Thursday, February 5, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 33


Friday, 5 June 2009 8:30 AM வெள்ளி, ஜூன் 5, 2009 காலை 8:30 சக்திவேல் அந்த சர்வீஸ்ட் அப்பார்ட்மெண்டில் இருந்த ஜிம்மில் இருந்த ட்ரெட் மில்லுக்கும் க்ராஸ் ட்ரெயினருக்கும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் வேலை கொடுத்தபின் வியர்வை வழிய அறைக்கு திரும்பினான். நித்தினை எழுப்பி அவனுக்கு காஃபி ஆர்டர் செய்தபின் குளிக்கச் சென்றான். நித்தின் தயாராகிக் கொண்டு இருந்த போது அறையில் இருந்த தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் வந்தனா தழு தழுத்த குரலில், "ஷக்தி .. ஆண்டியையும் ஷாந்தியையும் யாரோ கடத்திட்டு போயிருக்காங்க. ஐ யம் சோ சாரி" என்றபின் அடக்க முடியாமல் அவள் விசும்புவது கேட்டது. சக்தி, "என்ன ஆச்சு? நேத்து நைட்டு கூட அம்மாகிட்ட பேசினேனே. வாசலில் போலீஸ்காரங்க ரெண்டு பேர் இருக்காங்கன்னு சொன்னாங்க" நித்தின் குளியலறையில் இருந்த எக்ஸ்டென்ஷனை எடுத்துக் கொண்டான். மேலும் தொடராமல் வந்தனா அழுது கொண்டு இருக்க முரளீதரன் லைனுக்கு வந்தார்.

முரளீதரன், "சக்தி, ஐ யம் சோ சாரி. காலையில் பீட் சேஞ்சுக்கு ரெண்டு கான்ஸ்டபிள்ஸ் உன் வீட்டுக்கு போன போது அங்கே காம்பௌண்டுக்குள்ள நைட்டு காவலுக்கு இருந்த ரெண்டு பேரும் தொண்டை அறுபட்டு செத்து கிடந்ததை பார்த்து இருக்காங்க. நைட்டு ரெண்டு மணி வாக்கில் இது நடந்து இருக்கணும். அக்கம் பக்கத்தில் இருந்தவங்களுக்கு ஒரு சத்தமும் கேட்கலைன்னு சொன்னாங்க. உன் வீதி முக்கில் இருக்கும் கடைக்கு வெளியில் தூங்கும் ஒரு ஆள் அந்த நேரத்தில் ஒரு கார் உன் வீட்டுப் பக்கத்தில் இருந்து போனதைப் பார்த்து இருக்கான். அனேகமா அவங்களை பெங்களுருக்குத்தான் கூட்டிட்டு வருவாங்க. பெங்களூருக்குள் வரும் வண்டிகள் எல்லாத்தையும் செக் பண்ண ஆர்டர் கொடுத்து இருக்கோம். ஆனா, எனக்கு அவங்க இந்நேரம் ஆல்ரெடி பெங்களூருக்குள் அல்லது சுத்து வட்டாரத்தில் எங்கேயாவது இருப்பாங்கன்னு தோணுது" சக்தி, "காட், என்ன சார் இது? இதைத்தான் அவங்க செய்வாங்கன்னு முன்கூட்டயே தெரிஞ்சுதானே உங்ககிட்ட உதவி கேட்டோம்?" முரளீதரன், "உண்மையில் அவங்களுக்கு இந்த அளவுக்கு ரீச் இருக்கும்ன்னு நான் நினைக்கலை சக்தி. ஐ யாம் வெரி சாரி. தவிர அந்த ரெண்டு பேரின் கவனக் குறைவு. ரெண்டு பேரும் படுக்கையை விரிச்சு தூங்கிட்டு இருந்து இருக்காங்க. படுத்தபடியே கழுத்து அறுபட்டு செத்து இருக்காங்க. உன் வீட்டின் பின் புறம் இருக்கும் பாத்ரூமை இவங்க உபயோகிக்கறதுக்காக பின் பக்கக் கதவை ப்ரொஃபெஸ்ஸர் திரந்து வெச்சு இருக்காங்க. அடுத்து இருந்த கதவில் உள்பக்க லேட்ச் சரியில்லை. சரியா தாளிடாம இருந்த அந்த கதைவை ஈஸியா உடைச்சுட்டு உள்ளே போயிருக்காங்க" சக்தி, "அவங்களுக்கு எதாவது ஆச்சுன்னா .. " முரளீதரன், "உன் அம்மாவுக்கும் ஷாந்திக்கும் இப்போதைக்கு ஒண்ணும் ஆகாது. உங்களை நிச்சயம் காண்டாக்ட் செய்வாங்க. போலீஸுக்கு போனா உன் அம்மாவையும் தங்கையையும் உயிரோடு பார்க்க முடியாதுன்னு சொல்லுவாங்க." சக்தி, "அவங்களுக்கு என்ன வேணும்ன்னு எனக்கு தெரியும். மாங்க்ஸ் பாட் நெட்டின் கன்ட்ரோலர் ஸாஃப்ட்வேர்" முரளீதரன், "எனக்கும் அது தெரியும்" சக்தி, "ஆனா அதை கொடுத்ததுக்கு பிறகு எங்க ரெண்டு பேரையும் உயிரோட விடுவாங்களாங்கறது சந்தேகம்" முரளீதரன், "அதுவும் எனக்கு தெரியும்" சக்தி, "அதனால் முதலில் நான் அம்மாவையும் சாந்தியையும் விடுவிக்கச் சொல்லப் போறேன். அவங்க பத்திரமான