Monday, April 27, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 10

சிவா - செல்வி

அடுத்த மாதம் ஒன்றாம் தேதியன்று மாலை ஆறு மணியளவில் ...

சிவா இரவு உணவுகளுக்கு தேவையானவற்றை தயார் செய்து கொண்டு இருந்தான். சமையல் அறைக் கதவைத் திறந்து யாரோ வெளியில் செல்ல, அந்த அறையை ஒட்டி இருந்த பில் போடும் இடத்தில் இருந்து செல்வியின் குரல் கேட்க சிவா வெளியில் வந்து பார்த்தான்.

காசிராமும் பகலில் பில்லிங்க் செய்யும் ஊழியரும் செல்வியிடம் பில் மற்றும் கே.ஓ.டி (K.O.T - Kitchen Order Ticket - வாடிக்கையாளருக்கு வேண்டிய உணவுகளை தயார் செய்வதற்கான ஆணை) ஆகியவற்றை எப்படி கம்ப்யூட்டரில் தட்டெழுதி ப்ரிண்ட் செய்வது என்பதை விளக்கிக் கொண்டு இருந்தனர்.

சிவா, "செல்வி! பார்ட் டைம் சேந்துட்டியா? என் கிட்ட சொல்லவே இல்லை?"

செல்வி, "உன் கிட்ட சொன்னா நீ வேணாம்ன்னு சொல்லுவேன்னு நான் சொல்லலை. சாரி, ஆனா ஆண்டிட்ட சொல்லிட்டுத்தான் சேர்ந்து இருக்கேன்"

சிவா ஒன்றும் பேசாமல் சமையல் அறைக்குள் சென்றான்.

சிறிது நேரத்துக்குப் பிறகு செல்வி அங்கு வந்து ...

செல்வி, "என்னா? கோவமா?"

சிவா, "அதெல்லாம் இல்லை வுடு"



செல்வி அவன் அருகே வந்து, "அப்படின்னு வாய்தான் சொல்லுது. உங்கிட்ட சொல்லாம செஞ்சதுக்கு கோவம்"

சிவா, "அதான் ஆண்டிட்ட அம்மாகிட்ட எல்லாம் சொல்லிட்டுத்தானே சேந்து இருக்கே. எங்கிட்ட சொல்லாகாட்டி இன்னா இப்போ?"

செல்வி மௌனமாக அவனைப் பார்த்தபடி சில நிமிடங்கள் நின்று இருந்தாள்.

பிறகு, "சரி, நான் இந்த வேலைல சேரலை. வீட்டுக்குப் போறேன்" என்று சொல்லி திரும்பினாள்.

சிவா, "ஏ ஏ நில்லு! இப்ப உனக்கு இன்னாத்துக்கு கோவம் வருது?"

செல்வி, "பின்னே? ஒருத்தி வந்து சாரின்னு சொன்னப்பறமும் இவுரு பிகு பண்ணினு நிப்பாரு"

சிவா, "அதுக்கு இல்லை செல்வி. காலேல இருந்து ஆஃபீஸ்ல வேலை செய்யறே. மறுபடியும் எதுக்குன்னுதான். அங்கேயாவுது வாரத்துக்கு அஞ்சு நாள்தான். இங்கே ஆறு நாள் இல்லையா?"

செல்வி, "ஆறு நாளா? நான் ஏழு நாளும்ன்னு இல்லே நினைச்சேன்"

சிவா, "அப்படியா சொன்னான்? இரு வா" என்று தான் செய்து கொண்டு இருந்த வேலையை விட்டு விட்டு காலையில் இருந்து பில்லிங்க் செய்து கொண்டு இருந்த பசவராஜ் என்ற ஊழியனிடம் செல்வியை அழைத்துச் சென்றான்

சிவா, "இன்னா பசவா. செல்வி வீக் ஃபூல்லும் செய்யணும்ன்னு சொன்னியா?"

பசவராஜ் ஆடு திருடிய கள்ளன் போல சிவாவைப் பார்த்து விழித்துக் கொண்டு நின்றான். சிவா காசிராமுக்கு சைகை காட்டி அங்கு வருமாறு அழைத்தான்

காசிராம், "என்ன சிவா?"

