Saturday, January 31, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 22


தீபா, "ஹே நித்தின். எங்களோட அசைன்மெண்டில் ஒரு ரொம்ப சாலஞ்சிங்க்கான வேலை இருக்கு. நீ ஒரு மூணு மாசம் வந்து ஹெல்ப் பண்ண முடியுமா? என்னால மேற்கொண்டு விவரம் கொடுக்க முடியாது. ஆனா, நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணவும் மாட்டேன். எதுவும் கேட்கமாட்டேன். Can you? Just give me a short answer" நித்தின், "No" தீபா, "Long answer?" நித்தின், "Noooooooooooooooooooooooooooooooooooo" தீபா, "நாயே, பேயே, பன்னி ... எனக்கென்ன? உன் கல்யாணம்தான் டிலே ஆகப் போகுது" நித்தின், "உன் கல்யாணம் நடக்கறப்ப என் கல்யாணம் நடந்தா போதும்" என்றபடி நித்தின் லாக் ஆஃப் செய்தான்.அடுத்த நாளில் இருந்து அவர்களது மூன்றாவது கட்ட வேலைகளை தொடங்கினர். குழுவில் இருந்தவர் அனைவரையும் ஊக்குவித்து ஒவ்வொரு நாளிலும் ஒரு சுற்றை முடித்தே ஆகவேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து வந்தனா செயல் பட்டாள். தீபா, ஒன்று இரண்டு மணி நேரம் அவர்களுடன் செலவிட்ட பிறகு மேலும் மாங்க்ஸ் பாட் நெட்டை ஆராயத் தொடங்கினாள். நூறு கணிணிகளில் இருந்த வைரஸ்களும் தங்களை தானே அழித்துக் கொண்டு இருந்தன. அழி படுவதற்கு முன் ஒரு கணிணியில் மொத்த ஹார்ட் டிஸ்க்கையும் ஒரு பிம்பமாக எடுத்து ஸ்டோர் செய்து வைத்து இருந்தாள். வைரஸ் அழிபட்ட பிறகு என்னன்ன மாற்றங்கள் நடந்து இருக்கின்றன என்று ஸ்டோர் செய்து வைத்து இருந்த பிம்பத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தாள்.
தீபா, "யூரேகா! வந்தனா, இங்க வா ஒண்ணு காமிக்கறேன்" வந்தனா, "என்ன?" தீபா, "அவங்க வைரஸ்ஸில் ஹோமோஃபோனிக் சைஃபர் உபயோகிச்சு இருக்கறது உறுதியாயிடுச்சு" வந்தனா, "எப்படி?" தீபா, "இங்கே பார் இது வைரஸ் அழிபடறதுக்கு முன் எடுத்த டிஸ்க் இமேஜ். இதில் இந்த ஜெபெக் ஃபைலின் (JPG File)ஐ அளவைப் பார். 436 KB! இப்ப இதைப் பார் வைரஸ் தன்னை தானே அழிச்சதுக்கு அப்பறம். அதோட அளவு வெறும் 56KB. என்னோட லாப்டாப்பில் வைரஸ் இல்லை. அதிலும் 56KB தான்" வந்தனா, "அதனால?" தீபா, "வைரஸ்ஸின் ஒரு பகுதி இந்த ஃபைலுக்குள் ஸ்டோர் ஆகி இருக்கு. வைரஸ் இயங்கும் போது அதை எடுத்துக்குது" வந்தனா, "ஹே அது விண்டோஸ் எக்ஸ் பி (Windows XP) வால் பேப்பர் இல்லையா? ஒழுங்கா டிஸ்ப்ளே ஆகுதா?" தீபா, "அதெல்லாம் பர்ஃபெக்டா டிஸ்ப்ளே ஆகுது. அந்த படத்துக்கு ஒண்ணும் ஆகறது இல்லை. இவங்க அதிகப் படியா ஸ்டோர் செஞ்சு இருப்பதை படத்தில் இருக்கும் வெற்று இடம்ன்னு நினைச்சுட்டு விண்டோஸ் அதை காண்பிக்கறது இல்லை. இந்த முறையில் ஸ்டோர் செய்யறதை Steganography அப்படிம்பாங்க. ஆனா, அதை மங்க்ஸ் வைரஸ்ஸுடன் உபயோகிச்சு இருக்கும் முறை நிஜமா அமேஸிங்க். இது தெரிஞ்சா யாருமே கண்டு பிடிக்க முடியாத மாதிரி தகவல்களை அனுப்பலாம். பார்க்கறவங்களுக்கு ஒரு