Thursday, September 3, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 4

மான்சியும் சோர்வுடன் படுத்துக்கொள்ள, அன்னலட்சுமி அவளை எதுவும் தொந்தரவு செய்யாமல் மறுநாள் கிளம்புவதற்கான ஏற்பாடுகளை செய்தாள்
மறுநாள் காலை மான்சியை காண வந்த அருணா அவளை காரில் அழைத்துச்சென்று ஊட்டியின் குளிருக்கு ஏற்ற சில உடைகளை வாங்கிக்கொடுத்து அழைத்து வந்து விட்டுவிட்டு போனாள்

மான்சியின் மவுனத்தை, இரண்டு நாட்களாக புள்ளைக்கு அலைச்சல், பிறந்த ஊரைவிட்டு வேறு ஊர் போகின்ற போகின்ற கவலை என்று தவறாக கணக்கிட்டாள் அன்னலட்சுமி



அன்றிரவு பதினோரு மணிக்கு குவாலிஸ் காரில் வந்த அருணா நடுவே இருந்த சீட்டில் மான்சியை வசதியாக படுத்துக்கொள்ள சொல்லிவிட்டு, பின் சீட்டில் அன்னலட்சுமியை அமரச்சொல்லிவிட்டு அருணா டிரைவருக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள் , கார் மிதமான வேகத்தில் ஊட்டி நோக்கி பயணமானது

அதிகாலையில் கார் ஊட்டியை நெருங்கிய போது, குளிர் எழும்பை ஊடுருவ ஆளுக்கொரு சால்வையை எடுத்து போர்த்திக்கொண்டனர், மான்சியும் கண்விழித்து எழுந்து அமர்ந்துவிட, ஊட்டியின் குளிரில் எப்படியெல்லாம் இருக்கவேண்டும், என்னனென்ன செய்யவேண்டும்,, எதெது செய்யக்கூடாது என்று தாய் மகள் இருவருக்கும் விளக்கமாக எடுத்துச்சொல்லியபடி வந்தாள் அருணா

ஊட்டியை விட்டு நிறைய மலை கிராமங்களை கடந்து கர்நாடகாவின் எல்லையில் இருந்தது அருணாவின் எஸ்டேட், மூன்று கிலோமீட்டர் சுற்றளவு கொண்டு எஸ்டேட்டை அடிக்கடி வந்து பராமரிக்க முடியாத காரணத்தால் பக்கத்து எஸ்டேட் காரரிடம் குத்தகைக்கு விட்டிருந்தாள் அருணா, எஸ்டேட்டின் மறுமூலையில் இருந்தது வீடு, கேரள பாணியில் கட்டப்பட்ட சற்று பெரியவீடுதான், அக்கம்பக்கம் எந்த வீடுகளும் இல்லை, அடுத்த எஸ்டேட்டில் வீடுகள் இருக்கலாம் ஆனால் இங்கிருந்து பார்க்க எதுவும் தெரியவில்லை, வழி நெடுகிலும் இருந்த மலைகிராமாங்கள் தான் அன்னலட்சுமிக்கு தைரியத்தை கொடுத்தது,

கார் போய் வீட்டின் போர்ட்டிகோவில் நின்றது ,, அருணா காரிலிருந்து இறங்கி பூட்டியிருந்த கதைவை தன்னிடமிருந்த சாவியால் திறந்து உள்ளே போனவள் திரும்பி அன்னலட்சுமியைப் பார்த்து “ மான்சியை கூட்டிக்கிட்டு வா அன்னம்” என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள்

மான்சியும் அன்னலட்சுமியும் அவ்வளவு பெரிய வீட்டை வியப்புடன் பார்த்தபடி உள்ளே போனார்கள், இருவரும் தங்களது பைகளை வைத்துவிட்டு வீட்டை சுற்றிப் பார்க்க,

