Tuesday, January 27, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 11


இருவரிடையே நிலவிய மௌனத்திலும் ஒரு அன்னியோன்னியம் இழையோடியது.அவர்களுக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த ஜோடி இதற்கிடையே ... தீபா, "பூனாவிலயே நிறைய ஐ.டி கம்பெனிகள் இருக்கே. எதுக்கு பெங்களூர் போனே?" நித்தின், "பூனால எங்க தாத்தா பாட்டிதான் இருக்காங்க. அப்பா இருப்பது மும்பை" தீபா, "அம்மா?"
நித்தின் இறுகிய முகத்துடன் வானத்தை நோக்கி விரலை உயர்த்த அடுத்த கணம் தீபாவின் முகத்தில் இருந்த குறும்பு காணாமல் போனது, "சாரி .. எப்ப?" நித்தின், "நான் ப்ளஸ் டூவில் இருக்கும் போது" தீபா, "ஐ ஆம் சோ சாரி .. " நித்தின், "பரவால்லை .. இப்ப ரொம்ப ஞாபகம் வருவது இல்லை" தீபா, "ஆனா உங்க அப்பா இன்னமும் ரொம்ப கஷ்டப் படுவார் இல்லை?" நித்தின் ஆமென்று தலையாட்ட தீபா தொடர்ந்து, "எங்க அப்பா மாசத்தில் மூணு வாரம் ஊர் ஊரா சுத்திட்டு இருப்பார். ஆனா ஒவ்வொரு நாளும் அம்மாகூட ரெண்டு மூணு தடவை ஃபோன்ல பேசுவார்" நித்தின், "வேறு எதாவுது பேசுவோமே?" தீபா மௌனமானாள். நித்தின், "ஹேய், நான் கோவமா சொல்லலை. ஜாலியாதான் சொன்னேன் .. சரி, ஹைதராபாத்திலேயே நிறைய கம்பெனிகள் இருக்கும் போது நீ ஏன் டெல்லில வேலைல சேர்ந்தே?" தீபா, "அப்பா அம்மா கெடுபிடி இல்லாம கொஞ்ச நாள் ஜாலியா இருக்கலாம்ன்னுதான்" நித்தின், "ஏன் உங்க பேரண்ட்ஸ் ரொம்ப ஆர்தடாக்ஸா?" தீபா, "நோ வே. எங்க அப்பா ஒரு லாயர். அம்மா டாக்டர். என் இஷ்டத்துக்கு குறுக்கே நிக்க மாட்டாங்க" நித்தின், "அப்பறம் டெல்லி ஏன்?" அதுவும் அரசாங்க வேலைல ஏன் சேர்ந்தே? உனக்கு பாத்து இருக்கும் மாப்பிள்ளை டெல்லில இருக்கானா?" தீபா, "வேறு எதாவுது பேசலாமே?" நித்தின், "ஓ, சரி, என்ன வேலை பண்ணறான்?" தீபா, "யாரு?" நித்தின், "உனக்கு பாத்து இருக்கும் மாப்பிள்ளை" அவன் கழுத்தை நெரிப்பதுபோல் பாவனையுடன், "க்ர்ர்ர் ... எனக்கு இன்னும் மாப்பிள்ளை பாக்கலை .. இன்னொரு தடவை ஏன் டெல்லி ஏன் அரசாங்க வேலைன்னா உன்னை கொன்னுடுவேன். வேற எதாவுது பேசலாம்" நித்தின், "பி.டெக் முடிக்கும் போது கேம்பஸ் இண்டர்வ்யூவில எந்த கம்பெனியிலும் கிடைக்கலையா? " மறுபடி அவன் எதைப் பற்றி கேட்க வருகிறான் என்று அறிந்தும் அவனுடய வார்த்தை விளையாட்டில் கலந்து கொண்டாள் ... தீபா, "பி.டெக் முடிச்சதும் மேல படிக்கணும்னு நான் கேம்பஸ் இண்டர்வ்யூ எதுக்கும் போகலை" நித்தின், "மேல படிச்சியா?" தீபா, "ம்ம்ம் ... ஐ.ஐ.எஸ்ஸில எம்.டெக் படிச்சேன்" நித்தின், "ஸ்கூல் ஆஃப் ஆடோமேஷனிலா (IISc School Of Automation)" தீபா, "ஆமா .. " நித்தின், "சோ, நீ வேலைக்கு சேந்து ரெண்டு மூணு மாசம்தான் ஆச்சு" தீபா, "ஆமா .. " நித்தின், "ஏன்? ஏன் NIC? .... நான் உன் கிட்ட கேக்கலை .. நானே என்னை கேட்டுக்கறேன். என்ன காரணமா இருக்கும்ன்னு யோசிக்கறேன்" என்ற படி வானத்தைப் பார்த்து தலையை சொறிந்த அவனது குறும்பை தீபா மிகவும் ரசித்தாள். தீபா, "எம்.