Thursday, September 3, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 1

வருடம் 1993,,

பொதிகைத் தென்றல் வந்து தாலாட்டும் அந்தி மாலை, எங்குத் திரும்பினாலும் கோயில்களும், தெருவோர இட்லி கடைகளும், மல்லிகையின் வாசமும், நிறைந்து கானப்படும் மதுரை மாநகர்,

மதுரை சிம்மக்கல் மேம்பாலத்தின் பின்னனியில் கீழைச் சூரியன் செங்குருதியை வானில் தெளித்தப்படி மறையும் அழகு ரம்மியமாக இருந்தது, மேம்பாலத்தில் பயணம் செய்யும் வாகனங்களின் இரைச்சல் மட்டும் இல்லையென்றால் சூரியனின் மறைவை ஒரு கவிதையோடு ஒப்பிடலாம், ஆனால் இந்த இரைச்சலில் ரசிக்க மட்டுமே முடியுமேயன்றி கவிதையோடு ஒப்பிட முடியவில்லை

மேம்பாலத்தின் கைப்பிடி சுவற்றில் கையை ஊன்றி தனது இரண்டு உள்ளங்கையிலும் தன் முகத்தை தாங்கியபடி தூரத்தில் தெரிந்த ரயில் தண்டவாளத்தில் மிதமான வேகத்தில் போய்க்கொண்டிருந்த ரயிலின் பெட்டிகளை ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டு இருந்தாள் மான்சி



இது அவளின் அன்றாட வழக்கம், ஆனால் ரயில் வேகத்தோடு போட்டியிட்டு பெட்டிகளை ஒருமுறை கூட மான்சி சரியாக எண்ணியது கிடையாது, ஒவ்வொரு முறையும் கணக்கு தவறிவிடும், கணக்கை எந்த பெட்டியில் தவறவிட்டோம் என்று அவள் குழப்பத்துடன் மறுபடியும் எண்ணும்முன் ரயில் போய்விட்டிருக்கும், இன்றும் அதேபோல் கணக்கு தவறியது

“ ச்சே, இன்னிக்கும் ரயில் சீக்கிரமா போயிருச்சே” என்று அவள் கால்களை உதறிக்கொண்டு நிற்க்க

மேம்பாலத்தின் கீழே துவைத்து காயவைத்த துணிகளை அவசரஅவசரமாக மடித்துக்கொண்டிருந்த மான்சியின் அம்மா அன்னலட்சுமி “ அடியேய் மான்சி,, ரயிலுப் போயி இம்புட்டு நேரமாச்சே, இன்னும் என்னடிப் பண்ற, வந்து இந்த துணியெல்லாம் மடி புள்ள பொழுதுசாயிரதுக்குள்ள வீட்டுக்கு போவலாம்” என்று மேம்பாலத்தில் நின்றிருந்த மான்சியைப் பார்த்து உச்சஸ்தாயியில் குரல் கொடுக்க,

தாயின் குரல் கேட்டு வரண்டு போன வைகை ஆற்றை எட்டிப்பார்த்த மான்சி “ இரு யம்மாவ் இப்ப இன்னோரு ரயிலு வரும் அதையும் பாத்துட்டு ஓடியாறேன்” என்று பதிலுக்கு உரக்க கத்தினாள்

அன்னம் உரக்க முனங்கியபடி ஆற்றில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை அழகாக மடித்து அடுக்கி மூட்டையாக கட்டினாள், சிறிய துணிகளை வைத்து இன்னோரு சிறிய மூட்டையை மான்சிக்கு கட்டி வைத்தாள்

அன்னலட்சுமி,, சிவப்பா, வெளுப்பா என்று கண்டுபிடிக்க முடியாத ஒரு நிறம், ஒருகாலத்தில் இவளும் அழகியாக இருந்திருப்பாள் என்று எண்ணவைக்கும் எடுப்பான முக அமைப்பு, உடலில் கிள்ளியெடுக்கக் கூட சதையில்லாது உடலில் உள்ள எலும்புகள் அத்தனையையும் எடுத்துக்காட்டும் தேகம், ரிக்ஷா வண்டி ஓட்டும் மாரியை காதலித்து மணந்து, திருமணமாகி ஏழே வருடத்தில் அவனை கஞ்சாவுக்கு பலிகொடுத்துவிட்டு தனது ஒரு மகளோடு வாழும் இளம்விதவை, இவள் பெயரில் மட்டுமே அன்னம் இருக்கிறது, மற்றபடி மழைக்காலத்தில் பலநாட்கள் பட்டினி கிடக்கும் ஒரு சலவைத்தொழிலாளி,

