Friday, September 4, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 5

மான்சியின் பெருத்து முன் தள்ளிவரும் வயிற்றைப் பார்த்து அன்னலட்சுமி குமுறி கண்ணீர்விட்டாலும்,, வயிற்றைத் தடவிக்கொண்டு பரிதாபமாக விழிக்கும் மகளைப் பார்த்தவுடன் தனது கண்ணீரை மறைத்து முகத்தில் மலர்ச்சியை காட்டுவாள்,

தினமும் காலையில் எழுந்ததும் அன்றைக்கு தேவையான உணவை தயார்செய்து எடுத்துக்கொண்டு ஒன்பது மணிக்கு தாயும் மகளும் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே கிளம்பி விடுவார்கள்,

இரண்டு வளைவுகளை கடந்து கீழ்நோக்கி செல்லும் பாதையில் இறங்கினால் ஒரு மலைகிராமம் வரும், அங்கே இருக்கும் மலைஜாதி மக்களுடன் தான் அன்னலட்சுமி எஸ்டேட் வேலைகளுக்கு செல்வாள், அந்த மலைவாழ்மக்களின் கள்ளமற்ற அன்பு அன்னலட்சுமி மான்சி இருவருக்கும் ஆறுதலாய் இருந்தது, மான்சியின் உப்பிய வயிற்றைப் பார்த்து “ இவ புருஷன் எங்கே?” என்று அவர்கள் கேட்கும் கேள்விக்கு அன்னலட்சுமியின் ஒரே பதில் “ இவளை விட்டுட்டு ஓடிப்போயிட்டான்” என்பதுதான், அவர்களும் தாய் மகளின் கண்ணீரைப் பார்த்து வேறு எதுவும் கேட்க மாட்டார்கள்



அவர்களுக்கும் இந்த தாய் மகள் மீது ஒரு பரிதாபம், குழந்தை போன்று முகத்தை வைத்துக்கொண்டு வயிற்றில் ஒரு குழந்தையை சுமக்கும் மான்சியை அவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும், எஸ்டேட் சம்மந்தப்பட்ட எந்த வேலையாக இருந்தாலும் அன்னலட்சுமியை உடன் அழைத்துச்செல்ல தயங்கமாட்டார்கள்,
மான்சி அவர்களுடன் வேலைக்கு செல்வதில்லை என்றாலும், கர்ப்பிணி மகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு போக பயந்து தன்னுடனேயே அழைத்துச்செல்வாள் அன்னலட்சுமி, மான்சிக்கும் சிறிதுதூரம் நடைபயிற்சி செய்தது போல் உடல் இலகுவாக இருக்கும், அதனால் அம்மா எங்கே வேலைக்கு சென்றாலும் மான்சியும் உடன் போய்விடுவாள், அன்னலட்சுமி வேலை செய்தாள் என்றால் மான்சி அங்கே ஏதாவது மரத்தடியில் அமர்ந்து வேலைசெய்யும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் யாராவது இருந்தால் அவர்களை பார்த்துக்கொள்ளவாள்

அன்றும் அப்படித்தான் இருவரும் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தனர், அன்னலட்சுமிக்கு மகளை பார்ப்பதற்கு கவலையாக இருந்தது, இன்னும் பத்து நாட்களில் பிரசவித்துவிடுவாள் என்று டாக்டர் கூறிய நிலையில் அவளையும் இவ்வளவு தூரம் எப்படி அழைத்துச்செல்வது என்று குழப்பத்துடன் “ யம்மாடி நீ இங்கயே இறேன்மா, நான் மட்டும் போறேன், நாளு நெருங்குது இப்பபோய் இம்புட்டு தூரம் நடந்தா ஏடாகூடமா ஏதாவது ஆயிடப்போகுது, அப்புறம் அருணாம்மா நம்மலை கொன்னேபுடும், அவுகளுக்கு புள்ளை ஒழுங்கா வர்றதவிட செலவு பண்ண காசு வீனாயிட கூடாதுன்றதுல குறியா இருக்காக, நீ இங்கனயே இரு நான் போய்ட்டு மேஸ்திரிகிட்ட சொல்லிட்டு சீக்கிரமாவே வந்துர்றேன்” என்று எவ்வளவோ நயந்து சொல்லியும் மான்சி பிடிவாதமாக அம்மாவுடன் கிளம்பினாள்

