Monday, September 14, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 25



அருணா உள்ளே சென்று முன்றாவது வரிசையில் அமர, அவளுடன் கிப்ட் பார்சலை எடுத்துவந்த டிரைவர் கடைசி வரிசையில் ஒரு ஓரமாய் அமர்ந்தான்,
ராஜதுரையும் கௌதமும் அருணா அருகே வந்து சம்பிரதாயமாக “ வாங்க அருணா” என்று அழைத்தனர்,

அவர்களின் வரவேறப்பை ஏற்றுக்கொண்டதாக ஸ்டைலான ஒரு தலையசைத்தவள் “ முகூர்த்ததுக்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு, நான் இன்னொரு மேரேஜ்க்கு போகனும்” என்றாள் அருணா

“ இன்னும் நாற்பத்தைந்து நிமிஷம் இருக்கு ” என்று கௌதம் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அங்கே வந்த மான்சி ராஜதுரையிடம்

“ மாமா சமையல் காண்ட்ராக்டர் உங்களைத்தேடி கிட்டுஇருக்காரு, மதியம் லஞ்ச்க்கு ஏதோ யோசனை கேட்கனுமாம் சீக்கிரமா போங்க” என்று கல்யாண பரபரப்புடன் கூற..

“ இதோ போறேன்மா” என்று ராஜதுரை அங்கிருந்து செல்ல,

“ எஸ்கியூஸ் மீ” என்று அருணாவிடம் கூறிவிட்டு கௌதமும் அவர் பின்னாடியே போனான்



அங்கே நின்ற மான்சிக்கு போவதா அங்கேயே நின்று அருணாவிடம் பேசுவதாஎன்று ஓரே குழப்பம், லேசான தவிப்புடன் நின்றவளை காப்பாற்றுவது அஸ்வத்தாமன் வந்து “ அம்மா அனி என் சட்டையில கூல்டிரிங்க்கை கொட்டிட்டான்மா” என்று கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு புகார் செய்ய

குனிந்து அவன் கன்னத்தை தடவி “ தம்பி தானடா கொட்டினான், வீட்டுக்கு போனதும் உன்கிட்ட ஸாரி கேட்க சொல்றேன் சரியா” என்று கூறிவிட்டு தனது கர்ச்சீப்பால் அவன் சட்டையில் கூல்டிரிங்க் பட்டிருந்த இடத்தை துடைத்துவிட்டாள்

அம்மாவின் கரிசனத்தில் ஓரளவுக்கு சமாதானம் ஆன அஸ்வத் தனது விலையுயர்ந்த மொபைலை நோண்டிக்கொண்டிருந்த அருணாவை ஏறிட்டுப் பார்த்து “ ஹாய் ஆண்ட்டி உங்க செல் நல்லாருக்கே இதுல கார் ரேஸ் விளையாட முடியுமா?” என்று ஆர்வத்துடன் மொபைலை பார்த்தபடி கேட்டான்..

மான்சிக்கு திக்கென்றது, அய்யோ ஏதாவது கோச்சிக்க போறாங்க என்ற பதட்டத்துடன் “ ஏய் அஸ்வத் அதெல்லாம் கேட்ககூடாது, நீ டாடிகிட்ட போ” என்று கொஞ்சம் கோபம் கலந்த குரலில் அதட்டிக் கூற

அதிகமா கோபப்பட்டு பார்த்திராத அம்மாவின் பதட்டத்தை ஆச்சரியமாக பார்த்த அஸ்வத் “ ஏன்மா நான் என்ன இவங்க போனை எனக்கு வச்சுக்க குடுங்கன்னா கேட்டேன் கார் ரேஸ் இருக்கான்னு தானே கேட்டேன்” என்று அழுதுவிடுவான் போல் அஸ்வத் சொன்னான்

