Monday, March 30, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 1

அந்திவானம், புது மணப்பெணின் குங்குமக் கன்னம் போல் சிவந்திருக்க.... மலர்கள் வாடிய முகத்துடன்.. ஒற்றை காலில் நின்று , சூரியக் காதலனுக்கு பிரியாவிடை விடைகொடுக்க... முகம் காட்டாத நாடோடிப் பட்சிகள் , சிறகடித்து தங்கள் கூட்டைத் தேடி போய்கொண்டிருந்த , ஒரு இனிமையான மாலை பொழுது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் வெளிப்பிரகாரத்தில்,.தன் கைகளை பிசைந்தபடி கொஞ்சம் பரபரப்பாக இருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர்... நிமிடத்துக்கு ஒருமுறை கோயிலின் வாயிலை பார்த்துகொண்டிருக்க....

அவருக்கு அருகில் பாவாடை தாவணியில் நின்றிருந்த ஒரு அழகான பதினெட்டு வயது இளம்பெண், கொலுசுகள் சத்தமிட தன் கால்களை உதறிக்கொண்டு “ அப்பா இன்னும் எவ்வளவு நேரந்தான் காத்துகிட்டு இருக்கறது, வாங்கப்பா வீட்டுக்கு போகலாம்” என்று அந்த பெரியவரின் தோளை பிடித்து உலுக்கினாள்

“ அய்யோ இன்னும் கொஞ்சநேரம் பாப்பா... நான் போன் பண்ணி பேசிட்டேன் இதோ வந்துடுவாறு” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவர் முகம் பிரகாசமாக


“ இதோ மாப்பிள்ளை வந்தாச்சு பாப்பா ... அதோ நீலக்கலர்ல ஜீன்ஸ் போட்டு ஆஷ்கலர்ல சட்டைபோட்டு இருக்காரே, அவருதாம்மா மாப்பிள்ளை, நல்லா பார்த்துக்கோ” என்று அவர் சொன்னதும்

அந்த இளம்பெண் வேகமாக கோயில் வாயிலை பார்த்தாள் ,... அங்கே ஒருவன் வேகமாக கோயிலின் உள்ளே வந்துகொண்டு இருந்தான் .... அவனை பார்த்ததும் அவள் இமைக்க மறந்து வாய் பிளந்து அவனையே வெறித்து பார்க்க... அவனோ அவர்களை கடந்து உள்பிரகாரத்துக்கு போய்விட்டான்...

அவனின் சற்றே சிவந்த கோதுமையை போன்ற நிறமும் ... அடர்த்தியான தலை கிராப்பும்... அகன்ற நெற்றியும்... நேர்கொண்ட பார்வையும், ஆங்கிலேயர்களை போன்ற கூர்மையான நேர் நாசியும், கத்தையான மீசையும்... தடித்து கறுத்த உதடுகளும்... சிறிதுகூட ரோம வளர்ச்சியற்ற வளவளப்பான தாடையும்...

அவன் உடையின் நேர்த்தியும், அவன் விரல்களில் மின்னும் வைரமோதிரமும், இடக்கையில் இருந்த ரோலக்ஸ் வாட்ச்சும்,... அலட்சியமாக திறந்து விடப்பட்ட சட்டையின் கழுத்து பகுதி வழியாக தெரியும் தடித்த பொன் செயினும்... ஸ்டைலான வேக நடையுமாக ... அவனை பார்க்கும் ஆண்களே சற்று பொறாமைப்பட வைக்கும் அழகுள்ளவனாக இருந்தான் அவன்

“ பாப்பா மாப்பிள்ளை எப்படி இருக்கார்” என்று அவர் கேட்டதும்...

அவள் எதுவுமே பேசாமல் அவன் போன திக்கையே பார்த்தாள்.... ‘ இவனா மாப்பிள்ளை எவ்வளவு அழகா இருக்கான், இவனுக்கு என்ன தலையெழுத்து என்னை கல்யாணம் பண்ணிக்க...