டெக் ப்ராஜெக்ட் நான் NICஇல் பண்ணினேன். வந்தனா பழக்கமானா. எனக்கு அந்த இடம் ரொம்ப பிடிச்சு இருந்துது. எங்க அப்பா அம்மா நான் வேலைக்கு போய் சம்பாதிக்கணும்னு எதிர் பார்க்கல. சோ, அங்கே சேர்ந்தேன். கூலான வேலை. பெருசா ஒண்ணும் கிழிக்கறது இல்லை. நிறைய ஃப்ரீ டைம். இதெல்லாம் எனக்கு பிடிச்சு இருந்துது. இதுக்கு மேல ஏன் சேர்ந்தேன்னு காரணம் சொல்ல தெரியலை" என்று அழகாக பொய் சொன்னாள். நித்தின், "சரி, இனி இன்னைக்கு நிம்மதியா தூங்குவேன். தாங்க்ஸ்." தீபா, "என்ன உனக்கு அவ்வளவு க்யூரியாசிடி?" நித்தின், "யாராவுது ஒளிச்சு வெச்சா, மறைச்ச எனக்கு எப்படியாவுது கண்டு பிடிக்கணும்னு இருக்கும். என் நேச்சர் அப்படி அதில் ஒரு த்ரில்" தீபா, "அப்படியா நான் ஒர் புதிர் போடறேன் கண்டு படி பாக்கலாம்" என்றபடி ஒரு கணித புதிரை சொன்னாள். நித்தின், "ஓ, சாம் லாய்டோட புதிர்தானே அது, " என்றபடி அதன் விடையை சொன்னான். அடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் புதிர் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தனர். தீபா சொன்ன அத்தனை புதிர்களுக்கும் நித்தின் விடையளித்தான். தீபாவும் நித்தினின் அத்தனை புதிர்களுக்கும் விடையளித்தாள். தீபா, "சோ, யாராவுது மறைச்சா அதை கண்டு பிடிக்கறதில் ஒரு த்ரில். ஆனா நீ மறைக்கறதை யாரும் கண்டு பிடிக்கக் கூடாது அப்படித்தானே?" நித்தின், "அதிலயும் ஒரு த்ரில்தான்!" தீபா, "இப்ப சொல்லு நீ எந்த காலேஜ்ல படிச்சே" நித்தின், "அதான் சொன்னேனே சாதாரண காலேஜ்ன்னு" தீபா, "அதை என்னை நம்ப சொல்றியா?" நித்தின், "எங்க அப்பா தனியா இருந்ததுனால் வெளியூருக்கு போய் படிக்க விரும்பல. அதனால் மும்பையிலேயே சீட் கிடைச்ச காலேஜில் சேர்ந்தேன்" தீபா, "சரி, ஐ.ஐ.டி மும்பை சரி தானே?" என்றாள் நித்தின் அதற்கு பதிலாக புன்னகைத்தான். தீபா, "அப்ப சக்தி? சென்னையா?" நித்தின் வாய்திறக்காமல் ஆமென்று தலையாட்டும் விதத்தை வெகுவாக ரசித்தாள். இருவருக்கும் இடையே குறும்பு கலந்த ஒரு அன்னியோன்னியம் தோன்றியது. க்யூ நகரத் தொடங்க நால்வரும் சுற்றுலா பயணத்தை தொடங்கினர். மதியம் இரண்டு மணி வரை ஒரு தீவில் இருந்த சுதந்திர தேவி சிலையையும் அருகே எல்லிஸ் ஐலண்ட் என்ற இன்னொரு தீவில் இருந்த சரித்திரப் புகழ் பெற்ற கட்டிடங்களையும் சுற்றிப் பார்த்தபின் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தனர். இடையே பல் வேறு இடங்களிலும் சக்தியும் தீபாவும் கொண்டு வந்து இருந்த டிஜிடல் கேமராக்களில் பல புகைப் படங்கள் பதிவாகி இருந்தன.Sunday, 17 August 2008 2:00 PM ஞாயிறு, ஆகஸ்ட் 17 மதியம் 2 மணி கடைசியாக எல்லிஸ் ஐலண்டில் ஃபெர்ரியில் ஏறியவர்களிடையே மௌனம் நிலவத் தொடங்கியது. வந்தனா, 'எதையாவுது சொல்லி இன்னும் கொஞ்ச நேரம், இல்லை, இன்னைக்கு முழுக்க என் கூடவே இரேன். ப்ளீஸ். நீ அபத்தமா எதாவுது சொன்னாலும் நான் கண்டுக்க மாட்டேன்' என்று மனதுக்குள் சக்திக்கு விண்ணப்பித்தாள். தீபா, 'உன்னை என்ன சொல்லி இன்னும் கொஞ்ச நேரம், இல்லை, இன்னைக்கு முழுக்க என் கூடவே இருக்க