Saturday, December 20, 2014

கண்ணாமூச்சி ரே ரே - தமிழில் ஒரு திரில் தொடர் - பாகம் - 19


அன்று மாலை ஐந்தரை மணி.. சிங்கமலையை ஒட்டிய ஆளரவமற்ற வனப்பகுதி..!! வானில் திரண்டிருந்த மேகக்கூட்டங்களும், நெருக்கமாய் வளர்ந்திருந்த காட்டுமரங்களும்.. சூரியனின் வெளிச்சத்தையும், வெப்பத்தையும் சுத்தமாக வற்றிப்போக வைத்திருந்தன..!! மெலிதாக படர ஆரம்பித்திருந்த மாலைப்பனி.. காற்றின் ஈரப்பதத்தை சற்று அதிகரிக்க வைத்திருந்தது..!! இங்குவரை கேட்ட கோயில் ஒலிப்பெருக்கியின் சன்னமான சப்தத்தை தவிர.. சூழ்நிலையை சுற்றிலும் ஒரு கெட்டியான நிசப்தம்..!! அடர்ந்த மரங்களுக்கு இடையே சென்ற அந்த குறுகலான ஒற்றையடி மலைப்பாதையில்.. அவசர அவசரமாய் நடந்து கொண்டிருந்தனர் அந்த மூன்று இளம்பெண்கள்.. தென்றலும் அவளது பள்ளித்தோழிகள் இருவரும்..!! பாவாடை சட்டையும், ரெட்டை ஜடையுமாக முன்னால் நடப்பவள் வாசுகி.. பச்சை தாவணியும், ஒற்றை பின்னலுமாய் இடையில் செல்பவள் மேகலா..!! இருவரையும் சிறிது இடைவெளி விட்டு பின்தொடர்கிற தென்றல்.. இப்போது பொறுமையற்றவளாய் தோழிகளிடம் கேட்டாள்..!! "ஏய்.. எங்கடி கூட்டிட்டு போறீங்க என்னை..??" "............................."
"சொல்லுங்கடி.. கேக்குறேன்ல..??" "ப்ச்.. கொஞ்சநேரம் வாயை மூடிட்டு கம்முனு வாடி..!!" வாசுகி எரிந்து விழவும், "ஏய் மேகலா.. நீயாவது சொல்லுடி.. எங்க போயிட்ருக்கோம் இப்போ..??" அடுத்தவளிடம் கேட்டாள் தென்றல். "ஏன் அவசரப்படுற..?? இன்னும் அஞ்சு நிமிஷத்துல உனக்கே தெரியப்போகுது..!!" மேகலா சாந்தமாகவே பதில் சொன்னாள். "ப்ச்.. உங்க ரெண்டுபேருக்கும் என்ன லூஸா..?? திருவிழான்னு ஊரே அங்க கோயில் முன்னாடி கெடக்குது.. நீங்க என்னடான்னா.. இந்த நேரத்துல.. காட்டுக்குள்ள.." தென்றல் சொல்லி முடிப்பதற்கு முன்பே, முன்னால் சென்றுகொண்டிருந்த வாசுகி இப்போது திரும்பி பார்த்து சொன்னாள். "ஊரே கோயில் முன்னாடி கெடக்குதுல.. அதான்..!! இதைவிட்டா நமக்கு வேற சான்ஸே கெடைக்காது..!!" "அ..அப்படி என்னடி பண்ணப் போறீங்க..??" தென்றலின் கேள்வியில் இப்போது எக்கச்சக்க குழப்பமும், அதே அளவு ஆர்வமும். "வா.. சொல்றோம்..!!" அடுத்த ஐந்தாம் நிமிடம்.. அந்த மலைச்சரிவில் இருந்த மறைவான பாறைக்கு பின்புறமாக அமர்ந்திருந்தனர் மூன்று மங்கையரும்..!! தென்றலுக்கு இன்னுமே என்னவிஷயம் என்று தெளிந்திருக்கவில்லை.. ஆர்வமிகுதியால் அரித்தெடுத்தாள் அவளது தோழிகளை..!! "இப்பயாச்சும் சொல்லுங்கடி.. இங்க எதுக்கு வந்து உக்காந்திருக்கிங்க..??" "அடச்சீய்.. அவசரத்துக்கு பொறந்தவளே..!! அப்படியே பறக்காதடி.. சொல்றோம் இரு..!!" எரிச்சலாக சொன்ன வாசுகி, மேகலாவிடம் திரும்பி "ம்ம்.. எடுத்து காட்டுடி..!!" என்றாள். மேகலா இப்போது தென்றலை ஒரு குறும்புப் பார்வை பார்த்தவாறே, "ஏய் அரிசிமூட்டை.. இப்போ நான் காட்டப்போறதை பாத்து, அப்படியே நீ வாயை பொளக்கப்போற..!!" என்றுவிட்டு, தனது மார்புகளை மூடியிருந்த தாவணியை, படக்கென கீழே எடுத்துப்போட்டாள். "எ..என்னடி பண்ற..??" - தோழியின் கழுத்துக்கு கீழ் வெறித்த தென்றலின் முகத்தில் ஒரு மிரட்சி. "டொட்டடய்ய்ங்ங்க்..!!!!" கண்சிமிட்டிய மேகலா, விம்மிக்கொண்டிருந்த தனது ரவிக்கைக்குள் கையை விட, "ஏய் ச்ச்சீய்ய்ய்..!!!!" கத்தியே விட்டாள் தென்றல். கண்கள் இரண்டையும் கைகள் இரண்டாலும் பொத்திக்கொண்டாள். "அடச்சைய்.. அது இல்லடி..!! இது வேற..!! இங்க பாரு..!!" மேகலா அவ்வாறு கடுப்பாக சொன்னதும்தான்.. தென்றல் அவளது கண்களை மெல்ல திறந்தாள்..!! விரிந்திருந்த மேகலாவின் கைகளில் அவள் சொன்ன அந்த இது.. கோல்ட்ஃப்ளேக் சிகரெட் பாக்கெட்டும், கொளுத்துவதற்கென்று ஒரு தீப்பெட்டியும்..!! அவற்றை பார்த்ததுமே தென்றல் அப்படியே வாயைப் பிளந்தாள்.. சற்றுமுன் மேகலா சொன்னது