Monday, April 6, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 15



சத்யனுக்கு ப்ரணவ் கூறியதில் மான்சி என்ற வார்த்தையை தவிர வேறெதுவும் விழவில்லை, இவன் என்ன சொன்னான் மான்சியோட பசங்கன்னு தானே, என்று புரியாமல் தன் மனதையே கேட்டான்,

உலகின் உச்சகட்ட அதிர்ச்சி என்று ஒன்று இருந்தால் அதை இப்போது சத்யனின் முகத்தில் பார்க்கலாம், அவனுக்குள் புரியாத பல உணர்வுகள், விழிகள் கலங்கி கனிந்து பளபளக்க,

இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஜீரணிக்க முடியாமல் தவித்தபடி, குரலே வெளியே வராமல் திகைப்புடன் “ என்னப்பா சொல்றீங்க நீங்க மான்சியோட பசங்களா” என்று கேட்டான்

பரணேஷ் சட்டென தன் கழுத்தில் இருந்த செயினின் லாக்கெட்டை திறந்து சத்யனிடம் காட்டி “ இதோ பாருங்கப்பா நீங்க, எங்க பர்ஸ்ட் பர்த்டேக்கு பானும்மா வாங்கி குடுத்தது” என்று கூறியதும்

சத்யன் அந்த லாக்கெட்டை சட்டென இழுத்து பார்த்தான், சந்தேகமேயில்லை இது நானேதான், அப்படின்னா இவங்க ரெண்டுபேரும் என் பிள்ளைகளா, இது உண்மையா, எனக்கும் மான்சிக்கும் பிறந்த இரட்டை சந்தோஷங்களா, நான் காண்பது கனவில்லையே,



அவனுக்குள் சடசடவென நேசமெனும் சாரல் மழை தூவ, பாசமெனும் பூக்கள் மலர ஆரம்பித்தது, தான் ஒரு கோடி யுகமாக தேடியலைந்த பொக்கிஷம் தன் எதிரில் வந்து நிற்பது போல் இருந்தது,

அவன் கண்கள் ஆனந்தத்தில் கலங்கியதால், எதிரில் இருந்த இரட்டை சொர்க்கங்களின் உருவமும் நீரில் தெரிந்த நிழல் போல, வரி வடிவமாய்க் கலங்கித் தெரிந்தது,

சத்யன் தன் கண்களை இறுக மூடித்திறந்தான், பிறகு கண்களின் அலைப்புறுதல் குறைந்து அவர்கள் இருவரையும் தீர்கமாக பார்த்தான், அவன் உடல் பரவசத்தில் சிலிர்த்தது

இவர்கள் என் பிள்ளைகள், ... என் வாரிசுகள்... என் உயிரில் ஜனித்த இரு ஜீவன்கள்.... என் மான்சி என் உயிரை தனக்குள் வாங்கி கருவாக்கி சுமந்து பெற்ற இரட்டை வைரங்கள்.... இதை எண்ணும்போதே சத்யனின் உடல் முழுவதும் புதுவிதமான உணர்வில் துடித்தது,

நம்பமுடியாத ஒரு அதிசயம் நிகழ்ந்தது போலவும்,... வெகுநாளைய புதிரின் முடிச்சு அவிழ்ந்தது போலவும்,... ஒரு மின்னல் கண்களில் தெரிக்க விழியகல அவர்களையே பார்த்தான் ,

அந்த வானமே தன் வசப்பட்டாற்ப்போல்.... தேவதைகள் எல்லோரும் இவன் மீது மட்டும் பூமழை தூவியது போல பரவசத்தில் தவித்தான்,.... என்ன பேச வேண்டும், என்ன செய்யவேண்டும், என்று புரியாமல் அவன் மனம் திக்கித்திணறியது

கலங்கிய கண்கள் கண்ணீரை கொட்டிவிடுவோம் என்று பயமுறுத்தியது,... உதட்டைக் கடித்து கண்ணீரை அடக்கினான்....