இடத்துக்கு போன பிறகு நானே அவங்ககிட்ட சரணடையறேன்னு சொல்லப் போறேன்" முரளீதரன், "இரு கொஞ்சம் பொறுமையா யோசிக்கலாம். இன்னும் ஒரு விஷயம். உங்க வீட்டில் அவங்க செல்ஃபோன் சிக்னல் ஜாமர் ஒன்னை வெச்சு இருந்தாங்க. நீ லாண்ட் லைனில் உங்க அம்மாவை காண்டாக்ட் செஞ்சியா?" சக்தி, "ஆமா. நேத்து நைட்டு அவங்க செல் நாட் ரீச்சபிள்ன்னு வந்ததும் லாண்ட் லைனில் காண்டாக்ட் செஞ்சேன்" முரளீதரன், "அதை டாப் செஞ்சு இருக்காங்க. நீ அவங்க கூட பேசினப்பறம்தான் உன் ப்ளான் அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கு. நீ கவர்னர் மாளிகைக்கு போறதுக்கு முன்னாடி அவங்க முந்திக்கத்தான் இவ்வளவு வேகமா செயல் பட்டு இருக்காங்க"சக்தி, "சரி என்ன செய்யணும்" முரளீதரன், "நீ தைரியமா இருக்கணும். அவங்க ரெண்டு பேரையும் முதலில் பார்க்கணும்ன்னு சொல்லு. அதுக்கு பிறகுதான் அவங்க கேட்பதை கொடுப்பதா சொல்லு" சக்தி, "எங்களுக்கு உங்களோட தொடர்பு இருக்குன்னு தெரிஞ்சு இருக்குமா?" முரளீதரன், "நீங்க எங்களோட தொடர்பு கொண்டு இருப்பது அவங்களுக்கு தெரியலைன்னு நினைக்கறேன். தெரிஞ்சு இருந்தா இந்த மாதிரி முயற்சியில் இறங்கி இருக்க மாட்டாங்க. அல்லது ரிவெஞ்சுக்காக செய்யறாங்கன்னு நினைக்கறேன். அவங்க நீங்க ரெண்டு பேரும் இன்னமும் அரசாங்கத்தில் யாரையும் அணுகலைன்னு நினைச்சுட்டு இருப்பாங்க." சக்தி, "அவங்க எங்களை எங்கேயாவது ஒரு இடத்துக்கு வரச் சொல்லுவாங்க" முரளீதரன், "ஆமா. அங்கே இருந்து உங்களை கூட்டிட்டு போகப் பார்ப்பாங்க. நீங்க அவங்ககூட போகறதுக்கு முன்னாடி உங்க அம்மாவையும் தங்கையையும் பார்க்கணும்ன்னு சொல்லுங்க. நீங்க ரெண்டு பேரும் உங்க ஃபோனில் லோட் செஞ்ச GPS ட்ராக்கின் ஸாஃப்ட்வேர் இப்போ ரொம்ப உதவியா இருக்கப் போகுது. நீங்க எங்கே போனாலும் உங்களுக்கு பின்னாடி அரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு ராபிட் ஆக்க்ஷன் டீம் வரும். ஒரு டவுட். உங்க ஃபோன் ரெண்டிலும் சிம்கார்ட் இல்லாமலே GPS வேலை செய்யுமா?" சக்தி, "வேலை செய்யணும், ஆனா நாங்க ட்ரை பண்ணிப் பார்த்தது இல்லை. ஏன் கேக்கறீங்க?" முரளீதரன், "நீங்க யாருடன் பேசினாலும் எங்களுக்கும் கேட்கும்படி உங்களுக்கு ரெண்டு பேருக்கும் நான் இப்போ ரெண்டு டூயல் சிம் கார்ட் செல்ஃபோன்களை அனுப்பப் போறேன். உங்க செல்ஃபோனை நீங்க பேசறதுக்கு உபயோகிக்கக் கூடாது. நான் அனுப்பும் செல்ஃபோன் ரெண்டிலும் ரெண்டு சிம்கார்ட் இருக்கும். அந்த ரெண்டு சிம்கார்ட்களில் ஒண்ணை எடுத்து உங்க ஃபோனில் போட்டுட்டு உங்க ஃபோனில் இருக்கும் சிம் கார்டை அந்த செல்ஃபோனில் மாட்டிக்குங்க. அந்த செல்ஃபோனில் ரெண்டு சிம்கார்ட் மூலம் ரெண்டு நம்பரை கூப்பிட்டு கான்ஃபரென்ஸ் மோடில் போட முடியும். அதை எப்படி வேகமா செய்யறதுன்னு சில தடவை செஞ்சு பாத்துக்குங்க. அவங்க உன்னை காண்டாக்ட் செஞ்சதும் சக்தி நீ இன்னோரு சிம்கார்ட் உபயோகிச்சு கான்ஃப்ரென்ஸ் மோடில் நான் கொடுக்கும் நம்பரை கூப்பிடணும். அது எங்க கன்ட்ரோல் செண்டரில் இருக்கும் ஒரு டெலிகான்ஃப்ரென்ஸ் நம்பர். எப்ப கூப்பிட்டாலும் உடனே கனெக்ட் ஆயிடும். நித்தின், நீயும் உடனே அந்த நம்பருக்கு கூப்பிட்டுட்டு உன் செல்ஃபோனை ம்யூட்டில் போட்டுடணும். நீ பேசறது சக்தியின் மறுமுனையில் இருப்பவனுக்கு கேட்கக் கூடாது. நாங்களும் எதுவும் பேச மாட்டோம். ஓ.கே?" சக்தி, "ஓ.