Saturday, August 2, 2014

சங்கீதா - இடை அழகி 77


“ஸ்டாப் இட் இடியட்.. பசங்க இருக்காங்க, அவங்க எதிர்க்க என்ன வேணுன்னாலும் பேசுவியா?… என்ன பேசுற நீ.. நான் சொல்லுறதை செய்.. முதல் வேலையா வீட்டை பூட்டிகிட்டு உட்கார்ந்திரு.. ஒரு கதவு ஜன்னல் கூட விட்டு வைக்காத. நான் உடனே வந்துடுறேன். அதுக்கப்புறம் ஹாஸ்பிடல் போகலாம். நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கே இருப்பேன்.” – அவசரமாய் பேசி விட்டு அவனது BMWவில் சங்கீதாவின் வீட்டை நோக்கி சீறினான் ராகவ்.
விஷயத்தை முதலில் கேட்டபோது அப்படியே அதிர்ச்சியின் அதிர்வில் பயமும் குழப்பமும் கலந்து உறைந்திருந்தவள் குழந்தைகளைப் பார்த்தாள். ஒன்றும் புரியாமல் பதிலுக்கு அவளைப் பார்த்தது அந்த பிஞ்சு கண்கள். உடனே ராகவ் சொன்னது நியாபகத்துக்கு வந்து ஏதோ ஒரு வித பயம் உடல் முழுவதும் பரவியது சங்கீதாவுக்கு. முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டு அவசரமாக எழுந்து ரூம் கதவு, வீட்டின் பின் கதவு, சமையல் அறை, ஜன்னல்கள் மற்றும் வாசல் கதவு என்று அனைத்தையும் சாத்தி விட்டு லேசாக சத்தம் குடுத்து ஓடிக்கொண்டிருக்கும் ஃபேனையும் ஆஃப் செய்து விட்டு ஹாலில் தனது செல் ஃபோனை கையில் இறுக்கமாக வைத்து குழந்தைகள் இருவரையும் நெஞ்சோடு அனைத்து பத்திரமாக அணைத்தபடி அமர்ந்திருந்தாள். ஒவ்வொரு நொடியும் ராகவை மனதில் எண்ணி “சீக்கிரம் வா… சீக்கிரம் வா….” என்று மெளனமாக சொல்லிக்கொண்டே இருந்தாள். வீடு முழுவதும் நிசப்தம்.. அந்நேரம் டிங்..டிங்.. என்று காலிங் பெல் சத்தம் கேட்டது. “ஆங்” என்று ஒரு நிமிடம் பதட்டத்தில் தனக்கு தானே சொல்லிக்கொண்டு கதவை நோக்கி சென்று “டோர் ஐ” வழியாக யாரென்று பார்த்தாள். ராகவ் தலை முடியை வேகமாக கோதியபடி நின்றிருந்தான். அதைப் பார்த்ததில் அவளுக்கு பாதி உயிர் வந்தது. உடனே கதவை திறந்தவள் பயத்தில் அவனை அப்படியே அழுத்தி அனைத்துக் கொண்டாள். “இட்ஸ் ஓகே… இட்ஸ் ஓகே… நான் வந்துட்டேன் இல்ல.. பயப்படாத டா..” – மூச்சு வாங்க சங்கீதா பயத்தில் விம்மி விம்மி அழுவதை தன் நெஞ்சில் உணர்ந்தான் ராகவ்.