கண்களில் கரைகாணாத பாசத்துடன் தன் இருகரங்களையும் பறவையின் சிறகாய் இதமாய் விரித்து,... ஒரு தாய் பறவை தன் குஞ்சுகளை தன் இறகுகளில் அடக்குவது போல... அவர்களை வாரியெடுத்து தனக்குள் அடக்கினான்

சத்யன் அது பொது இடம் என்பதை மறந்தான்.... அது விமானநிலையம் என்பதை மறந்தான்... தன்னை சுற்றியிருப்பவர்களை மறந்தான் தனது நெஞ்சில் அணைத்திருந்த தன் ஜீவ வித்துக்களை மாறிமாறி உச்சி மோர்ந்து.... அடிவயிற்றில் இருந்து குமுறி கதறி கண்ணீர் விட ஆரம்பித்தான்

அப்போது பாத்ரூம் போய் வந்த பிரேமா... சத்யன் யாரோ இரண்டு பிள்ளைகளை அணைத்துக்கொண்டு கண்ணீர் விடுவதை பார்த்து பதறி ஓடிவந்து அவன் தோளை தொட்டு “ டேய் சத்யா என்னடா இது... யாரு இந்த பசங்க... ஏன்டா நீ இப்படி அழற.. டேய் சத்யா எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்கப்பா என்ன இது” என்று சத்யனை பலவாறாக சமாதானம் செய்ய

சத்யனால் தன்னை கட்டுபடுத்திக் கொள்ள முடியவில்லை.... விட்ட கண்ணீர் விட்ட படியே இருக்க... அவனின் இறுகிய அணைப்பில் இருந்த பிள்ளைகள் மெதுவாக திமிறி அவனிடமிருந்து விடுபட ஆரம்பித்தனர்

சத்யன் அப்போதுதான் தன்னிலை உணர்ந்து... அவர்களை விடுவித்துவிட்டு தன் கண்களை துடைத்துக்கொண்டு... தன்னைச் சுற்றி பார்த்தான்... அத்தனை பேரும் அவனைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்... சத்யனுக்கு சங்கடமாக இருந்தது

அப்போது புத்தகம் படித்துக்கொண்டிருந்த பானு அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் ஒரு சலசலப்பு எழ... புத்தகத்தை மூடிவிட்டு என்ன ஏது என்று சுற்றிலும் பார்த்தாள்.. நான்கு வரிசைகள் தள்ளி பிள்ளைகளை யாரோ அணைத்துக்கொண்டு இருப்பதை பார்த்து பதறி வேகமாக அங்கே போனாள்

சத்யன் குழப்பமாக இருந்த தன் அம்மாவை பார்த்து “ அம்மா இவங்க ரெண்டு பேரும் யாருன்னு தெரியுதா ... ரெண்டு பேரும் உன் பேரனுங்கம்மா.... என் பிள்ளைகள்... என் மான்சிக்கும் எனக்கும் பிறந்தவங்க... இவங்க ரெண்டு பேரம் என் பிள்ளைகள் அம்மா... பார்த்தீங்களா உங்க பேரன்களை.... ரொம்ப புத்திசாலிங்க என்னை அவங்களாவே கண்டுபிடிச்சுட்டானுங்க.’’ என்று சத்யன் சிரிப்பும் கண்ணீருமாக, உற்சாகத்தில் எதை முன்னால் சொல்ல வேண்டும் எதை பின்னால் சொல்லவேண்டும் என்று புரியாமல் சந்தோஷத்தில் குழப்பியடித்தான்
அவன் சொன்னதை கேட்ட பிரேமா.. அதிர்ச்சியில் வாய் பிளந்து தன் பேரன்களை பார்த்தாள்

அப்போது அங்கே வந்த பானுவும் சத்யன் பேசியதை கேட்டு அதிர்ந்து போய் நின்றுவிட்டாள்.... அவளை பார்த்ததும் ப்ரணேஷ் அவளிடம் வந்து “ பானும்மா எங்க அப்பா பார்த்தீங்களா.... நாதான் கண்டுபிடிச்சேன்” என்று உற்சாகமாக கத்த

உடனே ப்ரணவ் ஓடிவந்து “ பானும்மா இவன் பொய் சொல்றான்... நாதான் அப்பாவை மொதல்ல பார்த்து இவன்கிட்ட சொன்னேன்... பானும்மா நீங்க எங்க போட்டாவை எல்லாம் அப்பாவுக்கு அனுப்பவே இல்லயா... அப்பாவுக்கு எங்களை தெரியவேயில்லை பானும்மா” என்று ப்ரணவ் புத்திசாலித்தனமான கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பானு அதிர்ந்து போய் சத்யனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் 

