வம் இன்னும் அதிகமாகிருக்கு..!!" ஆதிரா அவ்வாறு இறுக்கமான குரலில் சொல்ல, சிபி சற்றே நெற்றியை சுருக்கினான். "என்ன சொல்ற..??" ஆதிரா இப்போது அகல்விழி பற்றிய விஷயத்தை கணவனுக்கு உரைத்தாள்..!!

இந்த செய்தி சிபிக்கு புதிதாக இருந்தது.. அத்தனை நேரம் முகிலன் பற்றி சொன்னபோதெல்லாம் இயல்பாக இருந்த அவனது முகத்தில்.. இப்போது எக்கச்சக்கமாய் ஒரு திகைப்பு.. ஆதிராவையே நம்பமுடியாத ஒரு பார்வை பார்த்தான்..!! அவனது தடுமாற்றம் அவனுடைய வார்த்தைகளிலும் வெளிப்பட்டது..!!

 "அ..அகல்விழினா.. கொஞ்சம் மாநிறமா.. குள்ளமா.. ஸ்பெக்ஸ் போட்டுக்கிட்டு.. அந்தப் பொண்ணா..??" "ஆமாம்.. அவளேதான்..!! அவளும் தாமிராவும் சேர்ந்துதான் அந்த ஆராய்ச்சியை ஆரம்பிச்சிருக்காங்க அத்தான்.. அப்புறம் என்னாச்சுனு தெரியல.. பாதிலேயே அந்த ஆராய்ச்சில இருந்து அகல்விழி விலகிருக்கா.. குறிஞ்சி பத்தின பயமா, இல்ல வேற யாராவது அவளை மெரட்னாங்களான்னு தெரியல..!!"

 "ம்ம்..!!"

 "அதுக்கப்புறம் தாமிரா மட்டுந்தான் தனியா அந்த ஆராய்ச்சியை கண்டின்யூ பண்ணிருக்கா..!! தாமிரா காணாமப்போன ரெண்டாவது மாசம்.. அந்த அகல்விழியும் காணாமப் போயிருக்கா..!!" "ஓ..!!" "Something's wrong, definitely..!! உ..உங்களுக்கு என்ன அத்தான் தோணுது..??"

 "என்ன தோணுதுனா..?? புரியல..!!"

 "அந்த ஆராய்ச்சில இன்வால்வ் ஆகிருந்த ரெண்டு பேருமே இப்போ இல்ல.. ரெண்டு மாச கேப்ல, அடுத்தடுத்து மாயமா மறைஞ்சு போயிருக்காங்க.. அது உங்களுக்கு உறுத்தலா தெரியலையா..??" "அவங்க ரெண்டு பேர் மட்டும் காணாம போகலையே.. லாஸ்ட் ஃபைவ் இயர்ஸ்ல.. அகழில அந்தமாதிரி இன்னும் நெறைய பேர் காணாம போயிருக்காங்களே..??"

 "ம்ம்.. உண்மைதான்..!! நான் என்ன நெனைக்கிறேன்னா.. மத்தவங்க காணாம போனதுக்கு வேற ஏதாவது காரணமா இருக்கலாம்.. ஏன்.. குறிஞ்சியா கூட இருக்கலாம்..!! இவங்க காணாம போனதுக்கு இந்த ஆராய்ச்சி காரணமா இருக்கலாம்..!! அந்த ஆராய்ச்சி கட்டுரையோட காப்பி கெடைச்சா, என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாம்னு தோணுது..!! நீங்க என்ன நெனைக்கிறீங்க..??" ஆதிரா தீவிரமாக பேசிக்கொண்டிருக்க, சிபி அவளையே கவலையாக பார்த்துக்கொண்டிருந்தான்.

பிறகு, "நீ தேவையில்லாம மனசை போட்டு கொழப்பிக்கிறன்னு நெனைக்கிறேன்..!!" என்றான் பட்டென. "அத்தான்.." "இங்க பாரு ஆதிரா.. தாமிரா எப்படியும் திரும்ப வரப்போறது இல்ல.. அவளுக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சுக்கப்போய்.. நீ ஏதாவது சிக்கல்ல மாட்டிக்குவியோன்னு எனக்கு பயமா இருக்கு..!!" 

