Monday, September 28, 2015

மான்சியின் மவுனம் - அத்தியாயம் - 1

இரவு முடிந்து விடியலின் அடர்த்தியான நிசப்தத்தை ஒரு லயத்துடன் கூவி கலைத்தது ஒரு முகம் தெரியாத வண்ணப் பட்சி ஒன்று ,, தரையில் பச்சைப் பட்டாய் பறந்து விரிந்திருந்த புற்களின் மூக்கு நுனியில் அதிகாலைப் பனித்துளிகள் வைர மூக்குத்திகளாய் மினுக்கிக் கொண்டிருந்தன

விடியலின் அணைப்பில் உறங்கும் மனிதர்களை எப்படி எழுப்புவது என்ற தீவிர யோசனையுடன் உக்கிரமாக உதித்துக் கொண்டிருந்தான் ஆதவன்,

காலைத் தென்றல் குளிர்ச்சியை சுமந்துவந்து நரம்புகளை நல்ம் விசாரிக்க , அந்த தென்றலின் தாலாட்டில் சுகமாக தன்னை குலுக்கிக்கொண்ட மரங்கள், பூத்திருந்த மலர்களை தென்றலின் சுகமான வருடலுக்கு காணிக்கையாக உதிர்த்தன

கூடல் நகராம் மதுரையின் மிகப்பெரிய திருமண மண்டபம், “ ராஜமுத்தையா மன்றம்” நாளைய திருமணத்திற்கு இன்று அதிகாலையில் இருந்தே தயாராகிக் கொண்டிருந்தது, மன்றத்துக்கு வெளியே போட்டிருந்த பிரமாண்டமான பந்தலில் தென்னங் குருத்தோலையால் செய்த தோரணத்தை சுற்றிலும் கட்டிக்கொண்டிருந்தனர் சில ஆண்கள்

இரவு முழுவதும் பந்தல் போட்டவர்கள் அங்காங்கே கிடைத்த இடத்தில் மதுவின் உதவியுடன் தூங்கிக்கொண்டிருந்தனர், தோரணம் கட்டியவர்கள் கீழே இருந்த மிச்ச குப்பைகளை காலால் சேர்த்து, பிறகு விளக்குமாற்றால் கூட்டி கும்பலாய் சேர்த்தனர், இப்போது இடம் பளிச்சென்று ஆனது,



பந்தலுக்கு சற்றுத்தள்ளி நின்றிருந்த திறந்த வேனில் இருந்து மளிகை பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தவர்களுக்கு பக்கத்து டீக்கடையில் இருந்து ஒரு பையன் டீ எடுத்துவந்து கொடுக்க, அவனிடமிருந்து டீ க்ளாஸ்களை வாங்கி அனைவருக்கும் கொடுத்தான் சத்யன்

வேன் டிரைவருக்கு டீ எடுத்துப்போய் கொடுத்த சத்யன் “ அண்ணே ஒரு பீடி இருக்காண்ணே?, நைட்டெல்லாம் முழிச்சு கிடந்ததில், உடம்பு சில்லுன்னு இருக்கு கொஞ்சம் சூடேத்துனாதான் இருக்குற வேலையை கவணிக்க முடியும் ” என்று பீடி கேட்டதற்கான விளக்கத்தையும் சேர்த்து சொன்னான்

சட்டை பாக்கெட்டில் இருந்து பீடி கட்டை எடுத்து அதில் ஒன்றை எடுத்து தன் உதட்டுக்கு கொடுத்துவிட்டு, இன்னொன்றை உருவி சத்யனிடம் நீட்டிய டிரைவர் “ ஆமாய்யா நானே இது நாலாவது ட்ரிப் அடிக்கிறேன்,, இதோட முடிஞ்சுது வீட்டுக்குப் போய் தூங்கவேண்டியது தான்” என்றான்

டிரைவர் பாக்கெட்டில் இருந்து தீப்பெட்டியை எடுத்து தனது பீடிக்கு பற்றவைத்து பீடியை உதட்டுக்கு கொடுத்து ஒரே இழுப்பாக ரசித்து இழுத்து மூக்கு வழியாக புகையை வெளியேற்றியவேறு சத்யனிடம் பீடியை நீட்ட அவன் அதை வாங்கி தனது பீடியின் தலையில் சுட்டுவிட்டு டிரைவரிடம் கொடுத்தான் சத்யன்
இருவரும் பீடியை புகைத்து ஓசோனோடு சேர்த்து தங்கள் நுரையீரலை பழுதாக்கியபடி குளிர்காய்ந்தனர்

