Monday, February 2, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 25


Friday, 17, April 2009 11:30 PM வெள்ளி, ஏப்ரல் 17, 2009 இரவு 11:30 க்ரீன்விச் வில்லேஜ் எனும் பகுதியில் இருந்த ஹாஃப்மனின் வீட்டில் இரவு விருந்தை முடித்து விட்டு நால்வரும் ஜாஷ்வாவின் காரில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். ஜாஷவா ஒயின் மட்டும் குடித்து இருந்தாலும் சஞ்சனா அவனை காரோட்ட அனுமதிக்காமல் அவள் ஓட்டி வந்தாள். சஞ்சனா, "ஏன்பா? அந்த க்ரீன்விச் வில்லேஜ் ஏரியாவில் இடம் ரொம்ப காஸ்ட்லி இல்லை?" ஜாஷ்வா, "ரொம்பன்னு சொல்ல முடியாது. நியூ யார்க்கில் பாஷ் அப்படின்னு சொல்லக்கூடிய பகுதிகளில் ஒண்ணு" சஞ்சனா, "ஸ்டில் அவன் சம்பளத்தில் அந்த மாதிரி ஒரு ஏரியாவில் அப்படி ஒரு வீடு வாங்கி இருக்க முடியுமா?" ஜாஷ்வா, "இந்த ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனில் எங்க கூட அவனும் சேர்ந்துதானே சம்பாதிக்கறான்?" சஞ்சனா, "அப்பறம் எப்படி ரொம்ப நாளா அந்த வீட்டில் இருக்கறதா அவன் வைஃப் சொன்னா?" ஜாஷ்வா திகைப்புடன், "ஓ அப்படியா? வீடு மாமனார் வழி சொத்தா இருக்கணும். ஏன்னா அவன் ரொம்ப ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்ததா என்கிட்ட சொல்லி இருக்கான்" நித்தின், "ஜாஷ், நீ ஏன் அவன் டின்னருக்கு கூப்பிட்டப்ப எங்களை கூட்டிட்டு போக தயங்கினே?"
ஜாஷ்வா, "கொஞ்ச நாளாவே நான் அவன் கிட்ட அன்ஈஸியா ஃபீல் பண்ணறேன்" சக்தி, "Any specific incidence that triggered it?" ஜாஷ்வா, "எஸ், எங்க பேங்கில் ஐ.டி டிபார்ட்மென்டில் நான் மட்டும்தான் அவனுக்கு தோஸ்துன்னு நினைச்சுட்டு இருந்தேன். அவனும் நான் சம்மந்தப் படாத விஷயமா இருந்தாலும் வலிய என்கிட்ட தான் வந்து கேட்பான். அப்படி இருந்தது ஒரு விதத்தில் நம் ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனுக்கும் வசதியா இருந்துது" சஞ்சனா, "அதுக்கு ஏன் வசதியா இருந்துது?" ஜாஷ்வா, "ட்ரான்ஸ்ஃபர் நடக்கும் சமயத்தில் அது விஷயமா எதாவது பேசினாலும் எங்க ரெண்டு பேரையும் அடிக்கடி ஒண்ணா பார்க்கறதால யாருக்கும் எந்த சந்தேகமும் வராது" சக்தி, "சரி, இப்ப அதில் என்ன மாற்றம்? உன்னை அவாய்ட் பண்ணறானா?" ஜாஷ்வா, "என் கிட்ட எப்பவும் போலத்தான் பேசிட்டு இருக்கான். ஆனா, இப்ப எல்லாம் ஐ.டி டிபார்ட்மென்ட்டில் இன்னொருத்தனோடவும் நல்லா பேசிட்டு இருக்கறான்" நித்தின், "யார் அவன்?" ஜாஷ்வா, "அபிகெயில் ஹிர்ஷ் அப்படிங்கறவன். ஆன்-லை பாங்கிங்க் செய்ய உபயோகிக்கும் மென்பொருளுக்கு அவன் தான் பொறுப்பு. வாடிக்கையாளர் நிறுவனங்களில் அந்த மென்பொருளின் உபயோகத்தில் எதாவுது தடங்கல்ன்னா அவன் டீமில் இருந்துதான் யாராவுது அந்த நிறுவனத்துக்கு போய் சரிசெஞ்சுட்டு வருவாங்க" சக்தி, "ரெண்டு பேரும் ஜூய்ஷ் அப்படிங்கறதுனாலயா?" ஜாஷ்வா, "ஹாஃப்மன் பேருக்கு மட்டும் ஜூயிஷ். மத்தபடி அவனுக்கும் எந்த மதத்துக்கும் சம்மந்தம் இல்லை. அவன் மனைவிகூட கிரிஸ்டியன், ஜூயிஷ் இல்லை" நித்தின், "வேறு என்ன் கனெக்க்ஷன் இருக்க முடியும்?" ஜாஷ்வா, "தெரியலை. இந்த மாதத்தோடு நிறுத்திக்கப் போறோம்ன்னு சொன்னது அவனுக்கு பிடிக்கலைன்னு நினைக்கறேன். வேறு யார் மூலமாவுது அதை செய்ய முடியுமான்னு பார்க்கறானோன்னு தோணுது" சக்தி, "நம் பாட் நெட்டைப் பத்தி ஹாஃப்மனுக்கு தெரியுமா?" ஜாஷ்வா, "இல்லை. நாம் மூணு பேரும் ஹாக்கர்கள். கணிணிகளை ஹாக் செஞ்சு ட்ரான்ஸ்ஃபர் செய்யறோம்ன்னு மட்டும்தான் நான் சொல்லி