Thursday, April 23, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 1

உண்மையில் நடந்த ஒரு தீ விபத்தின் பின்னணியில் என் கற்பனையில் பிறந்த இரு ஜோடி காதலர்களின் கதையை நுழைத்து இருக்கிறேன்.

Tuesday, 23 Feb 2010
Bangalore

Nine people died and 60 others were injured, many of them seriously, after a major fire broke out today evening around 4:30 at the Carlton Towers in Bangalore.

Three persons died due to fatal injuries after jumping from the top floors of the building while six lost their lives due to severe burns and asphyxiation, sources at Manipal

Manipal Hospital claimed that 7 people were dead on arrival. Most died of suffocation.

Names of those dead were: ….

Many lives were saved by brave and timely action by two youngsters namely Sivakumar and Anand Vaitheeswaran. Ironically, each of these youngsters braved their lives primarily to save their loved ones. Both their fiancés survived the accident with minor injuries.



செவ்வாய், 23 ஃபெப்ரவரி, 2010
பெங்களூர்

பழைய விமான நிலைய சாலை மேம்பாலத்துக்கு அருகே இருந்த கார்ல்டன் டவர் கட்டிட்த்தில் செவ்வாய் அன்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது நபர்கள் உயிரிழந்தனர். மேலும் எழுபது பேருக்கு மேல் காயமுற்றனர். பலர் அதில் படுகாயமுற்று மணிபால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களில் மூன்று நபர்கள் கட்டிட்த்தில் மேல் தளத்தில் இருந்து கீழிறங்க வழியின்றி குதித்ததனால் உயிரிழந்தனர். மற்ற ஆறு நபர்கள் தீக் காயத்தினாலும் மூச்சடைப்பினாலும் உயிரிழந்தனர் என்று மணிபால் மருத்துவமனை அறிவித்தது.

இறந்தவர்களில் ஏழு பேர் மருத்துவமனைக்கு வரும்போதே உயிரிழந்து இருந்தனர் என்றும் அம்மருத்துவமனை அறிவித்துள்ளது.

இறந்தவர்களின் பெயர்கள் ....

சிவகுமார் மற்றும் ஆனந்த் வைதீஸ்வரன் என்ற இரு இஞையர்கள் இந்த விபத்தில் தங்கள் உயிரை பணையம் வைத்து தங்களில் சமயோசிதச் செயல்களால் பல உயிர்களை காப்பாற்றியுள்ளனர். அவ்விருவரும் அவரவர் காதலியை காப்பாற்ற எண்ணியே தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்த தளங்களுக்குச் சென்றது குறிப்பிட்த்தக்கது. அவர்கள் இருவரின் காதலியரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். 



4:30க்குப் பற்றிய தீப் பிழம்புகள் 6:30 மணியளவில் முற்றிலும் அணைந்து எஞ்சி இருந்த கரும்புகையும் குறைந்து கொண்டு இருந்தது. கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரையும் வெளிக் கொண்டு வரும் பணியின் இறுதிக் கட்டத்தில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு இருந்தனர். உள்ளே இருக்கும் தஸ்தாவேஜுகளை வெளியே எடுத்து வர தீயணைப்புப் படையினரின் அனுமதிக்காக அக்கட்டிடத்தில் இருந்த நிறுவனங்களின் மேனேஜர்களும் உரிமையாளர்களும் கட்டிடத்தின் எதிரே ஒரு புறம் காத்து நின்றனர்.

இன்னொரு புறம் தீயிலிருந்து தப்பிப் பிழைத்துக் கட்டிடத்துக்கு வேளியே வந்தவர்களில் சிலர் மட்டும் நின்று இருந்தனர்.