அருணா அவர்களை வீட்டின் பின்புறம் அழைத்துச்சென்றாள், அங்கே தனியாக ஒரு அறை இருந்தது, அதன் கதவை திறந்து உள்ளே போய் “ இந்த ரூம்ல நீங்க ரெண்டுபேரும் தங்கிக்கங்க, இங்கே ஏற்கனவே இருந்த வாட்ச்மேன் இருந்த வீடு இது,, உள்ளயே கிச்சன், டாய்லெட் பாத்ரூம் எல்லாமே இருக்கு, சமையல் செய்ய தேவையான பாத்திரங்கள், குளிர் காய கணப்பு எல்லாமே இருக்கு, இப்படியே தோட்டத்து வழியா இந்த வீட்டுக்கு வரலாம், அடிக்கடி பெரிய வீட்டு கதவை திறந்து சுத்தம் செய்துட்டு பூட்டி வச்சிருங்க, எப்பவாவது வெக்கேஷனுக்குத் தான் நாங்க வருவோம், அதுவரை வீட்டையும் தோட்டத்தையும் பராமறிக்கிறதுதான் உங்க வேலை, இன்னிக்கு ஒருநாளைக்கு பெரியவீட்டுலயே எல்லாருக்கும் சேர்த்து சமைக்கலாம், நாளைக்கு நான் கோவை போனதும் இங்கே சமையல் செய்து சாப்பிடுங்க” என்று அருணா தெளிவாக சொல்ல அன்னலட்சுமி கவனமாக கேட்டுக்கொண்டாள்
பாத்ரூமுக்குள் மான்சியை அழைத்துப்போய் வென்னீருக்கு ஹீட்டர் எப்படிப் போடுவது என்று காண்பித்த அருணா “ ரெண்டுபேரும் குளிச்சிட்டு வாங்க, நானும் போய் குளிச்சு ப்ரஷாகி வர்றேன்” என்று சொல்லிவிட்டுப் போனாள்


இருவரும் குளித்து முடித்து அருணாவின் வீட்டுக்குள் போனார்கள், அருணா ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தாள், காரின் டிரைவரிடம் பணம் கொடுத்து பக்கத்து கிராமத்தில் காய்கறிகளும் பழங்களும் வாங்கி வரச்சொன்னாள்,

அன்னலட்சுமி அந்த வீட்டை சுத்தம் செய்ய மான்சி எதுவும் செய்யவேண்டாம் என்று அருணா சொல்லிவிட, அன்னலட்சுமி மகளை முதல்முறையாக குழப்பத்தோடு பார்த்தாள், ஏன் எந்த வேலையும் செய்யக்கூடாது? எதுனாச்சும் மேலுக்கு சொகமில்லையா? என்று மனதுக்குள் எண்ணமிட்டப்படி தனது வேலையை தொடர்ந்தாள்

டிரைவர் காய்கறிகள் வாங்கி வந்ததும் அன்னலட்சுமி உதவியுடன் தனக்கு தெரிந்ததை சமையல் செய்த அருணா “ நாங்க எப்ப வந்தாலும் எங்க வீட்டு சமையல்காரியை கூட்டிட்டு வந்துடுவோம்,, இங்கே தனியா இருக்கோம்னு நீங்க ரெண்டு பேரும் பயப்பட வேண்டாம்,, காலையில மலைகிராமத்து ஆட்கள் எல்லாம் வேலைக்கு வந்துடுவாங்க, பகல் முழுவதும் எஸ்டேட்ல ஏதாவது வேலை இருக்கும், நைட்ல தான் தனியா இருக்கனும், ரெண்டு எஸ்டேட்க்கும் ஓரே வாட்ச்மேன் தான் இருப்பான், அவனை மீறி எதுவும் யாரும் எஸ்டேட்க்குள்ள நுழையமுடியாது, அதனால உங்க ரெண்டுபேருக்கும் எந்த பயமும் வேண்டாம்” என்று பேசிக்கொடண்டே சமையலை முடித்தாள் அருணா

டிரைவரோடு சேர்த்து நான்கு பேரும் சாப்பிட்டு முடித்ததும், அன்னலட்சுமியிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடுமாறு மான்சி அருணாவிடம் பார்வையாலேயே கெஞ்சினாள், ஏனென்றால் அருணா நாளை காலையே கோவை புறப்பட்டு விடுவாளே என்ற பயம் மான்சிக்கு

ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்த அருணா நின்றுகொண்டிருந்த அன்னலட்சுமியிடம் “ உட்காரு அன்னம் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்” என்று சொன்னதும் அன்னலட்சுமி சோபாவின் அருகே தரையில் அமர்ந்துகொண்டாள், மான்சி மாடிப்படியில் அமர்ந்து அதன் மரக் கைப்பிடியை பற்றிக்கொண்டாள், அவளின் பதட்டத்தை தணிக்க ஒரு பற்றுகோள் தேவைப்பட்டது

