Wednesday, January 28, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 15


சக்தி, "ம்ம்ம் ... சொல்லு எங்கே வேலை செய்யறே?" வந்தனா (முகத்தை நிமிர்த்தாமல்) "R&AW - Research And Analysis Wing” மிகுந்த பிரயத்தனப் பட்டு முகத்தில் வியப்பை வரவழைத்த சக்தி, "ஹேய், யூ மீன் CIA மாதிரி இந்திய உளவு நிறுவனமா?" வந்தனா, "ஆமா, வெளிநாட்டில் உளவு வேலை பார்க்கறதை தவிர மத்த சில பிரிவுகளும் R&AWவில் இருக்கு. NTRO அப்படின்னு ஒரு நிறுவனம் R&AWவுக்கு கீழ இருக்கு. அதில் சைபர் க்ரைம்மை தடுக்கறதுக்குன்னு ஒரு பிரிவு இருக்கு. அதில் தான் நானும் தீபாவும் வேலை செய்யறோம்" சக்தி, "அப்பா! சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்னு இவ்வளவு சொல்றே" வந்தனா, "இதுக்கு மேல சொல்ல மாட்டேன்"
சக்தி, "இரு இரு, இதை ஜீரணிக்கறதுக்கே எனக்கு ரொம்ப நாள் ஆகும்" மறுபடி அவன் தோளில் சாய்ந்தபடி இருந்தாள். சக்தி, "R&AWவில் வேலையில் இருக்கேன்னா, நீ ஒரு போலீஸ் ஆஃபீஸர் மாதிரின்னு சொல்லு" வந்தனா, "மாதிரி இல்லை. நிஜமாவே" சக்தி, "வாட் டூ யூ மீன்?" வந்தனா அவன் மார்பில் இருந்து முகத்தை நிமிர்த்தி அவன் கண்களை பார்த்தபடி முகத்தில் பெருமிதம் வழிய, "ஐ ஆம் வந்தனா ராத்தோட் B.Tech, I.P.S” என்றாள் தொடர்ந்து "நான் பி.டெக் முடிச்சுட்டு ஐ.பி.எஸ்ஸில் சேர்ந்தேன்." இம்முறை வியப்படைய எந்த செயற்கை முயற்சியும் சக்திக்கு தேவைப் படவில்லை. அளவிடமுடியாத சந்தோஷம், பெருமிதம், வியப்பும் நிறைந்த சிரிப்புடன் அவளது இரு புஜங்களைப் பற்றி, "வாவ் .. " என்றபிறகு பேச்சிழந்து அவளை பார்த்தபடி இருந்தான். வந்தனா அவனுக்கு ஆறுதலளிக்கும் விதமான் முகபாவத்துடன், "பட் டோண்ட் வொர்ரி, எனக்கு மத்த ஐ.பி.எஸ் ஆஃபீஸர்ஸ் மாதிரி என்னை சுத்தி எந்த பந்தாவும் இருக்காது. ட்யூட்டியும் இருக்காது. உன்னை மாதிரி எனக்கும் நைன் டு ஃபைவ் வேலைதான்" சக்தி, "ஏன் அப்படி சொல்றே? என்ன பந்தா?" வந்தனா, "இல்லை, பொதுவா ஐ.பி.எஸ் ஆஃபீஸர்ஸை கல்யாணம் பண்ணிக்க தயங்குவாங்க. டாக்டர்ஸ் மாதிரி கண்ட நேரத்திலும் வேலை இருக்கும். அவங்களை சுத்தி இருக்கும் பந்தாவா தனி ஜீப், சுத்தி ரெண்டு கான்ஸ்டபிள்ஸ், ஒரு ஜூனியர் ஆஃபீஸர் இதெல்லாம் மத்தவங்களுக்கு பயமுறுத்தற மாதிரி இருக்கும். அதைத் தான் சொன்னேன்" சக்தி, "சே, இதில் என்ன பயம் இருக்கு? உண்மையில் நீ மத்த ஐ.பி.எஸ் ஆஃபீஸர்ஸ் மாதிரி இருந்தா எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கும். இப்ப அதை விட கொஞ்சூண்டு கம்மியா பிடிச்சு இருக்கு. ஆனா எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா?" என்றவாறு அவளை இழுத்து நெஞ்சோடு ஆரத்தழுவினான். காதலால் வரும் தழுவல் அல்ல அது. தன் வருங்கால மனைவியின் பெருமையை பாராட்டிய தழுவல். விலக்கி அவள் நெற்றியில் முத்தமிட்ட பிறகு இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டான். காதலனின் பாராட்டில் மனம் நிறைந்த வந்தனாவின் கண்கள் பனித்தன. சக்தி, "மத்த ஆஃபீஸர்ஸ் மாதிரி பந்தா இல்லாட்டி பரவால்லை. யூனிஃபார்ம் போட்டுட்டுதானே ஆஃபீஸுக்கு போவே. உனக்கு ஜீப் வேணும்ன்னா நானே ஒண்ணு