அக்கூட்டத்தில் ஒரு மூலையில் செல்வி நின்று கொண்டு இருந்தாள். ஐந்தடி இரண்டு அங்குல உயரம். காப்பிக் கொட்டைக்கும் கார் மேகத்துக்கும் இடைப்பட்ட ஒரு நிறம். பேசும் கண்கள். சிரித்தால் சற்றே தடித்த உதடுகளுகக்கு இடையே பளீரிடும் முத்துப் பற்கள். குடுமியாகப் போட்டாலும் கொண்டை போல் தெரியும் அளவுக்கு இடைவரை வழியும் கூந்தல். கோவில் சிற்பம் போன்ற அங்க அளவுகள். அவள் அணிந்து இருந்த மயில் கழுத்து நிறமும் மஞ்சள் நிறமும் கலந்த சுடிதார் அங்கும் இங்கும் ஈரமாகவும் சில இடங்களில் தெப்பலாகவும் தீயணைப்புப் படையினரின் நீர் தெளிப்பால் நனைந்து பிரம்மன் செதுக்கி வைத்த அவள் உருவமைப்பை தம்பட்டம் போட்டபடி இருந்தது. தீயுக்கு மிகவும் பிடித்த அவளது ஜார்ஜெட் துப்பட்டாவையும் அது தீப்பிடிக்காமல் இருக்க அவளது வருங்காலக் கணவன் எப்போதோ உருவி எறிந்து இருந்தான். அந்த இக்கட்டான சூழலிலும் அவளது மேனி வனப்பை வெட்கமின்றி வெறித்துக் கொண்டு இருந்த சிலரை பொருட்படுத்தாமல் அவள் நின்று கொண்டு இருந்தாள். புகையினால் சிவந்து தீப்பிழம்பாக ஜொலித்த அவளது வரைந்து வைத்த விழிகளில் இருந்து தாரை தாரையாக பொங்கி வழிந்த கண்ணீர் அவளது கன்னங்களை நனைத்த படி இருந்தது. அழுகை அவளது உதடுகளைப் பிதுக்கி உடலைக் குலுக்கியபடி இருந்தது.

இன்னொரு மூலையில் தோற்றத்தில் முற்றிலும் மாறுபட்ட ப்ரீதி நின்று கொண்டு இருந்தாள். ஐந்தடி ஆறு அங்குல உயரம். கோதுமைக்கும் அறுத்த நெல்லுக்கும் இடைப்பட்ட நிறம். சற்றே ஒடிசலான தேகம். அந்தத் தேகத்துக்கு மெறுகு கூட்டும் முன் பின் அழகுகள். தோளுக்கு சற்றே கீழ்வரை படர்ந்த கூந்தல். ரோஜா வண்ணமும் கடல் நீல வண்ணமும் கலந்த அவள் அணிந்து இருந்த சுடிதாரும் நனைந்து இருந்தது. புகையினால் சிவந்து இருந்தாலும் கண்ணீர் பொங்கி வழிந்தாலும் அவள் கண்கள் தீர்க்கமாக மேல் நோக்கிப் பார்த்தபடி இருந்தன. மெலிந்த உதடுகள் ஏதோ ஸ்லோகத்தை முணுமுணுத்தபடி இருந்தன. அவ்வப்போது வந்த மெல்லிய விசும்பல் மட்டும் அவள் அழுவதை காடிக் கொடுத்தது.

இரு கன்னியரின் கண்களும் எதிரில் இருந்த கட்டிடத்தின் மேல் தளங்களைக் கண்ட வாரு தவம் கிடந்தன.

கட்டிடத்தின் உள்ளே இருந்தவர் அனைவரும் அகற்றப் பட, தீயணைப்புப் படையினர் வெளி வரத் தொடங்கினர். அப்போது மேல் தளத்தில் இருந்து எளிதாக கீழிறங்குவதற்காக தீயணைப்புப் படையினர் கட்டி இருந்த கயிறுகளில் இரு இளைஞர்கள் சறுக்கிக் கொண்டு தரையிறங்கினர்.

5 அடி 9 அங்குல உயரமும் ஈட்டிக் மர நிறமும் அதைவிட உறுதியான தேகமும் கொண்ட சிவா முதலில் தரையிறங்கினான். அடுத்த கணம் செல்வியை நோக்கி நடந்தான்.

ஆறடி உயரமும் மூங்கில் நிறமும் அதைப் போன்றே முறுக்கேறிய உடலும் கொண்ட ஆனந்த் அடுத்த கணம் தரையிறங்கினான். அவன் அடியெடுத்து வைக்குமுன் ப்ரீத்தி அவனருகே வந்து இருந்தாள்.

புஜங்களைப் பற்றி இழுத்தவனின் நெஞ்சில் தஞ்சம் புகுந்த செல்வி, "பொறுக்கி. இன்னேரம் எனக்கு உயிரே போயிருச்சு" என்றாள். தன்னவனின் மார்பில் முகம் புதைத்து விசும்பினாள்.