' ஒருவேளை ஏதாவது ஊனமானவனோ... ம்ஹூம் நல்லா நடந்து போனான் , அதனால கால் ஊனம் இல்லை... கையில அர்ச்சனை தட்டை ஏந்தியிருந்தான், அதனால கைகள் நல்லாத்தான் இருக்கு... அவன் நிமிர்ந்த உடலும் விரிந்த நெஞ்சும் ஆரோக்கியமான நடையும், அவன் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவன்னு சொல்லுது... ஆங் அப்படின்னா அவன் ஊமையாகத்தான் இருக்கனும்’... என்று அவளின் பிஞ்சு மனம் கணக்கு போட்டது

“ என்னம்மா மாப்பிள்ளையை பத்தி ஒன்னுமே சொல்லலை” என அவர் வருத்தமாக கேட்க

“ கொஞ்சம் இருங்கப்பா இதோ வர்றேன்” என்று கூறிவிட்டு அவன் போன திக்கில் எதையோ கண்டுபிடிக்க போகிறவள் போல இவளும் உள்ளே ஓடினாள்

அவள் காமாட்சி அம்மன் சந்தியை அடைய... அன்று எந்த பண்டிகையும் இல்லாததால் சந்நிதியில் கூட்டமில்லாமல் இருந்தது ... அங்கிருந்த ஆண்கள் வரிசையில் அவன் நின்றிருந்தான்... அவனருகில் அர்ச்சகர் வந்து அர்ச்சனை தட்டி கையில் வாங்கிக் கொண்டு

“ உங்க பேர் நட்சத்திரம் சொல்லுங்கோ” என்று கேட்க

இங்கே இவளின் காதுகள் இரண்டும் சுறுசுறுப்பானது

“ பெயர் சத்யானந்தன்... அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசி,” என்று அவன் புன்னகையுடன் தனது கம்பீரக் குரலில் சொல்ல

இங்கே இவளோ ‘ அடடா ஊமை கிடையாது,.... ஆனா குரலிலேயே ஒருத்தரை மயங்க முடியுமா.? ... ஆனால் இவன் குரலை கேட்பவர்கள் நிச்சயம் மயங்கி இவன் சொல்படி கேட்பார்கள்...

இவள் அவனுக்கு எதிர்புறமாக பெண்கள் வரிசையில் போய் அவனுக்கு நேர் எதிரே நின்றுகொண்டு அவனை பார்க்க... அவனோ உள்ளே இருக்கும் அம்மனை தரிசிப்பதில் தனது முழுகவனத்தையும் வைத்திருந்தான்

இவளுக்கு எரிச்சலாக வந்தது, இதுவரை கோயிலுக்கு வந்து அவளை பார்த்தவர்கள் அனைவரும் மறுபடியும் ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டுத்தான் போனார்கள்.. ஏனென்றால் இவளின் அழகுமுகம் அப்படி திரும்பி பார்க்க வைக்கும்... ஆனால் இவன் திரும்பியே பார்க்கவில்லையே மகா கர்வம் பிடிச்சவனோ என நினைத்தாள்

அப்போது அர்ச்சகர் நெய் தீபத்தோடு வர,.. அங்கிருந்தவர்கள் அனைவரும் தீபத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு தட்டி பணத்தை போட்டுவிட்டு குங்குமத்தை வாங்கிக்கொண்டனர்

இவளுக்கு சட்டென ஒரு யோசனை தோன்ற... தீபத்தை மட்டும் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு குங்குமத்தை வாங்காமல் ... சற்றே பின்வாங்கி நின்றாள் 


சத்யன் தட்டில் ஒரு நூறுரூபாய் நோட்டை போட... அர்ச்சகர் அவனுடைய அர்ச்சனை தட்டை அவனிடம் கொடுத்துவிட்டு தன் கையில் கிடந்த மாலையை எடுத்து அவன் கழுத்தில் போட்டுவிட்டு உள்ளே போய்விட