வைக்கலாம். அபத்தமா எதாவுது சொன்னா உடனே கிண்டலடிப்பே. அதுக்கெல்லாம் நான் அவமானப் படப் போறது இல்லை' என்று நித்தினிடம் மனதுக்குள் முறையிட்டாள். மௌனமாக ஃபெர்ரியில் இருந்து கார் பார்க்கை அடையும் போது. சக்தி மௌனத்தை கலைக்கும் படி, "ரெண்டு பேரும் என்ன மாதிரி லஞ்ச் சாப்பிடலாம்ன்னு இருந்தீங்க?" என்றான். அவன் கேட்ட கேள்வி இருவரையும் நோக்கி இருப்பினும் அவன் கண்கள் வந்தனாவின் முகத்தில் இருந்து அகலவில்லை. 'ஐய்யோ பிரியப் போறோம்; அதுக்குள்ள எதாவுது கேக்கணுமே' என்று யோசித்துக் கொண்டு இருந்த தீபா, சக்தி அப்படிக் கேட்டதும் குதூகலத்துடன் அவளையறியாமல், "எஸ்!" என்றாள். நித்தின், "சக்தி, எஸ் அப்படின்னு ஒரு லஞ்ச் இங்க எங்கே கிடைக்கும்ன்னு உனக்கு தெரியுமா?" . அசடு வழிந்து அவனை முறைத்தபடி தீபா, "அகோர பசி. சாப்பாடுன்னு சக்தி சொன்னதும் 'எஸ்'ன்னேன். அதுக்குள்ள காலை வாராதே. எனக்கு எந்த மாதிரி லஞ்ச்ன்னாலும் பரவால்லை" காலை அவர்களது ஹோட்டலில் சண்டே ஸ்பெஷல் ப்ரேக்ஃபாஸ்ட் புஃப்ஃபே (Sunday Special Breakfast Buffet) உணவு அருந்தும் போது, “ரெண்டு இடத்தையும் பாத்து முடிக்க சாயங்காலம் ஆனாலும் ஆகலாம். சோ, இப்ப நல்லா ஒரு வெட்டு வெட்டிக்கலாம். கூடவே, இந்த ஸ்வீட் பன்னும் ஜூஸ் பாக்கெட்டும் ரெண்டு எடுத்து பாகில் போட்டுக்கலாம்” என்று தீபா சொன்னது நினைவுக்கு வந்தது. தீபா நமட்டுச் சிரிப்புடன் தன் கண்களை தவிர்ப்பதைக் கண்டு அவளும் புன்னகைத்தவாறு வேறெங்கோ பார்த்தாள். சக்தி தன் காரில் வந்தனாவை அழைத்துக் கொண்டு சோஃபியா'ஸ் ஆஃப் லிட்டில் இட்டலி (Sofia’s Of Little Italy) எனும் இத்தாலிய உணவகத்தை அடையுமுன் நித்தினும் தீபாவும் அங்கு சென்று டேபிளுக்கு சொல்லி விட்டு வெளியில் காத்திருந்தனர். சுவற்றோரம் இருந்த டேபிளில் சுவற்றை ஒட்டி இருந்த இருக்கைகளில் வந்தனாவும் அவளுக்கு எதிரில் சக்தியும் அமர்ந்தனர். சக்தியின் கால்கள் அடிக்கடி வந்தனாவின் கால்களை உரசியபடி இருந்தது. சக்தி வந்தனாவைப் பார்த்து, "சாரி .. " அவள் பதிலளிக்குமுன் தீபா, "என்னாச்சு?" நித்தின், "நீளமா கால் இருக்கறதுனால வரும் தொந்தரவு" என்றான். வந்தனா, "இட்ஸ் ஓ.கே, நல்லா ஸ்ட்ரெட்ச் பண்ணிக்கோ. எனக்கு தொந்தரவு இல்லை" என்ற பிறகு சக்தி சுவாதீனமாக கால்களை நீட்ட இருவரின் கால்களும் உறவாடிய வண்ணம் இருந்தன. நித்தினும் சக்தியும் தங்கள் அளவுக்கு பெண்களும் பசியுடன் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் ஆர்டர் செய்து இருந்தனர். இப்போதோ அந்த பாஸ்தாவை சாப்பிட முடியாமல் திணறிய வந்தனாவையும் தீபாவையும் சுவாரசியமாக பாத்துக் கொண்டு இருந்தனர். தீபா, "நீ இவ்வளவு ஆர்டர் பண்ணுவேன்னு நான் நினைக்கலை. பாக்கியை பாக் பண்ணி எடுத்துட்டு போயிடலாமா?" நித்தின், "போதும்ன்னு சொல்லு. நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்" என்றதும் மறுபடி அசடு வழிந்தாள். நித்தின், "போதும் வெச்சுடு. இங்கே டெஸர்ட்ஸ் ரொம்ப நல்லா இருக்கும். ஆனா பேர் ஒண்ணும் வாயில் நுழையாது. முன்னாடி