Tuesday, September 29, 2015

மான்சியின் மவுனம் - அத்தியாயம் - 7


“ அம்மா அதெல்லாம் வேனாம், மொதல்ல முன்னுக்கு வர்ற வழியப் பார்க்கனும், அப்புறமாதான் மத்ததை பத்தி யோசிக்கனும், அதுவரைக்கும் எதையும் பேசாதே, இப்போ கடையைத் திறந்து ஏவாரத்தை பாரு , நான் கொஞ்சநேரம் தூங்குறேன் ” என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் சத்யன்

மறுநாள் காலை சீக்கிரமாகவே எழுந்த சத்யன் குளித்துவிட்டு கடையை திறந்து வியாபாரத்தை அவன் பார்த்தான், பேச்சி மகனுக்காக சமையல் செய்துகொண்டு இருந்தாள்,, ஆனால் பொருட்கள் வாங்க வரும் ஆட்கள் கேட்டதில் முக்கால்வாசி பொருட்கள் கடையில் இல்லை என்றதும் வீட்டுக்குள் போய் “ என்னம்மா கடையில ஒன்னுமே சரக்கு இல்லை, வர்றவங்க எல்லாம் சும்மாவே திரும்பி போறாங்க, ஏன்மா சரக்கு வாங்கிப் போட பணம் இல்லையா?” என்று கேட்டான்

குழம்பை தாளித்துக்கொண்டிருந்த பேச்சி “ பணம் இல்லாம இல்ல சத்தி, ஆனா டவுனுக்குப் போய் சரக்கு எடுத்துட்டு வரதான் ஆள் இல்லை, என்னால அடிக்கடி போகமுடியலை சத்தி, அதான் சும்மா இருக்குறதை வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்” என்று சலிப்புடன் கூறியதும்..

சத்யனுக்கு அந்த யோசனை வந்தது, பக்கத்தில் எந்த கடைகளும் இல்லாத பட்சத்தில் நிச்சயம் வியாபாரம் நன்றாக நடக்கும், வெளியே வேலை தேடி போவதை விட, இருக்கும் பணத்தில் இன்னும் பொருட்களை வாங்கி கடையில் ஏத்தி வியாபாரத்தை கவனித்தால் என்ன என்ற யோசனை வர, அதை உடனே பேச்சியிடம் சொன்னான்,



ஏற்கனவே மகன் கடையை பார்த்துக்கொள்ள மாட்டானா என்று பலநாட்கள் தவித்த பேச்சிக்கு சத்யனின் வார்த்தைகள் காதில் தேனாக வந்து பாய்ந்தது, தனது சேமிப்புப் பணத்தை எல்லாம் திரட்டி மகனிடம் கொடுக்க, சத்யன் டவுனுக்குப் போய் தேவையானப் பொருட்களை வாங்கிக்கொண்டு ஒரு டெம்போவில் வந்து இறங்கினான்,

சத்யனின் முதல் யோசனை வெற்றிகரமாக அவனை ஜெயிக்க வைத்தது, அதன்பிறகு அவனுக்கு தோல்வி என்பதே இல்லாமல் படிப்படியாக முன்னேற்றம் தான் வந்தது,, ஏழை என்ற நிலை மாறவேண்டும் என்ற அவனது வைராக்கியம் முன்னேற்றப் பாதையில் அழைத்துச்சென்றது

அவனது பழைய நண்பர்கள் சிலர் அவனுக்குப் பெரிதும் உதவினார்கள், ஏளனமாகப் பார்த்தவர்களை சத்யனே ஒதுக்கி தள்ளினான்,

அவனது எண்ணமெல்லாம் மான்சியின் கண்முன் வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டவேண்டும் என்பதுதான், அவனுடைய பழக்கவழக்கங்களை கூட மாற்றிக்கொண்டான், ஞாயிறு அன்று கடையை மூடிவிட்டு அன்றுமட்டும் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றினான்,

வியாபாரத்தை விரிவாக்கிய அடுத்த மாதமே வீட்டு ஹாலுக்கும் கடைக்கும் இடையே இருந்த சுவற்றை இடித்து கடையை பெரிதாக்கினான், பூஜையறையும் சமையலறையும் மட்டும் கீழே இருக்க, தங்கவும் படுத்துக்கொள்ளவும் வீட்டின் மாடியில் ஒரு அறையைக் கட்டிக்கொண்டான்,, நண்பர்களில் இருவரை வேலைக்கு வைத்துக்கொண்டான், கம்பியூட்டர் வைத்து பில் போடும் அளவிற்கு கடையின் முன்னேற்றம் இருந்தது,

இதற்கான முதலீடு பேச்சியின் சொற்ப நகைகளும், சத்யனின் திருமணத்திற்கு என்று சிறுகச்சிறுக சேர்த்த பணமும் தான்,

புதிய சிம்கார்டின் நம்பரை வேல்முருகனுக்கு மட்டுமே கொடுத்தான், எப்போதாவது கடையில் இருக்கும் ஒரு ரூபாய் காய்ன் போனுக்கு சாந்தா பேசுவாள், சத்யன் இரண்டொரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு, பேச்சியிடம் போனை கொடுத்துவிடுவான், நாளடைவில் பேச்சிகூட பேசுவதை தவிர்த்தாள், தன் மகனை பிடிக்கவில்லை என்ற மான்சியின் மீது இருந்த கோபமே இதற்கு காரணம்

அவனுடைய முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியது மான்சி அவனைப் பற்றி கூறிய வார்த்தைகள் தான், மான்சி இன்னேரம் தனக்கு பொருத்தமான வேறு யாரையாவது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பாளோ? என்ற எண்ணம் மனதில் வரும்போதெல்லாம் அவனையே அவன் வெறுத்தான்,

“ எனது குறைகளை கண்டுபிடித்து,,

“ நீ ஏளனம் செய்தபிறகு தான்,,

“ என் முன்னேற்றத்தின் பாதையையே,,

“ நானே கண்டுகொண்டேன்”

“ இதைத்தான் சொன்னார்களோ,,

“ ஆணின் வளர்ச்சிக்கு பின்னால்,,

“ பெண் இருக்கிறாள் என்று! 