வாங்கி தரேன்" மறுபடி அவனை வியப்புடன் பார்த்தவள், "சாரி. நான் ஆஃபீஸுக்கு யூனிஃபார்ம் போட்டுட்டு போக மாட்டேன்" இப்போதைக்கு தனக்கு ஆஃபீஸே இல்லை என்பதை சொன்னால் மேலும் வேலை பற்றிய விவரங்களை சொல்ல வேண்டும் என்று மறைத்தாள். சக்தி, "சரி, பரவால்லை அப்ப அப்ப எனக்கு மட்டும் போட்டு காட்டணும் என்ன?" வந்தனா, "ஆக்சுவலி நான் கொஞ்ச நாள் போட்டுட்டுதான் இருந்தேன் .. " சக்தி, "ரியலி? அப்பறம் என்ன ஆச்சு? " வந்தனா, "இதை எல்லாம் தான் நான் உன் கிட்ட சொல்லணும்ன்னு இருந்தேன். உன் கிட்ட மட்டும் இல்லை. சஞ்சனா, ஜாஷ்வா கிட்டயும் சொல்லணும்ன்னு இருந்தேன். என்னை மாதிரியே, இல்லை இல்லை என்னை விட ரொம்ப ரொமப் ஜாலியான பின்னணி தீபாவுக்கு இருக்கு. நாங்க ரெண்டு பேரும் உங்க கிட்ட அதை எல்லாம் சொல்லி நாங்க செய்யற வேலையை பத்தி மட்டும் கேக்காதேன்னு சொல்லலாம்ன்னு முடிவெடுத்து இருந்தோம்" சக்தி, "ஃபேமிலி மெம்பர்ஸுக்கு மட்டும் சொல்லலாம்ன்னு சொன்னே?" வந்தனா, "சஞ்சனா உனக்கு தங்கை மாதிரின்னா எனக்கு ஃபேமிலிதானே?" வந்தனாவின் கைபேசி சிணுங்கியது.சில நிமிடங்களில் எல்லோரும் ஒரு பெரிய டேபிளில் அமர்ந்து இருந்தனர். ஆடவர் மூவருக்கும் இரண்டாவது ரவுண்ட் தொடங்கி இருந்தது... சஞ்சனா, "போதும் இதோட நிறுத்திக்கோ ... " என்று ஜாஷ்வாவிடம் காதைக் கடித்தாள் வந்தனா, "எவ்வளவு ட்ரிங்க்ஸ் சாப்பிடுவே?" சக்தி, "குறைஞ்சது ரெண்டு. ஆனா கூட குடிக்கறவங்களை பொறுத்தது அது .. எனக்கு எத்தனை ட்ரிங்க்ஸ் சாப்பிட்டாலும் தாங்கும் .. ரெண்டோட போதும்ன்னாலும் நிறுத்திக்குவேன் ஏன்னா எனக்கு அதுக்கு மேல கிக் ஏறாது" தீபா, "நீ எத்தனை குடிப்பே?" நித்தின், "வழக்கமா ரெண்டு. என்னோட லிமிட் மூணு" தீபா, "நீ குடிப்பேன்னு. உங்க அப்பாவுக்கு தெரியுமா?" நித்தின், "ஓ தெரியுமே. கூடவே உக்காந்து குடிச்சு இருக்கேன்" வந்தனா, "உங்க அம்மாவுக்கு?" சக்தி, "செகண்ட் இயர் படிக்கும் போது முதல் முதலா குடிச்சேன். அடுத்த லீவில் போனப்ப அம்மாகிட்ட சொன்னேன். அளவோட நிறுத்திக்கோன்னு சொன்னாங்க. பி.டெக் முடிச்சு வேலை கிடைச்சதும் ஊர்ல இருந்த ஃப்ரெண்ட்ஸ் பார்ட்டி கொடுன்னு சொன்னப்ப வீட்டிலேயே மொட்டை மாடில அரேஞ்ச் பண்ணி கொடுத்து இருக்காங்க. She knows I don't get drunk" ஜாஷ்வா, "கமான் தீபா உன்னோட கதையை சொல்லு .. " தீபா தன் ப்ராஜெக்ட் வொர்க்கில் இருந்து ஆரம்பித்து கைதாவதற்கு பதிலாக வேலைக்கு சேர்ந்ததை சொல்லி முடிப்பதற்குள் அந்த மேசையில் ஆரவாரம் அந்த பாரை குலுக்கியது. நடுவே அவள் தான் ஒரு ஹாக்கர் என்ற போது ஆடவர் மூவர் முகத்திலும் தோன்றிய சிறு கலவரம் சஞ்சனாவுக்கு மட்டும் புரிந்தது. நித்தின், "நீ ஒரு பெரிய ஹாக்கரா?" தீபா, "பெரிய ஹாக்கர் இல்லை ..