Saturday, April 25, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 6

2008ன் நடுவில்
கடந்த ஒன்றரை வருடங்களாக அவள் விடுமுறைக்குக் கூட அமெரிக்காவை விட்டு விலகவில்லை. கூடிய அளவுக்கு பணம் சேர்க்கலாம் என்ற அவளது ஆர்வத்துக்கும் மேலாக அவள பணி அவளைக் கட்டிப் போட்டு இருந்தது. ஒரு வாரத்தில் ஐம்பது அல்லது அறுபது மணி நேரத்தை பணியில் செலவிடுவது வழக்கமானது. அவ்வப் போது ஆனந்த் எங்கு இருக்கிறான் என்று எண்ணுவாள் ஆனால் அதற்கு மேல் அவனை அணுக அவள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ப்ரியா எம்.ஸி.ஏ முடித்து இருந்தாள். கோவையிலேயே அவளுக்கு காக்நிஸாண்ட் நிறுவனத்தில் வேலையும் கிடைத்து இருந்தது. தாயிடம் ப்ரியாவை தன்னை கலெக்ட் கால் மூலம் அழைக்குமாறு சொல்லி இருந்தாள். அன்று காலை ப்ரியா அழைத்தாள்,

ப்ரியா, "ஹெல்லோ அக்கா"

ப்ரீதி, "சொல்லுடி. ஜாயின் பண்ணிட்டியா?"

ப்ரியா, "ஜாயின் பண்ணிட்டேன். இங்கே ஒரு பி.ஜி அக்காமடேஷனும் கிடைச்சுடுத்து"


ப்ரீதி, "ஹாஸ்டலில் இருந்ததை எல்லாம் எடுத்துண்டு வந்துட்டியா?"

ப்ரியா, "தேவையானதை மட்டும் எடுத்துண்டு வந்தேங்க்கா. ஃப்ரெண்டாண்ட கடன் வாங்கி புது ட்ரெஸ்ஸஸ் வாங்கிண்டேன்"

ப்ரீதி, "எதுக்குடீ? கொஞ்ச நாள் பொறுத்துண்டு அடுத்த மாசம் வாங்கலாமோல்யோ?"

ப்ரியா, "அந்த ட்ரெஸ்ஸை எல்லாம் போட்டுண்டு என்னால் ஆஃபீஸ் போக முடியாது"

ப்ரீதி, "அப்பறமா பாங்க் அக்கௌண்ட் கம்பெனியிலேயே ஓபன் பண்ணித் தருவா ... " என்றவளை இடைமறித்து,

ப்ரியா, "எல்லாம் எனக்கு தெரியும்க்கா. நான் பாத்துப்பேன்"

ப்ரீதி, "சரி, அப்பறம் மாசா மாசம் ஒரு அமௌண்டை ஆர்.டி ஓபன் பண்ணி ..."

ப்ரியா, "அக்கா, எனக்கு நிறைய செலவு இருக்கு. நான் ஒண்ணும் உன்னை மாதிரி யூ.எஸ்ஸில் உக்காந்துண்டு இல்லை. ஸெல் ஃபோன் மொதலாக நிறைய வாங்க வேண்டி இருக்கு. எப்ப எவ்வளவு சேவ் பண்றதுன்னு நான் டிஸைட் பண்ணிப்பேன்"

ப்ரீதி வாயடைத்துப் போனாள். வீட்டுக்காக நீயும் சிறிதளவேனும் கொடுக்க வேண்டும் என வற்புறத்த அவளுக்கு மனம் வரவில்லை.
~~~~~~~~~~~~
2009 முன் பாதி

கடந்த ஒரு வருடமும் ப்ரீதி தன் பணியில் கழித்தாள். கடந்த ஒரு வருடமாக, முக்கியமாக ப்ரியாவுடன் பேசிய பிறகு தனக்காகவும் வாழ வேண்டும் என நினைத்தாள். அந்த எண்ணம் அவளது தோற்றத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்து இருந்தது. எப்படியோ இருக்கட்டும் என்று விடப் பட்ட தலை முடி அழகான பாப் கட்டாக மாறி இருந்தது. 'பழசானா என்ன உள்ளே தானே இருக்கு?' என்று அவள் அணிந்த உள்ளாடைகள் காணாமல் போனதால் அவள் தோற்றத்தில் ஒரு புதுப் பொலிவு. இரண்டு வருடத்துக்கு மேல் அமெரிக்க உணவு அருந்தியும் முன்பு இருந்ததை விட சற்றே அவளது எடை கூடி இருந்தது. அதுவும் துருத்திக் கொண்டு இருந்த எலும்புகளை மறைக்கும் அளவுக்கே.

