Saturday, January 10, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 3


anjana Edwards - An Introduction Jan 2004 to May 2009Baticoloa, Sri Lanka to Harlem, N.Y, U.S.A

சஞ்சனா எட்வர்ட்ஸ் - ஒரு அறிமுகம் 26 டிசம்பர் 2004 முதல் மே 2009 வரை மட்டக்கிளப்பு, 

இலங்கையில் தொடங்கி ஹார்லம் பகுதி, நியூ யார்க் நகரம் வரை இலங்கையில் மீன் பாடும் தேன் நாடு என்று பெருமையுடன் அழைக்கப் படும் மட்டக்களப்பில் பார்த்திபன் வேதநாயகி தம்பதியர் இருவரும் அரசாங்க வேலையில் இருந்தனர். அதிக பணக்காரர்கள் இல்லை என்றபோதும் ஏழைகள் என்று சொல்ல முடியாது.

 'பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு கொடுக்க வேண்டும் அவர்கள் நல்லதொரு நிலைமைக்கு வர வேண்டும் என்பது மட்டுமே அவர்கள் குறிக்கோள். அப்போது அவர்களின் இருபத்து மூன்று வயதான மகன் சந்தோஷ் முது நிலை பட்ட படிப்பில் சேர்ந்து இருந்தான். அழகுப் பெட்டகமான இருபத்தோரு வயதான மகள் சஞ்சனா இள நிலை பட்ட படிப்பில் இருந்தாள். பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு சிறிதும் ஏமாற்றம் அளிக்காமல் இருவரும் படித்து வந்தனர். இருவரும் பட்ட படிப்புடன் தனியாக கம்ப்யூட்ர் டிப்ளமாவும் படித்து வந்தனர்.

 சந்தோஷ் படிப்பை முடித்தவுடன் பார்த்திபன் அமெரிக்காவில் அவருக்கு தெரிந்தவரிடம் ஒரு வேலைக்கும் சொல்லி வைத்து இருந்தார். சந்தோஷ் தன் தங்கையை மேல் படிப்புக்கு அமெரிக்கா அழைத்து செல்ல திட்டமிட்டு இருந்தான். அன்று பார்த்திபன்-வேதநாயகி தம்பதியினரின் திருமண நாள். வேலைக்கு போகுமுன் கல்லடியில் இருக்கும் ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்துக்கு சென்று வழிபட்டு செல்லவிருந்தனர். 

சந்தோஷும் சஞ்சனாவும் கல்லூரிக்கு போகுமுன் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துக் கூறி மாலை எல்லோரும் டின்னருக்கு போக திட்டமிட்டு விடைபெற்று சென்றனர். அன்று அவர்கள் கோவிலுக்கு சென்ற போது வந்த சுனாமி அக்கோவிலின் கர்ப்பகிரகம் இருக்கும் கோபுரத்தை பைசா நகரத்து கோபுரம் போல் சாய்த்தது. சந்தோஷுக்கும் சஞ்சனாவுக்கும் அவர்கள் உடல்களை தேடி அவைகளை கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் ஆகின.

 
பெற்றோரை இழந்த இருவரும் போக இடமின்றி படிப்பை தொடர வழியின்றி வேலை தேடி அலைந்தனர். சுதந்திர இயக்கத்தை சேர்ந்த சிலர் தங்களை போராளிகள் என்று காட்டிக் கொள்ளாமல் பொது நல சேவையில் ஈடு பட்டு இருந்தனர். சந்தோஷ் அவர்களுடன் பழக்கமாக, போக்கிடமின்றி தங்கையுடன் அவ்வியக்கத்தில் சேர்ந்தான். மேலும் படிக்கவும் இயலும் என்ற வாக்குறுதி கிடைத்ததால் சஞ்சனாவும் சம்மதித்தாள். 


ஆனால் வடக்கு மாகாணத்தில் இருக்கும் ஒரு முகாமில் அவர்கள் முதலில் படித்தது யுத்தக் கலை. சுதந்திரப் பற்று இருப்பினும் சஞ்சனா துப்பாக்கி கலாசாரத்தை அறவே வெறுத்தாள். இருப்பினும் சந்தோஷும் அவளும் கை தேர்ந்த போராளிகளாகினர். பல ஆபரேஷன்களை வெற்றிகரமாக முடித்து பாராட்டு பெற்றனர். அடுத்த இரண்டு வருடங்களின் ஒவ்வொரு நிமிடத்தையும் மனதுக்குள் வெறுத்தாள். 

சஞ்சனாவின் மன நிலையை அறிந்த சந்தோஷ் எப்படியும் அவளை அங்கு இருந்து வெளியே அனுப்பி விட முடிவெடுத்தான். அமெரிக்காவில் இருந்த தந்தைக்கு தெரிந்தவரை அணுக அவர் சிறிது பண உதவி செய்வதாகவும் அந்நாட்டுக்குள் வந்தபின் அடைக்கலம் தருவதாகவும் வாக்களித்தார். ஆனால் விசாவுக்கு தன்னால் ஸ்பான்ஸர் செய்ய இயலாது என்றார். 

வேறு ஒருவரை ஸ்பான்ஸர்ஷிப்புக்கு அணுகினார். அவர் அமெரிக்காவில் தன் முதலாளி கொடுப்பார்; ஆனால், அவரிடம் ஒரு வருடமாவது மிக குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய வேண்டும் என்று கூற அதற்கு ஒப்புதல் கொடுத்தான். கிடைத்த பண உதவியையும் சேர்த்து கையில் இருந்த பணத்தில் சஞ்சனாவுக்கு மட்டும் விமான டிக்கட் எடுக்க முடிந்தது. அந்த இயக்கத்தில் சேர்வது சுலபம் ஆனால் விடுபட்டுப் போவது கடினம். 

தன் உயிரை பணயம் வைத்து சஞ்சனாவை வெளியில் கொண்டு வர முடிவெடுத்தான். அவனை விட்டு செல்ல மறுப்பாள் என்று அறிந்த சந்தோஷ் தானும் உடன் வருவதாக கூறி இருந்தான். ரகசியமாக இருவரும் வெளியேறுகையில் மற்ற இயக்கத்தினரால் கண்டு பிடிக்கப் பட குண்டடி பட்டான். குற்றுயிரும் குலையுயிருமாக பிரயாணம் செய்து வந்தவன் கொழும்பு நகரத்தை அடையுமுன் உயிர் விட்டான். 

கொழும்பு நகரத்தில் தந்தையின் நண்பர் ஒருவர் வீட்டில் சில நாட்கள் செய்வது அறியாது திகைத்து இருந்தவள் தன் அமெரிக்க பயணத்தை தொடர முடிவெடுத்தாள். அண்ணன் ஏற்பாடு செய்து இருந்த ஸ்பான்ஸர்ஷிப் கடிதம், பாஸ்போர்ட் மற்றும் அவன் தன் சேமிப்பனைத்தையும் போட்டு எடுத்து இருந்த ஓபன் டிக்கட்டுடனும் அமெரிக்க தூதரகத்தில் க்யூவில் நின்று விசா பெற்றாள். ஸ்பான்ஸர்ஷிப் கொடுத்தவருடன் தொடர்பு கொண்டு அமெரிக்கா வருவதை அறிவித்தாள். ஒரு வருடம் குறைந்த சம்பள வேலையில் இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தவள் அமெரிக்கா வந்தடைந்த பிறகே அவளுக்கு ஸ்பான்ஸர்ஷிப் கொடுத்தது ஒரு போதை மருந்து கடத்தும் கும்பல் என்று அறிந்தாள். 

