Saturday, September 5, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 9

அடுப்பில் இருந்த பாத்திரத்தில் கஞ்சி கொதித்தது,, அதன் வாசம் சத்யனின் பசியை தூண்டியது,, இவ்வளவு நேரம் தெரியாத பசி இப்போது அவனை வாட்டியது,, அவன் வாழ்நாளில் முதன்முறையாக அவன் வயிறு பசியை உணருகிறது,, ஏன் சத்யனுக்கு தான் யார் என்பதே மறந்து போயிருந்தது

கஞ்சி கொதிக்கட்டும் என்று கிச்சனை விட்டு வெளியே வந்து மான்சியைப் பார்த்தான்,, அவளின் பார்வையும் கிச்சன் மீதே இருந்தது,, இவனைப் பார்த்ததும் “ கஞ்சி வெந்துருச்சா? அடுப்பு பக்கத்துல உப்பு டப்பா இருக்கு அளவா கஞ்சியில போட்டுடுங்க,, அலமாரில ஒரு சிவப்பு கலர் டப்பால ஊறுகாய் இருக்கும் அதை எடுத்து வச்சுக்கங்க,, பெரியத் தட்டுல கஞ்சிய ஊத்தி ஆறவச்சு ஊறுகாய்த் தொட்டுகிட்டு சாப்பிடுங்க,, தண்ணி குடத்துல இருக்கும் காலையிலதான் பிடிச்சு வச்சேன்” என்று மான்சி அக்கறையுடன் சொல்ல



சத்யனுக்கு வயிற்றில் இருந்த பசியை அவளின் அக்கறையான பேச்சு வயிற்றை நிறைத்தது,, ‘’ என் தாய்க்குப்பின் என்னுடைய வயிற்றைப் பற்றி யோசிக்கும் மற்றொரு தாயா இவள் எனக்கு ?” என்று அவன் உள்ளம் கேட்ட கேள்விக்கு அவன் கண்கள் பதில் சொன்னது, கலங்கிய கண்களை அவளுக்கு மறைத்து மீண்டும் சமையலறைக்குள் போனான்

உணர்ச்சியற்ற அவன் வாழ்வில் இந்த உணர்ச்சிபூர்வமான நிலை அவனை பெரிதும் துடிக்க வைத்தது, இதயம் படபடவென்று அடித்துக்கொள்ள கண்களில் வழிந்த நீரை கட்டுப்படுத்த முடியாமல் வழியவிட்டான், சமையல் மேடையில் கைகளை அழுத்தமாக ஊன்றி நின்றான், எவ்வளவு பணம் இருந்து என்ன இதுபோன்ற வார்த்தையை அவன் கேட்டு பலவருடங்கள் ஆனது,,

அவளும்தானே சாப்பிடாம இருந்தா?,, அதைப்பத்தி அவள் யோசிக்கலையா?,, இவள் எப்பவுமே இப்படித்தானா?,, சுயநலமில்லாத இப்படிப்பட்ட பெண் உலகத்தில் இருக்கிறாளா?,, சத்யன் மனதில் அடுக்கடுக்காக பல கேள்விகள், அருணாவை போல சுயநலம்மிக்க ஒருத்தியுடன் வாழ்ந்ததால் என்னவோ மான்சியின் பேச்சு அவனை ரொம்பவே உணர்ச்சிவசப்பட வைத்தது, அவன் மனமிருந்த நிலையில், பணம், அந்தஸ்து, மில், தொழிளாலர்கள், என எல்லாவற்றையும் உதறிவிட்டு மான்சியையும் குழந்தையையும் தூக்கிக்கொண்டு எங்காவது தனிமையான இடத்திற்கு ஓடிவிடவேண்டும் போல் இருந்தது,

சிறிதுநேரம் கழித்து மனசை நிலைப்படுத்திக் கொண்டு தண்ணீர் அடித்து முகத்தை கழுவியவன், அடுப்பில் இருந்து கஞ்சியை இறக்கி வைத்தான்,, சூடு ஆற அகலமான பாத்திரத்தில் கஞ்சியை மாற்றிவிட்டு, வெளியே எடுத்துவந்து வைத்துவிட்டு, மான்சி சொன்ன ஊறுகாய் தட்டு, ஒரு கிண்ணம் எல்லாவற்றையும் எடுத்துவந்து வைத்துவிட்டு மான்சியிடம் வந்தான்