அடுத்த இரண்டு மாதங்களில் திரும்ப இந்தியாவுக்குச் செல்ல விருந்தாள். அன்னையிடம் இருந்து தொலை பேசி அழைப்பு.

அன்னபூரணி, "ப்ரீதி. ஒரு குட் நியூஸ்"

ப்ரீதி, "என்னம்மா?"

அன்னபூரணி, "நம்ம ப்ரியாவோட காலேஜில் படிச்சவர். ரெண்டு வருஷம் சீனியர். ரொம்ப பணக்கார ஆத்துப் பிள்ளை. அப்பா அம்மாவை அழைச்சுண்டு வந்து ப்ரியாவை பெண் கேட்டான். அண்ணாவுக்கும் தெரிஞ்சுருக்கு. அவனும் வந்தான். எல்லாம் பேசி முடிச்சுட்டோம்"

ப்ரீதி, "ப்ரியாவையா?"

அன்னபூரணி, "ஆமாண்டி. அடுத்த மாசத்திலியே கல்யாணத்தை வெச்சுக்கணும்ன்னு சொன்னா."

ப்ரீதி, "அடுத்த மாசம்ன்னா?"

அன்னபூரணி, "நீ கவலைப் படாதே. எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன். நீ அடுத்த மாசம் வந்தப்பறம் தான் கல்யாணம்"

ப்ரீதி, "ஓ .. "

அன்னபூரணி, "நாம் எதுவும் செய்ய வேண்டாம்ன்னுதான் அவா சொன்னா. ஆனா, அண்ணாதான் நாம் எதுவும் செய்யாட்டா புகுந்தாத்தில அவளுக்கு மரியாதை இருக்கதுன்னான். அதனால் கொஞ்சமா நகை போட்டு கல்யாணத்தை நம் செலவில் செஞ்சுடலாம்ன்னு முடிவெடுத்தோம். ரிஸப்ஷன் அவாளுது. அண்ணாவே எல்லாத்தையும் முன்னாடி நின்னு பாத்துப்பேன்னுட்டான். அவனுக்கு நீ கொஞ்சம் பணம் அனுப்பறியா"

எதுவும் பேசத் தெரியாமல் தொண்டை அடைத்த ப்ரீதி, "எவ்வளவும்மா?"

அன்னபூரணி, "நகைக்கு ஒரு ஆறு லட்சம். அப்பறம் வெட்டிங்க் செலவுக்கு நாலஞ்சு ஆகும்ன்னா. இப்போதைக்கு மூணு இருந்தா பாக்கியை நீ வந்தப்பறம் கொடுத்தடலாம்."

ப்ரீதி, "சரிம்மா"

அடுத்த மாதம் கல்யாணக் கோலம் கொண்டு இருந்த வீட்டை அடைந்தாள். திருமண வேலைகளில் பம்பரமாகச் சுற்றினாள். திருமணக் கோலத்தில் இருந்த தங்கையைக் கண்டு பெருமிதப் பட்டாள்.

திருமணம் முடிந்து இரு நாட்கள் கழித்து ...

ப்ரீதி, "ஏம்மா ப்ரியாவுக்கும் கல்யாணம் ஆயிடுத்து. ப்ரசாத் திருச்சில படிச்சுண்டு இருக்கான். அடுத்த வருஷம் ஃபைனல் இயர் முடிச்சதும் அவனும் குன்னூருக்கு வந்து இருக்கப் போறது இல்லை. நீ ஏன் இங்கே தனியா இருக்கணும். என்னோட பெங்களூர் வந்துடேன்"

அன்னபூரணி, "நேக்கு என்னடி இங்கே குறைச்சல். சுத்தியும் தெரிஞ்சவாளா இருக்கா. பொழுது போறதுக்கு நேக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை. பொண்கள் ரெண்டுக்கும் பிறந்த வீடுன்னா இதுதானேடீ. இந்த ஆத்தை விட்டுட்டு நான் எப்படி வரமுடியும்"

ப்ரீதி, "எதுக்கு அனாவிசிய செலவு"

அன்னபூரணி, "நீ நேக்கு ஒரு செலவும் செய்ய வேண்டாம். உன் தம்பிக்கு மட்டும் பணம் அனுப்பினா போறும். வாடகைப் பணத்தில் நான் சமாளிச்சுக்குவேன்"

ப்ரீதி, "சரி"

பெங்களூர் புறப்படுவதற்கு முன் ...