குழந்தைகள் இருவரையும் கூப்பிட்டு கார் கதவை திறந்து “உள்ளே உட்காருங்க..” என்று சொல்லிவிட்டு சங்கீதா வீட்டை பூட்டியவுடன் அவள் தோள்களை பற்றி அணைத்தபடி அவளை காரில் முன்பக்கம் தனது பக்கத்து இருக்கையில் அமரவைத்து வழக்கத்தை விட காரில் இன்னும் அதிக வேகம் குடுத்து சீறினான் .. ஹாஸ்பிடல் சில நிமிடங்களில் வந்தது… சற்று நேரத்தில் இருவரும் குமாரின் வார்டுக்கு உள்ளே நுழையும்போது போலீஸ் புகைப் படம் எடுத்துக் கொண்டு ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தார்கள். போலீசைப் பார்த்தவுடன் உடனே விரைந்து சென்றான் ராகவ்.. “இன்ஸ்பெக்டர்.. உங்க பேரு என்னவோ சொன்ணீங்களே…..” “ராஜேந்திரன்..” – யாரென்று பார்க்காமல் குமாரைப் பார்த்தே பேசினார் போலீஸ்.. இது எப்படி ஆச்சு? – கற்ச்சீஃப் வைத்து நெற்றியை துடைத்தபடி பேசினான் ராகவ். “நீங்க….” (ராகவைப் பார்த்து சற்று நியாபகப் படுத்திக்கொண்டு பேசினார் இன்ஸ்பெக்டர்) “ராகவ் தானே..” “ஆமாம்…”- எதைப் பத்தியும் யோசிக்காமல் பதிலை எதிர்நோக்கி காத்திருந்தான் ராகவ். “ஆயுதம் எதுவுமே உபயோகப் படுத்தல சார், ஆனா ஆள் உயிரோட இல்ல. தலையணை வெச்சி முகத்தை மூடி அமுக்கி கொன்னு இருப்பானானு பார்த்தா அதுவும் இல்ல. உள்ள வந்தவன் எந்த பொருளையும் தொடவும் இல்ல. ரொம்ப காம்ப்லிகேட்டட். ஹாஸ்பிடல் செக்யூரிட்டி ஆளுங்க கிட்டயும் விசாரணை நடக்குது. இங்கே ஒரு செக்யூரிட்டி கேமரா கூட இல்ல சார். எங்க நிலைமை ரொம்ப கஷ்டம். – இன்ஸ்பெக்டர் சலித்துக் கொண்டார். உங்களுக்கு முதல்ல விஷயம் எப்படி தெரிஞ்சிது? யார் சொன்னாங்க? – ராகவ் இன்ஸ்பெக்டரை கூர்ந்து பார்த்துக் கேட்டான். (கண்கள் இடுங்க பேசினார் போலீஸ்) ஒரு ஃபோன் வந்துச்சி சார், இத்தினி மணிக்கி இன்னாரு இறந்துட்டாரு, நான் யாருங்குறதை அப்புறம் சொல்லுறேன், சீக்கிரம் வாங்கன்னு மட்டும் சொல்லிட்டு ஃபோன் வெச்சிட்டான். யாரு என்ன எது… அப்படின்னு.. – போலீஸ் பேசுவதற்குள் ராகவ் இடைமறித்தான்.. “உங்களால அந்த நம்பரை….” ராகவ் பேசுகையில் “நான் கொஞ்சம் பேசி முடிச்சிடுறேன் சார்..” என்றார் கரகரத்த குரலில் ராஜேந்திரன்…. “ஸ்ஸ்ஷ்… சொல்லுங்க….” – கொஞ்சம் பொறுமையை இழந்து பேசினான் ராகவ்.. “உள்ள வந்த உடனேயே ஒருத்தன் ஹாஸ்பிடல் காம்பொளண்ட் தாண்டி ஓடினான் சார்…. பிடிக்க போன கான்ஸ்டபிள் கால்ல சுட்டுட்டான்… பாருங்க.. இவர் ஆளோட உருவ அடையாளக்ளை நியாபகம் வெச்சி இருக்காரு… அவன் எங்கே ஓடினான்ன்னு பார்க்க போன இன்னொரு கான்ஸ்டபிளை இன்னும் காணும்…” ஒஹ்… மை காட்… முகம் பார்க்க முடியலையா? இல்ல சார்.. ஆனா ஒரு விஷயம் சார்.. என்ன?… அவன் இந்த ஹாஸ்பிட்டல் வார்டன் பாய் டிரஸ்தான் போட்டிருந்தான்.. என்ன சொல்லுறீங்க?… – அதிர்ச்சியுடன் கேட்டான் ராகவ்… ஆமாம் அதான் சீஃப் டாக்டர் வந்தா அவர் கிட்டயும் சில விஷயங்கள விசாரிக்கணும் னு காத்திருக்கேன்… “நீங்க ஏதோ கேட்க வந்தீங்க.. நான் நடுவுல பேசிட்டே இருந்துட்டேன்.. உக்ஹும்… சாரி சார்… ஹச்…. என்ன கேட்க வந்தீங்க?” – சற்று இருமியவாறே கரகர குரலில் பேசினார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்… “இந்த நியூஸ் சொல்ல உங்களுக்கு ஒருத்தன் ஃபோன் பன்னானே அந்த நம்பரை ட்ராக் பண்ண முடியலையானு கேட்க வந்தேன்..” “பண்ணோம் சார்.. ‘நீங்கள் அழைக்கும் தொலை பேசி எண்னை சரி பார்க்கவும்’னு வந்துச்சி. ரிங் போகல” – வள வள பேச்சு ராகவிடம் இல்லை, எப்போவுமே ஸ்ட்ரைட் டு தி பாய்ண்ட்.. அவ்வப்போது நடு நடுவில் ராகவ் இப்படி கேள்வி எழுப்புவதை இன்ஸ்பெக்டர் விரும்பவில்லை என்றாலும் அவன் கேள்விக்கு சலிக்காமல் பதில் அளித்தார்.
