Tuesday, March 17, 2015

எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 3

அவன் தோளைத் தட்டி சிரித்த பரணி “ம்ம் உங்க வீட்லயே வச்சுக்கலாம் சத்யன்.. எல்லாம் ரெடியாத்தான் இருக்கு”என்று உற்சாகமாக கூறினார்

அப்போது அவர்களுக்கு பின்னால் இருந்து “ அப்பா சவி எங்கப்பா நேரமாச்சு சாப்பாடு கொடுக்கனும்” என்று கிடாரின் மெல்லிய நாதம் போல ஒரு தேன் குரல் கேட்க

சத்யன் சட்டென திரும்பி பார்த்தான் அங்கே ஒரு பெண் ம்ஹூம் அவளை வானத்து தேவதை என்றுதான் சொல்லவேண்டும்... அவ்வளவு அழகாக இருந்தாள்...

லேசாக அழுத்தி தொட்டால் கன்றி சிவந்துவிடும் போல் ஒரு நிறம்....
வெளியே தெரிந்த உடல் பாகங்களில் அவள் உடலில் ஓடிய பச்சை நரம்புகள் அப்பட்டமாக தெரிந்தது...
பால் ரோஸ் நிறத்தில் அடர் சிவப்பில் ரோஜாக்களை வாரியிறைத்த காட்டன் சேலையுடுத்தி... அதற்கு மேட்ச்சாக அடர் சிவப்பில் ரவிக்கை போட்டு...
தலைமுடியை தளர பின்னி தொங்கவிட்டிருந்தாள்...

காதிலும் கழுத்திலும் இருந்த சிறு நகைகள் அவள் அழகை மேலும் பன்மடங்காக்கி காட்டியது...
அவளின் அழகு விழிகள் கதை பேசியது.. கவிதை சொன்னது ...
செயற்கை முறையில் திருத்தப்படாத.. வில்லைப்போல் வளைந்த.. நேர்த்தியான புருவங்கள்
கூர்மையான மூக்கு எதிராளியை வீழ்த்திவிடுவது போல நேராக இருந்தது...
கீழுதடு சற்று குவிந்தும் மேலுதடு சற்று விரிந்தும் பார்ப்பவர்களை பைத்தியமாக அடிக்கச் செய்யும் போல இருந்தது....
காற்றில் கலைந்து அவள் நெற்றியில் விழுந்த அந்த கற்றை கூந்தலின் அழகுக்காக இந்த உலகத்தையே விலைபேசலாம்....
அவள் அழகும் நளினமும் யாரையும் வீழ்த்திவிடும்...

ஆனால் அப்படி வீழ்த்திவிடக் கூடாது என்பதற்காகவே அவள் ரொம்ப அடக்கமாக தன்னை காட்டிக்கொள்வது போல் சத்யன் மனதில் பட்டது ...

அந்தளவுக்கு பாந்தமாக எந்தவித ஒப்பனையும் இல்லாமல் ரொம்ப எளிமையாக இருந்தாள்...

சத்யன் இதுவரை அப்படி ஒரு பெண்ணை பார்த்ததேயில்லை என்பது போல் அவள் அழகை தன் விழியிலே உள்வாங்கி தன் மனதில் நிறைத்தான்...

ஏனோ அவளை பார்த்ததுமே இனி பிரித்து எடுக்க முடியாதபடி சத்யனின் மனதில் ஆழப்பதிந்து விட்டாள்

அப்போது அவன் தோளைத் தொட்ட பரணிதரன் “சத்யன் இவதான் என் மகள் மான்சி... சைந்தவியோட அம்மா... ஒரு தனியார் வங்கியில் கிளார்க்காக இருக்கிறா” என்றவர் மான்சியை பார்த்து “மான்சி இவர் சத்யன் நம்ம எதிர் பிளாட்டில் இருக்கிற பேச்சிலர் மேன்” என்று இருவருக்கும் அறிமுகம் செய்துவைத்தார்

மான்சி சத்யனின் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் ‘ஹாய் குட்ஈவினிங் சார்” என்று சொல்லிவிட்டு தன் மகளைத் தேடி பூங்காக்குள் நுழைய

சத்யன் அவளுக்கு பதில் வணக்கம் சொல்லும் சம்பிரதாயத்தை கூட மறந்து திகைத்து போய் நின்றிருந்தான் ... “இவளா இந்த அழகு தேவதையா சைந்தவியின் அம்மா” சத்யனால் நம்பமுடியவில்லை .