ப்ரீதி, "அம்மா, நான் உன்னண்ட ஒண்ணு கேக்கணும்"

அன்னபூரணி, "சொல்லுடீ"

ப்ரீதி, "ப்ரியாவுக்கு பெண் கேட்டு வந்தப்போ மூத்தவ நான் இருக்கேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லலைன்னு அவளோட மாமியார் ஆத்துல பேசிண்டாம்மா"

மௌனம் காத்த அன்னபூரணியிடம் தொடர்ந்து ப்ரீதி, "நேக்கெல்லாம் கல்யாணம்ன்னு ஒண்ணு வேண்டாம்ன்னு முடிவெடுத்துட்டியாம்மா?"

அன்னபூரணி, "மூல நட்சத்திரத்தில் பொறந்தவளுக்கு நான் எங்கேர்ந்துடி மாப்பிள்ளை தேடுவேன்?"

ப்ரீதி, "ஓ .. அதுவும் ஒரு காரணமா. சரிம்மா"

இரு தினங்களுக்குப் பின் அலுவலகத்தை அடைந்தவள், பணியேற்குமுன் விக்ரம் ஷாவைச் சென்று பார்த்து வர அவரது அறைக்குச் சென்றாள். உள்ளே அவர் யாரிடமோ பேசிக் கொண்டு இருந்தது தெரிந்தது. அவருக்கு பதிலளித்த குரல் அவளுக்கு பரிச்சயமானதென நினைத்துக் கொண்டு இருந்த போது அந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு வந்தவனைப் பார்த்து மலைத்துப் போய் நின்றாள்.

"ஹாய் ப்ரீதி. எப்படி இருக்கே?" என்றபடி ஆனந்த் வைதீஸ்வரன் கை குலுக்க கை நீட்டினான்.

ப்ரீதி, "ஆனந்த், நீங்க இங்கே?"

ஆனந்த், "வந்து ஒரு மாசம் ஆச்சு. உன் டீமில் நான் இப்போ டெக்னிகல் ஆர்கிடெக்ட்"


சிவா - செல்வி

அன்று மாலை தன் சமையலை முடித்த மரகதம் செல்வியிடம் தான் காலை பேசியதற்கு மன்னிப்புக் கேட்கலாம் என விஜயாவின் வீட்டருகே சென்றாள். உள்ளிருந்து விஜயாவும் செல்வியும் பேசிக் கொள்வது அவளுக்குக் கேட்டது,

செல்வி, "இன்னும் ஏம்மா இப்படி மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு இருக்கே"

விஜயா, "எல்லாம் என் தலை எழுத்துடீ உன்னை ஒரு நல்லவன் கைல புடிச்சுக் கொடுக்கணும்ன்னு நான் கடவுளை எவ்ளோ கும்பிட்டேன் தெரியுமாடீ?" என்ற படி கேவி விசும்பினாள்.

செல்வி, "சரி, அதுக்கு இப்போ இன்னா?"

விஜயா, "இவ்ளோ நடந்தப்பறம் யாருடீ உன்னை கட்டிக்குவா?"

செல்வி, "எனக்குன்னு ஒருத்தன் பொறந்திருப்பாம்மா. எனக்கு நம்பிக்கை இருக்கு"

விஜயா, "இப்படி ஆனதுக்கு உனக்கு அவமானமா இல்லை?"

செல்வி, "நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் வித்தியாசம் தெரியாம இருந்தேனேன்னு வெக்கமா இருக்கும்மா. ஆனா நடந்ததைப் பத்தி அவமானமா இல்லை. ஒரு பேமானி தெவிடியாப் பையன் என்னை மான பங்கப் படுத்தினதுக்கு நான் எதுக்கு அவமானப் படணும். அவன்தான் தான் செஞ்சதை நினைச்சு வெக்கப் படணும்"

வெளியில் இருந்து இதைக் கேட்ட மரகதம் செல்வியின் சுயமரியாதையிலும் தன்னம்பிக்கையிலும் பூரித்துப் போனாள்.

விஜயா, "நீ அந்தப் பையனை கூட்டியாந்து காமிச்சப்ப எனக்கும் அவன் நல்லவன்னுதானே தோணுச்சு? என்னை ஜோட்டால அடிக்கணும். இனிமேல் உஷாரா இரும்மா"

செல்வி சிரித்தபடி, "நான் உஷாரா இருக்கேனோ இல்லியோ. இனி இந்த மாதிரி நடக்கறதுக்கு சிவா விடாது"

விஜயா, "ம்ம்ஹூம் பேராசைப் பட்டா இப்படித்தாண்டி ஆகும்ன்னு சாமி சொல்லி இருக்குது."

