Thursday, September 3, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 2

வீட்டுக்கு போகும் வழியில் எல்லாம் புதிதாகப் பார்த்த அந்தப் பெண்ணைப் பற்றியே நினைத்துக்கொண்டு போனாள் மான்சி , யப்பா எவ்வளவு அழகா இருக்காங்க, அவங்க கையில போட்டுருந்தது மொத்தமும் தங்க வளையலாதான் இருக்கும், அவங்க கழுத்துல இருந்த சங்கிலி எத்தனை பவுன் இருக்கும், அஞ்சு, பத்து, ம்ஹூம் இருவது முப்பது பவுன் இருக்கும், கட்டியிருந்த சேலை பட்டு கிடையாது, ரொம்ப விலை உயர்ந்த ரகம் என்பது மட்டும் புரிந்தது, ஆமா இவங்க யாராயிருக்கும், வெளியூர்ல இருந்து வந்திருக்காங்க போலருக்கு, ஆனாலும் கேட்டதுமே நூறு ரூபாயைத் தூக்கி குடுத்துட்டாங்களே எவ்வளவு நல்ல மனசு, வெள்ளை சேலைக்காரம்மா மீந்து போன பழைய சோத்தை போடுறதுக்கே மூக்கால அழும், இவங்க என்னடான்னா நூறு ரூபாயை அசால்ட்டா குடுத்துட்டாங்களே, என்று ஒரோ நூறுரூபாயில் அந்த பெண் மான்சியின் மனதில் மிக உயரத்தில் போய்விட்டாள்

வீட்டுக்கு வந்து தன் அம்மாவிடம் விபரத்தை கூறிவிட்டு ஆஸ்பத்திரிக்கு போக ரிக்ஷா வண்டி கூப்பிட ஓடினாள்,



ரிக்ஷாவில் போகும்போது “ அவுக அந்த வீட்டு அம்மாவுக்கு அக்கா மக கோயமுத்தூர்ல இருக்காங்களாம், வந்து நாலு நாளாச்சு, ரொம்ப பெருங்கொண்ட பணக்காரங்களாம், இந்தம்மாவே பெரிய கம்பெனிக்கு முதலாளியாம்” என்று அந்த புதிய பெண்ணைப் பற்றி அன்னலட்சுமி தனக்குத் தெரிந்ததை கூறினாள்

அத்தனையும் கேட்டதும் மான்சியின் மூலையில் ஒரு சிறு மின்னல்,, ‘ இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே, இவங்ககிட்ட ஏன் நமக்கு ஒரு வேலை கேட்கக்கூடாது, கோயமுத்தூரா இருந்தா என்ன நல்ல வேலையா கெடைச்சா அம்மாவோட அங்கேயே போயிடலாம்,, இந்த வெள்ளாவிப் பானைக்கு ஒரு கும்புடு போட்டுட்டு போயிடவேண்டியதுதான்,, என்று மான்சியின் வெகுளி மனது வருங்காலத்தைப் பற்றி பெரியப்பெரிய கணக்காகப் போட்டது

பாவம் அவளுக்கு தெரியாது, பெரும்பான்மையான பணக்காரர்கள் எதையும் லாபக்கணக்கோடு செய்வார்கள் என்று, அது புரியாமலேயே எதிர்காலத்தைப் பற்றிய கனவில் ஆழ்ந்தாள்

மருத்துவமனையில்அன்னலட்சுமியின் பட்டினிதான் வியாதி,, அதுக்கு மருந்து உணவுதான் என்று கூறிவிட்டு ஒரு டானிக் பாட்டிலும் சில மாத்திரைகளையும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள்

வரும்வழியில் ரோட்டுக் கடையில் இரண்டு உணவு பொட்டலங்களை வாங்கிக்கொண்டு குடிசைக்கு வந்து அன்னலட்சுமி ஒரு பொட்டலத்தை கொடுத்துவிட்டு தானும் ஒரு பொட்டலத்தை பிரித்து அவசரமாக சாப்பிட்டாள்,