குழந்தை பாலை குடித்துவிட்டு தூங்கியிருந்தது, கம்பளியை இழுத்து குழந்தையை நன்றாக போர்த்தியவன், மான்சியின் தோள்களைப் பற்றி மெதுவாக தூக்கி சாய்த்து அமரவைத்தான், அப்போது அவளின் கழுத்தடியில் இருந்த கம்பளி நழுவிவிழ மான்சி பதட்டத்துடன் தன் கைகளால் மானத்தை மறைக்க, சத்யன் அவசரமாக கீழே கிடந்த பையில் இருந்து ஒரு புடவையை எடுத்து உதறி மடித்து அவள்மேல் போர்த்தி விட்டான்

“ நாளைக்கு காலையில அண்ணிக்கு போன் பண்ணி கேட்டுட்டு வேற டிரஸ் போட்டுக்கலாம்,, இன்னிக்கு நைட் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்க மான்சி” என்று அவளுக்கு ஆறுதலாய் கூறியவன் ஊட்டி குளிரில் நிமிடத்தில் ஆறிவிட்ட கஞ்சியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அவளிடம் எடுத்து வந்து கையி அவள் வாயருகே எடுத்துச்செல்ல மான்சி வேண்டாம் என்று மறுத்தாள்


“ நீங்க மொதல்ல சாப்பிடுங்க, பசிக்குதுன்ன சொன்னீகளே?” என்றாள்

“ ம்ம் பரவாயில்லை நீ மொதல்ல சாப்பிடு, மிச்சமிருக்கிறதை பாத்திரத்தோட நான் அடிச்சு தள்ளிர்றேன், நமக்கு கிண்ணம்ல்லாம் கட்டுபடியாகாது ” என்று கேலியாய் சொல்ல
மான்சி சிறு புன்னகையுடன் கஞ்சியை வாங்கி சிறுகச்சிறுக குடித்துவிட்டு காலி கிண்ணத்தை சத்யனிடம் கொடுத்தாள்

“ இன்னும் வேனுமா?” என்று சத்யன் அக்கறையாக கேட்க

“ ம்ஹூம் குழந்தை பொறந்த உடனேயே நிறைய சாப்பிடக்கூடாதாம்,, மறுநாளில் இருந்துதான் நல்லா சாப்பிடனுமாம் எங்கம்மா சொல்லிச்சு” என்று மான்சி சொன்னதும்

“ஓ அப்படியா’’என்ற சத்யன் சாப்பாட்டு பாத்திரத்தின் எதிரில் அமர்ந்து வேகமாக ஆரம்பித்து நிதானமாக சாப்பிட்டு முடித்தான், கஞ்சி பாத்திரம் காலியாயிருந்தது, பசி உணர்ந்து சாப்பிட்டதில் அந்த கஞ்சி தேவாமிர்தமாக இருந்தது சத்யனுக்கு,, பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு, மான்சியின் அருகே வந்தான்

தோளில் கைவைத்து சரித்து படுக்கவைத்து கம்பளியால் மூடி “ நல்லா தூங்கு” என்று புன்னைகையுடன் கூறிவிட்டு, குழந்தையையும் பார்த்துவிட்டு,, தரையில் ஒரு பாயை விரித்து ஒரு தலையணையை போட்டு அன்னலட்சுமி உபயோகப்படுத்திய கம்பளியை எடுத்து போர்த்திக்கொண்டு படுத்துவிட்டான்

மனமெல்லாம் நிறைந்து இருந்தது, என்னவோ சொர்க்கத்தில் இருப்பது போல் சந்தோஷமாக இருந்தது அப்போது அவனது மொபைல் அழைக்க,, எழுந்துபோய் எடுத்து பார்த்தான்,, பத்மாதான் அழைத்திருந்தாள்

ஆன் செய்து “ சொல்லுங்க அண்ணி” என்றான்

“ ம் ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?,, என்ன சாப்பாடு?” என்று கேட்டாள்

“ ம் ஆச்சு அண்ணி,, கஞ்சி சாப்பாடு,, நான்தான் செய்தேன்” என்று சத்யன் பெருமையாக சொல்ல

எதிர் முனையில் பெரும் அமைதி,, பணக்கார சத்யனின் தற்போதைய நிலையை பத்மா மனக்கண்ணில் கண்டோளோ என்னவோ “ ம்ம் சந்தோஷம் சத்யா” என்ற அவளின் கலங்கிய குரலில் கண்ணீரின் தாக்கம் இருந்தது