போலவே..!! "அடிப்பாவிகளா..!!! பீடி குடிக்கத்தான் இவ்வளவுமா..??" "என்னது..??? பீடியா..??? அப்டியே போட்டன்னா..!! பில்ட்டர் சீரட்டுடி இது..!!" வாசுகி முகத்தை சுளித்தவாறு டென்ஷனாக சொன்னாள். "எதோ ஒரு கருமம்..!! இதை குடிக்கத்தான் இம்புட்டுதூரம் இந்த காட்டுக்குள்ள வந்தீகளாக்கும்..??" "ஹ்ம்ம்.. என்ன பண்றது.. நடுவீட்ல வச்சு குடிக்கனும்னு எனக்கும் ஆசைதான்.. எங்கம்மாக்காரி வெளக்கமாத்தாலேயே சாத்துவாளே..!!" "ஏன்.. இப்போ மட்டும் சாத்தமாட்டாளா..??" "அவளுக்கு தெரிஞ்சாத்தான சாத்துவா..??" "நான்தான் இப்பப்போய் போட்டு குடுத்துடுவன்ல..??" தென்றல் கேஷுவலாக சொல்லவும், வாசுகிக்கு சுர்ரென்று கோவம் வந்தது. "அடிங்.. போட்டு குடுப்பியா..?? ஏய் மேகலா.. அவளை அப்டியே புடிச்சு மலைலயிருந்து தள்ளி விடுடி..!! ஊருக்குள்ள கேட்டா குறிஞ்சி தூக்கிட்டு போயிட்டான்னு சொல்லிரலாம்..!!" "ஹாஹா.. பாவம்டி..!!" "போட்டுக் குடுப்பேன்றா.. இவளைப்போய் பாவம்ன்ற..??" "பாவம்னு இவளை சொல்லல.. குறிஞ்சியை சொன்னேன்..!! இந்த அரிசிமூட்டையை தூக்கி சொமக்குற நெலமை அந்த குறிஞ்சிக்கு வரவேணாம்.. பாவம்.. ஹாஹாஹாஹா..!!" மேகலா சொல்லிவிட்டு சிரிக்க, வாசுகியும் அவளுடன் சேர்ந்துகொண்டாள். "ஹாஹாஹாஹாஹாஹா..!!" தென்றலோ தோழிகள் இருவரையும் கடுப்புடன் முறைத்தாள். "ம்க்கும்..!! இவளுகளுக்கு அப்படியே மனசுக்குள்ள இலியானான்னு நெனைப்பு.. நீங்கமட்டும் என்ன கொறைச்சலாவாடி இருக்கீக.. குந்தானிகளா..!!" "ஹாஹா.. கோச்சுக்காதடி...!! இந்தா..!!" சொல்லிக்கொண்டே வாசுகி ஒரு சிகரெட்டை எடுத்து தென்றலிடம் நீட்ட, அவள் உடனே முகத்தை சுளித்தாள். "ஐயே.. எனக்கு வேணாம்..!!" "வேணாமா..?? அப்புறம் எதுக்குடி எங்ககூட வந்த..??" "நான் எங்கடி வந்தேன்..?? நீங்கதான் ஒண்ணுமே சொல்லாம இழுத்துட்டு வந்திங்க..!!" "அ..அது.. எங்களுக்கு ஆசை இருக்குற மாதிரி, உனக்கும் ஆசை இருக்கும்னு நெனச்சோம்..!!" "ஆசைப்படுறதுக்கு அப்படி என்ன இருக்கு இந்த கருமத்துல..??" "என்னடி இப்படி சொல்லிட்ட..?? பயலுக எப்பப்பாத்தாலும் இதைத்தான வாய்லவச்சு பக்குபக்குன்னு இழுத்து, குப்புகுப்புன்னு பொகை விட்றாய்ங்க..?? எத்தனை நாள் ஆசை தெரியுமா எனக்கு..?? அப்படி என்னதான் இதுல இருக்குன்னு இன்னைக்கு பாத்துடனும்..!! நீ குடிக்காட்டா போ.. நாங்க குடிக்க போறோம்..!!" ஆசையாக சொன்ன வாசுகி, அந்த சிகரெட்டை வாயில் வைத்துக்கொண்டு, மேகலாவிடம் திரும்பி, "ஏய்.. பத்தவைடி..!!" என்றாள். மேகலா தனது வாயில் ஒரு சிகரெட்டை பொருத்திக் கொண்டாள்.. தீக்குச்சி உரசி வாசுகிக்கு பற்றவைத்துவிட்டு, தனது சிகரெட்டுக்கும் நெருப்பு வைத்துக்கொண்டாள்..!! தென்றல் ஒரு கையால் மூக்கை இறுகப் பொத்திக்கொள்ள.. வாசுகியும், மேகலாவும் சிகரெட் புகைக்க ஆரம்பித்தார்கள்.. ஆரம்பித்ததுமே, ஆர்வக்கோளாறில் அதிக அளவு புகையை சர்ரென உள்ளிழுத்து.. "லொக்.. லொக்.. லொக்..!!" என கண்களில் நீர் வருமளவிற்கு இருமினார்கள். "எ..என்னடி இது.. நல்லாவே இல்ல..!!" முகத்தை அஷ்டகோணலாக்கியவாறு சொன்னாள் மேகலா. "ஆரம்பத்துல அப்படித்தாண்டி இருக்கும்.. குடிக்க குடிக்க நல்லாருக்கும்..!!" ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் அவளை என்கரேஜ் செய்தாள் வாசுகி. "ஏய்.. சீக்கிரம் குடிச்சு முடிங்கடி.. இருட்ட ஆரம்பிச்சிடுச்சு.. மழை வேற வர்ற மாதிரி இருக்குது..!!" இயல்பாக சொல்லிக்கொண்டே வானத்தை பார்த்த தென்றல்.. எதேச்சையாக பார்வையை வேறுபக்கம் சுழற்றியபோதுதான்.. அந்த உருவம் அவளது கண்களில் பட்டது..!! அங்கிருந்து சற்றே தூரமாக.. அடர்ந்த காட்டு மரங்களுக்கு இடையே.. அசைவேதுமில்லாமல் தனியே நின்றிருந்த.. அந்த சிவப்பு அங்கி போர்த்திய உருவம்..!! இவர்கள் மூவரையுமே வெறித்துப் பார்ப்பது போன்றொரு தோற்றம்..!!