"இ..இல்லத்தான்.. அப்படிலாம் எதுவும் ஆகாது..!!"

 "என்னோட கவலைலாம் உன்னை நெனச்சுத்தான் ஆதிரா..!! இந்த இன்வெஸ்டிகேஷன்லாம் நமக்கு வேணாண்டா.. போலீஸ் இருக்காங்க.. அவங்க பாத்துப்பாங்க..!! அதுமில்லாம.. இப்போ உன் உடம்பும், மனசும் இருக்குற கண்டிஷன்க்கு இந்த மாதிரிலாம் நீ ஸ்ட்ரெயின் பண்ணிக்க கூடாதுமா.. சொன்னா புரிஞ்சுக்கோ..!!" சிபியின் வார்த்தைகளில் தொனித்த அக்கறையும், கவலையும் ஆதிராவை சற்றே அடங்க வைத்தது.

 
"ம்ம்..!!" என்றாள் அமைதியாக.

 "நீ இந்தமாதிரிலாம் பண்ணுவேன்னு தெரிஞ்சிருந்தா.. சத்தியமா உன்னை அகழிக்கே கூட்டிட்டு வந்திருக்க மாட்டேன்..!!" சிபி அவ்வாறு சலிப்பாக சொல்லிக் கொண்டிருக்கும்போதுதான் அவனுடைய செல்ஃபோன் ஒலித்தது..!! மனைவியின் முகத்தை மேலும் சில வினாடிகள் கவலையாக பார்த்தபிறகே.. ஒரு நீண்ட பெருமூச்சுடன் காலை பிக்கப் செய்தான் சிபி..!! கைபேசியை காதுக்கு கொடுத்து, இயல்பான குரலில் பேசினான்..!!

 "ஹலோ.. சொல்லுங்க ஸார்..!!"

 ".........................."

 "இல்ல ஸார்.. காலைலதான் கெளம்புறேன்..!!"

 ".........................."

 " நைட்டா..?? சான்ஸே இல்ல..!!"

 ".........................."

 "காலைல ஒம்பது மணிக்குலாம் நான் அங்க இருப்பேன்.. போதுமா..??" ".........................."

 "ஸார்.. இங்க நான் ஹனிமூன் வந்திருக்கேன்.. அதை கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கங்க..!!"

 ".........................."

 "ஹ்ம்ம்.. ஓகே.. ஓகே.. எஸ்.. ஒம்பது மணிக்கு அங்க இருப்பேன்.. ப்ராமிஸ்..!!" ".........................."

 "யா.. வில் டேக் கேர்.. பை..!!" சிபி சொல்லிவிட்டு காலை கட் செய்ய, ஆதிரா அவனிடம் அவசரமாக கேட்டாள்.

 "யாருத்தான் ஃபோன்ல..??" "நாவரசு ஸார்..!!" "எ..எங்க போறீங்க காலைல..??" "ஊட்டிக்கு..!! அன்னைக்கே உன்கிட்ட சொல்லிட்டு இருந்தேன்ல..?? ஒரு சின்ன வேலை..!!" "ஓ..!!" ஆதிராவின் குரலிலும் முகத்திலும் பட்டென ஒருவித ஏமாற்ற உணர்வு..!!

 அன்று இரவு.. கணவனின் வெற்று மார்பில் முகத்தை சாய்த்து, மேலாடையற்று படுத்திருந்த ஆதிரா.. அவனுடைய மார்பு ரோமச்சுருள்களுக்குள் தனது விரல்களை நுழைத்து சிக்கெடுத்தவாறே.. ஏக்கமும், கொஞ்சலுமாய் கேட்டாள்..!! "கண்டிப்பா போகணுமா..??" "ஆமாம்.. போய்த்தான் ஆகணும்..!!"

 "நீங்க இல்லாம எனக்கு இங்க கஷ்டமா இருக்கும்..!!" "அப்போ நீயும் என்கூட வா.. ஊட்டில கொஞ்சநாள் இருந்துட்டு, அப்படியே மைசூர் கெளம்பிடலாம்..!!" "ப்ச்.. போங்கத்தான்.. அஞ்சாறு நாள் இங்க இருக்கலாம்னு கூட்டிட்டு வந்துட்டு.. இப்போ மூணு நாள்ல கெளம்புனா என்ன அர்த்தம்..??" "வேற என்ன பண்ண சொல்ற என்னை..??"

