Tuesday, September 8, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 13



சத்யனின் கார் அவன் வீட்டை அடைந்தபோது, திருமணவீடு போல் பந்தல் எல்லாம் போடப்பட்டு திருவிழா போல கூட்டம் நிரம்பி வழிந்தது, காரைவிட்டு இறங்கிய சத்யனுக்கு ஏழுவருடத்திற்கு பிறகு தனது வீட்டை இப்படி பார்த்ததற்கு பிறகு இப்போதுதான் வீடு சொந்தகாரர்கள் நிரம்பி சந்தோஷத்துடன் காணப்பட்டது போல இருந்தது

எனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று நான் யோசிக்கவில்லை என்றாலும் எனது சொந்தகாரர்களின் அன்றாட வேண்டுதல் இதுவாகவே இருந்திருக்கிறது என்பது சத்யனுக்குப் புரிய, அவனுக்கு கண்கள் கலங்கியது

சத்யன் முதலில் குழந்தையுடன் இறங்கிவிட்டு மான்சிக்கு கைநீட்டி அவள் கையைப்பிடித்துக் கொண்டு இறங்கியதும் குழந்தையை அவளிடம் கொடுத்தான், ஒருபெண் ஓடிவந்து “ வீட்டுக்குள்ள இப்போ வரவேனாமா,, அம்மா இங்கயே இருக்கச் சொன்னாங்க,, ஆரத்தி எடுத்துட்டு வர்றாங்க” என்று தகவல் சொல்லிவிட்டு ஓடினாள்



தூக்கக்கலக்கத்தில் இறங்கிய மான்சி அந்த வீட்டின் பிரமாண்டத்தையும் வாசலில் போடப்பட்டள்ள பந்தலையும் கூடியிருந்த கூட்டத்தையும் பார்த்து “ இது கல்யாணச் சத்திரமா? இங்க கல்யாணமா நடக்குது?” என்று கேட்க

“ இல்லம்மா இதுதான் என்வீடு,, அதாவது இந்த இளவரசனோட வீடு, இனிமே நம்ம வீடு” என்று பெருமையாக சொல்லிவிட்டு சத்யன் சிரிக்க

அவர்கள் வாசப்படியில் நின்றதால் பக்கவாட்டில் இருந்த தோட்டத்தில் ஒரு பந்தல் போடப்பட்டு பெரியபெரிய பாத்திரங்களில் சமையல் வேலை நடந்துகொண்டு இருந்தது அதையெல்லாம் வியப்புடன் பார்த்த மான்சி “ அதெல்லாம் சரி, ஆனா ஏன் பந்தல் போட்டுருக்காங்க,ஏன் இவ்ளோ பெரிய அண்டாவுல சாப்பாடு ஆக்குறாங்க” என்று தனது அடுத்த கேள்வியை தொடுக்க

அனைவரும் பார்க்க தனது ஒருகையை எடுத்து உரிமையுடன் அவள் தோளில் போட்டு தன்னருகே நெருக்கமாக நிற்க்கவைத்த சத்யன் “ அது நம்ம வீட்டுல இப்படித்தான் மான்சி ஏதாவது விசேஷம்னா, இப்படித்தான் சாப்பாடு செய்வாங்க, நமக்கு சொந்தக்காரங்க நிறைய பேர் இருக்காங்க ” என்று சத்யன் அவளுக்கு பொருமையாக விளக்கும்போதே ஆரத்தித் தட்டுடன் அவன் பாட்டியும், அம்மாவும், பத்மாவும், வர சத்யன் அத்தோடு பேச்சை நிறுத்தினான்

மறுபடியும் ஏதோ கேட்க வந்த மான்சியும் அவர்களைப் பார்த்து சினேகமாய் புன்னகை செய்ய, மூவரும் அவர்களுக்கு ஆரத்தி சுற்ற, பாட்டி மங்களநீரை தொட்டு சத்யனுக்கும் மான்சிக்கும் வைக்க, மான்சி கையிலிருந்த குழந்தையை காட்டி “ தம்பிப்பாப்பாக்கு” என்று கேட்க