ஆதறவற்ற நிலையில், பத்துப்பதினைந்து வீடுகளில் அழுக்கு துணிகளை எடுத்து சலவை செய்து பிழைக்கும் ஒரு அன்றாடங்காய்ச்சி, அன்னலட்சுமிக்கு மகளே உலகம், எப்படியாவது அவளை படிக்கவைத்து பெரிய உத்தியோகத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற லட்சியத்தோடு சுடும் ஆற்றுமணலில் தனது வியர்வையை சிந்தி உழைப்பவள்,

அன்னலட்சுமி வலது கையை நெற்றியில் வைத்து கண்களுக்கு குடைபிடித்து மீண்டும் மேம்பாலத்தைப் பார்த்து “ அடியேய் இப்ப நீ கீழ வரல கட்ட வெளக்குமாறு பிய்யிற மாதிரி அடிப்பேன்” என்று கடுமையாக குரல் கொடுக்க,

“ யம்மா யம்மா இந்தா ரயிலு வருதும்மா, எண்ணிட்டு இதே வந்துட்டேன்ம்மா” என்று கீழேப் பார்த்து கெஞ்சுதலாய் சொல்லிவிட்டு அவள் நிமிர்வதற்குள் ரயிலின் பல பெட்டிகள் பாலத்தை கடந்து போய்விட்டிருந்தது, மான்சிக்கு தன் அம்மாவின் மேல் கடுமையான கோபம் வந்தது, முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு மேம்பாலத்தின் பிளாட்பாரத்தில் வேகமாக நடந்து பக்கவாட்டில் இருந்த படிகள் வழியாக இறங்கி மூங்கில்கடைத்தெரு வழியாக ஆற்றை நோக்கி ஓடினாள்

போனவள் சிறிய துணி மூட்டையை எடுத்து தனது வலது தோளில் மாட்டிக்கொண்டு, ஆற்று மணலில் கிடந்த தனது பள்ளிக்கூடப் புத்தகங்கள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு அன்னலட்சுமிக்கு முன்னே விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள், 


மான்சி , வயது பத்து, ஆறாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கும் ஒரு குட்டி அழகி , ஒருகாலத்தில் அன்னலட்சுமி இப்படித்தான் இருந்திருப்பாளோ என்று பார்ப்பவர்களை எண்ணவைக்கும் தோற்றம், எப்பவுமே நிமிர்ந்த திமிரான நடை, மான்சிக்கு தனது நிறத்திலும் அழகிலும் கொஞ்சம் கர்வமுண்டு, படிப்பிலும் படுசுட்டி, அவளுடைய அம்மாவின் ஆசைப்படி படிக்கவேண்டும் என்று நினைத்தாலும், உத்யோகம் என்பது அவளின் கற்ப்பனைக்கு எட்டாதது, ஆனால் எந்த உத்யோகத்திற்குப் போனாலும் காரில் போய் இறங்கவேண்டும், அதுவும் நகைக்கடை செட்டியார் தாத்தா வச்சிருக்குற மாதிரி பெரிய கார்ல தான் மார்க்கெட்க்கு கூட போகவேண்டும் என்று அடிக்கடி நினைத்துக்கொண்டு கண்களைத்திறந்து கொண்டே கனவுகளில் மிதப்பாள்

பள்ளி விடுமுறை நாட்களில் அழுக்கெடுக்க அன்னலட்சுமியுடன் எல்லா வீடுகளுக்கும் போவாள், சிலர் அவளின் அழகையும் அறிவையும் சேற்றில் முளைத்த செந்தாமரை என்று உவமை கூறுவார்கள், சில அறிவீனர்கள் இப்படி ஒரு அழகி எப்படி வண்ணாத்தியின் வயிற்றில் பிறப்பதா என்று அன்னலட்சுமியின் கற்பை கண்களால் சோதனையிடுவார்கள்