சிவா, "செல்வி வீக்லி எவ்ளோ நாள்சார் பில்லிங்க் செய்யணும்?"

காசிராம், "ஆறு நாள். ஏன்?"

சிவா, "அப்படின்னா நீங்க பசவராஜ்கிட்ட சொல்லுங்க. அவன் இவளை வாரம் முழுக்க வரணும்ன்னு சொல்லி இருக்கான்"

காசிராம், "டேய். அவன் சொன்னாலும் நான் அலவ் பண்ணுவனா? அதெல்லாம் நான் பாத்துக்கறேன்"

சிவா கிச்சனுக்குச் சென்றான்.

செல்வி, "அப்படின்னா சிவாவுக்கு வீக்லி ஆஃப் இருக்கறன்னைக்கே எனக்கும் கொடுங்க சார்"

காசிராம் வாய்விட்டு சிரித்த படி, "அப்படின்னா நீ வாரம் முழுக்க வேலை செய்யணும்"

செல்வி, "ஏன் சார்? சிவாவுக்கு வீக்லி ஆஃப் இல்லையா?"

காசிராம், "ரூல்ஸ் படி இருக்கும்மா. ஆனா அவனுக்கு வாரம் முழுக்க வேலை இருக்கும்"

செல்வி, "என்ன சார் இது? சிவா வாரம் முழுக்க வருணுமா? இது சரி இல்லை"

காசிராம் சிரித்தபடி, "இப்பத்தான் அவன் வந்து உனக்கு வீக்லி ஆஃப் வேணும்ன்னு சண்டை போட்டான். இப்போ நீ அவனுக்காக சண்டை போடறியா? சிவா வீக்லி ஆஃப் இருக்கறப்பவும் காலைலயும் மத்தியானமும் வந்து அன்னைக்கான மெனுவுக்கு வேண்டியது எல்லாம் ரெடி பண்ணிக் கொடுத்துட்டுப் போவான். ஆனா அதுக்கு ஓ.டியும் வாங்கிப்பான்"

செல்வி கிச்சனுக்கு வந்து சிவாவிடம், "என்னா சிவா? வேலையை கண்டின்யூ பண்ணுட்டுமா வேண்டாமா?"

சிவா, "ஒரு மாசம் செஞ்சு உன்னால சமாளிக்க முடியுதான்னு பாரு. அப்பறமா டிசைட் பண்ணு"

மலர்ந்த முகத்துடம் செல்வி, "ஏன் சிவா? சாயங்காலம் ஆறு மணில இருந்து பத்தரை மணிவரைக்கு எனக்கு வேலை இருந்துட்டே இருக்குமா?"

சிவா, "அவ்வளவு இருக்காது. சாயங்காலம் ஆறு மணிக்கு வந்ததும் காசிராம் உனக்கு கல்லா பெட்டி சாவி கொடுப்பார். எவ்வளவு பணம் இருக்குன்னு நீ செக் பண்ணிக்கணும். அப்பறம் எட்டு எட்டரை மணி வரைக்கும் உனக்கு அனேகமா வேலை ஒண்ணும் இருக்காது. எட்டரை மணியில் இருந்து பத்தரை மணி வேலை இருந்துட்டே இருக்கும்"

செல்வி, "சரி. நீ சொன்னா மாதிரி ஒரு மாசம் பாக்கறேன். அதுக்கு அப்பறம் முடியலைன்னா விட்டுடறேன். சரியா?"

சிவா, "ஓ.கே"

செல்வி, "ஆனா நீ ஏன் வீக்லி ஆஃப் எடுத்துக்காம இப்படி வேலை செய்யறே?"

சிவா, "வீட்ல உக்காந்துட்டு இருக்கறதுக்கு பதிலா இங்கே ஒரு நாலு மணி நேரம் வந்துட்டுப் போவேன் செல்வி. அதுவும் ஒரு காரணமாத்தான்"

செல்வி, "என்ன காரணம்?"