“ என்ன சத்யன் அப்படி பார்க்கறீங்க.. இவளா சவியோட அம்மான்னு தானே... நூறுசதம் உன்மை சத்யன்... மாப்பிள்ளை சொந்தம் என்றதால கொஞ்சம் சின்ன வயசிலயே மேரேஜ் பண்ணிட்டோம்” என்று பரணிதரன் சத்யனின் வியப்புக்கு விடை சொல்ல

சத்யனால் “ஓ அப்படியா” என்று ஒற்றை வார்த்தை மட்டுமே சொல்லமுடிந்தது




“ ஒருவன் காதலிப்பதும்

“ கவிதை சொல்வதும்

“ சுலபம்தான்

“ உன்னைப்போல்

“ ஒருத்தியை பார்த்தபிறகு...

“ நீ ரோஜாச்செடியில்

“ விளைந்த ஆப்பிள்.!

மான்சியின் பின்னாலே பரணீதரனும் தன் பேத்தியை தேடிப்போக.. சத்யன் அவரிடம் “நான் கிளம்பறேன்” என்று கூற

“ம் கிளம்புங்க சத்யன் இன்னும் ஒன் அவர்ல நான் உங்க பிளாட்டுக்கு வர்றேன்” என்று பரணி கண்சிமிட்டி சொல்ல .. சத்யன் பதிலுக்கு சிரித்துவிட்டு தன் பிளாட்டுக்கு போனான்

சத்யன் மனதில் மான்சியை பற்றிய எண்ணங்களே வலம் வந்தன... அவள் ஏன் என் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்கலை... ஒருவேளை தன் புருஷன் முகத்தை தவிர வேற யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கமாட்டாளே...

பெரிய இவ மாதிரி என் முகத்தை பார்க்காம திருப்பிக்கிட்டு போறா.... ம்ம் தான்தான் ரொம்ப அழகுங்குற கர்வம் அதிகம் போல’ என நக்கலாக நினைத்தான்

‘அப்படி அழகானவ மாதிரி என்ன பண்ணா .. இருக்கிற அழகையே வெளியே தெரியாதபடி மேக்கப் இல்லாம எவ்வளவு சிம்பிளா இருக்கா அவளைப்போய் கர்வம்பிடிச்சவன்னு சொல்லிறியே இது சரியில்லை’ என்று அவன் மனம் உடனே அவனை குத்தியது

‘எது எப்படியோ அடுத்தவன் பொண்டாட்டியை ரசிக்கிறதே தப்பு... இதுல அவ அழகை பற்றி ஆராச்சி பண்றது அதைவிட தப்பு’ என்று நினைத்த சத்யன் தன் வேலைகளில் கவணம் செலுத்த முயன்றான்

பரணி வருகிறேன் என்று சொன்னதால் தாருமாறாக கிடந்த பொருட்களை, அவன் துணிகளை எல்லாவற்றையும் எடுத்து அதன் இடங்களில் வைத்தான்... பிரிஜ்ஜில் ஐஸ்கட்டிகள் தயார் செய்தான்...

டைனிங் டேபிளை சுத்தப்படுத்தி இரண்டு கண்ணாடி டம்ளர்களை எடுத்து வந்து வைத்துவிட்டு... பிரிஜ்ஜில் இருந்து சில முட்டைகளை எடுத்து கிச்சனில் கொண்டுபோய் வைத்தான்... அவர் வந்ததும் ஆம்லேட் போட்டுக்கொள்ளாம் என்று நினைத்தான்

ஆனாலும் அவன் அடி மனதில் அந்த ரோஸ்நிற காட்டன் சேலை தேவதை, மான்சி என்ற அந்த அழகு புயல் கரையைக் கடக்காமல் நிலையாக மையம் கொண்டுவிட்டாள்...

