Thursday, April 23, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 2

1998ன் இடையில் ...

அவள் தந்தையின் மறைவுக்கு சில மாதங்களுக்கு முன்னால் ஜூலை மாதத்தில் ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்த போது ஹாலில் ஒரு வாலிபன் அமர்ந்து இருந்தான். பார்க்க அவளை விட சிகப்பாக உயரமாக ஜாடையில் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூயிஸ் போல் இருந்தான். அவளைப் பார்த்து வெண்பற்கள் தெரிய புன்னகைத்து "ஹாய்" என்றான்.

அவனைக் கூர்ந்து பார்த்து "நீங்க யாரு? அப்பாவை பார்க்க வந்தேளா? அவர் சாயங்காலம் தான் வருவர்" என்றாள்.

அதற்கு அவன், "நோ, என் பாட்டி உங்க அம்மாவை பாக்க வந்து இருக்காங்க. அவங்ககூட நான் வந்தேன்"



சரியாக் தமிழில் பேசினாலும் அவன் மிகவும் பிரயர்த்தனப் பட்டு பேசுவதைப் போல் உணர்ந்தாள். பிறகு தான் துணுக்குற்றதை முகத்தில் காட்டி, "எங்க அம்மான்னு எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்றாள்

அதற்கு அவன் பதிலேதும் சொல்லாமல் புன்னகையுடன் சுவற்றில் தொங்கிக் கொண்டு இருந்த அவள் குடும்பப் புகைப்படத்தைக் காட்டினான்.

"ஓ" என்றவாறு மேலும் அவனிடம் எதுவும் பேசாமல் வீட்டுக்குள் சென்றாள். உள்ளே குவெயில் ஹில் பகுதியில் வசிக்கும் சற்று வயதான கோமளா மாமி தன் தாயிடம் பேசிக் கொண்டு இருந்தது அவள் காதில் விழுந்தது.

கோமளா, "என்ன பூரணி? எப்படி இருக்கான் என் பேரன்?"

அன்னபூரணி, "ரொம்ப நன்னா இருக்கார்"

கோமளா, "ரெண்டு வருஷமா ப்ரீதியை பாக்கறச்சே எல்லாம் நேக்கு மனசிலே தோணிண்டே இருந்தது பூரணி. அதான் இன்னைக்கு உன்னண்டே என் மனசுக்குப் பட்டதை சொல்லிடலாம்ன்னு அவனையும் அழைச்சுண்டு வந்தேன். என்னடா இது கோமளா இப்படி பேசறாளேன்னு உனக்கு தோணித்துன்னா வெளிப்படையா சொல்லிடு என்னா?"

அதற்கு அன்னபூரணி, "ஆனா மாமி ப்ரீதிக்கு பதினாறுதான் ஆறது. அவருக்கும் இருபதுதான்னு சொல்றேள். அதுக்குள்ளே எப்படி மாமி" என்று சொல்லச் சொல்ல தன் அன்னை அப்பாவித்தனமாக ஏதோ சொல்கிறாள் என்று ப்ரீதி உணர்ந்தாள்.

கோமளா, "ஐய்யோ அசடே. நேக்கு அது தெரியாதான்ன? அவொ படிக்கட்டும். அவனும் படிச்சுண்டுதான் இருக்கான். இன்னும் ஒரு நாலு வருஷத்துக்கு இந்தப் பேச்சை எடுக்கப் போறதில்ல. என் பொண்ணு அவன் பி.எஸ் முடிச்ச ரெண்டு வருஷத்தில அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சுடணும்ன்னு இருக்கா. ரொம்ப நாள் விட்டா அப்பறம் எதானும் ஒரு சட்டைக் காரியை அழைச்சுண்டு வந்து நிப்பானோன்னு அவளுக்கு பயம். நேக்கும்தான். அங்கேயே பொறந்து வளந்ததோன்னோ?"

அன்னபூரணி, "இல்லே மாமி. ப்ரீதி எங்காத்துலயே வெச்சு ரொம்ப நன்னா படிக்கறவ. பி.ஈ, எம்.ஈன்னு என்னென்னவோ சொல்லிண்டு இருக்கு. அவா அப்பாவும் அவளை நிறைய படிக்க வைக்கணும்ன்னு ஆசையா இருக்கர்"

கோமளா, "என்னடி சொல்றே? அமெரிக்காவில் கிடைக்காத படிப்பா? எவ்வளவுன்னாலும் படிக்கட்டுமே. ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ. மேல படிக்கறச்சே கழுத்தில மூணு முடிச்சோட படிச்சா ரொம்ப சேஃப். என் பொண்ணையும் அப்படித்தானே அனுப்பினேன்?"