சிவா, "ஒரு நாள் சொல்றேன்"

செல்வி, "நி ரொம்ப விஷயம் சீக்ரட்டா வெச்சு இருக்கே"

சிவா, "சீக்ரெட் இல்லை செல்வி. க்யாரண்டியா முடிவாறதுக்கு முன்னாடி சொல்ல வேணாம்ன்னுதான்"

செல்வி, "சரி"

சில நாட்களுக்குப் பிறகு ...

அன்று உணவகத்தில் வழக்கத்துக்கும் மாறான கூட்டம். ஏழரை மணியளவில் செல்வி சமையல் அறைக்குள் சிவாவிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.

அயல்நாட்டவர் சிலர் அமர்ந்து இருந்த மேசையில் ஆர்டர் எடுத்துக் கொண்டு இருந்த எத்திராஜ் முகத்தில் குழப்பத்துடன் சமையல் அறைக்குள் வந்தான்,

எத்திராஜ், "சிவா, கொஞ்சம் ஹெல்ப் பண்றா. டேபிள் ஃபோரில் இருக்கற கெஸ்ட் எல்லாம் ஃபாரினர்ஸ். அவங்க சொல்றது எனக்கு ஒண்ணும் புரியமாட்டேங்குதுடா"

சிவா, "இன்னா ஐட்டம் ஆர்டர் செய்யறாங்க?"

எத்திராஜ், "இன்னும் அவங்க முழுசா டிஸைட் பண்லடா. யூரோப்பியன் ஐட்டம் பத்தி இன்னா இன்னாவோ கேக்கறாங்க. எனக்கு புரியலை"

சிவா, "சரி, வா" என்ற பிறகு அவனுடன் சென்றான்.

வெளியில் வந்த செல்வி அருகே இருந்த மேசையில் நடப்பவைகளை நோட்டம் விட்டபடி தன் இருக்கையில் அமர்ந்து இருந்தாள். அந்த நான்கு அயல்நாட்டவரிடமும் சிவா சகஜமாக ஆங்கிலத்தில் உரையாடி உணவு வகைகளைப் பற்றி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தான். பிறகு அவர்களுக்கு எவ்விதமாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டு சமையல் அறைக்குள் சென்றான்.

சாப்பிட்டு முடித்தபின் அந்த நால்வரும் சிவாவை அழைத்து அவனுக்கு நன்றி சொல்லி விடைபெற்றனர்.