சத்யன் தன் பிள்ளைகள் பானுவிடம் ஓடியதும்,..அப்போதுதான் பானுவை பார்த்தான்.. அவனுக்கு இவள் யார் புதிதாக என்று குழப்பமாக இருந்தது... அதை அவளிடமே கேட்டுவிடுவது என்று நினைத்து

“ என் மான்சி எங்கே,.. நீங்க யாரு,....இவங்களை எங்க கூட்டிட்டு போறீங்க” என்று சத்யன் சராமரியாக கேள்வி கணைகளை தொடுக்க

பானு அவனுடைய ஒரு கேள்விக்குக் கூட பதில் சொல்ல முடியாமல் அதிர்ந்து போய் நின்றாள்......... ஆனால் அவள் மனதில் “என் மான்சி எங்கே” என்ற சத்யனின் வார்த்தை ஆழமாக விழுந்து பதிந்தது

பானுவையே பார்த்துக்கொண்டிருந்த ப்ரணவ் சட்டென சத்யனிடம் வந்து “ அப்பா அம்மா சிங்கப்பூர்ல இருக்காங்க, இவங்க பானும்மா, இவங்கதான் எங்களை பார்த்துகற அம்மா, எங்க ரெண்டு பேருக்கும் ஸ்கூல் லீவு அதனால நாங்க இப்போ மான்சி அம்மாவை பார்க்க சிங்கப்பூர் போறோம்” என்று ப்ரணவ் தெளிவாக தன் அப்பாவுக்கு எடுத்து சொல்ல,

இப்போது அவனுக்கு துணையாக ப்ரணேஷ்ம் வந்தான் “ ஆமாம் அப்பா மான்சி அம்மா நாங்க குழந்தையா இருக்கப்பவே சிங்கப்பூர் போய்ட்டாங்க,.. அங்க பெரிய ஆஸ்பிட்டல் ஒன்னுல பெரிய அதிகாரியா வேலை பார்க்குறாங்க,.. அப்புறம் நாங்க இந்த பானும்மா கூடத்தான் இருக்கோம்,... பானும்மா ரொம்ப நல்லவங்க அப்பா,.. எங்களுக்கு எல்லாமே வாங்கி கொடுப்பாங்க” என்று ப்ரணவ் காற்றில் கைகளை அசைத்துக் கொண்டே வாயால் கதைபேசினன்

சத்யனுக்கு ஓரளவுக்கு ஏதோ புரிவது போல இருந்தது,... மான்சி தன்னைவிட்டு போய் நல்லமுறையில்தான் இருக்கிறாள் என்று நினைத்தான்,.. ஆனால் பெரிய அதிகாரியாக பொருப்பில் இருக்கும் அவள் இனி தன்னை ஏற்ப்பாளா,.. என்று பெரிய கேள்வி மனதில் பூதகரமாக எழுந்தது

பிள்ளைகளின் வார்த்தைகளால் சத்யனுக்கு பானுவின் மேல் ஒரு மரியாதை வர,.. கையெடுத்துக் கும்பிட்டு “ வணக்கங்க நான் சத்யன்,.. மான்சியோட புருஷன்” என்று அழுத்தமாக கூறினான்

அதுவரை அதிர்ச்சியில் நின்றிருந்த பானு,.. சத்யனின் அறிமுக வார்த்தையால் சுதாரித்துக்கொண்டு “ வணக்கம் நான் பானு,.. இங்கே காலேஜ்ல லைப்ரரியனா ஒர்க் பண்றேன்,” என்று கூற

“ ஓ அப்படியா,.. வாங்களேன் இப்படி உட்கார்ந்து பேசுவோம்,.. ப்ளைட் கிளம்ப இன்னும் ஒன்னவர் இருக்கு” என்று சத்யன் பானுவை அழைக்க

அவனுடைய வார்த்தைக்கு கட்டுப்பட்டு போய் அமருவதை தவிர பானுவுக்கு வேற வழி தெரியவில்லை, ஆனாலும் “ அங்க லக்கேஜ் இருக்கு பார்த்துக்கனும்” என்று அடைத்த குரலில் பானு கூற