அவர்களுக்கு அவள் செய்ய வேண்டி இருந்த வேலை அவர்களுடன் போகுமிடமெல்லாம் செல்லுவதும் வேண்டுமென்ற போது தன் உடலை பரிமாறுவதும் என்று அறிந்தவள் அதற்கு மறுத்தாள். ஒரு தனி அறையில் சிறைவைக்கப் பட்டாள். எப்படியாவது வெளியில் எதாவது வேலை செய்து ஸ்பான்ஸர்ஷிப்புக்கு அவர்கள் செலவு செய்த பணத்தை திருப்பிக் கொடுப்பதாக மன்றாடினாள். முதலில் அன்பாக பேசியவர்கள் அவள் மறுக்க பலாத்காரத்தில் ஈடு பட்டனர். 

போராளியாக இருந்தவளை எளிதில் அவர்களால் தங்கள் இச்சைக்கு பணியவைக்க முடியவில்லை. பலாத்காரமாக அவளுக்கு போதை மருந்து ஏற்றியபின் அவர்களின் தாக்குதலுக்கு பலியாகி பல முறை கற்பழிக்கப் பட்டாள். அரை மயக்க நிலை மாறாமல் அவளை வைத்து பகல் நேரத்தில் அக்கூட்டத்தினருக்கு சிற்றுண்டி போலவும் இரவில் பேருண்டியாகவும் பரிமாறப் பட்டாள். தனக்கு என்ன நடக்கிறது என்று அறிந்தாலும் அதை தடுக்க இயலாமல் இருந்தாள். 

சிறிது சிறிதாக தான் போதை மருந்துக்கு அடிமையாவதை உணர்ந்தாள். முழுவதும் அடிமையாவதற்குள் அங்கு இருந்து எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று தக்க சமயத்திற்காக காத்து இருந்தாள். ஒரு நாள் விடியலுக்கு முன் அவர்கள் கண்ணயர்ந்த சமயம் தப்பி ஓடினாள். துரத்தியவர்களிடமிருந்து தப்பிக்க சாலையின் குறுக்கே ஓட ஜாஷ்வா தன் இரவு நேர வேலை முடித்து வீடு திரும்புகையில் அவன் காரில் அடிபட்டாள். அடி பட்டு விழுந்தவளை துரத்தியவர்கள் புறக்கணித்து அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர். ஜாஷ்வா அவளை மருத்துவமனையில் சேர்த்தான். 

இரண்டு வாரங்களில் அவள் உடலில் பட்ட காயங்கள் ஆறி உடல் நிலை சற்று தேறியதும் அவளுக்கு ஏற்படுத்தப் பட்ட போதை மருந்து பழக்கத்தை திடீரென நிறுத்தியதால் தோன்றும் வித்ட்ராயல் சின்ட்ரோம் (withdrawal syndrome or discontinuation syndrome) அவளை வதைக்க தொடங்கியது. அதுவரை அதை அறியாமல் இருந்த மருத்துவர்கள் அவளை வேறு ஒரு மருத்துவத்திற்கு அழைத்து செல்லுமாறு ஜாஷ்வாவிடம் கூறினர். 

அவளை தன் ஃப்ளாட்டிற்கு அழைத்து வந்தவன் இரண்டொரு நாட்கள் அவள் பட்ட அவஸ்தையை பொறுக்க முடியாமல் சிறிதளவு போதை மருந்தை அவளுக்கு ஏற்றுவதற்கு தன் உடன் பிறவா சகோதரர்கள் மூலம் ஏற்பாடு செய்தான். பிறகு அவளை ஃபீனிக்ஸ் ஹௌஸ் (Pheonix House) என்ற பெயரில் இயங்கும் போதை பொருளுக்கு அடிமையானவர்களை குணப்படுத்தும் ஒரு மையத்திற்கு அழைத்து சென்றான். 

அங்கு இரண்டு வாரங்கள் தங்கி மருத்துவம் பெற்றபின் மறுபடி அவளை தன் ஃப்ளாட்டிற்கு அழைத்து வந்தான். மேற் கொண்டு அவள் மன நிலையை திடப் படுத்தும் பயிற்சிகளுக்காக அடுத்த இரண்டு மாதங்கள் தினமும் காலையில் அலுவலகத்திற்கு செல்லுமும் அவளை அம்மையத்தில் விடுத்து அவளை மதியம் அழைத்து வந்து தன் ஃப்ளாட்டில் உறங்க வைத்த பின் திரும்ப அலுவலகம் சென்றான். சுருக்கமாக சொன்னால் அவளை ஒரு தாயை போல பார்த்துக் கொண்டான். 

மூன்று மாதங்களும் அவள் சுய நினைவோடு அவனுடம் இருக்கும் போது அவளிடமிருந்து அவளுக்கு நடந்தவைகளை அறிந்து கொண்டான். பார்த்த முதல் நாளே அவள் இருந்த நிலையிலும் வெளிப்பட்ட அழகில் மயங்கியவன் அவளது வரலாற்றை அறிந்தபின் தீவிரமாக காதலிக்க தொடங்கினான். மனதுக்குள் இவளை தன்னவளாக்கிக் கொள்ள முடிவெடுத்தான். அவன் அன்பிலும் பண்பிலும் லயித்து மனதுக்குள் இவனைப் போல் ஒருவனைத்தானே என் பெற்றோரோ அண்ணனோ எனக்கு மணமுடித்து வைத்து இருப்பார்கள் என்று நினைத்தாலும் தன்னை அவனுக்கு தகுதியற்றவளாக கருதினாள். 

பல நாள் வாக்கு வாதங்களுக்கு பிறகு அவன் காதலுக்கு ஒப்புதல் அளித்தாள். சர்ச்சில் நண்பர்கள் புடை சூழ சஞ்சனா பார்த்திபனாக இருந்தவளை சஞ்சனா எட்வர்ட்ஸாக ஆக்கி பிறகு பிள்ளையார் கோவிலில் தாலியும் கட்டினான். அடுத்த மூன்று வருடங்களில் தாம்பத்தியத்துடன் அவளை மேலும் படிக்க வைத்தான். பிறந்தது முதல் தாயின் அன்புக்கு ஏங்கியவனை தாயாகவும் படுக்கையில் தாரமாகவும் சஞ்சனா தன் அன்பினால் குளிப்பாட்டினாள். 

படித்து முடிக்கும் வரை மகப்பேறு வேண்டாமென்று இருந்தவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்னரே குடும்பத்தை பெரிது படுத்த முடிவெடுத்து இருந்தனர்.

 Creation of Monks BotNet Sep-2003 to May-2008 IIT-Mumbai, IIT-Madras till New York மாங்க்ஸ் பாட் நெட் உருவாக்கம் செப்டம்பர்-2003ல் இருந்து மே-2008 வரை ஐஐடி-மும்பை மற்றும் ஐஐடி-மெட்ராஸ், 

சென்னையில் தொடங்கி நியூ யார்க் நகரம் வரை நித்தினும் சக்திவேலும் பி.டெக் இரண்டாம் வருடத்தில் இருக்கும் போது முதலில் மும்பை ஐ.ஐ.டி நடத்தும் டெக்ஃபெஸ்ட் (TechFest) வருடாந்திர தொழில்நுட்ப விழாவில் நடந்த மென்பொருள் எழுதும் போட்டியின் போது சந்தித்தனர். இருவரின் சிந்தனைகளிலும் கருத்துக்களிலும் இருந்த ஒற்றுமையால் அவர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகினர். 

