Friday, April 24, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 5

2005

வாரம் ஒரு முறை ஆனந்துடன் பேசினாள். சுரேஷும் அவன் உதவிக்கு ஆள் வேண்டும் எனக் கூறுவான் என எதிர்பார்த்தால் ப்ராஜெக்டின் முழு விவரங்களையும் ப்ரீதியிடம் பகிர்ந்து கொண்டான். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த படி அடுத்த இரண்டு மாதங்களும் ஆனந்த் அப்படி ஒரு தேவையை எழுப்பவில்லை. ஒவ்வொரு வார மீட்டிங்கின் முடிவில் அவளிடம் சிறிது நேரம் பேசுவதை வழக்கமாக கொண்டு இருந்தான். இருந்தாலும் ப்ரீதி அவனிடம் வெளிப்படையாகக் கேட்கவில்லை.

அந்த வருடத்தின் இறுதி நாட்களில் நடந்த ஒரு மீட்டிங்கின் முடிவில் இருவரும் பேசிக் கொண்டு இருந்த போது

ஆனந்த், "ப்ரீதி நான் உன் கிட்ட ஒண்ணு கேட்கணும். ரெண்டு மாசமா உன் டைம் ஷீட்டை பாத்துட்டு இருக்கேன். ஏன் இவ்வளவு நேரம் ஆஃபீஸில் செலவு செய்யறே? உனக்கு ஓவர் டைம் எதாவுது கொடுக்கறாங்களா?"



அந்த ப்ராஜெக்ட் தொடங்கியது முதல் எப்படியாவுது ஆன்-சைட்டுக்கு ஆனந்த் அவளை அழைக்க வேண்டும் என்ற வெறியுடன் செயல் பட்டு வந்தாள். காலை எட்டரை மணிக்கு அலுவலகத்துக்குள் நுழைந்தால் இரவு ஒன்பது மணி பஸ்ஸில்தான் திரும்பிச் செல்வாள். அவள் தங்கி இருந்த பி.ஜி விடுதிக்கு எதிரில் பஸ் ஸ்டாப் இருந்ததால் பயமேதும் இல்லாமல் இரவு வேளையில் விடுதிக்குத் திரும்ப வசதியாக இருந்தது. ப்ராஜெக்ட்டில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிற வேறு ஒரு காரணமும் இருந்தது. அவளது அலுவலகத்தில் கேண்டீன் உணவு வெளியில் கிடைப்பதை விட விலை குறைவு. மேலும் இரவு உணவு வரை தங்கினால் இரவு உணவு இலவசமாக வழங்கப் பட்டது. இதனால் மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் மிச்சப் படுத்தினாள். அதை ஆனந்திடம் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.

ப்ரீதி, "இந்த ப்ராஜெக்ட்டைப் பத்தி முழுசும் தெரிஞ்சுக்கறதுக்காக எக்ஸ்ட்ரா டைம் ஸ்பெண்ட் பண்ணறேன்"

ஆனந்த், "ஏன்? நீ செய்யறது ஒரு மாட்யூல் தானே?"

ப்ரீதி இது தான் தருணம் என, "ஆனந்த், உங்களுக்கு ஹெல்புக்கு ஆள் தேவைப் பட்டா என்னை அனுப்பறதா ப்ராமிஸ் பண்ணி இருக்காங்க. அதான் .. "

ஆனந்த், "ஓ, உனக்கு யூ.எஸ் சுத்திப் பாக்கணும்ன்னு இருக்கா?"

ப்ரீதி, "ம்ம்ஹூம் ... எனக்கு அதிகப் பணம் தேவை. அங்கே வந்தா என்னால இப்பத்தை விட நிறைய சேவ் பண்ண முடியும்"

ஆனந்த், "எதுக்கு? இப்போ நீ வீட்டுக்கு அனுப்பற பணம் போறலையா? இல்லை எதானும் வாங்கலாம்ன்னு இருக்கியா?"

