Tuesday, March 31, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 3

மறுநாள் அதிகாலை மூன்று மணிக்கே சத்யனின் அறைக்கதவு தட்டப்பட்டது... இரவு மான்சி மாயா பற்றிய சிந்தனையில் வெகுநேரம் விழித்திருந்த சத்யனால் கண்களை திறக்கவே முடியவில்லை

மிகவும் சிரமத்துடன் கண்விழித்த சத்யன் எழுந்து போய் அறைக்கதவை திறந்தான்,... அவன் அம்மாதன் நின்றிருந்தாள்

“ என்னம்மா இப்பவே எழுப்பிட்டீங்க” என்று சத்யன் சலித்துக்கொள்ள

“ என்னடா இது நீ இப்படி சொல்ற,... உங்கப்பா என்னடான்னா உன்னை ஒருமணிக்கே எழுப்ப சொன்னார்,... சீக்கிரமா ரெடியாகு சத்யா ஐஞ்சு மணிக்கு முகூர்த்தம் நாம ஒரு நாலுமணிக்கு அங்க போனாத்தான் சரியா இருக்கும்,... உன் அப்பா முன்னாடியே கிளம்பி கோயிலுக்கு போய்ட்டார்,... நம்மளை வேன்ல வரச்சொன்னார்” என்று பிரேமா கூறி முடிக்க

“ சரிம்மா நான் ரெடியாகுறேன்” என்று கூறிவிட்டு திரும்பியவன் மறுபடியும் நின்று “ ஏம்மா அவங்க வீட்டுக்கு,... அதான்ம்மா மான்சி வீட்டுக்கு வண்டி அனுப்பிட்டீங்களா” என்று கேட்டான்

பிரேமா ஆச்சரியத்துடன் அவனை பார்த்தவாறு “ அவங்க அங்கே இருந்து வர நேரமாகும்னு அப்பா நைட்டே அனுப்பிட்டாரு சத்யா” என்றாள்


“ ஓ அப்படியா ,.... ஆனா அதுதான் சரி இல்லேன்னா அவங்க வர ரொம்ப லேட்டாயிடும்” என்ற சத்யன் பாத்ரூம் நோக்கி போனான்

பிரேமா அவனை பற்றிய குழப்பத்துடனே மாடியை விட்டு கீழே இறங்கினாள்,.... நேற்றுவரை திருமணத்தை பற்றி எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்தான் இப்போ பார்த்தா பொண்ணுவீட்டுக்கு வண்டி அனுப்பியாச்சான்னு கேட்க்கிறான்,... ம்ஹூம் இந்த காலத்து பசங்களை புரிஞ்சுக்கவே முடியலை,.. என்று எண்ணி உதட்டை பிதுக்கியவேறு தன் வேலைகளை கவணிக்க போனாள்

திருமணம் முடிந்ததும் காலை உணவு சத்யன் வீட்டில் ஏற்பாடு செய்திருந்ததால்,... வீடே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது,... சத்யனின் அக்கா நித்யா தேவியின் குடும்பமும்,.. சத்யனின் தங்கை வித்யா தேவியின் குடும்பம் வந்திருக்க,... வேறு சில நெருங்கிய சொந்தங்களும் வந்திருந்தார்கள்

அத்தனை பேரும் குளித்து ரெடியாகி சத்யனுக்காக மாடிப்படியை பார்த்துக்கொண்டு காத்திருக்க,... சத்யன் பட்டுவேட்டி பட்டுச்சட்டையில் ஒரு ராஜகுமாரன் போல் வந்தான்... தலையில் கீரீடமும் கையில் செங்கோலும் மட்டும்.தான் இல்லை

நித்யாவின் கணவன் விசுவநாதன் தன் மனைவியை இடுப்பில் சீண்டி “ ஏய் நித்தி உன் தம்பி ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவனோட முதல் கல்யாணத்துல பார்த்த மாதிரியே அப்படியே இருக்கான் எப்புடி நித்தி” என்றான்