 முதன் முதலில் அவர்கள் சட்ட விரோத ஹாக்கிங்க் செய்தது இன்னொரு ஹாக்கிங்க் போட்டியில். தென் கொரியாவில் இருக்கும் ஒரு கணிணி பாதுகாப்பு நிறுவனம் ஒரு ஹாக்கிங்க் போட்டி அறிவித்து இருந்தது. இணையத்தில் இணைக்கப் பட்டு இருக்கும் அந்நிறுவனத்தினுடைய ஒரு கணிணிக்குள் நுழைந்து அதில் ஒரு தகவலை பதிப்பதே அப்போட்டியின் குறிக்கோள். ஆனால் அந்த கணிணி மிகுந்த பாதுகாப்பான ஒரு அமைப்புக்குள் இருந்து இணைக்கப் பட்டு இருந்தது. 

நித்தின், சக்தி உட்பட அப்போட்டியில் கலந்து கொண்டோரில் சிலரும் அதனை கண்ட பிறகு அப்போட்டி ஒரு கண் துடைப்பு என்று அறிந்தனர். வெறுப்படைந்த நித்தினும் சக்தியும் சேர்ந்து அந்நிறுவனம் போட்டியில் கலந்து கொண்டோரின் பட்டியலை சேமித்து வைத்து இருந்த கணிணிக்குள் நுழைந்து தங்களின் பெயர்களை முதலாக வந்ததாக மாற்றி பதித்து அது பற்றி மற்ற போட்டியாளருக்கும் அந்த நிறுவனத்திற்கும் ஒரு அறிக்கை விட்டனர். இதனால் kill9 (நித்தின்) மற்றும் m0rla (சக்தி) என்ற பெயரால் அவர்களை அறிந்த ஹாக்கர் உலகத்தில் மிக பிரபலம் அடைந்தனர். 

 மூன்றாம் வருட கடைசியில் இருவரும் சேர்ந்து ஒரு பாட் நெட் (Bot Net) அமைக்க திட்ட மிட்டனர். பாட் நெட் என்பது ஒரு வைரஸ் மூலம் உடமையாளருக்கு தெரியாமல், ஏவி விட்டவரின் கட்டளைக்கு பணிந்து நடக்கும் கணிணிகளின் குழுமம் (group or network). ஆக்கிரமிக்கப் பட்ட கணிணிகளில் இருக்கும் தகவல்களை சேகரிக்கவும், அந்த கணிணிகளில் இருந்து ஈமெயில் அல்லது சாட் மூலம் தகவல் அனுப்பவும், குறிப்பிட்ட வலை தளங்களை தாக்கவும் பாட்நெட்கள் பயன் படுத்த படுகின்றன. 

சில சமயம் பாட்நெட்டை உருவாக்கியவர்கள் (அதாவது அதன் வைரஸை ஏவி விட்டவர்கள்) அதில் உட்பட்ட கணிணிகளை நேரடியாக தொடர்பு கொள்ளாமல் வேறு ஒரு கணிணியில் புகுத்தப் பட்ட ஒரு சர்வர் (வழங்கி) எனப்படும் ஒரு மென்பொருள் மூலம் தொடர்பு கொள்வார்கள். பாட்நெட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் அவைகள் இருப்பதை வெளியுலகம் அறிவது இல்லை. 

அதில் உட்பட்ட கணிணிகளின் எண்ணிக்கையை பொறுத்து ஹாக்கர்கள் (hackers) மத்தியில் ஒரு பாட்நெட் பிரபலம் அடைகிறது. உண்மையில் ஸ்டார்ம் வர்ம் (storm worm) எனப்படும் வைரஸால் கைப்பற்றப் படும் கணிணிகளை கொண்டு ஸ்டார்ம் பாட் நெட் (Storm Bot Net) என்ற பெயரில் அழைக்கப் படும் ஒரு பாட் நெட் பல சட்ட விரோத செயல்களில் இன்று வரை ஈடு பட்டு வருகிறது. அமெரிக்க உள்நாட்டு உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ (FBI) அந்த பாட் நெட்டை கைப் பற்றும் முயற்சியில் இதுவரை வெற்றி காணவில்லை. மற்ற பாட் நெட்களை போல் அடிமையாக்கப் பட்ட கணிணிகளில் இருக்கும் தகவல்களை திருட நித்தினுக்கும் சக்திக்கும் விருப்பம் இல்லை. 

மாறாக, அந்த பாட் நெட்டை அதில் உட்பட்ட கணிகளின் மூலம் ஸ்பாம் (spam) எனப்படும் விளம்பர ஈமெயில்கள் அனுப்பவதற்கு மட்டும் பயன் படுத்த முடிவெடுத்தனர். அவர்கள் திட்ட மிட்ட பாட் நெட்டை உருவாக்க தேவையான வைரஸ் (அதுவும் ஒரு மென்பொருள்தான்) எழுதும் போது ஆங்கிலத்தில் ப்ரேக் த்ரூ (break through) என்று அழைப்பது போல அவர்களின் ஒரு சிறிய, ஆனால் மிக நுட்பமான கண்டுபிடிப்பால் அவர்கள் எழுதிய வைரஸ் பொதுவான பாட் நெட் உருவாக்கும் வைரஸ்களைவிட அதிக சக்தி வாய்ந்ததாய் அமைந்தது. 

அதன் மூலம் இணையத்தில் எந்த விதமான தகவல் பறிமாற்றமும் செய்ய முடிந்தது. அந்த வைரஸ் பாதித்த கணிணியில் இருந்து அந்த கணிணியின் உரிமையாளர் உபயோகித்தது போல் எந்த காரியமும் செய்யலாம். உதாரணமாக, அந்த வைரஸ் பாதிக்கப் பட்ட கணிணி மூலம் அதன் உரிமையாளர் செய்தது போல ரயில் டிக்கட் புக் செய்யவோ, ஒரு வலைதளத்திற்கு சென்று அதில் விற்பனை செய்யப் படும் பொருளை வாங்கவோ முடியும். 

கணிணித் துறையில் இதை Secured HTTP Protocol communication என்று அழைப்பர். அது மட்டும் அல்ல. அந்த வைரஸ் மூலம் அதை மற்ற கணிணிகளுக்கு பரவ வைக்கவும் முடியும். வைரஸ் எழுதி முடித்து இணையத்தில் பரவ விட்ட ஆறு மாதங்களில் அவர்களது பாட் நெட்டில் உலகில் பல மூலைகளில் இருந்த ஐம்பதாயிரம் கணிணிகளுக்கு மேல் சேர்ந்து இருந்தன. தங்களது பாட் நெட் அந்த அளவுக்கு வந்த பிறகே அதன் மூலம் பணம் சம்பாதிப்பதைப் பற்றி திட்டமிட்டனர். 

ஹாக்கர்கள் மத்தியில் தங்கள் பாட் நெட் இருப்பதை அறிவித்து, ஈமெயில் அனுப்புவதை தவிர தங்களின் வைரஸ் மூலம் செய்யக் கூடிய மற்றவைகளை பற்றி பறைசாற்றிக் கொண்டனர். இருப்பினும் பெரிய அளவில் விளம்பர ஈமெயில் அனுப்புவதை மட்டுமே அவர்களது பாட் நெட் மூலம் அமுல் படுத்த இருப்பதாக அறிவித்தனர். தேவை இருப்பவர்கள் அவர்களை தொடர்பு கொள்ள மாங்க்ஸ (monks) என்ற பெயரில் ஒரு ஜீமெயில் (GMAIL) ஐடியும் தொடங்கினர். 

