Friday, January 23, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 8


தன் சித்தப்பா யோகேஷ்வரிடம் முறையிட்டாள். யோகேஷ்வர் ராஜஸ்தான் தலைமை காவல் அதிகாரியிடம் பேசி (சிபாரிசு செய்து!) அவளை ராஜஸ்தான் காவல் துறையில் பணியிட வாய்ப்பளித்தார். இருப்பினும், அந்த கல்லூரி டைரக்டர், அடுத்த ஆறு மாதத்திற்குள் அவள் விரும்பினால் ஒரு மத்திய அரசு பிரிவுக்கு மாற்றிக் கொள்ள அவளுக்கு வாய்ப்பளிப்பதாக வாக்களித்து இருந்தார். தவுசாவில் A.S.P Under Training ஆக அவள் பணியில் சேருவதை பார்ப்பதற்காகவே அவளது பெற்றோர் உதைப்பூரில் இருந்து வந்து இருந்தனர். அவளுடன் சில வாரங்கள் தங்கி இருந்தனர். வீரேந்தர் ராத்தோட்டின் கனவை நினைவாக்கும்படி அவர் முன் காக்கி சட்டையில் வலம் வந்தாள். ஆனாலும் எதிர் காலத்தைப் பற்றி அவள் மனதில் ஒரு சிறு கேள்வி குறி இருந்து வந்தது. அடுத்த இரண்டு நாட்களில் அவள் பரிபூரண குணமடைந்து இருந்தாள். மறுபடி அவளது பணியைப் பற்றி பேச்சு எழுந்தது. அவள் சித்தப்பா அவளிடம், "என்ன சொல்றே வந்தனா, நீ ட்ரெயிங்க் முடிக்கும் போது உங்க டைரக்டர் சொன்ன மாதிரி வேற பிரிவுக்கு (cadreக்கு) மாத்திக்கறயா?"
வந்தனா, "அப்பா நீங்க என்ன சொல்றீங்க? முக்கியமா உங்களுக்காகத் தான் நான் இந்த ஐ.பி.எஸ்ல சேர்ந்தேன்" சற்று அதிர்ந்த வீரேந்தர், "ஆனா உனக்கு பிடிக்கலையாம்மா?" வந்தனா, "எனக்கும் பிடிச்சுத்தான் இருந்து. இல்லைன்னா சேர்ந்து இருக்க மாட்டேன்" யோகேஷ்வர், "அண்ணா முதல்ல நீங்க இதை புரிஞ்சுக்குங்க. ஐ.பி.எஸ் அப்படிங்கறது ஒரு பெரிய குடும்பம். அதில பலர் எப்பவும் காக்கி சட்டை போட்டுட்டு இருப்பாங்க. சிலர் எப்பவாவுது போடுவாங்க. அதனால அவங்க ஐ.பி.எஸ் இல்லைன்னு அர்த்தம் இல்லை. வந்தனா, இது உனக்கும் தெரியும் இல்லையா? எப்பவும் காக்கி சட்டை போடற ஒரு பிரிவில் இருந்து எப்பவாவுது காக்கி சட்டை போடற ஒரு பிரிவுக்கு மாத்திக்கறதை பத்திதான் பேசிட்டு இருக்கோம். அப்பறம் ஐ.பி.எஸ் சேர்ந்ததை பத்தி என்ன பேச்சு?" வந்தனா, "தெரியும் சித்தப்பா. ஆனா, மாநில காவல் துறை பிரிவுல எந்த மாதிரி வேலை இருக்கும்ன்னு எனக்கு நல்லா தெரியும். வேற பிரிவுன்னா எந்த மாதிரி இருக்கும்ன்னு தெரியலை. அதான் குழப்பமா இருக்கு" யோகேஷ்வர், "இப்படி நீயா குழம்பிட்டு இருக்கறதுக்கு பதிலா உன் அகாடெமி டைரக்டர்கிட்டயே பேசேன்" வந்தனா, "அவர் என் கிட்ட எல்லாம் பேசுவாறா?" யோகேஷ்வர், "நீ ட்ரெயினிங்க்ல இருந்தப்பவே அவர் உன்னை நல்லா கவனிச்சு இருக்கார். நிச்சயம் பேசுவார். நாளைக்கே அவர்கூட ஃபோன்ல பேசு" அடுத்த நாள் அவள் டைரக்டரை தொலைபேசியில் அழைக்க, "எஸ் வந்தனா, நான் உனக்கு மட்டும் பிரிவை மாத்திக்க ஒரு வாய்ப்பு கொடுக்க வேணும்னு உள்நாட்டு அமைச்சகத்துக்கு (Home Ministry) கொடுக்கும் பயிற்சி முகாம் முடிவு அறிக்கையில் (IPS Batch Training Completion Report) எழுதி இருந்தேன். இப்ப நீயே அந்த வாய்ப்பை உபயோகிச்சுக்க ஆர்வம் காட்டற மாதிரி தெரியுது. சொல்லு பிரிவை மாத்திக்கறயா?" வந்தனா தன் சித்தப்பாவிடம் சொன்னதை சொல்ல அவர், "அடுத்த வாரம் உன் மெடிக்கல் லீவை முடிச்சுட்டு தில்லிக்கு வா. நான் அப்ப அங்க இருப்பேன். நான் உன்னை போக