சத்யன் கையெழுத்துப் போட்டுவிட்டு வெளியே போனதும், சாந்தா முந்தானையை எடுத்து வாயில் அடைத்து விம்மலை கட்டுப்படுத்திக்கொண்டு அறையை விட்டு வெளியேற, ஆராவமுதன் தன் வேதனையை அழுகையாக காட்டாமல் தனது இயலாமையை அமைதியில் காட்டினார்

இருவரையும் கண்டுகொள்ளாமல் சத்யன் கையெழுத்துப் போட்ட பத்திரங்களையும், அதற்காக தனக்கு உதவிய விஷத்தையும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறி தனது அறைக்குப் போனாள்

பத்திரத்தை பத்திரமாக வைத்துவிட்டு, பாத்ரூமுக்கு போய் பாய்ஸ்ன் பாட்டிலை திறந்து டாய்லெட்டில் கொட்டிவிட்டு பாட்டிலை குப்பை கூடையில் போட்டுவிட்டு வெளியே வந்தாள், தனது மொபைல எடுத்து தனது தோழிக்கு போன் செய்தாள் ,

அவள் உடனே எடுக்க “ ஏய் சரண் எல்லாம் முடிஞ்சு போச்சுடி” என்று மான்சி சொன்னதும்,,

எதிர்முனையில் இருந்த சரண்யாவுக்கு மான்சியின் இந்த வார்த்தை பெரும் உற்ச்சாகத்தை கொடுத்தது, “ கங்ராட்ஸ் மான்சி,, ஒழுங்கா கையெழுத்துப் போட்டானா? இல்ல பணம் சொத்து இப்படி ஏதாவது கொடுத்தால்தான் கையெழுத்துப் போடுவேன்னு மிரட்டினானா?” என்று கேட்க

“ இல்லடி அதெல்லாம் எதுவும் கேட்கலை, எனக்கும் இதுல சம்மதம்னு, சொல்லிட்டு கையெழுத்துப் போட்டுட்டு உடனே போயிட்டான்” என்று மான்சி சொன்னாள், அவள் குரலில் இருந்த வெறுமை அவளுக்கே உறுத்தியது,

“ நெஜமாவா சொல்ற?,, பணமும் சொத்தும் கேட்கவே இல்லையா? இப்பத்தான் நீ இன்னும் ஜாக்கிரதையா இருக்கனும், அவன்மேல பரிதாபத்தை வரவழைக்க கூட இந்தமாதிரி ஒரு சீன் போட்டிருக்கலாம்,” என்று ஆச்சர்யமான குரலில் சரண்யா சொல்ல..

“ இல்ல அந்தமாதிரி எனக்குத் தோணலை, இனிமேல் வரமாட்டான்னு தான் நெனைக்கிறேன் ” என்று மான்சி கூறியதும்

“ சரி சரி எதுவோ சனியன் ஒளிஞ்சுதுன்னு விடுடி,, ஆனா நீ அவன் நம்மளையெல்லாம் நடுரோட்டுல விட்டுட்டு போனப்பவே அவனை விரட்டியிருந்தா இப்போ உன் வாழ்க்கையிலயே குறுக்கே வந்திருக்க மாட்டான்,, ஆனாலும் அவனுக்கு எவ்வளவு கர்வம்டி மான்சி, உன் அழகைப் பார்த்து அவனவன் ஜொள்ளான ஜொள்ளு ஊத்துறான், இவன் என்னடான்னா அசால்ட்டா நடுரோட்டுல விட்டுப்போய்ட்டான், எனக்கு அப்பயிருந்துதான் அவனை சுத்தமா புடிக்கலை, கடைசில அவனே உனக்கு மாப்பிள்ளையாயிட்டான் நான் அப்பவே சொன்னேன் ஏதாவது பிளான் பண்ணி அவனை விரட்டுன்னு,, நீதான் எங்கப்பா, எங்கம்மா, எங்க அத்தைன்னு ஏதேதோ சொல்லி மழுப்பிட்ட ” என்று சரண்யா மான்சியின் மீதே குற்றம் சுமத்த..

அவளை தனது அவசரகுரலால் தடுத்த மான்சி “ ஏய் எனக்கு இவனைத்தான் பிடிக்காது, எங்க அத்தையை ரொம்ப பிடிக்கும், அதனாலதான் இவனை அப்பவே விரட்டலை, அத்தோட அவனே ஏதாவது ஒரு விஷயத்துல மாட்டுவான்னு வெயிட் பண்ணேன், அப்படி எதுவும் நடக்கலை, கடைசில் என் வாழ்க்கைக்குள்ளயே நுழைஞ்சுட்டான், இப்போ இந்தமாதிரி எல்லாம் பண்ணவேண்டியதா போச்சு” என்று மான்சி சலித்துக்கொண்டாள் 

“ சரி எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? அது போதும்,, இன்னிக்கு ஈவினிங் எங்க எல்லாருக்கும் ட்ரீட் குடுக்கனும், அதுவும் எனக்கு ஸ்பெஷல் ட்ரீட் வேனும், ஏன்னா உனக்கு கல்யாணம் ஆன மறுநாளில் இருந்தே நான்தான் இதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணேன், சரியா?” என்று சரண்யா சொல்ல

“ ம் சரி சரண், நான் இன்னிக்கு காலேஜ் வரலை, ஈவினிங் வந்து வாக்கர்ஸ் பார்க் கிட்ட வெயிட் பண்றேன், நீ எல்லா ப்ரண்ட்ஸ்க்கும் சொல்லி கூட்டிட்டு வந்துடு” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து படுக்கையில் விழுந்தாள்

தலையணையில் முகத்தை புதைத்துக்கொண்டு அமைதியாக கவிழ்ந்து கிடந்தாள் மான்சி, ஆனால் அவள் மனம் அமைதியாக இல்லை, நேற்று சத்யன் இவளை நேருக்குநேர் பார்த்துக் கேட்ட கேள்விகள் எல்லாம் மனதில் படமாக ஓடியது, எவ்வளவு திமிர் அவனுக்கு குடிச்சிட்டு வந்ததுக்கு மன்னிப்பு கூட கேட்காம, என்னையவே கேவலப்படுத்தி பேசிட்டானே, என்று குமுறிய மனதை அடக்கமுடியாமல் படுக்கையில் புரண்டு மல்லாந்து படுத்தாள்,

