Saturday, January 10, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 1


Thursday, 21 May 20094 Accused of Bombing Plot at Bronx Synagogues Four men were arrested Wednesday night in what the authorities said was a plot to bomb two synagogues in the Bronx and shoot down military planes at an Air National Guard base in Newburgh, N.Y.'

 வியாழன்ம், மே 21 2009 நியூ யார்க் டைம்ஸ் தினசரியில் வெளிவந்த ஒரு செய்தியின் சாரம் ப்ராங்க்ஸ் பகுதியில் இருக்கும் யூத மத ஆலயத்தை குண்டு வைத்து தகற்கவும் நியூபர்க் பகுதியில் இருக்கும் ஏர் நேஷனல் கார்ட் விமானத் தளத்தின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் திட்டமிட்ட நான்கு நபர்களை நேற்று இரவு எஃப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

The Last Meeting with Joshua Edwards Wednesday, 27 May 2009, 4:00 PM The Pearl Diner, Fletcher Street, Manhattan, New York, USA

 
ஜாஷ்வா எட்வர்ட்ஸுடன் இறுதி சந்திப்பு புதன், மே 27 2009, மாலை 4 மணி

நியூ நகரத்தின் மன்ஹாட்டன் பகுதியின் ஃப்ளெட்சர் வீதியில் இருக்கும் பர்ல் டைனர் என்னும் ரெஸ்டாரண்ட் காலையிலும் இரவிலும் உட்கார இடமில்லாமல் கூட்டம் நிரம்பி வழியும் அந்த உணவகம் அன்று அந்த இளமாலை வேளையில் பாதியளவே நிரம்பி இருந்தது.

ஆள் நடமாட்டமற்ற ஒரு மூலையில் அருகருகே இருவரும் அவர்களுக்கு எதிரே ஒருவனுமாக அந்த மூன்று இளைஞர்கள் அமர்ந்து இருந்தனர். பார்ப்பவர் கண்களுக்கு அம்மூவரும் இருபத்து ஐந்து வயதிலிருந்து முப்பதுக்குள் இருப்பார்கள் என்பதை தவிர உருவ ஒற்றுமை மருந்துக்கும் இல்லை. அருகருகே அமர்ந்து இருந்தவர்கள் இருவரும் இந்திய உபகண்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் எதிரே இருந்தவன் ஆஃப்ரிக்கன்-அமெரிக்கன் எனும் கருப்பர் இனத்தவன் என்றும் எளிதாக கணிக்கலாம்.

மூவரும் மென்பொருள் வித்தகர்கள். மூவரும் அவரவர் நாட்டின் தலை சிறந்த கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்து பட்டம் பெற்றவர்கள். மூவருக்கும் மென்பொருள் எழுதுவதும் அல்காரிதங்களை ஆராய்வதும் சுவாசிக்கும் காற்றைப் போல உயிர் வாழ ஒரு முக்கிய தேவை. அவர்கள் காலை முதல் மாலை வரை சம்பளத்துக்கு செய்யும் மென்பொருள் வேலையை தவிர ஓய்வு நேரங்களிலும் தூங்காமல் பல இரவுகளிலும் செய்யும் வேறு ஒரு மென்பொருள் வேலையே அவர்களை இங்கு ஒன்று சேர்த்து இருக்கிறது.

 அருகருகே இருந்தவர்களில் ஜன்னலருகே அமர்ந்து வீதியில் போக வரும் பெண்களை அடிக்கடி நோட்டம் விட்டபடி இருந்தவன் நித்தின் தேஷ்பாண்டே. ஐந்து அடி பத்து அங்குல உயரம். கோதுமை நிறம். முழுவதும் மழிக்கப் பட்ட சிறிதே பெண்மை கலந்த பல பெண்களை கவரும் அழகான முகம். பிறந்தது மும்பை. பள்ளிப் படிப்பு பத்தாவது வரை மும்பையில்; ப்ளஸ் டூ படித்தது புனாவுக்கு அருகே பஞ்சகனி என்னும் இடத்தில் இருக்கும் ஒரு உயர்தர போர்டிங்க் ஸ்கூலில்; பிறகு ஐ.ஐ.டி மும்பையில் பி.டெக் முடித்து மூன்று வருட அனுபவத்திற்கு பிறகு இப்போது சீனியர் சாஃப்ட்வேர் எஞ்சினியர். கணிப்பொறியை தவிர காரோட்டுவதிலும் கில்லாடி.