நான் சுமாரான ஹாக்கர். என்னைவிட பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இருக்காங்க" சக்தி, "உனக்கு அவங்க எல்லாம் யாருன்னு தெரியுமா?" தீபா, "யாரும் அவங்களோட நிஜ ஐடெண்டிடியை காண்பிச்சுக்க மாட்டாங்க" நித்தின், "இப்ப எங்க கிட்ட நீ உன்னோட ஐடெண்டிடியை காண்பிச்சு இருக்கே" தீபா, "என்னோட ஹாக்கிங்க் எல்லாம் வேலைக்கு சேர்ந்த உடனே மூட்டை கட்டி வெச்சாச்சு .. தவிர, பாங்கிலயும் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிலயும் கோட் எழுதிட்டு இருக்கும் உங்ககிட்ட சொல்றதில எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை" சஞ்சனாவின் நமட்டுச் சிரிப்பை சக்தி மட்டுமே கவனித்தான். சக்தி, "உன்னைப் பொறுத்தவரை யார் பெரிய ஹாக்கர்" தீபா வந்தனாவைப் பார்த்தாள். வந்தனா, "நிறைய பேர் இருக்காங்க. கொஞ்ச நாளுக்கு முன்னாடி நியூஸ்ல வந்துதே ஓவன் வாக்கர்ன்னு ஒருத்தன் அவன் கூட ஒரு அளவுக்கு பெரிய ஹாக்கர்தான்" என்று உலகிற்கு தெரிந்ததை மட்டும் சொன்னாள். அவர்கள் இருவரின் சங்கடத்தை புரிந்த சக்தி, "வந்தனா, நீ உன் ஐ.பி.எஸ் ட்ரெயினிங்கை பத்தி சொல்லேன்" வந்தனா தன் தந்தையின் கனவில் இருந்து தொடங்கி பெயர்களை மட்டும் தவிர்த்து முரளீதரனின் பிரிவில் சேர்ந்தது வரை சொல்லி முடித்தாள். சக்தியின் கண்களில் இருந்த பதட்டம் நீங்காமல், "மறுபடி செக் அப் போனியா? குடலில் பட்ட காயம் முழுசா ஆறிடுச்சா" வந்தனா தன் கண்களால் காதலனுக்கு ஆறுதல் சொல்லி, "ஒரு பிரச்சனையும் இல்லை. எங்க அப்பா என்னை மூணு டாக்டர்ஸ் கிட்ட காண்பிச்சார்..." ஜாஷ்வா, "அந்த கலவரத்தின் போது நீ யாரையாவுது ஷூட் பண்ணினேயா?" வந்தனா, "தற்காப்புக்கு கையில் கன் எடுத்தேன் அவ்வளவுதான். ஆனா உண்மையை சொல்லணும்ன்னா ஒருத்தனை ஷூட் பண்ண வேண்டி இருந்து இருந்தா அவ்வளவு சுலபமா பண்ணி இருப்பேனாங்கறது சந்தேகம்தான்" நித்தின், "அதில் என்ன இருக்கு? கையில் கன் இருக்கும் போது தேவைன்னா ட்ரிக்கரை அழுத்த வேண்டியதுதானே?" சஞ்சனா, "எதிரில் இருப்பவன் செத்து விழக்கூடும்ன்னு தெரிஞ்சு சுடறது அவ்வளவு சுலபம் இல்லை" ஜாஷ்வா, "She is the expert in these matters .. you all better listen (இந்த விஷயத்தில் அவ நிபுணி .. அவ சொல்றதை பேசாம கேட்டுக்கோங்க) வந்தனா அப்போதுதான் அதை உணர்ந்தாள். வந்தனா, "Sanjana, have you .. சஞ்சனா, நீ ..." சஞ்சனா, "ம்ம்ம் .. குறைஞ்சது ரெண்டு டஸன் பேரையாவுது சுட்டு இருக்கேன். துப்பாக்கி சுடுவதில் புலிகளுக்குள் புலின்னு பேர் வாங்கி இருக்கேன். சில சமயம் என்னை, என் கூட இருந்தவங்களை காப்பாத்திக்க சுட்டேன். சில சமயம் எதுக்குன்னு தெரியாம சுட்டேன். அதில் பத்து பேராவுது எதுக்கு சாகறோம்ன்னு தெரியாம செத்தும் போயிருப்பாங்க" என்று சர்வ சாதாரணமாக சொல்ல தீபாவுக்கு சிறிது நடுக்கம் ஏற்பட்டது. சஞ்சனா தொடர்ந்து, "ஒவ்வொரு மிஷனுக்கு பிறகும் வந்து வாந்தி எடுப்பேன். மூணு நாளைக்கு தூங்காம அழுதுட்டு இருப்பேன். கழுத்தில் இருந்த சையனைட்டை கடிச்சுட்டு உயிரை விட்டடலாமான்னு தோணும். இன்னும் ரெண்டு மூணு மாசம் அந்த நரகத்தில் இருந்து இருந்தா முழுசா மரத்துப் போயிருக்கும். நல்ல வேளை அதுக்குள்ள அங்கே இருந்து தப்பிச்சுட்டேன்" மென்பொருளை மட்டும் தொழிலாக கொண்ட மற்ற ஐந்து பேரும் பேச்சிழந்து அமர்ந்து இருக்க ஒரு மயான அமைதி நிலவியது. சக்தி, "இப்ப உன்னால அப்படி சுட முடியுமா?" சஞ்சனா, "நிச்சயமா. இப்ப நம்மை யாராவுது தாக்கினாங்கன்னா என் கைல கன் இருந்தா நிச்சயம் சுடுவேன். offence is the best form of defence" ஜாஷ்வா, "ஹனி, எனக்கு