இருவரும் எஸ்டேட்டை விட்டு கீழே இறங்கினர், வேலைக்கு போகாமல்கூட இருந்துவிடலாமா என்று அன்னலட்சுமி நினைத்தாள், ஆனால் தொடர்ச்சியாக பெய்த மூன்று நாள் மழையில் வேலை எதுவும் இல்லாமல் வீட்டிலேயே இருந்துவிட்டாள், இன்று மழை சற்று ஓய்ந்தது போல் இருக்க சரி மலை கிராமத்துக்குப் போனால் ஏதாவது வேலைக்கு செல்வார்கள் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் அன்னலட்சுமி கிளம்பினாள், ஏனென்றால் மான்சியின் பிரசவத்திற்குள் சிறிது பணம் சேர்க்கவேண்டுமே, இதைவிட்டால் வேறு வழியேது,

ஈரமாய் இருந்த பாதையில் மான்சி சரிக்கிவிழாமல் ஜாக்கிரதையாக மகளின் கையைப்பிடித்து அழைத்துச்சென்றாள், ஏனோ அன்று அன்னலட்சுமிக்கு தன் மகளையே பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும் போல் இருந்தது, மான்சி தாய்மையின் பூரிப்பில் ரொம்ப அழகாக இருந்தாள், இவ்வளவு அழகும் வீனாகிப் போனதே என்று மனசு குமுறினாலும் அதை வெளிக்காட்டாமல் மகளுடன் சர்வ ஜாக்கிரதையாக நடந்தாள்

வழியில் ஏகப்பட்ட இடங்களில் மண்சரிந்து வழியை மூடியிருக்க மாற்றுப்பாதையில் மகளுடன் மலைகிராமம் வந்து சேர்ந்தாள் அன்னலட்சுமி 


அங்கிருந்தவர்களும் மூன்று நாட்களாக வேலைக்கு போகாததால் சோர்ந்துபோய் திண்ணைகளில் அமர்ந்திருந்தனர்,

எஸ்டேட் வேலைகளுக்கு அழைத்துச்செல்லும் மேஸ்திரியின் வீட்டு திண்ணையில் அமர்ந்த அன்னலட்சுமி வீட்டுக்குள் எட்டிப்பார்த்து “ என்னாண்ணே ஏதாச்சும் வேலையிருக்கா? மூனுநாளா வீட்டுக்குள்ளேயே முடங்கியாச்சு, இன்னிக்காச்சும் ஏதாவது வேலை குடுத்தா பரவாயில்லை” என்று கேட்க

தலைக்கு குல்லாவை மாட்டிக்கொண்டே வெளியே வந்த மேஸ்திரி “ வடக்கால இருக்கு மேத்யூ அய்யா எஸ்டேட்ல தான் டீ எலை கிள்ளனும் இருவது பொண்ணாளு கூட்டிட்டு வரச்சொல்லி போன் பண்ணாரு, ஆனா மக்க யாரும் வரமாட்டேன்னு சொல்றாக” என்றார்

“ ஏன், ஏன்ணே வரமாட்டேன்னு சொல்றாக” என்று அன்னலட்சுமி குழப்பமாக கேட்க

“ ஒனக்கு விஷயமே தெரியாதா அன்னம் ? மூனுநாள் மழையில ஏகப்பட்ட எடத்துல மண்ணு சரிஞ்சு வழியை மூடிருச்சு, நிறைய ஆளுகவேற மண்ணுக்குள்ள மாட்டிக்கிட்டதா செய்தில சொன்னாக, அதுக்கு பயந்துபோய் மக்க யாரும் வரலைன்னு சொல்றாக” என்று மேஸ்திரி சொன்னதும்
மான்சிக்கு திகைப்பாக இருந்தது ஆளுங்களையே மூடுற அளவுக்கு மண் சரியுமா? என்று நினைத்தாள்,