இவர்களின் வாதத்தை பக்கத்து சேர்களில் இருந்தவர்கள் சுவராஸ்யமாக பார்க்க, இப்போது அருணாவுக்கு தர்மசங்கடமாக இருந்தது, இவள் தனது போனைப் பற்றி சொல்லவில்லை என்றால் சுற்றியிருப்பவர்கள் குழந்தையிடம் தனது பணக்காரத் திமிறை காட்டுகிறாள் என்று நேரடியாக இல்லாவிட்டாலும் பின்னால் கூறக்கூடும், என்ன சொய்வது என்று யோசித்து விட்டு அவளின் கௌரவம் பாதிக்காத வாறு “ ம் இதுல கார் ரேஸ் இருக்கு, ஆனா நான் விளையாடியதில்லை” என்று வரவழைத்த புன்னகையுடன் அருணா கூறியதும்

ஆர்வத்துடன் மறுபடியும் எட்டி அவள் மொபைலை பார்த்தவன், ஏதோ நினைத்து அருணாவின் அருகே காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து “ ஆண்ட்டி இந்த மாடல்ல கார் ரேஸ் விளையாடினா சூப்பரா இருக்கும், குடுங்க நான் உங்களுக்கு கத்துத்தர்றேன்” என்று மொபைலுக்காக அவளிடம் கையை நீட்டினான் அஸ்வத்

அருணாவுக்கு ஆச்சரியமாக இருந்தது பெரியபெரிய ஆட்களெல்லாம் இவளிடம் பேச தயங்கி ஒதுங்கி நின்ற அந்த மண்டபத்தில் துணிச்சலாக தன் பக்கத்தில் அமர்ந்து மொபைலை கேட்கும் சிறுவனை உற்றுப்பார்த்தாள்,, அப்படியே சத்யன் ஜாடை, அதே கூர்மையான நேர் பார்வை, இது சத்யனிடத்தில் மட்டுமே உள்ள பார்வை, எதிராளி எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் தனது பார்வையால் வீழ்த்தும் சக்திவாய்ந்த பார்வை, அதனாலேயே பலமுறை அவன் பார்வையை தவிர்த்து திரும்பிக்கொள்வாள் அருணா, இன்று அதே பார்வை இந்த சிறுவனிடம் கண்டு அவள் உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடியது


அவள் தன்னையே பார்பதை உணர்ந்து “ நான் உங்க செல்போனை வச்சுக்க மாட்டேன், உங்களுக்கு கேம் விளையாட கத்து குடுத்துட்டு திருப்பி குடுத்துடுவேன், ஏன்னா எங்க தாத்தா நான் கேட்டதும் எதுவாயிருந்தாலும் உடனே வாங்கி கொடுத்துடுவார், அதனால உங்க போன் எனக்கு வேண்டாம்” என்று அலட்சியமாக அஸ்வத் கூறியதும்..

அருணா திகைத்துப் போனாள், அதே அலட்சியமான திமிர் பேச்சு, அப்பனைப் போலவே, என்று மனதில் எண்ணினாலும், அவள் கை தானாக மொபைலை அஸ்வத்திடம் கொடுத்தது

அவளை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்த அஸ்வத் “ தாங்க்ஸ் ஆண்ட்டி” என்று மொபைலை வாங்கி அதில் எதைஎதையோ நோண்டினான்

அருகில் நின்ற மான்சியின் தவிப்பு அதிகமானது “ அக்கா அவன்கிட்ட இருந்து போனை வாங்கிக்கங்க, ஏதாவது பண்ணிடப் போறான்எ?” என்று கவலையுடன் கூற

அஸ்வத் என்ன செய்கிறான் என்பதையே உற்று கவனித்துக்கொண்டிருந்த அருணா மான்சியை நிமிர்ந்து பார்க்காமலேயே “ பரவாயில்லை நான் பார்த்துக்கிறேன் நீ போய் உன் வேலையை கவனி” என்று கூறிவிட்டு அஸ்வத் மேல் தனது கவனத்தை திருப்பினாள்

