Monday, September 14, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 27

மறுநாள் காலையில் எழுந்திருக்கும் போதே அருணாவுக்கு மனதுக்குள் குறுகுறுவென ஏதோ அரித்துக்கொண்டே இருந்தது, அனிருத் கொடுத்த முத்தத்தின் ஞாபகம் அடிக்கடி வந்து அவள் இதயம் குலுங்கியது, அஸ்வத்தாமனின் புத்திசாலித்தனத்தை எண்ணி எண்ணி வியந்தபடி தனது வேலைகளை மிக மெதுவாகவே செய்தாள், அபி இவளைப் பார்த்து தலைசாய்த்து அழகாக சிரித்த சிரிப்பு அவள் மனதில் படமாக ஓடியது,
அழகை பராமரிக்க எப்போதும் செய்யும் உடற்பயிற்சிகளை மறந்து நிதானமாக குளித்து அவள் மில்லுக்கு கிளம்பி வெளியே வந்து டைனிங் டேபிளில் காலை டிபனுக்காக அமர்ந்தபோது சமையல்கார பெண்மணி இவளை அதிசயமாக பார்த்தாள்,

“ என்ன ரத்னா அப்படி பார்க்கிற?” என்று அருணா குழப்பமாக கேட்க,

“ இல்லம்மா நீங்க எப்பவும் மில்லுக்கு இந்த மாதிரி போகமாட்டிங்களே அதான் பார்த்தேன்” என்றாள் ரத்னா



“ ஏன் என்னாச்சு?” என்று அருணா தன்னை குனிந்து பார்த்தாள் பிறகு “ ஓ இந்த புடவை கட்டிக்கிட்டு போறதை சொல்றியா, சும்மா தான் கட்டினேன், நீ டிபன் எடுத்துட்டு வா” என்று குரலில் ஒரு அதட்டலோடு சொல்ல, ரத்னா டிபன் எடுத்து வர உள்ளே ஓடினாள்

ரத்னாவின் கூற்றில் தவறேதும் இல்லை,, தொழில் சம்மந்தப்பட்ட அனைத்து இடங்களுக்கும் அருணா உயர்ரக காட்டன் புடவைகள் அல்லது வேலைபாடுகளுடன் கூடிய சுடிதார் வகைகள் தான் அணிந்து செல்வாள், ஆனால் இன்று நேற்று திருமணத்திற்கு உடுத்தியிருந்த விலையுயர்ந்த புடவையையே மறுபடியும் இப்போது உடுத்திக்கொண்டு மில்லுக்கு செல்வது எல்லாருக்குமே வியப்பான ஒன்றுதான், ஆனால் அருணாவுக்கு மட்டும் தானே அந்த புடவையின் ரகசியம் தெரியும்

அருணா அலுவலகத்துக்கு கிளம்பி வந்து குமார் கார் கதவை திறந்துவிட ஏறி காரில் அமர்ந்ததும் குமார் அவளை ஆச்சரியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு காரை எடுத்தான்

கார் மெயின்ரோட்டை வந்தடைந்ததும் “ அம்மா மில்லுக்குத் தானே போகனும்?” என்று சந்தேகமாக கேட்டான் குமார்

ரத்னாவுக்கு ஏற்பட்ட சந்தேகம்தான் இவனுக்கும் வந்திருக்கும் என்று யூகித்தவள் “ ஆமாம் குமார்” என்றும் சொல்லிவிட்டு அமைதியாக சீட்டில் சாய்ந்தாள்,

சற்றுநேரம் கழித்து தனது மொபைலை எடுத்து அஸ்வத் வைத்திருந்த ஸ்கிரீன் சேவரை பார்த்தாள், பல வண்ணகலவைகளை சுவற்றில் அள்ளித் தெளித்தது போன்ற அழகான ஒரு படம், சிறிதுநேரம் அதை ரசித்துவிட்டு ரிங்டோனை கேட்டு ரசிக்க நினைத்து “ குமார் என்னோட நம்பருக்கு ஒரு கால் பண்ணு” என்றாள்