“ எங்க இருக்கு நான் போய் எடுத்துட்டு வர்றேன் நீங்க இங்கயே உட்காருங்க” என்று சத்யன் சொல்லிவிட்டு நகர்ந்தான்

அதற்க்குள் ப்ரணேஷ் “ அப்பா எனக்கு தெரியும் நானும் வர்றேன்” என்று பெரிய மனிதன் போல முன்னே போக,.. சத்யன் சிரித்தபடியே அவன் பின்னால் போய் லக்கேஜ்களை எடுத்துவந்து வைத்துவிட்டு நின்றுகொண்டிருந்த பானுவை பார்த்தான் ,..

இன்று நிச்சயமா இவன் தன்னிடம் மொத்த உண்மைகளையும் வாங்காமல் விடமாட்டான் என்று நினைத்த பானு பிள்ளைகள் இருவரையும் கையில் படித்துக்கொண்டு .. மெதுவாக குறுக்கே இருந்த இருக்கைகளை கடந்து சத்யன் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்

ஆனால் பிள்ளைகள் முன்பு எப்படி பேசுவது என்று தயங்கிய பானு,. ஒரு யோசனை செய்து,... ப்ரணேஷ் அதோ அந்த பாப்பா கூட இவ்வளவு நேரம் ரெண்டுபேரும் விளையாண்டீங்கள்ள,.. இப்போ மறுபடியும் போய் அந்த பாப்பா கூட விளையாடுங்க செல்லம்” என்று கொஞ்சலாக பானு சொன்னதும்

பரணேஷ் போகட்டுமா என்பது போல் தன் அப்பாவை பார்க்க,.. சத்யனுக்கு பெருமையாக இருந்தது,.. கழிவிரக்கத்தில் கண்கள் பனிக்க “ ம் ரெண்டுபேரும் போங்கப்பா” என்றான்

“ சரிப்பா நாங்க அந்த பாப்பாகிட்ட போய் விளையாடுறோம்,.. ஆனா நீங்க இனிமே எங்களை விட்டுட்டு எங்கயும் போக கூடாது சரியா,.. அப்பா ப்ளீஸ்ப்பா எங்கயும் போகாதீங்க ” என்று ஒரு மாதிரி பயந்த குரலில் ப்ரணவ் சத்யனிடம் உறுதி கேட்க

தன் மகனின் குரல் நெஞ்சை குத்த சத்யன் ஒரு நிமிடம் கண்களை மூடித்திறந்தான் பிறகு தன் பிள்ளைகள் இருவரையும் இழுத்து அணைத்து “ நான் உங்களைவிட்டு இனிமே எங்கயும் போகமாட்டேன்,.. எனக்கு எதுவுமே வேண்டாம் தங்கங்களே நீங்கதான் மட்டும் போதும்,.. நீங்க ரெண்டுபேர் மட்டும் போதும்” என்று மறுபடியும் குமுற ஆரம்பித்தான்

பிரேமா சத்யனின் தோளில் கைவைத்து “ சத்யா பிள்ளைங்க பயப்படப் போறாங்க, சும்மா கண்கலங்காத சத்யா,.. கொஞ்ச நேரம் கட்டுப்படுத்திக்கப்பா” என்று கெஞ்சுதலாக சொல்ல



சத்யன் கொஞ்சம் நிதானித்து,. தன் பிள்ளைகளை விடுவித்து.. தன் எதிர நிறுத்தி “ உங்க ரெண்டுபேருக்கும் ஒரு விஷயம் தெரியுமா,.. நானும் சிங்கப்பூர்தான் வர்றேன்” என்று சத்யன் உற்சாகமாய் கூறியதும்

பிள்ளைகள் இருவரும் சந்தோஷத்தில் அப்பா கூச்சலிட்டவாறு அவனை கழுத்தை இறுக்கி அணைத்து கொண்டனர்,.. சத்யனும் அவர்களை அணைத்து மாறிமாறி முத்தமிட்டு தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான்,..