மான்சியாலும் அதற்குமேல் அங்கே நிற்க்க முடியாது கல்யாண வேலைகள் கடலளவு இருந்தது, “ அஸ்வத் எதையும் நோண்டி ரிப்பேர் பண்ணிடாதே?” என்று மட்டும் மகனை எச்சரித்து விட்டு அங்கிருந்து நகன்றாள்

அஸ்வத் அந்த செல் போனில் என்னென்னவோ செய்தான் பிளைனாக இருந்த டிஸ்பிளேயில் அழகான பிக்சரை ஸ்கிரீன் சேவராக வைத்தான், அவனுக்கு பிடித்த மியூசிக் தீமை ரிங்டோனாக வைத்தான், தேவையில்லாத மெசேஜ்களை டிலைட் செய்துவிட்டு, அழகான படங்களையும் ரிங்டோன்களையும் டவுன்லோட் செய்தான், இறுதியாக கேம் ஓபன் செய்து கார் ரேஸ் வைத்து காரின் கலர்களை விதவிதமாக மாற்றி சிறிது விளையாடினான்,, இவையெல்லாவற்றையும் எப்படி என்று அருணாவுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டே செய்தான்

அருணாவுக்கு வியப்பாக இருந்தது இவ்வளவு சின்ன வயதில் இவ்வளவு விஞ்ஞான அறிவா? என்று வியந்து போனாள்,, அவள் இந்த போனை வாங்கிய நாள்முதல் சிம்கார்டை போட்டு பேசமட்டுமே உபயோகித்தாள், வேறு எதையும் ஓபன் செய்ததே இல்லை, இதிலெல்லாம் அவளுக்கு ஆர்வமும் கிடையாது, ஆனால் இன்று அஸ்வத் செய்வதை எல்லாம் வேடிக்கையாக பார்த்தாள்

“ உன்னோட பெயர் என்ன? ” என்று மெதுவாக கேட்டாள்

அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் மொபைலில் இருந்த ரேஸ் காரை சரியாக செலுத்தியபடி “ மை நேம் இஸ் எஸ் அஸ்வத்தாமன்” என்று பட்டென்று பதில் சொன்னான்

அஸ்வத் பக்கமாக சரிந்து அமர்ந்து “ என்னப் படிக்கிற?” என்றாள் அருணா

“ செகன்ட் ஸ்டேன்டர்ட் ஆன்ட்டி ” இப்போதும் அவன் கவனம் காரை எங்கும் மோதாமல் திருப்புதில் தான் இருந்தது

“ நல்லா படிப்பியா?”

“ ஓ எங்க கிளாஸ்ல நான்தான் பர்ஸ்ட்” காரின் போக்கிலேயே அவன் கையும் போனது

அவளும் அந்த ரேஸில் லயித்துப் போய் “ ம்ம் வெரிகுட் பாய்” என்று சொன்னாள்

அப்போது அங்கே ஓடி வந்த அபிமன்யு “ இங்க என்னடா பண்ற அசுவத்,, அந்த சாந்தி அத்தையோட பொண்ணு மதுமிதா என்னைய குள்ளவாத்துன்னு கிண்டல் பண்ணிட்டாடா, வாடா போய் அவளை போடி முள்ளம்பன்றின்னு சொல்லிட்டு உடனே ஓடி வந்துடலாம்” என்று தன் அண்ணை உலுக்கும்போதே அங்கு வந்த அனிருத்

“ ஆமாம்டா அவ என்னையும் குட்டி பிசாசுன்னு சொல்லிட்டா, வாடா அசுவத் அவளை ஒரு கைப் பார்க்கலாம்” என்று அந்த சிறிய முகம் கோபத்தில் சிவக்க அனிருத் பேசியதும்,,

அவர்களையே கவனித்துக்கொண்டிருந்த அருணாவுக்கு சுவராஸ்யம் அதிகமானது, மூவரையும் உற்று கவனித்தாள், அஸ்வத்தாமன், அனிருத்தன் இருவரும் சத்யனையே உறித்து வைத்திருந்தார்கள், பேசும் ஸ்டைல், கோபம், பாவனைகள், எல்லாமே சத்யனைக் கொண்டு இருந்தது, அபி மான்சியைப் போலவே இருந்தான், அமைதியான முகம், அண்ணனை துணைக்கு அழைக்கும் ஆதரவை தேடும் பாவனை, என எல்லாமே மான்சியே தான் 