குமார் ‘ஏன்’ என்ற தனது குழப்பத்தை மறைத்து அருணாவின் நம்பருக்கு கால் செய்தான்,

ஏ ஆர் ரஹ்மானின் அழகான மியூசிக் தீம் ஒன்று ரிங்டோனாக ஒலித்தது, அருணா முதன்முறையாக தனது மொபைலின் ஒலியை எந்தவித எரிச்சலும் இன்றி கண்மூடி ரசித்தாள், அருணாவிடம் இதுவும் வித்தியாசம் தான், காரில் ஏறி அமர்ந்ததும் முக்கியமான பைல்களை பார்ப்பதிலேயே கவணம் செலுத்துபவள் இன்று ஒரு மியூசிக்கை கண்மூடி ரசிக்கிறாள்

அவளது மனநிலை புரிந்தோ என்னவோ குமார் இரண்டு மூன்று முறை மிஸ் கால் செய்தான், அதற்க்குள் மில் வந்துவிட, குமார் முதலில் இறங்கி அவளுக்கு கதவை திறந்து விட்டான், 


அருணா இரண்டடி எடுத்து வைக்கும்போது “ மேடம் ஒரு விஷயம்” என்று குமார் கூறியதும் நின்று திரும்பினாள் “ நேத்து அந்த மேரேஜ்ல உங்களோட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டாங்களே அந்த பிள்ளைகள், அதே போட்டோவை நானும் என்னோட செல்லில் படம் எடுத்துட்டேன், உங்களுக்கு வேனும்னா அதை அனுப்பவா மேடம்?” என்று குமார் அமைதியாக கேட்க

குமார் தன்னை கண்டுகொண்டானே என்று அருணாவுக்கு சங்கோஜமாக இருந்தது, இருந்தாலும் அவனை நிமிர்ந்து பார்க்காமல் போகிறபோக்கில் “ என்னோட நம்பருக்கு அனுப்பு குமார்” என்று சொல்லிவிட்டு போனாள்

அன்று அலுவலகத்தில் குமார் அனுப்பிய படத்தை தவிர வேறு எதையுமே பார்க்கவில்லை அருணா, தனது செக்ரட்டரியிடம் சொல்லி அந்த படத்தை கம்பியூட்டரில் போட்டு பெரிதாக்கி வைத்துக்கொண்டாள்

அன்று மாலை வீட்டுக்கு வரும்போதும் அருணா அமைதியாக வந்தாள், இதுவரை இறக்கப்பட்டாத கார் கண்ணாடியை இறக்கிவிட்டு வெளியே வேடிக்கைப் பார்த்தாள், ரோட்டோரமாக ஏதாவது சிறுபிள்ளைகள் போனாள் எக்கி கவணமாக பார்த்தாள்

அவளது மாற்றங்கள் ஐந்து வருடங்களாக அவளிடம் டிரைவராக இருக்கும் குமாருக்கு நன்றாகவே புரிந்தது, சத்யன் யார் அந்த பிள்ளைகள் யார் என்பதெல்லாம் குமாருக்கு நன்றாகவே தெரியும்,, தன் முதலாளி அம்மாவின் மாற்றம் அவனுக்கு சந்தோஷமாக இருந்தது, ஏதோவொரு தைரியத்தில் அவளுக்கு தெரியாமல் சில வேலைகளை செய்திருந்தான்

“ மேடம் ஒரு விஷயம் உங்ககிட்ட சொல்லனும்” என்றான்
வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்தவள் திரும்பி “ சொல்லு குமார் என்ன விஷயம்” என்றாள்