 அடுத்து அமர்ந்து எதிரில் இருப்பவனை தீர்க்கமாக பார்த்தபடி உரையாடலில் உன்னிப்பாக கவனம் செலுத்தி இருந்தவன் சக்திவேல் முத்துசாமி. ஆறடி இரண்டு அங்குல உயரம். மேக்கப் இல்லாத ரஜனி காந்த் நிறம். மீசையை தவிர மழித்த முகம். அவன் உடலமைப்பு குறிப்பிடத்தக்கது. ரவி வர்மா தனது ஓவியங்களில் வெவ்வேறு தேவர்களையும் வீரர்களையும் சித்தரித்து இருக்கிறார். ஆனால் அவர் தனது ஓவியங்களில் ஆஞ்சனேயருக்கு கொடுத்து இருக்கும் உடலமைப்பு வேறு எவருக்கும் கொடுக்கவில்லை. உடலின் வலிமையையும் தேவையானால் வில்லாய் வளையும் தன்மையையும் கணத்தில் காற்று வேகத்தில் செயல்படும் திறனையும் பறைசாற்றும், ஆஜானுபாகு என்பதற்கு முழுமையான உதாரணமான உடலமைப்பு.

சக்திவேலின் உடலமைப்பை எளிதில் அதற்கு ஒப்பிடலாம். பிறந்து பள்ளி படிப்பு முடியும் வரை ஈரோடு. பிறகு சென்னையின் பழைய பெயரை இன்னமும் தக்க வைத்துக் கொண்டு இருக்கும் ஐ.ஐ.டி மெட்ராஸில் பி.டெக். விளையாட்டு வீரர்கள் படிப்பில் மட்டம் என்ற பொதுவான கருத்தை பொய்யாக்கியவர்களில் ஒருவன். அவனும் இப்போது ஒரு சீனியர் சாஃப்ட்வேர் எஞ்சினியர்.

 எதிரில் இருந்தவன் ஜாஷ்வா எட்வர்ட்ஸ். தலைமுடியும் ஓரளவு அவனது தோலின் நிறமும் மட்டுமே அவனை கருப்பர் இனமென்று காட்டின. அவனது வசீகரமான முகவடிவும் கருப்பர்களுக்கு இல்லாத மெலிந்த உதடுகளும் சிரித்தால் பளீரிடும் பல் வரிசையும் ஹாலிவுட் நடிகர் டென்ஸில் வாஷிங்க்டனை நினைவு படுத்தின. பிறந்தது நியூயார்க் நகரத்தின் Black Ghetto என்று அழைக்கப் படும் ஹார்லம் பகுதியில்.

போதை பொருளுக்கு அடிமையான தாயால் தந்தை பெயர் தெரியாத அவனை வளர்க்க இயலாது என்று அரசாங்கம் எடுத்த முடிவால் பல ஃபாஸ்டர் இல்லங்களில் (சிறுவர் பாதுகாப்பு இல்லங்களில்) வளர்ந்தும் உலகின் தலை சிறந்த பொறியியல் கல்லூரிகளின் ஒன்றான எம்.ஐ.டியில் கம்ப்யூட்டர் சைன்ஸில் இடம் பிடித்து படித்தபின் உலகெங்கும் வெவ்வேறு வாய்ப்புகள் இருந்தும் தன் பிறப்பிடமான ஹார்லத்திற்கே திரும்பி வந்து குடியேறியவன்.

அவனுக்கு அப்பகுதியில் அவன் வயதை ஒட்டிய அவனைப் போன்ற வரலாறு கொண்ட பல சகோதரர்கள் உண்டு. அமெரிக்க வங்கிகளில் ஒன்றில் டேட்டா பேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர். அவன் படிப்புக்கு அந்த வேலைதானா என்று கேட்பவருக்கு புன்சிரிப்பு மட்டுமே பதிலாக கிடைக்கும். வரும் சம்பளத்தை விட அவன் செய்யும் மற்றோர் வேலையும் அந்த வேலையில் கிடைக்கும் பண வரவுமே இவ்வேலையில் அவன் இது வரை இருப்பதற்கு முக்கிய காரணங்கள்.

