Friday, April 24, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 3

சில நாட்களுக்குப் பிறகு ...

சிவா வீட்டை அடையும் போது இரவு பனிரெண்டை எட்டிப் பிடிக்கும் அவனது வழக்கமான நேரம். வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்தியவன் தன் தாயுடன் செல்வியும் அவள் தாயும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்ததைக் கண்டான்.

சிவா, "இன்னா மூணு பேரும் சீரியஸா இன்னாமோ பேசினுருக்கீங்க?"

செல்வி, "ஒண்ணும் இல்லை சிவா. சும்மாத்தான்" என்ற படி தன் கையில் இருந்த ஒரு சிறு சாக்லேட்டை நீட்டினாள்.

சிவா, "ஹாய், இன்னாத்துக்கு இது?"

செல்வி, "அந்த ஆஃபீஸ்ல வேலை கிடைச்சுடுச்சு. வர முதல் தேதில இருந்து வரச் சொல்லி இருக்காங்க"

சிவா, "அப்படிப் போடு அரிவாளை! கங்கராட்ஸ்!!" என்று செல்வியை சிறிது வியப்பில் ஆழ்த்தி அவள் கையைப் பிடித்துக் குலுக்கினான்.

செல்வி, "தாங்க்ஸ்"

சிவா, "உனக்கு ஒரு விஷயம் தெரிமா? ஒண்ணாந் தேதில இருந்து எனக்கும் அதே பில்டிங்க்லதான் வேலை"

செல்வி, "ம்ம்ம் தெரியும் ஆண்டி சொன்னாங்க"


சிவா, "இன்னா சம்பளம்" என்று கேட்ட பிறகு சற்று நிதானித்து, "சாரி, நீ சொல்ல வேணாம்"

விஜயா, "பாரு செல்வி, நம்ம அவன் கிட்ட கேட்டா அவன் சம்பளத்தைப் பத்தி சொல்ல மாட்டான் இல்லை? அதே மாதிரி உன்னாண்டையும் சொல்ல வேணாங்கறான்"

அதைப் பொருட்படுத்தாத செல்வி, "ஐய்யோ சிவா, உன்கிட்ட சொல்லாம நான் வேற யார்கிட்ட சொல்லப் போறேன். ஃபர்ஸ்ட் மூணு மாசத்துக்கு ஏழாயிரத்து ஐநூறு அதுக்கு அப்பறம் எட்டாயிரம். வொர்க் நல்லா செஞ்சா இன்னும் ஜாஸ்தி கொடுக்கறதா சொல்லி இருக்காங்க"

விஜயா, "சரி சிவா, புது வேலைல உன் சம்பளம் இன்னா?"

சிவா சிரித்தபடி, "இன்னா, இப்போ வாங்கறதை விட கொஞ்ச அதிகம். அவ்வளவுதான்"

சிரித்த விஜயா, "பாரு நான் சொன்னேன் இல்லை?"

மரகதம், "ஏ போடீ, அவன் என்னாண்டையே இதுவரைக்கும் சொன்னது இல்லை"

பேச்சை மாற்ற சிவா, "செல்வி, இனி உங்க அம்மாவை வீட்டில் உக்கார வைச்சுடலாம் இல்லையா?"

விஜயா, "இல்லை சிவா, என் உடம்பில் தெம்பு இருக்கு. நான் வேலைக்கு போவாம இருக்க முடியாது"

சிவா, "அதுவும் சரிதான் ஆண்டி"

மரகதம், "அப்ப என்னை ஏண்டா போவாதேங்கறே?"

சிவா, "உன் உடம்பில தெம்பு எங்கே கீது? வேலைக்குப் போனா தினம் அங்க வலி இங்க வலிம்பே. ஆண்டியை விட உனக்கு வயசும் அதிகம்தான். அதான் ஒரு வேலையும் வேணான்னு வூட்டில இருன்னேன்"

தன் முப்பதுகளில் சிவாவை ஈன்றெடுத்த மரகதம் விஜயாவைவிட பல வருடங்கள் மூத்தவள்.