வெட்கத்தைவிட்டு ப்ரீதி, "இப்போ நான் அனுப்பற பணம் வட்டி கட்டி வீட்டுச் செலவுக்கே போறலை. இன்னும் ஆறு மாசத்தில் ப்ரியாவை எம்.ஸி.ஏ சேர்க்கணும். அப்பறம் அவளுக்கு காலேஜ் செலவு இதெல்லாம் இருக்கு"

அவனது காத்த மௌனத்தில் இருந்து அவன் அவளது நிலையை உணர்வதை அறிந்து கொண்டாள்.

பிறகு ஆனந்த், "இங்கே வந்தா ரெண்டு வருஷத்தில் மொத்தம் எவ்வளவு ஸேவ் பண்ணலாம்ன்னு இருந்தே?"

ப்ரீதி, "எனக்கு இங்கே வர்ற சாலரியையும் சேர்த்தி மாசம் ஐம்பது அல்லது அறுவது ஆயிரம் ரூபா ஸேவ் பண்ண முடியும்ன்னு சொன்னா"

ஆனந்த், "சரி, உங்க அப்பா பிஸினஸ் வெச்சு நடத்திண்டு இருந்தாரே. அது என்ன ஆச்சு?"

ப்ரீதி, "எஸ்டேட் சப்ளைஸ் பிஸினஸ் நன்னாத்தான் ஓடிண்டு இருந்தது. ஷேர் மார்கெட்டிலும் சம்பாதிக்கலாம்ன்னு பணத்தை போட ஆரம்பிச்சார். வந்துடும் வந்துடும்ன்னு மேல மேல போட்டுண்டே இருந்துருக்கர். போட்ட பணம் எல்லாம் நஷ்டமாயிடுத்து. கடைசில அவர் சப்ளையர்ஸுக்கு, கடன் காராளுக்கு, பேங்குக்கு கொடுக்க வேண்டிய பணம் எல்லாம் சேத்தினா வர வேண்டிய பணத்துக்கு பல மடங்கு ஆயிடுத்து" இதைச் சொல்லச் சொல்ல அவள் குரல் உடைந்தது. கர கரத்த குரலில் மூக்கை உறிஞ்சிய படி, "அவர் ஸூஸைட் செஞ்சுண்டார்"

ஆனந்த், "ஓ மை காட். ஐ அம் சோ சாரி ப்ரீதி. அப்பறம் எப்படி யார் மேனேஜ் செஞ்சா?"

ப்ரீதி, "அப்பா போனதுக்கப்பறம் அம்மா கோவைல இருக்கற எங்க மாமாட்ட சொல்லி எல்லாத்தையும் வித்து கடனை அடைச்சுட்டு பாக்கி பணத்தை கொடுக்கச் சொன்னா. அவர் தான் எல்லாத்தையும் வித்து பாக்கி பணத்தை கொடுத்தார்"

ஆனந்த், "அவர் வாங்கி இருந்த ஷேர்ஸ் எல்லாம்?"

ப்ரீதி, "அதையும் சேர்த்தித்தான். வித்து கடனை அடைச்சப்பறம் ரொம்ப எல்லாம் வரலை. ஸம் ட்வெண்டி ஆர் தர்டி தௌஸண்ட் தான். வீடு மட்டும்தான் இருந்தது. அதில் பாதியை வாடகைக்கு விட்டு வாடகை வாங்கிண்டு இருந்தோம். அதுக்கு அப்பறம் ப்ரேமா வளைகாப்பு சீமந்தம், டெலிவரி, அது முடிஞ்சு அவளுக்கும் அவ குழந்தைக்கும் நகை வாங்கி போட அது இதுன்னு கைல இருந்த பணத்துக்கு மேல நிறைய கடன் வாங்கினா"

ஆனந்த், "கைல இல்லாதச்சே ஏன் அவ்வளவு ஆடம்பரம்?"

ப்ரீதி, "எல்லாம் வரட்டு ஜம்பம். அக்காவும் அவளை நன்னா எக்ஸ்ப்ளாய்ட் பண்ணிண்டா"

ஆனந்த், "ஆண்டி இன்னும் கடன் வாங்கிண்டே இருக்காங்களா?"