செல்வி, "என்ன பேராசை?"

விஜயா, "மொதல்ல எல்லாம் உன்னை சிவாவுக்கு கட்டிக் கொடுக்கணும்ன்னு நினைச்சுட்டு இருந்தேண்டி"

"என்னாது?" என்ற செல்வியின் குரலில் மரகதத்துக்கு அவளது ஆச்சர்யம் கலந்த எரிச்சல் தெரிந்தது.

விஜயா, "சொல்றதைக் கேளு. மொதல்ல நான் அப்படித்தான் நினைச்சுட்டு இருந்தேன். அப்பறம் நீ அந்த நந்தகுமாரை கூட்டியாந்தப்ப எனக்கும் வெளி நாட்டு ஆசை வந்துருச்சுடீ. சிவாவை விட நந்தகுமார் ஒஸ்தின்னு நினைச்சேன்"

செல்வி, "அம்மா, குணத்தில சிவாவை விட யாரும் ஒஸ்தி இல்லைம்மா. ஆனா நான் சிவாவை கட்டிக்கணும்ன்னு நான் எப்பவும் நினைச்சது இல்லை"

விஜயா, "ஏண்டீ?"

செல்வி, "எனக்கு சிவாவை ரொம்ப பிடிக்கும்மா. எனக்காக சிவா என்னா வேணும்னாலும் செய்யும் அதுவும் எனக்கு தெரியும். நானும் அதுக்காக இன்னா வேணும்னாலும் செய்வேன். அவ்ளோ ஃப்ரெண்டும்மா. ஆனா, எனக்கும் சிவாவுக்கும் எந்த விதமான பொறுத்தமும் இல்லைம்மா"

விஜயா, "என்னாடி பொறுத்தம் வோணும் உனக்கு?"

செல்வி, "ம்ம்ம்ம் ... நான் பி.காம் சிவா டெந்த் பாஸ்"

விஜயா, "உனக்கு டிகிரி வாங்கினாத்தான் பொறுத்தமா?"

செல்வி, "புரிஞ்சுக்காம பேசறேம்மா. டிகிரி வாங்கணும்ன்னு இல்லை. நாலு படிச்ச ஆளுங்ககூட பழகற அளவுக்கு சிவா இல்லைம்மா. அப்படியே கல்யாணம் பண்ணிட்டேன்னு வெச்சுக்கோ, என் ஆஃபீஸ்ல இருக்கற ஆளுங்ககூட சிவா பழகறதுக்கு சங்கோஜப் படும். அப்பறம் சிவாதான் ரொம்ப ஃபீல் பண்ணும். இந்த மாதிரி நிறைய பிரச்சனை வரும்மா"

விஜயா, "என்னாவோ போ.. எல்லாம் அந்த ஆண்டவன் வுட்ட வழி"

மரகதம் கொதிப்படைந்து வீடு திரும்பினாள்.

இரவு வீடு திரும்பிய சிவா, செல்வியின் வீட்டுக்கு முன் விஜயாவும் செல்வியும் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பதை கவனித்தான். அவர்களுக்கு உற்ற நட்பாகப் பழகி வந்த மரகதம் தன் வீட்டில் அமர்ந்து இருப்பதைக் கண்டு தாயின் நடத்தையில் மனம் வெறுத்து முகம் இறுக வீட்டுக்குள் நிழைந்தான்.

கை கால் அலம்பி சாப்பிட அமர்ந்தவன் தாயிடம்,

சிவா, "இன்னாம்மா ஆண்டி, செல்விகூட எல்லாம் பேசறதை நிறுத்திட்டியா?"

மரகதம், "அவங்ககூட பேசறதுக்கு இன்னாடா கீது?"

சிவா, "ஏன்? பேசினா இன்னா இப்ப? அப்படி இன்னா அவங்க தப்பு செஞ்சுட்டாங்க?"

மரகதம், "உறுகி உறுகி காதலிச்சியே இப்ப இன்னா ஆச்சி? எச்சி பட்ட பண்டமா இல்லே வூட்டில குந்திகினுகிறா? வெளிநாட்டுக்கு போறதுக்கு ஆசைப் பட்டு ஏமாந்தவங்ககூட எனக்கு இன்னா பேச்சு?"

சிவா, "ஓ, அப்படின்னா மத்த விஷயத்துக்கு ஆசைப் பட்டு ஏமாந்தா பரவால்லியா?"