முதல் நாள் இரவு நடந்தது நினைவுக்கு வந்தது, மழையில் நனைந்தபடி வந்தவன், என்கிட்ட பர்மிஷன் கேட்டுட்டுத் தானே ரூமுக்குள்ள படுக்கனும், அதவிட்டுட்டு என்னமோ ரொம்ப நல்லவன் மாதிரி கேஷுவலா பாயைப் போட்டு படுக்குறானே, அதான் நைட்டு முழுக்க குளிரில் நடுங்க விட்டேன், என்னைய ரொம்ப லேசா நெனைச்சிட்டான் போலருக்கு, ஆனால் அந்த குளிரில் சத்யன் எப்படி தூங்குவான் என்று அன்று இரவு வெகுநேரம் விழித்திருந்தது இப்போது நினைவில் வர, அதை கஷ்டப்பட்டு ஒதுக்கினாள், அவனுக்கு சரியான பனிஷ்மெண்ட் தான் அது என்று தனக்குத்தானே தோள்தட்டிக் கொண்டாள்,

ஆனா அவன் முன்னாடி நான் நிர்வாணமா வந்தாகூட என்னை திரும்பி பார்க்கமாட்டேன்னு சொல்றானே, நான் என்ன அவ்வளவு கேவலமாவா இருக்கேன்? நான் ஒருமுறை திரும்பி பார்த்து சிரிக்கமாட்டேனான்னு என் காலேஜ்ல எவ்வளவு பசங்க ஏங்கி இருக்காங்க, இவன் என்னடான்னா என் நிர்வாணம் கூட அவனை அசைக்காதுன்னு சவால் விடுறானே?, இவன் என்ன ரிஷியா?, மான்சிக்கு இதை நினைக்கும்போதே உடம்பெல்லாம் பற்றி எரிவது போல் இருந்தது, நான் அவ்வளவு அசிங்கமாவா இருக்கேன் என்று இரவெல்லாம் கேட்ட கேள்வியை இப்போதும் தன்னையே கேட்டுக்கொண்டாள்

ஏதோ நினைத்துக்கொண்டு கட்டிலில் இருந்து வேகமாக தாவி எழுந்து டிரசிங் டேபிள் கண்ணாடி முன்பு நின்று தனது உடலை வளைத்து நெளித்து நின்று பார்த்தாள், ‘நல்லா தானே இருக்கேன்?, அப்புறமா ஏன் அப்படி சொன்னான்? உண்மையாவே அவன் கண்ணுக்கு நான் அழகா தெரியலையா? ச்சே அவன்தான் பொறுக்கின்னு அவன் வாயாலேயே ஒத்துக்கிட்டானே? அப்புறம் என்னோட அழகு அவன் கண்ணுக்கு எப்படி தெரியும்? இவ்வளவு பொறுக்கியா இருந்தவன் எப்படி இந்த ரூம்ல என் முகத்தை கூட பார்க்காம இருந்தான்?

' வெட்கமில்லாம என்கிட்டயே சொல்றானே? நான் பொண்ணுங்க சுகத்தை அறியாதவன் இல்லைன்னு,, ராஸ்கல் அப்படியே அவன் கன்னத்துல அறையாம விட்டேனே அதுதான் தப்பு ,, பொறுக்கி ராஸ்கல் என்னை பார்க்க பிடிக்கலைன்னு சொன்ன முதல் ஆள் இவன்தான்,, சத்யனின் நினைப்பிலேயே மான்சியின் கண்கள் சிவந்தது 

 நாமதான் ரொம்ப அழகுன்னு கர்வம் அவனுக்கு, உயரமா அழகா இருந்தா மட்டும் போதுமா? கொஞ்சம் கூட அறிவே இல்லாதவன், என்று மான்சி குமுறும் போதே ரங்கேஷின் நோஞ்சான் உடம்புக்கும் சத்யனின் கம்பீரத்திற்கும் ஒப்பிட்டுப்பார்த்தது அவள் மனது, ச்சே இவனப் போய் அப்பா ஏன் செலக்ட் பண்ணாரு?, முதல் மாப்பிள்ளையை விட நாமதான் கம்பீரமா இருக்கோம்னு திமிர், அதனால்தான் என்னையே புடிக்கலைன்னு முதல்நாள் நைட்டே நாயோட ஒப்பிட்டு பேசி என்னை அவமானப்படுத்தினான்,,

நானா இவன் கால்ல விழுவேன்னு எதிர்பார்த்தான் போல,, ஆனா நான் யாரு? மான்சி, இவனோட திமிர், கர்வம், அலட்சியம், கோபம், எல்லாம் என்கிட்ட செல்லாது, அதான் ஓரேடியா எல்லாத்தையும் முடிச்சுக்கிட்டேன், இப்போ எல்லாம் போச்சேன்னு அழுதுகிட்டே போவான், என்று அவள் மனம் கொக்கரிக்கும் போதே... நீயும் தேவையில்லை உன் பணமும் தேவையில்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டு, ஒரு நிமிர்வுடன் கையெழுத்தைப் போட்டுவிட்டு தனது உடைமைகளோடு கம்பீரமாக வெளியேறிய சத்யன் அவள் கண்முன் வந்தான், ச்சே என்று தலையை உதறினாள்

வேகமாக போய் அவன் துணிகள் வைத்திருந்த கபோர்டை திறந்து பார்த்தாள், திருமணத்திற்கென சாந்தா வாங்கிக்கொடுத்த உடைகளும், சத்யன் தாலி கட்டியதும் சாந்தா வற்புறுத்தி கொடுத்து மான்சி அவன் கையில் அணிவித்த மோதிரமும் இருந்தது, மான்சி அந்த மோதிரத்தை எடுத்துப்பார்த்தாள், முட்டை வடிவில் இருந்த மோதிரத்தின் நடுவே இதயம் செதுக்கப்பட்டு அதில் பொடிப்பொடியாக சிவப்பு நிற கற்கள் பதிக்கப்பட்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது

சிறிதுநேரம் அந்த மோதிரத்தையே பார்த்தவள், இதை எப்போ கழட்டி வச்சிருப்பான்? கல்யாணம் ஆனா மறாவது நாளேவா? அல்லது இன்னிக்கு காலையில கிளம்பும்போதா? பெரிய இவரு மாதிரி மோதிரத்தை வச்சுட்டு போய்டான், போயேன்டா நான் உனக்கு போட்ட மோதிரம் என்கிட்டயே வந்துருச்சு, என்று எண்ணியபடி அந்த மோதிரத்தை தனது விரலில் மாட்டினாள் எந்த விரலுக்கும் சரியில்லாமல் லூசாக இருந்தது, பின்ன அவன் விரல் எருமை மாடு மாதிரி இருக்குமே அவன் மோதிரம் எனக்கெப்படி சரியாயிருக்கும் என்று நினைக்கும்போதே அந்த மோதிரம் ரங்கேஷ்க்காக செய்தது என்று ஞாபகம் வர, ‘அந்த நோஞ்சான் பயலுக்கும் இது லொட லொடன்னு தான் இருந்திருக்கும்’ என்று நினைத்து புன்னகையில் அவள் இதழ்கள் விரிந்தது

கட்டிலில் போய் அமர்ந்து இன்டர்காமில் மஞ்சுவை அழைத்தாள், அடுத்த சில நிமிடங்களில் மஞ்சு அவளெதிரில் நிற்க்க, “ கீழே நூல் ஏதாவதுஇருந்தா எடுத்துட்டு வா மஞ்சு” என்றாள்

மஞ்சு போய் சில விநாடிகளில் நூலுடன் வந்தாள், மான்சி வாங்கிக்கொண்டு “ சரி நீ போ” என்றாள்

நூலை மோதிரத்தில் சுற்றினாள், எவ்வளவு நூல் சுற்றியும் மோதிரம் அவளின் வெண்டைபிஞ்சு விரலுக்கு லூசாகவே இருந்தது, ச்சே என்று என்ன இது? என்று எரிச்சலுடன் கட்டிலில் கவிழ்ந்து விழுந்தாள்,

அவளுக்கென்று அவ்வளவு நகைகளும் மோதிரங்களும் இருக்கும் போது, இந்த மோதிரத்தை மட்டும் போட்டே ஆகவேண்டும் என்று ஏன் நினைக்கிறோம் என்று அவளுக்குப் புரியவே இல்லை, அவள் நினைப்பில் இருந்தது அவன் அலட்சியமாக கழட்டி எறிந்ததால் அந்த மோதிரம் தன்னிடம் முக்கியத்துவம் பெற்றுவிட்டதாக எண்ணினாள் 



சட்டென்று ஒரு யோசனை தோன்ற, எழுந்து அமர்ந்து தன் கழுத்தில் இருந்த மெல்லிய செயினை வெளியே எடுத்தாள், அதன் கொக்கியை கழட்டி அதில் அந்த மோதிரத்தில் நூலை பிரித்துவிட்டு செயினில் கோர்த்து மறுபடியும் கழுத்தில் மாட்டிக்கொண்டாள், ஸ் யப்பா என்று மோதிரம் பிரச்சனைக்கு தீர்வு கண்ட நிம்மதியுடன் குனிந்து செயினை பார்த்தாள், அப்போதுதான் அந்த செயினோடு வெளியே வந்து கிடந்த தாலிச்செயின் கண்ணில் பட்டது, தாலியை கையில் எடுத்து அதையே பார்த்தாள்,

‘ அவனுக்கும் எனக்கும் தான் எல்லாம் முடிஞ்சு போச்சே, இப்போ இதை என்னப் பண்றது? கழட்டி வைக்கனுமா? என்று நினைத்தவள், அடிவயிற்றில் சில்லென்று ஏதோவொன்று உருவாகி ரத்தத்தில் கலக்க, குப்பென்று அவள் உடல் சிலிர்க்க தாலியை உள்ளங்கையில் வைத்து அழுத்திப் பற்றிக்கொண்டு கட்டிலில் கவிழ்ந்து படுத்துக்கொண்டாள்

அந்த தாலியில் இருந்த அம்மையப்பனின் உருவம் அவளது உள்ளங்கையில் பதியும் அளவிற்கு இறுக்கமாய்ப் பற்றியிருந்தாள், ஏன் இதைபோய் கழட்டனும் அது உள்ளதானே இருக்கப் போகுது’ என்று அப்படியே கண்ணை மூடியவள் தூங்கிப் போனாள்

இப்பவும் அது தீராத பந்தம் என்று அவளின் பகைகொண்ட மனதுக்கு புரியவில்லை, அவளைப் பொருத்தவரையில் சத்யன் அவளை ஒவ்வொருமுறையும் செய்த அலட்சியமும் பேசிய பேச்சும் மட்டுமே எல்லாவற்றுக்கும் காரணம் என்று நினைத்தாள், ஆனால் இருவரின் விரோதத்திற்கும் பின்னனி என்ன என்று இருவரும் ஒரு நிமிடம் யோசித்திருந்தாலும் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கலாம்,

இவ்வளவு நேரம் அவளது சிந்தனையில் ஓடிய சம்பவங்களை சற்றேனும் சீர்தூக்கிப் பார்த்திருந்தாள் கூட தனக்கு இப்போது என்ன தேவையென்று புரிந்திருக்கும், இது திருமண பந்தத்தால் ஏற்பட்ட உரிமையா? அல்லது அவன் தனக்கே தனக்கு மட்டும் என்ற பொறாமையா? என்று மான்சிக்கு இப்போது கூட புரியாதது அவளின் துரதிர்ஷ்டம்தான் , அவளுக்கு அவளே போட்டுக்கொண்ட மாயவேலி இப்போது அவளையே சிறைவைத்து விட்டது என்று இன்னமும் புரியாமல், சத்யனை நிரந்தரமாக அனுப்பிவிட்ட நிம்மதியில் உறங்கினாள்

நன்றாக உறங்கியவளை மாலை ஐந்து மணிவாக்கில் மஞ்சுதான் வந்துதான் எழுப்பினாள், எழுந்திருக்கும் போதே பசி வயிற்றைக் கிள்ள, “ ஏன்டி மஞ்சு மதிய சாப்பாட்டுக்கு கூட எழுப்பலை, பசி உயிர் போகுது” என்று கூறியபடி கட்டிலில் இருந்து இறங்கினாள்