இருக்கேன்" நித்தின், "ஜாஷ், நீ சந்தேகப் படறது சரியாத்தான் இருக்கும்ன்னு எனக்கு தோணுது" சக்தி, "எப்படி சொல்றே?" நித்தின், "என் கிட்ட அவன் பேசிட்டு இருந்தப்ப ஹாக்கிங்க், வைரஸ், டினையல் ஆஃப் சர்வீஸ் அட்டாக் பத்தி எல்லாம் விவரம் கேட்டுட்டு இருந்தான். அவ்வளவு தெரிஞ்சவன் பாட் நெட்டைப் பத்தி என்னன்னு கேள்விப்பட்டு இருக்கணும். அவனுக்கும் நாம் பாட் நெட்டை உபயோகிச்சு ட்ரான்ஸ்ஃபர் செய்யறோம்ன்னு நீ சொல்லி இருந்தேன்னு நினைச்சேன். ஆனா அந்த டாபிக்கை பர்பஸ்ஸா அவாய்ட் பண்ணி இருக்கான்" சக்தி, "இன்னும் ஒண்ணு நோட்டீஸ் பண்ணினீங்களா?" ஜாஷ்வா, "என்ன?" சக்தி, "அவன் உங்க பேங்கில் ஆடிட்டிங்க் பிரிவிலதானே இருக்கான்?" ஜாஷ்வா, "ஆமா?" சக்தி, "அப்பறம் எப்படி அவனுக்கு அத்தனை ஃபோன் கால்ஸ்? அதுவும் அவன் வெளியில் போய் நின்னுட்டு பேசிட்டு இருந்தப்ப அவன் முகத்தைப் பார்த்தா எல்லாம் கேஷுவல் கால்ஸ் மாதிரி தெரியலை. எதோ பிஸினஸ் டீலிங்க்கைப் பத்தி பேசிட்டு இருந்த மாதிரி இருந்தது" ஜாஷ்வா, "சரி, அவனைப் பத்தி உன்னோட இம்ப்ரெஷன் என்ன சக்தி?" சக்தி, "நிச்சயம் பரம்பரைப் பணக்காரன் இல்லை. தன்னிடம் பணம் இருக்கணும்ன்னு காட்டிக்க விரும்பறவன். எப்பவும் நிறைய பணம் இருக்கணும்ன்னு விரும்பறவன். பேங்க் வேலையை தவிர நம் ஆபரேஷனைத் தவிர வேற எதோ வேலையும் செய்யறான்னு என் மனசுக்குப் படுது." சஞ்சனா, "சரியா சொன்னேண்ணா" ஜாஷ்வா, "அப்படின்னா, உன் இம்ப்ரெஷன் என்ன ஹனி?" சஞ்சனா, "ஹாஃப்மன் மேலோட்டமா பாத்தா சந்தேகப் படும்படியா தெரியலை. ஆனா அவன் தன் மனைவியை நடத்தும் விதத்தை வெச்சுப் பாக்கும்போது, நீங்க அவன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்"Monday, 20 April 2009 9:00 AM Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi திங்கள், ஏப்ரல் 20, 2009 காலை 9:00 R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி அவர்களது வேட்டை சூடு பிடிக்கப் போகிறது என்பதற்கு அறிகுறியாக இந்தியக் குழுவுடன் அன்று எஃப்.பி.ஐயின் ஷான் ஹென்றியை தவிர க்ரிஸ்டஃபர் மோரிஸ்ஸும் கான்ஃபரென்ஸ் கால் மூலம் கலந்து கொண்டார். ஷான், "முரளி, மாங்க்ஸ் பாட் நெட்டின் கன்ட்ரோலர்கள் அமெரிக்காவை விட்டு போகப் போறாங்க அதனால் தான் சர்வர்லெஸ் பாட் நெட்டாக மாத்தி இருக்காங்க அப்படிங்கற தியரியை நாங்க கொஞ்சம் அனலைஸ் பண்ணிப் பார்த்தோம். ஆனா அவங்க மத்த எந்த நாட்டில் இருப்பதையும் விட இங்கே இருப்பதைத் தான் சேஃபா கருதுவாங்க அப்படிங்கறது எங்க கணிப்பு" வந்தனா, "எப்படி சொல்றீங்க ஷான்" கிரிஸ்டஃபர், "பல சைபர் ப்ளாக் மார்கெட் கூட்டங்கள் மாங்க்ஸ் பாட் நெட்டுக்கு வலை வீசியபடி இருக்கின்றன. அந்த கூட்டங்களின் கைகளில் பிடிபடாமல் இருக்க அமெரிக்கா, ஐரோப்பா மாதிரி பாதுகாப்பான இடங்கள் இல்லை என்பது எங்க கணிப்பு. முரளீதரன், "சோ, அப்ப நாங்க முன்ன மாதிரி டார்கெட் டேட் ஜூலை கடைசி அப்படின்னு வெச்சுட்டு தொடரலாமா?" கிரிஸ்டஃபர், "இல்லை. மாங்க்ஸ் பாட் நெட்டை சீக்கிரமா கைப் பற்றணும் அல்லது எங்க மேற்பார்வைக்குள் கொண்டு வரணும். அதற்கு வேறு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. ஷான், அதை விளக்குங்க" ஷான், "வந்தனா, அன்னைக்கு ப்ளூ ஃபின் ரெஸ்டாரண்ட் சர்வெய்லன்ஸ் வீடியோ ரெக்கார்டிங்கில் அல்-கைதாவை சேர்ந்தவன் ஒருத்தன் இருந்தான்னு சொன்னேன் இல்லையா? அவன் ஒரு பாகிஸ்தானி. இதுக்கு முன்னால் துபாய்ல இருந்தான். அல்-கைதாவின் கணிணி மற்றும் தகவல் பரிமாற்ற பிரிவில் சின்ன லெவலில் இருப்பவன். அந்த மாதிரி ஆளுங்க யூ.