சத்யனுக்கு மூன்று பிள்ளைகள் என்று அருணாவுக்கு ஏற்கனவே தெரியும், எப்படியாவது சத்யன் பற்றிய அனைத்து விஷயங்களும் அரசல்புரசலாக அவள் காதில் விழுந்துவிடும், ஆனால் இப்படியொரு பிள்ளைகளை அவள் எதிர்பார்க்க வில்லை என்று அவளின் ஆச்சரியமான பார்வையே சொன்னது “ உங்க ரெண்டு பேர் பேரும் என்ன” என்று அருணா அவர்களிடம் கேட்க

அபி அப்போதுதான் அவளை கவனித்தது போல “ ஹாய் ஆண்ட்டி” என்றான், அவன் பார்வையில் மான்சியின் பார்வை போலவே ஒரு கனிவு இருந்தது,

ஆனால் அனிருத் விரைப்பாக நிமிர்ந்து “ இவன் பேரு எஸ் அபிமன்யு, என் பேரு எஸ் அனிருத்தன், நாங்க மூனுபேரும் சத்யமூர்த்தி மான்சியோட பசங்க, அசுவத் ஒன்னு, அபி ரெண்டு, நான் மூனு, நாலவதும் இருக்கு எங்கம்மா வயித்துக்குள்ள குட்டிப் பாப்பா,, பாப்பாக்கு பேரு அன்னலட்சுமி,, எங்க பாட்டியோட பேரு, ஆமா உங்க பேரு என்னா சொல்லவேயில்லையே?” என்று தன் குடும்பத்தை சுருக்கமாக சொல்லிவிட்டு, அவளையே திருப்பி கேள்வி கேட்டான் அனிருத்

அருணா அவனையே வியப்பாக பார்த்தாள், அவள் பார்வைக்கு அன்று தன்னிடம் சவால்விட்ட சத்யன் தெரிந்தான் அனிருத்திடம்,, இந்த வயசில் பேச்சில் எவ்வளவு நிமிர்வு, இவன் வளர்ந்ததும் இவனுடைய அப்பாவைப் போலவே திறமையானவனான வருவான் என்று அவள் மனம் எண்ணியதும் ஒரு திடுக்கிடலோடு நிமிர்ந்து அமர்ந்தாள்

அப்போது அங்கே வந்த டிரைவர் அவளருகே மரியாதையாக குனிந்து “ மேடம் முகூர்த்தம் ஆரம்பிக்குது, நாம கிப்ட்டை கொடுத்துட்டு உடனே போனாதான் அந்த மேரேஜை அட்டன் பண்ணமுடியும்” என்று அவளுக்கு ஞாபகப்படுத்தினான்

“ ம்ம் எனக்குத் தெரியும், நீ கொஞ்சம் வெயிட் பண்ணு” என்றாள்,, டிரைவர் சரியென்று தலையசைத்து விட்டு போனதும், அனிருத்தின் கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லையே என்ற ஞாபகம் வர திரும்பி பிள்ளைகளை பார்த்தாள்

இப்போது மூவரும் ஓரே இருக்கையில் நெருக்கிக் கொண்டு அமர்ந்து அசுவத் கேம் விளையாடுவதை பார்த்துக்கொண்டிருந்தனர்

அருணா அனிருத் தோளைத் தொட்டு அவன் கவனத்தை தன் பக்கமாக திருப்பி “ என்னோட பெயர் கேட்டயே? என் பெயர் அருணா” என்றாள்

