Wednesday, September 30, 2015

மான்சியின் மவுனம் - அத்தியாயம் - 9

இரவானதால் கோயிலில் இருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய,,, வெகுநேரம் ஆகியும் இருவரையும் காணவில்லையே என்று சுற்றிலும் பார்வையை ஓடவிட்டவள், கண்ணாடி பெட்டிக்குள் சிறு வடிவமாக கோயிலின் அனைத்து இடங்களையும் வைத்திருந்த இடத்தில் விஸ்வாவும் மஞ்சுவும் நின்று அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்

இப்போது அவர்களின் நெருக்கம் மான்சியின் கண்களை உறுத்தியது,, விஸ்வா நிமிர்ந்து மஞ்சுவின் தலையில் இருந்த பூவை சரி செய்வது இங்கிருந்து நன்றாக தெரிந்தது, மஞ்சு அவனை திரும்பிப் பார்த்து ஏதோ சொல்ல, அதற்கு விஸ்வா அவள் நெற்றியில் விழுந்த கூந்தலை காதோரம் ஒதுக்கிவிட்டு கனிவுடன் அவளிடம் ஏதோ சொன்னான், உடனே பதட்டமாக விலகிப்போன மஞ்சுவின் கையைப் பிடித்து விஸ்வா ஏதோ வருத்தமாக சொல்வதும் தெரிந்தது, மஞ்சுவின் கண்களை விஸ்வா துடைப்பதில் இருந்து அவள் கண்ணீர் விடுகிறாள் என்று புரிந்தது,

பிறகு அவளை தன் தோளோடு அணைத்தபடி விஸ்வா அவளை அழைத்துக்கொண்டு வந்தான்,, அவர்களின் அந்த நெருக்கத்தில் விரசமில்லை, உண்மையான காதல் மட்டுமே தெரிந்தது,

மான்சிக்கு அவர்களின் மாற்றமும், விஸ்வாவின் மனசும் புரிய, இன்று காலை தானே வீட்டுக்கு வந்தான், அதற்குள் மஞ்சுவின் மீது எப்படி காதல் வந்திருக்கும்?’ பார்த்த ஒரே நாளில் காதல் வருமா?’ என்ற மான்சியின் கேள்விக்கு வரும் என்றது அவர்களின் நெருக்கம்,

அப்போ ஒரு வருஷமா சத்யன் எங்கள் வீட்டில் இருந்தான், மூன்று மாசமா என் புருஷனா ஒரே ரூம்ல இருந்தான், அப்பல்லாம் எங்களுக்குள் ஏன் காதல் வரவில்லை?, என்று மான்சியின் மனது ஏங்கியது, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்ட பிறகு இப்போது வந்த இந்த காதல் அப்பவே வந்திருந்தா நான் என் சத்யனை பிரிஞ்சிருக்க மாட்டேனே? என்று தவித்தாள் மான்சி,

மான்சிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது, அய்யோ அவனை நான் ரொம்ப கேவலப்படுத்திட்டேனே இப்போ என் சத்யன் என்னை ஏத்துக்குவானா? என்று ஏக்கத்துடன் புலம்பியது மான்சியின் மனம்,,

நெருங்கி நடந்து வந்த இருவரையும் பார்த்து மான்சிக்கு பொறாமையாக இருந்தது, ஆனால் மஞ்சுவுக்கு விஸ்வா மூலமாக ஒரு நல்வாழ்வு அமைந்தால் மான்சிதான் அதிகமாக சந்தோஷப்படுவாள், இப்போதைய மான்சியின் மனம் கோயிலில் ஜோடியாக செல்லும் அனைவரின் மீதும் பொறாமை கொண்டது, நானும் என் சத்யனும் இதுபோல ஜோடியாக போகும் நாள் வருமா? என்ற கேள்வி ஒவ்வொரு ஜோடியை பார்க்கும்போதும் எழுந்தது