சொல்லும் பிரிவை பத்தி விளக்கமா சொல்றேன்" என்றார். அவருக்கு எப்படி தனக்கு காயம் பட்டது தெரியும் என்று வந்தனா வியந்தாள். வந்தனா, "அப்ப என்னோட போஸ்டிங்க் .. " டைரக்டர், "நான் இன்னைக்கே உள்நாட்டு அமைச்சகத்துக்கு உன்னோட மாற்றலை பத்தி ஒரு நோட் எழுதறேன். உங்க மாநில காவல் தலைவருக்கும் ஒரு நகல் அனுப்பறேன். அதை வெச்சுட்டு உன்னை அவர் ரிலீவ் பண்ணுவார். நீ என்னை பாக்க வரும்போது உன்னோட அடுத்த வேலைக்கான ஆணை தயாரா இருக்கும்" என்றார். அடுத்த நாள் அவளை தில்லியை அடைந்த பிறகு அடுத்த திங்கள் கிழமை காலை எட்டு மணிக்கு அவரது கைபேசியில் அழைக்க சொல்லி தகவல் வந்தது.Monday, 9 June 2008 திங்கள், ஜூன் 9, 2008 முந்தைய தினம் மாலை தில்லியில் இருக்கும் பெரியப்பா மஞ்சுநாத் ராத்தோட்டின் வீட்டிற்கு தந்தை தாய் சகிதம் வந்து சேர்ந்தாள். இரவு சாப்பாட்டு வேளையில் பெரியப்பா குடும்பத்துடன் இன்னும் ஒரு கலந்துரையாடல். உத்திரப் பிரதேச காவல் துறை பிரிவில் இருக்கும் பெரியப்பா மகன் A.C.P மனீஷ் I.P.Sம் வந்து இருந்தான். அவனும் பெரியப்பாவும் காக்கி சட்டை போடாத பல பிரிவுகளைப் பற்றிய விவரங்களை வந்தனாவுக்கு எடுத்து உரைத்தனர். முடிவில் மனீஷ் "வந்தனா, அகாடெமி டைரக்டரருக்கு நிறைய ஆஃப் த ரெக்கார்ட் (off the record - வெளிப்படையாக கொடுக்கப் படாத) அதிகாரம் இருக்கு. இந்திய போலீஸ் படைகளில் அவரை ஒரு கிங்க் மேக்கர் (king maker)ன்னு சொல்லலாம். அவர் உன் மேல தனி அக்கறை எடுத்துக்கறார்ன்னா, அவருக்கு உன்னை ரொம்பவே பிடிச்சு போயிருக்கணும். அது மட்டும் இல்லை, எதோ ஒரு பிரிவுல இருக்கற ஒரு வேலைக்கு நீதான் சரியான ஆள்ன்னு அவர் நினைக்கறார். இந்திய போலீஸ் படை மத்த நாடுகளில இருக்கும் படைகள் கூட ஒப்பிட்டு பார்க்கும் போது ரொம்ப பின் தங்கி இருக்கு. சீக்கரமா நாம் முன்னேற வேண்டிய அவசியம் இருக்கு. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு புது பிரிவுகள், துணை-துறைகள்ன்னு கேள்வி பட்ட படி இருக்கோம். அதனால அவர் உனக்கு என்ன பரிந்துரைத்தாலும் சரியாதான் இருக்கும். நாளைக்கு அவரை போய் பாரு அப்பறம் சாயங்காலம் நம்ம டிஸ்கஸ் பண்ணலாம்" என்று வந்தனாவுக்கு அறிவுரைத்தான். காலை எட்டு மணிக்கு டைரக்டரை தன் கைபேசியில் அழைக்க அவர், "ஹெல்லோ வந்தனா, எப்ப தில்லி வந்தே?" "நேத்து சாயங்காலம் சார்" "எங்கே தங்கி இருக்கே?" "எங்க பெரியப்பா வீட்டிலே சார்" "ஓ, ஜெனரல் ராத்தோட் எப்படி இருக்கார்?" "நல்லா இருக்கார் சார். நான் உங்களை எங்க மீட் பண்ணறது?" "ஆக்சுவலா நீ ரிப்போர்ட் பண்ண வேண்டியது லோதி ரோட்ல இருக்கும் சி.ஜி.ஓ காம்ப்ளெக்ஸ்ல (CGO Complex). அதுக்கு முன்னாடி உன் கூட பேசி உனக்கு கொஞ்சம் பின்னணி விவரங்கள் கொடுக்கணும். இன்னம் ஒரு அரை மணி நேரத்தில தில்லி கால்ஃப் க்ளப்ல (Delhi Golf Club) இருக்கும் டைனிங்க் ரூம் (Dining Room)க்கு வர முடியுமா?" "ம்ம்ம் .. எஸ் சார்" தந்தையின் ஸ்கார்பியோவை எடுத்துக் கொண்டு சரியாக இருபத்து ஐந்து நிமிடங்களில் தில்லி கால்ஃப் க்ளப்பை அடைந்தாள். அடுத்த ஐந்து நிமிடங்களில் ரிஸப்ஷனில் விசாரித்து டைனிங்க் ரூமை அடைய மூலையில் இருந்த ஒரு மேசையில் டைரக்டர் ஒரு ஃபைலை பார்த்தவாறு காஃபி அருந்திக் கொண்டு இருந்தார். சல்யூட்டுடன், "வந்தனா ராத்தோட் ரிப்போட்டிங்க் சர்" என்று விறைப்பாக நின்றவளை பார்த்து புன் முறுவலுடன் "வா வந்தனா, டேக் அ ஸீட்" என்றவாறு எதிரில் இருந்த நாற்காலியை காட்டினார். தொப்பியை எடுத்து கையில் பிடித்த படி அவருக்கு எதிரில் அமர்ந்தாள். "ப்ரேக்ஃபாஸ்ட் சாப்படறயா?" "இல்லை சார், சாப்பிட்டுட்டுதான் வந்தேன்" "கொஞ்சம் காஃபி அல்லது டீ?" "ஓ.