கே, சுந்தர் அங்கிள் ஸேஃபா இருக்காரா?" முரளீதரன், "எஸ், அவர் இருக்கும் இடத்தில் இந்த மாதிரி செய்யறது கஷ்டம். இருந்தாலும் அவரை இந்நேரம் அங்கே இருந்து எங்க ஸேஃப் ஹவுஸுக்கு அழைச்சுட்டு போயிருப்பாங்க. இரு வந்தனா உன்னிடம் பேசணுமாம்" வந்தனா, "ஷக்தி, தைரியமா இரு ஆண்டியையும் ஷாந்தியையும் எப்படியாவது மீட்டு கொண்டு வந்துடலாம்" சக்தி, "Let us hope so .... " அடுத்த நிமிடம் காவல் துறையைச் சேர்ந்தவர் ஒருவர் அவர்கள் இருவரிடமும் ஆளுக்கு ஒரு கைபேசியை கொடுத்து விட்டுச் சென்றார். முதலில் அந்த செல்ஃபோன்களில் எப்படி இரண்டு சிம் கார்ட் உபயோகித்து கான்ஃப்ரென்ஸ் மோடில் இயக்குவது என்று அறிந்து கொண்டு ஓரிரு முறை அதை செய்து பார்த்துக் கொண்டனர். அடுத்து, அதில் இருந்த சிம் கார்டுகளில் ஒன்றை எடுத்து தங்களது கைபேசிகளில் மாட்டி ஆன் செய்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டனர். அடுத்து முரளீதரன் கொடுத்து அனுப்பி இருந்த செல்ஃபோன்களில் தங்களது சிம் கார்டுகளை பொறுத்தி ஆன் செய்தனர்.அழைப்புக்காக அவர்கள் வெகு நேரம் காத்திருக்கவில்லை. ஆன் செய்த சில நிமிடங்களில் சக்திவேல் வைத்து இருந்த கைபேசி அலறியது. தனது எண்ணுக்கு வந்து இருக்கும் கால் என அறிந்ததும். முரளீதரன் கொடுத்த டெலிகான்ஃபரென்ஸ் எண்ணை அடுத்த எண் மூலம் அழைத்த பிறகு அவனுக்கு வந்த காலுக்கு பதில் அளித்தான். நித்தினும் உடனே அந்த டெலிகான்ஃப்ரென்ஸ் எண்ணை அழைத்து தன் செல்ஃபோனை ம்யூட் செய்தான், சக்தி, "ஹெல்லோ?" மறுமுனையில் ஒரு குரல், "ஹெல்லோ! செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சு இருந்தா எப்படி உங்க அம்மாவையும் தங்கையையும் பத்தி நியூஸ் சொல்லறது?" சக்தி, "ஹெல்லோ! ஹூஸ் திஸ்?" மறுமுனையில் மக்ஸூத், "என் பெயர் மக்ஸூத். உன் ஃபெரெண்ட் ஜாஷ்வாவின் மனைவி என்னை காயப் படுத்தினா. அதுக்கு பழிதீர்க்க உன் அம்மாவையும் தங்கையையும் கிட்நாப் செஞ்சுட்டு வந்து இருக்கேன்" சக்தி, "என்ன சொல்றே? எங்க அம்மாவும் தங்கையும் ஈரோடில் பத்திரமா இருக்காங்க" மக்ஸூத், "ஓ! நீதான் தலை மறைவா இருக்கியே? உனக்கு இன்னும் நியூஸ் வந்து இருக்காது. பரவால்லை. இப்போ உன் அம்மாவும் தங்கையும் என் கஸ்டடியில் இருக்காங்க. எனக்கு தேவையானது உங்கிட்ட இருக்கு. நீ அதைக் கொடுத்தாதான் நான் உன் அம்மாவையும் தங்கையும் விடுவிப்பேன்" சக்தி, "உனக்கு தேவையானதா? என்ன சொல்றே புரியலை" மக்ஸுத், "தெரியாத மாதிரி நடிக்காதே. நிச்சயம் அன்னைக்கு ஜாஷ்வாவை காரில் கூட்டிட்டு வந்த அவன் ஃப்ரெண்ட் அங்கே நடந்ததை உனக்கு சொல்லி இருப்பான். அதான் அன்னைக்கு ராத்திரியே அமெரிக்காவை விட்டு புறப்பட்டு வந்தே. எனக்கு தேவை மாங்க்ஸ் பாட் நெட்டின் கன்ட்ரோல்" சக்தி, "என் அம்மாவும் தங்கையும் உன்னிடம் இருக்காங்கன்னு நான் எப்படி நம்பறது?" மக்ஸூத், "லூக், இது நீ சினிமாவில் பார்க்கும் கடத்தல் இல்லை. நிஜக் கடத்தல். நான் இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு உன்னை கூப்பிடுவேன். போலீஸுக்கு போகணும்ன்னு மட்டும் நினைக்காதே" மக்ஸூத் இணைப்பைத் துண்டித்தான். கான்ஃபரென்ஸில் இருந்த முரளீதரன், "சக்தி, அவன் எந்த நம்பரில் இருந்து கூப்பிட்டான். க்விக்" சக்திவேல் அந்த நம்பரை பார்த்து சொன்னான். முரளீதரன், "அடுத்த பத்து நிமிஷத்தில் இதே நம்பரில் இருந்து கூப்பிடுவானாங்கறது சந்தேகம். சோ, அவன் கூப்பிட்ட உடனே முதலில் அவனோட நம்பரை நோட் பண்ணிக்கோ. நித்தின், இந்த செல்லில் கனெக்ட் செய்யறதுக்கு முன்னாடி அந்த நம்பரை எனக்கு எஸ்.எம்.எஸ் பண்ணு. ஓ.