மரகதம், "டேய், இப்ப இன்னான்னு என்னை நீ கலாய்க்கறே? மத்த விஷயம்ன்னா இன்னா?"

சிவா, "மத்த விஷயம்ன்னா ... காசு பணம், செல்வாக்கு, செண்டு போட்டுட்டு பொம்பளைங்களை மயக்கறது இந்த மாதிரி விஷயத்தை சொன்னேன்"

மரகதத்தின் முகம் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் விட்டுக் கொடுக்காமல், "நீ இன்னா சொல்றேன்னு பிரியலை"

சிவா, "இல்லை. P.K.ரெட்டி மாதிரி ஆளுங்க கிட்ட ஏமாந்தா பராவால்லியான்னு கேட்டேன்"

பேயறைந்த முகத்துடன் மரகதம் சிவாவைப் பார்த்தாள்.

சிவா கண்களில் கண்ணீர் ததும்ப, "எனக்கு தெரியும்மா. அந்த வூட்டம்மா உன்னை தொரத்தின வரைக்கும் எனக்கு தெரியும்மா"




மரகதம் வாயைப் பொத்திக் கொண்டு விசும்பினாள். மரகதம் வீட்டு வேலை செய்து கொண்டு இருந்தபோது ஒரு வீட்டின் தலைவரான அரசியல் செல்வாக்கு மிகுந்த P.K.ரெட்டியிடம் தன்னைக் கொடுத்து சிவாவை ஈன்றாள். பல வருடங்கள் அவருக்குச் சொந்தமான வேறு ஒரு வீட்டில் குடிவைக்கப் பட்டு அவருக்கு கள்ளக் காதலியாக இருந்தவளை பற்றி அவரது மனைவி அறிந்து கொண்டு ஆள் பலத்துடன் சிவாவுக்கு ஐந்து வயதான போது துரத்தப் பட்டு மறுபடி அந்த சேரியில் குடிபுகுந்தாள்.

சிவா, "நீ மத்தவங்களை கொறை சொல்ற அளவுக்கு நம்ப ரொம்ப மரியாதையான நிலைமையில் இருந்தோமாம்மா?"

வாய்விட்டுக் கதறிய மரகதம், "உனக்கு இருக்கற புத்தி எனக்கு இல்லைடா. என்னை மன்னிச்சுடு"

சிவா, "பரவால்லைம்மா. பாவம் கஷ்டப் பட்டு இருக்கு. நாம் ஆதரவு சொல்லணும் இல்லை? அவ மனசுக்கு புடிச்ச மாதிரி ஒருத்தனை கல்யாணம் செஞ்சுக்குட்டும்மா. ஆனா மறுபடி அப்படி அவ ஏமாந்து போவ வுடமாட்டேன்"

மரகதம், "ஆனா இவ்ளோ ஆனப்பறமும் அவளுக்கு உன்னை விட ஒஸ்தியான பையந்தான் வோணும்ன்னு அவ அம்மாகிட்ட பேசிகினு இருந்தாடா. அவ உன்னை இன்னும் ஃப்ரெண்டு மட்டும்தான்னு சொன்னது எனக்குப் பொறுக்கலைடா. அதான் எனக்கு கோவம் பொத்துகினு வந்துருச்சு"

சிவா, "அதுல இன்னா தப்பும்மா? அதான் நான் அன்னிக்கே சொன்னேன் இல்லை. அவ பி.காம் நான் வெறும் டெந்த் பாஸ்ன்னு?"

மரகதம், "அப்பறம் ஏண்டா உறுகி உறுகி அவளை லவ் பண்ணுனே?"

சிவா, "ஏதா தெரியாம செஞ்சுட்டேன். நான் அதை அப்பவே மறந்துட்டேம்மா" என்று அவன் வாய் சொன்னாலும் மனம் ஓலமிட்டு தொண்டை கர கரப்பதை அவசரமாக தண்ணீரை எடுத்துக் குடித்தபடி தாயிடமிருந்து மறைத்தான்.

மரகதம், "ராஜா, நீ என் வவுத்தில பொறந்ததுக்கு நான் கொடுத்து வெச்சுறுக்கணுண்டா"

சிவா, "சரி, சரி சாப்பாடு போடு. ஓவரா சீன் காட்டாதே"

மரகதம், "நான் ஒண்ணியும் சீன் காட்டலை. உண்மையத்தாண்டா சொன்னேன்"

சிவா, "அத்தை வுடு. ஆண்டியையும் செல்வியையும் கூப்புடு. கொஞ்ச நேரம் பேசினு இருக்கலாம்"

மரகதம் வெளியில் சென்று சற்று நேரத்துக்குப் பிறகு செல்வி, விஜயா சகிதம் வந்தாள்.

