Wednesday, September 30, 2015

மான்சியின் மவுனம் - அத்தியாயம் - 8



அதன்பிறகு வந்த இரண்டு நாட்களும் மான்சியின் கால்கள் தரையில் நிற்க்கவில்லை, உதடுகள் எப்போதுமே காதல் பாடல்களை முனுமுனுத்தபடி இருந்தது, தோட்டத்து மரங்கள், செடிகொடிகள், பூக்கள், பூக்களில் அமரும் பட்டாம்பூச்சியில் இருந்து, மரங்களில் கூடுகட்டி வாழும் பறவைகள் வரை அத்தனையிடமும் புரியாத பாசையில் பேசினாள்,

“ அக்கா இன்னிக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்ற மஞ்சுவை கட்டிப்பிடித்து முத்தமிட்டு அவளை அழகாக வெட்கப்படவைத்தாள், தனது உடைகளை மஞ்சுவுக்கு அணிவித்து அவளை ஒயிலாக கேட்வாக் செய்யவிட்டு கைகொட்டி சிரித்து ரசித்தாள்



மகளின் இந்த மாற்றங்கள் பெற்றவர்களுக்கு ரசிக்கவில்லை, இவற்றுக்கெல்லாம் காரணம் அமேரிக்க மாப்பிள்ளையின் வருகைதான் என்று அவர்களின் உள்ளம் குமுறியது,

ஆராவமுதனுக்கு இருந்த ஆத்திரத்தில் வரும் அமேரிக்காக்காரனை துப்பாக்கியில் சுட்டுவிடுவார் போல் இருந்தது, மான்சி சம்மதிக்கமாட்டாள் என்ற தைரியத்தில் தான் அட்சயாவிடம் மான்சியை கேட்டு முடிவு சொல்வதாக சொன்னது,

ஆனால் மான்சியைப் பார்த்தால், இதில் அவளுக்கு முழு சம்மதம் என்பது போல் தோன்றுகிறதே என்று அவருக்கு ஆத்திரமாக வந்தது, “ என் வகைறாவுல ஆம்பளைங்க கூட ரெண்டாவது கல்யாணம் பண்ணதில்லை, ஆனா உன் மக இப்படியொரு முடிவு பண்ணிருக்காளே?” என்று சாந்தாவிடம் கூறி ஆத்திரப்பட்டார்

“ எனக்கும் என்ன சொல்றதுன்னு புரியலைங்க,, நம்ம சத்யன் கல்லாட்டம் இருக்குறப்ப இவளுக்கு புத்தி போற போக்கை பாருங்க, அமேரிக்கா மோகம் தலைக்கேறி போச்சு போலருக்கு ” என்று அவளும் பதிலுக்கு தனது கோபத்தை கொட்டினாள்

இருவரும் மான்சியிடம் இதைப்பற்றி எதுவுமே கேட்கவில்லை, அந்த விஸ்வா வரட்டும் என்று காத்திருந்தார்கள்

விஸ்வாவும் வந்தான், சத்யன் அளவுக்கு உயரமாக இல்லாவிட்டாலும், அதிக சதைப்பற்று இல்லாமல் நல்ல சிவந்த நிறத்தில் மீசை இல்லாமல் மொழுமொழுவென இருந்தான், கண்களில் ஒரு வசீகரம் இருந்தது, அதேசமயம் பார்வையில் வக்கிரம் இல்லை, ரொம்ப இயல்பாக இருந்தான், பாரம்பரியத்தை மறக்காது வீட்டுக்குள் நுழைந்ததும் ஆராவமுதன் சாந்தா காலில் விழுந்து “ என்னை ப்ளஸ் பண்ணுங்க அங்கிள் ஆன்ட்டி” என்றதும் அவர்களுக்கு அவன்மீது இருந்த கோபம் குறைந்து மனதார ஆசிர்வதித்தார்கள்