“ மேடம் சத்யன் அய்யாவோட வீட்டுல டிரைவரா வேலை செய்ற பூபதி என்னோட பெரியப்பா மகன் தானுங்க, அவன்கிட்ட இன்னிக்கு போன்ல பேசும்போது அய்யாவோட பசங்களை பத்தி விசாரிச்சேன், மூனுபேருமே காண்வென்டில் படிக்கிறாங்களாம், காலையில பெரியய்யா கார்ல கொண்டு போய் ஸ்கூல்ல விடுவாராம், மதியானம் பெரியம்மா இல்லேன்னா அய்யாவோட சம்சாரம் யாராவது சாப்பாடு எடுத்துட்டுப் போய் ஊட்டிட்டு வருவாங்களாம், ஈவினிங் பூபதி மட்டும் தான் கார்ல போய் பிள்ளைகளை கூட்டிட்டு வருவானாம்” என்று தயங்கி தயங்கி சொல்லிவிட்டு ஏதாவது திட்டுவாங்களோ என்ற பயத்தில் தனது தலைக்கு மேல் இருந்த கண்ணாடியில் அருணாவின் முகத்தைப் பார்த்தான்

அருணா எதுவுமே பேசவில்லை தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்,, சற்றுநேரம் கழித்து “ ரொம்ப தாங்க்ஸ் குமார்” என்ற அவளது கரகரத்த குரலில் சொன்னாள்

குமார்க்கு பெருமை பிடிபடவில்லை, இன்னும் ஏதாவது செய்து மேடம் முகத்தில் இந்த சந்தோஷத்தை நிலைக்கவிடவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டான்,, அதோடு அருணாவின் வாயில் நன்றியுரைப்பது என்பது குதிரைக்கு கொம்பு முளைக்கும் சமாச்சாரம் என்றும் அவனுக்குத் தெரியும்
வீட்டை கார் நெருங்கியதும் “ குமார் பிள்ளைகளை எப்போ எப்படி பார்க்கிறது,, ஏதாவது வழியிருக்கா” என்று கேட்டாள் அருணா

“ ம் இருக்குங்க மேடம், சாயங்காலம் வரும்போது ரெகுலரா ஒரு ஐஸ்கிரீம் கடையில காரை நிறுத்தி பூபதி போய் மூனு பிள்ளைகளுக்கும் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்து கொடுப்பானாம், இல்லேன்னா சின்னப்பையன் வீட்டுக்கு வரமாட்டேன்னு அடம் பண்ணுவானாம் அதனால கண்டிப்பா கார் அங்கே கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நிக்கும் மேடம், அப்போ கரெக்டா நாம போன பிள்ளைகளை பார்க்கலாம்” என்று குமார் கூறியதும்

“ சரி குமார் நாளைக்கு போகலாம், உன் அண்ணன் கிட்ட கரெக்டா டைம் கேட்டு வச்சுக்க” என்று கூறிவிட்டு அருணா காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் போனாள்
மறுநாள் சத்யனின் பிள்ளைகளை பார்க்க அன்று இரவிலிருந்தே தயாரானாள்,, அஸ்வத்கிட்ட என்ன பேசனும், அபி என்னைப் பார்த்தால் என்ன சொல்வான்,, அந்த சின்ன வாலு எப்படி ஆண்ட்டி வந்தீங்கன்னு கேட்டா என்ன பதில் சொல்றது, என்று எல்லாவற்றுக்கும் முன்னாடியே தயாராக இருந்தாள் அருணா




மறுநாள் அலுவலகத்தில் அமர்ந்தவாறு அடிக்கடி எழுந்துவந்து ஜன்னலருகே நின்று கீழே நின்றிருந்த காரைப் பார்த்தாள், குமார் பூபதியுடன் ஏதாவது பேசி தகவல் சேகரிக்கிறானா என்ற ஆர்வத்தில் தான் பார்த்தாள், ஆனால் அவளுக்கு அப்படி எதுவும் தெரியவில்லை ,

தவிப்புடன் நின்றிருந்தவளுக்கு சரியாக மூன்றரை மணிக்கு குமாரிடம் இருந்து போன் வந்தது,, “ மேடம் ஸ்கூல் விட்டாச்சாம், பூபதி பிள்ளைகளோட கிளம்பிட்டானாம், நாம இப்போ போனாத்தான் சரியா இருக்கும்” என்று கூறியதும்