அதிலிருந்து அவர்களது பாட் நெட் மாங்க்ஸ் பாட் நெட் (Monks Bot Net) என்ற பெயரில் பிரபலமானது. இதற்கிடையே இருவரும் பி.டெக் முடித்து ஒரே மென்பொருள் நிறுவனத்தில் அதன் பெங்களூர் மையத்தில் வேலைக்கு சேர்ந்தனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில அவர்களது மாங்க்ஸ் பாட் நெட் (Monks Bot Net) மிகப் பிரபலமானது. அதில் உட்பட்ட கணிணிகள் தினமும் பல லட்ச விளம்பர ஈமெயில்களை அனுப்பிய படி இருந்தன. 

 அமெரிக்காவில் இருக்கும் ஒரு வங்கியில் தங்களது நண்பன் ஒருவன் மூலம் சேமிப்பு கணக்கு (savings account) ஒன்று தொடங்கினர். வாடிக்கையாளரிடம் தங்களது பாட் நெட் மூலம் பலருக்கும் விளம்பர ஈமெயில் அனுப்புவதற்கான அவர்கள் வசூலித்த கட்டணத்தை அந்த சேமிப்பு கணக்கில் இட (deposit செய்ய) பணித்தனர். பிறகு அதில் இருந்து இன்டர்நெட் பாங்கிங்க் (Internet Banking) மூலம் பணத்தை மற்றவர் பேரில் தொடங்கி இருந்த இந்திய வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தி (transfer செய்து) அவைகளில் இருந்து அந்த பணத்தை உபயோகித்தனர். 

 இருவரும் அவரவர் வேலைகளிலும் நல்ல பெயர் வாங்கினர். இரண்டு வருடம் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் ஒரு வருட காலம் அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் இருந்த ஒரு வாடிக்கையாளரின் அலுவலகத்தில் பணி புரிய ஆன்-சைட் அசைன்மெண்டில் (on-site assignment) அனுப்பப் பட்டனர். 2008ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி வியாழன் காலை வேளையில் நியூ யார்க் நகரை அடைந்த இருவரும், முதல் வேலையாக இருவரும் சேர்ந்து தங்க ஒரு அப்பார்ட்மென்டை வாடகைக்கு எடுத்தனர். அடுத்து வரும் திங்கள் வரை அவர்களுக்கு ஓய்வு நேரம் இருந்தது. அடுத்த நாள் தங்களது பாட் நெட்டை பராமரிக்க தேவையான கணிணிகளை தயார் செய்ய முடிவெடுத்தனர். 

அந்த கணிணின் பாகங்களை தனி தனியே வாங்கி அவற்றை எல்லாம் இணைத்து ஆற்றல் மிகு இரு கணிணிகளை உருவாக்கினர்(assemble செய்தனர்). அன்றே அடுத்த வேலையாக இரு வெவ்வேறு கம்பெனிகளிடம் இருந்து இரு ப்ராட்பேண்ட் இணைப்புகளுக்கு விண்ணப்பம் கொடுத்து அன்று மாலையே அந்த இணைப்புகள் வந்ததை கண்டு வியந்தனர். First Meeting with Joshua Edwards Saturday, May 3, 2008 8:30 PM ஜாஷ்வா எட்வர்ட்ஸுடன் முதல் சந்திப்பு 2008 மே 3 சனிக்கிழமை இரவு 8:30 அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்த மூன்றே நாட்களில் அவர்களுக்கு தேவையானவை எல்லாவற்றையும் அமைத்து விட்ட திருப்தியில் திளைத்தனர். 

அன்று, மே மூன்றாம் தேதி சனியன்று இருவரும் வெளியில் இரவு உணவை முடித்து திரும்பும் போது அவர்களது அப்பார்ட்மென்ட் வாசலில் பார்பதற்கு டென்ஸில் வாஷிங்க்டனைப் போன்ற ஒரு ஆப்ரிக்கன்-அமெரிக்க இளைஞன் நின்று கொண்டு இருந்தான். இவர்கள் அவனை நெருங்கியதும், அவசரமாக அவன் அவர்களை அணுகி பதட்டமான முகத்துடன், "kill9 and m0rla? I have something very urgent to tell you. Please open the door to your appartment. (கில்9, மோர்லா? உங்களிடம் அவசரமாக நான் ஒன்று கூற வேண்டும். சீக்கிரம் உங்கள் வீட்டு கதவை திறவுங்கள்) என்றான். 

முதலில் தங்களது ஹாக்கர் உலக சங்கேத பெயரில் அவன் அவர்களை அழைத்ததை கண்டு பிரமித்து நின்றனர். சக்திவேல் முதலில் சுதாரித்துக் கொண்டு சிறிது கடினமான முகத்துடன், "என்ன சொல்றே? உனக்கு யார் வேணும்?" என்று வினவ, எதிரில் இருந்தவன், "எனக்கு உங்க ரெண்டு பேரைப் பத்தி ரொம்ப நல்லா தெரியும். இப்ப பேசிட்டு இருக்க நேரம் இல்லை. உடனே கதவை திற" என்றதும் சக்திவேல் கதவை திறந்தான். இவர்களுக்கு முன் வீட்டிற்குள் நுழைந்த அந்த இளைஞன் நேராக அவர்கள் புதிதாக உருவாக்கி இணையத்தில் இணைத்து இருந்த கணிணிகளின் இணைப்பை பிடுங்கி எறிந்தான்.

 நித்தின் சக்திவேல் இருவரும் அவன் செயலை பார்த்து பெரும் கோபத்துடன் நின்று இருக்க அந்த ஆப்பிரிக்க-அமெரிக்க இளைஞன் தன் முத்துப் பற்கள் தெரிய சிரித்தபடி அவர்களிடம் , "ஹாய், நான் ஜாஷ்வா எட்வர்ட்ஸ், ஹார்ஷ்7 (harsh7) என்னோட ஜீமெயில் ஐடி" என்ற படி கை குலுக்க கை நீட்டினான். 

 அந்த ஜீமெயில் ஐடி அவர்கள் இருவரும் மிக நன்றாக அறிந்த ஒன்று. கடந்த ஐந்து வருட காலமாக இந்த ஜீமெயில் ஐடி ஹாக்கர் உலகத்தில் மிக பிரபலமான ஒரு ஐடி. அந்த ஐடியில் இருந்து பல ஹாக்கிங்க் முறைகளும் அல்காரிதங்களும் வெளியிடப் பட்டு இருந்தன. உண்மையில் இருவரும் அந்த ஐடியின் உரிமையாளனுடன் தொடர்பு கொள்ள முயன்று இருந்தனர். 

ஒரு பதிலும் வராததில் மற்ற ஹாக்கர்களிடம் விசாரிக்க அந்த ஐடியின் உரிமையாளன் வெளி உலகில் எவருடனும் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை என்று அறிந்தனர். 

 
அந்த சங்கேத பெயரைக் கேட்ட சக்திவேல் முதலில், "நீதான் ஹார்ஷ்7 அப்படிங்கறதுக்கு என்ன ஆதாரம்?" ஜாஷ்வா, "நான் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னால் உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். உங்க ரெண்டு பேர் லாப்டாப்புலையும் உங்க பாட் நெட் பத்தி எதுவும் இருக்காதுன்னு நம்பறேன. 