இனி அவர்கள் உரையாடலில் கவனம் செலுத்துவோம்.

 ஜாஷ்வா: "உங்க ரெண்டு பேரோட ஃப்ளாட்ஸ் சுத்தமா காலி பண்ணீட்டீங்களா?"

 நித்தின்: "எஸ். ஒரு துரும்பு கூட விடாம தொடைச்சு விட்டுட்டு வந்தோம்"

 ஜாஷ்வா: "இப்ப தங்கி இருக்கற ஹோட்டல் ரூம் எப்படி இருக்கு?"

 சக்திவேல்: "ரூம் ஓ.கே .. பட் இன்னும் ரெண்டு நாள்ல எப்படியும் இந்தியா திரும்பறோம். அப்படி இருக்கும் போது எதுக்கு இந்த ஏற்பாடு?"

 ஜாஷ்வா: "ஒரு முன் ஜாக்கிரைதான். அப்பறம் அந்த கார் மேட்டர்?"

 நித்தின்: "ரெண்டையும் ரிடர்ன் பண்ணிட்டு வேற ஒரு ரெண்டல் கம்பெனில இருந்து ஒரு கார் எடுத்து இருக்கோம். ரெண்டு பேரும் ஒண்ணுலதான் போறோம். இப்ப எல்லாம் எங்க போனாலும் நான் முன்னாடி போயிட்டு மெதுவா ஒட்டிட்டு வர்ற இவனுக்காக வெய்ட் பண்ண வேண்டியது இல்லை. அதைத் தவிர ஒரு உபயோகமும் இல்லை. இந்த முன் ஜாக்கிரதை கொஞ்சம் ஓவரா இல்லை?"

 ஜாஷ்வா: "உனக்கு ஒரு கதை தெரியுமா? மார்கரேட் தாச்சர் பிரதமரா (PM) இருந்தப்ப ஐ.ஆர்.ஏ தீவிரவாத இயக்கம் அவரை குண்டு வெச்சு கொல்லப் பாத்துது. பிரிட்டிஷ் போலீஸாரோட முன் ஜாக்கிரதைனால மயிரிழையில தப்பிச்சாங்க. அப்ப ஒரு சீக்ரெட் ப்ரெஸ் ரிலீஸில் அந்த ஐ.ஆர்.ஏ சீஃப் என்ன சொன்னான் தெரியுமா?

'நாங்க அவரை கொல்ல நூறு முறை முயற்சி செய்து அதில் ஒரு முயற்சியில் வெற்றி அடைந்தால் எங்கள் குறிக்கோள் நிறைவேறிடும். ஆனால், போலீஸார் அவரை காப்பாத்துகின்ற நூறு முயற்சியிலும் வெற்றி அடைந்தால்தான் அவர்கள் குறிக்கோள் நிறைவேறும்'. டெரரிஸ்ட்டுங்க விஷயத்துல எப்பவுமே கொஞ்சம் அதிக முன் ஜாக்கிரதை தேவை"

 சக்திவேல்: "சரி, நம்மை எஃப்.பி.ஐ காரங்க சந்தேகப் பட வாய்ப்பு இருக்கா?" 

ஜாஷ்வா: "அந்த டெரரிஸ்ட்டுகளுக்கு பணம் எங்கே இருந்தோ கிடைச்சு இருக்குன்னு எஃப்.பி.ஐக்கு தெரியும். ஆனா அது அந்த ஷிப்பிங்க் கம்பெனி வழியா நாம் பண்ணின ட்ரான்ஸ்ஃப்ர மூலம்னு சந்தேக பட வாய்ப்பு இல்லை. Come On, have faith in our expertise! (நம் திறமை மேல கொஞ்சம் நம்பிக்கை வை). அப்படியே அந்த ட்ரான்ஸ்ஃபரை லொக்கேட் பண்ணினாலும் எப்படி அந்த ட்ரான்ஸ்ஃப்ர் நடந்துதுன்னு புரியறதுக்கு பல வருஷங்கள் ஆகும்"

 சக்திவேல்: "ஆனா நம்மை ஏமாத்தி அந்த ட்ரான்ஸ்ஃபர் பண்ண வெச்சதை இப்ப நினைச்சாலும் பத்திகிட்டு வருது"

 ஜாஷ்வா: "எனக்கு மட்டும் சந்தோஷமா இருக்கா? நடந்தது நடந்துடுச்சு விடு" 

நித்தின்: "அப்பறம் ஏன் எங்களை அவசரமா வரச்சொன்னே. எப்படியும் நாளைக்கு டின்னருக்கு மீட் பண்ணறதா இருந்தோமே?"