ப்ரீதி, "இல்லை. பி.ஈ முடிச்சதும் பணம் சம்மந்தப் பட்ட பொறுப்பெல்லாம் அம்மாட்ட இருந்து நான் எடுத்துண்டேன். மாசா மாசம் ஆத்து செலவுக்கு தேவையானதை மட்டும் அவளண்டே கொடுக்கறேன். மத்ததெல்லாம் நான் தான் பாத்துக்கறேன்"

ஆனந்த், "நீ ரெண்டு வருஷம் ஆன்-சைட் போனா கடன் எல்லாத்தையும் அடைச்சுடுவியா?"

ப்ரீதி, "கடன் எல்லாத்தையும் அடைச்சுட்டு ப்ரியா எம்.ஸி.ஏவுக்கும் சரியா இருக்கும்"

ஆனந்த், "ப்ரசாத் காலேஜுக்கு?"

ப்ரீதி, "ஆன்-சைட் போயிட்டு வந்தப்பறமும் சம்பாதிச்சுண்டுதானே இருக்கப் போறேன்? ஐ கேன் மேனேஜ்"

ஆனந்த், "ம்ம்ம்ம் "

ப்ரீதி, "என்ன சொல்றேள்? எனக்கு ஹெல்ப் பண்ணறேளா?"

ஆனந்த், "மொதல்ல இந்த மாதிரி எனக்கு ப்ராமணாத்து மரியாதை வேண்டாம். நீ வா போன்னு பேசு"

ப்ரீதி அடுத்த நொடி விகல்பம் சிறிதும் இல்லாமல், "சரி. ஹெல் பண்ணறியா" என்றாள்

ஆனந்த், "ஹா ஹா ஹா ... ஐ வில் டேக் ஸ்டாக் ஆஃப் திங்க்ஸ் அண்ட் டெல் யூ (I will take stock of things and tell you). என்னால் முடிஞ்சதை நிச்சயம் செய்யறேன். ஓ.கே?"

ப்ரீதி, "ஓ.கே. தாங்க்ஸ் ஆனந்த். எப்போ சொல்வேள் .. இல்லை .. எப்போ சொல்வே"

ஆனந்த், "அடுத்த வாரம் சொல்றேன்" என்றபடி விடை பெற்றான்.


அடுத்த வாரம் மீட்டிங்க் முடிவதற்கு அடங்கா ஆவலுடன் காத்து இருந்தாள். மீட்டிங்க் முடிந்த பிறகு எதுவும் சொல்லாமல் ஆனந்த் விடை பெற்றான். சிறிது நேரத்தில் அன்று மாலை அவளது கைபேசி மூலம் தொடர்பு கொள்வதாக அவனிடம் இருந்து ஒரு ஈமெயில் வந்தது.

மாலை கைபேசியில் அழைத்தான்.

ஆனந்த், "எங்கே இருக்கே?"

ப்ரீதி, "ஆஃபீஸில் என் சீட்டில்"

ஆனந்த், "வெளில எங்கேயானும் போயிட்டு ஒரு மிஸ்ட் கால் கொடு"

சற்று நேரத்தில் வெளியில் புல் வெளியில் போடப் பட்ட பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து ஆனந்தை அழைத்தாள். இணைப்பைத் துண்டித்த மறு நிமிடம் அவனிடம் இருந்து அழைப்பு வந்தது.

ப்ரீதி, "எஸ் ஆனந்த்"

ஆனந்த், "ப்ரீதி, நீ இந்த ப்ராஜெக்ட்டில் ஆன்-சைட் வர சான்ஸ் இருக்காது. ஐ அம் சாரி"

ப்ரீதி, "ஆனா, உன்னால இந்த ப்ராஜெக்ட்டை தனியா மேனேஜ் பண்ண முடியாதுன்னு ..."

ஆனந்த், "யார் சொன்னா?"