மான்சிக்காக வாங்கி வந்த பொருட்களை அவளிடம் கொடுத்தபோது மான்சி வேகமாக தலையாட்டி மறுக்க “ கமான் மான்சி நான் ஜஸ்ட் ப்ரண்ட்ஸா தான் நெனைச்சு வாங்கிட்டு வந்தேன், மற்ற எதைப்பத்தியும் யோசிக்கவேயில்லை, அதனால நீ கண்டிப்பா வாங்கிக்கனும்” என்று அவளிடம் பொருட்களை கொடுக்க, சிறு சங்கடத்துடன் மான்சி வாங்கிக்கொண்டாள்,

விஸ்வா கொடுத்த பையில், ஒரு விலையுயர்ந்த மொபைல் போனும், ஒரு சைபர்சாட் கேமிராவும், சில சாக்லேட் பெட்டிகளும் இருந்தன, வக்கிர எண்ணத்தில் கொடுக்கும் பொருட்களாக அவை இல்லை என்றதும் பெற்றவர்களுக்கு சற்று நிம்மதியாக இருந்தது,


அப்போது விஸ்வாவுக்கு காபி எடுத்துக்கொ வந்த மஞ்சு, அவனின் தோற்றத்தை பார்த்து வாயைப் பிளந்தபடி காபியை நீட்ட..

மஞ்சு கொடுத்த காபியை வாங்கியபடி “ அடடா இந்த வீட்டுல இந்தமாதிரி இன்னொரு க்யூட் கேர்ள் இருப்பான்னு எனக்குத் தெரியாம போச்சே, ஸாரி உனக்கு எதுவுமே வாங்கிட்டு வரலை” என்று வருத்தமாக கூறிவிட்டு, மான்சியிடம் திரும்பி “ மான்சி அந்த சாக்லேட் பாக்ஸ்ல ஒன்னை எனக்கு திருப்பி தரமுடியுமா?” என்று கேட்க

“ ஓ ஷ்யூர் விஸ்வா” என்று கூறிவிட்டு தன்னிடமுள்ள பையிலிருந்து ஒரு சாக்லேட் பெட்டியை எடுத்து விஸ்வாவிடம் கொடுத்தாள் மான்சி

அதை வாங்கி மஞ்சுவிடம் நீட்டி தனது இடைவரை குனிந்து “ இந்த க்யூட் பேபிக்கு என்னோட சின்ன கிப்ட்” என்று கூற

அவன் அப்படி செய்ததில் மஞ்சுவுக்கு பயங்கர வெட்கம் வந்தது, ஒருமாதிரியாக நெளிந்தபடி சுற்றிலும் இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு “ வேனாங்க சார்’’ என்றாள் சங்கடமாக கூறினாள்

அவள் சங்கடத்தை புரிந்துகொண்டு “ வாங்கிக்க மஞ்சு” என்றாள் சாந்தா
“ ஓ மஞ்சுவா உன் பெயர், ரொம்ப நல்லாருக்கு” என்ற விஸ்வா இன்னும் சாக்லேட்டை நீட்டியபடியே இருக்க, மஞ்சு சங்கடத்துடனேயே அதை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டாள்

விலையுயர்ந்த பேனா ஒன்றை ஆராவமுதனுக்கு கொடுத்தவன், அழகான வேலைபாடுகள் நிறைந்த ஒரு சால்வையை சாந்தாவுக்கு கொடுத்தான், அவனின் நாகரீகமான அனுகுமுறை அனைவருக்குமே பிடித்துப்போனது

அன்று மதியம் சாந்தாவும் மஞ்சுவும் செய்த காரசாரமான அசைவ உணவுகளை நாக்கில் நீர் வழியவழிய கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு ஆவலுடன் சாப்பிட்டான்

சாயங்காலமாக மான்சியின் அறைக்கதவை நாகரீகமாக தட்டிவிட்டு பதில் வந்ததும் உள்ளே போனான், சோபாவில் அமர்ந்திருந்த மான்சி அவனைப் பார்த்ததும் அவசரமாக எழுந்து நிற்க..