ஃபோட்டோதான் தெரியும். தகுந்த மென்பொருளை வெச்சு அதில் இருக்கும் தகவலை தெரிஞ்சுக்கலாம்" வந்தனா, "மை காட். இவனுக சரியான கில்லாடிகளா இருப்பாங்க மாதிரி இருக்கு. ஆனா தீபா, இதை யார்கிட்டயும் சொல்லாதே. தெரிஞ்சா, க்ரிஸ் இன்னும் சீக்கரம் மாங்க்ஸ் பாட் நெட்டை கைப் பற்றணும்ன்னு மேலயும் கீழயும் குதிப்பான். கடைசியில் சொல்லலாம்" " தீபா, "உண்மையில் அவங்க எப்படி இருப்பாங்கன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ரொம்ப ஆர்வமா இருக்கு" வந்தனா, "யாரு?" தீபா, "ஹார்ஷ்7, கில்9, மோர்லா அந்த மூணு பேரும்"Friday, 27 March 2009, 8:30 PM வெள்ளி, மார்ச் 27, 2009, மாலை 8:30 கடந்த வாரம் முழுவதும் ஜாஷ்வா விடுமுறை எடுத்து பஹாமாஸ்ஸுக்கு சஞ்சனாவுடன் சென்று இருந்தான். அடுத்த நாளில் இருந்து ஒரு ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் நடக்கவிருந்தது. நண்பர்கள் மூவரும் சஞ்சனாவுடன் டின்னருக்கு சென்று இருந்தனர். சக்தி, "என்ன சஞ்சனா? எப்படி இருந்துது பஹாமாஸ்?" சஞ்சனா, "அண்ணா, இவர் சொன்னப்ப கூட நான் நினைச்சுப் பாக்கவே இல்லை. ரொம்ப நல்லா இருக்குண்ணா. ஆனா, ஒண்ணு சொல்றேன். இந்த மனுஷனுக்கு எங்கயோ மச்சம்! போன வேலை எல்லாம் நாங்க நினைச்சதை விட நல்லா முடிஞ்சுது" நித்தின், "வாவ் ஜாஷ்வா. All things settled?" ஜாஷ்வா, "ஏறக்குறைய எல்லாம் முடிவாகிடுச்சு. எனக்கு மூணு மாசம் நோட்டீஸ் பீரியட். நான் கூட இந்த ஒண்ணந்தேதி அன்னைக்கு ரெஸிக்னேஷன் கொடுக்கும் போது கொஞ்சம் யோசிச்சேன். ஆனா இப்ப ரொம்ப நிம்மதியா இருக்கு" சக்தி, "Stop talking cryptic! ஒரு ஃபுல் அப்டேட் கொடு" ஜாஷ்வா, "கொடுக்கறேன். ஆனா அதுக்கு முன்னாடி sorry for digressing, since you mentioned cryptic, உங்க சர்வர்லெஸ் பாட் நெட் வேலை அப்பறம் அந்த என்க்ரிப்ஷனை மாத்தறது எல்லாம் முடிஞ்சுதா" நித்தின், "கோடிங்க் டெஸ்டிங்க் எல்லாம் முடிஞ்சுது. ஏப்ரல் ஒண்ணில் இருந்து பரவ விடப் போறோம்" ஜாஷ்வா, "ஹே, அப்ப அடுத்த மாச ட்ரான்ஸ்ஃபரை அது பாதிக்காது இல்ல? நான் ஏற்கனவே ஆண்டர்ஸன் கிட்டயும் ஹாஃப்மன் கிட்டயும் சொல்லி ஆச்சு. அவங்க அடுத்த மாசம் ஒரு பெரிய ட்ரான்ஸ்ஃபர் இருக்கும்ன்னு சொல்லி இருக்காங்க" சக்தி, "கவலையே படாதே. ஒரு பிரச்சனையும் இருக்காது" சஞ்சனா, "எப்படியும் அடுத்த ரெண்டு மூணு நாள் நீங்க மூணு பேரும் ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் அப்ப பேசிட்டுத் தானே இருக்கப் போறீங்க. இங்க வந்தும் என்ன?" என்று சிணுங்கினாள் ஜாஷ்வா, "சாரி ஹனி. நீ அவங்களுக்கு நம் ட்ரிப்பைப் பத்தி அப்டேட் கொடு" சஞ்சனா, "இங்கே இருந்து நஸ்ஸௌக்கு (Nassau, Capital of Bahamas - பஹாமாஸ்ஸின் தலை நகரம்) போனோம். அங்கே இவருக்கு அன்னைக்கு முழுவதும் இன்டர்வியூ இருந்துது." சக்தி, "எந்த பாங்க் ஜாஷ்" ஜாஷ்வா தான் நேர்முகத் தேர்வுக்கு சென்ற வங்கிகளின் பெயர்களை