“ஹ்ம்ம்..” – கண்களை மூடி யோசித்தான் ராகவ். “சார்.. எனக்கென்னவோ அந்த இஸ்திரி பையன் சொன்ன துரை தான் செய்திருப்பானோன்னு தோணுது, உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்குதா?..” – இன்ஸ்பெக்டர் சிந்திக்க கொஞ்சம் சிரமப்பட்டு ராகவிடம் கேட்டார். கேள்விக்குறியாக இன்ஸ்பெக்டரைப் பார்த்தான் ராகவ். அவனிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. “கொஞ்சம் யோசிக்க விடுங்க..” என்று ஒரு புறம் அமர்ந்தான். ராகவ் எதிரே சீஃப் டாக்டர் வந்தார்.. அவரைப் பார்த்தவுடன் விரைந்து சென்றான். “டாக்டர்….” என்று ராகவ் நெருங்கும்போதே அவன் என்ன கேட்கப் போகிறான் என்று அவருக்கு புரிந்திருந்தது. “குமாரை முறைப் படி போஸ்ட்மார்ட்டம் செய்து என்ன ஆச்சுன்னு தெளிவா சொல்ல முடியுமா டாக்டர்?” மெதுவாக அவனது கைகளைப் பிடித்து பேச தொடங்கினார் அவர்.. “அவசியம் இல்லை ராகவ்..” – சற்று லேசான பயத்தில் நெற்றி வேர்த்திருந்தது அவருக்கு. என்ன சொல்லுறீங்க? ஆப்பரேஷன் செய்யுறதுக்கு முன்னாடி வலி தெரியாம இருக்குறதுக்காக குடுக்குற அனஸ்தீஷ்யாவை ஊசியால கொஞ்சம் அளவுக்கு அதிகமா குடுத்து இருக்கான். அது ஆளையே கொன்னுடும். இப்படி செய்யுறதால எங்களுடைய கவனக் குறைவாலதான் இது நடந்துச்சின்னு ஹாஸ்பிடல் மேலயும் பழி போடலாம். யாரோ உள்ள வந்து கொலை செய்திருக்காங்கனு சுலபமா மத்தவங்களால சொல்லிட முடியாதுன்னு யோசிச்சி செய்திருக்காங்க. ஆனா இவருக்கு ஆப்பரேஷன் நேத்தே முடிஞ்சிடுச்சி. – டாக்டர் ராகவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது போலீஸ் அருகில் வந்தார். என்ன சொல்லுறீங்க டாக்டர்…. உங்க கவனக் குறைவாலதான் இது ஆச்சா? ச்சே ச்சே… ஏன் இப்படி செய்திருக்கலாம்னு நான் ரகாவ்கு எக்ஸ்ப்லைன் பண்றேன் அவளோதான்.. மத்தபடி இதுக்கும் எனக்கும், எங்க ஹாஸ்பிடலுக்கும் ஒரு சம்மந்தமும் கிடையாது. அப்போ ஏன் உங்க ஹாஸ்பிடல் வார்டன் பாய் ஒருத்தன் காம்பொளண்ட் சுவர் எகிறி குதிச்சி ஓடணும்.. – இன்ஸ்பெக்டர் கொஞ்சம் மூர்கமாகவே கேட்டார்.. சீஃப் டாக்டர் “அதுவும் எனக்கு தெரியாது… நீங்கதான் கண்டுபுடிக்கணும்.. இது எங்க ஹாஸ்பிடல் வார்டன் பாயிஸ் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர்.. மொத்தமா எத்தினி பேர் இருக்காங்களோ எல்லாருமே இன்னிக்கி வந்திருக்காங்க… கூடவே அந்த யூனிஃபார்ம் போட்டு எங்கள்ள ஒருத்தனா இருந்தாதான் குமாரை கொலை செய்ய உதவுறதுக்கு சாத்தியமாகும்.. தவிர எங்க ஹாஸ்பிடல் வார்டன் பாய் டிரஸ் எந்த டைலர் கிட்ட குடுத்தாலும் தைச்சி குடுக்க ரொம்ப நாள் ஆகாது….” என்று அவர் பங்குக்கு விறைப்பாக பேசி முடித்தார்… ராகவ் இன்ஸ்பெக்டரை நோக்கி, “இன்ஸ்பெக்டர்.. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி இந்த விஷயத்தை தயவுசெய்து மீடியாவுக்கு தெரியப் படுத்த வேணாம். கூடவே பெரிய விஷயம் ஆக்க வேணாம்.. குமார் ஒன்னும் வி.ஐ.பி கிடையாது. என் கம்பெனியில் ஒரு சாதாரண எம்ப்லாயிதான், உங்க கான்ஸ்டபில் எடுக்குற போஃடோஸ் எல்லாம் உங்க இன்வஸ்டிகேஷனுக்கு மட்டும் பயன் படுத்திக்கோங்க, வேற யார் கைக்கும் போக வேண்டாம். ஐ ஹோப் யு அண்டர்ஸ்டான்ட்” – கொஞ்சம் கண்டிப்பாக சொன்னான் ராகவ். “ஹ்ம்ம்..” – நெற்றி சுருங்க கண்களை மூடி “சரி சார்” என்றார்… பிறகு மெல்ல பேச ஆரம்பித்தார் “உங்க சித்தப்பா கிட்ட ஏதோ என்னை பத்தி பேசுறேன்னு சொன்னீங்களே?” – இவ்வளவு நேரம் ராகவிடம் ஒத்துழைத்து பதில் சொன்னதுக்கெல்லாம் பலன் வேண்டாமா? கஷ்டப்பட்டு செயற்கையான சிரிப்பை வரவழைத்து பேசினார் இன்ஸ்பெக்டர். “ஹ்ம்ம்.. சமயம் வரும்போது பேசுறேன்.” – என்று சுருக்கமாக முடித்துக் கொண்டான் ராகவ். ராகவ் அங்கிருந்து கிளம்பும்போது டாக்டர் அவனிடம் நெருங்கி வந்து “ராகவ்…. இதுல எங்க ஹாஸ்பிடல் பேரும் சம்மந்தப்பட்டிருக்கு….” என்று லேசாக இழுத்தார்.. அதன் அர்த்தம் என்னவென்று ராகவ் புரிந்துகொண்டு “கவலை படாதீங்க, விஷயம் நமக்குள்ள மட்டும்தான் இருக்கும். வெளியே வராது. உங்க ஹாஸ்பிடல் பேர் கெடாது.” என்றான். ராகவ் சற்று அமைதியாய் சங்கீதாவின் அருகினில் வந்து அமர்ந்தான். எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் அதிகம் உடைந்து விடமாட்டாள் சங்கீதா. ஆனால் உயிர் பயம் என்பது பாரபட்சம் இல்லாமல் யாருக்கும் வரும். இருப்பினும் அதையும் தாண்டி மனதில் தைரியம் வரவழைத்துக் கொண்டாள். ராகவ் அங்கும் இங்கும் நீண்ட நேரம் போலீசிடமும், டாக்டரிடமும் மாறி மாறி பேசி வருவதை நீண்ட நேரம் கவனித்தாள். இப்போது அவளிடம் விசும்பல் கொஞ்சம் குறைந்திருந்தது. அருகில் ராகவின் தோள்களைப் பற்றினாள். “என்னடா….” – பரிவுடன் கேட்டான் ராகவ்.. “போதும்டா, உன்னை இன்னும் சிரமப் படுத்திக்காத..” – இந்த வார்த்தைகளை சங்கீதா சொல்லும்போது அவனுக்கு இயல்பாய் வரும் கோவம் வந்தது. “என்ன போதும்? எது சிரமம், நான் ஒன்னும் என் பக்கத்து வீட்டுக்காரிக்கு இதெல்லாம் செய்யல..” – கோவத்தில் திரும்பிக் கொண்டான் ராகவ்.. தன் வலது கையால் அவன் முகத்தை மீண்டும் தன் பக்கம் திருப்பி, “கோவப் படாதடா… என்னை சுத்தி நடக்குற விஷயமெல்லாம் எனக்கு பைத்தியம் பிடிக்க வெக்குது. உன்னை பார்த்ததுல இருந்துதான் என் மனசுக்கு ஒரு விதமான தெம்பு கிடைச்சிது. இப்போ….