சிவா, "ஏனு செல்வி மேடம்? ஊட்டா ஆயித்தா?"

இருவரும் அடிக்கடி கன்னடத்தில் பேசிக் கிண்டலடித்துக் கொள்வதை நினைவு கூர்ந்த செல்வி, "ஆயித்து. ஏனு? சாஹிபரு ஈவத்து பேகா பந்துபிட்டிதீரா (ஆச்சு. என்ன சார் இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க)?"

சிவா, "இன்னைக்கு ஒரு கான்ஃபரென்ஸ் கும்பல் வந்து ஸ்டெக் மீட் எல்லாத்தையும் காலி பண்ணிட்டு போயிட்டாங்க. இன்னைக்கு மெனுவில் என் ஸ்பெஷல் ஸ்டெக் மட்டும்தான். மத்ததை வேற ஆளுங்க பண்ணுட்டும்ன்னு வந்துட்டேன்"

செல்வி, "ஸ்டெக்ன்னா?"

சிவா, "அது ஒண்ணியும் இல்லை. மசாலாவில் ஊறவெச்ச கறியை க்ரில்லில அப்படியே போட்டு கஸ்டமருக்கு வேணுங்கறா மாதிரி ரோஸ்ட் பண்றதுதான் ஸ்டெக். அந்த கறிப் பீஸ்கூட மாஷ்ட் பொட்டேட்டோ, இல்லாங்காட்டி ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், பேக்ட் பீன்ஸ் எல்லாம் வெச்சு சர்வ் பண்ணுவோம்"

செல்வி அவன் சொன்ன ஆங்கில வார்த்தைகளையும் அவனது உச்சரிப்பையும் கண்டு ஒரு கணம் மலைத்தாள்.

சிவா, "அத்தை வுடு. நீ டூ வீலர் வாங்கப் போறேன்னு சொல்லினு இருந்தியே இன்னா ஆச்சு?"

செல்வி முகம் சுருங்கி, "ஏன் சிவா? காலைல உன் கூட வரது உனக்கு பேஜாரா இருக்கா?"

சிவா, "அய்யே, அதுக்கில்ல. சாயங்காலம் நடந்து வர்றியேன்னு கேட்டேன்"

செல்வி, "இந்த ஆறு மாசத்தில் ரொம்ப பணம் சேர்க்க முடியலை சிவா. சாதாரண செல் ஃபோன் வாங்கறதுக்கு பதிலா யார் பேச்சையோ கேட்டு கொஞ்சம் காஸ்ட்லியான ஃபோன் வாங்கினேன். அப்பறம் அம்மாவுக்கு ஒரு செல் ஃபோன் வாங்கிக் கொடுத்தேன்"

சிவா, "பாத்தேன். ஆண்டிக்கும் அதே மாதிரி ஃபோனா?"

விஜயா, "வேண்டாம் சாமி! .. என்னுது சாதாராண நோக்கியா ஃபோன் தான். இவுளுதுல எப்படி பேசறதுன்னுகூட எனக்கு தெரிய மாட்டேங்குது"

மரகதம், "ஏண்டா? நீ ஒரு வண்டி வாங்கணும்ன்னு இருந்தியே அது இன்னா ஆச்சு?"

சிவா, "ஆ, அம்மா சரியான நேரத்தில் க்யாபகப் படுத்தினே. செல்வி, நான் மொதல்ல பைக் வாங்கலாம்ன்னு இருந்தேன். அதுக்கு பதிலா ஒரு ஹோண்டா ஸ்கூட்டர் வாங்கறேன். ஸ்கூட்டி மாதிரி கியர் இருக்காது. காலைல என்னோட அதுல வந்துடு. சாயங்காலம் அதை எடுத்துட்டு நீ வூட்டுக்கு வந்துடு"

செல்வி, "அப்பறம் நீ இன்னாத்துக்கு அதை வாங்கறே. நான் ஓட்டறதுக்கா?"

சிவா, "ஐய்யோ. நான் சொல்றத்தைக் கேளு. அங்கே மூணாவுது தெருல இருக்கானே எத்திராஜ்? அவன் பைக் வாங்கினதுல இருந்து அவன் கூட வான்னு சொல்லினே இருக்கான். அது ஒண்ணியும் இல்லை. கொஞ்சம் பெட்ரோல் காசை நானும் ஷேர் பண்ணிக்கலாம்ன்னு சொல்றான். நைட்டு அவன் கூட வந்துடறேன். ரெண்டு வாரத்துக்கு ஒரு லிட்டருக்கு அவனுக்கு காசு கொடுத்துடுவேன்.. இன்னா சரியா?"