எதிரே நின்றவனின் தலைமுடியைப் பற்றி உலுக்கிய ப்ரீத்தி, "எருமை மாடு. மனசுல உனக்கு ரஜனின்னு நினைப்பா?" என்றாள். அவனைக் கட்டிப் பிடித்த அடுத்த கணம் அவ்வளவு நேரமும் அடக்கி வாசித்த அழுகை மடை திறந்த வெள்ளமாகி கேவலுடன் வெளிப்பட்டது.

சிவா, "இன்னாம்மா இது? இங்கே பாரு எனக்கு ஒண்ணியும் ஆவலை"

ஆனந்த், "ஏய், என்னாச்சு உனக்கு? உன் கிட்ட சொல்லிட்டுத்தானே போனேன்? ஃவொய் ஆர் யூ கெட்டிங்க் இமோஷனல்? பாரு எனக்கு ஒண்ணு ஆகல"

மங்கையர் இருவரும் தத்தம் ஆற்றாமை அடங்கும் அவரை கட்டியணைத்தபடி நின்று இருந்தனர். ஆடவருக்கு அவர்களை சமாதானப் படுத்த வெகு நேரம் ஆனது.

அழுகை நின்று மூக்கை உறிஞ்சிய படி செல்வி, "ஃபோர்த் ஃப்ளோர்ல இருந்து குதிச்சப்ப தலையில் அடிபட்டு நந்தகுமார் செத்துட்டான். வெள்ளைத் துணி போத்தி எடுத்துட்டுப் போனாங்க"

அதே சமயம் ப்ரீதி, "விக்ரம் ஷா ஃபோர்த் ஃப்ளோர்ல இருந்து குதிச்சு இருக்கார். ஹீ டிண்ட் மேக் இட். உடம்பைப் போத்தி ஸ்ட்ரெச்சர்ல எடுத்துட்டுப் போனாங்க"

ஆடவர் இருவரும் அதற்கு தத்தம் காதலியிடம் சொன்னது, "தெரியும்"

அதற்கு மங்கையர் இருவரும் கண்களில் பயத்துடன் தத்தம் காதலனிடம் "ஆனா ... " என்று முறையிட,

இருவருக்கும் "பயப் படாதே" என்று பதில் வந்தது.

சிவா தன் பாக்கெட்டில் இருந்து செவ்வக வடிவமைந்த ஒரு கருப்பு நிற சிறு தகட்டைக் காட்டினான். பிறகு செல்வியிடம், "செல்ஃபோன்ல இருந்த மெமரி கார்ட். உருவீட்டேன்" என்றபடி சிரித்தான்.

ஆனந்த் தன் சட்டைக்கு உள்ளே இருந்து அதே வடிவமைந்த கருப்பு நிற பெட்டி போன்ற ஒரு பொருளைக் காட்டி, "லாப்டாப் ஹார்ட் டிஸ்க். உருவீட்டேன்" என்றபடி சிரித்தான்.

அளவு கடந்த மகிழ்ச்சி கண்கள் கொப்பளித்த மங்கையர் இருவரும் காதலரைக் கட்டியணைக்க,

அவர்கள் இருவரும் தத்தம் வருங்கால மனைவியிடம், "இப்போ கல்யாணத்துக்கு ஓ.கேதானே?" என்று கேட்டதற்கு இருவருக்கும் நெஞ்சில் புதைத்த முகத்தின் ஆமோதிப்புக்கான அசைவு மட்டுமே பதிலாக கிடைத்தது.


ப்ரீதி - ஆனந்த்

2004ன் எல்லை ...

பெங்களூரின் எல்லையில் இருந்த எலெக்ட்ரானிக்ஸ் ஸிடி பகுதியில் தலைமையகத்தைக் கொண்ட அந்த நிறுவனம் இந்தியாவின் தலை சிறந்த மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று. அந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் பல கட்டிடங்களுக்குப் பரவி இருந்தன. அதில் ஒன்றில் வெங்கட் சுப்ரமணியன், டெலிவரி மேனேஜர் என்ற பெயர்ப் பலகை தொங்கிக் கொண்டு இருந்த அறை இருந்தது. அந்த அறைக்கு வெளியே களையான முகம் கல்லாக உறைந்து இருக்க களையற்ற சுடிதார் ஒன்றை அணிந்து அருகே அமர்ந்து இருந்த காரியதரிசியைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டு இருந்தாள் ப்ரீதி சதாசிவம், சாஃப்ட்வேர் எஞ்சினியர்.