அன்னலட்சுமி அருணாவின் முகத்தைப் பார்க்க,, அருணா மான்சியின் முகத்தைப் பார்த்துவிட்டு பேச்சை ஆரம்பித்தாள்,, மான்சியிடம் முதலில் கூறிய அதே கதைகளை அன்னலட்சுமியிடம் பக்குவமாக கூறினாள் அருணா,

வியப்புடன் எல்லாவற்றையும் கேட்ட அன்னலட்சுமி “ என்னம்மா இது உங்களுக்குப் போய் இப்படியெல்லாம் நடக்குது,, இப்போ குழந்தை பெத்துத் தர வேற பொம்பளையே கிடைக்கலையாம்மா? இனிமே என்னம்மா செய்யப்போறீங்க?” என்று அப்பாவியாக கேட்டாள்

“ ம்ம் நிறையப் பொண்ணுங்க கிடைச்சாங்க அன்னம் ஆனா எந்தப் பொண்ணும் நான் நினைச்ச மாதிரி அமையலை, அதான் கடைசியா ஒரு முடிவு பண்ணி மான்சிகிட்டயே நேரடியா கேட்டேன்” என்று அருணா விஷயத்தைப் போட்டு உடைக்கவும், மான்சியின் விசும்பல் ஒலி கேட்கவும் சரியாக இருந்தது

இரண்டும் இரண்டும் நான்கு என்று ஈசியான சரியான கணக்கை கண்டுபிடிக்க அன்னலட்சுமியின் வாழ்க்கை அனுபவம் கைகொடுக்க, உச்சபட்ச அதிர்ச்சியில் மகளைப் பார்த்தாள், மான்சி தனது தாவணி முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டு இருந்தாள்

அன்னலட்சுமி அதிர்ச்சியுடன் அருணாவை பார்த்து “ நீங்க என்னம்மா சொல்றீங்க, என் மக கொழந்தை புள்ளம்மா அதுக்கு ஒன்னுமே தெரியாது, கட்டியிருக்குற துணி ராவுல ஒதுங்குறது கூட தெரியாம தூங்குற குழந்தைம்மா அவ,, அவகிட்டப் போய் இவ்வளவு பெரிய விஷயத்தை கேட்டுருக்கீங்களே? நீங்க அவ்வளவு கேவலமாவா எங்களை நெனைச்சுட்டீங்க? பிச்சையெடுத்தாவது என் மகளுக்கு சோறு போடுவேனே தவிர இந்த மாதிரி ஒரு நிலைமைக்கு அவளை தள்ளமாட்டேன்ம்மா ” என்று குரலில் ஆக்ரோஷத்துடன் அன்னலட்சுமி கூற..


அவளை கோபத்தோடு ஏறிட்ட அருணா “ ஏய் அன்னம் இரு இரு, என்னமோ ஊர் உலகத்துல நடக்காதது மாதிரி கொதிச்சுப் போய் பேசுற, இதோபார் அன்னம் எல்லாமே உன் மகள் சம்மதத்தோட நடந்து முடிஞ்சுபோச்சு, உன் மக வயித்துல எங்க குடும்ப வாரிசை அழுத்தமா வச்சாச்சு, இன்னும் ஒன்பது மாசத்துல அவ எங்க வாரிசை பெத்து குடுத்துட்டு போயிரனும், இதை அவ சும்மா ஒன்னும் செய்யலை, குழந்தை பிறந்த பிறகு ஒரு வீடும், அஞ்ச லட்சரூபாய் பணமும், நிரந்தரமா ஒரு வேலையும் தர்றதா சொல்லியிருக்கேன்,, குழந்தைக்கு எதுவும் ஆகாம நல்லபடியா பெத்து தர்றதுதான் அவளோட வேலை, அதுக்கப்புறம் அந்த குழந்தைக்கும் அவளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை புரியுதா அன்னம் ” என்று அருணா கேட்க

அருணா கூறியது அன்னலட்சுமியின் காதில் நெருப்புக்குழம்பாக பாய அதிர்ச்சியில் பேச்சு வராது உறைந்துபோய் அமர்ந்திருந்தாள்