மகள் பசியோடு அரக்கப் பரக்க சாப்பிடுவதை பார்த்து “ மானு இதுல கொஞ்சம் சோத்தை எடுத்துக்க, எனக்கு இம்புட்டு சோறு வேனாம்” என்று தனக்கு பசியில்லாதது போல் பொய்யாக கூறினாள் அன்னலட்சுமி

உண்மையில் மான்சிக்கு அந்த உணவு போதவில்லை தான், அம்மா சொன்னதும் வேகமாக அன்னலட்சுமி சாப்பாட்டில் கைவைத்தவள் எதையோ நினைத்துக்கொண்டு “ ஆமா எனக்கு பசிக்கலை பசிக்கலைன்னு சொல்லி எல்லாத்தையும் எனக்கே போட்டுட்டு நீ பட்டினியா கிடந்து கிடந்து தான் இப்படி ஆயிட்ட,, எனக்கு போதும் நீயே சாப்பிட்டு தூங்கு, நான் அந்த அக்கா வீட்டுக்குப் போய் வேலை பார்த்துட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு கை கழுவிக்கொண்டு அங்கிருந்து சிட்டாக பறந்துவிட்டாள் மான்சி

மறுபடியும் அந்த பெரிய வீட்டு கதவை தட்டியதும், அந்த பெண்தான் வந்து கதவை திறந்தாள், மான்சியைப் பார்த்ததும் சிறு புன்னகையுடன் “ பக்கத்து வராண்டா வழியா பின்கட்டுக்கு வா” என்று சொல்லிவிட்டு கதவை மூடி போய்விட்டாள்

உலகம் எவ்வளவுதான் முன்னேறினாலும் இந்த பழக்கவழக்கங்கள் இன்னும் மாறவில்லை, தாழ்த்தப்பட்டவர்கள் விளைவிக்கும் பொருட்களை வாங்கி உண்ணலாம், அவர்கள் துவைத்த துணிகளை உடுத்தலாம், அவர்கள் கழுவி வைத்த பாத்திரத்தில் உணவு சமைக்கலாம், அதை சாப்பிடலாம், ஆனால் அவர்கள் மட்டும் முன்வாசல் வழியாக வரக்கூடாது, எல்லா பணக்கார வீடுகளிலும் வேலைக்காரர்களுக்கு என்று தனியாக ஒரு வழி இருந்தது,


மான்சி அந்த வீட்டின் பக்கத்தில் இருந்த இரும்பு கேட்டை திறந்தகொண்டு நீண்ட வராண்டாவில் நடந்து பின்பக்கம் தோட்டத்து கதவை தட்டினாள் மான்சி,

உடனே அந்த பெண் கதவை திறந்துவிட்டாள், தோட்டத்து கிணற்றடியில் ஏகப்பட்ட பாத்திரங்கள் கழுவுவதற்காக போடப்பட்டிருந்தது, பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் வாளியில் துணிகள் அமுக்கி வைக்கப்பட்டிருந்தது,

“ உன் பேர் என்னம்மா?” என்று அந்த பெண் கேட்க

“ மான்சி” என்றாள் பளிச்சென்ற புன்னகையுடன்

“ ம்ம் உன்னைப்போலவே பேரும் நல்லாருக்கு, சரி மான்சி இந்த பாத்திரத்தை எல்லாம் கழுவி அடுக்கிட்டு, அந்த துணிகளை துவச்சிடு, எல்லாத் துணியையும் வாசிங் மெஷின்ல போட்டுட்டேன் ஆனா இது ரொம்ப காஸ்ட்லியான டிரஸ், கையாலதான் துவைக்கனும்” என்று அந்தப் பெண் சொல்ல..