 "ம்ம்..?? ஒன்னும் பண்ண சொல்லல உங்கள..!! சரி.. நாளைக்கு நீங்க மட்டும் தனியா ஊட்டி போய்ட்டு வாங்க.. நான் இங்கயே இருக்கேன்..!! திருவிழா வருது.. ரெண்டு நாள்.. அதை மட்டும் முடிச்சுட்டு அகழில இருந்து கெளம்பிடலாம்.. சரியா..??"

 "ஹ்ம்ம்ம்ம்.. சரி.. உன் இஷ்டம்..!!" அடுத்த நாள் அதிகாலையிலேயே சிபி எழுந்துவிட்டான்.. ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து குளித்து, ஆறரை மணிக்கெல்லாம் ஊட்டி பயணத்திற்கு தயாராகி விட்டான்..!!


சிபியுடைய பிரயாணம் பற்றி முதல்நாளே வனக்கொடிக்கு அறிவுறுத்தப் பட்டிருந்தது.. அவளும் அதிகாலையிலேயே தனது மகளை அனுப்பி வைத்திருந்தாள்..!! தென்றல் சமைத்துக் கொண்டிருந்த காலை உணவினை.. தாமதத்தை காரணமாகக் காட்டி புறக்கணித்தவன்.. அவள் தயாரித்து தந்த காபியை மட்டும் அருந்தினான்..!!





காபி குடித்து முடித்து கார்ச்சாவியை எடுத்துக் கொண்டான்.. லேப்டாப்பை தோளில் மாட்டிக்கொண்டான்.. கேமரா கேஸை ஒரு கையில் தூக்கிக் கொண்டான்..!! சலனமில்லாமல் நின்று கொண்டிருந்த ஆதிராவை நெருங்கினான்.. கிளம்புவதற்கு முன்பு மனைவியிடம் சொல்ல நினைத்ததை சொன்னான்..!!

 "சரிடா.. கெளம்புறேன்.. நைட்டே திரும்ப வந்துடுவேன்.. எப்படியும் ஒம்பது மணிக்குள்ள வந்துடுவேன்னு நெனைக்கிறேன்.. ஏதாவதுன்னா கால் பண்ணு..!!" "ம்ம்..!!" "அப்புறம்.. நேத்து மாதிரி அந்த கதிரோட சேர்ந்துக்கிட்டு அங்க இங்கன்னு சுத்திட்டு இருக்காத.. புரியுதா..?? இன்னைக்கு ஒருநாள் எங்கயும் அலையாம வீட்லயே நல்லா ரெஸ்ட் எடு..!!"

 "ம்ம்.. சரித்தான்..!!"

 "ஹனிமூன் வந்த எடத்துல, மூளையை கசக்கி டிடக்டிவ் வேலை பாத்ததுலாம் போதும்.. சரியா..??" குறும்பாக சொன்ன சிபி ஆதிராவின் மூக்கை பிடித்து திருக, "ம்ம்.. சரி..!!" அவளும் இலகுவாக புன்னகைத்தாள். "ஓகேடா.. கெளம்புறேன்.. பை..!!"

 "பை அத்தான்.. பார்த்து நிதானமா கார் ஓட்டுங்க..!!"

 " ம்ம்.. சரிம்மா..!!" சிபி கிளம்புகிற வரைக்கும் அமைதியாக நின்றிருந்த ஆதிரா.. வாசலில் அவனது தலை மறைந்ததும், இந்தப்பக்கம் உடனடியாக பரபரப்பானாள்..!! அவசரமாக சென்று செல்ஃபோனை எடுத்தவள்.. அதன் திரையை தேய்த்து செயல்புரிய வைத்தாள்..!!

கான்டாக்ட் லிஸ்டில் கட்டை விரலால் சறுக்கியபோதுதான்.. கதிருடைய எண்ணை கேட்டுப்பெற மறந்ததை உணர்ந்தாள்..!! "ப்ச்..!!" சலிப்பை உதிர்த்தவள் சளைத்துப் போகவில்லை.. ஹாலில் நின்றபடியே தலையை திருப்பி கத்தினாள்..!!