செல்வி, "வீட்டு வேலைக்கு போனா பரவால்லை சிவா. ஆனா, மத்தவங்க கொடுக்கற மிச்சம் மீதியை இனி சாப்படச் சொல்லாம இருந்தா போதும்" என்று சொல்லச் சொல்ல அவள் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

மரகதம், "பாரு. இப்போதான் சமாதானம் ஆயிருந்தா மறுபடி க்யாபகம் வரவெச்சுட்டே" என்று மகனைக் கடிந்து கொண்டாள்.

சிவா, "ஏன் என்னாச்சு?"

செல்வி, "ஒண்ணும் இல்லை. எங்க அம்மாவுக்கும் எனக்கும் கொஞ்சம் சண்டை"

விஜயா தரையைப் பார்த்தபடி அமர்ந்து இருந்தாள்.

சமயல் வேலைக்குச் சென்று திரும்பிய விஜயா அந்த வீட்டவர் கொடுத்து இருந்த மிச்சமான உணவு எதையாவது கொண்டு வந்து இருப்பாள், செல்வி அதை உண்ண மறுத்து இருப்பாள், அதனால் தாய்க்கும் மகளுக்கு சண்டை ஏற்பட்டு இருக்கும் என்று யூகித்த சிவா, "ரெண்டு நாளைக்கு ஒரு டைம் வர்ற அதே சண்டைதானே?"

செல்வி, "ம்ம்ம்"

சிவா, "ஏம்மா நம்ம வூட்டில சாப்பிட வெச்சையா?"

மரகதம், "சொன்னா எங்க கேட்டா? நான் செஞ்சு இருக்கறது உனக்கே சரியா இருக்கும்ன்னு பிடிவாதமா வேண்டான்னுட்டா"

சிவா தான் கொண்டு வந்து இருந்த பொட்டலத்தை ஏந்தியபடி, "சரி, இன்னா மாதிரி சாப்பாடு வோணும். நம்ம வூட்டு சாதமும் மீன் கொழம்புமா இல்லை ஐய்யா கையால செஞ்ச ஃப்ரைட் ரைஸா?"

முகம் மலர்ந்த செல்வி, "உன் ஃப்ரைட் ரைஸ்" என்றபடி வீட்டுக்குள் சென்று தனக்கும் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு மரகதம் வைத்து இருந்த தட்டின் அருகே வைத்தாள்.

சிவா, "அம்மா நீ சாப்டாச்சில்ல?"

மரகதம், "அதான் சாப்டாம இருந்தா திட்டறயேன்னு நான் அப்பவே கொட்டிகினேன். சாப்டுட்டு வெள்ல வந்தப்போதான் இவ அவ வூட்டு முன்னாடி உக்காந்துகினு அளுதுட்டு இருந்தா. சரி போய் கை கால் கழுவினு வா"

சிவா, "ஆண்டி நீங்க?"

விஜயா, "எனக்கு ரொம்ப பசியா இருந்துச்சி சிவா. இவ இங்கே வந்து உக்காந்துட்டு இருந்தா. நான் சாப்டுட்டேன்"

சாப்பிட்டுக் கொண்டு இருக்கையில் சிவா, "ஏன் செல்வி இதுக்கு அம்மாட்ட சண்டை போடறே"

விஜயா, "அதுவும் அந்த எஞ்சினியர் வூட்டு அம்மா ரொம்ப நல்ல டைப்பு. மத்தியானம் செஞ்சது மிச்சமாச்சுன்னா உடனே எடுத்து ஃப்ரிட்ஜில வெச்சு சாயங்காலம் நான் போவச்சே கொடுக்கும். வூட்டுக்கு எடுத்துன வரப்போ ஜில்லுன்னு இருக்கும். கொஞ்சம் சுட வெச்சா அப்போ சமைச்ச மாதிரி தான் இருக்கும்" என்று விளக்கினாள்.

செல்வி முகம் இறுக தாயிடம் எதுவும் சொல்லாமல் சிவாவை மட்டும் கூர்ந்து நோக்கி, "எனக்கு பிடிக்கலை சிவா" என்று முறையிட்டாள்.