இவள் சட்டென முன்னே வந்து “ சாமி எனக்கு குங்குமம் குடுங்க” என்று தனது குழந்தை குரலில் கேட்க... அதை காதில் வாங்காமல் அர்ச்சகர் உள்ளே போய்விட்டிருந்தார்

மான்சி “பச் அதுக்குள்ள போயிட்டாரே” என்று உச் கொட்ட

உடனே சத்யன் அவள் முன் தனது கையில் இருந்த குங்குமத்தை நீட்டினான்...
அவள் முகம் முழுவதும் சந்தோஷத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க.. அவன் இவளுக்கு நேராக கையை நீட்டிக்கொண்டு... உள்ளேயிருந்த அம்மனின் அடுத்த பூஜையை பார்த்துக்கொன்டிருந்தான்

‘ ச்சே என்ன மனுஷன் இவன் நம்ம முகத்தை நிமிர்ந்து கூட பார்க்கலையே’ என்று எரிச்சல் பட்டாலும் அவன் கையில் இருந்த குங்குமத்தை எடுத்து தனது நெற்றியில் வைத்துக்கொண்டாள்

அப்போது “ மான்சி” என்ற குரல் அங்கே கேட்க இருவருமே சட்டென திரும்பி பார்த்தனர்

இவளுடைய அப்பாதான் இவளை அழைத்தார்.. சத்யன் அவரை பார்த்ததும் அறிமுகமானவன் போல் லேசாக புன்னகைக்க...

“ வணக்கம் சார் இவதான் என் பொண்ணு மான்சி” என்று அவர் சத்யனுக்கு இவளை அறிமுகப்படுத்த,...

சத்யன் மான்சியை ஏறஇறங்க பார்த்துவிட்டு “ ஓ அப்படியா” என்று ஒரேவார்த்தையில் முடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தபடி அவரை பார்த்து “ அப்போ நான் கிளம்பறேன் கணேசன் ” என்று கூறிவிட்டு தனது வேகநடையில் அங்கிருந்து வெளியே போனான்

மான்சியின் அப்பா கணேசன் .. அவனின் கம்பீர நடையை பார்த்துக்கொண்டே “ பாப்பா எவ்வளவு உயரமா இருக்காருல்ல” என்று கேட்க

மான்சிஅவருக்கு எந்த பதிலும் செல்லாமல் சந்நதியை சுற்றிவர ஆரம்பித்தாள்... அவள் மனம் தெய்வத்திடம் நிலைக்கவில்லை.... அவள் மனம் முழுவதும் அவனை பற்றிய பல கேள்விகள்,...

மான்சி அம்மன் பிரகாரத்தை சுற்றி வர,.. அவள் மனம் அவனை சுற்றி வந்தது ‘ஏன் இவன் என்னை சரியாக பார்க்கவில்லை,.. ஒருவேளை இவனுக்கு பிடிக்காமல் என்னை அவன் தலையில் கட்டுகிறார்களா,... இல்லை இவன் இயல்பே இப்படித்தானா,... என்னதான் இவன் பேக்டரியில் என் அப்பா போர்மேனாக வேலை செய்தாலும்,.. மாமனாராக வரப்போகிறவரை பெயர் சொல்லி கூப்பிடுறானே ,.. எவ்வளவு திமிர்’ என்று நினைத்தபடி.. வெளியே வந்து பிரகாரத்தில் உட்கார்ந்துகொண்டாள்

“ என்ன பாப்பா நான் கேட்டுகிட்டே இருக்கேன் நீ வேகமா வந்துட்ட” என்றபடி கணேசனும் அவள் பக்கத்தில் உட்காந்தார்

ஏதோ யோசனையில் இருந்த மான்சி சட்டென அவர் பக்கம் திரும்பி “ அப்பா உன்மைய சொல்லுங்க... அவருக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையா... ஏன் அவர் என்னை பார்த்து ஒரு வார்த்தை கூட பேசாம போனாரு ... மொதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க அவ்வளவு பெரிய பணக்காரர் ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கனும்,.. இதுக்கு எனக்கு இப்பவே இங்கயே பதில் தெரியனும்” என பிடிவாதத்துடன் மான்சி கேட்க

“அதுவந்து பாப்பா” என்று கணேசன் தயங்கி நிறுத்த...