அந்த உருவத்தை பார்த்ததும் தென்றலுக்கு அப்படியே முதுகுத்தண்டு சில்லிட்டுப்போனது.. பயரத்தம் பாய்ந்ததில் அவளது இருதயம் தறிகெட்டு துடிக்க.. "ஆஆஆஆஆஆஆஆ..!!!" என்று பெரிதாக அலறினாள். அலறியவேகத்தில் தடுமாறி விழப்போனவளை வாசுகி தாங்கிப்பிடித்துக் கொண்டாள். "ஏய்ய்ய்.. என்னடி ஆச்சு..??" "கு..குறிஞ்சி.. குறிஞ்சிடி..!!" தென்றல் திணறலாக சொன்னாள். அவளது முகத்தில் கொப்பளித்த அந்த அதீத மிரட்சி, மற்ற இரு பெண்களுக்குமே உடனடியாய் ஒரு பதற்றத்தை கிளப்பியிருந்தது. "எ..எங்க..??" "அ..அதோ.. அங்.." சொல்லவந்ததை முடிக்காமலே நிறுத்தினாள் தென்றல்.. அவள் கைநீட்டிய திசையில் இப்போது அந்த உருவத்தை காணவில்லை.. காட்டுமரங்கள்தான் காற்றுக்கு மெலிதாக தலையசைத்துக் கொண்டிருந்தன..!! பயந்துபோய் திரும்பிப்பார்த்த தோழிகள் இருவரும் குழம்பிப்போனார்கள்..!! "எ..எங்கடி.. யாரையும் காணோம்..??" "அ..அங்க.. அங்கதான்டி நின்னுட்டு இருந்தா.. அதோ.. அந்த மரத்துக்கு பக்கத்துல..!!" "வெ..வெளையாடாத தென்றல்..!!" "அடச்சீ.. வெளையாடலடி.. நெஜமாத்தான் சொல்றேன்.. நான் பார்த்தேன்.. என் ரெண்டு கண்ணாலயும் பார்த்தேன்..!! உடம்பு பூரா செவப்பு அங்கிய போத்திக்கிட்டு.. ஒத்தையா அங்க நின்னுட்டு இருந்தா.. நம்மளயே உத்த்த்து பாத்துக்கிட்டு இருந்தா.. அப்டியே கொலை நடுங்கிப்போச்சு எனக்கு..!!" படபடவென சொன்னாள் தென்றல். அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே.. 'டமார்ர்ர்' என்று விண்ணில் ஒரு இடிமுழக்கம்.. ஊசிச்சிதறல்களாய் சிலுசிலுவென மழைத்தூறல்..!! மூன்று பெண்களின் முகத்திலுமே இப்போது ஒரு கிலி பரவுவதை காணமுடிந்தது.. மூன்று பேருடைய நெஞ்சுமே பக்பக்கென அடித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தது.. தென்றலிடம் மட்டும் சற்று அதிகப்படியாகவே அந்த படபடப்பு..!! சிகரட்டை பிடித்திருந்த விரல்கள் நடுநடுங்க, மேகலா இப்போது சொன்னாள்..!! "கெ..கெளம்பிறலாம்டி..!!" வாசுகியும், மேகலாவும் கையிலிருந்த சிகரெட்டை படக்கென விசிறியெறிந்தனர்.. மூவரும் மலைச்சரிவில் விருட்டென ஏறி, நடக்கிற பாதையை அடைந்தனர்.. அகழி இருக்கிற திசையை நோக்கி அவசர அவசரமாக நடந்தனர்..!! சில்லென்று சிதறிய மழைத்தூறலை மீறி, நெற்றியில் வியர்வை அரும்பியது அவர்களுக்கு.. உடலுக்குள் ஜிவ்வென்று ஒரு பய சிலிர்ப்பு..!! அப்படியும் இப்படியுமாய் தலையை திருப்பி.. எல்லா திசைகளையும் ஒரு பயப்பார்வை பார்த்துக்கொண்டே விரைந்தனர்..!! "ப..பயமா இருக்குடி வாசுகி..!!" உடைந்துபோன குரலில் சொன்னாள் மேகலா. "அடச்சீ.. ஒன்னும் இல்லடி..!!" அவளுக்கு தைரியமூட்டினாள் வாசுகி. திடீரென்று.. அவர்களுக்கு வெகுஅருகில்.. 'ஸரஸரஸர'வென காய்ந்த சருகுகள் மிதிபடுகிற சப்தம் கேட்டது..!! அந்த சப்தத்தை கேட்டதும்.. அப்படியே 'ஹக்க்க்க்' என்று நெஞ்சடைத்துப்போய், மூன்று பெண்களும் அசையாமல் உறைந்து நின்றனர்..!! பயத்தில் விரிந்த விழிகளும், மிரட்சி அப்பிய முகமும், ஏறியிறங்குகிற மார்புப்பந்துகளுமாக.. சப்தம் வந்த திசையை மெல்ல திரும்பிப் பார்த்தனர்..!!