தாயிடமிருந்து அவள் பெற்ற வெண் கோதுமை நிறம் குன்னூர் குளிரில் பிறந்து வளர்ந்ததால் மேலும் ஜொலித்தது. அளவெடுத்துச் செதுக்கிய முகம். சற்றே அகண்ட நெற்றி. சிறிதளவே ஐப்ரோ ஷேப்பிங்க் செய்தால் ஐஷ்வர்யா ராயைத் தோற்கடிக்கும் அளவுக்கு இயற்கையிலேயே வளைந்த புருவங்கள். அழகான கயல் விழிகளில் இருந்தும் தீர்க்கமான பார்வையே அவைகளில் இருந்து வெளிப்படும். இன்னும் சற்று நீண்டோ, அல்லது நுனி வளைந்தோ இருந்து இருந்தால் கிளி மூக்கு என்றழைத்து, திருஷ்டிக்கு ஏதோ ஒன்று முகத்தில் இருக்கிறது என்று கூறலாம். வரிசை தவறாத முத்துப் பற்கள் இருந்தும் என்ன பயன்? எப்போதோ ஒரு முறை அவள் முகத்தில் தோன்றும் சிறு புன்னகையின் போதுகூட் அப்பற்களை வெளிக்காட்டாமல் அவளது அளவெடுத்த உதடுகள் சற்றே நெளிவதுடன் நிறுத்தி மறைத்துக் கொள்ளும். தேகம் ஒடிசலாக இருப்பினும் தெருவில் நடந்தால் வயது வித்தியாசம் இன்றி பார்ப்பவரை திரும்பி ஒரு முறை பார்க்கவைக்கும் மன்மதக் கலசங்கள். முன்புறம் பார்க்கத் தவிறினாலும் பின்புறம் இருந்து வெறிக்க வைக்கும் பின்னழகு. பராமரிக்கும் நேரத்தையும் பணச் செலவையும் குறைக்க இடைக்கும் மேலே முடியும்படி வெட்டி விடப் பட்ட அடர்ந்த அலை போன்ற கூந்தல்.

எதிரில் இருந்த காரிடோரில் அவள் காதுபட "ஹேய், ஷாப்பர் ஸ்டாப்பில் சேல் போட்டு இருக்கான். சாயங்காலம் போலாமா", "லாஸ்ட் ஃப்ரைடே பார்பெக்யூ நேஷன் போயிருந்தேன். சாப்பாடு அட்டகாசம்", "ஏதுப்பா புது ஜீன்ஸ்? கால்வின் க்ளைனா? அசத்து!", "என்ன பர்ஃப்யூம் அது? ஹ்யூகோ பாஸ்ஸா?" என்பது போன்ற உரையாடல்கள் ஒலித்த வண்ணம் இருந்தன. அவைகளுக்குச் செவி மடுத்தாலும், தன்னால் அவைகளில் பங்கெடுக்க முடியாது என்று உணர்ந்தாலும், தன் நிலையை எண்ணி அவள் ஒரு நாளும் கண்ணீர் வடித்தது இல்லை.

அவள் வாய்விட்டு சிரித்ததை அவள் பணியாற்றிய அந்த நிறுவனத்திலோ, எலெக்ட்ரானிக் ஸிடியிலோ, ஏன் பெங்களூர் மாநகரத்தின் முழுவதிலுமோ யாரும் கண்டது இல்லை. அதற்கான காரணத்தை அலச நாம் இன்னும் ஆறேஏழு வருடங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

அவளது தந்தை சதாசிவம் மறைவுக்கு முன் பெரிய அளவில் சுற்றி இருக்கும் தேயிலைத் தோட்டங்களுக்குத் தேவையான பொருட்களை விற்கும் எஸ்டேட் சப்ளைஸ் நிறுவனத்தின் ஏக உரிமையாளர். இருப்பது போதாதென பங்குச் சந்தையில் விரலை நுழைத்தவர் அதில் கழுத்து வரை மூழ்கி விடுபட முடியாமல் தலைக்கு மேல் கடன் பட்டபின் அவமானத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட சுயநலவாதி. அவர் இறக்கும் போது அவரது மூத்த மகள் ப்ரேமாவுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகி இருந்தது. அடுத்தவளான ப்ரீதி பளஸ் ஒன்னில் இருந்தாள். அதற்கு அடுத்த ப்ரியா ஒரு வருடத்திற்கு முன் பூப்பெய்தி ஒன்பதாம் வகுப்பில் இருந்தாள். அடுத்த கடைக்குட்டி ப்ரசாத் அப்போது ஐந்தாம் வகுப்பில் இருந்தான். சதாசிவத்தின் இறப்பு அவரது அப்பாவி மனைவி அன்னபூரணிக்கும் அறியாப் பருவத்தில் இருந்த மூன்று குழந்தைகளுக்கும் பேரிடியாக விழுந்தது.