சொல்ல, சக்தி, "ஹேய், எல்லாம் கேள்விப் படாத பேர்களா இருக்கு?" ஜாஷ்வா, "ஆமா, ஆனா ஒவ்வொண்ணிலும் எக்கச்சக்க டெபாசிட் பணம் இருக்கு. எல்லாம் ஒரு காலத்தில் பஹாமாஸ் ஒரு டாக்ஸ் ஹேவனா (tax haven) இருந்தப்ப பல நாடுகளிலும் இருந்து வந்த கருப்புப் பணம். இப்ப சர்வதேச சட்டங்கள் வந்ததுக்கு அப்பறம் அந்த பேங்க் எல்லாம் மத்த பாங்க்ஸ் மாதிரி இயங்கணும்ன்னு ரொம்ப வேகமா செயல் பட்டுட்டு இருக்காங்க. நான் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணின மூணு வங்கிகளிலும் எனக்கு ஆஃபர் கொடுத்து இருக்காங்க" நித்தின், "நீ எதில் சேரலாம்ன்னு இருக்கே?" ஜாஷ்வா ஒரு வங்கியின் பெயரை சொல்லி, "அதில் நான் இப்ப பாத்துட்டு இருக்கும் டேட்டா பேஸ் அட்மின் வேலை இல்லை. அவங்களோட இணையம் சம்மந்தப் பட்ட புது டெவலப்மென்ட்ஸ் எல்லாத்தையும் பொறுப்பு ஏத்துக்க சொல்லி இருக்காங்க. நானும் இப்ப பண்ணிட்டு இருக்கும் வேலையில் இருந்து ஒரு சேஞ்ச் இருக்கும்ன்னு அதுக்கு ஓ.கே சொல்லிட்டேன். ஆனா, அதுக்கு ஓ.கே சொன்னதுக்கு அது மட்டும் காரணம் இல்லை" சக்தி, "வேறு என்ன காரணம்?" சஞ்சனா, "இப்ப நான் சொல்றேன். அதுக்கு அடுத்த நாள் நாங்க தங்கறதுக்கு அப்பறம் என்னோட ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கும் வெஞ்சருக்கு இடம் பாக்க சுத்த ஆரம்பிச்சோம். கூட இவரோட கஸினோட கஸினோட கஸினோட ... " ஜாஷ்வாவைப் பார்த்து "அவ்வளவுதானேப்பா?" என்றதும் ஜாஷ்வா முறைத்தான் நித்தின், "சரி விடு ஆஃப்ரிக்காவில் கப்பலில் ஒண்ணா வந்தவரோட வம்சாவழி .. மேல சொல்லு" சஞ்சனா, "இல்லை நித்தின் போற இடத்தில் எல்லாம் என் கஸின் என் கஸின் அப்படின்னு அறிமுகப் படுத்தி வெச்சா கடுப்பா இருக்காதா சொல்லு. அதான் எப்படி கஸின்னு கேட்டேன். ஒரு மைல் நீளத்துக்கு எப்படி உறவுன்னு சொன்னார்" சக்தி, "ஹேய், போதும் மேல சொல்லு" சஞ்சனா, "ஆங்கே, இவரோட கஸின் ஒருத்தர் எங்களை முதலில் ஒண்ணு ரெண்டு இடம் காண்பிச்சார். எங்களுக்கு பிடிக்கலை. அப்பறம் எந்த மாதிரி இடம் வேணும் நீங்க என்ன செய்யறதா இருக்கீங்கன்னு கேட்டார். நாங்க விளக்கினப்பறம் ஒரு இடத்தை காண்பிச்சார். எங்க ரெண்டு பேருக்கும் பாத்த உடனே பிடிச்சுடுச்சு." நித்தின், "எங்கே அந்த இடம். எதாவுது ஒரு சின்ன தீவிலா?" ஜாஷ்வா, "ம்ம்ஹூம் ... .. நியூ ப்ராவிடன்ஸ் தீவிலேயே (New Providence) நாஸ்ஸௌ நகர மையத்தில் இருந்து 20 கிலோமீட்டருக்குள் ... நஸ்ஸௌ இன்டர்நேஷனல் ஏர்போர்டில் இருந்து அஞ்சு கிலோமீட்டர் தூரத்தில் கடற்கரை ஓரத்தில்" சக்தி, "வாவ், என்ன மாதிரி இடம்?" சஞ்சனா, "முன்னாடி ஏற்கனவே ரெஸ்டாரண்ட் அங்கே ரன்னாகிட்டு இருந்து இருக்கு. அதை ஒட்டினாப்படி ஓரளவுக்கு பெரிய வீடு. கொஞ்சம் பழசு. அதன் ஓனருக்கு அதை ரினவேட் பண்ணி கண்டின்யூ பண்ணப் பிடிக்கலை. அவருக்கு வேறு பிஸினஸ் இருக்கு. அதனால் விக்கறார். அந்த பக்கத்தில் வரிசையா ரெஸ்டாரண்ட்ஸ் ஆனா