உடனே அனிருத் பெரியமனிதன் போல் புருவத்தை உயர்த்தி “ ஓ அருணாவா? வெரி நைஸ் நேம்” என்றதும் அருணாவுக்கு சிரிப்பு வந்தது, கர்ச்சீப்பால் வாயைப்பொத்தி தன் சிரிப்பை மறைத்தவள், ஒரு இருக்கையில் மூவரும் உட்காரமுடியாமல் நசுங்கிவதை கண்டு “ நீ இங்க வந்து உட்காரு அனிருத்” என்று தனது இருக்கையில் சற்றுத்தள்ளி அவனுக்கு இடம் விட,

அவளை ஏற இறங்க பார்த்த அனிருத் “ நான் இங்க உக்காந்தா உங்க டிரஸ் கசங்கிடாதா ஆண்ட்டி?” என்று கேட்டான்

அப்போது தான் தனது உடையை குனிந்து பார்த்தாள், அதிக வேலைபாடுகளுடன் ரொம்ப விலையுயர்ந்த சேலைதான், இந்த திருமணத்திற்கு என்றே சூரத்திலிருந்து வரவழைத்தது, ஆனால் அனிருத் உட்காரவேண்டுமே “ பரவாயில்லை உட்கார்ந்துக்க” என்று அவளின் அனுமதியின்றி பட்டென்று அவள் வாய் சொல்ல, அனிருத் அவளருகே ஏறியமர்ந்து கொண்டு அவள்மேல் சாய்ந்துகொண்டு அவள் கையிலிருந்த வாட்ச்சை ஆராய்ந்தான்

தனது கையை அனிருத் மீது போட்டு தன்னோடு அனைத்தார்ப்போல் அமர வைத்து, அவன் அண்ணன்கள் கேம் விளையாடுவதை இவன் கவனக்காததை உணர்ந்து “ ஏன் அனிருத் உனக்கு கேம் விளையாட பிடிக்காதா?” என்று கேட்டாள் அருணா

“ ம்ஹூம் எனக்கு அதெல்லாம் பிடிக்காது ஆண்ட்டி, எனக்கு ஒன்லி கிரிக்கெட் தான் பிடிக்கும்,, பவுலிங் பண்ணி வீட்டுல நிறைய உடைச்சுடுவேன், அதுக்கு அம்மா என்னை திட்டுனா... உடனே அப்பா, என் மகன திட்டாதடி அவன் சச்சின் மாதிரி பெரிய கிரிக்கெட் பிளேயரா வருவான்னு சொல்லுவாரு” என்ற அனிருத் அருணாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்து “ நீங்க சொல்லுங்க ஆண்ட்டி நான் சச்சின் மாதிரி வருவேன் தான?” என்று கேட்க

எந்தவிதமான மாற்று யோசனையும் இன்றி “ ஓ கண்டிப்பா நீ சச்சின் மாதிரி வருவ” என்றாள் அருணா

உடனே அந்த சிறுவனின் முகம் பூவாய் மலர “ தாங்க்ஸ் ஆண்ட்டி” என்று கூறிவிட்டு எக்கி அருணாவின் கன்னத்தில் முத்தமிட்டான் 




இதை அருணா சற்றும் எதிர்பார்க்கவில்லை, அந்த சிறுவனின் கபடற்ற முத்தம் அவளின் ரத்தநாளங்கள் எல்லாம் புத்துயிர் பெற்றதுபோல் உடலில் ஒரு சிலிர்ப்பு , வயிற்றுக்குள் தடதடவென்று ஏதோவொரு உணர்வு, அவளையுமறியாமல் அவள் கைக்குள் இருந்த அனிருத் மேலும் இறுக்கியது அவள் கைகள்,, அவள் இதயத்துடிப்பு வேகமானது, அது துடிக்கும் சத்தம் அவள் காதுகளில் கேட்டது

அப்போது “ டேய் நீங்க மூனு பேரும் இங்கேயா இருக்கீங்க? அங்கே எல்லாரும் தேடுறாங்க ” என்ற சத்யனின் குரல் கேட்க, அருணா உண்மையில் பயங்கரமாக திடுக்கிட்டுப் போனாள்,, ஏதோ திருட்டுத்தனம் செய்து மாட்டிக்கொண்டவள் போல் ஒரு உணர்வு அவளிடம்