கே. பயப் படாதீங்க ரெண்டு பேரும். பை"அடுத்த பத்து நிமிடத்தில் முரளீதரன் சொன்னபடி வேறு ஒரு கைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. நித்தின் முரளீதரன் சொன்னபடி அந்த எண்ணை அவருக்கு அனுப்பிய பிறகு இருவரின் மாற்றுக் கைபேசிகளிலும் முரளீதரனின் கான்ஃபரென்ஸ் நம்பரை அழைத்து மறுபடி சக்தியின் மாற்றுக் கைபேசியை அவனது ஷர்ட் பாக்கட்டில் வைத்தான். சக்திவேல் ஸ்பீக்கர் ஃபோனை ஆன் செய்து பதில் அளித்தான். மக்ஸூத், "என்ன சக்தி, ஊருக்கு ஃபோன் பண்ணி விசாரிச்சயா? என்ன சொன்னாங்க?" சக்தி, "எங்க அம்மாவையும் தங்கையையும் காணோம்ன்னு சொன்னாங்க" மக்ஸூத், "நீ எங்கே இருக்கேன்னு சொல்லி இருக்க மாட்டியே? ஏன்னா அங்கே நீ வருவேன்னுதான் போலீஸ்காரங்க வெய்ட் பண்ணிட்டு இருந்தாங்க" சக்தி, "அவங்ககிட்ட நான் யாருன்னே சொல்லலை" மக்ஸூத், "இப்ப நம்பறயா?" சக்தி, "இல்லை. எங்க அம்மாவும் தங்கையும் உங்கிட்ட இருக்காங்கங்கறதுக்கு என்ன ஆதாரம்?" மக்ஸூத், "ஒண்ணு பண்ணலாம். உனக்கு உங்க அம்மா அல்லது தங்கையின் கையை நல்லா அடையாளம் தெரியுமா? ஆதாரம் வேணும்ன்னா பெங்களூரில் எதாவது ஒரு குப்பைத் தொட்டியில் அவங்க கை ஒண்ணை வெட்டி வீசிட்டு உனக்கு எங்கேன்னு சொல்றேன். நீ போய் பாத்துக்கோ. என்ன சரியா?" அதுவரை பதட்டமில்லாமல் இருந்த சக்தி, "வேண்டாம் .. என்ன செய்யணும் சொல்லு" என்று அலறினான். மக்ஸூத், "அப்படி வா வழிக்கு. நீ உன் ஃப்ரெண்டை கூட்டிட்டு நான் சொல்ற இடத்துக்கு வரணும். உன்னிடம் கார் இருக்கா?" சக்தி, "இருக்கு" மக்ஸூத், "என்ன கார்? என்ன கலர்?" சக்தி, "ஸ்கார்ப்பியோ எஸ்.யூ.வி. மரூன் கலர் பாடி. ஸில்வர் ட்ரிம்மிங்க்" மக்ஸுத், "சரி, அந்த ஸாஃப்ட்வேரை லோட் செஞ்சு இருக்கும் லாப்டாப்பையும் எடுத்துட்டு வா. கூடவே அந்த சாஃப்ட்வேரை ஒரு பென் ட்ரைவில் காப்பி பண்ணியும் எடுத்துட்டு வரணும். நான் இன்னும் பத்து நிமிஷத்தில் கூப்பிடறேன்"

சக்தி எதிர் முனையில் இணைப்பை துண்டிக்குமுன், "எடுத்துட்டு வர்றேன். எல்லாம் பாஸ்வர்ட் மூலம் என்க்ரிப்ட் ஆகி இருக்கும். நான் என் அம்மாவையும் தங்கையும் பத்திரமா பார்க்காம உனக்கு எதுவும் தரமாட்டேன். என்ன பாஸ்வர்டுன்னும் சொல்ல மாட்டேன்" மக்ஸூத், "நான் அந்த அளவுக்கு முட்டாள் இல்லை. நீ வரும்போது உன் அம்மாவும் தங்கையும் பத்திரமா உன்னை தூரத்தில் இருந்து பார்த்துட்டு இருப்பாங்க. நீயும் அவங்களை பார்க்கலாம். பார்த்துட்டே செல்ஃபோனில் அவங்ககூட பேசலாம். ரெடியா இரு. நான் இன்னும் அரை மணி நேரத்தில் கூப்படறேன்" என்றபடி இணைப்பைத் துண்டித்தான். முரளீதரன், "சோ, அவன் நமக்கு சில க்ளூ கொடுத்து இருக்கான். உன் அம்மாவும் தங்கையும் நீ அவனை மீட் பண்ணும் இடத்துக்கு கொஞ்ச தூரத்தில் இருப்பாங்க. நீ அவங்களை பார்க்கலாம். செல்ஃபோனில் பேசலாம்ன்னா அனேகமா உன் செல்ஃபோனில் பேசச் சொல்ல மாட்டான். அவன் செல்ஃபோனில் ஒரு நம்பரை கூப்பிட்டு அவங்களை பேசச் சொல்லுவான். சக்தி, நீ எங்க நம்பரோட எப்பவும் கனெக்ட் ஆகி இருக்கணும். அவங்களை பார்த்து பேசும் போது அவங்க இருக்கும் இடத்தைப் பத்தி எங்களுக்கு க்ளூ கொடுக்கற மாதிரி விவரிக்கணும். இதை நீ சாமர்த்தியமா செய்யணும். எப்படியும் நீ அவனை மீட் பண்ணின ஒண்ணு ரெண்டு நிமிஷத்தில் எங்க டீம் அங்கே வந்துடும். நான் எங்க டீமை ரெண்டா பிரிச்சு அனுப்பறேன். நீ க்ளூ கொடுக்கும் இடத்துக்கு ஒரு டீம் போகும். நீ இருக்கும் இடத்துக்கு ஒரு டீம் வரும். ஓ.கே?" சக்தி, "ஓ.