“ அவனுக்கும் தான்மா” என்று பாட்டி குழந்தைக்கும் பொட்டு வைக்க, பத்மா குழந்தையை வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் போனாள்,, சத்யன் மான்சியின் தோளில் இருந்த கையை எடுக்கவே இல்லை, அப்படியே அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் போனான்

இருவரும் ஹாலில் அமர, சற்றுநேரத்தில் அங்குவந்த வேலைக்காரர்களின் மரியாதையை சிறு தலையசைப்புடன் ஏற்று,, உறவினர்களிடம் கம்பீரமாய் பேசிய சத்யனையே வியப்புடன் பார்த்தாள் மான்சி

சத்யன் மான்சி பார்த்து என்ன என்பது போல் பார்வையாலேயே கேட்க

“ இல்ல இதையெல்லாத்தையும் பார்த்தா, அந்தகால ராஜாக்கள் படத்துல வர்றமாதிரி ஓவர் பில்டப்பா இருக்கு” என்று மான்சி அனைவரின் முன்பும் குறும்புத்தனமாக நக்கல் செய்ய

“ அப்படிப்போடு,, இதுக்குத்தான் எனக்கு துணைக்கு ஒரு ஆள் இல்லைன்னு பார்த்தேன்” என்று கூறிய பத்மா மான்சியுடன் ஜோடி சேர, சத்யன் அம்பேல் என்று தலைக்கு மேல கையைத் தூக்கினான்


சற்றுநேரத்தில் உணவு முடிந்து மான்சியும் குழந்தையும் ஓய்வெடுக்க வேண்டும் என்று சத்யனின் அறைக்கு பக்கத்து அறைக்கு பத்மாவும் பூங்கோதையும் அழைத்துச்செல்ல, மான்சி தயங்கி நின்று சத்யனைப் பார்த்தாள்,

ஒரே பார்வையில் அவள் மனதை படித்த சத்யன், பேசிக்கொண்டிருந்தவர்களிடம் “ இதோ வர்றேன், நீங்கல்லாம் போய் சாப்பிடுங்க” சொல்லிவிட்டு மான்சியின் தோளில் கைவைத்து அணைத்தவாறு சத்யன் அழைத்துச்செல்ல,

ஒரே பார்வையில் புரிந்துகொள்ளும் அவர்களின் அன்யோன்யத்தைப் பார்த்து பூங்கோதைக்கு கண்கள் கலங்கியது

மான்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறை ஒரு தாயும் குழந்தையும் வசிக்க சகலவசதிகளுடன் இருந்தது, கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த மரத்தொட்டிலில் குழந்தையை பத்மா கிடத்த , சத்யன் மான்சியை கட்டிலில் உட்கார வைத்துவிட்டு பக்கத்தில் அமர்ந்துகொண்டான்

மான்சி மிரட்சியுடன் அந்த அறையை சுற்றிச்சுற்றி தன் பார்வையை ஓடவிட்டு “ இவ்ளோ பெரிய ரூம்ல நானும் தம்பிப்பாப்பாவும் மட்டும் இருக்கனுமா?” என்று குரலில் கலவரத்துடன் கேட்க

அவளுக்கு மறுபக்கத்தில் அமர்ந்த பூங்கோதை “ இல்லம்மா குழந்தை கொஞ்சம் பெரிசாகுற வரைக்கும் நானும் உன்கூட இங்கயே நைட்ல இருக்கேன்,, பகல்ல இதோ இந்த பெல்லை அடிச்சா வேலைக்காரங்க வந்துடுவாங்க, உனக்கும் குழந்தைக்கும் தேவையானதை பார்த்துப்பாங்க” என்று பூங்கோதை மான்சிக்க விளக்கமளிக்க..