ஷோ கேஸில் வெச்சு இருக்கறதை பாத்து செலக்ட் பண்ணிட்டு வரலாம்" என்று எழுந்ததும் அவள் சாப்பிட்டுக் கொண்டு இருந்ததை அப்படியே விட்டு விட்டு அவனுடன் சென்றாள். சக்தி, "ஆக்சுவலி, எனக்கு இன்னும் கொஞ்சம் வேணும். உனக்கு போதும்ன்னா எனக்கு கொடு" வந்தனா தன் கைகளை உயர்த்தினாள். அவள் மிச்சம் வைத்து இருந்த பாஸ்தாவை எந்த விதமான சங்கோஜமும் இல்லாமல் சக்தி சாப்பிடுவதை பார்த்துக் கொண்டு இருந்தாள் சக்தி, "நீயும் போய் உனக்கு வேணுங்கற டெஸர்ட்டை செலக்ட் பண்ணிட்டு வா" வந்தனா, "உனக்கு?" சக்தி, "நான் எதுன்னாலும் சாப்பிடுவேன். நித்தினே பாத்து எனக்கும் செலக்ட் பண்ணிடுவான்" வந்தனா, "அப்ப எனக்கும் அதையே ஆர்டர் பண்ணலாம்" ஒரு கணம் சாப்பிடுவதை நிறுத்தி அவளை நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்களை தவிர்த்து சிரத்தையுடன் அருகில் இருந்த டிஸ்ஸ்யூவை எடுத்து கை துடைத்துக் கொண்டு இருந்தாள். அவள் முகத்தில் படர்ந்து இருந்த நாணத்தை அவன் கவனிக்க தவறவில்லை. சக்தி, "தயவு செஞ்சு அப்படி சொல்லாதே. நீ போய் உனக்கு பிடிச்சதை எடுத்துட்டு வா. நித்தின்கிட்டே உன் செலக்ஷன் என்னன்னு சொல்லு” என்று வற்புறுத்தி அவளை அனுப்பி வைத்தான். முன்புறம் ஷோகேஸின் எதிரே நின்றிருந்த நித்தின்-தீபா அருகே சென்ற வந்தனா அந்த ஷோகேஸில் வைத்து இருந்த வெவ்வேறு வகையான ஐஸ் க்ரீம், கஸ்டர்ட், ஜெல்லாட்டோ போன்ற டெஸர்ட்டுகளின் ஒன்றை தேர்ந்து எடுத்த பின் நித்தினிடம் சொன்னாள். நித்தின், "பரவால்லை நாம் மூணு பேருக்கும் வேற வேற செலக்ட் பண்ணி இருக்கோம். சக்திக்கு இந்த மூணைத் தவிர வேற ஒண்ணை நான் செலக்ட் பண்ணி இருந்தேன். இன்னிக்கு சக்திக்கு வேட்டைதான்" வந்தனா, "ஏன், " நித்தின், "அவன் ஒரு இனிப்புப் பிரியன். அவனுதை தவிர நம் ஐஸ் க்ரீம்லயும் ஒரு ஸ்பூனாவுது எடுத்து ஸுவாஹா பண்ணிடுவான். இன்னைக்கு நாலு வகையான டெஸர்ட்ஸ் அதான் அவனுக்கு வேட்டைன்னேன்" அதற்கேற்றார் போல் நால்வரும் டெஸர்ட்டுகளை உண்டு கொண்டு இருக்கும் போது, 'இது எப்படி இருக்குன்னு பாக்கலாம்' என்றவாறு அவனுடையதை தவிர மற்ற மூவரது கிண்ணங்களில் இருந்தும் ஒரு பெரிய ஸ்பூனில் எடுத்து ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் சாப்பிட்டதை வந்தனா மிகவும் ரசித்தாள். தீபாவளியின் போது அவள் தந்தை, பெரியப்பா, சித்தப்பா மற்றும் மனீஷ் எல்லோரும் பல வகையான இனிப்புக்களைக் கொண்டு வந்து வீட்டை நிறப்புவது நினைவுக்கு வந்தது. 'சோ, இதுதான் உன்னோட வீக்னஸா? வர்ற தீபாவளி சமயத்தில் நீ இங்கே இருப்பே. அடுத்த தீபாவளி நீ என் வீட்டுக்கு வரணும். உனக்கு போதும் போதுங்கற அளவுக்கு உனக்கு ஸ்வீட்ஸ் கொடுத்து நான் பாக்கணும்' என்று மனதுக்குள் அவனிடம் பேசினாள்.சாப்பிட்டு முடித்து வெளியில் வந்ததும் இம்முறை மற்றவரை முந்திக் கொண்டு. "நித்தின், இன்னைக்கு உன் ப்ரோக்ராம் என்ன? எனக்கு டைம் ஸ்கொயர் பாக்கணும்; அப்பறம் நைன் இலவன் (9/11) WTC (World Trade Centre) சைட்டுக்கு கூட்டிட்டு போய் காண்பிக்கறயா?"