இதுமுறையா என்று கேள்வி கேட்ட மனதை எதைஎதையோ சொல்லி அடக்கினான்

மறுபடியும் மறுபடியும் ஞாபகம் வந்த அந்த குவிந்த சிவந்த உதடுகளை மறக்கமுடியாமல் சத்யன் தலையை சிலுப்பிக் கொண்டான்...

ச்சே இதென்ன அடுத்தவன் மனைவியை போய் இப்படியெல்லாம் நினைக்கிறோமே என்று சங்கடப்பட்டான்

அப்போது வெளியே அழைப்புமணி ஒலிக்கும் சத்தம் கேட்க சத்யன் அவசரமாக எழுந்து போய் கதவை திறந்தான் .. பரணீதரன் தான் கையில் ஒரு பையுடன் நின்றிருந்தார்

“ம் வாங்க சார் உங்களுக்காகத்தான் வெயிட் பண்றேன்” என்ற சத்யன் அவருக்கு வழிவிட்டு நின்று பிறகு கதவை அடைத்துவிட்டு வந்தான்

கையில் இருந்தவற்றை டைனிங் டேபிளில் வைத்த பரணீதரன் வீட்டை ஒரு முறை சுற்றி பார்வையிட்டார்

“ ம் தனியாளாக இருந்தாலும் வீட்டை நல்லா வச்சிருக்கீங்க சத்யன்” என்றவர் பையை பிரித்து உள்ளே இருந்தவற்றை எடுத்து டேபிள் வைத்தார்

“ சத்யன் ஐஸ் கியூப்ஸ் இருக்கா இல்லை என் வீட்டில் இருந்து எடுத்துட்டு வரவா” என்று சத்யனை கேட்க

“ ரெடியா தான் இருக்கு சார்” என்ற சத்யன் ஐஸ் கட்டிகளை எடுத்து வந்து வைத்துவிட்டு கிச்சனுக்குள் போய் முட்டையை ஆம்லேட் போட ரெடி பண்ண கூடவே பரணியும் வந்து உதவி செய்தார்

இருவரும் வந்து சேரில் அமர்ந்து ரம் பாட்டிலைத் திறந்து டம்ளர்களில் கலந்து அருந்த தொடங்கினர்... மூன்றாவது ரவுண்டு தொடங்கும் போது சத்யன் மெதுவாக பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்

“ அங்கிள் சவியோட அப்பா எங்க வேலை செய்றார்... நான் அவரை பார்த்ததேயில்லையே.. எங்கயாவது வெளிநாட்டில் இருக்காரா அங்கிள்” என சத்யன் தன் கிளாசில் ஐஸ் துண்டுகளை போட்டபடி கேட்க

பரணி சிறிது நேரம் மவுனமாக இருந்தார் பிறகு தன் கைகளில் இருந்த மதுவை ஒரே மடக்கில் குடித்துவிட்டு “ அவன் இப்போ உயிரோடு இல்லை சத்யன் ... இறந்து போய் மூனு வருஷமாச்சு” என்றதும்

“என்ன சார் சொல்றீங்க” என்று அதிர்ச்சியுடன் சத்யன் எழுந்து நின்றுவிட்டான்...

ஆனால் அவன் மனதில் அதுவரை இருந்த ஏதோ ஒன்று விடைபெற்று செல்ல... மனம் லேசாகி விண்ணில் பறப்பதுபோல் இருக்க...