குளத்தை நெருங்கியதும் விஸ்வா விட்டு மஞ்சு விலகி நடந்து வர,, மான்சி அவசரமாக தன் பார்வையைத் திருப்பிக்கொண்டாள், விஸ்வா வந்து குளத்தின் படியில் மான்சியை விட்டு சற்று தள்ளி அமர, மஞ்சு நின்றுகொண்டே இருந்தாள்

“ உட்காரு மஞ்சு” என்று விஸ்வா சொல்ல.. மஞ்சு உட்காரவே இல்லை,
மான்சியை பார்த்து “ அக்கா வாங்க வீட்டுக்குப் போகலாம்,, அம்மா எதிர்பார்த்துக்கிட்டு இருப்பாங்க” என்று மெல்லிய குரலில் மான்சியை அழைத்தாள்,, அவளின் பார்வையில் மட்டுமல்ல பேச்சிலும் மிரட்சி வெளிப்பட்டது

மான்சியால் மஞ்சுவை புரிந்துகொள்ள முடிந்தது, எதிலும் அனுபவமில்லாத சிறுபெண் அல்லவா? படிப்பு, பணம், அந்தஸ்து, ஜாதி, என எந்த வகையிலும் பொருத்தமில்லாத அவளால் விஸ்வாவின் இந்த அனுகுமுறையை எண்ணி மிரளத்தான் முடியும்

முதலில் விஸ்வாவிடம் இதுபற்றி பேசவேண்டும், அவன் சும்மாதான் இதெல்லாம் என்றால் மஞ்சுவால் தாங்கமுடியாது, நேரம்பார்த்து பேசவேண்டும் என்ற முடிவுடன் “ ம் சரி போகலாம்,, வாங்க விஸ்வா நேரமாச்சு” என்று மான்சி எழுந்துகொள்ள, விஸ்வாவும் ஏமாற்றத்துடன் எழுந்துகொண்டான்

மூவரும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு அவரவர் இடத்திற்கு வெவ்வேறு மனநிலையோடு தூங்கச் சென்றனர்,


மறுநாள் காலை எழுந்தவுடன் மான்சி விஸ்வாவின் நம்பருக்கு கால்செய்து தனது அறைக்கு வருமாறு அழைக்க, அடுத்த சில நிமிடங்களில் மான்சியின் அறையில் இருந்தான் விஸ்வா

அவனை பெரும் தயக்கத்துடன் ஏறிட்ட மான்சி “ விஸ்வா நீங்க என் ஃபேரன்ஸ் கிட்ட பாபநாசத்திற்கும் அதை சுத்தி இருக்கிற இடங்களை பார்க்கனும் மான்சியை என்கூட அனுப்புங்கன்னு கேட்கனும், அவங்க ஒத்துக்கலைன்னா கூட ரிக்வெஸ்ட் பண்ணி கேட்கனும் விஸ்வா ப்ளீஸ்” என்று கெஞ்சுதலாக மான்சி கூற

அவளை குழப்பமாக ஏறிட்ட விஸ்வா “ கண்டிப்பா கேட்கிறேன் மான்சி, ஆனா குறிப்பா பாபநாசம் மட்டும் ஏன் மான்சி?” என்று கேட்க

மான்சி அவனுக்கு பதில் சொல்லமுடியாமல் தடுமாறி தலைகுனிந்தாள்,,

“ சொல்லு மான்சி சம்திங் சீரியஸ்,, பாபநாசத்தில் அப்படியென்ன விஷேசம்?” என்று வார்த்தைகளை மாற்றிப்போட்டு கேட்டான் விஸ்வா

இதற்கு மேல் மவுனம் சரி வராது என்றுணர்ந்த மான்சி மெதுவாக நிமிர்ந்து பார்வையை வேறுபக்கம் திருப்பி “ அங்கேதான் சத்யன் இருக்கார் விஸ்வா” என்றவள் இப்போது விஸ்வாவை பார்த்து ஒரு நிமிர்வுடன் “ என்னோட புருஷன் சத்யமூர்த்தி அங்கேதான் இருக்கார் விஸ்வா” என்று கூற

அவளை ஆச்சர்யமாக நோக்கிய விஸ்வா “ மான்சி நீ சத்யனை விரும்புறயா? இஸ் வெரி இன்ட்ரஸ்டிங் மான்சி” என்று குரலில் வியப்பு காட்ட

