Monday, April 6, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 16

இருவரும் சலசலவென்று பேசிக்கொண்டே வர,.. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்க்குள் சத்யனுக்கு விழி பிதுங்கியது,... ஆனால் அவர்களின் புத்திசாலித்தனம் அவனை வியக்க வைத்தது

இருவரும் மாற்றி மாற்றி அவன் தாடையை பிடித்து தங்கள் பக்கம் திருப்பி அவரவர் பேச்சை கேட்க்கும் படி சொல்ல, சத்யனுக்கு தாடையும் கழுத்தும் லேசாக வலிக்க ஆரம்பித்தது,.. ஆனால் சுகமான வலி

அவர்கள் இருவரும் மான்சியை அதிகமாக ஞாபகப்படுத்தினார்கள்,... அவள் கூட அப்படித்தான்,.. படுக்கையில் கூட ஆயிரம் கேள்வி கேட்ப்பாள், அவள் சந்தேகங்களை தீர்த்துவிட்டுதான் மற்றவைகளுக்கு அனுமதிப்பாள்

சத்யனுக்கு மான்சியை பற்றிய அந்த நினைவுகள் வந்ததும் அவனையும் அறியாமல் முகம் மலர்ந்தது,.. இப்போதும் அப்படி இருப்பாளா,.. இல்லை காலத்தின் ஓட்டத்தில் மாறியிருப்பாளா,...

எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னபிறகு,. தன்னை ஏற்ப்பாளா, அவளுடைய படுக்கையில் தனக்கு இடம் கிடைக்குமா, இன்னும் இரண்டுநாளில் எல்லாம் தெரிந்துவிடும் என நினைத்தான்

அதற்க்குள் ப்ரணேஷ் ஏதோ விடையே கண்டு பிடிக்கமுடியாத படி ஒரு கேள்வியை கேட்டு சத்யனின் சிந்ததனையை கலைத்தான்,.. சத்யன் ப்ரணேஷின் கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் விழிக்க ,.. பானு அவனை எட்டி பார்த்து சிரித்தபடி “ யப்பா சாமி நான் தப்பிச்சேன்” என்று சிரிக்க



சத்யன் பதிலுக்கு சிரித்து “ பரவாயில்லை அக்கா இந்த சந்தோஷம் எனக்கு கிடைக்கும்னு நான் கனவுல கூட நினைக்கலை,.. இதுக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம்” என்றான்

இதுக்கு மேல நீங்க எதையும் இலக்க வேண்டாம்,.. எல்லாமேதான் கிடைச்சுருச்சே இனி என்ன” என்ற பானு பிள்ளைகளிடம் “ ஏய் பசங்களா ரெண்டுபேரும் தூங்குங்க,.. அப்பா பாவம்ல அவரும் தூங்கட்டும்,.. மிச்சத்தை நாளைக்கு சிங்கப்பூர் வீட்ல பேசிக்கலாம் என்ன பசங்களா” என்று அதட்டியதும்
ப்ரணவ் சத்யனின் தாடையை பற்றி “ அப்பா உங்களுக்கு தூக்கம் வருதா, எங்களுக்கு தூக்கம் வரலைப்பா, உங்ககூட பேசிகிட்டே இருக்கனும் போல இருக்குப்பா” என்று கூற

சத்யன் அவனை அணைத்துக்கொண்டு “ எனக்கும் தூக்கம் வரலை நீங்க ரெண்டுபேரும் என்ன பேசனுமோ பேசுங்க நான் கேட்கிறேன்” என்று கூறினான்
பேசினார்களே தவிர ஆனால் அடுத்த சிலநிமிடங்களில் இருவரும் தூங்கிப் போனார்கள்,. சத்யனும் சிறிதுநேரத்தில் கண்ணயர்ந்தான்

அந்த நாலு மணிநேர விமானப்பயணம் முடிந்து சம்பிரதாயங்கள் முடிந்து சத்யன் அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தபோது, சத்யன் பிரேமாவை அழைத்துச்செல்ல பிரேமாவின் அண்ணன் மகளும் மருமகனும் வந்திருக்க,,.. பானுவையும் பிள்ளைகளையும் அழைத்துச்செல்ல மான்சி வீட்டு வேலைக்காரர் சர்தார்ஜி வந்திருந்தார்

சத்யன் தன் அம்மாவை மட்டும் அவர்களுடன் அனுப்பிவிட்டு இவன் பிள்ளைகளுடன் சர்தார்ஜி எடுத்து வந்திருந்த காரில் மான்சியின் வீட்டுக்கு கிளம்பினான்