இன்டியன் ரெஸ்டாரண்ட் ஒண்ணு கூட இல்லை!" நித்தின், "வாவ், சோ சஞ்சனா உன் கனவு நினைவாகப் போகுது" சஞ்சனா, "பின்னே? எத்தனை நாளைக்கு இந்த ஆளுக்கு மட்டும் சமைச்சுப் போடறது? மத்தவங்களுக்கு சேர்த்து சமைச்சா கொஞ்சம் காசு சம்பாதிக்கலாம்" சக்தி, "ஏன் உன் கிட்ட காசு இல்லையா?" சஞ்சனா, "அப்படி இல்லைண்ணா. எனக்கு ரொம்ப நாள் ஆசை அது" ஜாஷ்வா, "அது அவனுக்கும் தெரியும். சும்மா நோண்டறான்" நித்தின், "சரி ஜாஷ். அதுக்கும் நீ செலக்ட் பண்ணின வேலைக்கும் என்ன சம்மந்தம்?" ஜாஷ்வா, "வாரத்தில் மூணு அல்லது நாலு நாள் வொர்க் அட் ஹோம் பண்ணிக்கலாம். இவளுக்கும் உதவியா இருக்கும்! அதனால்" சக்தி, "க்ரேட். அப்ப நான் ஹனிமூனுக்கு வந்துடறேன்" சஞ்சனா, "உன் ஹனிமூனுக்குள்ள வீடு ரெஸ்டாரண்ட் எல்லாம் தயாராகுமான்னு தெரியலை. ஆனா நீ ஹனிமூனுக்கு பஹாமாஸ்ஸுக்கு வந்தா உனக்கு எல்லா ஏற்பாடும் நாங்க பண்ணிடுவோம். இல்லை அடுத்த வருஷம் ஒர் செகண்ட் ஹனிமூன் ப்ளான் பண்ணிட்டு வா எங்க வீட்டிலேயே தங்கி எங்க ரெஸ்டாரண்டில் சாப்பிடலாம்" சக்தி, "அப்ப கூட ஒரு குட்டிப் பாப்பாவும் இருக்கும். இல்லையா?" என்றதும் சஞ்சனா முகம் சிவந்து ஜாஷ்வாவைப் பார்த்து, "இவங்க ரெண்டு பேர் பரவால்லை. இன்னும் யாருக்கெல்லாம் சொல்லி வெச்சு இருக்கே?" ஜாஷ்வா, "இவங்க ரெண்டு பேர்கிட்ட மட்டும்தான்" நித்தின், "ஹே, இதுவரைக்கு ப்ரோக்ரேஸ் என்ன?" சஞ்சனா, "ஒண்ணும் இல்லை நித்தின். I am still on pills. அடுத்த வாரத்தில் இருந்துதான் மாத்திரை சாப்பிடறதை நிறுத்தப் போறேன். சரி, நீங்க ரெண்டு பேரும் யார்கிட்ட எல்லாம் சொல்லி இருக்கீங்க?"
நித்தின், "நோபடி, ஒன்லி தீபா" சக்தி, "சேம் ஹியர். வந்தனா. ... அப்பறம் அம்மாகிட்டயும் சொல்லி இருக்கேன். அம்மாகூட ஏழாம் மாசத்தப்ப எங்கேடா இருப்பான்னு கேட்டாங்க" சஞ்சனாவின் கண்கள் பனித்தன. ஜாஷ்வா, "எதற்கு?" பெருமூச்சுடன் சக்தி வளைகாப்பு சீமந்தத்தைப் பற்றி விளக்கத் தொடங்கினான்.From 1 April 2009 9 PM ஏப்ரல் 1 2009 இரவு 9 மணி ஏப்ரல் ஒன்றாம் தேதி இரவில் இருந்து சக்தியும் நித்தினும் மாங்க்ஸ் பாட் நெட்டை சர்வர் இல்லாமல் இயங்கும் ஒரு பாட் நெட்டாக (Server-less bot net) மாற்றும் வேலையில் இறங்கினர். மாங்க்ஸ் பாட் நெட்டின் கணிணிகளில் இருக்கும் வைரஸ்ஸுக்கு பதிலாக புதிதாக எழுதப்பட்டு இருந்த மாங்க்ஸ்-2 வைரஸ்ஸை நூறு கணிணிகளுக்கு புகுத்தினால் மற்ற கணிணிகளுக்கு பரப்பும் வேலையை மாங்க்ஸ்-2 வைரஸ்ஸே செய்து விடும்படி அமைத்து இருந்தனர். இதற்கு முன்னாலும் ஒவ்வொரு முறை தங்களது வைரஸ்ஸில் மாற்றங்களை செய்தபோதும் இவ்வாறே பரப்புவது வழமை. அதனால் அவர்களுக்கு அதிக அளவுக்கு ஆயத்த வேலைகள் இருக்கவில்லை. வரிசை முறையின்றி (random - ராண்டமாக) தேர்ந்து எடுத்து அவைகளில் புதிய வைரஸ்ஸை புகுத்தும் வேலைக்கும் அவர்கள் ஒரு மென்பொருள் எழுதி இருந்தனர். அந்த மென்பொருளை இயக்கியபின் அது நூறு