எஸ்ஸுக்குள் கொண்டு வர அல்-கைதாவுக்கு அவசியமே இல்லை. ஒரு இன்ஃபார்மர் மூலம் அவனை அணுகி அவன்கிட்ட பேச்சுக் கொடுத்ததில் இன்னும் ரெண்டு முக்கியமான புள்ளிகள் இங்கே ஏற்கனவே இருப்பதாகவும் அவங்களுக்கு உதவ இவனை வரவெச்சு இருக்காங்க அப்படின்னும் தகவல் கிடைச்சுது. எதுக்கு உதவன்னு கேட்டப்ப மாங்க்ஸ் பாட் நெட்டை கண்டு பிடிக்க உதவன்னு சொன்னான்" வந்தனாவின் முகம் இறுகியது .. வந்தனா, "பட், நம்மை விட அவங்க சீக்கிரம் கண்டு பிடிச்சுடுவாங்கன்னு நீங்க நம்பறீங்களா?" கிரிஸ்டஃபர், "நான் ஒண்ணு உங்களை எல்லாம் கேட்கிறேன். மாங்க்ஸ் பாட் நெட் எந்த விதமான சட்ட விரோத செயலிலும் ஈடுபடுத்தப் படவில்லை என்பதை நீங்க 100% நம்புவீங்களா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "நோ! நல்லவங்களா இருந்தாலும், அவ்வளவு பவர்ஃபுல்லா ஒண்ணை உருவாக்கின கர்வம் நிச்சயம் இருக்கும். அந்த கர்வம் போதும் நாளடைவில் எதாவது தப்பான் வழியில் போறதுக்கு" கிரிஸ்டஃபர், "நீங்க ஃபிலசாஃபிகல்லா பார்க்கும் அதே விஷயத்தை நாங்க மனோதத்துவ ரீதியா ஆராய்ந்தோம். அவங்க குணாதிசயங்களை சித்தரிக்க ஒரு ஸைக்கலாஜிகல் ப்ரொஃபைல் (psycological profile) உருவாக்கினோம். அதன்படி அவங்க மனதில் சமுதாயத்தையோ அல்லது அரசாங்கத்தையோ எந்த விதத்திலாவது பழி வாங்கும் அல்லது ஏளனம் செய்யும் எண்ணம் இருக்கும் என்பது எங்க மனோதத்துவ நிபுணர்களின் கணிப்பு" தீபா, "அப்ப சட்ட விரோதம்ன்னு நீங்க சொல்றது ... " கிரிஸ்டஃபர், "கொலை, கொள்ளை இந்த மாதிரி வேலைகள் மட்டும் சட்ட விரோதச் செயல்கள் அப்படின்னு சொல்ல முடியாது இல்லையா?" தீபா, "பின்னே எப்படி?" கிரிஸ்டஃபர் "அரசாங்கத்தின் கண்ணுக்கு சட்ட விரோதம் அப்படின்னு படற நிறைய விஷயங்களை ஜனங்க நடைமுறையில் ஒத்துக்கறாங்க இல்லையா? அந்த மாதிரி செயல்கள் எதிலாவது ஈடு பட்டு இருக்கலாம்" வந்தனா, "சோ அப்படி அவங்க ஈடு பட்டு இருந்தா?" ஷான், "அந்த மாதிரி வேலை எதிலாவது ஈடுபட்டு இருந்தா, நம்மை விட அல்-கைதாக்காரங்கதான் சீக்கிரம் கண்டு பிடிப்பாங்க. ஏன்னா, பல பளாக் மார்க்கெட் கூட்டங்கள், மாஃபியா, போதைப் பொருள் மற்றும் பணம் கடத்தறவங்க, இவங்ககூட எல்லாம் அல்-கைதாவுக்கு தொடர்பு இருக்கும். இந்த கூட்டங்கள் மூலம் அவங்க கண்டு பிடிக்க முயற்சி செய்வாங்க" தீபா, "சோ?" கிரிஸ்டஃபர், "So it is a bloody race!" முரளீதரன், "என்ன செய்யலாம்?" கிரிஸ்டோஃபர், "ப்ரொஃபெஸ்ஸர், சூப்பர் கம்பியூட்டர் உபயோகிச்சா ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் இன்னும் வேகமா முடிக்க முடியும்ன்னு சொன்னீங்க இல்லையா? உங்களுக்கு தேவையான சூப்பர் கம்பியூட்டர் இன்னும் சில நாட்களில் ஏற்பாடு செஞ்சு கொடுக்கறோம். எனக்கு மாங்க்ஸ் பாட் நெட்டின் பழைய சர்வர் ஐ.பி.அட்ரெஸ் இன்னும் ஒரு மாதத்தில் வேணும். முடியுமா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "முயற்சி செய்யறோம் ஆனா ஒரு மாதம் ரொம்பவே கஷ்டமான டார்கெட். ஆனா நாற்பது நாளுக்குள்ள நிச்சயம் முடிச்சுடலாம்" கிரிஸ்டஃபர், "அப்ப, மே மாதம் கடைசி வாரத்தில் முடிச்சுடணும். ஓ.கே?