“ இதோ வர்றேன் குமார்” என்று கூறிவிட்டு பார்த்துக்கொண்டிருந்த வேலைகளை ஜிஎம்மை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்துவிட்டு அவசரமாக கீழே வந்து காரில் ஏறினாள்

குமார் வண்டியை எடுத்ததும் “ ஏன் குமார் நாம இப்படி போய் பசங்களை பார்க்கிறதால எதுவும் பிரச்சனை வந்துடாதே?” என்று சற்று கவலையுடன் கேட்டாள்

“ நீங்க பேசிட்டு வரப்போறீங்க,, இதுல என்னம்மா பிரச்சனை வரப்போகுது? எதுவும் ஆகாதும்மா” என்று உற்சாகத்தோடு குமார் சொன்னதும், அருணாவும் அதே உற்ச்சாகத்தோடு பிள்ளைகளை பார்க்க தயாரானாள்

சத்யனின் கார் நின்றிருந்த ஐஸ்கிரீம் பார்லர் அருகே காரை நிறுத்திய குமார் “ கார் நிக்குதும்மா வாங்க” என்று கதவை திறக்க, அருணா அவசரமாக இறங்கினாள், அவளுக்கு கிடைத்த இந்த பொன்னான நேரத்தை ஒரு நிமிடம் கூட வீணாக்க எண்ணமில்லை

பிள்ளைகள் மூவரும் பின்சீட்டில் இருக்க பூபதி ஐஸ்கிரீம் வாங்கி வர கடைக்குள் போயிருந்தான்,, குமார் பிள்ளைகள் இருந்த காரை திறக்க முயன்றான் கார் கதவு லாக செய்யப்பட்டிருந்தது

அதற்குள் உள்ளே இருந்த அனிருத் அருணாவை பார்த்துவிட்டான்,, “ டேய் அண்ணா இங்கபாருடா அருணா ஆன்ட்டி” என்று அஸ்வத்தை உலுக்க, அவனும் அபியும் அருணாவை பார்த்துவிட்டு “ ஆமாடா ஆன்ட்டி தான்” என்று உற்சாகமாக கூவி காரின் கண்ணாடியை இறக்க,,

அதற்க்காகவே காத்திருந்தார் போல் அருணா குனிந்து “ ஹாய் குட்டிஸ் என்னப் பண்றீங்க?” என்று கேட்க

“ பார்த்தா தெரியலையா ஆன்ட்டி ஐஸ்கிரீம்காக வெயிட் பண்றோம்” என்று எல்லோருக்கும் முந்திக்கொண்டு அனிருத் பதில் சொன்னான்,, அப்போது குமாருடன் பூபதியும் கையில் ஐஸ்கிரீம் கோன்களுடன் வந்து பிள்ளைகளிடம் கொடுத்து விட்டு, “ வணக்கம் மேடம்” என்று கூறிய பூபதி காரின் லாக்கை விடுவித்துவிட்டு கதவை திறந்துவிட்டான்

உள்ளே ஏறியமர்ந்த அருணாவுக்கு அது சத்யனின் கார் என்பதுகூட மறந்து விட்டது, பிள்ளைகள் அருகில் அமர்ந்ததும் இந்த இரண்டு நாள் தவிப்புக்கும் வடிகாலாக அவர்களை சேர்த்து அணைத்துக்கொண்டாள், தான் ஏன் இப்படி ஆனோம் என்றுகூட அவளுக்கு புரியவில்லை, அவளை பொருத்தவரையில் அந்த மழலைச்செல்வங்கள் அவளுக்கு புதியதோர் உலகையும் அதில் நல்லதோர் பாதையை வழிகாட்டி,, அந்த பாதையில் எப்படி பயணம் செய்யவேண்டும் என்று ஒரு வாழ்க்கையை அறிமுகம் செய்துவைத்திருந்தனர்