ஒவ்வொரு நாளும் செல்விக்கு சிவாவின் ஒரு புதுப் பரிமாணம் தெரியவந்தது ...

~~~~~~~~~~~~~~~

அன்று சிவாவுக்கு வாராந்திர விடுமுறை. எப்போதும் புறப்படும் நேரத்துக்கு செல்வி அவன் வீட்டுக்கு வந்தாள்.

செல்வி, "உனக்கு இன்னைக்கு வீக்லி ஆஃப்தானே. நீ இன்னாத்துக்கு சிவா வர்றே. நான் ஒரு ஆட்டோ பிடிச்சுப் போய்க்கறேன்"

சிவா, "எனக்கும் வெளியில கொஞ்சம் வேலை இருக்கு செல்வி"

செல்வி, "அப்படின்னா. சாயங்காலம் நீ என்னை பிக் அப் பண்ண வராதே. நானே வந்துக்கறேன்"

சிவா, "ஏன்?"

செல்வி, "ஆஃபீஸ்ல இப்போ வேலை அதிகம் இல்லை. போரடிச்சுதுன்னா சீக்கரமா வந்துடலாம்ன்னு இருக்கேன்"

சிவா, "சரி, செல்லுல என்னை கூப்புடு. பக்கத்தில எங்கேயாவுது இருந்தேன்னா வந்து பிக்கப் பண்ணிக்கறேன். இல்லைன்னா நீயே வந்துடு"

செல்வி, "சரி"

மாலை மூன்றரை மணியளவில் செல்வியிடம் இருந்து சிவாவுக்கு அழைப்பு வந்தது.

அடுத்த அரை மணி நெரத்தில் 
அவளை அழைத்துச் செல்ல அவளது அலுவலக வாசலுக்கு வந்தான்.

அங்கிருது புறப்பட்டபின் ஸ்கூட்டரில் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த செல்வி, "ஏன் இந்த சைட்ல போறே சிவா?"

சிவா, "நீ சீக்கரமா வூட்டுக்கு போணுமா?"

செல்வி, "அப்படி எல்லாம் இல்லை"

சிவா, "சரி, நான் ஒரு இடத்துக்கு போவணும். அங்கே எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நீயும் கூட வரியா? உனக்கு என் சீக்ரட் இன்னான்னு காமிக்கறேன்"

செல்வி, "என்ன சீக்ரெட்?"

சிவா, "இன்னாத்துக்கு ஓ.டி பண்றே? இன்னாத்துக்கு இன்னும் சேரில இருக்கேன்னு எல்லாம் கேட்டுனு இருந்தே இல்லை?"

செல்வி, "ஓ! அந்த சீக்ரெட்டா. என்னாது அது?"

சிவா, "சொல்ல மாட்டேன். நீயே வந்து பாரு"

செல்வி, "சரி"

அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு புறநகர் பகுதில் சிவா ஸ்கூட்டரை நிறுத்தினான்.

செல்வி, "எதுக்கு இங்கே கூட்டியாந்து இருக்கே? எந்த ஏரியா இது?"

சிவா, "இது சர்ஜாபூர் ரோட். அதோ தெரியுது இல்லை உயரம் உயராமா பில்டிங்க்ஸ்? அதுதான் விப்ரோ ஹெட் ஆஃபீஸ்"

செல்வி, "ஓ! சரி என்னாது உன் சீக்ரெட்?"

சிவா, "நீ அதுலதான் நின்னுனு இருக்கே"

செல்வி, "என்ன சொல்றே?"

சிவா, "இந்த சைட்"

செல்வி, "சைட்டுன்னா?"

சிவா, "இந்த இடம்" என்று நிலத்தைச் சுட்டிக் காட்டினான்

செல்வி புரிந்தும் புரியாமல் அவனிடம், "இந்த சைட்டுக்கு இன்னா?"

சிவா, "இது என்னுது. பணம் சேத்து வாங்கினேன்"

செல்வி வாயடைத்துப் போனாள். 