கே சார்" முரளீதரன், "நித்தின், நீ சக்தி காரில் இருந்து இறங்கினப்பறம் நீ காரிலே இரு. முடிஞ்சா காரை கிளப்பிட்டு நீ போயிடு" நித்தின், "அப்ப அவன் அவங்களை எதாவது செஞ்சான்னா?" முரளீதரன், "அவன் அதை எதிர்பார்த்து இருக்க மாட்டான். இருந்தாலும் அவன் அப்படி எதுவும் செய்ய மாட்டான். எப்படியும் மாங்க்ஸ் பாட் நெட்டின் கன்ட்ரோல் சாஃப்ட்வேர் கைக்கு கிடைச்சதும் உங்க எல்லாரையும் தீர்த்துக் கட்ட திட்டமிட்டு இருப்பான். நீ மட்டும் அங்கே இருந்து தப்பிச்சுப் போனா உன்னை மட்டும் தனியா தீர்த்துக் கட்ட ஆள் அனுப்பலாம்ன்னு விட்டுடுவான். அல்லது உடனே யாரையாவுது உன்னை ஃபாலோ பண்ண அனுப்புவான். நீ பத்திரமா இருக்கணும். நீ புறப்படறதுக்கு முன்னால் உனக்கு ஒரு ஹெல்மெட் கொடுக்க ஏற்பாடு செய்யறேன். நீ அங்கே இருந்து தப்பிக்கும் போது ஹெல்மெட்டை எடுத்து போட்டுக்கோ. Besides, உங்க ரெண்டு பேருக்கும் புல்லட் ப்ரூஃப் வெஸ்ட் அனுப்பறேன். That will give adequate protection for your torso. கூட ஹெல்மெட் போட்டுட்டேன்னா இன்னும் ஸேஃப்" நித்தின், "என்னை ஏன் போகச் சொல்றீங்க?" முரளீதரன், "ஒரு நம்பும்படியான டிஸ்ட்ராக்க்ஷன்தான். நீ அப்படி தப்பிச்சு போனா உன்னை சந்தேகப் பட மாட்டான். நீ உனக்கு சம்மந்தம் இல்லாததால் போறேன்னு நினைப்பான். அதனால் எங்களுக்கு தேவையான் ஒண்ணு ரெண்டு நிமிஷங்கள் கிடைக்கும். அப்பறம் நான் கொடுத்து அனுப்பின கன்னை சேஃப்டி ரிமூவ் பண்ணி பின்னாடி முதுகுப்புறம் பெல்டில் சொறுகிக்கோங்க. அதையும் நீங்க போட்டுக்கப் போகும் புல்லட் ப்ரூஃப் வெஸ்ட்டையும் மறைக்கும்படி மேல ஒரு ஜாக்கட் போட்டுக்குங்க" சக்தி, "சார், சேஃப்டி லாக்கை ரிமூவ் பண்ணி வெக்கறது டேஞ்சரஸ் இல்லையா?" முரளீதரன், "அந்த கன்னில் ட்ரிக்கரை சுத்தி ட்ரிக்கர் கார்ட் கொஞ்சம் அகலம். ட்ரிக்கர் ஆக்ஸிடண்டலா ரிலீஸ் ஆகாது. அவசரமா சேஃப்டியை ரிமூவ் பண்ணி ஷூட் பண்ணும் அளவுக்கு உங்களுக்கு பயிற்சி இல்லை. அதனால் சொன்னேன்" நித்தின், "ஓ.கே சார்"9:30 AM காலை 9:30 மக்ஸுத்திடம் இருந்து அழைப்பு வந்தது. மக்ஸூத், "என்ன ரெடியா?" சக்தி, "ரெடி" வேறு ஒருவன் லைனுக்கு வந்தான், "உனக்கு பெங்களூர் நல்லா தெரியுமா?" சக்தி, "தெரியும்" அவன், "அதில் ஓல்ட் ஏர்ப்போர்ட் ரோட்டில் ஃப்ளை ஓவருக்கு போகும் திசையில் கமாண்ட் ஹாஸ்பிடலை தாண்டி வரணும். அந்த டர்னிங்க் ஆனதும் தொம்மலூருக்கு முன்னாடி ரோட் அகலமாகும். அங்கே வண்டி நிறுத்தலாம். அங்கே வர எவ்வளவு நேரம் ஆகும்?" சக்தி, "ஹாஃப் ஹவரில் வரமுடியும்" அவன், "அங்கே வந்து வண்டியை நிறுத்து. நாங்க உன்னை கூப்படறோம்" என்றதும் இணைப்பை துண்டித்தான். முரளீதரன், "வண்டிகள் தொடர்ந்து பொயிட்டு இருக்கும் ஆனா ஆள நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தை தேர்ந்து இருக்காங்க. தேவையான எதிரில் இருக்கும் ஆர்மி காம்பௌண்டில் இருந்து நாங்க அப்ஸர்வ் பண்ணலாம். ஆனா அதுக்கு அவசியம் இருக்காதுன்னு நினைக்கறேன். கமாண்ட் ஹாஸ்பிடலில் எங்க டீம் ரெண்டு ஆம்புலன்ஸில் வெய்ட் பண்ணிட்டு இருக்கும். ஓ.கே? புறப்படுங்க" சக்தி, "ஓ.கே சார்" அடுத்த அரை மணி நேரத்தில் அந்த இடத்தில் காரை நிறுத்திய மறுகணம் கைபேசி ஒலித்தது. மக்ஸூத், "இப்ப உனக்கு முன்னாடி நின்னுட்டு இருக்கும் கருப்பு லான்ஸரை ஃபாலோ பண்ணி வா" என்றபிறகு காலை கட் செய்தான். எதிரில் இருந்த லான்ஸர் கார் புறப்பட்டது. நித்தின் அதை தொடர்ந்து ஓட்டினான். சக்தி, "பின்னாலயும் ஒரு ஹோண்டா ஸிட்டி வருது" முரளீதரன், "எப்படி உங்களை ஃபாலோ பண்ணுதுன்னு தெரிஞ்சுது?" சக்தி, "நாங்க வரும்போது கொஞ்சம் பின்னாடி நின்னுட்டு இருந்தது. ட்ரைவரும் அவனுக்கு பக்கத்தில் ஒருத்தனும் உக்காந்துட்டு இருந்தாங்க. நாங்க காரை எடுத்ததும் அவங்களும் எடுத்து நடுவில் வேறு எந்த காரும் வராத மாதிரி பின்னாடி வரத் தொடங்கினாங்க" முரளீதரன், "குட், நல்ல அப்சர்வேஷன். அந்த ஆம்புலன்ஸ் ஒண்ணில் நானும் வந்துட்டு இருக்கேன். சக்தி, நித்தின் மறுபடி நாம் பேச முடியுமான்னு தெரியலை. நான் சொன்னது ஞாபகம் இருக்கு இல்லையா?" சக்தி, "எஸ் .." முரளீதரன், "ஓ.