ச்சே ஒருவருடைய மரணத்தில் போய் சந்தோஷப் படுகிறேனே நானெல்லாம் என்ன மனுஷன் என்று சத்யன் தன்னையே சாடினான் 




“ஆமாம் சத்யன் சைந்தவி மான்சி வயித்தில ஆறுமாசம் கருவா இருந்தப்பவே மோகன் ஒரு ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டான்... மோகன் என்னோட ஒன்னுவிட்ட அக்கா பையன்... நல்லா பொருத்தமெல்லாம் பார்த்துதான் கல்யாணம் பண்ணோம்... ரெண்டுபேரும் எட்டுமாசம் தான் சேர்ந்து வாழ்ந்தாங்க...

மோகன் இப்போ மான்சி வேலை செய்ற பேங்கில் கேசியரா இருந்தான்... ஒருநாள் ஈவினிங் பைக்ல வரும்போது எதிரில் வந்த ஆம்னி பஸ்ஸில் மோதி ஸ்பாட்டிலேயே உயிர் போயிடுச்சு... அப்போ நாங்க லால்குடியில் இருந்தோம்... தகவல் தெரிஞ்சு நாங்க வந்து பார்கிறப்போ மோகனை பார்சல் பண்ணிட்டாங்க என் மகள் உயிர் இருந்தும் பிணம் மாதிரி கிடந்தாள் சத்யன்” என்ற பரணி தன் கைகளால் முகத்தில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பிக்க

சத்யனுக்கு ஒரு நிமிடம் என்ன செய்வது என்றே புரியவில்லை இவ்வளவு கம்பீரமான மனிதருக்குள் இப்படியொரு உணர்வுபூர்வமான மனிதரா என்று நினைத்தான்..

எவ்வளவு கம்பீரமாக இருந்தாலும் தன்னுடைய துக்கத்தை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது என்பதை புரிந்த சத்யன் அவசரமாக எழுந்து டேபிளை சுற்றி அவரிடம் வந்தான்

அவர் கைகளை பற்றிக்கொண்டு “ அங்கிள் ப்ளீஸ் கன்ட்ரோல் பண்ணிக்கோங்க.. உங்களுக்கு தெரியாதது இல்லை... மரணம் என்பது மனிதனுக்கு நிச்சமான ஒன்னு.. அது சிலருக்கு முன்பே நிர்ணயிக்கப்படுகிறது... சிலருக்கு வாழ்ந்து முடிந்தபின் நிர்ணயிக்கபடுகிறது... உங்களுக்கு நான் இதை மட்டும்தான் சொல்ல முடியும் அங்கிள்... ஏன்னா நானும் இதைப்போல நிறைய கஷ்டங்களை அனுபவித்து இருக்கேன்” என்ற சத்யன் தனது சேரை அவருக்கு அருகில் இழுத்து போட்டுக்கொண்டு அமர்ந்து தன்னை பற்றிய விவரங்களை சொல்ல ஆரம்பித்தான்

தமிழ்ச்செல்வி மேல் வந்த தன்னுடைய முதல் காதல்... அந்த காதல் தன் அப்பா மூலமாகவே கருகியது... தமிழ்ச்செல்வியை தன் அப்பாவே திருமணம் செய்துகொண்டது... அதே துக்கத்தில் இருந்து உயிரைவிட்ட தன் தாயாரின் மரணம்... என்று சத்யன் இதுவரை யாரிடமும் சொல்லாத அத்தனை விஷயங்களையும் பரணீதரனிடம் சொன்னான்

பரணி அவனையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு “ என்னோட துக்கத்தை சொல்லி உங்களோட மனசை கிளறிவிட்டுட்டேன்னு நெனைக்கிறேன் சத்யன்.. மன்னிச்சிடுங்க சத்யன்” என்று வருத்தமான குரலில் கூற

“அய்யோ என்ன அங்கிள் மன்னிப்பு அதுஇதுன்னு கேட்டுகிட்டு... இன்னும் சொல்லப்போனா இவ்வளவு நாளா பாரமாக அழுத்திக்கிட்டு இருந்தெல்லாம் போய் எனக்கு இப்போதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு” என அவரை தேற்றுவது போல் சத்யன் கூற