“ ம் சொல்லுங்கப்பா” என்று மான்சி அதட்டினாள்

“ வேறென்னும் இல்ல பாப்பா ... அவருக்கு இப்போ இருபத்தேழு வயசாகுது... அவரோட இருப்பத்தி மூனாவது வயசில் அவரோட அத்தை பொண்ணையே அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்களாம்... மொதல்லயே அந்த பொண்ணுக்கு இருதய நோய் இருந்ததால,.. அந்த பொண்ணு மூனு மாசத்திலேயே இறந்துபோச்சாம் பாப்பா,...

“ அதுக்கப்புறம் அவரு இந்த நாலுவருஷமா கல்யாணமே பண்ணிக்காம இருந்திருக்கார் ... இப்போதான் அவருக்கு கல்யாணம் பண்ணனும்னு தீவிரமா பொண்ணு தேடுனாங்க.,.. அப்பதான் நம்ம பேக்டரி மேனேஜர் பொண்ணு கல்யாணத்துல உன்னை பார்த்து,.. பெரிய முதலாளிக்கும் அவர் சம்சாரத்துக்கும் உன்னை ரொம்ப பிடிச்சுப்போச்சு,.. அப்புறமா என்னை அவங்க வீட்டுக்கு கூப்பிட்டு உன்னை பொண்ணு கேட்டாங்க,.. நானும் சரின்னு சொல்லிட்டேன்,... ஏன் பாப்பா இவ்வளவு பெரிய இடம் நம்ம கனவுலகூட நெனைச்சு பார்க்க முடியாது.. நீ என்னம்மா சொல்றே ” என்று கணேசன் ஏதோ ஒரு குழந்தைக்கு பவர் ரேஞ்சர்ஸ் கதையயை சொல்பவர் போல கைகளை ஆட்டி ஆட்டி கண்களை அகல விரித்து சத்யன் புராணத்தை சொல்ல

“அவர் பணக்காரர்னால என்னால ரெண்டாம் தாரமாக எல்லாம் போகமுடியாதுப்பா... யாராவது யூஸ் பண்ண பொருளையே நான் மறுபடியும் யூஸ் பண்ணமாட்டேன்... இதுல என்னை ரெண்டாந்தாரமா போகச்சொல்றீங்க.... கிளம்புங்கப்பா வீட்டுக்கு போகலாம் ”.என்று கூறிவிட்டு மான்சி விருட்டென எழுந்துகொண்டாள்

அவள் பிடிவாத குணம் தெரிந்து வேறுவழியில்லாமல் கணேசனும் எழுந்துகொண்டார்... சரி வீட்டில் போய் பேசி சமாதானம் செய்துகொள்ளலாம் என நினைத்தார்

இருவரும் காஞ்சிபுரம் பஸ்நிலையம் வந்தபோது நன்றாக இருட்டிவிட்டது ... ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பஸ்ஸை தேடி அதில் ஏறி இருவரும் உட்கார்ந்தனர்.... சிறிதுநேரத்தில் பஸ் கிளம்பியது



மான்சி கண்களை மூடிக்கொண்டு சீட்டில் சாய்ந்து கொண்டாள்... அவள் மனதில் ச்சே இரண்டாம் தாரமாக போய் கல்யாணம் பண்ணிக்கறதா, ம்ஹூம் கூடவே கூடாது... அதுவும் என்னைவிட எட்டு வயசு பெரியாளைப் போயா கல்யாணம் பண்ணிக்கறது, வேண்டாம்டா சாமி ’ என நினைத்தாள்