சத்யனுக்கு மான்சியின் வீட்டுக்கு போகிறோம் என்ற நினைவே மனதை எங்கோ பறக்கவிட்டது,.. இன்னும் சிறிதுநேரத்தில் என் தேவதை வாழும் கோயிலுக்கு போகப்போகிறோம் என்ற நினைவே அவனை சிலிர்க்க வைத்தது 

சத்யன்,, பானு மற்றும் தன் பிள்ளைகளுடன் காரில் மான்சி தங்கியிருந்த வீட்டுக்கு போனான்,.. வீடு சிங்கப்பூர் சிராங்கூன் பகுதியில் நகரத்தை கடந்து ஒதுக்குப் புறமாய் சிறியதாகவும் அழகாகவும் இருந்தது

சர்தார்ஜிக்கு சத்யன் யாரென்று புரிந்துவிட்டது,.. மான்சி அந்த வீட்டின் ஹாலில் மாட்டியிருக்கும் சத்யன் மான்சி திருமணப்படத்தில் சத்யனை பார்த்திருக்கிறார் என்பதால் சத்யனை முகம் மலர வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றார்

சத்யன் தன் மகன்களை இரண்டு கைகளிலும் தூக்கிக்கொண்டு அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தவன் கண்களில் முதலில் தெரிந்தது அவனும் மான்சியும் அந்த கல்யாண போட்டோதான்

அந்த படத்தை பார்த்ததும் சத்யன் ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டான்,.. அவன் மனதில் கோடி குறிஞ்சிப் பூக்கள் ஒரே சமயத்தில் மலர்ந்தன,... அவனுக்கு மட்டுமே யாரோ மயிலிறகால் வென்சாமரம் வீசினார்கள்,.. மான்சி வந்து அவன் மார்பில் முத்தமிட்டது போல அவன் உடல் சிலிர்த்தது,... ‘என்மீது ஆசையும் காதலும் இல்லாமலா இவ்வளவு பெரிசா இந்த போட்டோவை இங்கே மான்சி மாட்டியிருப்பா, என்று சத்யன் மனதுக்குள் எண்ணினான்

அவன் அப்படியே நின்றுவிட்டதை பார்த்த பானு “ என்ன சத்யன் அந்த போட்டோவை பார்த்து அப்படியே நின்னுட்டீங்க ,.. அங்கே பெங்களூர் வீட்டில் கூட மான்சியும் நீங்களும் இருக்கும் போட்டோவை வீட்டுல எல்லா இடத்துலயும் மாட்டி வைச்சுருக்கா,.. அதுக்கு காரணம் அவ பிள்ளைங்க அவங்க அப்பா யாருன்னு தெரியாம இருக்க கூடாதுன்னு சொன்னா சத்யன்” என்று பானு கூறிய விளக்கத்தில் சத்யனின் முகம் பட்டென்று வாடியது

சற்றுமுன் பூத்த பூக்கள் எல்லாம் வாடியது,.. யாரோ பனி நீரை முகத்தில் வாறியடித்தது போல அவன் முகம் வாடியது ,.. ச்சே கொஞ்சநேரத்தில் என்னவெல்லாம் கற்பனை செய்துவிட்டேன்,... பிள்ளைகளுக்காகத்தான் இப்படியா, என்று நினைத்தபடி வீட்டுக்குள் போனான்

சர்தார்ஜி அனைவரையும் சோபாவில் உட்காரச்சொல்லி விட்டு உள்ளே போய் தன் மனைவியை அழைத்து வந்தார்,. தன் மனைவி ரத்னாவுக்கு அனைவரையும் அறிமுகம் செய்துவிட்டு, அவர்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வரலாம் என்று சர்தார்ஜி கூறி இருவரும் உள்ளே போய்விட்டனர் ,

சத்யனின் முகவாட்டத்தைக் கவனித்த பானு “ என்னாச்சு சத்யன் அந்த போட்டோவை பிள்ளைகளுக்காகத்தான் மான்சி மாட்டியிருக்கான்னு சொன்னதும் முகம் ஒரு மாதிரியா இருக்கு,.. ம் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா சத்யன்,. அவ சொன்னதை நானே நம்பலை தெரியுமா,. அவ தன்னோட மனசை மறைக்க பிள்ளைகளை பயன்படுத்திகிட்டான்னுதான் நான் நெனைக்கிறேன் சத்யன், அதான் நான் நம்பலை ”, என்று பானு சத்தமில்லாமல் குறும்புடன் கூறியதை கேட்டதும்