அன்னபூரணி, "பழக்க வழக்கம் எல்லாம் நம்மாத்து மாதிரித்தானே?" என்று மிக உபயோகமான விவரத்தைக் கேட்க ப்ரீதி மேலும் எறிச்சலடைந்தாள்.

கோமளா, "இந்தக் காலத்தில அதெல்லாம் எதிர்பார்க்கப் படாது. படிப்பைத் தவிற டென்னிஸ் விளையாடறதுக்கு வைல்ட் லைஃப் ஃபோட்டோக்ராஃபிக்குன்னு அவனே தனியா வெளி நாட்டுக்கு எல்லாம் போற அளவுக்கு அவனுக்கு ரொம்ப சுதந்திரம் கொடுத்து வளர்த்து இருக்கா. இருந்தாலும் ட்ரெடிஷன் விட்டுப் போகப் படாதுன்னு அவனுக்கு உபநயனம் அனதுலேர்ந்து ஒவ்வொரு வருஷமும் அவனுக்கு சம்மர் ஹாலிடே சமயத்தில இங்கே அனுப்பிச்சுடுவா. ஆவணி ஆவட்டம் முடிஞ்சப்பறம் தான் திரும்பிப் போவான். இங்கே இருக்கறச்சே தாத்தாவும் பேரனும் ஒண்ணா காயத்ரி சொல்லி சந்தியவந்தனம் செய்யறச்சே நீ பாக்கணுமே? ஆனா காலேஜ்ல அதெல்லாம் முடியாது பாட்டின்னு வெளிப்படையா சொல்லிடுவான்"

அன்னபூரணி, "நான் அவரண்டே பேசறேன் மாமி"

கோமளா, "யோசிச்சு மெதுவா சொல்லு. இன்னும் நிறைய டைம் இருக்கு. என் பொண்ணு சொன்னதும் மொதல்ல என் ஞாபகத்துக்கு வந்தது ப்ரீதிதான் அதான் இப்பவே உன்னண்ட சொன்னேன்" என்றபடி கோமளா மாமி வெளியில் வர ப்ரீதி தன் அறைக்குள் சென்றாள்.

'நானே மேல படிக்கணும்ன்னு இருக்கேன். அதுக்குள்ள எனக்கு கல்யாணம் பேச வந்துட்டா. இந்தப் பாட்டிங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லை. நல்ல வேளை அப்பா இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டார்' என்று எண்ணியபடி தன் ஹோம் வொர்க்கில் மூழ்கினாள்.


இரண்டொரு நாட்களுக்குப் பிறகு பள்ளி விட்டு வந்து கொண்டு இருந்தபோது வழியில் அவனை மறுபடி பார்த்தாள். இம்முறை அவனே சுவாதீனமாக அவளருகே வந்து "ஹாய். என் பேர் ஆனந்த் அன்னைக்கு பாத்தப்ப சொல்லறதுக்குள்ளே நீ வீட்டுக்குள்ளே ஓடிட்டே. உன் பேர் ப்ரீதிதானே?" என்று பட படவென அவன் பேசினான்.

ப்ரீதிக்கு அன்று கோமளா மாமி தன் அன்னையிடம் பேசியது நினைவுக்கு வர அவனுடன் பேசக் கூடாது என்று எண்ணினாள். ஆனால் அவன் முகத்தைப் பார்த்ததும் அவளையறியாமல் முகத்தில் புன்னகை தவழ "எஸ் ஐ ஆம் ப்ரீதி" என்று தான் படிக்கும் ஆங்கில மீடியத்தை பறைசாற்றினாள்.

ஆனந்த், "OK! Now that your classes are over why don't you join me for a cup of coffee?" என்று சரளமான அமெரிக்க உச்சரிப்பு மிகுந்த ஆங்கிலத்தில் என்னுடன் காஃபி அருந்த வருகிறாயா என்று அவன் கேட்க அவன் எதையோ கேட்கிறான் என்று மட்டும் புரிந்து ஆனால் என்ன கேட்டான் புரியாமலே ப்ரீதி சற்றுத் திணறித் தலையாட்டினாள்.