சிவா, "சரி, ஆண்டி. இனிமேல் வேணாம் இன்னா?"

விஜயா, "சரிப்பா. என்னா வேணான்னு சொன்னா அந்த அம்மா என்னை கோச்சுக்கும். பரவால்லை"

சிவா, "பரவால்ல ஆண்டி. பொண்ணு பெரிய வெலைக்கு போவுது ஃப்ரெஷ்ஷா சமைச்சு கொடுக்கணும்ன்னு சொல்லுங்க. அவங்க ஒண்ணியும் சொல்ல மாட்டாங்க"

விஜயா, "சரி சிவா"

சிவா, "செல்வி, உனக்கு ஆஃபீஸ்ஸுக்கு காலைல சீக்கரம் போவணும் இல்லை. இந்த மாதிரி பன்னெண்டு மணி வரைக்கும் முளிச்சுட்டு இருக்காதே"

செல்வி, "என்னை விட சீக்கரம் எங்க அம்மா போவுது. அது முளிச்சுட்டு இல்லையா? எல்லாம் பழக்கமாயிடுச்சு சிவா"

சிவா, "வூட்டு வேலையும் நீ ஆஃபீஸ்ல செய்யற வேலையும் ஒண்ணா. நைட்டு நல்லா தூங்கலைன்னா ஆஃபீஸ் ஏ.ஸில சும்மா ஜம்முன்னு தூக்கம் வரும்"

மரகதம், "இன்னாடி? ஏ.ஸி ஆஃபீசா?"

செல்வி, "ஆமா ஆண்டி. சிவா உனக்கு எப்படி தெரியும்?"

சிவா, "அன்னைக்கு போனேனா? சும்மா போய் ஒரு லுக் வுட்டு பாத்தேன்"

இன்னும் ஏன் தன் மனதில் இருப்பதை மகன் சொல்லாமல் இருக்கிறான் என்று எண்ணியபடி மரகதம் சாப்பிட்டுக் கொண்டு இருந்த மகனையும் செல்வியையும் வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

புதிய உணவகத்தில் பணி தொடங்குவதற்கு முன் சில நாட்களுக்கு முன்பே சிவா பழைய இடத்தில் இருந்து விடைபெற்று இருந்தான். அந்நாட்களை தன் சொந்த வேலைகளிலும் செல்வியுடனும் கழிக்க விரும்பினான்.

ஒரு நாள் கடை வீதிக்குச் சென்று வரும்போது ...

சிவா, "மேல இன்னா பண்ணலாம்ன்னு இருக்கே செல்வி?"

செல்வி, "மேலன்னா?"

சிவா, "வேலை கிடைச்சுடுச்சு. அடுத்ததா?"

செல்வி, "இருக்கற சின்ன சின்ன கடன் எல்லாம் அடைக்கணும். அப்பறம் கொஞ்சம் காசு சேத்து ரெண்டு செல்ஃபோன் வாங்கணும்"

சிவா, "ரெண்டா?"

செல்வி, "ம்ம்ம்... எனக்கு ஒண்ணு எங்க அம்மாவுக்கு ஒண்ணு"

சிவா, "அப்பறம்?"

செல்வி, "அப்பறம் என்ன? இன்னும் நிறைய காசு சேத்து ஒரு ஸ்கூட்டி வாங்கணும்"

சிவா, "ஏன்? சைக்கிளில் போனா கௌரவக் குறைவுன்னு பாக்கறியா?"

செல்வி, "சே! இந்தச் சேரியில் இருக்கறதை விட என்ன பெரிய கௌரவக் குறைவு? சைக்கிள் ஓட்டிட்டு ஆஃபீஸ் போனா வேர்த்து விறுவிறுத்துடும். மூஞ்சியெல்லாம் வேர்வையோட ஆஃபீஸுக்குள் எப்படி நுழையறது சொல்லு? கொஞ்சம் டீஸண்டா போக வேணாமா?"