மான்சி சத்யனைப் பார்த்து “ நீங்க எங்க இருப்பீங்க,, எங்களை பார்த்துக்க மாட்டீங்களா? நீங்க என்கூடவே இருக்கேன்னு சொல்லித்தானே கோயமுத்தூருக்கு கூட்டி வந்தீங்க? ” என்று அழுபவள் போல கேட்டாள்

சத்யன் அவள் கையை எடுத்து தன் மடியில் வைத்து ஆறுதலாய் தடவியவாறு “ நான் இதோ இந்த பக்கத்து ரூம்ல தான் இருப்பேன்,, உனக்கு எப்ப பார்க்கனுமோ அப்ப உடனே வந்துருவேன்” என்றான்

“ ம்ஹூம் ஒன்னு நீங்க இந்த ரூமுக்கு வாங்க,, இல்லேன்னா எங்களை உங்க ரூமுக்கு கூட்டிப்போங்க,, நீங்க இல்லாம என்னாலயும் பாப்பாவாலயும் எப்பவுமே இருக்கவே முடியாது,, நைட்டு என்னையும் பாப்பாவையும் யாரு முத்தம் குடுத்து தூங்கவைப்பாங்க?, நைட்ல பாப்பா அழுதா என்னை எழுப்பி யாரு பால் குடுக்க வைப்பாங்க?, அப்புறம் எனக்கு தூக்கம் வர்றவரைக்கும் யாரு என்கூட பேசுவா? என்னைய விட்டுட்டு எங்கயுமே போகாதீங்க ” என்று கூறிவிட்டு மான்சி கலங்கிய கண்களில் இருந்த ஒரு சொட்டு நீரை கன்னங்களில் விட

அவள் கண்ணீரைப் பார்த்ததும் சத்யன் துடித்துப்போனான், அவளை தன் நெஞ்சோடு அணைத்து “ வேனாம்டா கண்ணம்மா இதுக்குப்போய் அழலாமா? எதுக்குமே நீ அழக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல,, இப்ப என்ன நானும் இங்கயே இருக்கனும் அவ்வளவுதானே, சரி இந்த ரூம்லயே இருக்கேன், உன்கூடவே இருப்பேன்டா கண்ணம்மா, ப்ளீஸ் நீ அழமட்டும் செய்யாதே?” என்று அவளை சமாதானம் செய்த சத்யனின் கண்களிலும் கண்ணீர்

கண்கலங்கி சத்யனின் தோளில் கைவைத்த பத்மா “ சத்யா அவளோட அம்மா இல்லாததால ரொம்ப தனிமையா பீல் பண்றாப் போலருக்கு,, அவளுக்கு உன்னோட துணை மட்டும்தான் பெரிசா தெரியுது,, மேலும் மேலும் அவளை வேதனைப்படுத்த வேண்டாம், நீ அவகூடவே இருந்துக்க உன்னோட திங்ஸ் எல்லாம் இங்கயே எடுத்துட்டு வந்து வச்சுக்க, வேலைக்காரங்களை இன்னொரு கட்டிலை எடுத்துட்டு வந்து போடச்சொல்றேன்,, , ரொம்ப அன்புக்காக ஏங்கியிருப்பா போலருக்கு,, கொஞ்ச நாளைக்கு அவளை விட்டு எங்கயும் போகாதே சத்யா ” என்று பத்மா புரிதலாக கூறியதும் பூங்கோதையும் அதுதான் சரி என்று தலையசைத்து ஆமோதித்தாள்


குழந்தை தூங்கிவிட, பத்மாவும் பூங்கோதையும் அங்கிருந்து கிளம்பினர் ,, சத்யன் எழுந்து ஏசியின் அளவை குறைத்துவிட்டு கட்டிலில் தலையணையை சரிசெய்து மான்சியின் தோளில் கைவைத்து தலையணையில் சாய்த்து படுக்கவைத்தான்,

மான்சி அவன் கையை எடுத்து தனது கன்னத்துக்கு அடியில் வைத்துக்கொண்டு படுத்துக்கொள்ள, சத்யன் சிரிப்புடன் கையை எடுக்காமல் அவள் பக்கத்தில் கால்களை நீட்டி சரிந்து அமர்ந்தான் ‘