தனது தம்பியின் கம்பீரத்தை ரசித்துக்கொண்டிருந்த நித்யா,.. கேள்வி கேட்ட தன் கணவனை திரும்பி பார்த்து முறைத்து “ ம் அளவோட சாப்பிடனும்,....கிடச்சுதேன்னு போட்டுக்கிட்டே இருந்தா இப்படித்தான் ஆகும்” என்று அவள் தன் கணவனின் தொப்பையை பார்த்து சொல்ல,... அவன் வாயை மூடிக்கொண்டான்

எல்லோரும் கிளம்பி கோயிலை வந்தடையந்தனர்,... சத்யனின் கண்கள் கோயிலை சுற்றி யாரையோ தேடியது,... அவன் தேடிய அந்த யாரோ அங்கே இல்லை என்றதும் ஏமாற்றத்துடன் அங்கு விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் உட்கார்ந்தான்,...

அவன் தங்கை வித்யா அவனருகே அமர்ந்து “ யாரண்ணா தேடுற,... மான்சியவா,.. அவளுக்கு உள்ளே புடவை கட்டிக்கிட்டு இருக்காங்க” என்று தகவல் சொல்ல

சத்யனின் மனம்,. நேற்று அவன் அம்மா அவனிடம் காண்பித்த மயில் கழுத்து நிற வைரஊசி பட்டில் மான்சியை கற்பனை செய்து பார்த்து சிலிர்த்தது,....

ம் அவளின் வெண்தாமரை நிறத்துக்கு இந்த மயில் வண்ணப் பட்டு ரொம்ப அழகாகத்தான் இருக்கும் என்று நினைத்தான்,... நேற்று அவளுடன் செல்லில் பேசியதில் இருந்து அவள் முகத்தை அருகிலிருந்து பார்க்க அவன் மனம் துடித்தாலும்,... அவளை எதிர்கொள்ளும் தைரியமும் சத்யனுக்கு இல்லை

செல்லில் பேசிய நினைவு வந்ததும் சத்யனுக்கு வேறொன்றும் நினைவுக்கு வந்தது,... ஆம் இன்னும் கொஞ்சநேரத்தில் மாயா போன் செய்வாள்,... சரியா ஆறுமணிக்கு அவள் போன் செய்துவிடுவாள்...

சத்யன் உடனே தன் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு தன் மொபைலை எடுத்து சுவிட்ச் ஆப் பண்ணி மறுபடியும் தன் பாக்கெட்டில் போட்டுகொண்டான்,.... மாயாவின் பேச்சைக்கேட்கும் நிலையில் சத்யன் இல்லை


“ அண்ணா அதோ மான்சி வந்தாச்சு பாருண்ணா” என வித்யா கிசுகிசுக்க

சத்யன் பட்டென திரும்பிப்பார்த்தான்,.... மான்சி அவன் இருந்த இடத்தை நோக்கி தலைகுனிந்து பதுமையாக வந்துகொண்டிருந்தாள்,.... அவளின் மென்நடை அந்த கோயிலின் சிற்ப்பமே எழுந்து நடந்து வந்தது போல இருந்தது
அவன் நினைத்தது போல் அவள் மயில் வண்ண பட்டில் வரவில்லை,... வெள்ளை ரவிக்கை அணிந்து சாதரண அரக்கு வண்ண நூல் சேலையில் வந்தாள்... சத்யன் ஏமாற்றத்துடன் தன் தங்கையிடம் திரும்பி

“ என்ன வித்தி இது இந்த சேலையை கட்டி விட்டுருக்காங்க,.... நேத்து காண்பிச்ச பட்டு சேலை எங்க” என்று சற்றே கோபம் கலந்த குரலில் கேட்க

“ என்னண்ணா புதுசா கேட்கிற,... நம்ம குடும்பத்தில் கூறைப் புடவை தானே கட்டி தாலி கட்டுவாங்க,... அதான் பழக்கம்,... என்ன உனக்கு மறந்து போச்சா” என்று சத்யனை பார்த்து கிண்டலாக கேட்க

சத்யனுக்கு அது அப்போதுதான் ஞாபகம் வந்தது,... வேறு எதுவும் பேசாமல் மான்சியையே பார்த்தான்,... அவன் மனம் குமைந்தது

இவளை எப்படி என்னால் இன்னொருவனுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியும்,... இவள் எனக்காகவே பிறந்தவள் அல்லவா ,... இவள் தானே என் வாழ்க்கையின் இறுதிவரையில் கூட இருக்கப்போகிறவள்,...