ஆனந்த் அவள் திணறலைப் புரிந்து கொண்டு, "பக்கத்தில் காஃபி ஷாப் எங்கே இருக்கு?" என்று தமிழுக்குத் தாவினான்.

ப்ரீதி, "காப்பிப் பொடி வாங்க நீங்க ஏன் இவ்வளவு தூரம் வந்து இருக்கேள்? உங்க ஆத்துக்குப் பக்கத்திலேயே ஒருத்தர் வேணுண்ற அளவு சிக்கரி போட்டு அரைச்சு தருவரே?"

வாய் விட்டுச் சிரித்த ஆனந்த், "நான் காஃபி ஷாப்புன்னு சொன்னது உக்காந்து நிதானமா பேசிட்டே காஃபி சாப்டற மாதிரி ரெஸ்டாரண்ட். நீயும் வா கொஞ்ச நேரம் காஃபி குடிச்சுட்டு பேசிட்டு இருக்கலாம்ன்னு சொன்னேன்"

ப்ரீதி, "ம்ம்ஹூம் .. அதுக்கெல்லாம் நான் வரலை. நான் ஆத்துக்குப் போணும்"

ஆனந்த், "சரி! வா உன்னை ஆத்தில ட்ராப் பண்றேன் என்றபடி தன் தாத்தாவின் காரைக் காட்டினான்"

ப்ரீதி, "உங்களை எப்படி இந்த ஊரில் ட்ரைவ் பண்ண விட்டா? அங்கெல்லாம் லெஃப் ஹாண்ட் ட்ரைவ் தானே?" என்று தன் பொது அறிவைக் காட்டிக் கொண்டாள்.

ஆனந்த், "என் கிட்ட இன்டர்நேஷனல் லைஸன்ஸ் இருக்கு. நான் அமெரிக்காவுக்கு வெளியே வேற நாட்டில் எல்லாம் ஓட்டி இருக்கேன். கம் பேசிட்டே போலாம்" என்று அவள் பதிலை எதிர்பார்க்காமல் காரை நோக்கி நடந்தான். சாவி கொடுத்த பொம்மை போல அவனைப் பின் தொடர்ந்தாலும் 'என்ன இவன் ... இல்லை இவர்ன்னு சொல்லணுமோ? ... என்னண்ட கேக்காமலே என்ன பண்ணனும்ன்னு டிசைட் பண்றர்' என்று மனதளவுக்குக் கடிந்து கொண்டாள்.

கார் நகரத் தொடங்கியதும் எதிர்த் திசையில் போவதை உணர்ந்து, "எங்க ஆத்துக்கு வழி மறந்துட்டேளா? பின்னாடிப் பக்கம்"

ஆனந்த், "தெரியும். இப்படியே போய் பெட்ஃபோர்ட் கிட்டே ரைட் எடுத்தாலும் பஸ் ஸ்டாண்ட் கிட்ட போலாம் இல்லையா?"

ப்ரீதி, "ஐய்யோ அது ரொம்ப சுத்தோன்னோ?"

ஆனந்த், "பரவால்லை. இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்"

குறு குறுத்த பார்வையுடன் முகம் சிவந்த ப்ரீதி சற்று நேரம் மௌனம் சாதித்தாள். பிறகு, "நீங்க ஏன் தமிழ் மத்தவா பேசற மாதிரி பேசறேள்"

ஆனந்த், "மத்தவான்னா?"

ப்ரீதி, "ஆத்துல பேசற மாதிரி பேசலை"

ஆனந்த், "ஓ! எங்க ஆத்ல ரெண்டு விதமா பேசுவேன். அம்மாட்ட ப்ராணாத்து தமிழ். அப்பா கிட்ட வேற மாதிரி"

ப்ரீதி, "ஏன்?"

ஆனந்த், "எங்க அப்பா ப்ராமின் இல்லை. அதனால"

ப்ரீதி, "அப்பறம் எப்படி கோமளா மாமி நீங்க சந்தி எல்லாம் .. " என்று சொல்லத் தொடங்கி பிறகு அவனிடம் எதற்கு இதைச் சொன்னோம் என்று உணர்ந்து பாதியில் நிறுத்தினாள்.