ப்ரீதி, "தப்பா எடுத்துக்காதே ஆனந்த். உனக்கு நிறைய வேலை இருக்கும். எல்லாத்தையும் உன்னால தனியா செய்ய முடியாதுன்னு சொன்னாங்க"

ஆனந்த், "என்னால முடியும் ப்ரீதி. அனாவிசியமா க்ளையண்டுக்கு செலவை அதிகரிக்க விரும்பலை"

ப்ரீதி, "ப்ளீஸ் ஆனந்த். என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப் பாரேன். க்ளையண்ட் என்ன சின்ன கம்பெனியா அவங்க பெரிய மல்டி நேஷனல்தானே. என் ஒருத்திக்கு ஆன்-சைட் அசைன்மென்ட் கொடுத்தா அவாளுக்கு பெரிய நஷ்டம் ஆயிடாது"

இறுக்கமான குரலில் ஆனந்த், "சாரி ப்ரீதி. அந்த மாதிரி என்னால யோசிக்க முடியாது"

மேலும் எதுவும் பேசாமல் கோபத்தில் ப்ரீதி இணைப்பைத் துண்டித்தாள். கண்களில் நீர் வழிய சிறிது நேரம் அந்த இடத்திலேயே அமர்ந்து இருந்தாள்.

அடுத்த நாள் ஆனந்துடன் பேசியதை சுரேஷிடம் பகிர்ந்து கொண்டாள். அவளை வெங்கட்டிடம் சுரேஷ் அழைத்துச் சென்றான். நடந்ததைக் கேட்ட வெங்கட், "எல்லா வேலையும் அவனே செஞ்சா வாரத்துக்கு ஐம்பது அல்லது அறுவது மணி நேரத்தில் முடிச்சுடலாம். அவனுக்கு எக்ஸ்ட்ரா பணம் வேணும் அதனால வேண்டாங்கறான். டிபிகல் இண்டியன் மெண்டாலிடி. ஐ அம் சாரி ப்ரீதி" என்று கை விரித்தார்.

தன் தலைவிதியை நொந்து கொண்டு தன் பணியை தொடர்ந்தாள். அதன் பிறகு வாரா வாரம் நடக்கும் ரிவ்யூ மீட்டிங்கில் கலந்து கொள்வதை முடிந்த வரை தவிற்த்தாள். ஆனந்த்தின் மேல் அடக்க முடியாத கோவம் அவள் மனதில் கொழுந்து விட்டு எரிந்தது.

சில நாட்களில் அவளது அலுவலகத் தொலைபேசியில் ஒரு அழைப்பு அந்தது.

ப்ரீதி, "ஹல்லோ. ப்ரீதி ஹியர்"

எதிர்முனையில், "ஹல்லோ. நான் ஸ்டாக் ப்ரோக்கர் சுதர்சனம் பேசறேன். நீங்க குன்னூர் சதாசிவத்தின் மகள்தானே?"

ப்ரீதி, "ஆமா"

சுதர்சனம், "உங்க அப்பா வாங்கி இருந்த ஷேர் விஷயமா என்னோட ஆஃபீஸுக்கு நீங்க கொஞ்சம் வரணும்"

ப்ரீதி, "நீங்க எங்கே இருக்கீங்க?"

சுதர்சனம், "என் ஆஃபீஸ் இன்ஃபன்ட்ரி ரோடில் தொடக்கத்தில் இருக்கும் காப்பர் ஆர்ச் பில்டிங்கில் இருக்கு. நம்பர் 207. சுதர்சனம் அண்ட் அஸோஸியேட்ஸ்ன்னு போர்ட் போட்டு இருக்கும்"

ப்ரீதி, "எங்க அப்பா கோவைல இருந்த ப்ரோக்கர் மூலம்தானே வாங்கினார்ன்னு எங்க மாமா சொன்னார்?"

சுதர்சனம், "சில ஷேர்ஸ் அவர் சார்ப்பா என்னை ஆன்-லைன்னில் வாங்க சொல்லி இருந்தார். அவர் டீமாட் அக்கௌண்ட் பாஸ்வர்ட் இருந்ததால நான் அதை ஆபரேட் பண்ணிட்டு இருந்தேன். நீங்க நேர்ல வாங்க விவரமா சொல்றேன்"

ப்ரீதி (நடுங்கும் குரலில்), "அவர் கொடுக்க வேண்டிய பாக்கி எதாவுது இருக்கா?"

சுதர்சனம், "அதெல்லாம் ஒண்ணும் இல்லைம்மா நீ நேர்ல வா சொல்றேன்"



ப்ரீதி,"எனக்கு ஆஃபீஸ் முடிய நாழியாயிடும். ஏழு மணி வாக்கில வந்தா பரவால்லியா?"