கணிணிகளில் புதிய வைரஸ் வெற்றிகரமாக புகுந்ததை அந்த மென்பொருள் அறிவிக்கும் வரை காத்து இருப்பதே அவர்கள் வேலை. நூறு கணிணிகளை அந்த மென்பொருள் சுமார் ஐந்து மணி நேரம் எடுக்கலாம் என்று கணித்து மாலை 9 மணியளவில் அந்த மென்பொருளை இயக்கினர். முன் தினம் மாலை சக்தி தன் லாப்டாப்பில் மாங்க்ஸ்-2 வைரஸ்ஸின் நிரற்தொடரை (code-கோட்ஐ) கடைசியாக ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு இருந்து இருந்தான். பிறகு இரவு அப்படியே சாப்பாட்டு மேசை மேல் விட்டு விட்டு தூங்கச் சென்று இருந்தான். இரவு சுமார் பத்தரை மணியளவில் ஆர்டர் செய்து தரவைத்து இருந்த பீட்ஸாவை சாப்பிட்டுக் கொண்டு இருக்கையில் எதிரில் இருந்த லாப்டாப்பை இயக்க திரையில் அவன் சரி பார்த்துக் கொண்டு இருந்த நிரற்தொடர் தோன்றியது. திடீரென பொறி தட்டிய சக்தி, "ஓ மை காட் நித்தின்! இந்த ரிமோட் கமாண்ட் மெஸ்ஸேஜ் ஸ்ட்ரக்சரை பாத்தியா. We have missed out something." நித்தின், "வாட், " என்று அவனும் அதைப் பார்த்தபின் "ஓ காட், ப்ளடி ஷிட் ... இதனால, நம் லாப்டாப்பில் இருந்து அனுப்பும் ஆணையை இது புரிஞ்சுக்காது" அதற்குள் எழுந்து சென்ற சக்தி சர்வரில் இயங்கிக் கொண்டு இருந்த மென்பொருளின் இயக்கத்தை நிறுத்தினான். பேயறைந்த முகத்துடன் இருவரும் சில நிமிடங்கள் அமர்ந்து இருந்தனர். நித்தின், "எத்தனை பாட்ஸ் அப்க்ரேட் ஆகி இருக்கு (எத்தனை கணிணிகளில் புதிய வைரஸ் புகுந்து இருக்கிறது)?" சக்தி, "34 கணிணிகளில்" நித்தின், "இதனால் ப்ராப்ளம் ஒண்னும் இல்லை. வைரஸ் கோட்இல் இருக்கும் தப்பை திருத்திட்டு வேறு ஒரு நூறு கணிணிகளை தேர்ந்து எடுத்து மறுபடி வேலையை தொடங்குவோம்" சக்தி, "செய்யலாம். ஆனா இப்ப இந்த பக் இருக்கும் வைரஸ் புகுந்த கணிணிகள் மத்த கணிணிகளுக்கு அந்த பக் இருக்கும் வைரஸ்ஸை புகுத்திகிட்டே இருக்கும். இதனால் பக் இருக்கும் வைரஸ் பரவும்" நித்தின், "நாளைக்குள்ள எத்தனை கணிணிகளுக்கு பக் இருக்கும் வைரஸ் பரவும்?" சக்தி, "நூறு கணிணிகளில் புகுத்தினால் மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் நாலரை லட்சம் கணிணிகளில் பரவ பத்து நாள் ஆகும்ன்னு கண்க்கு பண்ணினோம் இல்லையா?" நித்தின், "ம்ம்ம் நீ என்ன சொல்ல வரேன்னு தெரியுது. முப்பத்து நாலு கணிணிகள் அதே பத்து நாளில் மூணில் ஒரு பங்கு கணிணிகளுக்கு பரப்பும். ஒரு நாளில் பதினைந்து ஆயிரம் கணிணிகளில் பரவும். "அந்த பதினைந்து ஆயிரத்தையும் இப்போதைக்கு மறந்துட வேண்டியதுதான்" சக்தி, "அதாவது இந்த முப்பத்து நாலு கணிணிகளில் இருக்கும் வைரஸ்ஸை நிறுத்தினா" நித்தின், "ஆமா" சக்தி, "எப்படிடா நிறுத்துவே?" நித்தின், "ஓ மை காட்! இந்த பக் இருப்பதனால நாம் லாப்டாப்பில் இருந்து மெஸ்ஸேஜ் மூலம் ஆணை கொடுத்தா அது ஏத்துக்காது! பரப்பறதை நிறுத்த முடியாது" சக்தி, "என்ன பண்ணாலாம்?" நித்தின், "ஹே, IRC சானல் நாம் இன்னும் ஓபனாத்தான் விட்டு