கே சார் .. எனக்கு டீ" "சோ, இப்ப பூரண குணமாயிட்டயா? அதிர்ஷ்ட வசமா பெருங்குடலில் மட்டும் லேசான காயம்ன்னு கேள்வி பட்டேன். எதுவும் காம்ப்ளீகேஷன் இல்லையே?" "எதுவும் இல்லை சார் .. ஃபாலோ அப் செக்-அப் பண்ணின போது ஸ்கேன் எடுத்து பாத்தாங்க" "குட். முதல்ல இதை சொல்லு. என்ன காரணத்தினால ராஜஸ்தான் காவல் துறையில் இருந்து மாத்திக்க முடிவெடுத்தே?" "முக்கிய காரணம் என் பேரண்ட்ஸ்தான் சார். மத்தபடி எனக்கு நான் செஞ்சுட்டு இருந்தது ஓரளவு பிடிச்சுத்தான் இருந்தது" "ம்ம்ஹூம் ... ரெண்டு வருஷத்தில உன் மூளை துருப்பிடிச்சு போயிருக்கும். ஐ மீன் அந்த வேலை அறிவில்லாதவங்க செய்யறதுன்னு சொல்லலை. உன்னோட ஐ.க்யூவுக்கு அது ஒரு சாலஞ்சா இருக்காது. ரெண்டு வருஷத்தில ஏண்டா வந்தோம்ன்னு வருத்தப் பட ஆரம்பிச்சு இருப்பே. ஒண்ணு கேக்கறேன் உண்மையா பதில் சொல்லணும். ஓ,கே?" "ஓ,கே சார்" "உன்னோட பொழுது போக்கு என்ன?" "படிக்கறது, க்ராஸ்-வர்ட் (Cross Word), சொடுகு (Soduku), நெட்ல எதாவுது மைண்ட் கேம்ஸ் (Mind Games) வெப்சைட்" "கரண்ட் அஃபேர்ஸ் (Current Affairs - நாட்டு நடப்பு?!) பத்தி எல்லாம் எக்ஸாமுக்கு படிச்சதோட சரி. இல்லையா?" "அப்படி இல்லை சார், டீ.வில பாப்பேன் ... " என்று இழுத்தாள் "நான் உன்னை தப்பா சொல்லலை. உனக்கு டிபிகல் அதிகார வர்க்க குணாதிசங்கள் எதுவும் இல்லை அப்படிங்கறதை வலியுறுத்தறேன்"மௌனமாக புன்னகைத்தவளிடம் தொடர்ந்தார், "ஆர் அண்ட் ஏ டபுள்யூ (R&AW)வில் இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெக் சர்வீஸஸ் (Electronics and Tech Services) பிரிவை பத்தி கேள்வி பட்டு இருக்கியா?" "கேள்வி பட்டு இருக்கேன் சார், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் சர்வேலன்ஸ் (Electronic Communication Surveilance) பண்ணற அமைப்பு" "அப்ப அவங்க கார்கில் போருக்கு முன்னாடி பண்ணின சொதப்பலும் கேள்வி பட்டு இருப்பியே" லேசாக சிரித்தபடி ஆமென்று தலையசைத்தாள். "அந்த பிரிவுக்கு கீழ என்.டி.ஆர்.ஓ (NTRO)ன்னு சொல்லற தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (National Technical Research Organization) அப்படின்னு ஒரு அமைப்பு இருக்கு. இவ்வளவு நாளும் அதுக்குன்னு தனி ஃபெஸிலிடீஸ் (Facilities) இல்லை. ஐ.எஸ்.ஆர்.ஓ (ISRO) மாதிரி அமைப்புகளோட வசதிகளை உபயோகிச்சுட்டு இருந்தாங்க. இப்ப அதுக்குன்னு ஒரு தனி கட்டிடங்களோட ஹைதராபாத்தில ஒரு காம்ப்ளெக்ஸ உருவாகிட்டு இருக்கு. ஆரம்பிச்சப்ப என்.டி.ஆர்.ஓவின் குறிக்கோள் தகவல் சேகரிக்கறது மட்டும் தான். ஆனா, இப்ப எலட்ரானிக்ஸ், கணிணி சம்மந்தப் பட்ட பாதுகாப்பும் இந்த என்.டி.ஆர்.ஓவின் வேலைன்னு முடிவாகி இருக்கு." "எலட்ரானிக்ஸ், கணிணி சம்மந்தப் பட்ட பாதுகாப்பு அப்படின்னா?"