"ஸர்ர்ர்ர்ர்ர்ரக்க்க்க்க்க்...!!!" - யாரோ ஒரு மரத்தின் மறைவில் இருந்து இன்னொரு மரத்தின் மறைவுக்கு ஓடினார்கள். "ஆஆஆஆஆ..!!" வாயில் கைவைத்து அலறினாள் தென்றல். "யா..யாரு.. யாரது..???" சற்று துணிச்சலாக கத்தினாள் வாசுகி. அதேநொடியில்.. வானத்தில் 'திடும் திடும்' என அடுத்தடுத்து இடியோசை.. 'பளிச் பளிச்' என மின்னல் வெளிச்சம்..!! மேகங்கள் ஒன்றோடொன்று உரசிக்கொள்ள, 'ச்ச்சோ'வென்று மழைகொட்ட ஆரம்பித்தது.. நின்றிருந்த பெண்களை சடசடவென நனைத்தன மழைத்துளிகள்..!! "எ..எனக்கு ரொம்ப பயமா இருக்குடி.. போ..போயிறலாம்டி..!! இ..இங்க நிக்கிற ஒவ்வொரு.." வாய்க்குழறலாக பேசிய மேகலா, சொல்லவந்ததை முழுதாக முடிக்காமல் அப்படியே நிறுத்தினாள்.. அவளது பார்வை இப்போது ஓரிடத்தில் நிலைகுத்திப் போயிருந்தது.. ஓவென்று திறந்திருந்தன அவளது உதடுகள்.. அவளது முகத்திலும், கண்களிலும் அப்பட்டமாய் அப்படி ஒரு பீதி..!! "எ..என்னடி..??" வாசுகியின் கேள்விக்கு மேகலாவிடமிருந்து பதில் இல்லை.. வாயும் நெஞ்சும் அடைத்துப்போனது மாதிரி விக்கித்து நின்றிருந்தாள்..!! இப்போது தென்றலும், வாசுகியும்.. மேகலாவின் பார்வை சென்ற திசைபக்கமாக.. மெல்ல மெல்ல தங்களது முகத்தை திருப்பினர்..!! அங்கே.. அவர்களுக்கு மிக மிக நெருக்கமாக.. ஒழுங்கின்றி வளர்ந்திருந்த ஒருபுதருக்கு பின்புறமாக.. கொட்டுகிற மழையில் சொட்டச்சொட்ட நனைந்தவாறு.. அந்த உருவம்..!! உடல்முழுதையும் போர்த்திய சிவப்பு அங்கி.. முகம்முழுதும் வழிகிற கருங்கூந்தல்..!! "க்க்க்ர்ர்ர்.. க்க்க்ர்ர்ர்.. க்க்க்ர்ர்ர்..!!" என்று அந்த உருவத்திடம் இருந்து வருகிற சப்தம். "ஆஆஆஆஆஆஆஆஆஆஆ..!!!!!!!!!!!!!!!" அவ்வளவுதான்..!! அலறியடித்துக் கொண்டு ஓடினர் இளம்பெண்கள் மூவரும்..!! மாலைநேரத்து மங்கலான வெளிச்சம்.. மழைபெய்து வழுக்குகிற மலைப்பாதை.. ஆங்காங்கே குறுக்கிடுகிற காட்டுமரங்கள்.. உச்சியிலிருந்து சடசடவென ஊற்றுகின்ற மழைநீர்..!! கண்மண் தெரியாமல்.. கால்கள் சென்ற திசையில்.. உடம்பெல்லாம் வெடவெடக்க.. உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடினார்கள்..!! அவர்கள் அணிந்திருந்த காலணிகள் எல்லாம் எங்கே நழுவியதென்று தெரியவில்லை.. ஈரமான கோரைப்புற்களில் வெற்றுக் கால்களை பதித்து வேகமாக ஓடினர்..!! சரியான திசையில்தான் ஓடுகிறோமா என்பதைக்கூட அவர்கள் அறியவில்லை.. கண்ணில்பட்ட திசையில், எதிர்ப்பட்ட மரங்களுக்கு இடையில் புகுந்து ஓடிக்கொண்டே இருந்தார்கள்..!! மழையில் நனைந்து உடலோடு ஒட்டிய உடையுடனும்.. மார்புக் கூட்டுக்குள் பதறித் துடிக்கிற இருதயத்துடனும்..!! "ஆஆஆஆஆ..!!!!" ஓடியவர்கள் திடீரென அலறியவாறு அப்படியே ப்ரேக் அடித்து நின்றார்கள்..!! அவர்கள் ஓடியதிசையில் எதிர்ப்புறம்.. 'சர்ர்ர்ரரக்க்க்' என்று குறுக்காக வந்துநின்றது அந்த உருவம்..!! பலமாக வீசிய காற்றில் படபடக்கிற சிவப்பு அங்கி.. முகத்தை மறைத்திட்ட முடிக்கற்றைகளில் சொட்டுகிற மழைநீர்..!! மூன்று பெண்களும் ஒருநொடி கூட தாமதிக்கவில்லை.. பக்கவாட்டில் திரும்பி விர்ரென்று வேகமெடுத்து ஓடினர்.. அந்த உருவம் தங்களை பின்தொடர்கிறதா என்று திரும்பிப் பார்க்கக்கூட மூவருக்கும் அச்சம்..!! உயிர்பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடினர்..!! இந்தப்பாதை சற்றே சீரற்ற பாதை.. மரங்களின் கிளைகள் பாதையின் குறுக்காக நீண்டிருந்தன.. விரிந்திருந்த முட்புதர்கள் அவர்களது புஜங்களை கீறின.. இறைந்து கிடந்த கற்கள் அவர்களது பாதத்தை பதம் பார்த்தன..!! உடம்பில் உண்டான வேதனையை பொருட்படுத்தாமல்.. உயிரை காப்பாற்றிக் கொள்கிற பதைபதைப்புடன்.. அடர்ந்த காட்டுக்குள் கிலியடித்துப்போய் ஓடிக்கொண்டிருந்தனர்..!! அகன்ற அடிப்புறம் கொண்ட மரம் ஒன்றிற்கு பின்புறமாக.. அண்டிக்கொண்டனர் மூவரும்..!! நுரையீரல் வெளியே வந்துவிடுவது போல மூச்சிரைத்தது அவர்களுக்கு.. இருதயம் 'திடுக்.. திடுக்..' என்று அடித்துக் கொண்டதில், மார்புகள் 'சர்ர்.. சர்ர்..' என மேலும் கீழும் ஏறியிறங்கின.. அட்ரினலின் அதீதமாக சுரந்து, நாடிநரம்பெல்லாம் தாறுமாறாய் ஓடியது.. குளிராலும் குறிஞ்சி பயத்தாலும், உடம்பின் ஒவ்வொரு செல்லும் வெடவெடத்து நடுங்கியது..!! மூச்சு விடுகிற சப்தம்கூட வெளியே வரக்கூடாதென.. வாயை இரு கைகளாலும் இறுகப் பொத்திக்கொண்டு.. மூன்று பெண்களும் மரத்துக்கு பின்புறமாக பம்மியிருந்தனர்..!! அரை நிமிடம்.. பிறகு வாசுகி மட்டும் சற்றே தைரியம் பெற்று.. தனது தலையை மெல்ல வெளியே நீட்டி.. தாங்கள் ஓடிவந்த பாதையை பார்த்தாள்.. பார்த்ததுமே பக்கென்று இருந்தது அவளுக்கு..!! அந்த உருவம் அவர்களுக்கு பக்கத்திலேதான் இன்னொரு மரத்துக்கு அருகே நின்று கொண்டிருந்தது.. 'ச்சோ'வென்று கொட்டுகிற மழையில் நனைந்தவாறு.. வேறொரு திசையை வெறித்தவாறு..!! விரிந்த விழிகளுடன் அந்த உருவத்தையே மிரட்சியாக பார்த்தாள் வாசுகி..!! அந்த உருவம் இப்போது மெல்ல இந்தப்பக்கமாக திரும்ப.. வாசுகி படக்கென தலையை உள்ளிழுத்துக் கொண்டாள்..!! சுறுசுறுப்பாக யோசித்தாள்.. அவசரமாய் ஒரு முடிவுக்கு வந்தாள்.. 'தஸ்.. புஸ்..'என்று மூச்சிரைப்புடன், கிசுகிசுப்பான குரலில் தோழிகளிடம் சொன்னாள்..!! "சொ..