சிவா, "சாரி செல்வி. நான் ஒரு மடையன். நான் அப்படி யோசிக்கலை. சரி, அதுவரைக்கும் காலைல போகும்போது என் கூட டபிள்ஸ் வந்துடு இன்னா? சாயங்காலம் வேண்ணா நடந்து வந்துடு. சாயங்காலம் ரொம்ப லேட் ஆவாது இல்லை?"

அவர்கள் இருந்த சேரிக்கு அருகே பஸ் போக்குவரத்து மருந்துக்கும் இல்லை. டவுன் பஸ் பிடிக்க குறைந்தது இரண்டு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். அப்படி நடந்து சென்று பஸ் ஏறினால் அடுத்த நிறுத்தத்திற்கு எதிரில் அவளது புதிய அலுவலகம் இருந்தது. பதிலாக அதே இரண்டு கிலோ மீட்டர்களில் அலுவலகத்தை அடைந்து விடலாம்.

செல்வி, "இல்லை. பத்தில் இருந்து ஆறு மணி வரைக்கும்தான் ஆஃபீஸ். ஆனா உனக்கு ஏன் சிரமம் சிவா. எனக்காக நீ சீக்கரம் கிளம்பணும்"

சிவா, "அது பரவால்லை. இந்த இடத்தில் எப்படி வீக்லி ஆஃப் ரொடேஷன்ல எடுத்துக்கலாமோ அதே மாதிரி வாரத்தில் மூணு நாள் மட்டும் தான் நைட்டு பதினோறு மணி வரைக்கும். மத்த நாளில் பத்து மணிக்கு வீட்டுக்கு போயிடலாம். அது மட்டும் இல்லை. இந்த ரெஸ்டாரண்ட் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்குல்ல? அதனால் மத்தியானம் மூணு மணில இருந்து ஆறு மணி வரைக்கும் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துக்கலாம்"

செல்வி, "ரொடேஷன்லன்னா?"

சிவா, "சில ஐட்டங்களுக்கு நான் மட்டும்தான் குக்கு. மத்த ஐட்டங்களுக்கு என்னை மாதிரி இன்னும் மூணு பேர் இருக்காங்க. பத்து மணிக்கு மேல ரெண்டு குக் இருந்தா போதும். எங்களுக்குள்ள மாத்தி மாத்தி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்"

செல்வி, "நீ மட்டும் செய்யற ஐட்டம் அப்ப பத்து மணிக்கு மேல கிடைக்காதா?"

சிவா, "ஆமா .. எப்படியும் வெள்ளி சனி பதினோரு மணி வரைக்கும் இருக்கணும். அந்த ரெண்டு நாளை உட்டா மத்த நாள்ல எதாவுது ஒரு நாள் நான் இருக்கணும்"

செல்வி, "சரி, நான் கொஞ்ச நாள் உன்கூட சைக்கிளில் வரேன்"

சிவா, "செல்வி ... "

செல்வி, "என்ன சிவா?"

சிவா, "நான் மேல இன்னா பண்ணலாம்ன்னு இத்தையெல்லாம் கேக்கலை"

செல்வி, "வேற என்னா கேட்டே?"

சிவா, "லைஃபில் செட்டில் ஆவறதைப் பத்தி கேட்டேன்"

செல்வி, "செட்டில் ஆவறதுன்னா? கல்யாணம் செஞ்சுக்கறதைப் பத்தி கேக்கறையா?"

சிவா, "ம்ம்ம் "

செல்வி, "முன்னெல்லாம் எனக்கு கல்யாணமே ஆவாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன்"

சிவா, "ஏன்?"

செல்வி, "எங்க அம்மாவால எனக்கு கௌரவமான குடும்பத்தில மாப்பிள்ளை கேக்க முடியாது. இந்தச் சேரிக்குள்ளயே கல்யாணம் செஞ்சுட்டு வாழ்நாள் முழுக்க இருக்கறதுக்கு சாவறதே மேல். அதுக்கு கல்யாணமே செஞ்சுக்காம இருந்துடலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்"

சிவா, "நானும் கல்யாணத்துக்கு அப்பறம் இந்தச் சேரில இருக்கப் போறது இல்லை"

செல்வி, "நான் ஒண்ணு சொல்லட்டா?"