"நீ கம்ப்யூடர் வைரஸ் அப்படின்னு கேள்வி பட்டு இருக்கியா?" "ம்ம்ம். எஸ் .. ஓ, நம்ம அரசாங்கத்துக்கு சொந்தமான கம்ப்யூடர்ல வைரஸ் வராமல் .. " என்று அவள் தொடங்க "நான் சொல்ல வந்தது வெறும் வைரஸ் மட்டும் இல்லை. எவ்வளவோ தகவல்கள் நாம் இப்ப கம்ப்யூடர்ல சேமிச்சு வெச்சு இருக்கோம். அதை பாதுகாக்கற வேலை" "ஓ .. " "பாதுகாப்பில் ரெண்டு விதமான வேலை இருக்கு .. ஒண்ணு யாரும் நம்முடைய தகவலை திருடாம பாத்துக்கறது. இன்னொண்ணு, யாராவது திருட வருவதற்கு முன்னாடியே அவங்களை பிடிக்கறது. ஸைபர் செக்யூரிட்டி (Cyber Security) அப்படிம்பாங்க. இதை தவிர, தீவிரவாதிகள் உபயோகிக்கும் கணிணி சந்தேகக் குறிப்புக்களையும் கண்டு பிடிச்சு தீவிரவாதச் செயல் நடக்கறதுக்கு முன்னாடி அவங்களை ட்ரேஸ் அவுட் பண்ணற வேலையும் இருக்கு" 'தீவிரவாதம்' என்ற சொல்லைக் கேட்டதும் அவள் முகத்தில் தெரிந்த இறுக்கத்தை அவர் கவனிக்க தவறவில்லை. மௌனமாக சிறிது குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தவளை பார்த்து தொடர்ந்தார், "என்.டி.ஆர்.ஓவை முழுக்க பொறியாளர்கள் (Engineers) அப்பறம் விஞ்ஞானிகள் கையில் விட அரசாங்கம் விரும்பல. அதில ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இருக்கணும்ன்னு விரும்புது. பொதுவா இந்த மாதிரி அமைப்புகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ரொம்ப உயர் மட்டத்தில் இருப்பாங்க. அதனால, கீழ என்ன நடக்குதுன்னு அவங்களுக்கு சரியா தெரிய வர்றது இல்லை. இந்த காரணத்தினால் என்.டி.ஆர்.ஓவில் கீழ் மட்டத்திலும் தகுந்த ஐ.பி.எஸ் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நுழைக்க முடிவெடுத்து இருக்காங்க. அவங்க பொறியாளர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சரி சமமா வேலை செஞ்சாலும் அவங்களுக்குன்னு சில தனி அதிகாரங்கள் கொடுக்கப் படும். இதில தான் நான் உன்னை சேர சொல்றேன். என்ன சொல்றே?" "காலேஜுக்கு பிறகு டெக்னிகல் சம்மந்தப் பட்ட விஷயங்கள்ல நான் கவனம் செலுத்தலை... " "இன்னும் ஒரு விஷயம் சொல்லாம விட்டுட்டேன். இந்த என்.டி.ஆர்.ஓவில ஸைபர் செக்யூரிட்டி பிரிவுக்குதான் நீ தேர்ந்து எடுக்க பட்டு இருக்கே. உன்னை இந்த பிரிவில எடுக்கறதுக்கு முக்கிய காரணம் உன்னோட ஐ.பி.எஸ்ஸும் உன்னோட கணிணிப் படிப்பும்தான். கணிணி துறையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் வந்துட்டே இருக்கு. அதனால் உன்னை மாதிரி மத்தவங்களுக்கு புதுசாதான் இருக்கும். வேலையில் முழுசா ஈடு படறதுக்கு முன்னாடி தனி பயிற்சி கொடுப்பாங்க. அதுக்கு அப்பறம் தான் முழுசா வேலையில் இறங்குவே. இதுக்கு மேல விவரங்கள் எனக்கு தெரியாது. ஆனா, நான் சொன்னதை வெச்சு உனக்கு இந்த பிரிவில் சேர சம்மதமா" "சம்மதம் சார் .. " என்று அவள் வாய் சொன்னாலும் அவள் முகத்தில் தெரிந்த சந்தேக ரேகைகளை பார்த்து அவர், " நீ இதில நல்லா ஷைன் பண்ணுவே .. எனக்கு நம்பிக்கை இருக்கு. பயப் படாம போய் சேரு" என்றார் "சரி சார் .. " "குட்..." என்ற படி அவளது பணிக்கான ஆணையை அவளிடம் கொடுத்தார் ராஜஸ்தான் போலீஸ் பிரிவில் இருந்து ஆர் அண்ட் ஏ டபுள்யூ அல்லைட் சர்வீஸஸ் (R&AW Allied Services Cadre) பிரிவுக்கு மற்றப் பட்டு இருந்தாள். அதே ஏ.