இன்னொரு ட்ரிங்க் வேணும்" சஞ்சனா, "சாரி, உன் மூடை கெடுத்துட்டேன் .. " எல்லோரும் எழுந்து டின்னருக்கு சென்றனர். அடுத்த நாள் முழுவதும் லேக் ஜார்ஜ் ஏரியில் சிறு கப்பலில் க்ரூயிஸ். மனம் விட்டு பேச மிகவும் ஏதுவான சூழலில் அன்றைய பொழுது கழிந்தது இரவு மறுபடி எல்லோரும் சேர்ந்து கல கலப்பான டின்னர். அடுத்த நாள் மாலை வரை பல விளையாட்டுகளில் கழிந்தது. சக்தி-வந்தனா அணி மற்ற நால்வரும் சேர்ந்த அணியை தோற்கடித்த வண்ணம் இருந்தது. ஞாயிறு மாலை புறப்பட்டு இரவு நியூ யார்க்கை அடைந்தனர். ~~~~~~~~~~~~~~~~~~~ தோழிகள் இருவரும் தங்கள் காதலர்களிடம் இருந்து பிரியா விடை பெற்று தங்கள் அறையை அடைந்தனர். தீபா, "நான் கனவில் கூட நினைச்சு பார்க்கலை வந்தனா. ஒரு வாரத்தில் என் வாழ்க்கையே மாறிப் போன மாதிரி இருக்கு." வந்தனா, "நானும் அதே மாதிரிதான் ஃபீல் பண்ணறேன்" தீபா, "உங்க வீட்டில் பிரச்சனை ஒண்ணும் இருக்காதுதானே?" வந்த்னா, "முஸ்லிம் அல்ல கிருஸ்துவன் அப்படின்னா நிச்சயம் ஒத்துக்க மாட்டாங்க .. பாஷை தெரியாதது ஒரு குறைதான். மற்றபடி பழக்க வழக்கங்கள் விஷயத்தில் எங்க ரெண்டு பேர் குடும்பங்களும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டி இருக்கும்." தீபா, "நான் ஒண்ணு கேப்பேன் தப்பா எடுத்துக்க கூடாது. ஓ.கே?" வந்தனா, "என்ன சொல்லு" தீபா, "நாம் சரியான முடிவெடுத்து இருக்கோமா?" வந்தனா, "ஏன் உனக்கு சந்தேகமா இருக்கா?" தீபா, "இல்லை வந்தனா, என்னாலயே நம்ப முடியலை. இது அதான் பயமா இருக்கு"
வந்தனா, "எனக்கும் நம்ப முடியலைதான். ஆனா பயமா இல்லை. நான் இதுவரைக்கும் யாரோடவும் இந்த அளவுக்கு ஃப்ரீயா மனம் விட்டு மனசில் இருக்கறது எல்லாம் சொல்லற அளவுக்கு கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணினது கிடையாது." தீபா, "ம்ம்ம்... நோட் பண்ணினேன். ஒரு சமயத்தில் நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததை பார்த்து நீயா இவ்வளவு பேசறேன்னு தோணுச்சு" வந்தனா, "இன்னும் ஒண்ணு நோட் பண்ணினேயா?" தீபா, "என்ன?" வந்தனா, "நித்தினும் ஷக்தியும் ரொம்ப க்ளோஸ் ... ஒருத்தனைப் பத்தி மத்தவனுக்கு ரொம்ப நல்லா தெரிஞ்சு இருக்கு" தீபா, "அது மட்டும் இல்லை தனியா மத்தவங்க வீட்டுக்கு போற அளவுக்கு. இங்கே வரதுக்கு முன்னாடி சக்தி ரொம்ப பிஸியா இருந்தானாம். சக்தியின் அம்மா தங்கையை பாத்து சொல்லிட்டு வர நித்தின் மட்டும் தனியா ஈரோடுக்கு போயிருக்கான். சக்தியின் அம்மாவுக்கு நித்தினை ரொம்ப பிடிக்குமாம். அதே மாதிரிதான் சக்தியும் நித்தினோட அப்பாவும். 'அவர் என்னை விட சக்தியைதான் நம்புவார்' அப்படிங்கறது நித்தினோட கடுப்பு" வந்தனா, "வெவ்வேறு காலேஜில் படிச்சுட்டு இவ்வளவு க்ளோஸா இருக்கறது ஆச்சர்யமா இருக்கு" தீபா, "ஆமா, ரெண்டு பேருக்கும் பிடிச்ச பொழுது போக்குகூட ஒண்ணும் கிடையாது" வந்தனா, "இருக்கே! பஸ்ஸில்ஸ், அல்காரிதம், கணிணி சம்மந்தப் பட்டவைகள் ..." தீபா, "ஆமா, மறந்துட்டேன். ஒவ்வொரு சமயம் தோணும் நித்தினுக்கு அல்காரிதம்களில் இருக்கும் இன்ட்ரெஸ்டுக்கு அவன் மட்டும் என் கூட வொர்க் பண்ணினான்னா ரெண்டே நாளில் மாங்க்ஸ் பாட் நெட்டை