ஆனால் சத்யனின் ஆண்மை நிறைந்த கம்பீரத் தோற்றம் அவள் மனதில் வந்து வந்து போனது... அவன் அவளை பார்த்தபோது கூர்ந்த அவன் கண்களும் , அவன் பேசிய கம்பீரமான குரலும், அடிக்கடி நினைவில் வந்து, அவள் மனதை அலைக்கழித்தது ,... சத்யனின் நினைவில் அவள் மனம் அலைபாய்ந்தது ...அவள் மனதில் அழகிய நேசப்பூக்கள் மெதுவாக மலர ஆரம்பித்தன


மான்சியும் கணேசனும் ஸ்ரீபெரும்புதூரில் இறங்கி ஒரு ஆட்டோவில் ஏறி ஸ்ரீபெரும்புதூர் புறநகர் பகுதியில் இருக்கும் அவர்கள் வீட்டுக்கு போனதும் ... மான்சியின் அம்மா வசந்தி ஓடிவந்து மான்சியின் கைகளை பற்றிக்கொண்டாள்

“ மான்சி மாப்பிள்ளையை பார்த்தியாம்மா .... எப்படி இருக்கார்.... நானும் வர்றேன்னு சொன்னா உங்கப்பாதான் வேனாம்னு விட்டுட்டு போயிட்டார்” என்று படபடவெனப் பேசினாள்

“பச் எல்லாம் அப்பா சொல்வார்... எனக்கு மொதல்ல சாப்பாட்டை போடு பசியெடுக்குது” என்று மான்சி சலிப்புடன் கூறிவிட்டு சமையலறையை நோக்கி போக

மான்சி பின்னால் வந்த கணேசன் “ கொஞ்சநேரம் இரு வசந்தி நான் சொல்றேன்.... மொதல்ல அவளுக்கு சாப்பாடு போடு,... சாப்பிட்டு தூங்கட்டும் ” என்றவர் உள்ளே வந்து தனது சாட்டையை கழட்டி மாட்டிவிட்டு அங்கே கிடந்த சேரில் உட்கார்ந்தார்

மான்சிக்கு சாப்பாடு போட்டுவிட்டு வந்த வசந்தி அவர் காலடியில் அமர்ந்து “ என்னங்க ஆச்சு “ என்று கேட்க

“ ம் அவளுக்கு ரெண்டாந்தாரம் வேண்டாமாம்... அவரை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்றா வசந்தி .... இப்போ என்ன செய்றது ... பெரிய முதலாளிகிட்ட நம்பிக்கையா சொல்லிட்டு வந்தேன்.... அதோட நான் கேட்டுருந்த லோனை கூட தர்றேன்னு சொல்லிட்டார்.... இப்போ போய் அவர்கிட்ட எப்படி சொல்றது” என்று வருத்தமாய் கணேசன் சொல்ல

“ இருங்க அதுக்குள்ள அவசரப்படாதீங்க... அவகிட்ட நான் பேசறேன்” என்று வசந்தி அவருக்கு ஆறுதல் சொன்னாள்

அப்போது தன் தாவணியில் கையை துடைத்தபடி வந்த மான்சி “ என்னப்பா நீங்க சாப்பிடலையா” என்று கேட்டாள்

“அவர் சாப்பிடறது இருக்கட்டும்.. மொதல்ல நீ இங்கே வா” என்று வசந்தி மான்சியை கூப்பிட

என்னம்மா என்றபடி மான்சி கணேசனின் மறுபக்கத்தில் உட்கார்ந்தாள்

“ ஏன் மான்சி மாப்பிள்ளையை பார்த்தியா ,... உனக்கு பிடிச்சிருக்கா.... வேனாம்னு சொன்னியாமே... இதைவிட நல்ல இடம் உனக்கு கிடைக்காது மான்சி.. பெத்தவங்க சொல்றதை கேளு” என வசந்தி அதட்டலாகக் கேட்க

“ நல்லாத்தான் இருக்காரும்மா,. ஆனா ரெண்டாந்தாரம்னா எனக்கு வேனாம்னு சொன்னேன்” என்று மான்சி தரையை பார்த்து கொண்டே கூறினாள்