“ ஆமாம் விஸ்வா என் சத்யனை ரொம்ப ரொம்ப விரும்புறேன், என்னோட ஈகோவால என் கையில கிடைச்ச பொக்கிஷத்தை இழந்துட்டு இப்போ ஒவ்வொரு நிமிஷமும் அவருக்காக ஏங்குறேன் விஸ்வா, அவர் என் பக்கத்தில் இருக்கும்போது அலட்சியப்படுத்தி ஒதுக்குனேன், இப்போ அவரில்லாமல் எனக்கு எதுவுமே இல்லைன்னு தவிக்கிறேன் விஸ்வா,, நான் அவரைப்பார்க்க ஹெல்ப் பண்ணுங்க விஸ்வா ப்ளீஸ்” என்று கண்களில் வழியும் கண்ணீருடன் மான்சி விஸ்வாவிடம் கெஞ்சினாள்

அவள் கண்ணீரைக் கண்டு பதட்டமான விஸ்வா “ அய்யோ ப்ளீஸ் அழறதை நிறுத்து, கண்டிப்பா நாம சத்யனைத் தேடி போகலாம், ஆனா இதை நீயே அங்கிள் ஆன்ட்டிகிட்ட சொன்னா அவங்களே உன்னை சந்தோஷமா அனுப்பி வைப்பாங்களே, இதுல ரகசியம் ஏன் மான்சி? ” என்று விஸ்வா குழப்பமாக கேட்க

கண்களை துடைத்துக்கொண்டு விஸ்வாவின் எதிர் சோபாவில் அமர்ந்த மான்சி “ இல்ல விஸ்வா சத்யன் கிட்ட டைவர்ஸ் வாங்கனும்ங்குற ஆத்திரத்தில் அப்பா அம்மாகிட்ட ரொம்ப மோசமா நடந்துக்கிட்டேன், அதனால அவங்ககிட்ட இப்போ போய் நிக்க அவமானமா இருக்கு,, அதோட சத்யன் மனசுல நான் இருக்கேனான் எனக்கு தெரியாது விஸ்வா, அவரோட மனசு தெரியாம நான் என்னை பெத்தவங்க கிட்ட பேசமுடியாது விஸ்வா,, ஏன்னா எங்களுக்குள்ள அவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு விஸ்வா,, என்னைப்பற்றி சத்யன் என்ன நெனைக்கிறார்னு நான் முதல்ல தெரிஞ்சுக்கனும், அதுக்குத்தான் உங்களோட நான் பாபநாசம் போறது, அவருக்கும் எனக்கும் ஒரு கணக்கு இருக்கு அந்த கணக்கு நேராயிட்டா அப்புறம் என் வாழ்வு சத்யனோடுதான் விஸ்வா, சத்யன் மனசுல எனக்கான இடம் எதுன்னு தெரிஞ்ச பிறகுதான் இதைப்பற்றி என் அப்பா அம்மாவிடம் சொல்வேன் விஸ்வா,, அதுக்கு எனக்கு நீங்கதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்” என்று மான்சி மெல்லிய குரலில் கூறிவிட்டு விஸ்வாவை பார்க்க...

“ ம்ம் இப்போ எல்லாம் புரியுது மான்சி, நான் எப்படியாவது அங்கிள் ஆன்ட்டிக்கிட்ட பேசி சம்மதம் வாங்குறேன்,, நீ கிளம்ப ரெடியா இரு, ஆனா நாம ரெண்டு பேர் மட்டும் தானா?” என்ற கேள்வியில் விஸ்வாவின் ஏக்கம் தெரிய..