“ நீ உன் முதலாளிக்கு சொந்தமா தம்பி” என்று டிரைவர் கேட்க
வேனில் இருந்த பொருட்களை ஒழுங்காக கொண்டு செல்கிறார்களா என்று பார்த்தபடி தொடைத் தெரிய கட்டியிருந்த கட்டம்போட்ட கைலியை அவித்து விட்டு தரையில் குத்தங்காலிட்டு அமர்ந்த சத்யன் கடைசியாக ரசனையோடு பீடியை இழுத்து அதன் நெருப்பை தரையில் நசுக்கிவிட்டு அதை சுண்டி எறிந்தான்

“ ஆமாம்ண்ணே தூரத்து சொந்தம், எங்கப்பனுக்கு தாய்வழி ஒறவு, எல்லாம் ஒரே ஊர்ல் வாழ்ந்தவங்க அண்ணே, எங்க மாமன் பொறந்த நேரம் நல்லநேரம் போல,, கல்யாணம் முடிச்சு பொழைக்க மதுரைக்கு வந்தவரு இன்னிக்கு ஓகோன்னு ஆயிட்டாரு, என் பாட்டன் கோமணத்தை அவுத்த நேரம் சரியில்லை போல எங்கப்பன் சொந்த ஊர்லயே கிடந்து நிரந்தரமா ஒரு பொழப்பயும் பாக்காம ஊரை சுத்திட்டு எங்காத்தாளையும் என்னையும் நடுத்தெருவுல விட்டுட்டு போய் சேர்ந்துட்டாரு, நானும் ஊர்ல இருந்தா கெட்டுப் போயிடுவேன்னு எங்காத்தா இந்தாளு கூட போன வருஷம் அனுப்பிருச்சு அண்ணே, ஆனா இந்தாளு நாயை வேலை வாங்குற மாதிரி வேலை வாங்குறான், இந்த கல்யாணம் முடிஞ்சதும் சொந்த ஊருக்கே போயிரலாம்னு இருக்கேண்ணே” என்று சத்யன் தனது சுயசரிதையை சுருக்கமாக சொன்னான்


“ ஏன்பா மதுரையில இல்லாத வேலையா,, வேற ஏதாவது பொழப்பை தேடிக்கிட்டு ஒரு வீட்டைப் பார்த்து உன் அம்மாவையும் இங்கயே கூட்டியாந்து வச்சுக்கலாம்ல?” என்று டிரைவர் பேச்சை வளர்த்த

“ இல்லண்ணே எங்கம்மா அந்த ஊரைவிட்டு வராது, அதை தனியா விட்டுட்டு என்னாலயும் இருக்கமுடியலை அதனால அங்கய போயிரலாம்னு இருக்கேன்” என்று சத்யன் தனது மறுப்பை சொல்லும்போதே அவன் மனதில் சாந்தாவின் அமைதியான முகம் வந்து போனது, இவங்க கிட்ட என்ன சொல்லிட்டு மதுரையை விட்டுவிட்டு போறது? என்ற கேள்வியும் கூடவே வந்தது

வேனில் பொருட்கள் இறக்கியதும் “ சரிப்பா நான் கிளம்புறேன், இன்னிக்கு நைட்டு கல்யாணத்துல பார்க்கலாம்,, எனக்கும் பத்திரிக்கை குடுத்திருக்காரு முதலாளி” என்று கூறியபடி வேனில் ஏறினார் டிரைவர்

சத்யன் தலையசைத்து அவருக்கு விடைகொடுத்து விட்டு மண்டபத்துக்குள் போனான்,, சமையல் செய்யும் பகுதியில் இருந்த அறையில் மொத்த பொருட்களும் இறக்கி வைப்பட்டிருந்தது, அந்த அறையை பூட்டி சாவியை டவுசர் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு டைனிங் ஹாலில் இருந்த சாப்பாடு பரிமாறும் மேடையில் ஏறி கால்களை நீட்டி படுத்து தோளில் இருந்த துண்டால் முகத்தை மூடிக்கொண்டு குட்டியாய் ஒரு அவசர தூக்கம் போட முயன்றான் சத்யன்