கே ஆல் தெ பெஸ்ட். நாஙக உங்க பின்னாடியே இருக்கோம். பயப் படாதீங்க. இந்த லைனை கட் செய்யாதீங்க" நித்தின், "ஓ.கே சார்" அவர்களுக்கு எதிரில் சென்ற கார் ஃப்ளை ஓவரை அடைந்து அதில் ஏறி கோரமங்களா இன்னர் ரிங்க் ரோடுக்குச் செல்லும் வளைந்த சாலையில் சென்றது. நித்தின் சீரான வேகத்தில் அந்த காரை தொடர்ந்தான். இன்னர் ரிங்க் ரோடை அடைந்த லான்ஸர் அச்சாலையில் அவர்களது அலுவலகத்தை தாண்டி வேகம் பிடித்தது. முரளீதரன், "கய்ஸ், இன்னும் அடுத்த அஞ்சு கிலோமீட்டருக்கு ஒரே ரோட்தான். திருப்பம் எதுவும் இல்லை. ஒரு வேளை இந்த ரோட்டில் பாதியில் அவன் உங்களை மீட் பண்ணினா ரெண்டு டீமும் வெவ்வேறு பக்கத்தில் இருந்து வந்தா வசதி. அதனால், என்னோட ஒரு டீமை உங்களை ஓவர்டேக் செஞ்சு அடுத்த சிக்னலில் வெய்ட் பண்ணச் சொல்லறேன். சோ, பதட்டப் படாதீங்க" அடுத்த ஒரு நிமிடத்தில் பின்னால் சற்று தூரத்தில் சத்தமின்றி வந்து கொண்டு இருந்த ஆம்புலன்ஸ்களில் ஒன்று சைரன் ஒலிக்க அவர்களை கடந்து சென்றது. எதிரில் சென்று கொண்டு இருந்த லான்ஸர் அடுத்த இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஜன நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் வேகத்தைக் குறைத்து சாலையின் ஓரமாக நின்று இருந்த ஒரு வேனுக்கு சற்று முன்பு சென்று நின்றது. அந்த வேனில் இருந்து வெளிப் பட்ட மக்ஸூத் வேனுக்கு பின்னால் நிறுத்தும்படி அவர்களுக்கு கை காட்டினான். நித்தின் முற்றிலும் அந்த வேன் நின்று இருந்த அளவுக்கு ஓரமாகச் செல்லாமல் சற்றே ஓரமாக அந்த வேனுக்கு பக்கத்தில் நிறுத்த சக்திவேல் மட்டும் இறங்கி மக்ஸூத்தை நெருங்கினான். நித்தின் காரிலேயே அமர்ந்து இருப்பதைப் பார்த்த மக்ஸூத், "அவனையும் காரை ஓரமா நிறுத்திட்டு வரச் சொல்லு" சக்தி, "எங்க அம்மாவும் தங்கையும் எங்கேன்னு முதலில் சொல்லு" மக்ஸூத், "இன்னும் நம்பிக்கை இல்லையா? அதோ ரோட்டுக்கு அந்த சைட்டில் பார் ஒரு இன்னோவா நின்னுட்டு இருக்கு தெரியுதா?" அந்த இரட்டை தடம் கொண்ட சாலையின் எதிர்த்தடத்தில் நடுவில் இருந்த மிட்-வே-மெரிடியனைக்கு மிக அருகே (அதாவது, அந்த தடத்தில் இடதுபுறம் அல்லாமல் வலதுபுறத்தில்) பழுதுற்று நின்று இருப்பது போல் ப்ளிங்க்கர்கள் மின்ன ஒரு இன்னோவா நின்று கொண்டு இருந்தது. இடதுபுறம் நிறுத்தினால் அங்கு இருந்து பார்க்க இயலாது என்ற காரணத்தில் மக்ஸுத் தன் சகாவை அப்படி நிறுத்தப் பணித்து இருந்தான். அந்த சாலைச் சத்தத்தில் முரளீதரனுக்கு மக்ஸூத் சொல்வது கேட்காது என உணர்ந்த சக்தி மக்ஸூத் மேலும் தொடருமுன், "எது எதிர் சைடில் நின்னுட்டு இருக்கும் சில்வர் கலர் இன்னோவாவா?" மக்ஸூத், "ஆமா, ட்ரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உன் அம்மா உக்காந்துட்டு இருக்காங்க. அவங்களுக்கு நேர் பின் சீட்டில் உன் தங்கை இருக்கா." சக்தி, "முன் சீட்டில் எங்க அம்மாவும் பின் சீட்டில் என் தங்கையும் இருக்காங்கன்னு தெரியுது. ஆனா அவங்க ரெண்டு பேரையும் நீ எதுவும் செய்யலைன்னு நான் எப்படி தெரிஞ்சுக்கறது?" மக்ஸூத், "பெண்கள் மேல உன்னை விட எனக்கு மதிப்பு ரொம்பவே இருக்கு. இரு செல்ஃபோனில் கனக்ட் பண்ணறேன். பத்திரமா