அவளெதிரில் இருந்த சோபாவில் கேஷுவலாக அமர்ந்த விஸ்வா, “ ரிலாக்ஸ் மான்சி, நாம இப்போ ஜஸ்ட் பிரண்ட்ஸ் மட்டும்தான் ஓகேயா? என்னைப்பார்த்து நீ சங்கடப்பட வேண்டிய அவசியமில்லை” என்று புன்னகையுடன் கூற

மான்சியின் முகத்திலும் மெல்லிய புன்னகையோடு “ இல்ல உங்களை எதிர்பார்க்கலை விஸ்வா அவ்வளவுதான்” என்று சூழ்நிலையை இயல்பாக்கினாள்

“ ஆனா நான் ஒரு எதிர்பார்போடு தான் வந்திருக்கேன்மான்சி,, அட்சயா உன்னைப்பத்தி சொன்னப்ப உடனே நானும் சம்மதிக்கலை, ஏன்னா வாழ்க்கையை இழந்த பொண்ணுக்கு வாழ்க்கை குடுக்குற அளவுக்கு நான் ரொம்ப பெரிய தியாகி எல்லாம் கிடையாது மான்சி,, கிட்டத்தட்ட ஐந்து வருஷமா வெளிநாட்டில் வாழ்ந்தாலும் நம்ம கலாச்சாரத்தை மறக்காத அக்மார்க் தமிழ் பையன் நான்,, எனக்கு என் மனைவி எப்படியிருக்கனும் சில டிரீம்ஸ் இருக்கு மான்சி, உன்னோட பேசிப் பழகி பார்த்த பிறகுதான் என்னோட சம்மதத்தை சொல்வேன்னு அட்சயா கிட்ட சொல்லிட்டு தான் இங்கே வந்திருக்கேன்,, அப்புறம் அட்சயாவோட கேரக்டரை வச்சு என்னை எடைபோடாதே, ஏன்னா எனக்கு சிஸ்டர் முறை என்றாலும் எனக்கே சிலவிஷயங்களில் அட்சயாவை பிடிக்காது ” என்று விஸ்வா விளக்கமாக மான்சியிடம் கூற .


மான்சிக்கு அவனது பேச்சில் நேர்மையும், வெளிப்படையான குணமும் ரொம்பவே பிடித்துப்போனது “ உங்களுடைய பொய் கலப்படமில்லாத வார்த்தைகள் எனக்கு ரொம்ப பிடிக்குது விஸ்வா” என்று மனம்விட்டு பாராட்டினாள் மான்சி

உடனே விஸ்வாவின் முகத்தில் என்னவென்று புரியாத ஒரு பாவனை வந்து போக, தனது கைவிரல்களை ஒன்றோடொன்று பின்னி நெறித்தபடி “ அப்போ நான் உனக்கு ஓகேன்னு சொல்றியா மான்சி? ” என்று விஸ்வா நேரடியாக கேட்டான்

இதற்கு என்ன பதில் சொல்வது என்று மான்சி ஒரு நிமிடம் திகைத்து திணறித்தான் போனாள், கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து காட்டி ‘ இல்ல இல்ல நான் எப்பவுமே சத்யனோட மனைவிதான்’ என்று சொன்னால் மேற்கொண்டு வற்புறுத்தாமல் நாகரீகமாக ஒதுங்கிப் போககூடியவன் விஸ்வா, ஆனால் அதன்பிறகு யாரை வைத்து சத்யனை அசைக்கமுடியும், நிச்சயமாய் அதற்காக ஒருத்தனை தேடி அழைத்துச்செல்லும், அளவிற்கு மான்சிக்கு பொறுமையோ, திறமையோ இல்லை,

அதனால் ஒரு முடிவுடன் நிமிர்ந்து விஸ்வாவை பார்த்து “ இல்லை விஸ்வா நீங்க சொன்னமாதிரி ஒரு நல்ல பிரண்ட்டா உங்களைப் பார்த்ததுமே எனக்கு பிடித்து போச்சு, மத்தபடி நானும் உங்களோட பேசி பழகிய பிறகுதான் எதையுமே முழுசா சொல்லமுடியும், இந்த ஒரேநாளில் என்னால எந்த முடிவுக்கும் வரமுடியாது விஸ்வா” திக்கித்திணறி மெதுவாக சொல்லிமுடிக்க..