சுதர்சனம், "நோ ப்ராப்ளம். நான் எப்படியும் எட்டு மணி வரைக்கும் ஆஃபீஸில் இருப்பேன். கதவு மூடியிருந்தா பெல் அடி"

அன்று மாலை சுதர்சனம் அண்ட் அஸ்ஸோஸியேட்ஸ் அலுவலகத்தில் இருந்தாள்.

சிரித்த முகத்துடன் சுதர்சனம், "வா ப்ரீதி" என்று வரவேற்றார்.

சுதர்சனம், "சாரி, உங்க அப்பா காலமானது எனக்கு தெரியாது" என்று தொடங்கி அவள் குடும்பத்தின் நலன் விசாரித்தார். அவளது பணியைப் பற்றி கேட்டார்.

ப்ரீதி, "என்னை எதுக்கு வரச் சொன்னேள்?"

சுதர்சனம், "உங்க அப்பாவுக்காக நான் சில கம்பெனி ஷேர்ஸ் வாங்கி இருந்தேன். வாங்கினப்ப அதோட விலை ரொம்ப கம்மி. ரீஸெண்டா அந்த கம்பெனிகளோட ஷேர் விலை எல்லாம் ரொம்ப அதிகமாச்சு. அப்போ வித்தேன். வித்து வந்த பணத்தை கொடுக்கத்தான் உன்னை வரச்சொன்னேன்"

ப்ரீதி, "எவ்ளோ பணம்?"

சுதர்சனம், "பனிரெண்டு லட்சம்"

ஒரு கணம் மலைத்த ப்ரீதி, ஆற்றாமை மனதை நிறப்ப தலை குனிந்து குலுங்கி அழுதாள். அவரது நாற்காலியில் இருந்து எழுந்து வந்த சுதர்சனம் அவளருகே வந்து அவள் தலையை தடவி, "நீ ரொம்ப கஷ்டத்தில் இருந்தேயேன்னோ அதான் பகவானே உனக்கு உதவி இருக்கர்" என அசுவாசப் படுத்தினார்.

ப்ரீதி, "ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்"

சுதர்சனம், "பரவால்லைம்மா. ஆனா இந்த பணம் வந்த விஷயத்தை உங்க மாமாட்ட சொல்லாதே"

ப்ரீதி, "ஏன்?"

சுதர்சனம், "அவர் உன் அப்பாவையும் உங்க அம்மாவையும் ஏமாத்தி இருக்கார்ன்னு நினைக்கறேன். இந்த மாதிரி வேற ஷேர்ஸும் நிச்சயம் இருந்து இருக்கும். சோ, இனி மேல் அவரண்டே கொடுக்கல் வாங்கல் எதுவும் வேண்டாம்"

ப்ரீதி, "அவர் அரேஞ்ச் பண்ணிக் கொடுத்த பத்து லட்சத்தை திருப்பிக் கொடுக்கச்சே கேப்பரே?"

சுதர்சனம், "கம்மி வட்டில ஆஃபீஸ்ல பர்ஸனல் லோன் வாங்கினதா சொல்லு"

ப்ரீதி, "சரி அங்கிள்"

சுதர்சனம், "இனிமேல் எந்த ஹெல்ப் வேணும்னாலும் என்னண்டே கேளு. ஓ.கே?"

ப்ரீதி, "இந்த ஹெல்ப்பை நான் வாழ் நாள் முழுக்க மறக்க மாட்டேன்"

சுதர்சனம், "என்ன் அப்படி சொல்லிட்டே. இன்னும் எவ்ளவோ இருக்கு" என புதிர் போட்டார்.

ப்ரீதி, "இன்னும்ன்னா?"

சுதர்சனம், "ஒண்ணும் இல்லைம்மா. சும்மா சொன்னேன்"

அடுத்த வாரத்தில் அவள் தாய் வாங்கி இருந்த கடனை எல்லாம் அடைத்து பாக்கித் தொகையை ப்ரியா-ப்ரசாத் படிப்புக்காக ஒரு ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டாள். விலகி இருந்த புன்னகை அவள் முகத்தில் மறுபடி குடுயேறத் தொடங்கி இருந்தது.

