Friday, January 30, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 18


Tuesday, 28 October 2008 8:30 AM Lawyer Veerabhadra Rao's Residence, Hyderabad செவ்வாய், அக்டோபர் 28 2008, காலை 8:30 மணி வீரபத்ர ராவின் இல்லம், ஹைதராபாத் சுந்தர் தேஷ்பாண்டே மும்பையில் இருந்து வீரபத்ர ராவின் வேண்டுகோளுக்கு இணங்கி ஹைதராபாத்தில் அவர்களுடன் தீபாவளி கொண்டாட வந்து இருந்தார். வருங்கால மருமகளை கண்டது முதல் அவர் ஆனந்தத்துக்கு அளவில்லை. அவளது துடிப்பிலும் பேச்சிலும் குறும்பிலும் லயித்துப் போனார். அதிகாலையில் வீட்டை விட்டு வெளியில் சென்றவள் அவர்கள் வீட்டு வாசலை வெடிகள் பரப்பிய காகிதக் குளமாக்கிய பின்னர் காலை உணவுக்கு எல்லோரும் காத்து இருப்பதாக பல முறை அழைத்த பிறகே வீட்டுக்குள் நுழைந்தாள். வாசலில் நின்று தீபாவின் சேஷ்டைகளை கண்டு களித்து இருந்த சுந்தர் அவளுடன் உணவருந்த வந்தார்.
சாப்பாட்டு மேசையில் அவர் அமர அடுத்து இருந்த நாற்காலியில் சுவாதீனமாக அமர்ந்த மகளின் அருகே சென்ற கோமதி, "ஏய், எழுந்து வந்து அவருக்கு பரிமாறு. மரியாதை இல்லாமல் போய் பக்கத்தில் உக்காந்து இருக்கே" என்று அவள் காதில் கடிந்தாள். தீபா, "அம்மா, நம்ம வீட்டில் வேலைக்காரங்க இல்லையா? நீயும் வா உக்காந்து சாப்பிடு" என்று சர்வ சாதாரணமாக பதில் அளித்தாள். இவர்களது சம்பாஷணையை கேட்டு புன் சிரித்த சுந்தர், "பரவால்லை விடும்மா. நான் அந்த மாதிரி எல்லாம் மரியாதை எதிர்பார்க்கறவன் இல்லை. என்கிட்ட இப்ப இருக்கற மாதிரி அவ ஒரு ஃப்ரெண்டா இருந்தா போதும்" தீபா, "அங்கிள், நீங்க கவலையே படாதீங்க. உங்க பையனை விட நீங்க நிறையவே பேசறீங்க. ஜாலியா இருக்கலாம்" தர்மசங்கடத்துடன் சிரித்த வீரபத்ர ராவ், "அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுத்துட்டோம்" என்றவாறு நெளிந்தார். கோமதி முறைத்துப் பார்த்து முடியாமல் அவளும் சிரித்தாள். சுந்தர், "ஆனா, தீபா, நீ இத்தனை வெடி வெடிச்சியே? நித்தினுக்கு பிடிக்காது தெரியுமா? நாய்ஸ் பொல்யூஷன் அப்படிம்பான்" தீபா, "அங்கிள், நீங்களே பாத்தீங்க இல்லை? நம்ம வீட்டில் மட்டுமா வெடி வெடிச்சோம்? இந்த வீதியே போட்டி போட்டுட்டு வெடிச்சுது இல்ல? எப்படியும் அடுத்த தீபாவளியும் நான் இங்கே தான் கொண்டாடப் போறேன். நித்தின் ஒண்ணும் சொல்ல முடியாது. சொன்னா எல்லா வீட்டிலையும் போய் நிறுத்த சொல்லும்பேன். அதுக்கு அடுத்த தீபாவளிக்குள்ள உங்க பையனை கொஞ்சம் இந்த மாதிரி விஷயத்தில் வழிக்கு கொண்டு வந்துடுவேன். இல்லைன்னா தீபாவளிக்கு உங்களையும் கூட்டிட்டு இங்கே வந்துடுவேன்" சுந்தர், "என்னம்மா எப்ப கல்யாணம்ன்னு நீங்க ரெண்டு பேரும் ஏற்கனவே ப்ளான் பண்ணியாச்சா?" தீபா, "அதுக்குத்தானே நீங்களும் என் அப்பாவும் இருக்கீங்க? நித்தின் வந்ததுக்கு அப்பறம் கூடிய சீக்கிரம் .. " "அஞ்சு மாசத்துக்கு முன்னாடி இன்னும் ரெண்டு வருஷத்துக்கு கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னே?" என்ற வீரபத்ர ராவை கோமதி ஒரு தாயின் ஆதங்கத்துடன், 'இந்த மனுஷனுக்கு என்ன பேசறதுன்னே தெரியறது இல்லை. அவளே இப்பத்தான் ஒரு வழியா கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சு இருக்கா' என்று மனதுக்குள் திட்டியபடி அவரை முறைத்தாள். வெட்கத்தில் முகம் சிவந்து தலை குனிந்த தீபாவின் தோளில் கை போட்டு "இட்ஸ் ஓ.