சத்யனும் அமைதியாக இருந்தான்

“ சரி சத்யா உன் மகன் என்னப் பண்றான்” பட்டென்று பத்மா கேட்க

சத்யனின் நெஞ்சில் யாரோ விரலால் தீண்டிய உணர்வு ‘ மகனா?, என் மகனா?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டவன் சட்டென்று திரும்பி குழந்தையைப் பார்த்தான் தாயின் அணைப்பில் கம்பளிக்குள் சுகமாக உறங்கிக்கொண்டு இருந்தது,, சத்யனின் உள்ளமெங்கும் சந்தோஷப் பூக்கள் மொத்தமாக மலர ‘ ஆமாம் என் குழந்தைதான் இவன்,, என் மகன் தான்’ என்று மனதில் எண்ணி பூரித்தவன் “ பால் குடிச்சிட்டு நல்லா தூங்குறான் அண்ணி,, ஆனா நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்க?” என்று கேட்டான்

“ போன்ல கேட்ட உணர்ந்த உன்னோட கண்ணீரும் துடிப்பும் பேச்சுமே சொல்லிச்சு சத்யா,, நீ கவலையே படாதே சத்யா உன்னையும் உன் பொண்டாட்டி பிள்ளையையும் ஒன்னா நம்ம குடும்பத்தோட சேர்க்கவேண்டியது என் பொருப்பு,, என்னை கிராமத்துக்காரின்னு எல்லாரும் கிண்டல் பண்ணுவீங்களே இப்போ அந்த கிராமத்து வைத்தியம் தான் உன் பொண்டாட்டி புள்ளையை காப்பாத்துச்சு,, இப்பவாது தெரிஞ்சுக்கங்க கிராமம் தான் எல்லாத்திலேயும் பெஸ்ட்டுன்னு” என்று பத்மா சந்தோஷமாக பேசிக்கொண்டே போக..




அவள் எல்லாவற்றையும் தவறாக புரிந்துகொண்டதை சத்யன் உணர்ந்தான்,, அய்யோ மான்சியை என் பொண்டாட்டின்னு தப்பா நெனைச்சுட்டாங்களே இந்த அண்ணி,, என்று உள்ளூர பதட்டமாக நினைத்தாலும் அந்த தப்பை திருத்திக்கொள்ளச் சொல்லி பத்மாவிடம் சத்யன் சொல்லவேயில்லை,, பத்மா மான்சியையும் குழந்தையையும் பற்றி பேசப்பேச அவனுக்குள் சிலுசிலுவென்று ஒரு உணர்வு ஓடியது

“ சரி சத்யா எனக்கு தூக்கம் வருது,, நாளைக்கு காலையில பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு போன் பண்றேன்,, அவளுக்கு காலையில உடம்பு தொடச்சு வேற துணி மாத்திவிடு,, அவளை எங்கயும் தனியா விடாதே மயக்கம் வரும்,, கவனம் சத்யா” என்று கூறிவிட்டு காலை கட் செய்தாள்

சத்யன் மறுபடியும் படுக்கையில படுத்தான்,, அவன் மனதை பத்மாவின் வார்த்தைகள் குழப்பிவிட்டிருந்தது,, இந்த எட்டுமணிநேர பழக்கத்தில் மான்சி அவன் மனதில் நிறைந்துவிட்டாள் தான்,, ஆனால் இப்படிப்பட்டவள் பணத்துக்காக ஏன் குழந்தையை சுமக்கவேண்டும், அப்படியென்ன பணத்தேவை? இதற்கான காரணத்தை அவளிடமிருந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தான்

சிறிதுநேரத்தில் “ தூங்கிட்டீங்களா?” என்ற மான்சியின் குரல் கேட்டு மூடியிருந்த கண்களை திறந்து அவளை திரும்பி பார்த்து “ என்ன மான்சி,, ஏதாவது வேனுமா?” என்று கேட்டான்

ஒன்றும் வேண்டாம் என்று தலையசைத்தவள் பெரும் தயக்கத்துடன் “ நீங்க பாத்ததை எல்லாம் இத்தோட மறந்துடனும் சரியா?” என்றாள்

சத்யனுக்கு புரியவில்லை,, அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் “ எதை மறந்துடனும்னு சொல்ற?” என்று அவளிடம் திருப்பி கேட்டேன்

“ அதான் இப்போ நடந்தது,, நீங்க பாத்தது எல்லாத்தையும் தான்” என்று மான்சி அவன் முகத்தைப் பார்க்காமல் பேச