ஆனந்த், "பாட்டி சாடிஸ்ஃபாக்ஷனுக்கு காயத்ரி சொல்லி சந்தியாவந்தனம் பண்ணுவேன். ஈவ்னிங்க் டென்னிஸ் விளையாடிட்டு தாத்தாகூட பியரும் குடிப்பேன்"

ப்ரீதி, "சே! நீங்க குடிப்பேளா! நான் இன்னைக்கே அம்மாட்ட சொல்லி ... "

ஆனந்த், "என்னை மாதிரி மாப்பிள்ளை வேண்டாம்ன்னு சொல்லப் போறியா? குட். என் பாட்டிக்கு கற்பனை ரொம்ப ஜாஸ்தி"

ப்ரீதி, "உங்களுக்கு தெரியாதுன்னு இல்ல அன்னைக்கு மாமி சொல்லிண்டு இருந்தா?"

ஆனந்த், "என் பாட்டி குரல் உனக்கு மட்டும்தான் கேக்குமா என்ன?"

ஒரு புறம் அவள் மனம் நிம்மதி அடைந்தாலும் மறுபுறம் சிறு ஏமாற்றம் வந்ததை அவளால் மறுக்க முடியவில்லை.

ப்ரீதி, "அப்ப உங்களுக்கும் இதில இஷ்டம் இல்லையா?"

ஆனந்த், "இன்னும் ஏழு எட்டு வருஷத்துக்கு அப்பறம் யோசிக்க வேண்டியதை நான் இப்பவே யோசிக்கப் போறது இல்லை"

ப்ரீதி, "நானும்தான் .. "

ஆனந்த், "சரி, என்ன படிக்கலாம்ன்னு இருக்கே?"

ப்ரீதி, "பி.ஈ கம்ப்யூட்டர் சயன்ஸ் இல்லைன்னா எலெக்ட்ரானிக்ஸ். அதுக்கு அப்பறம் எம்.ஈ. அதுக்கு அப்பறம் பி.ஹெச்.டி. நீங்க?"

ஆனந்த், "வாவ். நான் பி.எஸ்ஸுக்கு மேல படிப்பேனான்னு சந்தேகம். ஐ வாண ஸ்டார்ட் வொழ்கிங்க்"

ப்ரீதி, "ம்ம்ம்?"

ஆனந்த், "வேலைக்கு போலாம்ன்னு இருக்கேன்"

ப்ரீதி, "உங்க பி.எஸ் எங்க ஊர் பி.ஈ மாதிரியா இல்லை பி.எஸ்.ஸி மாதிரியா?"

ஆனந்த், "பி.ஈ மாதிரி நாலு வருஷம் ஆனா சயன்ஸும் படிக்கலாம்" என்றவாறு தொடங்கி அமெரிக்க இளநிலைப் பட்டப் படிப்பைப் பற்றி விளக்கினான். அவள் வீடு வரும் வரை அவளது வெவ்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தபடி வந்தான். வீட்டருகே அவளை இறக்கிவிட்டுச் சென்றான்.

அதற்கு அடுத்த இரு வாரங்களும் வாரம் இரு முறையாவது அவர்கள் சந்தித்தனர். இரண்டு வார இறுதியில் அவள் மனதில் அவனைக் காதலிப்பதாக நினைத்தாள்.

அவன் அமெரிக்கா திரும்பிய ஒரு மாதத்தில் கோமளா மாமி மாரடைப்பால் அகால மரணம் அடைந்தாள். அவளது மகள் தன் தந்தை தனித்து இருப்பதை விரும்பாமல் அவரை அமெரிக்கா அழைத்துச் சென்றாள். அதன் பிறகு ஆனந்துடன் அவளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டு மாதத்திற்கு பிறகு தன் தந்தை இறந்த பின் ப்ரீதி ஆனந்தை அடியோடு மறந்து இருந்தாள்.


சிவா - செல்வி

2009ன் தொடக்கம்.....