கே டியர்" என்றவாறு அவள் நெற்றியில் முத்தமிட்ட சுந்தர் வீரபத்ர ராவிடம், "நித்தின் கல்யாணம்ன்னு ஒண்ணு பண்ணிப்பானான்னே எனக்கு பயமா இருந்துது" வீரபத்ர ராவ், "அப்ப நித்தின் திரும்பி வரும் டேட் ஃபைனலைஸ் ஆனதும் சொல்லுங்க சுந்தர். நான் மத்த வேலைகளை ஆரம்பிக்கறேன்" என்று அவர் சொல்லி முடிப்பதற்குமுன் தீபா, "மே 2009 கடைசில .. " என்றாள் சுந்தர், "ம்ம்ம் ... இனிமேல் நானே என் பையன் ப்ளான் என்னன்னு இவகிட்டதான் கேட்டு தெரிஞ்சுக்கணும் .. " என்றார். ஆனந்த சிரிப்பு அந்த அறையை நிரப்பியதுTuesday, 28 October 2008 7:30 PM Rathod Mansion, Udaipur செவ்வாய், அக்டோபர் 28 2008, மாலை 7:30 மணி ராத்தோட் மான்ஷன், உதைப்பூர் வீடு முழுவதும் விளக்குகளாலும் வீட்டின் வெளிப்புறத்தில் சீரியல் லாம்ப் செட்டாலும் அலங்கரித்து இருந்த அவர்களது பூர்வீக இல்லம் ஜொலித்தது. அழகான காக்ரா சோளியில் பெரியம்மா, அம்மா, சித்தி, அண்ணி நால்வருக்கும் விளக்கேற்ற உதவிக் கொண்டு இருந்த வந்தனாவை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டு இருந்த வீரேந்தரிடம் மஞ்சுநாத், "நான் ஃபோனில் சொன்னப்ப நம்ப முடியலைன்னு சொன்னியே? இப்ப பார்த்தாயா?" அருகில் மனீஷிடம் பேசிக் கொண்டு இருந்த யோகேஷ்வர், "என்ன அண்ணா சொன்னீங்க?" மஞ்சுநாத், "இந்த அஞ்சு மாசத்தில் வந்தனா எந்த அளவுக்கு மாறி இருக்கான்னு பார்க்க சொன்னேன்" வீரேந்தர், "நிஜமா யோகி, மனீஷ், உங்க ரெண்டு பேருக்குத்தான் நான் நன்றி சொல்லணும். நீங்க ரெண்டு பேரும் அவளை கன்வின்ஸ் பண்ணலைன்னா அவ R&AWவில் சேர்ந்து இருக்க மாட்டா" மஞ்சுநாத், "இன்னும் ஒரு விஷயம் வீரூ, அவ யூ.எஸ் போயிட்டு வந்ததுக்கு அப்பறம் அவ முகத்தில் எப்பவும் சிரிப்பு ... " யோகி, "எஸ், நானும் நோட் பண்ணினேன். நான் மூணு மாசத்துக்கு முன்னாடி டெல்லி வந்து இருந்தப்ப பார்த்ததை விட அதிகம்." திகைப்புடன் வீரேந்தர், "நிஜமாவா சொல்றே யோகி?" யோகி, "ஆமா அண்ணா. இன்னொரு விஷயம். இந்த மூணு வருஷத்தில் எப்பவாவுது அவள் இந்த மாதிரி தன்னை அலங்கரிச்சுட்டதை பார்த்து இருக்கீங்களா?" வீரேந்தர், "ஆமா, நான் அதை அப்பவே கௌரிகிட்ட சொன்னேன். அதுக்கு அவ என்னமோ நடக்குதுன்னு சொன்னா" யோகி, "I wonder if something is cooking?" மனீஷ், "என்னவா இருக்கும்?" மஞ்சுநாத், "பேட்டா, எங்க எல்லாரையும் விட உன் கிட்ட ஓரளவுக்கு மனம் விட்டு பேசுவான்னு நினைக்கறேன். இந்த ரெண்டு மூணு நாளில் என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுட்டு எங்களுக்கு ரிப்போர்ட் பண்ணறே. Got it?" மனீஷ், "எஸ் சார்! Loud and clear Sir!" ~~~~~~~~~~~~~~~~~ அடுத்த மூன்று நாட்களும் மனீஷின் பெரு முயற்சிக்கு ஒரு பயனும் இல்லை. தீபாவளி விடுமுறையை முடித்து அடுத்த நாள் புறப்படுவதற்கு முன் ஆடவர் நால்வரும் தொண்டையை நனைத்துக் கொண்டு இருந்த போது மனீஷ், "ம்ம்ஹூம் ... என்னன்னு தெரியலை. ஆனா என் யூகம் அவ யாரையோ லவ் பண்ணறா" யோகேஷ்வர், "ஹேய், தட்ஸ் க்ரேட் நியூஸ் ... " என்றபிறகு சலனமற்று இருந்த இரு அண்ணன்களின் முகத்தைப் பார்த்து தொடர்ந்தார், "என்ன அண்ணா? I see a worried look?" வீரேந்தர், "மனீஷ் சொல்வது உண்மையா இருந்தா ஏன் அவ என்னிடம் மறைக்கணும். She is always forthcoming with me .. " மஞ்சுநாத், "May be she is not sure if we will approve of her choice ... (ஒரு வேளை அவ தேர்ந்து எடுத்தவனை நமக்கு பிடிக்காம போகுமோன்னு கவலைப் படறாளா?) யோகேஷ்வர், "நோ! அப்படி இருந்தா அவ முகத்தில் இந்த சந்தோஷம் இருக்காது. நீங்களோ அண்ணியோ எதாவுது கேட்டீங்களா?" என்று வீரேந்திரிடம் கேட்க வீரேந்தர், "மேலோட்டமா பேசினோம். ரொம்ப ஹாப்பியா இருக்குன்னு சொன்னா. யூ.