இருவரும் அடுத்த ரவுண்டு ஆரம்பித்தனர் “ அங்கிள் நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... நீங்க ஏன் உங்க டாட்டர்க்கு மறுபடியும் மேரேஜ் பண்ண முயற்சிக்கலை... ஏன் கேட்கிறேன்னா இந்த காலத்தில் யாரும் இப்படி இருக்கிறதில்லை.. உடனே மறுமணம் பண்ணிக்கிறாங்க அதனால்தான் கேட்டேன் அங்கிள்” என்று சத்யன் தயங்கி தயங்கி கேட்க

“நீங்க கேட்டதில் தப்பில்லை சத்யன்... ஆனா மான்சி இதுக்கு ஒத்துக்கவே மாட்டேங்கறா.. நானும் அவ அம்மாவும் எவ்வளவோ எடுத்து சொல்லி பார்த்துட்டோம் அவ ஏத்துக்கலை... அதுக்கும் ஒரு காரணம் இருக்கு சத்யன் அவளுக்கு சின்ன வயசிலிருந்தே ஒருவிதமான மனவியாதி... அதாவது எதுக்கெடுத்தாலும் பயப்படுறது சின்னசின்ன விஷயத்துக்கெல்லாம் பயந்து கத்த ஆரம்பிச்சுடுவா”..கொஞ்சம் நிறுத்தி கையில் இருந்த மதுவை தொண்டையில் சரித்துகொண்டு மறுபடியும் ஆரம்பித்தார் பரணி

“இதுனால அவளோட படிப்பு ரொம்ப பாதிச்சது... நாங்க யாராவது அவ கூடவே இருக்கனும்... அவ பெரியவளானதும் இது இன்னும் மோசமாயிருச்சு.. இது எதனாலேன்னு எங்களுக்கே புரியாம திருச்சியில் ஒரு மனநல டாக்டரை பார்த்தோம்... அவங்க மான்சிக்கு நிறைய டிரீட்மெண்ட் கொடுத்து அவளை கொஞ்சம் மாத்தினாங்க... என்ன காரணத்தால மான்சிக்கு இப்படி வந்ததுன்னு மட்டும் டாக்டர் எங்களுக்கு சொல்லவேயில்லை.. அப்புறம் மான்சிக்கு கல்யாணம் பண்ணிட்டா நல்லதுன்னு டாக்டர் சொன்னதால மோகனை பேசி முடிச்சோம்” ...

“ஆனா சத்யன் மோகனுக்கு மான்சியை பத்தின விஷயங்களை சொல்லித்தான் ரெண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணோம்... அவங்க ரெண்டுபேரும் நல்லாத்தான் வாழ்ந்தாங்க... ஆனால் மோகன் அடிக்கடி மான்சியோட குறைகளை சுட்டி காண்பிச்சு கிண்டல் பண்ணிகிட்டே இருப்பான்... இதனாலேயே மான்சி நாங்க இங்கே வரும்போதெல்லாம் எனக்கு ஏன் கல்யாணம் பண்ணீங்கன்னு அழுவா.. நாங்களும் எதையாவது ஆறுதலா சொல்லிட்டு போவோம்....

"இந்த பயத்தினால தான் மான்சி மறுபடியும் மேரேஜ்க்கு ஒத்துக்க மாட்டேங்குறா சத்யன் எங்க வர்றவன் தன்னோட குறையை கிண்டல் பண்ணுவானோ என்ற பயம்தான் செகன்ட் மேரேஜ்க்கு மறுப்பதற்கு ஒரே காரணம் சத்யன்" என்று பரணி தனது பேச்சை முடித்துக்கொள்ள... சத்யன் வேறு எதுவும் அவரிடம் கேட்கவில்லை

சத்யன் மனதில் மான்சி ஆழமாக பதிய ஆரம்பித்து வெகு நேரமாகிறது ... அன்றிலிருந்து அவளை ரகசியமாக பார்த்து ரசிப்பதை தனது வேலைகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டான் ... அவள் தெருவில் இறங்கி நடக்கும் போது இவன் மனம் அவள் பின்னாலேயே போக ஆரம்பித்தது



" நீ நடந்து செல்லும்போது....