“ புரியாம என்ன விஸ்வா? ஆனா மஞ்சு சின்னப் பொண்ணு, இப்பத்தான் பதினெட்டு கம்ப்ளீட் ஆயிருக்கு, ஏமாற்றத்தை தாங்கமாட்டா, இருவருக்கும் உள்ள தகுதி வித்தியாசத்தை யோசிச்சு முடிவு பண்ணுங்க விஸ்வா, உங்க வீட்டுலயும் ஒத்துக்கனும், விளையாட்டுத்தனமானது இல்லை இது ” என்று மான்சி நடுநிலையாக பேசியதும்

விஸ்வா நிமிர்ந்து அவளைப் பார்த்து “ உனக்கும் சத்யனுக்கும் வந்திருக்கிற லவ் எந்த தகுதியின் அடிப்படையில் வந்திருக்கு மான்சி?, தகுதிப் பார்த்து வர்றதில்லை காதல், உன்னோட லவ் எவ்வளவு ட்ரூவோ அதேபோல்தான் என்னோட லவ்வும், மஞ்சுவுக்காக நான் எதையும் தாங்குவேன் யாரையும் எதிர்ப்பேன், என் வீட்டைப் பொருத்தவரையில் என்னோட விருப்பம் தான் பர்ஸ்ட், நீ சொல்ற மத்ததெல்லாம் நெக்ஸ்ட்” என்று விஸ்வா உறுதியாக கூறினான்

“ கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு விஸ்வா,, மஞ்சு என்னோட தங்கை மாதிரி அவளுக்கு தேவையான எல்லாத்தையும் நான் செய்வேன்,, ஆனா இப்போ நம்ம கூட பாபநாசத்திற்கு மஞ்சு வேண்டாம் விஸ்வா, அவ வந்தா உங்களோட கவனம் அவமேல தான் இருக்கும், அப்புறம் நான் நெனைச்ச மாதிரி எதுவும் நடக்காம போக வாய்ப்பிருக்கு,, நான் சொல்றது உங்களுக்கு புரியும்னு நெனைக்கிறேன் விஸ்வா” என்று மான்சி சங்கடத்துடன் கேட்க

“ ம்ம் இதுகூட புரியாம போனா நான் அமேரிக்கா ரிட்டர்ன்னு சொல்லிக்கவே முடியாதே” என்று குறும்பு பேசிய விஸ்வா, “ சரி நீ ரெடியாக மான்சி நான் போய் அங்கிள், ஆன்ட்டிகிட்ட பேசுறேன், அப்படியே என் பியான்ஸி கிட்டயும் தகவல் சொல்லிர்றேன், ஆனா மான்சி என்னைய பார்ததாலே மஞ்சுவுக்கு கண்ணு கலங்குது, அதை மொதல்ல சரி பண்ணனும்” என்று கூறியபடியே எழுந்து கதவை திறந்துகொண்டு வெளியே போனான்

மஞ்சுளாவிற்கு ஒரு நல்வாழ்வு அமைந்ததில் மான்சிக்கு சந்தோஷமாக இருந்தது, விஸ்வாவை நினைத்து ரொம்பவே பெருமையாக இருந்தது,, இவர்கள் இருவரின் வாழ்க்கையும் நன்றாக இருக்கவேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டாள்

விஸ்வா எப்படியும் அனுமதி வாங்கிவிடுவான் என்ற நம்பிக்கையில் மான்சி பாபநாசம் செல்ல தேவையான உடைகளை எடுத்துவைத்துக் கொண்டாள், எடுத்து வைத்த உடைகளில் முக்கால்வாசி மான்சியே வேண்டாம் என்று ஒதுக்கிய கவர்ச்சியான உடைகள், அவைகளை எடுத்துவைக்க மான்சிக்கே சங்கடமாக இருந்தாலும், இவற்றைப் போட்டுக்கொண்டு சத்யனின் முன்பு நின்றால் அவன் முகம் எப்படிப் போகும் என்ற நினைப்பில் அவள் இதழ்கள் தானாக மலர்ந்தது,

எல்லாவற்றையும் எடுத்துவைத்துவிட்டு மான்சி கீழே வந்தபோது, ஆராவமுதன் பேக்டரிக்கு போயிருக்க ஹாலில் சாந்தா மட்டும் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்

மான்சி விஸ்வாவை தேடவில்லை, அவன் தோட்டத்தில் மஞ்சுவிடம் பேசிக்கொண்டு இருப்பான் என்று தெரியுமாதலால், சாந்தாவின் அருகில் போய் அமர்ந்தாள்