அன்னபூரணி கணவன் இறந்தபின் தன் அண்ணனின் உதவியுடன் வியாபாரத்தை விற்று இருந்த கடன்களை அடைத்தபின் எஞ்சி இருந்த பணத்திலும் வீட்டின் விஸ்தாரமான கீழ் பகுதியை வாடகைக்கு விட்டு வந்த பணத்திலும் இருவர் தங்கக் கூடிய மேல் பகுதியில் நால்வரும் அடைபட்டு குடும்பத்தை நடத்தினாள். வீட்டு நிலைமையை தன் தாயைவிட ப்ரீதி முதலில் நன்கு உணர்ந்தாள். அப்போது மறையத் தொடங்கியது அவள் முகத்தில் இருந்த சிரிப்பு.

விரைவில் படிப்பை முடித்து தான் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள். கணிணித் துறை பாமர மக்களிடையிலும் பிரபலமாகத் தொடங்கிய, கலிகால முடிவைப் போல உலகமே Y2K என்று ஜபித்துக் கொண்டு 2000த்தை எதிர் நோக்கிக் கொண்டு இருந்த 1998.



அதற்கு அடுத்த வருடம் ப்ளஸ் டூ முடித்ததும் அவள் பெற்ற மதிப்பெண்களுக்கு எந்தக் கல்லூரியிலும் ப்ரீதிக்கு இடம் கிடைத்து இருக்கும். குடும்பச் சூழலை உணர்ந்து குறைவான கட்டணம் வாங்கும் கோவை அரசுப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தாள். தேசிய படிப்புதவித் தொகையும் பெற்று தாயின் செலவை வெகுவாகக் குறைத்தாள். அக்கல்லூரிக்கு அருகிலேயே இருந்த அன்னபூரணியின் அண்ணன் வீட்டில் தங்கி அதில் ஒரு வேலைக்காரி போல் உழைத்து, மாமனின் காமப் பார்வையையும் மாமியின் குதர்க்கத்தையும் சகித்து படித்து வந்தாள்.

மகள் படித்து முடித்ததும் விடிவு காலம் வந்து விடும் என்று அன்னபூரணி அந்த நான்கு வருடங்களையும் கழிக்க எண்ணி இருந்தாள்.


ப்ரீதி பி.ஈ சேர்ந்த இரண்டாம் வருடம் மூத்தவள் ப்ரேமா கருவுற்றாள். ஏழாம் மாதத்தில், முன்னர் சதாசிவம் வாக்களித்தபடி அன்னபூரணி பல பிராமணக் குடும்பங்களுக்கு அன்னதானம் செய்து, வந்து இருந்த பெண்டிருக்கெல்லாம் கண்ணாடி வளையல்கள் அணிவித்து, தன் மகளுக்கு நான்கு தங்க வளையல்களையும் போட்டு தன் செலவில் தடபுடலாக வளைகாப்பு சீமந்தம் செய்து முடித்தாள். மகள் தன் பிறந்த வீட்டைப் பற்றி கவலையேதும் இல்லாமல் இருந்தாலும் மருமகன் அதை உணர்ந்து தாய் தந்தையின் சொல்லையும் மீறி ப்ரேமா ஒன்பதாம் மாதம் வரை தன்னுடனே இருக்கட்டும் என்று சொன்னது அன்னபூரணியின் சிரமத்தை சிறிதளவு குறைத்தது. இரு மாதங்களுக்குப் பிறகு கீழ் பகுதியில் இருந்தவரைக் காலி செய்யச் சொல்லி மேல் பகுதியை முன்பு வந்ததற்கு பாதி வாடகைக்கு விட்டு மூத்தவளை மகப் பேறுக்கு வீட்டுக்கு அழைத்து வந்தாள். மகப்பேறுக்கும் அதையடுத்த தாய் சேய் நலனுக்கும் செலவிட்டது போதாதென்று குழந்தை பிறந்த ஆறாம் மாதத்தில் அப்பா உயிரோடு இருந்தால் செய்து இருப்பார் என்று ப்ரேமா எதிர்பார்த்தபடி அவளுக்கும் குழந்தைக்கும் நகை போட்டு புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தாள். தலைக்கு மேல் போனால் ஜானென்ன முழமென்ன என்று தன் கடன்களைப் பற்றிக் கவலை விடுத்து மேலும் கடனுற்றாள்.