சிவா, "இன்னா சொல்லு"

செல்வி, "நீ படிக்கலைன்னாலும் என்னளவு சம்பாதிக்கறதானே?"

சிவா யாரிடம் சொல்ல விரும்பாத அவன் மாத வருமானத்தை செல்வியிடம் சொல்லலாம் என்று நினைத்து, "உன்னை விட அதிகமா சம்பாதிக்கறேன்"

செல்வி, "அப்பறம் என்னா? வெளில இருக்கற டீஸண்டான குடும்பத்தில் உனக்கு நிச்சயம் பொண்ணு கொடுக்க ரெடியா இருப்பாங்க. அவங்களே உனக்கு வீடும் செட்டப் பண்ணிக் கொடுப்பாங்க. பேசாம அப்படி கல்யாணம் பண்ணிட்டு இந்தச் சேரியை விட்டுப் போயிடு"

சிவா தன் முகத்தில் வெறுப்பைக் காட்டி, "அப்பறம் காலங்காலமும் சொல்லிட்டு இருப்பாங்க. நான் எது செஞ்சாலும் என் சொந்தச் செலவில்தான் செய்வேன்"

செல்வி அவனை முறைத்து, "உன்னை திருத்தவே முடியாது. நான் என்ன செய்யலாம்ன்னு இருக்கேன் சொல்லட்டா?"

சிவா, "சொல்லு .. "

செல்வி, "எனக்கு இந்தச் சேரியை விட்டு மட்டும் இல்லை இந்த நாட்டை விட்டே வெளில போகணும்ன்னு இருக்கு. அதான் ஐ.டி ஃபீல்டில் இருக்கற ஒரு நல்லவனை லவ் பண்ணி கல்யாணம் செஞ்சுட்டு வெளி நாட்டில் போய் செட்டில் ஆயிடணும்ன்னு இருக்கேன்"

சிவா தன் மனம் சுக்கு நூறாக உடைந்ததை செல்வியிடம் காட்டிக் கொள்ளவில்லை. ...




2009

செல்வி தனது ஆசையைச் சொன்ன பிறகும் சிவா அவளிடம் எப்போதும் போல நட்புடன் பழகி வந்தான்.

ஒரு நாள் இரவு சிவா வீட்டை அடைந்த போது மரகதம் தூங்காமல் இருந்ததைப் பார்த்த சிவா, "இன்னாம்மா இது? எனக்காக முழிச்சுனு வெய்ட் பண்ணாதேன்னு எவ்வளோ வாட்டி சொல்றது?"

மரகதம், "ஒண்ணும் இல்லைடா கொஞ்சம் மனசுக்கு பயமா இருந்துச்சு"

சிவா, "இன்னா பயம்?"

மரகதம், "நீ உன் ஆசையை செல்வியாண்ட சொல்லிட்டியா?"

சிவா, "இன்னா ஆசை?"

மரகதம், "அவளைக் கட்டிக்கணுங்கற ஆசையை"

சிவா, "நானா? செல்வியையா? சும்மா விளையாடாதேம்மா. அவ பி.காம். நான் வெறும் எஸ்.எஸ்.ஸி. இன்னா பேசறே நீ?"

மரகதம், "டேய், போய் சொல்லாம சொல்லு. உனக்கு அவ மேல ஆசை இல்லை?"

சிவா, "ஆசை இருந்தா இன்னா இப்போ? அவளுக்கும் என் மேல ஆசை இருக்கணும் இல்லையா? அவ வேலையில் முன்னுக்கு வரணும்ன்னு சீரியசா இருக்கா. இப்போ போய் அவளாண்ட இந்த மாதிரி பேச்செல்லாம் எடுக்க முடியாது" என மழுப்பினான்.

மரகதம், "நீ பேச்சை எடுக்காட்டி எவனாவுது அவளைக் கொத்திகினு போயிடுவான்"

சிவா, "இன்னா சொல்றே?"