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே அங்கே வந்த சில பெண்கள் “ மேஸ்திரி அண்ணே அந்த எஸ்டேட் பக்கம் மண்ணு ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குமாம், இதுவரைக்கும் மண்ணு சரிஞ்சதே இல்லையாம், அதனால பயமில்லாம வேலைக்கு போகலாம்னு நம்ம ஊரு பெரிசுக சொல்லுதுக, நாங்க வர்றோம்னு எஸ்டேட்காரய்யாவுக்கு போன் போட்டு சொல்லிடு, நம்ம ஊர்பக்கம் இன்னும் ரெண்டு நாளைக்கு மழை இருக்கும்னு செய்தில சொன்னாகளாம், அப்புறம் மழை விடாம புடிச்சிக்கிட்டா என்னப்பண்றது, அதான் இன்னிக்கு வேலைக்குப் போய் நாலு காசு வந்தா ஏதாச்சும் செலவுக்காகும்,, சரி நாங்க கிளம்புறோம்ண்ணே ” என்று ஒரு பெண் சொல்ல அனைவரும் அதற்கு தலையசைத்தனர்,, அன்னலட்சுமியும் அவர்களுடன் கிளம்பினாள்,

மான்சியும் மென்நடையாக அவர்களுக்கு பின்னால் போனாள், வழியெங்கும் மழையின் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மனதில் திகிலை ஏற்படுத்தியது, நிறைய இடங்களில் பெரியபெரிய மரங்களுடன் மண் சரிந்து பள்ளத்தாக்கில் கொட்டிக்கிடந்தது,

அவர்கள் வேலைக்கு வரவேண்டிய எஸ்டேட் வந்துவிட்டது, மலை கிராம முதியவர்கள் சொன்னது உண்மைதான் போலும், மழையினால் எந்த பாதிப்பும் இன்றி பச்சை தேயிலைகளுடன் செழிப்பாக இருந்தது அந்த எஸ்டேட்,, அனைவரும் முதுகில் கூடையை மாட்டிக்கொண்டு வேலையில் இறங்கினார்கள்

அன்று யாரும் சிறு குழந்தைகளை எடுத்து வராததால், மான்சி மட்டும் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு மேட்டில் மெதுவாக ஏறி தனியாக அமர்ந்தாள், அவ்வளவு குளிரிலும் அவளுக்கு நெற்றியில் பொடிப்பொடியா வியர்த்திருந்தது, முந்தானையை எடுத்து நெற்றியை துடைத்துக்கொண்டு வானத்தை அன்னாந்து பார்த்தாள், மணி பத்தரை ஆகியிருந்தாலும் சூரியன் எட்டிப்பார்க்கும் யோசனை இன்றி மேகத்துக்குள் மவுனமாக இருந்தான், அந்த மவுனத்தின் அறிகுறி ஏதோ ஆபத்துக்கு அச்சாரம் என்பதுபோல் திகிலை உண்டாக்கியது


வயிற்றை இறுக்கிய ஸ்வெட்டரின் பட்டன்களை அவிழ்த்துவிட்டு கால்களை சற்று அகலவிரித்து குத்துக்காலிட்டு அமர்ந்தாள், எப்படி அமர்ந்தாலும் வயிறு ரொம்பவே சிரமப்படுத்தியது, சற்றே மேல்மூச்சு வாங்க ‘ பேசாம வீட்டுலேயே படுத்துக்கெடந்திருக்கலாம், இன்னிக்கு என்னவோ இப்புடி திணறுது’ என்று எண்ணியபடி குனிந்து தனது வயிற்றைப் பார்த்தாள்,