அதற்கு அடுத்த வருடம் தானும் பி.ஈ படிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த ப்ரியாவுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழித்தாள். தங்கை பி.ஈ சேர்ந்தால் தனக்கு இன்னும் நான்கு வருடங்களில் தன் தங்கை மூலம் உதவி வரும் என்று அறிந்தாலும், இருவர் வெளியூர் சென்று பி.ஈ படிக்க தாயினால் செலவிட இயலாது என்பதை ப்ரீதி உணர்ந்தாள். தாயின் நிலையை உணர்ந்த ப்ரீதி தங்கைக்கு எடுத்துரைத்தாள். "இப்போதைக்கு பி.எஸ்.ஸியில் சேரு. அதை முடிச்சதும் எம்.ஸி.ஏ படிக்க வைக்கறது என் பொறுப்பு" என்று தங்கைக்கு வாக்களித்து அவளை குன்னூர் ப்ராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.ஸியில் சேர்த்து விட்டாள். தான் பி.ஈ முடித்த பிறகு உதவிக்கு நான்கு வருடங்கள் காத்து இருக்க வேண்டும் என்ற நினைவு அவள் முகத்தில் எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச சிரிப்பையும் எடுத்துச் சென்றது. தம்பி ப்ரசாத் அப்போது தான் எட்டாம் வகுப்பை முடித்து இருந்தான் என்பதையும் நினைத்துப் பெருமூச்சு விட்டாள்.

பி.ஈ முடிக்கும் போது ப்ரீதி தன் இருபத்தி இரண்டாம் வயதில் காலடி வைத்து இருந்தாள். பி.எஸ்.ஸியில் சேர்ந்து இருந்த ப்ரியா அப்போது அதன் மூன்றாம் வருடத்தில் மேற்கொண்டு எம்.ஸி.ஏ படித்தே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தாள். பத்தாவது படித்து முடித்து இருந்த தம்பி ப்ரசாத் ஐ.ஐ.டி அல்லது என்.ஐ.டி என்று சொல்லிக் கொண்டு கோச்சிங்க் க்ளாஸில் சேர பணம் வேண்டும் என அடம் பிடித்துக் கொண்டு இருந்தான்.

தாய் பட்ட கடன்களுடன் குடும்பத்தினரின் வெவ்வேறு எதிர்பார்ப்புக்களும் சேர்ந்து ப்ரீதிக்கு அவளது பொறுப்புக்கள் குருவி தலையில் பனங்க்கொட்டையை வைத்தது போல் இருந்தன.

மந்தை போல் மாணவர்களை வேலைக்கு எடுத்த அந்த பெரிய நிறுவனத்தில் சேர்ந்தாள். தன் தாயின் கடனை அடைக்க தனக்கு வரும் மாதச் சம்பளம் மட்டும் போதாது என்பதை சேர்ந்த ஒரு மாதத்தில் உணர்ந்தாள்.

ஒரு நாள் அவளுக்கு சில வருடங்கள் சீனியரான ஒரு சினேகிதியுடன் தன் கவலையைப் பகிர்ந்து கொண்ட போது அவள், "ஒண்ணு ரெண்டு வருஷம் ஆன்-சைட் போயிட்டு வா. உங்க அம்மா கடன் எல்லாத்தையும் அடைச்சுடலாம்" என்றாள்

ப்ரீதி, "எப்படி? அங்கே போனாலும் சாலரி அதே தானே கொடுப்பாங்க?"