எஸ் ட்ரிப் ரொம்ப எஞ்சாய் பண்ணினேன்னா" யோகேஷ்வர், "இன்னும் ஒரு விஷயம். ஒரு வேளை இது சம்மந்தப் பட்டதா இருக்கலாம். டிசம்பர் மாசக் கடைசியில் அவள் ஃப்ரெண்டோட அம்மாவும் தங்கையும் டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் எல்லாம் பார்க்க தமிழ்நாட்டில் இருந்து வராங்களாம். என் கிட்ட அவங்க வரும் போது தங்கறதுக்கு ஏற்பாடு பண்ணனும் அப்பறம் அவங்களை கூட்டிட்டு சுத்திக் காண்பிக்க கார் வேணும்ன்னு சொன்னா" வீரேந்தர், "ம்ம்ம் . அதுக்கு அப்பறம் இங்கேயும் கூட்டிட்டு வர்றதா சொல்லி இருக்கா" மனீஷ், "யார் அந்த ஃப்ரெண்ட்?" வீரேந்தர், "காலேஜ் ஃப்ரெண்ட் அப்படின்னு சொன்னா" யோகேஷ்வர், "அண்ணா, அவ காலேஜ் முடிக்கறவரை என் வீட்டில்தான் இருந்தா. எனக்கு தெரிஞ்சு அவளுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த ஃப்ரெண்ட் யாரும் கிடையாது" வீரேந்தர் முகத்தில் கவலை ரேகைகளுடன், "இது வரைக்கும் அவ என் கிட்ட பொய் சொன்னது இல்லைன்னு இருந்தேன்" மனீஷ், "சித்தப்பா, வந்தனா பொய் சொல்லலை. எதோ ஒரு காரணத்துக்காக உண்மையை மறைக்கற மாதிரி இருக்கு. அவளைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். உங்க சந்தோஷத்துக்காகவே ஐ.பி.எஸ் சேர்ந்தவ அதை மறந்துடாதீங்க." யோகேஷ்வர், "எஸ், அது மட்டும் நிச்சயம். அவ தர்ட் இயர்ல இருந்து மத்த ஃப்ரெண்ட்ஸ் எல்லம் ஜாலியா இருக்கும் போது இவ மட்டும் உக்காந்து ஐ.பி.எஸ்ஸுக்கு படிச்சுட்டு இருப்பா. She has sacrificed a lot of her fun Bhaiya" மஞ்சுநாத், "வீரூ, நீ எதைப் பத்தியும் கவலைப் படாதே. நாங்க எல்லாம் இருக்கோம்"Tuesday, 28 October 2008 7:30 PM Joshua's Flat, Harlem, New York செவ்வாய், அக்டோபர் 28 2008, மாலை 7:30 மணி ஜாஷ்வாவின் இல்லம், ஹார்லம் பகுதி, நியூ யார்க் வீடு முழுவதும் சீரியல் செட் லாம்ப்களால் அலங்கரிக்கப் பட்டு இருந்தது. உள்ளே சக்தியுடன் நுழைந்த நித்தின், “என்ன சஞ்சனா இது? வீட்டுக்கு உள்ளேயாவுது விளக்கு வைக்கலாம் இல்லை?” சஞ்சனா, “வெச்சுப் பாரு. ஸ்மோக் அலார்ம் காய் மூய்ன்னு கத்தும்” சக்தி, “என்னது இது ரொம்ப ஆர்டிஃபிஷியல் தீபாவளியா இருக்கு?” சஞ்சனா, “இந்த ஊர்ல இவ்வளவுதான் முடியும்” நித்தின், “சரி விடு. ஜாஷ் எங்கே?” சஞ்சனா, “மனுஷன் மதியத்தில் இருந்து அவரோட ஆஃபீஸ் ரூமில் உக்காந்துட்டு இருக்கான்” நித்தின் “நான் போய் பார்க்கறேன்” சற்று நேரத்தில் கிச்சனில் சஞ்சனாவுடன் இருந்த சக்தியையும் அழைத்தான் சக்தி, “என்ன ஜாஷ்வா?” ஜாஷ்வா, “கடந்த மூணு வாரமா நமக்கு கொஞ்சம் அதிகமா ஆர்டர்கள் வருதுன்னு சொன்னியே அதை ஆராய்ந்துட்டு இருந்தேன்” சக்தி, “Anything fishy? (சந்தேகப் படும்படி எதாவுது?)” ஜாஷ்வா, “Not on the face of it (மேலோட்டமா பார்த்தா ஒண்ணும் தெரியலை)” சக்தி, “இனிமேல் இதுவரை ஆர்டர் கொடுத்த நிறுவனங்களிடம் இருந்து மட்டும் ஆர்டர் வாங்கிக்கலாமா?” ஜாஷ்வா, “நீ அப்படி செய்ய முடியாது”