" உன்னோடு தெருவையும் ...

" கூட்டிக்கொண்டு போய்விடுகிறாய்...

" தெருவை காணவில்லை என்று....

" தேடக்கூட அங்கே...

" யாரும் இருப்பதில்லை !

அதன்பிறகு சத்யன் மான்சியை பற்றிய விவரங்களை பரணியிடம் இருந்து பேச்சுவாக்கில் சேகரித்தான் ... மாலைவேளைகளில் இருவரும் பூங்காவில் அமர்ந்து பேசும்போது சத்யன் அவர் தன்னை கண்டுபிடிக்காதவாறு மான்சியை பற்றி விசாரிப்பான்.. அன்றும் அப்படித்தான் ஆரம்பித்தான்

“ ஏன் அங்கிள் நீங்க சொல்றதை வச்சு பார்த்தா... உங்க பேமிலி ஒரளவுக்கு வசதியானதா தெரியுது... அப்படியிருக்க சவியோட அம்மா ஏன் இந்த மாதிரி ஒரு சாதரண வேலைக்கு போகனும்... என்ன மிஞ்சிப் போனா ஒரு எட்டாயிரம் சம்பளம் கிடைக்குமா” என்று சத்யன் கேட்க

அய்யோ சத்யன் மான்சி சம்பளத்துக்காக வேலைக்கு போகலை… அவ மனசுல இருக்கிற பயம் தாழ்வுமனப்பான்மை இதெல்லாம் போகனும்... எல்லாரிடமும் சகஜமாக பழகனும் என்றுதான் நாங்க அவளை வேலைக்கு அனுப்புறதே”...

“மோகன் வேலை செய்த பேங்கிலேயே மான்சி வேலை குடுத்தாங்கன்னு தான் இப்போ அனுப்புறோம்... இல்லேன்னா நிச்சயமா அவளை வெளியவே அனுப்ப மாட்டோம்.... அவ சம்பளம் லால்குடியில் என்னோட பண்ணையாளுக்கு குடுக்கிறேன் சத்யன்” என்று பரணி சொன்னதும்

“அப்படின்னா இப்போ அவங்ககிட்ட ஏதாவது மாற்றம் தெரியுதா அங்கிள்” என்று சத்யன் ஆர்வத்துடன் கேட்க

“ம் நிறைய மாற்றம் சத்யன் இப்பல்லாம் அவளே தனியா ஏங்க வேனும்னாலும் போறா.... போன மாசம் ஒரு அவசர வேலையா நானும் என் ஒய்பும் சவியை கூட்டிக்கிட்டு லால்குடி போய்ட்டோம்... இவ மட்டும் தனியாத்தான் இங்க இருந்தா ... எங்க ஹவுஸ் ஓனர் பவானியம்மா வந்து அடிக்கடி பார்த்துகிட்டாங்க சத்யன்”... என்ற பரணி சவி வேறு ஒரு குழந்தையுடன் சண்டையிட வேகமாக எழுந்து போய் தடுத்து சவியை கூட்டிவந்தார்

“ம் வெட்டியா அந்த பையன் கிட்ட சண்டைக்கு போறா சத்யன் இவளை என்ன பண்ணலாம் சொல்லுங்க” என்று தன் பேத்தியை கொஞ்சிக்கொண்டே பரணி கேட்டதும்

சத்யன் அவரிடமிருந்து சவியை வாங்கி தன் தலைக்கு மேலே தூக்கி ஒரு சுற்று சுற்றி பிறகு கீழே இறக்கி “ இதுபோல தலையை சுத்தி கீழே போட்டுடலாமா இந்த செல்லத்தை” என்று சத்யன் சவியை கொஞ்சினான்