சொல்றதை கவனமா கேளுங்கடி.. மூணு பேரும் ஒன்னா இருந்து, அவகிட்ட மொத்தமா மாட்டிக்க வேணாம்.. ஆ..ஆளுக்கொரு பக்கமா ஓடலாம்.. ஒருத்தியை பலிகுடுத்து மிச்ச ரெண்டுபேர் தப்பிச்சுக்கலாம்.. எ..என்ன சொல்றிங்க..??" "ம்ம்.. ச..சரிடி..!!" பயத்துடனும், பதைபதைப்புடனும் ஒப்புக்கொண்டனர் மற்ற இருவரும்..!! அழுகை வந்தது அவர்களுக்கு.. வாயைப் பொத்திக்கொண்டு சத்தம் வராமல் அழுதனர்..!! பீதி நிரம்பிய அவர்களது கண்கள்.. பொலபொலவென கண்ணீரை உகுத்தன..!! இப்போது சிவப்பு அங்கி போர்த்திய அந்த உருவம்.. அவர்கள் அண்டியிருக்கிற மரத்தைநோக்கி மெல்ல நகர்ந்தது.. மரத்துக்கு அந்தப்பக்கம் அவர்களுடைய சன்னமான பேச்சுக்குரல் இங்கேயே கேட்டது..!! கொஞ்சம் கொஞ்சமாய் நிதானமாக நகர்ந்து.. மரத்திற்கு மிகஅருகே நெருங்கிவிட்டது அந்த உருவம்.. இரண்டு மூன்று அடி இடைவெளிதான்..!! அப்போதுதான் அது நடந்தது.. மரத்துக்கு பின்புறம் இருந்து சரக்கென வெளிப்பட்டனர் மூன்று பெண்களும்.. வெளிப்பட்ட வேகத்தில் வெவ்வேறு திசையில் சர்ரென ஓட்டமெடுத்தனர்..!! அங்கிருந்து கிளம்பிய மூன்று சாலைகளில்.. ஆளுக்கொரு சாலையென சிட்டாக பறந்தோடினர்..!! அந்த உருவம் அதை எதிர்பார்த்திருக்கவில்லை..!! சற்றே திகைத்துப்போய்.. வெடுக்வெடுக்கென மூன்று திசைகளையும் மாறிமாறி திரும்பிப் பார்த்தது..!! அப்போதுதான்.. "ஆஆஆஆஆஆ..!!!" என்று தென்றலின் அலறல். தறிகெட்டு ஓடிய தென்றல் தரையில் விழுந்து கிடந்தாள்.. மேற்கிளம்பிய ஒரு மரத்தின் வேர், அவளது பாதத்தை இடறி விட்டிருந்தது.. தடுமாறிப்போய் கால்கள் ரெண்டும் பின்னிக்கொள்ள கீழே விழுந்து உருண்டிருந்தாள்..!! "ஆஆஆஆஆஆ..!!!" கொட்டுகிற மழையில் காலை பிடித்துக்கொண்டு கத்தினாள். மூன்று திசைகளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த அந்த உருவம், இப்போது சற்றே நிதானித்தது.. தென்றல் விழுந்து கிடந்த திசையை மட்டும் கூர்மையாக வெறித்தது.. அந்த திசையில் மெல்ல நகர்ந்தது..!! அதன்பிறகு சில நிமிடங்கள் கழித்து..!! வேறு திசையில் ஓடிய மற்ற இரு பெண்களும்.. அகழி செல்கிற சாலையில் ஆளுக்கொரு இடத்தில் இணைந்தனர்..!! பிறகு அதே சாலையில் தனித்தனியே ஓடியவர்கள்.. ஓரிடத்தில் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர்..!! பார்த்ததுமே ஓடிவந்து அணைத்துக் கொண்டனர்.. ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழுதனர்..!! தாங்கள் சேதாரமில்லாமல் தப்பித்துவிட்டாலும்.. தங்களது தோழி மாட்டிக்கொண்டாளே என்கிற பதைபதைப்பில் இருவருக்கும் நெஞ்சடைத்தது..!! "அரிசிமூட்டை பாவம்டி.. குறிஞ்சிகிட்ட மாட்டிக்கிட்டா..!!!" அழுது அரற்றினாள் மேகலா..!! 'பாவம்னு இவளை சொல்லல.. குறிஞ்சியை சொன்னேன்..!!' என்று அவள் சற்றுமுன் கேலியாக சொன்னது இப்போது நினைவுக்கு வர.. அவளது அழுகை இன்னுமே அதிகமாக பீறிட்டது..!! "அழாதடி.. வா.. மொதல்ல ஊருக்குள்ள போய் சொல்லலாம்..!!" சற்றே துணிச்சலாக சொன்ன வாசுகி, அடுத்தவினாடியே உள்ளுக்குள் உடைந்துபோய் உதடுகள் தழதழத்தாள்..!! 'அவளை அப்டியே புடிச்சு மலைலயிருந்து தள்ளி விடுடி..!! ஊருக்குள்ள கேட்டா குறிஞ்சி தூக்கிட்டு போயிட்டான்னு சொல்லிரலாம்..!!' சிறிது நேரத்திற்கு முன்பு அவள் பேசிய வார்த்தைகள், இப்போது மீண்டும் அவளது காதுக்குள் ஒலிக்க.. 'ஓ'வென்று அவளுக்கும் அழுகை பீறிட்டு கிளம்பியது..!! அப்படியே கால்கள் மடங்கிப்போய்.. தரையில் வீழ்ந்து.. முதுகுப்புறம் விம்ம விம்ம.. குலுங்கி குலுங்கி அழுதாள்..!! மேகலாவும் இப்போது தரையில் அமர்ந்து, தோழியை அணைத்துக் கொண்டாள்.. ஆதரவாக அவளது முதுகை தடவிக்கொடுத்தாள்..!! இருட்டுக்குள் அவ்வாறு அமர்ந்திருந்த அவர்களது முகத்தில்.. திடீரென ஒரு வெளிச்ச வெள்ளம் பாய்ந்து, கண்களை கூசச்செய்தது.. ஒருவித பதற்றத்துடனே இருவரும் எழுந்துகொண்டனர்..!! அந்த சாலையில், சிறிது தூரத்தில் ஒரு கார் வந்துகொண்டிருந்தது.. அந்த காருடைய முகப்புவிளக்கின் வெளிச்சம்தான் அது..!! காருக்குள் இருந்தவர்களை இவர்களால் உடனடியாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.. ஆதிராவும், சிபியும்..!! அத்தனை நேரம் கோயிலில் கழித்துவிட்டு.. அப்போதுதான் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்..!! "அக்காஆஆஆ..!!" என்று கத்திக்கொண்டு, காரைநோக்கி ஓடினார்கள் வாசுகியும் மேகலாவும். "அ..அத்தான்.. வண்டியை கொஞ்சம் நிறுத்துங்க..!!" ஆதிரா பதற்றமாக சொல்லவும், சிபி சரக்கென ப்ரேக் போட்டு காரை நிறுத்தினான்..!! ஏதோ விபரீதம் என்று புரிந்துகொண்ட இருவரும்.. காரில் இருந்து அவசரமாக இறங்கினார்கள்..!! தங்களை நோக்கி மிரட்சியாக ஓடிவந்த பெண்களிடம்.. "எ..என்னம்மா.. என்னாச்சு..??" ஆதிரா பதட்டத்துடன் கேட்டாள். அழுகையும், மூச்சிரைப்புமாக நடந்ததை விளக்கினார்கள் வாசுகியும், மேகலாவும்..!! அவர்கள் சொன்னதை கேட்க கேட்க.. அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள் ஆதிராவும், சிபியும்..!! நடந்ததை நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருந்தது.. அதையும்மீறி அந்தப்பெண்களின் முகத்தில் கொப்பளித்த அதீத பயமும், மிரட்சியும்.. அவர்களது வார்த்தையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது..!!