செல்வி, "பரவால்லை சிவா. நீ பைக் வாங்கிக்கோ. எதுக்கு பொம்பளைங்க ஓட்டற வண்டி?"

சிவா, "புரியாம பேசாதே. பைக்கில ஒரு பொருளை எடுத்துனு வர முடியாது. ஸ்கூட்டர்ன்னா நான் அதை மார்க்கெட்டுக்கு எடுத்துனு போய் அதுக்கும் பெட்ரோல் காசு என் ஓனர்ட்டெ இருந்து கரந்துடலாம்"

மரகதம், "செல்வி, காசு விஷயத்தில் இவன் ரொம்ப கரார். நீ பேசாம அவன் சொல்றா மாதிரி சாயங்காலம் ஸ்கூட்டர் எடுத்துனு வந்துடு"

தன் தாய் அளிக்கும் ஊக்கத்தில் இருக்கும் உள்நோக்கத்தை சிவா கவனிக்கத் தவறவில்லை.


அடுத்த நாள் மாலை சிவா செல்வியை அழைத்துக் கொண்டு ஹோண்டா ஷோரூமுக்குச் சென்றான்.

அங்கே இருந்த டெமோ ஸ்கூட்டரை செல்வியிடம் கொடுத்து ஓட்டச் சொன்னான்.

செல்வி, "நீ ஓட்டு சிவா. ஓட்டிட்டு இந்த வண்டியைப் பத்தி விவரம் எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கோ"

சிவா, "எனக்கு இந்த வண்டியைப் பத்தி நல்லா தெரியும் செல்வி எங்க மேனேஜர் வெச்சுட்டு இருக்கார். அவர் வண்டியை ஓட்டி இருக்கேன். நீ ஓட்டிப் பாரு"

செல்வி அந்த ஸ்கூட்டரை எடுத்துச் சென்று சற்று நேரத்துக்குப் பிறகு திரும்பினாள். அப்போது சிவா அங்கு இருந்த விற்பனையாளரிடம் பேரம் பேசிக் கொண்டு இருந்தான். செல்வி சற்று தள்ளி இருந்த அவர்களது உரையாடலை கேட்டுக் கொண்டு இருந்தாள்.

சிவா, "ஸீரோ பர்ஸெண்ட் இன்டரெஸ்ட்டுன்னு அட்வர்டைஸ் பண்ணிட்டு அப்பறம் எதுக்கு ப்ரோஸஸிங்க் சார்ஜ்? அதுவும் நீங்க தள்ளுபடி செஞ்சா வாங்கிக்கறேன். இல்லைன்னா வேணாம்"

விற்பனையாளர், "என்ன சார் நீங்க? ப்ரைஸ்ல டிஸ்கௌண்ட்டுக்கு பதிலா த்ரீ தவுஸண்ட் வொர்த் ஆக்ஸஸரீஸ் கொடுத்து இருக்கேன். இப்போ லோன் ப்ராஸஸிங்க் சார்ஜ் கொடுக்க முடியாதுன்னா எப்படி சார்? லோன் கொடுக்கறது எங்க கம்பெனி இல்லை"

சிவா, "உங்க கம்பெனி இல்லை. ஆனா உங்க கம்பெனியோட ஸிஸ்டர் கம்பெனி. அது எங்களுக்கு தெரியும். நீங்க உங்க மேனேஜர்ட கேட்டுட்டு வாங்க"

மேலாளரின் அறையில் இருந்து திரும்பிய விற்பனையாளர், "சார், டவுன் பேமெண்ட் நாலாயிரத்து நூத்தி ஐம்பது ரூபா. மந்த்லி ஈ.எம்.ஐ ஒன் தவுஸண்ட் எய்ட்டி ருபீஸ்"

சிவா தன் செல்ஃபோனை எடுத்து அதில் இருந்த கால்குலேட்டர் வசதியை உபயோகித்த பிறகு, "எப்படி சார்? ஒன் தௌஸண்ட் தர்டி எய்ட் தானே வரணும்? த்ரீ தவுஸன் ப்ராஸஸிங்க் சார்ஜை ஒன் தௌஸ்ண்ட் ஃபைவ் ஹன்ட்ரட்டா கொறைச்சுட்டு அமௌண்டில் சேர்த்துட்டீங்களா? நாங்க வேற ஷோ ரூம் பாத்துக்கறோம்"

மறுபடி மேலாளர் அறைக்குச் சென்ற விற்பனையாளர் திரும்பி வந்து, "ஓ.கே சார், ஈ.எம்.ஐ ஒன் தௌஸண்ட் தர்டி எய்ட் ருபீஸ்"

சிவா, "ஓ.கே ஆர்டர் எடுத்துக்குங்க."