சக்தி, “ஏன்?” ஜாஷ்வா, “அலசிப் பாத்துட்டுத்தான் சொல்றேன். பொதுவா எந்த நிறுவனமும் ஒண்ணு ரெண்டு ஆர்டருக்கு மேல் கொடுக்கறது இல்லை. ஏன்னா அத்தனையும் பினாமி நிறுவன்ங்கள். ஒரே நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து ஆர்டர் கொடுத்தா ஆபத்துன்னு அவங்க அப்படி செய்யறாங்க” நித்தின், “இப்ப வரும் அதிகமான ஆர்டர்கள் நம்ம ஆளுங்க வேலையா இருக்குமா?” ஜாஷ்வா, “அதைத் தான் நானும் முதலில் சந்தேகப் பட்டேன். விசாரிச்சு பார்த்ததில் எல்லாம் பினாமி நிறுவனங்களுக்கு பின்னால் நிஜமாவே இயங்கிக் கொண்டு இருக்கும் நிறுவனங்கள்” எஃப்.பி.ஐ சில நிஜ நிறுவனங்களை உபயோகித்து இருந்ததால் அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை!. Monday, 3 November 2008 9:00 AM Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi திங்கள், நவம்பர் 3 2008 காலை 9 மணி R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி முந்தைய தினம் முழுவதும் தங்களது ஈமெயிலை செக் செய்யாமல் மாலை புது தில்லி திரும்பியவர்களுக்கு சுடச் சுட ஒரு செய்தி காத்து இருந்தது. மாங்க்ஸ் ஜீமெயில் பாக்ஸ் அமெரிக்காவில் இருக்கும் ஒரு கணிணி மூலம் ஆக்ஸஸ் செய்யப் பட்டு இருந்தது. அந்த கணிணியின் இணைய விலாசத்தைக் கொண்டு நிஜ விலாசத்தை கண்டு பிடித்து அந்த கணிணியின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு பிடிக்க எஃப்.பி.ஐ முழு வீச்சில் ஈடு பட்டு இருந்தது. அவர்களது ரிவ்யூ மீட்டிங்கின் போது ஷான் ஹென்றியும் சான்ட்ரா ஆஸ்டினும் டெலிகான்ஃபரன்ஸ் மூலம் அவர்களுடன் கலந்து கொண்டு மேற்கொண்டு அப்டேட் கொடுப்பதாக கூறி இருந்தனர். ரிவ்யூ மீட்டிங்க் அறையில் எல்லோரும் வந்து விட்டதை முரளீதரன் கைபேசி மூலம் ஷானுக்கு தெரிவித்தார். சற்று நேரத்தில் மேசையின் மேல் இருந்த பாலிகாம் கான்ஃபரென்ஸர் கருவியில் (Polycom Conferencer - மூன்று அல்லது நாங்கு மைக்குகளும் நடுவே ஒரு ஸ்பீக்கரும் கொண்ட போன்ற ஒரு கருவி. தொலைபேசி இணைப்பில் இதை இணைக்கலாம்) மணி அடித்தது. அறையில் இருந்தவர் அனைவரும் மறுமுனையில் இருந்தவருடன் வணக்கப் பரிமாற்றங்களுக்கு பிறகு உரையாடல் தொடர்ந்தது. ஷான், "ப்ரொஃபெஸ்ஸர், நீங்கதான் இந்த ஐடியாவை கொடுத்தது. உங்களுக்கு நான் முதலில் தாங்க் பண்ணனும்." ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சோ, அவங்களை கண்டு பிடிச்சுட்டீங்களா?" ஷான், "இல்லை ப்ரொஃபெஸ்ஸர். ஆனா அவங்களைப் பத்தி இன்னும் நல்லா தெரிஞ்சுட்டு இருக்கோம்" தீபா, "For God's Sake Shawn! என்ன ஆச்சுன்னு சீக்கரம் சொல்லுங்க" ஷான், "எஸ், எஸ் சொல்றேன் ... முதலில் அந்த கணிணியின் நிஜ விலாசத்தை கண்டு பிடிச்சோம். நியூ ஹாம்ப்ஷையர் மாநில தலைநகரான கன்கார்ட் நகரத்தில் ஒரு வீட்டில் அந்த கணிணி இருந்தது" தீபா, "யார் வீட்டில்?" ஷான், "ஒரு ஸ்கூல் டீச்சர் அம்மா வீட்டில். வீட்டில் அவங்க மட்டும்தான். அவங்க ஒரு ஹிஸ்டரி டீச்சர். கணிணியை முக்கால் வாசி நேரம் அவங்க ஸ்கூல் பாடங்கள் சம்மந்தப் பட்ட விவரங்கள் சேகரிக்கறதுக்கும் யாஹூ மெயில் மூலம் சொந்த ஈமெயில் அனுப்பவும் பயன் படுத்தறாங்க. அவங்க கிட்ட ஜீமெயில் ஐடி இல்லை" வந்தனா, "அப்பறம் எப்படி?" தீபா, "நான் சொல்றேன். அந்த கணிணியில் மாங்க்ஸ் வைரஸ் இருந்தது. சரியா ஷான்?" தீபா சொன்னது உண்மையானால் அதன் சாத்தியக் கூறுகளில் மலைத்த வந்தனா வாயை கையால் பொத்தி அமர்ந்து இருந்தாள். ஷான், "எஸ் தீபா, உனக்கு முதல்லயே தெரியும்ன்னா எங்களை இப்படி