சற்றுநேரத்தில் மான்சி தூங்கிவிட, மெதுவாக தனது கையை உருவிக்கொண்டு எழுந்து அவள் பக்கமாக திரும்பி அமர்ந்தான், தொட்டிலில் தூங்கும் குழந்தைக்கும் கட்டிலில் தூங்கும் மான்சிக்கும் உடலைத் தவிர வேறு எந்த வித்யாசமும் சத்யனுக்கு தெரியவில்லை,, இருவரும் எனக்கே சொந்தம் என்றாலும் அதற்கான உரிமை இன்னும் முழுமையாக கிடைக்கவில்லையே என்று அவன் மனம் வேதனையில் கசிந்தது

சிறிதுநேரம் அவளை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு , ஒரு நீண்ட நெடுமூச்சுடன் கட்டிலைவிட்டு எழுந்து அறையிலிருந்து வெளியே வந்தான்,, கதவை ஓசைபடாமல் மூடிவிட்டு கீழே வந்தவன் நேரே சமையலறைக்கு போனான்

அவன் நினைத்ததுபோலவே அவன் அம்மாவும் பத்மாவும் அங்கே ஏதோ வேலையாயிருந்தனர்,, அவர்களை நெருங்கி “ ரெண்டுபேரும் அப்பாவோட ரூமுக்கு வாங்க, கொஞ்சம் பேசனும்” என்று சொல்ல

“ சரி நீ போப்பா நாங்க பின்னாடியே வர்றோம்” என்றாள் அவன் அம்மா
சத்யன் அவன் அப்பாவின் அறைக்குள் நுழையும்போது அவர் போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தார் “ இல்லப்பா தவுசண்ட்க்குள்ள இருக்குற சேலைகள் மட்டும் குடுத்தனுப்பு, காஸ்ட்லி சேலையெல்லாம் மருமகளுக்கு உடம்பு சரியானதும் நேர்லயே வந்து எடுத்துக்குவாங்கப்பா,, ஆமாம் இன்னிக்கு ஈவினிங் குடுத்தனுப்பு” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு மகனைத் திரும்பி பார்த்து “ வா சத்யா உட்காரு, ரெண்டு பேரும் தூங்கிட்டாங்களா?” என்றார்

அவர் மருமகள் என்று குறிப்பிட்டது மான்சியைத்தான் என்று புரிய, சத்யனுக்கு மனசுக்குள் சுருக்கென்றது, அவருக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்து “ ஆமாம் தூங்கிட்டாங்கப்பா ” என்றவன் தலையை கவிழ்ந்து கையை பிசைந்தபடி அமர்ந்திருந்தான்

அவன் முகத்தை பார்த்ததுமே ஏதோ பேச வந்திருக்கிறான் என்று புரிந்துகொண்ட ராஜதுரை “ சொல்லுப்பா என்ன விஷயம்?” என்றார்

அப்போது உள்ளே வந்த பூங்கோதை ராஜதுரையின் அருகில் அமர, பத்மா சற்று தள்ளியிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்,,

சத்யன் எழுந்துசென்று கதவை மூடி லாக் செய்துவிட்டு வந்து மறுபடியும் அதே இடத்தில் அமர்ந்தான்,, அவன் நெஞ்சில் இருப்பதை வெளியே கொட்டாமல் இன்னும் கொஞ்ச நேரம் வைத்திருந்தால் வெடித்துவிடும் போல் பாரமாக இருந்தது

தலைகுனிந்து தனது விரல் நகங்களை ஒன்றுடன் ஒன்று வைத்து அளவு பார்த்தவன், ஒருமுடிவுடன் நிமிர்ந்து “ அப்பா என்னால இதுக்கு மேலயும் எல்லாத்தையும் மறைச்சு வைக்கமுடியலை, இப்போ நான் எல்லாத்தையும் சொல்லிர்றேன், நீங்க மூனுபேரும் சேர்ந்து இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல வழியை சொல்லனும்” என்று ஆரம்பிக்க