மூவரும் மாற்றி மாற்றி ஏதோதோ பேச அருணா முகத்தில் சந்தோஷம் கொப்புளிக்க அதை கண்கள் விரிய கேட்டுக்கொண்டிருந்தாள்

அவர்களின் கைகளில் இருந்த ஐஸ்கிரீமில் கால்வாசியை அருணாவின் மேல் பூசியிருந்தனர்,, பாதி ஐஸ்கிரீம் தின்ற பிறகு அனிருத் திடீரென்று “ டேய் அபி ஆன்ட்டிக்கு ஐஸ்கிரீம் தராமலேயே சாப்பிடுறோமேடா?” என்று பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னதும் மற்றவர்களும் “ ஆமாடா” என்றனர் வருத்தமாக

அனிருத் தன் கையில் மிச்சமிருந்ததை அருணாவின் வாயருகே எடுத்துச்சென்று “ கொஞ்சம் சாப்பிடுங்க ஆன்ட்டி, இல்லேன்னா எங்களுக்கு வயித்த வலிக்கும்” என்றான் 


அருணா யோசிக்கவே இல்லை, அனிருத்தின் எச்சில் ஐஸ்கிரீம்மை அவன் கையோடு தன் வாயருகே எடுத்துச்சென்று கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் அவனுக்கு கொடுத்தாள்,

அருணாவுக்கு கண்களில் கண்ணீர் முட்டியது, எங்கே பிள்ளைகள் கவனித்து விடப்போகிறார்களோ என்ற சங்கடத்துடன் புடவையை சரிசெய்வது போல் குனிந்து கர்சீப்பால் தன் கண்களை துடைத்துக்கொண்டாள்,, அதையெல்லாம் கவனித்த குமாருக்கும் கண்கள் கலங்கியது

அதன்பிறகு அவர்கள் பேசுவதை கேட்டபடி அமர்ந்திருந்தாளே தவிர அவளை ஒரு வார்த்தை கூட பேசவிடவில்லை, அவளிடம் ஒரு கேள்வியை கேட்டு அவள் பதில் சொல்லும்முன் மற்றவன் அதற்கு பதில் சொல்வதுமாக ஒரு மணிநேரத்து பொழுது ஒரு விநாடியாக கரைந்தது

பூபதி கதவை தட்டி “ அம்மா நேரமாச்சு பிள்ளைகளை வீட்டுல கொண்டு போய் விடனும்” என்று தயக்கத்துடன் சொல்ல

“ ம் சரிப்பா” என்று கனத்த மனதுடன் அருணா காரைவிட்டு இறங்க முயன்றபோது அனிருத் அவள் இடுப்பை கட்டிக்கொண்டு “ போறீங்களா ஆன்ட்டி” என்று கேட்டதும் அருணாவுக்கு கண்ணீரே வந்துவிடும் போலிருக்க, அனிருத்தை அனைத்துக்கொண்டாள்

அவளது முகத்தை கவனித்த அஸ்வத் “ ஆன்ட்டி கவலைபடாதீங்க நாளைக்கும் நாங்க இங்கேதான் வருவோம்” என்று தகவல் சொல்ல,, “ ஆமாம் ஆன்ட்டி நீங்களும் நாளைக்கு வாங்களேன் ப்ளீஸ்” என்று அபியும் கவலையாக கூறினான்

“ வர்றேன் செல்லங்களா,, கண்டிப்பா வர்றேன்,, அதைவிட எனக்கு வேற எதுவும் வேலை இல்லை” மூவருக்கும் முத்தமிட்டு விட்டு காரிலிருந்து இறங்கினாள்

ஜன்னல் வழியே தலையை நீட்டிய அனிருத் “ ஆன்ட்டி உம்மா” என்றதும் அருணா குனிந்து அவனுக்கு கன்னத்தை காட்ட, தனது ஐஸ்கிரீம் வாயால் அழுத்தி முத்தமிட்டான் அனிருத்

பிள்ளைகளின் கார் கண்ணைவிட்டு மறையும் வரை பார்த்துகொண்டிருந்த அருணா அதன்பிறகு தனது காரில் ஏறினாள்,