நான் இவளை எந்த சூழ்நிலையிலும் இழக்க மாட்டேன் என்று அவன் மனதுக்கு உறுதி சொன்னான்,.... ஆனால் மாயா,... அவளை என்ன செய்வது,.. அவளுக்கு என்ன பதில் சொல்வது

இப்படியெல்லாம் எதைஎதையோ நினைத்து அவன் குழப்பத்துடன் இருக்க,... வித்யாவின் கணவன் மகேஷ் அவனை எழுப்பி கைபிடித்து அழைத்து போய் முருகனின் சந்நிதானத்தில் நிறுத்தினான்

சத்யன் மெதுவாக தன்னருகில் நின்ற மான்சியை பார்த்தான்,... அதே சமயத்தில் அவளும் அவனை நிமிர்ந்து பார்க்க,...

அவன் தன்னை பார்த்ததும் மான்சி வெட்கத்துடன் பளிச்சென்று சிரித்து தலைகுனிந்து கொண்டாள்

அதுவரை எப்படி எப்படியோ மனதை திடப்படுத்தி சமாளித்து வந்த சத்யன்,.. அவளின் சிரிப்பை பார்த்ததும் லேசாக உடலும் மனமும் நடுங்க ஆரம்பித்தான்

மான்சியின் வெகுளித்தனமான அந்த சிரிப்பிலும்,... அவளின் குழந்தைத்தனமான பேச்சிலும்,... கண்களை குளிர்விக்கும் மென்மையான அழகிலும் மயங்கிய ,... அவனின் ஒருமனம் மான்சிதான் வேண்டும்,... இந்த உலகில் வேறு எதுவுமே வேண்டாம் என்றது,.... அதை எதிர்த்து எதுவந்தாலும் தகர்த்து விடு சத்யா,.. என்று உத்தரவிட்டது

அவனுடைய நேர்மையான இன்னொரு மனமோ ‘ வேண்டாம் சத்யா இது பாவம்,... ஒரு சிறு பெண்ணை ஏமாற்றாதே,... இன்னும் மாயாவுடனான உன் தொடர்பு முடிவுக்கு வராத நிலையில் இந்த பெண்ணை திருமணம் செய்வது சரியில்லை,... இப்போதே ஏதாவது சொல்லி விட்டு இங்கிருந்து இப்படியே ஓடிவிடு,... அதுதான் இந்த பெண்ணுக்கும் நல்லது உனக்கும் நல்லது,... என்று எச்சரிக்கை செய்தது

சத்யன் எந்த மனதின் பேச்சை கேட்பது என்று குழம்பினான்,... எந்தநாளும் அவன் மனம் விடைதெரியாமல் இப்படி தவித்ததில்லை,...

அவன் கழுத்தில் வித்யாவின் கணவன் ரோஜா மாலையை போட,... சத்யன் அதைக்கூட உணராமல் நின்றுகொண்டிருந்தான்

அப்போது மந்திரங்கள் சொல்லப்பட்டு அவன் முன்னால் வெள்ளித் தாம்பாளத்தில்,.. மஞ்சள் பூசப்பட்ட தேங்காய் மீது சுற்றப்பட்ட மஞ்சள் சரடுடன் கோர்க்க பட்ட தாலி நீட்டப்பட்டது

குனிந்து தாம்பாளத்தில் இருந்த தாலியை பார்த்த சத்யன்,... நிமிர்ந்த மான்சியை திரும்பி உற்று பார்த்தான்,...

மான்சி தலையில் மலர்களால் அலங்கரித்து,... தலை உச்சியில் கல் பதித்த மகாலட்சுமி ராக்கடியும்,... தலையின் வலதுபுறம் சூரிய பில்லையும் ,.. இடதுபுறம் சந்திர பில்லையும்,..... நெற்றியில் சிவப்பு கல்லில் செதுக்கிய மாவிலை நெற்றிச்சுட்டியுமாக ,... அவன் கட்டப்போகும் தாலிக்காக அவள் தலைகுனிந்து நிற்க,...