 "தென்றல்..!!!!" "என்னக்கா..??" சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்தாள் தென்றல். "உன் அண்ணனோட மொபைல் நம்பர் சொல்லு..!!" பத்து இலக்க எண்ணை தென்றல் சொல்ல சொல்ல.. படபடவென டைப் செய்து, அப்படியே டயல் செய்தாள் ஆதிரா.. காதில் வைத்துக்கொண்டு கால் கனெக்ட் ஆவதற்காக காத்திருந்தாள்..!! "அக்கா..!!" ஏதோ சொல்வதற்காக தென்றல் அவளை அழைத்தாள்.

 "ஒரு நிமிஷம் இரு தென்றல்..!!" - அடுத்த முனையில் ரிங் செல்ல, ஆதிராவின் கவனம் அதிலேதான் இருந்தது. "இல்லக்கா.. ஒன்னு.." தென்றல் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, "ப்ச்..!!" ஆதிராவோ எரிச்சலை வெளிப்படுத்தினாள்.. முழு ரிங்கும் சென்று கால் கட் ஆனதாலேயே அந்த எரிச்சல்.. மீண்டும் டயல் செய்து செல்ஃபோனை காதில் வைத்துக் கொண்டாள்.. அந்தப்பக்கம் ரிங் போகிற கேப்பில், "சொல்றேன்ல.. இரு.. பேசிட்டு வந்துடுறேன்..!!" என்று இந்தப்பக்கம் தென்றலிடம் சொன்னாள்..!!

தென்றல் இப்போது ஒருவித அவஸ்தையுடன் ஆதிராவையே பார்த்துக் கொண்டிருந்தாள்..!! கால் மீண்டும் பிக்கப் செய்யப்படவில்லை.. ஆதிரா திரும்ப முயற்சித்தாள்.. நான்காவது முறையாக முயற்சிக்கும்போதுதான் கால் பிக்கப் செய்யப்பட்டது..!!

ஆதிரா இந்த முனையில் 'ஹலோ' என்று சொல்ல வாயெடுக்கும் முன்பாகவே.. அடுத்த முனையில் கதிரின் குரல் அவசரமாக ஒலித்தது.. தூக்க கலக்கமும், எரிச்சலும் மிகுந்த குரல்.. எடுத்ததுமே படபடவென பொரிந்து தள்ளினான்..!! "ஹலோ.. யாருங்க இது..?? காலங்காத்தால..?? கால் பிக்கப் பண்ணலைன்னா விட மாட்டிங்களா.. திரும்ப திரும்ப பண்ணிட்டே இருக்கீங்க..?? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்ல..?? ச்சே..!!" ஆதிரா ஓரிரு வினாடிகள் அப்படியே ஸ்தம்பித்துப் போனாள்.. கதிரிடமிருந்து இந்த மாதிரி ஒரு ரெஸ்பான்ஸை அவள் சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை..!!

என்ன செய்வது என்று திருதிருவென விழித்தவள்.. பிறகு திக்கித் திணறி சொன்னாள்..!! "நா..நான்.. நான்.. ஆ..ஆதிரா பேசுறேன் கதிர்..!!" அழைப்பு விடுத்தது ஆதிரா என்று புரிந்ததும்.. அந்தப்பக்கம் கதிருமே திகைத்துப் போனான்.. அவசரப்பட்டு வார்த்தைகளை சிந்திவிட்டோமே என்று அவனிடம் ஒரு பதற்றம்.. அவன் பேசிய வார்த்தைகளில் ஒருவித தடுமாற்றம்..!!

 "ஆ..ஆதிரா நீங்களா..?? நா..நான் வேற யாரோன்னு நெனச்சுட்டு.. என்னன்னவோ..!! ஸா..ஸாரி.. ஸாரிங்க.. ஐ'ம் ரியல்லி வெரி ஸாரி..!!" 

"ப..பரவால..!!"

 "அ..அன்னோன் நம்பரா இருந்தது.. அதான்.. யோசிக்காம.. ஸாரி..!!" "இ..இதுதான் என் நம்பர்..!!"