அவர்கள் கொடுக்கும் அவர்கள் பிள்ளைகளின் பத்தாத உடைகளை கூட கொடுத்த ஆட்களின் தரத்தையும் துணிகளின் தரத்தையும் பார்த்துதான் அணிவாள், கொடுத்த ஆட்களின் பேச்சு சரியில்லை என்றால் அவர்கள் கொடுத்த உடை எப்படிப்பட்டதாக இருந்தாலும் வருடக்கணக்கில் மக்கித்தான் போகும்
அன்னலட்சுமியின் வீடு வைகை ஆற்றின் அக்கரையில் இருக்கும் செல்லூர்,, ஆற்றின் கரையோர குடிசைகளில் தான் அன்னலட்சுமியின் பங்களாவும் இருக்கிறது, ஒரே அறை கொண்ட தென்னங்கீற்று குடிசை, நடுவே ஒரு தட்டி அடைத்து அந்த பக்கம் சமையலறையாக தடுத்திருந்தாள், வீட்டின் பின்புறம் நான்கு குச்சி நட்டு கிழிந்த புடவைகளை அதில் சுற்றி ஒரு ஆள் உட்கார்ந்து குளிக்கும் அளவிற்கு ஒரு பாத்ரூம், அதற்கு சற்று பக்கத்தில் பெரிய வெள்ளாவி அடுப்பு, அதன் மேலே பெரிய வெள்ளாவி சாலு, ஊர் அழுக்கை எல்லாம் வெளுக்கும் அடுப்புக்கும், சாலுக்கும் சுண்ணாம்பு அடித்து , மங்களகரமாக மஞ்சள் குங்குமம் வைக்கப்பட்டிருக்கும், வைகை ஆற்றின் வெள்ளம் வந்துவிட்டால் அத்தனையும் அடித்துக்கொண்டு போய்விடும், அதனால் வெள்ள அறிவிப்பு வந்தவுடனேயே இருக்கும் பாத்திரங்களை மூட்டைகட்டிக் கொண்டு மகளுடன் ஏதாவது பிளாட்பாரத்தில் போய் தஞ்சமடைவாள், வெள்ளம் வடிந்ததும் அழுக்கு துணியெடுக்கும் செட்டியார் வீட்டில் அஞ்சு வட்டிக்கு கடன் வாங்கி எல்லாவற்றையும் சரி செய்வாள்

மான்சி பள்ளிக்கூடம் வைகையாற்றின் இக்கரையில் சிம்மக்கல், கஸ்தூரிபாய் காந்தி நடுநிலைப் பள்ளி, இரண்டு வரிசையாக பத்து வகுப்புகள் மட்டுமே உள்ள பள்ளிக்கூடம், இதற்கு மறுபெயர் ஆத்து பள்ளிகூடம், காரணம் பள்ளியின் பின்புறம் பெரிய கருங்கல் காம்பவுண்ட் சுவர், அதன் பின்புறம் காய்ந்து போன வைகை ஆறு, ஆற்றில் வெள்ளம் வரும் சமயங்களில் அந்த பனிரெண்டடி கருங்கல் காம்பவுண்டை தொட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடும்,

வகுப்பில் பக்கத்தில் அமரும் எஸ்தரின் கறுப்பான கையோடு தன் கையை வைத்து அவளின் கறுப்பை நக்கல் செய்வதும் மான்சியின் பொழுதுபோக்குகளில் ஒன்று, ஆனால் கிறிஸ்மஸ் மறுநாள் அன்று எஸ்தர் உடுத்தி வரும் புதிய உடைகளைப் பார்த்து மனம் வெதும்புவாள், அவளின் வெதும்பலை தனக்கு சாதகமாக பயண்படுத்திகொள்ளும் எஸ்தர் அன்று முழுவதும் தனது உடையை பற்றியும், கிறிஸ்மஸ் அன்று தனக்கு கிடைத்த பரிசுப்பொருள்களைப் பற்றியும் பெருமையாக கூறி மான்சியை பழிவாங்குவாள்