ஆனந்த் மேல் இருந்த கோபம் மட்டும் அவள் மனதில் அடங்கவில்லை.

அடுத்த வார ரிவ்யூ மீட்டிங்கின் முடிவில் அவளே ஆனந்தை அழைத்து, "ஆனந்த், எனக்கு ஆன்-சைட் அசைன்மெண்ட் தேவை இல்லை. ஃப்ரெண்டாச்சே ஹெல்ப் பண்ணிவேன்னு கேட்டேன். பகவானே நேக்கு ஹெல்ப் பண்ணி இருக்கர்"

ஆனந்த், "ஐ ஆம் சோ ஹாப்பி ப்ரீதி"

ப்ரீதி, "சும்மா பொய் சொல்லாதே. நீ அதிகமா சம்பாதிக்கணும்ன்னு என்னை வர வேண்டான்னு சொன்னே இல்லை?"

ஆனந்த், "நீ தப்பா புரிஞ்சுண்டு இருக்கே"

ப்ரீதி, "நீ எதுவும் சொல்ல வேண்டாம். குட் பை" என இணைப்பைத் துண்டித்தாள்.

அடுத்த ஒன்றரை வருடங்களும் ப்ரீதி அந்தப் ப்ராஜெக்டில் கழித்தாள். அவ்வப்போது மட்டும் ஆனந்துடன் பேச நேரிடும். பணியைத் தவிற வேறு எதுவும் அவனிடம் பேசுவதைத் தவிர்த்தாள்.

ப்ராசாத் ப்ளஸ்-டூ மற்றும் ஐ.ஐ.டி தேர்வுகளுக்குப் படித்துக் கொண்டு இருந்தான். ப்ரேமா எம்.ஸி.ஏ இரண்டாம் ஆண்டில் இருந்தாள்.

கடன்கள் அனைத்தும் அடைக்கப் பட்டு ப்ரேமா, ப்ரசாத் படிப்புச் செலவுக்கும் தேவையானவற்றை ஒரு அளவுக்கு ப்ரீதி சேமித்து வைத்து இருந்தாள்.

அந்த நிறுவனத்தில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் ஆன்-சைட் செல்வதற்கு வாய்ப்பு வரவில்லை என்ற ஆதங்கம் மட்டும் அவள் மனத்தை உருத்திக் கொண்டு இருந்தது.

தெரிந்தவரிடம் வேறு நிறுவனத்தில், அதுவும் ஆன்-சைட் வாய்ப்பு அளிக்கும் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளதா என்று விசாரித்தவாறு இருந்தாள். மேலும் சம்பாதிக்க வேண்டும் என்ற உந்துதலை விட ஆனந்துக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற உந்துததலாலே அவள் ஆன்-சைட் வாய்ப்புக்காக அதிகம் ஏங்கினாள்.

ஒரு நாள் ஷா சிஸ்டம்ஸ் என்ற சிறு நிறுவனத்தின் உரிமையாளர் விக்ரம் ஷா அவளுக்கு அழைப்பு விடுத்தார். தன் நிறுவனத்தில் சேர்ந்தால் ஆறு மாதம் இந்தியாவில் கழித்த பிறகு அமெரிக்காவில் ஆன்-சைட் வாய்ப்பு அளிப்பதாகக் கூறினாள்.

2007ன் தொடக்கம்
அவள் வேலையில் இருந்த பெரிய நிறுவனத்தை விட்டு விலகி ஷா சிஸ்டம்ஸ்ஸில் பணிக்குச் சேர்ந்தாள். சேர்ந்த ஒன்றிரண்டு மாதங்களில் விக்ரம் ஷா அவளை அழைத்து வெவ்வேறு விண்ணப்பங்களில் கையொப்பம் இடக் கூறினார்.

ப்ரீதி, "இதெல்லாம் என்ன சார்?"