இருக்கோம். இந்த பக்கினால் TCP மெஸ்ஸேஜ்கள் மூலம் வரும் ஆணைகள்தான் புறக்கணிக்கப் படும். நேரடியா IRC சானல் மூலம் ஹாக் பண்ணி நிறுத்தலாம்" IRC சானல் என்பது INTERNET RELAY CHAT .. நாம் சாட் செய்வது இதன் மூலமே. இதற்காக கணிணிகளில் ஒரு வாயில் (port) இருக்கும். மாங்க்ஸ் வைரஸ் அந்த வாயிலின் மூலம் வரும் ஆணைகளையும் எதிர் நோக்கியபடி அமைத்து இருந்தனர். அவசரத் தேவைக்கு உதவும் என்று இப்படி அமைத்து இருந்தனர். ஆனால் அந்த வாயிலின் மூலம் கணிணியை அணுகுகையில் அந்த கணிணியின் நடவடிக்கைகளை யாராவது மேற்பார்வை செய்து கொண்டு இருப்பின், எந்த இணைய விலாசத்தில் (ஐ.பி.அட்ரெஸ்ஸில்) இருந்து கணிணி அணுகப் பட்டது என்பதை எளிதில் கண்டு பிடிக்கக் கூடிய அபாயம் இருந்தது. சக்தி, "ஆனா, யாரவுது இந்த முப்பத்து நாலு கணிணிகளில் ஒண்ணையாவுது மானிடர் பண்ணிட்டு இருந்தாங்கன்னா நாம் எங்கே இருந்து அதை அணுகறோம்ன்னு தெரிஞ்சுடும்" நித்தின், "எப்படியாவுது அந்த முப்பத்து மூணு கணிணிகளில் இருக்கும் பக் இருக்கும் வைரஸ்ஸை நிப்பாட்டணும். இல்லைன்னா ஒன்றரை லட்சம் கணிணிகளை மறந்துடனும்."Wednesday, 1, April 2009 11:30 PM Shakthivel's Flat, New York புதன், ஏப்ரல் 1 2009 இரவு 11:30 சக்திவேலின் ஃப்ளாட், நியூ யார்க் இரவென்றும் பார்க்காமல் சக்தி ஜாஷ்வாவை கைபேசியில் அழைத்து நடந்தவற்றைச் சொன்னான். ஜாஷ்வா அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான். ஜாஷ்வா, "மை காட்! முழுசா டெஸ்ட் பண்ணி இருக்குன்னு சொன்னீங்களே?" சக்தி, "சொன்னோம் ஜாஷ்வா, இந்த பகுதியை சரியா டெஸ்ட் பண்ணலைன்னு தோணுது. இப்ப என்ன பண்ணலாம்?" ஜாஷ்வா, "எத்தனை கணிணியில் பக் இருக்கும் வைரஸ் புகுந்து இருக்கு?" சக்தி, "நாங்க புகுத்தி இருப்பது 34 கணிணிகளில். அந்த கணிணிகளில் இருந்து நாளைக்கு ராத்திரிக்குள்ள 15000 கணிணிகளுக்கு அது பரவிடும். நாளைக்கு உள்ள அதை நிறுத்தாமல் விட்டால் ஒன்றரை லட்சம் கணிணிகளுக்கு பரவும்" ஜாஷ்வா, "எப்படி நிறுத்த முடியும்? நீங்க அந்த 34 கணிணிகளில் பக் இல்லாத வைரஸ்ஸை புகுத்தினாலும், அந்த 34 கணிணிகளில் இருக்கும் பக் உள்ள வைரஸ் மத்த கணிணிகளுக்கு மேலும் பரவியபடி இருக்குமே?" சக்தி, "இல்லை. வைரஸ் கணிணியில் புகுந்த உடனே தன் வேலையை தொடங்குவதற்கு முன்னால் சர்வருக்கு தான் இருப்பதை அறிவிக்க ஒரு மெஸ்ஸேஜ் அனுப்பும். அதுக்கு சரியான பதில் வரலைன்னா அடுத்த நாளில் இருந்து ஒண்ணும் செய்யாமல் சர்வரிடம் இருந்து பதில் வரும்வரை காத்து இருக்கும். ஒரு நாளில், அதாவது நாளைக்கு ராத்திரிக்குள் இந்த 34 கணிணிகள் சுமார் 250 கணிணிகளுக்கு பரப்பும். அந்த 250 கணிணிகளும் சுமார் 1750 கணிணிகளுக்கு பரப்பும் அந்த 1750 கணிணிகள் இன்னும் 15000 கணிணிகளுக்கு பரப்பும். அடுத்த நாள் சர்வரிடம் இருந்து பதில் வரலைன்னா தொடர்ந்து வேலை செய்யாது" ஜாஷ்வா, "இப்பத்தான் சர்வரே இல்லையே?"