விற்பனையாளர் ஆர்டர் புத்தகத்தில் எழுதி சிவாவிடம் கையொப்பம் பெற்றார்.

சிவா, "எப்போ டெலிவரி எடுக்கலாம்?"

விற்பனையாளர், "வண்டி ரெடியா இருக்கு ஒன் ஹவர் வெய்ட் பண்ணுங்க. இன்வாய்ஸ் போட்டுட்டு வண்டியை கொடுக்கறேன். அப்படியே நீங்க லோன் பேப்பர்ஸ்லயும் சைன் பண்ணிடலாம்"

செல்வியின் அருகே வந்த சிவா, "வா, வெளில கொஞ்ச நேரம் நிக்கலாம். ஒன் அவர்ல வண்டி ரெடுயாயிடும்ன்னான்"

செல்வி, "சிவா, லோன்லயா வாங்கறே?"

சிவா, "ஆமா. வட்டி இல்லாம லோன் கொடுக்கறாங்க. நம்ம கிட்ட இருக்கற பணத்தை பேங்கில் போட்டா எட்டு பர்ஸெண்ட் வட்டி கிடைக்கும்!"

செல்வி, "உனக்கு எப்படி லோன் கொடுத்தாங்க?"

சிவா, "புரியலை. எப்படி கொடுத்தாங்கன்னா?"

செல்வி, "இல்லை சாலரி சர்டிஃபிகேட் எதுவும் கேக்கலையா?"

சிவா, "கேட்டாங்க. என் கிட்ட அப்போ இல்லை. எங்க ஹோட்டல் ஆஃபீஸ்ல அக்கௌண்டண்ட் இருந்தார். ஓனர்ட்ட பேசிட்டு என் சாலரி சர்டிஃபிகேட் ஒண்ணை ஃபாக்ஸ் பண்ணச் சொன்னேன்"



செல்வி, "உங்க ஹோட்டல்ல சாலரி சர்டிஃபிகேட் எல்லாம் கொடுப்பாங்களா?"

சிவா, "எங்க ஹோட்டல் ஒரு ப்ரைவேட் லிமிடட் கம்பெனில ஒரு ப்ராஞ்ச். அந்த கம்பெனிக்கு இந்த பெங்களூர்லயே இவ்வளவு பெரிசா வெவ்வேற பேர்ல நாலு ஹோட்டல் இருக்கு" என்றவாறு நான்கு வெவ்வேறு பிரபல உணவகங்களின் பெயர்களை பட்டியலிட்டான்.

செல்வி, "பரவால்லியே? உன் சாலரிக்கு நாப்பதாயிரம் லோன் கிடைக்குமா?"

சிவா, "என் சாலரிக்கு நாலு லட்சம் வரைக்கும் லோன் கிடைக்கும். அதுவும் வீட்டு லோனுன்னா அந்த மாதிரி பத்து மடங்கு கூட கிடைக்கும்"

மலைத்துப் போன செல்வி, "அப்பறம் ஏன் இந்த சேரிலயே இருக்கே?"

சிவா, "எல்லாம் ஒரு காரணத்துக்காகத்தான்" என புதிர் போட்டான்.

செல்வி, "என்னான்னு சொல்ல மாட்டே?"

சிவா, "எல்லாம் செட்டானதுக்கு அப்பறம் சொல்றேன்" என்றபடி அவளுடன் அந்தக் கட்டிடத்துக்கு வெளியே வந்தான்.

அந்த கட்டிட வாசலில் ஒரு ஆட்டோவில் இருந்து உயரமான ஒரு வாலிபனும் அவனுக்கேற்ற உயரத்துடன் ஒரு பெண்ணும் இறங்கினார்கள். செல்வி சிவாவின் கையைப் பற்றியடி, "இவர்தான் அன்னைக்கு என்னை ... "

சிவா, "ஓ, அவனுககிட்டே இருந்து காப்பாத்துனவரா?"

செல்வி, "ம்ம்ம்" 


No comments:

Post a Comment