பெங்களூர் மாநகரத்தின் பல பாஷ் என்று அழைக்கப் படும் பகுதிகளுக்கும் இராணுவக் குடியிருப்புகளுக்கும் இடையே அந்த சேரி அமைந்து இருந்தது. இந்திய இராணுவத்திற்கு சொந்தமான நிலத்தில் அமைந்து இருந்தது அந்தச் சேரி. இராணுவத்தினர் அவ்வப்போது அங்கிருந்த குடிசைகளை அகற்ற முற்படுவதும் அரசியலில் செல்வாக்கு மிகுந்த சிலர் தலையீட்டால் அவர்கள் அம்முயற்சியை கைவிடுவதும் பல வருடங்களாக நடந்து கொண்டு இருந்தது. இருப்பினும் நாளொரு புதுக் குடிசையும் பொழுதொரு புதுக் கூரையுமாக அந்த சேரி வளர்ந்து அரசாங்க மதில் சுவர்களுக்கு இடையே இருந்த இடத்தை முழுவதுமாக நிறப்பி இருந்தது. சில வருடங்களுக்கு முன் அந்த குடியிருப்புகளுக்கு வேறு ஒரு அரசியல் பிரமுகரால் மின்சாரமும் வந்தது. அந்தச் சேரியில் இருந்த வீதி போன்ற அமைப்புகளின் ஊடே குடிதண்ணீர் குழாய்கள் வர வேண்டும் என்பது அவர்களது அடுத்த எதிர்பார்ப்பு. செல்ஃபோன் வந்தபிறகு அவர்கள் தொலைபேசி இணைப்பு வேண்டும் என்ற கோரிக்கையை கைவிடுத்து இருந்தனர்.

அந்தச் சேரி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்து இருந்தது. பெரும்பாலோர் சமுதாயத்தின் கீழ் மட்டத்தில் இருந்தாலும், பல குடிசைகள் செங்கல் சுவர் தாங்கிய அஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட வீடுகளாக மாறி இருந்தன. பல வீடுகளின் முன்னே மோட்டார் பைக்குகளும் ஸ்கூட்டர்களும் நிற்பதும் சகஜமானது. அந்தக் குடியிருப்பில் இருப்பவர் ஒவ்வொருவரும் அவர்கள் இருக்கும் வீட்டுக்கு சொந்தக் காரர் போல இருந்து வந்தனர். அந்தச் சேரியில் குடியிருக்கும் வரை அவர்கள் வீட்டை தங்கள் சொந்தமாக பாவிக்கலாம் என்பது அந்தச் சேரியில் எல்லோரும் கடைபிடித்த எழுதாத சட்டம். சமுதாயத்தின் கீழ் மட்டத்தில் தொடங்கி நடுத்தர வர்க்கத்தின் கீழ் நுனியை எட்டிப் பிடிக்கும் அளவு வரை அந்தச் சேரியில் வசிப்போரின் வருமானத்தை வகைப் படுத்தலாம். வீட்டின் பொருளாதார நிலைமை நடுத்தர வர்க்கத்தை எட்டிப் பிடித்ததும் அக்குடியிருப்பினை விட்டு அவ்வீட்டினர் வெளியேறுவதும் அவர்கள் வீட்டுக்கு புதிதாக வேறு யாராவது குடியேறுவதும் அந்தச் சேரியின் வழமையானது.

அந்தச் சேரியில் ஒரு காலை நேரம். 'அம்மாவுக்கு நைட்டுல குளிர் தாங்க முடியலை' என்பதால் அமைந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரையும், 'ஓதம் அம்மாவுக்கு மூச்சிரைப்பு வரவைக்குது' என்பதனால் அமைந்த செங்கல் சுவரும், 'அம்மாவுக்கு காலில் சேத்துப் புண் வருது' என்பதனால் ஸெராமிக் டைல்ஸ் போட்ட உள் தரையும் கொண்ட வீட்டின் வாசலில் சிவா என்று அழைக்கப் படும் சிவகுமார் தன் சைக்கிளை மும்முறமாக துடைத்துக் கொண்டு இருந்தான்.

எதிரில் சற்று தள்ளி இருந்த வசதி குறைந்த வீட்டில் இருந்து இரு ப்ளாஸ்டிக் குடங்களுடன் வெளியில் வந்தவளைக் கண்டதும் அவன் கண்களில் பிரகாசம்.



"இன்னா செல்வி நேத்து இண்டர்வ்யூக்குப் போனியே? இன்னா ஆச்சு?"

அவள்தான் செல்வி பி.காம்.

அவனெதிரில் வந்து நின்ற செல்வி, "ஒரு அளவுக்கு பண்ணி இருக்கேன் சிவா. கிடைச்சுடும்ன்னு நினைக்கிறேன். நீகூட சொல்லிட்டு இருந்தியே உன்னை வேலைக்கு கூப்படறாங்கன்னு? புதுசா வந்து இருக்கற அந்த ஃபாரின் ரெஸ்டாரண்ட் இருக்கற அதே பில்டிங்கிலதான் ஆஃபீஸ். அக்கௌண்ட்ஸ் டிபார்ட்மென்டில் வேலை. டேலி கத்துட்டதால இண்டர்வியூ நல்லா பண்ண முடிஞ்சுது. அடுத்த வாரம் சொல்றதா சொன்னாங்க"

"அப்படியா இன்னா ஆஃபீஸ் அது?"