 சக்திவேல்: "ஆமா, மத்தியானம் கூட சஞ்சனா என்னை ஃபோன்ல கூப்பிட்டு எந்த மாதிரி சாப்பாடு வேணும்னு பேசிட்டு இருந்தாளே?"

 ஜாஷ்வா: "அதில ஒரு மாற்றம். நாளைக்கு ஆண்டர்ஸன் நம்மை மீட் பண்ண ஹாஃப்மன் மூலமா சொல்லி அனுப்பி இருக்கான். நைட்டு பத்து மணிக்கு. யூஷுவல் ஸ்பாட். இதை பத்தி சஞ்சனா கிட்ட நான் இன்னும் சொல்லலை" 

சக்திவேல்: "எதுக்கு மீட் பண்ணனுமாம்?"

 ஜாஷ்வா: "கடைசியா பண்ணின மூணு ட்ரான்ஸ்ஃபரும் டெரரிஸ்ட் கும்பலுக்குன்னு ஆண்டர்ஸனுக்கும் தெரியாதாம். கொலம்பியன் ட்ரக் கார்டல்காரங்கதான் பண்ண சொன்னதா நம்பினானாம். இப்ப அவனும் எங்கே எஃப்.பி.ஐ காரங்க ட்ரேஸ் பண்ணிடுவாங்களோன்னு பயந்து இருக்கானாம். நாம் என்ன ப்ரிகாஷன் எடுத்துக்கறதுன்னு டிஸ்கஸ் பண்ண வர சொல்லி இருக்கான்"

 சக்திவேல்: "எப்படியும் நாங்க நாளன்னைக்கு இந்தியா திரும்பறோம். நீயும் அடுத்த வாரம் பஹாமாஸுக்கு போறே. அப்படி மாட்டினா அவங்க ரெண்டு பேரும்தான் மாட்டணும். இதுல நாம் என்ன ப்ரிகாஷன் எடுக்கறது?"

 ஜாஷ்வா: "அவன் அப்படி சொன்னதுனால எனக்கு கொஞ்சம் சந்தேகம். அதனால தான் உங்ககிட்ட நேரில் பேச வரச் சொன்னேன். இல்லைன்னா எப்பவும் போல தகவல் கொடுத்து இருப்பேன்" 

சக்திவேல்: "என்ன சந்தேகம்?" ஜாஷ்வா: "அவன் நம்மை சந்தேகப் படறானோ அப்படிங்கறது ஒரு சந்தேகம். இன்னோரு சந்தேகமும் இருக்கு அதை நான் கடைசியா சொல்றேன்"

 நித்தின்: "என்ன ரொம்ப புதிர் போடறே? சரி உன் முதல் சந்தேகத்துக்கு வருவோம். நம்மை எதுக்கு அவங்க சந்தேகப் படணும்? நாம் தான் சொன்ன ட்ரான்ஸ்ஃப்ர எல்லாம் முடிச்சு கொடுத்துட்டமே?"

 ஜாஷ்வா: "அந்த டெரரிஸ்ட் கும்பலுக்கு பண்ணின மூணு ட்ரான்ஸ்ஃபர்ல ரெண்டு தான் அவங்க கைக்கு போய் சேந்துது"

 சக்திவேல்: "என்ன சொல்றே? புரியலே"

 
ஜாஷ்வா: "உங்ககிட்ட சொல்லாம நான் ஒரு சின்ன வேலை பண்ணினேன்" என்றவன் எதிரில் இருந்த இருவரும் கூர்ந்து பார்ப்பதைக் கண்டு சரணடைவது போல் கைகளை உயர்த்தி "டோன்ட் வொர்ரி, நம்ம நல்லதுக்குதான்"

 நித்தின்: "என்ன வேலை?"