 "அப்படியா..?? அப்போ எங்கிட்ட இருக்குறது உங்களோட பழைய நம்பரா..??" 

"அப்படித்தான் இருக்கும்..!! நா..நான் மைசூர் போனதுல இருந்து இந்த நம்பர்தான் யூஸ் பண்றேன்..!!"

 "ஓ.. சரி சரி..!! ஸேவ் பண்ணிக்கிறேங்க ஆதிரா..!!"

 "ம்ம்..!! அ..அப்புறம்.. இன்னைக்கு அந்த ப்ரொஃபஸர போய் பாக்கலாம்னு பேசிட்டு இருந்தோம்..!!"

 "ஆமாம்..!!"

 "அதான்.. எ..எப்போ கெளம்பலாம்னு கேக்குறதுக்குத்தான் கால் பண்ணேன்..!!" "இ..இதோ.. குளிச்சுட்டு இன்னும் ஒரு.. ஒரு மணி நேரத்துல அங்க வந்துடுறேன்..!! போதுமா..??"

 "ஹையோ.. ஒ..ஒன்னும் அவசரம் இல்ல..!! உ..உங்களுக்கு தூக்கமா இருந்துச்சுனா.. ந..நல்லா தூங்கிட்டு.. பொறுமையாவே வாங்க..!!"

 "இ..இல்ல இல்ல.. இனிமே தூக்கம் வராதுங்க ஆதிரா.. அவ்வளவுதான்.. நான் ரெடியாகி வந்துடுறேன்.. சீக்கிரமே கெளம்பிடலாம்..!!"

 "சரி கதிர்.. வாங்க..!!"
காலை கட் செய்த பிறகும்கூட ஒருசில வினாடிகள்.. கதிரின் எரிச்சல் தந்த தாக்கத்திலேயே ஆதிரா இருந்தாள்..!! 'உஃப்' என்று உதடுகள் குவித்து மூச்சு வெளியிட்டாள்..!! பிறகு.. இருவரும் மாறி மாறி பம்மியதையும், வழிந்து கொண்டதையும் நினைத்து மெலிதாக புன்னகைத்தாள்..!!

 அறைக்கு செல்லலாம் என்று ஆதிரா திரும்பவும், அவளுடைய பார்வையில் தென்றல் தென்பட்டாள்.. உடனே ஞாபகம் வந்தவளாய்.. "ம்ம்.. சொல்லு தென்றல்.. நீ ஏதோ சொல்ல வந்த..??" "ஒ..ஒன்னுல்லக்கா.. வந்து.." தென்றல் தயங்க, "ம்ம்.. சொல்லு..!!" ஆதிரா அவளை தூண்டினாள். "இ..இல்ல.. 'அண்ணன் தூங்கிட்டு இருப்பான்.. இப்போ கால் பண்ணா அவனுக்கு பயங்கரமா கோவம் வரும்.. கன்னாபின்னான்னு கத்துவான்..'னு சொல்ல வந்தேன்க்கா..!!" அப்பாவியாக சொன்னாள் தென்றல்.

 "ஓ.. சரி சரி..!! அ..அதனால என்ன.. பரவால.. ஹிஹி..!!" அசடு வழிந்தாள் ஆதிரா. கதிர் வந்து சேர்வதற்கு இன்னும் ஒருமணி நேரமாவது ஆகும் என்று ஆதிராவுக்கு தோன்றியது.. அதற்கு முன்பாக அவள் முடிக்க நினைத்திருந்த இன்னொரு வேலை இப்போது ஞாபகத்திற்கு வந்தது..!! கதிருக்கும் சேர்த்து காலை உணவு தயார் செய்யுமாறு தென்றலை பணித்துவிட்டு.. தடதடவென படிக்கட்டு ஏறி தனது அறைக்கு விரைந்தாள் ஆதிரா..!!

அலுமினிய உடலும், அகண்ட தலையுமாக இருந்த அந்த டார்ச் லைட்டை கையில் எடுத்துக் கொண்டாள்.. மீண்டும் படியிறங்கி ஹாலுக்கு வந்தாள்..!! மாடிப்படிக்கட்டின் மறுபுற மறைவிற்கு சென்றாள்.. அங்கிருந்த அலமாரியை அசைத்து நகர்த்தினாள்..!!