இப்போதெல்லாம் வயிற்றில் உருளும் குழந்தையின் அசைவை நன்றாக உணரமுடிந்தது, அடிக்கடி கடக் முடக்கென்்று சிறுசிறு சப்த்தங்கள் மான்சிக்கு மட்டுமே கேட்டது, குழந்தையின் அசைவுகள் அனைத்தும் மான்சியை சிலிர்க்க வைக்கும், குழந்தை யாரைப்போல் பிறக்கும் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வாள், என்னைய மாதிரி இருக்குமா? இல்ல அந்த அருணாவோட புருஷன மாதிரி இருக்குமா? அந்தாள் அசிங்கமா இருந்தா குழந்தையும் அவனைமாதிரித்தான் இருக்கும் என்று சலிப்புடன் நினைத்துக்கொள்வாள்,

'என்னா பாப்பா பொறக்குமோ தெரியலை,, ஆம்பளைப் புள்ளைய இருந்தா நல்லது, பொண்ணா பொறந்து நானும் என் ஆத்தாளும் படுற கஷ்டம் போதும், எனக்கும் ஒரு பொண்ணு பொறந்து அதுவும் சீரழியவேனாம், என்று எண்ணமிட்டவள், ம்ஹும் அது ஏன் சீரழியப்போகுது அதுதான் பெரிய பணக்கார வீட்டுக்கு போகப்போகுதே,, என்று தன்னை சமாதானம் செய்துகொள்வாள்

குழந்தையின் அசைவைப் பற்றி அம்மாவிடம் சொன்னால் “ அப்புடித்தான் இருக்கும் கண்ணு, அந்த சமயத்துல வயித்துக்கு ஏதாவது ஆகாரம் குடுத்தா குழந்தை அமைதியாயிரும்” என்று கூறி, கஞ்சி, அல்லது பால், ஏதாவது கலக்கி மான்சிக்கு குடிக்க கொடுப்பாள்,

இப்போது கூட வயிற்றுக்குள் குழந்தை பலமாக அசைய ‘ பாப்பாவுக்கு பசிக்குது போலருக்கு’ என்று நினைத்தவள் கூடையில் இருந்த சாப்பாட்டு பாத்திரத்தை எடுத்து கீழே வைத்துவிட்டு அதற்கு அடியில் இருந்த கஞ்சி இருந்த தூக்கை எடுத்து திறந்து இரண்டு முழுங்கு குடித்தாள், வயிற்றுக்குள் அசைவு சற்று நின்றது போல் இருந்தது மான்சிக்கு சிரிப்பு வந்தது ‘ சரியான எமகாதக புள்ளையா இருக்கும் போலருக்கு’ என்று எண்ணியபடி இலையில் இருந்த ஊறுகாயைத் தொட்டு நாக்கில் தடவிக்கொண்டாள்

கையில் கஞ்சி தூக்குடன் தனக்கு முன்பு இருந்த உயரமான தேயிலை எஸ்டேட்டை நிமிர்ந்து பார்த்தாள், ஆறு அடுக்குகளாக பச்சை தேயிலைகளை மூடிக்கொண்டு ரம்மியமாக இருந்தது, அன்னலட்சுமியும் மலைவாழ் பெண்களும் நான்காவது அடுக்கில் தேயிலை கிள்ளி கூடையில் போட்டுக்கொண்டு இருந்தார்கள்

அன்னலட்சுமி பக்கத்தில் இருந்த பெண்ணுடன் ஏதோ சிரித்து பேசியபடி தேயிலையைப் பறித்து கூடையில் போட்டுக்கொண்டு இருந்தாள், ‘ அம்மா என்ன சொல்லிட்டு இப்புடி சிரிக்குது,, ம்ம் வீட்டுக்கு போறப்ப கேட்டா சொல்லும்’ என்று நினைத்த மான்சி கையிலிருந்த தூக்குசட்டியை உயர்த்தி அன்னாந்து வாயில் ஊற்றியவள் எஸ்டேட்டின் முதல் அடுக்கில் தெரிந்த வித்யாசத்தை உடனடியாக கவனித்தாள்,