“ இல்ல சின்னம்மா, மதியம் சாப்பாடே செய்யலை, அம்மா அவங்க ரூம்ல அழுதுகிட்டே இருந்தாங்க, சமையல்காரம்மா போய் என்ன சாப்பாடு செய்யனும்னு கேட்டப்ப, எதுவுமே செய்யவேண்டாம்னு சொல்லிட்டாங்க, அய்யாவும் ரூம்ல இருந்து வெளியவே வரலை, நாங்கல்லாம் கூட சாப்பிடவே இல்லை, அய்யாவுக்கு மட்டும் ஜுஸ் கலந்து குடுக்கச்சொல்லி அம்மா சொன்னாங்க, இப்பத்தான் எடுத்துட்டுப் போய் குடுத்தேன், அய்யா குடிச்சுட்டாரு, ஆனா அம்மா குடிக்கலை, உங்களுக்கு ஜுஸ் வேனுமா? காபி வேனுமா?” என்று வீட்டு நிலவரத்தை மஞ்சு விளக்கமாக சொல்ல,

பதறிப்போன மான்சி “ ஏய் ரெண்டுபேரும் காலையிலேர்ந்தே சாப்பிடலையா?” என்று கேட்டுக்கொண்டே அறையைவிட்டு வெளியே வந்த கீழே ஓடினாள், காலையில் சத்யன் போனபிறகு மான்சி மட்டும் சாப்பிட்டு விட்டாள், அதை இப்போது நினைக்கும் போது காலையில் தின்றது நஞ்சாய் கசந்தது


வேகமாக கட்டிலை நெருங்கிய மான்சி சாந்தாவின் மறுபக்கத்தில் அமர்ந்து “ அம்மா காலையிலேர்ந்து சாப்பிடலையா? இப்போ என்ன நடந்துச்சுன்னு நீ இப்படி இருக்க? உன்னால அப்பாவும் சாப்பிடாம இருக்காரு, எழுந்து வாம்மா சாப்பிடலாம்” என்று மான்சி அழைக்க...

தன் தோளில் இருந்த மான்சியின் கையை தட்டிவிட்ட சாந்தா “ சாப்பாடும் வேனாம் ஒரு எளவும் வேனாம், போய் நீயே போய் கொட்டிக்க, நீ வாங்கி வச்சிருந்தயே அந்த விஷம் அதை எடுத்துட்டு வந்து என் வாயில ஊத்து, உன் கையாலேயே செத்து தொலைக்கிறேன், இப்படியொரு பொண்ணைப் பெத்ததுக்கு நான் மொதல்ல செத்து ஒழியுறேன்” என்ற சாந்தாவின் வார்த்தைகளில் கனல் வீசியது

மான்சி திகைப்புடன் கட்டிலில் இருந்து எழுந்துவிட்டாள்,, இதுநாள்வரை சாந்தா இதுபோன்று மான்சியிடம் பேசியதேயில்லை, மான்சிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது., “ என்னம்மா இப்படில்லாம் பேசுற, நான் அப்படியென்ன தப்பு பண்ணேன், அவனை எனக்கு சுத்தமா புடிக்கலையேம்மா” என்று கூறிவிட்டு மான்சி ஓவென்று அழ,,

இதுவரை மகள் அழுது பார்க்காத அமுதனுக்கும் சாந்தாவுக்கும் தொண்டையை அடைத்தது, மகளின் கண்ணீர் அவர்களை உருக்கியது, சாந்தாதான் முதலில் எழுந்து வந்து மகளை அணைத்துக்கொண்டாள், அவளுக்கும் கண்ணீர் வர இருவரும் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டனர், தனது கண்ணீரை மறைக்க ஆராவமுதன் தலையை கவிழ்ந்து கொண்டார்

ஆனால் மான்சி இவ்வளவு அழுதது பெற்றவர்கள் சாப்பிடவில்லையே என்ற வருத்தம் மட்டும்தான் காரணமா? என்று அவளுக்கே புரியவில்லை, ஆனால் தனக்கு பிடித்த பொருளை ஒழித்துவிட்டு காணாமல் அழும் குழந்தையை போல் வெகுநேரம் வரை அவளது கண்ணீர் நிற்கவில்லை, பெற்றவர்களை சமாதானம் செய்ய அவள் வந்து, இப்போது அவர்கள் இருவரும் மான்சியை சமாதானம் செய்து சாப்பிட அழைத்துச்செல்லும் படி ஆனது

மூவரும் டேபிளில் வந்து அமர்ந்ததும் இருந்த உணவை அவசரமாக எடுத்துவந்து பரிமாறினார்கள் வேலைக்காரர்கள்,

சாப்பிடும்போது மான்சியின் மொபைல் ஒலிக்க எடுத்துப் பார்த்தாள், சரண்யா தான் போன் செய்திருந்தாள், ஏனோ மான்சிக்கு திடீரென்று எரிச்சலாக வர செல்லை ஆன்செய்து காதில் வைத்து “ என்ன சரண்யா?” என்றாள்

“ என்னவா? அடியேய் மான்சி உனக்காக நாங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம் நீ இன்னும் வரலையா?” என்று சரண்யா கோபமாக கேட்க
அவர்கள் எதற்காக காத்திருக்கிறார்கள் என்று புரிய மான்சிக்கு எரிச்சல் மேலும் அதிகமானது, அவர்களை காத்திருக்க சொன்னது தான்தான் என்று எண்ணியதும் எரிச்சல் ஆத்திரமாக மாறியது “ சரண்யா எனக்கு பயங்கர தலைவலி, என்னால எங்கயும் வரமுடியாது, எனக்காக யாரும் வெயிட் பண்ணாம வீட்டுக்குப் போய் சேருங்க” என்று படபடவென பொரிந்துவிட்டு போனை கட் செய்தவள், ‘வந்துட்டாளுக ஓசில கொட்டிகிறதுக்கு’ என்று வெளியே கேட்காமல் முனங்கியவாறு’அத்தோடு விடாமல் சுவிட்ச் ஆப் செய்து வைத்தாள்

மூவரும் இருந்ததை பகிர்ந்து சாப்பிட்டுவிட்டு வந்து ஹாலில் அமர்ந்ததும், மான்சி அம்மாவின் மடியில் தலைசாய்த்து, அப்பாவின் மடியில் கால்களை நீட்டிக்கொண்டு சோபாவில் படுத்துக்கொண்டாள்