 காற்றைத்தவிர உள்ளே வேறேதும் இல்லாத காலி அலமாரி.. அதிக பலம் தேவையின்றி எளிதாகவே அப்புறப்படுத்த முடிந்தது..!! அலமாரியின் அடியில் விரிக்கப்பட்டிருந்த தரைவிரிப்பை இழுத்து ஒருபுறமாக ஒதுக்கினாள்.. தரையோடு பொருந்திய ஒரு மரக்கதவு இப்போது பார்வைக்கு வந்தது.. அந்த வீட்டுக்குள் அடங்கிய நிலத்தடி நிலவறைக்கு இட்டுச் செல்கிற மரக்கதவு..!!


 கதவைத் திறந்து விரித்து, எதிர்பக்கமாக சாய்த்து வைத்த ஆதிரா.. உள்ளே தெரிந்த சிறிய மரஏணியில் கால்கள் பதித்து கீழிறங்கினாள்.. இறங்கியதுமே இடப்பக்கமாக இன்னொரு கதவு தென்பட்டது.. அதையும் தள்ளித் திறந்து அந்த ரகசிய அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள்..!!

 பழங்கால மாளிகை வீடுகளில் இந்த மாதிரி நிலவறை அமைந்திருப்பது இயல்பான ஒன்றுதான்.. எதிரிகளிடம் இருந்தோ, எதிர்பாராத நிகழ்வுகளில் இருந்தோ மறைந்து கொள்ள ஏதுவான இடம்..!! இரண்டு தலைமுறைகளாக இந்த அறையில் யாரும் அதிகமாக புழங்குவது கிடையாது.. தாமிரா ஒருத்தியைத் தவிர..!!

சிறுவயதில் இருந்தே சுட்டித்தனம் மிகுந்தவள் அல்லவா..?? ஏதாவது சேட்டை செய்து.. அம்மா, அப்பா, தாத்தா என்று யாரிடமாவது அடி வாங்கிவிட்டு.. இந்த அறையில் வந்து அடைந்து கொள்வாள்..!! பருவமடைந்த பிறகும் கூட.. இந்த அறையில் கணிசமான நேரத்தை ஒதுக்குவதை வாடிக்கையாகவே வைத்திருந்தாள்..!! அந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் நகல் ஏதாவது சிக்குமா என்றுதான்.. ஆதிரா இப்போது இந்த அறைக்குள் அடியெடுத்து வைத்திருப்பது..!!

 அறை முழுவதையும் அடர் இருட்டுதான் நனைத்திருந்தது.. மின்விளக்கு பழுதாகி போயிருக்க, ஆதிராவின் கையிலிருந்த டார்ச்லைட்தான் சொற்பமான வெளிச்சத்தை, அறைக்குள் பாய்ச்சிக் கொண்டிருந்தது..!! அறைக்குள் நுழைந்ததுமே ஒரு பழைய புழுங்கல் நெடி.. சிலந்திகளின் கால்வண்ணத்தில் ஆங்காங்கே நூலாம்படை..!! மங்கலாக காட்சியளித்த அறைக்குள் இருந்த பொருட்கள் மீது.. டார்ச்லைட்டின் நீள்க்கற்றை வெளிச்சம் படர்ந்து, பிறகு அடுத்த பொருளுக்கு நகர்ந்தது..!!

 காரை பெயர்ந்துபோன சுவர்ப் பூச்சு.. இன்சுலேஷன் இற்றுப்போன எலக்ட்ரிகல் வயரிங்.. ஒட்டடை படிந்த நான்கு ரெக்கை மின்விசிறி..!! மரக்கட்டில்.. மேஜை.. புத்தகங்கள்.. நாற்காலி.. அலமாரி.. இரும்புப் பெட்டகம்.. அழுக்கு பிடித்த அலுமினிய வாஷ் பேஸின்.. பக்கவாட்டில் யானை தந்தங்கள் பாதிக்கப்பட்டு, பரப்பு முழுவதிலும் தூசு படிந்த, ஒரு ஓவல் ஷேப் நிலைக்கண்ணாடி..!!