வெறி நாய் வேட்டைக்கு அனுப்பி இருக்க வேண்டாம்" தீபா, "இல்லை ஷான், நீங்க சொல்ல சொல்ல எனக்கு தோணுச்சு. ஆனா ஷான், நினைச்சுப் பார்க்க பிரமிப்பா இருக்கு" ஷான், "எஸ். மாங்க்ஸ் வைரஸ் மூலம் எந்த வேலையும் செய்யலாம்ன்னு நமக்கு தெரியும் ஆனா என்ன முடியும்ன்னு நாம் முழுசா யோசிக்கலைன்னு தோணுது" வந்தனா, "மை காட் ஷான், மெயிலை படிக்கறது நமக்கு ரிப்ளை போடறது எல்லாம் அவங்க பாட் நெட் மூலமே செய்யறாங்க" ஷான், "எஸ்! இதைப் பத்தி தெரிஞ்சதும் க்ரிஸ் பட்ஜெட்டை பத்தி கவலைப் படாதே; தேவையானா உடனே தீபாவையும் வந்தனாவையும் இங்கே வரவழைத்து இங்கே இருந்து ஆபரேஷனை தொடருங்க; இல்லைன்னா நீயும் சாண்ட்ராவும் இந்தியாவுக்கு போங்கன்னும், சீக்கரம் கண்டு பிடிச்சே ஆகணும் அப்படின்னு குதிக்கறார். தீபா, வந்தனா, இந்த கண்டுபிடிப்பினால உங்க ப்ளானில் எதாவுது மாற்றம் இருக்குமா?" சற்று நேர மௌனத்திற்கு பிறகு வந்தனா, "இருக்காது சார். நாங்க முதலில் போட்ட ப்ளான் படி தொடரப் போறோம்" ஷான், "இன்னும் கொஞ்சம் அதிகமா ஈமெயில் விளம்பரங்களுக்கு ஆர்டர் கொடுத்தா சீக்கிரம் நமக்கு தேவையான மெஸ்ஸேஜ்கள் கிடைக்கும் இல்லையா?" தீபா, "வேண்டாம் சார், அவங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் வரக்கூடாது." சான்ட்ரா, "நம்மை தவிர மத்தவங்களும் ஆர்டர்கள் கொடுக்கறாங்கன்னு தெரியுது. எப்படியும் டிசம்பர் நெருங்கும் போது அமெரிக்காவில் விளம்பரங்கள் அதிகமாகும். நமக்கு நிறைய மெஸ்ஸேஜ்கள் கிடைக்கும்" ஷான், "உங்களுக்கு வேறு எந்த உதவியாவுது வேணுமா?" வந்தனா, "இல்லை ஷான். எங்களுக்கு தேவையானது எல்லாம் இருக்கு" ஷான், "சரி, நான் தொலைஞ்சு போன என் வீக் எண்டில் கொஞ்சூண்டையாவுது மீட்கப் பார்க்கறேன். சீ யூ" சான்ட்ரா, "சீ யூ கால்ஸ் அண்ட் கய்ஸ்" அமெரிக்கர்கள் தங்கள் இணைப்பை துண்டித்தனர். ஸ்தம்பித்து அமர்ந்து இருந்த ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சத்தியமா, இபப்டிப் பட்ட ஒரு பாட் நெட்டை உருவாக்க முடியும்ன்னு நான் கனவில் கூட நினைச்சது இல்லை. வந்தனா, தீபா, நீங்க உங்க வேலையை கண்டின்யூ பண்ணுங்க. நான் உடனே அந்த மெஸ்ஸேஜ்களை டீ-கோட் பண்ண இந்தியாவிலேயே ஒரு பெஸ்ட் டீமை அஸ்ஸெம்பிள் பண்ணறேன்"அவர்கள் செயற்திட்டத்தின் இரண்டாம் படி அவர்கள் கணக்கிட்ட படி டிசம்பர் 19ம் தேதி வரை தொடர்ந்தது. அடுத்த வாரத்தில் முக்கியமான மூன்றாம் படியை தொடங்கினர். தீபா எழுதி இருந்த மென்பொருள் கடந்த இரு மாதங்களில் பல முறை சரிபார்க்கப் பட்டு இருந்தது. அவர்களுக்கு தேவையான் நூறு கணிணிகளும் ஒரு தனிக் கட்டிடத்தில் இணைக்கப் பட்டு தயாராக இருந்தன. அவர்களின் உதவியாளர்களுக்கு தேவைக்கும் அதிகமாக ட்ரெயினிங்க் கொடுக்கப் பட்டு இருந்தது. நூறு கணிணிகளிலும் திங்கள், டிசம்பர் 22ம் தேதியன்று மாங்க்ஸ் வைரஸ்ஸை புகுத்தினர் அடுத்த நாள் எல்லாக் கணிணிகளும் மாங்க்ஸ் பாட் நெட்டில் சேர்ந்து இருந்தன. புதன் முழுவதும் மெஸ்ஸேஜ்களை டாம்பர் செய்தவாறு இருந்தனர். வியாழக் கிழமை மாலை வரை அச்செயலை தொடர்ந்தனர். வெள்ளியன்று காலை பத்து மணியில் இருந்து மதியத்துக்குள் நூறு கணிணிகள் இருந்த மாங்க்ஸ் வைரஸ்களுக்கும் தன்னை தானே அழித்துக் கொள்ள ஆணைகள் வந்து இருந்தன. அத்தனை மெஸ்ஸேஜ்களையும் பிரித்து எடுத்து, முதலில் எடுத்து இருந்த ஈமெயில் விளம்பரத்துக்கான ஆணை மெஸ்ஸேஜ்களுடன் சேர்த்து