கண்டு பிடிச்சடலாம்" வந்தனா, "ஹேய், நம்ம ரெண்டு பேருக்கும் இந்த விஷயத்தில் ரொம்ப ஒற்றுமை ... நானும் அதையே தான் நினைச்சேன்" ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நண்பர்களின் பேச்சு அவரவர் கைபேசிகளில் ... நித்தின், "டேய், கொஞ்சம் நடுக்கமா இருக்கு ..." சக்தி, "ஏன் .. " நித்தின், "ரொம்ப வேகமா போறமோ?" சக்தி, "எனக்கு கொஞ்சம் அந்த மாதிரி தோணுச்சு. ஆனா வந்தனா இன்னைக்கு என் கிட்ட ஃப்ரீயா பேச ஆரம்பிச்சதும் போயிடுச்சு" நித்தின், "ம்ம்ம் ... இவ்வளவு பேசுவாளான்னு தீபாகூட நக்கல் அடிச்சா" சக்தி, "அவங்க வீட்டில் ஒத்துப்பாங்களான்னு கொஞ்சம் பயமா இருக்கு ... " நித்தின், "ஆமாண்டா! எல்லாரும் போலீஸ், ராணுவம், ஏர்ஃபோர்ஸுன்னு. மவனே, ஜாக்கரதையா இரு. பெண்டை நிமித்திடுவாங்க" சக்தி (சிரித்த படி), "ஆமா ... அவளோட அப்பாவை தவிர .. " நித்தின், "அதுக்கு பதிலாதான் வந்தனாவே ஐ.பி.எஸ் ஆஃபீஸரா இருக்காளே" சக்தி, "அவங்க வேலையை பத்தி தீபா எதாவது சொன்னாளா?" நித்தின், "அவளுக்கு சில சமயம் உற்சாகத்தில் நாக்கு வரைக்கும் வந்துடுது .. கஷ்டப் பட்டு அடக்கிட்டு சொல்லாம இருக்கா" சக்தி, "வந்தனாவும் அப்படித்தான் ... " நித்தின், "உனக்கு அவங்க மாங்க்ஸ் பாட் நெட்டை கண்டு பிடிப்பாங்கன்னு தோணுதா?" சக்தி, "நாம் ஜாக்கிரதையா இருந்தா கண்டு பிடிக்க முடியாது" நித்தின், "இப்ப இருக்கறதை விடவா?" சக்தி, "இப்ப இருக்கற மாதிரியே இருந்தா ஓ.கே" நித்தின், "ஏன் அப்படி சொல்றே?" சக்தி, "வந்தனாவும் சரி, தீபாவும் சரி, நான் பாத்த வரைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் வெவ்வேறு கோணத்தில் பார்க்கறாங்க. ரெண்டு பேரும் அவ்வளவு சீக்கரமா எதையும் கைவிடறதும் இல்லை. இன்னைக்கு வெவ்வேறு காலேஜில் படிச்சும் எப்படி நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு க்ளோஸ்ன்னு வந்தனா கேட்டா. நான் கொஞ்சம் யோசிச்சு பதில் சொல்ல வேண்டியதா இருந்துது" நித்தின், "நீ சொல்றது சரி. " Thursday, 28 August 2008 வியாழன், ஆகஸ்ட் 28 2008 அன்று வரை தீபாவும் வந்தனாவும் மாங்க்ஸ் பாட் நெட்டை வேட்டையாட எடுக்க போகும் வெவ்வேறு நடவடிக்கைகளையும் செய்முறைகளையும் ஆராய்ந்தனர். மேலும் சில கண்டு பிடிப்புக்கள் .. மாங்க்ஸ் பாட் நெட்டை வேட்டையாட மேற்கொள்ளப் போகும் அணுகுமுறை அவர்கள் மனதில் தெள்ளத் தெளிவாக பதிந்து இருந்தது அந்த மூன்று நாட்களும் மாலை ஐந்து மணியில் இருந்து மாலை முழுவதும் தங்கள் காதலர்களுடன் கழித்து இருந்தனர். 'ரொம்ப வேகமா போறோமோ?', 'நாம் சரியான முடிவெடுத்து இருக்கோமா?' என்ற சந்தேகங்கள் எல்லாம் நிவர்த்தியாகி எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளை செதுக்கத் தொடங்கி இருந்தனர். வியாழனன்று தங்களது அணுகுமுறையை துல்லியமாக விவரித்து ஒரு செயற்திட்டத்தை வரைந்து அதை ஷான் மற்றும் சான்ட்ராவிடம் மேலோட்டமாக விளக்கினர். ஷான், "வாவ், நான் உங்க ரெண்டு பேரையும் ரொம்ப கம்மியா எடை போட்டுட்டேன். உங்களோட அப்ரோச் மூலம் நிச்சயம் மாங்க்ஸ் பாட் நெட்டை வளைச்சு பிடிச்சுட முடியும். உங்க பாஸ் முரளீதரன் இப்ப வாஷிங்க்டன் டி.