சிவா தொடர்ந்து, "இன்னும் கொஞ்சம் பணம் சேத்துனு இருக்கேன். சேந்தப்பறம் இப்போ சேரில இருக்கறா மாதிரியே இந்த பக்கம் ஒரு சின்ன வீடு கட்டப் போறேன். அந்த பக்கம் ரோட் சைடில ஒரு ஷெட்டு மாதிரி போட்டு க்ரில்ஸ் அண்ட் அவன்ஸ் (Grills and Ovens) அப்படின்னு ஒரு சின்ன ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கப் போறேன். இந்த ஏரியால பாரு ஃபுல்லா அப்பார்ட்மெண்டா வந்துட்டு இருக்கு. எப்படியும் இன்னும் ஒரு வருஷத்தில் எல்லாம் ரெடியாயிடும். அங்கே மெயின் ரோட்ல கட்டிட்டு இருக்கற ஃபளை ஓவரும் ரெடியாயிடும். ரெஸ்டாரண்ட் நல்லா ஓடுங்கற நம்பிக்கை இருக்கு. ஒண்ணு ரெண்டு வருஷத்துக்கு அப்பறம் ஒரு லோன் எடுத்து பக்கா பில்டிங்க் கட்டப்போறேன்"

மலைத்துப் போய் கண்கள் பனிக்க சிவாவைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

சிவா, "இன்னா செல்வி?"

செல்வி, "எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை சிவா. யூ ஆர் க்ரேட்"

சிவா, "அதெல்லாம் ஒண்ணியும் இல்லை செல்வி. சேரியை விட்டு வெளில வந்து வாடகைக்கு வீடு எடுத்தாலும் நம்பளை யாரும் மதிக்கப் போறது இல்லை. சொந்தமா நம்ம இடத்தில் இருந்தா நமக்கு ஒரு மரியாதை இல்லையா?"

செல்வி, "ஆமா சிவா. இதை ஏன் நீ எங்கிட்ட இவ்வளவு நாள் சொல்லலை. சொல்லி இருந்தா .. " என்றபடி கண் கலங்கினாள்.

சிவா, "ஏய், நீ இன்னாத்துக்கு அழுவறே?"

செல்வி, "இல்லை சிவா. கவுரமா இருக்கறது அப்படின்னா என்னான்னு தெரியாம நான் என்னமோ நினைச்சுட்டு இருந்தேன்"

சிவா, "பரவால்லை வுடு"

செல்வி, "சரி, வேற என்னமோ வேலை இருக்குன்னு சொன்னே?"

சிவா, "ஆமா, போர் வெல் ஒன்ணு அந்த மூலைல போடணும். போர் வெல் போடறவங்களை வரச் சொல்லி இருக்கேன். அவங்களுக்கு இடத்தை காமிச்சுட்டு போலாம்"

செல்வி, "போர் வெல் எதுக்கு?"

சிவா, "இங்கே கார்பரேஷன் தண்ணி இன்னும் வரலை. எப்படியும் ரெஸ்டாரண்டுக்கு நிறைய தண்ணி வோணும். இந்த இடத்தில் போர் வெல் போட்டா நல்லா தண்ணி வரும்ன்னு சொன்னாங்க. அதான் இப்பவே ஒரு போர்வெல் போட்டுட்டா வூடு கட்டும் போதும் யூஸ் ஆவும்"

சற்று நேரத்தில் சிலர் அங்கு வந்தனர். சிவா அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தான். செல்வி அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தாள். சிவா சொன்னதில் சாத்தியக் கூறுகள் நூறு சதவிகிதம் என உணர்ந்தாள். சுற்றிலும் நான்கு பெரிய அப்பார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ்கள் உருவாகிக் கொண்டு இருந்தன. அந்த இடத்தில் சாலையும் சற்று விரிவாக இருந்தது. அக்கம் பக்கத்தில் கடைகள் எதுவும் இல்லாவிட்டாலும் கடை மற்றும் உணவகங்களுக்கு ஏற்ற புதிதாக பல சிறு கட்டிட வேலைகள் நடந்து கொண்டு இருந்தன.

சற்று நேரத்துக்குப் பிறகு சிவா, "ம்ம்ம் .. போலாமா? போற வழில எங்கேயாவுது ஒரு டீ அடிச்சுட்டு போலாம்"

செல்வி, "சரி ...ஆனா எனக்கு காஃபி"

சிவா, "ம்ம்ம் .. வா"



செல்லும் வழியில் ஒரு உணவகத்தில் இருவரும் அமர்ந்து இருந்த போது,

செல்வி, "ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கணும்ன்னா நிறைய பணம் செலவாகும் இல்லை சிவா?"