எஸ்.பி (A.S.P) பதவி. அதைப் பார்த்து சற்று வியந்து அவரை நோக்க. அவர், "இது மத்திய அரசாங்க பதவி. மாநில அளவில இருக்கும் ஏ.எஸ்.பி பதவியை விட இது உயர்ந்தது. உனக்கு அது தெரியும் இல்லையா?" "எஸ் சார் ... தேங்க் யூ சார் .. " "நீ அதுக்கு தகுதி ஆனவள்தான் .. சரி இந்த ஆர்டர்ல சொல்லி இருக்கற இடத்துக்கு போய் ரிப்போர்ட் பண்ணு" என்றவாரு அவளுக்கு விடை கொடுத்தார். அடுத்து லோதி சாலையில் இருக்கும் சி.ஜி.ஓ காம்ப்ளெக்ஸில் (CGO Complex) ஒரு பதினோரு மாடி கட்டிடத்தை அடைந்தாள். கட்டிட வாசலில் சிறியதாக இருந்த ஒரு பெயர் பலகையில் "Research And Analysis Wing" என்று மட்டும் பதித்து இருந்தது. பலத்த பாதுகாப்புடன் கூடிய அந்த கட்டிடத்தின் எட்டாம் மாடியில் இருக்கும் ஒரு பகுதிக்குள் இருந்த அறை வாசலை அடைந்தாள். அங்கு அமர்ந்து இருந்த காரியதரிசி அவளை வரிசையாக போடப் பட்டு இருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்து காத்திருக்கும் படி பணித்தாள். சற்று நேரத்தில் ஜீன்ஸ், கட்டம் போட்ட அரை-கை சட்டை, தோளில் ஒரு ஜோல்னா பை, காதில் ஐ-பாட் ஹெட் ஃபோன்ஸ், சற்றே தடித்த கண் கண்ணாடி, கால்களில் ஸ்னீக்கர் ஷூ இவைகளுடன் காதளவுக்கு மட்டும் முடியுடன் ஒரு பெண் அந்த காரியதரிசியை அணுக காரியதரிசி அவளையும் காத்திருக்குமாறு பணித்தாள். காவல் துறை சீருடையில் தோள்பட்டையில் அசோக சின்னத்துடன் அதிகாரத்தின் சின்னமாக அமர்ந்து இருந்த வந்தனாவுக்கு அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தவள் வந்தனாவை பார்த்து சிரித்து, "ஹாய், நீங்களும் ஜாயிண்ட் டைரக்டரை பார்க்கத்தான் வெய்ட் பண்ணிட்டு இருக்கீங்களா" வந்தனா, "எஸ் .. " வந்தவள், "நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா" என்றாள் வந்தனா அதிகார முறுக்குடன், "நான் A.S.P வந்தனா ராத்தோட் I.P.S. நீங்க?" என்க அந்த பெண் ஒரு போலி முறுக்குடன், "நான் இளநிலை விஞ்ஞானி தீபா ராவ் ஐ.ஐ.டி பி.டெக், ஐ.ஐ.எஸ்ஸி எம்.டெக். நீங்க எதுக்கு இங்க வந்து இருக்கீங்க?" என்றாள். வந்தனா, "என்.டி.ஆர்.ஓ வில் ஜாய்ன் பண்ணறதுக்கு. நீங்க?" தீபா, "நானும் அதுக்குத் தான் வந்து இருக்கேன். நீங்க எதுக்கு இங்கே?" வந்தனா, "குற்றவாளிகளை பிடிச்சு ஜெயிலுக்கு அனுப்பற வேலையை விட இதுதான் எனக்கு ஏத்ததுன்னு சொன்னாங்க. வேற வழி இல்லை. வந்தேன். நீங்க?" தீபா, "ஜெயிலுக்கு அனுப்பறதுக்கு பதிலா எனக்கு இந்த வேலை கொடுத்தாங்க. வேற வழி இல்லை வந்தேன்" மறு கணம் அவளை அதிர்ச்சியுடன் பார்தத வந்தனா அவள் முகத்தில் கொப்பளித்த குறும்பைக் கண்டு இறுக்கம் தளர்ந்து அடக்க முடியாமல் சிரித்தாள். உடன் வாய்விட்டு சிரித்த தீபா, "உண்மைதான் ..." என்றாள்.