அருணா இருந்த இடத்தைவிட்டு நகர்ந்து அன்னலட்சுமியின் அருகே வந்து அவள் தோளில் கைவைத்து உலுக்க, கொடுமையான கனவு ஒன்றிலிருந்து விழித்தவள் போல அன்னலட்சுமி திகிலுடன் அருணாவைப் பார்த்தாள்
அவள் பயத்தை போக்கினால் மட்டுமே சொல்லும் விஷயம் அவள் மூளையில் ஏறும் என்று அருணாவுக்கு புரிந்தது “ இதோபார் அன்னம், நீ நெனைக்கிற மாதிரி இது ஒன்னும் பாவச்செயல் இல்லை, நாட்டுல இப்போ நிறைய இது மாதிரி நடக்குது, பிள்ளையில்லாம தவிக்கிற என்னைப்போல இருக்குறவங்களுக்கு உதவுறது உங்களுக்குப் புண்ணியம் தானே அன்னம்? இதுக்காக என் புருஷனோட முகத்தைக்கூட மான்சி பார்க்கவேண்டியதில்லை , சாதரணமா ஒரு ஊசி போடுற மாதிரிதான் அவரோட உயிரணுக்களை மான்சியோட கருப்பைக்குள்ள டாக்டர் செலுத்தியிருக்காங்க, குழந்தை பிறந்ததும் அவளுக்கு ஒரு பாதிப்பும் இல்லாம உன் மகளா திரும்பி வந்துருவா” என்று அருணா சொல்ல



அருணாவையே கூர்ந்து பார்த்த அன்னலட்சுமி “ எல்லாம் சரிம்மா அதுக்கப்புறம் என் மகளோட வாழ்க்கை என்னாகும், ஒரு புள்ளைப் பெத்துக்கிட்ட அவளை எவன்ம்மா கட்டிக்குவான்?” என்று கண்ணீருடன் கேட்க

“ அய்யோ அன்னம் நீ எந்த காலத்துல இருக்க? விதவைகள், விவாகரத்து ஆனவங்க, இவங்களுக்கே சுலபமா கல்யாணம் ஆகுற இந்த காலத்துல இப்படி பேசுற, இதுனால மான்சி எந்த விதத்திலும் குறைஞ்சுட மாட்டா, நான் குடுக்குற பணத்தை வச்சுகிட்டு நிறைய நகைப் போட்டு அவளை நல்லபடியா ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணிக் குடுக்கலாம், அவளுக்கு எப்படி குழந்தை பிறந்ததுன்னு விலாவாரியாக எழுதி ஒரு சர்டிபிகேட் குடுத்துடுவாங்க டாக்டர், பத்தாததுக்கு நானும் வந்து மான்சியை கல்யாணம் பண்ணிக்கப் போறவன் கிட்ட எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன்,, இது போதும்ல,, சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட உங்களுக்கு இருக்க வீடு , கைநிறைய பணம், நல்ல வேலைன்னு கெடைக்குதே இதெல்லாம் சும்மா வந்துடுமா அன்னம், நாம எதையாவது கொடுத்தாத்தான் நமக்கு ஏதாவது கெடைக்கும்” என்று அருணா தனது பேச்சை முடிக்க..

இனி பேச எதுவுமில்லை என்பதுபோல் அன்னலட்சுமி கண்ணில் வழிந்த கண்ணீருடன் எழுந்து மகளருகே போனாள், அம்மாவை அருகே பார்த்ததும் மான்சியின் அழுகை இன்னும் அதிகமானது

மகளை கூர்ந்துப் பார்த்த அன்னலட்சுமி “ எவனாவது சைனாசில்க் சேலை குடுத்தா அவனுக்கு கூத்தியாளா போயிடுவேன்னு அன்னிக்கு சொன்னப்பயே என் மனசுல சிவுக்குன்னுச்சுடி, என்னிக்காவது ஒருநாளு இப்புடி வந்து நிப்பேன்னு எனக்கு அன்னிக்கே தெரிஞ்சிருந்தா உனக்கு சோத்துல வெஷத்த வச்சு உருட்டிக் குடுத்துட்டு நானும் தின்னு செத்துருப்பேன்டி, இப்படி மூடிவச்சு கழுத்தறுத்துட்டியேடி பாவி,, என்கிட்ட ஒரு வார்த்தை யோசனை கேட்டுருக்கலாமேடி பாதகத்தி, உனக்கு அவ்வளவு காசாசை பிடிச்சுப்போச்சாடி மவளே ” என்று கூறிவிட்டு மான்சியின் கூந்தலை கொத்தாகப் பற்றிக்கொண்டு அவள் முதுகில் மடார் மடாரென்று அறைந்தாள் அந்த அம்மா