சத்யன் அருணாவுக்கு உணர்ச்சியற்ற ஒரு பார்வையை கொடுத்துவிட்டு அனிருத்தை தூக்கிக்கொண்டான், அபி எழுந்து வந்து சத்யனின் அருகில் நின்றுகொண்டான் ,, அவன் குரல் கேட்டதுமே கேமை குளோஸ் செய்திருந்த அஸ்வத் மொபைலை அருணாவிடம் கொடுத்துவிட்டு “ தாங்க்ஸ் ஆண்ட்டி” என்றுவிட்டு சத்யனிடம் போனவன் மறுபடியும் நின்று “ ஆண்ட்டி இவருதான் எங்களோட அப்பா மிஸ்டர் சத்யமூர்த்தி ராஜதுரை” என்று கம்பீரமாக அருணாவுக்கு சத்யனை அறிமுகம் செய்துவைத்தான்

சத்யன் எதுவும் பேசமால் நிற்க்க, அருணா சிறு புன்னகையுடன் அஸ்வத்தை பார்த்து “ ம் எனக்கு உங்கப்பாவை தெரியும் அஸ்வத்” என்றாள்

“ ஓ அப்ப சரி, நான் போறேன் ஆண்ட்டி ” என்று சொல்லிவிட்டு சத்யனின் கையைப் பற்றிக்கொண்டான்

சத்யன் எதுவுமே பேசாமல் தன் பிள்ளைகளுடன் மணமேடையை நோக்கிப் போக, அருணாவுக்கு என்னவென்று புரியாத ஒரு உணர்வு, சற்றுமுன் அந்த பிள்ளைகளின் அருகாமை கொடுத்த சந்தோஷத்தை வரண்டு போயிருந்த மனது அவளிடம் அடம்பிடித்து தக்கவைத்துக் கொண்டது, அவளையும் அறியாமல் அந்த பிஞ்சு உதடுகள் பதிந்த தன் கன்னத்தை தடவி பார்த்துக்கொண்டாள்

ஒரு ஆணின் கம்பீரமே அழகான குடும்பம் தானோ என்று அருணாவின் மனதில் ஒரு எண்ணத் தோன்றியது, இல்லாவிட்டால் இந்த நாற்பது வயதிலும் சத்யன் இவ்வளவு இளமையாக இருக்கமுடியுமா? என்று நினைத்துக்கொண்டாள்

மணமேடையில் பரபரப்பாக இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்த மான்சியைப் பார்த்தாள், முன்புக்கு இப்போது கொஞ்சம் பூசினாற்ப் போல் இருந்தாள்,, மேடிட்ட வயிறு, உடலில் அழகான வேலை பாடுகளுடன் கூடிய பட்டுப்புடவை, குடும்பத்தின் பாரம்பரிய மிக்க பழைய நகைகள், மஞ்சள் பூசிய முகம், நெற்றியில் பெரியதாக பொட்டு, வகிட்டில் அரக்கு குங்குமம், கூந்தல் நிறைய மல்லிகை, தாய்மையில் இன்னும் மெருகேறிய முகம்,,

புடவையை தூக்கிப் பிடித்துக்கொண்டு அங்கும்மிங்கும் ஓடிக் கொண்டிருந்தாள் மான்சி, அவளை பிடித்து நிறுத்திய சத்யன் கரிசனமாய் கடிந்துகொள்வதும் அதற்கு மான்சி சினுங்கலாக பதிலுரைப்பதும் இங்கிருந்தே அவர்களின் பாவனையில் தெரிந்தது, அவர்களின் அன்யோன்யமான தாம்பத்யம் இருவரின் நெருக்கத்திலும் தெரிந்தது,