சத்யனுக்கு சிரிப்பு வந்துவிட்டது, சற்றுமுன் இருந்த மனதின் பாரம் லேசாக குறைந்தது போல் இருந்தது,. ‘ஆனால் எதுவுமே மான்சி வந்தால்தான் தெரியும் அதற்க்குள் சந்தோஷப்படாதே, என்று அவன்ட மனம் அவனை எச்சரிக்கை செய்தது

சத்யன் சட்டென நினைவு வந்தவனாய் பானுவை பார்த்து “ அக்கா நான் சிங்கப்பூர் வந்திருக்கும் விஷயம் மான்சிக்கு இப்போ தெரியவேண்டாம்,. அவ இங்க வந்ததும் எதுவும் பார்த்துக்கலாம்,.. பசங்ககிட்டயும் சொல்லிடுங்க அப்புறம் போன்ல பேசும் போது நான் இங்க வந்திருக்கறதை சொல்லிட போறாங்க,” என்று சத்யன் கூறியதும்

அதை ஆமோதிப்பது போல தலையசைத்த பானு “ நானும் அதைத்தான் நினைச்சேன் சத்யன், பசங்க கிட்ட அப்பா இங்க இருக்கறது சஸ்பென்ஸா இருக்கட்டும் அம்மா வந்தா ஒரு ஸாக் குடுக்கலாம்னு சொன்னா,.. சரின்னு சொல்லிடுவாங்க, நீங்க கவலைபடாதீங்க” என்று பானு கூறினாள்

அதற்க்குள் ப்ரணவும் ப்ரணேஷும் வீட்டை ஒரு சுற்றுச்சுற்றி விட்டு சத்யன்
மடியில் ஆளுக்கொரு பக்கமாக ஏறியமர்ந்து கொண்டனர்,,.. “அப்பா வீடு சூப்பரா இருக்குப்பா,. ஆனா ரொம்ப குட்டியா இருக்குப்பா,” என்று ப்ரணேஷ்

“ சரி எல்லாரும் குளிச்சு பிரஷ் பண்ணணும், அப்புறம் டிபன் சாப்பிட்டுட்டு கொஞ்சநேரம் நல்லா தூங்குங்க, மதியம் சாப்பாட்டுக்கு அப்புறமா எங்கயாவது வெளியே போகலாம் சரியா’’ என்று பானு கூற

“ யப்பா இங்க வந்தும் ஆரம்பிச்சுட்டாங்கடா பிரவ்வு,.. பல் தேயி, காபி குடி, டிபன் சாப்பிடு, டைமோட தூங்கு,.. ஸ் அய்யோ சாமி காப்பாத்து , என்று பானுவை போலவே பேசி நக்கல் செய்த ப்ரணேஷ் “ ம்ம் ஒன்ன மறந்துட்டேன் அப்புறம் நல்லா படிங்கடா நல்லா படிங்கடான்னு தலையில அடிச்சுக்குவீங்களே அதை மறந்துட்டேன் பானும்மா...

" அப்பா அப்பா நல்லவேளையா இவங்க காலேஜ்ல வேலை செய்றாங்க,. இவங்க மட்டும் எங்க ஸ்கூல்ல வேலைக்கு வந்தாங்க, நாங்க யாரும் ஸ்கூல் பக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டோம்,. ஆனா பானும்மோட காலேஜ்ல படிக்கிற அக்கா அண்ணாவெல்லாம் ரொம்ப பாவம் இல்லப்பா ” என்று ப்ரணேஷ் கையை ஆட்டியபடியே கண்களை விரித்து எல்லாவற்றையும் ஞாபகமாய் கூறி பானுவை நக்கல் செய்ய

சத்யனுக்கு மகனின் தோரணையான பேச்சு பலத்த சிரிப்பை வரவழைக்க,. ஏழு வருடம் கழித்து வயிறு குலுங்க, வாய்விட்டு, கண்கள் கலங்கி, கண்ணீர் வரும்வரை சிரித்தான்,. சிரித்து சிரித்து அவனின் சிவந்த அழகு முகம் மேலும் செந்நிறமாகும் வரை சிரித்தான்,.. வெகுநேரம் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தான்