சத்யனின் முதலாளி ஆராவமுதன் மனைவி தான் சாந்தா, இன்று சத்யன் மதுரையில் வசிப்பதற்கு முக்கிய காரணம் இவள்தான், காரையார் டேம் சுற்றிப்பார்க்க குடும்பத்துடன் வந்திருந்தவள்,, சத்யனின் அம்மா

முத்துப்பேச்சியின் புலம்பலை கேட்டு “ இனிமேல் சத்தி பய என் புள்ளை மாதிரி அண்ணி நீ அவனை என்கூட அனுப்பு அவனை மனுஷனாக்கி காட்டுறேன்” என்று கூறி கையோடு மதுரைக்கு அழைத்து வந்துவிட்டாள்,

மதுரைக்கு வந்ததில் இருந்து சத்யனின் அம்மா பேச்சியைப் போல இவன்மேல் அக்கரையுடன் சாப்பாடு, துணிகள், இருக்க இடம் என்று எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வாள், என்ன.... பேச்சி திட்டிக்கொண்டே சோறு போடுவாள், சாந்தா புத்திமதி சொல்லிகொண்டே சோறு போடுவாள், மற்றபடி இருவரின் அக்கறையும் ஒன்றுதான்

சத்யன் ஊதாரியோ, கெட்டவனோ, திருனோ இல்லை, அவனைப் பொருத்தவரையில் “களவும் கற்று மற” அவ்வளவுதான்,, எதையுமே ஒரு அலட்சியத்துடன் அனுகுபவன், அவன் பார்வையில் “ யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்” அப்படியிருக்க யானையை பார்த்து கும்பிடு போட்டு, அது இறந்ததும் கண்ணீர் விடுவது என்பது தேவையில்லாத ஒன்று,, ,இதுதான் சத்யன்,

அவனுக்கு நண்பர்கள் கூட்டம் அதிகம், அதனால் அவர்களுடன் ஊர் சுற்றுவதே முக்கிய வேலை என்று இருப்பவன், அவனைச் சொல்லி குற்றமில்லை ஒத்தையா பொறந்த புள்ள என்று பேச்சி கொடுத்த செல்லம் தான் முதல் காரணம், அவன் “ சிறுவயதில் வாத்தியார் அடிச்சிட்டாரும்மாவ்” என்று அழுதவுடன் விளக்குமாத்தை எடுத்துக்கொண்டு வாத்தியாரை பார்க்க போனவள்தான் பேச்சி,,

நாளடைவில் பத்தாவது படிக்கும்போது பரிச்சையில் பெயில் ஆகி வீட்டுக்கு வந்து “ யம்மாவ் பரிச்சை எழுதுறப்ப பயங்கரமா பசிச்சுதும்மா, அதனால்தான் பரிச்சையே எழுதமுடியலை” என்று மகன் சொன்ன காரணத்தை நம்பி “ அய்யோ புள்ள பசியால தான் பரிச்சை சரியா எழுதலை” என்று ஊருக்கு சொன்ன அப்பாவி தான் பேச்சி

பத்தாவது பெயிலாகி பள்ளியை விட்டு நின்ற பிறகு சத்யன் போகாத வேலையில்லை, முதலில் தனது அம்மா வீட்டிலேயே வைத்திருந்த பெட்டிகடையில் உட்கார்ந்து பாபநாசம் அருவிக்கும் அதற்கு மேலே இருக்கும் காரையார் டேம்க்கும் செல்லும் மக்களுக்கு தேவையான பொருட்களை விற்றுப் பார்த்தான், அந்த வேலை அவன் பொறுமையை ரொம்பவே சோதிப்பதாக இருந்தது 




பிறகு நண்பர்களுடன் சேர்ந்து மேற்குத்தொடர்ச்சி மலைகளின் காடுகளில் மரம் வெட்டி லாரிகளில் ஏற்றும் வேலையில் இறங்கினான், சிறிது நாட்களில் அந்த வேலை சலித்துவிட தாமிரபரணி ஆற்றில் லாரிகளுக்கு மணல் அள்ளிக்கொட்டும் வேலை செய்தான், சில நாட்களில் அதுவும் சலித்துவிட்டது, சீசன் நாட்களில் பனைமரத்தில் இருந்து பதனீரும் கல்லும் இறக்கி குற்றாலம், பாபநாசம், பாலருவி, என்று மக்கள் கூடும் இடங்களில் விற்பான்,,