விக்ரம் ஷா, "ஷா சிஸ்டம்ஸ் அப்படிங்கறது ஒரு அம்ப்ரலா கம்பெனி. ஒவ்வொரு ப்ராஜெக்டும் வெவ்வேற கம்பெனி பேரில் எடுப்பேன். அப்பத்தான் இன்கம் டாக்ஸ்ஸை குறைக்கலாம். உனக்கும் உன் பழைய கம்பெனியில் இருந்ததை விட அதிகம் கொடுக்க முடியுது அதுவும் கேஷா கொடுக்க முடியுது. இந்த அப்ளிகேஷன் ஷா ஸியாட்டில் ப்ராஜெக்ட்ஸ் அப்படின்னு ஒரு புதுக் கம்பெனிக்கான ரெஜிஸ்ட்ரேஷன் விண்ணப்பம். அதில் நீயும் ஒரு பங்குதாரர். அதான் உன்னை கையெழுத்துப் போடச் சொன்னேன்"

ப்ரீதிக்கு விக்ரம் ஷாவின் மேல் அலாதி மரியாதை பிறந்தது.

சில மாதங்களில் ஒரு நாள் அவள் பணியாற்றும் ப்ராஜெக்டில் எவ்வளவு நபர்கள் பணியாற்றுகிறார்கள் என்ற பட்டியலில் உண்மையில் அந்தப் ப்ராஜெக்டில் இல்லாத சில நபர்களின் பெயர்களைப் பார்த்தாள். விக்ரம் ஷாவிடம் அந்தப் பட்டியலை எடுத்துச் சென்று காட்டினாள்.

விக்ரம் ஷா, "இதெல்லாம் பெரிய தலைகள் இன்வால்வ் ஆன விஷயம். நீ கண்டுக்காதே. இன்னும் ரெண்டு மாசத்தில் நீ யூ.எஸ்ஸில் இருப்பே. அங்கே இருக்கும்போதும் நம்ம கூட மீட்டிங்க் நடக்கும்போதும் க்ளையண்ட்கிட்ட இந்த மூணு பேரும் ப்ராஜெக்டில் இருக்கறதா சொல்லணும்"

ப்ரீதி, "பொய் சொல்லச் சொல்றீங்களா?"

விக்ரம் ஷா, "என்ன ப்ரீதி இது? ஒண்ணும் தெரியாத அப்பாவியா இருக்கே? எட்டு பேர் செய்ய வேண்டிய வேலையை நீங்க ஆறு பேர் செய்யறீங்க. அதுக்காக உங்க ஆறு பேருக்கும் அதிக சம்பளம் கொடுத்து இன்கம் டாக்ஸ் வராத மாதிரி நான் பாத்துக்கறேன். அதுக்கு பதிலா ப்ராஜெக்டில் எட்டு பேர்தான் இருக்காங்கன்னு சொல்லி க்ளையண்ட்கிட்ட சார்ஜ் செய்யறோம். நான் முன்னே சொன்ன மாதிரி அங்கே இருக்கும் பெரிய தலைகளுக்கும் இதில் பங்கு இருக்கு. நீ இதைப் பத்தி எல்லாம் கண்டுக்கக் கூடாது. ஓ.கே?"

ப்ரீதி, "சரி சார்"

அவள் மனதில் அவர் மேல் வைத்து இருந்த மரியாதை மறையத் தொடங்கியது.

அடுத்த இரண்டு மாதங்களில் அவள் அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்தாள். அமெரிக்காவின் வட மேற்க்குக் கோடியில் இருக்கும் வாஷிங்க்டன் மாநிலத்தின் தலை நகரான ஸியாட்டல் நகரில் பணி. அங்கு முன்பு இருந்தே ஆன்-சைட் கோஆர்டினேடராக (முன்பு ஆனந்த் இருந்தது போல்) பணியாற்றி வந்த ஒரு சக ஊழியருக்கு உதவுவதே அவள் பணி என்று க்ளையண்டிடம் விக்ரம் ஷா சொல்லி இருந்தார். முதல் நாள் சக ஊழியரான சுகுமாரை சந்தித்த போது,

சுகுமார், "வெல்கம் டு யூ.எஸ் ப்ரீதி. ஃபோனில் பேசினாலும் முதல் தரம் மீட் பண்ணறோம்" என்றபடி கைகுலுக்கினான்

ப்ரீதி, "ஹெல்லோ சுகுமார்"

சுகுமார், "ஸ்டே வசதியா இருக்கா? எங்கே தங்கி இருக்கே?"