அருணா பதட்டத்துடன் ஓடிவந்து அன்னலட்சுமியைப் பிடித்து இழுத்து தள்ளிவிட்டு மான்சியை எழுப்பி தனக்கு பின்னால் நிறுத்திக்கொண்டாள், அன்னலட்சுமி மறுபடியும் ஆக்ரோஷத்துடன் மான்சியை நெருங்க, அவளை மறித்த அருணா “ ஏய் அன்னம் நீ என்ன பைத்தியமா? ,, நான் அவ்வளவு சொல்லியும் உனக்குப் புரியலையா?,, இவளுக்கு எந்த களங்கமும் இல்லை அன்னம், இதுக்கு மேல இவமேல நீ கைவச்சா நான் மான்சியை மட்டும் தனியா வேற எங்கயாவது கொண்டு போய் வச்சிடுவேன்” என்று அருணா கூற

அதை சற்றும் காதில் வாங்காத அன்னலட்சுமி “ இதுக்கு மேல இவ உசுரோட இருக்கனும்னு அவசியமில்ல இவளும் சாகட்டும், இவ கூடவே நானும் சாகுறேன்” என்று அழுகையுடன் கூறியபடி மான்சியை நெருங்கிய அன்னத்தை மடக்கி நிறுத்திய அருணா 


“ ஏய் அன்னம் இதுக்கு மேல நான் சும்மா இருக்கமாட்டேன்,, அதுமட்டுமல்ல அவ வயித்துல வளர்ற குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா உங்களை சும்மா விடமாட்டேன், இதுக்காக பல ஆயிரம் ரூபாய் செலவு பண்ணிருக்கேன், உன் மக எல்லா பேப்பர்லையும் கையெழுத்துப் போட்டு குடுத்திருக்கா, ஏதாவது சிக்கல்ன்னா உன் மகதான் வில்லங்கத்துல மாட்டிக்குவா, அதனால ஒழுங்கா புள்ளைய பெத்து குடுத்துட்டு குடுக்குறதை வாங்கிகிட்டு எங்கயாவது போய்ச் சேருங்க,, ஏதாவது தகராறு பண்ணீங்க காலம் பூராவும் கம்பி எண்ணுற மாதிரி பண்ணிடுவேன். ஆமா ” என்று கோபமாய் பேசி தன் சுயரூபத்தை காட்டியவள் தனது அறைக்குள் போய் கதவை சாத்திக்கொண்டாள்

அவள் வார்த்தைகளின் அர்த்தம் புரிய தாயும் மகளும் விக்கித்துப்போய் நின்றிருந்தனர், இந்த மிரட்டலுக்கு என்ன பதில் சொல்வது என்று இருவருக்குமே புரியவில்லை,,

இப்படியொரு பேச்சை அருணாவிடம் எதிர்பார்க்காத மான்சி திகைப்புடன் தன் தாயை பார்க்க, அடிபட்ட குழந்தையைப் போல் பரிதாபத்துடன் விழித்த மகளைப் பார்த்ததும் அன்னலட்சுமியின் மனம் கோவென்று கதற, “ அடி மவளே இப்புடி மோசம், போய்ட்டியே” என்று கதறியபடி மகளை அணைத்துக்கொண்டாள்

அன்னலட்சுமிக்கு மகளின் தற்போதைய நிலைமையை விட அருணாவின் மிரட்டல் பயத்தை கிளப்பியது, இப்படியொரு சிக்கலில் மாட்டிக்கொண்டாளே என்று மகள் மீது இரக்கம் வர மகளை கணணீருடன் தடவி ஆறுதல் படுத்தினாள்