சரியென்று தலையசைத்து விட்டு வேலையை ஆரம்பித்தாள் மான்சி, அவள் பாத்திரங்களை கழுவி முடிக்கும் போது கையில் காபியுடன் வந்தால் அந்த பெண்,

மான்சியிடம் ஒரு டம்ளரை கொடுத்துவிட்டு அவள் ஒரு டம்ளருடன் அங்கிருந்த சிமிண்ட் மேடையில் அமர்ந்தாள்,

மான்சி சிறு சங்கடத்துடன் அந்த டம்ளரை வாங்கிக்கொண்டாள், அந்த வீட்டு பெரியம்மாள் இருந்தால் இவர்களுக்கு என்று இருக்கும் அலுமினிய டம்ளரில் தான் காபி கொடுப்பாள், இந்த புதுப் பெண் சில்வர் டம்ளரில் காபி கொடுத்தாள்

மான்சி முடிந்த வரையில் டம்ளரில் உதடு படாமல் காபியை தூக்கி குடித்துவிட்டு டம்ளரை இரண்டு முறை கழுவிவிட்டு வைத்தாள், இந்த டம்ளர் விஷயத்தால் அந்தப் பெண் மறுபடியும் மான்சியின் மனதில் ரொம்ப உயர்ந்துவிட்டாள்,

ஆனால் அந்த பெண் இன்னும் அந்த காபியில் பாதியைக் கூட குடிக்கவில்லை ரசனையோடு மெதுவாக உறிஞ்சினாள், அவளைப்பார்த்ததும், அடச்சே நாமதான் மாடு தண்ணி குடிக்கிற மாதிரி சர்ருன்னு குடிச்சிட்டோம் போலருக்கு, இனிமேல் நாமலும் இப்படிதான் காபி குடிக்கனும், என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டு வேலைகளை செய்தாள்

அந்த பெண் இவளை பற்றி செய்த விசாரணைகளுக்கு பதில் சொன்னபடியே அனைத்து வேலைகளையும் முடித்தாள் மான்சி,

இன்னும் ஐந்து நாட்களுக்கு வேலைக்காரி வரமாட்டாள் என்பதால், மறுநாளும் வரும்படி அந்தப்பெண் கூறியதும் மான்சி சந்தோஷமா தலையசைத்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினாள்

அடுத்த இரண்டு நாளும் சம்பிரதாய விசாரிப்புகளுடன் வீட்டு வேலைகள் தொடர்ந்தது,

மூன்றாவது நாள் அவளைப்பற்றி சொன்னாள் அந்த பெண் “ என் பெயர் அருணா தேவி, கோவையில் ஒரு சின்ன திரட் மில் நடத்துறேன், என்னோட ஹஸ்பண்ட்ம் தனியா கம்பெனி வச்சிருக்கார், இப்போ மதுரைக்கு ஒரு மெடிக்கல் செக்கப்புக்காக மதுரை வந்திருக்கேன், அங்கேயே பெரிய பெரிய டாக்டர்ஸ் இருக்காங்க, சித்தி இங்கே யாரோ கைராசிக்கார டாக்டர் இருக்காங்கன்னு சொல்லி இங்கே வரச்சொன்னாங்க,, இன்னும் ரெண்டு நாள்ல கோவை போயிருவேன்” என்று சொல்லிகொண்டு இருக்க.

செய்யும் வேலையை விட்டுவிட்டு அருணாவின் அருகே வந்த மான்சி சிறிது தயக்கத்திற்கு பிறகு “ அக்கா அங்கே எனக்கு ஏதாவது வேலை வாங்கி குடுங்கக்கா, பிகாம் இரண்டு வருஷம் முடிச்சுருக்கேன், எந்த வேலையானாலும் பரவாயில்லை, அம்மாவால இப்பல்லாம் துணி துவைக்க முடியலை அக்கா, அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிடுது, சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்படுறோம்” என்று மான்சி கலங்கிய கண்களுடன் அருணாவிடம் கெஞ்சுதலாக கேட்க

சிறிதுநேரம் அவளையே பார்த்த அருணா, புருவங்கள் முடிச்சிட ஏதோ யோசித்துவிட்டு “ சரி நாளைக்கு சொல்றேன்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட 


மான்சியின் கண்களில் நம்பிக்கை துளிர்விட, உற்சாகத்துடன் எல்லா வேலையையும் முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினாள் ,

அன்னலட்சுமியிடம் எல்லாவற்றையும் கூற, மான்சியின் சந்தோஷமும் உற்சாகமும் அவளுக்கும் தொற்றிக்கொண்டது, தாயும் மகளும் அறிமுகமில்லாத ஊரில் கூலி வேலை கிடைத்தால் கூட சந்தோஷமாக செய்யலாம் என்று முடிவு செய்தார்கள்,