கருத்துருவத்தின் செயல் வடிவாக்கம்புதன், மே 7 2008 முதல் ஜுன் 8 நியூ யார்க் நகரம், அமெரிக்காImplementation of the conceptWed, 7 May 2008 New York, USA ஜாஷ்வாவை சந்தித்த அடுத்த இரண்டு நாட்களும் கண் இமைக்கும் நேரத்தில் பறந்தன. புது ஆன்-சைட் அசைன்மென்டில் இருவரும் அவரவர் பொறுப்புகளை ஏற்று, அவர்களுக்கு பணித்தவற்றில் கவனம் செலுத்தினர். தங்கள் நிறுவனத்தில் அவர்களுக்கு இருந்த நல்ல பெயரை இங்கும் நிலை நாட்ட வேண்டும் என்ற உறுதியுடன் செயல் பட்டனர். அன்று மாலை நாலு மணி அளவில் சக்திவேல் ஜாஷ்வாவை அழைத்தான். ஜாஷ்வா, "ஹேய் சக்தி, நித்தின் எங்கே?" சக்திவேல், "அவனும் என் கூடதான் இருக்கான்" ஜாஷ்வா, "நான் சொன்ன மாதிரி பப்ளிக் ஃபோன் பூத்தில் இருந்துதானே கூப்பிடறே?" சக்திவேல், "ஆமா, எங்க ஆஃபீஸ் பக்கத்தில இருக்கற ஃபோன் பூத்தில் இருந்து" ஜாஷ்வா, "குட் .. நியூ யார்க் சப்வே பழக்கம் ஆயிடுச்சா? சப்வே மூலம் நான் சொல்ற இடத்துக்கு வர முடியுமா" நியூ யார்க்கின் சுரங்க மின்சார ரயிலை (underground mass transit electric train) சப்வே (subway) என்று அழைப்பது வழமை. சக்திவேல், "ஒரு தடவை ரெண்டு பேரும் போனோம். எங்கேன்னு சொல்லு நாங்க சமாளிச்சுக்குவோம்" ஜாஷ்வா, "59த் ஸ்ட்ரீட் கொலம்பஸ் ஸர்கிள் (59 Street, Columbus Circle) ஸ்டேஷன்ல இறங்குங்க. வெவ்வேறு திசையில் இருந்து அந்த ஸ்டேஷனுக்கு நிறைய வாயில்கள் (entrance) இருக்கு. நீங்க வட-மேற்கு வாயில்ல வெளிய வந்தா நேரா டைம் வார்னர் செண்டர் (Time Warner Center) அப்படிங்கற கட்டிடத்துக்கு வருவீங்க. அந்த கட்டிடத்தில இருக்கற பௌச்சன் பேக்கரி (Bouchon Bakery) என்கிற பேக்கரி-ரெஸ்டாரண்டுக்கு வாங்க. நான் உங்களை இன்னும் ஒரு மணி நேரத்தில மீட் பண்ணறேன்" அடுத்த ஒரு மணி நேரத்தில் மூவரும் அந்த பேக்கரி-ரெஸ்டாரண்டில் ப்ளூ பெர்ரீ மஃப்ஃபின் மற்றும் காஃபியுடன் (Blue berry muffin and coffee) அமர்ந்து இருந்தனர். ஜாஷ்வா, "என்ன நித்தின், சக்தி, யோசிச்சீங்களா?" சக்திவேல், "ம்ம்ம் யோசிச்சோம். பண்ண முடியுங்கற நம்பிக்கை இருக்கு. ஆனா நல்லா ப்ளான் பண்ணாம காரியத்தில இறங்க கூடாது" ஜாஷ்வா, "நிச்சயமா! அடுத்த ஒரு மாசத்துக்க நாம் பண்ணப் போற ஒரே வேலை அதுதான். எந்த விதமான ஓட்டையும் இருக்கக் கூடாது (There should be no loose ends anywhere)" நித்தின், "முதல்ல இன்னொரு முறை நாம் பண்ணப் போற ஆபரேஷனை படிப் படியா விளக்கி சொல்லு" ஜாஷ்வா தன் பையில் இருந்து ஒரு வரை படத்தை எடுத்து மேசை மேல் பரப்பி விளக்க தொடங்கினான்."நம் முதல் கவனம் இந்த பட்டியலில் இருக்கும் கம்பெனிகள். இந்த கம்பெனிகளில் இருக்கும் கம்ப்யூடர்ல என் வங்கில இருந்து PDF வடிவில் போற பேங்க் ஸ்டேட்மென்ட் மூலமா உங்க பாட் நெட் வைரஸ்ஸை புகுத்தறோம். வைரஸ் புகுந்ததுக்கு அப்பறம் எந்த கம்பெனில எல்லாம் வைரஸ் வெற்றிகறமா புகுந்து இருக்குன்னு பாத்து இன்னொரு பட்டியல் எழுதி வெச்சுக்குவோம். நீங்க அடிக்கடி அதை சரி பார்த்துக்கணும். ஒரு வேளை எந்த காரணத்தினாலோ வைரஸ் வேலை செய்யலைன்னா அந்த கம்பெனியை உடனே பட்டியலில் இருந்து நீக்கிடணும். ஆண்டர்ஸன் மூலமா எனக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணறதுக்கான தகவல் வரும். எந்த நாட்டில இருக்கும் எந்த