ஆதிரா விக்கித்துப்போய் நின்றிருந்தாள்.. 'காலையில்தானே அந்த அப்பாவிப்பெண்ணை வாயார வாழ்த்தினோம்' என்கிற நினைவு வர.. துக்கம் தொண்டையை அடைத்து, வாயை ஒருகையால் பொத்திக் கொண்டாள்..!! "இ..இப்போ.. எ..என்னத்தான் பண்றது..??" கணவனிடம் கவலையாக கேட்டாள். சிபி சற்று தெளிவாகத்தான் இருந்தான். "டென்ஷன் ஆகாத ஆதிரா.. ரிலாக்ஸ்..!! அவசரப்பட்டு நாமளா எந்த முடிவுக்கும் வரவேணாம்.. தென்றல் தப்பிச்சிருக்க கூட சான்ஸ் இருக்கு.. நான் சிங்கமலை போய் அவளை தேடிப்பாக்குறேன்.. நீ இவங்களை கூட்டிட்டு வீட்டுக்கு போ.. வனக்கொடிக்கும், கதிருக்கும் இன்ஃபார்ம் பண்ணு..!!" "ஐயோ வேணாம்த்தான்.. நீங்க போகாதீங்க.. எனக்கு பயமா இருக்கு..!!" "எனக்கு ஒன்னும் ஆகாதுடா.. தேவையில்லாம பயப்படாத..!!" "ப்ளீஸ்த்தான்.. வேணாம்..!!" "ப்ச்.. புரியாம பேசாத ஆதிரா.. நாம லேட் பண்ற ஒவ்வொரு செகண்டும் தென்றலுக்கு ஆபத்து..!! உடனே போய் தேடிப்பாக்குறது நல்லது..!!" "அ..அப்போ.. என்னையும் உங்ககூட கூட்டிட்டு போங்க..!!" "நீ எதுக்குடா அங்க..?? நான் மட்டும் போயிட்டு வரேன்..!!" "இல்லத்தான்.. உங்களை தனியா அனுப்ப எனக்கு இஷ்டம் இல்ல.. நானும் வர்றேன்..!!" மனைவியிடம் வாக்குவாதம் செய்ய நேரமில்லாமல்.. அவளையும் உடன்அழைத்துச் செல்ல சம்மதித்தான் சிபி..!! கிளம்புவதற்கு முன்.. வனக்கொடிக்கும், கதிருக்கும் உடனடியாய் விஷயத்தை தெரிவிக்குமாறு வாசுகியிடம் சொன்னான்.. தென்றலை இறுதியாக அவர்கள் பார்த்த இடத்தை பற்றி விசாரித்துக் கொண்டான்.. எந்த இடத்திற்கு சென்று தேடுவது என்று உத்தேசமாக முடிவு செய்துவிட்டே காரை கிளப்பினான்..!! மலைப்பாதையில் ஐந்து நிமிட பயணத்திற்கு பிறகு.. தார்ச்சாலை முடிவடைந்த இடத்தில் சிபி காரை நிறுத்தினான்.. டாஷ்போர்ட் திறந்து டார்ச்லைட்டை கையில் எடுத்துக் கொண்டான்..!! இருவரும் காரில் இருந்து இறங்கி, கதவை அறைந்து சாத்தினார்கள்.. இருள் அப்பியிருந்த வனப்பகுதிக்குள் ஒருவித அவசரத்துடன் நடந்தனர்..!! மழை இப்போது ஓரளவுக்கு ஓய்ந்திருந்தது.. சில்லென்று மெலிதாக சிதறிய தூறல் மட்டுமே..!! "தென்றல்.. தென்றல்..!!" ஆதிரா தென்றலின் பெயரை பதைபதைப்புடன் அழைத்தவாறே சென்றாள்..!! மசமசப்பான வெளிச்சத்துடன் மரங்களின் பிம்பங்கள் மட்டுமே ஆங்காங்கே அடர்ந்து தெரிந்தன.. கையிலிருந்த டார்ச்சால் இருட்டுக்குள் வெளிச்சக்கீற்றை பாய்ச்சியவாறே நடந்தான் சிபி.. அவனுடன் நடந்த ஆதிராவின் இருதயமோ 'திக் திக்.. திக் திக்..' என்று பதறிக்கொண்டிருந்தது..!! சூழ்நிலையை சுற்றிலும் ஒரு அமானுஷ்ய நிசப்தம்.. காய்ந்த சருகுகள் மீது அவர்களது காலடி பதிகிற சப்தம் மட்டுமே..!! "சர்ர்ர்ரக்.. சர்ர்ர்ரக்.. சர்ர்ர்ரக்..!!!" இளம்பெண்கள் மூவரும் அந்த உருவத்திடம் இருந்து மிரண்டு, பக்கவாட்டில் ஓடிய அந்த பாதையில்.. இப்போது சிபியும் ஆதிராவும் சென்றுகொண்டிருந்தனர்..!! அவர்கள் ஒளிந்துகொண்ட அந்த அகன்ற அடிப்புறம் கொண்ட காட்டுமரம்.. அந்த இடத்தில் சற்று நின்று டார்ச்சை சுழற்றினான் சிபி.. தரையிலிருந்து மேல் கிளம்பி, பாதையில் படர்ந்திருந்த அந்த மரவேர் கண்ணில் பட்டது.. அந்த திசையில் மெல்ல நடந்தான்.. அவனுக்கு இரண்டடி இடைவெளி விட்டு ஆதிரா பின்தொடர்ந்தாள்..!! "தென்றல்.. தென்றல் தென்றல்..!!" அதே திசையில் மேலும் சிறிது நேரம் நடக்க.. அந்த மலைச்சரிவை வந்தடைந்தார்கள்..!! சரேலென்று செங்குத்தான மலைச்சரிவு.. அந்த சரிவின் அடியாழத்தில் சலசலப்புடன் ஓடுகிற குழலாற்றின் சப்தம்..!! மலைச்சரிவை ஒட்டியே குறுகலாக சென்ற அந்த பாதையில்.. சற்றே கவனமாகவும், நிதானமாகவும் நடந்தார்கள் இருவரும்..!! சிபி பாதையில் வெளிச்சத்தை தெளித்துக்கொண்டே.. "பாத்து