"ஒரு இன்வெஸ்ட்மன்ட் கம்பெனி. அப்படின்னா என்னான்னு கேக்காதே. நான் சொன்னாலும் உனக்கு புரியாது." என்றாள் தன் முத்துப் பற்கள் தெரிய சிரித்த செல்வி.

"அதான் நான் மேல ஒண்ணியும் கேக்கலை" என்று விகல்பமில்லாமல் சிரித்தவனை பார்த்து அவள் மனதில் சிறு குற்ற உணர்வு குடி கொண்டது.

அன்பைப் பொழிந்த விழிகளுடன் அவனைப் பார்த்த செல்வி, "நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் சிவா. எனக்கும் முழுசா என்னான்னு தெரியாது. வேலை கிடைச்சுதுன்னா நிச்சயம் சொல்றேன். இப்ப தண்ணி கொண்டாரலைன்னா அம்மா வந்து என்னை கொன்னு போட்டுறும்" என்றபடி குடங்களுடன் நடந்து சென்றாள். சிவா அவளது பின்னழகில் லயித்து நின்றான்.


அவர்கள் உரையாடலை உள்ளிருந்தபடி கேட்டுக் கொண்டு இருந்த அவனது தாய் மரகதம் அவனிடம், "ஏண்டா, அந்த டேலி படிக்க நீதானே துட்டு கட்டினே?"

"ஆமா அதுக்கு இன்னா இப்போ?"

"என்னமோ தானே படிச்ச மாதிரி உன் கிட்டே ஜம்பம் பீத்திட்டுப் போறா?"

"அம்மா, நான் கட்னது அவளுக்கு தெர்யாது. கட்டிட்டு வந்து நான் கட்னதா சொல்ல வேணாம்ன்னு ஆண்டிகிட்டே சொன்னேன்"

ஆண்டி, அங்கிள் என்பவை ஒரு காலத்தில் பணக்காரர்களிடம் வீட்டு வேலைக்குச் சென்றபோது அச்சேரியின் பெண்கள் கற்ற வார்த்தைகள். பிற்காலத்தில் அந்தச் சேரியின் சரசரி கல்வியறிவு உயர சேரிக்குள் உறவு சொல்ல முடியாத மூத்த பெண்கள் ஆண்டிகளாகவும் ஆண்கள் அங்கிள்களாகவும் ஆனார்கள்.

"ஏண்டா? அவளைக் கட்டிக்கணும்ன்னு அவ்ளோ ஆசையா இருக்கே. ஆனா நீ துட்டு கட்டினது அவளுக்கு தெரியக் கூடாதா?"

"இல்லம்மா. பாவம் சின்ன வயசில் இருந்து மத்தவங்களை நம்பி படிச்சுகினு இந்தா. பி.காம் முட்ச்சதும் வேலை கிடைச்சுடும்ன்னு ரொம்ப தில்லா இருந்தா. ஆறு மாசம் ஆயும் கிடைக்கலைன்னு ரொம்ப பேஜார் பட்டுகினு இந்தாம்மா. அப்ப நான் ஹெல்ப் பண்ணறேன்னு சொன்னா வேணாம்ன்னு சொல்லி இருப்பா."

மகனை வாஞ்சையுடன் பார்த்த மரகதம், "சரி, சீக்கரம் குளிச்சுட்டு வந்து சாப்பிடு"

சிவா, "சரிம்மா. நான் கொஞ்சம் சீக்கரம் போவணும். நான் அந்த புது ஹோட்டல் ஓனரைப் பாத்துட்டு அதுக்கு அப்பறம் வேலைக்கு போவணும்"

மரகதம், "ஏண்டா? அவன்தான் நீ கேட்ட சம்பளம் கொடுக்க மாட்டேன்னு சொன்னான்னு சொன்னே?"