ஒன்றாக ஜிப் செய்து ப்ரொஃபெஸ்ஸர் சாரிக்கு அனுப்பியபின் பின் மாலை வேளையில் தோழியர் இருவரும் வீட்டை நோக்கி பயணித்தனர். வந்தனா அடுத்த நாள் காலை பத்து மணியளவில் புது தில்லி ஏர்போர்ட்டில் நடக்கப் போகும் சந்திப்பை பயம் கலந்த ஆவலுடன் எதிர் நோக்கி காத்து இருந்தாள் Saturday, 27 December 2008 9:30 AM சனி, டிசம்பர் 27 2008 காலை 9:30 வந்தனா புது தில்லி விமான நிலையத்தில் சென்னையில் இருந்து வரும் விமானத்தின் வரவுக்காக காத்து இருந்தாள். அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒரு கால அட்டவணை தயாரித்து சக்திக்கு அனுப்பி இருந்தாள். அவனிடம் இருந்து "ஹா ஹா ஹா" என்று மட்டுமே பதில் வந்து இருந்தது. தொலைபேசியில் பேசுகையில் "ஹெய், What is this? I am taking your mom! அவங்களுக்கு எப்படி இருந்தா பிடிக்கும்ன்னு எதாவுது சஜஷன் கொடேன்?" என்று அவனை அதை மறுபடி ஒரு முறை பரிசீலனை செய்து பார்க்கச் சொன்ன போது "ஹனி!" (அவன் அப்படி அழைப்பது ஜாஷ்வாவிடம் இருந்து தொத்திக் கொண்டது என்றாலும் அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது) "நான் அந்த ஊருக்கு எல்லாம் போனது இல்லை. I leave it to you to decide" என்று சொல்லி அவளை மேலும் எரிச்சல் மூட்டி இருந்தான்.
~~~~~~~~~~~~ விமானத்தில் கொடுத்த சிற்றுண்டியை முடித்தபின் கையில் இருந்த புத்தகத்தைப் படிக்காமல் தலையை இருக்கையில் சாய்த்தவாறு கடந்த மூன்று மாதங்களாக மகனுடன் நடந்த இரு உரையாடல்களை மனதில் அசைபோட்டாள். வார இறுதியில் தொலைபேசியில் அழைக்கும் சக்தி ஒருமுறை பேசும்போது . சக்தி, "அம்மா, ஒரு ஐடியா ... இல்லை ஒரு சஜஷன் ... இல்லை ஒரு ப்ளான் ..." மனோகரி, "முதல்ல என்னன்னு சொல்றியா?" சக்தி, "வர்ற டிசம்பர்ல நீங்களும் சாந்தியும் ஒரு டூர் போயிட்டு வர்றீங்களா?" மனோகரி, "டூரா? என்னடா சொல்றே?" சக்தி, "ஆமாம்மா, சாந்தி சென்னையை தாண்டி எங்கேயும் போனது இல்லை. அவ பாவம்மா. அவளைக் கூட்டிட்டு டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் எல்லாம் சுத்திப் பாத்துட்டு வர்றீங்களா?" மனோகரி, "என்னடா சொல்றே? அதான் நீ உன் அசைன்மென்ட்டில் இருந்து வந்த உடனே கூட்டிட்டு போறேன்னு உன் தங்கச்சிகிட்ட சொல்லி இருக்கேயில்ல? அவளும் எம்.எஸ்ஸி ஃபர்ஸ்ட் இயர் சம்மர் ஹாலிடேயில் ப்ராஜக்ட், இன்டர்ன்ஷிப் ஒண்ணும் பண்ணப் போறது இல்லைன்னு இப்ப இருந்தே என் கிட்ட சொல்லிட்டு இருக்கா" சக்தி, "இல்லைம்மா, மே, ஜூன், சமயத்தில் டெல்லி பக்கம் எல்லாம் வெய்யில் கொளுத்தும். நாள் முழுக்க நாப்பது டிகிரிக்கு மேல தான் இருக்கும். அப்ப போறதுக்கு பதிலா இந்த டிசம்பர்ல போனா க்ளைமேட் ரொம்ப நல்லா இருக்கும்னு சொன்னேன்" ம்னோகரி, "நாங்க மட்டும் ஒரு ஆம்பள தொணை இல்லாம போறதா? உடனே எந்த செஞ்சுரில இருக்கீங்கம்மான்னு கேக்காதே" சக்தி, "தெரியும். கேக்க மாட்டேன். ஆனா, உங்களை பத்திரமா ஒவ்வொரு இடத்துக்கும் கூட்டிட்டு போய் காண்பிக்கறதுக்கு ஏற்பாடு பண்ணாம நானும் அப்படி சொல்ல மாட்டேன்னு கொஞ்சம் நம்புங்க" மனோகரி, "சாரிடா கண்ணா. நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை. நீ வந்ததுக்கு அப்பறம் கூட்டிட்டு போறதா இருந்தியே. அதுக்குள்ள என்ன அவசரம்?" சக்தி, "அதான் சொன்னேன் இல்ல. டிசம்பர்தான் சரியான சமயம்ன்னு?" மனோகரி, "ஏண்டா? நீயும் தானே அந்த இடமெல்லாம் பாக்கணும்ன்னு