நெட்டுல கனெக்ட் பண்ணி மெயில் ஓபன் பண்ணி பாருங்க" சட்டென்று நித்தின் தன் லாப்டாப்பை இணையத்தில் இணைத்து ஜீமெயிலை திறக்க 

அதில் ஹார்ஷ்7இடமிருந்து "ஹாய் கில்9, உங்களுடைய சர்வரின் இணைய முகவரி (Server's IP Address) எளிதில் கண்டு பிடிக்க கூடிய ஒரு நிஜ முகவரியை குறிக்கிறது. உடனே அதன் இணைப்பை துண்டிக்கவும்" என்று ஒரே ஒரு வரி ஈமெயில் வந்து இருந்தது. 

 அதைப் பார்த்து விட்டு நித்தின், "எப்படி எங்க வைரஸ் சர்வர் (வழங்கி மென்பொருள்) இங்க இருக்குன்னு கண்டு பிடிச்சே?" ஜாஷ்வா, "ஒரு இணைய முகவரி (IP Address) இருந்தா அதோட நிஜ முகவரியை கண்டு பிடிக்கறது இங்க இண்டியா மாதிரியோ ஸ்ரீலங்கா மாதிரியோ அவ்வளவு கஷ்டம் இல்லை. அதுவும் நீங்க எடுத்து இருக்கற இண்டர்நெட் கனக்ஷனுக்கு ஃபிக்ஸ்ட் ஐ.பி அட்ரெஸ் (fixed IP Address) கொடுத்து இருக்காங்க. 

அதுல இருந்து நேரடியா ஃபோன் கம்பெனி காரங்களோட சர்வருக்கு கனெக்ட் ஆகி இருக்கு. நடுவுல ஒரு ப்ராக்ஸி சர்வரோ DHCP சர்வரோ இல்லை. எஃப்.பி.ஐயும் (FBI), என்.எஸ்.ஏ (NSA)வும் போற வர்ற எல்லா இண்டர்னெட் மெஸ்ஸேஜையும் மோப்பம் பிடுச்சுட்டு இருப்பாங்க. அதே மாதிரி ஒரு சில பாட் நெட்டை நானும் மோப்பம் பிடிச்சுட்டு இருந்தேன். அதுல உங்களோடதும் ஒண்ணு. நான் எஃப்.பி.ஐ(FBI), என்.எஸ்.ஏ(NSA) பத்தி கவலைப் படலே. 

ஏன்னா உங்களோடது விளம்பர ஈமெயில் அனுப்பறதை தவிற யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாத ஒரு பாட் நெட். ஸைபர் கள்ளச் சந்தையில இருக்கற மத்தவங்களைப் பத்திதான் கவலை பட்டேன். அவங்க கைக்கு உங்க பாட் நெட்டோட கண்ட்ரோல் சிக்குச்சுன்னா அதை வெச்சுகிட்டு நிறைய சம்பாதிக்கலாம். இதுவரைக்கும் உங்க பாட் நெட்டுக்கு நிறைய ஸைபர் தாக்குதல் வந்து இருக்கும். 

ஆனா இப்படி உங்க நிஜ விலாசம் தெரிஞ்சா நிஜத் தாக்குதல் வரும்" சில விளக்கங்கள்: நாம் ஒரு ப்ராட் பாண்ட் இணைப்பை BSNLலிடமிருந்து பெறுகையில் நமது இணைப்பிற்கு என்று ஒரு தனி இணைய விலாசம் கொடுக்கப் படுவது இல்லை. நமது கணிணி நமக்கு அருகே இருக்கும் டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சில் (telephone exchange) இருக்கும் ஒரு கணிணியை தொடர்பு கொள்ளுகிறது.

 ஒவ்வொரு முறை நாம் இணையத்தில் இணைக்கும் போதும் அந்த கணிணிக்கு என்று ஒதுக்கி வைத்து இருக்கும் விலாசங்களில் அச்சமயம் உபயோகத்தில் இல்லாத ஒரு விலாசத்தை உங்கள் கணிணிக்கு இடுகிறது. அதன் பிறகு உங்களது தகவல் பரிமாற்றங்கள் எல்லாம் அந்த விலாசத்தில் இருந்து தொடங்கி இணையத்தில் இருக்கும் மற்ற விலாசங்களுடன் நடக்கின்றன. ஆகவே யாராவது ஒரு தகவல் பரிமாற்றத்தை மோப்பம் பிடித்து (உண்மையில் இச்செயல் ஆங்கிலத்தில் sniffing என்றே அழைக்கப் படுகிறது!) எங்கிருந்து வருகிறது என்று கண்டு பிடிக்க முயன்றால் அவர்களின் தேடல் BSNL எக்ஸ்சேஞ்சில் முடியும். BSNL எக்ஸ்சேஞ்சில் இருக்கும் கணிணியை DHCP சர்வர் (Dynamic Host Configuration Protocol Server) என்று பெயர். ப்ராக்ஸி சர்வர் எனப்படுவதும் ஒரு வித கணிணியே. 

அதன் வழியாக இணையத்தை தொடர்பு கொண்டால் நமது இணைய விலாசத்தை அது மறைத்து வைக்கும். பல இணைய தளங்களில் இத்தகைய கணிணிகள் இருக்கின்றன நாம் அவை மூலம் இணையத்தை தொடர்பு கொண்டால் நமது இணைய விலாசம் வெளி உலகிற்கு தெரியாமல் மறைக்கப் படும். 

சக்திவேல் சிரித்த முகத்துடன், "ரொம்ப நன்றி மிஸ்டர் எட்வர்ட்ஸ். நான் உங்களோட அல்காரிதம் நிறைய பாத்து இருக்கேன். ஒரு தடவை உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செஞ்சேன். பதில் வரலே அதனால அதுக்கு அப்பறம் தொடர்பு கொள்ளவில்லை" ஜாஷ்வா, "நீங்க என்கூட தொடர்பு கொள்ள பாத்தீங்களா? எந்த ஐடில இருந்து மோர்லா(m0rla) விலிருந்தா?" 

சக்திவேல், "இல்லை, வேற ஒரு ஐடில இருந்து" ஜாஷ்வா, "நானே உங்களை இன்னும் சில நாட்களில் தொடர்பு கொள்ளனும்னு இருந்தேன்"

 நித்தின், "எதுக்கு? ஏன் எங்க பாட் நெட்டை மோப்பம் பிடுச்சுட்டு இருந்தீங்க மிஸ்டர் எட்வர்ட்ஸ்?" 

 ஜாஷ்வா, "முதல்ல இந்த மிஸ்டர் எட்வர்ட்ஸ் வேண்டாம். நான் உங்களை விட ரெண்டு மூணு வயசுதான் பெரியவனா இருப்பேன். ஜாஷ்வா இல்லைன்னா ஜாஷ்ன்னு கூப்பிடுங்க. சரி, நான் உங்க நிஜப் பெயரை தெரிஞ்சுக்கலாமா?" சக்திவேலும் நித்தினும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். 