பிறகு சுலபமாக பணம் சம்பாதிக்க அவன் நண்பன் ஒரு வழி சொல்ல தமிழ்நாட்டு ரேஷன் அரிசியை செங்கோட்டை பார்டர் வழியாக டிவிஎஸ் பிப்டி மூலம் கேரளாவுக்கு கடத்தும் வேலையை செய்தான், அதில் ஒரு முறை மாட்டிக்கொண்டு ஒரு மாதம் உள்ளேபோய் கம்பிகளை எண்ணிவிட்டு வெளியே வந்தவன் “ ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்” அதையும் விட்டுவிட்டான், பிறகு டிரைவிங் கற்றுக்கொண்டு ஒரு எம்எல்ஏவிடம் டிரைவராக வேலைக்கு சேர்ந்தான், அங்கேயும் ஒருமாதம் கூட நிலைக்கவில்லை, இவனைவிட கேடியாக இருந்த எம்எல்ஏவை பிடிக்காமல் வேலையை விட்டுவிட்டான்,,

கொஞ்சநாள் அருவிகளுக்கு குளிக்க வரும் ஆண்களுக்கு எண்ணை தேய்த்து விடும் வேலையையும் செய்தான்,, இப்படி எந்த வேலையிலும் நிலையில்லாமல் சுற்றிய சத்யன் அந்த காலகட்டத்தில் பீடி, சிகரெட், கஞ்சா, சாராயம், கல், பீர் பிராந்தி,, சில நாட்களில் கையில் பணம் அதிகமிருந்தால் நண்பர்களுடன் கேரளத்து பைங்கிளிகளை நாடிச்சென்றதும் உண்டு, இவை எல்லாவற்றையும் கற்று மறந்தான்,

இப்போது கையில் காசிருந்தால் சிகரெட், இல்லயென்றால் பீடி, மற்றபடி பாபநாசம் போகும் நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து மட்டையாகி மூஞ்சை நாய் நக்கும் அளவுக்கு சரக்கு என்று அளவோடு இருக்கிறான்,

ஆராவமுதன் வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகிவிட்டது, பெரிய பணக்காரர் என்று சொல்லமுடியாவிட்டாலும், பல லட்சங்களை தாண்டி சில கோடிகளை தொட முயற்சிசெய்யும் ஒரு கௌரவமான பணக்காரர், தொழில்,, மேலூர் ரோட்டில் சிறியதாக ஒரு கிரானைட் பேக்டரிக்கு சொந்தக்காரர், ஏழ்மையில் திருமணம் முடிந்ததாலோ என்னவோ இவர் மனைவி சாந்தா இன்னும் அதை மறக்காமல் வாழும் நல்ல பெண்மணி, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள், மகன் சென்ற வருடம் திருமணம் முடிந்து மனைவியுடன் ஆஸ்ட்ரேலியாவில் வசிக்கிறான்,

அவரின் ஒரே செல்ல மகளுக்குத்தான் இன்று திருமணம், மாப்பிள்ளை திருச்சியில் பெரிய கல்குவாரியின் முதலாளி, ம்ஹும் பணமும் பணமும் ஜோடி சேர்கிறது என்று சத்யன் நினைப்பதுண்டு

இந்த திருமணம் முடிந்தவுடன் பாபநாசம் கிளம்பிவிடவேண்டும் என்ற முடிவில் இருந்தான், அவன் குணத்துக்கு இத்தனை நாட்கள் இங்கே தாக்குப்பிடித்ததே சந்தாவின் அன்பான உபசரிப்புகாக மட்டுமே, மற்றபடி ஆராவமுதன் நண்பனின் மகனாயிற்றே என்று வாரிவழங்கவும் மாட்டார், மற்ற ஊழியர்களை போல் இவனை நடத்தவும் மாட்டார், அதாவது அவருடைய தொழில் சம்மந்தப்பட்டவர்கள் முன்பு சத்யன் மாமா என்று அழைத்தால் பார்வையால் அவனை எச்சரிக்கை செய்யும் மனிதர், வீட்டுக்கு வந்து சத்யன் கலந்து தரும் ஒரு கட்டிங்கை உள்ளே விட்டதும் “ டேய் மாப்ளே என் நண்பனோட மவனே, நீ தான்டா எனக்கு எல்லாமே” என்று வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டுவார், ஆனால் பழசையும் பாரம்பரியத்தையும் மறக்காத அறுபது சதவிகித நல்லவர் 