ஸியில் இருக்கார். நாளைக்கு அவரையும் என்னோட பாஸையும் இங்கே வர சொல்றேன். உங்க ப்ரெஸெண்டேஷனை நாளைக்கு கொடுங்க. நாம் இன்னும் விவரமா டிஸ்கஸ் பண்ணி முடிவு எடுக்கலாம்". தோழிகள் இருவரும் தத்தம் காதலர்களை காண விரைந்தனர். நித்தின் தீபாவை சென்ட்ரல் பார்க்கிற்கு அழைத்துச் செல்ல அவளது அலுவலகக் கட்டிட வாசலுக்கு வருவதாக சொல்லி இருந்தான். வந்தனாவை ஹோட்டலுக்கு வந்து டின்னருக்கு அழைத்து செல்வதாக சக்தி கூறி இருந்தான்.தீபா, "ஹாய் ..." நித்தின், "ஹாய் .. போலாமா?" தீபா, "ம்ம்ம் .. " மின்சார ரயிலில் போகும் வழிமுழுவதும் அவன் மேல் சாய்ந்த படி அமர்ந்து இருந்தாள். தீபா, "என்ன ஒண்ணும் பேசமாட்டேங்கறே?" நித்தின், "எதுவும் பேசத் தோணலை" இருவரிம் மௌனம் தொடர்ந்தது ... தீபா, "என்ன அய்யாவுக்கு அதுக்குள்ளே அலுத்துடுச்சா?" நித்தின், "மண்டு, ஒண்ணுமே பேசாம உன் கூட இருந்தாலும் ரொம்ப நல்லா இருக்கு ... அதனாலதான் ஒண்ணும் பேச தோணலை" மறுபடி அவன் மேல் சாய்ந்தாள். தீபா, "உங்க அப்பாகிட்ட சொல்லிட்டயா?" நித்தின், "இல்லை .. என்ன அவசரம்?" தீபா, "பின்னே? நீ இந்தியா திரும்பின உடனே கல்யாணம் பண்ணிக்கணும். என்னால பொறுத்துட்டு இருக்க முடியாது" நித்தின், "எதுக்கு பொறுக்க முடியாது?" தீபா, "ம்ம்ம் எல்லாத்துக்கும் .. " நித்தின், "அப்படின்னா இப்பவே என் ஃப்ளாட்டுக்கு போலாமா?" தீபா, "போய்?" நித்தின், "இப்பவே ஆரம்பிச்சுடலாம்" தீபா, "எதை?" நித்தின், "நீ எதுக்கு பொறுக்க முடியாதுன்னு சொன்னியோ அதை" தீபா, "நான் நிறைய விஷயங்களை சொன்னேன். நீ அதில் ஒண்ணை மட்டும் ஆரம்பிக்கலாம்ன்னு சொல்றே" நித்தின், "சரி, எப்படியும் மத்தது எல்லாத்துக்கும் பொறுத்துத்தான் ஆகணும். இது ஒண்ணை மட்டும் ஆரம்பிக்கலாம்" தீபா, "நித்தின், நீ வேணும்ன்னு சொன்னா என்னால் மறுக்க முடியாது ... ஆனா ... call me old fashioned ... கல்யாணம் வரைக்கும் பொறுத்துக்கலாமே ப்ளீஸ்" நித்தின், "Thank God! எதாவுது ஒரு விஷயத்திலாவுது நீ ஓல்ட் ஃபேஷனா இருக்கியே" தீபா, "நான் நிறைய விஷயத்தில் ஓல்ட் ஃபேஷன்தான் ... "
பிறகும் மௌனமாக பயணம் தொடர்ந்தது. சென்ட்ரல் பார்க் அருகே இருக்கும் கொலம்பஸ் வீதி ஸ்டேஷனை அடைந்து பார்க்கிற்கு செல்லும் படிகளை நோக்கி நித்தின் நடக்க தீபா, "நித்தின், உங்க ஃபேவரிட் பேக்கரில எதாவுது வாங்கிட்டு போலாமே?" நித்தின், "ஓ, வந்தனா சொன்னாளா? சரி வா"பார்க்கை அடைந்தவர்கள் ஒரு பெஞ்சில் அமர்ந்தனர். மறுபடி அவன் மேல் சாய்ந்தவாறு அவள் அமர்ந்து கையில் இருந்த தின் பண்டத்தை கொறித்தாள். நித்தின், "சரி, நிறைய விஷயம்ன்னு சொன்னியே ... என்ன எல்லாம் அது?" தீபா, "ம்ம்ம் .. காலைல நான் தூங்கிட்டு இருக்கும் போது நீ வந்து என்னை எழுப்பறதில் இருந்து நைட்டு நீ என்னை பெட்டுக்கு தூக்கிட்டு போற வரைக்கும் நிறைய விஷயங்கள்" நித்தின், "ஏன்? பெட் காஃபீயோட எழுப்பறதுன்னு சொல்லாம விட்டுட்டியே?" தீபா, "that is understood .." நித்தின், "நான் பெங்களூர்லயும் நீ டெல்லிலயும் இருந்துட்டு எப்படி அதெல்லாம் செய்யறதா உத்தேசம்?" தீபா, "நான் ஒண்ணும் உன்னை டெல்லிக்கு வான்னு சொல்ல மாட்டேன். எனக்கு