சாந்தா மகளின் தலையை வருடிவிட, ஆராவமுதன் மான்சியின் கால் விரல்களை இதமாக நீவினார், மூவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை, ஏதாவது பேசினால் இப்போதைய சூழ்நிலை மாறிவிடுமோ என்று பயந்தது போல் அப்படியே இருந்தனர்

மான்சியின் அன்றைய கதறலுக்கு பிறகு சாந்தா, ஆராவமுதன் இருவரும் அவளிடம் எதுவும் கேட்பதில்லை, மான்சியும் அமைதியாக கல்லூரிக்கு போவதும், வீட்டுக்கு வந்தால் சலுகையாக அப்பா அம்மா மடியில் தலைசாய்த்து கொள்வதுமாக துள்ளல் எல்லாம் அடங்கி முதல்நாள் மலர்ந்து இன்றைய காற்றில் உதிர்ந்த மலர்போல் இருந்தாள்

கல்லூரியில் முக்கியமாக சரண்யாவை சுத்தமாக ஒதுக்கினாள், அவளை பார்க்கும்போதெல்லாம் ஆத்திரமாய் வந்தது, ஏன் என்று யோசித்துப் பார்த்து அதற்காக மான்சி தனக்கு கூறிக்கொண்ட காரணம் ‘ சரண்யாவலதான் எல்லாமே சீக்கிரம் முடிஞ்சு போச்சு, அதனால்தான் அம்மா அப்பா ரொம்ப வேதனைப்படுறாங்க, இல்லேன்னா இன்னும் கொஞ்சநாள் கழிச்சு நானே எல்லாத்தையும் சமாளிச்சிருப்பேன்’ என்று தனது நடவடிக்கைகளுக்கு பொய் வேஷமிட்டாள் மான்சி

மாமியார் வீட்டிலிருந்த படியே ஆஸ்ட்ரேலியாவுக்கு கிளம்பிய பாலாவும் அவன் மனைவியும், போய் கிட்டத்தட்ட இரண்டு மாதம் கழித்து மான்சிக்கு போன் செய்து “ சத்யன் கிட்ட டைவர்ஸ் பேப்பர்ஸ்ல சைன் வாங்கிட்டு விரட்டிட்டயாமே, மான்சி இப்பத்தான் நீ நல்ல முடிவு எடுத்திருக்க” என்று இருவரும் மாற்றி மாற்றி அதையே கூறியதும், ஓவென்று அலற துடித்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டு “ம்ம்” என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்

சத்யன் அங்கிருந்து சென்ற ஒரு வாரம் கழித்து மான்சி தனது அறையில் அமர்ந்து கல்லூரியில் அன்று நடந்தவைகளை ஒரு நோட்டில் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தபோது அவளுக்கு காபி எடுத்து வந்த மஞ்சு, காபியை மான்சியிடம் கொடுத்துவிட்டு, சத்யனின் படுக்கை இருந்த கப்போர்டை திறந்து சத்யன் உபயோகித்த பாய் தலையணை பெட்சீட் எல்லாவற்றையும் சுருட்டி எடுத்துக்கொண்டு அறை கதவை நெருங்க...

நிதானமாக காபியை குடித்தபடி படிப்பில் கவனமாக இருந்த மான்சி மஞ்சுவின் நடவடிக்கைகளை கவனித்துவிட்டு பதட்டத்துடன் “ ஏய் ஏய் மஞ்சு, அதையெல்லாம் ஏன் எடுத்துட்டு போற?” என்று கேட்க..

அவள் அதட்டலில் திரும்ப வந்த மஞ்சு “ அம்மாதான் எடுத்துட்டு வரச்சொன்னாங்க? ” என்றாள்

“ அதெல்லாம் வேனாம் அதை எடுத்த இடத்துலயே வச்சிட்டு போ, இங்கேயே இருக்கட்டும் ” என்றாள் மான்சி, தன் வார்ததையின் அர்த்தம் ஓரளவுக்கு புரிந்ததாலோ என்னவோ தலையை குனிந்தபடியே இதை சொன்னாள் மான்சி
மஞ்சு மான்சியை குழப்பமாக பார்த்தபடியே எடுத்தவைகளை அதே இடத்தில் வைத்துவிட்டு கீழே போய்விட்டாள்,

மான்சி எழுந்துபோய் சத்யன் உபயோகித்த தலையணையை வருடினாள், அவன் உபயோகித்த பெட்சீட்டை எடுத்துவந்து தனது கட்டிலில் போட்டுவிட்டு அதன்மீது முகத்தை வைத்துக்கொண்டு படுத்தாள், சத்யனின் வியர்வை கலந்த ஆண்மை வாசனை அவள் மூக்கில் ஏறி நெஞ்சை நிறைத்தது

மான்சிக்கு ஏனோ அழுகை வரும்போல் இருந்தது, உதட்டை கடித்து அடக்கியபடி “ நெசமாவே என்னைய உனக்கு பிடிக்கவே இல்லையாடா? நீ பார்த்த பொண்ணுங்க மாதிரி நான் இல்லையாடா? நான் நல்லாத்தானே இருக்கேன்? ஒருநாள் கூட என் முகத்தை நிமிர்ந்து பார்க்கலையே? ஏன்டா எதுனால என்னைய அவ்வளவு அலட்சியமா நடத்தின? நான் உனக்கு எப்பவுமே வேனாமா? என்று அந்த போர்வையுடன் பேசி, எவ்வளவு கட்டுப்படுத்தியும் முடியாமல் இறுதியாக அழுகை வெடித்தது

ஆனால் சிறிதுநேரத்தில் அழுகையை அடக்கிக்கொண்டு நிமிர்ந்துஎழுந்தவள் ‘ தன்னை அசிங்கமாக பேசி அவமானப்படுத்திவிட்டு போனவனுக்காக அழுவது தன்னுடைய தன்மானத்துக்கே கேவலம் என்று எண்ணி வீம்பாக எழுந்தாள்
இது நடந்து சிலநாட்கள் கழித்து மான்சி தனது அறையில் குளித்துவிட்டு வந்து டிரஸிங்டேபிள் முன்னால் அமர்ந்து கல்லூரிக்கு கிளம்ப தலையை வாறிக்கொண்டு இருந்தவள், மஞ்சு தனக்கு பின்னால் நிற்பதை கண்ணாடியில் கவனித்து, திரும்பாமல் கண்ணாடியைப் பார்த்து “ என்ன மஞ்சு?” என்று கேட்டாள்