மரகதம், "இன்னைக்கு அவளை ஒருத்தன் பைக்கில் கொண்டாந்து வீட்டில் விட்டுட்டு போனான். அவளும் அவங்கூட சிரிச்சுப் பேசினு இருந்தா"

சிவா, "எப்போ?"

மரகதம், "ஒம்பது மணி வாக்கில"

சிவா, "ஆஃபீஸில் எதாவுது வேலை இருந்து இருக்கும் லேட்டாயிடுச்சேன்னு கூட வேல செய்யறவங்க யாராவுது ட்ராப் பண்ணி இருப்பாங்க. நீ ஏன் அதை தப்பா எடுத்துக்கறே?"

மரகதம், "நான் தப்பா எடுத்துக்கலை. ஆனா அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா சிரிச்சுப் பேசிட்டு இருந்தாங்க. அவ உங்கிட்ட பேசற மாதிரி அவங்கூட பேசினு இருந்தா"

சிவா, "விடும்மா " என்றவாறு குளிக்கச் சென்றான்.

அடுத்த நாள் காலை செல்வியை அழைத்துச் சென்று அவர்கள் கட்டிட வாசலில் இறக்கிய பிறகு செல்வி தயக்கத்துடன், "சிவா, உன் கிட்ட பேசணும்"

சிவா, "இன்னா சொல்லு செல்வி"

செல்வி, "தப்பா எடுத்துக்காதே. நாளைல இருந்து நீ என்னை ஆஃபீஸுக்கு கூட்டிட்டு வர வேணாம்"

சிவா, "ஏன் செல்வி? எனக்கு ஒண்ணியும் கஷ்டம் இல்லைன்னு சொன்னேந்தானே?"

செல்வி, "அதுக்கு இல்லை. அம்மாட்ட சொன்னதுக்கு அப்பறம் சொல்லணும்ன்னுதான் நான் இவ்வளவு நாளா உன்னண்ட சொல்லலை"

சிவா, "இன்னா சொல்லலை?"

செல்வி, "நான் ஒருத்தரை லவ் பண்ணறேன். அவர் பேரு நந்தகுமார். எங்க ஆஃபீஸுக்கு மேல மாடில இருக்கற ஷா ஸிஸ்டம் கம்பெனில சாஃப்ட்வேர் எஞ்சினியரா இருக்கார். அவர் ஊர் வேலூர். திப்ப சந்தராவில் ரூம் எடுத்து தங்கிட்டு இருக்கார். அவர் காலைல போகும் போது கூட்டிட்டு போறதா சொன்னார்"

சிவா, "ஆள் எப்படி செல்வி? நல்லவரா?"

செல்வி, "ரொம்ப நல்லவர் சிவா. என் மேல உயிரையே வெச்சு இருக்கார். இன்னும் ஒரு மாசத்தில் அமெரிக்கா போகப் போறார். அங்கே போய் ஆறு மாசம் எல்லாம் செட்டப் பண்ணிட்டு வந்து என்னை கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு போறதா ப்ராமிஸ் பண்ணி இருக்கார்"

சிவா, "சரி செல்வி. ஆல் தி பெஸ்ட்" என்று மறுமுறை தனது ஆங்கிலத்தால் செல்வியை வியப்பில் ஆழ்த்தியவாறு விடை பெற்றான்.

அன்று இரவு மரகதம் அதே பேச்சை எடுக்க,

சிவா, "அம்மா. செல்வி அவரை காதலிக்குதும்மா. அவர் பேர் நந்தகுமார். ஐ.டி கம்பெனியில் வேலை செய்யறார். இன்னும் ரெண்டு மாசத்தில் அமெரிக்கா போவப் போறார். அங்கே போய் ஆறு மாசம் கழிச்சு அவளை கல்யாணம் செஞ்சுட்டு கூட்டிட்டு போறதா இருக்கார்"