இருந்தே?" சக்தி, "ஆமாம்மா. ஆனா நான் திரும்பி வந்ததுக்கு அப்பறம் ஆஃபீஸ் வேலையா எப்படியும் டெல்லி பக்கம் போக வேண்டி இருக்கும். அந்த சமயத்தில் போய் பாத்துக்கறேன்" மனோகரி, "அந்த சமயத்தில் எங்களையும் கூட்டிட்டு போயேண்டா?" சக்தி, "நான் ஆஃபீஸ் வேலையா போகும் போது எவ்வளவு நாள் உங்ககூட இருக்க முடியும்ன்னு தெரியலைம்மா. அதுவுமில்லாம நான் டிசம்பர் சமயத்தில் போவேனான்னும் தெரியாது. இந்த டிசம்பர் நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வர்றதுக்கு ஐடியலான சமயம்மா." மனோகரி, "புரிஞ்சுக்காம பேசாதே. நீ என்னதான் ட்ராவல் ஏஜன்ஸி மூலமா டூர் அரேஞ்ச் பண்ணினாலும் தெரியாத ஒரு இடத்துக்கு வயசுக்கு வந்த புள்ளைய கூட்டிட்டு முன்ன பின்ன தெரியாதவங்ககூட போறதுக்கு எனக்கு இஷ்டமில்லை" சக்தி, "அம்மா, முன்ன பின்ன தெரியாத ஆள் இல்லைம்மா. என் ஃப்ரெண்ட் வந்தனான்னு. ராஜஸ்தான்காரி. அவ சொந்த ஊர் உதைப்பூர். அவங்க சித்தப்பா ஜெய்ப்பூரில் ஐ.ஜி ஆஃப் பொலீஸ். அவ டெல்லியில் வேலையில் இருக்கா. அவங்க பெரியப்பா ஆர்மில ஜெனரல் அவர்வீட்டில்தான் தங்கி இருக்கா. எல்லோருடைய வீடும் அரண்மனை மாதிரி இருக்கும்ன்னு அவளே சொல்லி இருக்கா. தங்கறதுக்கு பிரச்சனையே இல்லை. இந்த டிசம்பரில் அவளுக்கும் லீவ் எப்படியும் அவ சொந்த ஊருக்கும் சித்தப்பா வீட்டுக்கும் போக வேண்டி இருக்கும்ன்னு சொன்னா. அப்ப உங்களையும் கூட்டிட்டு போறேன்னு சொன்னா" மனோகரி, "யாருடா இந்த பொண்ணு? இதுவரைக்கும் அவளைப் பத்தி சொன்னதே இல்லையே?" சக்தி, "காலேஜில் படிக்கும் போது நான் மும்பைக்கு போனேன் இல்லை. நித்தினை முதல் முதல்ல பாத்த டெக் ஃபெஸ்ட் அப்பத்தான் அவளையும் மீட் பண்ணினேன். போன வாரம் அவ யூ.எஸ்ஸுக்கு ரெண்டு வார வேலையா வந்து இருந்தா. அப்ப இன்னும் நல்லா பழக்கம் ஆச்சு" மனோகரி, "ஓ, நித்தினுக்கும் அவளை நல்லா தெரியுமா?" சக்தி, "ஆமாம்மா. என்ன சொல்றீங்க?" மனோகரி, "டேய், உன் ஃப்ரெண்டுங்கற. நீ இல்லாம எங்களை மட்டும் கூட்டிட்டு போகச் சொன்னா நல்லா இருக்குமா சொல்லு. அவளுக்கு சிரமம் தானே?" சக்தி, "அவ கூட பேசும்போது உங்களைப் பத்தியும் சாந்தியைப் பத்தியும் சொல்லி இருக்கேன். பாரவால்லையே, ஒரு நல்ல கம்பெனியா இருப்பாங்க போல இருக்கேன்னு அவளே சொன்னா. அப்பறம்தான் அவளே சஜ்ஜஸ்ட் பண்ணினா. வீட்டில் உக்காந்து போரடிக்கறதுக்கு பதிலா உங்களை கூட்டிட்டு போய் காமிக்கறதுல தனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லைன்னு சொன்னா." மனோகரி, "ம்ம்ம்ம். .யோசிச்சு அடுத்த வாரம் பேசும்போது சொல்றேன்" மனதுக்குள் மகன் எதையோ மறைக்கிறான் என்று தோன்றியது. அவ்வளவாக பெண்களுடன் பழகாத மகன் ஒருத்தியைப் பற்றி இவ்வளவு சொன்ன பிறகு யார் அவள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது.அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமை அவனது புது நண்பன் ஜாஷ்வாவின் வீட்டில் இருந்து மனோகரியை அழைத்து இருந்தான். முன்பு ஒரு முறை அவன் அங்கு போயிருந்த போது அங்கிருந்து அழைத்துப் பேசி ஜாஷ்வாவையும் சஞ்சனாவையும் அறிமுகப் படுத்தி இருந்தான். அதன் பிறகு அவன் அங்கு செல்லும் போதெல்லாம் அழைத்துப் பேசச்சொல்லி மனோகரியே சொல்லி இருந்தாள். சக்தி, "ஹெல்லோ எப்படிம்மா இருக்கீங்க?" மனோகரி, "நாங்க நல்லா இருக்கோண்டா கண்ணா. என்ன? நேத்தைக்கு கூப்படலை?" சக்தி, "இன்னைக்கு