பானுவுக்கு சத்யனை பார்த்து சிரிப்பு வரவில்லை,. கண்ணீர்தான் வந்தது,.. மகன் சொன்ன இந்த சிறு நகைச்சுவை பேச்சுக்கே இப்படி சிரிக்கிறானே, இவன் வாழ்க்கையில் இப்பொழுதான் சிரிக்கிறானா,.. அல்லது இத்தனை நாட்களாக மறந்திருந்த சிரிப்பு இப்போது மறுபடியும் ஞாபகம் வந்ததால் இப்படி சிரிக்கிறானா, பானுவின் மனம் சத்யனின் இந்த சிரிப்பால் கண்ணீர் விட்டது

சிறிதுநேரம் கழித்து தானாகவே சிரிப்பை அடக்கிய சத்யன்,. எழுந்து நின்று ப்ரணேஷை தன்னுடைய தலைக்கு மேலே தூக்கி தட்டாமாலை சுற்ற, ப்ரணவும் அவன் கையை பிடித்து இழுத்து “ அப்பா நானு” என்றான்

சத்யன் ப்ரணேஷை இறக்கிவிட்டு, ப்ரணவை தூக்கி அதேபோல சுற்றி இறக்கினான்,. தன் கண்களை துடைத்துக்கொண்ட பானு சர்தார்ஜியிடம் பாத்ரூம்ங்கள் எங்கே இருக்கிறது என்று கேட்டாள்,.. சர்தார்ஜி அந்த வீட்டை பானுவுக்கு சுற்றி காண்பித்தார்

அந்த வீட்டில் ஒரு படுக்கையறையும்,. ஒரு கிச்சனும் அதை ஒட்டி அழகிய டைனிங் ஹால் ஒன்றும் இருந்தது,. பின்புறமாக ஒரு ஸ்டோர் ரூமும் அதை ஒட்டி ஒரு அறையும் இருக்க அதில்தான் சர்தார்ஜியும் அவர் மனைவியும் தங்கிக்கொள்வதாக சர்தார்ஜி கூறினார்

பானு மான்சியின் அந்த ஒற்றை படுக்கையறையை திறந்து உள்ளே போனாள்,. அந்த அறை ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் படுக்கையறையை சுருக்கியது போல மிக நேர்த்தியாக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது, அறையின் மையத்தில் ஒரு வென்நிற இரட்டைக் கட்டில் அழகான படுக்கை விரிப்புடன் இருந்தது, அறையின் ஓரமாக ஒரு டிரசிங் டேபிள், கம்பியூட்டருடன் கூடிய ஒரு டேபிள்,. சுவற்றில் மாட்டப்பட்டிருந்த எல்இடி டிவி, ஜன்னல்களில் அழகான வெள்ளை நிற திரைச்சீலை,என்று மிக நேர்த்தியாக இருந்தது அந்த அறை

பானு பாத்ரூம் கதவை திறந்து பார்த்தாள், பாத்டப் வசதியோடு ரொம்ப நேர்த்தியாக இருந்தது,... பானுவுக்கு இப்போது பெரும் குழப்பமாக இருந்தது, சத்யனை எங்கே தங்க சொல்வது என்றுதான் குழப்பம்

மான்சியின் அறையில் சத்யன் தங்குவது என்றால், மான்சியின் அனுமதியில்லாமல் முடியாது,.. ஆனால் இந்த வீட்டில் இந்த ஒரு அறையை தவிர வேற அறை கிடையாது, என்ன செய்யலாம், இவ்வளவு பெரிய பணக்காரனை ஹாலில் தங்க சொல்லமுடியுமா,. என்று பலவாறாக குழம்பியபடி அறையில் இருந்து வெளியே வந்ததாள்,

அங்கே சத்யன் தனது பெட்டியை எடுத்து டீப்பாயின் மேலே வைத்து தன் உடைகளை எடுத்து கொண்டிருந்தான், பானுவை பார்த்ததும்,.. அக்கா வீட்டுக்கு பின்னாடி ஒரு பாத்ரூம் இருக்காம் நான் அங்க குளிச்சுட்டு ஹால்லயே தங்கிக்கிறேன்,. நீங்க பசங்க எல்லாம் அந்த பெட்ரூமில் தங்கி குளிச்சுக்கங்க” என்று பானுவின் புதிய பிரச்சனைக்கு சத்யன் வழிகூற