 ஜாஷ்வா, "சோ, நீங்க ரெண்டு பேரும் இண்டியாவா?" என்ற பிறகு சக்திவேலை காண்பித்து "உன்னைப் பாத்து ஒரு வேளை ஸ்ரீலங்காவோன்னு நினைச்சேன்" 

நித்தின், "ஸ்ரீலங்காவுக்கு ரொம்ப பக்கத்தில! தமிழ் நாடுன்னு ஒரு மாகாணம் அதுல இருந்து வந்து இருக்கான்" ஜாஷ்வா, "ஓ, நீ தமிழ் பேசுவையா?" என்றபடி உடைந்த தமிழில், "நல்லா இருக்கீங்களா?" 

 சக்திவேல், "அமேஸிங்க்! உனக்கு எப்படி் தமிழ் தெரியும்?" ஜாஷ்வா, "ஏன்னா, என் மனைவி தமிழ் பேசுவா. அவ ஸ்ரீலங்கால இருந்து வந்தவ" நித்தின், "வாவ், எப்படி? அவங்க இங்க வந்தாங்களா? இல்லை நீ அங்க போனப்ப பழக்கமா?" ஜாஷ்வா, "அவ இங்க வந்தா" சக்திவேல்,

 "சரி, இப்ப சொல்லு எதுக்கு எங்க பாட் நெட்டை மோப்பம் பிடிச்சே" ஜாஷ்வா, "அது எந்த தாக்குதலுக்கும் விழாம ஓடிட்டு இருக்கான்னு பாக்கத்தான். ரியலி இம்ப்ரெஸிவ்! அருமையான வேலை செஞ்சு இருக்கீங்க" சக்திவேல், "உன் பாராட்டுக்கு நன்றி. ஆனா அது மட்டும் தான் காரணம்ன்னு எனக்கு தோணலை. ப்ளீஸ் உண்மையை சொல்லு" 

 நித்தின், "நீயே எங்களுடன் தொடர்பு கொள்ளனும்னு இருந்தேன்னு சொன்னியே. அது எதுக்கு? அதுவும் எங்களை பாராட்டவா?" ஜாஷ்வா, "நீங்க ரெண்டு பேரும் நான் நினைச்சதை விட புத்தி சாலிங்க. சொல்றேன். வெளியில எதாவுது ஒரு பப்புக்கு (pub) போய் உக்காந்து பேசலாமா?" அடுத்து அவர்களது உரையாடல் பப்பில் தொடர்ந்தது. ஜாஷ்வா, "உங்க பாட் நெட்டில இருந்து உங்களுக்கு எவ்வளவு வருமானம் வருது?" 

 நித்தின், "லுக் ஜாஷ்வா, எங்க ரெண்டு பேருக்கும் சில விஷயங்களில் நாட்டம் இல்லை. சோ, வேற எதைப் பத்தியாவுது பேசு" சக்திவேல், "இரு நித்தின், அவன் என்ன சொல்றான்னு கேட்டுட்டு முடிவு பண்ணலாம்" நித்தின், "என்ன சொல்லப் போறான்? பாட் நெட்டுல இருக்கற க்ரெடிட் கார்ட் விபரங்களை ஒரு சர்வருக்கு அனுப்பிச்சா ஒரு கார்டுக்கு பத்து டாலர் அப்படீம்பான். 

இது நமக்கு ஏற்கனவே வந்த ஆஃபர் தானே?" ஜாஷ்வா, "நீ என்னை ரொம்பவும் கம்மியா எடை போட்டு இருக்கே. நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு அப்பறம் சொல்லு" சக்திவேல், "சரி, ஜாஷ்வா. சொல்லு" ஜாஷ்வா, "உங்களுக்கு கொலம்பியன் ட்ரக் கார்டல் (Columbian Drug Cartel) அப்படின்னா என்னன்னு தெரியுமா?" 

 நித்தின், "கொலம்பியன் ட்ரக் லார்ட்ஸ் (Columbian Drug Lords) அப்படின்னு ஒரு டாம் க்ளான்ஸி (Tom Clancy) எழுதின புக்ல படிச்சு இருக்கேன். அவங்களை தானே சொல்றே?" ஜாஷ்வா, "அவங்க தான். நீ அந்த புக்ல படிச்சதும் ஓரளவு உண்மைதான். அப்படி பட்ட போதைப் பொருள் முதலாளிகள் நிறைய பேர் இருந்தாங்க. ஸீ.ஐ.ஏ (CIA)வும் அமெரிக்க ராணுவமும் கொலம்பியன் போலீஸ்கூட சேர்ந்து நிறைய ட்ரக் தயாரிக்கறவங்களை தீத்து கட்டிட்டாங்க. இப்ப அரசாங்கம் மாறினதுக்கு பிறகு மிச்சம் இருக்கறவங்க க்ரூப் க்ரூப்பா சேந்து கோக்கேயின் (Cocaine) உற்பத்தி செஞ்சு வினியோகம் செய்யறாங்க. 

கொலம்பியாவுக்கு உள்ள யாரும் அவங்களை அசைச்சுக்க முடியாது" சக்திவேல், "சரி, அவங்களுக்கு என்ன இப்ப?" ஜாஷ்வா, "சொல்றேன். ஒரு காலத்துல அந்த கொலம்பியன் ட்ரக் லார்ட்ஸ் (Columbian Drug Lords - போதைப் பொருள் முதலாளிகள்) கொலம்பியாவில் கோக்கேயின் உற்பத்தி செஞ்சு அமெரிக்காவில இருந்தும் ஐரோப்பாவில் இருந்தும் வந்து வாங்கிட்டு போற வாடிக்கையாளர்களுக்கு வித்துட்டு இருந்தாங்க. 

அப்படி அங்க இருந்து வாங்கிட்டு வர்றவங்களை இறக்குமதியாளர்கள்ன்னு சொல்லுவாங்க. அங்க இருந்து வாங்கிட்டு வர்றவங்க அதை கடத்திட்டு அமெரிக்காவுக்குள்ள கொண்டு வந்து இங்க இருக்கற மொத்த விலையில் விற்கும் வினியோகஸ்தர்களுக்கு விப்பாங்க. வினியோகிஸ்தர்கள் தெருவில் விற்கும் டீலர்களுக்கு விப்பாங்க. டீலர்கள் கோக்கேயின் உபயோகிக்கறவங்களுக்கு விப்பாங்க. இப்படித்தான் ரொம்ப வருஷமா கோக்கேயின் வியாபாரம் நடந்துட்டு இருந்தது. ஒவ்வொருத்தரும் வாங்கின விலைக்கு மேல லாபம் வெச்சு அடுத்தவங்களுக்கு விப்பாங்க. இந்த ட்ரக் கார்டல் வந்தப்பறம் இறக்குமதியாளர்களை முழுக்க நீக்கிட்டாங்க. 

அவங்களே அமெரிக்காவுக்குள்ள கொண்டு வந்து வினியோகஸ்தர்களுக்கு விக்க ஆரம்பிச்சாங்க"நித்தின், "அந்த ஊர்ல இருந்து அவங்க ஏன் அப்படி ரிஸ்க் எடுத்துக்கணும்?" ஜாஷ்வா, "ஏன்னா அங்க வாங்கி இங்க வினியோகஸ்தர்களுக்கு விக்கறவங்கதான் அதிக பட்சம் லாபம் சம்பாதிச்சுட்டு இருந்தாங்க" சக்திவேல், "எவ்வளவு லாபம்?" ஜாஷ்வா, "கோக்கேயின் உற்பத்தி செய்யறவங்க கார்டல்காரங்களுக்கு ஒரு கிலோ இருநூற்று ஐம்பது டாலருக்கு (USD 250) விக்கறாங்க. அதை கார்டல்காரங்க இறக்குமதியாளர்களுக்கு ஆயிரத்து பத்து (USD 1,010) டாலருக்கு வித்துட்டு இருந்தாங்க.