அதற்கு அவள், "ஆன்-சைட்டில் இருக்கும் போது உன் சாலரியில் இருந்து ஒரு பைசாகூட நீ எடுக்க வேண்டியது இல்லை. அதை தவிற அங்கே உனக்கு ஒரு நாளைக்கு நாப்பத்தி அஞ்சு டாலர் அல்லவன்ஸ் கிடைக்கும். அதுவும் நான் போன மாதிரி நல்ல க்ளையண்டா இருந்தா இன்னும் அதிகமா கிடைக்கும். அல்லது அவங்களே அக்காமடேஷனும் கொடுத்துடுவாங்க. கொஞ்சம் சிக்கனமா செலவு செஞ்சா போதும் மாசத்துக்கு இருபத்து அஞ்சு அல்லது முப்பது ஆயிரம் சேத்து வைக்கலாம். ஒரு வருஷத்துக்கு கணக்குப் போட்டு பாத்துக்கோ"

அவளுடன் பேசியதில் இருந்து ஓரிரு வருடம் ஆன்-சைட் அசைன்மெண்டில் வெளிநாட்டுக்குச் சென்று வந்தால் அவளது தாயின் கடன்கள் அனைத்தையும் அடைத்து விடமுடியும் என்பதை நன்கு உணர்ந்தாள்.

சில மாதங்களில் தன் குடும்ப நிலையை எடுத்துச் சொல்லி தன் மேனேஜரிடம் ஆன்-சைட் செல்ல வாய்ப்பளிக்கும்படி விண்ணப்பித்தாள். அவர் தனக்கும் மேல் இருக்கும் டெலிவரி மேனேஜரைப் பார்க்கும் படி சொன்னார்.

"யூ மே ஸீ ஹிம் நவ்" என்று காரியதரிசி சொல்ல அறைக் கதவைத் தள்ளி உள்ளே சென்றாள்.

புன் முறுவலுடன் சற்றே வழுக்கையான வெங்கட் சுப்ரமணியன் அவளை, "எஸ் ப்ரீதி. கம் இன். டேக் எ ஸீட்" என்று அழைத்து எதிரில் அமரச் செய்தார்.

மௌனம் காத்த ப்ரீதியிடம் அவரே தொடர்ந்து, "நீ குன்னூரா? குன்னூரில் எங்கே?" என்று தமிழில் பேச்சைத் தொடங்கினார்

ப்ரீதி, "ஆமா சார். ப்ரிம் ரோஸ் ரோட் பக்கத்தில் வீடு"

வெங்கட், "ஓ! கோவைல இருந்து போகும் போது லெஃப்ட் சைடில் இல்லையா?"

ப்ரீதி, "ஆமா சார்"

வெங்கட், "குன்னூரில் எனக்கு சொந்தக் காரங்க இருக்காங்க. நான் அடிக்கடி போயிருக்கேன்" என்று தன் குன்னூர் புவியியல் ஞானத்துக்கான விளக்கதை அளித்தார்.

மேலும் மௌனம் காத்த ப்ரீதியிடம் அவர் தொடர்ந்து, "உன்னோட டீம் லீட், பி.எம் எல்லாம் உன்னை ரொம்ப அப்ரிஷியேட் பண்ணி இருக்காங்க. நீ ஆன்-சைட் போயே ஆகணும்ன்னு பிடிவாதமா இருக்கறதா சொன்னாங்க. பொதுவா சேர்ந்து நாலு மாசத்தில் யாரையும் அனுப்பறது இல்லைன்னு தெரிஞ்சும் ரெகமண்ட் பண்ணி இருக்காங்க. அதான் உன் கிட்ட பேசி என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு வரச் சொன்னேன். டெல் மி அபௌட் யுவர் ஃபேமிலி"

ப்ரீதி, "அப்பா பெட்ஃபோர்ட் போற வழியில் எஸ்டேட் ஸப்ளைஸ் கடை வெச்சு இருந்தார்" என்று தொடங்கி தன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லி முடித்தார். நடுத்தர வர்க்க பிராமணக் குடும்பத்தில் இருந்து வந்த வெங்கட்டுக்கு அவள் நிலைமையை அறிந்து கொள்ள அதிக நேரம் ஆகவில்லை.

வெங்கட், "ப்ரீதி, ஏற்கனவே நிறைய பேர் கேட்டுட்டு இருக்காங்க. அதனால் உனக்கு சீனியரா இருக்கறவங்களுக்கு முன்னாடி உன்னை அனுப்ப முடியாது. ஆனா ஒரு ஹெல்ப் பண்ணறேன். நான் உன்னை வேற ஒரு ப்ராஜெக்டில் போடறேன். அந்த ப்ராஜெக்ட் இன்னும் ரெண்டு வருஷம் ஓடும். அதை யூ.எஸ்ல இருக்கற ஒரே ஒரு ஆள்தான் மேனேஜ் பண்ணிட்டு இருக்கான். அவன் ஒரு ஃப்ரீலான்ஸ் கான்ட்ராக்டர். அந்த மாதிரி ஆளுங்க அதிகமா வேலை எடுத்துக்க மாட்டாங்க. நிச்சயம் உதவிக்கு ஆள் தேவைன்னு கேப்பாங்க. அந்த சமயத்தில் அந்த ப்ராஜெக்டில் இப்ப இருக்கறவங்க யாரும் போக முடியாது. சோ உனக்குத்தான் சான்ஸ் கிடைக்கும்"

ப்ரீதி, "ஏன் மத்தவங்க யாரும் போக முடியாது?"