அடுத்த நிமிடம் சத்யன் தன் மனதில் இருந்த அத்தனை கசடுகளையும் உதறித்தள்ளினான்,... இனி எதுவந்தாலும் எதிர்ப்பது என்ற முடிவோடு,... ஐயர் சொன்ன மந்திரங்களை கவணமாக கேட்டு திருப்பி சொன்னான் ,...

சத்யன் அப்பா தயானந்தன் தாலியை எடுத்து அவன் கையில் கொடுக்க,...அங்கு கூடியிருந்த அத்தனை பேரும் அட்சதை தூவி வாழ்த்த,.. சத்யன் மான்சியின் வாழைக்குருத்து போன்ற வெண்சங்கு கழுத்தில் தாலி கட்டினான்




அடுத்து நடந்த எந்த சம்பிரதாயங்களும் சத்யனுக்கு நினைவில் இல்லை,... மான்சி மட்டுமே அவன் நினைவில் இருந்தாள்,...

இப்போது மான்சி அந்த மயில் வண்ண பட்டு சேலையை கட்டி இருந்தாள்,... ஏற்கனவே அவள் அழகில் பித்துபிடித்து போயிருந்த சத்யன்,... அந்த பட்டு சேலையில் வைரம் போல் பார்க்கும் எல்லா திசையிலும் ஜொலித்தவளை பார்த்து இன்னும் பித்தானான்

அத்தனை பேரும் வேனில் ஏறிக்கொள்ள,.. சத்யனும் மான்சியும் தனியாக காரில் வீட்டுக்கு கிளம்பினர்

மான்சி தன்னருகில் அமர்ந்திருந்த சத்யனையே அடிக்கடி திரும்பிப்பார்த்தாள்,.. பேன்ட் சர்ட்டை விட இவருக்கு இந்த பட்டுவேட்டி சட்டைதான் ரொம்ப அழகா இருக்கு என்று நினைத்தாள்

சத்யன் அவளை திரும்பி பார்த்து என்ன என்று கண்ணசைவில் கேட்க
மான்சி வெட்கமாக தலையசைத்து ஒன்றுமில்லை என்றாள்

சத்யன் அவள்புறம் மெதுவாக சரிந்து, தலையை அவள் முகத்தருகே சாய்த்து ,... “ ம் இப்போ சொல்லு மான்சி,.. எதுக்கு திரும்பி திரும்பி பார்த்த” என்று கேட்டான்

“ இல்ல இந்த டிரஸ் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு,... அதான் பார்த்தேன்” என்று தயங்கி தயங்கி பதில் சொல்ல

“ஓ’ என்று மட்டும் சொல்லிவிட்டு தன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான்

அதன்பிறகு மான்சி அவனை பார்க்கவில்லை,... அவளுக்கு தூக்கம் வந்தது,... இரண்டு நாட்களாக சரிவர தூங்காமல்,... நலங்கு அதுஇதுன்னு அவளை வசந்தி பாடாய் படுத்திவிட்டதால்,.. இப்போது காரின் ஏஸியின் மிதமான குளிரில் அவளுக்கு கண்கள் சொருகியது,... பின்புறமாக நன்றாக சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்

சிறிதுநேரத்தில் அவள் உறங்கிவிட,... சத்யன் அவளை திரும்பிப் பார்த்துவிட்டு,... “கொஞ்சம் மெதுவா போ ராமு” என்று டிரைவரிடம் கூறிவிட்டு,... பக்கவாட்டில் சரிந்த அவள் தலையை எடுத்து தன் தோளில் சாய்த்துக்கொண்டான்

அவள் மீது வந்த பூக்களின் நறுமணமும் லேசான வியர்வை வாசமும்,... சத்யனை ஏதோ செய்ய மனம் நிலையின்றி தவித்தது,.... ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு தெரியும் வரை இவள் அருகாமையை தவிர்ப்பதுதான் நல்லது என்று நினைத்தான்

கார் வீட்டை வந்தடைந்ததும்,... அவளை எழுப்புவதற்காக அவள் கன்னத்தில் தட்ட கையை கொண்டு போனவன்,... பிறகு தயங்கி அவளை தொடாமல் மான்சி என்று குரல் கொடுத்து எழுப்பினான்,