மான்சிக்கு வகுப்பு முடிந்ததும், ஆற்றில் தண்ணீர் இல்லாத நாட்களில் சுலபமாக ஏறக்கூடிய அந்த கருங்கற்கள் மீது ஏறி ஆற்றின் அந்தபக்கம் மணலில் குதித்து படித்துரையருகே துணிகளை துவைத்துக்கொண்டு இருக்கும் அன்னலட்சுமியிடம் ஓடிவிடுவாள்,

காலையில் புத்தகப் பையும், சத்துணவு வாங்க ஒரு அலுமினியத் தட்டுமாக அன்னலட்சுமியுடன் கிளம்பி ஆற்றில் நடந்து பள்ளிக்கு வந்து, மாலை அதே ஆற்றின் வழியாக அம்மாவுடன் வீட்டுக்கு போவது மான்சிக்கு ரொம்ப பிடிக்கும், ரோட்டில் செல்லும் கார்கள், பைக்குகளை வேடிக்கைப் பார்க்க பிடிக்கும், அழகாக உடை உடுத்தி அப்பாவுடன் கைகோர்த்துக் கொண்டு நடக்கும் பிள்ளைகளை காணப்பிடிக்கும்


பிடிக்காதது அலுமினியத் தட்டில் சத்துணவு சோறு வாங்கி சாப்பிடுவது, ஓரே ரிப்பனை இரண்டு வருடமாக பின்னலில் கட்டிக்கொண்டு வருவது, கிழிந்துபோன மஞ்சள் பையில் புத்தகங்களை எடுத்து வருவது, காலில் செருப்பு இல்லாமல் சுடும் ஆற்று மணலில் நடப்பது, அம்மாவுடன் அழுக்கெடுக்க வீடுகளுக்கு போக பிடிக்காது, மழை காலத்தில் வீடுவீடாக போய் வாங்கிவரும் பழையகஞ்சியை சாப்பிட பிடிக்காது, கிழிந்த பாவடையை மறுபடியும் மறுபடியும் ஊசிநூல்லால் தைத்து கட்டப்பிடிக்காது, இதெயெல்லாம் விட அவர்கள் இருக்கும் ஆற்றோர குடிசை வீடு பிடிக்காது, வண்ணாத்தி மகள் என்று வாசற்படியில் நிற்கவைத்து விரல் படாமல் பழையசோற்றைப் போடும் பணக்காரர்களைகளை கண்டால் பிடிக்காது, இப்படி ஏகப்பட்ட பிடிக்காதுகள் மான்சியிடம் உண்டு

எப்போதாவது செட்டியார் வீட்டு டிவியில் படம் பார்த்தாள் என்றால் அன்று இரவு தூக்கம் வராமல் கண்ணை மூடிக்கொண்டு அந்த சினிமாக கதாநாயகியின் இடத்தில் தன்னை வைத்து கனவு காண்பது என்றால் மான்சிக்கு ரொம்ப பிடிக்கும், இந்த குடிசையை விட்டுவிட்டு மச்சு வீட்டுக்கு குடி போகனும், பின்னாடி மாட்டிக்கிர ஸ்கூல் பேக் வாங்கனும், பாலியஸ்டர் பாவாடை கட்டி டெரிக்காட்டன் சட்டைப் போட்டுகிட்டு செட்டியார் வீட்டுல போய் காட்டனும், குதி உயர்ந்த செருப்பு அனிந்து டக்கு டக்கென்னு சத்தம் வர நடக்கனும், யானைக்கல்லில் இருக்கும் பிரசிடெண்ட் ஹோட்டலுக்குப் போய் விதவிதமாக சாப்பிடனும், தலைக்கு குளித்து பின்னல் போடாமல் விரித்துப் போட்டுக்கொண்டு வெளியே போகனும், தொப்புளை தொடும் அளவிற்கு பெரிய டாலர் வைத்த செயின் தங்கத்தில் போடனும், இவள் பேசும்போதெல்லாம் தானும் கூட சேர்ந்து ஆடும் அழகான கூடை ஜிமிக்கி வாங்கி காதில் போட்டுக்கனும், இவை எல்லாவற்றையும் விட ஒரு நாளாவது சொந்தமாக காரில் பயணம் செய்யவேண்டும் என்ற ஆசை ரொம்ப அதிகம் இப்படியாக மான்சி வளர வளர அவள் கனவுகளும் வளர்ந்துகொண்டே போனது, ஆனால் கனவுகளின் தரமும் ஏறிக்கொண்டு போனது