ஓடி வந்து சத்யனின் காலை கட்டிக்கொண்டான் அனிருத், சத்யன் பட்டுவேட்டி தடுக்காமல் இருக்க வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு மகனை தூக்கியபடி யாருடனோ சத்தமாக செல்போனில் பேசினான், அப்போது பூங்கோதை அந்த பக்கமாக வர மகனை தன் தாயிடம் கொடுத்துவிட்டு போனில் பேசியவாறு டைனிங் ஹால் பக்கமாக போனான்

பத்மா மான்சியின் காதோரம் குனிந்து ஏதோ சொல்ல சிரித்தபடி சரியென்று தலையசைத்து விட்டு மணமகன் சந்தனுவின் மாலையை சரிசெய்வது போல் குனிந்து அவனிடம் ஏதோ ரகசியம் சொன்னாள் மான்சி,, அவன் மான்சியிடம் வெட்கமாக ஏதோ சொல்லிவிட்டு பக்கத்தில் அமர்ந்திருந்த அவனது வருங்காலத்திடம் ஏதோ சொல்லிவிட்டு சிரிக்க, அந்த புதுப்பெண்ணும் அழகாக சிரித்தாள்,,

அப்போது யாரோ ஒருவர் வந்து மான்சியிடம் ஏதோ ஆலோசனை போல் கேட்க, அவள் அதை தன் மாமியாரிடம் கேட்டு அவருக்கு பதில் சொன்னாள், அவர்களின் பேச்சைப் பார்த்தால் அவர் மணமகளின் அப்பாவாகத் தான் இருக்கவேண்டும், மறுபடியும் அய்யர் ஏதோ கேட்க மான்சி மணமகன் அறைக்குள் ஓடிச்சென்று அய்யர் கேட்டதி எடுத்துவந்து கொடுத்தாள்

அப்போது கௌதம் வேகமாக வந்து தனது கையிடுக்கில் இருந்த சிறு லெதர் பையை எடுத்து இரு மான்சியிடம் கொடுத்துவிட்டு ஏதோ சொல்ல மான்சி தலையசைத்துவிட்டு அதை தன் கக்கத்தில் வைத்துக்கொண்டாள், அவ்வளவு பாதுகாப்பாக வைத்துக்கொள்வது என்றால் அந்த பை பணப்பையாகத்தான் இருக்கவேண்டும்


சற்றுநேரத்தில் சத்யன் கையில் ஒரு பழச்சாறு டம்ளருடன் வந்து மான்சியிடம் கொடுத்துவிட்டு குடிக்குமாறு வற்புறுத்த, அவள் மறுத்தாள், சத்யன் கோபமாக ஏதோ சொல்ல, பழச்சாறை சங்கடமாக வாங்கிய மான்சி மணமேடையின் ஒரு மூலைக்கு போய் குடித்தாள், கேமிராவுக்கு பயந்து ஒதுங்கியிருக்கலாம்,

மேடையின் மறுமூலையில் அஸ்வத்தும் அபியும் ஒரு சின்னப் பெண்ணை பார்த்து முறைத்தபடி ஏதோ பேசவது இங்கிருந்தே அருணாவுக்கு தெரிந்தது, அபி சொன்ன முள்ளம்பன்றி இந்த பெண்ணாகத்தான் இருக்கவேண்டும், , புதிதாக ஏதோ ஒரு ஹேர்ஸ்டைலை அந்த சிறு பெண்ணின் குட்டை முடியில் முயற்சித்திருப்பார்கள் போல, அது முள்ளம்பன்றியின் முதுகு போல் முடி சிலிர்த்துக் கொண்டு நின்றது, அபி கூறியதில் தப்பே இல்லை, என்று நினைத்து அருணாவுக்கு சிரிப்பு வந்தது

இத்தனை ஏதோக்களையும் இருந்த இடத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அருணாவுக்கு மான்சி அந்த குடும்பத்தில் எவ்வளவு முக்கியமானவள் என்று புரிந்தது,