எப்படியும் ஜாஷ்வா வீட்டுக்கு லஞ்சுக்கு வரதா இருந்தேன். இங்கிருந்தே கூப்பிட்டுக்கலாம்ன்னு கூப்படலை" மனோகரி, "நினச்சேன். சரி சஞ்சனாகிட்ட கொடு" சஞ்சனா, "ஹெல்லோ சித்தி. எப்படி இருக்கீங்க?" மனோகரி, "நல்லா இருக்கோம் சஞ்சனா. நீ எப்படி இருக்கே? உன் வீட்டுக் காரர் எப்படி இருக்கார்?" சஞ்சனா, "அவருக்கு என்ன? நாளொரு அல்காரிதமும் பொழுதொரு ப்ரோக்ராமுமா ரொம்ப நல்லா இருக்கார். இதை எல்லாம் கூட உக்காந்து மணிக்கணக்கா கதைக்க இந்தியாவில் இருந்து வந்த ரெண்டு கீக்ஸ் கிடைச்சதுக்கு அப்பறம் என்னை கண்டுக்கறதே இல்லை" வாய்விட்டு சிரித்த மனோகரி, "என்ன? நீங்க எல்லாமா நயாகரா போயிட்டு வந்ததுக்கு அப்பறம் சக்தி உன் வீட்டுப் பக்கமே வரலை போல இருக்கு?" சஞ்சனா, "இல்லையே. போன ரெண்டு வாரமாதான் இவங்க மூணு பேரும் பிஸி. அதுக்கு முன்னத்து வாரம் நாங்க எல்லாம் லேக் ஜார்ஜ் ரிஸார்ட்டுக்கு போயிருந்தோம். அதுக்கு முன்னத்து வாரம் இவரோட கசின் ஒருத்தனுக்கு கல்யாணம்ன்னு நாங்க பிஸியா இருந்தோம். அப்ப அண்ணனும் நித்தினும் ஸ்டாச்சு ஆஃப் லிபர்ட்டி போறதுக்கு இவர் அரேஞ்ச் பண்ணிக் கொடுத்தார். அண்ணன் சொல்லலையா?" மனோகரி, "வேலை பளுவில் சொல்ல மறந்து இருப்பான்" என்று சொன்னாலும் மகன் எதையோ மறைக்கிறான் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்தாள். பின்னணியில் நித்தின் சஞ்சனாவிடம் 'யாரு மனோகரி ஆண்டியா? ஜாஷ் பியர் இருக்கான்னு கேட்டான். நீ ஃபோனைக் கொடு நான் ஆண்டிக்கு ஹல்லோ சொல்லிக்கறேன்' என்று என்பது தெளிவாகக் கேட்டது. தொலைபேசி அவனுக்கு கைமாறியது. நித்தின் "ஹாய் ஆண்டி. ஹவ் ஆர் யூ? ஹவ் ஈஸ் மை லிட்டில் ஸிஸ்டர்?" மனோகரி, "நான் நல்லா இருக்கண்டா நித்தின். அவளும் நல்லாத்தான் இருக்கா" நித்தின், "அப்பறம் என்ன விசேஷம் சொல்லுங்க ஆண்டி. தீபாவளிக்கு துணி எல்லாம் வாங்கி ஆச்சா?" மனோகரி, "ம்ம்ம்.. ஆச்சு. அப்பறம் யாருடா சக்தியோட புது ஃப்ரெண்ட் டெல்லியில் வேலையில் இருக்கறவ? எங்களுக்கு டெல்லி ஆக்ரா ஜெய்ப்பூர் எல்லாம் சுத்திக் காமிப்பா. நீங்க போயிட்டு வாங்கன்னு சக்தி சொல்றான்?" நித்தின், "ஆமா ஆண்டி ரெண்டு பேரும் உங்களுக்கு நல்லா கம்பெனி கொடுத்து சுத்தி காமிப்பாங்க" மனோகரி, "என்ன ரெண்டு பேரா?"
நித்தின், "ஆமா தீபா, வந்தனா. ரெண்டு பேரும் டெல்லியில்தான் வேலையில் இருக்காங்க" மனோகரி, "டேய், எங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு காமிக்க அவங்களுக்கு என்ன தலை எழுத்தா?" "தலை எழுத்து தான் சித்தி" என்று சஞ்சனாவின் சிரிப்புடன் கூடிய குரல் இன்னொரு எக்ஸ்டென்ஷனில் இருந்து கேட்டது. அதன் பிறகு அம்முனையில் ஏதோ கிசுகிசுப்பு பிறகு சஞ்சனா, "சித்தி நீங்க எதைக் கேட்டீங்க? கிச்சனுக்கு வந்தவ எக்ஸ்டென்ஷ்னை எடுத்தேன். நீங்க அவளுக்கு தலை எழுத்தான்னு கேட்டதும் என்னைப் பத்தித்தான் எதோ சொல்லறீங்கன்னு அப்படி சொன்னேன்" மனோகரி, "ஒண்ணும் இல்லைம்மா. சக்தி அவன் ஃப்ரெண்ட் டெல்லியில் இருக்கா அவ என்னையும் சாந்தியையும் ஊரெல்லாம் சுத்திக் காமிப்பா. நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்கன்னு ஒத்தைக் காலில் நிக்கறான். அதான் நித்தின்கிட்ட எங்களை கூட்டிட்டு போறதுக்கு அவங்களுக்கு தலை எழுத்தான்னு கேட்டேன்" என்று விளக்கினாலும் சஞ்சனாவும் சேர்ந்து எதையோ மறைக்கிறாள் என்று புரிந்தது.

No comments:

Post a Comment