ஒரே குரலில் எழுந்தவள்,.. சிறிதுநேரம் எதுவும் புரியாமல் விழித்து,.. பிறகு சுதாரித்துக்கொண்டு “ ஸாரி தூங்கட்டேன்” என்று அவனை பார்த்து சங்கடமாக கூற

“ பரவாயில்லை வா வீட்டுக்குள் போகலாம்” என்று காரை விட்டு இறங்கினான்,... மறுபக்கம் டிரைவர் கதவை திறந்துவிட மான்சி இறங்கினாள்

சுமங்கலிப் பெண்கள் இருவருக்கும் ஆலம் சுற்றி வீட்டுக்குள் அழைக்க,... மான்சியும் சத்யனும் உள்ளே போனார்கள்

இருவரும் பூஜையறையில் விளக்கேற்றி வழிபட்டனர்,... பிறகு இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்,... அதுவரை சத்யன் மான்சியிடம் எதுவுமே பேசவில்லை

மான்சிக்கு குழப்பமாக இருந்தது,.... நேற்று போனில் கூட நன்றாகத்தானே பேசினார் அதற்க்குள் என்னாச்சு,... ஒருவேளை திருமணச் சடங்குகள் பழயை மனைவியை ஞாபகப்படுத்தி விட்டதோ,... ம்ம் அப்படித்தான் இருக்க வேண்டும்,... இனிமேல் நாம்தான் அவரை புரிந்து நடந்து கொள்ளவேண்டும் என்று மனதில் உறுதி செய்துகொண்டாள்

ஹாலுக்கு வந்த சத்யன்,... வித்யாவை கூப்பிட்டு “ வித்தி அவளை உன் ரூமுக்கு கூட்டிப்போய் தூங்கச் சொல்லு,... பாவம் கார்ல நல்லா தூங்கிகிட்டே வந்தா,.. நான்தான் வீடுவந்ததும் எழுப்பிட்டேன் ” என்று கூற

“சரிண்ணா” என்ற வித்யா மான்சியை அழைத்துக்கொண்டு தன் அறைக்கு போய்,... அவளை உடை மாற்றி தூங்க சொன்னாள்

மான்சியும் நன்றாகத் தூங்கி ஓய்வெடுக்க,... மதிய உணவுக்கு பின் தோட்டத்தின் அழகில் லயித்துப் போன மான்சி,... பொழுது சாயும்வரை அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தாள்

இரவு நெருங்கியதும் வித்யா வந்து அவளை அழைத்துப் போய்,... மறுபடியும் அவளை குளிக்கச் சொல்லி,... அழகான சந்தன நிறத்தில் மெல்லிய சரிகை பட்டு கட்டி அளவான அலங்காரத்துடன்,... கையில் வெள்ளி பால் சொம்புடன் சத்யனின் அறைக்குள் மான்சி அனுப்பப்பட்டாள்


வித்யா மான்சியை சத்யனி அறைக்குள் அனுப்பி கதைவைவிட்டு போக,... மான்சி உள்ளே போய் தலைகுனிந்து கதவில் சாய்ந்து நின்றாள்

கட்டிலில் அமர்ந்து தலையை தன் கைகளில் தாங்கி அமர்ந்திருந்த சத்யன்,... மான்சி வந்ததை உணர்ந்து தலையை நிமிர்த்தி அவளை பார்த்தான்

இப்போது சத்யனின் மனநிலையை என்ன வென்று சொல்வது,... ஏற்கனவே மான்சியை நினைத்து குழம்பியிருந்த மனது...

அவளை தனிமையில் அவ்வளவு அருகில் அழகான பதுமையாக பார்த்ததும்,.. ஏற்கனவே குழம்பிய மனதில் யாரோ காலைவிட்டு கலக்கியது போல் ஆனது

அவளை பார்த்துக்கொண்டே இருந்த சத்யனுக்கு கண்கள் மங்குவது போல் இருந்து,.. தலையை சிலுப்பி தன்னை சரிசெய்தான்,... மான்சி அங்கேயே வெகுநேரமாக நிற்பதை உணர்ந்து