“அங்கிள் நீங்க ட்ராயிங் வரைவீங்களாமே தாத்தா சொன்னாங்க என்னையும் வரைஞ்சு தர்றீங்களா” என்று சவி தன் மழலை குரலில் சத்யனிடம் கேட்க

“ம் கண்டிப்பா வரைஞ்சு தர்றேன் நீ என்னோட வீட்டுக்கு இன்னிக்கு நைட் தாத்தா கூட வா அப்போ வரைஞ்சு தர்றேன்... சரியா குட்டிம்மா” என்று சத்யன் சொன்னதும்

“அங்கிள் உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது நான் பாப்பா இல்ல குட்டிம்மா இல்ல சைந்தவி சைந்தவி சைந்தவி” என சவி செல்லக் கோபமாக கூற

“அங்கிள் அனேகமா சவி கோர்ட்ல டபாலியா தான் வேலைக்கு போவான்னு நெனைக்கிறேன்... ஏன்னா அவ பேரையே மூனு தடவை சொல்றாளே” என்று சத்யன் பரணியிடம் கிண்டல் செய்ய



“இல்ல நான் டாக்டராத்தான் ஆவேன்” என்று சவி கைகால்களை உதறியபடி கூற
சரி சரி நீ டாக்டராவே ஆகு ஆனா எல்லாருக்கும் மூணு மூணு ஊசியா போடு என்று சத்யன் நக்கல் செய்ய

பரணியும் சிரித்துவிட்டு “ உங்களோட நட்பு கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சத்யன்” என்று மனம்விட்டு சொல்ல

“ம் எனக்கும்தான் அங்கிள்... ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிச்சு சந்தோஷமா இருக்கேன்... சரிங்க அங்கிள் நான் வீட்டுக்கு கிளம்பறேன் இன்னிக்கு ஒரு முக்கியமான ஒரு நிருவனத்தோட ஆர்டர் வந்திருக்கு அது விஷயமா சில விவரங்கள் சேகரிக்கனும் அங்கிள் அதான் ” என்று சத்யன் தயங்கியபடி சொல்ல

“அதுக்கு ஏன் சத்யன் தயங்குறீங்க மொதல்ல பிஸினஸை பாருங்க... இதோ நானும் வர்றேன்” என்று பேத்தியை தூக்கிக்கொண்டு அவனுடன் பேசியபடி நடந்தவர்

“கொஞ்சம் நில்லுங்க சத்யன் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கனும் அதை நீங்க எப்படி எடுத்துக்குவீங்களோன்னு சங்கடமா இருக்கு” என்று பரணி தயங்கியபடியே கூற

“என்ன அங்கிள் தயங்காம கேளுங்க”

“ஒன்னுமில்ல சத்யன் வீக்யெண்டில் நீங்க நைட்ல வீட்டுக்கு வர்றதில்லை... அதிலே ஒன்னும் தப்பு இல்ல ஏன்னா உங்க வயசு அப்படி... ஆனா வாழ்க்கையில் ஒரு சேப்டி இருக்கனும் சத்யன்.. அதனாலதான் சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க சத்யன்” என பரணி கூறியதும்

சத்யன் சிறிதுநேரம் தலைகுனிந்து நின்றுவிட்டு பிறகு நிமிர்ந்து அவர் முகத்தை நேராக பார்த்து “ இதுவரைக்கும் சேப்டியா தான் இருந்திருக்கேன் ஆனா இனிமேல் அதுபோல் நடக்காது சார்.. இதை நீங்க நம்பனும்” என்று கூற

“தட்ஸ் குட் சத்யன்.. நீங்க வீட்டுக்கு போங்க நான் இன்னும் கொஞ்சநேரம் கழிச்சு இந்த வாலுப் பொண்ணோட வரறேன்” என்று முகம் மலர கூறினார்

சத்யன் எளிதில் அவர் தன்னை புரிந்துகொண்ட உற்சாகத்துடன் வீட்டுக்கு போனான் 


No comments:

Post a Comment