அவ்வளவு இரைச்சலிலும் முகத்தை துணியால் மூடிக்கொண்டு அமைதியாக உறங்கிய சத்யனை அவன் பாக்கெட்டில் இருந்த செல்போன் ஒலித்து எழுப்பியது, ஆத்திரத்தோடு கண்விழித்த சத்யன் கண்களில் ஏறிய சிவப்புடன் செல்லை எடுத்துப்பார்த்தான், ஆராவமுதன் மகன் பாலாஜி தான் கால் செய்திருந்தான், தங்கையின் திருமணத்திற்காக சென்ற வாரம்தான் மனைவியுடன் இந்தியா வந்திருந்தான்

சத்யன் அவசரமாக போனை ஆன் செய்து காதில் வைத்து “ சொல்லு மாப்ள என்ன விஷயம்?” என்று கேட்க

“ டேய் சத்தி மொதல்ல என்னைய மாப்ளன்னு கூப்பிடுறதை நிறுத்து, என் ஒய்ப்க்கு தெரிஞ்சா என்னை தொலைச்சுடுவா” என்று கோபமாக பாலாஜி கூற

சத்யனின் சிவந்த கண்கள் மேலும் சிவக்க, ‘ படிச்சுட்டு வெளிநாடு போனதும் பெரிய பருப்புன்னு நெனைப்பு போல, பொண்டாட்டிக்கு பயந்த பய’ என நக்கலாக மனதுக்குள் நினைத்தவன் “ ம் சொல்லு பாலா என்ன விஷயம்?” என்றான் சத்யன்

“ ரங்கேஷோட ப்ரண்ட்ஸ் தங்குறதுக்கு ஹோட்டல் சுப்ரீம்ல ரூம் புக் பண்ணோம்ல, அந்த ரூம்ஸ் பத்தாதாம், இன்னும் இருபது பேருக்கு ரூம் புக் பண்ணச்சொல்லி இன்னேரத்துல போன் பண்றாங்க, அப்பா சப்ரீம்க்கு போன் பண்ணி கேட்டுட்டார் எந்த ரூமும் இல்லையாம், வேற ஏதாவது லோக்கல் லாட்ஜில் ரூம் இருக்கான்னு போய் தேடிப்பாரு சத்தி” என்று பாலா சொல்ல..

சத்யனுக்கு எரிச்சலாக வந்தது, இவனுங்க வீட்டு பொண்ணுக்கு கல்யாணம் பண்றதுக்குள்ள என்னைய மெண்டலாக்கி சுத்த விட்டுருவானுங்க போலருக்கு என்று கறுவியவன் “ எனக்கு இந்த ஊர்ல என்ன தெரியும் பாலா? வேற யாரையாவது விட்டு தேடச் சொல்லு” என்று சத்யன் தட்டிக்கழித்தான்

“ எல்லாரும் ஒரு ஒரு வேலையா சுத்துறாங்க, நீதான் போகனும், பக்கத்துல யார்கிட்டயாவது விசாரிச்சு போய் ரூமை பார்த்துட்டு உடனே புக்ப் பண்ணிடு” என்றவன் சத்யனின் பதிலை எதிர்பார்க்காமல் காலை கட் செய்தான்

“ அடங்கோ பரதேசிப் பய மவனே” என்று வாய்விட்டு திட்டியபடி போனை பாக்கெட்டில் போட்டவன் டேபிளில் இருந்து இறங்கி மண்டபத்தின் சமையலறைக்கு சென்று தண்ணீர் பிடித்து முகத்தை கழுவி தூக்கத்தை விரட்டியவன் தோளில் இருந்த அழுக்குத் துண்டால் முகத்தை துடைத்துக்கொண்டு வெளியே வந்தான்