 ஜாஷ்வா: "லாஸ்ட் லெக்ல அவங்க சொன்ன அக்கௌண்டுக்கு உங்களை நான் ட்ரான்ஸ்ஃபர் பண்ண சொல்லலை. நம்ம அக்கௌண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ண சொன்னேன்" 

சக்திவேல்: "நம்ம அக்கௌண்டா? என்னடா சொல்றே?" ஜாஷ்வா தன் ஜாக்கெட் பாக்கெட்டில் இருந்து ஒரு கவரை எடுத்து டேபிளில் மேல் போட்ட பிறகு தொடர்ந்தான், "கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் பணத்தை எல்லாம் எப்படி நான் இங்க இருந்து பஹாமாஸுக்கு கொண்டு போறதுன்னு யோசிச்சப்ப என் கஸின் ஒருத்தன் பேர்ல ஒரு நம்பர் அக்கௌண்ட் ஓபன் பண்ணினேன். ஆனா அதுக்கு அப்பறம் அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஃப்ஸர் (ஹவாலா போன்ற பண மாற்றம்) முலம் கொண்டு போறதுன்னு முடிவு பண்ணினேன்.

அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஃப்ஸர் மூலம் பணம் அனுப்பறதுக்கு இந்த அக்கௌண்ட் தேவை இல்லை. இருந்தாலும் எதுக்கும் இருக்கட்டும்னு இதை க்ளோஸ் பண்ணலை. அக்கௌண்ட் ஓபன் பண்ணறதுக்காக ஆயிரம் டாலர் போட்டதோடு சரி. அதுக்கு அப்பறம் அக்கௌண்டை ஆபரேட் பண்ணலை. (அதிலிருந்து பணம் எடுக்கவோ போடவோ செய்ய வில்லை).

அந்த டெரரிஸ்ட் கும்பல் பிடிபட்ட நியூஸ் வந்த உடனே அவங்களுக்கு நாம் பண்ணின முதல் ரெண்டு ட்ரான்ஸ்ஃபர் மூலம்தான் பணம் கிடைச்சு இருக்குன்னு எனக்கு தெரிய வந்துது. மூணாவுது பெரிய ட்ரான்ஸ்ஃபர். பத்து மில்லியன் (ஒரு கோடி).

வேற எதோ பெரிய வேலைக்குன்னு நினைக்கிறேன். நம்மை ஏமாத்தினதுக்கு தண்டனையா அவனுக அக்கௌண்ட்டுக்கு பதிலா இந்த அக்கௌண்ட் நம்பரை உங்க கிட்ட கொடுத்தேன். எப்பவும் போல 10-30-30-30 ரேஷியோல (விகிதத்தில்) நாம் பங்கு போட்டுக்கலாம்னு இருந்தேன்.

உங்க ஷேரை செண்ட் ஆஃப் பண்ண வரும்போது ஒரு சர்ப்ரைஸ் கிஃப்டா கொடுக்கலாம்னு இருந்தேன்" என்று புன்முறுவலிட்டான்.நித்தின் முகம் வெளிறி அமர்ந்து இருந்தான்.

தான் எதற்கும் அதிர்ச்சி அடையாதவன் என்று நிரூபிப்பதைப் போல் சக்திவேல் உதட்டை சுழித்து சிரித்த படி, "உனக்குதான் இப்படி எல்லாம் தோணும் .. நாம்தான் இந்த ஒரு வருஷத்துல வேணுங்கற அளவு சம்பாதிச்சுட்டமே. எதுல விளையாடறதுன்னு இல்லையா?"

 ஜாஷ்வா: "நம்ம சம்பாதிச்சதுக்கு மேல இன்னும் ஆளுக்கு மூணு மில்லியன் டாலர்னா கசக்குதா?"

 நித்தின்: "கசக்கலைதான் .. டேய், சக்தி, நாமும் இந்தியா திரும்பி போறதுக்கு பதிலா இவன் கூட பஹாமாஸ் போய் செட்டில் ஆயிடலாமா?"

 சக்திவேல்: "சும்மா இருடா... ஏன் ஜாஷ்? இப்ப அவங்க கைக்கு பணம் போகலைன்னு தெரியாம இருக்குமா?"