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "டன்!" அடுத்த சில நாட்களில் ப்ரொஃபெஸ்ஸர் சாரி ஒரு தனிக் குழு அமைத்து மென்பொருளை சூப்பர் கம்பியூட்டருக்கு ஏற்றதாக மாற்றும் பணியில் இறங்கினார். வந்தனாவும் தீபாவும் அவர்கள் முன்பு செய்து கொண்டு இருந்ததை தொடர்ந்தவாறு இருந்தனர். அவர்களது திட்டப் படி ஏப்ரல் முடிவில் சூப்பர் கம்பியூட்டருக்கான மென்பொருள் தயாராகிவிடும். அச்சமயம் நூற்று பதினாறு சுற்றுக்கள் முடிந்து இருக்கும். மே மாதத் தொடக்கத்தில் இருந்து சூப்பர் கம்பியூட்டரை உபயோகித்து தினம் நான்கு சுற்றுக்கள் என்ற வேகத்தில் தொடர முடியும் என்று திட்டமிட்டனர். அதிக பட்சமான 256 சுற்றுக்களும் தேவையெனிலும் ஜூன் நான்காம் தேதிக்கு மேல் தாமதமாகாது என்று திட்டமிட்டனர்.Sunday 26 April 2009 8:00 AM US-EST / Sunday 26 April 2009 7:00 PM IST Shakthivel's Flat, New York, USA / Rathod Mansons, Udaipur, India ஞாயிறு, ஏப்ரல் 26, 2009, அமெரிக்க நேரம் காலை 8:00 / இந்திய நேரப்படி ஞாயிறு, ஏப்ரல் 26, 2009 மாலை 7:00 சக்திவேலில் ஃப்ளாட், நியூ யார்க் / ராத்தோட் மான்ஷன்ஸ், உதைப்பூர் அடுத்த நான்கு நாட்களும் கொலம்பியன் ட்ரக் கார்டல்காரர்களுக்காக செய்யப் போகும் இறுதி ட்ரான்ஸ்ஃபர் வேலையை யோசித்தபடி இருந்த சக்தியை அவன் கைபேசி அழைத்தது. வந்தனா, "ஹாய் டியர், குட் மார்னிங்க். நான் உன்னை தூக்கத்தில் இருந்து எழுப்பலையே?" சக்தி வந்தனா வார இறுதியை கழிக்க உதைப்பூர் சென்று இருந்ததை எண்ணி, "இல்லை ஹனி, எப்படி இருக்கே?" வந்தனா, "நான் நல்லா இருக்கேன். இதோ அப்பாவும் அம்மாவும் பேசணுமாம் அவங்க உன்னிடம் பேசிட்டு கொடுக்கட்டும் அப்பறம் நாம் பேசலாம்" சக்தி, "ஸ்பீக்கர் ஃபோன் போட்டு எல்லாம் ஒண்ணா பேசலாம்ன்னு அவங்க சொல்லலையா?" வந்தனா, "இல்லை. நீ சொன்னா உனக்கு ஒதை" சக்தி, "சரி சரி, அவங்க கிட்ட கொடு" மஞ்சுநாத் ராத்தோட், "ஹெல்லோ?" சக்தி, "ஹெல்லோ அங்கிள்? எப்படி இருக்கீங்க? ஆண்டி எப்படி இருக்காங்க?" மஞ்சுநாத், "வீ போத் ஆர் ஃபைன் பேட்டா. நீ எப்படி இருக்கே?" சக்தி, "நான் நல்லா இருக்கேன் அங்கிள். உங்க டென்னிஸ் எல்போ (Tennis Elbow) ப்ராப்ளம் இப்ப பரவால்லையா?" மஞ்சுநாத், "மச் பெட்டர் பேட்டா. ஆனா, இன்னும் ரெண்டு மூணு மாசத்துக்கு டென்னிஸ் பக்கம் போகக் கூடாதுன்னு ஆர்தோபேடிஸ்ட் சொல்லிட்டார். அதான் வெறுப்பா இருக்கு" சக்தி, "நீங்க ரொம்ப லக்கி அங்கிள். டென்னிஸ் எல்போ ஈஸியா ட்ரீட் பண்ணக்கூடிய ப்ராப்ளம். இதுவே காலில் எந்த பகுதியில் வந்தாலும் டென்னிஸ்ஸையே மறந்துடுன்னு சொல்லி இருப்பாங்க" மஞ்சுநாத், "அது பொதுவா சிந்தெடிக் சர்ஃபேஸ் (Synthetic Surface) இருக்கும் டென்னிஸ் கோர்ட்டில் தொடர்ந்து ஆடினா வர்றது. நான் எப்பவும் க்ளே கோர்ட் (Clay Court), சில சமயம் க்ராஸ் கோர்ட்டில் (Grass Court) விளையாடுவேன்" சக்தி, "வாவ், க்ராஸ் கோர்ட்! அமெரிக்காவில் கூட அது ஒரு ஆடம்பரம்!!" மஞ்சுநாத், "உங்க மேரேஜ் முடியட்டும், டெல்லி, ஜெய்ப்பூர், உதைப்பூர் இந்த மூணு ஊரிலும் க்ராஸ் கோர்ட் இருக்கும் க்ளப்பில் நீ விளையாடலாம்" சக்தி, "ஓ, தாட் வுட் பீ நைஸ்" மஞ்சுநாத்,"தென், லாஸ்ட் வீக் மனோஹரி பெஹன்கூட உங்க கல்யாணத்தை எப்ப வெச்சுக்கலாம்ன்னு பேசினேன். அவங்க முதலில் உங்க ரெண்டு பேருடைய டெஸிஷன் என்னன்னு தெரிஞ்சுட்டு முடிவெடுக்கலாம்ன்னு சொன்னாங்க. பட் ஷக்தி, கூடிய சீக்கிரம் வந்தனாவை மணக்கோலத்தில் பாக்கணும்ன்னு நாங்க எல்லோரும் ஆவலா இருக்கோம். நீ எப்ப பண்ணிக்கலாம்ன்னு யோசிச்சு வெச்சிருக்கே?" சக்தி, "நான் வந்தனாகிட்ட பேசிட்டு அவமூலமே சொல்றேன் அங்கிள் .... that is if you don't mind" மஞ்சுநாத், "Not at all Beta! But, இன்னைக்கே சொல்லிடு ஓ.