 மேஜையும், அலமாரியுமே ஆதிராவின் இலக்காக இருந்தது..!! டார்ச்லைட்டை வாயால் கவ்விப் பிடித்துக்கொண்டு.. மேஜை ட்ராயரிலும், அலமாரி அடுக்குகளிலும் அவசர அவசரமாய் தேடினாள்.. அந்த ஆராய்ச்சி கட்டுரையின் நகலினை தாமிரா இங்கேனும் பதுக்கியிருக்கிறாளா என்று பார்த்தாள்..!! தாமிராவுடைய பத்தாம் வகுப்பு பாடப்புத்தகம்.. குறிப்பேடு.. ஹேர்பேண்ட்கள்.. உள்ளாடைகள்.. சுருட்டி வைக்கப்பட்ட அவளது ஓவியங்கள்.. வீட்டுக்கு தெரியாமல் சுவைத்திட்ட சாக்லேட் ராப்பர்கள்..!!

 ஒரு ஐந்தாறு நிமிடங்கள் ஆர்வமான, தீவிரமான தேடுதல்.. உருப்படியாய் எதுவும் சிக்கவில்லை.. உள்ளங்கை முழுக்க தூசி அப்பிக்கொண்டதுதான் மிச்சம்..!! "ப்ச்..!!" தேடுதலை கைவிட்டு ஏமாற்றமும், சலிப்புமாய் எழுந்துகொண்ட ஆதிரா.. 'நச்' என்று எதிலோ முட்டிக்கொண்டாள்..!! "ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..!!!" தலையை தேய்த்து விட்டுக் கொண்டே, எதில் இடித்துக்கொண்டோம் என்று பார்த்தாள்..!!

ஆளுயரத்திற்கு நின்றிருந்த ஓவியப்பலகை.. தாமிரா உபயோகப் படுத்துகிற ஓவியப்பலகை..!! அதன் மேற்புற தடித்த காகிதத்தில்.. தாமிராவால் ஆரம்பிக்கப்பட்டு, முடிக்காமல் விடப்பட்ட அந்த ஓவியம்..!! டார்ச்லைட்டின் வெளிச்சத்தில் ஆதிரா அந்த ஓவியத்தை பார்த்தாள்.. ஊர்மக்கள் கூடிநின்று வேடிக்கை பார்க்க, அரைநிர்வாண நிலையில் இருந்த ஒரு பெண்ணை, அடித்து இழுத்து வருகிற ஓவியம்.. குறிஞ்சியை மனதில் கொண்டு வரையப்பட்ட ஓவியம் என்று, அதை பார்த்ததுமே புரிந்துகொள்ள முடிந்தது..!!

 அந்த ஓவியத்தை பார்த்ததுமே ஆதிராவின் மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல் வெட்டியது.. இதே மாதிரியான ஒரு ஓவியத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது..!! 'எங்கே பார்த்திருக்கிறோம்.. எங்கே பார்த்திருக்கிறோம்..?' என்று நெற்றியை கீறிக்கொண்டு சில வினாடிகள் யோசித்தாள்.. அவ்வாறு யோசிக்க யோசிக்க, படக்கென அவளுக்கு ஞாபகத்துக்கு வந்தது..

அதனுடன் சேர்ந்து தாமிரா சம்பந்தப்பட்ட சில நினைவுகளும்..!! மனதுக்குள் ஒரு திருப்தி பரவ.. அவளுடைய உதட்டில் மெலிதாக ஒரு புன்னகை அரும்பியது..!! "க்க்க்க்ர்ர்ர்ர்...!!!!!!" திடீரெனெ பின்பக்கமாக அந்த சப்தம் கேட்கவும்.. ஆதிரா பதறிப்போய் திரும்பி பார்த்தாள்.. இவள் திரும்பி பார்த்ததும், இருளுக்குள் யாரோ படக்கென மறைவது போல ஒரு தோற்றம்.. வாசல் கதவு மெலிதாக அசைந்து கொண்டிருந்தது..!! ஆதிராவின் நெஞ்சுக்குழிக்குள் ஒரு திடுக்..!!