பள்ளியின் இலவச சீருடையான் வெள்ளை சட்டையும் நீலக்கலர் பாவாடையும் அணிந்து இரட்டை பின்னலுடன் தன்னுடன் வரும் மகளை பார்க்க பார்க்க அன்னலட்சுமியின் நெஞ்சு திக் திக்கென்று அடித்துக்கொள்ளும், இவ இருக்குற வனப்பை பார்த்தா இன்னும் ஒன்னு ரெண்டு வருஷத்துல ஒக்காந்துடுவா போலருக்கு, அதுக்குள்ள எப்படியாச்சும் நாலு காசு சேர்த்து வைக்கனும் என்று நினைப்பாள்

ஆனால் மான்சி பூத்தது எந்த வைபவமும் இன்றி அம்மாவும் மகளும் விட்ட கண்ணீரோடு முடிந்தது, தனது மகளுக்கு ஓலை கட்டக்கூட தனக்கு எந்த சொந்தமும் இல்லையே என்று அன்னலட்சுமி அழுதாள்,, புதிதாக வந்த உடல்கூறுகளின் மாற்றமும், இனிமேல் கிழிசலை போட்டுகிட்டு எப்படி பள்ளிக்கூடம் போறது என்ற பயமும் மான்சியை கண்ணீர் விட வைத்தது
எப்படியோ,, செட்டியாரம்மா கொடுத்த பழம் புடவையை இரண்டாக கிழித்து வெள்ளை சட்டைக்கு மேலே தாவணியாக போட்டு மகளை பள்ளிக்கூடம் அனுப்பினாள் அன்னலட்சுமி,

பக்கத்தில் இருந்த கஸ்தூரிபாய் காந்தி ஹய்யர் செகன்டரி ஸ்கூலுக்கு மாற்றப்பட்டு நிறைவேறாத பல கனவுகளும், நிறைவேறிக் கொண்டிருக்கும் பல இன்னல்களுமாக பத்தாம் வகுப்பை முடித்தாள் மான்சி ,

பதினொன்றில் அவள் கால் வைத்தபோது தன்னை சுற்றிவரும் இளவட்டங்களை எண்ணி பெருமையுடன் இருப்பதை வைத்து தன்னை கவணமாக அலங்கரித்துக் கொண்டு ஸ்கூலுக்கு வருவாள், மாடி வகுப்பறையில் ஜன்னலோர டெஸ்கில் அமர்ந்துகொண்டு பள்ளியின் எதிர் சாரியில் நின்றுகொண்டு ஜாடைமாடையாக பள்ளியை நோட்டம் விடும் இளவட்டங்களை இவளும் பார்வையால் எடை போடுவாள்,

ம்ஹூம் அவளின் எடைபோடுதலில் ஒருத்தன் கூட தேறமாட்டான், இவனுங்கள்ல ஒருத்தனை பிடிச்சாலும் அவளின் கனவு வாழ்க்கையின் ஒரு சதவிகிதம் கூட நிறைவேறாது, என் கனவுகளின் ராஜகுமாரன் என்னிக்காவது வருவான், என்று கர்வத்துடன் பார்வையை திருப்பிக்கொண்டு படிப்பில் கவணம் செலுத்துவாள்

நாளாக நாளாக வருமையும் கூடியது, சீக்கிரம் பணம் சம்பாதிக்க ஏதாவது வழியிருக்குதாம்மா என்று அன்னலட்சுமியிடம் கேட்பாள், போடி இவளே, இருக்குற விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப் படாதே,, என்று மகளை எச்சரிக்கை செய்வாள் அன்னலட்சுமி

அரசாங்கத்தின் உதவி தொகையும், அன்னலட்சுமியின் உழைப்பும் சேர்ந்து மான்சியை கல்லூரியின் நுழைவு வாயில் வரை கொண்டுபோய் விட்டது, மான்சியின் திறமையான படிப்பு அவளுக்கு சில உதவிகளை பெற்றுத் தந்தது, எப்படி எப்படியோ சிரமப்பட்டு இரண்டு வருடம் முடித்தாள்,