கே? இரு ஆண்டி உன்னோட பேச ஆவலா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. ஸ்பீக்கர்ஃபோன் போட்டு இருந்தா நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா உன்னோட பேசிட்டு அதுக்கு அப்பறம் வந்தனா ஸ்பீக்கர்ஃபோனை ஆஃப் பண்ணிட்டு கண்டின்யூ பண்ணி இருக்கலாம்" மன்னிப்புக் கோரும் முகத்துடன் வந்தனா தந்தையை பார்த்துப் புன்னகைத்தாள். ஹாண்ட் செட்டை கௌரியிடம் கொடுத்தபடி மகளை அணைத்து உச்சி முகர்ந்து, "I understand my Princess" என்றார்கௌரி, "ஹெல்லோ ஷக்தி?" சக்தி, "ஹெல்லோ ஆண்டி! எப்படி இருக்கீங்க?" கௌரி, "ஐ யம் ஃபைன் பேட்டா. நீ ஹிந்தி கத்துக்கறது எந்த லெவலில் இருக்கு?" சக்தி, "ஆண்டி, எனக்கு மராட்டி பேசத் தெரியும். ஹிந்தி கத்துக்கறது அவ்வளவு கஷ்டம் இல்லை" கௌரி, "அது எனக்கு தெரியும். இங்கே ஒருத்தர் நீ ஹிந்தி கத்துக்கறதுக்கு முன்னாடி அவங்க தமிழ் கத்துக்கப் போறதா சவால் விட்டு இருக்காங்க. அதான் உன் சைட் ப்ரோக்ரஸ் என்னன்னு தெரிஞ்சுக்க கேட்டேன்" சக்தி, "சோ ஃபார் நத்திங்க் ஆண்டி. ஆனா, இப்போ போட்டின்னு வந்துடுச்சு இல்லே? இனி பாருங்க என் ப்ரோக்ரஸ்ஸை" கௌரி, "சரி, வந்தனாகிட்ட கொடுக்கறேன்" சற்று தூரத்தில் இருந்த வந்தனவிடம் ஹாண்ட் செட்டை கௌரி எடுத்து செல்லும்போதே சக்தி, "ஹனி, ஐ லவ் யூ சோ மச்!" கௌரி, "கொஞ்சம் பொறுமையா இருப்பா! அவ கையில் எடுத்து ஹல்லோன்னு சொல்லட்டும்" சக்தி சற்று அசடு வழிந்து பிறகு அவசரமாக சுதாரித்து, "ஐய்யோ ஆண்டி நான் உங்களுக்கு தான் சொன்னேன்" என்று கிண்டலடிக்க கௌரி ஃபோனுக்கு வெளியே மகளையும் கணவரையும் பார்த்து, "அமெரிக்காவில் இருக்கும் ஒரு இளைஞன் எனக்கு ஐ லவ் யூ சொல்லி இருக்கான். இனிமேல் என் தொடர்ந்த சேவை உங்களுக்கு வேணும்ன்னா கொஞ்சம் மரியாதையா நடந்துக்குங்க" என்றவாறு வந்தனாவிடம் கார்ட்லெஸ்ஸை கொடுக்க முகம் சிவந்த மகள் அதை எடுத்துக் கொண்டு தோட்டத்துக்கு ஓடுவதை தம்பதியினர் பார்த்துப் பூரித்தனர். வந்தனா, "அப்பா நாம் ரெண்டு பேருக்கும் எப்ப வசதியா இருக்கும்ன்னு இப்பவே டிஸைட் பண்ணச் சொன்னார்" சக்தி, "நான் இண்டியாவில் காலடி எடுத்து வைச்ச அடுத்த நாள் உன் கழுத்தில் தாலி கட்டத் தயார். ஆனா நீ உன் வசதியை சொல்லு" வந்தனா, "என் அசைன்மென்ட் நீ வரதுக்குள்ள முடிஞ்சுடும்ன்னு நினைச்சேன். ஆனா இழுத்துட்டே போயிட்டு இருக்கு. எப்படியும் ஜூன் நாலாம் தேதிக்கு மேல் ஆகாதுன்னு நினைக்கறேன். பட் டியர், எனக்கு இன்னும் ஒரு பத்து நாள் டைம் கொடுப்பியா? எடுத்ததை முழுசா முடிச்சுக் கொடுத்தா ஹனிமூன் போகும் போது எனக்கு நிம்மதியா இருக்கும்" சக்தி, "எப்படி ஜூன் 4ம் தேதின்னு சொல்றே? அந்த டேட்டும் ஸ்லிப் ஆக வாய்ப்பு இருக்கும் இல்லையா?" வந்தனா, "ம்ம்ஹூம் .. நாங்க செய்யறதை பல மடங்கு வேகமா செய்ய யூ.எஸ் சூப்பர் கம்பியூட்டர் ஓண்ணு மே மாதத் தொடக்கத்தில் இருந்து அலாட் பண்ணப் போறாங்க. அதுக்கு அப்பறம் அதிக பட்சம் ஜூன் 4இல் நாங்க ப்ளான் பண்ணின எல்லாம் முடிஞ்சுடும்" சக்தி, "வாவ், சூப்பர் கம்பியூட்டரா? நீங்க என்ன அவ்வளவு கணிதம் நிறைந்த வேலையா செய்யறீங்க? .. சாரி, நீ எதுவும் சொல்ல வேண்டாம் .. Assume that I didn't ask" வந்தனா, "ஐய்யோ. ப்ளீஸ் இப்படி எல்லாம் சொல்லி என்னை கில்டியா ஃபீல் பண்ண வெக்காதேயேன். கணிதம் அப்படின்ன உடனே உன் கண்ணில் திடீர்ன்னு ஒரு பிரகாசம் வந்து இருக்கும். எனக்கு தெரியும். ... " சக்தி, "இட்ஸ் ஓ.கே ஹனி .. எனக்கு புரியுது" என்று சொல்லும்போதே உயிர் காதலியை ஏமாற்றுவதை எண்ணி வெட்கினான். அவன் குரல் கரகரத்தது.