“ உள்ள வா மான்சி” என்று சத்யன் இனிமையான குரலில் கூப்பிட்டதும்

அவன் இவ்வளவு அவளை அழைக்காததால் மான்சிக்கு எந்த குழப்பமும் இல்லை,... அவன் மனநிலையில் யார்தான் அப்படி நடந்து கொள்ள முடியும்,... ... இதே அறையில் இதே போன்ற இரவில் எத்தனைமுறை அவர் முதல் மனைவியை சந்தித்திருப்பார்... பாவம் அவ்வளவு சீக்கிரமா மறக்க முடியுமா,.. என்று சத்யனுக்கு மான்சியின் மனம் வக்காலத்து வாங்கியது

சத்யன் அழைத்ததும் தன் மென்நடையுடன் கட்டிலை நெருங்கிய மான்சி,.. அங்கிருந்த டேபிளில் பால் சொம்பை வைத்துவிட்டு,.. சிறிது தாமதிக்காமல் சத்யன் காலில் தட்டென விழுந்து வணங்கினாள்

அவள் விழுந்ததும் குதித்து ஒரு அடி பின்வாங்கிய சத்யன் “ என்ன மான்சி இதெல்லாம்,... தயவுசெய்து மொதல்ல எழுந்திரு எனக்கு இதெல்லாம் பிடிக்காது” என்ற சத்யன் குனிந்து அவளை தூக்க கையை கொண்டு போனவன் ஏதோதோன்ற கையை பட்டென இழுத்து கொண்டான்

மான்சி தானாகவே எழுந்து “ அத்தையும் வித்யா அண்ணியும் தான் ,.. போனவுடனே உங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கனும்னு சொன்னாங்க,....என்று வெகுளித்தனமாக கூறினாள்

“பரவாயில்லை மான்சி,.. அவங்க அப்படித்தான் சொல்வாங்க,.. ஆனா அதெல்லாம் வேண்டாம்” என்றான் சத்யன்

“அப்படின்னா நீங்க என்னை ஆசிர்வாதம் பண்ணமாட்டீங்களா” என மான்சி தலையை ஸ்டைலாக சாய்த்தபடி கேட்க

சத்யன் அவள் பேச்சிலும்,.. அவள் தலைசாய்த்த அழகிலும் லயித்துப் போய் “ம் நீ எப்பவுமே நல்லா இருப்ப மான்சி” என்றான்

“ ஆங் இப்படி சொல்லாதீங்க,... என் தலையில கை வச்சு ஆசிர்வாதம் பண்ணுங்க” என்ற மான்சி பட்டென அவன் வலது கையை எடுத்து தலையில் வைத்தாள்



அவன் கையை மான்சி தொட்டதும் சிலிர்த்து போன சத்யன்,... அவள் கூந்தலின் மென்மையை தலையை வருடியபடி “ நீ ரொம்ப நல்லாருப்ப மான்சி” என்றான்

“ நாம ரெண்டுபேரும்னு சேர்த்து சொல்லுங்க” என்றாள் மான்சி தன் வழக்கமான குழந்தைத்தனமான பிடிவாதத்துடன்

அவள் பிடிவாதம் சத்யனுக்கு சிரிப்பை வரவழைத்தது “ சரி நாம ரெண்டுபேரும் நூறு வயசுக்கு நல்லா இருப்போம் போதுமா” என்றான்

உடனே பளிச்சென்று சிரித்த மான்சி “ ம்ம் இது போதும்,... பால் குடிக்கிறீங்களா” என்று பால் சொம்பை எடுக்க

ம்ஹூம் இதுக்குமேலும் தாமதிப்பது ஆபத்து,.. எதுவாயிருந்தாலும் அவள் மனதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தவன்

“ பால் அப்புறமா குடிக்கிறேன் மான்சி மொதல்ல உன்கிட்ட கொஞ்சம் பேசனும் இங்கே வந்து உட்காரு மான்சி” என்றான்

சட்டென மான்சி அவனை திரும்பிப்பார்த்தாள்,.. இது அவள் எதிர்பாராததுதான்,... அவன் எதை பற்றி பேசப்போகிறான் என்று அவள் ஓரளவுக்கு யூகித்துதிருந்தாள்... அதனால் எதுவும் சொல்லாமல் கட்டிலில் ஒரு ஓரமாக அமர்ந்தாள்



No comments:

Post a Comment