“ ஏன் ரெண்டாந்தாரமா இருந்தா என்ன,.. அவரென்ன முதல் பொண்டாட்டி உயிரோட வச்சிகிட்டா உன்னை கட்டிக்கப்போறாரு,... அந்த பொண்ணுதான் இறந்து மூனுவருஷம் ஆகுதாமே, குழந்தையெல்லாம் கூட கிடையாது அப்புறமென்ன... இப்போ விதவைங்க மட்டும் மறு கல்யாணம் பண்ணனும்னு பேசறோமே அதுபோலதான் ஆம்பளைங்களும்.. நாங்க சொல்றத கேளு மான்சி” என்று வசந்தி பாயிண்டை பிடித்து கவணமாக பேசினாள்

“ நீ சரிம்மா ஆனா அவரு என்னை ஏறெடுத்தும் பார்க்கலை... அப்பா சொன்னப்போ கூட என்கிட்ட பேசலை”என்று மான்சி வருத்தமான குரலில் கூற

வசந்திக்கு சட்டென ஒரு விஷயம் புரிந்தது ... மான்சிக்கு மாப்பிள்ளையை புடிச்சிருக்கு,.. ஆனா அவன் இவகிட்ட பேசலைன்னுதான் இப்போ வருத்தப்படுறா,... பேசி சமாதானம் பண்ணா சரியாயிடுவா,.. என நினைத்தவள்


“ மான்சி கண்ணு அவர் உன்னை பார்த்தது கோயில்ல,.. அங்கேபோய் உன்கிட்ட சகஜமா பேசமுடியுமா,... அதோட அவர் ஏற்கனேவே அத்தை பொண்ணை கல்யாணம் பண்ணாறாம்,... அவ ஞாபகத்தில் தான் இவ்வளவு நாளா கல்யாணமே பண்ணிக்காம இருக்காரான்னு சொன்னாங்க... நீ அங்கபோய் வாழ்ந்தா உன் அழகையும் நடத்தையையும் பார்த்து அவர் முதல் மனைவியை மறந்து உன்கூட நல்லபடியா குடும்பம் நடத்துவாறு மான்சி” என்று வசந்தி ரொம்ப பதவிசாக சொல்ல

மான்சி எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தாள்,... கடந்த மூன்று மணிநேரமாக அவள் மனம் முழுவதும் சத்யனின் பிம்பத்தை தவிர வேறு எதுவும் இல்லை,... அவனுடைய அழகான தோற்றமும்,..கம்பீரமான நடையும் பேச்சும் அவள் மனதில் ஆழப்பதிந்து விட்டது

‘ ஏன் அம்மா சொல்றமாதிரி இருக்காது,... அவரோட முதல் மனைவி ஞாபகத்தில் கூட இருக்கலாம்,... என்னை கல்யாணம் பண்ணதும் அவர் மனசு கண்டிப்பா மாறும்... அவனை திருமணம் செய்துகொண்டு,... அவனுடன் சேர்ந்து வாழ்ந்தால் அந்த நாட்கள் எப்படியிருக்கும் என்று அவள் மனம் கற்பனை செய்தது

“ என்ன மான்சி எதுவுமே சொல்லாம அமைதியா இருக்க” என்று வசந்தி கேட்க

“ ம்ம் அதான் நீங்களே எல்லாம் முடிவு பண்ணிடீங்களே... உங்க இஷ்டப்படி எல்லா பண்ணுங்க,... எனக்கு சம்மதம்தான்” என்று சொல்லிவிட்டு உடனே எழுந்து ஓடிவிட்டாள்

அவள் அப்படி சொல்லிவிட்டு போனதும்தான் கணேசனுக்கும் வசந்திக்கும் அப்பாடா என்று மூச்சு வந்தது,... இந்த திருமணத்தை வைத்துதானே அவர்கள் பல மனக்கோட்டைகள் கட்டிவைத்திருந்தார்கள்