சிவா, "ரொம்ப எல்லாம் வேணாம் செல்வி. நான் இப்போ செஞ்சுட்டு இருக்கற அதே ஐட்டம்ஸ்தான் செய்யப் போறேன்"

செல்வி, "ஆனா அங்கே என்னென்னமோ மெஷின் எல்லாம் இருக்கு இல்லை? அது எல்லாம் வாங்கப் போறியா?"

சிவா, "கொஞ்சம் பெரிய அளவுக்கு ஆனா அதுக்கு அப்பறம் வாங்கப் போறேன். ஆரம்பிக்கறப்பா அதெல்லாம் வேணாம்"

செல்வி, "அது இல்லாம அப்பறம் எப்படி அந்த ஐட்டம் எல்லாம் செய்வே?"

சிவா, "சீப்பான லோக்கல் மேக் க்ரில் இருக்கு. ஸ்டெக்குக்கு அங்கே மாதிரி எலக்ட்ரிக் க்ரில் வாங்கப் போறது இல்லை. அடுப்புக் கரி போட்றா மாதிரி ஓபன் டைப் க்ரில் கிடைக்குது. நம்ம சிவாஜி நகர்ல ரஸல் மார்கெட் பக்கம் ஷீக் கபாப் பண்ணி வித்துனு இருப்பாங்களே பாத்து இருக்கியா?"

செல்வி, "ஆமா"

சிவா, "அந்த மாதிரி க்ரில்லியே நல்லா ஸ்டெக் பண்ணலாம். இன்னும் சொல்லப் போனா அதுல தான் ஸ்டெக் இன்னும் நல்லா ருசியா வரும்"

செல்வி, "சரி மத்த ஐட்டத்துக்கு"

சிவா, "மத்த ஐட்டத்துக்கு என்னா? ஒரு காஸ் சிலிண்டர்ல கனெக்ட் பண்ணினா மாதிரி வருசையா காஸ் நாலு பர்னர் அடுப்புங்க. சின்ன சைஸ் அவன் கிடைக்குது. அந்த மாதிரி ரெண்டு, ரெண்டு மிக்ஸி, வேணுங்கற கிச்சன் ஐட்டம் அப்பறம் கெஸ்டுங்களுக்கு சர்வ் பண்றதுக்கு டேபிள், சேர், டிஷ், ஸ்பூன், ஃபோர்க் இதெல்லாம்தான். மொதல்ல ஆரம்பிக்கும் போது சின்ன அளவில் ஆரம்பிக்கப் போறேன். நான் செய்யற ஐட்டத்துக்காகத்தான் கஸ்டமருங்க வருவாங்க. மத்த ரெஸ்டாரண்ட் மாதிரி பாக்கறதுக்கு நல்லா இருக்குதுன்னு வரப் போறது இல்லை"

செல்வி, "நிச்சயம் நல்லா வரும் சிவா. எத்தனை கெஸ்டுங்களுக்கு உன் பேர் தெரிஞ்சு இருக்குன்னு இப்பவே பாக்கறேனே"

சிவா, "எல்லார்ட இருந்தும் அவங்க விஸிட்டிங்க் கார்ட் வாங்கி வெச்சு இருக்கேன். இது வரைக்கும் ஐநூறு விஸிட்டிங்க் கார்ட்டுக்கு மேல இருக்கும். ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி எல்லாருக்கும் ஒரு இன்விடேஷன் மாதிரி அனுப்பப் போறேன்"

சிவா ஒவ்வொன்றையும் தெள்ளத் தெளிவாக திட்டமிட்டு இருந்தான். 


அன்று மாலை செல்வி வீட்டில் தனியாக இருந்தாள்

வெளியில் இருந்து வீடு திரும்பிய விஜயா, "என்னாடி இது? இன்னைக்கு உனக்கு லீவ் தானே? ஒரு வேலையும் செய்யாம இப்படி படுத்துனு இருக்கே?"

செல்வி, "சாரிம்மா. இப்பச் செய்யறேன்" என்றபடி கண்ணைத் துடைத்தவாறு எழுந்தாள்.

விஜயா, "ஏய், அழுதுனு இருந்தியா? என்னாடி ஆச்சு? எதுக்கு அழுதே?"

செல்வி, "ஒண்ணும் இல்லை விடு"

விஜயா, "இப்ப என்னான்னு சொல்றியா இல்லையா? யாராவுது எதானும் சொன்னாங்களா? என்னா ஆச்சு?"

செல்வி, "ஐய்யோ! ஒண்ணும் ஆவலை. என்னைப் பத்தி நினைச்சு அழுதுட்டு இருந்தேன்"

விஜயா, "ஏண்டி? உனக்கு ஒண்ணும் ஆவலைன்னு நீயே சொன்னே இல்லை? அப்பறம் எதுக்கு அழுவறே?"