 ஜாஷ்வா: "என்னோட லாஜிக்கை கொஞ்சம் கேளு. அந்த நாலு பேர் அரெஸ்ட் ஆனதுக்கு அப்பறம் டெரரிஸ்ட் கும்பலில் யாரும் பேங்க் பக்கம் கொஞ்ச நாள் போக மாட்டாங்க. ஏன்னா எஃப்.பி.ஐ யாரெல்லாம் கேஷ் (பணம்) எடுக்கறாங்கன்னு கண்காணிக்கும். சந்தேகப் படற மாதிரி யார் பணம் எடுத்தாலும் உடனே வந்து கொத்திட்டு போயிடுவாங்க. அவனுகளுக்கும் அது தெரியும். ஹாஃப்மன் பணம் போய் சேந்துச்சான்னு பாக்கணும்னா சிஸ்டத்துல லாக் இன் பண்ணி பணம் போய் சேர வேண்டிய அக்கௌண்ட் நம்பரை கொடுத்து கொயரி பண்ணனும்.

அதுக்கு அவனுக்கு ரைட்ஸ் (கணிணி அல்லது இணையத்தை உபயோகிப்போருக்கு வழங்கப் படும் தகுதி அல்லது உரிமை) இருக்கு. இருந்தாலும் சிஸ்டத்துல லாக் இன் (log in) பண்ணற ஒவ்வொருத்தரும் என்ன பண்ணினாங்கன்னு ஒரு ஆடிட் ட்ரெயில் (நடக்கும் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்வதற்கு உதவ கணிணியில் பதிக்கப் படும் ஏடு) ரெக்கார்ட் ஆயிட்டு இருக்கு. அது அவனுக்கு தெரியும்.

அதை பாத்தா ஹாஃப்மன் எந்த அக்கௌண்டை கொயரி பண்ணினான்னு தெரிஞ்சு அவன் மேல சந்தேகம் வரும். அப்படி ஒரு தடயம் வரக் கூடாதுங்கற காரணத்தினால அவன் எப்பவும் பாக்க மாட்டான். ஆண்டர்ஸனுக்கு பணம் போய் சேந்துதான்னு பார்ட்டியோ இல்லை ஹாஃப்மனோ சொன்னாதான் உண்டு. அப்படி இருக்கும் போது இவங்க ரெண்டு பேருக்கும் நான் பண்ணின அக்கௌண்ட் மாறாட்டம் தெரிய போறதில்லைன்னு கான்ஃபிடெண்டா இருந்தேன்.

இப்ப கூட அவங்களுக்கு தெரிஞ்சு இருக்குமாங்கறது ஒரு சந்தேகம்தான்" 

நித்தின்: "சரி, இப்ப தெரிஞ்சு போச்சுன்னு வெச்சுக்குவோம். அவ்வளவு பணம் போனா சும்மா விடுவாங்களா?"

 சக்திவேல்: "பணம் எங்க போச்சு இன்னும் நம்ம கைல தான இருக்கு. எதாவுது சொல்லி அந்த அக்கௌண்டை அவங்க கிட்ட கொடுத்துடணும். எனிவே அவங்களுக்கு நம்ம கூட இனி எந்த பிஸினஸும் இல்லை. தே ஷுட் நாட் மைண்ட்"

 நித்தின்: "அவங்களை ஏமாத்த பாத்து இருக்கோம்னு தெரிஞ்சா? இதுக்கு முன்னாடி அப்படி பண்ணி இருப்போமோன்னு வீணா சந்தேகப் படுவாங்க"

 சக்திவேல்: "ஹலோ! இது வரைக்கும் நம்ம பண்ணின ட்ரான்ஸ்ஃபர் எல்லாம் கொலம்பியன் ட்ரக் கார்டல் காரங்களுக்கு. அவனுக இந்த டெரரிஸ்ட்டுகளை விட ரொம்ப சாமர்த்திய சாலிங்க. ஒரு ட்ரான்ஸ்ஃபர் ஒழுங்கா போலைன்னாலும் உடனே அவங்களுக்கு தெரிஞ்சுடும். அது ஆண்டர்ஸனுக்கும் ஹாஃப்மனுக்கும் தெரியும். அதனால இதுவரைக்கும் அப்படி ஆகி இருக்கும்னு சந்தெகப் படறதுக்கு சான்ஸே இல்லை"

 நித்தின்: "சரி, இப்ப நீ அவங்க கிட்ட என்ன சொல்லி சமாளிக்க போறே ஜாஷ்வா?"