பிறகு பிள்ளைகள் இருவரும் அங்கிருந்து நகர்ந்துவிட,... சத்யன் பானுவிடம் திரும்பி “இப்போ சொல்லுங்க மேடம், நீங்க யாரு, மான்சிய எப்படி சந்திச்சீங்க” என்று அமைதியாக கேட்டான்

பானு அவன் முகத்தையும் அதில் தெரிந்த அமைதியான அழகையும் பார்த்துவிட்டு,.. இவன் எப்படி அப்படியொரு தப்பை செய்திருப்பான் என்று யோசித்தாள்,.. இப்போது இவனிடம் எல்லாவற்றையும் சொன்னால் மான்சி தன்மீது கோபப்படுவாளோ என்று மனதிற்க்குள் சங்கடமாக இருந்தது

ஆனாலும் பிள்ளைகளின் தந்தை பாசம் சற்று முன் அவள் கண்களை திறந்திருந்தது,.. அத்தோடு சற்று முன் பார்த்த சத்யனின் கண்ணீர் அது பானுவின் மனதை கரைத்துவிட்டது,.. அது பொய்யில்லை என்று அவள் உள் மனம் அவளுக்கு அடித்து கூறியது

அத்தோடு இனிமேலும் பிள்ளைகளை ஏமாற்றமுடியாது,.. இந்த வயதில் தகப்பன் பாசம் இல்லாமல் ஏன் வாழவேண்டும்,. மான்சியை பற்றி இனிமேல் கவலை படக்கூடாது,. அவள் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று நினைத்தாள் பானு

தன் மனதை ஒரு நிலைப்படுத்திய பானு, தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்,.. மான்சி பெங்களூர் வந்து இறங்கியதிலிருந்து... நேற்று இரவு போனில் பேசியது வரை ஒன்றுவிடாமல், பக்கத்தில் யாருக்கும் கேட்காதவாறு மெல்லிய குரலில் கூறினாள்

அமைதியாக தலைகவிழ்ந்து எல்லாவற்றையும் கேட்ட சத்யன்,.. சிறிதுநேரம் எதுவும் பேசவில்லை,.. பிள்ளைகளை பார்த்ததில் ஏற்பட்ட சந்தோஷம் மான்சியை பற்றி கேட்டதில் இல்லை,

அதற்க்கு காரணம் அவளுடைய தன்நம்பிக்கையும் சுயகௌரவமும் தான்,.. இவ்வளவு தன்நம்பிக்கையுடன் இரட்டை பிள்ளைகளை சுமந்து பெற்று, படித்து முன்னேறி பெரிய அந்தஸ்தில் இருக்கும் மான்சி,. தன் தவறை மன்னித்து மறந்து தன்னை ஏற்று கொள்வாள் என்ற நம்பிக்கை சத்யனுக்கு அறவேயில்லை

அவனுடைய ஏழுவருட காத்திருப்பு பலனின்றி போய்விடுமோ என்றுஅவன் மனம் குமுறி மவுனமாக உள்ளுக்குள் கண்ணீர்விட்டது,.. அவளை சந்தித்தால் எப்படி தன் மனதை புரியவைப்பது,... அப்படி புரியவைத்தாலும் இப்போது இருக்கும் இந்த உயர்ந்த நிலையிலிருந்து இறங்கி வருவாளா,.. அப்படியே இறங்கி வந்தாலும் தன்னுடன் சென்னைக்கு வந்து எப்படி குடும்பம் நடத்துவாள்.........

சத்யன் தன் மனக்குமுறலை வெளிக்காட்டாமல் அடக்கிக்கொண்டு,.. தலையை திருப்பி தன் பிள்ளைகளை பார்த்தான்,.. கள்ளமில்லாமல் சிரித்து விளையாடிய பிள்ளைகளை பார்த்து இன்னும் குமுறல் அதிகமானது,..

இனி இந்த பிள்ளைகளை எப்படி விட்டுவிலகி இருக்கமுடியும்,... இந்த கொஞ்சநேரத்திலேயே தன் பேச்சாலும் சிரிப்பாலும் என் உயிரில் பாதியை எடுத்து தன்னுடையதாக்கி கொண்டார்களே, இவர்களை பிரிந்தால் மிச்சமிருக்கும் என் பாதி உயிரும் அல்லவா பிரிந்துவிடும்... சத்யன் தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு கவிழ்ந்தான்..