அவள் எதை சொல்கிறாள் என்று இப்போது சத்யனுக்கு தெளிவாக புரிந்தது,, எழுந்து அவளருகே வந்தவன் ஒதுங்கி கிடந்த கூந்தலை சரிசெய்து, தலையில் லூசாகி இருந்த பேன்டை உருவி மொத்த கூந்தலையும் சேர்த்து டைட்டாக போட்டுவிட்டு, கட்டிலில் ஓரமாக கிடந்த உல்லன் ஸ்கார்ப்பை எடுத்து அவள் தலையில் கட்டினான்,

பிறகு அவள் முகத்தை நிமிர்த்தி கண்களை நேராகப் பார்த்து “ மான்சி உன்னைய கட்டில்ல கொண்டுவந்து படுக்க வச்சேனே அப்போ நீ என்ன சொன்ன?” என்று கேட்டான்

“ கரெக்ட்டான நேரத்துல என் அம்மாதான் உங்களை அனுப்பி வச்சுதுன்னு சொன்னேன்” என்றாள் மான்சி தொண்டை அடைக்க

“ இதோபார் மான்சி உன் அம்மா என்னை அனுப்பி வைக்கலை,, உன் அம்மாவே நான்தான்,, இந்த ஒரு நைட் என்னை உன் அம்மாவா நெனைச்சுக்கோ, உன் மனசுல எந்த சங்கடமும் வராது, நாளைக்கு பிரச்சனை நாளைக்கு பார்க்கலாம்,, இப்போ உன்கூட இருக்குறது உன் அம்மாவின் மறுஉருவம்னு நெனைச்சுக்கிட்டு தூங்கு சரியா” என்று சத்யன் சிறு குழந்தைக்கு சொல்வதுபோல் தீர்கமாக எடுத்துக்கூறினான்

அவன் கண்களை பார்த்துக்கொண்டே சரியென்று தலையசைத்தாள் மான்சி,,

சத்யன் அவள் முகத்தில் இருந்து தன் கையை எடுத்துவிட்டு படுக்கைக்கு திரும்ப “ பாத்ரூம் போகனும் கூட்டிட்டுப் போங்க” என்று மான்சியின் குரல் அவனை தடுத்தது

“ ம்ம் சரி வா” என்று அவளை தூக்கி தரையில் நிறுத்த அவள் கண்களை சுழற்ற அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்,, அவள் நடக்கமாட்டாள் என்பது புரிய சத்யன் அவளை அலேக்காக தூக்கி பாத்ரூமில் விட்டு அவளுக்கு உதவினான், பின்னர் படுக்கையில் படுக்கவைத்து விட்டு வந்து படுத்தான்

அன்று இரவு முழுவதும் குழந்தை அடிக்கடி எழுந்து தனது அழுகுரலால் தனது அப்பாவையும் அம்மாவையும் தூங்கவிடாமல் செய்தது,, ஆனால் சத்யன் சலிக்காமல் எழுந்து குழந்தையை தூக்கி மான்சியிடம் கொடுத்து பால் கொடுக்க உதவினான், அப்புறம் தன் நெஞ்சோடு அணைத்து தூங்க வைக்க முயன்றான்,

விடியவிடிய இருவருக்கும் தூக்கமில்லை குழந்தை அடிக்கடி அழுது படுக்கை நனைத்தது, சத்யன் குழந்தையின் துணிகளை அருவருப்பின்றி மாற்றுவதை மான்சி வியப்போடு பார்த்தாள், தண்ணீர் கேட்ட மான்சிக்கு சுடுதண்ணீர் காயவைத்து ஆற்றி எடுத்துவந்து கொடுத்தான், எதற்காகவும் சத்யன் முகம் சுழிக்கவில்லை


மறுநாள் காலை மழை சுத்தமாக விட்டிருந்தது,, பெரியவீட்டின் கதவை திறந்து பால்பவுடர் மற்றும் இருந்த உணவுப்பொருட்கள் அத்தனையையும் எடுத்து வந்து இங்கே வைத்தான், பால்பவுடரில் காபிப் போட்டு இருவரும் குடித்தனர், பிறகு வென்னீர் வைத்து அவள் உடலை துடைத்துக்கொள்ள உதவினான், அவளை தூக்கி நிறுத்தி வேறு உடை உடுத்தவும் உதவி செய்தான், அழுக்கான துணிகள் அத்தனையும் மூட்டையாக கட்டி பாத்ரூமில் ஒரு மூலையில் போட்டான்,, தண்ணீரில் டெட்டாயில் கலந்து வீட்டை சுத்தமாக துடைத்தான்,, வீட்டில் இருந்த ரவையில் உப்புமா எப்படி செய்யலாம் என்று மான்சியிடம் கேட்டான்,, அவள் அழகாக உதட்டைப் பிதுக்கி எனக்கு தெரியாது என்றாள்