நான்தான் உனக்கு பொண்டாட்டி, மான்சி உனக்கு வைப்பாட்டி என்று சத்யனிடம் அன்றொருநாள் சவால் விட்டது இன்று ஞாபகம் வந்தது அருணாவுக்கு, ஒரு குடும்பத்தலைவியை வைப்பாட்டியாக நாம் மட்டுமே எண்ணியிருக்கிறோம் என்ற உண்மை அவள் முகத்தில் அறைந்தது,

தனக்கு மரியாதை கொடுத்தோ அல்லது கிட்ட நெருங்க பயந்தோ அந்த திருமணத்திற்கு வந்திருந்த யாருமே தன்னிடம் பேசாமல் ஒதுங்கி இருப்பது அவளுக்கு உரைத்தது, அந்த குடும்பத்தில் மான்சியின் முக்கியத்துவம் புரிந்தது, இதில் யார் வைப்பாட்டி? யார் பொண்டாட்டி? என்ற நிதர்சனமான கேள்வி அவளையை அவளே கேட்டுக்கொண்டாள்

பலமான கெட்டிமேள சத்தம் அருணாவை இவ்வுலகிற்கு அழைத்துவர மணமேடையை கவனித்தாள்,, ராஜதுரை தாலி எடுத்து கொடுக்க சந்தனு தாலியை மணமகள் கழுத்தில் கட்ட சுற்றிலும் இருந்த கூட்டத்தினர் அட்சதையை அள்ளி போட்டு வாழ்த்தினார்

அப்போது டிரைவர் கிப்ட் பார்சலுடன் அவளருகே வந்து நிற்க, சிறு தலையசைப்புடன் எழுந்த அருணா கிப்ட்டை கொடுக்க மணமேடைக்கு சென்றவள் அங்கே முண்டியடித்த கூட்டத்தை பார்த்து ஒதுங்கி நின்றாள்,
அதை கவனித்த மான்சி கூட்டத்தினரை விலக்கி அருணாவை மணமக்கள் அருகே அழைத்துச்சென்றாள்,,

அருணா கிப்ட்டை மணமக்களிடம் கொடுக்க போட்டோகிராபர் “ மேடம் ப்ளீஸ்” என்று ஒரு போட்டோ எடுக்க அருணாவிடம் கெஞ்சியதும் அருணா வேறு வழியின்றி மணமக்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க, அப்போது எங்கிருந்துதான் வந்தார்களோ தெரியவில்லை, சத்யன் பெற்ற மூன்று புத்திசாலிகளும் ஓடி வந்து அருணாவின் கைகளை பற்றிக்கொண்டு கூடவே நின்றுவிட, போட்டோகிராபர் குழப்பத்துடன் அருணாவை பார்த்தான், பரவாயில்லை எடுங்கள் என்று அருணா சைகை செய்ய அனைவரையும் அழகாக படம்பிடித்தான் அவன்



அதேநேரம் கீழே நின்றிருந்த அருணாவின் டிரைவர்க்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, வேகமாக தனது பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து அவனும் அவர்களை படம் எடுத்து வைத்துக்கொண்டான்

படம் எடுத்து முடித்ததும் அவளை குனியச் சொல்லி சைகை செய்த அனிருத், அருணாவின் இன்னொரு கன்னத்தில் அழுத்தி முத்தமிட, அருணாவுக்குள் அதுவரை இருந்த ஏதோ ஒன்று கொதித்து குமுறி சரசரவென ஆவியாக வெளியே வர,, அதன்பிறகு அருணா நிமிட நேரம் மேடையில் நிற்க்கவில்லை, வேகமாக இறங்கி யாரோ துரத்துவது போல் மண்டபத்து வாசலை நோக்கி போனாள்

பின்னால் வந்த கௌதம் சாப்பிட்டு விட்டு போகுமாறு வற்புறுத்தியதை ஒரு தலையசைப்புடன் மறுத்துவிட்டு வெளியேறி காரில் ஏறிக்கொண்டாள், உடனே டிரைவர் வண்டியை எடுத்தான் , 



No comments:

Post a Comment