பட்டென்று ஒரு பளிச் புன்னகை வந்து விஸ்வா முகத்தில் வந்து ஒட்டிக்கொள்ள “ ஓகே நான் இங்கே இன்னும் ஒரு வீக் இருக்கப்போறேன் அதனால போகப்போக பார்த்துக்கலாம்,, இப்போ நீ என் கூட வந்து மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலை சுற்றி காட்டி கைட் பண்ற ஓகேயா, சீக்கிரமா கிளம்பி வா மான்சி” என்று கூறிவிட்டு விஸ்வா உற்சாகமாக எழுந்து வெளியே போக, மான்சி போகும் அவன் முதுகையே வெறித்தாள்

இது தவிர்க்க முடியாத ஒன்று, வேறு வழியில்லை போய்த்தான் ஆகவேண்டும், விஸ்வாவை ஒரு நண்பனாக நினைத்து போகத்தான் வேண்டும், என்று எண்ணியபடி எழுந்து கோவிலுக்கு போக ரெடியானாள்

மான்சி குளித்துவிட்டு அடர்த்தியற்ற ஆரஞ்சு வண்ணத்தில் மைசூர் கிரேப் சேலையணிந்து, தலைவாறி ஒற்றை ஜடையாக பின்னலிட்டு, உடலில் ஆங்காங்கே சிறு சிறு நகைகளுடன் ஒரு தேவதையாக கீழே வந்தபோது, ஹாலில் விஸ்வா சாந்தாவுடன் பேசிக்கொண்டு இருந்தான்,

மான்சியை பார்த்ததும் “ வாவ்......... வாட் எ பியூட்டி?”என்று உற்சாகமாய் கூவ,

மகளை நிமிர்ந்து பார்த்த சாந்தாவுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது, ‘சத்யன் இங்கே இருக்கும்போது ஒரு நாளாவது புடவை கட்டியிருப்பாளா? இப்போ பாரு எப்படியிருக்கான்னு, யார் ரசிக்க இவ்வளவு அழகோ தெரியலை?’ என்று எரிச்சலுடன் எண்ணியபடி எழுந்து தனது அறைக்கு போய்விட்டாள்

அப்போது தொடுத்து வைத்த மல்லிகை சரத்துடன் வந்த மஞ்சு “ அக்கா இந்த பூவை வச்சிக்கிட்டு போங்களேன்” என்று சொன்னதோடு அல்லாமல் மான்சியின் கூந்தலில் தானே பூவை வைத்தாள்





மஞ்சுவையே பார்த்த விஸ்வா “ மான்சி உனக்கு அப்ஜெக்ஷன் இல்லேன்னா மஞ்சுவும் நம்மகூட கோயிலுக்கு வரட்டுமே, நமக்கு ஒரு பேச்சுத் துணையா இருக்கும்” என்று சொல்ல..

“ ம்ஹூம் நான் வரலை இங்க வீட்டுல வேலையிருக்கு” என்று மிரட்சியுடன் பின்வாங்கினாள் மஞ்சு

“ பரவாயில்லை வா, வேலையை இருக்கிறவங்க பார்த்துக்குவாங்க” என்று விஸ்வா வற்புறுத்தி கூப்பிட்டான், ஒரு பேச்சில் ஒரு உரிமையான தொனி இருந்தது

அவர்களின் வாதம் சாந்தாவின் அறையை எட்டியிருக்க வேண்டும், ஏற்கனவே மான்சியை விஸ்வாவுடன் தனியாக அனுப்ப சங்கடப்பட்டவளுக்கு, விஸ்வா மஞ்சுவையும் உடன் அழைக்கவும் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் மறுபடியும் வெளியே வந்து “ தம்பிதான் கூப்பிடுதே, நீ கிளம்பி போய்ட்டு வா மஞ்சு, வேலையை இருக்குறவங்களை வச்சு நான் பார்த்துக்கிறேன்” என்று சாந்தா அமைதியாக கூறி அனுமதிக்க.. விஸ்வாவின் முகத்தில் பளிச்சென்று தவுசண்ட் வாட்ஸ் பல்பு எறிந்தது

“ இதோ கிளம்பி வர்றேன்” என்று மஞ்சு தோட்டத்து பக்கமாக ஓடினாள்,, மஞ்சுவின் உற்சாகம் அவளது துள்ளலான நடையில் தெரிந்தது,