நித்தின், "எனக்கு ப்ரோக்ராம் ஒண்ணும் இல்லை ... ஆனா" என்று இழுத்தபடி சக்தியை பார்க்க, தனக்கு அதில் விருப்பமில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக சக்தி, "நித்தின், நீ கூட்டிட்டு போறயா; நான் கிளம்பறேன்" என்றதும் வந்தனா, "தீபா, எனக்கு இப்ப ஷாப்பிங்க் போக விருப்பமில்லை. நீ போயிட்டு வாயேன். நான் திரும்பி ஹோட்டலுக்கு போறேன்" என்றாள். அதற்காகவே காத்து இருந்ததைப் போல தீபா, "சரி, நித்தின் நாம் போலாமா" நித்தின், "வந்தனா, 9/11 சைட் உன் ஹோட்டலுக்கு பக்கத்திலயே இருக்கு அங்கே முதல்ல போய் பாத்துட்டு உன்னை ஹோட்டலில் இறக்கி விட்டுடறேன்" வந்தனா அவசரமா, "அதுக்கு நான் வரலை .." சொன்னதைக் கண்டு சக்தி துணுக்குற்றான். சக்தி, "இல்லை டைம் ஸ்கொயருக்கு நீ வடக்கே போகணும். திரும்பி வரும் வழியில் 9/11 சைட்டுக்கு கூட்டிட்டு போய் காட்டு. நான் வந்தனாவை அவ ஹோட்டலில் விட்டுட்டு போறேன்" பிறகு வந்தனாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டான். போகும் வழியில் வந்தனாவிடம், "ஏன் 9/11 சைட்டுக்கு போகலைன்னு ரொம்ப பதட்டத்தோட சொன்னே?" சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, "என் அண்ணன் ஸ்பெயினில் இருக்கும் போது அல்-கைதா தீவிரவாதத் தாக்குதலில் இறந்தான். அதை இப்ப நினைச்சாக்கூட .. " என்று மட்டும் சொன்னாள். அவள் அதற்கு மேல் தொடருமுன் சக்தி, "ஓ ஐ அம் சாரி, நீ எப்படி ஃபீல் பண்ணுவேன்னு எனக்கு புரியுது. இட்ஸ் ஓ.கே மேல எதுவும் சொல்ல வேண்டாம்" என்றபடி அருகில் அமர்ந்தவள் கையை பற்றினான். சக்தி, "உனக்கு ஷாப்பிங்க்ன்னா பிடிக்காதா?" வந்தனா, "எனக்கு இப்ப ஷாப்பிங்க் போற மூட் இல்லை" சக்தி, "ஹோட்டலுக்கு போய் என்ன பண்ணப் போறே?" வந்தனா, "தெரியலை. எதாவுது படிச்சுட்டு இருப்பேன்" சக்தி, "உனக்கு வேற எதாவுது இடத்துக்கு போகணும்ன்னு இருக்கா?" வந்தனா, "ஆக்சுவலா, சென்ட்ரல் பார்க் ரொம்ப தூரமா?" சக்தி, "ம்ம்ம் .. கொஞ்சம் தூரம்தான், ஒண்ணு செய்யலாம். உன் ஹோட்டலில் காரை நிறுத்திட்டு சப்வேல போலாம். உனக்கும் சப்வே பழக்கமான மாதிரி இருக்கும். அடுத்த ரெண்டு வாரமும் டாக்ஸியை மட்டும் நம்பி இருந்தா ரொம்ப செலவு ஆகும். Besides, சப்வேல போனா சீக்கரமா போலாம்" ஆறு மணிவரை நேரம் போனது தெரியாமல் பேசியபடி சென்ட்ரல் பார்க்கை சுற்றி திரிந்தனர். வந்தனா தன் மனதில் சக்தியிடம் தோன்றிய இனம் புரியாத நெருக்கத்தை மறைக்க முயன்று தோற்றாள். அவளை அறியாது அவன் கைகளை, புஜத்தை பற்றுவதும் பிறகு உணர்ந்து விடுவிப்பதுமாக நடந்தாள். சக்தி அவளது அவஸ்தையை கவனித்தாலும் ஓரளவு நெருங்கிய நண்பனைப் போல் மட்டும் பேசியபடி அவளுடன் நடந்தான். தன்னிடம் அவள் நெருக்கமாக பழக முயல்வதை நன்கு உணர்ந்தான். இருப்பினும் அவள் தன்னிடம் எதையோ மறைக்கிறாள் என்பதையும் உணர்ந்தான். ஏற்கனவே இருந்த அவனது முன் எச்சரிக்கை உணர்வு அவர்களின் ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் ஆரம்பித்ததில் இருந்து பன் மடங்காகி இருந்தது. 