அவனுடைய புரிதல் குணமும்,.. தன் மனைவியின் அறையாக இருந்தாலும் அவள் அனுமதியின்றி நூழைய கூடாது என்ற நேர்மையையும் நினைத்து பானுவுக்கு கண்கள் பனித்தது

அதன்பிறகு எல்லாரும் குளித்து டிபன் சாப்பிட்டுவிட்டு சிறிதுநேர அரட்டைக்கு பிறகு தூக்கம் கண்களை சுழட்ட, பானு பிள்ளைகளை தூங்குவதற்காக அழைக்க, அவர்கள் இருவரும் அப்பாவுடன் படுக்க போவதாக கூறியதும் பானு மட்டும் மான்சியின் படுக்கையறைக்கு போய் படுத்துக்கொண்டாள்

சர்தார்ஜி சத்யனுக்கு ஹாலில் ஒரு ஓரமாக பெட்சீட்டை விரித்து. தலையனையை போட, சத்யன் தன் பிள்ளைகளுடன் படுத்துக்கொண்டான், அவனுக்கு இருபுறமும் படுத்திருந்த அவனது வால்கள் மறுபடியும் தங்கள் பூர்வீக கதையை ஆரம்பித்தனர்

முதலில் ப்ரணேஷ்தான் ஆரம்பித்தான், ""அப்பா இவன் சின்னபையனா இருக்கப்போ, ஸ்கூல்ல தமிழ் மிஸ் “அதோ பாரு காரு,,, காருக்குள்ளே யாரு,, நம்ம மாமா நேரு,,மாமா ரோஜாப்பூ குடுத்தார்னு ஒரு பாட்டு சொல்லி குடுத்தாங்கப்பா,, அதுக்கு இவன் “அதோ பாரு காரு காருக்குள்ளே எங்க பானும்மா எனக்கு சாக்லேட் குடுத்தாங்கனு,, பாடுனான்ப்பா, எல்லாரும் கிளாஸ் ரூம்ல சிரிச்சுட்டாங்க, ஆனா நான் கரெக்டா பாடினேன்ப்பா” என்று இவன் ப்ரணவ்வை விட பத்துவயது மூத்தவன் போல பேசினான்

உடனே ப்ரணவ் கடும் கோபத்துடன் எழுந்து “ அப்பா அது சின்ன பையனா இருக்கப்ப நடந்தது, இவன் எப்போ பாரு இதையே சொல்லி என்னை கிண்டல் பண்ணுறான்ப்பா, நீங்களே சொல்லுங்க அப்போ பானும்மாதான் காரிலே எங்களை கொண்டுபோய் ஸ்கூல்லே விடுவாங்க, அதனால நான் அப்புடி சொன்னேன். ஆனா இவன் என்னை கிண்டல் பண்ணிகிட்டே இருக்கான், இப்போ நீங்க அவனை அடிக்கிறீங்களா, இல்லை நான் அவனை அடிக்கட்டுமா” என்று ப்ரணவ் ஆவேசமாக பேச சத்யனுக்கு அவனை சமாதானப் படுத்துவதற்க்குள் மண்டை காய்ந்துவிட்டது

மன்னிப்பாக ப்ரணவ் கேட்ட ஸாரியை ப்ரணேஷ் சொல்ல மறுத்துவிட,. அவனுக்கு பதிலாக சத்யன்தான் பத்துமுறை ப்ரணவிடம் ஸாரி கேட்டான்

இருவரும் கதைபேசியபடி சத்யன் மார்பிலேயே தூங்கிப்போனார்கள்,.. சத்யன் தன் மேல் பாதி உடலை கிடத்தி அணைத்துக்கொண்டு தூங்கும் பிள்ளைகளின் தலையை வருடியபடியே அவனும் தூங்கிவிட்டான்

அதன்பின் அனைவரும் மதியம் இரண்டு மணிவாக்கில் வீட்டை விட்டு கிளம்பினார்கள்,.. சத்யனுக்கு சிங்கப்பூரில் அதிகமாக வந்து பழக்கம் இருந்ததால் அவனே காரை ஓட்டிக்கொண்டு கிளம்பினான்



முதலில் சவுத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள பழமையான மாரியம்மன் கோயிலுக்கு அழைத்துப் போனவன், தன் பிள்ளைகளுடன் மனமுருக அம்மனை பிராத்தனை செய்தான், பானுவும் மான்சிக்காகவும் சத்யனுக்காகவும் அந்த திவ்யசொரூபினியை மனமுருகி வேண்டினாள்