வங்கி கணக்குக்கு பணம் போகணும்னு அவன் சொல்லுவான். நம்ம பட்டியலில் இருந்து ஒரு கம்பெனியை தேர்ந்து எடுத்துட்டு, எந்த எந்த கிளைகளில் டெபாசிட் பண்ணணும், டெபாசிட் பண்ண வேண்டிய தேதி நேரம், இதை எல்லாம் நாம் ப்ளான் பண்ணுவோம். அப்பறம் அவனுக்கு அந்த விவரங்களை தெரிவிப்போம். தவிர, நம் கமிஷனை தனியா எந்த கணக்கில் அவன் டெபாசிட் பண்ணணும்னு சொல்லுவோம். சரியா அவன் டெபாசிட் பண்ணி முடிச்சதும் நம் கமிஷன் வந்து சேந்துதான்னு சரி பார்த்ததுக்கு அப்பறம் நம் வைரஸ் மூலமா அந்த கம்பெனியே ட்ரான்ஸ்ஃபர் பண்ணற மாதிரி பணத்தை கம்பெனி கணக்கில் இருந்து ஆண்டர்ஸன் கொடுத்த கணக்குக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணுவோம். அதுக்கு அப்பறம் ஹாஃப்மனுக்கு ட்ரான்ஸ்ஃபர் விவரங்களை தெரிவிப்போம். அந்த மாசக் கடைசில தயார் ஆகும் பேங்க் ஸ்டேட்மென்டில் நாம் பண்ணின ட்ரான்ஸ்ஃபர் வங்கி தப்பா பண்ணினதா மாத்தி எழுதப் பட்டு இருக்கும். நம் வேலை அவ்வளவுதான். அதுக்கு அப்பறம் அந்த கம்பெனி கணக்கு ஆடிட்டுக்கு வராம பாத்துக்க வேண்டியது ஹாஃப்மனோட பொறுப்பு." என்று முடித்தான்.
நித்தின், "ம்ம்ம் ... ஓ.கே .. நிச்சயம் முடியும் .. ஒரு ப்ராப்ளமும் இல்லை" ஜாஷ்வா, "சரி, எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கங்கள் வேணும். முதல்ல, உங்க பாட் நெட்ல இருக்கும் ஒரு குறிப்பிட்ட கம்ப்யூட்டருக்கு எப்படி ஆணை அனுப்புவீங்க?" நித்தின், "இது வரைக்கும் நாங்க அப்படி பண்ண வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும், அதாவுது எங்க வைரஸ்ஸோட ஒவ்வொரு நகலுக்கும் ஒரு ஐ.டி இருக்கு. ஒரு வைரஸ் கம்ப்யூட்டருக்கு உள்ள புகுந்த உடனே அது அந்த ஐ.டியையும் அது இருக்கும் கம்ப்யூட்டரோட விலாசத்தையும் எங்களுக்கு அனுப்பும். அதை வெச்சு எந்த கம்ப்யூட்டர் எல்லாம் எங்க பாட் நெட்டுல இருக்குன்னு எங்களுக்கு தெரியும்" ஜாஷ்வா, "அப்ப வைரஸ்ஸோட ஒரு நகலுக்கும் இன்னொரு நகலுக்கும் வித்தியாசம் இந்த ஐ.டி மட்டும் தான் இல்லையா?" சக்திவேல், "ஆமா .. " ஜாஷ்வா, "நான் PDF மூலமா அனுப்பும் வைரஸ்ஸுக்கும் நீங்க ஈமெயில் மூலம் அனுப்பற வைரஸ்ஸுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. சரியா?" நித்தின், "இதை பத்தி நாங்க யோசிச்சோம். எதாவது வித்தியாசம் தேவை. அது மட்டும் இல்லை எந்த கம்பெனிக்கு அனுப்பின வைரஸ் அப்படின்னும் நமக்கு தெரியணும். அதனால நீ PDFஇல் சேர்க்கறதுக்குன்னு தனியா ஒரு சின்ன மாற்றம் செய்யப் பட்ட ஒரு வைரஸ்ஸை கொடுக்கறோம் அந்த வைரஸ்ஸோட நகலை நீ ஒரு PDFஇல் சேர்க்கறதுக்கு முன்னாடி அந்த நகலில் அந்த நகல் எந்த கம்பெனிக்கு போகுதுன்னு ஒரு குறிப்பு எழுதணும். அந்த நகல் கம்பெனியோட கம்ப்யூடருக்குள் புகுந்த உடனே எந்த மாதிரியான வைரஸ் எங்க கம்பெனில இருந்து அப்படிங்கற தகவலையும் ஐ.டி கூடவே அனுப்பும். இதை வெச்சுட்டு நாம் ஒரு கம்பெனியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கம்ப்யூடருக்கு ஆணை பிறப்பிக்க முடியும்" ஜாஷ்வா, "வாவ், க்ரேட்! நான் நினைச்சதை விட நீங்க வேகமா யோசிக்கறீங்க!! எனக்கு வேற ஒரு சந்தேகமும் இல்லை. அடுத்த ஒரு மாசம் நாம் இன்னும் நல்லா ப்ளான் பண்ணிட்டு ஒரு ஒரு சின்ன ட்ரயலும் பண்ணிப் பாத்துடலாம். ஓ.