பானுவுக்கு சத்யனை பார்க்க பரிதாபமாக இருந்தது,.. எவ்வளவு கம்பீரமான மனிதனையும் பாசமும் காதலும் எப்படி வீழ்த்திவிட்டதே,. என்று நினைத்தவள்,.. இவர்கள் எல்லோரும் ஒரு குடும்பமாக இணையவேண்டும் என்று மனதார கடவுளை வேண்டினாள்

சிறிதுநேரம் கழித்து நிமிர்ந்த சத்யன் தன் மணிக்கட்டை திருப்பி நேரம் பார்த்தான். இன்னும் கொஞ்சநேரத்தில் விமானம் புறப்படுவதற்கான அறிவிப்பு வந்துவிடும் என்று நினைத்தவன்,..

பானுவை பார்த்து “ எனக்கு மான்சியை பற்றி நெனைச்சா ரொம்ப பெருமையா இருக்கு,.. அதே சமயத்தில் என்னைவிட்டு அவ எட்டாத தூரத்துக்கு போய்விட்ட மாதிரி என் மனசு கலங்குது,.. ஆனா என் ஏழுவருட தவம் அவளை என்கிட்ட கொண்டு வந்து சேர்க்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு மேடம்,...

" மான்சி என்னை விட்டு போன அன்னிக்கு நடந்தது அதன்பிறகு என்னோட நிலைமையை உங்ககிட்ட விலக்கிச் சொல்லனும்னு தான் நினைக்கிறேன்,.. அதுக்கு இப்போ நேரமும் இடமும் சரியாயில்லை,..

" ஆனா நீங்க ஒன்னு மட்டும் நம்பனும்,.. என் உயிர் போவதென்றாலும் அது மான்சியின் மடியில் தான் போகனும்னு விரும்பறேன்,.. நான் அவளை ரொம்ப விரும்புறேன்னு ஒரு வார்த்தையில் சொல்லமாட்டேன் மேடம்,..

" நான் இத்தனை நாள் உயிரோட இருந்ததுக்கு காரணம் என் மான்சியை என்னிக்காவது ஒருநாள் நிச்சயம் சந்திப்பேன் என்ற நம்பிக்கைதான் என்னை வாழவைச்சுது,..

" இப்போ என் பிள்ளைகளை பார்த்தபின் இன்னும் அதிகநாள் என் குடும்பத்துடன் நான் வாழ்ந்து இறக்கனும்னு நெனைக்கிறேன்,.. அது நிறைவேறுமான்னு எனக்கு சந்தோகமா இருக்கு,.. உங்களுக்கு என் மனசு புரியுதா மேடம், என் மான்சி கூட நான் சேர்றதுக்கு உங்களால முடிஞ்ச உதவியை பண்ணுங்க மேடம் ,” என்று கலங்கிய குரலில் சத்யன் கையெடுத்துக் கும்பிட்டபடி கேட்க

பானு எட்டி சத்யனின் கைகளை பற்றிக்கொண்டு “ மொதல்ல இந்த மேடம்னு கூப்பிடுறதை நிறுத்துங்க,.. நான் உங்களைவிட பெரியவ அதனால அக்கான்னு கூப்பிடுங்க சத்யன்,... எப்போ எதிர்பாராமல் உங்க பிள்ளைகளே உங்களை கண்டுபிடிச்சாங்களோ அப்பவே இது கடவுளோட செய்யல் சத்யன்,.. நாம யாரும் இதை தடுக்க முடியாது,..

" நீங்க மான்சியை பத்தி கவலை படாதீங்க,.. அவளை எப்படி கன்வின்ஸ் பண்ணனும்னு எனக்கு தெரியும்,.. எப்போ இத்தனை பேர் மத்தியில் நீங்க கண்ணீர்விட்டு அழுதீங்களோ அப்பவே எனக்கு உங்க மனசு புரிஞ்சு போச்சு,..