ஆமாம் முதல் அடுக்கு மண் முழுவதும் சரிந்து சிறுசிறு மரங்கள் தேயிலைச் செடிகள் என தன் பாதையில் குறுக்கிட்ட அனைத்தையும் அடித்துக்கொண்டு பயங்கர வேகத்தில் சரிந்து வந்துகொண்டிருந்தது ,

அதிர்ச்சியுடன் தொண்டையில் இருந்த கஞ்சியை விழுங்கிவிட்டு மான்சி கத்துவதற்குள் முதல் அடுக்கில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு ஆறாவது அடுக்கில் வந்து முடிந்தது, இடைப்பட்ட அடுக்குகளில் இருந்த தேயிலை செடிகளும் இல்லை, அதைப் பறித்துக்கொண்டிருந்த பெண்களும் இல்லை, நிமிடநேரத்தில் மண்மேடாகியிருந்தது அந்த எஸ்டேட், 




மான்சி அதிர்ச்சியில் உறைந்துபோய் அமர்ந்திருந்தாள், அவள் கண்முன் நடந்தேறிய பயங்கரத்தை அவள் மனம் ஜீரணிக்க மறுத்தது, சிறிதுநேரம் கழித்து நடந்த விபரீதம் புரிய கையில் இருந்த கஞ்சித் தூக்கை வீசி எறிந்துவிட்டு “ அய்யய்யோ எங்கம்மாவ காணோமே,, அம்மா அம்மா எங்கம்மா போன ” என்று கதறியபடி மேட்டில் இருந்து இறங்கி மண்மேடாய் கிடந்த இடத்தை நோக்கி ஓடி வந்தாள்

அதற்குள் வேறுபக்கம் வேலை செய்துகொண்டிருந்த சில ஆண்களும் பெண்களும் கதறலுடன் ஓடி வந்தனர், மான்சி அம்மா அம்மா என்று கதறியபடி மண்மேட்டை நோக்கி ஓட இரண்டு பெண்கள் மான்சியை ஓடவிடாமல் இறுக்கமாக பற்றிக்கொண்டனர்

அதிர்ச்சியுடன் ஓடிவந்த மேஸ்திரியும், எஸ்டேட் முதலாளியும், சமயோசிதமாக அங்கிருந்த மற்றவர்களை சமதளமான இடத்துக்கு தள்ளிக்கொண்டு வந்தனர்,, மயங்கி சரிந்த மான்சியை இரண்டு பெண்கள் கைத்தாங்கலாக அழைத்துவந்து ஒரு இடத்தில் கிடத்தினார்கள்

நிமிடநேரத்திற்க்குள் நடந்த அந்த கொடூரம் அனைவரையும் பயங்கர அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருந்தது, பலருக்கு அடுத்து என்ன செய்யவேண்டும் என்றுகூட புரியாமல் உறைந்துபோய் மண்மேட்டையேப் பார்த்தபடி நின்றிருந்தனர்,

சற்றுநேரத்தில் அங்கே ஒரு ஜீப் வந்து நிற்க, அதிர்ச்சியில் நின்ற அனைவரும் ஜீப்பில் ஏற்றப்பட்டனர்,, மான்சியை இரண்டு பெண்கள் தூக்கி ஜீப்பில் அமரவைத்து தங்களின் தோளில் சாய்த்துக்கொண்டனர்

அவர்கள் ஜீப் மெயின்ரோடுக்கு திரும்பும் போது எதிரே தீயணைப்பு வண்டி தனது வழக்கமான சத்தத்துடன் விரைந்தது

மலை கிராமத்திற்கு வந்த ஜீப் அனைவரையும் இறக்கிவிட்டு உடனே திரும்பிப்போய்விட்டது

அந்த கிராமத்தை சேர்ந்த ஏழு பெண்கள் அந்த நிலச்சரிவில் சிக்கி புதையுண்டு போயிருக்க அன்னலட்சுமியுடன் சேர்த்து மொத்தம் எட்டுபேர் மண்ணுக்குள் போயிருந்தனர்