மறுநாள் பொழுது மான்சிக்கு அழகாக விடிந்தது,, அவளுக்குப் பிடித்த சினிமாப் பாடலை ஹம் பண்ணிக்கொண்டே தனது வேலைகளை முடித்துவிட்டு அருணாவைப் பார்க்க கிளம்பினாள் மான்சி

வழக்கம் போல அருணாதான் கதவை திறந்தாள், மான்சியை பார்த்ததும் சிறு புன்னகையுடன் தலையசைத்து விட்டு போய்விட்டாள்

மான்சி அருணாவின் பதிலுக்கான காத்திருப்புடனேயே எல்லா வேலைகளையும் செய்தாள், அருணா எதுவும் பேசவில்லையே தவிர மான்சியையே கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தாள்

எல்லா வேலையும் முடிந்து கைகால் கழுவிவிட்டு வந்த மான்சி ஒரு எதிர்பார்ப்புடன் அருணாவின் எதிரில் வந்து நின்றாள்

மான்சியை கூர்ந்து பார்த்த அருணா " மான்சி என்கூட கொஞ்சம் வெளியே வர்றியா, உன்கூட கொஞ்சம் பேசனும்" என்று மெல்லிய குரலில் கேட்க

" ஓ சரிங்கக்கா வர்றேன்" என்று மான்சி உடனே சம்மதித்தாலும் இவ்வளவு பெரிய பணக்காரிக்கு என்கிட்ட பேசுறதுக்கு என்ன விஷயம் இருக்கும்? என்று மனசு மட்டும் திரும்ப திரும்ப ஒரே கேள்வியை கேட்டுக்கொண்டே இருந்தது

வீட்டுக்குள் போன அருணா சற்று நேரத்தில் ஒரு அழகான காட்டன் சுடிதாரில் வெளியே வந்து " வா மான்சி,, கார் வேண்டாம் ஒரு ஆட்டோவில் போகலாம்" என்று சொல்லிவிட்டு இருவருமே வெளி வராண்டா வழியாக தெருவுக்கு வந்து அந்த பக்கமாக போன ஒரு ஆட்டோவை நிறுத்தி இருவரும் ஏறி அமர்ந்தனர்

" தமுக்கம் பக்கத்துல ஹோம் எக்ஸிபிஷன் போட்டுருக்காங்கல்ல அங்க போப்பா" என்று ஆட்டோகாரரிடம் சொல்லிவிட்டு சீட்டில் சாய்ந்துகொண்டாள் அருணா

ஆட்டோ தமுக்கத்தில் நிற்க இருவரும் இறங்கிக்கொண்டு அருணா ஆட்டோவிற்கு பணத்தை கொடுத்துவிட்டு உள்ளே போனார்கள்

உள்ளே இருந்த ஸ்டால்களில் மான்சி இதுவரைக்கும் பார்த்தறியாத பொருட்கள், ஒரு ரூபாய் குண்டூசியில் இருந்து பல லட்சரூபாய் கார்கள் வரை ஸ்டாலில் இருந்தது, மான்சி எல்லாவற்றையும் ஆவென்று வாயைப் பிளந்தபடி பார்த்துக்கொண்டு வந்தாள்

மான்சியின் கையை பிடித்துக்கொண்டு ஸ்டால்களை கடந்து சற்று தொலைவில் இருந்த சிறு புல்வெளியில் போய் அமர்ந்தாள் அருணா

அருணா கொஞ்சம் பதட்டமாக இருப்பதுபோல் இருந்தது மான்சிக்கு,, " என்னங்க அக்கா,, என்ன விஷயம் சொல்லுங்க, என்னால ஆனது எதுவாயிருந்தாலும் செய்வேன் அக்கா சொல்லுங்க " என்று மான்சி அன்பாக கேட்க

சிறிதுநேரம் மவுனமாக இருந்த அருணா " மான்சி நான் எதுக்காக இங்கே வந்துருக்கேன்னு தெரியுமா?" என்று கேட்டாள்