 ஜாஷ்வா: "கவலையே படாதே. இந்த ட்ரான்ஸ்ஃபர் பண்ணும் போது பாதியில் ஹாஃப்மன் எதாவுது வெரிஃபை பண்ணினான்னா என்ன பண்ணறதுன்னு நான் ஒரு சின்ன அலிபி (பொய்யான ஆதாரம்) க்ரியேட் பண்ணினேன். அதை இப்ப காரணமா காமிக்க போறேன்"

 சக்திவேல்: "என்ன அலிபி?"

 ஜாஷ்வா: "பாதில வந்து சொன்ன அக்கௌண்டுக்கு பதிலா ஏன் வேற அக்கௌண்டுக்கு பணம் போகுதுன்னு கேட்டான்னா? நீ சொன்ன அக்கௌண்ட்ல பிரச்சனை அதனால உபயோகிக்காம இருக்கற என்னோட அக்கௌண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணறேன். அவங்களுக்கு இந்த அக்கௌண்ட்டை கொடுத்துடுன்னு சொல்லலாம்னு இருந்தேன். அவங்க சொன்ன அக்கௌண்ட்டில நானே ஒரு ப்ராப்ளத்தையும் உண்டு பண்ணினேன்"

நித்தின் (சிரித்தபடி): "என்ன அந்த அக்கௌண்ட்டை ப்ளாக் (block) பண்ண சொல்லி எஃப்.பி.ஐ அனுப்பின மாதிரி ஒரு மொட்டை கடுதாசி அனானிமஸ் மெயில் அனுப்பினயா?"

 ஜாஷ்வா: "எஸ். பரவால்லை நான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி சொன்னதை இன்னும் ஞாபகம் வெச்சுட்டு இருக்கே. என்.எஸ்.ஏ (National Security Agency) அனுப்பின மாதிரி ஒரு ஸ்பூஃப் மெயில் (ஏமாற்று மெயில்) ஃபினான்ஷியல் செக்யூரிடி செல்லுக்கு அனுப்பினேன். எதிர் பாத்த மாதிரி உடனே அவங்க ஒரு டெம்பரரி ப்ளாக் (temporary block) போட்டாங்க. அதை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து வெச்சுகிட்டேன்.

அதுக்கு அப்பறம் தான் என்னோட அக்கௌண்ட் நம்பரை உங்களுக்கு சொன்னேன். நாளைக்கு அவங்க சந்தேகப் பட்டு கேட்டா அதே காரணத்தை சொல்லி இந்த கவரை கொடுத்துடப் போறேன். பதட்டத்தில உனக்கு கொடுக்க மறந்துட்டேன்னு சொல்ல போறேன்.

 நித்தின்:: "இப்ப அந்த டெரரிஸ்ட்டுகளோட அக்கௌண்ட் ப்ளாக் (block) ஆகி இருக்கா?"

 ஜாஷ்வா: "ம்ம்ஹூம் .. அரை மணி நேரத்துல ப்ளாக் (block) லிஃப்ட் பண்ணிட்டாங்க. என்னோட ஈமெயில் ஸ்பூஃப் மெயில்னு தெரிஞ்சு இருக்கும். இருந்தாலும் அந்த அக்கௌண்டை அடுத்த ராண்டம் ஆடிட் சைக்கிளில் (Random Audit Cycle) ஆடிட் பண்ண சொல்லி ஃப்ளாக் (flag) பண்ணி வெச்சு இருப்பாங்க. அதனால ஹாஃப்மன் நிச்சயம் நான் பண்ணின காரியத்தை பாராட்டுவான். இல்லைன்னா, அவன் அந்த அக்கௌண்ட்டை அடுத்த சைக்கிள்ல ஆடிட் பண்ணும் போது நாம் பண்ணின ட்ரான்ஸ்ஃபர் விஷயம் வெளில வரும். ஃப்ளாக் (flag) பண்ணின அக்கௌண்டை ஆடிட் பண்ணாம ஸ்கிப் பண்ணவும் முடியாது"

 சக்திவேல்: "சரி, நீ அக்கௌண்ட் நம்பர் சொல்ல மறந்துட்டேன்னா அதை அந்த டெரரிஸ்ட்டுகள் நம்புவானுகளா?"