வீட்டுக்கு வந்த பிள்ளைகள் மறைக்காமல் நடந்தவகைகளை சொல்ல, பூபதி நடந்தது தற்செயலானது என்று கூறியதும் வீட்டினர் அதற்கு மேல் விஷயத்தை கிளரவில்லை

ஆனால் அருணா தினமும் பிள்ளைகளை சந்திக்கிறாள் என்றதும், அதுவரையில் விஷயம் எட்டப்படாத சத்யனுக்கும் விஷயம் தெரிந்தது, சத்யன் உஷாரானான், மதியவேலைகளில் அவனே ஸ்கூலுக்கு போய் பிள்ளைகளை வேறுப்பாதையில் அழைத்துவந்தான், முக்கியமாக ஐஸ்கிரீம் கடையை மாற்றினான்

கிட்டத்தட்ட ஒருமாதம் வரை இதேநிலை தொடர,, பிள்ளைகளே அருணாவைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்,, அதிலும் அனிருத் “ டாடி அந்த ஆன்ட்டி ரொம்ப நல்லவங்க டாடி பாவம் எங்களுக்காக வெயிட் பண்ணுவாங்க” என்று சத்யனிடம் கொஞ்சலாக கெஞ்சினான்

சத்யனின் முகம் இறுகி அமைதியாக வரவும், “ அப்பா கோபமா இருக்கார் யாரும் எதுவும் பேசாதீங்க” என்று மான்சி தன் பிள்ளைகளை அடக்கிவைத்தாள்

மான்சிக்கு அருணாவை நினைத்து பரிதாபமாகத்தான் இருந்தது,, ஆனால் சத்யனை எதிர்த்துப் பேசி பழக்கமில்லாததால் தவிப்புடன் அமைதியாக இருந்தாள்

அருணா பிள்ளைகளை பார்க்கமுடியாது ஸ்கூலுக்கு வந்து மதியவேளையில் சாப்பிடும் போது தள்ளிநின்று பார்த்துவிட்டு போனாள், கிட்டே நெருங்கினாள் விஷயம் தெரிந்து சத்யன் பள்ளிகூடத்தையே கூட மாற்றிவிடுவானோ என்ற அச்சம் காரணமாக தள்ளிநின்று பார்த்து பிள்ளைகளை ரசித்தாள் 


நாளுக்கு நாள் அவள் தவிப்பு அதிகமானது,, அவள் கண்களில் இருந்த ஏக்கத்தை பார்த்து “ எப்படியிருந்தவங்க இன்னிக்கு இந்த பிள்ளைகளுக்காக இவ்வளவு கஷ்டப்படுறாங்களே” மனம் குமுறிய குமார் தான் அருணாவுக்கு அந்த யோசனையை சொன்னான்

அவன் கோடுதான் போட்டு காட்டினான், அருணா உடனே பலவற்றையும் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவோடு ஒரு மாலைவேளையில் சத்யனின் வீட்டு கதவை தட்டினாள் அருணா

அவளைப் பார்த்து அனைவரும் அதிர்ந்தாலும் ராஜதுரை மட்டும் நிதானமாக அவள் அமர சோபாவை காட்டினார்

அவரைப் பார்த்து கைகூப்பி விட்டு சோபாவில் அவள் அமர்ந்ததும் சத்யன் பெற்ற செல்வங்கள் மூவரும் ஓடிவந்து அவளருகில் அமர்ந்து கொண்டனர், அனிருத் ஒருபடி மேலே போய் உரிமையோடு அவள் மடியில் ஏறியமர்ந்தான்
குழந்தைகளைப் பார்த்ததும் அருணாவுக்கு அவ்வளவு நேரம் இருந்த மன இறுக்கம் காணமல் போக, மூவரையும் கண்ணீரோடு கொஞ்ச ஆரம்பித்தாள், அந்த வீட்டில் இருந்த அனைவரும் வெறும் பார்வையாளர்களாக நிற்க, அப்போது தான் மாடியில் இருந்து இறங்கி வந்த சத்யன் அவளுக்கு எதிர் சோபாவில் அமர்ந்தான்