வந்தனா சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, "ஒரு க்ரிப்டோவை ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் உபயோகிச்சு ப்ரேக் பண்ணிட்டு இருக்கோம்" சக்தி, "அதுக்கு சரியான சாம்பிள் சைஸ் இருக்கா?" என்று ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டான். வந்தனா, "இருக்கு" சக்தி, "என்ன மாதிரி சைஃபர்? மோனொஃபோனிக்கா இல்லை பாலிஃபோனிக்கா?" வந்தனா, "பாலிஃபோனிக் ஆண்ட் பாலிசிலபிக் (Polyphonic and Polysyllabic). ஆனா இதெல்லாம் என்னன்னு எனக்கு தெரியாது. தீபாவும்கூட இதிலெல்லாம் ரொம்ப வீக்" சக்தி, "அப்பறம் எப்படி ப்ரேக் பண்ணறீங்க?" வந்தனா, "ப்ரொஃபெஸ்ஸர் சாரின்னு ஒருத்தர். ..." சக்தி, "Oh! என் ஐ.ஐ.டி ப்ரொஃபெஸ்ஸர் அவரைப் பத்தி நிறைய சொல்லி இருக்கார். சோ, அவர் உங்களுக்கு உதவி செய்யறார் இல்லையா? You are in good hands. Also, அவர் ஜூன் 4ம் தேதி முடிக்க முடியும்ன்னு சொன்னார்ன்னா நிச்சயம் முடிக்க முடியும். இருந்தாலும் நீ சொன்ன மாதிரி ஜூன் பதினைந்தாம் தேதிக்கு அப்பறம் கல்யாணத்தை வெச்சுக்கலாம். நான் அம்மாகிட்ட சொல்லிடறேன். நீயும் உங்க அப்பாகிட்ட சொல்லிடு. அவங்க ரெண்டு பேரும் சேந்து தேதியை குறிக்கட்டும் ஓ.கே?" வந்தனா, "ஆனா, உன்னைப் பார்க்க இன்னும் பத்து நாள் அதிகமா வெய்ட் பண்ணனுமேன்னு இருக்கு ஷக்தி" சக்தி, "ஐ டூ மிஸ் யூ சோ மச் ஹனி" வந்தனா, "அப்பறம் கடைசியா அம்மாகிட்ட என்ன சொன்னே?" சக்தி, "ஐ லவ் யூன்னு சொன்னேன்" வந்தனா, "நீ என்னை லவ் பண்றது புதுசா என்ன? அதுக்கு ஏன் எங்க அம்மா என்னையும் அப்பாவையும் அதிகாரம் பண்ணினாங்க?" சக்தி, "நான் உன்னை லவ் பண்ணறதா சொல்லலை. அவங்களை லவ் பண்ணறதா சொன்னேன்" வந்தனா, "என்கிட்ட சர்வீஸ் பிஸ்டல் இருக்கு. அதை சுடறதுக்கும் எனக்கு அதிகாரம் இருக்கு. ஐ வில் கில் யூ. ஞாபகம் வெச்சுக்கோ" என்றவாறு விடைகொடுத்தாள்.Sunday 26 April 2009 9:00 AM US-EST / Sunday 26 April 2009 8:00 PM IST Nithin's Flat, New York, USA / Veerabhadra Rao's Residence, Hyderabad, India ஞாயிறு, ஏப்ரல் 26, 2009, அமெரிக்க நேரம் காலை 8:00 / இந்திய நேரப்படி ஞாயிறு, ஏப்ரல் 26, 2009 மாலை 7:00 நித்தினின் ஃப்ளாட், நியூ யார்க் / வீரபத்ர ராவ்வின் வீடு, ஹைதராபாத் நித்தினின் கைபேசி சிணுங்கியது. எடுத்து பதிலளித்தான். தீபா, "ஹெய் நித்தின், என்ன பண்ணிட்டு இருக்கே" நித்தின், "இதை கேக்கத்தான் காலையே இந்த காலுக்காக வெயிட் பண்ணச் சொல்லி ஈமெயில் அனுப்பினயா?" தீபா, "உனக்கு கொஞ்சம் கூட என் மேல பிரியமே இல்லைன்னு நல்லா தெரியுது. போனா போகுது. கல்யாணத்துக்கு எது வசதியான தேதின்னு நம்ம ரெண்டு பேரும் பேசி இன்னைக்கு முடிவு செஞ்சே ஆகணும்ன்னு எங்க அப்பாவும் உங்க அப்பாவும் சொல்லி இருக்காங்க. அதை டிஸ்கஸ் பண்ணத்தான் கூப்பிட்டேன்" நித்தின், "தீபா, நான் ஒண்ணு சொல்லட்டுமா?" தீபா, "என்ன சொல்லு" நித்தின், "இன்னும் கொஞ்ச நாள் நாம் ஒருத்தரை ஒருத்தர் நல்லா தெரிஞ்சுட்டதுக்கு அப்பறம் கல்யாணத்தைப் பத்தி பேசுவோமே" எதிர்முனையில் தீபா விக்கித்துப் போவதை நித்தின் உணர்ந்தான் தீபா, "என்னை நீ இன்னும் முழுசா தெரிஞ்சுக்கலைன்னு நினைக்கறயா?" நித்தின், "அது கொஞ்சம்தான். ஆனா, அதைவிட உனக்கு என்னைப் பத்தி இன்னும் முழுசா தெரிஞ்சு இருக்காதுங்கற பயத்தில் சொல்றேன். ஒன்ஸ் கமிட் ஆனதுக்கு அப்பறம் நமக்குள்ள எந்த விதமான மனவேறுபாடும் இருக்கக் கூடாது" தீபா, "உன்னைப் பத்தினது எதுவான்னாலும் நான் ஏத்துப்பேன் நித்தின். நானும் உன்னை