மான்சி சோபாவில் அமர்ந்து மஞ்சுவுக்காக காத்திருக்க, சற்றுநேரம் அவளுடன் டிவியை பார்த்த விஸ்வா தோட்டத்து பக்கமாக மெதுவாக நகர்ந்தான், அவன் மஞ்சுவைத் தேடி போனபோது, அவளே எதிரில் வந்தாள், மான்சியின் திருமணத்திற்கு எடுத்துக்கொடுத்த பாவாடை தாவணியில் வந்தவள் எதிரே வந்த விஸ்வாவை பார்த்ததும் வெட்கமாக நெளிய

குனிந்து நின்ற அவளை தலைமுதல் கால் வரை அளவிட்ட விஸ்வா “ நீ பூ வச்சுக்கலையா மஞ்சு?” என்று கேட்டான்

வாயில் எதையோ குதப்பிய படி நிமிர்ந்த மஞ்சு “ ம்ஹூம் இல்லையே இருந்த பூவை மான்சி அக்காவோட தலையில வச்சிட்டேனே” என்று ஏமாற்றத்துடன் கையை விரிக்க

“ ம்ம் சரி விடு பரவாயில்லை, கோயில்ல பூ வித்தா வாங்கிக்கலாம், ஆமா வாயில என்ன வச்சிருக்க” என்று விஸ்வா கேட்டதும்..

மேலும் வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்ட மஞ்சு “ அது நீங்க குடுத்த சாக்லேட் தான், எனக்கு சாக்லேட்னா ரொம்ப புடிக்கும்” என்றவள் தன் கையில் இருந்த சாக்லேட் சுற்றியிருந்த ஜரிகை பேப்பரை காட்டிவிட்டு, “மான்சியக்கா வெளிய கடைக்கு போனா எனக்கு சாக்லேட் வாங்கிட்டு வந்து குடுப்பாங்க” என்று கூறிவிட்டு விஸ்வாவின் பக்கவாட்டில் நகர,

அவளின் கையைப் பற்றி அந்த பேப்பரை எடுத்து கசக்கி எறிந்துவிட்டு “ சரி வா போகலாம், நேரமாகுது” என்று விஸ்வா முன்னால் செல்ல..

மஞ்சு ஓடிப்போய் அந்த பேப்பரை எடுத்து அதன் சுருக்கங்களை நீக்கிவிட்டு மடித்து மறுபடியும் கைக்குள் வைத்துக்கொண்டாள்

அதை கவனித்த விஸ்வா “ ஏய் அதையேன் எடுக்குற?” என்று கேட்க

“ இல்ல அந்த பேப்பர் நல்லாருக்கு அதான்” என்று அசட்டுத்தனமாக கூறிவிட்டு மஞ்சு நெளிந்தாள்

விஸ்வா சற்றுநேரம் அவள் முகத்தையே பார்த்தான் பிறகு “ சரி வா” என்று கூறிவிட்டு வீட்டுக்குள் போனான்

மூவரும் வேகன் ஆரில் கிளம்பினார்கள், விஸ்வா முன்புறம் டிரைவருக்குப் பக்கத்தில் அமர, மான்சியும், மஞ்சுவும், பின் சீட்டில் அமர்ந்தனர்

கார் கோயிலை அடைந்ததும் விஸ்வா முதலில் பூக்கடைக்குத் தான் போனான், பெண்கள் இருவரும்காருக்கு அருகிலேயே நிற்க்க, விஸ்வா பூவை வாங்கிக்கொண்டு தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு வந்தான்

வாங்கி வந்த பூவை மஞ்சுவிடம் கொடுக்க, அவள் மறுபடியும் மிரண்டுபோய் மான்சியைப் பார்த்தாள்

“ ஏன்டி ச்சும்மா ச்சும்மா என்னையே பார்க்கிற, வாங்கி தலையில வச்சுக்க” என்று மான்சி அன்புடன் கூறியதும், முகம் பட்டென்று மலர பூவை வாங்கி தலையில் வைத்துக்கொண்டாள் மஞ்சு

விஸ்வாவின் முகத்தில் ஒரு பளிச் புன்னகை மின்னலாய் வந்து மறைந்தது, ஆனால் விஸ்வாவின் நடவடிக்கைகள் எதுவும் மான்சியின் கவனத்தை கவரவில்லை, அவள் சிந்தனைகளின் ஓட்டம் எங்கோ ஓடிக்கொண்டிருந்தது..