வெங்கட், "இந்த ப்ராஜெக்ட் இருக்கற மத்தவங்களுக்கு எல்லாம் வெவ்வேற கமிட்மென்ட்ஸ். அதனால யாரும் போக மாட்டாங்க"

ப்ரீதி, "அப்ப நிச்சயம் எனக்கு சான்ஸ் கிடைக்குமா சார்?"

அவளது பரிதாப நிலையில் மனமுறுகிய வெங்கட், "கிடைக்கும் அப்படிங்கறது என் யூகம். அந்த ஃப்ரீலான்ஸர் ஒருத்தனால இதை மேனேஜ் பண்ண முடியும்ன்னு எனக்கு தோணலை. அதனாலதான் அப்படி சொன்னேன்"

ப்ரீதி, "அந்த ஃப்ரீலான்ஸ் கான்ட்ராக்டர் செய்யற வேலையையும் ஏன் நம்ம கம்பெனியே எடுத்துக்கலை?"

மேனேஜர், "அவன் அந்த கம்பெனியில் ரொம்ப நாளா ஃப்ரீலான்ஸ் வொர்க் பண்ணி இருக்கான். நிறைய சீனியர் மேனேஜர்கள் எல்லாம் அவனுக்கு பழக்கம் போல இருக்கு. இல்லைன்னா அவன் செய்யற வேலையை அவன் வாங்கறதை விட கம்மி காசுக்கு நாம் செஞ்சு இருப்போம்"

ப்ரீதி, "அவன் அமெரிக்கனா?"

வெங்கட், "ம்ம்ஹூம். நம்ம ஊர்காரன்தான். ABCDன்னு சொல்லுவாங்களே கேள்வி பட்டு இருக்கியா?"

ப்ரீதி, "இல்லை சார். அப்படின்னா?"



வெங்கட், "ABCD அப்படிங்கறதுக்கு விளக்கம் American Born Confused Desi. இங்கே இருந்து அமெரிக்காவுக்கு குடி போன இந்தியர்களுக்கு பிறந்து அங்கேயே வளர்ந்தவங்களை அப்படி கிண்டலடிப்பாங்க. அவனும் திமிழாத்தான் இருக்கணும். அவன் பேர் ஆனந்த் வைத்தி. அனேகமா வைதீஸ்வரன் அப்படிங்கற பேரை அவனோட அப்பா சுருக்கிட்டார் போல இருக்கு"

அந்தப் பெயரைக் கேட்டதும் 'அவரா இருக்குமோ?' என்று எண்ணினாலும் தொடர்ந்து, "எப்ப அந்த காண்ட்ராக்டர் உதவிக்கு ஆள் வேணும்ன்னு சொல்லுவார்?"

வெங்கட், "என்னோட எக்ஸ்பீரியன்ஸில் இந்த மாதிரி ப்ராஜெக்டை ஒரே ஆளால சமாளிக்க முடியாதுங்கற நம்பிக்கையில் சொல்றேன் ப்ரீதி. வேற எந்த ப்ராஜெக்டிலும் இந்த அளவுக்கு இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்துக்கு வாய்ப்பு இல்லை. அதனாலதான் இந்த ப்ராஜெக்டை சஜ்ஜஸ்ட் பண்ணினேன். பார்க்கலாம், உனக்கு சான்ஸ் கிடைக்கறது எந்த அளவுக்கு இங்கே இருக்கும் டீம் மேல, உன் மேல அவனுக்கு நம்பிக்கை வருதுங்கறதைப் பொருத்து இருக்கு"

வெங்கட்டிடம் இருந்து விடைபெற்று தன் அறை நோக்கி நடந்து கொண்டு இருந்தவளுக்கு மறுபடி அந்தப் பெயர் நினைவுக்கு வர, பல வருடங்களுக்கு முன்னால் நடந்தவை அவள் மனக் கண்முன் வந்தன.


No comments:

Post a Comment