வெடுக்கென்று மான்சியை நிமிர்ந்துப்பார்த்த சாந்தா “ என்ன மான்சி விஸ்வா பாபநாசம் போறானாம் நீயும் கூட வரனும்னு கேட்டான், அப்பா முடியாதுன்னு சொன்னதுக்கு,, நான் மான்சிகிட்ட பேசிட்டேன், அவளுக்கு என்கூட வர்றதுக்கு பூரண சம்மதம்னு சொல்றான், உண்மையா மான்சி” என்று கோபத்தை அடக்கிய குரலில் கேட்க




“ ஆமாம்மா போகத்தான் போறேன்,, எனக்கும் மனசுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும்னு தான் ஓகே சொன்னேன், அப்பா என்ன சொன்னளரும்மா?” என்று கேட்க

சோபாவில் இருந்து எழுந்து கிச்சனை நோக்கி போன சாந்தா “ உனக்கு விருப்பம்னா போகச்சொன்னார்” என்று வேண்டாவெறுப்பாக சொல்லிவிட்டு போனாள்

தாயின் அலட்சியமான வார்த்தைகள் மான்சியின் ரணமாக்கினாலும், அந்த ரணத்திற்கான மருந்து பாபநாசத்தில் இருக்கிறது என்ற சந்தோஷத்தில் உற்சாகமாக கிளம்பினாள் மான்சி

காலை சுமார் பத்து மணிக்கு விஸ்வா மான்சி இருவரும் காரில் பாபநாசம் நோக்கி கிளம்பினார்கள், மான்சி டிரைவர் வேண்டாம் என்று கூறிவிட்டதால் விஸ்வாவே காரை ஓட்டினான், வழிநெடுகிலும் மஞ்சுவைப் பற்றியே அதிகம் பேசினான், அவளை திருமணம் செய்தபிறகு யூஸ்எஸ்க்கு போகப்போவதில்லை, சொந்தமாக பிஸினஸ் தொடங்கப்போவதாக கூறினான்

பார்த்த ஒரே நாளில் விஸ்வா இவ்வளவு முன்னேறி விட்டானே என்று மான்சிக்கு பொறாமையாக இருந்தது, இருங்க இருங்க என் சத்யன் என்கிட்ட வந்ததும் உங்களை பீட்ப் பண்ணி காட்டுறேன், என்று மனதுக்குள் விஸ்வா மஞ்சுவிடம் சவால் விட்டுக்கொண்டாள்

கார் பாபநாசம் சென்றடைந்ததும், பேச்சியின் வீட்டுக்கு மான்சி வழி சொல்ல விஸ்வா காரை செலுத்தினான், சரியாக வீட்டைக் கண்டுபிடித்து காரை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கி சத்யனின் வீட்டையும் கடையையும் பார்த்தார்கள்

கடை பெரிதாகி, வீடு இரண்டடுக்காக மாறியிருக்க , ‘ ம்ம் யாரு, என்னோட சத்யனாச்சே என்று பெருமையாக நினைத்துக்கொண்டாள் மான்சி,,

அருவிக்கு செல்லும் யாரோ ஏதோ பொருட்கள் வாங்க வந்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் கடையில் பில் போட்டபடி வெளியே எட்டிப்பார்த்த சத்யன், மான்சியை கண்டதும் உச்சபட்ச அதிர்ச்சியில் வாயை திறந்தபடி எழுந்து நின்றுவிட்டான்

அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி மான்சிக்கு திருப்தியாக இருக்க, பக்கத்தில் நின்ற விஸ்வாவைப் பார்த்து சிரித்தபடி கையை நீட்ட, அவனுக்கும் ஏதோ புரிந்து மான்சியின் கையைப் பற்ற, இருவரும் சத்யனின் கடையை நோக்கி போனார்கள்

கடையில் அதிக கூட்டமில்லாமல் இருக்க, வெளியே நின்றபடி “ என்ன சத்யா, வந்தவங்களை வாங்கன்னு கூப்பிட மாட்டீங்களா?” என்று மான்சி கேட்க