மாதிரி உன் கிட்ட கிண்டலடிச்சுட்டு பேசறேன். உண்மைதான். ஆனா நான் உன்னை ரொம்ப டீப்பா லவ் பண்றேன் நித்தின்" என்று சொல்லச் சொல்ல அவள் குரல் கரகரத்தது. நித்தின், "தெரியும். இருந்தாலும் உனக்கு என்னைப் பத்தின எல்லா விஷயமும் தெரியணும் அதனால்தான் கொஞ்ச நாளைக்கு அப்பறம் தேதி ஃபைனலைஸ் பண்ணலாம்ன்னு சொன்னேன்" தீபா, "அது கல்யாணத்துக்கு அப்பறம் எனக்கு தெரிய வந்தா என்ன நித்தின்? எதுவானாலும் நான் ஏத்துப்பேன் நித்தின். நீ எனக்கு வேணும்" என்று அவள் குரல் தழதழத்தது. நித்தின், "ப்ளீஸ் தீபா .. " தீபா இணைப்பைத் துண்டித்தபடி தன் அறைக்கு ஓடி தாளிட்டுக் கொண்டாள்.Friday, 1 May 2009 8:00 PM US-EST Blue Fin Restaurant, Broadway, New York வெள்ளி, மே 1, 2009 மாலை 8:00 ப்ளூ ஃபின் ரெஸ்டாரண்ட், ப்ராட்வே சாலை, நியூ யார்க் அந்த வாரத் தொடக்கத்தில் இருந்து நான்கு நாட்கள் கொலம்பியன் ட்ரக் கார்டலுக்கு அவர்களது இறுதி ட்ரான்ஸ்ஃபரை அவரவர் இல்லத்தில் இருந்தபடி சர்வர்லெஸ் மாங்க்ச் பாட் நெட்டின் உதவியுடன் வெற்றிகரமாக முடித்து இருந்தனர். அடுத்த இரண்டு நாட்கள் சஞ்சனாவும் ஜாஷ்வாவும் பஹாமாஸ் செல்லவிருந்ததால் வெள்ளியன்று டின்னருக்கு ப்ளூ ஃபின்னில் கூடி இருந்தனர். சஞ்சனா, "என்ன அண்ணா? இந்த ரெஸ்டாரண்ட்டுக்கு நீ வாடிக்கையாளர் ஆயிட்டியாமே?" சக்தி, "ஆமா, ஆனா, சாப்பாடும் நல்லாத்தான் இருக்கு" நித்தின், "என்ன ஜாஷ், இப்ப எதுக்கு பஹாமாஸ் போறீங்க?" ஜாஷ்வா, "நாங்க வாங்கற கட்டிடத்தின் வீட்டுப் போர்ஷனை மட்டும் ரினவேட் பண்ண ஆரம்பிக்கறதுக்கு" சக்தி, "ஓ, அப்ப நீங்க அடுத்த மாசம் போகும் போது வீடு ரெடியா இருக்குமா?" ஜாஷ்வா, "முழுசா ரெடியாகுமான்னு தெரியலை. இப்போதைக்கு முன்னாடி நுழைஞ்ச உடனே இருக்கும் ஃபாயர், ஒரு பெட்ரூம், கிச்சன் அப்பறம் அதை ஒட்டினாப் போல இருக்கும் ஒரு சின்ன டைனிங்க் ஏரியா இதை மட்டும் ரினவேட் பண்ண ஏற்பாடு செய்யப் போறோம்" நித்தின், "நீ சொன்னதை தவிர வேற என்ன எல்லாம் இருக்கு ரினவேட் செய்ய?" சஞ்சனா, "நித்தின், அது ஒரு பெரிய்ய்ய்ய்ய வீடு. எங்க ரெண்டு பேரோட கனவு அந்த மாதிரி ஒரு வீட்டில் இருக்கணும்ன்னு" சக்தி, "பெருசுன்னா எவ்வளவு பெருசு?" ஜாஷவா, "முழுசா ரினவேட் பண்ணினதுக்கு அப்பறம் மொத்தம் அஞ்சு பெட்ரூம்ஸ் இருக்கும். தவிர லிவிங்க், டைனிங்க், லைப்ரரி-கம்-ஸ்டடி, நாலு கார்கள் நிறுத்தும் அளவுக்கு கராஜ், கார்டன், லான் அப்படின்னு நிறைய இருக்கு" நித்தின், "வாவ், க்ரேட்!" சக்தி, "கய்ஸ் ஐ ஹாவ் சம் நியூஸ் ..." ஜாஷ்வா, "என்ன?" சக்தி, "R&AWவும் FBIயும் என்னோட அந்த பழைய சர்வரின் ஐ.பி அட்ரெஸ்ஸை ஜூன் 4ம் தேதிக்குள் கண்டு பிடிச்சுடுவாங்க" ஜாஷ்வா, "வந்தனா சொன்னாளா? எதுக்கு இப்படி துருவித் துருவி கேட்கறே. எப்பவோ கண்டு பிடிச்சுகிட்டும்ன்னு விட மாட்டியா?" சக்தி, "சத்தியமா நான் துருவித் துருவி கேட்கல. அவளே சொன்னா" நித்தின், "நீ எப்படி கேட்டு இருப்பேன்னு எனக்கு தெரியும்" சஞ்சனா, "எப்படி கேட்டு இருப்பான்?" நித்தின், "அவ எதாவது மேலோட்டமா சொல்லி இருப்பா. உடனே இவன் அதைப் பத்தி கொஞ்சம் ஆழமா கேட்டுட்டு, சாரி, என் தப்பு நீ எதுவும் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லி இருப்பான். அவ உடனே மனம் உருகி இன்னும் கொஞ்சம் டீடெயில் கொடுத்து இருப்பா. என்னடா நான் சொல்றது? சரி தானே?" சக்தியின் குறும்புச் சிரிப்பை மற்ற மூவரும் ரசிக்கவில்லை. நித்தின், "டேய், நாளைக்கு அவளுக்கு தெரிஞ்சதுக்கு அப்பறம் எப்படி