“ எதுவாயிருந்தாலும் நாங்க ஏத்துக்க தயாரா இருக்கோம் சத்யா,, உன்னோட நலன்தான் எங்களுக்கு முக்கியம், நாங்க தேர்தெடுத்து கொடுத்த வாழ்க்கையால நீ பட்ட கஷ்டம் போதும், இனிமேலாவது நீ பொண்டாட்டி குழந்தைங்கன்னு நல்லாருக்கனும் சத்யா அதனால எதுவானாலும் சொல்லு சத்யா,, என்று பூங்கோதை சொல்ல, அதை ஆமோதிப்பது போல் ராஜதுரை அமைதியாக இருந்தார்

தாயின் வார்த்தைகள் தைரியத்தை கொடுக்க “ அம்மா, அப்பா, அண்ணி, நீங்கல்லாம் நினைக்கிற மாதிரி மான்சி என்னோட இரண்டாவது மனைவி கிடையாது,, இன்னும் கேட்டா நாலுநாளைக்கு முன்னாடி வரைக்கும் அவ யார்னே எனக்கு தெரியாது, குழந்தை பிறக்கும்போதுதான் நான் அவளை முதல்முதலா பார்த்ததே, அதுக்கு முன்னாடி அவளை பார்த்ததில்லை” என்று சத்யன் சொல்ல

அங்கே இருந்தவர்களின் முகத்தில் பயங்கர அதிர்ச்சி, என்ன சொல்வது என்று தெரியாமல் அனைவரும் அதிர்ச்சியுடன் விழிக்க, ராஜதுரைதான் முதலில் சுதாரித்துக்கொண்டு “ என்னடா சொல்ற? அப்போ குழந்தை யாரோடது?” என்று அவர் சொல்லும்போதே குறுக்கிட்ட பூங்கோதை....

“ அய்யோ குழந்தை உன்னை மாதிரியே இருக்குன்னு நெனைச்சேனடா, என் நெனைப்புல மண் அள்ளி போட்டுட்டியேடா” என்று புலம்பியவள் ஏதோ நினைவு வந்தார்ப்போல் “ இல்லையே இவனுக்கு மாதிரியே காது ஓரத்துல மச்சம் இருக்கே,, டேய் சத்யா உண்மையை சொல்லுடா” என்று அந்த தாய் பரிதவித்தாள், பூங்கோதைக்கு அந்த குழந்தையால் இந்த குடும்பமே மறுபடியும் உயிர்பெற்றது என்ற தவிப்பு அதோடு மான்சியையும் ரொம்பவே பிடித்துவிட்டது, அதனால் சத்யனை நம்பவில்லை

“ அம்மா ப்ளீஸ் நான் சொல்றதை முழுசா கேளுங்க,, குழந்தை என்னோடதுதான்,, நம்ப குடும்ப வாரிசுதான்,, என் ரத்தம்தான்,, அதுல உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று சத்யன் சொன்னதும்

“ என்னடா குழப்புற,, மான்சியை நீ பார்த்ததேயில்லைன்னு சொல்ற,, அப்புறம் குழந்தை உன்னோடதுன்னு சொல்ற,, ஒன்னுமே புரியலையேடா” என்று ராஜதுரை எரிச்சலுடன் கேட்டார்