" ஏதோ மெடிக்கல் செக்கப்புக்கு வந்துருக்கீங்கன்னு சொன்னீங்க அக்கா" என்றாள் மான்சி




" ம்ம் அதுக்குத்தான்" என்ற அருணா கண்ணில் துளிர்த்த நீரை விரலால் சுண்டிவிட்டு " மான்சி எனக்கு கல்யாணம் ஆகி ஏழு வருஷம் ஆகுது, எனக்கு வயசு முப்பது, என் வீட்டுக்காரருக்கு முப்பத்தியொன்னு,, எங்களுக்கு இன்னும் குழந்தையில்லை,, இவ்வளவு நாளா நாங்களும் இதைப்பத்தி பெரிசா நினைக்கலை, எனக்கு என்னோட பிசினஸ்ம், அவருக்கு அவரோட பிஸினஸையும் கவனிக்கவே நேரம் சரியாயிருந்தது, இப்போ ஒரு வருஷமா என் மாமனார் மாமியார் எங்களை மெடிக்கல் செக்கப்புக்கு போகச்சொன்னாங்க, நாங்களும் கோவையில பெரிய டாக்டர்கிட்ட செக்கப்புக்கு போனோம், அவருக்கு குழந்தை சம்மந்தமா எந்த குறையும் இல்லை, ரொம்ப பெர்பெக்ட்டா இருக்கார்ன்னு சொல்லிட்டாங்க, குறை எனக்குத்தான் ஒரு குழந்தையை சுமக்கும் தகுதி என் கருப்பைக்கு சக்தி இல்லையாம், அதோடு அவரோட உயிரணுக்களை வாங்கி சேமிக்க எனக்கு கருமுட்டை உற்பத்தியே சுத்தமா இல்லையாம் மான்சி, அதனால என்னால எப்பவுமே குழந்தை பெத்துக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க, ஒருத்தர் இல்லை நாலு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க" என்றவள் நிமிர்ந்து மான்சியின் முகத்தைப் பார்த்து நீண்ட பெருமூச்சை வெளியேற்றிவிட்டு அமைதியாக இருந்தாள்



மான்சிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை அமைதியாக இருந்ததாள்,, இவ்வளவு நல்லவங்களுக்கு இப்படி ஒரு குறையா என்று அவள் மனம் நொந்து நூலானது,

அருணாவே மறுபடியும் பேச்சை ஆரம்பித்தாள், " நானும் அவரும் இதைப்பத்தி நிறைய பேசிட்டோம், குழந்தையை தத்து எடுக்கலாம்னு முடிவு பண்ணா அது அவரோட அப்பா அம்மாவுக்கு பிடிக்கலை,, அதனால ஒரு வாடகைத்தாய் மூலமா குழந்தை பெத்துக்க முடிவு பண்ணோம், அது வெளியே தெரியாம நடக்கனும் என்பதால்தான் நான் இங்க வந்தேன்,, சித்திக்கு தெரிஞ்ச லேடி டாக்டர் மூலமா வாடகைத்தாய் ஏற்பாடு செய்து இங்கேயே எல்லா ஏற்பாடுகளும் செய்யலாம்னு வந்தேன்,, இதுக்காக ரெண்டு பெண்களை பார்த்தோம், ஒரு பெண்ணை எனக்கு பிடிக்கலை, இன்னோரு பெண் ரொம்ப வயசானவங்களா இருந்தாங்க, அதோட அந்த லேடிக்கு சுகர் கம்ப்ளைண்ட்ம் இருந்தது,, அதனால அவங்கலையும் வேனாம்னு சொல்லிட்டேன், இந்த விஷயம் என் மாமானார் மாமியார்க்கு தெரியாம நடக்கனும் மான்சி, நான் இன்னும் மூனு மாசத்துல வெளிநாடு போகனும், திரும்பி வர ஏழெட்டு மாசம் ஆகும், அந்த இடைவெளியில் எனக்கே குழந்தை பிறந்ததா சொல்லிக்கலாம்னு நினைச்சு எல்லா ப்ளானும் போட்டேன், ஆனா இப்போ குழந்தையை சுமக்க தகுதியான ஒரு பொண்ணு கிடைக்கலை மான்சி" என்றவள் பேச்சை நிறுத்தி மான்சியை பார்த்தாள்