பத்மாவுக்கு போன் செய்து கேட்டு உப்புமாவை தயார் செய்து இருவரும் சாப்பிட்டார்கள், மான்சி தானாக எழுந்து நிற்க்கும் அளவிற்கு தைரியம் வந்ததும்,, எஸ்டேட்டில் சுற்றி சில காய்கறிகளை பறித்து வந்து பத்மாவின் ஆலோசனைப்படி சமையல் செய்தான்,

அன்று மதியம் மான்சிக்கு உணவளித்து விட்டு தானும் சாப்பிட்டு முடித்துவிட்டு கட்டிலின் ஓரத்தில் மான்சியைப் பார்த்தவாறு அமர்ந்தான்

அவனைப்பார்த்து பளிச்சென்று புன்னகைத்தாள் மான்சி,, அந்த புன்னகையில் தான் கேட்க வந்தது மறந்து போய்விடுமோ என்று பயந்த சத்யன், குழந்தையைப் பார்ப்பது போல் குனிந்துகொண்டான்

“ குட்டிப்பையன் அழகா இருக்கான்ல, ஆனா யாரு மாதிரின்னே எனக்கு தெரியலையே?” என்று சிறு வருத்தமாக மான்சி கூற

“ ம்ம் என்னை மாதிரிதான் இருக்கான்” என்றான் சத்யன் பெருமையாக

“ அதெப்படி கரெக்டா சொல்றீங்க”

“ ம் எனக்கு வலது காதுக்கு பின்னாடி ஒரு மச்சம் இருக்கு, அதேபோல இவனுக்கும் இருக்கு” என்று சத்யன் குழந்தையை வருடிக்கொண்டே சொல்ல

“ அப்படியா எங்க பாக்கலாம்” என்று சத்யனின் வலது காதை மடக்கி பின்னால் பார்த்த மான்சி “ ஆமா பெரிய மச்சம் இருக்கு” என்று சொல்லிவிட்டு குழந்தைபோல் மான்சி சிரித்தாள்

அவள் உரிமையாக அவன் காதை தொட்டபோதே வீழ்ந்துவிட்ட அவன் மனம், அந்த கள்ளமற்ற அழகுச் சிரிப்பைப் பார்த்ததும் மனம் சுத்தமாக அவள் காலடியில் படுத்துவிட்டது

இருந்தாலும் பேசவேண்டியது அவன் ஞாபகத்திற்கு வர, அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு “ மான்சி நான் இப்போ போய் இப்படி கேட்கிறேனேன்னு தவறா நெனைக்காதே, ஆனா எனக்கு சரியான பதில் வேனும்” என்று கூறி நிறுத்திவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான்

அந்த பால்நிலா முகத்தில் குழப்பமில்லை, பயமுமில்லை தெளிவு இருந்தது, “ என்ன கேட்கனும் கேளுங்க சொல்றேன்” என்றாள் புன்னகையோடு

கபடற்ற அவள் புன்னைகை நெஞ்சை சுட, “ நீ ஏன் மான்சி வாடகைத்தாயா வந்த,, அப்படியென்ன உனக்கு பணக்கஷ்டம் வந்தது,, எதனால இவ்வளவு சின்னவயசுல இப்படி ஒரு முடிவுக்கு வந்த” என்று அவளிடம் கேட்டான் சத்யன்




" எனது முதல் காதலை,,

" எனக்குஅறிமுகம் செய்த அழகிய பூவே...

" சிப்பிக்குள் இருக்கும் முத்தாக..

" சிறுகச்சிறுக சேகரித்தேன் என் காதலை,,

" எங்கோ இருந்த என்னை..

" இந்த மழைதான் உன்னிடம் சேர்த்தது,

" நேற்றுவரை எனக்குள் இருந்த,,

" பொய்யனை விரட்டியது

" இந்த மழையும் என் காதலி நீயும் தான்!

" நாமும் இந்த மழையும் இருக்கும்வரை,,

" நம் காதலும் இருக்கும்- தூரலாய்- பனிச்சாரலாய்...

" அதனால்தான் என்னுள் ஊடுருவ அனுமதிக்கிறேன்,,

" உன்னையும் இந்த மழையையும் மட்டும்!


No comments:

Post a Comment