“ அப்பா எதையுமே தெளிவா சொன்னாதான் உங்களுக்கு புரியும்” என்ற சத்யன் அருணாவுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்றதும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவுசெய்து தன்னிடம் கேட்டுவிட்டு மதுரையில் இருக்கும் சித்தி வீட்டுக்கு போனதில் ஆரம்பித்து, ஏழை மான்சியை தன் வசியப் பேச்சால் ஏமாற்றி குழந்தையை சுமக்க வைத்தது, பிறகு ஊட்டிக்கு அழைத்துவந்து சிறை வைத்தது, நிலச்சரிவில் மான்சியின் தாய் இறந்தபோனது, அருணா தனக்கு போன் செய்து குழந்தை வேண்டாம் என்று கூறி ஐம்பதாயிரம் கொடுத்து மான்சியை கணக்கு முடித்து எங்காவது அனுப்பும்படி சொன்னது, அதன்பிறகு சத்யன் கொதித்துப் போய் ஊட்டிக்கு கிளம்பியது, அங்கே மான்சியின் நிலைமையைப்பார்த்து கண்ணீர் விட்டது,, பிறகு பத்மாவின் உதவியுடன் தன் மகனை இந்த உலகுக்கு கொண்டு வந்தது, என எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொன்னான்,

அங்கே குண்டூசி விழுந்தாலும் அணுகுண்டின் ஓசை கேட்கும் என்பதுபோல் பலத்த அமைதி நிலவியது, பூங்கோதை, பத்மா இருவரின் கண்ணிலும் தாரைத்தாரையாக கண்ணீர் வழிந்தது, ராஜதுரை கூட கண்களில் தேங்கிய நீரை கைக்குட்டையால் ஒற்றிக்கொண்டார்

முந்தானையால் முகத்தை துடைத்த பூங்கோதை ஆவேசமாக நிமிர்ந்து “ அந்த சண்டாளி இன்னும் என்னன்னதான் செய்வான்னு தெரியலையே, பாவம் பச்சைப்பிள்ளைய போய் இப்படி ஏமாத்தியிருக்காளே, நெஞ்சுல கொஞ்சம் கூடவா ஈவு இரக்கம் இல்லாம போயிருக்கும், அந்த பொண்ணை பார்த்தா கொலைகாரனுக்கு கூட அய்யோப் பாவம்னு இருக்குமே, அந்த பொண்ணை இப்படி ஏமாத்த எப்படி மனசு வந்துச்சு,, இவளுக்கெல்லாம் நல்ல சாவே வராது ” என்று ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு பேசினாள் 


பக்கத்தில் இருந்த ராஜதுரை மனைவியின் கையைப்பிடித்து சமாதானம் செய்ய,, “ பின்ன என்னங்க,, அய்யய்யோ அன்னிக்கு மட்டும் இவன் ஊட்டிக்கு போகலைன்னா என்ன நடந்திருக்கும், அம்மாடி நெனைச்சா என் ஈரக்குலையே நடுங்குதே,, நம்ம குலசாமி தான்டா மகனே உன்னை அன்னிக்கு அனுப்பியிருக்கு” என்று வழிந்த கண்ணீரைக் கூட தொடைக்காமல் பூங்கோதை பேச..

“ கொஞ்சம் அமைதியா இரு பூங்கோதை,, நடந்ததைப் பத்தி பேசாம,, இனிமேல் நடக்கப்போவதைப் பத்தி யோசிப்போம்,, அவன் இன்னும் என்ன முடிவு பண்ணிருக்கான்னு கேட்போம்” என்று மனைவியிடம் சொல்லிவிட்டு மகனிடம் திரும்பியவர்

“ சொல்லு சத்யா,, இப்போ என்ன செய்யலாம்,, குழந்தை நம்மது, ஆனா மான்சிக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, இதுதான் உண்மை நிலவரம்,, ஆனா நீயும் அவளும் இருக்குற இருப்பும் உங்களுக்கிடையே இருக்குற அன்பையும் புரிதலையும் பார்த்தா உன் பிள்ளையை பத்து மாசம் அவ வயித்துல இருந்தபோது உங்களுக்குள்ளே ஏற்படாத சம்மந்தம் மகன் பிறந்து இந்த நாலுநாள்ல ஏற்பட்டிருக்கும் போலருக்கே சத்யா,, நான் சொல்றது சரியா?” என்று ராஜதுரை மகனிடம் நேரடியாக கேட்க