பின்னர் சிராங்கூன் மெயின் பகுதியில் இருந்த முத்தூஸ் கறி ஓட்டலில் தன் பிள்ளைகள் விரும்பிய அசைவ உணவை ஆர்டர் செய்து அவர்களுடன் அரட்டையடித்துக் கொண்டே சாப்பிட்டான்

அப்போது அவன் அம்மாவிடம் இருந்து போன் வர,.. தான் இன்னும் இரண்டு நாள் கழித்து மாமா வீட்டுக்கு வருவதாக கூறிவிட்டு,.. இப்போதைக்கு வேறு எதுவும் மாமா வீட்டாரிடம் சொல்லவேண்டாம் என்று தன் அம்மாவிடம் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தான்

பிறகு அங்கிருந்து சிட்டி ஹால் பகுதிக்கு வந்த அங்கிருக்கும் கடைகளில் ஒன்றுவிடாமல் ஏறி இறங்கி பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கி குவித்தான்,.. பானு தடுத்தும் கேட்கவில்லை

அவர்கள் வீட்டுக்கு வரும்போது இரவு வெகுநேரம் ஆகிவிட்டது, காரிலேயே பிள்ளைகள் தூங்கிவிட சத்யன் ப்ரணவ்வை தூக்கி வந்து மான்சியின் படுக்கையறை கதவை திறந்து உள்ளே போய் கட்டிலில் படுக்கவைத்து விட்டு அந்த அறைவை சுற்றிலும் பார்த்தான்

அந்த அறையின் நேர்த்தி அவன் மனதில் பதிவதைவிட, அந்த அறையில் மான்சி தனிமை தவம் இருப்பது போல் அவன் மனதில் பட்டது, கட்டிலை பார்த்தவன், இதில் எனக்கு நிச்சயமாய் அனுமதி கிடைக்காது என்று அவனுக்கு புரிய வெகுநேரம் ஆகவில்லை,

ஒரு ஏக்கப்பெருமூச்சுடன் அறையை விட்டு வெளியே வந்து ப்ரணேஷையும் தூக்கி வந்து கட்டிலில் படுக்கவைத்துவிட்டு வெளியே போய் உடை மாற்றிக்கொண்டு, சர்தார்ஜி விரித்த படுக்கையில் படுத்தவன் ஊர் சுற்றிய அலுப்பில் உடனே உறங்கிப்போனான்

நடு இரவில் யாரோ தன்னை உரசுவது போல் இருக்க சத்யன் சட்டென கண்விழித்து பார்த்தான்,. ப்ரணவ்தான் சத்யனை அணைத்துக்கொண்டு படுத்திருந்தான்,. இவன் எப்போது வந்து படுத்தான் என்று சத்யன் யோசிக்கும் போதே ப்ரணேஷ் வந்து சத்யனின் மறுபக்கத்தில் படுத்துக்கொண்டு அவன் கையை எடுத்து சத்யன் கழுத்தை கட்டிக்கொண்டான்

சத்யனுக்கு உடல் சிலிர்த்தது, ....’ பூகம்பத்துக்கு பிறகு கூட பூமியில் பூக்கள் மலருமா இதோ என் வாழ்வில் மலர்ந்திருக்கிறதே,.... இவர்களை பார்த்து இன்னும் இரண்டு நாள் கூட ஆகவில்லை, ஆனால் அதற்க்குள் அவர்கள் தன்மீது வைத்துள்ள பாசம் சத்யனை வியப்படைய வைத்தது,.. இதுதான் தகப்பன் மகன் பாசமா, எல்லோருக்கும் இது கிடைக்குமா இல்லை எனக்கு மட்டும்தான் இந்த பாசம் கிடைத்துள்ளதா... ஆமாம் என் ஏழுவருட காத்திருப்புக்கு கடவுள் கொடுத்த அற்புதங்கள் என் பிள்ளைகள், என்று நினைத்தான்

சத்யனுக்கு அதன்பின் மறுபடியும் தூக்கம் வர வெகுநேரம் ஆனது,.. காலையில் அவன் கண்விழித்ததும், எழுந்து அமர்ந்து கண்களை கசக்கிக்கொண்டு சுற்றிலும் பார்த்தான்,.. விடிந்து வெகுநேரம் ஆகிவிட்டது புரிய பரபரப்புடன் எழுந்தான்