 ஆனா வினியோகஸ்தர்கள் அவங்க கிட்ட இருந்து வாங்கற விலை என்ன தெரியுமா? கிலோ பதினைந்து ஆயிரம் (USD 15,000) டாலர்! வினியோகஸ்தர்கள், அவங்களுக்கு ரிஸ்க் கம்மி, அவங்க டீலர்களுக்கு இருபத்து ஒரு ஆயிரத்துக்கு (USD 21,000) விக்கறாங்க. கஸ்டமர்கள் தெருவில கோக்கேயின் வாங்கற விலை கிலோவுக்கு ஒரு லட்சத்து ஏழாயிரத்துக்கு (USD 1,07,000) . டீலர்களுக்கு இடையேயும் நிறைய கை மாறி கஸ்டமர்கள் கைக்கு போகுது. இந்த சங்கிலியில பாத்தா இறக்குமதியாளர்கள் வாங்கின விலையை விட பதினைந்து (15) மடங்கு விலை வெச்சு விக்கறாங்க. 

அதனால அவங்க பண்ணற வேலையை கார்டல்காரங்களே பண்ணினா அவங்க லாபம் இன்னும் அதிகரிக்கும்ன்னு முடிவெடுத்து இறக்குமதியாளர்களை ஒழிச்சு கட்டிட்டாங்க" நித்தின், "ஒரு வருஷத்துக்கு எத்தனை கிலோ அமெரிக்காவுக்கு கடத்திட்டு வர்றாங்க?"
ஜாஷ்வா, "என்னோட தகவல் படி சுமார் எட்டு லட்சம் கிலோ (8,00,000 Kg) அமெரிக்காவுக்கு உள்ள வருது. நியூ யார்க்கில இருக்கற வினியோகஸ்தர் வாங்கறது சுமார் அறுபத்து ஆறாயிரம் கிலோ (66,000 Kg). அவன் கொடுக்கற பணம் சுமார் ஒரு பில்லியன் (நூறு கோடி) டாலர். இப்ப அதுல மட்டும் நம்ம கவனம் செலுத்தலாம்" 


சக்திவேல், "இதெல்லாம் எதுக்கு சொல்றே. புரியலை" ஜாஷ்வா, "வெயிட் வெயிட் சொல்றேன் .. பொறுமையா கேளு. அந்த கார்டல்காரங்க ஒரு கிலோ கோக்கேயினை விக்கற விலை பதினைந்து ஆயிரம் டாலர். பணத்தை கேஷா மட்டும்தான் வாங்கிப்பாங்க. பதினைந்து ஆயிரம் டாலரோட எடை என்ன தெரியுமா? சுமார் நூற்றி ஐம்பது கிராம். அதுவும் புது நோட்டா இருந்தா!!. ஆனா இவங்க புழங்கறது பழைய நோட்டுதான். பழைய நோட்டுன்னா இன்னும் ஏறக்குறைய ரெண்டு மடங்கு வெயிட் அதிகமாகும். 

சோ அவங்க ஒரு கிலோ கோக்கேயினை உள்ள கடத்திட்டு வந்தா குறைஞ்சது கால் கிலோ பணத்தை வெளியே கடத்திட்டு போக வேண்டி இருக்கு. நியூ யார்க்குக்கு ஒரு வருஷத்தில அஞ்சு அல்லது ஆறு லோட் கோக்கெயின் கொண்டு வந்து விக்கறாங்க. ஒவ்வொரு லோடும் பத்தாயிரம் கிலோவில் இருந்து பதினஞ்சு ஆயிரம் கிலோ வரைக்கும் இருக்கும். ஒரு லோட் கோக்கெயின் வித்தா வர்ற பணத்தோட எடை மூவாயிரம் கிலோவுக்கும் அதிகம்!"

நித்தின், "ஏன் எதாவுது பாங்க் மூலம் அதை ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியாதா?" ஜாஷ்வா, "பண்ணறாங்க ஆனா இப்ப எல்லாம் டீ.ஈ.ஏ (DEA என்பது Drug Enforcement Administration என்ற அமெரிக்க அரசாங்கத்தின் போதைப் போருள் தடுப்பு படை) பணப் பரிமாற்றத்தையும் ரொம்ப க்ளோஸா கவனிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இருந்தாலும் கொலம்பியாவுக்கு ஏற்றுமதி ஆகும் அமெரிக்க பொருள்கள் கூட பணத்தையும் பாக் பண்ணி அனுப்பறாங்க. வழில அடிக்கடி பிடி படறாங்க" சக்திவேல் முகத்தில் ஒரு பிரகாசத்துடன் கவனித்து கொண்டிருந்தான். 

 நித்தின், "சரி, இதெல்லாம் நமக்கு எதுக்கு?" ஜாஷ்வா, "நீயே கேட்டியே பாங்க் மூலம் ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியாதான்னு? அவங்க மாட்டிக்காத மாதிரி நம்ம மூணு பேரும் ஒண்ணு சேந்தா பணத்தை ட்ரான்ஸ்ஃபர் பண்ணி கொடுக்க முடியும். அதுக்கு நாம் அவங்க கிட்ட ஒரு சதவிகிதம் (percent) கமிஷனா வசூலிக்கலாம். அவங்க எடுத்துட்டு போற பத்து பில்லியன் டாலரையும் நம்மால நிச்சயம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணி கொடுக்க முடியாது. 

ஆனா ஒரு பில்லியன் (நூறு கோடி) டாலரை சுலபமா ட்ரான்ஸ்ஃபர் பண்ணி கொடுக்க முடியும். நமக்கு லாபம் ஒரு கோடி டாலர். நாம் மூணு பேரும் அதை சரி சமமா பகிர்ந்துக்கலாம்." நித்தின், "சாரி ஜாஷ்வா, நாங்க எங்க பாட் நெட்டை சட்ட விரோதமான செயலுக்கு உபயோகிக்கறது இல்லைன்னு முடிவு செஞ்சு இருக்கோம்" ஜாஷ்வா, "சட்ட விரோதமா இருக்கலாம். ஆனா சரியா இல்லையான்னு நீ பாக்கற விதத்தில இருக்கு. உங்க ஊர்ல நீ லஞ்சமே கொடுக்கறது இல்லையா? இல்லை, வ்ருமான வரி கட்டாம இருக்கறது இல்லையா?" சக்திவேல், "இல்லை ஜாஷ்வா, இது திருடனுக்கு துணை போற மாதிரி இல்லையா?" 