கே?" சக்திவேல், "ஓ.கே .. எங்க பாட் நெட் கன்ட்ரோலர் இன்னும் நீ புடிங்கி போட்ட மாதிரியே இருக்கு. மாசத்துக்கு ஒரு தடவையாவுது ஒவ்வொரு கம்ப்யூடருக்கும் நாங்க எதாவுது மெஸேஜ் அனுப்பணும். ஒரு மெஸேஜும் இல்லைன்னாலும் ஒரு ஆணையும் இல்லை அப்படின்னு ஒரு மெஸேஜ் அனுப்பணும். எப்படி ப்ரோஸீட் பண்ணறது?" ஜாஷ்வா, "முதல்ல நீங்க ரெண்டு பேரும் அந்த ஃப்ளாட்டை காலி பண்ணிட்டு தனி தனி ஃப்ளாட் எடுத்துக்கணும். அந்த ரெண்டு ஃப்ளாட்டுக்கும் நான் நெட் கனெக்ஷன் ஏற்பாடு பண்ணறேன்" நித்தின், "ஏன் ஜாஷ்வா?" ஜாஷ்வா, "ஒரு ஸேஃப்டிக்குதான். மூணு பேரும் வெவ்வேற இடத்தில் இருந்து ஆபரேட் பண்ணும் போது நம்மை கண்டுபிடிக்க முயற்சி செய்யறவங்களுக்கு குழப்பம் அதிகமாகும். செலவைப் பத்தி கவலைப் படாதீங்க. இன்னைல இருந்து நம்ம ஆபரேஷனுக்குன்னு ஆகற செலவை எல்லாம் ஆபரேஷன் கணக்கில இருந்து எடுத்துட்டு அதுக்கு அப்பறம் மிச்சத்தை பங்கு போட்டுக்கலாம்." நித்தின், "சரி. நீ சரி சமமா பங்கு போட்டுக்கலாம்னு சொன்னே. அதில ஒரு சின்ன மாற்றம். நாங்க ரெண்டு பேரும் யோசிச்சு முடிவு எடுத்தது" ஜாஷ்வா, "என்ன?" சக்திவேல், "யாருக்காவுது உதவி செய்யறதுக்கு, எதாவுது அனாதை இல்லத்துக்கு, முதியோர் இல்லங்கள் இந்த மாதிரி விஷயத்துக்குன்னு ஒரு சின்ன பகுதியை ஒதுக்கினா என்னன்னு தோணுச்சு" ஜாஷ்வா, "ஃபெண்டாஸ்டிக் .. என் மனைவி உன்னை அண்ணனா ஏத்துக்காம இருந்து இருந்தா நான் உன்னை என் தம்பியா ஏத்துட்டு இருப்பேன். பரவால்லை, நித்தின் நீ என்னை அண்ணனா ஏத்துக்கறயா?" நித்தின், "வொய் நாட்? எனக்கு அண்ணன் தம்பி யாரும் இல்லை.. பட், நாங்க சொன்னதுக்கு என்ன பதில் சொல்றே?" ஜாஷ்வா (ஒர் கணமும் யோசிக்காமல்), "10-30-30-30. பத்து சதவிகிதம் தர்மத்துக்கு. பாக்கி நமக்கு. ஓ.கேவா?" சக்திவேல், "க்ரேட்!"
அடுத்த ஒரு மாதம் செயல் படுத்தப் போகும் பணமாற்றத்தை அணு அணுவாக ஆராய்ந்து திட்டமிட்டனர். நித்தினும் சக்தியும் தங்களின் பாட் நெட் வைரஸ்ஸில் தேவையான மாற்றங்கள் செய்து அந்த மாற்றங்களை வெள்ளோட்டம் விட்டு சரி பார்த்தனர். ஜூன் 2008ந் முதல் வாரக் கடைசியில் ஹாஃப்மன் த்யாரித்து கொடுத்த வைரஸ்ஸை புகுத்தப் போகும் கம்பெனிகளிக்கான ஒரு புது பட்டியலில் இருந்த கம்பெனிகளுக்கு ஜாஷ்வா பாட் நெட் வைரஸ்ஸை பரப்பத் தொடங்கினான். அந்த பட்டியலில் எழுபத்து மூன்று கம்பெனிகள் இருந்தன. அடுத்த மூன்று வாரங்களில் ஐம்பத்து ஆறு கம்பெனிகளில் மாங்க்ஸ் பாட் நெட் வைரஸ் வெற்றிகரமாக குடிபுகுந்தது. ஜூன் 30 அன்று அவர்களின் முதல் பண மாற்றம் வெற்றிகரமாக நிறைவேறியது. ஜூலை 4ம் தேதி அமெரிக்க சுதந்ததிர தினம் வெள்ளிக் கிழமையில் அமைய நித்தின், சக்திவேல், ஜாஷ்வா, சஞ்சனா நால்வரும் அவர்களின் முதல் பண மாற்றத்தை கொண்டாட நயகரா நீர் வீழ்ச்சிக்கு அருகே இருக்கும் ஒரு ரிசார்ட்டுக்கு செனறனர்.

No comments:

Post a Comment