மரகதம் வாயடைத்துப் போய் அமர்ந்து இருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெறுகியது. தன் மகனின் நிலையை எண்ணிக் குமுறினாள். அந்த நிலையிலும் செல்வியை தவறாக அவள் எண்ணவில்லை என்பது கீழ் மட்ட மக்களின் பரந்த மனத்தை பறைசாற்றியது.
~~~~~~~~~~~~~~~~~

சில நாட்களுக்குப் பிறகு இரவு சிவா சற்று தள்ளாடியபடி சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வீட்டை அடைகிறான்.

வாசலில் மரகதத்துடன் செல்வியும் விஜயாவும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அவனது தள்ளாட்டத்தை மரகதமும் செல்வியும் ஒரே கணத்தில் உணர்ந்தனர்.

மரகதம், "சாப்படறியா வேணாவா?"

சிவா, "வேணாம். சாப்டுட்டேன்"

செல்வி, "ஆண்டி. இன்னாது சிவா குடிச்சுட்டு வந்து இருக்கு. நீங்க ஒண்ணும் சொல்லாம இருக்கீங்க?" என்ற பிறகு சிவாவிடம், "சிவா, என்னாது இது புதுப் பழக்கம். அன்னைக்கு நான் பால்கனியில் இருந்து கீழே பாத்தா தம் அடிச்சுட்டு இருந்தே. இப்போ குடிச்சுட்டு வந்துருக்கே. ஏன் சிவா?"

சிவா, "ஒண்ணியும் இல்லை செல்வி. சும்மா ஜாலியா"

செல்வி, "அது என்னா ஜாலி? அதுவும் வாரத்துக்கு நடுவில" என்று அவனைக் கடிந்து கொள்ளத் தொடங்க மரகதம் அவளை இடைமறித்து,

மரகதம், "செல்வி. இதில நீ தலையிடாதே" என்றதும் செல்வி வாயடைத்துப் போனாள்.


ஓரிரு நாட்களுக்குப் பிறகு இரவு ஒன்பது மணியளவில் புகை பிடிப்பதற்காக தன் உணவகத்தில் இருந்து வெளியே வந்து அக்கட்டிடத்தைச் சுற்றி இருந்த பாதையில் நடந்து கொண்டு இருந்தான். சற்று தூரத்தில் இருந்த பெஞ்சில் செல்வியும் நந்தகுமாரும் அமர்ந்து இருப்பது தெரிந்தது. திரும்பிப் போகலாம் என எண்ணியவனை "வேண்டாம் நந்து சொன்னாக் கேளுங்க" என்ற செல்வியின் குரல் தடுத்தது. தவறு என்று உணர்ந்தாலும், செல்வி சரியான முடிவு எடுத்து இருக்கிறாளா என்ற ஐய்யம் அவன் மனத்தில் இருந்ததால், ஒதுங்கி நின்று அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டான்.

நந்தகுமார், "என்ன டார்லிங்க்? இன்னும் ஆறு மாசத்தில் உனக்கு புருஷன் ஆகப் போறேன். கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சம் ஜாலியா இருந்தா என்ன?"

செல்வி, "வேண்டாம் நந்து எனக்கு பிடிக்கலை. வேணும்ன்னா நாளைக்கே ஊரறிய என் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுங்க. நீங்க கேக்காலமலே நான் எல்லாத்தையும் உங்களுக்குக் கொடுக்கறேன்"

நந்தகுமார், "அடுத்த வாரம் யூ.எஸ் போனேன்னா ஆறு மாசம் கழிச்சுத்தான் வருவேன். அதுவரைக்கும் நான் காயணுமா?"

செல்வி, "ஆறு மாசம்தானே நந்து. ப்ளீஸ் பொறுத்துக்கோங்க. ப்ளீஸ்?"

நந்தகுமார், "எனக்கு இன்னைக்கு ரொம்ப மூடா இருக்கு செல்வி"

செல்வி, "சொன்னா கேளுங்க நந்து. ப்ளீஸ் வேணாம்" என்று அவள் சொல்லச் சொல்ல அவளை இழுத்து அணைத்து நந்தகுமார் அவள் இதழில் இதழ் பதித்தான். சற்று நேரத்துக்குப் பிறகு செல்வி அவனிடம் இருந்து திமிறி எழுந்து நின்றாள்.

செல்வி, "உங்க கை சும்மா இருக்காது. போலாம் வாங்க. இல்லைன்னா நான் தனியா வீட்டுக்கு போயிக்கறேன்"

மௌனமாக நந்தகுமார் அருகில் இருந்த பைக்கைக் கிளப்ப செல்வி அதில் ஏறி அமந்தாள்.

அவன் மனதில் நந்தகுமார் நல்லவனில்லை என்று தோன்றியது. அவனிடம் செல்வி ஏமாந்து மனமுடையக் கூடாது என அவன் மனம் பதபதைத்தது.
~~~~~~~~~~~~~~~
அன்று இரவு வீடு திரும்பிய போது மரகதத்திடம் பேச்சை தொடங்கினான்.