எலக்ட்ரானிக் டிப்ளமோ படித்துவிட்டு ஊர் சுற்றிக்கொண்டு இருக்கும் மூத்தவன் ரவிச்சந்திரனுக்கு சத்யனின் கிரானைட் கம்பெனியில் வேலை ,... அப்புறமா ப்ளஸ்டூ முடித்துவிட்டு கல்லூரியில் படிக்க காத்திருக்கும் மான்சியின் தங்கை கீர்த்தனாவுக்கு நல்ல படிப்பு,... இதையெல்லாம் விட கணேசனுக்கு கம்பெனியில் கிடைக்கும் சத்யனின் மாமனார் என்ற அந்தஸ்து,... இவ்வளவும் மான்சியின் சம்மதம் என்ற ஒரு வார்த்தையில் தான் இருந்தது

“ சரி நீங்க வாங்க போய் சாப்பிடலாம்” என்று வசந்தி கூப்பிட இருவரும் எழுந்து உள்ளே போனார்கள்

மான்சி அவளும் அவள் தங்கை கீர்த்தனாவும் படுத்துக்கொள்ளும் சிறிய அறையில் படுத்து சத்யனை பற்றி பெரிய பெரிய கனவுகள் கண்டாள்

ஆனால் மான்சி ஒன்றை மட்டும் நினைக்க தவறினாள் ... முதல் மனைவியின் மறைவினால் துக்கத்தில் இருக்கும் ஒருவன் ஏன் இவ்வளவு பேரழகனாக தன்னை காட்டிக்கொள்ள வேண்டும்,.. என்பதைத்தான் சிந்திக்க மறந்தாள் மான்சி 

சென்னை போரூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் புறநகர் பகுதியில் இருந்த அந்த அழகிய பங்களாவில் நுழைந்த நின்ற அந்த உயர்ரக காரில் இருந்து அலட்சியமாக கதவை திறந்து கொண்டு இறங்கினான் சத்யன்
உடனே ஓடிவந்த வாட்ச்மேனிடம் கையிலிருந்த சாவியை தூக்கியெறிந்து விட்டு வேகமாக வீட்டுக்குள் போனான்

உள்ளே நுழைந்ததும் தனது அம்மாவை தேடியவன்... வேலைக்காரப்பெண் தோட்டத்தில் இருப்பதாக சொன்னதும் அங்கே போனான்

அந்த பெரிய தோட்டத்தில் அழகான மெர்குரி விளக்கின் வெளிச்சத்தில்... சுற்றிலும் நான்கு பிரம்பு நாற்காலிகள் போடப்பட்டு,.. அதன் நடுவே பிரம்பு டீப்பாய் போட்டிருக்க,... அந்த நாற்காலிகளில் சத்யனின் அப்பா தயானந்தனும்... அம்மா பிரேமாவும் உட்கார்ந்து எதையோ முக்கியமாக பேசிக்கொண்டிருந்தனர்

அம்மா என்றபடி சத்யன் வேகமாக அவர்கள் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்... அவன் முகம் கோபத்தில் சிவந்து போயிருந்தது

" அம்மா நீங்க கோயிலுக்கு நான் எதுக்கு போகனும்ன்னு சொன்னீங்க,... ஏம்மா இப்படி பண்றீங்க மொதல்ல சொல்லவேண்டியது தானே... அங்கபோனா அந்த கணேசன் தன் பொண்ணை கூட்டிட்டு வந்து நிக்கிறார்,.. என்னம்மா இதெல்லாம்” என்று சத்யன் சலிப்புடன் கேட்க

“ ஏன்டா என்னாச்சு,... மொதல்லயே சொன்னா நீ கோயிலுக்கு போகமாட்டேன்னு தான்,.. உனக்கு டைம் சரியில்லை காமாட்சி அம்மன் கோயில்ல அர்ச்சனை பண்ணனும்னு பொய் சொன்னேன்,... அதுக்கு என்ன இப்போ,.. அந்த பொண்ணை பார்த்தியா எவ்வளவு அழகா இருக்கா,... ஏதாவது பேசினியா சத்யா ” என்று சத்யனின் அம்மா பிரேமா ஆர்வத்துடன் கேட்டாள்