(சில நொடிகள் பேசவில்லை..) ஸ்ஷ்… (லேசாக அழ தொடங்கினாள்) “எல்லா சடங்கையும் செய்யணும், இதுங்க ரெண்டும் சின்ன வயசுல பார்க்கக்கூடாததை எல்லாம் பார்கும்ங்க, அதெல்லாம் எதுக்கு செய்யுறோம்னு அர்த்தம் கேட்க்கும்ங்க, அதுக்கெல்லாம் பதில் சொல்லுற நிலைமையில நான் இருப்பேனானு தெரியலடா..” – ராகவின் தோள்களில் சாய்ந்தவாறு மெதுவாக அழுதுகொண்டே பேசினாள் சங்கீதா.. ஏன் ஏதாவது ஒலரிகிட்டே இருக்கே? – சற்று அதட்டலுடன் சொன்னான் ராகவ்…. “எல்லாருக்கும் சொல்லி அனுப்பனும் ஸ்ஷ்…” – அவளது கண்ணீர் ரகாவின் தோள்களை ஈரமாக்கியது.. “இன்னும் என்னென்ன செய்யணும்னு கூட தெரியாது.. கூடவே உனக்கும் நிறைய கஷ்டம் குடுக்குறேன்.. ஸ்ஷ்…” – ராகவ் பேசுவது எதையும் காதில் வாங்காமல் கண்களை மூடி பேசிக்கொண்டே இருந்தாள் சங்கீதா.. “நான் ஒரு விஷயம் சொல்லவா…?” “இஸ்ஷ்… சொல்லு..” – விசும்பலுடன் பேசினாள் சங்கீதா.. “உன் வாழ்க்கைல முக்கியமானவங்கன்னு சொன்னா, நான், அப்புறம் உன் மேல அக்கறை எடுத்துக்குற நிர்மலா அக்கா, உன் பசங்க, உன் தோழி ரம்யா, அப்புறம் உன்னை அக்காவா நினைக்கிற சஞ்சனா. இவங்களை தவிர வேற யாரும் உன் வாழ்க்கைல இனி தேவை இல்லைன்னு நான் நினைக்கிறேன்.” – ராகவ் இதை சொல்லும்போது மெளனமாக இருந்தாள் சங்கீதா…. “சாஸ்திரம் சம்ப்ரதாயம் சடங்குனு நமக்கு முன்னாடி இருந்தவங்க எல்லாம் செய்து இருக்காங்கன்னு சொல்லி நாமும் அந்த சாக்கடைல விழனும்னு அவசியம் இல்ல. தெரிஞ்சே உன் பசங்களுக்கும் உனக்கும் கஷ்டம் குடுக்குற ஒரு விஷயத்தை நீ செய்யனும்னு கட்டாயம் இல்ல. ஹாஸ்பிடல்ல சொல்லி நானே அடுத்து என்ன ஃப்பார்மாலிட்டி படி செய்யணுமோ அதை செய்ய சொல்லி சொல்லிடுறேன். திரும்பி காரியம் சடங்குன்னு சொல்லி கடுப்பேத்தாத….” – சங்கீதாவின் முகம் பார்த்து கோவம் கலந்த அக்கரையில் சொன்னான் ராகவ்..
“நா… நான் சொல்ல வந்தது..” – சங்கீதா ஏதோ சொல்ல வர ராகவ் நிறுத்தினான்.. “உன் வாழ்க்கைல ஏழு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விபத்து நடந்துடுச்சி.. ஐ மீன்.. தப்பான ஆள் கூட கல்யாணம் நடந்துடுச்சி. அது உன் சந்தர்ப்ப சூழ்நிலையால நடந்த விபத்து. அதன் விளைவா கடவுள் உனக்கு குடுத்தது ரெண்டு பொக்கிஷங்கள். அது உன் குழந்தைகள் ஸ்நேஹாவும், ரஞ்சித்தும்…. எவ்வளவோ நல்ல குணங்கள் இருக்குற ஆம்பளைங்களுக்கு கூட நல்ல பொண்டாட்டி அமையுறதில்ல, ஆனா எவ்வளவோ மனக்கசப்பு குடுத்தும் நீ ஒரு நல்ல மனைவியா குமாருக்கு இருந்திருக்கே. சீரியஸ்லி ஸ்பீக்கிங் நீ ஊரைக் கூட்டி ‘நான் துக்கத்துல இருக்கேன்’னு எதுக்கு சொல்லணும்?, அப்படி செய்துதான் ஆகணும்னு என்ன கட்டாயம்?” கோவமாக கேள்வி எழுப்பினான் ராகவ்….

No comments:

Post a Comment