மூவரும் அர்ச்சனை தட்டு வாங்கிக்கொண்டு கோயிலுக்குள் போனார்கள், நேராக அம்மன் சன்னதி போய் அர்ச்சனை செய்துவிட்டு, பிறகு சாமி சன்னதிக்கு வந்து சாமி கும்பிட்டுவிட்டு சுற்றிவந்தனர்,, கோவிலின் சில இடங்களை பற்றி விஸ்வா கேட்டபோது மான்சி கவனத்தை எங்கோ வைத்துவிட்டு அரைகுறையாக பதில் சொல்ல,, மஞ்சுதான் அவனுக்கு விரிவாக விளக்கினாள்

மான்சி நிறைவாய் சாமி கும்பிட்ட பிறகு மனம் வேறெதிலும் ஒன்றாது போக, சங்கடத்துடன் விஸ்வாவை ஏறிட்டு “ விஸ்வா எனக்கு கொஞ்சம் தலைவலியா இருக்கு, நான் குளத்து படிகட்டில் உக்காந்திருக்கேன் நீங்க மஞ்சு கூட போய் கோயில் முழுக்க சுற்றிவிட்டு வாங்க, என்னைவிட அவ எல்லாத்தையும் டீடெய்லா சொல்லுவா அவளுக்கு இந்த கோயில் முழுக்க ரொம்ப பரிச்சயம் விஸ்வா, தப்பா நெனைக்காதீங்க” என்று மான்சி கூற..

விஸ்வா சந்தோஷமாக இருந்தாலும் “ ரொம்ப தலைவலியா இருந்தா வீட்டுக்கு போயிடலாமே மான்சி?” என்று வருத்தமாக கேட்க..

“ அதெல்லாம் ரொம்ப தலைவலி இல்லை விஸ்வா, நீங்க போய்ட்டு வாங்க, நான் வெயிட் பண்றேன்” என்று கூறிவிட்டு குளத்து படிகளில் இறங்கி மூன்றாவது படியில் அமர்ந்து கொண்டாள்,

விஸ்வாவும் மஞ்சுவும் கோயிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றிவர கிளம்பினார்கள்

மான்சியின் நிலை அவளுக்கே சங்கடமாக இருந்தது, என்ன சொல்லி விஸ்வாவை பாபநாசத்திற்கு அழைத்து செல்வது, இப்போ அங்கே நல்ல சீசன் தான், ஆனால் விஸ்வாவுடன் சத்யன் இருக்குமிடத்திற்கு போக அப்பா அம்மாவிடம் அனுமதி கிடைக்குமா? என்றுதான் பெரும் குழப்பமாக இருந்தது,



ஆனால் விஸ்வாவை அழைத்துக்கொண்டு போய்த்தான் ஆகவேண்டும், ஏனென்றால் சத்யனின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்வது ரொம்ப அவசியம், என்று மான்சி எண்ணும்போதே ‘ முன்பு போலவே அவன் அலட்சியம் காட்டினால்? உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாள்? என்ன செய்வது என்ற கேள்விகளும் கூடவே எழுந்தது,

அப்படியொரு சூழ்நிலையை மான்சியால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை அய்யோ தலையை கைகளால் தாங்கி கவிழ்ந்து கொண்டாள்,, பிறகு நிமிர்ந்தவள் கம்பீரமாக நின்ற கோபுரத்தை பார்த்து கையெடுத்துக்கும்பிட்டு ‘ மீனாக்ஷி தாயே அப்படியொரு சூழ்நிலையில் என்னை விட்டுறாதே, எனக்கு என் சத்யன் வேனும், சத்யன் இல்லாம என்னால வாழவே முடியாது, அவன் மனசு மாறி என்னை ஏத்துகனும், என்று மனமுருகி வேண்டிக்கொண்டாள் 


No comments:

Post a Comment