பக்கத்துல எங்கபோய் லாட்ஜ்களை தேடுறது என்ற யோசனையுடன் வெளியே வந்தவன், பக்கத்து டீக்கடையில் ஒரு டீ சொல்லிவிட்டு, டீக்கடைக்காரிடமே கேட்டான்

கையில் இருந்த டீ கப்பை ஒரு லயத்துடன் டீ ஆற்றிய கடைக்காரர் “ இங்கே எதுவும் லாட்ஜ் இல்ல தம்பி, நீ மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டுக்கு போனா அங்க சுத்தி சுத்தி ஏகப்பட்ட லாட்ஜ் இருக்கு, போய் விசாரிச்சு பாருங்க” என்று தகவல் சொன்னார்

அவர் கொடுத்த டீயை வாங்கி இரண்டே மடக்கில் குடித்துவிட்டு, ஒரு ஆட்டோவை பிடித்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்து இறங்கிக்கொண்டான், சுற்றிலும் தேடி அவன் கண்களுக்கு தரமாக தெரிந்த லாட்ஜ்களில் போய் ரூம் இருக்குமா என்று விசாரித்துப் பார்த்தான், ஒன்று இரண்டு அறைகள் மட்டுமே இருந்தது, சேர்ந்தார்போல் பத்து அறைகள் இல்லை என்றார்கள்,

சத்யன் யோசனையுடன் வெளியே வந்தபோது, ஒரு பான்பராக் வாயன் வந்து “ தம்பி மொத்தமா பத்து ரூம் தானே உங்களுக்கு வேனும், என்கூட வாங்க நான் ரூம் புக் பண்ணி தர்றேன்” என்று கூறி அழைத்துச்சென்றான்

சத்யனும் அலைச்சல் மிச்சம் என்று சிறு நிம்மதியுடன் அவன் பின்னால் போனான், ஒரு சந்துக்குள் அழைத்து சென்றான், பார்க்கத்தான் சிறு சந்து ஆனால் கட்டிடங்கள் பிரமாண்டமாக இருந்தது, அந்தாள் அழைத்துப்போன லாட்ஜில் சத்யன் கேட்டதுபோல் பத்து அறைகள் மொத்தமாக இருந்தன,

அறைகளை பார்த்துவிட்டு, லாட்ஜ் மேனேஜரிடம் காத்திருக்கும் படி சொல்லிவிட்டு, பாலாவுக்கு போன் செய்தான் சத்யன்


“ சொல்லு சத்தி ரூம் விசாரிச்சுட்டியா?” என்று எடுத்தவுடனேயே கேட்டான் பாலா

“ ம் பார்த்துட்டேன் பாலா, மாட்டுத்தாவணி பக்கத்துல தான், ஆனா லாட்ஜ் சுமாராகத்தான் இருக்கு, ரூம் எல்லாம் பரவாயில்லை, ஒரு ரூமுக்கு ரெண்டு பேர் தங்கலாம்,, நீ வந்து பார்த்த பொறவு ரூம் புக் பண்ணவா?” என்று சத்யன் கேட்க

“ ம்ஹூம் எனக்கு நேரமில்லை சத்தி, அட்சயாவை பியூட்டி பார்லர் கூட்டிப் போகனும், அதனால நீயே பார்த்து ரூம் புக் பண்ணிடு, உன்கிட்ட டாடி குடுத்த பத்தாயிரத்துல மிச்சம் இருக்குமே அதுல அட்வான்ஸ் குடு, அப்புறம் அப்பாகிட்ட சொல்லி மீதி பணத்தை வாங்கி குடுத்துட” என்றவன் சத்யன் பதிலை கேட்காமலேயே போனை கட் செய்தான்

'ங்கொய்யால ****** வீங்குனவன் என்று பாலாவை அசிங்கமாக மனதுக்குள் திட்டியபடி தன்னிடமுள்ள பணத்தில் அறையை புக் செய்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, தனது செல் போன் நம்பரை எழுதி கொடுத்துவிட்டு வெளியே வந்தான் சத்யன்

மறுபடியும் ஆட்டோவில் ஏறி மண்டபத்துக்கு வந்தபோது, மணி பத்தாகியிருந்தது, பசி வயிற்றை கிள்ள, அதே டீக்கடையில் ஒரு டீயும் இரண்டு பன்னும்வாங்கி டீயில் தொட்டு அவசரஅவசரமாக விழுங்கிவிட்டு மண்டபத்துக்குள் ஓடினான்,