மான்சிக்கு அதிசயமாக இருந்தது,, இப்படியெல்லாம் கூட நடக்குமா? மொதல்ல வாடகைத்தாய்ன்னா என்ன அர்த்தம்,, இவங்க புருஷனுக்கு ரெண்டுவது கல்யாணம் பண்ணுவாங்களா? இல்ல சும்மா கொஞ்ச நாளைக்கு இவங்க புருஷன் கூட இருக்க சொல்லுவாங்களா? மான்சிக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை, குழப்பத்தோடு அருணாவின் முகத்தை ஏறிட்டாள்,


“ என்ன மான்சி அப்படி பார்க்கிற? இதெல்லாம் எப்படின்னு குழப்பமா இருக்கா? மொதல்ல நான் இதற்கான விளக்கத்தை சொல்லிர்றேன்,, அதாவது வாடகைத்தாயா வர்ற பொண்ணு என் கணவரும் நேருக்குநேர் பார்த்துக்க வேண்டிய அவசியம் கூட இல்லை, அவரோட உயிரணுக்களை எடுத்து தகுந்த பாதுகாப்பு செய்து அதை அந்த வாடகைத்தாயின் கர்பப்பைக்குள்ள சரியான நேரத்துல செலுத்துவாங்க, அதன்பிறகு அந்த பெண் கிட்டத்தட்ட ஏழு அல்லது எட்டு மாதம் வரை சுமந்து அந்த குழந்தையை பெத்துக் குடுக்கனும், இது சம்மந்தப்பட்ட எல்லாமே ரகசியமா,, பாதுகாப்பாக நடக்கும், எந்த விஷயமும் வெளியே தெரியாது, அந்த பொண்ணுக்கு என்ன தேவை என்றாலும் நானே கவனிச்சுக்குவேன்” என்ற அருணா பேசுவதை நிறுத்திவிட்டு மான்சியின் கையை பற்றி “ என்ன மான்சி நான் சொன்னதெல்லாம் உனக்கு புரியுதா?” என்று கேட்டாள்

வேகமாக தலையாட்டியவள் “ ஓ நல்லா புரியுது அக்கா, அந்த பொண்ணுக்கும் உங்க சாருக்கும் எந்த தொடர்பும் இல்லாம மருத்துவ ரீதியா அந்த பொண்ணு குழந்தை பெத்து உங்ககிட்ட குடுத்துட்டு போயிரனும்,, ம்ம் ரொம்ப ஈசியான வேலை தானேக்கா? இதுக்கா ஆள் கிடைக்கலை?” என்று வெகுளித்தனமாக கேட்டாள்

அவள் கேட்ட அடுத்த வினாடி அருணாவின் முகம் பட்டென்று மலர “ உனக்கு புரிஞ்சா போதும் மான்சி” என்றாள்

இப்போதுதான் மான்சிக்கு குழப்பமாக இருந்தது,, “ இதெல்லாம் என்கிட்ட ஏன்க்கா சொல்றீங்க,, எனக்கு ஏன் புரியனும்?” என்று கேட்டாள்

அருணா பேச்சு ஒரு முடிவுக்கு வந்துவிட்டதை உணர்ந்து பட்டென்று உடைத்தாள் “ மான்சி எங்க குடும்பத்து வாரிசை சுமக்கக்கூடிய தகுதி உனக்கு மட்டும் தான் இருக்கு மான்சி,, அழகு அறிவு திறமை,, எல்லாமே உன்கிட்டதான் இருக்கு, அதனால்தான் உன்கிட்ட கேட்கிறேன் மான்சி,, என் குடும்பத்து வாரிசை சுமந்து பெத்துக்குடுக்கனும் ப்ளீஸ் எனக்காக என்னவேனாலும் செய்றேன்னு சொன்னியே, இப்போ இதை கேட்கிறேன் மான்சி” என்று அருணா கேட்க