'இவள் எனக்கு வேண்டும்' என்று மனதின் ஒரு பாதி கூக்குரலிட்டாலும் மறு பாதி அபாய மணிகளை ஒலித்த வண்ணம் இருந்தது. தீபாவை அழைத்துச் சென்ற நித்தினும் இதே அலைக்கழிப்புக்கு உள்ளானான். அவள் அரசாங்க வேலையில் சேர்ந்ததற்கு அவள் சொன்ன காரணங்கள் எதையும் அவன் மனம் ஏற்கத் தயாராக இல்லை. உணவருந்தும் போது அவர்கள் எஃப்.பி.ஐயில் எடுத்துக் கொள்ளப் போகும் ட்ரெயினிங்க்கை பற்றி சக்தி விவரம் கேட்க இருவரும் சொன்னவற்றில் பல ஓட்டைகள் இருந்ததை கண்டான். இருப்பினும் தீபாவிடம் அவன் ஈர்க்கப் படுவதை தவிர்க்க முடியாமல் தவித்தான். சக்தியை போல் அல்லாமல் அவளிடம் துளியும் தன் நெருக்கத்தை அவன் காட்டாவிட்டாலும் அவள் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு உரிமையுடன் உறவாடுவதை மனதுக்குள் மிகவும் ரசித்தான். சென்ட்ரல் பார்க்கில் இருந்து சக்தியும் வந்தனாவும் மில்லினியம் ஹில்டன் ஹோட்டலை அடைந்து பிரிய மனமில்லாமல் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருக்கையில் நித்தின் தீபாவுடன் வந்து சேர்ந்தான். நால்வரும் பிறகு சந்திப்போம் என்று விடை பிரிந்தனர். லிஃப்டில் இருக்கும் போதே தீபா பேச்சைத் தொடங்கினாள்: தீபா, "எப்படி இருந்துது சென்ட்ரல் பார்க்?" வந்தனா, "டைம் ஸ்கொயர் எப்படி இருந்துது?" இருவர் முகத்திலும் இனம் புரியாத நாணம். தீபா, "Do IPS officers also blush? (ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு கூட வெட்கத்தில் முகம் சிவக்குமா?") வந்தனா, "நீ மட்டும் என்ன? மாங்க்ஸ் பாட் நெட்டை கண்டு பிடிச்ச மாதிரி உன் முகம் பிரகாசிக்குது." தீபா, "ஓ.கே. ஐ லைக் நித்தின். ஐ லை ஹிம் அ லாட். ஒத்துக்கறேன். ஆனா நானாத்தான் அவன் கிட்ட வலிய பேச வேண்டி இருக்கு. அவனுக்கும் என் மேல இன்ட்ரெஸ்ட் இருக்குன்னு நல்லா தெரியுது. ஆனா அவன் எப்பவும் ஒரு டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணறான். இப்ப நீ உண்மையை சொல்லு உனக்கு சக்தியை ரொம்ப பிடிச்சு இருக்குதானே?" வந்தனா, "ஆமா. அவனை மாதிரி ஒருத்தனை எந்த பொண்ணுக்கும் பிடிக்கும்" தீபா, "கம் ஆன் வந்தனா! நமக்குள்ள ஒளிவு மறைவு வேண்டாம். ப்ளீஸ்" வந்தனா, "ம்ம்ம்ம்... ரொம்ப பிடிச்சு இருக்கு. ஆனா நீ சொன்ன மாதிரி ஃப்ரெண்ட் அப்படிங்கற எல்லைக் கோட்டை கொஞ்சமும் தாண்டலை. ஆனா சக்தி ஏன் அப்படி நடந்துக்கறான்னு எனக்கு தெரியும்" தீபா, "நம் வேலையைப் பத்தி சொன்னதை அவன் நம்பலை. சரியா?" வந்தனா, "நாம் பொய் சொல்றோம்ன்னு அவனுக்கு நல்லா தெரியுது" தீபா, "என்ன பண்ணலாம்?" வந்தனா, "தெரியலை தீபா" ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நித்தின் அவனது ஃப்ளாட்டை அடைந்த பிறகு