நித்தின், "அந்த 15000 கணிணிகளுக்கு அதுக்கு அனுப்பின 1750 கணிணிகள் சர்வர். அதே மாதிரி அந்த 1750க்கும் அதுக்கு அனுப்பிய 250ம் சர்வர். ஆக இந்த 34 கணிணிகள்தான் அதுக்கு கீழ இருக்கும் 15000 கணிணிகளுக்கும் சர்வர். இந்த 34ஐயும் நாம் இப்ப நிறுத்தினால். அந்த 15000 கணிணிகளும் ரெண்டு நாள் வெய்ட்டிங்க்ல இருக்கும். அதுக்குள்ள புது பக் இல்லாத வைரஸ்ஸை இந்த 34 கணிணிகளுக்குள் புகுத்தினால், இந்த 34 கணிணிகளும் மேலும் ஒரு புதிய மாற்றம் வந்து இருக்குன்னு அதை பரப்பத் தொடங்கிடும். நாலஞ்சு நாளில் எல்லாத்திலும் புது வெர்ஷன் புகுந்துடும்" ஜாஷ்வா, "ஓ, Cascading updates and authorization? சரி, இந்த 34ஐயும் நிறுத்த என்ன வழி இருக்கு?" சக்தி, "IRC சானல் ஓபனா இருக்கு. நேரடியா அந்த சானல் மூலம் சஸ்பெண்ட் ஆகி நிக்கறதுக்கு ஒரு ஆணை கொடுக்கலாம். இந்த 34ம் சஸ்பெண்டட் ஸ்டேட்டில் (ஸ்தம்பிச்ச மாதிரி) இருக்கும். அதுக்கு அப்பறம் பழைய படி மென்பொருள் மூலம் புது வெர்ஷனை புகுத்தலாம்" ஜாஷ்வா, "IRC சானல் மூலம் அணுகினா சுலபமா ட்ரேஸ் அவுட் பண்ணிடுவாங்க இல்லையா?" நித்தின், "யாராவுது இந்த 34 கணிணிகளை. இல்லை. இந்த 34 கணிணிகளின் ஒண்ணை மானிட்டர் பண்ணிட்டு இருந்தாலும் நாம் எங்கே இருந்து அணுகறோம்ன்னு தெரிஞ்சுடும்" ஜாஷ்வா, "சக்தி, உன் சஜ்ஜஸ்ஷன் என்ன?" சக்தி, "IRC சானல் மூலம் ஆணை அனுப்பறதைத் தவிர வேறு வழி இல்லை" ஜாஷ்வா, "ஆணை கொடுத்து அது ஏற்றுக் கொள்ளப் பட்டதான்னு தெரிஞ்சுக்க ஒரு கணிணிக்கு சுமார் எவ்வளவு நேரம் ஆகும்?" நித்தின், "ரொம்ப நேரம் ஆகாது. Both ways traffic included 3 அல்லது 4 நிமிஷம் ஆகும்"ஜாஷ்வா, "சரி, ஒண்ணு செய்வோம். மூணு பேரும் ஆளுக்கு சுமார் 11 கணிணிகளுக்கு வெவ்வேறு இடத்தில் இருந்து ஆணை கொடுப்போம்" சக்தி, "வெவ்வேறு இடத்தில் இருந்துன்னா?" ஜாஷ்வா, "இலவச வை-ஃபை ஃஜோன் (Wi-fi Zone) இருக்கும் காஃபி ஷாப்புகளும் ரெஸ்டாரண்ட்களும் நிறைய இருக்கு. எல்லாம் நைட்டு ஒன்றரை மணி வரை திறந்து இருக்கும். இப்ப புறப்பட்டு மூணு பேரும் தனித்தனியா அடுத்தடுத்து நாலு காஃபி ஷாப்புக்கு போய் உட்கார்ந்து இந்த வேலையை முடிச்சுடலாம்" நித்தின், "யாராவுது ட்ரேஸ் அவுட் பண்ணினா?" ஜாஷ்வா, "ரியல் டைமில் யாரும் ட்ரேஸ் அவுட் பண்ண மாட்டாங்கன்னு நினைக்கிறேன். அப்படியும் நாம் ஆணை கொடுக்கும் போது அவங்களுக்கு தெரிஞ்சாலும். அந்த இடத்தின் இணைய விலாசத்தை வெச்சுட்டு நிஜ விலாசத்தை கண்டு பிடிச்சு வர அவங்களுக்கு குறைஞ்சது ஒரு மணி நேரம் ஆகும். நாம் எந்த இடத்திலும் 15 நிமிடத்துக்கு மேல் இருக்கக் கூடாது" சக்தி, "அந்த இடத்தில் அவங்க விசாரிச்சாங்கன்னா?" ஜாஷ்வா, "நம்மை யாருக்கும் அடையாளம் தெரியக் கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கலாம். வேறு வழி இல்லை." நித்தின், "சரி, நேரத்தை கடத்த வேண்டாம் புறப்படுவோம்" ஜாஷ்வா, "சக்தி உன் கிட்ட ஒரு ஸ்பேர் லாப்டாப் இருக்கு இல்லையா? எனக்கு அதை கொடு. வரும் அவசரத்தில் நான் என் லாப்டாப்பை எடுத்துட்டு வரல" சக்தி, "சரி, முதலில் கொடுக்க வேண்டிய ஆணையையும் கொடுக்கப்பட வேண்டிய கணிணிகளின் ஐ.பி.