 ஜாஷ்வா, "நிச்சயம் இல்லை. நான் பாத்த வரைக்கும் அவங்க வியாபாரிங்க. இதே அமெரிக்கா அவங்களை சட்ட பூர்வமா விக்க அனுமதிச்சா சந்தோஷமா வருமான வரி கட்டி வித்துட்டு போவாங்க. அமெரிக்கா தடுக்க வேண்டியது அவங்க கொண்டு வர்றதை. அவங்க கொண்டு வந்து வித்ததுக்கு அப்பறம் அந்த பணத்தை பாங்கில போட விடலைன்னா அமெரிக்காவுக்குதான் நஷ்டம். ஒரு அமெரிக்க வங்கில போட வேண்டிய பணம் வெளி நாட்டுக்கு போய் சேருது. இங்க அவங்களை போட விட்டா யாரும் அதை அவ்வளவு சீக்கரம் எடுக்க மாட்டாங்க. ஸ்விஸர்லாந்துக்கு அப்பறம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி இந்த மாதிரி நாடுகளில் பணம் போடறது ரொம்ப பாதுகாப்பானதுன்னு அவங்களுக்கும் தெரியும்" 

 நித்தின், "சரி, நாம் இங்க இருக்கற அவங்களோட அக்கௌண்டில் பணம் போட்டதும் அதை வெளி நாட்டில் இருக்கற ஒர் அக்கௌண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணனும் அப்படித்தானே? நம்மால எப்படி அப்படி ட்ரான்ஸ்ஃபர் பண்ணி கொடுக்க முடியும். " ஜாஷ்வா, "யெஸ், முடியும். நான் விளக்கமா சொல்றேன்" சக்திவேல், "வெயிட். அவங்களா பண்ணிக்கறதுக்கு பதிலா நாம் பண்ணினா அதையும் டீ.ஈ.ஏ (DEA) பிடிப்பாங்கதானே?" ஜாஷ்வா, "அவங்க டெபாசிட் பண்ணற அக்கௌண்டில் இருந்து நேரடியா கொலம்பியாவில் இருக்கற ஒரு அக்கௌண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணினா நிச்சயம் பிடிப்பாங்க. 

ஆனா, அவங்க போட்ட பணத்தை இங்க இருக்கற ஒரு கம்பெனிக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி அந்த கம்பெனி அதை கொலம்பியாவில் இருக்கும் அவங்க அக்கௌண்டுக்கு டரான்ஸ்ஃபர் பண்ணினா ஒரு சந்தேகமும் வராது. அதிக பணப் புழக்கம் இருக்கற அடிக்கடி வெளி நாடுகளுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணற ஒரு கம்பெனியோட அக்கௌண்டில இந்த ட்ரான்ஸ்ஃபர் நடந்துச்சுன்னா. நிச்சயம் பிடிக்கவே போறது இல்லை. அதுவும் கொலம்பியாவில் இருக்கற வங்கிக்கே பணம் போய் சேரணும்னு அவங்க எதிர் பார்க்கறது இல்லை. 

ப்ரேசில், ஆர்ஜெண்டினா, வேனிஸுவேலா இந்த மாதிரி ஒரு நாட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணினா போதும்" நித்தின், "அவங்களே அந்த மாதிரி கம்பெனிகளை அணுகலாம் இல்லையா?" ஜாஷ்வா, "ஒரு கம்பெனியும் சட்ட பூர்வமா அதை பண்ண ஒத்துக்க மாட்டாங்க" சக்திவேல், "நாம் எப்படி பண்ண முடியும்?" ஜாஷ்வா, "அந்த கம்பெனிக்கு தெரியாமல்" நித்தின், சக்தி இருவரும் வாயடைத்துப் போய் அவனை சில கணங்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

 ஜாஷ்வா, "உங்க ரெண்டு பேரோட முகத்தையும் பாத்தா உங்களுக்கு அது சரி 
இல்லைன்னு படுது. இல்லையா?" சக்திவேல், "நான் முதல்லயே சொன்னேனே ஜாஷ்வா. மத்தவங்களுக்கு எந்த கெடுதலும் நாங்க பண்ண விரும்பலை" ஜாஷ்வா, "சரி, இதை சொல்லுங்க ரெண்டு பேரும். நீங்க இந்த வைரஸ் அப்பறம் பாட் நெட் விஷயத்தில் எதுக்கு புகுந்தீங்கன்னு எனக்கு தெரியாது. நான் இதுக்குள்ள வந்ததுக்கு காரணம் யாரை பழி வாங்கணும்னு தெரியாம மனசுக்குள்ள புகைஞ்சுகிட்டு இருக்கற ஒரு வெறி. அந்த வெறினால யாரையாவுது ஏமாத்தும்போது வர்ற ஒரு த்ரில். 

உங்களுக்கும் நிச்சயம் அந்த மாதிரி ஒரு காரணம் இருக்கும். அதே சமயம் நம்மால நல்லவங்க நஷ்டப் படக்கூடாதுன்னு நினைக்கறீங்க இல்லையா? அதனால தானே உங்க பாட் நெட்டை வேற எந்த விதத்திலும் இதுவரைக்கும் உபயோகப் படுத்தலை?" சக்திவேல், "நடுவில் இருக்கற கம்பெனியை ஏமாத்தி அவங்க அக்கௌண்ட் மூலம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணினா அவங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. ஒத்துக்கறேன். ஆனா, ஒரு வேளை டீ.ஈ.ஏ (DEA) அவங்களை கேள்வி கேட்டா என்ன பதில் சொல்லுவாங்க. மாட்டிக்குவாங்கதானே?" 

 ஜாஷ்வா, "நான் சொல்ல போற ப்ளான்ல யாரும் மாட்ட மாட்டாங்க. ஒவ்வொருத்தரும் மத்தவங்க மேல பழியை போடுவாங்க. யாருக்கும் ஒண்ணும் புரியாது" நித்தின், "சரி உன் ப்ளான் என்னன்னு சொல்லு. அதுக்கு அப்பறம் நாங்க யோசிச்சு முடிவு பண்ணறோம். என்ன சொல்றே சக்தி?" சக்திவேல், "நீ சொல்றது சரி. முழு விவரம் தெரிஞ்சதுக்கு அப்பறம் யோசிச்சு முடிவு பண்ணலாம்" ஜாஷ்வா, "பரவால்லை. இந்த அளவுக்கு உங்களோட நம்பிக்கையை முதல் சந்திப்பிலயே சம்பாதிப்பேன்னு நான் நினைக்கலை. ஏற்கனவே மணி பதினொண்ணு ஆச்சு. 

நாளைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே. நாளைக்கு என் வீட்டுக்கு லஞ்சுக்கு கூட்டிட்டு போறேன். அப்ப உங்களுக்கு விளக்கமா சொல்றேன்" சக்திவேல், "உன் மனைவி முன்னால இந்த மாதிரி விஷயத்தைப் பத்தி பேசலாமா?" ஜாஷ்வா, "நாம் அவ முன்னாடி பேசப் போறது இல்லை. அப்படி பேசினாலும் ஒரு பிரச்சனையும் இல்லை. என் மனைவிக்கு இந்த மாதிரி விஷயமெல்லாம் ஜுஜுபி (உண்மையில் அவன் சொன்னது chicken shit!)"
அடுத்த நாள் சந்திப்பதாகக் கூறி ஜாஷ்வா அவர்களிடமிருந்து விடை பெற்றான். 


 இருவரும் திரும்ப மௌனமாக வீடு நோக்கி நடந்து கொண்டு இருந்தனர். ஜாஷ்வா சொன்ன வாக்கியங்களில் ஒன்று இருவர் மனதிலும் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டு இருந்தது..

 "யாரை பழி வாங்கணும்னு தெரியாம மனசுக்குள்ள புகைஞ்சுகிட்டு இருக்கற ஒரு வெறி. அந்த வெறினால யாரையாவுது ஏமாத்தும்போது வர்ற ஒரு த்ரில். உங்களுக்கும் நிச்சயம் அந்த மாதிரி ஒரு காரணம் இருக்கும்"Shakthivel


No comments:

Post a Comment