செல்வி, "அதைப் பத்தி நினைச்சு அழுவலைம்மா"

விஜயா, "அப்பறம் என்னாடி?"

செல்வி, "கவுரவமா இருக்கணும் இந்த சேரியை விட்டு வெளியே போகணும்ன்னு இருந்தேன். அதுக்காக வெளிநாட்டில் எவங்கிட்டேயோ கை கட்டி வேலை செய்யறவனை கட்டிட்டு போகணும்ன்னு நினைச்சேன். அந்த மடத்தனத்தை நினைச்சு அழுதேன்"

விஜயா, "சரி வுடு இனிமேல் எப்படி இருக்கணும்ன்னு நல்லா முடிவு பண்ணிக்கோ. அதான் சிவாவுக்கு உன்னை கட்டிக் கொடுக்கலாம்ன்னு நான் கோட்டை கட்டினேன். நீ இன்னாடான்னா அவன் உனக்கு பொறுத்தம் இல்லைன்னு சொல்லிட்டே"

செல்வி, "அதையும் நினைச்சுத்தாம்மா அழுதுட்டு இருந்தேன். நான் அன்னைக்கு சிவாவைப் பத்தி சொன்னது எல்லாம் தப்பும்மா. எனக்குத்தான் சிவாவைப் பத்தி நல்லா தெரியலை. இப்போ நல்லா தெரிஞ்சட்டப்பறம் சொல்றேன். சிவாவுக்கு நான் கொஞ்சம் கூட லாயிக்கு இல்லைம்மா. என்னை விட அழகா, நல்லா படிச்ச அறிவா இருக்கற பொண்ணு வரணும்மா"

அப்போது கதவைத் திறந்து மரகதம் உள்ளே நுழைந்தாள்

விஜயா, "வா மரகதம்"

மரகதம், "நீ வர்றதைப் பாத்துட்டு சும்மா பேசினு இருக்கலாம்ன்னு வந்தேன். நீங்க ரெண்டு பேரும் பேசினு இருந்தீங்க. சரி திரும்பிப் போவலாம்ன்னப்ப சிவா பேர் காதில வுழுந்துது. நீங்க ரெண்டு பேரும் பேசினது ஒட்டுக் கேட்டேன். சாரி"

விஜயா, "பரவால்லை மரகதம்"

மரகதம், "செல்வி, அன்னைக்கு உங்கிட்ட ரொம்ப கோவமா இருந்தேனே ஏன் தெரியுமா?"

செல்வி, "தெரியலை ஆண்டி"

மரகதம், "மூணு வருஷமா சிவா உன்னை லவ் பண்ணினு இருந்தாண்டி. அப்பறமா திடீர்ன்னு நீ நல்லா படிச்சு வெளிநாட்டுக்கு போற பையனைத்தான் கட்டிக்குவேன்னு சொன்னப்பறம் கொஞ்ச நாள் மனசொடிஞ்சு போயிருந்தான். அதான் அந்த மாதிரி உனக்கு ஆனப்போ என்னால பொறுக்க முடியலை. உன் மேல ரொம்ப கோவமா இருந்தேன்"



செல்வி, "என்னா சொல்றீங்க ஆண்டி? சிவா என்னை லவ் பண்ணுச்சா?"

மரகதம், "ஆமாண்டி. நானும் உன் கிட்ட சொல்லுடான்னு சொல்லிட்டே இருந்தேன். அவன் சொல்றதுக்கு முன்னாடி நீ வெளிநாட்டுக்கு போகணும்ன்னு சொன்னே. அதுக்கு அப்பறம் அவன் எப்படி உங்கிட்ட சொல்லுவான்?"

செல்வி, "வேண்டாம் ஆண்டி. சிவாவுக்கு என்னைவிட நல்ல பொண்ணா பாத்து கட்டி வைங்க. நான் சிவாவுக்கு கொஞ்சம் கூட லாயிக்கு இல்லாதவ"

மரகதம் குரலை சற்று உயர்த்தி, "அங்கே இன்னாடான்ன அவன் உனக்கு லாயிக்கு இல்லாதவன்னு சொல்லினு இருக்கான். இங்கே நீ அவனுக்கு லாயிக்கு இல்லாதவன்னு சொல்லினு இருக்கே. இன்னா ரெண்டு பேரும் வெளையாடறீங்களா? இன்னைக்கு அவன் வீட்டுக்கு வந்ததும் இதுக்கு ஒரு முடிவு கட்டப் போறேன்"

செல்வி, "வேண்டாம் ஆண்டி. நானே சிவாட்ட பேசறேன்"

இத்தனையும் நடந்த பிறகு இன்னமும் சிவா தன்னை காதலிப்பான் என்ற நம்பிக்கை அவள் மனதில் இல்லை. 




No comments:

Post a Comment