வா ஆதிரா.. மழை பெஞ்சு ஈரமா இருக்குது.. வழுக்குது..!!" என்று மனைவியிடம் சொன்னபோதுதான்.. "ச்ச்சலீர்ர்ர்..!!!!!" ஆதிராவின் காலில் ஏதோ தட்டுப்பட்டு ஓசை கிளப்பியது. அது என்னவென்று தலையை தாழ்த்தி பார்த்தாள்.. குனிந்து கையில் எடுத்தாள்.. அது.. ஒரு ஒற்றைக்கால் கொலுசு..!! அதை பார்த்ததுமே ஆதிராவுக்கு பட்டென்று தெரிந்து போனது..!! "தென்றலோட கொலுசு அத்தான்..!!" "ஓ..!! அப்போ.. இந்தப்பக்கமாத்தான் அவ போயிருக்கனும்..!!" அதே பாதையில் இப்போது சற்று விரைவாக நடந்தார்கள்.. தென்றலை தேடுவதை தீவிரப் படுத்தினார்கள்..!! இருட்டாக இருந்த மலைச்சரிவின் பரப்பில்.. சிபியின் கையிலிருந்த டார்ச்லைட்டின் வெளிச்சவட்டம் படிந்து.. ஓரிடத்தில் நில்லாது அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது..!! "டார்ச்சை குடுங்கத்தான்..!!" ஒருவித பதற்றத்துடன் ஆதிரா அவ்வாறு திடீரென கேட்கவும்.. என்னவென்று புரியாமலே அவளுடைய கையில் டார்ச்லைட்டை திணித்தான் சிபி..!! "என்னாச்சு ஆதிரா..??" "ஏதோ அசைஞ்ச மாதிரி இருந்தது..!!" "எங்க..??" கணவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல்.. அவர்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து செங்குத்தாக கீழிறங்கிய பள்ளத்தில்.. சற்றே ஆழமாக, தூரமாக.. வெளிச்சத்தை தெளித்தாள் ஆதிரா..!! கொஞ்சம் உற்றுப் பார்க்கவும்தான் அது தெரிந்தது.. பாறை இடுக்கில் இருந்து வெளிப்பட்டு, காற்றில் மெலிதாக அசைந்துகொண்டிருந்த அந்தத் துணி.. இளமஞ்சள் நிறத்திலான துணி..!!!! ஆதிராவின் முகத்தில் இப்போது பட்டென ஒரு மலர்ச்சி.. மனதில் ஒருவித நம்பிக்கையுடன் உற்சாகமாக கீழ்நோக்கி கத்தினாள்..!! "தென்றல்.. தென்றல்..!!!" அடுத்த வினாடியே கீழிருந்து பதில் வந்தது. "அக்காஆஆஆ..!!!!" தென்றலின் குரலை கேட்டதும்.. ஆதிராவும், சிபியும் அப்படியே பூரித்துப் போனார்கள்..!! இருவரும் ஒரே நேரத்தில் ஒரு நிம்மதிப் பெருமூச்சை வெளிப்படுத்தினார்கள்.. ஆதிரா வஜ்ரேஸ்வரி அம்மனுக்கு மனதுக்குள்ளேயே நன்றி தெரிவித்தாள்..!! குறிஞ்சிக்கு பயந்து.. அவளிடம் இருந்து தப்புவதற்காக.. தென்றல் இந்த மலைச்சரிவில் கீழிறங்கி மறைந்திருக்க வேண்டும் என்று அனுமானித்தார்கள்..!! இங்கிருந்து அவளுடைய முகத்தை காண இயலவில்லை.. அவளது குரல் மட்டும் தொடர்ந்து ஒலித்தது.. தெளிவில்லாமல் காதில் வந்து விழுந்தது..!! "அக்காஆஆ.. நா..நான் இங்க.. கு..குறிஞ்சி என்னை.. நா..நான் அவகிட்ட.." "எங்களுக்கு எல்லாம் தெரியும்மா.. தெரிஞ்சுதான் உன்னைத் தேடி வந்தோம்..!! குறிஞ்சி இப்போ போய்ட்டா.. இங்க யாரும் இல்ல.. நீ மேல ஏறி வா தென்றல்..!!" "இ..இல்லக்கா.. என்னால முடியல.. ஏதோ ஒரு வேகத்துல எறங்கிட்டேன்.. இப்போ எப்படி மேல வர்றதுன்னு தெரியல.. இங்க எதைத்தொட்டாலும் வழுக்குது.. எனக்கு கால்ல வேற அடிபட்ருக்கு..!!" தென்றல் அவ்வாறு பரிதாபமாக சொல்லவும், ஆதிராவும் சிபியும் ஒருகணம் குழம்பிப் போனார்கள்.. என்ன செய்வதென்று யோசித்தவர்கள், பட்டென ஒரு முடிவுக்கு வந்தார்கள்..!! "சரி தென்றல்.. நீ அங்கேயே இரு.. நான் கீழ வந்து உன்னை மேல அழைச்சுட்டு வரேன்..!!" சிபி கீழே பார்த்து கத்திவிட்டு, அந்த மலைச்சரிவில் மெதுவாக இறங்கினான்..!! ஆதிரா மேலிருந்து டார்ச் அடிக்க.. அதில் கிளம்பிய சொற்ப வெளிச்சத்தின் துணையோடு நிதானமாக கீழிறங்கினான்..!! வழுக்குப் பாறைகள் நிறைந்த மலைச்சரிவு அது.. இப்போது மழைநீரும் சேர்த்துக்கொள்ள, இன்னுமே அதிகமாக வழுக்கியது..!! "பார்த்து அத்தான்.. பொறுமையா எறங்குங்க..!!" மேலே நின்றிருந்த ஆதிரா, கனிவும் கவலையுமாக சொன்னாள்..!! சிபியும் மிக மிக கவனமாகவே