சட்டென்று சுதாரித்த சத்யன் அப்போதுதான் மான்சியின் கையைப் பற்றியபடியிருந்த விஸ்வாவை கவனத்தான், இவன் யாரென்ற கேள்வியுடன் விஸ்வாவை பார்த்தான்,, விஸ்வாவும் நேசத்துடன் சத்யனை பார்த்து புன்னகைக்க,

அதற்கு மேல் தாமதித்தால் நாகரீகமல்ல என்று சத்யனுக்கு புரிய “ வாங்க வீடு மாடியில் இருக்கு” என்று அவர்களிடம் கூறிவிட்டு “ மணி கொஞ்சநேரம் கல்லாவில் உக்காரு நான் இதோ வர்றேன் ” என்று கூறிவிட்டு முன்னால் செல்ல, விஸ்வா மான்சி இருவரும் அவன் பின்னால் போனார்கள்

கடையின் பக்கவாட்டில் மாடிக்கு வழியிருந்தது, வீட்டுக்குள் நுழைந்ததும் அங்கிருந்த பிரம்பு சோபாவை காட்டி “ உட்காருங்க அம்மா உள்ள இருக்காங்க” என்றவன் உடனே உள்ளே போய்விட

விஸ்வா மான்சியைப் பார்த்து சிரிப்புடன் “ என்ன மான்சி மாப்ள அப்படியே பம்முறாரு” என்று மெல்லிய குரலில் கேட்டான்


மான்சி ஏதோ சொல்ல வாயைத் திறக்க, அப்போது பேச்சி உள்ளேயிருந்து வேகமாக வருவதைப் பார்த்துவிட்டு “ அத்தை” என்று ஓடிச்சென்று பேச்சியை கட்டிக்கொண்டாள் மான்சி

இவ எதுக்கு எவனையோ கூட்டிக்கிட்டு இங்க வந்திருக்கா, என்று ஆத்திரத்துடன் வந்த பேச்சிக்கு, சிற வயதில் அத்தை என்று ஓடிவந்து கட்டிக்கொள்ளும் மான்சியை நினைவுப்படுத்துவது போல இப்போது மான்சியின் செயல் இருக்கவும், என்ன சொல்வது என்று புரியாமல் சற்றுநேரம் கழித்து மான்சியின் முதுகை வருடி “ எப்படிம்மா இருக்க?” என்றாள் பேச்சி

சலுகையாய் பேச்சியின் தோளில் சாய்ந்துகொண்டு “ உங்களையெல்லாம் பார்க்காம நான் நல்லாவே இல்லை அத்தை, நீங்கதான் என்கிட்ட போன்ல கூட பேசறதில்லையே” என்று மான்சி குழந்தையாய் கொஞ்சினாள்

பேச்சி ஒன்றும் புரியாமல் சத்யனைப் பார்க்க, அவன் முகத்திலும் ஏகப்பட்ட குழப்ப ரேகைகள் தாறுமாறாக ஓடியது, “ நான் போய் கூல்டிரிங்ஸ் எடுத்துட்டு வர்றேன்மா” என்று சாக்கு சொல்லிவிட்டு கீழே ஓடிவிட்டான் சத்யன்

மான்சி பேச்சியின் தோளில் சாய்ந்தபடியே நடந்து வந்து பெரிய சோபாவில் அமர்ந்து பேச்சியின் மடியில் தலைசாய்த்து படுத்துக்கொண்டாள், இப்படி சலுகையாய் கொஞ்சுபவளை என்னவென்று கேட்பது என பேச்சிக்கு புரியவில்லை,

எதிரே அமர்ந்திருந்த விஸ்வாவை பார்த்து “ நீங்க யாரு தம்பி மான்சியோட பிரண்ட்டா?” என்று பேச்சி கேட்டதும், என்ன சொல்வது என்று விஸ்வா யோசிக்கும் போதே,