அந்த கிராமத்தில் எங்கு திரும்பினாலும் கூச்சலும், கதறலுமாய் ஒலிக்க, எங்குபார்த்தாலும் அழுகையும், ஆறுதல் வார்த்தைகளும் கேட்டுக்கொண்டே இருந்தது

அங்கிருந்த ஒருசிலர் மண்ணுக்குள் புதையுண்டவர்கள் உயிருடன் இருக்க வாய்பில்லை என்று உறுதியாக கூற, அழுகையும் ஆத்திரமுமாக கடவுளை சபித்தார்கள் உறவுகளை இழந்தவர்கள்

இரவு ஏழு மணியளவில் வீடு திரும்பிய மேஸ்திரியை எல்லோரும் சூழ்ந்துகொண்டு ‘ என்ன ஆனது என்று விசாரிக்க,, தீயணைப்பு வீரர்களின் தீவிரப் போராட்டத்திற்கு பிறகு அனைவரையும் வெளியே எடுத்து போஸ்ட்மார்ட்டம் செய்ய அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றிருப்பதாக மேஸ்திரி கூறவும், அந்த கிராமமே கதறி கண்ணீர்விட்டது


மான்சியால் எதையும் நம்பமுடியாமல் யார் என்ன கேட்டாலும் எதுவும் சொல்லத் தெரியாமல் திகிலுடன் விழித்தாள், எதையும் பேசமுடியாமல் அவள் தொண்டை அடைத்துக்கொண்டது,

யாரோ வந்து “ உனக்கு யாராவது சொந்தக்காரங்க இருக்காங்களாம்மா?” என்று கேட்க

கேட்டவருக்கு என்ன பதில் சொல்வது என்றுகூட புரியாமல் பேந்தப் பேந்த விழித்தவளைப் பார்த்து வந்தவர் பேசாமல் போய்விட்டார்

அய்யோ புள்ளத்தாச்சிப் பொண்ணாச்சே என்று பரிதாபப்பட்ட சிலர் அவளை தூக்கி அமர்த்தி ஏதாவது ஆகாரம் கொடுத்தனர், ஆமால்ல வயித்துல பாப்பாக்கு பசிக்குமே என்று ஆகாரத்தை வாங்கி குடிப்பவள், தன் தாயின் நினைவு வந்ததும் கண்களில் வழிந்த கண்ணீருடன் பரிதாபமாக விழித்தாள்

அவளைப்பார்த்தவர்களுக்கு தங்களின் துக்கம் மறந்தது, அவளை கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டனர், அன்று இரவு முழுவதும் அம்மா அம்மா என்ற வார்த்தையைத் தவிர அவள் உதடுகள் வேறு எதையும் உச்சரிக்க மறந்தது,

மறுநாள் பிற்பகல் இரண்டு மணிக்கு அனைவரின் உடல்களும் ஆம்புலன்ஸ் மூலமாக கிராமத்திற்கு எடுத்துவரப்பட்டது, ஒரே இடத்தில் கிடத்தப்பட்டிருந்த உடல்களின் மீது அனைவரும் விழுந்து கதற,

மான்சி தன் தாயை அடையாளம் காண ஒவ்வொரு பிரேதத்தின் முகத்தையும் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள் மண்ணில் புதையுண்டு பிறகு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட உடல்கள் என்பதால் இறந்து போன அனைவரின் முகமும் ஒன்றைப் போல வீங்கிப் போயிருந்தது

அந்த கொடுமையை காணப் பொறுக்காத மேஸ்திரியின் மனைவி மான்சியின் கையைப்பிடித்து அன்னலட்சுமியின் பிரேதத்தின் அருகே உட்கார வைத்தாள்
அன்னலட்சுமியின் முகம் மட்டுமே தெரிய மற்ற உடல்பகுதி முழுவதும் வெள்ளைத் துணியால் இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது, தன் தாயின் முகத்தை வருடிய மான்சிக்கு உள்ளம் குமுறி வெடித்ததே தவிர கண்ணீர் வரவில்லை, என்னால்தான் , என்னால்தான், எல்லாமே என்னால்தான் என்று அவள் உள்ளம் ஊமையாக அழுதது