சிவா, "அப்பறம் நம்ம ஜேகப்கிட்ட வந்து பேசச் சொன்னானாம். அதான் போய் பாத்துட்டு போறேன்"

மரகதம், "அங்கே வேலை செட்டாயிடுச்சுன்னா இந்த சைக்கிளை தூக்கிப் போட்டுட்டு ஒரு பைக் வாங்கிக்கோ. செல்வியையும் இட்டுகினு போவலாம்"

சிவா, "ஏன் இந்த சைக்கிள்ல இட்டுகினு போவ முடியாதா?"

மரகதம், "சரி, காசு விஷயத்தில் உன் கிட்ட நான் ஒண்ணியும் பேசலை. போய் குளிச்சுட்டு வா"

சிவா, ஒரு சிறிய அறிமுகம். பிறந்தது வளர்ந்தது எல்லாம் அந்தச் சேரியில். சிறுவயதில் இருந்து தந்தையின்றி வளர்ந்தவன். பத்தாம் வகுப்பு முடித்ததும் வீட்டு வேலைகள் செய்து ஜீவனத்தை நடத்திக் கொண்டு இருந்த தாய்க்கு ஓய்வு கொடுக்க தாயின் பேச்சையும் மீறி மேற்கத்திய உணவுவகைகள் வழங்கும் ஒரு உணவகத்தில் பணிக்குச் சேர்ந்தான். அந்த உணவகத்தின் உரிமையாளர் தன் இந்தியக் கணவருடன் பெங்களூரில் குடிபுகுந்த ஒர் ஜெர்மனி நாட்டுப் பெண்மணி. தன் கணவரின் தொழிலில் ஈடுபாடு இல்லாமல் செந்தமாகத் சிறிய அளவில் தொடங்கிய அந்த உணவகம் பெங்களூரில் ஒரு பிரபலமான கட்டிடத்தின் தரைத் தளத்தின் பாதியை அடைக்கும் அளவுக்கு வளர்ந்தது. அவர் மேற்கத்திய சமையலில் ஆர்வம் காட்டுபவர்களுக்கு அதைக் கற்றுக் கொடுத்து அவர்களுடன் அந்த உணவகத்தை விரிவாக்கி இருந்தார். கொடுத்த வேலையில் சிவா காட்டிய சிரத்தையும் புதிதாக கற்றுக் கொள்வதில் அவன் காட்டிய ஆர்வமும் அந்தப் பெண்மணியை மிகவும் கவர்ந்தது. சில வருடங்களில் மேற்கத்திய உணவுவகைகள் செய்யும் முறைகளின் நன்கு தேர்ச்சி பெற்றான். திடீரென கணவரைப் பிறிந்து அந்தப் பெண்மணி ஜெர்மனி திரும்பிச் செல்ல, அந்த உணவகத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதே சிவா தன் மதிப்பை உணர்ந்தான். அடுத்தடுத்து இரு உணவகங்களுக்கு மாறிய பிறகு கை நிறைய சம்பாதிக்கத் தொடங்கி இருந்தான். அவன் சற்று முன் தாயிடம் சொன்ன உணவகம் அதற்கும் மேல் கொடுப்பதாக அவனை அழைத்து இருந்தது. பூடகமாகச் சொன்னால் அவனது மாதச் சம்பளமும் ஓ.டியும் சேர்ந்து ஐ.டி துறையில் இருப்பவர் அளவுக்கு உயர்ந்து இருந்தது.



கணவன் தன்னை விட்டுச் சென்று விட்டான் என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டாலும், உண்மையில் செல்வியின் தாய் விஜயா மணம் புரியாமல் மகப்பேறு பெற்றவள். ஒரு காலத்தில் வறுமைக் கொடுமையினால் உடலை விற்று பிழைத்து வந்தவள். மகளுக்கு பத்து வயதாகும்போது அத்தொழிலை விடுத்து அந்தச் சேரியில் வந்து குடி புகுந்தாள். வைத்து இருந்த சிறு சேமிப்புடன் வீட்டு வேலைகள் செய்து பிழைப்பை நடத்தினாள். அச்சேரியில் இருந்த அவளது தூரத்து உறவினர் உதவியால் பெண்ணை பி.காம் வரை படிக்க வைத்து இருந்தாள்.

செல்வியை உளமாறக் காதலித்தாலும் அதுவரை அவளிடம் அவன் சொன்னது இல்லை. அவளிடமோ அவளது அன்னையிடமோ சொல்ல வேண்டாம் என்று தன் தாயிடமும் சொல்லி இருந்தான்.


No comments:

Post a Comment