மான்சி பூஜையறையின் சுவற்றோடு ஒட்டி நிற்க,, பூங்கோதை சமையலறையின் வாசலில் நின்றுகொண்டு என்ன நடக்கப் போகிறதோ என்ற பதட்டத்துடன் பார்த்திருந்தாள்

அருணாவை வெகு நிதானமாக ஏறிட்ட சத்யன் “ என்ன அருணா என்ன விஷயம், வீடுதேடி வந்திருக்க” என்று பேச்சை தொடங்கி வைத்தாலும் அருணாவுக்கு அதைப்பற்றிக் மேலும் விவாதிக்க தயக்கமாக இருந்தது, ஆனால் வந்த காரியம் முக்கியமானது தயங்கினால் முடியது என்று பேச தொடங்கினாள்

“ சத்யா நான் எதுக்கு வந்திருக்கேன்னு மத்தவங்களுக்கு தெரியலைன்னாலும் நீ ஓரளவுக்கு கெஸ்ப் பண்ணிருப்ப, தொழில் மட்டும்தான் வாழ்க்கைன்னு வாழ்ந்த அருணா இப்போ இல்லை சத்யா, நான் இப்போ தனிமரமா இருக்கேன், இந்த பிள்ளைகளோட அன்பால ஒரு தோப்பாகனும்னு நெனைக்கிறேன் சத்யா, எனக்கு இதுவரைக்கும் கெஞ்சிப் பழக்கமில்லை ஆனா உன்கிட்ட கெஞ்சி கேட்கிறேன் சத்யா, நான் இனிமேல் வாழுற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேனும்” என்று அருணா சொல்ல

அவளை பார்வையால் துளைப்பது போல் பார்த்த சத்யன் “ அதனால என்ன இப்போ ?” என்று அக்கரையற்ற வெற்று குரலில் கேட்கும் போதே மான்சியிடமிருந்து மெலிதாக ஒரு கேவல் வர சத்யன் அவசரமாக மான்சியின் பக்கமாக திரும்பினான்,



மான்சி சுவற்றில் சாய்ந்தவாறு மார்புகள் விம்மி தனிய சிறு கேவலாய் வந்து அழுகையாய் வெடிக்க ஆரம்பிக்க, சத்யன் பதட்டத்துடன் ஓடிச்சென்று அவளை இழுத்து அணைத்துக்கொண்டு “ என்னடா கண்ணம்மா,, ஒன்னுமில்லடா நான் இருக்கேன்ல” என்று அவள் முதுகை வருடி ஆறுதல் படுத்த முயன்றான்,, அவனுக்கு மான்சியின் மனநிலை புரிந்தது, எங்கே அருணாவால் கிடைத்த சொர்க்கம் அவளாலேயே பறிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் நடுங்கி கொண்டிருந்தாள்

சத்யன் அவளை அணைத்தவாறே சோபாவில் வந்து அமர்ந்து அருணாவை எரித்துவிடுவது போல் பார்த்து “ இதோபார் அருணா உன்னோட பிளான் எதுவாயிருந்தாலும் அது என்னிடம் செல்லாது,, உனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த உறவுமில்லை, நீ வெளியே போகலாம்” என்று கோபமாய் பேச

அருணாவின் அருகே இருந்த பிள்ளைகள் பயத்துடன் சத்யனை பார்த்ததும், அதுவரை ஒதுங்கி அமர்ந்திருந்த ராஜதுரை எழுந்துவந்து “ சத்யா என்ன இது, பசங்க பயப்படுறாங்க பாரு’’ என்று கூறிவிட்டு ஒரு வேலைக்காரனை அழைத்து பிள்ளைகளை தோட்டத்திற்கு அழைத்துச்சென்று விளையாட வைக்குமாறு கூறி அனுப்பிவைத்தார் 



No comments:

Post a Comment