சக்தியை கை பேசியில் அழைத்தான். சக்தி, "என்னடா?" நித்தின், "How was Central Park?" (எப்படி இருந்தது சென்ட்ரல் பார்க்?)" சக்தி, "How do you like Deepa? (தீபா எப்படி இருந்தா?)" நித்தின், "ம்ம்ம்ம் .. ஐ லைக் ஹர். ரொம்ப பிடிச்சு இருக்கு. வாட் அபௌட் யூ?" சக்தி, "எனக்கும் வந்தனாவை ரொம்ப பிடிச்சு இருக்கு .. ஆனா" நித்தின், "ஆனா எதையோ மறைக்கற மாதிரி இருக்கு இல்லையா?" சக்தி, "எஸ். ஒண்ணு நிச்சயம். அது அவங்க ரெண்டு பேரும் செய்யும் வேலை சம்பத்தப் பட்டதுங்கறது தெளிவா தெரியுது" நித்தின், "என்ன பண்ணலாம்?" சக்தி, "தெரியலைடா"16 August 2008 9 AM FBI New York Field Office, 23rd Floor, Federal Plaza, NY ஆகஸ்ட் 16 2008 காலை 9 மணி எஃப்.பி.ஐ நியூ யார்க் கிளை, 23ம் தளம், ஃபெடரல் ப்ளாஸா கட்டிடம், நியூ யார்க் சொன்னது போல் காலை எட்டரை மணிக்கு சான்ட்ரா ஆஸ்டின் அவர்களை ஹோட்டலில் இருந்து அழைத்துப் போக வந்து இருந்தாள். சான்ட்ரா, "நேத்து எப்படி இருந்தது உங்கள் சுற்றுலா?" வந்தனா, "நல்லா என்ஜாய் பண்ணினோம்" சான்ட்ரா, "எப்ப எல்லிஸ் ஐலண்டில் இருந்து திரும்பி வந்தீங்க?" தீபா, "ரெண்டு மணி இருக்கும்" சான்ட்ரா, "அதுக்கு அப்பறம் என்ன பண்ணினீங்க" வந்தனா, "ஸோஃபியா'ஸ் ஆஃப் லிட்டில் இட்டலி என்கிற ரெஸ்டாரண்டில் லஞ்ச் சாப்பிட்டோம்" என்ற பிறகு சற்று தயங்கியபின் "அப்பறம் நான் என் ஃப்ரெண்ட்கூட சென்ட்ரல் பார்க்குக்கு போனேன். இவ அவ ஃப்ரெண்ட்கூட டைம் ஸ்கொயர்ல ஷாப்பிங்க் பண்ணப் போனா" சான்ட்ரா, "ஓ, உங்களுக்கு இங்க ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களா. இந்தியர்களா?" தீபா, "ஆமா, இந்தியாவில் இருந்து ஒரு வருஷ ஆன்-சைட் அசைன்மென்ட்டில் வந்து இருக்காங்க" என்றபடி நித்தின் பணி புரியும் அமெரிக்க கம்பெனியின் பெயரை சொன்னாள். சான்ட்ரா, "குட், இங்கே உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் இருக்கறது ஒரு விதத்தில் நல்லதுதான்"
தீபா, "ஏன்?" சான்ட்ரா, "ரெண்டு வாரத்துக்கு மாங்க்ஸ் பாட் நெட்டை பத்தி கத்துக்கறதுக்கு ஒண்ணும் இல்லை. இந்த வாரம் மாங்க்ச் பாட் நெட்டை பத்தி எங்களுக்கு தெரிஞ்ச விஷயம் எல்லாம் சொல்லப் போறோம். அடுத்த வாரம் வேட்டையை எந்த கோணத்தில் எல்லாம் செய்யலாம்ன்னு டிஸ்கஸ் பண்ணி முடிவெடுக்கப் போறோம். அவ்வளவுதான். பாக்கி எல்லாம் நீங்க இந்தியாவுக்கு போய் தொடரப் போறீங்க" வந்தனா, "அப்ப நீதான் அடுத்த ரெண்டு வாரம் எங்களுக்கு மாங்க்ஸ் பாட் நெட்டை பற்றி விளக்கப் போறயா?" சான்ட்ரா, "நானும் தான். இந்த மாங்க்ஸ் பாட் நெட்டை முதலில் இருந்து ட்ராக் பண்ணிட்டு வந்தது என் சீனியர் ஷான் ஹென்றி (Shawn Henry). ஆறு மாசத்துக்கு முன்னாடி இருந்துதான் நான் அவருக்கு கீழ வேலை செய்ய ஆரம்பிச்சேன். நீங்க அவரைத்தான் முதலில் மீட் பண்ணப் போறீங்க" வந்தனா, "சோ, சான்ட்ரா? நீ எஃப்.