“ உங்க துணியெல்லாம் அயர்ன் பண்ணி கொண்டு வந்தேன் சின்னம்மா” என்றாள்

“ சரி வச்சுட்டு போ” என்றாள் மான்சி

“ இல்லம்மா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும்” என்று மஞ்சு தயங்கி நிற்க
கண்ணாடியில் பார்க்காமல் திரும்பி மஞ்சுவின் முகத்தை பார்த்த மான்சி “ என்ன விஷயம் மஞ்சு?” என்று கேட்டாள்

“ அதும்மா நம்ம வீட்டுல இருந்தாரே சத்யா சார், அவரு இப்போ சொந்தமா மளிகைக்கடை வச்சு நல்லா ஏவாரம் பாத்து நிறைய சம்பாதிக்கிறாராம், வீட்டையே இடிச்சிட்டு கடையை பெரிசா கட்டி ஏவாரம் பார்க்குறாராம், அம்மா, அய்யாகிட்ட பேசும்போது கேட்டான்மா, அதான் உங்ககிட்ட சொன்னேன்” என்று மஞ்சு நீட்டி முழக்கி சொல்ல

தனது முகத்தில் தெரியும் உணர்ச்சியை மஞ்சு பார்க்காதவாறு பக்கவாட்டில் திரும்பிக்கொண்டு “ இதையெல்லாம் ஏன் என்கிட்ட வந்து சொல்ற, உன் வேலையை பாரு போ போ” என்று கோபமாக அதட்டினாள் மான்சி

மஞ்சு சங்கடத்துடன் வெளியே போக கதவை நெருங்கும் போது “ ஏய் மஞ்சு இங்கே வா?” என்று மான்சி அழைத்தாள்

“ என்னம்மா” என்று அழைத்தபடி வந்தாள் மஞ்சு

“ நேத்து சாப்பிடும்போது இந்த க்ளிப் நல்லாருக்குன்னு சொன்னியே,, இந்தா இதை நீயே வச்சுக்க” என்று டேபிளில் இருந்த விலையுயர்ந்த தலை க்ளிப் ஒன்றை எடுத்து மஞ்சுவிடம் கொடுத்தாள் மான்சி

கண்கள் வியப்பில் பளபளக்க “ அக்கா எனக்கா இது?” என்றாள் மஞ்சு

“ ம்ம் உனக்குத்தான் வாங்கிக்க ” என்று மான்சி சொன்னதும் முகம் முழுவதும் புன்னகையோடு வாங்கிக்கொண்டாள் மஞ்சு

அதன்பிறகு கல்லூரியில் நடக்கும் தேர்வுக்காக படிக்கவே மான்சிக்கு நேரம் சரியாக இருந்தது, அவ்வப்போது மஞ்சுவின் மூலமாக அவள் காதில் விழுந்த சத்யனைப் பற்றிய விஷயங்கள் அவள் முகத்தில் ரகசியப் புன்னகையை மலரச்செய்தது

ஏதோ தோன்ற ஒருநாள் இரவு சத்யனின் பாயையும் தலையணையையும் பால்கனியில் போட்டு சத்யனின் பெட்சீட்டை போர்த்திக்கொண்டு படுத்துப் பார்த்தாள், எலும்பை ஊடுருவும் குளிரில் பழக்கமற்ற படுக்கையில் இரவுமுழுவதும் தூக்கமே வரவில்லை, ச்சே இங்க எப்படித்தான் தூங்கினானோ?’ என்று முதன்முறையாக சத்யன் மீது பரிதாபம் வந்தது

‘ இவனை நானா இங்கயே படுக்கச் சொன்னேன், மான்சி நானும் உள்ளவே படுத்துக்கிறேன்னு வாயைத்திறந்து சொல்லிட்டு வந்து படுக்க வேண்டியதுதானே?’ என்று வீம்பு பேசியது மனது, ஆனாலும் அங்கிருந்து எழாமல் சத்யனின் போர்வையை தனது உடலில் படரவிட்டு அவன் வாசனையை நுகர்ந்தபடி படுத்திருந்தாள்

இப்போது மான்சி தன் மனதை ஓரளவு கண்டுகொண்டாள் தான், ஆனால் சத்யன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவள் கண்டுகொண்ட விஷயத்தை ஏற்கவிடாமல் தடுத்தது, எனது நிர்வாணம் கூட பாதிக்காதுன்னு சொன்னவனை,, ஒரு வேசியின் அளவுக்கு கூட நான் அவனை கவரவில்லைன்னு சொன்னவனை,, நான் இனிமேல் என் வாழ்நாளில் சந்திக்கவே மாட்டேன், என்று பிடிவாதமாக முரண்டுபிடித்தாள்

ஆனால் அவளின் புதிதாக நேசம் கொண்ட மனது, இவளின் வாதத்திற்கு செவிமடுக்காமல் சத்யன் மீதான தனது நேசத்தை உயர்த்திக்கொண்டே போனது,
அந்த நேசத்தை நேசிக்கும் மனசுக்கும், அந்த நேசத்தை வெறுக்கும் புத்திக்கும் பெரும் போராட்டமே நடந்தது, சத்யனை மான்சி நடத்தியவிதத்தை இடித்துரைத்தது அவள் மனம்,, அவனது அலட்சியத்துக்கு பதிலடிதான் தனது நடத்தை என்றது புத்தி, இரண்டும் நடத்திய போராட்டத்தில் மான்சிதான் பெரிதும் துவண்டு போனாள்,

முன்பெல்லாம் இரண்டு இட்லியை சாப்பிட அவள் எடுத்துக்கொண்ட நேரம் இரண்டு மடங்கானது ,, பலநாட்கள் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாமல் உடையணிந்து மஞ்சுவின் எச்சரிக்கைக்குப் பிறகு மறுபடியும் மாற்றிக்கொண்டாள், தோட்டத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் வெட்டவெளியில் பார்வையை நிலைக்கவிட்டாள், எழுதிய தேர்வில் சொற்பமான மார்க்கில் தேறிவிட்டு தோழிகள் முன்பு சங்கடமாக நெளிந்தாள், அவளின் நடவடிக்கை அவளுக்கே வித்தியாசமாக இருந்தது