மான்சி மூன்றாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும்போதே வறுமை அன்னலட்சுமியின் கழுத்தை பிடித்து நெறித்தது, இதோ இன்று கல்லூரிக்கு பணம் கட்டவேண்டும், எங்கு கேட்டும் பணம் புரளவில்லை, வீட்டில் விற்பதற்கு எதுவுமில்லை, முன்புபோல் அன்னலட்சுமியால் உழைக்க முடியவில்லை, அரைவயிறு கால் வயிறு என சாப்பிட்டதன் விளைவு அவள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நாளுக்கு நாள் நலிந்தாள்

அன்று காலை பத்து மணிவரை பணம் ஏதாவது ரூபத்தில் வருமா என்று அம்மாவும் மகளும் குடிசையில் உட்கார்ந்து வாசலைப் பார்த்துக்கொண்டு இருக்க, ஒரு ஈ கூட அந்த குடிசைக்குள் நுழையவில்லை,

சுருண்டு படுத்திருந்த அன்னலட்சுமியின் அருகில் வந்து அமர்ந்த மான்சி “ யம்மோவ் பணம் நிறைய வர்ற மாதிரி வேற ஏதாவது தொழில் செய்யலாம்மா, இந்த துணி வெளுக்குற பொழப்பு வேனாம்மா, பாதிநாள் பட்டினியா கெடக்க வேண்டியிருக்கு, வேற ஏதாச்சும் செய்யலாம்மா? ” என்று வயிற்றை கிள்ளிய பசியோடு கேட்க

பட்டினியால் சுருண்டு கிடந்த அன்னலட்சுமிக்கு ஆத்திரமாக வந்தது “ ம்ம் இருக்குடி, நீ இருக்குற அழகுக்கு எவனாவது ஒரு பணக்காரனுக்கு கூத்தியாளா போயிடு, அப்புறம் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்” என்று வேதனையுடன் கூறினாள்

மான்சிக்கும் கோபமாக வந்தது , தனது தேவைகளை புரிஞ்சுக்காம இவ்வளவு கீழ்த்தரமாக பேசும் அம்மாவுக்கு பதில் சொல்லும் நோக்கத்தில் “ ஆமா நீ வேனாப் பாரு போட்டுருக்க இந்த பாவாடை கிழிஞ்சு போச்சுன்னா அடுத்து எவனாவது சைனாசில்ஸ்க் சேலை எடுத்துக் குடுத்தா அவனுக்கு கூத்தியாளா போயிடுவேன்” என்று கடுமையாக தனது பதிலை சொல்லிவிட்டு தள்ளி அமருவதற்குகுள் அன்னலட்சுமி மான்சியின் கன்னத்தில் ஒரு அறைவிட்டு பக்கத்தில் விளக்குமாத்தால் மான்சியை வாறு வாறாக அடித்தாள்

அடித்து அவளாகவே ஓய்ந்துபோய் கையில் இருந்த குச்சிகளை கீழேபோட்டுவிட்டு உட்கார்ந்தாள் , மான்சி கேவிக்கேவி அழுதபடி அப்படியே மூலையில் முடங்கினாள், அன்று இரவு அடிவாங்கி சிவந்த இடங்களில் தேங்காய் எண்ணையை தடவிக்கொண்டே கண்ணீருடன் வறுமையை வெறுக்கும் மகளை எண்ணி வருந்தினாள்

“ மானுப் புள்ள இனிமே இப்படி பேசாதடி, ஒருத்தனுக்கு முந்தி விரிச்சுதான் வயித்து பொழப்ப பாக்கனும்னா அதை உங்கப்பன் போனதுமே நான் பண்ணியிருப்பேன், இப்புடி ஊர் அழுக்கையெல்லாம் வெளுத்துருக்க மாட்டேன், வேனாம்டி அந்த கேவலப்பட்ட பொழப்பு,, அதவிட நாண்டுகிட்டு சாவலாம்” என்று கண்ணீருடன் அன்னலட்சுமி சொல்ல,