அவன் எழுந்திருக்கவே காத்திருந்தது போல பிள்ளைகள் இருவரும் அவன் தோளை கட்டிக்கொண்டு அவன்மீது ஏறி இரண்டு கன்னத்திலும் மாறிமாறி முத்தமிட, அந்த அதிகாலையில் கிடைத்த அந்த அன்பு பரிசால் சத்யன் சற்று திணறித்தான் போனான்

மறுபடியும் அன்று மாலை உணவுக்கு பின்,. அனைவரையும் அழைத்துக்கொண்டு கிளம்பிய சத்யன்,.. சிங்கப்பூரின் அற்ப்புதமான செந்தோசாத் தீவுக்கு போனான்

அங்கே பிள்ளைகளுக்கு அன்டர் வாட்டர் வேல்ட், மியூசிக்கல் பவுண்டன், டால்பின் லாகூன், கேபிள் கார்,.. என்று சகலத்தையும் சுற்றி காண்பித்தான்

டால்பின் லாகூனில் கைத்தட்டி ஆர்பரித்து ப்ரணவும் ப்ரணேஷும் போட்ட ஆட்டத்திற்கு அளவேயில்லை,. சத்யன் தன் மகன்களின் செயல்கள் ஒவ்வொன்றையும் ரசித்து தனது ஹாண்டி கேம்மில் பதிவு செய்தான்,.


கேபிள் காரில் ஏற ப்ரணவ் பயப்பட ப்ரணேஷ் அனாயாசமாக ஏறி பயணம் செய்தான், சத்யனுக்கு ப்ரணவ் அவன் அப்பா தயானந்தனையும், ப்ரணேஷ் அவன் தங்கி வித்யாவையும் ஞாபகப்படுத்தினர்

அவனுக்கு ஏதோ மறுபிறவி எடுத்து தன் பிள்ளைகளுடன் புது உலகில் இருப்பது போல் இருந்தது,. சத்யனுக்கு இப்போது என்ன வேண்டும் என்று கடவுள் வந்து கேட்டால்,. இந்த சந்தோஷத்துடன் சுகமான மரணம் வேண்டும் என்றுதான் கேட்ப்பான்,. அந்தளவுக்கு அவன் மனம் நிறைவாக இருந்தது

அன்றும் வீட்டுக்கு வர நடுநிசி ஆனாது, இன்று சத்யன் பிள்ளைகளை ஹாலில் தன்னுடனே படுக்கவைத்துக் கொண்டான், ஆனால் சத்யனுக்கு அலுப்பில் நோற்று போல் இன்று தூக்கம் வரவில்லை

அவன் மனதில் இணம் புரியாத ஒரு கலவரம் நடந்துகொண்டு இருந்தது,.. கலவரத்துக்கு காரணம் மான்சி நாளை வரப்போகிறாள் என்பதுதான்,.. அவளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற நினைவே சத்யனை வாட்டிவதைத்தது, அவள் முகத்தை தன்னால் நேரடியாக பார்த்து தன்நிலை பற்றி கூறமுடியுமா என்று எண்ணி மனம் குமைந்தான்

ஆனால் அவன் மனம் தீவிரமாக யோசித்தது, ‘அவனே அவன் வழக்குக்கு வாதி, பிரதிவாதியாக மாறினான், ஏன் அவளை பார்த்து பேசமுடியாது,
‘அவளை பார்த்த மறு நொடியில் இருந்து அவளை மட்டுமே நேசித்தேன் என்று எடுத்து சொல்லுவேன்,
‘ முதன்முதலாக அவளின் தேன் குரலை போனில் கேட்டபிறகு வேறு எந்த பெண்ணின் குரலையும் நான் ரசிக்கவில்லை என்று அவளுக்கு உணர்த்துவேன்,
‘அவள் என் வாழ்க்கையில் வந்த பின் வேறு எந்த பெண்ணையும் என் கண்கள் நோக்கவில்லை என்று அவளுக்கு புரியவைப்பேன்,..
‘அவளை தொடுவதற்க்கு முன்பே இருபது நாள் நான் விரதம் காத்ததை எடுத்து கூறுவேன்,....
‘இந்த ஏழு வருடங்களாக அவளுக்காகவே காத்திருந்து ஒவ்வொரு நாளும் நான் வெந்து தனிந்ததை அவளுக்கு உணர்த்துவேன்,