அன்று இரவு தாயும் மகளும் எதுவும் சாப்பிடாமல் அந்த கடும் குளிரில் இரவெல்லாம் கேவிய மகளை அணைத்தபடி தூங்க வைத்தாள் அன்னலட்சுமி,,

மறுநாள் காலை தாய் மகள் இருவரையும் மறுபடியும் மிரட்டலாக எச்சரிக்கை செய்த அருணா, அவர்களுக்கு செய்துள்ள ஏற்பாடுகளைப் பற்றி மீண்டும் ஒருமுறை விளக்கமாக சொல்லி, மாதாமாதம் செலவுக்கு பக்கத்து எஸ்டேட் ஓனரிடம் சென்று மாதம் இரண்டாயிரம் ரூபாய் வாங்கிக்கொள்ளுமாறு சொன்னவள்,, வெளிநாடு செல்லும் முன் ஒருமுறை வந்து பார்த்துவிட்டு செல்வதாக கூறிவிட்டு கோவைக்கு கிளம்பினாள்

அவள் போனப் பிறகு அந்த பெரிய வீட்டை பூட்டிவிட்டு தங்களுக்கு ஒதுக்கிய வீட்டிற்கு வந்தனர் தாயும் மகளும்,, எல்லாம் கைமீறிப் போய்விட்டது இதற்கு மேல் அழுது பிரயோசனம் இல்லை, இனி மகளைதான் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்னலட்சுமிக்குப் புரிந்தது

அதன்பிறகு அன்னலட்சுமி மான்சியை கவனமாக பார்த்துக்கொண்டாள், மகளை கவனித்த நேரம் போக மீதி நேரங்களில் வேலைக்கு வரும் அந்த மலைவாழ் மக்களுடன் சேர்ந்து எஸ்டேட்களில் கூலி வேலைக்கு போக ஆரம்பித்தாள் அன்னலட்சுமி

வெளிநாடு செல்லும் முன் அக்கறையற்று வந்து பார்த்து, சம்பிரதாயமாக விசாரித்தவிட்டு போன அருணாவை கண்டு மான்சியின் உள்ளம் கொதித்தது, அவள் விரித்த வலையில் வசமாக சிக்கிக்கொண்டோம் என்று மட்டும் இருவருக்கும் புரிந்தது

இருவரின் செலவுக்காக அருணா வாங்கிக்கொள்ள சொன்ன இரண்டாயிரம் ரூபாய் பணத்தை அன்னலட்சுமி வாங்கவேயில்லை, உழைத்தே மகளையும் அவள் வயிற்றில் வளர்ந்த சிசுவையும் காப்பாற்றினாள், எஸ்டேட் வேலைகள் எளிதில் பழக்கப்பட்டுவிட உழைப்பது எளிதாக இருந்தது அன்னலட்சுமிக்கு

மாதம் ஒரு முறை வரும் காரில் ஊட்டி டவுனில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று செக்கப் செய்வதோடு அருணாவின் தயவு அவர்களுக்கு தேவைப்படவில்லை,

வளர்ந்துவரும் தன் வயிற்றைப் பார்த்து இனம்புரியாத கலக்கம் மனதில் சூழ மான்சி மவுனத்தை துணைகொண்டு தோட்டத்தை வளம் வந்தாள் 



" என் அம்மா"

" உழைப்பின் உதாரணமாய் திகழ்ந்து,,

" நைந்து போன வாழ்க்கையோடு,,

" என்னையும் சேர்த்து சுமப்பவள்,,

" என் அம்மா"

" எப்போதும் என்னிடம் தனது சிரிப்பைத் தவிர,,

" வேறு எந்தப் பொருளையும் காட்ட மறுக்கும் இவள்,,

" கண்ணீரை மட்டுமே உரமாக்கி வாழ்ந்தவள்!

" என் அம்மா"

" தனது கண்ணீரைக் கூட நான் காணாமல்,,

" தன்த் தலையணைக்கு மட்டுமே,,

" அறிமுகம் செய்தவள்,,

" என் அம்மா"

" தனது மனப் புழுக்கத்தை எல்லாம்,,

" மனதோடு புதைத்துவிட்டு,,

" மறு நாள் காலையில்,,

" புன்னகையோடு பூவாய் மலர்பவள்,,

" என் அம்மா" 


No comments:

Post a Comment