சிவா, "அம்மா, நீ விஜயா ஆண்டிகிட்ட கொஞ்சம் பேசணும்"

மரகதம் அசிரத்தை நிறைந்த குரலில், "இன்னா பேசணும்"

சிவா, "செல்வி தப்பு பண்ணறான்னு தோணுதும்மா"

மரகதம், "இன்னா சொல்றே?"

சிவா அன்று அவன் பார்த்ததில் இறுதிக் காட்சியைத் தவிர்த்து மேலோட்டமாக விளக்கினான்.

மரகதம், "அவதான் அவனை லவ் பண்றான்னு சொன்னே இல்லை? அவ இன்னாமோ பண்ணிட்டு போறான்னு வுடறதை வுட்டுட்டு உனக்கு ஏண்டா இன்னும் இவ்வளோ அக்கரை?"

சிவா, "எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதுன்னா சரிம்மா. எதாவுது நடக்கக் கூடாதது நடந்து கல்யாணம் நின்னு போச்சுன்னா ரொம்ப கஷ்டப் படுவாம்மா. மனசொடிஞ்சு போயிடுவா. இத்தத்தைத்தான் நான் உன்னை விஜயா ஆண்டிகிட்ட சொல்லச் சொல்றேன்"

மரகதம், "சரி சொல்றேன்"
~~~~~~~~~~~~~
அடுத்த நாள் காலை அலுவலகத்துக்குப் போகும் வழியில் ...



செல்வி, "சிவா, நேத்து ஆண்டி அம்மாகிட்ட என்னை ஜாக்கரதையா இருக்கச் சொன்னாங்களாம். நீ சொல்லச் சொன்னேன்னு சொன்னாங்களாம். நீ என்னை அவர்கூட பாத்தியா?"

சிவா, "ம்ம்ம் .. "

செல்வி, "சிவா, எனக்கு நாக்கைப் புடிங்கிக்கலாம்ன்னு இருக்கு. சத்தியமா சொல்றேன் இனிமேல் அந்த மாதிரி நடக்காது. என் கழுத்தில் தாலி ஏறாம அவரை தொட மாட்டேன். நீயாங்காட்டி இப்படி அக்கரையா சொல்லி அனுப்பினே. இதே இந்த சேரியில் வேற எவனாவுது பாத்து இருந்தா இந்நேரம் சேரி முழுக்க பேசிட்டு இருந்திருப்பாங்க"

சிவா, "உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும் செல்வி. அதான் சொல்லி அனுப்பிச்சேன்"

அவனது அன்பில் உருகிய செல்வி சிவாவின் கையைப் பற்றினாள். சிவா உடலில் மின்சாரம் பாய்ந்தவன் போல் அவள் கையை உதறினான்.

செல்வி, "என்னா சிவா, நீ என் ஃப்ரெண்ட் இல்லையா?"

சிவா, "இல்லாம? ஆனா ஃப்ரெண்டா மட்டும் இருக்கறேன். எப்போ நீ நந்தகுமாரை காதலிச்சியோ அப்ப இருந்து உன்னை தொடறதுக்கு எனக்கு உரிமை இல்லை"


No comments:

Post a Comment