“ ம்ம் பார்த்தேன் ரொம்ப சின்னப்பொண்ணா இருக்கா,... ஏம்மா எனக்குத்தான் இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன்ல,.. அப்புறம் ஏன் என்னை வற்புறுத்தறீங்க” என்று சத்யன் கோபமாக கூறியதும்



அதுவரை அமைதியாக இருந்த அவன் அப்பா தயானந்தன் “ ஏன் கல்யாணம் பண்ணாம இன்னும் எங்களை என்ன அசிங்கம் பண்ணப்போற,... இதோ பார் எப்படியோ உன்னை பற்றி சரியா தெரியாததால் கணேசன் அவன் பொண்ணை தர சம்மதிச்சிருக்கான்,... இல்லேன்னா உன்னை தெரிஞ்ச வேற எவனும் உனக்கு பொண்ணு தரமாட்டான்,... சத்யா ஒழுங்கா சம்மதிச்சு இந்த கல்யாணத்தை பண்ணிக்க,... இல்லேன்னா என் சொத்தில் இருந்து நயாபைசாக் கூட உனக்கு வராது,... எல்லாம் நான் சம்பாதிச்சது,... உன் பாட்டன் சொத்திலை உனக்கு அது தெரியும்ல” என்று மிரட்டலாக கூறியதும்

ஆவேசமாக எழுந்த சத்யன் “ என்னப்பா மிரட்டி பார்க்கிறீங்களா,.... உங்க சொத்தே வேண்டாம்னு வீட்டை விட்டு வெளியே போய்ட்டா என்னப் பண்ணுவீங்க,” என்று கேட்க

“ ம் என்னோட மத்த ரெண்டு பொண்ணுக்கும் மொத்ததையும் குடுத்துட்டு போவேன்,...ஆனா சத்யா உன்கிட்ட பணம் இல்லேன்னு வையி உன்னை எவனுமே சீண்ட மாட்டான்,.. முக்கியமா இப்போ உன்கூட தரங்கெட்டுப் போன ஒருத்தி குடும்பம் நடத்துறாளே ‘மாயா’ அவ மொதல்ல உன்னைவிட்டு ஓடிப்போயிடுவா” என்று தயானந்தன் நக்கலாக கூறினார்

எங்கே அப்பாவுக்கும் மகனுக்கும் சண்டை முற்றிவிட போகிறதோ என்று பயந்த பிரேமா,... அவசரமாக எழுந்து “ என்ன சத்யா அப்பாவை எதிர்த்து எதிர்த்து பேசிகிட்டு இருக்க,... நீ வா உள்ள போகலாம்” என்று அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே போனாள்

“ ம் என்னை பேசவிடாம இப்படியே அவனை மடக்கி மடக்கி கூட்டிட்டு போய்தான் அவன் குட்டிச்சுவராப் போனான்டி,... உன்னாலதான் எல்லாமே” என்று தயானந்தன் மனைவியை பார்த்து கத்திவிட்டு அடங்கினார்





" காதலே.... சிலசமயம் உயிரைக் குடிக்கிறாய்...

" காதலே... சிலசமயம் உணர்வுகளை குலைக்கிறாய்..

" காதலே... சிலசமயம் காதலரைப் பிரித்து கனவுகளை கலைக்கிறாய்..

" ஆனால் மாபெரும் சக்தியுடன் உலகை வலம்வந்து...

" காதலர்தினமும் கொண்டாடுகிறாய்?

" காதல் என்றால் உலகின் சுழற்சி என்று பொருள்....

" அதை பரிமாறிக்கொள்ள ஓர் தினம் மட்டும் போதுமா?





No comments:

Post a Comment