இருக்காங்களான்னு நீ வெரிஃபை பண்ணிக்கலாம்" சக்தி, "துப்பாக்கி முனையில் அவங்களை பதில் சொல்ல வைக்கலைன்னு நான் எப்படி நம்பறது?" மக்ஸூத், "லுக் யூ ஃபூல். எஸ், உன் தங்கைக்கு பக்கத்தில் இருக்கறவன் துப்பாக்கியை உன் தங்கையை குறி வெச்சு பிடிச்சுட்டு இருக்கான். அது அவங்க அழுது ஆர்பாட்டம் பண்ணாம இருக்கறதுக்காக செஞ்ச ஏற்பாடு" சக்தி, "வாட்? என் தங்கைக்கு பக்கத்தில் இருக்கறவன் கையில் துப்பாக்கி இருக்கா? அவங்க ரெண்டு பேரையும் கீழ இறங்கி நிக்கச் சொல்லேன்" மக்ஸூத், "அது முடியாது. அவங்க ரெண்டு பேரையும் சீட்டில் கட்டி வெச்சு இருக்கோம்" சக்தி, "எதுக்கு அவங்க ரெண்டு பேரையும் சீட்டில் கட்டி வெச்சு இருக்கே. வலிக்கும் இல்லை?" மக்ஸூத், "நீ ஒரு ஜீனியஸ்ன்னு நினைச்சேன். யூ இடியட். முதலில் நீ உங்க அம்மாகிட்ட பேசு. இந்தா" என்றபடி தன் செல்ஃபோனை மக்ஸூத் நீட்டினான். அந்தக் கணம் நித்தின் காரைக் கிளப்பிக் கொண்டு சென்றான். சக்தி, "அம்மா?" மனோகரி, "சொல்லுடா கண்ணா. சாரிடா நான் கொஞ்சம் கவனக் குறைவா இருந்துட்டேன். அந்த போலீஸ்காரனுகளுக்கு பரிதாபப் படாம பின் கதவை நல்லா சாத்தி இருந்தா இது நடந்து இருக்காது" மனோகரி சொல்லச் சொல்ல மக்ஸூத் தன்னிடம் செல்ஃபோன் இல்லாததால். பின் புறம் இருந்த ஹோண்டா ஸிட்டியை நித்தினை பின் தொடரச் சொல்ல சைகை காட்டுவதை கவனித்தபடி சக்தி, "பரவால்லைம்மா. உங்க ரெண்டு பேரையும் பத்திரமா பாத்துட்டாங்களா?" மனோகரி, "எங்களை அவங்க ஒண்ணும் செய்யலை. புறப்படும்போதே மாத்துத் துணி எல்லாம் எடுத்துட்டு வரச்சொன்னாங்க. நாங்க எதுவும் செய்யாமல் கூட வந்தா எங்களுக்கு எந்த ஆபத்தும் இருக்காதுன்னு உனக்கு பக்கத்தில் இருக்கறவன் சொன்னான். சொன்ன மாதிரியே இது வரைக்கும் எங்களை நடத்தி இருக்காங்க. காலையில் குளிச்சு சாப்பிட ஏற்பாடு எல்லாம் செஞ்சாங்க"

சக்தி, "உங்களை சீட்டில் கட்டிப் போட்டு இருக்காங்களா? ஒண்ணும் செய்யாதீங்கம்மா. சாந்திக்கு பக்கத்த்தில் இருக்கறவன் அவளை சுட்டுடுவான்" மனோகரி, "தெரியுண்டா கண்ணா. அவன் கேக்கறதை அவனுக்கு கொடுத்து நீ அவளை மட்டும் காப்பாத்தற வழியைப் பாரு. நல்ல வேளை நித்தின் கிளம்பி போயிட்டான். அவனை எதுக்கு கூட்டிட்டு வந்தே?"மக்ஸூத் சக்தியை தடுத்து, "போதும் பேசினது. வண்டியில் ஏறு" என்றபடி தன் செல்ஃபோனை சக்தியிடமிருந்து பிடுங்கினான். செல்ஃபோனை கொடுத்த சக்தி தன் துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றியைக் குறிவைத்தான். அடுத்த கணம் வேனில் இருந்து ஒருவன் கையில் ஒரு AK-47 துப்பாக்கியை ஏந்தி சக்தியை குறிவைத்து மக்ஸூத்துக்கு அருகே நின்றான். மக்ஸூத், "ஓ, உனக்கு துப்பாக்கி சுடத் தெரியுமா?" என்றபடி செல்ஃபோனில் "வெய்ட் ஒண்ணும் செஞ்சுடாதீங்க" என்று கூறி சக்தியைப் பார்த்து, "எனக்குள்ள குண்டு போகும் அதே கணம் உன் தங்கையின் மூளை வெடிச்சுச் செதறும். பேசாம துப்பாக்கியை கீழே போடு" என்றான். அவன் சொல்லச் சொல்ல சைரன் ஒலிக்க ஒரு ஆம்புலன்ஸ் வந்து அவர்களருகே ஸ்க்ரீச்சிட்டு நின்றது. அது நிற்பதற்கு முன்னரே அதில் இருந்த இருவர் சுடத்தொடங்கினர். ஆனால் அதற்குள் AK-47 ஏந்தியவன் ஆடோமாட்டிக் மோடில் சக்தியை சுடத்தொடங்கி இருந்தான். மக்ஸூத் தன் துப்பாக்கியை எடுக்க கையை தன் ஜாக்கெட் பாக்கெட்டுக்குள் எடுத்துச் சென்றான். அடுத்த கணம் அவன் நெற்றியில் ஒரு பெரிய சிந்தூரப் பொட்டு உருவானது. AK-47 எந்தியவனின் மூளை சிதறி பின்புறத்தில் வேனின் கண்ணாடியில் இரத்தத்துடன் கலந்த ஒரு மாடர்ன் ஆர்ட் போல