" உங்களுக்கும் மான்சிக்கும் நடுவில் உள்ள பிரச்சனை என்னன்னு எனக்கு தெரியும் சத்யன்,.. ஆனா நான் அதை பத்தி உங்ககிட்டயோ மான்சிகிட்டயோ கேட்க மாட்டேன்,.. அது நீங்க ரெண்டுபேரும் பேசி தீர்க்கவேண்டிய பிரச்சனை,.. ஆனால் இனிமேலும் இந்த பிள்ளைகளை அவங்க தகப்பனை விட்டு பிரிக்க நான் ஒத்துக்க மாட்டேன்,.. அதுக்கு மான்சி எதிர்ப்பு தெரிவிச்சாலும் சரி என்னால சமாளிக்கமுடியும்,.. நீங்க தைரியமா இருங்க சத்யன்” என்று பானு உறுதியான குரலில் கூறி தன் நிலைபாட்டை சத்யனுக்கு தெளிவாக விரிவாக உணர்த்தினாள்

அவள் பேச்சை கேட்டதும் சத்யன் மனம் ஓரளவுக்கு நிம்மதியடைய,. முகம் மலர தன் கையை பற்றியிருந்த பானுவின் கையை எடுத்து தன் கண்களில் ஓற்றிக் கொண்டான்,..

“ இவ்வளவு பெரிய ஆளா இருந்துகிட்டு இப்படி எமோஷனல் ஆவாதீங்க சத்யன் அது நல்லாவே இல்ல,.. வேனும்னா எப்படி ஜாலியா இருக்கனும்னு உங்க சின்ன மகன் ப்ரணேஷை கேளுங்க,. உங்களுக்கு நல்லா கிளாஸ் நடத்துவான்,... அப்புறம் இன்னொரு விஷயம் மான்சி இப்போ சிங்கப்பூரில் இல்லை, வேலை விஷயமா பாங்காக் போயிருக்கா,. வர ரெண்டு நாள் ஆகும், அதுக்கப்புறம்தான் நாம எதையும் பேச முடியும், அதனால இன்னும் ரெண்டு நாளைக்கு உங்க பொண்டாட்டியை பார்க்க முடியாது ” என்று பானு சிரித்தபடி கூறி சூழ்நிலையை இயல்பாக்கினாள்

சத்யனுக்கு மான்சி இப்போது சிங்கப்பூரில் இல்லாதது ஏமாற்றமாக இருந்தாலும்,. அவள் இல்லாததும் ஒருவிதத்தில் நல்லதுதான் என்று நினைத்தான்,.. அவள் வருவதற்குள் இந்த இரண்டு நாளில் தன் மனதை நிலைப்படுத்திக் கொண்டு அவளை சந்தித்து பேசி தன் நிலையை உணர்த்தலாம் என்று நினைத்தான்



சத்யனுக்கு அதன்பிறகுதான் பிள்ளைகளின் ஞாபகம் வர,.. சத்யன் எட்டி பார்த்து ப்ரணவையும் ப்ரணேஷையும் அழைக்க இருவரும் அதற்க்காகவே காத்திருந்தது போல ஓடிவந்தனர்,..

இருவரும் ஆளுக்கு ஒருபக்கம் சத்யன் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டு அவன் கழுத்தில் கைபோட்டு சுற்றி வளைத்துக்கொண்டனர்,... சத்யனும் தன் இரண்டு கையாலும் அவர்களை சுற்றி வளைத்துக்கொண்டான்.....

அதை பார்த்த பிரேமாவுக்கு இப்போது அழுகை வந்தது,... பானு எழுந்து இடம் மாறி பிரேமாவின் அருகில் அமர்ந்து, அவள் கைகளை பற்றி “ கலங்காதீங்கம்மா எல்லாம் சரியாயிடும்” என்று ஆறுதல் சொன்னாள்

அப்போது விமானம் புறப்படுவதற்கான அறிவிப்பு வர,.. எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து சத்யன் அனைவரையும் அழைத்துக்கொண்டு விமானத்தில் ஏறி இருக்கைகளை தேடி அனைவரும் ஒரே வரிசையில் அமர்வது போல் அருகில் இருந்தவர்களிடம் பேசி அட்ஜஸ்ட் செய்தான்

பானு பிரேமாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு,.. அவரவர் கதையை ஆரம்பிக்க,.. சத்யன் நடுவில் உட்கார்ந்து அவனுக்கு இரண்டு பக்கமும் ப்ரணேஷும் ப்ரணவும் உட்கார்ந்துகொண்டு தங்கள் கதையை ஆரம்பித்தார்கள்



No comments:

Post a Comment