அப்படியே அமர்ந்திருந்தவளை யாரோ எழுப்பி வேறெங்கோ உட்கார வைத்தார்கள், அனைத்து பிரேதங்களுக்கும் ஒரே மாதிரி சாஸ்திர சம்பிரதாயங்கள் நிறைவேற்றப்பட்டது,

மகளுடன் அனாதையாக வந்த அன்னலட்சுமியை அந்த மலைக்கிராமத்து மக்கள் தங்களது முறைப்படி சகல மரியாதையும் செய்து அடக்கம் செய்தனர்

அவர்களின் கண்ணீரைப் போல் மழையும் விடாமல் கொட்டியது

அன்று இரவும் மான்சி உணவின்றி சுருண்டு கிடக்க, அவளை வற்புறுத்தி சாப்பிட வைத்தனர் அந்த கிரமவாசிகள்,

மூன்றாம் நாள் காலை, தனது வீட்டுக்கு போகவேண்டும் என்று மான்சி பிடிவாதமாக கூற, நிறைமாத கர்ப்பிணியான அவளை எப்படி தனியாக விடுவது என்று அனைவரும் மறுத்தனர், ஆனால் மான்சியின் பிடிவாதம் மிஞ்சியது

மேஸ்திரிக்கு ஒரு யோசனை தோன்ற, அருணாவின் எஸ்டேட்டைப் பார்த்துக்கொள்ளும் பக்கத்து எஸ்டேட் முதலாளிக்கு போன் செய்து மான்சியின் நிலைமையைச் சொல்லி, அவளுக்கு துணையாக இருக்க யாரையாவது ஏற்பாடு செய்யச்சொல்லி பணிவுடன் கேட்க, அந்த முதலாளி ‘ சரி அனுப்பி வைங்க நான் யாரையாவது துணைக்கு அனுப்புறேன்’ என்று கூறியதும் மான்சியை அழைத்துக்கொண்டு ஒரு ஆணும் பெண்ணும் எஸ்டேட்டை நோக்கி கிளம்பினார்கள், 


அதுமட்டுமல்ல அங்கே அவரவர் துக்கமே பயங்கரமாக இருந்தது, அவரவர் துயரத்திற்கு ஆறுதல் சொல்ல ஆளில்லாமல் அனைரும் துக்கத்தில் துவண்டு சுருண்டு கிடந்தனர், அதனால் மான்சியை தடுக்க அங்கே யாருமில்லை

வழியில் ஏகப்பட்ட சிறுசிறு சரிவுகளை ஜாக்கிரதையாக கடந்து அருணாவின் எஸ்டேட்டை அடைந்து மான்சியை அவள் வீட்டில் விட்டுவிட்டு சில ஆறுதல் வார்த்தைகளை சொல்லி, தங்களுடன் எடுத்து வந்த உணவை அவளருகே வைத்து சிறிதுநேரம் கழித்து சாப்பிடச் சொல்லிவிட்டு உடன் வந்தவர்கள் கிராமத்துக்கு கிளம்பினார்கள்,

உறவினர்களை இழந்த அவர்களின் துக்கமும் மலைபோல் இருந்தது மட்டுமல்ல, இந்த கொட்டும் மழையில் தங்களது பிள்ளைகளை தனியாக விட்டுவிட்டு வந்த அவர்களால் மான்சியுடன் சிறிதுநேரம் கூட இருக்கமுடியாமல் உடனே கிளம்பினார்கள்

மான்சியும் தைரியமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு அவர்களை அனுப்பி வைத்தாள்

அவர்கள் போனதும் மான்சி அங்கிருந்த சிறு கட்டிலில் ஒரு கம்பளியைப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள், அவள் நெஞ்சு குமைந்தது, ஒரு வேளை பட்டினியாக கிடந்தாலும் நிம்மதியாக சலவை செய்துகொண்டு இருந்த அம்மாவுக்கு மூனுவேளை சோறு போடும் ஆசையில் இங்கே அழைத்துவந்து கொன்றுவிட்டதாகவே அவள் நினைத்தாள்