தனது பிரச்சனையை அப்பாவின் வார்த்தைகள் இலகுவாக்கியதை உணர்ந்து, ஒரு நிம்மதியுடன் நிமிர்ந்து அமர்ந்த சத்யன் அனைவரையும் நேராகப் பார்த்து “ ஆமாம்பா இப்போ மான்சிக்கும் எனக்கும் நிறைய சம்மந்தம் இருக்கு,, அவளை என் உயிரா விரும்புறேன்பா,, என் மகனை சுமந்து பெற்றவள் என்பதால் இரக்கத்தில் வந்த காதல் இல்லைப்பா இது, அவதான் என் உயிர் , இனிமேல் அவள்தான் என் வாழ்க்கைனு, என் உணர்வுகள் சொல்லுதுப்பா,, இந்த ஏழுவருஷமா உறங்கிகிடந்த என் உணர்வுகளை தட்டி எழுப்பியது அவளோட சிரிப்பும் பேச்சும்தான், ஒரு நிமிஷம்கூட என்னால அவளை விட்டுட்டு இருக்கமுடியாதுப்பா,, வரண்டுபோன என் வாழ்க்கைக்கே வசந்தம் அவதான்,, இனிமேல் அவ இல்லேன்னா நானும் இல்லைப்பா இதுதான் இப்போதைய நிலவரம், இது எனக்கு மரணம் சம்பவிக்கும் வரை மாறாதுப்பா” என்று உணர்வுபூர்வமாக பேசிய சத்யன் இறுதியில் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கினான்

வேகமாக எழுந்து சத்யன் அருகில் வந்து அமர்ந்த ராஜதுரை, முகத்தை மூடியிருந்த அவன் கைகளை விலக்கி தனது கைக்குட்டையால் அவன் கண்ணீரை துடைத்து “ என்னடா இது சின்னப் புள்ளையாட்டம் அழுவுற, நீ இப்போ ஒரு பிள்ளைக்கு தகப்பன்டா, இப்போ என்ன மான்சியை நீ விரும்புற அவ்வளவுதான, ஏற்கனேவே நம்ம சொந்தக்காறங்க எல்லாம் நீங்க ரெண்டுபேரும் புருஷன் பொண்டாட்டின்னு தானே நெனைக்கிறாங்க அதையே உண்மையாக்கிட்டாப் போகுது,, மான்சிக்கு உடம்பு நல்லானதும் நம்ம வீட்டு பூஜை ரூம்லயே வச்சு ஒரு தாலிய கட்டிடு அவ்வளவுதான்” என்று ராஜதுரை சந்தோஷமாக கூற

அவரின் சந்தோஷம் அனைவரையும் தொற்றிக்கொண்டது, ஆனாலும் மவுனமாக இருந்த சத்யன் “ அப்பா அருணாவை மறந்துட்டு பேசுறீங்க, அவளுக்கு மான்சி யாருன்னு தெரியும், அதுமட்டுமல்ல அருணா அவ்வளவு சீக்கிரம் எனக்கு விவாகரத்து குடுக்க மாட்டா” என்று சொன்னான் 