சமையல் செய்யும் ஆட்கள் வந்துவிட்டிருக்க, அவர்களுக்கு தேவையானவற்றை எடுத்து கொடுக்க ஒரு ஆளை நியமித்தான், பிறகு வெளியே வந்து கல்யாணம் நடக்கும் ஹாலில் இருந்த சேர்களை வரிசையாக போடச்சொல்லி ஆட்களுக்கு உத்தரவிட்டான், இரவு நடக்கும் ரிசப்ஷனுக்கு தனியாக ஒரு மேடை போடப்பட்டிருக்க அதை செயற்கை பூக்களால் அலங்காரம் செய்யும் நபரிடம் சி மாற்றங்களை சொன்னான், மறுபடியும் சமையலறைக்கு ஓடி அங்கிருந்த பெண்களிடம், மண்டபத்தின் மாடியில் இருந்த தங்கும் அறைகளை சுத்தமாக க்ளீன் செய்யச்சொன்னான்,

அங்கிருந்த அறைகள் மொத்தமும் மணமகளின் தோழிகளுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் ஏற்பாடு செய்துவிட்டதால், மணமகனை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் ஹோட்டலில் அறைகள் ஏற்பாடு செய்யவேண்டியதானது

இந்த பரபரப்பிலேயே மதியம் மணி ஒன்றானது, அவனுடைய அலைச்சலை பார்த்த சமையல் சீப்புக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, அவன் கையைப் பற்றி இழுத்துவந்து, அவருடன் சாப்பிட அமர்த்திக்கொண்டு அவனுக்கும் தனக்கும் உணவை பரிமாறினார், சத்யனுக்கு இருந்த அலுப்பில் ஒரு நைன்ட்டி அடிச்சுட்டு சாப்பிட்டா தேவலை போல இருந்தது, ஆனால் அந்த மனிதரின் அன்பை மறுக்கமுடியவில்லை, பசியோடு அரக்கப்பரக்க சாப்பிட்டு எழுந்தான்,

மறுபடியும் வெளியே வந்து மண்டபத்தை ஒருமுறை சுற்றிவந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டான், அதற்குள் ஆராவமுதனின் பேக்டரி ஆட்கள் சிலர் உதவிக்கு வந்துவிட, சத்யனின் வேலைகளில் பாதி குறைந்தது

வீட்டுக்குப்போய் குளித்து உடைமாற்றிக்கொண்டு வரலாம் என்று நினைத்தவன், பஸ் பிடித்து அண்ணாநகர் வந்து அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏறி ஆராவமுதன் வீட்டுக்கு போனான்

அங்கே இருந்த கல்யாண பரபரப்பில் அந்த வீட்டு நாய் கூட சத்யனை கவனிக்கவில்லை, அந்த பெரிய வீட்டின் பின்புறம் இருந்த அவுட்டவுசில் ஒரு அறை சத்யனுடையது, கதவை திறந்து உள்ளே போய் போட்டிருந்த உடைகளை கலைந்து, இடுப்பில் டவலோட மற்றுடையும் சோப்பும் எடுத்துக்கொண்டு தோட்டத்தில் ஒரு ஓரமாக இருந்த பாத்ரூம் போய் குளித்துவிட்டு வந்தான்



இந்த கல்யாணத்துக்காக சத்யனுக்கு சாந்தா இரண்டு உடைகள் எடுத்துக் கொடுத்திருந்தாள், ஒன்று நீலநிற ஜீன்ஸ் பேன்ட் அதற்கு மேட்சாக ஷாட் சர்ட் ஒன்றும்,, மற்றொன்று காலையில் திருமணத்தின் போது கட்டிக்கொள்ள, விலை குறைவான பட்டுவேட்டி ஒரு வெள்ளை முழுக்கை சட்டை, இது ஊழியர்கள் அனைவருக்கும் பொதுவாக எடுத்தது,

சத்யன் ஜீன்ஸ் பேன்ட்டையும் டீசர்ட்யும் போட்டுக்கொண்டு, வேட்டி சட்டையை ஒரு கவரில் வைத்துக்கொண்டு அறையை மூடிவிட்டு வெளியே வந்தான்



No comments:

Post a Comment