அட்ரெஸ்ஸையும் மூணு டெக்ஸ்ட் ஃபைலில் எழுதிக்கலாம். ஆளுக்கு ஒரு டெக்ஸ்ட் ஃபைலை லாப்டாப்பில் காப்பி செஞ்சுட்டு புறப்படலாம்" என்ற படி காரியத்தில் இறங்கினான் ஜாஷ்வா, "ஒரு சின்ன மாற்றம். ஆணை கொடுத்து பதில் வந்தப்பறம் எந்த இடத்தில் இருந்து எந்த கணிணிக்கு ஆணை கொடுத்தோம்ன்னு நோட் பண்ணி வெச்சுக்கலாம்" நித்தின், "எதுக்கு?" ஜாஷ்வா, "ஒரு வேளை ட்ரேஸ் அவுட் பண்ணி விசாரிக்க அங்கே யாராவுது வந்தா எந்த கணிணி அவங்க வசம் இருக்குன்னு நமக்கு தெரியும்" சக்தி, "அவங்க விசாரிக்க வந்தாங்கன்னு நமக்கு எப்படி தெரியப் போகுது. யாராவுது ஹாக்கர்ஸ் புல்லட்டின்போர்டில் போடுவாங்கன்னு நம்பறயா?" ஜாஷ்வா, "நல்ல ஹாக்கர்கள் நிச்சயம் போடுவாங்க" மூவரும் சக்தியின் ஃப்ளாட்டை விட்டு நள்ளிரவைத் தாண்டிய சில நிமிடங்களில் வெவ்வேறு திசைகளில் புறப்பட்டனர். வை-ஃபை ஃஜோன் (Wi-fi zone) இருக்கும் காஃபி ஷாப் அல்லது ரெஸ்டாரண்ட் அல்லது மால் என குறிவைத்து சென்றனர். ஜாஷ்வா சொன்னது போல் ஒவ்வொரு இடத்திலும் கணிணிகளுக்கு ஆணை கொடுத்து அவைகளின் பதிலைப் பெற்றபின் அவ்விடத்தை விட்டு அகன்று அடுத்த இடத்துக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர்
டைம் ஸ்கொயர் பக்கம் சென்ற சக்திக்கு முதல் இரண்டு இலவச வை-ஃபை ஃஜோன்களை சுலபமாக கண்டு பிடித்து 6 கணிணிகளுக்கு ஆணை பிறப்பிக்கும் வேலையை முடித்தான். பிறகு பல வீதிகளில் சுற்றியும் இலவச வை-ஃபை ஃஜோன்கள் இருக்கும் காஃபி ஷாபோ ரெஸ்டாரண்டோ அவன் கண்ணுக்கு தென்படவில்லை. அவனது அலுவலகத்துக்கு அருகே வந்தவன், அங்கு வை-ஃபை ஃஜோன் இருப்பது நினைவுக்கு வந்தது. இலவசமானது இல்லை என்றாலும், அந்த வை-ஃபை நெட்வொர்க்கை உபயோகிக்க தேவையான பாஸ்வர்ட் அவனுக்கு தெரிந்து இருந்தது. உடனே காரை அலுவலகத்துக்கு எதிரே பார்க் செய்து. அலுவலகத்துள் நுழைந்தான். வாசலில் கேட்ட செக்யூரிட்டியிடம் எதையோ விட்டுச் சென்றதாகவும் அந்த பகுதிக்கு வந்ததால் எடுத்துச் செல்ல வந்ததாகவும் பொய் சொல்லி தனது இருக்கைக்கு சென்றான். அங்கு அமர்ந்தவாறு பதினைந்து நிமிடங்கள் இன்னும் 3 கணிணிகளுக்கு ஆணை பிறப்பித்தான். அதற்கு மேலும் அங்கு இருந்தவாறே செய்யலாம் என்றாலும் ஜாஷ்வா சொன்னதை மனதில் கூர்ந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்து காரில் அமர்ந்தான். அப்போதுதான் அவனது அலுவலகத்துக்கு அருகே ப்ராட்வே சாலையில் இருக்கும் ப்ளூ ஃபின் ரெஸ்டாரண்ட் ஞாபகத்துக்கு வந்தது.ப்ளூ ஃபின் ரெஸ்டாரன்டை அடைந்தவன் ஒரு டேபிளில் அமர்ந்து ஒரு காஃபி மட்டும் ஆர்டர் செய்து லாப்டாப்பை திறந்தான். பாக்கி தான் ஆணை கொடுக்க வேண்டி இருந்த 3 கணிணிகளுக்கான ஆணைகளை கொடுத்து முடித்தான். மணி 1:30. அவன் எவ்வளவு முடித்து இருக்கிறான் என்று கேட்க நித்தினை கைபேசியில் அழைத்தான். நித்தின் அப்போதுதான் இறுதியாக ஆணை கொடுக்க வேண்டிய கணிணிகளுக்கு ஆணை கொடுக்கத் தொடங்கப் போவதாக கூறினான். நித்தின் அங்கு இருந்து புறப்பட எப்படியும் இன்னும் பதினைந்து நிமிடங்களாவது ஆகும் என்று நினைத்தவன் வந்தனாவிடம் சிறிது நேரம் பேசலாமென்று அவளை கைபேசியில் அழைத்தான்.

No comments:

Post a Comment