அந்தப் பள்ளத்தில் இறங்கிக் கொண்டிருந்தான்..!! கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து.. தென்றலின் புடவை பறந்த இடத்தை அடைந்தான்..!! அருகருகே இருந்த இரண்டு பாறைகளுக்கு இடையிலான குறுகிய இடுக்கில்.. மிக வசதியாகவே பதுங்கியிருந்தாள் தென்றல்..!! தென்றலை நெருங்கிய சிபி, ஒருகையால் அவளுடைய புஜத்தை வலுவாகப் பற்றிக்கொண்டு.. பாறையின் இடுக்கிலிருந்து அவள் வெளியே வர உதவினான்..!! அந்தப்பிடியை விடாமலே.. அவள் எளிதாக மேலேறுவதற்கு ஒருசில அறிவுரைகளை வழங்கியவாறு.. அவளுடன் சேர்ந்து தானுமே மெல்ல மெல்ல அந்த மலைச்சரிவில் இருந்து மேலேறினான்..!! "என்னத்தான்.. போயிட்டிங்களா..??" ஆதிரா மேலிருந்து கத்த, "ம்ம்.. வந்துட்டேன் ஆதிரா.. தென்றலை பாத்துட்டேன்.. ரெண்டு பேரும் இப்போ மேல வர்றோம்..!!" கீழிருந்து பதிலுக்கு கத்தி பதில் சொன்னான் சிபி. "ம்ம்.. பாத்து கவனமா மேல வாங்க..!!" ஆதிரா அவ்வாறு கீழே குனிந்து சொல்லிக் கொண்டிருந்தபோதுதான்.. அவளுக்கு நெருக்கமாக அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள்.. அவளது பின்னங்கழுத்தில் படர்ந்த அந்த உஷ்ணத்தை உணர்ந்தாள்.. யாரோ அருகில் இருந்து மூச்சு விடுவது போல..!! மார்புக் கூட்டுக்குள் இப்போது மெலிதாக ஒரு கிலி பரவ ஆரம்பிக்க.. கொஞ்சம் கொஞ்சமாய் தனது தலையை திருப்பினாள்..!! அவளது முதுகுக்கு பின்புறமாக.. மிக மிக அருகாக.. இவளையே உற்றுப் பார்த்தவாறு அது நின்று கொண்டிருந்தது.. அந்த சிவப்பு அங்கி போர்த்திய உருவம்..!! "ஆஆஆஆஆஆஆஆ..!!!!!!" ஆதிராவின் அலறல், மேலேறிக் கொண்டிருந்தவர்களின் காதில் விழுந்தது..!! அதைத்தொடர்ந்து.. 'டங்.. டணார்.. டங்க்க்க்க்..' என்ற ஓசையுடன்.. பாறைகளில் அங்குமிங்கும் மோதி மோதி.. அந்த டார்ச்லைட் மேலிருந்து பறந்து வந்தது.. அதன்பிறகும் கீழிருந்த பாறைகள் சிலவற்றில் மோதி, குழலாற்றை நோக்கி விர்ரென வீழ்ந்தது..!! சிபி இப்போது ஒரு உச்சபட்ச பதற்றத்துக்கு உள்ளானான்.. அண்ணாந்து பார்த்து பெரிதாக அலறினான்..!! "ஆதிராஆஆஆ..!!!"
ஆதிராவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை..!! இன்னுமே அதிகமாக பதறி துடித்தவன்.. தென்றலை இழுத்துக்கொண்டு அவசரஅவசரமாய் மேலேறினான்.. 'ஆதிராஆஆ.. ஆதிராஆஆ..' என்று இடைவிடாமல் கத்திக்கொண்டே மேலேவந்தான்..!! மலைச்சரிவில் இருந்து இருவரும் நிலப்பரப்புக்கு வந்தனர்..!! ஆதிரா நின்றிருந்த இடம் இப்போது வெறுமையாக காட்சியளித்தது.. மிரட்சி பொங்குகிற முகத்துடன், சிபி அந்த இடத்தை சுற்றிச்சுற்றி பார்த்தான்.. கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரையும் காணோம்..!! இருதயத்தில் வேதனையுடனும், இயலாமை உணர்வுடனும் இங்குமங்கும் ஓடினான்.. மனைவியின் உருவம் காண துடித்தான்..!! "ஆதிராஆஆஆ..!!! ஆதிராஆஆஆ..!!!" - அலறிக்கொண்டே இருந்தான். அதே நேரம்.. அங்கிருந்து சற்று தூரத்தில்.. அடர்ந்தும், இருண்டும் போயிருந்த வனத்துக்குள்.. உயர உயரமாய் நெருக்கமாக வளர்ந்திருந்த காட்டு மரங்களுக்கு இடையே.. அந்த சிவப்பு அங்கி போர்த்திய உருவம் நிதானமாக சென்றுகொண்டிருந்தது..!! அந்த உருவத்தின் தோளில் மயக்கமுற்ற நிலையில் ஆதிரா வீழ்ந்திருந்தாள்..!! வானிலிருந்த வெண்ணிலவின் மசமசப்பான வெளிச்சத்தில்.. அந்த உருவத்தின் முன்பக்கம் இப்போது சற்றே தெளிவாக தெரிந்தது..!! முகத்தை தவிர மிச்ச பாகங்களை சிவப்பு அங்கியே மூடியிருந்தது.. முகத்திலுமே கற்றை கற்றையாய் கூந்தல் மயிர்கள் வழிந்தன.. அந்த கூந்தல் கற்றைகளுக்கு இடையே சற்று உற்றுப்பார்த்தால்.. அது தெளிவாக தெரிந்தது.. அடர்த்தியான மீசை..!!!! ஒரு ஆணின் முகம் அது..!!

No comments:

Post a Comment