வெளியே மழையின் வேகம் கடுமையானது, நேரம் ஆகஆக வயிற்றில் இருந்த குழந்தையின் துடிப்பு அதிகமாக, “ அய்யோ பாப்பாவுக்கு பசிக்குது போலருக்கே” என்று எழுந்து அமர்ந்த மான்சி, ஏதோ நினைத்து “ ம்ஹூம் உன்னாலதான் எல்லாமே, என் அம்மாவே போயாச்சு அப்புறம் நான் இருந்தா என்ன நீ இருந்தா என்ன போ போ ” என்று அலட்சியமாக எண்ணியபடி மறுபடியும் படுத்துக்கொண்டாள்

அம்மாவின் முகத்தை மனதில் கொண்டு வர முயன்றாள், ஆனால் இறந்த பிறகு பார்த்த ஊதிப்போன முகமே ஞாபகத்திற்கு வந்தது, படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்து “ ச்சேச்சே இது ஒன்னும் என் அம்மா இல்லையே, என் அம்மா முகம் ஞாபகத்துக்கு வரமாட்டேங்குதே” என்று முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்
வயிற்றில் குழந்தை புரண்டு உருண்டு தனது பசியை உணர்த்தியது

“ யம்மா சின்னப் பொண்ணு உன் அம்மாவே வந்து உன் வயித்துல பொறப்பா,, அழுவாதே பொண்ணு” அந்த மலைக்கிராமத்தில் வயதான் ஒரு கிழவி சொன்னது மான்சியின் ஞாபகத்தில் வந்துபோனது



“ அம்மா மறுபடியும் வந்து பொறப்பான்னா, அப்போ இந்த பாப்பாவை அருணா அக்கால்ல எடுத்துட்டு போயிடுவாங்க, இது அவங்க குழந்தை தானே, அப்புறம் எப்புடி அம்மா வரும்” என்று எதைஎதையோ நினைத்து குழம்பியது அவளின் பேதை மனது

மருத்துவமனையில் அட்மிட் ஆகச்சொல்லி டாக்டர் குறித்துக்கொடுத்த நாளுக்கு இன்னும் பத்து நாட்கள் இருந்தது, ‘அதுவரைக்கும் வயித்துல இருக்கு பாப்பாவுக்காக சாப்பிடனும்’ என்ற உணர்வு உந்த எழுந்து அமர்ந்து சாப்பாட்டு பாத்திரத்தை எடுத்தாள்

“ சரி பாப்பாவை அருணா அக்கா வாங்கிட்டு போனதும் நான் என்ன பண்றது? ” என்று அவளாகவே தன்னை கேட்டுக்கொண்டாள்

“ செத்துப்போயிரனும், ஆமா அம்மாகிட்டயே போயிரனும், உயிரோட இருக்கக்கூடாது, ம்ஹூம் உயிரோடவே இருக்கக்கூடாது” என்று தனக்குத்தானே உளறினாள்

வயிற்றில் இருந்த குழந்தையின் துடிப்பு அதிகமாக, ‘பச் இதுவேற’ என்று சலித்துக்கொண்டே அந்த மலைக்கிராமத்துப் பெண் வைத்துவிட்டு போன கஞ்சியை இரண்டு வாய் குடித்தாள், அதுவரை வயிற்றில் இருந்த துடிப்பு மெல்ல அடங்கியது, வயிற்று குழந்தையை நினைத்து மான்சிக்கு அய்யோ பாவம் என்றிருந்தது, தன் தாயின் மரணத்தை மறந்து தன் வயிற்றில் இருந்த குழந்தையை வயிற்றுக்கு மேலாக தடவிக்கொடுத்தாள் மான்சி

தாய்மை உணர்வில் அவள் கண்களும் உள்ளமும் ஒரேநேரத்தில் கசிந்தது, 



No comments:

Post a Comment