 "தென்றல்..!!!!" – அவளது குரல் அவளையும் அறியாமல் பிசிறடித்தது. "தென்றல்..!!!!" மீண்டும் ஒருமுறை அழைத்துப் பார்த்தாள்.. பதில் ஏதும் வரவில்லை.. வெறும் பிரம்மையாக இருக்குமோ என்றொரு குழப்பம்..!! கையில் இருந்த டார்ச்லைட்டை அப்படியும் இப்படியுமாய் திருப்பி.. அறையை சுற்றி சுற்றி வெளிச்சத்தை பாய்ச்சிப் பார்த்தாள்.. வேறெந்த உருவமும் தென்படவில்லை..!!

 அவ்வாறு டார்ச்லைட்டின் வெளிச்ச குவியத்துடன் ஆதிரா அந்த அறையை அலசிக் கொண்டிருந்த போதுதான்.. அவளது நாசியில் சர்ரென்று அந்த வாசனை ஏறியது.. மனதை கொள்ளை கொள்கிற அந்த அற்புத வாசனை.. மகிழம்பூவின் வாசனை..!! அறையின் பழைய நெடியை தாண்டி.. அதிக வீரியத்துடன் ஆதிராவின் நாசியை தாக்கியது..!! அந்த வாசனையை நுகர நேர்ந்ததுமே ஆதிராவின் மனதுக்குள் ஒரு அமானுஷ்ய உணர்வு பரவ ஆரம்பித்தது.. உடலில் மெலிதாக ஒரு நடுக்கம் பரவ, விரல்கள் வெடவெடத்தன..!!

 "விஷ்ஷ்ஷ்ஷ்ஷ்க்க்க்க்..!!!!!!!"
திடீரென ஆதிராவின் காதோரமாய் அந்த சப்தம்.. அவளுடைய இதயத்துடிப்பு உடனே ஜிவ்வென்று சொடுக்கி விடப்பட்டது.. 'ஹ்ஹ்ஹாக்..' என்று மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டாள்..!! யாரோ அவளை அணுகுவது போலவும், அண்டுவது போலவும் அவளுக்குள் ஒரு உணர்வு.. அருகிலிருந்து யாரோ விடுகிற மூச்சுக்காற்றை அவளால் உணர முடிந்தது..!!

 "யா..யாரு..?? யாரது..??" வாய்விட்டே கேட்டுவிட்டாள்.. அப்படியும் இப்படியுமாய் காற்றில் கைகளை அசைத்து அசைத்து பார்த்தாள்.. யாரும் தட்டுப்படவில்லை..!! மகிழம்பூவின் வாசனை அவளை சற்றே கிறுகிறுக்க வைத்தது.. தேகத்தில் ஒரு தடுமாற்றத்தை உணர்ந்தாள்.. அந்த அறையை விட்டு உடனே அகன்று விடவேண்டும் போல அவளுக்குள் ஒரு உந்துதல்..!!

அவசரமாய் வாசலை நோக்கி நகர்ந்தாள்.. அவ்வாறு நகர்ந்தவள், இரண்டு அடி எடுத்து வைத்ததுமே, திடீரென ப்ரேக் பிடித்தது போல நின்றாள்..!! ஆதிரா நடக்கும்போது அவளது கையிலிருந்த டார்ச்லைட் நிலைக்கண்ணாடியின் மீது வெளிச்சத்தை சிந்த.. எதேச்சையாக அதை பார்க்க நேர்ந்த பிறகுதான், ஆதிரா அவ்வாறு ப்ரேக்கடித்து நின்றாள்..!!

முகத்தில் ஒருவித மிரட்சியுடன் அந்த நிலைக்கண்ணாடியை நெருங்கினாள்.. டார்ச் வெளிச்சத்தை அதன்மீது தெளித்தாள்..!! தூசி அப்பியிருந்த கண்ணாடியில் அந்த வாசகம் கிறுக்கப்பட்டிருந்தது.. ஒரு குழந்தையின் கிறுக்கலைப் போல.. தெளிவில்லாமல்.. கோணல் மாணலாய்..!!

 "கண்ணாமூச்சி ரே ரே..!!"




No comments:

Post a Comment