இப்படியெல்லாம் தன் மனதோடு வாதிட்ட சத்யன் எப்போது தூங்கினானோ தெரியவில்லை,. காலையில் ப்ரணவ்தான் அவனை உலுக்கி எழுப்பினான்,..
வாரி சுருட்டிக்கொண்டு எழுந்த சத்யனுக்கு அன்றைய தினத்தின் முக்கியத்துவம் புரிய, தன் தேவதையை பார்க்க மெல்லிய பதட்டத்துடன் தயாரானான்,..ரொம்ப மவுனமாக இருந்தான் சத்யன்,.. தன் மகன்கள் கேட்ட நாலு கேள்விக்கு ஒரு கேள்விக்கு பதில் சொன்னான்,.. காலை உணவு வாயைவிட்டு வயிற்றுக்கு இறங்கவில்லை..

அவன் வாழ்க்கையில் இவ்வளவு பதட்டமாக இருந்தது இதுதான் முதல்முறை,.. மான்சி அவனைவிட்டு பிரிந்து போனபோது கூட எல்லாம் போய்விட்டது போல் மனதில் அளவுகடந்த துக்கம்தான் இருந்ததே தவிர பதட்டம் இல்லை

அவனின் மவுனம் பானுவுக்கு சங்கடமாக இருந்தது, ஆனால் அவளுக்கும் கூட உள்ளுக்குள் உதறலெடுக்கத்தான் செய்தது,.. என்ன ஒரு ஆறுதல் என்றால் சத்யன் மீது அவன் பிள்ளைகள் வைத்திருக்கும் பாசம்தான் பானுவுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது,.. அந்த பாசத்தை வைத்து மான்சி எப்படி மடக்கலாம் என்று மனதில் பலமாக திட்டம் தீட்டினாள் பானு,... ஆனால் ஏர்போர்ட்க்கு தான் வரவில்லை என்று சொல்லிவிட்டாள்

சத்யன் பிள்ளைகள் சர்தார்ஜி என அனைவரும் மான்சியின் காரில் ஏர்போர்ட் நோக்கி போனார்கள், சத்யன் சர்தார்ஜியை காரை ஓட்டச்சொல்லி விட்டு பின் இருக்கையில் தன் பிள்ளைகளை அணைத்தவாறு உட்கார்ந்திருந்தான்

தன்னை பார்த்ததும் மான்சி ச்சீ யார் நீ என்று ஏசுவாளோ, அல்லது எந்த மூஞ்சிய வச்சுகிட்டு இங்கே வந்தே என்று முகம் திருப்புவாளோ,.. அல்லது எதுவும் பேசாமல் என்னை அருவருப்பாக பார்த்து முகம் சுழிப்பாளோ,..

இப்படி எத்தனையோ கேள்விகள் ஆனால் எல்லாவற்றுக்கும் இன்னும் சிலமணி நேரத்தில் விடை கிடைத்துவிடும்,.... இரவு மனதில் எடுத்த உறுதிகளை மறுபடியும் மனதில் ஒருமுறை ஓட்டி பார்த்து புதுப்பித்துக் கொண்டான் சத்யன்
ஏர்போர்ட் வந்தது சத்யன் தன் மகன்களை இரண்டு பக்கமும் தூக்கிக்கொண்டு இறங்கி உள்ளே போனான்,... பிள்ளைகளுக்கு குழப்பம் ஏன் அப்பா திடீரென மவுனமாகிவிட்டார் என்று,..



சத்யனின் இந்த மவுனத்தால் பிள்ளைகள் தங்கள் அம்மாவை வெகுநாட்கள் கழித்து பார்க்கும் சந்தோஷமும் தடை பட்டது,. அவர்களும் தங்களின் வழக்கமான குறும்பை குறைத்துக்கொண்டு அமைதியாக இருந்தனர்

சிறிதுநேரத்தில் பாங்காக் விமானம் வந்துவிட்டதாக அறிவிப்பு வர, சத்யனின் முதுகு தண்டு சட்டென விரைத்து நிமிர்ந்தது,.. தன் பார்வையை பயணிகள் வரும் பாதையில் வைத்து ஒவ்வொருவராக பார்த்தான் , மான்சி எங்கே................

அதுவரை அவனுக்கு பாதுகாப்பு அரணாக இருந்த பிள்ளைகள் அவனிடமிருந்து இறங்கி “ அதோ அம்மா வந்துட்டாங்க” என்று குதித்து கொண்டு ஓட,.. சத்யன் பிள்ளைகள் ஓடிய திசையில் நோக்கினான்


No comments:

Post a Comment