விருட்டென்று எழுந்து அமர்ந்த மான்சி “ நான் என்ன தேவிடியாளா போயா பணம் சம்பாதிக்கிறேன்னா சொன்னேன், இந்த பொழப்ப விட்டுட்டு வேற ஏதாவது வேலைக்கு போய் சம்பாதிக்கலாம்னு சொன்னேன், அதுக்குப்போய் இப்படியெல்லாம் சொல்லி என்னை அடிக்குறியே, இந்த அழுக்கெடுக்குற வேலையை விட்டா, உலகத்துல வேற வேலையே இல்லையா, நானும் இனிமே காலேஜுக்கு போகமுடியாது, இப்படி பட்டினியோட போய் படிச்சு என்னத்தை சாதிக்கப்போறேன், பாதி க்ளாஸ் நடக்கும் போதே மயக்கம் தான் வருது, அதோட நான் போட்டுகிட்டு போற டிரஸை பாத்து கிண்டல் பண்ணாதவங்களே காலேஜ்ல இல்லை, இனிமே நான் ஏதாவது வேலைக்குத்தான் போவேன், படிக்க போகமாட்டேன், என்னால பட்டினியா கிடக்கவும் முடியாது, என்னால முடியவே முடியாது ” என்று மான்சி ஆக்ரோஷத்துடன் கத்தி முகத்தை முடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்

அன்னலட்சுமி தன் மகளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு அவளும் அழுதாள், இருவரும் இருந்த அஞ்சு ரூபாய்க்கு இட்லியை வாங்கி தின்றுவிட்டு படுத்துக்கொண்டனர்

மறுநாள் காலை எழுந்ததும் அன்னலட்சுமிக்கு உடல் அனலாய் கொதித்தது,. மான்சி கவலையுடன் அவளருகே அமர்ந்து நெற்றியைத் தொட்டுத்தொட்டு பார்த்துக்கொண்டு இருந்தாள், சிரமமாய கண்விழித்து மகளைப் பார்த்த அன்னலட்சுமி “ மானு செட்டியார் வீட்டுக்கு பக்கத்துல ஒரு வெள்ளை சேலைக்காரம்மா வீடு இருக்குள்ள, அவுககிட்ட அம்பது ரூவா கடனா கேட்டேன், இன்னிக்கு தர்றேன்னு சொன்னாக செத்த போய் வாங்கிட்டு வந்துடும்மா, வந்து ஒரு ரிக்ஷா வச்சு பெரியாஸ்பத்திரிக்கு போகலாம், எனக்கு ஒன்னுமே முடியலை புள்ள” என்று கூறிவிட்டு கண்களை ஆயாசமாக மூடிக்கொள்ள

மான்சி அரை மனதோடு பணம் வாங்கிவர கிளம்பினாள், இதுபோல கடன் கேட்பதும் அவர்கள் ஏளனமாக பார்த்து மறுப்பதும் வாடிக்கையாகிவிட்டது, அதனாலேயே மான்சி யாரிடமும் கடன் வாங்க போகமாட்டாள், ஆனாலும் இன்று அன்னலட்சுமியின் நிலை அவளை உந்தித்தள்ளியது


ஆற்றை கடந்து சிம்மக்கல் படித்துறையில் ஏறி வலது பக்கம் இருந்த அக்ரஹாரத்திற்குள் நுழைந்தாள், அய்யர்களும்,செட்டியார்களும் வசிக்கும் அந்த பணக்கார ஏரியாவில் இருந்த கட்டிடங்களை வேடிக்கைப் பார்த்தபடி நடந்தவள், அம்மா சொன்ன வீட்டை சரியாக கண்டுபிடித்து காலிங் பெல்லை அடிக்க ..
கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக யாரோ வேகமாக வருவது தெரிந்தது, மான்சியின் மனது பணம் கிடைக்க வேண்டும் என்று ஆயிரமாயிரம் கடவுளை வேண்டியது

கதவை திறந்து எட்டிப்பார்த்த அறிமுகமில்லாத பெண் ஒருத்தி “ மான்சி உடைகளை வைத்து அவள் தரத்தை எடைப் போட்டு “ ஏய் யார் நீ,, என்ன வேனும்” என்று அதட்டி கேட்க