மான்சி விதிர்த்துப் போய் அமர்ந்திருந்தாள்,, நானா வாடகைத்தாய்? நான் எப்படி? இவங்களுக்கு என்னாச்சு? ஏன் என்கிட்டப் போய் இப்படியெல்லாம் பேசுறாங்க? இவங்களோட அன்பா மரியாதையா பேசுனதால எதைவேண்டுமானாலும் செய்வேன்னு நெனைச்சாங்களா?,, மான்சிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது, கண்ணீருடன் அருணாவை நிமிர்ந்து பார்த்து “ என்னக்கா என்கிட்டப் போய் இந்த மாதிரியெல்லாம் பேசுறீங்க?” என்று கேட்டுவிட்டு மெதுவாக விசும்ப ஆரம்பித்தாள்

அருணா மான்சியை பார்த்த இந்த ஒரு வாரத்தில் அவளை சரியாக எடைபோட்டு வைத்திருந்தாள்,, பணம், நகைகள், நல்ல துணிமணிகள், இவற்றின் மீது மான்சிக்கு இருந்த ஆர்வத்தை புரிந்து வைத்திருந்தாள்,, அதனால் தனது அடுத்த அஸ்திரத்தை எடுத்து மான்சியின் மீது ஏவினாள், “ உனக்கு இதனால எந்தவொரு கஷ்டமும் இல்லை மான்சி,, குழந்தை பிறக்குற வரைக்கும் நல்லா கவனிச்சுக்கறேன், அப்புறம் குழந்தை பிறந்து மூன்று மாதம் கழிச்சு நீ என்கிட்ட குடுத்துட்டு போகும்போது இருக்க சின்னதா ஒரு வீடு, அப்புறம் நிரந்தரமான வருமானத்துக்கு ஒரு நல்ல வேலை, இதெல்லாம் விட ரொக்கமா அஞ்சு லட்சரூபாய் பணம், இதெல்லாம் கிடைக்கும் மான்சி” என்று ஆசை வலையை அந்த சிறு புறாவின் மீது வீசினாள்

மெலிதாக விசும்பிக்கொண்டு இருந்த மான்சி வெடுக்கென்று நிமிர்ந்து அருணாவை பார்த்தாள், “ என்னது அஞ்சு லட்சமா? வீடு குடுப்பீங்களா? ஒரு பாப்பா பெத்து தர்றதுக்கு இவ்வளவா குடுப்பீங்க?” என்ற மான்சியின் குரலில் ஆச்சரியத்துடன் ஆர்வமும் கலந்து ஒலித்தது

வாழ்க்கையின் சுழற்சியில் யார் யார் எந்தெந்த திசைக்கு தள்ளப்படுவோம் என்று புரியாத அந்த பிஞ்சு,, இவ்வளவு பணம் என்றதும் இத்தனை நாட்களாக பட்ட வறுமைதான் முதலில் ஞாபகத்துக்கு வந்தது மான்சிக்கு,,


இவ்வளவு பணமா? என்ற ஆர்வம் எதிர்காலத்தில் கண்முன்னே தெரியப்போகும் கேள்விக்குறியான வாழ்க்கையை யோசிக்க மறுத்தது,, இந்த பணம் மட்டும் கிடைத்தால் தானும் தன் அம்மாவும் காலம் பூராவும் வயிறு நிறைய சாப்பிடலாம்,, பசியை தாங்கிக்கொண்டு அடிவயிற்றை கையால் அழுத்திக்கொண்டு இரவில் கண்ணீருடன் உறங்கும் நிலை வராது, என்று கண்ணிருந்தும் குருட்டுக் கணக்கு போட்டது மான்சியின் வறுமையில் நொந்த மனம் 




" நீத் தேடிப்போகும் பணம் கவர்ச்சியானதுதான்.....

" ஆனால் உன் அருகில் இருக்கும் ...

" மனம் நிறைந்த இந்த அன்பு....

" எவ்வளவு வறுமையிலும் ஆழமானது,, அழகானது!

" பற்றிடம் விட்டு வெற்றிடம் தேடி ஓடியது"

" பணமே வாழ்க்கை என்ற பாழும் மனது!


No comments:

Post a Comment