அப்போது நாற்காலியில் இருந்து எழுந்துவந்து பூங்கோதையின் அருகில் அமர்ந்த பத்மா “ என்ன சத்யா இது,, அவளுக்குப் போய் பயந்துகிட்டு இந்த அப்பாவிப் பொண்ண இப்படியே விடச்சொல்றியா?, சட்டப்படி முதல் மனைவி உயிரோட இருக்கும் போது அவ அனுமதி இல்லாம இரண்டாவது திருமணம் செய்றது தவறுதான்,, ஆனா அவ மனைவியா இருக்கவும் தகுதியில்லை தாயாக இருக்கவும் தகுதியில்லைன்னு நாம நிரூபிப்போம்,, அப்படியும் அவ டைவர்ஸ் குடுக்கலைன்னா ஊர் உலகத்துல ரெண்டு பொண்டாட்டியோட எவனும் வாழலையா என்ன,, அதுமாதிரி மான்சியும் நீயும் இங்கயே இருங்க அவ அங்கயே கிடக்கட்டும், அவ என்ன கேஸ் போட்டாலும் சந்திப்போம் சத்யா, ரெண்டாவது கல்யாணம் பண்ணதுக்கு சட்டம் ஒன்னும் தூக்குத்தண்டனை குடுத்துட போறதில்லை,, இதுனால நம்ம சொத்தே அழிஞ்சாலும் சரிதான், எந்த வழக்கோ பிரச்சனையோ சமாளிப்போம் சத்யா,, நீயும் மான்சியும் சேர்ந்து வாழுறதை யாராலையும் தடுக்க முடியாது, அருணாவால முடிஞ்சதை அவ பார்க்கட்டும்,, நம்மளால முடிஞ்சதை நாம பார்க்கலாம்,, எனக்கு ஓரகத்தி, அப்புறம் தங்கச்சி எல்லாமே மான்சிதான்பா நான் முடிவு பண்ணிட்டேன்,, இதுக்கு மேல ஆம்பிளைங்க என்ன சொல்றீங்கன்னு பாக்கலாம்” என்று பத்மா தீபாவளி பட்டாசாய் பொரிந்து தள்ள.. அதில் அனைவரின் முகமும் வெளிச்சமானது,

“ வீட்டுக்கு மூத்த மருமக பத்மா அவ சொன்ன பிறகு எங்களுக்கு அதுல எந்த மாற்று கருத்தும் இல்லை சத்யா,, குழந்தைக்கு முப்பத்தியோராம் நாள் பெயர் வைக்கலாம்னு நம்ம ஜோசியர் காலையில சொன்னாரு,, அன்னிக்கு காலையில நம்ம பூஜை ரூம்ல நீ மான்சி கழுத்துல தாலி கட்டுற, அன்னிக்கு மதியம் குழந்தைக்கு பெயர்சூட்டு விழா நடத்தப்போறேன், யாருக்காகவும் இந்த விழாவை நான் நிறுத்துற மாதிரியில்லை, இதுதான் என் முடிவு” என்று ராஜதுரை தனது முடிவை சொல்ல

பூங்கோதைக்கு சந்தோஷத்திலும் கண்ணீர் வந்தது,, பத்மா வாயெல்லாம் பல்லாக காதுவரை இழுத்து சிரித்தாள்,, சத்யன் மட்டும் இன்னும் அமைதியாகவே இருக்க

“ இன்னும் என்ன சத்யா பிரச்சனை,, உம்முன்னு இருக்க” என்று பூங்கோதை கவலையுடன் மகனைப் பார்த்து கேட்டாள்
அம்மாவை நிமிர்ந்து பார்த்த சத்யன் “ அம்மா நீங்கல்லாம் நினைக்கிற மாதிரி அருணா எனக்கு பிரச்சனையே கிடையாது,, அவளுக்கு என்மேல மதிப்பு மரியாதை இல்லேன்னாலும், அவளோட பிஸினஸ் மேல ரொம்ப பக்தி இருக்கு,, சமூகத்தில் ரொம்ப மரியாதையான அந்தஸ்துல இருக்கனும்னு ரொம்பவே விரும்புவா,, அதனால கோர்ட் கேஸ்னு போய் அவளோட மானம் மரியாதை ஏலம் போடப்படுவதை விரும்பமாட்டா,, அதோட அவளுக்கு குழந்தை பெற தகுதியில்லை அப்படிங்கற விஷயம் எல்லோராலும் பேசப்படுவதையும் விரும்பமாட்டா,, அதனால அருணாவை எளிதா சமாளிக்கலாம் என்ற தைரியம் எனக்கு இருக்கு,, எனக்கு இப்போ பிரச்சனை மான்சிதான்” என்று சத்யன் சொல்லவும்

“ என்னது மான்சியா?’ என்று திகைப்புடன் மூவரும் ஒரே சமயத்தில் கேட்டார்கள்





No comments:

Post a Comment