பி.ஐ ஃபீல்ட் ஏஜண்டா? (Are you an FBI field agent?)" சான்ட்ரா, "ஃபீல்ட் ஏஜண்ட் பதவிதான். ஆனா நானும் தீபாவைப் போலத்தான்" தீபா, "அப்படின்னா?" சான்ட்ரா, "டெக்னிகல் எஜுகேஷன் (Technical Education) முடிச்சுட்டு நேரடியா எஃப்.பி.ஐயில் சைபர் க்ரைம் பிரிவில் சேர்ந்தேன்" தீபா, "ஏன் உனக்கு மைக்ரோஸாஃப்ட் மாதிரி கம்பெனில வேலை செய்ய பிடிக்கலையா?" சான்ட்ரா, "எனக்கு விருப்பம் இல்லை. சம்பளமும் அவ்வளவு வித்தியாசம் இல்லை. கூகிளில் கிடைச்சு இருந்தா சேர்ந்து இருப்பேன்" எஃப்.பி.ஐ அலுவலகத்தை அடைந்து அவர்களுக்கென கணிணிகள் சகிதம் ஒதுக்கப் பட்டு இருந்த கான்ஃபரென்ஸ் ரூமை அடைந்தனர். சிறிது நேரத்தில் தொடக்கத்தில் இருந்து நான்கு மாதங்களுக்கு முன்பு வரை மாங்க்ஸ் பாட் நெட்டை கண்காணித்து வந்த ஷான் ஹென்றி (Shawn Henry) வந்தார். ஷான் ஹென்றி, "ஹாய் வந்தனா, தீபா, எப்படி இருக்கீங்க? ஹோட்டல் வசதியா இருக்கா? வந்தனா, "ஹெல்லோ சார். ரொம்ப வசதியா இருக்கு சார்." ஷான், "'சார்' போட்டு கூப்பிட வேண்டாம் ஷான் அப்படின்னு பெயர் சொல்லி கூப்பிடுங்க" வந்தனா, "ஓ.கே ஷான். " ஷான், "நீ ஒரு பயிற்சி பெற்ற போலீஸ் அதிகாரின்னு கேள்விப் பட்டேன். நானும் உன்னைப் போலத்தான். போலீஸ் வேலையில் இருந்து சைபர் க்ரைமுக்கு வந்தவன். தீபா, நீ சான்ட்ரா மாதிரி காலேஜ் முடிச்சதும் R&AWவில் சேர்ந்தேன்னு கேள்விப் பட்டேன்" தீபா (தன் புராணம் அவருக்கு தெரியவில்லை என்ற பெருமூச்சுடன்), "எஸ் ஷான்" ஷான், "ஸோ, ஷால் வீ ஸ்டார்ட்?" வந்தனா, "எஸ் ... ப்ளீஸ்" ஷான், "முதல் முதலா மாங்க்ஸ் பாட் நெட்டை பத்தி அதை உருவாக்கினவங்களே ஹாக்கர்கள் மத்தியில் அறிவிச்சாங்க. கில்9 (KILL9), மோர்லா (M0RLA) அப்படிங்கற ஐ.டி உபயோகிக்கும் ரெண்டு பேர் இதை உருவாக்கி இருக்காங்க. இந்த கில்9ம் மோர்லாவும் ஏற்கனவே ஹாக்கர்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமானவங்க. " என்றவரை இடைமறித்து தீபா, "ஷான், இவங்க ரெண்டு பேரும் அந்த கொரியன் கம்பெனி நடத்தின ஹாக் செய்யும் போட்டியில் ... " என்ற பிறகு "சாரி, நீங்க பேசும் போது குறுக்கே பேசிட்டேன். நீங்க கண்டின்யூ பண்ணுங்க ..." ஷான், "யெஸ், நீ சொல்றது சரிதான். நீ குறுக்கே பேசினதைப் பத்தி எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. இன் ஃபாக்ட், நானே முழுக்க முழுக்க விளக்கிட்டு க்ளாஸ் எடுக்கற மாதிரி இல்லாமல் ஒரு உரையாடல் மாதிரி இருந்தா யாருக்கும் தூக்கம் வராது. எனக்கு அந்த போட்டியைப் பத்தி முழுசா தெரியாது. நீயே சொல்லேன்" தீபா உடனே கில்9ம் மோர்லாவும் சேர்ந்து கொரிய நாட்டு கம்பெனி நடத்திய கண் துடைப்புப் போட்டியில் எப்படி அவர்களின் கண் துடைப்பை பகிரங்கப் படுத்தினார்கள் என்று விளக்கினாள். மற்ற மூவரின் முகத்திலும் ஆச்சர்யம் படர்ந்தது.

No comments:

Post a Comment