ஜாஷ்வா: "டெரரிஸ்ட்டுங்க நம்பறது சந்தேகம். ஹாஃப்மனும் ஆண்டர்ஸனும் வேற அக்கௌண்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணின காரணத்தை நிச்சயம் நம்புவாங்க. அதுக்கப்பறம் நான் மறந்துட்டேன்னு சொல்றதை நம்ப மாட்டாங்க. சான்ஸ் கிடைச்சுது சுருட்ட பாத்தேன். சுருட்ட முடியலை இப்ப திருப்பி கொடுக்கறேன்னு சொல்லிட்டு வரப் போறேன். அவனுக ஒண்ணும் பெரிய உத்தமனுக இல்லை. இந்த மாதிரி ஒரு சான்ஸ் கிடைச்சு இருந்தா பணத்தை எடுத்துட்டு கண் காணத ஊருக்கு போயிருப்பானுக. சோ, பேசாம வாங்கிக்கு வாங்க"

 நித்தின்: "அவங்க பேசாம வாங்கிக்குவாங்க. ஆனா அந்த டெரரிஸ்ட் கும்பல் பேசாம வாங்கிக்குவாங்களா?"

 ஜாஷ்வா: "இந்த மாதிரி ஒரு வேலையை ட்ரக் கார்ட்டல்காரங்ககிட்ட பண்ணி இருந்தா சான்ஸே இல்லை. அவங்க கிட்ட யாரும் வாலாட்டாம இருக்க மத்தவங்களுக்கு ஒரு பாடமா நம்மை எல்லாரையும் I mean including Anderson and Hoffman தீத்துக் கட்டிடுவாங்க. ஏன்னா அவனுக இங்க இன்னும் தொடர்ந்து பிஸினஸ் பண்ணனும். ஆனா தீவிர வாத கும்பல் அப்படி இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். எனி ஹவ், நாளைக்கு மீட்டிங்குக்கு தீவிர வாத கும்பல்காரங்க யாரும் வரமாட்டாங்க. அவனுக நேரடியா ஆண்டர்ஸனை காண்டாக்ட் பண்ணி இருக்க மாட்டாங்க. யாரோ ஒரு இண்டர்மீடியரி (இடையீட்டாளர் அல்லது பிரதிநிதி) மூலம்தான் காண்டாக்ட் பண்ணி இருப்பாங்க. பணம் ட்ரான்ஸ்ஃபர் ஆகலைங்கற விஷயத்தை நம்ம கிட்ட விசாரிச்ச அப்பறம் தான் ஆண்டர்ஸன் அவங்க கிட்ட சொல்லுவான்.

அப்படியும் நான் சுருட்ட பாத்தேன்னு என்னை போட்டு கொடுக்க மாட்டான். அப்படி போட்டு கொடுத்தா அவங்க ரெண்டு பேர் மேலயும் சந்தேகம் வரும். நாம் எப்பவும் சொல்ற மாதிரி ட்ரான்ஸ்ஃபருக்கு 100% உத்திரவாதம் இல்லை நடுவுல எதாவுது பிரச்சனை வந்தாலும் வரலாம்னு டெரரிஸ்ட்டுகள் கிட்டயும் ஆண்டர்ஸன் முதல்லயே சொல்லி இருப்பான். சோ, சமாளிச்சுடலாம்"

 
நித்தின்: "என்ன கைக்கு வந்தது வாய்க்கு வரலையேன்னு இருக்கு .. " 

ஜாஷ்வா: "நம்ம பண்ற விஷயத்துல பேராசை கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்லை?"

 சக்திவேல்: "சரி, நாளைக்கு அந்த மீட்டிங்குக்கு எப்பவும் போல நாம் ஒண்ணாதானே போறோம்? மீட்டிங்குக்கு முன்னால் எங்க மீட் பண்ணறது?" என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போது ஒரு கருப்பர் இனத்தவன் அவர்களின் டேபிளுக்கு வந்து ஜாஷ்வாவின் அருகே "யோ ப்ரோ" என்றவாறு அமர்ந்தான்.

பிறகு "ஃபுல்லி லோடட். எக்ஸ்ட்ரா ரெண்டு கார்ட்ரிட்ஜ் மேகஸீன் வெச்சு இருக்கேன்" என்றபடி சிறிது கனமான ஒரு பழுப்பு நிற கவரை ஜாஷ்வாவிடம் கொடுத்து விட்டு விடை பெற்றான். எதிரில் இருந்த இருவரும் அந்த கவரைப் பார்த்தபடி இருந்தனர்.


No comments:

Post a Comment