ப்ரீதி, "என் பழைய கம்பெனியில் இருந்து சிலர் இங்கே வந்து இருக்காங்க. அவங்க எல்லாம் சேந்து ஒரு ஃப்ளாட் எடுத்து இருக்காங்க. அதில் ஒரு ரூம் காலியா இருந்தது. அதில் தங்கி இருக்கேன்"

சுகுமார், "ஹே, அப்ப நிறைய காசு மிச்சமாகுமே?"

ப்ரீதி, "ஆமாம். அதுமட்டும் இல்லை. ஃப்ரீ டைமில் தனியா இருக்க வேண்டாம்"

சுகுமார், "ஃப்ரீ டைமா? சில வீக் எண்ட்ஸ் மட்டும்தான் உனக்கு ஃப்ரீ டைம் கிடைக்கும். விக்ரம் ஷா சொல்லலையா?"

ப்ரீதி, "என்ன?"

சுகுமார், "ப்ராஜெக்டில் பெங்களூரில் இருந்து செய்யற வேலையை நீ இங்கே இருந்து செய்யணும். வாரத்தில் பத்து மணி நேரம் தான் எனக்கு உதவறது. பாக்கி நேரத்துக்கு உனக்கு பெங்களூரில் இருந்து வேலை அசைன் ப்ண்ணுவாங்க"

ப்ரீதி, "எதுக்கு?"

சுகுமார், "க்ளையண்டைப் பொறுத்த மட்டில் உன் முழு நேர வேலை எனக்கு உதவறது. அதுக்கான பணத்தை விக்ரம் ஷா கறந்துடுவாரு. ப்ராஜெக்டில் எக்ஸ்ட்ராவா ஒண்ணு ரெண்டு பேர் இருக்கறதா போட்டு இருப்பார். ஆனா அப்படி யாரும் இருக்க மாட்டாங்க. அந்த மாதிரி ஆளுங்க செஞ்சதா சொல்ற வேலை எல்லாம் நீ இங்கு இருந்துட்டு செய்யணும்"

ப்ரீதி, "அப்ப நீ வாரம் நாப்பது மணி நேரம் மட்டும்தான் வொர்க் பண்ணுவியா?"



சுகுமார், "ம்ம்ம்ஹூம். நாப்பது மணி நேரம் ஆன்-சைட் கோஆர்டினேட்டர் வேலை. கூட ப்ராஜெக்ட் சம்மந்தப் பட்ட வேலையும் இருக்கு. அதாவுது பெங்களூரில் இருக்கறவன் செஞ்சதா சொல்ற வேலை. உனக்கு விக்ரம் ஷாவைப் பத்தி முழுசா தெரியாதுன்னு நினைக்கறேன். விட்டா காளைமாட்டுல இருந்து பால் கறக்கறவன்"

ப்ரீதி, "சரி, க்ளையண்ட்டுக்கு இதெல்லாம் தெரியாம இருக்குமா?"

சுகுமார், "இது ஒரு பெரிய கம்பெனி. ஆயிரக்கணக்கானவங்க வேலை செஞ்சுட்டு இருக்காங்க. இது எல்லா அவங்க கண்ணுக்கு படாது. படாத மாதிரி பாத்துக்க உள்ளுக்குள்ளயே விக்ரம் ஷாவுக்கு ஆள் இருக்கு"

சில உண்மைகள் அவளுக்குப் புலப் பட்டன. இரண்டு வருடங்களுக்கு முன்னம் ஆனந்தும் சுகுமார் இருந்த நிலையில் இருந்தான். வாரத்துக்கு அதிகப் படியாக பத்தோ இருபதோ மணி நேரங்கள் பணியாற்றி வாடிக்கையாளருக்கு ஆகும் செலவைக் குறைத்து இருக்கிறான் என்று உணர்ந்தாள். தன் சுயநலத்துக்காக உதவிக்கு ஆள் தேவை இல்லை என மறுத்தான் என தானும் அவன் மேல் தவறான பழி போட்டதை எண்ணி மனம் வருந்தினாள். தவிற விக்ரம் ஷாவிடம் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உணர்ந்தாள்.


No comments:

Post a Comment