மான்சி எழுந்து அமர்ந்து “ அத்தை இவர் பேரு விஸ்வநாதன், அட்சயா அண்ணியோட பெரியப்பா மகன், அமெரிக்கால இருந்து போன வாரம்தான் வந்துருக்காரு, நம்ம ஊரையெல்லாம் சுத்திப் பார்க்கனும்னு சொன்னாரு அதான் கூட்டிட்டு வந்தேன் ” என்று மான்சி சொல்ல,

அப்போது கையில் கூல்டிரிங்ஸ் பாட்டிலுடன் வந்த சத்யன் விஸ்வாவிடம் ஒன்றை கொடுத்துவிட்டு, மான்சியிடம் மற்றொன்றை கொடுத்தான், பிறகு மற்றொரு சோபாவில் அமர்ந்து விஸ்வாவைப் பார்த்து “ இங்கே சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இருக்கு, ஆனா எல்லாத்துக்கும் மையமா இருக்கிற திருநெல்வேலியில் தங்கினால் தான் எல்லா இடத்துக்கும் போக தோது படும், திருநெல்வேலியிலேயே நல்ல ஹோட்டல்கள் இருக்கு அதனால அங்கேயே விசாரிச்சு உங்களுக்கு தங்க ஏற்பாடு பண்ணவா?” என்று கேட்க..

விஸ்வா மான்சியைப் பார்த்தான், மான்சி சத்யனைப் பார்த்து “ சத்யா எதுக்கு ஹோட்டல்ல தங்கனும், இந்த வீடு நல்லா பெரிசாத்தானே இருக்கு, இங்கயே தங்கிக்கிறோம், நீங்க என்ன அத்தை சொல்றீங்க?” என்று பேச்சியிடம் கேட்டாள்

“ உனக்கு இங்க வசதியா இருந்தா இங்கயே தங்கும்மா, இந்த கூடமும் அதோ அந்த ரூமும் மட்டும்தான் இருக்கு” என்று பேச்சி சொன்னதும்

“ இது போதும் ஆன்ட்டி நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்” என்றான் விஸ்வா,
அதன்பிறகு பேச்சி இரவு உணவு தயார் செய்ய உள்ளே போய்விட, விஸ்வா காரிலிருந்து பெட்டிகளை எடுத்துவர கீழே போனான்,

சத்யன் தனது அறையின் கதவை திறந்துவிட, மான்சி அவனை உரசியபடி உள்ளேபோனாள், அந்த அறையில் இருந்த கட்டிலில் அமர்ந்து கால்மேல் கால் போட்டபடி சத்யனை பார்த்து “ என்கூட வந்திருக்கறது யார் தெரியுமா சத்யா, அட்சயா அண்ணியோட அண்ணன், என்னை கல்யாணம் பண்ணிக்கறதுக்காக அமெரிக்காலேருந்து வந்திருக்கான், கொஞ்சநாள் ரெண்டுபேரும் பேசிப் பழகி பிடிச்சிருந்தா மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கோம் ” என்று மான்சி சொன்னதும்,

சத்யனின் முகம் சட்டென்று நரசிம்ம அவதாரமெடுத்தது ஆனால் அடுத்த நிமிடமே அது பொய்யோ எனும்படி பழைய நிலைக்கு மாறியது, ஒருவித அலட்சியத்துடன் தோள்களை குலுக்கிக்கொண்டு அறையிலிருந்து வெளியே போய்விட்டான்




" உலகிலேயே அழகான விஷயம் எது?"

" ஒருவனைக் கேட்டால் ... பூ என்பான்,,

" பூக்காரியை கேட்டால்.. பூ அவளுக்கு காசு!

" இன்னொருவனை கேட்டால்... நிலா என்பான்,,

" விஞ்ஞானியைக் கேட்டால்... நிலா அவனுக்கு கல்!

" ஒருவனைக் கேட்டால்... வீணை என்பான்,,

" தச்சனைக் கேட்டால்... வீணை அவனுக்கு மரம்!

" உலகிலேயே அழகான விஷயம் எதுவென்றால்...

" ஒவ்வொருவனுக்குள்ளும் இருக்கும் தேடல்! 



No comments:

Post a Comment