பெங்களூருக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்குமான்னு கேப்பேன். இல்லைன்னா ஹைதராபாத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்குமான்னு கேப்பேன். In which case ... நீ உங்க ஹைதராபாத் செண்டருக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வரணும். அதுவும் முடியாதுன்னா வேலையை நான் ராஜினாமா பண்ணிடுவேன்" நித்தின், "அப்ப உன் மூணு வருஷ தண்டனை?" தீபா, "ஏற்கனவே அவங்க என்னை வேலைக்கு எடுத்துகிட்டதுக்கு நான் நிறைய சாதிச்சு இருக்கேன். இப்ப எடுத்துக்கற அசைன்மெண்டையும் நீ இந்தியா வரதுக்குள்ள முடிச்சுடுவோம்ங்கற நம்பிக்கை இருக்கு. சோ, அதை வெச்சு ரிக்வெஸ்ட் பண்ணுவேன். ஒத்துப்பாங்கன்னு நினைக்கறேன்" நித்தின், "இப்ப எடுத்துக்கற அசைன்மெண்டை அதுக்குள்ளே முடுச்சுடிவீங்களா?" தீபா, "ம்ம்ம் .. அப்படிதான் தோணுது." நித்தின், "அப்படி முடிச்சா உன் பாஸ் ட்ரான்ஸஃபருக்கு ஒத்துக்குவாரா?" தீபா, "நாங்க என்ன சொன்னாலும் எல்லாரும் கேப்பாங்க" நித்தின், "ஏன் அவ்வளவு கஷ்டமான கேஸா அது?" தீபா தன் காலரை உயர்த்தி விட்டவாறு, "எஃப்.பி.ஐ காரங்களே அவங்களால முடியாதுன்னு கைவிட்ட கேஸ் இது." நித்தின், "Then I wish you good luck ... " தீபா, "You know something? உனக்கு பஸ்ஸில்ஸ், அல்காரிதம் இதிலெல்லாம் இருக்கும் ஆர்வத்துக்கு நீ நான் செய்யற வேலையை செஞ்சா எவ்வளவு என்ஜாய் பண்ணுவே தெரியுமா? நீ என்னடான்னா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு கோட் எழுதிட்டு இருக்கே" நித்தின், "ஏன்? இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு கோட் எழுதறதுக்கு என்ன குறைச்சல். அதுவும் என்ஜாய் பண்ணற மாதிரி வேலைதான்" தீபா, "நான் சாலஞ்ச் பண்ணறேன். இதுக்காகவாவுது உன் கிட்ட நான் செய்யும் வேலையை பத்தி டிஸ்கஸ் பண்ணறதுக்கு என் பாஸ்கிட்ட பர்மிஷன் கேக்கப் போறேன்" நித்தின், "அதுக்கு உன் பாஸ் ஒத்துக்குவாரா?" தீபா, "ஏன்? நான் என்ன யாராவுது ஹாக்கர்கிட்டயா டிஸ்கஸ் பண்ணணும்ன்னு கேக்கப் போறேன்? இன்ஸ்யூரன்ஸ் கம்பெனில கோட் எழுதிட்டு இருக்கறவன்கிட்டதானே. உன்னால் எந்த செக்யூரிடி இஸ்யூவும் வராதுன்னு சொல்லப் போறேன்" நித்தின், "அப்ப நான் ஒரு ஹாக்கரா இருந்து இருந்தா?" தீபா, "உன்னை அரெஸ்ட் பண்ணி என்னை மாதிரி என் கூட வொர்க் பண்ண R&AWவில் சேர்க்க என்ன வழின்னு பாப்பேன்" சிரித்தபடி நித்தின், "நீ பண்ணற வேலை ஓ.கே. ஆனா எனக்கு இந்த போலீஸ், கட்டுப் பாடு இதெல்லாம் பிடிக்காதே" தீபா, "அதுவும் எனக்கு தெரியும். ஆனா ஒண்ணு சொல்லட்டுமா? எங்க வேலையிலும் கட்டுப்பாடுன்னு ஒண்ணும் கிடையாது. எங்க பாஸ் நாங்க செய்யும் வேலையில் தலையிடவே மாட்டார். அப்பப்ப என்ன செஞ்சுட்டு இருக்கோம்ன்னு அப்டேட் கொடுத்தா போதும்" நித்தின், "ம்ம்ம் பாக்கலாம்" தீபா, "என்ன பாக்கலாம்?" நித்தின், "கல்யாணத்துக்கு அப்பறம் உங்க R&AWவில் எனக்கு வேலை கிடைக்குதான்னு ..." அளவிலா உற்சாகத்தில் அவன் மடிமேல் ஏறி அமர்ந்து அவன் கழுத்தை கைகளால் வளைத்தவள், "சீரியஸா சொல்றியா? நீ என் பாஸ்கிட்ட பத்து நிமிஷம் பேசினா போதும். என்னைவிட சீனியர் பொஸிஷனில் வேலை