அடிக்கடி கண்ணாடி முன்பு நின்று தன்னைத்தானே சுற்றிக்கொண்டாள், இரவில் போய் குளிரக்குளிர குளித்துவிட்டு ஏஸியை உச்சத்தில் வைத்துக்கொண்டு சத்யனின் போர்வையால் நன்றாக மூடிக்கொண்டு உறங்காமல் விடியவிடிய விழித்திருந்தாள்

இதுவரை சத்யனுக்கும் இவளுக்கும் இல்லாத ஒற்றுமைகளை தேடித்தேடி கண்டுபிடித்து தனக்குள் பூரித்துக்கொண்டாள்

எங்கோ மூலையில் கிடந்த திருமண ஆல்பத்தை எடுத்து சத்யனின் கம்பீர உருவத்தை பார்த்து பார்த்து ரசித்தாள்,, சில படங்களில் சத்யனின் முகம் உர்ரென்று இருக்க ‘ போடா உம்னா மூஞ்சி, என்று போட்டோவில் அவன் கன்னத்தில் வலிக்காமல் அடித்தாள்

இவற்றுக்கெல்லாம் அர்த்தம் என்ன என்று ஏதுமறியா தோட்டத்து பூக்களிடம் கேள்விகேட்டாள் 

தன்னை அவமானப்படுத்திய சத்யன் மீது எப்படி காதல் வரும்? என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டாள்

மூன்றுமாதமாக ஒரே அறைக்குள் வாழ்ந்தபோது வராத காதல், அவனை பிரிந்த இந்த ஒருமாதத்தில் எப்படி வந்தது?

அவன் பணத்தையும் தன்னையும் துச்சமாக மதித்துவிட்டு போனதால்தான் இந்த காதல் வந்ததா?

என்னுடைய அலட்சியத்தையும் ஒதுக்கத்தையும் தாங்கிக்கொண்டு, என்னைத் தொடாமல் ஒதுங்கி வாழ்ந்தானே அந்த நல்லகுணம் என்னை ஈர்த்துவிட்டதா?

அல்லது சரண்யா சொன்னது போல் இப்படியெல்லாம் அவன் நடந்துகொண்டதால் அவன்மீது பரிதாபம் வந்து அது காதலாய் மாறிவிட்டதோ?

இப்படி மான்சியின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் இடியாப்பச்சிக்கலாய் பின்னிக்கொண்டு அவளை வதைக்க, அந்த நேரத்தில் அவள் அண்ணி அட்சயாவிடமிருந்து மான்சிக்கு போன் வந்தது

“ எப்படியிருக்க மான்சி,, என்றவள் அதற்கான பதிலை மான்சி சொல்லும் முன் தனது பேச்சை அவளே தொடர்ந்தாள் “ மான்சி என்னோட பெரியம்மா பையன் விஸ்வநாதனை உனக்கு தெரியுமே, அவன் இன்னும் மூனு நாள்ல யூஎஸ்ல இருந்து இந்தியா வர்றான், அவனுக்கு உன் போட்டோவை மெயில் பண்ணி உன்னைப்பத்தி எல்லா விஷயத்தையும் சொல்லிருக்காரு உன் அண்ணன், விஸ்வா இப்போ இந்தியா வந்ததும் நேரா நம்ம வீட்டுக்குத்தான் வர்றான், அவனைத்தான் உனக்கு மேரேஜ் பண்ணலாம்னு நெனைச்சிருக்கோம், மாமாகிட்ட நேத்தே பேசிட்டேன், பையன் வரட்டும், மான்சிக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்னு சொன்னாரு, விஸ்வா வந்ததும் ரெண்டு பேரும் நல்லா பேசிப் பழகிப்பாருங்க பிடிச்சிருந்தா முடிக்கலாம்” என்ற அட்சயா மான்சியிடம் பதிலேதும் இல்லை என்றதும் “ என்ன மான்சி கேட்கிறியா?” என்றாள்

“ ம்ம்” என்று மட்டும் மான்சி கூற

“ விஸ்வா ரொம்ப நல்லவன் மான்சி, உனக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமானவன், எனக்கும் உன் அண்ணனுக்கும் அவனை ரொம்ப பிடிச்சிருக்கு, மதுரைக்கு வந்ததும் நிறைய இடங்கள் பார்க்கனும்னு சொன்னான், எல்லா இடங்களுக்கும் கூட்டிட்டுப் போ, நல்லா மனசுவிட்டு பேசுங்க, பேசி ஒரு முடிவு பண்ணுங்க, என்ன மான்சி சொல்ற? உனக்கு ஓகே தான? ” என்று அட்சயா கேட்க

சற்றுநேரம் பெரிய பெரிய மூச்சுக்களாக விட்டு கொந்தளித்த மனதை அடக்கிய மான்சி, அட்சயாவிடம் மறுத்து சொல்ல வாயெடுத்தபோது சட்டென்று மூளைக்குள் மின்னலடிக்க “ ம்ம் சரி அண்ணி விஸ்வா வரட்டும் நாங்க பேசிட்டு அப்புறமா முடிவு சொல்றேன்” என்று முடித்தாள் மான்சி



“ சரி மான்சி நான் விஸ்வா வர்ற அன்னிக்கு மறுபடியும் கால் பண்றேன்” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாள் அட்சயா

கட்டிலில் வந்து விழுந்த மான்சிக்கு மனம் முழுவதும் கொண்டாட்டத்தில் குதித்தது, சத்யனின் போட்டோவை எடுத்துவைத்துக்கொண்டு “ஓய் கறுப்பா,, என்னையாடா புடிக்கலைன்னு சொன்ன? இருடி மச்சான் இனிமேல்தான் உனக்கு இருக்கு கச்சேரி,, வர்றேன்,, உன் இடத்துக்கே வந்து உன்னை அசைச்சு காட்டுறேன்” என்று வாய்விட்டு சத்தமாக பேசி சபதம் செய்தாள் 




No comments:

Post a Comment