மான்சியின் உடல் கூனிகுறுகியது,, என்ன சொல்வது என்று புரியாமல் தடுமாறினாள்

“ ஏய் கேட்கிறது காதுல விழலையா, என்ன வேனும்” என்று அந்த பெண் மறுபடியும் அதட்டினாள்

நாவால் உதட்டை தடவி ஈரமாக்கிக்கொண்ட மான்சி “நான் அழுக்கெடுக்க வர்ற அன்னத்தோட மக, இந்த வீட்டு பெரியம்மா கிட்ட எங்கம்மா அம்பது ரூபா கடனா கேட்டாங்களாம், பெரியம்மா இன்னிக்கு தர்றேன்னு சொன்னாங்களாம், அம்மாவுக்கு மேலுக்கு சொகமில்ல அதான் காசு வாங்கிட்டு வரச்சொல்லி என்னை அனுப்புச்சு” என்று மான்சி சொல்லி முடிக்க

அவளை ஏறஇறங்க பார்த்த அந்த பெண் “ ஓ சரி, ஆனா சித்தி இப்போ தூங்குறாங்களே, நீ ஈவினிங் வாம்மா” என்று கூற

மான்சியின் மனது அய்யோ என்றது, குடிசையில் காய்ச்சலோடு சுருண்டு கிடக்கும் அம்மாவின் முகம் நினைவில் வந்து வாட்ட,, இதோ வந்துவிட்டேன் என்று முகவுரையுடன் நின்ற கண்ணீரை எப்படி அடக்குவது என்று புரியாமல் அந்த பணக்கார வீட்டுப் பெண்ணைப் பார்த்து “ அம்மாவுக்கு ரொம்ப காய்ச்சலடிக்குது அக்கா, கொஞ்சம் பெரியம்மாவை எழுப்புங்களேன் ” என்று திக்கித்திணறினாள்

மான்சியையே பார்த்த அந்த பெண் “ கொஞ்சம் இரு வர்றேன்” என்று சொல்லி கதவை மூடிவிட்டு உள்ளே போனாள்

மான்சியின் மனம் அம்பது ரூபாய் கடன் கிடைக்கவேண்டும் என்று மறுபடியும் கடவுளை துணைக்கழைத்தது

கொஞ்சநேரத்தில் திரும்பி வந்த அந்த பெண் ஒரு நூறு ரூபாயை மான்சியிடம் கொடுத்து “ சித்தி டேப்லட் போட்டுகிட்டு தூங்குறாங்க, அதனால அவங்களை எழுப்ப முடியாது , இது என்னோட ரூபாய் வச்சுக்க” என்றாள்



மான்சிக்கு சந்தோஷத்தில் மறுபடியும் கண்ணீர் வரும் போல இருந்தது, அந்தப் பெண்ப்பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு “ ரொம்ப நன்றி அக்கா” என்று கூறிவிட்டு திரும்ப

“ ஏய்ப் பொண்ணு கொஞ்சம் இரு” என்று அந்த பெண்ணின் குரல் மான்சியை தடுத்தது,, நின்று திரும்பி “ என்னக்கா” என்று கேட்டாள்

“ ஒன்னுமில்ல,, இன்னிக்கு வீட்டு வேலைக்காரி லீவு, அதனால எல்லாம் அப்படி அப்படியே கிடக்குது, சித்திக்கும் உடம்பு சரியில்லை, எனக்கு வீட்டுவேலைகள் செய்து பழக்கம் இல்லை, நீ உன் அம்மாவை ஆஸ்பிட்டல்க்கு கூட்டிட்டுப் போய்ட்டு மறுபடியும் இங்க வர்றியா?, கொஞ்சம் எல்லாத்தையும் க்ளீன் பண்ணிட்டி போய்டு” என்று அந்த பெண் கூறியதும்,

மான்சி “ சரிக்கா நான் வர்றேன், அம்மாவோட ஆஸ்பிட்டல் போய்ட்டு வர்றேன்” என்று புன்னகையுடன் கூறிவிட்டு கிளம்பினாள்



No comments:

Post a Comment