கொடுப்பார்" இருட்டும் வரை பார்க்கை சுற்றித் திரிந்தவர்கள் ஒரு ரெஸ்டாரண்டில் உணவருந்தியபின் நித்தின் காரில் ஹோட்டலை நோக்கி பயணித்தனர். தீபா, "நாளைக்கு நீ பிஸின்னு சொன்னே. சரி, சனிக்கிழமை கூட பிஸியா இருப்பியா? நான் புறப்படறதுக்கு முன்னாடி பாக்கணும்" நித்தின், "முடிஞ்சா உன்னை ஏர்ப்போர்ட்டில் வந்து பார்க்கறேன்" ஹோட்டலின் வாசலில் வெகு நேரம் அணைத்த படி பேசிக் கொண்டு இருந்து பல முத்தங்களுக்கு பிறகு பிரியா விடை பெற்றனர்.ஹோட்டல் லாபியில் காத்து இருந்த சக்தியை இன்ப அதிர்ச்சியால் திக்கு முக்காட வைத்தபடி லிஃப்டில் இருந்து வந்தனா வந்தாள். தன்னைப் பார்த்து சக்தியின் கண்கள் விரிவதைக் கண்டது முதல் அவன் அருகே வரும் வரை தலைகுனிந்து நடந்து வந்தாள். அருகில் வந்து அவன் முகத்தைப் பார்த்து வெட்கப் புன்னகை உதிர்த்தவளிடம் இருந்து இரண்டு அடிகள் பின்னால் சென்று அவளை மறுபடி தலையில் இருந்து கால்வரை கண்களால் தழுவினான், வந்தனா, "ஏய், போதும் எல்லாம் பாக்கறாங்க. போலாம் வா" சக்தி, "நத்திங்க் டூயிங்க் அப்படியே நில்லு" என்றபடி ஜாக்கெட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறு கேமராவை எடுத்து அவளை படம் பிடிக்கத் தொடங்கினான். வந்தனா, "என்னது இது புதுசா? என் ஃபோட்டோ உன் கிட்ட இல்லையா?" சக்தி, "நிறைய இருக்கு. ஆனா புடவை கட்டிட்டு எதுவும் இல்லை" என்றவாறு அவளை முன் புறம், பக்கவாட்டிலிருந்தும் சரமாறியாக க்ளிக்கினான். பிறகு கேமராவை பாக்கெட்டில் போட்டபடி அருகே வந்து அவளது இடையை கையால் வளைத்தான். "ஏது புடவை? மேடம் ஊர்ல இருந்து கொண்டு வந்து இருந்தீங்களா?" "ம்ம்ஹூம் ... உனக்கு புடவை கட்டி காண்பிக்கணும்ன்னு நேத்து லஞ்ச் டைமில் தீபாகூட போய் வாங்கினேன். புடிச்சு இருக்கா?" "எனக்கு பிடிச்ச டார்க் ரெட் .. கூட இந்த பீகாக் ப்ளூ பார்டர் அட்டகாசம். அப்படியே மறுபடி உன் ரூமுக்கு தூக்கிட்டு போலாம்ன்னு இருக்கு"
"எதுக்கு?" காதலர்களிடையே நடக்கும் இலை மறை காயான பேச்சுக்களுக்குத்தான் எத்தனை சுவை! "ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஒரு சின்ன ரிஹர்ஸல் பார்க்க" லேசாக தலையை உயர்த்தி அருகில் இருந்தவனை மையிட்ட கண்களால் சில கணங்கள் கூர்ந்து நோக்கியவள், "உனக்கு நிஜமா அப்படி தோணுதா?" சக்தி, "சத்தியமா தோணுது. ஆனா, Call me old fashioned .. I rather reserve it for that memorable night" முகம் மலர்ந்த வந்தனா, "எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? இது வரைக்கும் நீ எந்த விஷயத்திலும் நான் எதிர்பார்த்ததுக்கு மாறா இல்லை" சக்தி, "ரிஹர்ஸல்தான் வேண்டாம்ன்னு சொன்னேன் .. but not this" என்றவாறு அவள் எதிர்ப்புத் தெரிவிக்கும் முன்னர் அவளை அணைத்து அவள் இதழோடு இதழ் பதித்தான். சுற்றி இருந்த பலரின் தலைகள் இவர்கள் பக்கம் திரும்ப, அவன் அணைப்பில் இருந்து விலகிய வந்தனா, "என்னது இது பப்ளிக் ப்ளேஸில். போலாம் வா" என்றபடி சிவந்து இருந்த முகத்தை சுளிக்க முயன்று தோற்றாள். அருகில் இருந்த மாலில் சற்று நேரம் சுற்றித் திரிந்த பின் காரில் ரெஸ்டாரண்டை நோக்கி பயணித்தனர் ...

No comments:

Post a Comment