தெரித்தது. சக்தியை தாக்கிய குண்டுகளில் இரண்டு அவன் அணிந்து இருந்த புல்லட் ப்ரூஃப் வெஸ்டினால் பெரிதளவுக்கு தடுக்கப் பட்டாலும் அவ்வளவு குறைந்த தூரத்தில் இருந்து அப்படிப் பட்ட ஒரு துப்பாக்கியால் சுடப்பட்டதால் அவன் உடலில் பாய்ந்து இருந்தன. ஒன்று அவன் நுரையீரலையும், அடுத்தது அவனது ஈரலையும் காயப் படுத்தி இருந்தன. காரைக் கிளப்பிக் கொண்டு சென்ற நித்தின் பின்னால் ஹோண்டா ஸிட்டி அவனை பின் தொடர்வதையும் அதில் இருந்த ஒருவன் கண்ணாடியை இறக்கி தலையை வெளியே நீட்டி அமர்ந்ததையும் கவனித்தான். வேகமாகச் சென்று ஈஜீபுரா சிக்னலை அடைந்தவன் அவனுக்கு எதிரே பல வாகனங்கள் பச்சை விளக்குக்காக காத்து நின்று இருந்தன. சாலையின் ஓரத்துக்குச் சென்று ஹாரனை அடித்தபடி எதிரில் நின்று கொண்டு இருக்கும் வாகனங்களை முன் சென்று யூ-டர்ன் எடுத்து ஒரு ட்ராஃபிக் ஜாம்மை உருவாக்கியபடி வந்த திசைக்கு எதிர் திசையில் மனோகரி-சாந்தி அமர்ந்து இருந்த இன்னோவாவை நோக்கி வேகமெடுத்தான். சிக்னலுக்கு அருகே நின்று இருந்த ஆம்புலன்ஸும் அவனை சைரனுடன் பின் தொடர்ந்தது. இன்னோவாவை நெறுங்கிய நித்தின் அதற்கு இடப்புறமாக முன்னால் சென்று அதன் பானெட்டின் இடப்புறத்தில் வேகமாக ஆனால் அழுந்த உரசியவாறு இடித்து அதன் முன்னால் குறுக்காக தன் ஸ்கார்ப்பியோவைச் செலுத்தி மிட்வே மெரிடியனில் இடித்து நிறுத்தினான். இடிபட்டதில் அந்த இன்னோவா குலுங்கியது. சாந்திக்கு அருகில் இருந்தவன் நிலைகுலைந்து இரண்டு சீட்டுகளுக்கு நடுவே இருந்த இடைவெளியில் தலை குப்புற விழுந்தான். ட்ரைவர் சீட்டில் இருந்த இம்ரான் சுதாரித்துக் கொண்டு நித்தினை நோக்கி சுடத்தொடங்கினான். நித்தின் மாட்டி இருந்த சீட் பெல்ட் அவனை நிதானம் இழக்காமல் இருக்க உதவியது. இம்ரானின் குண்டுகளில் ஒன்று நித்தின் புஜத்தைத் தாக்கியது. அடுத்தது அவனது காலர் போன் எலும்பையும் முறித்து அதிர்ஷ்டவசமாக மேலும் உள்ளே செல்லாமல் நின்றது. அதற்குள் பின்னால் வந்து கொண்டு இருந்த ஆம்புலன்ஸ் அருகில் வந்து வேகத்தை குறைத்ததும் சைரன் ஒலியைக் கேட்டு அதன் பக்கம் திரும்பிய இம்ரானும் சாந்திக்கு அருகில் இருந்தவனும் முகத்தில் ஆச்சர்யக் குறியுடன் மரணமடைந்தனர். குண்டடி பட்டும் எதிர்ப்புறம் கையைக் காட்டியபடி சக்தி ஓரிரு அடிகளை எடுத்து வைத்தபின் மயக்கமுற்று விழுந்தான். ஆம்புலன்ஸுக்கு உள்ளிருந்த வந்தனா "ஷக்தீ" என்று அலறியபடி வந்து அவனுக்கு அருகே மண்டி இட்டு அழுது குலுங்கினாள். அந்தக் குழுவில் மருத்துவ உதவியாளராகவும் இருக்கும் வீரர் சக்தியை தரையில் நேராக படுக்கச் செய்து அவனது ஆடைகளை விலக்கி காயங்களை ஆராய்ந்தார். அருகில் வந்த முரளீதரனிடம் "ஒரு புல்லட் லிவரில் பாய்ந்து இருக்கு. இன்னொண்ணு இடது நுரையீரலில். லங்க்ஸ்ஸில் பாய்ந்ததுனால்தான் ஆபத்து அதிகம். எந்த அளவுக்கு டாமேஜ்ன்னு தெரியலை. பல்ஸ் குறைஞ்சுட்டு வருது. உடனே ஹாஸ்பிடலுக்கு ஷிஃப்ட் பண்ணனும்" சீட் பெல்ட் தடுத்ததால் சரிந்து விழாமல் தலையை மட்டும் சாய்த்து மயங்கிக் கிடந்த நித்தின் எதிர்ப்புறம் இருந்த குழுவில் ஒருவர் கீழே இறக்க இரு ஆம்புலன்ஸுகளுக்கும் பின்னால் ஒரு ஜீப்பில் வந்து இறங்கிய தீபா சாலையில் குறுக்கே ஓடினாள். எதிர்ப்புறம் இருந்த ஆம்புலன்ஸுக்கு சக்தியும் எடுத்துச் செல்லப் பட்டான். காயமுற்ற நண்பர்கள் இருவரும் அவர்கள் காதலியருடன் அருகே இருந்த விமானப் படையைச் சார்ந்த Air force Command Hospital மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப் பட்டனர்.

No comments:

Post a Comment