ஃபீல் பண்ணுவா? உன்னை மன்னிப்பாளா?" சக்தி, "நிச்சயம் முதலில் ஏமாற்றப் பட்டதா ஃபீல் பண்ணுவா. அப்பறம் அவளே புரிஞ்சுப்பா. ஏன்னா என்னோட நிலமையில் அவ இருந்து இருந்தா அவளும் நான் செய்யறதைத்தான் செஞ்சு இருப்பா" சஞ்சனா, "ஆனா உன் நிலமையில் அவ இருக்க சான்ஸே இல்லை. அதை மறந்துடாதே" சக்தி, "நீ சொல்றது சரிதான். ஆனா, என்னைப் பொறுத்தவரை இது முகம் தெரியாத ப்ளேயர்கூட ஆடும் ஒரு ஆன்-லைன் செஸ் கேம் மாதிரி. இது கொஞ்சம் வித்தியாசமான கேம். எனக்கு ஆப்பனெண்ட் யாருன்னு தெரியும் ஆனா அவங்க மூவ்ஸ் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும். அவங்களுக்கும் என் மூவ்ஸ் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும் ஆனா அவங்களுக்கு ஆப்பனெண்ட் யாருன்னு தெரியாது. அவங்க ஆப்பனெண்ட் யாருன்னு கண்டு பிடிக்கறதுக்காகவே ஆடறாங்க. நான் சும்மா ஜாலியா ஆடறேன். நம் பாங்க் ட்ரான்ஸ்ஃபர் விஷயம் தெரியாத வரைக்கும் பெரிய பிரச்சனை ஒண்ணும் வராது" ஜாஷ்வா,"சரி, சக்தி, இதுவரைக்கும் நீ அவகிட்ட அவ வேலையை பத்தி பேசினது போதும். இண்டியா போய் சேரும்வரை நீ அவகிட்ட வாயை திறக்கக் கூடாது. அவளே எதாவுது சொன்னா சொல்ல வேண்டாம்ன்னு தடுத்துடு. ஓ,கே?" சக்தி, "ஒ.கே!"சஞ்சனா, "உன்னோட அஃப்ஃபேர் எப்படி போகுது மச்சான்?" என்று நித்தினைப் பார்த்துக் கேட்டாள். ஜாஷ்வா அவள் நித்தினுடன் கொண்டாடிய உறவைப் புரிந்து கொண்டு 'மச்சான்' என்று வாயசைத்து பூரிப்பில் முகம் மலர்ந்து புன்னகைத்தான். சக்திக்கு சிரிப்பாக இருந்தது. நித்தின், "நோ ப்ராப்ளம். லாஸ்ட் சண்டே வெட்டிங்க் எப்ப வெச்சுக்கலாம்ன்னு கேட்டா. கொஞ்ச நாள் போகட்டும்ன்னு சொன்னேன்" சக்தி, "எதுக்கு?" நித்தின், "ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் இன்னும் நல்லா புரிஞ்சுட்டதுக்கு அப்பறம் கல்யாணத்தைப் பத்தி பேசலாம்ன்னு சொன்னேன்" சஞ்சனா, "அவ அதுக்கு ஒத்துகிட்டாளா?" முகம் சுளித்த நித்தின், "கொஞ்சம் இமோஷனல் ஆனா. பட், புரிஞ்சுக்குவான்னு நினைக்கறேன்" சஞ்சனா, "பெருசா சக்திக்கு அறிவுரை சொன்னியே நீ என்னத்தை பண்ணி வெச்சு இருக்கே?" என்ற சஞ்சனாவின் முகம் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் வெப்பத்தை கக்கியது. நித்தின், "என்ன பண்ணினேன்?" சஞ்சனா, "மடையா. அவளை மேலோட்டமா பாத்தா எப்பவும் விளையாட்டா இருக்கற மாதிரி தெரியும். ஆனா, உன்னை எந்த அளவுக்கு காதலிக்கறா தெரியுமா?" நித்தின் (முகம் இறுக), "தெரியும். அதனால் தான் அப்படி சொன்னேன்" சஞ்சனா, "இன்னும் என்ன புரிஞ்சுக்கணும் ..?" நித்தின், "நிறைய இருக்கு" சஞ்சனா, "போடா, உன்னை எல்லாம் ஒருத்தி காதலிக்கறா பாரு" நித்தின், "ஆமா காதலிச்சு இருக்கக் கூடாதுதான். ஆனா காதலிச்சா. என்னைப் பத்தி முழுசா தெரிஞ்சுகிட்டும்ன்னுதான் இப்போதைக்கு வேண்டாம்ன்னு சொன்னேன்"
ஜாஷ்வா, "என்ன நித்தின் இது? சக்தியை பாரு அவனும் உன்னை மாதிரிதானே மாங்க்ஸ் பாட் நெட்டில் இன்வால்வ் ஆகி இருக்கான். நீ மட்டும் ஏன் இப்படி கிரிமினல் மாதிரி ஃபீல் பண்ணறே?" நித்தின், "BECAUSE I AM A BLOODY CRIMINAL AND A MURERER" என்று கத்தியபிறகு முகத்தை மூடி அழுது குலுங்கினான். சக்தி, "டேய், அதைப் பத்தி இப்ப ஏண்டா?" வாயடைத்துப் போன சஞ்சனா, "என்னண்ணா?" சக்தி நித்தின் முதுகை தட்டியவாறு இருந்தான். சற்று நேரத்திற்கு பிறகு எழுந்து வாஷ் ரூமுக்கு சென்று வந்த நித்தின் தன் தாயைப் பற்றிய வரலாற்றை சொன்னான். மற்ற மூவரும் அமைதி காத்தனர்.

No comments:

Post a Comment